Thursday, December 26, 2013

அங்கோர் வாட் பயணம் - வெங்கலக் கோபுர சிவன் கோவில்

Bapuan Temple 3D வடிவமைப்பு : Source theadvisorcambodia.com
கார்போனைட் ஆராய்ச்சிகளின் வழி ஆங்கோர் சரித்திரத்தை நாம் அறிந்துக் கொண்டது மிக செற்பமே. அங்கோர் எண்ணற்ற இரகசியங்களை தன்னோடு வைத்துக் கொண்டுள்ளது. அதில் பல இன்னும் எத்தனை காலம் ஆனாலும் நம்மால் கண்டு பிடிக்க முடியாமல் போகலாம். இருட்டடிப்புகளும் கலைத் திருட்டுகளும் உலகிற்கு பல செய்திகளை சொல்லாமலே மறைத்துவிட்டுள்ளன.

கெமர் மக்களுக்கு தனியொரு இலக்கிய பாரம்பரியம் இருப்பதாக அறிய முடியவில்லை. ஆரம்ப கால கல்வி முறையும் சரித்திரமும் போல் போட் காலத்தில் பலமாகவே சிதைக்கப்பட்டுள்ளது. இன்றும் பசுமையோடு இருக்கும் பல சரித்திர புதினங்களை நமக்கு கொடுத்த கல்கியும், சாண்டில்யனும், விக்ரமனும், ஆங்கு தோன்றி இருப்பின் நிச்சயம் போல் போட்டின் ஆயுதம் பதம் பார்த்திருக்கக் கூடும்.
போல் போட்: Source freethoughtpedia.com
அங்கோர் தோம் மொத்தம் 216 பெருமுகங்களைக் கொண்டுள்ளது. அதாவது 54 பெருமுகக் கோபுரங்கள். ஒரு கோபுரத்திற்கு நான்கு முகங்கள் விகிதம். இந்த முகங்கள் எதன் குறியீடு என்பது இன்னமும் பதில் கிடைக்காத இரகசியம் தான். நெற்றிக் கண் உள்ளதை போல் சில முகங்கள் இருப்பதால் அது சிவனைக் குறிப்பதாக சொல்கிறார்கள். ஏழாம் ஜெயவர்மன் புத்தத்தை பேனியவன் என்பதால் அது புத்தனின் முகம் என்பதாகவும் கருத்துகள் உண்டு. இல்லை இல்லை அந்த முகங்கள் அதை உருவாக்கிய ஏழாம் ஜெயவர்மனையே குறிக்கிறது எனும் சாரரும் உண்டு. 

இக்கலைச் சிற்பங்கள் உறுவாக்கப்பட்ட காலம் ஜெயவர்மனின் ஆட்சி என்பதால் அவனைக் கொண்டாடுகிறோம். ஆனால் இப்படைப்புகளுக்கு பின்னால் இருக்கும் மாபெரும் வேலைபாடுகளை செய்தவர்களை நாம் சல்லடைப் போட்டாலும் தெரிந்துக் கொள்வது சிரமமே.

இங்கும் Zhou Daguan-னின் குறிப்புகளை மேற்கோள்காட்ட வேண்டி உள்ளது. ச்சாவ் தனது குறிப்பில் யசோதரபுரத்தில் அதிகமாக இருந்தது அடிமைகளே என கூறுகிறார். உள்ளூர் மக்களைக் காட்டினும் அதிகமான அடிமைகள் அங்கு இருந்துள்ளனர். போர்களில் அடிமையாக்கப்பட்டு கொண்டு வந்தவர்களை கோவில்களையும் கோட்டைகளையும் கட்ட பயன்படுத்தினர். கூடவே யானைகளையும். 

முகக் கோபுர கோவிலில் சில சுவர் ஓவிய வேலைபாடுகளை நீங்கள் காண முடியும். அன்றய மக்களின் அன்றாட வாழ்க்கையை சித்தரிக்கும் நிகழ்வுகள் செதுக்கப்பட்டுள்ளது. மேலும் சில முக்கிய சரித்திர நிகழ்வுகளையும் போர் காட்சிகளையும் காணமுடிகிறது. 

கீழ் காணும் ஓவியம் கெமர் இராணுவத்தில் சீன வீரர்களின் பங்களிப்பை காட்டுவதாக உள்ளது. அங்கோர் நாகரீக காலத்தில் சீன தேசத்தோடு இவர்களின் உறவு இணக்கமாக இருந்ததாகவே குறிப்புகள் உரைக்கின்றன. 

கொண்டை இருப்பது சீன இராணுவம்
அரசர்கள் சைவம், வைணவம் பௌத்தம் என மதங்களை மாறி மாறி ஆதரித்து வந்துள்ளார்கள். மதங்களுக்கிடையிலான புகைச்சல் உடைபட்ட சிலைகளிலும் அவர்கள் காலத்தில் மறுசீரமைப்பு செய்த கோவில்களிலும் காணமுடிகிறது.

பேயோனில் நடக்க நடக்க பெருமுகங்கள் நம்மை கவனித்தபடியே உள்ளது. நடக்க நடக்க முடிவடையாத பாதைகள். பேயோனில் ஆங்காங்கு சிறுசிறு அறைகளை காண முடிகிறது. அங்கு புத்த சிலையை நிறுவி ஊதுபத்தி கொழுத்தவும் முடிகயிறு கொடுக்கும் வேலைகளும் நடக்கின்றன. 

அங்கோர் பயணத்தில் நீங்கள் அடிக்கடி கேட்கும் வார்த்தை ‘ஓன் டால’ என்பதாக தான் இருக்கும். அதாவது ஒரு டாலர். கெமர் மக்கள் பேசும் ஆங்கிலத்தில் 'R' மற்றும் ‘S' போன்ற எழுத்துகள் பெரும்பாலும் மறைந்துவிடுகிறது. ஜெயவர்மன் என்பதை ‘ஜெயவமா’ என்பதாகவே உச்சரிக்கிறார்கள். 

பள்ளி பருவத்தில் இருக்கும் பிள்ளைகள் அதிகமாக அங்காடி வியாபாரங்களில் ஈடுபடுவது தெரிகிறது. பள்ளி முடிந்ததும் வியாபாரத்துக்கு வந்துவிடுகிறார்கள். சிறு பிள்ளைகள் ‘ஓன் டால’க்கான வியாபாரம் புரிகிறார்கள். உதாரணமாக சிறு கைவினை பொருட்களும் போஸ்கார்டுகளும் ஒரு டாலருக்கு விற்கப்படுகிறது. பாதுகாப்பு பொருட்டு புராதன சரித்திர தளங்கள் அமைந்த இடத்தில் மின்வசதிகள் கொடுப்படவில்லை. சாப்பாட்டு கடைகளும் வியாபார அங்காடிகளும் ஜெனரேட்டரின் உயபத்தில் செயல்படுகின்றன.

பெருமுகக் கோபுரங்களை முடித்துக் கொண்டு Baphuon எனும் கோவிலை காணச் சென்றோம். அங்கோர் தோம் கோட்டை பகுதியில் அமைந்த மேலும் ஒரு கட்டிடம். 11-ஆம் நூற்றாண்டில் 2-ஆம் உதயாதித்யவர்மனால் சிவனுக்காக கட்டப்பட்ட கோவில். இது வெங்கல கோபுரங்களால் ஆன கோவிலாக கூறப்படுகிறது. 15-ஆம் நூற்றாண்டில் புத்த கோவிலாக மாற்றும் முயற்சியில் சிதிலங்கள் ஏற்பட்டுள்ளன. 9 மீட்டர் உயரமும் 70 மீட்டர் நீளமும் கொண்ட ஒரு உறங்கும் புத்த சிலை அமைப்பு கொஞ்சமாக தெரிகிறது. இன்றைய நிலையில் ஒன்றும் இல்லாத வெற்று கட்டிடமாக மட்டும் தெரிகிறது. உச்சி கோபுரத்திற்கான படிகள் செங்குத்தாக தெரிகிறது. நான்கு கால்களில் தான் படியேற முடியும். 
Baphuon கோவில் இன்றய நிலையில்

1948-ல் Baphuon : Source npm.gov.tw
‘ச்சேன் அதன் உச்சிக்கு போய் பார்த்திருக்கிறீர்களா’

‘ஆம். நான்றாக காற்று வரும். ஆனந்தமாக இருக்கும், இந்த வெள்ளைக்கார பசங்க அங்கன போய் உக்காந்துகிட்டு புத்தகம் படிச்சிகிட்டு இருப்பானுங்க’. 

‘படி ரொம்ப ஆபத்தா இருக்கு, நிறைய பேர் விழுத்திருக்க வாய்ப்பிருக்கு’.

Baphuon மேல் இருந்து
‘ஆமாம் பாஸ், அடி சருக்கினா மருகையா தான். கொஞ்சம் கொஞ்சமாக ஏறி உட்காந்து உட்காந்து சிலர் ஏறுவாங்க, அதிகமா யாரும் படியேறுவது கிடையாது.’

‘நல்ல காற்று. வெயிலும் அதிகம் தான்’

‘இன்னும் கொஞ்ச நேரத்தில் மழை வந்திடும்’.

‘ஒன்பது தலை நாகம் பெண் உருவில் வந்து ராஜாவோடு கூடுவதாக சொல்வார்களே அது இந்த இடம் போலவே உள்ளதே. அந்தக் கட்டிடமா இது?”.

“உங்களுக்கு இந்தக் கதைகளும் தெரிந்துள்ளதே. அது அந்தப்பக்கம். இன்னும் கொஞ்ச தூரம் நடக்க வேண்டும். உலகை காக்கும் மாதா அந்த ஒன்பது தலை நாகி என்பது நம்பிக்கை. நாகா என்பது ஆண். நாகி என்பது பெண்”. ச்சேனின் ஆண் பால் பெண் பல் பதம் வியக்க வைத்தது. 

”போல் போட்டில் ஆட்சியில் இந்த இடங்கள் எப்படி இருந்தன என ஏதும் தகவல் உண்டா ச்சேன்?” 

"எல்லா இடங்களிலும் கன்னி வெடிகளை புதைத்து வைத்திருந்திருக்கிறார்கள். பின் நாட்களில் அதை எடுத்துவிட்டாலும் இன்னமும் கண்டு பிடிக்க முடியாத கன்னி வெடிகள் உள்ளன. இந்த இடங்கள் எல்லாம் பெரிய பெரிய மரங்களால் காடு மண்டி மூடப்பட்டிருந்ததாக அப்பா கூறுவார். பல கட்டிடங்கள் அப்போது பார்வையில் இருந்து மறைந்திருந்தன”.
Baphuon : உறக்கும் நிலையில் புத்த சிலை
மேலும் வாசிக்க:
பாகம் 1
பாகம் 2
பாகம் 3

தொடரும்...

