Wednesday, November 24, 2010

நீங்கள் எந்த பக்கம்?


இடம் பெயர்தல் என்னும் வழக்கம் இயற்கையால் உண்டானது. சீற்றங்கள், வறட்சி, வெள்ளம் போன்ற பேரிடர்களை தவிர்க்கும் பொருட்டு மனிதன் பாதுகாப்பு மிகுந்த இடங்களை தேடி அலைந்தான். அன்று முதல் இன்று வரையிலும் துரத்தப்படும் வாழ்க்கையை தான் மனிதன் வாழ்ந்து வருகிறான். இப்படியான துரத்தல்களால் ஏற்படுத்தப்படும் நவீன அடிமைத்தனங்கள் எக்கச் சக்கமாக புதுப் புது யுத்திகளில் வளர்ந்து வருகின்றன.

ஒருவருக்கு தெரிந்து நடப்பதை மட்டும் மனிதக் கடத்தல் எனும் சொல்லுக்குள் அடக்கிவிட முடியாது. இன்றளவிலும் தான் கடத்தப்பட்டு இருக்கிறோம் என்பதை அறியாமல் இருப்பவர்களும் உண்டு. மனிதர்களால் செய்யப்பட்டு வந்த வேலைகள் பலவும் இயந்திரங்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுவிட்டது. இருப்பினும் சில அத்தியாவசிய அல்லது அடிப்படை வேலைகளுக்கு மனிதனின் பலம் தேவைப்பட்டுள்ளது. மனிதன் ஏனைய பொருட்களைக் காட்டிலும் தனித்துவம் வாய்ந்தவன். உணர்ச்சிகள் கொண்ட உயிரினம். மனிதர்களை மற்றொரு மனிதன் ஆக்கிரமிப்பு செய்து தனக்காக வேலையில் ஈடுபடுத்தும் பொழுது விருப்பம் இல்லாமல் போகும்பட்சத்தில் பல பிரச்சனைகள் எழுகிறது.

மக்கள் தவிர்க்க நினைப்பது எதுவாக இருக்கக் கூடும். எடுத்த எடுப்பில் நம் நினைவிற்கு வருவது வறுமை, பசி, பட்டினி எனும் வார்த்தைகளாக இருக்கலாம். சுதந்திரம் என்னும் நிலையை மட்டுமே மக்கள் விரும்புகிறார்கள் என்பது தான் உண்மை. நல்ல வேலை, உடுத்த உடை. உண்ண உணவு எனும் அடிப்படை வசதிகளுக்கே பங்கம் ஏற்படும் போது நிதி தேடலில் பிரச்சனைகள் ஆரம்பமாகிறது. குப்பை மேடும் பண சுரங்கமாக ஆக்கப்பட்ட காலம் இது. எப்படியாவது எதிலாவது பணம் ஈட்ட வேண்டும் எனும் என்னமே பல குற்றச் செயல்களுக்கும் காரணமாக அமைந்துள்ளது.

வியாபார சந்தைக்கான தேவைகள், கடன் பிரச்சனைகள், பாலியல் என மனித கடத்தலுக்கான காரணங்கள் நீள்கின்றன. வேலைக்கான வாய்ப்புகள் குறைந்து போகும் போது வறுமை பெருக்கெடுக்கிறது. பணத் தேடலின் முழுமுயற்சியில் தனது உரிமைகள் மறக்கப்படுவதும் மறைக்கப்படுவது இக்குற்றச் செயலுக்கான வாய்ப்பினை அதிகரித்துக் கொடுக்கிறது. பாதுகாப்பற்ற சூழ்நிலையில் தனது நாட்டில் வாழ்வதைக் காட்டினும் பாதுகாப்பு மிகு ஏனைய நாட்டின் கள்ளக் குடியேறிகளின் தடுப்பு முகாம்களில் இருப்பது மேல் என கருதும் மக்களும் இருக்கவே செய்கிறார்கள்.

கற்பழிப்பு, துன்புறுத்தல், வற்புறுத்தி வேலை வாங்குதல், சிறைப்படுத்துதல் என்பன மனித கடத்தலின் விளைவுகளாக உள்ளன. ஓரிரு மாதங்களுக்கு முன் தலைநகரில் சுமார் 50க்கும் அதிகமான சீன தேச வயோதிகர்கள் தடுத்து வைக்கப்பட்டார்கள். இவர்கள் அனைவரும் பொது இடங்களில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்த காராணத்திற்காக பிடிக்கப்பட்டனர். விசாரணையின் சமயம் அவர்கள் யாவரும் ஒரு ஒரு முதலாளியின் கீழ் பிச்சையெடுக்கும் வேலையில் அமர்த்தப்பட்டவர்கள் என்பது தெரியவந்தது.

கிரிமினல் குற்றங்களில் ஆயுத கடத்தல் மற்றும் போதை பொருளுக்கு அடுத்தபடியாக உள்ளது மனித கடத்தல். இதன் இலாபம் ஆண்டுக்கு 44.3 பில்லியனுக்கும் அதிகமென கணக்கிடப்படுகிறது. சுமார் ஆறு மாதங்களுக்கு முன் தலைநகரில் நடந்த இன்னுமொரு சம்பவம் உள்ளது. தாயின் வயிற்றில் இருக்கும் குழந்தையை முன்னரே விலை பேசி அது ஈன்றதும் விற்பனை செய்துவிடுவார்கள். இதில் சில வெளிநாட்டு பெண்களை ஈடுபடுத்தி இருந்தார்கள். பிள்ளை இல்லாதவர்களை தேடி பல ஆயிரக் கணக்கில் விலை பேசி விற்றுவிடுவார்கள். கொண்டுவரப்படும் இந்தோனேசிய பெண்கள் குழந்தை பிறக்கும் வரையினும் அவர்களது கண்காணிப்பில் வைத்திருக்கப்படுவார்கள். மனமுவந்து பணத்திற்காக ஈடுபடும் பெண்களே இதில் அதிகம். காரணம் வருமை.

பாதிக்கப்படுவோரில் பொரும்பாலோனோர் தகவல் தெரிவிப்பதில்லை. இது அதிகாரத்தில் இருப்பவர்கள் மீதான பயத்தினாலும் உண்டாவது. மனித கடத்தலில் அதிகமாக பாதிகப்பட்டிருப்பது அந்நிய நாட்டினர் என்பதால் மொழி பிரச்சனையும் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. உதாரணமாக அறிமுகம் இல்லாத இடத்திற்கு வேலைக்கு வருபவர்கள் சம்பளம் மறுக்கப்படலாம், குடியுரிமை பத்திரம் முதலாளிகள் வசம் வைத்துக் கொள்ளப்படும், அதிக நேரம் வேலையில் ஈடுபடுத்தப்படலாம், கூறியதை காட்டினும் குறைவான வருமானம் கொடுக்கப்படலாம். இவையாவும் மனித கடத்தல் சட்டத்தின் கீழ் புகார் செய்ய வாய்ப்புகள் உள்ளன.

பொதுவாகவே ஓரிடத்தில் பாதிக்கப்படுவோர் வேறிடங்களுக்கு ஓடிவிடுகிறார்கள். இப்படி ஓடிச் சென்று இன்னும் மோசமாக இடங்களில் மாட்டிக் கொள்பவர்களும் உண்டு. குடியுரிமை சான்றிதழ்களை தவறவிட்டவர்கள் மீண்டும் திரும்பிச் செல்வது என்பது சிரம காரியம் தான். இப்படிபட்டவர்கள் தன்னை அழைத்துவந்த எஜமானர்களின் குற்றத்தை தன் வசம் எற்றுக் கொண்டவர்களாகிவிடுகிறார்கள். அதிகபடியான மனித கடத்தல் சம்பவங்கள் என்பதில் ஆண்கள் அதிக நேரம் விரும்பமின்றி உழைக்க நேர்வதையும். குழந்தைகள் மற்றும் பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபட செய்வதாகவும் உள்ளது.

மனித கடத்தல்கள் நேர்வதன் காரணம் என்ன? மேற்கூறியதைப் போல் சில ஆய்வு நிறுவனங்களின் கருத்தின் படி இதன் வழி கிடைக்கும் இலாபம் ஆண்டுக்கு பல பில்லியன் டாலர்கள். கவனிக்கப்பட வேண்டிய விடயம் என்னவெனில் இக்குற்றச்செயல்கள் வளர்ந்துவரும் அல்லது ஏழை நாடுகளில் மட்டும் நடப்பவை அல்ல இப்பட்டியலில் நாம் பார்த்து வியக்கும் வளர்ந்த நாடுகளும் உள்ளன.

ANTI-TRAFFICKING IN PERSONS ACT எனும் மனித கடத்தல் தடுப்பு சட்டத்தில் TRAFFICKING எனும் பதத்தை நாம் புரிந்துக் கொள்வது மிக அவசியம். சட்டத்திற்கு புறம்பாக ஆட்களை அழைத்துவருதல், அடைக்கலம் கொடுத்தல், வேற்றிடங்களுக்கு இலபம் பொருட்டு அனுப்பி வைத்தல், சுதந்திரமின்றி காவலில் வைத்திருத்தல், ஏமாற்றி வேலை வாங்குவது அல்லது அழைத்து வந்திருப்பது, என 22 முக்கிய குற்றங்கள் பட்டியலிடப்பட்டுள்ளது. மொத்தம் 67 சட்ட விதிகள் இதில் அடக்கம்.
மனித கடத்தல் தடுப்பு சட்டத்திற்கு வித்திட்டது அமெரிக்கா. அமெரிக்கா எது செய்தாலும் அதில் சில மந்திர தந்திர வேலைகள் நிச்சயம் உண்டென உலக நாடுகள் பராபட்சமின்றி சாடுவது வழக்கமாகி போன ஒன்று. அதன் அடிப்படையில் இச்சட்டத்தின் அமலாக்கம் என்பது அமெரிக்கா தனது ஆதிக்கத்தை நவீன முறையில் ஏனைய நாடுகளின் மீது செலுத்துகிறது என்பதாக அமைகிறது. ஒவ்வொரு ஆண்டும் எந்த நாடுகள் எந்த நிலையில் உள்ளன என்பதை அமெரிக்கா நிர்ணயம் செய்கிறது. இதில் மொத்தம் 4 நிலைகள் உள்ளன. சட்ட திட்டங்களை பின்பற்றாத நாடுகளை முன்னிறுத்தி கேள்வி கேட்கவும் செய்கின்றன. இச்செயலினால் ஒரு சில நாடுகளின் வெறுப்பையும் சம்பாதித்துக் கொண்டுள்ளது டாலர் தேசம்.

மனித கடத்தல் தடுப்பு சட்டம் என்பது ஒரு பக்கம் சாய்வு கொண்ட தராசு என்பது ஒரு சில சட்ட நிபுணர்களின் வாதம். இதில் முதலாளிவர்கத்தினருக்கு அதிகபடியான தண்டனைகளும் தொழிலாளிக்களுக்கு அதிகமான பதுகாப்புகளும் கொடுக்கப்பட்டுள்ளது. குடியுரிமைச் சட்டத்தின் கீழ் பிடிபடுவோர் அதில் விடுபடும் பொருட்டு இச்சட்டத்தின் துணை கொண்டு தனது குற்றத்தை தன் முதலாளியின் மீது சுமத்தும் வாய்ப்புகள் உள்ளன.

Monday, October 18, 2010

சமயம் எனும் சாக்கடை உலகம் (2)


"We shall not believe anything unless there is reasonable cause to believe that it is true" -- Ingemar Hedenius

பாகம் 1: படிக்க இங்கே சொடுக்கவும்

இதை இப்போது இங்கே படித்துக் கொண்டிருக்கும் உங்கள் கஷ்டங்கள் 3 நாட்களில் விலகும், நினைத்தக் காரியம் கை கூடும், சின்ன வீடு ஒன்று செட் ஆகும் உடனடியாக இப்பதிவினை எட்டு பேருக்கு மின்னஞ்சவும் என எழுதினால் என் வலைப்பதிவினை தப்பித்தவறி படிக்கும் பத்து நபர்களில் இரண்டு பேராவது செவ்வனே அக்காரியத்தை செய்வார்களென சீக்ரட் சர்வே ஒன்று தகவல் அனுப்பியுள்ளது. இவற்றை ஸ்பாம் என அடையாளப்படுத்தலாம். அதாவது எரிச்சலூட்டும் ஒரே வகை தகவல்கள். இதற்கு தமிழில் எரிதம் என செல்லமாக பெயரிட்டிருக்கிறார்கள்.

இந்த ஸ்பாம் மின்மடல்கள், எஸ்.எம்.எஸ்கள், மற்றும் துண்டு பத்திரிக்கைகள் என நீளும் பட்டியல் வளர்ந்த கதைக்கு தனி வரலாறு எழுதிவிடலாம். எனக்கு மின்மடலில் முகம் தெரியாத அன்பர் ஒருவர் வாரத்திற்கு இரண்டு மூன்று மடல்களாவது இப்படி அனுப்பிவிட்டுக் கொண்டிருக்கிறார். நானும் கடுப்பேறி கெட்ட வார்த்தைகளில் திட்டியும் பார்த்துவிட்டேன். ம்ம்... திருந்துவதாக தெரியவில்லை.

இப்படி எரிதங்களை அனுப்பும் புண்ணியவானுக்கு வாழ்க்கையில் முதலிரவே நடக்க கூடாது என்று காசு வெட்டி போட்டு இருக்கிறேன். பெரிய கடவுள் தான் காக்க வேண்டும். எனக்கு மட்டும் தான் இப்படி என்றால் இன்னும் சில வலைப்பதிவர் நண்பர்களுக்கும் இப்படி நிகழ்வதாக கூறப்படுகிறது. இப்படி தொந்தரவு கொடுப்பவர்கள் மீது சைபர் கிரைம் நடவடிக்கை எடுக்க முடியுமா என்பதனை தெரிந்தவர்கள் கூறவும்.
மீடியாக்களில் மதத்தின் பெயரால் செய்யப்படும் நாசவேலைகள் எக்கச்செக்கம். அன்பர்களேஏஏஏ... என தொடங்கி கழுத்தில் கத்தி வைக்கும் கதை நெடுநாட்களாக நடைபெற்று வருகிறது. பொதுப்படையாக நாம் கவனிக்க முடிந்த சங்கதி யாதனெனின் இவை அனைத்தும் வியாபர நோக்கம் கொண்டவை. நமது பாக்கெட்டில் உள்ள பணத்தை அழுங்காமல் வெளியே கொண்டு வரும் யுக்திகள். எங்களை கண்டு கொண்டு கொஞ்சம் முதலீடு செய்யுங்கள் பிறகு உங்கள் பிரச்சனை சூரியனைக் கண்ட பனி போல் பின்னங்கால் பிடரிபட ஓடிவிடும் என வானொலிகளில் திருவாய் மலர்வார்கள்.

