Tuesday, February 26, 2019

சீனாவின் ஹேஷென் எனும் பழங்குடி மக்கள்

சீனாவின் ஹெய்லோங்ஜியாங் எனும் மாநிலம் ரஷ்யாவை ஒட்டி அமைந்துள்ளது. கடுமையான குளிர் நிலவும் மாநிலங்களில் ஒன்று. ஆண்டு தோறும் வெண்பனி மற்றும் ஐஸ்கட்டி விளக்குகளின் கண்காட்சிகள் இங்கு நடைபெறுகின்றன. யூத தேவாலயங்களையும் கத்தோலிக்க தேவாலயங்களையும் ஆங்காங்கு காண முடிகிறது. 

இரஷ்ய குடியிருப்புகள் இங்கு இருந்துள்ளன. சில குடியிருப்புகள் சுற்றுப் பயணிகளின் பார்வைக்குத் திறந்துவிடப்ப்பட்டுள்ளன. இரஷ்ய வணிக தளங்கள் இன்றும் பிரபலமாக இயங்கி வருகின்றன. இரஷ்யன் சாலை அருகே கணிசமான இரஷ்ய மக்களை காண முடிகிறது. வணிகத்தின் பொருட்டு அடிக்கடி அம்மாநிலத்தின் தலைநகரான ஹார்பினுக்கு வந்து போவதாக கூறுகிறார்கள்.


வணிக நலன் பொருட்டு இங்குள்ள சீனர்களும் இரஷ்ய மொழியை கற்று வைத்திருக்கிறார்கள். டிரான்ஸ் சைபீரியன் தொடர்வண்டி (Trans Siberian Train) பயணங்களின் வழி இங்கு வணிகம் உயிர்த்துள்ளது. ஆறு மாதங்களுக்கு குளிர் நீடிப்பதால் இங்குள்ள ஆறுகளும் குளங்களும் பல அடிகளுக்கு இறுகி விடுகின்றன. நவம்பர் முதல் பிப்ரவரி வரையிலும் கனரக வாகனங்கள் மிக இலகுவாக ஆறு, குளம், ஏறி என அனைத்தின் மீதும் ஓடுகின்றன.

மண் அல்லும் கனரக இயந்திரத்தைக் கொண்டு சொங்ஹூவா (Songhua) ஆற்றின் நெடுகிலும் படிந்திருக்கும் வெண்பணிகளை சேகரிக்கிறார்கள். அதனைக் கொண்டு வெண்பனி சிற்பங்களை செதுக்குகிறார்கள். அதன் அடியின் இருக்கும் ஆற்று நீர் பனி கட்டியாக உறைந்திருக்கும். இயந்திரத்தைக் கொண்டு வடிவாக வெட்டி எடுத்து மற்றொரு பக்கம் கொண்டுச் சென்று பனிக்கட்டி விளக்கு விழாவிற்கு அலங்காரம் செய்கிறார்கள். 

வெண்பனி சிற்பங்கள் பகலில் காண வேண்டியவை. அவை விளக்கொளியில் பிரதிபலிப்பதில்லை. பனிகட்டிகள் நேர்மாறானவை. அந்தியில் பனிக்கட்டிகளுக்குள் இருக்கும் வண்ண விளக்குகள் மாயா ஜால உலகமாக தோற்றமளிக்கிறது. இக்கண்காட்சிகள் உறைந்திருக்கும் குளங்களின் மீது நடத்தப்படுகின்றன. நாம் குளங்களின் மீது லஹிமா சக்தியைப் பிரயோகித்து நடக்கின்றோம் எனும் பிரக்ஞை இல்லாமல் இக்கண்காட்சிகளை குளிரில் நடுங்கி இரசித்து மகிழலாம்.

ஹேஷென் (Hezhen) எனப்படும் சீனாவின் அறுதி சிறுபான்மை இனத்தவர்கள் இம்மாநிலத்தில் வசிக்கிறார்கள். இவர்கள் பழங்குடி மக்களும் கூட. இம்மக்கள் ஹேலோங்ஜியாங்கில் சுமார் 4500 பேரும் இரஷ்யாவில் 10 ஆயிரம் சோச்சம் எண்ணிக்கைகளில் வாழ்வதாகவும் கூறப்படுகிறது. ஹேஷென் மக்கள் ஆற்றின் கரையோரங்களில் தமது குடில்களை அமைத்துக் கொண்டு வசிக்கிறார்கள். நீரும் மீனும் இவர்களின் வாழ்வின் அங்கங்கள். இந்த நீர்நிலைகளை விட்டு அவர்கள் வெகு தூரம் பயணிப்பதில்லை. 

மீன் பிடிப்பது இவர்களின் பிரதான தொழில். வலை, தூண்டில் மற்றும் திரிசூலம் போன்ற ஈட்டிகளை வைத்து மீன் வேட்டையில் ஈடுபடுகிறார்கள். ஆண் பெண் என அனைவரும் மீன் வேட்டை நடத்துகிறார்கள். பாரம்பரியமாக மீன் பிடிக்கும் கலை அவர்களுக்கு கற்றுக் கொடுக்கப்படுகின்றது. 

இப்பிரதேசங்களில் மிகக் குறுகிய கோடை காலமே ஏற்படுகிறது. அவ்வேளைகளில் மீன்களையும், மீன் தோல்களையும் நன்றாக உலர விடுகிறார்கள். மீன் பிடி கருவிகளையும், படகுகளையும் பழுதுபார்த்துக் கொள்கிறார்கள். இளையுதிர் காலத்தில் டாமாஹாயூ (Damahayu) எனும் ஒரு வகை சல்மன் மீன்களை பிடிக்கும் சடங்கு நடைபெறுகின்றது. அது போக ஒரு வகையான கோழி மீன்களையும் (Sturgeon) இலையுதிர் காலத்தில் பிடிக்கிறார்கள். டாமாஹாயூ மீன்களை சமைக்காமல் உண்பது அவர்களின் ஆயுளை நீடிப்பதாக நம்புகிறார்கள். 

ஹேஷென் மக்கள் அவர்களின் வீட்டிற்கு விருந்தினரகா வருபவர்களுக்கு சமைக்காத மீன் இறைச்சியை கொடுப்பார்கள். வாசலில் பச்சை இறைச்சியை வாயருக்கே நீட்டுவார்கள். அதை உண்பவரே ஹேஷென் வீடுகளுக்குள் அனுமதிக்கப்படுவார்கள். புதிதாக பச்சை மீன்களை சாப்பிடுவர்கள் வினிகரை சற்று அதிகமாக சேர்த்துக் கொள்ளலாம். அது மீன் சதையை கொஞ்சம் வெந்த பதத்தில் உண்டு செய்யும். வெள்ளை மற்றும் மால்ட் சேர்க்கப்பட்ட கருப்பு வினிகர் வகைகளையும், உப்பு, பூண்டு, உருலைக் கிழங்குகளோடும் சேர்த்து சாப்பிடுவார்கள். சமைத்த மீன் வகைகள் படகுகளுக்கு ஒப்பானதாக கருதுகிறார்கள். ஆகவே அவற்றை திருப்பிப் போட்டு அடி சதையை பியித்து சாப்பிடுவதில்லை. மீனின் மேல் பக்க சதையை சாப்பிட்டு முடிந்ததும் அடி சதையை குச்சிகளை வைத்து நோண்டி சாப்பிடுவார்கள்.

ஹேஷென் மக்கள் சைபீரியன் ஹஸ்க்கி (Siberian Husky) நாய்களை அதிகம் வளர்க்கிறார்கள். குளிர்காலத்தில் நீர்நிலைகள் உறைந்ததும் இந்த நாய்களே வாகனங்களாக பயன்படுகின்றன. சறுக்கும் படகுகளை இழுக்க இவ்வகை நாய்கள் பயிற்றுவிக்கப்படுகின்றன. நன்கு பழக்கப்படுத்தப்பட்ட ஒரு ஹஸ்க்கி சராசரியாக 40 கிழோ வரையிலான பலுவை இழுத்துச் செல்லும் பலம் கொண்டது. இவ்வகையான சறுக்கும் படகுகளில் சுமார் 12 நாய்கள் வரையினும் கட்டி இழுக்க வைக்கிறார்கள். அது போக, வெள்ளை நிற ஓநாய்களையும் வளர்க்கிறார்கள். இவ்வகை ஓநாய் குட்டிகள் பஞ்சு போன்ற தோலைக் கொண்டுள்ளன. சுற்றுப் பயணிகள் இந்த வெள்ளை ஓநாய் குட்டிகளோடு புகைப்படம் எடுத்துக் கொள்ள பணம் வசூலிக்கிறார்கள்.