Thursday, December 12, 2013

அங்கோர் வாட் 3- பேசும் கற்கள்

கெமர் கல்வெட்டு
கல் சொல்லும் கதை:

அரச கட்டளை: ஸ்ரீ பிங்கலேஷ்வரா படகிற்கு 3 ’கனன்’ உப்பும்*, குபோன் கம்ரதன் படகிற்கு 3 ‘கனன்’ உப்பும், சர்வஷ்ரமாவின் இரு படகுகளுக்கு 4 ‘கனன்’ உப்பும், ஸ்ரீ பட்டேஷ்வரா மற்றும் ஸ்ரீ புஷ்கேஷ்வரா படகுகளுக்கு 2 ‘கனன்’ உப்பும் வழங்க வேண்டும். அரச கட்டளைப்படி உப்புகள் தீர்த்தகிராம துறைமுகத்தில் விநியோகிக்கப்படும். இங்கு வரும் போதும் அல்லது புறப்படும் போதும் இந்நிபந்தனை விதிக்கப்படும். இவ்விதியை தடுப்போரும், மீறுவோரும் தண்டனைக்குட்படுவர். 

Source : Inscription, the basis of our knowledge of history. - George Coedes

உப்பு*- பண்டைய கால வணிகத்தின் மதிப்பு மிகுந்த பொருள். Salt எனும் வார்த்தையில் இருந்து உருவானதே Salary.

கல்லின் கதை: 

தென் இந்திய எழுத்து வகையை போல் இருக்கும் இக்கல்வெட்டு பண்டைய கெமர் மொழியில் பொறிக்கப்பட்டுள்ளது. மொத்தம் பதினோரு வரிகள் உள்ளன. 1948-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இக்கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டது. கம்போடியாவின் ‘கண்டல்’ எனும் ஊரின் வயல் வெளியில் புதைந்திருந்த இக்கல் தற்சமயம் ப்னோம் பேன் மியூசியத்தில் உள்ளது. இக்கல்வெட்டை உரிமையாக்கிக்கொள்ள சில போராட்டங்களும் விசாரனைகளும் நடந்தது தனிக்கதை. மேற்காணும் கட்டளையை சுங்கத்துறையின் வரி விதிப்பை போலவே கருதமுடிகிறது.

********

பாற்கடலை கடையும் காட்சி
பயணக் கலைப்பு எனும் சொல்லைக் கூட நினைத்துப் பார்க்கவில்லை. நூற்றாண்டுகளாக காடுகளுக்குள் தன்னை மறைத்துக் கொண்ட கலைப் பொக்கிஷத்தைப் பார்க்க வேண்டும் எனும் ஆவளே ஓங்கி இருந்தது. நாங்கள் யசோதரபுத்திற்குச் செல்கிறோம். ஆனால் இன்று அது அப்படி அழைக்கப்படவில்லை. 

தூர வாசலில் பெரிய முகம். மோனாலிசா சிரிப்பைப் போன்றதொரு பாவனையை காண முடிகிறது. டாவின்சியை சில நூற்றாண்டுகள் விச்சிய பெருமை அதைச் செதுக்கிய சிற்பியையே சேரும். இதுவும் அர்த்தம் காண முடியாத புன்னகையே. உள் நோக்கி நடக்க மேலும் மேலும் முகங்கள். உள் நுழையும் முன் வெளி புரத்தைக் காண்போம். 

வாசல் நோக்கிய பாதையின் இருபக்கமும் பாம்பின் உடலை இழுத்துக் கொண்டிருக்கும் பெருச் சிலைகளின் வரிசை. மலைக்க வைக்கும் தொடக்கம். ஒவ்வொரு சிலையும் இரண்டு சுமோ வீரனை ஒத்திருக்கிறது. பாற்கடலை கடையும் வருணனை. அமுதச் சுரபிக்காக அசுரக் கூட்டத்தை ஏமாற்றிய கடவுளின் கதை. இந்த தேவக் கூட்டமும் அசுரக் கூட்டமும் கடைந்து எடுத்த பொன் கோபுரம் உள்ளே உள்ளது. இன்று பொன் இல்லாத கோபுரமாக உள்ளது.

அங்கோர் வாட்டை காட்டினும் பெரிய சுற்றளவைக் கொண்டது அங்கோர் தோம் எனப்படும் இக்கோவில். மாபெரும் முகக் கோபுரங்களைக் கொண்ட கோவில் தான் இந்த அங்கோர் தோம். அங்கோர் தோம், பேயோன் மற்றும் தாப்ரோம் எனும் மூன்று கோவில்கள் அருகருகே உள்ளன. இம்மூன்று கோவில்களும் வடிவமைப்பில் ஒற்றுமை கொண்டிருந்தாலும் தாப்ரோம் எனும் கோவில் கொஞ்சம் மாறுபடுகிறது. அங்கோர் தோமில் இருக்கும் நாம் உட்புரத்தில் சென்று காணும் கோவில் பேயோன். 
முகம் மறு சீர்ரமைக்கப்பட்டுள்ளது. பிக்பக்கம் அகழி.

அங்கோர் தோம் இன்று ஒரு கோவில் என அழைக்கப்படுகிறது. காரணம் அதன் கட்டிட வடிவமைப்பு. 13-ஆம் நூற்றாண்டில் அது ஏழாம் ஜெயவர்மனுக்கும் அவனையடுத்த மூன்றாம் இந்திரவர்மனுக்கும் யசோதரபுரத்தின் கோட்டையாக இருந்துள்ளது. உங்களது அங்கோர் பயணத்தின் போது குறைந்தபட்சம் ஒரு நாளையாவது இங்குச் செலவிடுங்கள். அங்கோர் காலத்து கடைசி தலைநகரான இவ்விடத்தில் நீஙகள் கண்டு மலைக்க வேண்டிய கலையம்சங்கள் ஏராளம். 

அங்கோர் கட்டிட பகுதிகளில் நாம் காணும் பொதுவான அம்சங்களில் ஒன்று அகழிகள். படகுகளை வைத்துச் சுற்றி வரும் அளவுக்கு பெரிய அகழிகளை காண முடிகிறது. சரித்திர குறிப்பேடுகள் எல்லா கோவில்களுக்கும் அகழிகள் இருந்ததாக கூறுகிறது. ஆனால் பலவும் வற்றி போய்விட்டன. சில கோவிகளில் ஒரு பக்கம் மட்டும் தேங்கிய குட்டையைப் போல் அகழிகள் காணப்படுகிறது. 
பாழ்பட்ட பாம்பின் உடல்
கெமர் அரசர்கள் தங்களை கடவுளின் அவதாரமாகவும், அரசன் என்பவன் கடவுளுக்கு ஒப்பானவன் என்பதாகவும் நினைத்து தனது சாம்ராஜிய செல்வச் செருக்கை காண்பிக்கவே இந்த ஒப்பற்ற கோவில்களையும், கட்டிடங்களையும் கட்டி இருக்கிறார்கள். கோவில்கள் வலுவாக இருக்கவே இந்த அகழிகள் கட்டபட்டதாக கூறப்படுகிறது. சுற்றிலும் அகழிகள் இருக்க கோட்டை/கோவிலுக்கு நுழையும் பாதை குறுகளாகிறது. நுழை பாதைகளை வீரர்கள் பாதுகாக்க அகழிகளில் முதலைகள் இராணுவ வேலையைச் செய்திருக்கின்றன. 

அங்கோரில் நாம் இன்று காணும் சிலைகள் எல்லாம் முழுமையாய் இருப்பதில்லை. சில அங்கோர் மியூசியத்தில் வைக்கப்பட்டுள்ளன. சில கிடைக்காமலே போய்விட்டன. நான் முன்பு சொன்ன சுமோ அசுரர்களுக்கும், தேவர்களுக்கும் அதே கதிதான். முக்கியமாக பார்வதி, லட்சுமி போன்ற பெண் தெய்வங்களின் சிலைகளின் முகப் பகுதி மட்டும் செதுக்கி எடுக்கப்பட்டுள்ளது. சரித்திர சுவடு மிகும் இடங்ளில் நிகழ்ந்த கலைத் திருட்டுகள் பல கோடி டாலர் மதிப்புகளை எட்டுகிறது. சரித்திரத்தில் கலைத் திருடர்கள் என ஒரு தனிக் கட்டுரையையே எழுதலாம். 
பெருமுகக் கோபுரங்கள். மூன்று முகங்கள்.

சிறுவியாபாரிகள் கோவிலின் முகப்புப் பகுதியில் புத்தகங்களையும், காணொளி சீடிகளையும், கைவினைப் பொருட்களையும் துரத்தி துரத்தி விற்பனை செய்கிறார்கள். அட இன்னும் சுற்றிப் பார்க்கவே ஆரம்பிக்கவில்லை அதற்குள் இப்படியா என நாமும் ஓட வேண்டி உள்ளது. நீங்கள் யானை சவாரி செய்தும் இங்குச் சுற்றி பார்க்கலாம். சிகப்பு வெல்வெட் துணியை போர்த்தி யானைகளை தயார் நிலையில் வைத்துள்ளார்கள் பாகன்கள். நாங்கள் யானை சவாரியை தேர்ந்தெடுக்கவில்லை. 

அங்கோர் பயணத்தில் நீங்கள் காண இருப்பது நீண்ட நெடுந்தூர கலை அம்சங்களை. ஆக நீங்கள் நடந்தாக வேண்டும். உங்கள் கால்களில் ஆணி ஏற்படுமாயினும், மனம் ததும்பும் கேளிக்கை பயணங்களை விரும்புவோராக இருப்பீர்கள் என்றாலோ இப்பயணம் உங்களுக்கு உவகை அளிக்காமல் போகலாம். சிற்பக் கலைகளின் பின்ணியை அறிந்துக் கொள்ள புத்தகங்களும், தகுதியான பயண வழிகாட்டியும் உங்களுக்கு உதவலாம். 
எண்னற்ற முகக் கோபுரங்கள்
அங்கோர் தோமின் பெருமுகக் கோபுரங்கள் வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு என நான்கு முகங்களை கொண்டுள்ளது. ஆனால் நீங்கள் எந்தப் பக்கம் நின்று கவனித்தாலும் மூன்றினை மட்டுமே காண முடியும். பின்னால் இருக்கும் ஒன்று மறைந்துவிடும். அவ்வளவு நேர்த்தியான கட்டமைப்பு. 

உள் பகுதியில் இடிபாடுகள் நிறைந்த ஒரு தளத்தில் கட்டுமான பணிகள் நடந்துக் கொண்டிருந்தது. யுனேஸ்கோவின் மேற்பார்வையில் இப்பணிகள் நடப்பதாக கோல் ச்சேன் கூறினார். 