இந்த பிரச்சனை கண்ட புண்ணியவான்களும் பவ்வியமாக கைகட்டி நிற்க, இந்த கல்லை போட்டுக் கொள்ளுங்கள் இமய மலை உச்சியில் ஆயிரமடி தோண்டி எடுத்தது. இதோ இது இருக்கிறதே சீதா பிராட்டியை இராவணன் கடத்திக் கொண்டு போனபோது தவறி விழுந்து வாணரங்கள் கண்டறிந்தது என கற்களை அடுக்கி வைத்து புராண பட்டியல் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்த வகை விளம்பரங்களுக்கு பல வகை காலகட்டங்கள், சிறப்பு பூஜை செய்யப்பட்டது, ஸ்பெஷல் ப்ரோமோஷன் என தனி சலுகைகளும் உண்டு. இடையிடையே சமய சாங்கிய புத்தகங்களையும் வெளியிட்டு பணம் தேடிக்கொள்கிறார்கள். இன்னமும் நம் மக்களின் இலக்கிய சிந்தனை சிவன் பார்வதிக்கு அருளிய கனவுகளின் பலனில் தான் உள்ளது.

மலேசியாவில் எம்.எல்.எம்(MLM) கார்ப்ரேட் சாமியார்களின் திட்டம் ஆரம்பித்த காலகட்டத்தை அறியவில்லை. ஆனால் இடைபட்ட காலத்தில் அதிகமாக கேள்விப்பட நேர்ந்தது. இந்த சாமியாருக்கென ஒரு விசிலடிச்சான் குஞ்சுகளின் கூட்டம் உண்டு. இவர்களுக்கு கீழ் ஒரு கூட்டத்தை சேர்த்து. அந்தக் கூட்டம் இன்னொரு கூட்டத்தை சேர்த்து என சேர்ந்துக் கொண்டே போகும் ஒரு நவீன மார்கெட்டிங் ஸ்டைல். இதில் வேடிக்கை என்னவென்றால் அந்த குறிப்பிட்ட சாமியாரை முதலில் பார்க்க இவ்வளவு பணம், கொஞ்சம் நெருக்கத்தில் பார்க்க இவ்வளவு, தொட்டுப்பார்க்க இவ்வளவு, படுத்துக் கொள்ள இவ்வளவு என லிஸ்ட் வைத்திருக்கிறார்கள். நித்தியானந்த தரிசனத்திற்கு எவ்வளவு எப்படி என்பதெல்லாம் விவரங்கள் தெரியாதபட்சத்தில் எனக்கு தனி மடல் அனுப்பி தொந்தரவு செய்ய வேண்டாம். சீடி விற்பனைக்கு வந்தால் விரைவில் அறிவிக்கப்படும் என்பதை உறுதியளிக்கின்றேன்.

இந்த வகை சாமியார்களுக்கு வரி விதிகள் இருப்பதாக தெரியவில்லை. காரணம் சமயத்தின் பேரில் செய்யப்படும் காரியங்கள் மக்கள் நலனுக்கென கருதப்படுகிறது. உண்மையில் மதம் என்பதை நன்னெறிகளுக்கு பதிலாக நச்சு கிருமிகளை ஆப்லோட் செய்யும் முளைச் சலவையாகவே இந்த கார்ப்ரேட் வகை சாமியார் இயக்கங்கள் இயங்குகின்றன.மக்களுக்கு நலன் செய்ய விரும்பும் சாமியாருக்கு எதற்கு நூற்றுக்கணக்கில் பணமும் பாதுகாப்பிற்கு சில நெருங்கிய பக்தர்களும்.
இந்த கால்பிரிட்களால் மூளை சலவை செய்யப்பட்ட சல்லடைகளிடம் எதற்காக இவ்வளவு பணம் செலவழிக்க வேண்டுமென வினவியதற்கு சாமியை நம்பி செலவழிக்கும் பணம் பன்மடங்கு பெருகி நம்மிடம் திரும்பி வருமென சொல்லி என் கபாலத்திற்கு உஷ்ணத்தை ஏற்றிக் கொண்டிருந்தார்கள். ஒன்று மட்டும் புரிந்து கொள்ளுங்கள், இனி யாராவது ‘எந்த சாமி காசு கேட்டுச்சு, காலை கழுவி நக்க சொன்னிச்சு’ என கேட்டால் அவர்களை நீங்கள் தைரியமாக செருப்பால் அடிக்கலாம். காசு கேட்கும் சாமிகளை நீங்கள் விரும்பிய பக்கம் விரல் நீட்டி காட்டும் காலத்தில் நாம் இருக்கின்றோம்.

சும்மா இல்லை. படகு கார்களில் வந்திறங்குகிறார்கள். சொகுசு மாளிகைகளில் குளிரூட்டியில் படுத்துறங்குகிறார்கள். சாமிகள் இப்படி கொகுசாகதான் இருக்க வேண்டுமெனும் சாத்திரங்கள் உள்ளதா? இவர்களுக்கு தான் கடை நிலை மனிதனின் வாழ்க்கை வருத்தங்கள் புரியப் போகிறதா. சிரமப்படும் மனிதர்கள் அனுபவிப்பது கர்ம வினை ஊழ்வினை என புருடாவிட்டால் இவர்களும் பொத்திக் கொண்டு சமாதியாகி போகலாம் இல்லையா. தின்று கொழுத்த நரிக்கு நாட்டுக் கோழியின் ருசி அடங்குவது சுலபமல்ல. இவர்களின் செயல்பாடுகள் இன்னும் அதிகரிக்குமே அன்றி குறைய போவதில்லை. விபச்சாரியிடம் செல்வதற்கு தான் மனிதன் காசு கொடுத்து செல்வான். அப்படியென்றால் இந்த கார்ப்ரேட் சாமியார்களும் நிச்சயமாக விபச்சாரம் தான் செய்கிறார்கள் என்பதில் மறுபதற்கில்லை.

யார் என்ன எழுதினாலும் வாய் கிழிய கத்தினாலும் மக்களின் விழிப்புணர்வின்றி இந்த சமய சாக்கடைகளை துப்புரவு செய்ய முடியாது. திண்ணமாக செல்வதென்றால் சமூகத்தின் குப்பைகளாக மக்களை குறுகிய சிந்தனைக்கு இட்டுச் செல்லும் இவர்களுக்கு கடுமையான சட்டங்கள் இயற்றப்பட வேண்டும். இல்லையென்றால் காமம் என்பது கடவுளை காண தடை போடும் உணர்வென பக்தர்களுக்கு கூறி ஆசிரம பெண்களை இவர்கள் கட்டிலுக்கு அழைத்துச் செல்லும் கதைகளை எதிர்காலத்தில் கணிசமான எண்ணிக்கையில் எதிர்ப்பார்க்கலாம்.
இன்றைய தினத்தில் லாட்டரி சீட்டில் பணம் விழுவதற்கு கூட சமயம் வழி செய்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். லாட்டரி அடிக்கனுமா பாபாவை பாருங்கள் ஷகிலாவை பாருங்கள் என முக்கிய பத்திரிக்கைகள் வாரம் தவறாமல் விளம்பரம் கொடுத்துவிடுகின்றன. கூடவே நம்பிக்கையை வளர்க்கும் வகையில் சீரியல் எண்களோடு வெற்றி கண்ட லாட்டரி சீட்டுகளின் படம். இந்த அளவுக்கு எண்களை கணித்து கொடுக்கும் ஆசாமிகள் அத்தோடு நிறுத்திவிடுவதில்லை. சக்கரம், முக்கோணம், சதுரம் என வேறு வகை வஸ்துக்களையும் சேர்த்து தலையில் கட்டி பில் அடித்து அனுப்பிவிடுகிறார்கள். இவர்கள் மீதுள்ள பக்தியில் வருட கணக்கில் நம்பிக்கை இழக்காதவர்களையும் கண்டது உண்டு.
இப்படிபட்ட நம்பிக்கைகள் மனிதனுக்குள் ஏற்படும் ’டிஸாடர்’களால் விளைவதாக மேற்கத்திய ஆராய்சிகள் கூறுகின்றன. இதை நாம் உணராமல் போவதன் காரணம் ஆரம்பத்தில் இருந்து ஊட்டப்பட்டுவிடுகிறது. அதன் நிஜதன்மையை உணர முடியாமலும் புரியாமலும் குழப்ப நிலையில் வாழ்ந்து முடித்தவர்கள் எண்ணிக்கையில் அடங்காமல் இருக்கலாம். கடவுளின் நிருபனத்திற்கான புத்தகங்கள் அறிவியல் சிந்தனைகளோடு எக்கச்செக்கமாய் வந்துள்ளன. தமிழில் இதன் அளவு குறைவு தான். கடந்த ஆண்டில் தொடங்கப்பட்ட கடவுளின் துகளைத் தேடும் பிக் பேங் ஆராய்சிகள் விழுங்கிய பணத்தின் மதிப்பு பல பில்லியன் டாலர்கள்.

கடவுள் அல்லது இறை என்பது மனித உருவம் கொண்டதென்றால் அதன் தோன்றலை எத்தனை மனிதர்கள் நம்பப் போகிறார்கள். கோவில், குளம், மட்டையென நாடுபர்களின் எத்தனை பேர் பொதுநலம் கொண்டு இங்கு இயங்குகிறார்கள். என்னை மன்னித்துவிடு, எனக்கு இதை கொடு, எனக்கு இந்த பிரச்சனைக்கு நிவர்த்தி செய் எனும் சுயநலவாதிகளையே சமய வழிபாடு எனும் சலவைத் தொழிற்சாலைகள் உருவாக்கிக் கொண்டிருக்கின்றன.

வளரும்...

(பி.கு: திருவிழாக்காலங்களில் என்னை கோவில் குளங்களில் காண்பவர்கள். நான் ஃபிகர் பார்க்க வந்தவன் என்பதை அறிக).

Thursday, October 14, 2010

கொசுறு 14-10-2010

ஃபிகரோடு கோவிலுக்கு போவது நெகட்டிவ் அப்ரோச்,
ஃபிகர் பார்க்க கோவிலுக்கு போவது பாசிடிவ் அப்ரோச்,
- என சாணியடி சித்தர் சொல்லி இருக்கிறார்.
****
நெடுநாட்களாக விடுபட்டிருக்கும் பாகம் இது. நேரம் கிடைக்கும் போது எழுதுவதற்கு சுலபமாக அமைவதும் இந்த பகுதி தான். காரணம் இப்பகுதியில் தகவல் திரட்டுகள் குறைவு, யாவும் என் சிந்தனை பகிர்வுகளாக அமைகின்றன.

நாம் படிக்கும் சில கவிதைகள் நமக்குள் டக்கென ஒரு ஃப்ளாஸ் அடிச்சிட்டு போகும் பாருங்க அம்மாதிரியான கவிதைகளே எவ்வளவு நாட்களுக்கு பிறகு படிச்சாலும் புதிதாக படிப்பதை போலவே அனுபவத்தை கொடுக்கும். கற்றது தமிழ் எம்.ஏ எனும் திரைப்படத்தில் வரும் ஒரு கவிதையை கீழே கொடுத்திருக்கிறேன்:

புறாக்கள் வளர்க்கும் எதிர்வீட்டுக்காரர்

என்னிடம் இருந்து பறிக்கிறார்

பூனை வளர்க்கும் சுதந்திரத்தை


வாசிப்போரின் புரிதலுக்கு ஏற்ற மாதிரி இக்கவிதை வேறுபடலாம். நியூட்டனின் விதியை இதில் காண முடிகிறது. ஒரு செயலுக்கான எதிர்வினை. மற்றது வண்ணத்து பூச்சியின் விளைவு. பட்டம்பூச்சி சிறகடிப்பிற்கும் சுனாமி வருவதற்கும் ஒற்றுமை இருப்பதாக சொல்வார்களே, அதைப் போல். ஒபாமா சிந்தித்துக் கொண்டிருக்கும் ஒவ்வொரு கணத்திலும் உங்கள் பாக்கெட் பணம் காலியாகி கொண்டிருக்கிறது. புரிஞ்சவன் தான் புத்திசாலி.
****

பிக் பேங் தியோரி பற்றி ஏற்கனே எழுதி இருக்கிறேன். பிரபஞ்ச விளைவுகள் தொடர்பான கட்டுரைகள் பலவும் டாக்டர். ஜெயபாரதன் இணையத்தில் எழுதி வருகிறார். இவரின் பல கட்டுரைகள் புரிதலுக்கு சற்றே சிரமமானதாக இருக்கிறதெனினும் இப்படியான தகவல் களஞ்சியத்தை நமக்கு தொகுத்தளித்திருப்பது சிறப்பு.

Dark Matter என்பதை அண்ட சராசரத்தின் மாபெரும் அமைப்பு என்பதாக விஞ்ஞானிகள் விளக்குகிறார்கள். இன்றய டெக்னாலஜியின் துணைக் கொண்டு இதனை அறிந்துக் கொள்வதற்கான கருவிகள் கண்டுபிடிக்கப்படவில்லை. 2012க்கு இன்னும் ரெண்டு வருஷம் தானே இருக்கு அதுக்குள்ளாவது இதை பற்றி நாம் அறிந்துக்கொள்ள முடியுமா?
****
ஓரிரு மாதங்களுக்கு முன் நான் வித்யா எனும் திருநங்கையரின் சுயசரிதை புத்தகத்தை வாசிக்க நேர்ந்தது. லிவிங் ஸ்மைல் எனும் வலைபதிவின் உரிமையாளரான இவரின் புத்தகம் கிழக்கு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளது. திருநங்கையர் தொடர்பான புத்தகங்கள் தமிழில் வெகு குறைவானவையே. அவர்களின் உணர்வுக்கு மதிப்பளித்து மக்கள் மத்தியில் விளிப்புணர்ச்சி ஏற்படுத்தப்பட வேண்டும் எனும் நோக்கில் ஊடகங்கள் முயற்சித்து வருகின்றது. நல்ல விசயம் தான்.

என்னுள் எழுந்த சில சந்தேகங்களை இங்கு முன் வைக்கிறேன். தனது பாலியல் மாற்று அறுவை சிகிச்சைக்கு முன், பிச்சை எடுத்தாவது தனது பாலியல் மாற்றத்தை செய்துகொள்ள நினைக்கும் வித்யா அது நடந்த பின் திருநங்கையர் பிச்சை எடுக்கக்கூடாது அங்கீகாரம் வேண்டும் எனும் புரட்சிகர பெண்மணியாகிவிடுகிறார். அது தவறென சொல்லவில்லை. அச்சிந்தனை அறுவை சிகிச்சைக்கு முன்னதாக அவருக்கு தோன்றாமல் போன காரணம் என்ன? தன்னை மற்றவர் அவமானபடுத்திவிடக்கூடாது என்பதற்காகவே திருநங்கையர் அருவறுப்பாக நடந்துக் கொள்கிறார்கள் என சொல்கிறார்.