இவர்கள் மீன் தோலில் ஆன உடைகளைப் பயன்படுத்துகிறார்கள். இது ஆச்சரியமாக உள்ளது. இதற்கு பெரிய வகை மீன்களை தேர்வு செய்து அதன் தோல் பகுதியை செதுக்கி எடுத்து உலர்த்துகிறார்கள். நன்றாக காய்ந்த தோல்களை ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி இடித்து லேசான பெரிய துணி போல் உருவாக்குகிறார்கள். அதில் வண்ணப் பூக்களின் கலவையைக் கொண்டு பல வகை நிறத்தை தீட்டுகிறார்கள். மீன் தோலில் காலணியையும் உற்பத்தி செய்கிறார்கள். அவை நீடித்த கதகதப்பையும், நீர் புக தன்மை கொண்டது என்றும் கூறப்படுகிறது. மீனின் எலும்புகளில் இருந்து பித்தான்களை உற்பத்தி செய்துக்கொள்கிறார்கள்.

மீன் பிடித்தல் போக சில வேலைகளில் அருகே இருக்கும் மலைகளில் வேட்டைக்குச் செல்கிறார்கள். அதற்கும் சைபீரியன் ஹஸ்க்கி நாய்களை பயன்படுத்துகிறார்கள். காடுகளில் அவை சுமை வண்டிகளை இழுக்கவும் ஓடவும் பழக்கப்படுத்தப்படுகின்றன. சில மான்களையும் இந்த வண்டிகளை இழுக்க பழக்கப்படுத்தி இருக்கிறார்கள். சுற்றுப்பயணிகளின் சுமை வண்டிகளுக்கு மான்களையே அதிகம் பயன்படுத்துகிறார்கள். காட்டில் வேட்டைக்கு கொண்டு செல்லப்படும் ஹஸ்க்கிகளுக்கு காயம் படாமல் இருக்க கால் கவசங்களை அணிவிக்கிறார்கள். 

ஹேஷென் மக்கள் இசை நாட்டம் கொண்டவர்கள் அவர்களின் மொழியில் பாட்டிசைக்கிறார்கள். கொங்காங்ஜி (kong kang ji) எனப்படும் ஒரு வகை வாயிசைக்கருவியை பயன்படுத்துகிறார்கள். சீனா, இரஷ்யா, ஜப்பான் என மூன்று நாடுகளும் மஞ்சூரியாவில் கோர தாண்டவ போர் நடத்திய போது இம்மக்கள் இங்கும் அங்கும் என பல திசைகளில் சிதறிப் போனார்கள். இவர்கள் பேசும் மொழியும் தேசியமயத்தில் கரைந்துக் கொண்டுள்ளது. 

Friday, February 22, 2019

சீனாவின் மோனாலிசா ஓவியம்


Along The River During Pure Brightness Day என்பது சீனாவின் மோனாலிசா ஓவியம் என்றும் அழைக்கப்படுகிறது. Pure Brightness Day என்பதை கல்லறைத் திருநாளாகவும் குறிப்பிடுவார்கள். சீனர்கள் கொண்டாடும் பண்டிகைகளில் ஒன்று. இந்த ஓவியத்தின் வயது சுமார் 930 ஆண்டுகள். பெய்ஜிங் வருவோர் காண விரும்பும் இடங்களில் Forbidden City எனப்படும் அரண்மனையும் அடங்கும். ஒரு நாளில் சுற்றி முடிக்க முடியாத பெரும் கோட்டையான ஃபோர்பிடன் சிட்டியில் இருந்த முக்கிய அம்சங்களில் ஒன்று இந்த 5 மீட்டர் ஓவியம். ஓவியத்தின் உயரம் 25 செண்டிமீட்டர். அந்த அரண்மனையில் வசித்த கடைசி ராஜாவன பூயிக்கு இந்த ஓவியம் மிக பிடித்திருக்க வேண்டும். கூட்டணி நாடுகளின் படையெடுப்பின் சமயம் அரண்மனையை விட்டு போகும் போது இவ்வோவியத்தையும் எடுத்துச் சென்றுவிட்டார். 1945-ஆம் ஆண்டு இவ்வோவியம் மீண்டும் சீன அரசாங்கத்தால் மீட்கப்பட்டது.

இந்த ஓவியத்தில் மிக சொற்பமான சேதமே ஏற்பட்டுள்ளது. (Northern Song  Dynasty) வடக்கு சோங் பேரரசின் (960-1127) Zhang Zeduan எனும் ஓவியரால் மிக நேர்த்தியாக வரையப்பட்ட இந்த ஓவியம் காலம் கடந்த புதையல். இதன் வழி பண்டைய சீன நகரத்தை நம் கண் முன் நிறுத்துகிறார் இக்கலைஞர். இந்த நெடும் ஓவியம் மூன்று பாகங்களை கொண்ட சுருள்களாக இருந்துள்ளது. பியன்ஜிங்கில் (Bianjing) ஒரு பொழுதில் நடக்கும் காட்சிகள் ஓவியமாகப்பட்டுள்ளன. பியன் என்பது நதியின் பெயர், ஜிங் என்பது தலைநகரை குறிக்கும் சொல்.  இந்த இடம் தற்சமயம் கைஃபெங் என பெயரிடப்பட்டுள்ளது. 

நெழிந்து ஓடும் ஆற்றுப் படுகை, அதைக் கடக்க பாலம், படகுகள், புரப்பட தயாராகும் மனிதர்கள், வணிகர்கள், சாமானியர்கள், கல்லறையை சுத்தம் செய்துவிட்டு வரும் மனிதர்கள், விலங்குகள், மத போதகர்கள், யாசகம் கேட்போர், கதை கேட்கும் சிறுவர்கள், குடி போதையில் இருக்கும் இளைஞர்கள், தேநீர் கடையில் அரட்டையடிக்கும் ஆண்கள், குடில்கள் என எக்கச் செக்கமான தகவல்களை எழுதலாம். பிரமிக்க வைக்கும் உயிர் ஓவியம் இது. இதில் மொத்தமாகவே 20 சொச்சம் பெண்கள் வரையப்பட்டுள்ளார்கள். அவர்களில் பெரும்பாலானோர் ஆண் துணையோடு இருக்கிறார்கள். உடை அம்சத்தை கொண்டு அவர்கள் மேட்டுக் குடி பெண்கள் அல்ல என்பதாக குறிப்பிடப்படுகிறது. கொண்டாட்ட நாட்களில் கூட பெண்கள் சுதந்திரமாக வெளியே உலாவ முடியாததை இது மறைமுகமாக காட்டுக்கிறது. 

சுமார் 550 மனிதர்களும் 60 விலங்குகளும் பல பாவனைகளில் காட்டப்பட்டுள்ளது. காலம் யாருக்கும் காத்திருப்பதில்லை. அந்த Bian நதி அடித்துச் செல்வதைப் போலவே மனித வாழ்க்கையை காலம் கொண்டு செல்வதாக அந்த ஓவியம் அமைந்துள்ளது. ஒவ்வொரு காலகட்டத்திலும் சீனாவின் கட்டிட கலைகள் சற்று மாறுபட்டது. இதில் சோங் பேரரசின் வளர்ச்சியையும் கலையம்சங்களையும் காண முடிகிறது.

இதே போன்ற ஓவியத்தை பல்வேறு காலகட்டங்களில் வரைந்துள்ளார்கள். அவை அளவிலும், மக்கள் தொகை, கட்டிட கலை என அந்தந்த கால பேரரசுகளின் அம்சத்தோடு தீட்டப்பட்டுள்ளன. கல்லறை திருநாள் ஓவியம் பல நாடுகளிலும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்த ஓவியம் கலை பொக்கீஷமாக பார்க்கப்படுவதால் அதை மிக பதுகாப்பாக ஒவ்வொரு இடங்களுக்கும் கொண்டுச் செல்கிறார்கள். அதற்கான செலவு சில மில்லியன் டாலர்களை விழுங்குகிறது. சமீபத்தில் இதன் வடிவமைப்பை 3D/4D வடிவமைப்புகளில் அசையும் சித்திரமாக திரையிடுகிறார்கள். சீனாவின் பல மாநிலங்களிலும் கல்லறைத் திருநாள் ஓவியம் நீண்ட சுவர் பகுதிகளில் வடிவமைக்கப்பட்டுள்ளன. சீனர்கள் இந்த ஓவியத்தைக் கொண்டாடும் மன நிலையை அது காட்டுகிறது.