அங்கோர் பகுதிகளில் அவ்வளவு சுலபத்தில் மறு சீரமைப்புப் பணிகளை செய்துவிட முடியாது. கட்டிட அமைப்பு இருந்ததன் ஆதாரம் காட்டப்பட வேண்டும். அது மூன்று அடுக்குகளான குழுவினரால் ஒப்புக் கொண்ட பிறகே சீரமைப்புப் பணிகளை தொடர முடியும். சீரமைப்புப் பணிகள் மூன்றாண்டுகளாக நடப்பதாக கூறப்படுகிறது. ஆனால் 13-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பேயோன் எனும் தங்கக் கோபுரத்திலான கோவில் மட்டும் 5 ஆண்டுகளில் கட்டி முடிக்கப்பட்டது என்றால் உங்களால் நம்ப முடிகிறாதா?

இன்றய நவீனம் அந்நாட்களில் இருந்திருந்தால் ஒட்டு மொத்த உலகையும் அடிமையாக்கி கோவில்கள் எழுப்பி இருப்பான் இந்த ஏழாம் ஜெயவர்மன் என்றே நினைக்கத் தோன்றுகிறது. 

பயணங்கள் தொடரும்...

Monday, December 09, 2013

அங்கோர் வாட் 2 - கம்போடிய பயணம் படங்களுடன்

பொற்கதிரில் பொழிவாய் சிதறும் சிரிப்பு

’May you have what really matters- in future may you marry thousands and thousands of husbands' - A Record of Cambodia The Land and its People - Page 56 (Young Girls)


'Zhentan' எனும் சடங்கு முறையைக் கேள்விபட்டதுண்டா? வயதுக்கு வந்த பெண் திருமணம் செய்துக் கொடுக்கப்படும் முன் மத போதகனால் கன்னி கழிக்கப்பட வேண்டும் என்பதே இச்சடங்கின் அர்த்தம். A Record of Cambodia The Land and its People எனும் நூலில் இக்குறிப்பு காணப்படுகிறது. சியம் ரிப் பயணத்திற்கு முன் கம்போடியாவை பற்றி அறிந்து வைத்துக் கொள்ள சில புத்தகங்களை வாங்கினேன். அதில் இந்தப் புத்தகம் தனி சிறப்பு மிக்கது. 


1296-1297-ஆண்டுகளில் அன்றைய யசோதரபுரம் என அழைக்கப்படும் அங்கோர் நகரத்திற்குச் சென்ற ஒரு சீனத் தூதுவனின் குறிப்புகளில் இருந்து இப்புத்தகம் இயற்றப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் சீனக் குறிப்பில் இருந்து பிரன்சு மொழிக்கும் பின் பிரன்சு மொழியில் இருந்து ஆங்கிலத்துக்கு The Customs Of Cambodia (1902) எனும் நூலாக பதிப்பிக்கப்பட்டது. 2007-ல் நேரடியாக சீனக் குறிப்பில் இருந்து ஆங்கிலத்திற்கு A Record of Cambodia The Land and its People எனும் புத்தகமாக பதிப்பிக்கப்பட்டுள்ளது. இந்த குறிப்புகளை எழுதிய சீன தூதுவனின் பெயர் ச்சாவ் தாக்குவான் (Zhou Daguan 1266–1346). தாக்குவான் மூன்றாம் இந்திரவர்மனின் (Indravarma iii 1295-1308) காலகட்டத்தில் அங்குப் பயணித்திருக்கிறார். அக்காலகட்டத்தில் யசோதரபுரத்தில் நிகழ்ந்தவற்றைக் குறித்த ஒரே நேரடி சாட்சி ச்சாவ் தாக்குவான் மட்டுமே. 

கம்போடிய நாணயம் - ரியல்
மெற்சொன்ன சடங்கு முறை ஒரு கொண்டாட்டமாக இருந்திருக்கிறது. அன்றய மக்களின் நிலை இதுவென அறிய முடிகிறது. ச்சாவ் தாக்குவான் சென்ற காலத்தில் சைவம், வைணவம் மற்றும் புத்தம் என மூன்று மதங்களும் அங்கு அமலில் இருந்துள்ளன. பூணூல் மற்றும் காவி அணிந்தவர்களை பண்டிதர்கள் என குறிப்பிடுகிறார் தாக்குவான். அவரின் குறிப்புகளை மேலும் ஆங்காங்கு அடுத்து வரும் பத்திகளில் மேற்கோள் காட்டுகிறேன். நீங்கள் அங்கோர் பயணம் செல்வதாக இருந்தால் இந்த புத்தகத்தையும் வாங்கிப் படித்துவிடுங்கள். அன்றைய நிலையில் இங்கிருக்கும் கோவில்கள் எப்படி இருந்தன என்பதையும் இன்றைய நிலையில் நீங்கள் காணும் மாபெரும் கற்சிப்பங்களுக்குமான வேறுபாட்டை உணர்வீர்கள்.

நாங்கள் அங்கு சென்ற நேரம் சியம் ரிப் இன்னமும் உறங்கிக் கொண்டிருந்தது. அவர்களுக்கு அதிகாலை நேரம் அது. எப்பொழுதும் இந்நிலையில் இருப்பதில்லை. நாங்கள் அங்குச் செல்வதற்கு இரு நாட்களுக்கு முன் தான் கம்போடிய பொதுத் தேர்தல் நடந்து முடிந்திருந்தது. இவ்வாண்டின் தேர்தல் கொஞ்சம் சவாலாக இருந்ததாகவும். மக்களின் எழுச்சி நிலை ஓங்கி இருந்ததால் நெடுநாட்களாக ஆட்சியில் இருந்தக் கட்சிக்கு கொஞ்சம் அழுத்தம் கொடுத்திருக்கிறார்கள். மலேசியாவின் அரசியல் நிலையே அங்கும் ஏற்பட்டிருக்கிறது என்பதை அறிந்துக் கொண்டேன். ’இரு நாட்களாக ஊடகச் செய்திகள் ஒட்டு மொத்தமாக நிறுத்தப்பட்டுள்ளது. தேர்தலின் வெற்றியாளர் யார் என்பதும் தெரியவில்லை. அதிகமான மக்கள் தேர்தல் செய்தியை அறிந்துக் கொள்ள விடுமுறையில் இருக்கிறார்கள். கலவரம் வருமென’ அஞ்சுவதாக பயண வழிகாட்டி ச்சேன் வயிற்றில் புலியைக் கறைத்தார்.

டிலக்ஸ் அறையின் கட்டில் பகுதி
‘ச்சேன் நான் உங்களுக்கு மடல் அனுப்பி இருந்தேன் இல்லையா. எங்களின் விடுதிக்கான வழி தெரியும் தானே’ ‘ஓ... நிச்சயமாக. SKY WAY HOTEL தானே. தாராளமாக செல்லலாம்’. ’நாங்கள் குளித்துத் தயாராகிவிடுகின்றோம். பிறகு காலைச் சிற்றுண்டிக்கு அழைத்துச் செல்லுங்கள்.’ ‘ஆகட்டும் சார்’. ’நாங்கள் தங்கும் விடுதி எப்படி? நல்லவிதமானதா?’ ச்சேன்னின் நல்ல பதிலை எதிர்ப்பார்த்தேன். ‘நல்ல விடுதி. ஜப்பானியர்கள் அதிகம் அந்த விடுதியைத் தேர்ந்தெடுப்பார்கள். கொஞ்சம் விலை மலிவு’. 
விடுதியின் வெளிபுரம்
நாம் செல்லும் பயணங்களில் முக்கியமாக கவனிக்க வேண்டிய விசயங்களில் விடுதியும் ஒன்று. சில வேளைகளில் ரொம்பவே சொதப்பலாகிவிடும். இதனால் விடுமுறைக்கான மன நிலை மொத்தமாய் குழைந்துவிடும். இது தொடர்பாக சுஜாதா தனது பயணத்தின் போது பட்ட அவஸ்தையை நயகரா எனும் கதையில் அழகாகச் சொல்லி இருப்பார். SKY WAY HOTEL, SIEM REAP மூன்று நட்சத்திர தங்கும் விடுதியாகும். நீச்சல் குளம், இணைய வசதியும், காலைச் சிற்றுண்டியும் உண்டு. நான்கு நாள் மூன்று இரவுகள் நாங்கள் அங்கு தங்கினோம். நாங்கள் 3 டீலக்ஸ் அறைகளை பதிவு செய்திருந்தோம். அறை ஒன்று மூன்று இரவுகளுக்கு 250 ரிங்கிட்/USD78 மட்டுமே. 

கம்போடிய நாணயம் ரியல் என அழைக்கப்படுகிறது. ரியலின் மதிப்பு மிகக் குறைவு. ஆதலால் செல்லும் இடங்கள் யாவும் அமேரிக்க டாலரின் புலக்கம் தான். ஒரு டாலர் 4200 ரியலுக்கு சமம். விமான டிக்கட், விடுதி செலவு மற்றும் பயண வழிகாட்டிக்கான பணம் யாவும் அங்குச் செல்லும் முன் இணையம் வழி செலுத்திவிட்டேன். அங்கு கொண்டு சென்றது உணவு மற்றும் வழிச் செலவுக்கான பணம் மட்டுமே. உணவுக்கான பணம் மட்டுமே கொஞ்சம் அதிகமாக செலவானது. ஒரு வேளை சாப்பாடு சராசரியாக 6 பேருக்கும் 40 டாலர் வரையில் செலவானது. மலேசிய நாணயத்திற்கு ஒப்பிடும் போது இது கொஞ்சம் அதிகமானதே. சர்வதேச சுற்றுலா தளம் என்பதால் இவ்விலை பட்டியலை நாம் ஏற்றுக் கொள்ள தான் வேண்டும். 

உங்கள் வழித் துணைக்கு பயனாக அமையும் மேலும் ஒரு புத்தகம் Lonely Planet Cambodia. Lonely Planet உலகின் அனைத்து நாடுகளுக்குமான சுற்றுலாக் குறிப்புகளைத் தொகுத்திருப்பார்கள். ஒரு கையடக்க அகராதியைப் போல் புரட்டிக் கொள்ள முடியும். கம்போடியாவுக்கான புத்தகத்தை புரட்டிய போது சில இந்திய உணவகங்களும் அங்கிருப்பதை உணர்ந்தேன். அங்குச் சென்றும் காலைச் சிற்றுண்டிக்கு இந்திய உணவகத்தை தான் நாடினோம். ச்சேன் காட்டியதில் புத்தகத்தை காட்டினும் மேலும் பல இந்திய உணவகங்கள் பெருகி இருந்தன. அதிகாலை என்பதால் பல உணவகங்கள் திறக்கப்படாமல் இருந்தன. 

Curry Walla உணவகம்
Curry Wallaவில் மட்டும் எங்களை உபசரிப்பதாகச் சொன்னார்கள். அனைத்தும் வட இந்திய உணவு வகைகள். வேலையாட்கள் வட இந்தியரும் கம்போடியர்களாகவும் காணப்படுகிறார்கள். ஆடர் எடுத்து உடனுக்குடன் வேண்டியதை சமைத்துக் கொடுக்கிறார்கள். உணவுக்கு A கொடுக்கலாம். நான் சப்பாத்தி ஆர்டர் செய்திருந்தேன். இங்கு நாம் சப்பத்தியை சாம்பார் அல்லது சட்டினி வகைகளோடு முக்கி எடுத்து ருசி பார்ப்போம். அங்கு ஒரு கிண்ணத்தில் கெட்டித் தயிரை கொடுத்தார்கள். சப்பாத்திக்கும் தயிருக்குமான காம்பினேஷன் டிவைன். 

