10. ONLY 13 - THE TRUE STORY OF LON (Julia Manzanares & Derek Kent)
தாய்லாந்தை சொர்க பூமியாக அடையாளம் காண்பதற்கு அதன் ‘செக்ஸ் டூரிசமும்’ ஒரு காரணம். பாலியல் வேட்கை பொருட்டு அங்குச் செல்லும் பயணிகள் அதிகமாகவே இருக்கிறார்கள். பயணிகளின் இந்த பாலியல் தேடல் அதிகமான பெண்களை உலகின் புராதன தொழிலான விபச்சாரத்திற்கு அழைத்து வந்துக் கொண்டிருக்கிறது. வாழ்க்கையின் விரட்டல் ஒரு தாய்லாந்து பெண்ணை பேங்காக் பாலியல் வீதியில் கொண்டு வந்து நிறுத்துகிறது. அப்போது அவளின் வயது 13. இந்நூல் தொடர்பாக எனது விமர்சனத்தை ஏற்கனவே எழுதி இருக்கிறேன். பாலியல் தொழில் தொடர்பாக ஆழமான பதிவை முன் வைக்கும் லோன் எனும் பெண்ணின் சுயசரிதம் மிக எளிமையான ஆங்கிலத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.
9. பிரபல கொலை வழக்குகள் (எஸ்.பி.சொக்கலிங்கம்)
கிழக்கின் தரமான வெளியீடுகளில் மேலும் ஒரு புத்தகம். எஸ்.பி.சொக்கலிங்கம் எனும் வழக்கறிஞரால் எழுதப்பட்ட நூல். தடையற்ற வாசிப்பு. 'க்ரைம்' சிறுகதைகளை கண் விரித்து வாசிப்பதை போன்ற அனுபவத்தை கொடுக்கிறது. மொத்தம் 10 கொலை வழக்குகளை விளக்குகிறது இந்நூல். வழக்குகளின் விசாரணை சுவாரசியமானது. அங்கே சான்றுகள் அற்ற சாட்சியம் பொய்த்து போகிறது. இருந்தும் நீதி பல நேரங்களில் வெல்வதையும் சில நேரங்களில் தோற்றுப் போவதையும் நாம் காண்கிறோம்.
8. A Record of Cambodia - The Land and It's People (Zhou Daguan)
இந்நூல் தொடர்பாக எனது கம்போடிய பயண கட்டுரையில் பல இடங்களில் மேற்கோள் காட்டி இருந்தேன். 1296-ல் அந்நாளைய அங்கோர் நகரத்திற்கு பயணம் மேற்கொண்ட ஒரு சீன பயணியின் குறிப்புகளை விளக்கும் நூல் இது. கம்போடியாவின் அங்கோர் கால மக்கள், ஆட்சி, வணிகம், வாழ்வியல், மதம் என பல தளங்களை விளக்குகிறது. சமீப காலத்தில் தான் இந்த நூல் நேரடியாக சீன மொழியில் இருந்து ஆங்கிலத்திற்கு மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. முந்தைய பதிப்பு பிரஞ்சு மொழியில் இருந்து அங்கிலத்தில் The Customs of Cambodia என அறியப்பட்டது. அங்கோர் சரித்திரத்தை அறிந்துக் கொள்ள விரும்புவோர் நிச்சயமாக வாசிக்க வேண்டிய நூல் இது. ச்சாவ் தாகுவான் எழுதிய சீன குறிப்பில் இருந்து இன்று நமக்கு வெகு சொற்பமானவையே கிட்டி உள்ளது. மார்க்கோ போலோவின் ஆசிய பயண குறிப்பிற்கும் ச்சாவ் தாகுவான் பயண குறிப்பிற்குமான வேறுபாட்டையும், தாகுவான் குறிப்புகளில் இருந்து இன்றைய ஆய்வுகள் கண்டடைந்த முரண்பாட்டையும் ஆசிரியர் விளக்க தவறவில்லை.