சோங் பேராட்சி சுமார் 160 ஆண்டுகள் நீடித்துள்ளது. அது ஆட்சியை கையில் எடுத்த போது சோழ நாட்டில் ஆதித்த கரிகாலனின் ஆட்சி நடைபெற்று வந்தது. முதலாம் இராஜேந்திர சோழனின் கடார படையெடுப்பின் போதும் சீனாவில் சோங் பேரரசின் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. சோழர்களோடு இவர்களுக்கு வணிக தொடர்பு இருந்துள்ளது. இராஜேந்திரன் ஆட்சியின் 58-ஆண்டுகளுக்கு பின் அரியணை வந்தவர் முதலாம் குலோதுங்க சோழன். இளவரசராக இருந்த சமயம் குலோந்துங்கன் சுமார் மூன்று ஆண்டு காலம் சோங் தேசத்தில் வசித்திருக்கிறார். ஆட்சிக்கு வந்த பின் சுங்கம் தவிர்த சோழனாக வணிகத்தை பாலி, பர்மா, கம்போடியா (முன்காலத்தில் வேறு பெயர்) என பல நாடுகளுக்கு விரிவு செய்திருக்கிறார். சோங் தேசத்தின் வணிக செழிப்பை இவ்வோவியத்தில் இருக்கும் வணிக படகுகளின் வழியும், வரி வசூழ் செய்யும் சுங்க சாவடியின் வழியும் அறிய முடிகிறது.

கலை கலாச்சாரத்தில் வலுத்திருந்தாலும் சோங் பேரரசின் இராணுவம் செழித்த நிலையில் இல்லை. இராணுவத்தை விரிவாக்கும் முயற்சியில் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி கண்டது. வீரர்கள் அதிகம் போராடமல் சரணடைந்தார்கள். Huizong அரசரும் Qinzong இளவரசனும் Jin இராணுவத்தால் சிறையெடுக்கப்பட்டனர். மஞ்சள் நதி பகுதி எதிரிகளால் அபகரிகப்பட்டு சோங் சாம்ராஜியம் முடிவுக்கு வந்தது.

மாற்று அரசியல் கருத்து கொண்டவர்களை மரண தண்டனைக்கு உற்படுத்துவதையும் சோங் பேரரசு தவிர்தது. சீன வரலாற்றில் அரசியல் மரண தண்டனை விதிக்காத ஒரே பேரரசும் இதுவே ஆகும்.

இந்த ஓவியத்தில் உள்ள இடங்களை இன்றும் காணலாம். மேம்பாடு கண்டிருப்பினும் சில புராதன இடங்கள் காலத்தை கடந்து நிற்கின்றன.

Wednesday, February 20, 2019

I AM SUN MU - ஒரு வட கொரிய அகதியின் ஓவியக் கலை


உலகின் தனிமைப் படுத்தப்பட்ட நாடாக அறியப்படுவது வட கொரியா ஆகும். அந்த நாட்டை வட கொரியா என அடையாளப் படுத்துவதைக் கூட அவர்கள் விரும்புவதில்லை. கொரிய ஜனநாயக மக்கள் குடியரசு (Democratic Peoples Republic of Korea) எனக் குறிப்பிடும்படியே கேட்டுக் கொள்கிறார்கள். இந்த சொல் பிரயோகம் குறிந்து தென் கொரிய மக்களுக்கு மிகுந்த கருத்து முரண்பாடு உண்டு. தீவிர கம்யூனிசத்தை பின்பற்றுவதாக கூறிக்கொள்ளும் நாடு எதற்காக இப்படி ஒரு பெயரை வைத்துக் கொள்ள வேண்டும் என்பதாக கேள்வியை முன் வைக்கிறார்கள்.

நான் சுன் மூ (I AM SUN MU) எனும் ஆவணப் படம் வட கொரிய அகதி ஒருவரின் கலையை படம் பிடித்துக் காட்டுகிறது. இதில் சுன் மூ யார் என்பதை நாம் கடைசி வரை அடையாளம் காண முடியவில்லை. தனது அடையாளத்தை வெளிக்காட்டும் பட்சத்தில் இன்னமும் வட கொரியாவில் வசிக்கும் தனது குடும்ப உறுப்பினர்களுக்கு ஆபத்தாக கூடும் என குறிப்பிடுகிறார். அதனால் படம் முழுக்க அவரின் முகம் காட்டப்படவில்லை. இந்த டாக்குமெண்டரி மொத்தமும் சுன் மூவின் கலை படைப்பை பற்றி பேசுகிறது. அவர் வாழ்வில் நடந்த சம்பவங்கள் ஓவியத்தின் ஊடாக பல கதைகளை நமக்குச் சொல்கின்றன. 

இந்த டாக்குமெண்டரி தென் கொரியாவில் தொடங்குகிறது. வட கொரியாவில் வசிக்கும் பாட்டி ஏன் தன்னை வந்து பார்ப்பதில்லை என சுன் மூவின் குழந்தைகள் கேட்கிறார்கள். பாட்டிக்கு கடிதங்களை எழுதுகிறார்கள் அந்த குழந்தைகள். அது நிச்சயமாக சென்றடையாத கடிதங்கள் எனினும் குழந்தகள் கடிதம் எழுதுவதை சுன் மூ தடுக்கவில்லை. இரு குழந்தகளுக்கு முன் இருக்கும் முள் வேளியாக அச்சம்பவம் ஓவியமாகிறது. வட - தென் கொரியாவின் பிரிந்த குடும்பங்களை பற்றியும் அது பேசுகிறது. கையில் சென்றடையாத கடிதத்தோடு இருக்கும் ஓவியம் இரு நாடுகளுக்கிடையே இருக்கும் பேசிக் கொள்ள முடியாத குடும்ப உறவின் வலிகளை நமக்குச் சொல்கிறது.

வட கொரியாவின் அண்ணன் தேசமாக இருப்பது சீனா. அப்படி இருக்க பெய்ஜிங்கை தனது ஓவிய கண்காட்சிக்கு தேர்ந்தெடுத்தது ஏன் என்பது கேள்விக்குறியாகிறது. ஓவிய கண்காட்சியை ஒருங்கிணைக்கும் சுன் மூவின் சீன நண்பர் அதில் இருக்கும் ஆபத்துகளை உணர்ந்தே கையில் எடுத்திருக்கிறார்.

“சீனாவில் ஏராளமான வட கொரிய ஓவியர்கள் இருக்கிறார்கள். அவர்கள் வட கொரியாவின் அரசியல் பிரச்சார ஓவியங்களை மட்டுமே வரைகிறார்கள். அது 1970-களின் சீனாவின் கலாச்சார புரட்சியின் போது வரையபட்ட ஓவியங்களை போலவே உள்ளன. சுன் மூவின் ஓவியங்கள் வேறு ஒரு தளத்தை பேசுகின்றன. அது சீனாவின் பரவலாக அறியப்பட வேண்டும் என விரும்புகிறேன்.” எனக் கூறுகிறார். 1989-ஆம் ஆண்டு தியான்மென் சதுக்கத்தின் முன் நடந்த மாணவர் போராட்ட மரணங்களை நினைவு கூர்ந்து உணர்ச்சிவச படுகிறார்.

கவன ஈர்ப்புக்காகவும் இதைச் செய்திருக்கக் கூடும். இன்றய நிலையில் சுன் மூ ஓவியங்களின் விலை 20 ஆயிரம் டாலர் வரையினும் எட்டி உள்ளன. டைம்ஸ் இதழில் சுன் மூவின் ஓவியங்கள் இடம் பெற்றுள்ளன. சிட்னி, அம்ஸ்தெர்டம், நியூ யார்க், பெர்லின் என பல இடங்களின் இவரின் ஓவியக் கண்காட்சி இடம் பெற்றுள்ளன. 

கண்காட்சியின் சில வாரங்களுக்கு முன் பெய்ஜிங்கின் புறநகர் பகுதியில் தமது ஓவிய வேலையில் ஈடுபடுகிறார் சுன் மூ. அவருக்கு தெரிந்த வட கொரிய அகதிகள் சுன் மூவை தொடர்பு கொண்டு அவரின் ஆபத்தான வேலையை கேள்வி கேட்கிறார்கள். சுன் மூ தன்னை நேரடியாக அடையாளப்படுத்திக் கொள்ள போவதில்லை எனக் கூறுகிறார். இருந்தும் பெய்ஜிங்கில் அவர் பிடிபடுவதற்கான வாய்ப்புகள் மிக பிரகாசமாக இருந்தன.

நீங்கள் வரைவது சமகால அரசியலை பேசும் ஓவியங்களா எனும் கேள்வியை கேட்கிறார்கள். நீங்கள் கூறும் பதத்தின் தெளிவு எனக்கில்லை. எனது நினைவில் இருக்கும் சம்பங்களின் கோர்வைகளாக இந்த ஓவியங்கள் வெளிபடுகின்றன என விளக்குகிறார். இந்த ஓவிய வேலைபாடுகளின் பேதே பல சம்பங்களை நம்மோடு பகிர்ந்துக் கொள்கிறார் சுன் மூ.