சியம் ரிப்பில் சர்வ தேச அளவிலான எல்லா உணவுகளும் கிடைக்கின்றன. நாட்டுக்கு ஒரு கடை விகிதம் திறந்திருப்பார்கள் போல. முடிந்த அளவுக்கு பதம் பார்த்துவிடுங்கள். வாய்ப்புகள் எல்லா சமயங்களிலும் அமைவதில்லை. 

நுழைவுச் சீட்டு எடுக்கும் இடம், நாங்கள் எடுத்தது மூன்று நாட்களுக்கான சீட்டு
சிற்றுண்டியை முடித்துக் கொண்டு வர்மன்கள் கட்டி வைத்த கட்டிடங்களை காண ஆயத்தமானோம். அதற்கு முன் அங்கோர் பார்க் எனப்படும் கோவில்களும் கலைச் சிற்பங்களும் நிறைந்த அப்பகுதியை சுற்றி பார்க்க உரிமச் சீட்டு எடுக்க வேண்டும். எல்லா பணமும் மொத்தமாக பயண வழிகாட்டியிடம் செலுத்திவிட்டதால் பாஸுக்கான விலையும் சேர்க்கப்பட்டிருந்தது. படம் பிடிக்க முகத்தை காட்டி பாஸ் வாங்கி மாட்டிக் கொண்டோம். 

முதலாவதாக நாங்கள் காணச் சென்ற இடத்தை இப்படி குறிப்பிடுகிறார் சீனத் தூதுவன் ச்சாவ் தாகுவான்:

‘the wall of the city are about twenty li (10 kilometers) in circumference. there are five gateways, each of them with two gates, one in front of the other.'

'in the center of the capital is a gold tower, flanked by twenty or so stone towers and hundred or so stone chambers'. A Record of Cambodia The Land and its People - Page 47&48 (the city and its walls)

பயணங்கள் தொடரும்...

Thursday, December 05, 2013

அங்கோர் வாட் - கம்போடிய பயணம் படங்களுடன்

எனது பாஸ்போர்ட், இமிகிரேஷனுக்கான வெள்ளை அட்டையும், சுங்கத்துறைக்கான நீல அட்டையும்
சரித்திர சுவடுகளை படித்து உணர்ந்து கொள்வதிலும், நேரிடையாக கண்டு உணர்வதிலும் காத தூர வேறுபாடுகள் உண்டு. முன் நோக்கி ஓடும் முன்னோடிகள் சரித்திரத்தை பழம் பெருமை பேசும் கருவியாகவே கருதுகிறார்கள். அதை தூர எரிந்து அடுத்தக் கட்டத்திற்கு நகர வேண்டும் என்பது இவர்களின் வாதம். 

வரலாற்று பின்னணிகளை அலசல் செய்து தெரிந்து கொள்வதில் எனக்கு அலாதி பிரியம். முடிந்த அளவில் அதை இங்கு பகிர்ந்தும் வந்துள்ளேன். இப்பொழுதும் ஒரு சுவாரசியமான பயணத்தை முடிந்த மட்டில் இங்கு கொடுக்க எத்தனிக்கிறேன். 

சியம் ரிப் கம்போடியாவின் இரண்டாவது பெருநகரம். முதல் நிலையில் உள்ளது அதன் தலைநகரான ப்நோம் பேன். கம்போடியா ஆசியாவில் மூன்றாம் நிலையில் இருக்கும் ஏழை நாடு. பல போர்களாலும் படையெடுப்புகளாலும் பலமான அடிகளை வாங்கிய நாடு. இன்னமும் அதன் தாக்கத்தை நாம் அங்கு காண முடிகிறது. போல் போட்டின் ஆட்சி காலத்தின் யுத்த கால நிகழ்வுகளை வாசிக்க விரும்புவோர் Survival in the Killing Fields எனும் நூலினை வாசித்துப் பார்க்கலாம். 
தரையிறங்கும் முன்
அதிக வளர்ச்சி என ஏதும் கூற முடியாத நகரம் சியம் ரிப். 20 ஆண்டுகளுக்கு முன் நீங்கள் ஒரு கிராமப் பகுதியில் வாழ்ந்திருப்பீர்கள் என்றால் அது தான் இன்றைய சியம் ரிப். நகரப் பகுதிகளில் மட்டுமே மின்சார வசதிகள் காணப்படுகிறது. நான் சென்றது அதன் மழை கால சமயத்தில். கால்வாய் வசதிகள் போதுமானதாக அமைக்கப்படவில்லை என்பதால் சிறு மழைக்குக் கூட நீர் தேக்கங்கள் ஏற்படுகிறது. சியம் என்பது தாய்லாந்தின் புரதான பெயர். சியம் ரிப் என்பது தாய்லாந்து வீழ்ந்த பகுதி என அறியப்படுகிறது. கம்போடியர்கள் இன்றளவிலும் தாய்லாந்துக்காரர்களை தன் எதிரியாகவே கருதுகிறார்கள். 

எல்லையோர வாய்க்கால் வரப்பு தகறாருகள் இவர்களுக்கு உண்டு. கம்போடிய தாய்லாந்து எல்லையில் இருக்கும் ஒரு புரதான கோவில் யாருக்கு சொந்தம் என்பதிலான பிரச்சனை இன்னும் நிலுவையில் உள்ளது. தாய்லாந்தில் இருந்து கம்போடியாவுக்கு பயணம் செய்வது ஒரு மலை முகட்டில் இருந்து உங்களை கீழே உருட்டிவிடுவதற்கு சமமாகும். மிக மோசமான பாதைகளை கடந்து வந்தாக வேண்டும். இரு நாடுகளுக்கிடையிலான நல்லிணக்கம் சொல்லிக் கொள்ளும் விதத்தில் இல்லாததால் இந்நிலை ஏற்பட்டுள்ளது. சுற்றுலாத்துறையின் வருமானமும் யுனேஸ்கோவின் மாணியமும் இதற்கு முக்கிய காரணம். இருவரும் சலிக்காமல் விடாப்பிடியாகவே இருக்கிறார்கள். 

விமான நிலையத்திற்கு வெளியே- துடைத்து வைத்த சுத்தம்
மலேசியர்கள் கம்போடியாச் செல்ல விசா தேவை இல்லை. விசா கட்டுப்பாடு உள்ள நாடுகள் கம்போடிய இமிகிரேஷனில் 'Visa On Arrival' எடுத்துக் கொள்ளும் வசதியும் உள்ளது. அதற்கான கட்டணம் தெரியவில்லை. மலேசியர்கள் விசா இல்லாமல் 30 நாட்களுக்கான பயண உரிமத்தை பெற்றுக் கொள்ள முடியும். 30 நாட்களுக்கும் அதிகமாக தங்க விரும்புவோர் விசா நிபந்தனைக்குட்படுவார்கள். 

சியம் ரிப் முழுவதும் சுற்றுலா பயணிகளை நம்பி செயல்படுகிறது. சுற்றுலா பயணிகள் இல்லாத சியம் ரிப் நகரத்தை இவர்களால் கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாது. இந்துக் கலாச்சாரத்தையும் மரபுக் கலைகளையும் அமல்படுத்திய ஒரு பழம் பெரும் நாகரீகத்தை காண புற்றிசல்களை போல் கூட்டம் கிளம்பி வந்துக் கொண்டிருக்கிறது. ஒட்டு மொத்தத்தில் ஐரோப்பிய வெள்ளைத் தோல்கள் அதிக அளவில் வருகிறார்கள். அதனை அடுத்து ஜப்பானியர்களும் சீனர்களும் அதிகமாக வருகை புரிகிறார்கள் என்பது சற்று ஆச்சரியமான தகவல் தான். 

விமான நிலையத்தினுள் இந்த வெள்ளை யானை பலரையும் கவர்ந்தது
வாட் என்பது கோவிலை குறிக்கும். இன்றய அங்கோர் எனப்படும் சமவெளி முன் ஒரு காலத்தில் யசோதரபுரம், ஹரிஹரலாயம், ஈஸ்வரபுரம் போன்ற பெயர்களால் அழைக்கப்பட்டுள்ளது. அங்கோர் வாட் என்பது சூரியவர்மன் எனும் கெமர்(கம்போடியா) அரசனால் கட்டப்பட்ட கோவிலாகும். இன்றும் அது தமிழர்களால் கட்டபட்டது எனவதிடுவோர் உண்டு. சூரியவர்மன் தமிழன் என சொல்பவர்களும் உண்டு. அங்கு வாழ்ந்த மக்கள் இந்துவாக இருந்திருக்கிறார்கள் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் அங்கு வாழ்ந்தவர்கள் நிச்சயமாக அந்த மண்ணின் மைந்தர்களாகிய கம்போடியர்கள் தான். அக்கோவில்களை கட்டி எழுப்பியதும் கம்போடிய அரசர்கள் தான். ஹிந்து மதமும் அரசாட்சி முறைகளும் வணிகத்தின் வழி அங்கு பரப்பப்பட்டுள்ளது. 

அங்கோர் பகுதியில் நூற்றுக்கும் மெற்பட்ட கோவில்கள் இருந்துள்ளன. ஆனால் இன்று நம்மால் காண முடிந்தது அவற்றில் சொற்பமானவை மட்டுமே. பல கோவில்கள் போர்களலும் இயற்கை பேரிடர்களாலும் பலமான பாதிப்பிற்குட்பட்டுள்ளன. சிற்ப கலை திருட்டுகளும் நடந்துள்ளன. இதில் அங்கோர் வாட் மட்டும் கொஞ்சம் தப்பித்துவிட்டது. அதுவே இன்றளவும் முழுமையாக காணப்படுகிறது. அதனால் தான் என்னவோ சியம் ரிப் போகும் பலரும் அங்கோர் வாட் காணச் செல்வதாக அதை ஒரு ‘லெண்ட் மார்க்காக’ குறிப்பிடுகிறார்கள். 
எல்லையோர சர்ச்சைக்கு காரணமான Preah Viher கோவில் - Photo thanks to TOGO website
நான், மனைவி, அப்பா, அம்மா, என் நண்பர் மாறன் மற்றும் அவர் மனைவி என 6 பேர் இந்த அங்கோர் பயணத்தில் கலந்துக் கொண்டோம். ஏர் ஆசியாவின் மலிவு விற்பனையின் போது போக வர விமான சீட்டு ஒரு ஆளுக்கு 270 ரிங்கிட் ஆனது. கோலாலம்பூர் விமான நிலையத்தில் இருந்து சியம் ரிப் விமான நிலையத்துக்கு 2.30 மணி நேர பயணம். தரையிறங்கும் முன் அந்நாட்டின் நிலபரப்பு மிக விசித்திரமாகவே காட்சியளித்தது. சமவெளியும் நீர் நிலை பகுதிகளும் அங்கும் இங்குமாக காணப்பட்டது. 

