Showing posts with label crimes. Show all posts
Showing posts with label crimes. Show all posts

Tuesday, November 19, 2013

The Tournament 18+ சில ஆண்களும் ஒரு பெண்ணும்


சமர் எனும் திரைப்படம் இந்த வருட ஆரம்பத்தில் வெளியாகி இருந்தது. சுவாரசியமான கதை அமைப்பு இருந்தும், பில்லி சூனியம் வைத்ததை போல் அத்திரைபடம் சிறப்பாக வெற்றி காணவில்லை. திரிஷாவுக்காக திரையரங்கு சென்று பார்த்த படம் அது. ஏனே திரிஷா கொஞ்சம் சுருங்கி போய் இருந்தார். வயதின் மூப்பாக இருக்கும் என கருதுகிறேன்.

பணம் கொழுத்தவனின் திமிர்தனத்தை அழகாகவே சொல்லி இருந்தார்கள். மித மிஞ்சிய பணம். புதிது புதிதாக அடுத்தவனை வதைத்து கொண்டாடும் விளையாட்டு என்பதாக அக்கதை அமைந்திருந்தது. சமர் பார்த்த சமயம் The Tournament (2009) எனும் திரைப்படமும் என் மூலைக்கு எட்டிச் சென்றது. The Tournament படத்தின் கதையை கொஞ்சமாக அதில் பிடுங்கி போட்டிருக்கிறார்கள் என்பதே உண்மை.

நெஞ்சு குறுகுறுத்து இரத்தத்தை உறைய வைக்கும் விதமாகவே The Tournament அமைந்திருந்தது. ஓட ஓட விரட்டும் படம் அது. மொத்த படமும் நம்மையும் இழுத்து பிடித்து தரிகொட்டு ஓட வைக்கின்றது. பணம் பெருக பெருக புத்தி கோனலாக சிந்தித்து குதுகளிக்குமாம். கோடிட்ட சட்ட திட்டங்களை உடைத்து பார்க்கவும் அதை பணத்தைக் கொண்டு மொத்தமாக மூடி மறைத்துவிடவும் எண்ணித் துடிக்குமாம். புத்தி சரி இல்லாத ஒரு பணக்காரனே ஒரு டஜன் கிரிமினல் சிந்தனையைக் கொண்டிருந்தால், ஊரின் ஒட்டு மொத்த கிரிமினல் பணக்கார கும்பலும் ஒன்று சேர்ந்தால் எப்படி இருக்கும்? 

ஒரு கோடீஸ்வர கும்பலின் குரூர விளையாட்டை நம் கண் முன் கொண்டு வருகிறது The Tournament. ஊருக்கு ஒதுக்கு புரமாய் புகை மண்டலமாக காட்சியளிக்கும் ஒரு மண்டபத்தில் கூடி 'செத்து செத்து விளையாடும்' விளையாட்டை தொடக்கி வைக்கிறது ஒரு செல்வந்தர் கூட்டம்.

ஏழு ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த கொலை விளையாட்டு விளையாடி பார்க்கப்படும். மொத்தம் முப்பது போட்டியாளர்கள். முப்பது பேரும் உலகின் மிகச் சிறந்த கொலையாளிகள் எனும் அடிப்படையில் விளையாட்டுக்குத் தேர்வு செய்யப்படுகிறார்கள். 24 மணி நேரத்தில் இவர்கள் ஒருவரையொருவர் அடித்து வெட்டி குத்தி வெடித்து சுட்டு இன்னும் எப்படி எப்படி எல்லாம் முடியுமோ அப்படி அப்படி எல்லாம் கொலை செய்ய வேண்டும். இறுதியில் ஒருவரே போட்டியின் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார். ஆக மொத்தம் 29 பேர் இறந்தாக வேண்டும்.