”நீங்கள் வட கொரியாவில் இருக்கும் போது உங்கள் கற்பனை வளத்தைக் கட்டிப் போட்ட தடைகள் இருந்துள்ளனவா?”

”ஓவியங்களுக்கான தடைகள் இருந்துள்ளன. பெண்களை உடையின்றி வரைய கூடாது. அது போக எமது அரசியல் தலைவர்களை வரைய கூடாது. அது அவமாரியாதையான செயல். ஒரு முறை கிம் தலைவரின் ஓவியத்தை வரைந்துப் பார்தேன். அரசு ஓவியர்களை விட மிகச் சிறப்பாக வரைந்திருந்தேன். யார் கண்ணிலும் படாமல் அதன் ஈரம் காய்வதற்குள் எரிந்துவிட்டேன்.”

வட கொரிய மக்கள் அனைவருமே கட்டாய இராணுவ சேவையில் ஈடுபட வேண்டும். சுன் மூ இராணுவ சேவைக்குச் செல்லும் போது, “உனக்கு எழுத அல்லது ஓவியம் தீட்டும் திறமை உள்ளதா?” எனக் கேட்கிறார்கள். தன்னால் சிறப்பாக ஓவியம் தீட்ட முடியும் எனக் கூறுகிறார் சுன் மூ. அவரை பரிசோதித்து திருப்தியானவுடன் வட கொரிய அரசியல் பிரச்சார ஓவியங்களை தீட்டும் பணிக்கு நியமித்தார்கள். வட கொரிய இராணுவம் நன்றாக எழுதுவோரையும் ஓவியம் தீட்டுவோரையும் அரைவணைத்துக் கொள்வதாக கூறுகிறார் சுன் மூ.

மூன்று நாடுகளைக் கடந்து ஓடுகிறது டூமன் ஆறு (Duman River). இதுவே வட கொரியா, சீனா மற்றும் ரஷ்யா என மூன்று நாடுகளின் எல்லையை பிரித்துக் காட்டுகிறது. ஒரு மலை முகட்டில் ஏறி இந்த ஆற்றைப் பார்க்கிறார் சுன் மூ. மனதில் ஓர் உந்துதல். ஆற்றில் இறங்கி நீச்சல் அடித்து கடந்து சீனவிற்குள் நுழைந்துவிடுகிறார். இதைக் கூறும் போது ஓவியங்கள் வழியே பேசுகிறார். அந்த ஓவியத்தில் சாங் பாய் (Chang Bai) எனும் இடமும் வேறு சில சீன மாநிலங்களும் பிற நாடுகளும் தீட்டப்பட்டுள்ள. சாங் பாய் மிக இரம்யமான மலை. அங்கே இருக்கும் ஆற்றை நிச்சயமாக குளிர் காலத்தில் கடந்து இருக்க முடியாது. அவர் தப்பி ஓடி இருப்பது நிச்சயமாக ஒரு திட்டமிட்ட செயல் தான்.

சீனாவிற்குள் நுழைந்த பின் தென் கொரியா போக நினைக்கிறார். அதற்காக அவர் மேற்கொள்ளும் பயணம் மிக தூரம். Kunming வழியாக லாவோஸ் போகிறார், அங்கிருந்து மியன்மார் சென்று தாய்லாந்தில் நுழைந்து பேங்காக்கில் சேர்கிறார். பேங்காக்கில் இருந்து தென் கொரியா சென்றடைந்த மாயத்தை நமக்கு விளக்கவில்லை. அது அரசியல் தஞ்சமடையும் வழியாகவோ அல்லது போலி கடப்பிதழ் வழியாகவோ கூட இருக்கலாம். 

சுன் மூவின் ஓவியங்கள் வரைந்து முடிந்த பின் நாளிதழில் செய்தி கொடுக்கிறார்கள். கண்காட்சிக்கு பலரும் வர வேண்டும் என்பதற்காகவே அதை விளம்பரம் செய்கிறார்கள். சுன் மூ ஒரு மாபெரும் கால் துடைப்பானை ஓவியமாக தீட்டுகிறார். அதில் கிம் தலைவர்களின் பெயர்கள் உள்ளன. “இங்கே ஏகபட்ட வட கொரிய அரசியலை பிரச்சங்கம் செய்வோரும், தூதரக அதிகாரிகளும் வசிக்கிறார்கள். அவர்கள் நிச்சயமாக தங்கள் கால்களை சுத்தம் செய்து கொண்ட பின் தான் இந்த ஓவியக் கண்காட்சிக்குள் நுழைய வேண்டும்” என நையாண்டி செய்கிறார்.

இறுதியாக என்ன ஆனது? சுன் மூவின் ஓவியக் கண்காட்சி நடைபெறவில்லை. வட கொரிய தேச பக்தர்கள் காட்சி கூடத்தின் முன் கூடிவிடுகிறார்கள். போலிஸ் அனைத்து ஓவியங்களையும் அபகரித்துவிடுகிறார்கள். நிகழ்ச்சி ஏற்பாட்டாளரை விசாரனை செய்கிறார்கள். சுன் மூ தான் கூறியது போலவே நிகழ்ச்சிக்கு செல்லவில்லை. தன்னை யார் முன்னிலையிலும் அடையாளப்படுதிக் கொள்ளவிலை. அவர் மீண்டும் தென் கொரியா திரும்பும் போது இமிகிரேஷனில் பிரச்சனை ஏற்படுமோ என பயப்படுகிறார். அப்படி ஏதும் ஆகாமல் நல்லபடியாக சியோல் வந்தடைகிறார். 

சிந்தனையாளர்கள் ஓர் அரசாட்சியின் பரிபாலனத்துக்கு இனங்கி இருக்கும் பட்சத்தில் அல்லது அதன் சித்தாந்தங்களை கேள்வி கேட்காத வரையில் அவர்களுக்கு கேடு விளைவதில்லை. அதுவே ஒரு படைப்பாளியின் சித்தனை அரசாட்சியை கேள்விக்கு உட்படுத்தும் போது அரசு இயந்திரம் நிச்சயமாக அதனை பொருத்துக் கொள்வதில்லை. அது எவ்வளவு சுதந்திரம் மிகுந்த மக்களாட்சி நாடாக இருந்தாலும் சரி அந்த படைப்பாளியை ஒரு குற்றவாளியென்றே சாடும். சிந்தனையின் வெளிபாடுகளுக்கு தடை விதிக்க முடியும். சிந்திப்பதை அல்ல.

சுன் மூவின் ஓவியங்களை http://sunmuart.com/artworks/ தளத்தில் காண முடிகிறது.

தொடர்புடைய செய்திகள்:

Tuesday, February 19, 2019

The Art of War- சான் ட்சுவின் போர்க் கலை

The Art of War (போர்க் கலை) பண்டைய சீனாவின் மிக முக்கியமாக நூல்களில் ஒன்று. இந்நூலை தோற்றுவித்தவர் Sanzi எனும் போர்க் கலை நிபுணர். சான்ட்சு வாழ்ந்த காலகட்டம் கி.மு544 முதல் கி.மு496 வரை. இக்காலகட்டத்தை சீனாவின் Spring and Autumn period எனக் குறிப்பிடுகிறார்கள். சான்ட்சு போர் முறைகளை மட்டும் இன்றி பல வாழ்வியல் தத்துவங்களையும் அந்நூலில் கூறுகிறார். போரின்றி வெற்றி காண்பதே சிறந்த போர் முறை வெற்றியாக சான்ட்சு கூறுகிறார். தற்போது சீனா மும்முரமாக செயல்பட்டு வரும் Belt and Road Initiative (BRI) மாபெரும் திட்டமும் இந்த போர்க் கலை நூலின் ஓர் அம்சமென கூறும் கருத்துக் கணிப்புகள் உண்டு.

சீன போர் முறைகளில் வில் எய்தல் பெரும்பாங்காற்றியுள்ளது. சீனப் பெருச்சுவர்களில் தொடர்ச்சியான அம்பெய்யும் துளைகளை காண முடியும். கோட்டை மதில்களும் காவற்கோபுரங்களும் வில் பாயும் தூரத்தை கணக்கில் கொண்டு அமைக்கப்பட்டுள்ளன. வில் எய்யும் இராணுவ படையினர் தன் கொண்டையை இடப்பக்கம் முடிந்து கட்டி இருப்பார்கள் அது முதுகின் பின் இருக்கும் அம்புகளை எடுக்க எளிதாக அமையும். சீன பேரரசு காலத்தில் அரசு தேர்வில் தேர்ச்சி பெறவும் வில் வித்தை கற்றிருக்க வேண்டும். இது வில் முறை பற்றிய சிறு தகவலே.