பயணத்திற்கு முன்பாகவே ஹோட்டல் மற்றும் பயண வழிகாட்டியையும் முன் பதிவு செய்திருந்தேன். சியம் ரிப்பின் ஹோட்டல்கள் மிக மலிவான விலையில் கிடைக்கின்றன. TripAdvisor, Booking, AirAsia Go, Agoda போன்ற இணைய தளங்கள் இதற்கு மிகவும் பயனாக இருந்தன. பயண வழிகாட்டிக்கு ஒரு சில நிருவனங்களை அனுகினேன். தேர்ந்தெடுக்க நினைத்த வழிகாட்டியை இணைய பயனர்கள் அவர்களின் பயண அனுபவங்களில் எழுதியதின் அடிப்படையில் தேர்வு செய்தேன். எனது நல்லூழ், கோல் ச்சேன் எனும் அவ்வழிகாட்டி அருமையான மனிதராக அமைந்தார். 

சியம் ரிப் விமான நிலையத்தில் தரையிறங்கியதும் விசா பிரச்சனைகள் ஏதும் இல்லாததால் இமிகிரேஷன் விவகாரங்கள் இனிதே முடிந்தது. விசா வேண்டுவோர் ஒரு பக்கம் வரிசை கட்டி நின்று கொண்டிருந்தார்கள். 30 நாள் முத்திரையோடு கம்போடியாவில் காலடி வைத்தோம். ச்சேன் எனது பெயர் பலகையோடு காத்திருந்தார். விசாலமான இருக்கைகள் கொண்ட ‘வேனுக்கு’ எங்களை அழைத்துச் சென்றார். அதிசயமாக வேனின் கதவுகளை காணவில்லை. ‘நண்பா இது மலேசியா இல்லை. இந்த வண்டியின் கதவுகள் அந்தப் பக்கம் இருக்கிறது பார்’ என்றார் ச்சேன். கம்போடியாவின் வண்டிகள் யாவும் இட பக்க வழக்கம் கொண்டவை. நமது போகும் வழி அவர்களுக்கு வரும் வழியென சாலை அமைப்பு. அறியாமையின் நகைப்போடு எங்களின் விடுதியை நோக்கி பயணப்பட்டோம்... 

பயணங்கள் தொடரும்... 

Monday, December 02, 2013

யூதர்கள் தொடர்பான 15 குறிப்புகள்


1.உலகில் அதிகமாக ஆசிர்வதிக்கப்பட்டவர்களும் அதிகமாக சபிக்கப்பட்டவர்களும் யூதர்களே எனும் ஆங்கில சொற்றொடர் பிரபலமானது.


2. நான் யூதர்களை கொன்றுக் குவித்த காரணங்களை மிச்சம் விட்டு வைத்திருப்பவர்களை கண்டு தெரிந்துக் கொள்வீர்கள் எனச் சொல்கிறார் ஹிட்லர்.

3. ஹிட்லரின் தந்தையின் பெயர் அலாய்ஸ் ஹிட்லர். அலாய்ஸ் ஹிட்லருக்கு தன் தந்தை யார் என தெரியாது. அவர் தாய் (ஹிட்லரின் பாட்டி) ஒரு யூதனின் வீட்டில் தங்கி பணி புரிந்த காலத்தில் பிறந்தார் என்பது மட்டுமே தெரியும். அப்படி இருப்பின் ஹிட்லர் வெறுத்த முதல் யூதன் தன் தந்தை தான். ஹிட்லருக்கு தன் அப்பாவை பிடிக்காது.

4. தனது மதம், தனது இனம் என விட்டுக் கொடுக்காமல் சரித்திர சங்கிலியில் தொடர்ந்து இரத்தம் சிந்தி வருகிறார்கள் யூதர்கள்.

5. மோசஸ் எனும் இறை தூதனின் வழி தோரா எனும் புனித நூலை பெற்றவர்கள் இன்னமும் ஒர் இறை தூதன் தனது இனத்தில் தோன்றுவான் என காத்திருக்கிறார்கள். ஏசு ஒரு யூதனாக இருப்பினும் அவரை யூத குலம் முழுமையாக ஏற்க மறுத்தது. ஒரு யூதனால் காட்டிக் கொடுக்கப்பட்ட ஏசு (யூதாஸ் கொடுத்த முத்தம்) யூதர்களால் வதைத்துக் கொல்லப்படுகிறார். நபிகள் நாயகம் யூத குலத்தில் பிறக்காததால் அவர்ரையும் தேவ குமாரனாக ஏற்க மறுத்தவர்கள் யூதர்கள்.

6. ஏசுவை கொன்றவர்கள் என கிருத்தவர்களாலும் நிலத்தை அபகரித்தவர்கள் என முஸ்லிம்களாலும் சுமார் முந்நூறு ஆண்டு கால சிலுவை போரில் பந்தாடபட்டவர்கள் யூதர்கள்.

7. முகில் எழுதிய யூதர்கள் எனும் புத்தகம் யூதர்கள் தொடர்பான மேலோட்ட தகவல்களை கொடுக்கிறது. மிகவும் சிறப்பானதொரு தொகுப்பு நூல் இது.

8. இதனை தொடர்ந்து மேலதிக தகவல்களுக்கு பா.ராகவனின் நிலமெல்லாம் இரத்தம் எனும் நூலினை வாசிக்கலாம். நிலமெல்லாம் இரத்தம் யூதர்கள் மற்றும் இஸ்ரேல் எனும் தேசம் உருவானதின் பின்னனியை முழுமையாக விளக்குகிறது.

9. நில வங்கியை கண்டுபிடித்து, கடன் கொடுத்து, நில அபகரிப்பு செய்து கொஞ்சம் கொஞ்சமாக தன் தேசத்தை உருவாக்க எத்தனித்தவர்கள் யூதர்கள். லஞ்சம், கிரேடிட் கார்டு, எம்.எல்.எம் போன்ற இன்னும் பல வஸ்துக்களுக்கு இவர்களே முன்னோடிகள்.

10. யூதர்கள் தங்கள் குழந்தைகளுக்கு கருவில் இருந்தே போதனை செய்ய தொடங்கிவிடுகிறார்கள். பிள்ளைகள் அறிவிற் சிறந்து விளங்க ஆரோக்கிய உணவு, சிறந்த நூல்கள், கணிதம் என பல வழிமுறைகளை கரு உண்டான காலம் முதல் பின்பற்றுகிறார்கள். உலகில் தனித்துக் காணப்படும் இனமாக அறியப்பட இவர்களின் புத்தி கூர்மையும் ஒரு காரணமாகும்.

11. தீவிர மதப் பற்றுக் கொண்ட யூதர்கள் தாடியையும் கிருதாவையும் வெட்டுவதில்லை.

12. யூத ஆண்கள் சிறு குல்லாவை அணிவார்கள். அவர்கள் அணியும் குல்லா ‘கிப்பா’ என அழைக்கப்படும். கிப்பா எல்லா வேளையிலும் அணிய வழியுறுத்தப்படுகிறது. கிப்பாவை அணியாமல் விடுவது அவர்களின் சடங்கு முறைக்கு எதிரானது.

13. யூதனாக பிறப்பவன் மட்டுமே யூதமத்தில் இருக்க முடியும். யூத மதத்தை துறப்பது சுலபம். யூத மதத்தை தழுவுவது சிரமம்.

14. வெள்ளிக்கிழமை சூரியன் உதிக்கும் சமயம் ’சப்பத்’ தொடங்குகிறது. சப்பத் என்பது யூதர்களின் வார நாள். மிக முக்கிய நாளும் கூட. குடும்பத்தோடு ஒன்று கூடி வழிபாட்டில் ஈடுபடுவார்கள். சப்பத்தின் போது யூதர்கள் எந்த வேலையும் செய்ய மாட்டார்கள். எந்த விதமான சிறு வேலையாக இருந்தாலும் கூட அதைச் செய்ய மாட்டார்கள். ஒரு விளக்கை ஊதி அனைப்பது உட்பட. அந்நாள் முழுக்க அவர்களின் கடவுளை நினைத்தபடி இருப்பார்கள்.

15. Western Wall அல்லது wailing wall என்பது ஜெருசலத்தில் அமைந்திருக்கும் யூதர்களின் புரதான புனிதத் தளம். கி.மு 7-ஆம் நூற்றாண்டில் யூதக் கோவிலாக இருந்த இவ்விடம் ரோமனியர்களின் படையெடுப்பினால் தரைமட்டம் ஆனது. அக்கோவிலில் எஞ்சிய தூண் இன்றும் காணப்படுகிறது. பல யுத்தங்களையும், துப்பாக்கிச் சூடுகளையும், குண்டடிகளையும் கண்ட தூண் அது. யூதர்கள் இன்னமும் அத்தூணை கண்ணுக்குள் வைத்து போற்றுகிறார்கள். அங்குச் செல்லும் ஒவ்வொரு யூதனும் அத்தூணை கட்டித் தழுவி அழுகிறார்கள். அவர்களின் சரித்திர சுவடுகளுக்கு அத்தூண் ஒரு மாபெரும் சாட்சி.

Tuesday, November 19, 2013

The Tournament 18+ சில ஆண்களும் ஒரு பெண்ணும்


சமர் எனும் திரைப்படம் இந்த வருட ஆரம்பத்தில் வெளியாகி இருந்தது. சுவாரசியமான கதை அமைப்பு இருந்தும், பில்லி சூனியம் வைத்ததை போல் அத்திரைபடம் சிறப்பாக வெற்றி காணவில்லை. திரிஷாவுக்காக திரையரங்கு சென்று பார்த்த படம் அது. ஏனே திரிஷா கொஞ்சம் சுருங்கி போய் இருந்தார். வயதின் மூப்பாக இருக்கும் என கருதுகிறேன்.

பணம் கொழுத்தவனின் திமிர்தனத்தை அழகாகவே சொல்லி இருந்தார்கள். மித மிஞ்சிய பணம். புதிது புதிதாக அடுத்தவனை வதைத்து கொண்டாடும் விளையாட்டு என்பதாக அக்கதை அமைந்திருந்தது. சமர் பார்த்த சமயம் The Tournament (2009) எனும் திரைப்படமும் என் மூலைக்கு எட்டிச் சென்றது. The Tournament படத்தின் கதையை கொஞ்சமாக அதில் பிடுங்கி போட்டிருக்கிறார்கள் என்பதே உண்மை.