நாமது கற்பனைக்கு அல்லது நாம் எதிர்ப்பார்க்கும் காட்சிகளாக இல்லாமல் புது புது திருப்பங்களில் இப்படம் அமைந்துள்ளது. எதிர்பாராத 'டுவிஸ்டுகள்' இப்படத்தின் பலமும் வெற்றியும் கூட. இந்த போட்டியில் வெற்றியடைபவன் 10 மில்லியன் டாலர் பரிசோடு உலகின் மிகச் சிறந்த கொலைகாரன் எனும் நிழலுலக பட்டத்தையும் பெறுவான். அவன் மீண்டும் அடுத்த ஏழு ஆண்டு கழித்து வரும் போட்டியிலும் மங்களம் பாட முடியும். இந்த 30 கொலைகார பாவிகளின் மேல் மேற்குறிபிட்ட நிழலுலக பணக்கார தாதாகள் ‘பெட்’கட்டி இவன் ஜெயிப்பான் அவன் ஜெயிப்பான் என உலக கிண்ண கற்பந்தை இரசிப்பதை போல் பெருந்திரையில் இரசித்துக் கொண்டிருப்பார்கள்.

ஒரு சுபயோகதினத்தில் இந்த 30 கொலைகாரர்களின் உயிர் ஓட்டமும் தொடங்குகிறது. அவர்களைக் கண்டு கொள்ளும் விதமாக எல்லோர் உடலிலும் அவர்களுக்கேத் தெரியாமல் ஒரு மென் கருவி பொருத்தப்படுகிறது. ஆளுக்கு ஒரு கைத்திரை கருவியும் கொடுக்கப்படுகிறது. ஆட்களின் நகர்வுகளை இரசிகர்கள் பெருந்திரையிலும், போட்டியாளர்கள் கையில் இருக்கும் சிறு திரையிலும் கண்டு கொள்ள முடியும். உடலில் புகுத்தப்பட்ட மென் கருவி ஒரு வெடிகுண்ட்டும் கூட. ஒரு வேளை நீங்கள் போட்டியில் இருந்து தப்பிக்கவோ அல்லது விளகிக் கொள்ள நினைத்தாலும் போட்டியின் இரசிகர்கள் ஒரு பித்தானை அழுத்தி உங்களை சிதறியடித்துவிடுவார்கள். 

சிங்கங்கள் சண்டையிடும் களமென தெரியாமல் கவரி மான் ஒன்று அதில் மாட்டிக் கொண்டால் என்ன ஆகும்? சிங்கங்கள் சண்டையில் மும்முறமாக இருக்குமா இல்லை மானை முதலில் காலி செய்யுமா? அந்த 30 பேரில் ஒருவன் 'சிப்ஸ்' பொருத்தப்பட்டிருக்கும் தனது உடலின் பாகத்தை வெட்டி 'சிப்ஸை' வெளியெடுக்கிறான். இது நடப்பது ஒரு காப்பி கடையின் கழிவறையில். வெளியெடுத்த சிப்ஸை போகிற போக்கில் போட்டுவிட அது ஒரு பாதிரியாரின் காப்பி கோப்பைக்குள் விழ, அவரும் அதை குடித்து தொலைக்க அவரின் வாழ்க்கையே பெரும் பிரச்சனையாகிவிடுகிறது. கடவுளின் பிள்ளை சாத்தான் குடும்பத்தில் வாக்கப்பட்டதை போல மிக பரிதாப நிலையாய் போய்விடுகிறது.

'சிப்ஸ்' இல்லாத கொலைகாரன் தனது கையடக்க சிறுதிரையில் ஏனைய கொலைகாரர்களின் நகர்வுகளை கண்டு தேடிச் செல்ல 'சிப்பை' விழுங்கிய பாதிரியாரை கொல்லவும் ஒரு பக்கம் ஆட்கள் தேடி கொண்டு வருகிறார்கள். ஆரம்பம் முதல் கடைசி வரை அதிரடியான சண்டை காட்சிகள் அதக்கலம். தற்காப்புக் கலை சண்டைகளும் கூடுதல் சுவாரசியம். அந்த சீனப் பெண் அலட்டல் இல்லாமல் எல்லோரையும் வசீகரிக்கிறார். 