The Art of War வில் வித்தையை மட்டும் கற்பிக்க வில்லை. அந்நூல் போர் வியூகங்களை 13 பகுதிகளாக நமக்கு விளக்குகிறது. இந்த நூல் 8-ஆம் நூற்றாண்டில் ஜப்பானிய மொழியிலும் 18-ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவிலும் மொழிபெயர்க்கப்பட்டது. இது வரை 29 மொழிகளில் இந்நூல் வெளியாகி உலக மக்களால் வாசிக்கப்பட்டுள்ளது. உறுதியான இராணுவ அமைப்பு நாட்டின் பலம். நமது நிலையின் தெளிவும், எதிரி பற்றிய தெளிவும் போர் வெற்றியின் திறவுகோல் என்கிறார் சான்ட்சு.

சான்ட்சு போர் தளபதியாகவும், போர் வீயூக நிபுணரகவும் பணியாற்றி இருக்கிறார். இருந்தும் சான்சு ஒருவரால் மட்டும் இப்படிப்பட்ட போர் கலைக்களஞ்சியத்தை உருவாக்கியிருக்க முடியாது என்பது ஆய்வாளர்களின் கருத்து. பல வெறு காலகட்டங்களிலும் சூழ்நிலைகளிலும் அமைக்கப்ப்ட்ட வீயூகங்களை சான்சு தொகுத்து அமைத்ததாகவும் தகவல் உண்டு. ஆனால் இந்த போர் களஞ்சியம் அமைந்ததில் சான்சுவின் பெரும் பங்கை யாரும் மறுக்கவில்லை.

Tuesday, February 12, 2019

Kingdom (2019) Korean - கிங்டோம்

நெட்பிலிக்ஸில் கிங்டோம் தொடரை கண்டு இரசித்தேன். காண்போரின் இதயத்தை பதற வைத்திருக்கிறார்கள். முதல் சீசனில் 6 அத்தியாயங்கள் வெளியிடப்பட்டுள்ளன. Train to Busan-னில் கிடைத்த அதே பதைபதைப்பை இதில் உணர்வீர்கள். 

கிங்டோம்- அரசியல் என்பது என்ன. அரசியலில் நிகழும் குழப்பம் இராஜியத்தில் இருக்கும் மக்களை எப்படி பாதிக்கிறது என்பதாக அமைந்துள்ளது. இராஜியத்தில் இருக்கும் எதிர் துருவங்களான இரு பலம் பொருந்த்திய நபர்கள் நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் ஏற்படுத்தும் தாக்கத்தை இக்கதை விளக்குகிறது.

ஹன்யாங்கில் (இன்றய சியோல்) இருக்கும் அரண்மனைக்கு நாட்டின் பிரபல வைத்தியர் வருகிறார். அரசருக்கு சின்ன அம்மை நோய் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சிகிச்சைக்கான மூலிகையைக் கொடுக்கும் போது வைத்தியரின் உதவியாளர் அரச சோம்பியால் தாக்கப்படுகிறார். காயம்பட்ட உதவியாளரோடு வைத்திய சாலை திரும்புகிறார். உதவியாளரை புதைக்க உத்தரவிடுகிறார். நாட்டில் பசியும் பட்டினியும் வாட்டுவதால் அந்த உதவியாளரை புதைக்காமல் சமையல் செய்து நோயாளிகளுக்கு உணவளித்துவிடுகிறார் மற்றுமொரு உதவியாளர். சோம்பிக்களின் அசூரத் தாக்குதல் நாடு முழுக்க வேகமாக பரவ ஆரம்பிக்கிறது. 

இப்படி இருக்க மறுபக்கம், அரசர் இறந்துவிட்டதாக நாடு முழுவதும் சுவரொட்டிகளை விநியோகித்து விடுகிறார்கள். அக்காரியத்தை செய்தது யார் என தெரியவில்லை. தனது தந்தையை நலம் விசாரிக்க வரும் பட்டத்து இளவரசர் தடுத்து நிறுத்தப்படுகிறார். அதனால் இரவில் யாருக்கும் தெரியாமல் மறைந்திருந்து வந்து பார்க்கிறார். அரசர் படுக்கை அறையில் ஒரு சோம்பி உருவத்தைக் காண்டு திடுக்கிடுகிறார். இருந்தும் அனைத்து இரகசியங்களும் மறைக்கப்படுகின்றன. இளவரசர் அரச துரோகத்திற்காக குற்றம் சாட்டப்படுகிறார். 

உண்மையை கண்டு பிடிக்கும் பொருட்டு அரண்மனையில் இருந்து வெளியாகிறார் இளவரசர். அரசு தரப்பும், சோம்பிக்களும் அவரை துரத்துகின்றன. இளவரசர் யாவரின் பழியாவர், நாட்டின் நிலையை எப்படி சீர் செய்யப் போகிறார் என்பதுமாக கதை நகர்கிறது. 

இந்த முதல் சீசன் பல கேள்விகளுக்கு விடையளிக்காமலேயே முடிந்துள்ளது. ஒவ்வொரு அத்தியாயத்திலும் பல புதிய முடிச்சுகளை போட்டுக் கொண்டே சென்றுள்ளனர். முடித்திருக்கும் விதமும் அபாரமான திருப்பம்.

சியோலுக்கு பயணம் செய்தால் அதன் அரண்மனைக்கு முன் இன்றும் அணிவகுப்பை நடத்தும் இராணுவ வீரர்களை காணலாம். அவர்களின் உடை, இசை, அணிவகுப்பு என அனைத்தும் பண்டைய குறிப்புகளில் இருந்து எடுக்கப்பட்டவை. கிங்டோம் சீரிஸில் காட்சி அமைப்புகளுக்குள் நாம் நடந்து சொன்று அருகிள் இருந்து காண்பதைப் போல் உள்ளது. அவ்வளவு நேர்த்தியான காட்சிகள்.

கொரிய மக்கள் இன்று ’அங்குல்’ எனும் எழுத்து முறையை பின்பற்றுகிறார்கள். முன் காலத்தில் சீன எழுத்து வடிவமே எங்கும் வியாப்பித்து இருந்தன. புரதான சின்னங்களில் சீன எழுத்துகளையே காண முடியும். அதே போல் டிரேகன் அரச சின்னமாகவும் இருந்தது. கிங்டோமில் காட்டப்படும் கொரிய நாட்டின் புராதன பெயர் ஜோசியோன் ஆகும். 

இதன் இரண்டாம் சீரிஸை தயாரிக்கப் போவதாக அறிவித்து இருக்கிறார்கள். படபிடிப்புகள் முடிந்து வெளியீடு காண எப்படியும் ஓர் ஆண்டு காலம் ஆகக் கூடும். நாகரீக உலகின் சோம்பிகளை விட பண்டை காலத்து சோம்பிகள் காண்போரை அலரவிடுகின்றன. 

-முற்றும்-

Monday, February 11, 2019

இந்தப் பொருட்களை சீனர்கள் பயன்படுத்தக் கூடாது


சீனப் பேரரசுகளின் ஆட்சி காலத்தில் பல பொருட்களை மக்கள் பயன்படுத்தக் கூடாது. அதில் முக்கியமாக 9 வகையான மிருக சின்னங்களும் அடங்கும். அப்படியான பொருட்கள் அரச குடும்பத்தினர் மட்டுமே பயன்படுத்த முடியும். அரச மரபில் அந்த 9 வகையான மிருகங்கள் சுவர்கத்தின் பிள்ளைகளாக கருதப்பட்டன. அரசனும் சுவர்கத்தின் பிள்ளை என கருதப்பட்டது கூடுதல் தகவல். சரி, அந்த மிருகங்கள் யாவை எனப் பார்த்தால் டிராகன், ஃபினிக்ஸ் பறவை, ஆமை, புலி, ஒரு ஜோடி க்ரேன் பறவை, ஒரு ஜோடி சிங்கம், ஒற்றைக் கொம்பு குதிரை என இதன் பட்டியல் செல்கிறது. தெய்வீக மிருகங்கள் என்பதால் இம்மிருகங்களின் சின்னம் பொறித்த பொருட்களை மக்கள் பயன்படுத்த மாட்டார்கள். அச்சமும் கொண்டார்கள். இம்மிருகங்களுக்கு அதீத சக்தி இருப்பதாகக் கருதினார்கள்.

1899-ல் சீனாவின் Xiaotun எனும் பகுதியில் நடந்த ஒரு சம்பவம். அங்குள்ள விவசாய நிலத்தில் சில எழும்புகளும் ஓடுகளும் கிடைத்தன. அவை சகல நோய் நிவாரனியான டிராகன் எழும்புகளெனக் கருதினார்கள். அவற்றை மறைமுகமாக தரகர்களிடமும், தரகர்கள் அவற்றை வைத்தியச் சாலையிலும் விற்றுவிடுகிறார்கள். அச்சமயம் Wang Yirong எனும் கல்வெட்டு நிபுணருக்கு கடுமையான மலேரியா காய்சல் ஏற்பட்டிருந்தது. சிகிச்சைக்காக எழும்புகளை வாங்கிய அவர் அற்றில் ஓவியம் போன்ற வடிவங்களை கண்டார். பரிசோதனையில் அவை பண்டைய சீன எழுத்து வடிவங்கள் என்பதை கண்டறிந்தார்.