நெஞ்சு குறுகுறுத்து இரத்தத்தை உறைய வைக்கும் விதமாகவே The Tournament அமைந்திருந்தது. ஓட ஓட விரட்டும் படம் அது. மொத்த படமும் நம்மையும் இழுத்து பிடித்து தரிகொட்டு ஓட வைக்கின்றது. பணம் பெருக பெருக புத்தி கோனலாக சிந்தித்து குதுகளிக்குமாம். கோடிட்ட சட்ட திட்டங்களை உடைத்து பார்க்கவும் அதை பணத்தைக் கொண்டு மொத்தமாக மூடி மறைத்துவிடவும் எண்ணித் துடிக்குமாம். புத்தி சரி இல்லாத ஒரு பணக்காரனே ஒரு டஜன் கிரிமினல் சிந்தனையைக் கொண்டிருந்தால், ஊரின் ஒட்டு மொத்த கிரிமினல் பணக்கார கும்பலும் ஒன்று சேர்ந்தால் எப்படி இருக்கும்? 

ஒரு கோடீஸ்வர கும்பலின் குரூர விளையாட்டை நம் கண் முன் கொண்டு வருகிறது The Tournament. ஊருக்கு ஒதுக்கு புரமாய் புகை மண்டலமாக காட்சியளிக்கும் ஒரு மண்டபத்தில் கூடி 'செத்து செத்து விளையாடும்' விளையாட்டை தொடக்கி வைக்கிறது ஒரு செல்வந்தர் கூட்டம்.

ஏழு ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த கொலை விளையாட்டு விளையாடி பார்க்கப்படும். மொத்தம் முப்பது போட்டியாளர்கள். முப்பது பேரும் உலகின் மிகச் சிறந்த கொலையாளிகள் எனும் அடிப்படையில் விளையாட்டுக்குத் தேர்வு செய்யப்படுகிறார்கள். 24 மணி நேரத்தில் இவர்கள் ஒருவரையொருவர் அடித்து வெட்டி குத்தி வெடித்து சுட்டு இன்னும் எப்படி எப்படி எல்லாம் முடியுமோ அப்படி அப்படி எல்லாம் கொலை செய்ய வேண்டும். இறுதியில் ஒருவரே போட்டியின் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார். ஆக மொத்தம் 29 பேர் இறந்தாக வேண்டும்.

நாமது கற்பனைக்கு அல்லது நாம் எதிர்ப்பார்க்கும் காட்சிகளாக இல்லாமல் புது புது திருப்பங்களில் இப்படம் அமைந்துள்ளது. எதிர்பாராத 'டுவிஸ்டுகள்' இப்படத்தின் பலமும் வெற்றியும் கூட. இந்த போட்டியில் வெற்றியடைபவன் 10 மில்லியன் டாலர் பரிசோடு உலகின் மிகச் சிறந்த கொலைகாரன் எனும் நிழலுலக பட்டத்தையும் பெறுவான். அவன் மீண்டும் அடுத்த ஏழு ஆண்டு கழித்து வரும் போட்டியிலும் மங்களம் பாட முடியும். இந்த 30 கொலைகார பாவிகளின் மேல் மேற்குறிபிட்ட நிழலுலக பணக்கார தாதாகள் ‘பெட்’கட்டி இவன் ஜெயிப்பான் அவன் ஜெயிப்பான் என உலக கிண்ண கற்பந்தை இரசிப்பதை போல் பெருந்திரையில் இரசித்துக் கொண்டிருப்பார்கள்.

ஒரு சுபயோகதினத்தில் இந்த 30 கொலைகாரர்களின் உயிர் ஓட்டமும் தொடங்குகிறது. அவர்களைக் கண்டு கொள்ளும் விதமாக எல்லோர் உடலிலும் அவர்களுக்கேத் தெரியாமல் ஒரு மென் கருவி பொருத்தப்படுகிறது. ஆளுக்கு ஒரு கைத்திரை கருவியும் கொடுக்கப்படுகிறது. ஆட்களின் நகர்வுகளை இரசிகர்கள் பெருந்திரையிலும், போட்டியாளர்கள் கையில் இருக்கும் சிறு திரையிலும் கண்டு கொள்ள முடியும். உடலில் புகுத்தப்பட்ட மென் கருவி ஒரு வெடிகுண்ட்டும் கூட. ஒரு வேளை நீங்கள் போட்டியில் இருந்து தப்பிக்கவோ அல்லது விளகிக் கொள்ள நினைத்தாலும் போட்டியின் இரசிகர்கள் ஒரு பித்தானை அழுத்தி உங்களை சிதறியடித்துவிடுவார்கள். 

சிங்கங்கள் சண்டையிடும் களமென தெரியாமல் கவரி மான் ஒன்று அதில் மாட்டிக் கொண்டால் என்ன ஆகும்? சிங்கங்கள் சண்டையில் மும்முறமாக இருக்குமா இல்லை மானை முதலில் காலி செய்யுமா? அந்த 30 பேரில் ஒருவன் 'சிப்ஸ்' பொருத்தப்பட்டிருக்கும் தனது உடலின் பாகத்தை வெட்டி 'சிப்ஸை' வெளியெடுக்கிறான். இது நடப்பது ஒரு காப்பி கடையின் கழிவறையில். வெளியெடுத்த சிப்ஸை போகிற போக்கில் போட்டுவிட அது ஒரு பாதிரியாரின் காப்பி கோப்பைக்குள் விழ, அவரும் அதை குடித்து தொலைக்க அவரின் வாழ்க்கையே பெரும் பிரச்சனையாகிவிடுகிறது. கடவுளின் பிள்ளை சாத்தான் குடும்பத்தில் வாக்கப்பட்டதை போல மிக பரிதாப நிலையாய் போய்விடுகிறது.

'சிப்ஸ்' இல்லாத கொலைகாரன் தனது கையடக்க சிறுதிரையில் ஏனைய கொலைகாரர்களின் நகர்வுகளை கண்டு தேடிச் செல்ல 'சிப்பை' விழுங்கிய பாதிரியாரை கொல்லவும் ஒரு பக்கம் ஆட்கள் தேடி கொண்டு வருகிறார்கள். ஆரம்பம் முதல் கடைசி வரை அதிரடியான சண்டை காட்சிகள் அதக்கலம். தற்காப்புக் கலை சண்டைகளும் கூடுதல் சுவாரசியம். அந்த சீனப் பெண் அலட்டல் இல்லாமல் எல்லோரையும் வசீகரிக்கிறார். 

இந்தக் கிறுக்குத் தனமான விளையாட்டுக்காக ஊரின் ஒட்டு மொத்த பாதுகாப்பு அம்சமும் தகர்கப்படுகிறது. கொலைக்கு கேஸ் கிடையாது. பாதுகாப்பு கேமரா, காவல் நிலையத்துக்குவிடுக்கும் தொலைபேசி அழைப்பு என எல்லாமே 'ஹேக்' செய்யப்படுகிறது. நிழலுலக பணக்கார தாதாக்கள் 24 மணி நேரத்துக்கு அந்த ஊரையே தன் கைவசம் வைத்துக் கொள்கிறார்கள். 30 பேர் என கணிக்கப்பட்ட விளையாட்டு பாதிரியாரின் காரணமாக 31 பேராக மாறுகிறது. 

போட்டியில் யார் வெற்றி கண்டார். எத்தனை பேர் இறந்தார்கள் என்பதை உங்கள் பார்வைக்கு விட்டுவிடுகிறேன். அதிரடியான அக்‌ஷன் திரைபட விரும்பிகளுக்கு இப்படம் நிச்சயம் பிடிக்கும். சில அரை நிர்வான நடனக் காட்சிகளும் இரத்தச் சகதி மிகுந்த சண்டைக் காட்சிகளும் இருப்பதால் இது 18+ முத்திரை போட்டு வைக்கிறேன். படத்தை தேடி பிடித்துப் பார்க்க சணியடி சித்தன் அருள் புரியட்டும்.

Thursday, November 14, 2013

ஜெயமோகனின் அறமும் - அறமற்ற நிலைகளும்


புத்தகம்: அறம்
ஆசிரியர்: ஜெயமோகன்
நயம்: சிறுகதை தொகுப்பு (13 கதைகள்)
பதிப்பகம்: வம்சி பதிப்பகம்

சிறந்த நூல்கள் வாசகனுக்கு நல்ல நண்பனாகும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. எங்குச் சென்றாலும் ஓரிரு புத்தகங்களை எடுத்து வைத்துக் கொள்வது எனது வழக்கம். நேரம் கிட்டுமாயின் சில பக்கங்களையாகினும் புரட்டி படித்துவிட முடியும். எத்தனை நூல்களை வாசித்தாலும் அதில் சில மட்டுமே வாசகனிடம் தாக்கத்தை ஏற்படுத்திச் செல்கின்றன. 

சமீபத்தில் படித்ததில் மிக கவர்ந்த நூலில் ஒன்று அறம். ஒவ்வொரு கதையும் அற்புதமாய் தொகுக்கப்பட்டுள்ளது. அறம் சிறுகதை தொகுன்பின் அனைத்துக் கதைகளும் ஜெயமோகனின் தளத்தில் இலவசமாக படிக்க முடிகிறது. இருந்தும் இந்நூலை வாங்கிச் சேகரிப்பதில் கொஞ்சமும் நட்டம் இல்லை. இது நிச்சயமாக நமது சேகரிப்பில் இருக்க வேண்டிய நூலாகும்.

ஆரம்ப காலத்தில் ஜெயமோகனின் படைப்புகளை வாசிக்கும் போது அவரின் வட்டார வழக்கு அயற்சியை ஏற்படுத்தியதுண்டு. நாள்பட அவரின் எழுத்து நடை பிடிபட்டதும் தடையற்ற வாசிப்புக்கு இலகுவாகவே இருந்தது. முதலில் முழுமையாய் வாசித்தது அவரின் ஊமைச் செந்நாய், ஆயிரம் கால் மண்டபம், இன்னும் சில சிறுகதை தொகுப்புகளாகும். 

ஜெயமோகனின் ஏழாம் உலகம் ஒரு மாஸ்டர் பீஸ் என முத்திரை குத்தலாம். வாசகனை இந்த உலகிக் இருந்து வெறு ஒரு உலகத்திற்கு தூக்கிச் செல்லும் கதை அமைப்பை கொண்ட படைப்பு அது. இந்த மனிதன் எப்படி தான் இதை எழுதினார் என இன்னமும் வியப்பாகவே உள்ளது. ஏழாம் உலகம் நாவலுக்கு தனியொரு புத்தக அறிமுகம் எழுத வேண்டும் என்றே நினைக்கின்றேன்.

அறம் மொத்தம் 13 சிறுகதைகளை கொண்ட தொகுப்பாகும். வாசகனின் உணர்சிகளை தட்டிச் செல்லும் படைப்பு மிக உன்னதமானது. அறம் நூலின் ஒவ்வொரு கதையிலும் அத்தன்மை புதைந்துள்ளது. அறம் செய்யும் மனிதர்களை இவ்வுலகம் எவ்வளவு அந்நியமாக்கிவிட்டது என்பதை இக்கதைகள் நமக்கு உணர்த்துகின்றன. 