இந்தக் கிறுக்குத் தனமான விளையாட்டுக்காக ஊரின் ஒட்டு மொத்த பாதுகாப்பு அம்சமும் தகர்கப்படுகிறது. கொலைக்கு கேஸ் கிடையாது. பாதுகாப்பு கேமரா, காவல் நிலையத்துக்குவிடுக்கும் தொலைபேசி அழைப்பு என எல்லாமே 'ஹேக்' செய்யப்படுகிறது. நிழலுலக பணக்கார தாதாக்கள் 24 மணி நேரத்துக்கு அந்த ஊரையே தன் கைவசம் வைத்துக் கொள்கிறார்கள். 30 பேர் என கணிக்கப்பட்ட விளையாட்டு பாதிரியாரின் காரணமாக 31 பேராக மாறுகிறது. 

போட்டியில் யார் வெற்றி கண்டார். எத்தனை பேர் இறந்தார்கள் என்பதை உங்கள் பார்வைக்கு விட்டுவிடுகிறேன். அதிரடியான அக்‌ஷன் திரைபட விரும்பிகளுக்கு இப்படம் நிச்சயம் பிடிக்கும். சில அரை நிர்வான நடனக் காட்சிகளும் இரத்தச் சகதி மிகுந்த சண்டைக் காட்சிகளும் இருப்பதால் இது 18+ முத்திரை போட்டு வைக்கிறேன். படத்தை தேடி பிடித்துப் பார்க்க சணியடி சித்தன் அருள் புரியட்டும்.

Monday, March 16, 2009

அரசியல், பொருளாதாரம் & அதிகரிக்கும் குற்றச்செயல்களும்

கபடியாட்டம் கொண்ட அரசியலும் இழுத்துப் பறித்துக் கொண்டிருக்கும் பொருளாதாரமும் என நாட்டின் நிலை தடுமாறிக் கிடக்கின்றது. ஆட்சிக்கு பங்கம் வந்துவிடுமோ எனும் நோக்கில் பொருளாதார நிலையை மறைத்து வைக்கவே முற்படுகிறார்கள் புத்திசாலி ஆட்சியாளர்கள். முழு பூசணியை பிடி சோற்றில் மறைப்பது சாத்தியமாகுமா? மக்களுக்கு தெரிய வேண்டியவை தெரிந்து தானே ஆகும்.

அனேக மலேசியர்களும் நம் நாட்டின் இன்றய நிலை என்ன என்பதை அறிந்து தான் இருக்கிறார்கள். இந்நிலையில் மக்கள் தங்களை தயார் படுத்திக் கொள்ள ஆட்சியாளர்களின் முனைப்பு செலுத்துவது அவசியமாகும். அதை விடுத்து நீ கள்ள ஆட்டம் ஆடுகிறாய் நானும் கள்ள ஆட்டம் ஆடுவேன் என அரசாங்க பணத்தை வாரி இறைத்துக் கொண்டிருந்தால் கழுதைக் கெட்டு குட்டிச் சுவராகத்தான் போகும்.

பெரிய நிறுவனங்களே வியாபரத்தை வெகுவாக குறைத்துக் கொண்டு வருகின்றன. சைட் டிஸ் இல்லாமல் சரக்கடிப்பதைக் கூட ஏற்றுக் கொள்ளலாம். மிக்ஸிங் செய்துக் கொள்ள பச்சை தண்ணீரைக் கூட கொடுக்க முடியாது என சொன்னால் முறையாகுமா?தொழில்நுட்பம் சார்ந்த நிறுவனங்களில் பணி புரிவோர் நிலை இது தான். வேலை இல்லாமல் இருந்தாலும் பணியாள் கூடுதல் நேரம் வேலை செய்தால் கண்டுக் கொள்ளாமல் இருந்த நிலை இன்றில்லை. மாதத்திற்கு 12 நாட்கள் மட்டுமே வேலை கொடுக்கிறார்கள். இரண்டு பொது விடுமுறை இரண்டு நாள் கட்டாய ஓய்வு எடுக்க வேண்டுமாம். தேவைப்பட்டால் ஒரு மாதம் அடைக்கக் கூடும் என்றும் பூடகமான அறிவிப்புகள் வேலை செய்வோரின் வயிற்றில் புளியைக் கரைத்துள்ளது.