மேலும் சில நிபுணர்களோடு அந்த எழும்புகள் கிடைத்த தடையத்தை தேடினார். தரகர்கள் பொய் உரைத்தார்கள். அவை ஹெனான் எனும் பகுதில் கிடைத்தகாத கூறினார்கள். வாங் யீரோங் அதிக விலை கொடுத்து சித்திர எழுத்துகள் கொண்ட பல எழும்புகளை வாங்கினார். Luo Zhenyu எனும் அவரின் நண்பர் சில பல முயற்சிகளுக்குப் பின் அவை கிடைத்த இடத்தைக் கண்டறிந்தார். அந்த இடம் Yin Ruins. ஆராய்சியில் அவை ஷாங்க் பேரரசு காலத்திலான குறிப்புகள் செதுக்கப்பட்ட எழும்புகள் என அறியப்பட்டது.

ஷாங்க் பேரரசு மிக தொன்மையான அரசாகும். கி.மு 14-ஆம் நூற்றாண்டில் ஆட்சி செய்த அரசு. உலகின் மறு பக்கத்தில் அப்போது தான் யூத மதத்தை தோற்றுவித்த மோசஸ் (கி.மு 1400) பிறந்திருக்கிறார். சீனா எனும் பொரும் தேசத்தை இணைத்த சின் அரசனும் பிறந்திருக்கவில்லை. அந்த எழும்புகளில் கிடைத்த குறிப்புகள் அரசர்களின் பெயர் ஆட்சியமைப்பு முறை என்பன அடங்கியதாக இருந்த்து. அவற்றில் பல எழுத்துகள் வாசிக்கக் கூடியதாக இருந்தது. அந்த குறிப்புகள் சிமா ஜியனின் குறிப்புகளோடு ஒன்றி அமைந்தன. (சிமா ஜியன் யார் என்பதை தனி பதிவில் எழுதுகிறேன்.)

பாக்சர் பிரச்சனையால் ஆராய்ச்சி முடிவுகளுக்கு முன் வாங் யீரோங் போருக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. அச்சமயம் 8 கூட்டணி நாடுகள் சீனாவின் மீது போர் தொடுத்திருந்தன. சீனா போரில் தோல்வி கண்டது. வாங் யீரோங் தன் குடும்பத்தோடு தற்கொலை செய்து கொண்டார். அதன் பின் ஜப்பானுடனான போரில் மீண்டும் Yin Ruins நாசம் செய்யப்பட்டது. 1949க்கு பிறகே சீன அரசால் அங்கே முழு ஆராய்ச்சியில் ஈடுபட முடிந்தது.

3300 ஆண்டு பழமை கொண்ட Yin Ruins சீன வரலாற்றில் இன்றியமையாதது. 30 சதுர கிலோமீட்டர் அளவைக் கொண்ட அப்பகுதியில் சுமார் 1.6 மில்லியன் சித்திர எழுத்துகளைக் கண்டு பிடித்தார்கள். அது போக மேலும் பல பொருட்களும் உட்படும். ஆமை ஓட்டிலும், அகலமான எழும்புகளின் மீதும் செதுக்கப்பட்டதால் அவ்வெழுத்துகள் அழியாமல் காலத்தை வென்று நமக்குக் காண கிடைத்துள்ளன.

Wednesday, February 06, 2019

Tumbbad (2018) - பேராசை எனும் பெரும் பசி

தம்பட் திரைப்படம் பார்த்தேன். ஒரு தாமத பார்வையாகவே இங்கு எழுதுகிறேன். நேர்த்தியான காட்சி அமைப்புகளால் பிரமிக்க வைத்திருக்கிறார்கள். மூன்று அத்தியாயங்களாக இத்திரைப்படத்தை எடுத்திருக்கிறார்கள். முதல் இரு அத்தியாயங்கள் பிரிட்டிஷ் இந்தியா காலத்திலும் மூன்றாம் அத்தியாயம் சுதந்திர இந்தியா காலத்திலும் நடைபெறுகிறது. மிக எளிமையான கதை களம் என்றாலும் ஆழமாகவும் மிரட்டியும் சொல்லி இருக்கிறார்கள். 

தம்பட் என்பது ஒரு கிராமத்தின் பெயர். இங்கு தொடர்ந்து மழை பெய்து கொண்டே இருக்கிறது. மழையின் காரணம் ஒரு சாபம். சாபத்திற்கு பின்னணியில் உள்ளது ஹஸ்தர் எனும் ஒரு கடவுளின் குழந்தை. இந்த ஹஸ்தரின் கதையை படத்தின் ஆரம்பத்தில் சில வரிகளில் சொல்லிவிடுகிறார்கள் என்பதால் நான் இங்கு குறிபிடுவது பாதகமில்லை. இந்த ஹஸ்தர் தான் நமக்குள் ஒழிந்து இருக்கும் பேராசை. அது நம்மை விழுங்கக் காத்திருக்கும் பெரும் பசி கொண்ட மிருகமாகும். 

பூர்த்தி தேவி பல கோடி கடவுள் பிள்ளைகளை பெற்று எடுக்கிறாள். அதில் ஹஸ்தர் மூத்த பிள்ளை. ஹஸ்தர் தருதலை பிள்ளை மட்டும் அல்ல அனைத்து செல்வங்களையும் தனதாக்கிக் கொள்ள விளையும் பேராசைகாரனும் கூட. அதில் தானிய செல்வத்தில் கை வைக்கும் போது பொரும் சகோதர போர் ஏற்பட்டு ஹஸ்தரை துவம்சம் செய்கிறார்கள் மற்ற கடவுள்கள். ஹஸ்தரை பூர்த்தி தேவி காப்பாற்றி வயிற்றில் வைத்துக் கொள்கிறாள். இருந்தும் ஹஸ்தரை யாரும் வழிபடாமலும், கேவில் இல்லாமல், அறியபடாத கடவுளாக இருக்க சாபம் அடைகிறான். ஹஸ்தரை யாரும் கேள்விபட்டதில்லை. உலக கடவுளர்கள் வரிசையில் ஹஸ்தரின் பெயர் விடுபடுகிறது. 

ஹஸ்தரின் சாபம் பிறரின் இலாபம் என்பதாக தம்பட் வாழ் குடும்பம் நம்புகிறது. ஹஸ்தருக்கு கோவில் கட்டி வழிபட ஆரம்பித்ததால் மற்ற கடவுள்களால் சபிக்கப்பட்டு தம்பட் எங்கும் அடைமழை பெய்து கொண்டே இருக்கிறது. இந்த விளக்கங்களுக்குப் பின் காட்சிகள் விரிகின்றன. 

தம்பட் மாயாஜால வகையைச் சேர்ந்த கதையாக இருந்தாலும் மூட நம்பிக்கைகளை விதைக்காமல் சிறுவர்கள் கதை போல் அமைந்துள்ளது. இது சிறுவர்கள் காண வேண்டிய படமா என்றாலும் மிக சொற்பமான சில காட்சிகள் முகம் சுளிக்கச் செய்யகூடும். இதில் நடித்திருக்கும் சிறுவர் கதாபாத்திரங்கள் மிக சிறப்பாக நடிந்திருக்கிறார்கள். 

இந்தக் கதை களம் பிராமண குடும்பத்தைச் சுற்றி நடக்கிறது. பிரிட்டிஷ் காலத்தில் பிராமணர்கள் நல்ல சலுகைகளோடு இருந்த போதிலும் இந்து மத விவகாரங்களில் வெள்ளையர்கள் கை வைத்தது அவர்களிடையே சிறு கசப்பை ஏற்படுத்தியது. அது போன்ற கலாச்சார மாறுதல்களை மிக வழிந்து திணிக்காமல் கதை போக்கில் காட்சிபடுத்தி இருக்கிறார்கள். முக்கியமாக 'சாத்தி' எனும் உடன்கட்டை ஏறும் வழக்கமும். விதவைகளை மொட்டையட்டிக்கும் வழக்கமும் பிரிட்டிஷ் ஆட்சியின் பின் தளர்ந்து போனதை காட்சி படுத்தி இருப்பது அருமை. 