இதில் யானை டாக்டர் எனும் சிறுகதை தனித்துவம் வாய்ந்தது. அக்கதை பிற மொழிகளிலும் மொழிபெயர்கப்பட்டு விழிப்புணர்வுக்காக இலவசமாக விநியோகிக்கப்படுவதாக அறிகிறேன். தமிழ் இலக்கியத்தில் இக்கதைகள் அனைத்தும் மிக முக்கியமான நிகழ்வாகும். அறம் நிகழ்த்திய மனிதர்கள் பலரை நாம் அறியாமல் போனதற்கு காரணம் சமூகத்தின் அறமற்ற நிலைகள் என்பதே உண்மை. 

அறம் நூலினை வாசித்து முடித்து ஜெயமோகனுக்கு நான் எழுதிய மடலும் அவரின் பதில் மடலும் உங்கள் பார்வைக்கு:


அன்பின் ஜெயமோகன்,

உங்களின் அறம் நூலினை மிக கனத்த இதயத்தோடு வாசித்து முடித்தேன். நீங்கள் எழுதியிருக்கும் ஒவ்வொரு எழுத்துகளிலும் கதைச் சூழலின் உணர்வுகள் விரவிக் கிடக்கின்றன. நீங்கள் இக்கதைகளை எழுதிய மனச் சூழலும் வியக்க வைக்கிறது.

சமூகத்தில் பாழ் போன அற நிலைகளை வாசிக்கும் தருணம் ஏதோ ஒரு கோபம் ஏற்படவே செய்தது. அது சமூகத்தின் மீதான கோபமா அல்லது எனது மீதான கோபமா எனவும் சிந்திக்க வைக்கிறது.

நீங்கள் இக்கதைகளில் சொல்லி இருக்கும் அனைத்து நபர்களும் எனக்கு புதிய அறிமுகமே. முதல் கதையான அறம் என்னை கலங்கச் செய்தது. ஆனால் யானை டாக்டர் கதையை படித்தபோது மொத்தமாக மனம் உடைந்து போனேன். புழுக் குவியலில் யானைக்கு போஸ்மோர்டம் என்பது சற்றும் நினைத்துப் பார்க்க முடியவில்லை. கோவில் மற்றும் சர்க்கஸ்களில் யானையை நடத்தும் விதத்தை தவிர்க்க கூறும் டாக்டர் கே அறம் சார்ந்த வாழ்வியலின் உயரத்தில் காணப்படுகிறார்.

தாய்லாந்தில் ஒரு முறை யானை சவாரி செய்திருக்கின்றேன். யானை மண்டையில் இரும்புக் கோலில் அடித்து ஓட்டினான் பாகன். அச்சமயம் என் மனம் பக்கென்று போனது. இனி யானை சவாரி கூடாது என்றே நினைத்தேன். யானை டாக்டர் கதையை வாசித்த போதுமிகவும் வேதனை அடைந்தேன். அக்கதை ஆழமான தாக்கத்தை உண்டாக்கியது. இரண்டு நாட்கள் அக்கதையை மீண்டும் வாசித்து ஏதோ ஒரு தேடலில் ஆழ்ந்து போனேன். அக்கதை என் சிந்தனையில் ஓடிக் கொண்டே இருந்தது. சில இடைவெளிக்கு பின்னரே மீதக் கதைகளை வாசித்து முடித்தேன்.

பூமேடை இராமையா போன்ற சமூக நல விரும்பிகளை சமுதாயம் ஒதுக்கி வைக்கவே விரும்புகிறது. இனிப்புச் சாறை சுமந்த சக்கைகளாகவே அவர்கள் தூக்கியெறியப்படுகிறார்கள். கிடைத்த இனிப்புக்காகவேனும் அவர்கள் நினைத்துப் பார்க்கப்படுவதில்லை. குழு சார்ந்த அதிகாரவர்க்கமே தியாகம் செய்து கொண்டிருப்பவர்கள் எனும் பொது மனநிலையே இதற்குக் காரணம் என கருதுகிறேன்.

நான் மலேசிய குடியுரிமை இலாக்காவில் அதிகாரியாக பணி புரிகிறேன். உலகம்யாவையும் எனும் கதை எனது பணிக்கு முற்றிலும் உடன்படாத ஒன்று. கேரி யார் என்பதையும் அவர் உருவாக்கிய உலகக் குடிமகன் கடவுச் சான்றையும் தேடிப் பிடித்து அறிந்து கொண்டேன். ஒரே உலகம் ஒரே குடிமக்கள் எனும் சாத்தியம் சற்றே சிந்திக்க வைக்கிறது. இனம் மற்றும் மதம் எனும் பொய்கள் மனித மனதில் இருந்து வடிந்தாலன்றி அது நடப்பதற்கில்லை. எனது பணியிட தோழர்களிடம் கேரியின் கதையை பகிர்ந்து கொண்ட சமயம் அவருக்கு யூதன் எனும் அடையாளத்தை குத்தினார்கள். ஒரே இஸ்ரேல் எனும் கொள்கையை உதாரணப்படுத்துகிறார்கள் என்பதை அறிந்தேன். கேரியின் நெடும் போராட்ட கதையை விளக்கஇயலாது என உணர்ந்து அமைதியானேன். உலகமயமாக்கல் எனும் கேட்பாடு உலகை நம் கண் முன் விரித்துப் போட்டிருந்தாலும் மனமெனும் தனி தேசம் சுலபத்தில் அகன்றுவிடுவதன்று.

உங்கள் படைப்பிற்கு நன்றி.


அன்புடன்,
விக்னேஷ்வரன் அடைக்கலம்.



அன்புக்குரிய விக்னேஷ்வரன்,

தங்கள் கடிதத்துக்கு நன்றி.

உண்மைதான். நான் அறம் கடிதங்களுக்கான எதிர்வினைகளில் முக்கியமாகக் கண்டது அக்கதைகளின் நாயகர்கள் முன்வைக்கும் மானுட அறத்துக்குச் சற்றும் பொருந்தாத இனமொழிமதக் கண்ணோட்டத்திலேயே அவர்கள் வாசகர்களில் பெரும்பாலானவர்களால் பார்க்கப்படுகிறார்கள். கெத்தேல் சாகிப் என்ன இருந்தாலும் ஒரு முஸ்லீம்தானே, அது அவர்களின் வணிக உத்தியாக ஏன் இருக்கக்கூடாது என்று எழுதியவர்கள் உண்டு. அவர் முஸ்லீம் என்பதனாலேயே அக்கதை பல இஸ்லாமிய இதழ்களில் மறுபிரசுரம் ஆகியது. அதைப்போல டாக்டர் கே ஒரு பிராமணர் என்பதனாலேயே அச்சாதியைச் சேர்ந்தவர்களால் கொண்டாடப்பட்டார். ஏற்பும் மறுப்பும் அந்தத் தளத்திலேயே நடந்தன. அறம் பேசும் மனிதர்கள் நம்மிடமிருந்து எவ்வளவு அன்னியமானவர்கள் என்பதை அறிந்துகொண்டேன்.

ஜெ


கதைகளை இணையத்தில் வாசிக்க: http://www.jeyamohan.in/?page_id=17097

Monday, November 11, 2013

காமம் செப்பும் சாக்லெட் & Chocolate and Sex Life

சாக்லெட் அதிகம் விரும்பி சாப்பிடுவது ஆண்களா பெண்களா? பெயர் தன்மையைப் போல ’சக்’கென மனதில் ஒட்டிக் கொள்கிறது சாக்லெட். ஆண்கள் தன் காதலிக்கோ மனைவிக்கோ சாக்லெட் வாங்கிக் கொடுப்பது இன்றய நாட்களில் இயல்பாகி விட்டது.

சாக்லெட் சாப்பிடுவது காம உணர்ச்சியைத் தூண்டுமா? Montezuma மகாராஜா அஸ்டெக் (Aztec) ஆட்சிகால மன்னன் ஆவன். ஒரு நாளைக்கு 50 கோப்பை சாக்லேட் அருந்துவானாம். சக்லெட் அருந்துவதுவதினால் ஒரு புதிய வகை உற்சாகம் பிறக்க்குமாம். அதன் பிறகே தன் இணைகளுடன் கூடுவானாம். சாக்லெட் அருந்துவதை அஸ்டேக் கால உயர்குடி மக்கள் ஒரு கலாச்சாரமாகக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

Casanova, உலகமறிந்த காதலன். தன்னை உற்சாகமாக வைத்துக் கொள்ள தினமும் சாக்லெட் அருந்துவானாம். champagne அல்லது சாக்லெட் எனக் கேட்டால். சாக்லெட் என்பது தான் அவரின் பதிலாக அமையுமாம். இந்தக் கதைகள் உண்மை தானா? தெரியாது. ஆனால் ஒரு சுவாரசியம் அதில் இருப்பதாக அறிகிறேன்.

சாக்லெட் சாப்பிடுவது இரத்த ஓட்டத்தை சீர்படுத்தும் எனும் தகவலை முன்பு படித்ததாக நினைவு. காமத்திற்கும் சாக்லெட்டுக்கும் இருக்கும் தொடர்பு இன்னமும் பல விதமாக அலசப்பட்ட வண்ணமே இருக்கிறது. அதனால் தான் என்னவோ அதை நம்பியோ நம்பாமலோ சக்லெட்டை விரும்பி சாப்பிடுகிறார்கள்.

சாக்லட் காதலின் அடையாளமாக இன்று கருதப்படுகிறது. காதல், காம உணர்சியை மேலிட செய்வதற்கு மட்டும் இன்று சாக்லட் பயன்பாட்டிற்கு இல்லை. புதிய நட்புபையும் பாசத்தை வெளிப்படுத்தவும் சாக்லெட் கொடுக்கப்படுகிறது.

சாக்லெட் தொடர்பான ஆய்வுகளை செய்வதற்கு ஆராய்ச்சியாளர்கள் சளைத்ததாக தெரியவில்லை. தெ மெசேஜ் ஆப் லவ் என சாக்லெட்டின் தனித் தன்மையைக் குறிப்பிடுகிறார்கள். அது போக சாக்லெட் 2000 ஆண்டுகளாக பயன்பாட்டில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. (திருவள்ளுவர் சாக்லெட் பற்றி ஏதும் எழுதி இருக்கிறாரா) இந்த எண்ணம் தன் உடனே எழுந்தது. நக்கலாக தோன்றினால் மன்னிக்கவும். :)


சாக்லெட்டில் phenylethylamine(PEA) எனும் வேதிப் பொருள் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இது மனிதனின் ஆனந்த உணர்ச்சியை தூண்டுகிறது. அதாவது ஒரு மனிதன் ஆனந்தம் அடையும் போது வெளிப்படும் ஹார்மோன் போலவே இது செயல்படுகிறது. இந்த வேதிப் பொருள் மனிதனின் காம உணர்சியை தூண்ட தக்கது. காதல் வயப்படும் ஒரு மனிதனின் மன நிலையை தர வள்ளது.