தன் இனத்திற்கு இழுக்கு செய்கிறார்கள் என்பதற்காகவே ஆண்கள் திருநங்கையரை கேலி செய்கிறார்கள். நம்புங்கள் இதுவும் உண்மை தான்.
******

மனித கடத்தல் தொடர்பான எனது தகவல் சேமிப்பின் போது படிக்க நேர்ந்த ஒரு செய்தி. ஒரு ஆண், ஒரு பெண்னை திருமணம் செய்துக்கொள்வதென்றால் கடத்திச் சென்றுவிட வேண்டுமாம். பிறகு அந்த ஆணின் பெற்றோர் கடத்தப்பட்ட பெண்ணின் பெற்றோரிடையே அனுமதி கேட்டு திருமணம் செய்து வைப்பார்களாம். இது ஒரு நாட்டில் ஓர் இனக் குழுவினரிடையே நடக்கும் செயல். என்ன நாடு என்பதை கண்டுபிடித்து சொல்லுங்கள் பார்க்கலாம்.
*****

தமிழ்த்திரையுலகில் மாற்றங்களை அமைத்தவர்கள் எனும் பட்டியலில் மணிரத்தினமும், ஷங்கரும் இடம் பெற்றிருப்பவர்கள். ஒரு படைப்பாளியிடம் அதீத எதிர்ப்பார்ப்புகள் இயல்பாகவே எற்படும். அதுவே பலரையும் ஏமாற்றமடையவும் செய்கிறது. மணிரத்தினத்தின் இராவணன் படம் வரும் முன்பும் சரி வந்த பின்பும் அதன் பால் எனக்கு அதீத ஈர்ப்பு ஏற்படவில்லை. பல படங்களில் இருட்டு இயக்குநராக இருந்த மணி, இராவணனில் ஐஸை மழையில் கரையவிட்டு ஜில் ஜில் இயக்குநராக மாறி இருக்கிறார்.ஷங்கரின் சிவாஜி படம் எதிர்ப்பார்த்த அளவில் இல்லை என்றாலும் ஏமாற்றத்தை கொடுக்கவில்லை. அரைத்த மாவு ருசியாகவே இருந்தது. சமீபத்திய ரோபோ மிக சாதாரண கதையம்சம் கொண்டது. ஹாலிவுட்டில் இது சென்ற நூற்றாண்டில் சிந்தனை வடிவம். அதை தமிழ் சினிமா இப்போது தான் எட்டிப்பிடித்திருக்கிறது என்றால் வரவேற்கப்பட வேண்டிய ஒன்று. ஒவ்வொரு காட்சியையும் ஒரு வாரம் சிந்தித்து படம் பிடித்திருப்பார்கள் போல. கொள்ளை அழகாக உள்ளது. பின்நவீனதுவ வியாதிகள் என்னத்தான் கீபோர்ட் உடைய தட்டச்சு செய்தாலும் படத்தின் வெற்றியை தவிர்க்க இயலாது. ஏன் அவர்கள் கூட படத்தின் குறையை கண்டுபிடிக்க இரண்டு மூன்று முறை ஓசி டிக்கட்டில் படம் பாத்திருக்கலாம். நல்ல வேலை காசு கொடுத்து பார்த்திருந்தால் தியேட்டரை எழுதி கொடுக்க சொல்லி இருப்பார்கள் போல.
****

சென்ற ஆண்டின் இறுதில் வேலை நிமித்தம் திரெங்கானு எனும் இப்பொழுது இருக்கும் மாநிலத்துக்கு வந்தேன். இங்கு வருவது அதுவே முதல் முறையும் கூட. தெரிந்தவர் அறிந்தவர் என யாரையும் தெரியாது. தங்கியிருப்பது கவர்மெண்ட் குவாடர்ஸ். வந்த முதல் நாளே இரவானால் ஏதோ கோலி விளையாடுவதாகவும், நாட்காலியை பரபரவென இழுப்பதாகவும், துணி துவைப்பதாகவும் சந்தம் கேட்கும் இதையெல்லாம் கண்டுக்கொள்ளாமல் தூங்கு என சொன்னார்கள்.

எவ்வளவோ ஆச்சு இதையும் பார்க்கலாமென இருந்துவிட்டேன். கிட்டதட்ட ஓர் ஆண்டு காலமாக போகிறது எந்த சத்தத்தையும் கேட்டதில்லை. நேற்று மலாய் நண்பரொருவரிடம் பேசிக் கொண்டிருந்தேன். என் பதவியில் இருப்பவர். இந்தோனேசியாவின் மலேசிய தூதரகத்தில் 3 ஆண்டுகள் பணிபுரிந்துவிட்டு வந்திருக்கிறார். வந்ததும் நான் இருக்கும் இடத்தில் டிரான்ஸ்வர் போட்டிருக்கிறார்கள். இரவானால் உன் வீட்டில் ஏதும் சத்தம் கேட்கிறதா என கேட்டார். இல்லை என்றேன். ஏதோ தவறாக இருப்பதை உணர்கிறேன் என்றார். நான் ஏதும் சொல்லவில்லை. அதுதான் நல்ல பொறுமைசாளிக்கு அழகுனு குருநாதர் சொல்லியிருக்கார்.

பேய் பிசாசுகள் இருப்பதாக சொல்பவர்களே அதிகமான கடவுள் நம்பிக்கையும் கொண்டிருக்கிறார்கள்.
*****
மழைகாலம் ஆரம்பித்துவிட்டிருக்கிறது. என் பணியிட மாநிலத்தின் தீவுகளை நான்கு மாதங்களுக்கு சுற்றுலா தடா செய்யப் போகிறார்கள். இந்த நான்கு மாதங்களில் தான் இந்தத் தீவுகள் தன்னை சுத்தம் செய்து கொள்கிறதோ என சிந்தித்ததும் உண்டு. கடந்த ஒரு வாரமாக மாலை வேளைகளில் மழை பொழிகிறது. இங்கு வந்த சமயம் எப்போது நான் வெயில் காலத்தை காண்பேன் என்றிருந்தேன்.

மீண்டும் மழை வந்துவிட்டது. மழைச் சமயங்களில் இயல்பாகவே சாலையில் கார்களின் எண்ணிக்கையும் அதிகமிருக்கும். டிராபிக் லைட். பார்க்கிங் தேட வேண்டும். இதனால் வேலைக்கு மோட்டார் செலுத்துவதையே விரும்புவேன். தற்போதய சூழல் என் காலை தூக்கத்தின் பல நிமிடங்களை விழுங்கிவிட்டது.
****

விடுகதை:
புல்வெளி பகுதி ஒன்றில் சில ஆடுகளும் கோழிகளும் உள்ளன. இவற்றின் தலைகள் மொத்தம் 20. கால்கள் 50. அப்பகுதியில் எத்தனை ஆடுகள் உள்ளன?
******

நளதமயந்தியின் சுயம்வரம் காண்டத்தில் உள்ள வெண்பா ஒன்று:

‘அஞ்சல் மடவனமே! உன்றன் அணிநடையும்
வஞ்சி அனையார் மணிநடையும்-விஞ்சியது

காணப் பிடிததுகாண்,’ என்றான் களிவண்டு

மாணப் பிடித்தார் மன்

அடுத்ததாக இன்னொன்று தருமிக்கு இறையனார் எழுதி கொடுத்தது:

கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி
காமம் செப்பாது கண்டது மொழிமோ

பயிலியது கெழீஇய நட்பின் மயிலியல்

செறியெயிற் றரிவை கூந்தலின்

நறியவும் உளவோ நீயறியும் பூவே


முதல் பாடலில் நளன் ஓர் அன்னத்தைப் பிடித்து, அன்னமே உன்னைவிட அழகிய நடை கொண்ட பெண் உலகில் உண்டோ என கேட்கிறான். இரண்டாம் பாடலில் காதலியின் கூந்தல் மனத்தைக் காட்டினும் மனம் மிக்க பூ உள்ளதோ என காதலன் தும்பியிடம் கேட்கிறான். லூசு பசங்களா இருப்பாங்களே. அந்த காலத்திலயும் ஒரு மார்கமாதான் சுத்திக்கிட்டு இருந்திருக்காங்க பாருங்களேன்.

****

Thursday, August 12, 2010

பாலியல் தொழிலின் பரிணாமங்கள்

பாகம் 1: சரித்திரத்தில் பாலியல் வன்மங்கள்


"வயது பதினைந்தோ அல்லது பதினாரோ இருக்கலாம். படிக்கவில்லை. செலவுக்கு ’டச் & கோ’ வியாபாரம்."

மலேசியாவில் இது வரை காணாமல் போன பெண்களின் எண்ணிக்கை மொத்தம் 6027. இக்கணக்கெடுப்பு மே 2004-ல் இருந்து 2009-ஆம் ஆண்டு வரையிலானது. பெண்கள் மட்டும் தான் தொலைந்து போகிறானரா? கண்டிப்பாக இல்லை. ஆண்களும், குழந்தைகளும், வயசாளிகளும் கூட காணாமல் போகிறார்கள். இதில் பெண்களின் எண்ணிக்கை மிகுதியானது. இப்படி காணாமல் போகும் பெண்களில் மிகுதியாக இருப்பவர்கள் 14 முதல் 17 வயதுக்கு உட்பட்டவர்கள். ஆதலால் இப்புள்ளி விபரம் மிகுந்த கவனத்தைப் பெருகிறது.

காணாமல் போகும் பெண்கள் மூன்று வகையாக பிரிக்கப்படுகிறார்கள். உந்துதலால் விருப்பம் கொண்டு காணாமல் போவோர், துரத்தி விடப்பட்டு காணாமல் போனவர்கள், கடைசியாக குறிப்பிட்டச் சூழலில் வாழப் பிடிக்காமல் வீட்டை விட்டு வெளியேறி காணாமல் போனவர்கள் என சொல்லப்படுகிறார்கள்.

அதற்கு முன் நாம் கவனிக்க வேண்டிய செய்தி ஒன்றுள்ளது. 40 ஆண்டுகளோ அல்லது 20 ஆண்டுகளோ முந்தய பெண்களின் வாழ்வியல் முறையும் இன்றய பெண்களில் வாழ்வியல் முறையும் ஒப்பிடும் போது முற்றிலும் மாறுபட்டது என்பது மிகையன்று. ’Generation Gap' அல்லது தலைமுறை இடைவெளி காலத்திற்கும் மாறுபட்டே வந்திருக்கின்றது. இன்றய நாட்களில் பெண்களின் வாழ்வியல் முறை பன் மடங்கு உயர்ந்துள்ளது.

உதாரணமாக பெண்களின் விடுதலைக்காகவும் உரிமைக்காகவும் போராடும் அமைப்புகள் அல்லது விழிப்புணர்வு மையங்கள் உலகெங்கினும் செவ்வனே இயங்கிக் கொண்டிருக்கின்றன. முன் சமயத்தில் பெண்களுக்கான கட்டுபாடுகள் அதிகமாகவே விதிக்கப்பட்டிருந்தன. பற்றாக் குறைக்கு அவை ஒவ்வொரு சமூகத்தின் பண்பாடுகள் எனவும் சொல்லப்பட்டது.

இந்த விதிகள் பெண்களின் விடுதலைக்கு முட்டுக் கட்டையாக அமைந்தன. அடிப்படை கல்வியை பெறுவதற்கு கூட பெண்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.
ஒவ்வொரு மதம் மற்றும் சமூகத்தின் போர்வையிலும் இன்னமும் பெண்களுக்கு எதிரான அடக்கு முறைகள் இருக்கவே செய்கின்றன.
கன்பூச்சியஸ் தத்துவம் ஒன்றினை இங்கு முன் வைக்க முடியும். எந்த ஒரு சமூகத்தில் மிகுந்த அளவிலான கட்டுப்பாடுகள் இருக்கின்றதோ அச்சமூகத்தால் மிகுதியான குற்றச் செயல்கள் விளைவிக்கப்படுகின்றது. ஏன்? கட்டுப்பாடுகள் மிக குற்றங்களும் மிகும். எடுத்துக்காட்டிற்கு 1990-களில் ‘டோனல்ட் டாக்’ எனும் கேலிசித்திரத்தை அரபிய நாடொன்றில் தடை விதித்திருந்தார்கள். அக்கேலி சித்திரத்தின் முக்கிய பாத்திரமாக வரும் வாத்து காற்சட்டை அணியாமல் இருப்பதே அத்தடைக்கான காரணம். அப்படியென்றால் அந்நாட்டில் நீங்கள் ‘டோனல்ட் டாக்’ கார்டூனை கண்டு களிப்பது தேச குற்றமாகும்.

இளையோர்களிடம் வெளியுலக தொடர்புகள் மிகுந்துவிட்டன. கணினி, இணயம், மின்மடல், குறுஞ்செய்திகளென அவர்களுக்கான தொலை தொடர்புகளின் வழியும் வெளியும் விரிந்துக் கிடக்கிறது. பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களின் கட்டொழுங்கு விதிகள் இக்கால இளைஞர்களுக்கு குறுங்கிவிட்டது. அதை பெரிதாக பொருட்படுத்துவதும் கிடையாது. சரி இங்கு ஒரு கேள்வியை வைக்கின்றேன். பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் ஆண்களால் மட்டும் ஏற்படுத்தப்பட்டவையா? ஆம் எனின் அதன் காரணம் யாதாக இருக்க முடியும்?

பொது மருத்துவ மனைகளில் வயது குறைவான மற்றும் திருமணம் ஆகாமல் பிள்ளை பெற்றுக் கொள்ளும் பெண்களின் எண்ணிக்கை மொத்தத்தில் 35 விழுக்காடாக இருக்கிறது. மீண்டும் நாம் இங்கு சிந்திக்க வெண்டியுள்ளது. இம்முறை கேடுகள் நடை பெற காரணம் அளவுக்கு மிகுந்த கட்டுப்பாடா அல்லது அளவுக்கு மிகுந்த தளர்வா? இவை இரண்டிற்கும் இடையே சிக்கிக் கொள்ளும் நபர்களே பாதிக்கப்படுகிறார்கள். உதாரணமாக வீட்டில் அதிக கட்டுப்பாடுகளோடு வளர்க்கப்படும் பிள்ளைகளே அதிக குற்றச் செயல்களில் ஈடுபடுகிறார்கள். அடக்கு முறைகளே பிள்ளைகள் அதை மீறி செயல்பட துண்டுதலாக அமைகிறது.

அதி விரைவான வாழ்க்கை முறை பெருநகரங்களில் மக்களின் மனதை வெகுவாக நைத்துள்ளது. இந்த அழுத்ததில் இருந்து வெளிபட மனிதன் தனக்கு ஒத்த கருத்துடைய நண்பனை தேடிக் கொள்கிறான். இப்படி தமக்காக அமைத்துக் கொண்ட குழுமங்களில் கெடு செயல்களில் ஈடுபட்டு வாழ்வை கெடுத்துக் கொள்வோரும் உண்டு. தன்னை மறந்து இன்பகரமான மயக்க சூழல் கிடைப்பதாக நினைத்து போதை மருந்துகளுக்கு அடிமையாகிறார்கள்.
இடைநிலைப்பள்ளியில் சேரும் மாணவர்களில் 13 வயது தொடக்கம் போதை பொருட்களிடையே அடிமையாகிவிடுவதை காண முடிகிறது. வேலை நிமித்தம் நீதிமன்றத்தில் இருக்கும் போது அங்கு காண கிடக்கும் வழக்குகளின் எண்ணிக்கையில் இதை உறுதிபடுத்துகிறேன்.