அது போக அந்நாளைய கட்டிடங்கள், வாழ்விடங்கள், வாகனங்கள், உடை என கொஞ்சமும் குறை சொல்ல முடியாத வடிவமைப்புகள் நம் கண்களை மிரண்டு போகச் செய்கின்றன. கதையின் நாயகன் விநாயக். விநாயக்கின் அம்மா ஒரு விதவை. அவள் ஒரு கிழவனுக்கு பணிவிடை செய்து வருகிறாள். இந்த கிழவன் யார் என்றாள் விநாயக்கின் அப்பா. இதே நிலை விநாயக்கின் காலகட்டத்திலும் ஏற்படுகிறது. இது போன்ற அந்நாளய சமூக அமைப்புகளையும் உறவுகளையும் தெரிந்து கொள்ளும் பட்சத்தில் இத்திரைக் கதைக்கான உழப்பையும் நாம் உணர முடிகிறது. அக்காலத்தில் நிகழ்ந்த மனித உரிமை மீறல்களையும், பெண் அடிமைத் தனங்களையும் சில வசன வரிகளில் உணர்த்துகிறார்கள். 

தேவை உள்ளவர்களுக்கு இந்த உலகம் போதுமானதாக அமைகிறது. பேராசைகாரர்களுக்கு அல்ல எனும் காந்தியின் பொன்மொழி இந்தப் படத்தின் ஆரம்பத்தில் எழுதப்பட்டுள்ளது. விநாயக் தன் தேவைகளுக்காக ஹஸ்தரிடம் இருந்து தங்க காசுகளை எடுக்கும் போது அவன் நிம்மதியாக வாழ்ந்து வருகிறான். பேராசை என்பது ஒற்றைத் தீனியால் தீர்ந்து போவதல்ல. விருட்சத்தின் கிளைகளென அது படர்ந்துக் கொண்டே உள்ளது. அதற்கான தீனியை மனிதனால் உணவளித்து மாள முடியாது. பேராசை எனும் ஹஸ்தர் பல்கி பெருகும் போது அது இன்னலை கொடுக்கிறது. 

மூன்று நான்கு தலைமுறைகளுக்கு முன் இருந்த ஆணாதிக்க ஹிட்லர் அப்பாகள் நடந்து கொள்ளும் விதம். குடும்ப சூழலில் அவர்கள் எப்படி அதிகாரம் செலுத்துகிறார். அதற்கு அடுத்த தலைமுறையில் இருக்கும் ஆண் வாரிசு அதை எப்படியாக பின்பற்றி தொடர்கிறான் என இன்னும் நிறைய விசயங்கள் செல்லமாக வளர்க்கப்பட்ட இந்த 90ஸ் கிட்சுகளுக்கும் 2கே கிட்சுகளுக்கும் புரியாமல் போகும் சாத்தியம் அதிகம். 

இந்த படம் பார்த்து முடித்து தேடிய தகவலின் படி இக்கதையின் சாரம் ஒரு மாராத்திய கதையில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. 1993-ல் கேட்ட இக்கதையை 1997-ல் திரைக்கதையாக அமைத்து தயாரிப்பாளர்கள் கிடைக்காமல் சிரமப்பட்டுள்ளனர். 2012-ல் படப்பிடிப்பை தொடங்கி சிறுகச் சிறுகச் செதுக்கி இருக்கிறார்கள். 5 கோடி ரூபாய் செலவில் எடுக்கப்பட்ட இத்திரைப்படம் 13 கோடி இலாபத்தை ஈட்டியுள்ளது. நிச்சயமாக இத்திரைப்படம் முடியும் வரை உங்களை மொத்தமாக உள்வாங்கிக் கொண்டு நகரவிடாது.

முற்றும்.

Monday, February 04, 2019

மலேரியா காய்ச்சலை தீர்க்கும் டிராகனின் எலும்புகள்

பெக்கிங் மனிதன்- source: a short history of china
சார்ல்ஸ் டார்வின் தொடர்பான புத்தகத்தை வாசித்தேன். பரிணாம வளர்ச்சி குறித்து தனது கருத்தை முன் வைக்க பலமாகவே யோசித்திருக்கிறார் டார்வின். ஆதாம் ஏவால் என மதங்கள் நிறுவிட்ட கருத்தை தகர்ப்பது சுலபம் இல்லை என கருதினார். 

அது போக அறிவியல் ஆராய்ச்சிகளின் வெளியீடுகள் மாதத்திற்கு எதிராக இருக்கக் கூடது என்பதில் மதம் உறுதியாக இருந்தது. அகிலவியல் தொடர்பாக தனது ஆய்வை வெளியிட்ட ப்ரூனோவை 1600-ல் (Giordano Bruno) உயிரோடு எரித்துக் கொன்றனர் மத சபையினர். அதற்காக கடந்த 2000-ம் ஆண்டில் தனது மன்னிப்பை முன் வைத்தார் போப். 

இது போன்ற சம்பவங்கள் டார்வினை நிச்சயமாக பாதித்திருக்கக் கூடும். பரிணாமம் தொடர்பான டார்வினின் முதல் புத்தகம் On the Origin of Species by Means of Natural Selection. இப்புத்தகத்தில் மிருகங்கள் தொடர்பாகவே டார்வின் அதிகம் எழுதி இருந்தார். 

பரிணாமம் குறித்த கருத்தை வெளியிடுவதில் டார்வினுக்கு போட்டியாக அமைந்தவர் Alfred Russel Wallace. இவருக்கு co-discoverer of natural selection என்ற அடையாளத்தை மட்டுமே அறிவியல் உலகம் கொடுத்தது. டார்வினுக்கும் அல்ஃப்ரட்டுக்கும் கடித தொடர்பு இருந்துள்ளது. போர்னியோ தீவுகளில் அவர் பார்த்த ஓராங் ஊத்தான் குரங்குகளே இவரை பரிணாம வளர்ச்சியின் ஆராய்ச்சியில் ஈடுபட செய்தது. ஆராய்ச்சியில் போது இவர் அந்நாளைய மலாயாவில் வசித்தார் (1858). பரிணாம வளர்ச்சி மிருகங்களுக்கு மட்டுமே பொருந்தும் என வல்லஸ் கருதினார். 

அ்து தவறு என்றும், மனிதர்களும் மிருக குழுமத்தைச் சார்ந்தவர்கள், மனிதர்களும் பரிணாம வளர்ச்சியின் ஒரு எச்சமே என டார்வின் தனது கருத்தை முன் வைத்தார். மனிதனின் பரிணாமம் குறித்து அவர் எழுதிய புத்தகம் The Descent of Man (1871). இதன் பிறகே டார்வின் மதத்தை தூக்கி எரிந்து கடவுள் மறுப்பு கொள்கையை ஏற்றார்.

டார்வினை முடித்து சீனா தொடர்பான சரித்திர நூல் ஒன்றை வாசிக்க தொடங்கினேன். அதில் முதல் அத்தியாயத்தில் Peking Ape-man -ல் இருந்து சரித்திரம் தொடங்குகிறது. டார்வின் நமக்கு விட்டுச் சென்ற அறிவியல் தான் எவ்வளவு மகத்தானது.

சீனர்களுக்கு டிராகன் மீது அதிக மோகம் இருந்திருக்கிறது. காடுகளில் டிராகன்களின் எலும்புகள் கிடைம்கும் என்றும் அவை சிறந்த நோய் நிவாரணி என்றும் நம்பினார்கள். அவற்றை தேடி எடுத்து வந்து மலாரியா போன்ற நோய்களுக்கு சமைத்து சாப்பிட்டு இருக்கிறார்கள்.

அப்படி அவர்கள் எடுத்து வந்தது டிராகனின் எலும்புகள் அல்ல. அவை பல நூறு ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த குரங்கு மனிதனின் எழும்புகள். Peking Ape-man கண்டுபிடிக்கப்பட்டது 1925-1927 ஆண்டுகளில். Peking Ape-man வயது ஏறக்குறைய 780000 என கணக்கிடுகிறார்கள் அகழ்வாராய்ச்சியாளர்கள்.

சுமார் 40 பெக்கிங் மேன்களின் எலும்புகளை கண்டெடுத்தார்கள். அவற்றில் 1 விழுக்காடு மட்டுமே 50 வயது வரை வாழ்ந்திருக்கிறார்கள். ஏனையவை பதின்ம வயதினரின் எழும்புகள். குரங்கு மனிதனின் மூலை அளவும் சற்று சிறியதே. சராசரி மனிதனின் மூலை அளவு 1400 மில்லி லிட்டர். குரங்கு மனிதனின் அளவு 1050 மி.லி.

பெக்கிங் மேன்களுக்கு முன்பாகவே Jawa Man கண்டுபிடிக்கப்பட்டது. ஜாவா மேன் இந்தோனேசியவில் 1891ல் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த இரு கண்டுபிடிப்புகளும் homo errectus குழுமத்தில் அடையாளப்படுத்தப்பட்டன.