உணவுப் பொருட்களில் இருக்கும் PEA வேதிப் பொருள் நிலைத் தன்மையற்று என்பதால் அதை மனித உணர்வோடு ஒப்பிடுவதை பொரும்பாலும் தவிர்க்க முனைகிறார்கள். இன்றய நிலையில் சாக்லெட்டின் பயன்பாடு அதிகரித்துவிட்டது. ரொட்டி, கேக், ஐஸ் கிரிம், குளிர் பானம் என பல உணவுப் பொருள்களில் சாக்லெட் கலக்கிறார்கள்.

சாக்லெட்டை பரிசளிப்பது இன்று இயல்பாகிவிட்டது. மனதிற்கினியவர்களுக்கு சாக்லெட்டை பரிசளிப்பது உறவை வளர்க்கும் செயலாகக் கருதப்படுகிறது. பெரு வணிக அங்காடிகளில் சாக்லெட்டிற்காக தனியொரு பகுதியை ஒதுக்கி இருப்பதைக் காணலாம். பொதுவாக குழந்தைகளுக்கு அது தான் விருப்ப இடமாக இருக்கும். சில பொற்றோர்கள் குழந்தைகள் இனிப்பு பண்டங்கள் தின்பதை விரும்ப மாட்டார்கள். திருட்டு ‘தம்’ போல குழந்தைகளுக்கு திருட்டு மிட்டாய் என்ற கதையாகிவிடுகிறது.

அங்காடிகளில் கவரும் ஒரு விடயம் ஹெம்பர் என பொட்டலங்களாக மடிக்கப்படும் விதம். இது 100 முதல் 10000 ரிங்கிட் வரையிலும் ஹெப்பர்களில் விற்பனைச் செய்யப்படுகிறது. இது சாக்லெட்டிற்கான வரவேற்பையே குறிக்கிறது.

சாக்லெட் ஆரோக்கியமான பண்டம் அல்ல அதனால் உடல் நலம் பாதிப்படையும் என்பதே பொதுவாக மக்களிடையே நிலவும் கருத்தாகும். இதனால் சாக்லெட் சாப்பிடுவோரிடையே தமக்கு நீரிழிவு நோய் ஏற்படுமோ, உடல் எடை கூடுமோ, பல் பழுதடையுமோ என்ற எண்ணங்கள் ஏற்படுகின்றன.

ஒரு ஆய்வறிக்கையின் தகவல் சாக்லெட் வியாதிகளுக்கு வித்திடுவதில்லை என்பதை தெரிவிக்கிறது. அது போக சாக்லெட் சாப்பிடாதவரைக் காட்டினும் சாக்லெட் சாப்பிடுபவர்கள் ஒரு வருடம் அதிகபடியான ஆயுளை கொண்டிருப்பார்கள் என்பது அவ்வறிக்கையின் கூடுதல் தகவலாகும்.

கொக்கோ பழத்தில் பற்களைப் பாதுக்காக்கும் கிருமி எதிர்ப்பு சத்து நிறம்ப உள்ளன. சாக்லெட்டில் சேர்க்கப்படும் இனிப்பு வகைகள் அவற்றை சேதமுறச் செய்வது மட்டுமின்றி பற்களையும் பாழடையச் செய்கின்றன. இது ஜப்பானிய ஒசாக்கா பல்கலைக்கழத்தின் ஆய்வறிக்கையாகும்.


சக்லெட்டினால் முகப்பரு ஏற்படுவதில்லை. ஆனால் அதிகமான பால் கலந்த சாக்லெட் முகப்பரு ஏற்பட காரமாகிறது. சாக்லெட்டின் வாசனை மன அமைதியை ஏற்படுத்த வல்லவை.


மாயா மற்றும் அஸ்டெக் கால கட்டங்களில் மக்கள் கசப்பு மிகுந்த சாக்லெட்களை உணவாகக் கொண்டிருக்கிறார்கள். 1500 வருடங்களுக்கு முன் ஸ்பெயின் நாட்டினரால் ஐரோப்பியர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது.

ஐரோப்பியர்கள் இனிப்பு வகை சாக்லெட்டை விரும்பி சாப்பிட்டிருக்கிறார்கள். ஆரம்ப காலத்தில் ஐரோப்பாவிலும் சாக்லெட் மேல்மட்ட மக்களுக்கு மட்டுமென சட்டங்கள் இருந்திருக்கின்றன.

சாக்லெட் Theobroma என அறிவியல் பெயரிடப்பட்டு அழைக்கப்படுகிறது. அது இறைவனின் உணவு என பொருள்படும். இரண்டாம் உலகப் போரின் சமயம் அமேரிக்க இராணுவத்தினரால் ஜப்பானில் சாக்லெட் அறிமுகப்படுத்தப்பட்டது. சராசரியாக 1.7கிலோ சாக்லெட் வருடந்தோரும் ஒரு ஜப்பானியரின் உணவாகக் கொள்ளப்படுகிறது.

சாக்லெட் பற்றிய தகவல்கள் எண்ணிலடங்கா. நாளுக்கு நாள் புது தகவல்கள் நிறைந்து காணப்படுகிறது. சாக்லெட் உறுகுவதைப் போல் அதை பரிசாக பெறுவோரின் மனமும் உருகிவிடுகிறது. உலகளாவிய நிலையில் சாக்லெட் காதலோடு தொடர்புடைய பண்டமாகவே மக்கள் கருதுகிறார்கள்.

தொடர்புடைய சுட்டிகள்:

Friday, July 12, 2013

சிங்கம் 2 - பாக்குறியா பாக்குறியா


பிருமாண்டமான ஆங்கில திரைப்படங்களை கடந்த நூற்றாண்டில் கண்டு கழித்து இன்புற்றிருக்கிறோம். 'வெள்ளைக்காரன் நம்மல விட 20 வருஷம் முன்னுக்கு இருக்கான் டா' என பேசிக் கொள்வார்கள் அப்போதைய சமூக வலைத்தளம் இல்லாத விமர்சகர்கள். அரை குறை ஆடைகளை கண்டால் கண்னை மூடிக் கொள்ளும் நல்ல பிள்ளையாக இருந்த காலம். 

சில படங்கள் பார்ட் 1 பார்ட் 2 என வெளியிடப்பட்டு தூள் கிளப்பும். என்னளவில் அர்னால்டின் பிரடேட்டர், டெர்மினேட்டர் போன்ற படங்கள் 'வாவ்' சொல்ல வைத்த படங்களாகும். அவ்வேளைகளில் ஏன் தமிழ் படங்கள் மட்டும் இப்படி பாகம் பாகமாக வருவதில்லை என ஏங்குவதுண்டு. 

ரஜினியும் கமலும் பாட்ர்1 பார்ட்2 என மீண்டும் மீண்டும் ஒரே தலைப்பிலான படங்களில் நடித்திருந்தால் பள்ளி மாணவனான நானும் நண்பர்களோடு வீர தீரமான சில விமர்சனங்களை செய்திருப்பேன். முன் ஜென்ம பாவத்தால் அப்படியான வாய்ப்புகள் கிடைக்காமலே போய்விட்டது.

மூத்த விமர்சகர்கள் சொன்னது உண்மையோ என்னவோ 20 ஆண்டுகள் கழித்து இப்போது தமிழ் திரைப்படங்களை பாகம் வாரியாக பார்க்கும் வாய்ப்பு நமக்கு கிடைத்துள்ளது. அப்போதய நிலையில் தமிழில் நீயா மற்றும் கல்யாண ராமன் போன்ற திரைப்படங்களே இரண்டு பாகங்களில் வெளிவந்ததாக நினைக்கிறேன். 

சிங்கம் 2 வந்த தினமே வலையுலக விமர்சகர்கள் அதை கிழிந்து பிழிந்து தோரணம் கட்டிவிட்டதால் அதை விரிவாக விமர்சிக்க அவசியமில்லை என்றே கருதுகிறேன். இதற்கு ஏன் இவ்வளவு வரவேற்பு. முண்டியடித்து பார்க்கச் செல்கிறார்கள். பார்க்கிறார்கள் பார்க்கிறார்கள் பார்த்துக் கொண்டே இருக்கிறார்கள். 

அரி எனும் மாமனிதனுக்குள் ஒரு காலாச்சார கவலன் எப்போதும் உறங்கிக் கொண்டிருக்கிறான். 'பாக்குறியா பாக்குறியா' என சூரிய கார்ஜிப்பதை போல் படமெடுக்கும் போதெல்லாம் அந்த கவலனும் வசனத்தை பொழிந்து தள்ளிவிடுகிறான். நல்லவன் வல்லவன் பாசம் நேசம் என எல்லாமே குடும்ப கூட்டத்துக்கு ஏற்றதாய் அமைத்து வாயில் ஈ போவது அறியாமல் படத்தில் மூழ்கச் செய்கிறார். எது எப்படியோ சந்தானத்தின் காமெடி லீலைகள் பச்சையான அசைவ வகையே. 

நாக்கில் பாம்பை கொத்த வைத்து போதை ருசிக்கிறான் ஒரு கிங் காங் வில்லன். அவன் ஒரு ஆப்பிரிக்க கடத்தல் டானாம். முதல் பாகத்தில் உள்ளூர் ரௌடியுடனும் இரண்டில் வெளி நாட்டு டானுடனும் மூன்றில் வேற்று கிரகவாசிகளுடனும் சிங்கம் சண்டையிடும் என நம்பப்படுகிறது. 

என் இதயம் இது வரை துடிக்கவில்லை என முதல் பாகத்தில் ஒரு பாடல் இருக்கும் அதில் அனுஷ்காவில் நெஞ்சில் வட்ட வட்ட வானவில்லை விட்டு கடுபெற்றி தொலைத்தார்கள். அதே வேலையை இரண்டாம் பாகத்திலும் செய்து வயிற்றெரிச்சலை கொட்டி திர்த்துக் கொண்டிருக்கிறார்கள். 

அப்பட்டமாக சொல்லலாம் இது நிச்சயமாக விஜயகாந்த் நடித்திருக்க வேண்டிய திரைப்படம். இதன் கதைக் கருவினை சில யுகத்திற்கு முன் அவர் யோசித்துவிட்டார். அப்போது கொண்டாடி நெகிழாத தமிழினம் இப்போது ஆனந்த தாண்டவம் ஆடுகிறது. 

இந்த படம் வெற்றியடையளாம். அதனால் மூன்றாம் பாகமும் வெளியாகலாம். நானும் இப்படி இன்னொரு மொக்கையை போடலாம். 

பி.கு: இப்பதிவு முழுக்க ஐ-பேட் நான்கில் தட்டச்சு செய்து பதியபட்டுள்ளது :-)