தாதியாக பணிப்புரியும் என் தோழி மணவர்கள் உடல் நலன் பரிசோதனைக்கு இடைநிலை பள்ளி ஒன்றிக்கு சென்றிருக்கிறார். அப்போது பரிசோதனைக்கு வந்த பெண் மாணவிகள் சிலர் அவரிடம் கேட்டனராம், “நர்ஸ் நான் கற்பமாக இருக்கின்றேனா? இரத்த பரிசோதனை செய்தால் தெரிய வாய்பிருக்கிறதா” என்று. இவர்கள் நிலை மிக இளம் வயதிலேயே கட்டுபாடற்ற அல்லது பாதுகாப்பற்ற உடலுறவில் ஈடுபட துவங்கிவிடுகிறார்கள். இதனால் பாலியல் நோய்கள் இவர்களை எளிதாக தாக்கிவிடுகிறது. முக்கியமாக பாலியல் தொற்று நோய்களால் தாக்கப்பட்டோர் 20-40 வயதிலானவர்களாக உள்ளனர்.


ஓரிரு மாதங்களுக்கு முன் நான் பணியிலிருக்கும் ஊரில் ‘டச் & கோ” எனப்படும் வியாபாரத்தை பற்றி செய்திகள் அதிகம் பேசப்பட்டன. ஆங்கில நாளிகையில் பணி புரியும் நண்பர் ஒருவர் இதன் தொடர்புடையவர்களை சந்தித்து செய்தி சேகரிக்க சென்றிருந்தார். நானும் உடன் சென்றிருந்தேன். இன்பார்மர் 3 பெண்களை அழைத்து வந்திருந்தான். ஒரு வேளை பணம் கொடுப்பதாக செல்லி இருந்ததால் வந்திருப்பார்கள் போல.


இளம் வயதுடைது இப்பெண்களில் பெரும்பாலோனோர் வீட்டை வீட்டு ஓடி வந்தவர்களாக உள்ளனர். அதிகபட்சம் 16/17 வயது தான் ஆகிறது. இப்படி ஓடி வந்து கூட்டாக கிடைக்கும் இடத்தில் ஆண் பெண் பாராமல் தங்கிக் கொள்கிறார்கள். இவர்களை நெருக்கடியாக்குவது வேறென்ன பணம் தான். பேதிய வயதற்றதால் வேலை கொடுக்க மாட்டார்கள். இவர்களை வைத்திருக்கும் காதலர்களும்??? வசதியான பசங்க கிடையாது. பொருக்கி தனம் செய்து கொண்டு உரை சுற்றும் ஊதாரிகள்.


இப்பெண்களோ தன் உடல் பாகங்களை தொட்டுக் கொள்ள இப்பகுதிக்கு இன்ன விலையென வியாபாரம் செய்து பணம் திரட்டுகிறார்கள். இதில் இவர்களுக்கு கிடைக்கும் பணம் ஓர் உயர் அதிகாரிக்கு கிடைக்கும் மாத வ்ருவாயை விட மிகுதி. இப்படி கிடைக்கும் பணமும் போதவில்லை என்றே இப்பெண்கள் கூறுகிறார்கள். அந்த அளவுக்கு கூத்தடிக்கும் நடவடிக்கைகள் (ஆக்டிவிட்டி) இவர்களிடையே இருக்கிறது.
இப்பெண்கள் இப்படி உடல் வியாபரம் செய்வது அவர்களுடைய காதலன்/லர்களுக்கும் தெரியும். இருந்தாலும் பிரச்சனையில்லை எனும் போக்கில் இவர்களின் உலகம் ஓடிக் கொண்டிருகிறது. இது தான் பின்னவீனதுவ வாழ்க்கையாமே? ஒருத்தர் இருக்காரு, உங்க வியாபரம் ‘மெனு கார்டு’ போடு விருத்தியடையும் அளவுக்கு ஐடியா கொடுக்கும் ஐடியா சாமி. யாரென வினவினார்கள். கிளம்பும் போது இது உங்களுக்கு உபயோகமாக இருக்குமென சாநியின் அகபக்க முகவரியை எழுதி கொடுத்துவிட்டு வந்தேன்.


உலகவிலும் பாலியல் தொழில் ஏதோ ஒரு வகையில் ஆதரிக்கப்பட்டே வருகிறது. தேசம் தேசமாக சென்று பெண்களை ருசி பார்க்கும் பணம் கொழித்த சுற்றுப் பயணிகளும் இருப்பதாக சர்வே தகவல்கள் இணையத்தில் காணக் கிடக்கின்றன. சுற்றுபயண மேம்பாட்டினை கருத்தில் கொண்டு உலகளவில் இப்பாலியல் தொழிகள் மறைமுகமாக அனுமதிக்கப்படுகின்றன.

அது போக பாலியல் தொழில் இல்லாமல் போகும் இடங்களில் குற்றச் செயல்கள் அதிகரித்துவிடும். முக்கியமாக கற்பழிப்பு சம்பவங்கள். மொத்தத்தில் இதற்கு பழியாவதும் தன்னை பழி செய்து கொள்வதும் பெண் என்பவள் தான்.
ஒருவரின் குறைபாடுகளில் மற்றொருவர் வாய்ப்பு எடுத்துக் கொள்வது மிக கொடுமையான ஒன்று.

ANTI-TRAFFICKING IN PERSON ACT 2007 அல்லது HUMANS ANTI-TRAFFICKING ACT தொடர்பான செய்திகளை நீங்கள் அறிந்திருக்கலாம். தேசம் விட்டு தேசம் கடத்தப்படும் மனிதர்களை பற்றிய உரிமைகளையும் தண்டனைகளையும் இச்சட்டம் விளக்குகிறது. இது ஆண் பெண் இருபாலருக்கும் பொருந்தும். ஆயின் இதில் பெண்கள் எப்படி எல்லாம் ஏமாற்றப்படுகிறார்கள் என்பதை அடுத்த பகுதியில் ஆய்வு செய்வோம்.

Monday, August 02, 2010

கொசுறு 02/08/2010

2000 ஆண்டுகளாக என் பணி படித்துக் கிடப்பதே என படித்திருந்து 500 ஆண்டுகளாக வருடத்தின் 730-நாட்களிலும் இராப்பகலாக எழுதிக் கொண்டிருக்கும் பாரு பவதிக போன்ற எழுத்தாளர்கள் தமிழை கட்டிக் காத்துக் கொண்டிருக்கும் போது. நீயெல்லாம் எழுதாவிட்டால் எவனுக்கும் குடிக்க குவாட்டர் கிடைக்காமல் போய்விடாது என சாணியடி சித்தர் என் முகத்தில் சாநி புகழ்பாடி சாணியடித்து அனுப்பிவிட்டார்.
****

கொஞ்ச காலம் பிளாக் எழுதாமல் இருந்தால், ஏன் எழுதவில்லை என கேட்பவர்கள் அனைவரும் ஆண்களாகவே இருக்கிறார்கள். இப்படி என்றால் எப்படி ஐயா தமிழ் வளரும்? சரி அதுதான் பரவாயில்லை என்றால் தமிழே அதோ கதியென கிடக்கும் என் போன்றோரை சொம்மொழி மாநாட்டுக்கு வருகிறீரா என ஒரு எஸ்.எம்.எஸ் அனுப்பியாவது கேட்டிருக்கலாம். அதுவும் கிடையாது. இது தான் நீங்கள் ஒரு தமிழ் எழுத்தாளனுக்கு, கவிஞனுக்கு, தமிழ் அறிஞனுக்கு கொடுக்கும் மரியாதையா? -இப்படிக்கு ஒரு நல்லவன்.
****இராவணன் படத்தை பார்த்ததில் இருந்து மண்டைக்குள் டண்டண்டண்டனக்கனு ஒரே சவுண்டாக இருக்கிறது. தொடர்ந்து மூன்று நாட்களுக்கு பேச்சு தடுமாறி போய் தவளையை போல் ஆ... ஊ... ஏ... என வாயை திறப்பதோடு நிறுத்திக் கொண்டேன். பலமான லெங்குவஜோபோபியா நோயின் பிடியின் சிக்கி இருப்பதாக கூறி நான்கைந்து பாகவதர் படங்களை பார்க்கச் சொல்லி டாக்டர் எழுதி கொடுத்தார். இப்போது உடல் நலம் பரவாயில்லை.

இது இரண்டாவது அடம்ப்ட். முன்பு சீரோ டிகிரி படித்த போதும் இதோ போன்ற நோய் தாக்குதலில் உண்டானேன். ஒரு வேளை சீரோ டிகிரியை படித்துவிட்டு புதுமை செய்கிறேன் பார் என மணி சார் படம் எடுக்க கிளம்பி இருக்கலாம்.
படம் முழுக்க ஒரே கத்தல், கதறல். இல்லை என்றால் அடித் தொண்டையில் கொட்டை சிக்கிக் கொண்டதை போல் சவுண்டே இல்லாத பேச்சு. பழக் கொட்டையை சொன்னேன். அடிக்கடி லே...லே...லே... என பேசிக் கொல்கிறார்கள். சுஹாசினி வசனமாம். அடுத்து இந்த பெயரை எங்கேயெனும் பார்த்தால் பின்னங்கால் பிடரியில் பட ஓடிட வேண்டும்.
*****இடைபட்ட காலத்தில் பல புத்தகங்களை வாசித்தாகிவிட்டது. எழுதாமல் இருந்தது வாசிப்பிற்கு அதிகமான நேரத்தை ஒதுக்கி கொடுத்தது. சில ஆய்வு புத்தகங்கள் மேலும் தேடுதல்களை தூண்டும் வகையில் அமைந்தன. ஆனால் தற்சமயம் இருக்கும் இடத்தில் உள்ள நூல் நிலையத்தில் போதுமான அளவில் தகவல் திரட்ட முடியவில்லை. புத்தக கடைகளும் குறைவாக உள்ளதால் வெளியிடத்தில் இருந்து ஆர்டர் செய்து வாங்க வேண்டியுள்ளது.

தற்சமயம் சுஜாதாவில் கந்தளூர் வசந்தகுமாரன் எனும் நாவலை வாசித்து வருகிறேன். இது இவரது இரண்டாவது சரித்திர நாவல் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆயின் இவரின் முதல் சரித்திர நாவல் யாதென தெரிந்தவர்கள் சொல்லும்படி கேட்டுக்கொள்கிறேன்.
****

சில காலத்திற்கு முன் உசுரே போகுதே எனும் பாடல் உயிரை வாங்கிக் கொண்டிருந்தது. இன்னமும் வாங்கிக் கொண்டிருக்கலாம். ஏனோ இப்பாடல் என்னை அப்படி ஒன்றும் வசீகரிக்கவில்லை. சமீபமாக எந்திரன் பாடல்களை சிலாகித்து எழுதப்படுவதைக் கவனிக்கின்றேன். எப்படியெல்லாம் வெறுப்பேற்றப்பட போகிறோம் என தெரியவில்லை.
******

எழுத்தாளர் சேவியரின் கவிதைகள் எனக்கு விருப்பமானவை. இதற்கு முந்தய கொசுறு பகுதிகளிலும் குறிப்பிட்டிருக்கின்றேன். அவரின் கவிதைகளில் ஒன்று:

“ஏழாயிரம் சம்பளம் டா மச்சி”
என
குதூகலித்துச் சொல்லும் நண்பனிடம் சொன்னதில்லை
பல மடங்கு வாங்கும் நான்.
அவனிடம் மிகுந்திருக்கிறது நட்பு
*****

மேலும் ஒரு கவிதை:
நாம் அமர்ந்திருந்த
பூங்கா இருக்கையில் படுத்துறங்குகிறான்
பிச்சைக்காரன்
நேற்றுஅவன் காதலியோடு
வந்திருப்பான் போல
-பின்னிரவுப் பெருமழை கவிதை தொகுப்பில் ரிலுவான் கான்.
****
எதையாவது எழுது... எழுதுறத விட்டுட்டா பிறகு எழுத சிரமப்படனும்.... சிரேயா படத்தை போட்டாவது ரெண்டு வரி எழுதுனு நண்பர் அதிஷா கொடுத்த உ(ர்)சாகத்தை கண்டு மெய் சிலிர்த்துப் போனேன்.

ஊக்குவிற்பவன்
ஊக்குவித்தால்
ஊக்குவிற்பவனும்
தேக்கு விற்பான் - கவிஞர் வாலி
****

Google image-ல் Charu என தட்டச்சு செய்தால் ஏதேதோ படங்கள் வருகின்றன. ஒரே கிளுகிளுப்பா போச்சு....
***

Wednesday, July 28, 2010

Notes to Science Fiction Writers by Ben Bova


தலைப்பு : Notes to Science Fiction Writers
ஆசிரியர் : Ben Bova

வெளியீடு : Houghton Mifflin Company, Boston (1981)

பக்கம் : 193

அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிகள் அதிவிரைவில் நடந்தேறிக் கொண்டிருப்பவை. இவற்றின் மாற்றம் ஒவ்வொரு நிமிடங்களிலும் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன. அறிவியல் புனைவுகள் வாசகனை ஒரு புதிய சிந்தனையில் ஆழ்த்துகிறது. உதாரணமாக நாம் இருந்திராத ஒரு சூழலை வாசிப்பில் அனுபவிக்கின்றோம் அதில் இலயித்து போகின்றோம். அறிவியல் புதினங்களில் மனித வாழ்க்கையின் அன்றாடங்களை காண முடிவதாக இருப்பினும் அதன் புதுமைகள் வாசகனுக்கு உவப்பளிக்கும் ஒன்றென அமைகிறது.

அறிவியல் புனைவுகளை நாம் இங்கு பேசும் பொழுது மாய யதார்த்தம் அல்லது மாந்திரிக யதார்த்தம் எனும் ஏனைய பிரிவுகளையும் காண வேண்டி உள்ளது. தமிழ் புதினங்கள் பல அறிவியல், மாய, மாந்திரிக யதார்த்தம் சார்ந்த மயக்கம் கொண்டு வெளி வந்திருக்கின்றன. அறிவியல் புனைவு மாய மந்திர யதார்த்தங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்ட ஒன்றென அமைகிறது. அதற்கு அதீத கற்பனை மட்டும் போதுமானது அல்ல.