7. ராஜிவ் கொலை வழக்கு - மர்மம் விலகும் நேரம் (கே.ரகோத்தமன்)
வாசகனை மாய காட்டுக்குள் ஆழ்த்தும் நூல் இது. ராஜிவ் காந்தி கொலை வழக்கின் தலைமை புலனாய்வு அதிகாரியாக இருந்த ரகோத்தமனால் எழுதப்பட்ட நூல். கொலை வழக்குக்கு முக்கிய ஆதாரமாக அமைந்த புகைப்படங்களும் இந்நூலில் இணைக்கப்பட்டுள்ளது. இன்றளவிலும் பல விதமான சர்ச்சைகளை எதிர் கொண்டுள்ள வழக்கு இது. விசாரணை அதிகாரி எனும் பட்சத்தில் தனது சார்பிலான நியாய வாதங்களை முன் வைக்கிறார் ரகோத்தமன். ஒரு வழக்கை விசாரிக்க வேண்டிய முறைகளையும் அதில் தவிர்த்திருக்க வேண்டிய வற்றையும், விசாரணை அதிகாரிகளுக்கு நேர்ந்த பல விதமான இடர்பாடுகள், தடைகள், அதிகாரக் குறுக்கீடுகள் பற்றியும் விலாவாரியக குறிப்பிட்டுள்ளார். ராஜிவ் காந்தி எனும் பிரபலத்தின் கொலை வழக்கினை அறிந்துக்கொள்ள வாசிக்க வேண்டிய முக்கியமான நூல் இது.
6. வெளிச்சத்தின் நிறம் கருப்பு - மர்மங்களின் சரித்திரம் (முகில்)
எழுத்தாளர் முகில் எழுதிய நூல்களில் முதலில் வாசித்தது யூதர்கள். அவர் எழுத்தின் வசீகரமே மேலும் அவரின் வெறு சில படைப்புகளை நாடிச் செல்ல வைத்தது. வெளிச்சத்தின் நிறம் கருப்பு கொஞ்சம் தடித்த நூல் தான் இருந்தும் வாசிப்புக்கு தடையற்ற நூல். ஒரே மூச்சில் படித்து முடிக்கும் அளவிற்கு சுவாரசியத்தை கொட்டி எழுதி இருக்கிறார் முகில். என்ன தான் நாம் விஞ்ஞான ரீதியாக லாஜிக் தேடினாலும் ஆச்சரியமளிக்கும் சில அதிசயங்கள் ஆங்காங்கு நடந்தபடியே உள்ளன. சைன்ஸுக்கு அப்பாற்பட்ட சில நம்பிக்கைகள் நவநாகரீக வளர்ந்த நாடுகளிலும் மெத்த படித்த மக்களிடமும் கொட்டிக் கிடக்கிறது. இயற்கையாக நடக்கும் சம்பவங்கள் கூட சில வேளைகளில் அதிசயமாகும் அதிசயத்தை நாம் காண்கிறேம். இதை படித்து முடித்ததும் இன்னும் கொஞ்சம் எழுதி இருக்கலாமே என்றே தோன்றியது. இது குறித்து முகிலிடம் கேட்ட போது வாய்ப்பு கிட்டுமாயின் இத்தொடரின் அடுத்த பாகத்தை எழுதுவதாக கூறினார்.