சாப்பாட்டுக்கு வழி இன்றி உயிர்விட்ட கதைகள் ஏதும் எழும்பாததால் மாலேசிய பொருளாதாரம் இன்னமும் தேக்கு மரம் போல் கின்னென்று நிற்பதாக அரசு ஊடகங்கள் தெரிவிக்க முற்படுகின்றன போலும். பொருளாதாரம் நிலைகுலையும் சமயங்களில் பலமான அடிபடுவது தெழிற்சாலைகளில் வேலை செய்பவர்கள் தான்.

1997/98 பொருளாதார நெருக்கடியின் சமயம் இதை கண்டிருக்கிறேன். ஆனால் அச்சமயம் இருந்த ஆட்சியில் மக்களுக்கு பயம் ஏதும் இல்லாமல் இருந்தது. இப்போதய நிலைபாடு அதைக்காட்டினும் முற்றினும் மாறுபட்டிருக்கிறது.20 வருடம் 30 வருடம் என ஒரே கம்பெனியில் குப்பைக் கொட்டுவது மலேசியாவில் சகஜமாகக் காணக் கூடிய ஒன்று. இக்கட்டான வேலைகளில் இப்படி அதிக நாள் வேலை செய்தவர்களைக் கழட்டி விடுவது தான் பெரிய கம்பெனிகளின் சிரமமான காரியம். எனக்கு தெரிந்த ஒருவர் 8 வருடங்களாக ஒரு நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். நான்கைந்து மாதங்களுக்கு முன் பல நெருக்கடிகளைக் கொடுத்து கம்பெனியை விட்டுத் துரத்தினார்கள்.

தோட்டங்களிலும் கிராமங்களிலும் வாழும் மக்களின் நிலை எப்படி? அதைப் பற்றிய செய்திகளை ஊடகங்கள் விவரிக்க முயல்கின்றனவா? சில காலத்திற்கு முன் இரப்பரின் விலை தென்னை மர உயரத்துக்கு இருந்தது. தோட்ட பணியாளர்களும் மரமே மடிந்து விழும் அளவிற்கு உளியைப் போட்டு செதுக்கிக் கொண்டிருந்தார்கள். அவ்வளவு உற்சாகம் இருந்தது. இப்போதய நிலை என்ன?

மலேசியா செம்பனை எண்ணெய் ஏற்றுமதி செய்யப்படும் முக்கிய நாடுகளில் அமேரிக்காவும் அடங்கும். இன்றய நிலையில் செம்பனைக்கும் பாதிப்பு என்பதை மறுக்க முடியாது.இதனால் வேளாண் தொழில் துறையை நம்பி இருந்தவர்களின் வருமானமும் நிச்சயமற்று இருக்கிறது என்றாகிறது.

பொருளாதார பிரச்சனைகள் துளிர்விடும் சமயங்களில் குற்றச் செயல்களும் கிடுகிடுவென வளர்ந்துவிடவே செய்கின்றன. புதிதாக வாங்கிய நகைகளை காட்டிக் கொள்ள விரும்பும் நங்கைகளை இரகசியப் பார்வைகள் கவனித்துக் கொண்டிருக்கவேச் செய்யும்.வேலை இழந்தவன் வயிற்று பிழைப்புக்கு என்ன செய்வான். திருட்டு, கொலை, கொள்ளை சம்பவங்கள் அதிகரிக்கின்றன. இருப்பினும் இதில் விந்தை தமிழர்களே அதிகமான திருட்டு சம்பவங்களில் ஈடுபடுகிறார்கள். அன்மையில் ஈப்போவில் நடந்த சம்பவம். 1000 ரிங்கிட்டுக்காக எண்ணைக் கடையில் வேலை செய்த தொழிலாளியை வெட்டிக் கொன்று பணத்தை எடுத்துச் சென்றுள்ளார்கள். 4 தமிழ் இளைஞர்கள் ஒரு நகைக் கடையில் 5 நிமிடத்தில் 3 இலட்சம் கொள்ளையடித்துச் சென்றார்கள்.