அப்படி என்றால் அறிவியல் புனைவுகள் அமைப்பது கடினமான ஒன்றா? Notes to a science fiction writer எனும் நூலின் ஆசிரியர் Ben Bova, Isaac Asimov என்பவரின் கருத்தை பின் வருமாறு குறிப்பிடுகிறார்: Asimov-வின் கருத்தின் படி அறிவியல் புனைவு கடினமான ஒன்றென குறிப்பிடப்படுகிறது. இதன் கட்டமைப்பில் ஆசிரியரின் மாறுபட்ட சிந்தனை அதன் வெற்றியாக அமைகிறது. அறிவியல் புனைவின் நாயகன் அதில் செலுத்தப்படும் சிந்தனை வடிவங்கள். அது மிகையாகி மாய மந்திர கதையாகிவிடாமலும் இருக்க வேண்டும். அதாவது கதையின் வடிவம் அறிவியல் கோட்பாடுகளை கொண்டமைய வேண்டும் என்பதாக Asimov குறிப்பிடுகிறார்.


சிந்தனை கட்டமைப்புகள் சாதாரணமாக முன்வைக்கப்படுமாயின் அதன் அழகியல் பாதிக்கப்படும். ஆதலால் கலை நுணுக்கங்களின் வடிவமைப்பும் அறிவியல் புதினங்களுக்கு அவசியமாகிறது. இதற்கு உதாரணமாக 1973-ஆம் ஆண்டில் ஆசிரியர் எழுதிய Hall of Fame எனும் அறிவியல் புதினத்தை எடுத்துரைக்கிறார். Men of Good Will மற்றும் The Shining Ones போன்ற புத்தகங்களையும் எடுத்துக்காட்டாக தமது கட்டுரைகளுக்கு விளக்க உதாரணங்களோடு பயன்படுத்தப்பட்டுள்ளது. Poul Anderson-னின் (மேற்கத்திய அறிவியல் புனைவு எழுத்தாளர்) கூற்றை நாம் இங்கு கவனிக்க வேண்டியுள்ளது. அதாவது ஐம்புலன்களை பயன்படுத்தும் வழிமுறை. இதன் வழி நாம் எழுதும் கதாபாத்திரங்களுக்கும் கதையோட்டத்திற்கும் முழு உயிரோட்டம் கிடைக்கும் என குறிப்பிடுகிறார். இது அறிவியல் புனைவுக்கு மட்டும் அல்லாது யதார்த புனைவுகளுக்கும் தகுந்த ஒன்று என்பதை நாம் காண முடிகிறது.


மேலும் அறிவியல் புனைவிற்கான சிந்தனை பெருக்கத்திற்கு அறிவியல் சார்ந்த மாதிகைகள், சஞ்சிகைகள், புத்தகங்களின் வாசிப்பு அனுபவம் கைக்கொடுக்கும் என்கிறார். அதனைக் காட்டினும் நம்மைச் சுற்றியுள்ள மனிதர்களை நிதானித்து கவனிப்பதும் “இப்படி நேர்ந்தால்” எனும் கேள்வியை கேட்பதின் வழியும் அறிவியல் புனைவிற்கு நிச்சயம் கைகொடுக்கும் என குறிப்பிடுகிறார்.


உதாரணமாக, ஒரு மனிதன் பொய் பேசுகிறானா இல்லையா என்பதை துள்ளியமாக கண்டறியும் இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்டால் என்ன நேரும்? அல்லது மனிதனுள் ஏற்படும் சிந்தனை மாற்றங்கள் ஒரு மிருகத்திற்கோ, இயந்திரத்திற்கோ, கிருமிகளுக்கோ உண்டாகுமாயின் என்ன நேரும்? என்பதாக நமக்கு உதாரணங்களை காட்டுகிறார். 1981-ஆம் ஆண்டு எழுதப்பட்ட புத்தகம் என்பதால் இன்றய நிலையில் தகவல்கள் அடிபட்டுபோயுள்ளன. என்போல் ஆரம்ப நிலையில் உள்ளவர்களுக்கு சிறு தூண்டுதலாக அமையலாம்.


Monday, July 26, 2010

சைபர் உலகின் சாதனைகள்

விரல் நுனியில் விளம்பரம், உங்கள் தேவைகள், உங்கள் விருப்பங்கள் மொத்தத்தில் மனித வாழ்க்கைக்கான தேடல்கள் யாவற்றையும் வேண்டிய தருணங்களில் பிரசவித்துக் கொடுக்கிறது இணையம். இணையம், இதற்கு மாற்று பெயர் மாய உலகம். அளப்பறிய பசி கொண்ட மிருகம் போல் தகவல்களை மேலும் மேலும் தனக்குள் சேமித்துக் கொண்டிருக்கிறது. நீங்கள் படிக்கும் இந்தத் தகவல் பகிர்வும் அதனுள் அடங்கிய ஒன்றே. இந்த மாய வலையில் பிரசித்திப் பெற்ற, பலராலும் அறியப்பட்ட சில தகவல் தொழில்நுட்பத் தளங்களை காண்போம்:கூகுல் இணைய சேவைகள்

நிறுவனம் 1998-ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இன்றய தேதியில் கூகுலின் வசதிகள் அளப்பரியதாக உள்ளது. இதன் நிறுவனர்கள் பேஜ் மற்றும் ப்ரீன் தமது 24வது வயதில் கூகுல் தேடுபொறியை இணைய பயனர்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்தார்கள். இவ்விரு நண்பர்களும் தங்களது முனைவர் பட்ட மேற்படிப்பை பாதியில் நிறுத்திக் கொண்டு கூகுலின் முயற்சியில் கால் பதித்தார்கள் என்பது கூடுதல் தகவலாகும்.

தினமும் 300 கோடி மக்கள் கூகுல் வசதியை நாடுவதாக கணக்கெடுப்புகள் தெரிவிக்கின்றன. இணைய உலகில் பயனர்களுக்கான தகவல் தேடும் சேவையை சுலபமான முறையில் துரிதபடுத்தும் முயற்சியின் பலன் கூகுல் என சொல்கிறார்கள் இந்நண்பர்கள்.இணைய உலகில் தரமான சேவையை கூகில் வழங்குவதாக அங்கிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது. தற்சமயம் 88 மொழிகளின் தனது சேவையை வழங்கி வரும் கூகுல் இலாபம் இன்றி ஆரம்பிக்கப்பட்ட செயல்திட்டம் என குறிப்பிடபடுகிறது.

Google Words மற்றும் Google’sAdsense போன்றவை பின்நாட்களில் கூகுலின் வழியே விளம்பரம் செய்ய விரும்புபவர்களுக்காக ஆரம்பிக்கப்பட்ட சேவைகளாகும். நாம் சிந்தித்த திட்டங்கள் மிக சாதாரணமானவைகளாக இருக்கலாம். அதற்காக நாம் எடுத்துக் கொள்ளும் முயற்சிகள் அதனை மேலும் சிறப்பு மிக அமையச் செய்யும் என்பது இவர்களின் வழி நம் கற்றுக் கொள்ள வேண்டிய ஒன்றாகும்.யாகூ இணைய சேவைகள்

யாங், டேவிட் ஃபீலோ ஆகியோரால் 1995-ஆம் ஆண்டு இணய பயனர்களுக்கு யாகூ சேவை வடிவமைத்து கொடுக்கப்பட்டது. கூகுலின் நெருங்கிய போட்டி நிறுவனமென கருதப்படும் யாகூவின் சேவைகள் 90-ஆம் ஆண்டின் இறுதி வரையில் பரவலாக பலராலும் விரும்பப்பட்டது. அக்காலகட்டத்தில் யாகூவின் இணைய சேவை முதலிடம் வகித்து வந்தது. யாகூ நிறுவனத்தை வாங்குவதற்காக மைக்ரோசோஃப்ட் நிறுவனம் பேசிய தொகை 44.6 பில்லியன் டாலர்கள்.யூ டியுப்

காணொளி சம்பந்தப்பட்ட தகவல்களை வழங்கும் தளமாக விளங்கி வருகிறது. இந்நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டதற்கான காரணம் நம்மில் பலருக்கும் நேர்ந்திருக்கக் கூடிய சாதாரண ஒரு பிரச்சனை தான்.

2005-ஆம் ஆண்டில் பிஃப்ரவரி திங்கள் 3-ஆம் நாள் மூன்று நண்பர்களுக்கு ஒரு சிக்கல் உண்டானது. Chad Hurley, Steve Chen மற்றும் Jawed Karim இம்மூவரும் ஒரு விருந்து உபசரிப்பில் கலந்து கொண்ட பின் அதில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும் வீடியோக்களையும் மின்மடல் வழியாக San Fransiscoவில் இருக்கும் தமது நண்பர்களுக்கு அனுப்பி இருக்கிறார்கள். பல முறை முயன்றும் அம்முயற்சி பாழாய் போனது. காரணம் அனுப்ப முயற்சித்த வீடியோ அளவில் பெரிதாக இருந்தது.

இந்நண்பர்கள் அனுபவித்த சிக்கலின் தீர்வாக கூட்டு முயற்சியில் யூ டியுப் தளம் அமைக்கப்பட்டது. வீடியோ தொடர்பான தகவல்களுக்கு பரவலாக பயன்படுத்தப்படும் இத்தளம் the largest video sharing site on the internet எனும் அங்கிகாரத்தைப் பெற்றுள்ளது.மை-ஸ்பேஸ்

100-கோடிக்கும் அதிகமான பயனர்களை கொண்டு இயங்கும் இத்தளம் 2004-ஆம் ஆண்டு டாம் அண்டர்சன் என்பவரால் நிர்மானிக்கப்பட்டது. அச்சமயம் அவரின் வயது 23. Mark Zuckerberg (Facebook தளத்தின் தலைமை நிர்வாக இயக்குநர்) அளவிற்கு இவர் பணக்காரராக இருக்காவிட்டாலும் உலகில் அதிக அளவில் பயன்படுத்தப்பட்ட சமூக தளத்தின் நிறுவனர் என தனது பெயரை நிலைநாட்டியுள்ளார்.
Word Press

2005-ஆம் அண்டு தொடங்கப்பட்ட வலைதளம். பிளாக் அல்லது வலைமனை பயனர்களுக்காக ஏற்படுத்திக் கொடுக்கப்பட்ட இத்தளத்தின் நிறுவனர் Matt Mullenweg. இணய பயனர்களிடையே அறியப்பட்ட இந்த பிளாகிங் ஃப்ளாட்போர்ம் ஆரம்பித்த சமயம் அவரின் வயது 19. இணய குழுமங்களில் இயங்கிக் கொண்டிருந்த பலரும் இதன் எளிமையான தன்மையால் தாங்களுக்கென தனி வலைமனைகளை உறுவாக்கிக் கொண்டு தமது எழுத்து படிவங்களை பதிந்து வந்தனர்.
முகநூல்- Facebook

இச்சமூக தொடர்பு தளத்தை உறுவாக்கிய சமயம் Mark Zuckerberg-கின் வயது 19. ஹாவர்ட் பல்கலைகழகத்தில் தனது பட்டபடிப்பை மேற்கொண்டிருந்தார். இத்தளத்தின் சோதனை முயற்சி முதன் முதலில் ஹாவர்ட் வட்டாரங்களில் மட்டுமே செயல்படுத்தப்பட்டது. கணிசமான வரவேற்பின் பொருட்டு ஏனைய பல்கலைகழகங்களிலும் இதன் பயன்பாட்டினை அறிமுகபடுத்தினார்கள். தொடர்ந்தாட் போல் தனது பல்கலைக்கழக நண்பர்களின் உதவியுடன் பேஸ்புக் மேலும் பரவலாக்கப்பட்டு உலக அளவில் பயன்படுத்தப்படுகிறது. மை-ஸ்பேச் மற்றும் பேஸ்-புக் எனும் இவ்விரு சமூக தளங்களும் முன்ணணி போட்டியில் தங்களது சேவையை வழங்கிக் கொண்டிருக்கின்றன.
நெருப்பு-நரி- Mozilla Firefox

2003-ஆம் ஆண்டு தனது சேவையை தொடங்கிய இத்தளத்தின் சொந்தக்காரர் Blake Ross. இவரும் தனது 19-ஆம் வயதில் இத்தளச் சேவையை ஏற்படுத்திக் கொடுத்தார். ஏனைய தளங்களை காட்டினும் எளிமையான சேவையை வழங்குவதாக இத்தளம் அறியப்படுகிறது.E-BAY

Pierre Omidyar தமது 28-வது வயதில் 1995-ஆம் ஆண்டு இத்தளத்தை ஏற்படுத்தினார். இந்நாட்களில் இத்தளம் இணையத்தின் உலக சந்தையென அழைக்கப்படுகிறது. ஒரு சமயம் பிரபல காற்பந்து விளையாட்டாளர் டேவிட் பேக்கம் தான் ஆசையாக சேமித்து வைத்த பொருட்கள் இத்தளத்தில் ஏலத்துக்கு வந்ததை கேள்விபட்டு அதிர்ச்சிக்குள்ளானார். இதன் பின்னணியில் அவர் தம் வேலைக்காரர்களின் கையாடல் இருந்திருக்கும் எனக் கூறபட்டு பிறகு அது மறுக்கப்பட்டு என சில காலத்திற்கு முன் செய்திகள் ஓடிக் கொண்டிருந்தன.

Monday, May 24, 2010

முரட்டு சிங்கம் மிரட்டவில்லை

குவிக் கன் முருகனின் மொக்கை காமெடிகளை இரசித்தவர்களுக்கு நிச்சயமாக இரும்புக் கோட்டை முரட்டு சிங்கத்தில் எதிர்ப்பார்ப்புகள் அதிகமாக இருந்திருக்கக் கூடும். மிக சாதாரண கதையம்சத்தை கையில் எடுத்திருக்கும் சிம்பு தேவன், இம்சை அரசன் மற்றும் அறை எண் 308-ல் கடவுள் என தனது முந்தய படங்களை காட்டினும் சற்றே சறுக்கி விழுந்திருக்கிறார். மிகச் சாதாரண கதையம்சம் எனினும் அதில் புகுத்தப்பட்டிருக்கும் செய்திகள் யதார்த்தமானவை மற்றும் சம காலத்தில் இருக்கும் அரசியல் பின்புலன்களின் மீதான வெறுப்பும் கூட.

இம்சை அரசன் 23-ஆம் புலிகேசியில் வரும் ஒரு காட்சி. ‘அக்காமாலா ஜிப்சி’ எனும் ’ஆரோக்கிய பானத்தை’ வெள்ளையர்கள் தமிழகத்தில் அறிமுகம் செய்கிறார்கள். அதற்கு அக்கால ஆட்சியாளன் இலாப நோக்கில் துணை போகிறான். கதையின் பிற்பகுதியில் புரட்சி கதாநாயகன் வெளிநாட்டு விளம்பரங்களுக்கு துணை போவது சரியா தவறா என அவ்விளம்பரங்களில் நடித்த நடிகர்களை நையப் பிழிவதாக காட்டி இருப்பார்கள்.