5. Lady Boys - The Secret World of Thailand's Third Gender
Only 13 புத்தகத்தை வாங்கிய போது தான் இதையும் வாங்கினேன். தென் கிழக்காசியாவில் அதிகமான திருநங்கைகள் வாழும் நாடு தாய்லாந்து. ‘லேடி பாய்ஸ்’ எனும் இந்த நூல் தாய்லாந்தில் திருநங்கைகள் தொடர்பான பல தகவல்களை நமக்கு அளிக்கிறது. நான் வித்தியா, அவன் - அது = அவள் போன்ற தமிழ் நூல்கள் இந்திய சூழலில் திருநங்கைகளின் வாழ்க்கை முறையை நமக்கு விளக்கின. தாய்லாந்து தொடர்பான ஆங்கில நூல் வரிசையில் முதல் 10-ல் இந்நூலும் ஒன்று. ஒன்பது திருநங்கைகள் குறித்த தனி தகவல்கள் தொகுக்கப்பட்டுள்ளன. திருநங்கையர்களின் அடையாளம் அந்நாட்டில் அங்கீகரிக்கப்படவில்லை. பாலியல் தொழிலின் வியாபார நூதனங்களும் அங்கு பல திருநங்கையர்கள் உருவாக காரணமாக அமைவதை காண முடிகிறது. ‘ஃபியூடிப்புல் பாக்சர்’ எனும் திரைப்படம் தொடர்பாக எனது கண்ணோட்டத்தை முன்பு எழுதி இருந்தேன். நோங் தோம் எனும் அந்த ’முய் தாய்’ வீரரின் வாழ்க்கை குறிப்பையும் இந்நூலில் காணலாம்.
4. எரியும் பனிக்காடு (Red Tea) (இரா.முருகவேல்)
இது ஆங்கிலத்தில் வெளி வந்த நாவல். தமிழில் இரா.முருகவேல் அவர்களால் மிக அருமையாக மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. ஆங்கிலத்தில் வெளிவந்து சுமார் 38 ஆண்டுகளுக்கு பின் இன்று நமக்கு தமிழில் வாசிக்க கிடைத்திருக்கும் நாவல் இது. இந்நாவலை மையப்படுத்தியே பாலாவின் பரதேசி படம் எடுக்கப்பட்டுள்ளதை வாசித்தவர்கள் அறிய முடியும். பாலா அவரின் பெயரை போட்டுக் கொண்டது பலமான சர்ச்சையை ஏற்படுத்தியது. உலகின் ஒரு பக்கம் புரட்சிகளும் போராட்டங்களும் இரண்டாம் உலகப் போரின் ஆயத்தங்களும் நடந்துக் கொண்டிருந்த சமயம் தனது அடிப்படை உரிமைகள் என்னவென அறியாத மக்கள் முதலாளித்துவ பிடியில் வதைபடுகிறார்கள். அறியாமையே இதற்கு முழு முதற் காரணம். படித்து முடிக்கையில் ஏதோ ஒரு பாரம் நம் நெஞ்சில் ஏற்றி வைக்கப்படுகிறது. பனிக்காட்டில் தன் வாழ்க்கையை அற்பணித்த உயிர்களுக்கு ஒரு கணம் நம்மை மௌன அஞ்சலி செலுத்த வைக்கிறது.
3. அறம் - சிறுகதை தொகுப்பு (ஜெயமோகன்)
அறம் மொத்தம் 13 சிறுகதைகளை கொண்ட தொகுப்பாகும். வாசகனின் உணர்ச்சிகளை தட்டிச் செல்லும் படைப்பு மிக உன்னதமானது. அறம் நூலின் ஒவ்வொரு கதையிலும் அத்தன்மை புதைந்துள்ளது. அறம் செய்யும் மனிதர்களை இவ்வுலகம் எவ்வளவு அந்நியமாக்கிவிட்டது என்பதை இக்கதைகள் நமக்கு உணர்த்துகின்றன. இதில் யானை டாக்டர் எனும் சிறுகதை தனித்துவம் வாய்ந்தது. அக்கதை பிற மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டு விழிப்புணர்வுக்காக இலவசமாக விநியோகிக்கப்படுவதாக அறிகிறேன். தமிழ் இலக்கியத்தில் இக்கதைகள் அனைத்தும் மிக முக்கியமான நிகழ்வுகளாகும். அறம் நிகழ்த்திய மனிதர்கள் பலரை நாம் அறியாமல் போனதற்கு காரணம் சமூகத்தின் அறமற்ற நிலைகள் என்பதே உண்மை.