சமீப காலமாக காவல் துறையினரின் மீது இந்தியர்களுக்கு ஏற்பட்டிருக்கும் மனக்கசப்பு மறுக்க முடியாத ஒன்று. எதானல் இந்நிலை? மலேசிய குடிமக்களில் இந்தியர்கள் சிறுபான்மையினார். ஆனால் குற்றச் செயல்களைப் பார்த்தோமானால் அவர்கள் தான் முதலிடம் வகிக்கிறார்கள்.

சமீபத்தில் 6 இந்தியர்கள் கூலிமில் சுட்டுக் கொள்ளப்பட்டார்கள். அவர்கள் நிஜத்தில் தவறு செய்தவர்கள் தானா? குகன் எனும் இளைஞரின் மரணம் மக்களிடையே பெரும் பரபரம்பை ஏற்படுத்தியது. அவர் தப்பு செய்தவர் தானா? சட்டம் இதற்கு பதில் சொல்லும் முன்னமே அவர்கள் பலியாகி போனார்கள்.

இது ஒரு புறம் இருக்க. இன்றைய பொருளாதாரம் வீழ்ச்சி கண்டுள்ள சமயத்தில், குற்றச் செயல்கள் அதிகரித்து வரும் அதே வேளையில், குற்றம் புரிவோர் அதிக எண்ணிக்கையில் இருப்பவர்கள் இந்தியர்களே எனும் சூழல் எதனால் ஏற்பட்டது. கீழ்மட்ட வேலைகளில் அதிகம் இருப்பது இந்தியர்கள் என்பதும், அவர்களே சுலபமாகவும் அதிகபடியாகவும் தூக்கியெறியப்படுகிறார்கள் என்றும் ஆகிறது.

தற்சமயம் அதிகமாக கேள்விப்படுபவைகளுள் சில வழிபறிக் கொள்ளையும், வீடு புகுந்து திருடுவதும் தான். அதுவும் தமிழன் தமிழனிடத்தில் தான் திருடுகிறான். அதுவும் சில்லறைத் தனமான வேலைகளை. எதையுமே பிளான் பண்ணி பண்ணனும் என வகுப்பெடுக்க ஆள் இல்லை போல!சில தினங்களுக்கு முன் பக்கத்து வீட்டுக்காரரின் வீட்டின் முன் இருந்த பொருட்களை துப்புரவாக வாரிக் கொண்டு போய்விட்டார்கள். பாவம் ஒரு காலணி கூட விட்டு வைக்கவில்லை. வீட்டில் இருக்கும் பிள்ளைகளின் மிதிவண்டிகள் மட்டும் இல்லை அவர்கள் பூனை வளர்க்கும் கூண்டையும் அடித்துக் கொண்டு போய்விட்டார்கள். பூனையையும் காணோமாம். கூட்டில் இருந்திருக்குமோ! தெரியவில்லை.

பெரிய பெரிய தோள் பைகளை மாட்டிக் கொண்டு திரியும் பெண்கள் அவற்றை ஒரு ஓரமாக கடாசிவிட்டு. பாதுகாப்பான முறையில் இருந்துக் கொள்வது நலம் இல்லையா. அரசியல், பொருளாதாரம், குற்றச் செயல் நாட்டுக்கு கேடாக இருக்கும் வேளையில் தன்னடக்கம், பாதுகாப்பு, சிக்கனம் எனும் முறையில் மக்கள் இருந்துக் கொள்வது சிறப்பு.