கோக்ககோலா மற்றும் பெப்சி (அக்காமாலா ஜிப்சி) போன்ற ஆரோக்கிய குறைவான பானங்களை அல்லது வெளிநாட்டு பொருட்களை மூன்றாம் உலக நாடுகளில் அறிமுகம் செய்து, விளம்பரங்களை அதிகரித்து கோடிக் கோடியாக இலாபம் ஈட்டும் மேற்கத்திய நாடுகளின் போக்கினை சித்தரித்திருப்பார் சிம்பு தேவன். தற்காலத்தில் அதிகமான வெளிநாட்டு விளம்பரங்கள், பரிட்சயமான நடிகர்களை கைக்குள் போட்டுக் கொண்டு இயங்குகின்றன. அப்படத்தில் இயக்குநரின் குட்டு அவர்களுக்கு புரிந்திருப்பினும் துடைத்து தூக்கியெறிந்து போய்க் கொண்டிருப்பார்கள் என்பதில் வியப்பில்லை.

இம்சை அரசனின் முக்கிய நோக்கம் தமிழக அரசின் மெத்தன போக்கான ஆட்சி முறையை சாடுவதாக இருப்பினும் முதலாம் உலக நாடுகளென அறியப்படும் மேற்கத்தியத்தின் மீதிருக்கும் தனது கடுப்பை தயங்காமல் காட்டி இருப்பார். வெளிநாட்டு பொருட்களுக்கு விளம்பரம் கொடுப்பதை தவிர்த்து உள்நாட்டு பொருட்களின் வியாபரத்தை அதிகரித்து நாட்டை வளப்படுத்த வேண்டும் எனும் பொருளாதார சிந்தனையை சரியான கோணத்தில் காட்சிபடுத்தி இருப்பது நிச்சயமாக பாராட்டக் கூடிய ஒன்றே.

மீண்டும் அரசியல் பேசுவதற்கும் சமூகத்தின் மீதான தமது பார்வையை முன் வைப்பதற்கும் இயக்குநருக்கு தேவைப்பட்டிருப்பது புலிக்கேசி போன்ற மற்றுமொரு தளமே. மக்கள் மத்தியில் பரவலாக உழன்று கிடக்கும் கடவுள் மற்றும் சமயத்தின் போர்வையிலான கேப்மாறிதனம் மொள்ளமாறிதனம் பொறுக்கிதனம் முடிச்சவிக்கிதனம் போன்ற செயல்களையும் கடவுள் எனும் மாய பிம்பத்தையும் உடைக்கும் கருவியாக கடவுளை பயன்படுத்தி அறை எண் 308-ல் நிகழ்காலத்திற்கு திரும்பிய சிம்பு தேவன் மீண்டும் 17-ஆம் நூற்றாண்டிற்கு தனது திரைக்கதையை தூக்கிக் கொண்டு குதிரை சவாரி செய்திருக்கிறார்.
ஓர் ஊர்ல அப்பா, அம்மா, கணவன், மனைவி, சித்தப்பா, சித்தி, பெரியப்பா, பெரியம்மா, அந்தை, மாமா, தாத்தா, பாட்டி, தம்பி, தங்கச்சி, அக்கா, அண்ணன், அண்ணி, பன்னி என ஒரு பெரீரீரீரீய கூட்டமே இருந்ததாம். அவர்களுக்கு கக்கூஸ் போவதென்றாலும் கூட அதான் நம்ம ஹீரோ இருக்காரே மலச்சிக்கல் ஒன்றும் ஏற்படாது அப்படிக்கிற ஒரு அசாத்தியமான நம்பிக்கை இருந்தது. ஒரு நாள் தீடீடீடீர் என ஹீரோ காணாமல் போய்விடுகிறார். அந்த மக்களுக்கு ஏற்கனவே பக்கத்து ஊர்காரர்களின் தொந்தரவு வேறு. அவற்றை ஹீரோதான் சொம்பு தூக்கி கொண்டு வந்து பஞ்சாயத்து செய்து தீர்த்து வைப்பார். அதை அந்த ஊர் மந்தை பவ்வியமாக ஏற்றுக் கொள்ளும். ஹீரோவை காணவில்லை என்றதும் மாரில் ஆட்டுக் கல்லை தூக்கி போட்டதை போல் சுச்சா காக்கா போகாமல் அமர்ந்துவிடுகிறார்கள். தீடீடீடீரென ஹீரோ மறுபடியும் எண்ட்ரி ஆகிறார். பகைவர்களை அழித்து மக்களை காப்பாற்றுகிறார். சுபம். அவ்வளோ தான் கதை.

ஹீரோயிசத்துக்கான அத்தனை அம்சங்களையும் இம்மி பிசகாமல் புகுத்தி இருக்கும் இயக்குநர் சிம்பு தேவனின் முயற்சிகள் யாவும் இத் திரைப்படத்தில் கையாளப்பட்டுள்ளது எனினும் திரைக்கதையின் நாயகனான இராகவேந்திர லாரன்ஸிடம் இருக்கும் கதாநாயகன் எனும் பிம்பம் அதை சிந்திச் சிதறி எடுத்துச் சென்றிருக்கிறது. இன்றய நிலையில் தமிழ் மக்களின் மனோ பாவம், தமிழ் ஈழ பின்னனி, அமேரிக்க ஏகாதிபதியம் என ஒன்றுக்கும் அதிகமான செய்திகள் கதையில் தொகுக்கப்பட்டுள்ளது.

நிழலை விட வேகமாக செயல்படும் வீரன், தன் நிழலை விட அதிகமாக பயப்படும் கோழை என இரு பரிமாணங்களில் கதாநாயகன். மக்களுக்காக போராடும் புரட்சி கதாநயகன் வில்லனை அடித்து துவைத்து கசக்கி பிழிந்து காயப்போடுவதற்கு முன் கதாநயகனின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கிறான் வில்லன். நெய் மனம் படைத்த நாயகன் வில்லனை விட்டு விலகி ஸ்லோ மோசனில் நடக்கும் போது பின்னிருக்கும் வில்லன் அவனை சுட்டு விடுகிறான். இதில் தமிழ் ஈழத்தில் நடந்த நிகழ்வுகளின் பின்ணனி அப்பட்டமாகவே தெரிகிறது.
ஒரு மனிதன் உயிர் வாழ காற்றையும் நீரையும் காட்டினும் மிக முக்கியமானது உணர்வும் சுதந்திரமும். போராட்ட குணம் மக்களின் மனதில் நிலைக்க வேண்டுமாயின் அதை வழி நடத்த மக்களுக்கு சிறந்த தலைவன் இருக்க வேண்டும், தலைவன் இல்லையேல் மக்கள் துவண்டு விடுவார்கள், ஆதலால் ஒரு தலைவனின் மரணம் மக்களுக்கு தெரியாமல் இருப்பதே சிறந்தது என மரணப் பிடியில் இருக்கும் நாயகன் ஏகவசனம் பேசுகிறார். இங்கு கவனிக்க வேண்டிய விடயம் சமத்துவம் என்பது பொதுவானது எனும் பட்சத்தில் தலைமைத்துவம் மட்டுமே ஒரு இலக்கின் அடைவு நிலைக்கு முக்கியம் எனதில்லை. அடைவு நிலைக்கான தலைமைத்துவம் தான் இங்கு முக்கியம் என்பதாக இருக்குமானால் தலைவன் ஒருவனால் மட்டுமே இருக்க முடியும் என்பது இல்லை.

அமேரிக்க நாட்டின் ஏகாதிபதியத்தை நேரடியாகவே நகைச்சுவை படுத்தி இருக்கிறார்கள். அணுவாயுத ஒப்பந்தம் எனும் பெயரில் ஏனைய நாடுகளுகளை தனது கட்டுப்பாட்டில் கொண்டுவரும் அமேரிக்க தனத்தை மறுக்க இயலாது. நான் குசு போட்டா கூட பர்மீஷன் வாங்கனுமா என அப்பாவிதனமாக கேட்கும் கிழவனிடம் வாயூ தொல்லை கொடுக்கும் உணவுகள் சாப்பிடுவதை தவிர்த்துவிடுங்கள் என்கிறது ஏகாதிபதியம். வில்லன் கதாபாத்திரத்தில் வரும் நாசருக்கு நகலெடுத்ததைப் குவிக் கன் முருகனில் வரும் வில்லனை போலவே ஒரு கதாபாத்திரம். சுருங்க கூறுவதெனில் சிம்பு தேவனின் நகைச்சுவையில் முக்கி எடுக்கப்பட்ட உலக பார்வையிலான கருத்துகள் லாரன்ஸ் எனும் கதாநயகனின் பிம்பத்தால் விரிசல் கண்டுள்ளது.

எவ்வளோதான் சொல்லுங்க, லஷ்மிராயின் லெக் பீஸ் காலுக்காகவே பாடத்தை 4 தடவ பார்க்கலாம். பார்வட் பண்ணி தான்.

Monday, May 17, 2010

தூண்டில் மீன்

கடந்து செல்கையில்
உணர்ந்து கொள்கிறேன் சுவாசத்தின்
சுத்திகரிப்பு இரகசியங்களை
உன்னைச் சூழ்ந்த
காற்றும் வாசனை தெளித்துச் செல்கிறது

சுதந்திரப் பறவையாய்
சிறகடித்துக் கொள்கிறது
உள்மனம்கேசம் பறக்க
நீ நடந்து வரும் காலைப் பொழுதுகளில்

பெண் மனது
ஆழம் நிறைந்தது தான்
இன்னமும் நீந்திக் கடக்கவில்லை
விழுந்த தூரத்தை
உன் இடையைப் போலவே
கொஞ்சமாக இருக்கிறது
என் மீதான உனது பார்வை
மூன்றாம் மனிதனாக
சாலையில் நிற்கும் வழிப்போக்கன் நான்

முதல் கவிதைபழைய காகிதமாகிவிட்ட பின்பும்
இன்னும் பிறக்கவில்லை
எனது முதல் வார்த்தை
உனைக் காண்கையில்

உனக்கான நேசம்அத்தனையும் புதிய
அணுக்களாய் பிறந்து கொண்டே இருக்கின்றது
அவற்றை நாணேற்றி அம்புகளெய்திட
திராணியற்றுப் போனேன்
இங்கே காயம் என்பது
வில்லாளிக்கு மட்டும் தானோ?
நேற்று என் தோழர்கள் சிரித்தார்கள்
அனைத்தையும் கலைத்து
அழித்துக் கொண்டிருக்கின்றேன்
ஏதோ ஒரு பாரம் இன்னமும்
ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றது.
கர்பம் தரித்த உன் வயிற்றைக் கண்ட பின்
புரிந்துக் கொண்டேன்
உன் தூண்டில் விழிகளுக்கான மீன் வேறென்று


A Poem by Kavinyar Vicky

Wednesday, May 12, 2010

SHERLOCK HOLMES

40 வயதை தாண்டியவர் என கணிக்க கூடிய நபர். 1.8 மீட்டர் உயரம். தெளிவான முக பாவனை. கூரிய பார்வை. திடமான உடல். உறுதியான எண்ணம். முதிர்ச்சியான கதாநாயகனைக் காட்டக்கூடிய அத்தனை அம்சங்களும் இவரிடம் இருப்பதாக சித்தரிக்கப்படுகிறது. ஷெர்லக் ஹோம்ஸ். சிலருக்கு பரிட்சயமான கதாபாத்திரமாக இருக்கலாம்.

சில கதைச் சொல்லியின் யுக்திகள் இரசனை மிகுந்தவை . கணேஷ் வசந்த் எனும் இரு வழக்கறிஞர் கதாபாத்திரங்களை சுஜாதாவின் வாசகர்கள் சிலாகித்திருக்கக் கூடும். இக்கதாபாத்திரங்கள் நிஜ வாழ்வில் இருக்கும் மனிதர்களென கருதிய வாசகர்களின் கேள்வியும் எழுத்தாளர் சுஜாதவிடம் எழுப்பப்பட்டிருக்கிறது. அவ்விரு கதாபாத்திரங்களுக்கும் துரித உயிரோட்டம் கொடுத்து வாசகர்களின் கண் முன் நிறுத்திய பெருமை சுஜாதாவையே சேரும்.

சுஜாதாவின் படைப்புகளை விமர்சித்தவர்கள் முன் வைத்த கருத்துகளில் ஒன்று டாக்டர் ஆர்தர் கோனன் டாயில் சாயலில் இவரின் துப்பரியும் கதைகள் இயம்பப்பட்டுள்ளது என்பதேயாகும். ஆயின் அது முழுமையாக ஏற்றுக் கொள்ள முடியாததும் கூட. ஏனெனின் சுஜாதா தன் கதைகளில் கணேஷ் மற்றும் வசந்த் கதா பாத்திரங்களின் முக்கியதுவம் சம பங்கென அமைக்கப்பட்டிருக்கும். டாயில், டாக்டர் வட்சன் மற்றும் ஷெர்லக் ஹோம்ஸ் எனும் இரு கதாபத்திரங்களை தமது கதைகளில் வரும் பாத்திரங்களாக அமைத்திருப்பார்.

இதில் மாற்றம் என்னவெனில் இவரின் பெரும்பாலான கதைகளில் டாக்டர் வட்சன் கதை சொல்லியாக அறிமுகமாகிறார். டாயில் கதைகளில் ஷெர்லக் மைய கதா பாத்திரமாகவும், கதை சொல்லியான வாட்சன் கதைகளில் வரும் முக்கிய பாத்திரமாகவும் அமைக்கப்பட்டிருக்கிறார்கள்.

டாயிலின் கதைகள் பிற மொழிகளிலும் அதிகமாக மொழி பெயர்கப்பட்டிருக்கிறது. பிரசித்தி பெற்ற இவரின் கதைகள் திரைப்படங்களாகவும் வெளியிடப்பட்டிருக்கிறது. எந்த ஒரு விசயமாக இருப்பினும் அதன் சிக்கல்கள் ஆரம்பத்தில் வியப்பளிக்கலாம், ஆர்வத்தையும் அதிகமாக சிந்திக்கச் செய்யும் ஒன்றாகவும் இருக்கலாம். அதனை கட்டவிழ்த்துப் பார்க்கையில் இவ்வளவுதானா எனும் வெறுமையே எஞ்சி நிற்கும் என்பது டாயிலின் கூற்றாகும். திறமை மிகுந்த துப்பறிவாளர் ஷெர்லாக் மிகவும் அமைதியான மன நிலை கொண்ட நபராக சித்தரிக்கப்படுகிறார். இவரின் செயல்கள் ஏனையோரை வாய்பிளந்து வியக்க வைத்துவிடுகிறது.