2. என் பெயர் ராமசேஷன் (ஆதவன்)
ஆதவன் படைப்புகள் மீதான பரிச்சையத்தை ஏற்படுத்தியது என் நண்பன் முரளி. அவரிடம் இருந்த தலையணை சைஸ் ஆதவன் சிறுகதை தொகுப்புகளை தான் முதலில் வாசித்திருந்தேன். பாதி புத்தகத்தை தாண்டி இருந்த நன்நாள் ஒன்றில் முரளிக்கு டிரான்ஸ்பர் கிடைக்க புத்தகமும் இனிதே இடம் மாறியது. தொடர்ந்து வாசித்த எஸ்.ராமகிருஸ்ணனின் கதாவிலாசம் நூலில் ஆதவனின் படைப்புகளான காகித மலர்களையும் என் பெயர் ராமசேஷன் நாவலையும் அறிமுகம் செய்து இருந்தார். ராமசேஷன் ஓர் அர்தடாக்ஸ் பிராமண குடும்பத்தில் வந்தவன். நவநாகரீகம், முற்போக்கு சிந்தனை என சில சமகால சமூக வஸ்துகள் தன்னுள் நிறம்பி இருப்பதாக நினைக்கும் கதாபாத்திரம் அவன். தனது வாழ்வில் சந்திக்கும் ஒவ்வொரு மனிதனும் போலியாக வாழ்வதை காண்கிறான். ராமசேஷனை பொருத்தவரை எல்லா மனிதர்களும் முகமூடி அணிந்தே சமூகத்தை அனுகுகிறார்கள். எதனால் இச்சூழ்நிலை என்பதை நகைச்சுவை இழையோட கதை விவரிக்கப்படுகிறது. முற்போக்கு வாதி ராமசேஷன் கடைசியில் கூறும் வாக்கியம் ’என் தங்கையை காதலிப்பவனின் பல்லை உடைப்பேன்’என்பதாக இருக்கும். ராமசேஷனும் முகமூடியோடு தான் இருந்தான் என்பதை அப்பொழுது வாசகனும் உணருகிறான் . பாலகுமாரனும் இந்நூலினை அவசியம் வாசிக்க வேண்டிய புத்தகப்பட்டியலில் முன்மொழிந்துள்ளார்.
1. ஏழாம் உலகம் (ஜெயமோகன்)
புனித தன்மைகள் நிறைந்த கோவிலின் வாசலில் இருக்கிறது நாம் கொஞ்சமும் விரும்பாத ஏழாம் உலகம். படிக்க படிக்க ஓர் ஆச்சரியமான ஆழத்தில் மூழ்கடிக்கும் கதையம்சம். இப்படியும் நடக்கிறதா இன்னமும் நாம் வாழும் சமகால உலகில் என அதிர்ச்சியளிக்கும் நாவல். ஜெயமோகனின் ஏழாம் உலகம் ஒரு மாஸ்டர் பீஸ் என முத்திரை குத்தலாம். வாசகனை இந்த உலகில் இருந்து வேறு ஓர் உலகத்திற்கு தூக்கிச் செல்லும் கதை அமைப்பைக் கொண்ட படைப்பு. இந்த மனிதன் எப்படி தான் இதை எழுதினார் என இன்னமும் வியப்பாகவே உள்ளது. பாலாவின் நான் கடவுள் திரைப்படத்தில் இந்நாவலின் கதையாம்சம் தொட்டு பேசப்பட்டுள்ளது. ஆனால் ஜெயமோகன் இந்நாவலில் நம்மை இட்டுச் செல்லும் உலகத்தோடு ஒப்பிடும் போது நான் கடவுள் வெகு தொலைவில் தான் உள்ளது.
(பி.கு: படித்ததில் நினைவில் நின்ற நூல்களையே இங்கே பட்டியலிட்டுள்ளேன். சில நினைவில் தவறி இருக்கலாம். இவை மட்டுமே கடந்த ஆண்டின் சிறந்த நூல்கள் என குறிப்பிடவில்லை. ஆதலால் தீவிர இலக்கியவாதிகள் பொருத்தருள்வார்களாக. நீங்கள் படித்ததில் பிடித்த நூல்களையும் பட்டியலிடுங்கள் பலரின் வாசிப்பு தளத்தை விரிவுபடுத்த உறுதுணையாக இருக்கும்.)