SIR ARTHUR CANON DOYLE

பின் புதுமையியல் (பின்னவீனதுவத்தை) சிலாகிக்கும் சிகாமணிகளுக்கு ஷெர்லக் கதைகள் நிச்சயம் பிடிக்காது. டாயிலின் எழுத்து முழுக்க முழுக்க மசாலா சார்ந்த ஜனரஞ்சக கதைகளாகவே அமைந்துள்ளன. ஷெர்லக் கதை வரிசைகளை உன்னித்து கவனிக்கையில் அது மிக சாதாரணமானவையே. கதை சொல்லியின் பார்வையும் கதையை விவரிக்கும் கோணங்களும் வாசகர்களை வாசீகரித்து மூழ்கச் செய்கிறது. கதைச் சொல்லி ஷெர்லக்கின் நடவடிக்கைகளை வியந்து பாராட்டும் பொழுது ஷெர்லக் ஓர் உன்னத மனிதனாக வாசகர்களுக்கு தெரிகிறார். அதன் போக்கில் வாட்சனும் மனதில் பதிந்துவிடுகிறார்.

செயல்களின் விளைவுகள் தோற்றத்தில் கடினமாக காண்பினும் இயல்பில் அவை எளிமையில் இருந்து தொடங்கியவையே என்பது ஷெர்லக்கின் துப்பறியும் தத்துவம். ஷெர்லக்கின் புத்தி சாதூர்யம் இது ஒன்றும் பெரிய விசயமல்ல, இமைப்பதற்குள் முடித்துக் காட்டுகிறேன் பார் என செயல்படுகிறார். Sherlock Holmes : A Study in Scarlet எனும் நாவலில் ஷெர்லக்கை சந்திக்கும் டாக்டர் வட்சன் அவரிடம் குறைகளே நிறம்பி இருப்பதாக முடிவு செய்கிறார். இக்கதையில் ஷெர்லக்கை தற்குறியாக சித்தரிக்கும் வட்சன் கதையின் முடிவில் அவரின் தீவிர விசிறியாக தன்னை காண்பித்துக் கொள்கிறார்.

ஏனையை நாவல்களிலும், சிறுகதைகளிலும் டாக்டர் வாட்சனின் காதாபாத்திரம் ஷெர்லக்கின் கூஜா தூக்கியாகவே காண்பிக்கப்படுகிறது. ஷெர்லக் தம்மை மற்றவர் புகழ வேண்டும் எனும் எண்ணம் கொண்ட ஒரு நபர். புதிராக தெரியும் முறையீடுகளை எளிமையான முறையில் தீர்த்து வைக்க தம்மைக் காட்டினும் மிஞ்சியவர்கள் யாரும் இல்லை என்பது ஷெர்லக்கின் அசைக்க முடியாத மன உறுதி. தூரத்தில் ஒரு மனிதன் வருகிறானே அவன் நடவடிக்கைகளை கவனியுங்கள் ஷெர்லக், விந்தையாக இருக்கிறதல்லவா? எனும் வாட்சனிடம். அவன் என்னை தேடி தான் வந்துக் கொண்டிருக்கிறான் வாட்சன் என பார்த ஓரிரு நெடிகளில் சொல்கிறார் ஷெர்லக்.

WRITER SUJATHA

அது எப்படி சாத்தியப் படும் எனும் கேள்வியை ஒவ்வொரு நிமிடத்திற்கும் வாசகனுள் எழுப்பி நூல் விடாமல் படித்து முடிக்க முடிகிறது. ஃபசல் எனும் விளையாட்டில் வெட்டி கலைக்கப்பட்ட படங்களை சரிவர அடுக்கி வைப்பது போன்றது தான் இங்கு வைக்கப்படும் புகார் விவரங்கள். அதில் சில ஒட்டாத கலவை சேர்க்கப்பட்டிருப்பது குற்றவாளிகள் தம்மை புத்திசாலிகளாக கருதும் இயல்பு தன்மை. ஷெர்லக் தமக்கு கிடைக்கும் ஒவ்வொரு விவரங்களையும் கவனத்தை பிசகச் செய்யாமல் கையாளும் தன்மையால் தன்னை மறுப்பின்றி உலகின் மிகச் சிறந்த துப்பறிவாளராக காட்டிக் கொள்கிறார். கொடுரமான கொலை குற்றமோ அல்லது சாதாரண பிக் பாக்கெட் திருட்டும் ஷெர்லக்கிற்கு ஒன்று தான்.

ஆய்வுகளில் கிடைக்கும் தகவல்களை முன்னுக்கு பின் கிடைத்ததாயினும் அதை சரி வர அடுக்கி ஒரு சிக்கலான கணிதத்துக்கு தீர்வு செல்வதை போல் விவரித்துவிடுகிறார். ஷெர்லக்கை பொருத்தமட்டில் அவரால் தீர்வு காண முடியாத சிக்கலான நிகழ்வுகள் எதுவும் கிடையாது என்பதே. இருப்பினும், ஷெர்லக் தவறாக தீர்மனம் செய்ததாகவும் ஓர் கதையை விவரிக்கிறார் டாக்டர் வாட்சன்.

சுஜாதா தமது கதைகளில் கணேஷ் எனும் கதா பாத்திரத்தை முதலில் அறிமுகம் செய்தார். சில காலத்திற்கு பின் வசந்த் எனும் கதாபாத்திரம் சில துள்ளல் நகைச்சுவைகளோடு அறிமுகமானது. முக்கியதுவம் பெற்ற ஒரே காதாபாத்திரத்தின் வழி துப்பறிவாளனின் எண்ண ஓட்டங்களை விவரிப்பது தடைபடுவதால் இரு முக்கிய பாத்திரங்கள் அதை கலந்தாலோசிக்கும் வண்ணம் வர்ணனை கொடுக்க வசந்த் எனும் கதாபாத்திரம் அறிமுகப்படுத்தப்பட்டதாக தமது கேள்வி பதிலில் அவர் விவரித்திருந்தார்.
ஷெர்லக் கதை சொல்லியாக தமது துப்பறியும் வேலைகளை விவரிப்பதை காட்டினும், அவற்றை கவனிக்கும் கதாபாத்திரம் அதை இன்னும் திறம்பட செய்வதை டாயிலின் கதைகளினூட நாம் வாசித்து அனுபவிக்க முடிகிறது. சுஜாதா தமது கதைகளில் கணேஷ், வசந்த் பாத்திரங்களை எப்பொழுதும் இளமை எனும் பாணியில் காட்டி இருப்பார். டாயிலின் கதையில் ஷெர்லக் தமது வயோதிக காலத்தில் ஓய்வொடுக்கச் செல்லும் இடத்திலும் தமது துப்பறியும் மூளையை பயன்படுத்துவதாக கதை அமைத்திருக்கிறார்.

ஷெர்லக்கின் கதா பாத்திரம் தாம் கண்டிராத செய்திகளை தடயங்களோடு விவரிக்கும் தன்மையை படிக்கும் சமயங்களில் அவர் ஓர் மந்திரவாதியா எனும் எண்ணத்தை முதலில் எழும்பச் செய்து. பிறகு ஏன் அப்படி ஒரு விவரணை சொல்லப்பட்டது என்பதையும் அழகாக வடிவமைத்திருப்பது ஆசிரியரின் வெற்றியே. ஷெர்லக் மற்றும் வாட்சனைக் காட்டினும் டாயில் தாமறிந்த தகவல் களஞ்சியத்தை நாம் இன்றளவிற்கும் பேசும் வகையில் அமைத்துக்காட்டி இருப்பதும், அதை சில எழுத்தாளர்கள் முன் உதாரணமாக எடுத்துக் கொண்டதும் நமது வாசிப்பிற்கு கிடைத்த அவல் பொறி தான். எந்த ஒரு துப்பறியும் நாவலும் இரண்டாம் வாசிப்பிற்கு ஆர்வம் கொடுப்பவை அல்ல.

Tuesday, February 09, 2010

புலிகளை பாதுகாப்போம் - SAVE OUR TIGERS

மனிதனின் அட்டகாசம் நிறைந்து காணும் இவ்வுலகில் எது வேண்டுமானாலும் ஏற்படலாம். அவனாக கண்டு பிடித்துக் கொண்ட எண்ணுக்கும் எழுத்துக்கும் கடவுளர்கள் எனும் உருவங்களுக்கும் பயப்படுவதைப் போல் பாசாங்கு செய்து பசப்புகிறான். உருவ சிலைகளுக்கு முன் வேறு முகம், சிலைகளுக்கு அப்பால் வேறு முகமும் அவனுக்கு ஏற்படுகிறது. சுயநலம் அவனை சிறு நொடி பொழுதுகளினும் மாற்றிக் கொண்டிருக்கச் செய்கிறது.

தன்னையும் மீறிய சக்தி என்பது அவனுடைய தற்காலிக தேவைகளுக்கான போர்வை. தனது தோல்விகளை, அவமானங்களை, பொய்களை, திருட்டுத்தனம் எனும் குணங்களை மறைத்து வைத்துக் கொள்ள அச்சக்தி அவனுக்கு தேவைப்படுகிறது.

மனிதனே உலகின் மிகப் பெரும் சக்தி என கருத முடிகிறது. அவனெடுக்கும் முடிவும் மனிதத்தை சார்ந்ததாகவே இருக்க முற்படுகிறான். இந்த முடிவுகள் நன்மையை மட்டுமே நேக்கியவையா என கேட்பின், நிச்சயமாக இல்லை. அவன் வாழ்வதும் நீதி கொண்ட வாழ்க்கை என சொல்லிவிடலாகாது.

விலங்குகள் மற்றும் பிராணிகள் போன்ற ஏனைய வாழ்வினங்களுக்கு மனிதன் விளைவிக்கும் கொடுச் செயல்கள் வன்மையானவை. இக்கொடுமைகளின் பரிணாம வளர்ச்சி கற்காலத்தில் தொடங்கியன என்பதே தகும்.
கடந்த ஆண்டு தென் ஆப்ரிக்காவில் யானைகளின் இனப் பெருக்கம் அதிகரித்ததால் அதன் எண்ணிக்கையை குறைக்க அவை கொல்லப்பட வேண்டும் என அந்நாட்டு அரசாங்கம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இது பலருக்கும் அதிர்ச்சியான தகவலாக இருந்தது. இது நடக்குமேயானால் பிற நாடுகளும் இது போன்ற செயல்களை பின் தொடர கூடும் என தீவிரமாக மறுக்கப்பட்டது.

அதே போன்ற மற்றோரு சம்பவம் அமேரிக்காவில் நடந்தது. அங்கிருக்கும் ஓநாய்களை கொல்வதற்கு அரசு அனுமதி அளித்திருந்தது. இனவிருத்தியால் ஓநாய் இனம் அதிகரித்துவிட்டதே இதற்கு காரணமென சொல்லப்பட்டிருந்தது. இனவிருத்தியால் அதிகரித்துவிட்ட மனித இனம் தன் ஆதிக்கத்தை பாரபட்சமின்றி ஏனைய உயிரினங்களின் மீது மேற்கொள்கிறது. இதை இயற்கையின் மீதான மனிதனின் சீற்றமென்றே சொல்ல முடிகிறது.

எனது ஆரம்பப்பள்ளி நாட்களில் WWF எனப்படும் உலக வனவிலங்கு பாதுகாப்பு அமைப்பினால் ஈர்க்கப்பட்டிருந்தேன். இதன் வழியே பண்டா எனப்படும் கரடி இனத்தின் புரிதல்கள் கிட்டியது. WWF-ன் சின்னத்தில் பண்டா கரடியின் படம் பொறிக்கப்பட்டிருக்கும். இதன் காரணம் வினவிய பொழுது இவ்வினம் பாதுகாக்கக் கூடிய விலங்கினத்தின் கீழ் இருப்பதாக கூறப்பட்டது.

பாண்டா வகை கரடிகள் இரு ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே குட்டி போடும். இனவிருத்தி காலம் அதிக அவகாசம் கொண்டிருப்பதும் இதன் இன விரிவாக்கம் பெருக முட்டுக்கட்டையிட்டுள்ளது. தற்சமயம் 1000க்கும் குறைவான பாண்டா கரடிகளே உலகில் இருப்பதாக கூறப்படுகிறது. சீனா போன்ற நாடுகளில் பாண்டா கரடிகள் பேனப்படுகின்றன. இதன் ஆயுட்காலம் சுமார் 25 ஆண்டுகள் என கணக்கிடப்படுகிறது. மூங்கில்களை முக்கிய உணவாக கொள்ளும் இக்கரடி வகைகள் குறிப்பிட்ட சீதோஷன நிலை கொண்ட பிரதேசங்களில் மட்டுமே வசிக்கக் கூடியவையாகும்.
அதே நிலை புலிகளுக்கும் ஏற்பட்டிருப்பது வருந்ததக்க ஒன்றே. உலகின் சில நாடுகளில் மட்டுமே புலி இனங்கள் வசித்து வருகின்றன. மலேசியா, இந்தியா, இந்தோனோசிய சுமத்ரா கடுகளிலும் புலிகள் வசித்து வருகின்றன. இதன் அழிவுக்கு புலி வேட்டைகளுக்கு அதிக வருமானம் கிட்டுவதே காரணம் என அறிய முடிகிறது.

புலிகள் ஒவ்வொன்றிற்கும் 20ஆயிரம் முதல் 25ஆயிரம் ரிங்கிட் வரையிலும் சந்தையில் விலை நிர்ணயிக்கப்படுகிறது. கரும்புலிகள் 12ஆயிரம் ரிங்கிட் வரையிலும் கொடுக்கப்படுகிறது. வேட்டையாடப்படும் புலிகள் உடனடியாக வெளிநாடுகளுக்கு இரகசியமாக அனுப்பப்பட்டுவிடுகின்றன. புலிகளை சரியான அளவில் இறைச்சிகளாக வெட்டி, சீனா, தாய்லாந்து, தய்வான் கொஇயா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்துவிடுகிறார்கள்.

கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்துவதனன்றி இவ்வனவிலங்கினங்களை காப்பாற்றுவது சாத்தியமாகாது. புலிகளின் பாதுகாப்பு தொடர்பாக பல முகாம்கள் மும்முற படுத்தப்பட்டுள்ளன. சுயநலத்தின் பேரில் நம்மை சுற்றியிருப்பதை நாம் அழித்துக் கொண்டிருப்போமானால் நம்மை நாம் அழித்துக் கொள்ளும் காலம் வெகு அருகில் என அர்த்தப்படும்.

உங்கள் பார்வைக்கு:
NDTV CHANNEL
WWF நடத்தும் புலிகள் பாதுகாப்பு முகாம்

Monday, February 08, 2010

ஒரு கல்லறையின் கதை

நியூ யார்க் மாநிலத்தில் தேண்டுவதும் சமன் படுத்துவதுமென கட்டமைப்பு பணிகள் செவ்வனே நடந்துக் கொண்டிருந்தது. அது 1991-ஆம் ஆண்டாகும். மந்திய அரசின் புதிய அலுவலகத்தை அவ்விடத்தில் நிறுவும் பொருட்டே இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. அப்பணிகள் திடீரென தடை கண்டது. கட்டுமான இடத்தில் தோண்டுதல் வேலைகளின் போது இங்குமென கொஞ்சம் கொஞ்சமாக மனித எழும்புக்கூடுகள் வெளிபட்ட ஆரம்பித்தன.

ஆழமான தோண்டுதலின் பொழுது அவர்களின் வியப்பு மேலும் அதிகரிக்கவேச் செய்தது. கண்ணாடியில் செய்யப்பட்ட முத்துமணிகள், துருபிடித்த இருப்புச் சங்கிலிகள் என அவ்விடத்தில் சில பொருட்கள் காணப்பட்டது. சுமார் ஆறு மீட்டர் ஆழத்தில் ஏறத்தாழ 400 மனித கூடுகளை கண்டெடுத்தார்கள். அடையாளமின்றி இப்படி மர்மமாக புதைக்கப்பட்டவர்கள் யாராக இருக்கக் கூடும்.

இச்சம்பவம் தொடர்பாக வாசிங்டனின் ஹாவர்ட் பல்கலைக்கழகத்தின் ஆய்வுக் குழுவினர் மேற்பணியினை எடுத்துக் கொண்டார்கள். இவ்வாராய்ச்சி சுமார் 9 ஆண்டுகள் நடத்தப்பட்டது. ஆராய்ச்சியின் முடிவுகள் சில திடுக்கிடும் செய்திகளை வெளியிட்டன.

ஆரம்பத்தில் கூறப்பட்ட அக்கட்டுமான பகுதியானது பல காங்களுக்கு முன் மயான பகுதியாக இருந்ததாக கூறப்படுகிறது. கட்டுமான பணிக்காக எடுத்துக் கொண்டது சுமார் 5 ஹக்டர் நிலபரப்பு. அதாவது மயானம் எனக் கூறப்படும் இடத்தின் ஒரு பகுதி மட்டுமே. மொத்தமாக அங்கு எடுக்கப்பட்ட எழும்புக் கூடுகளின் எண்ணிக்கை சுமார் 10000 முதல் 20000 வரையிலும் அடங்கும்.

மருத்துவ பரிசோதனையின் போது எழும்புக்கூடுகளில் முதுகுத்தண்டு பகுதிகளில் விரிசல் கண்டும், எழும்புகள் உடைந்தும் இருந்தது. கடுமையான, பலமான அல்லது கடினமான வேலைகளில் ஈடுபட்டதால் இப்பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக காரணம் காட்டப்படுகிறது. மேலும் நோய்வாய்பட்டவரின் எண்ணிக்கையும் பட்டினியால் வாடி இறந்தோரும் கணிசமாக இருந்திருக்கிறது. 40 விழுக்காட்டிக்குற்கும் அதிகமான எழும்புக்கூடுகள் 12 வயதிற்கு குறைவானவர்களுடையது என்பது இங்கு வருந்ததக்கச் செய்தியாக அமைகிறது.

சரித்திர சுவடுகள் புரட்டப்பட்டன. ஆராய்ச்சியில் ஈடுப்பட்டிருந்த பல்கலைக்கழகத்தினர் அவை ஆப்பிரிக்காவில் இருந்து கொண்டு வரப்பட்ட அடிமைகள் புதைக்கப்பட்ட இடமென கண்டறிந்தார்கள். த்ரினிட்டி Trinity" தேவாலைய கட்டுமான பணிகளுக்கும், எதிரிகளிடம் இருந்து தாக்குதலை குறைக்கும் பொருட்டு தடுப்புச் சுவர்களை கட்டும் பணிக்கும் அவர்கள் கொண்டு வரப்பட்டதாக கூறப்படுகிறது.

ஃப்பியூடல் சிஸ்டத்தின் அரசியல் மிகவும் குழப்பகரமானது. இதில் அரசர்களுக்கும் தேவாலய பாதிரியார்களுக்கும் ஏற்படும் பிணக்குகளால் அரசியல் மாற்றங்கள் வெகு எளிதாக நடைபெற்று வந்தன. நாட்டின் மேம்பாட்டிற்கு முக்கிய அங்கமென அரசினால் தேவாலயங்கள் நிறுவப்பட்டு வந்தன. இதன் கட்டுப்பாடுகள் முழுக்க முழுக்க தேவாலய பிரபுக்களிடையே இருந்ததால் சில பல பிரச்சனைகள் நடந்தபடி இருந்தன. சில கட்டுப்பாகளின் வழி தேவலயம் நில அபகரிப்பு செய்யும் யுக்திகளையும் வைத்திருந்தன. அதை இங்கு குறிப்பிடுவது செய்தியை நீட்டித்துவிடும்.

1712-ஆம் ஆண்டு அடிமைகள் Trinity தேவாலயத்திற்கு சொந்தமான மயானப் பகுதியில் அடக்கம் செய்யக் கூடாது எனும் உத்தரவை பிறப்பித்தது. அதனால் கொல்லப்பட்ட அடிமைகளும் கொடுமையினால் இறந்தோரும் ஒரு பிரத்தியோக இடத்தில் புதைக்கப்பட்டனர். மணற் பரப்பினால் அவ்விடம் மூடி வைக்கப்பட்டிருந்தது.

1865-ஆம் ஆண்டு அமேரிக்கா அடிமைகள் வியாபாரத்தை தனது நாட்டில் தடை செய்தது. இத்தடை விதிகளால் மேற்கத்தியர்கள் தங்களது அடிமை வியாபரத்தை நிறுத்திக் கொண்டவர்களாக தெரியவில்லை.

ஆராய்ச்சி தொடர்ந்தாற் போல் சினிகல் நாட்டிற்கு பயணிக்கிறது. கோரி சினிகல் நாட்டில் அமைந்திருக்கும் சிறிய தீவு. 1444-ஆம் ஆண்டு முதற் கொண்டு இங்கு அடிமைகள் வியாபாரம் தொடங்கியதாக கூறப்படுகிறது. அச்சமயம் கோரி தீவு போர்த்துகீசியர்களின் ஆளுமையில் இருந்திருக்கிறது.

பிடிபடும் அடிமைகள் அவர்கள் உடைமைகள், வீடு, நிலம் என அனைத்தையும் இம்முதலாளி வர்கத்தினரிடையே இழக்க நேரிடும். எதிர்ப்பவர்களை கொன்று வீட்டோடு எரித்துவிடுவார்கள். 1544-ஆம் ஆண்டு முதல் அடிமைகள் கொள்முதல் மையத்தை போர்த்துகீசியர்கள் கோரி தீவில் நிறுவினார்கள். வெளிநாடுகளில் விற்பனை செய்வதற்கு முன் அடிமைகள் இங்கு கொண்டு வந்து சேர்க்கப்படுவார்கள்.

இதன் தொடர்பாக கோங்கோ நாட்டின் அரசர் போர்த்துகீசிய ஆளுநருக்கு கடிதம் ஒன்றினை எழுதியிருக்கிறார். 18-ஆம் தேதி அக்டோபர் மாதம் 1526-ஆண்டில் எழுதபட்ட கடிதம் அது. அதில் தனது நாட்டில் இருந்து போர்த்துகீசிய ஆட்சியாளர்களை வெளியேறும்படி அவர் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

அடிமை வியாபரத்தை முற்றிலும் ஒழிக்கவும், நாட்டு மக்கள் அடிமை தொழிலினால் வெகுவாக குறைந்து போய்விட்டதாகவும் அவர் கோடிட்டுள்ளார். இப்படி செய்வதில் கிருஸ்துவ மதம் சார்ந்தவர்கள் ஈடுபட்டிருப்பது வேதனையளிப்பதாகவும். அப்படி இருப்போர் உலகெங்கினும் மதப் பிரச்சாரம் செய்வதில் நன்மை இல்லை என்பதனையும் குறிப்பிட்டிருந்தார்.

தொடர்ந்து 1588-ஆம் ஆண்டு துர்க்கியும், அதன் பின் 1677 முதல் 1815-ஆம் ஆண்டு வரையிலும் அத்தீவு பிரான்சு மற்றும் ஆங்கிலேயர்களாலும் ஆட்சி செய்யப்பட்டிருக்கிறது. வெளிநாட்டவரின் ஆதிக்கத்தில் இருந்த வரையிலும் கோரி தீவு அடிமைகளின் பட்டுவாடா இடமாகவே விளங்கியது.

இப்படி அடிமைகளாக கொண்டு வரப்பட்டவர்களின் பெரும்பாலானோர் அந்நாட்டின் பூர்வகுடி மக்களென அறியப்படுகிறார்கள். கணவன், மனைவி, பிள்ளைகளென அனைவரும் மொத்தமாக அடைத்து வைக்கப்படுவார்கள். அவர்கள் நிர்வாணமாகவும் அரை நிர்மாணமாகவும் 3 மீட்டர் அளவைக் கொண்ட அறையினுள் ஒவ்வொன்றிலும் 30 பேர்கள் வரையிலும் திணிக்கப்படுவார்கள்.

சுவாசத்திற்கு சிறியதொரு ஓட்டை வழியாக காற்று வரவும், கழிவு அகற்ற இடம் மற்றும், நாள் விகிதத்திற்கு ஒரு வேளை சாப்பாடு எனக் கொடுக்கப்பட்டும். இதனால் பலரும் ஊட்டச்சத்தின்றி நோய்வாய்ப்பட்டு மரணமடைந்தார்கள். அச்சமயங்களில் கோரி தீவில் கடுமையான நோய்கள் பரவவும் செய்தன.

சிறு பிள்ளைகள் ஒரு கூண்டில் அடைக்கப்பட்டு தாய்மார்கள் கூண்டிற்கு வெளியே விடப்படுவார்கள். அவர்கள் பிள்ளைகள் அழுவதை மட்டுமே கண்டிருக்க முடியும். அதிகமான பிள்ளைகள் உணவு பிரச்சனையால் மரணமடைந்தார்கள். நிதி கட்டுப்பாட்டை குறைக்கும் பொருட்டு ஆட்சியாளர்கள் குழந்தைகளை கொன்றுவிடுவதும் உண்டு.

அடிமைகளாக்கப்பட்டவர்களின் பிணங்கள் கடலில் சுறாவுக்கு இறையாக தூக்கி எறியப்படும். வெள்ளையர்களுக்கு சுறாவுக்கு இறையிடுவது ஒரு பொழுது போக்கான நிகழ்வு என்பதும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

எஞ்சியவர்கள் கியூபா, கொரேபியன் தீவுகள், பிரேசில், அமேரிக்கா என பல நாடுகளுக்கும் விண்ணப்பத்தின் அடிப்படையில் அனுப்பப்படுவார்கள். ஒன்றரை மீட்டர் அகளமும் 20 மீட்டர் நீளமும் கொண்ட கப்பலில் இவர்கள் அடைத்து ஏற்றிச் செல்லப்படுவார்கள். பயணம் சுமார் மூன்று முதல் நான்கு மாத காலத்தை எடுத்துக் கொள்ளும். கப்பலில் இறந்து போனவர்களை பரபட்சமின்றி கடலில் தூக்கி எறிந்துவிட்டு பயணத்தை தொடர்ந்த வண்ணம் இருப்பார்கள்.

இலக்குகளை அடைந்தவுடன் அடிமைகள் வெள்ளையர்களுக்கு விற்பனை செய்யப்படுவார்கள். தங்கள் செல்வ வசதிகளுக்கு ஏற்றபடி அடிமைகள் குழந்தைகள், பெண்கள், ஆண்கள் என வாங்கிக் கொள்ளப்படுவார்கள். எஜமானர்கள் தங்கள் செல்லப் பிராணிகளுக்கு கொடுக்கும் அப்பின் துளிப்பகுதி கூட அடிமைகளுக்கு மறுக்கப்பட ஒன்றென அவர்களை நடத்துவார்கள். இப்படி வாங்கப்படும் அடிமைகளில் வலுத்தவர்கள் மட்டுமே தொடர்ந்து உயிர் வாழ முடியும் என்பது இங்கு விதியாக அமைந்திருந்தது.

பிரான்சு நாடு நெப்போலியனின் ஆட்சியின் கீழ் இருந்த சமயம், ‘சமத்துவம், சுதந்திரம், சகோதரத்துவம்’ என்பதே அவர்களின் புரட்சி முழக்கமாக இருந்தது. இருப்பினும் நெப்போலியனின் ஆட்சியின் கீழ் அதிகமான கருப்பின அடிமைகள் இருந்திருக்கவே செய்கிறார்கள். தமது வல்லிய படைகளை நிலைகொள்ள அடிமைகள் நெப்போலியன் இராணுவத்தினருக்கு தேவைபட்டனர். ஆக மொத்தத்தில் புரட்சி முழக்கம் என்பது பெயருக்கு மட்டுமே இருந்ததே அன்றி முற்றிலுமாக அடிமைத் தனத்தை அகற்றும் செயல்பாடுகள் அங்கு நடந்தேறவில்லை என்பதே உண்மை.

1848-ஆம் ஆண்டு புதிய ஆட்சி மாற்றத்தின் போது கோரி தீவு அடிமை வியாபாரத்தில் இருந்து விடுபட்டது. அடிமைகளின் சேகரிப்பு மையங்கள் அகற்றப்பட்டன. தற்சமயம் அத்தீவினில் ஓரே ஒரு சீரானா மையம் மட்டுமே எஞ்சியுள்ளதாகவும் அது துர்க்கியர்களின் ஆட்சியின் போது 1776-ஆம் ஆண்டு கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. வரலாற்று குறிப்புகள் இது வரையிலும் கோரி தீவில் 3கோடி அடிமைகள் வியாபார பொருட்களாக்கப்பட்டுள்ளதாக காட்டுகின்றன. அத்தீவையும் அதன் ஆதார பத்திரங்களும் UNESCOவினால் பாதுகாக்க வேண்டிய சரித்திர சுவடுகளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்படியாக 1991-ஆம் அண்டு நியூயார்க்கில் நடந்த ஆய்வுகள் பல செய்திகளை வெளியிட்டுள்ளது. நாகரீகமடைந்த, தான் உயர்ந்தவன், புனிதமானவன் என்றும் கடவுளின் ஆசி பெற்றவன் என்றும் கூறி கொள்ளும் ஓர் இனத்தினர், இழிவானவர்களென்றும், தீய ஆன்மா கொண்ட கருப்பு சாத்தான்களென்றும் கருதும் அறியாமை குறைந்த மற்றோரு இனத்திடையே மேற்கொண்ட ஆதிகங்கள் இன்னும் பல இடங்களின் நம் கண்களுக்கு தெரியாமலே உறக்கிக் கொண்டிருக்கிறது.

அடிமை வியாபாரங்கள் இந்நாட்களில் இல்லாமல் போய்விடவில்லை. திரவியத் தேடலில் அகப்பட்டோர் இடம் அறியாது சிக்கிக் கொண்டு படும் அல்லல்கள் பலவிடங்களிலும் எழுந்திருக்கின்றன. வலுக்கட்டாயமான பலியல் தொழில், சிறுவர் தொழிலாளார்கள், குறைந்த வருமானத்தில் வேலை, காட்டுபாடற்ற வேலை நேரம் என சிக்கல்கள் தொடர்ந்து கொண்டிருக்கவே செய்கிறது.