* தக்கது தப்பி பிழைக்கும்

Saturday, February 02, 2019

இளமை நினைவுகள் SJKT SUNGKAI


சுமார் 28-30 ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவங்களை மீட்டெடுக்கும் முயற்சியாகவே இதை எழுதுகிறேன். எனது பள்ளி படிப்பை முடிக்க மட்டுமே ஏழு பள்ளிக்கூடங்கள் மாறி இருந்தேன். இதனாலேயே என்னவோ பெரிதாக நண்பர்களை சம்பாதித்துக் கொள்ளவில்லை. நாடோடி தனமான வாழ்க்கைத் தொடர்ந்து கொண்டிருப்பதனாலும் தொடரும் என்பதாலும் இன்றும் இதுவே நிலை. 

வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்திய சம்பவங்கள் நினைவில் ஆழமாக படிந்திருக்கும் என்பதில் மாற்றில்லை. சத்தியாவோடு (மணிமாறன்) குறைந்தபட்சம் 4 வயதிலிருந்தாவது நான் பழகி இருக்க வேண்டும். அப்போது கேமரன்மலையில் வசித்திருந்தோம். 'Chekco' எனும் அந்தத் தோட்டம் இப்போது புதர்கள் விழுங்கிய காடாகிவிட்டது. சத்தியாவின் தாய் தந்தையரை அத்தை மாமா என்றே அழைத்திருக்கிறேன். கிருஷ்ணன் மாமா ஒரு முறை என்னைக் காப்பாற்றியதாக கூட நினைத்திருக்கிறேன். அது வேறு கதை. 

சத்தியா கடந்த மாதம் நண்பா நம் ஆரம்பப்பள்ளியின் மாணவர் சந்திப்பு ஏற்பாடகி உள்ளது என கூறினார். அப்போது தான் சத்தியாவோடு நெடுநாட்களாக பேசவில்லையே என தோன்றியது. காலம் வாழ்வை புரட்டி போட்டிருந்தது. புலன குழுமத்தில் இணைந்த போது 7/8 வயதில் பார்தவர்களை மீண்டும் சந்தித்த மகிழ்ச்சி ஏற்பட்டது. நிச்சயமாக பலரும் என்னை மறந்திருக்க கூடும். நானும் பலரை நினைவில் தப்பவிட்டிருந்தேன். கேமரன்மலையில் வளர்ந்த நானும் சத்தியாவும் பேராவின் சுங்கை தமிழ்ப்பள்ளியில் ஆரம்பக் கல்வியை தொடர்ந்தோம். இருவரும் அவரவர் தாத்தா வீட்டில் தங்கி படித்தோம். 

சுங்கை தமிழ்ப்பள்ளி:

1. அதிகாலையில் குளித்து தலையை வழித்து சீவி பிரதான சாலையின் முன் காத்திருந்தால் முனியாண்டி கோவில் வாசல் பலகையில் பழய 'றா'வில் கரியால் எழுதப்பட்ட கம்போங் என்றா எனும் ஊர் பெயர் தெரியும். அங்கிருந்து சில கி.மியில் பள்ளிக்கூடம். பள்ளியின் முதல் நாள் சத்தியா அழுதான். நான் இல்லை. பள்ளிக்கூடத்தில் நான் சந்தித்த முதல் நபர் பழனி. என்னை விட 3 வயது அதிகம். பழனி ஏன் அன்று மட்டும் என் வகுப்பில் அமர்ந்திருந்தார் என தெரியாது. டீச்சர் பழனியை அண்ணன் என அழைக்கச் சொன்னது ஞாபகம் உள்ளது. பாழனியை 2004-ல் மீண்டும் பல்கலைக்கழகத்தில் சந்தித்தேன். இளங்கலை பயிலும் போது ஒரே ஆண்டின் மாணவர்களாக இருந்தோம். பழனிக்கு என்னை ஞாபகம் இல்லை. என்னால் அவரை அடையாளம் காண முடிந்தது. 1991/1992 ஆண்டுகளில் எனது வகுப்பின் பெயர் 1 சிவப்பு & 2 சிவப்பு. 

2. பள்ளியின் பழய சிற்றுண்டி சாலையின் அருகாமையில் ஒரு கிணறு இருந்தது. தமிழ்ப் படங்களில் பார்ப்பதைப் போல் அடித்து x2 நீர் எடுக்க வேண்டும். பின்னாட்களில் அதில் கை மட்டும் கழுவினேனா இல்லை அள்ளி பருகினேனா என பலமாக யோசித்திருக்கிறேன். அதன் சுகாதார தன்மை என்னை அழைக்கழித்தது. அந்தச் சிற்றுண்டி சாலையில் நாசி லெமாக் மற்றும் சம்பால் போட்ட குண்டு பலகாரம் தவிர்த்து வேறு ஏதும் சாப்பிட்டதாக ஞாபகம் இல்லை. 

3. வகுப்பு தலைவியின் பெயர் சண்முகவள்ளி. இவரை யாரோ சண்முகவெள்ளி என கேலி செய்து கூப்பிட அவர் அழுதுகொண்டே அந்த சிற்றுண்டி கடைகாரரிடம் என்னை நோக்கி விரல் காட்டினார். அந்த கடைகாரர் 'இரு பெல்ட்ட எடுத்துட்டு வரேன்' என சொன்னது அடிவயிற்றை கலக்கியது. அன்று முதல் பயந்துக் கொண்டு சாப்பாடு வாங்கும் ஒரு ஃபோபியா ஒட்டிக் கொண்டது.

4. பள்ளி முடிந்து பேருந்து நிலையத்திற்கு திடல் வழியே நடந்து போக வேண்டும். அகால மரணமடைந்தை எலி ஒன்று நீர்த்தார் சடங்கு செய்யப்படாமல் சில நாட்களில் கொஞ்சம் வாடையெடுத்து அத்திடலில் கிடந்தது. சீனியர் ஒருவர் அதன் வாலை பிடித்து சுழற்றி வீச எனது வெள்ளை சீருடையில் அதன் பூத உடலின் எச்சம் ஒட்டியது. கடும் துர்நாற்றம். அழுது கொண்டே விடு திரும்பினேன். அந்த சீனியர் சத்தியாவின் உறவினர். விபத்தின் காரணமாக அவர் இப்போது இல்லை என்பதை அறிகிறேன். 

5. பேருந்து நிலையம் அருகே 20 காசு கொடுத்து ஆரஞ்சு பழச் சாரு என கூறப்பட்ட ஒன்றை வாங்கிக் குடிப்பது வழக்கம். அக்கடையின் புதிய விற்பனரிடம் சத்தியா 1 வெள்ளி கொடுக்க ஒரு பெரிய பை நிறை ஜூஸ் கட்டிக் கொடுத்தார் அவர். 1 வெள்ளி என்பது சில நாட்களுக்கான பாக்கெட் மணி. மறுநாள் சத்தியாவின் முகத்தில் கடுமையான சோகம் தெரிந்தது. வீட்டில் பிரச்சனையாகி இருக்கக்கூடும். நானும் கேட்டுக்கொள்ளவில்லை.

6. வகுப்புக்கு வந்ததும் பஸ் பாஸை புத்தகப்பையில் வைத்துவிட்டு வளாகத்தில் சுற்றித் திறிவோம். கோபியும் உடன் வருவார். சுற்றுவார். கோபிக்கு இரண்டு வயது அதிகம். ஒரு முறை கழிவறை சென்று திரும்பியதும் உனது பஸ் பாஸ் எங்கே என கோபி கேட்டார். புத்தகப் பையில் தேடினேன் இல்லை. பதற்றமாகி போனது. வழி நெடுக தேடி அழைந்தேன் கிடைக்கவில்லை. வகுப்பறையின் பின் பக்க அஞ்சடியில் பஸ் பாஸ் போல காதிதம் கிடப்பதை கோபி பார்த்ததாக கூறினார். சென்று பார்த்த போது எனது பஸ் பாஸ் சில்லு சில்லாக கிழித்துப் போடபட்டிருந்தது. வேறு என்ன, அழுது கொண்டே அதை காகித்தில் சேகரித்து வீட்டுக்கு வந்து திட்டு வாங்கி 'ஃபஸல்' விளையாட்டு போல் காகிதத்தில் ஒட்டி பஸ் பாஸுக்கு உயிர் கொடுத்து பயன்படுத்தினேன். அந்த மாதம் முழுக்க அவமானமும் ஏளனச் சிரிப்புகளும் நீடித்தன. இதன் சந்தேகம் கோபியின் மீது இருந்தாலும் போதிய சாட்சியங்கள் ஏதும் இல்லை. 

7. மேற்காணும் நபரின் தந்தையார் இந்திய பிரதிநிதி கட்சியின் தலைவராக இருந்தார். தார் ரோடுகள் போடுவதற்கு முன்பான சாலை கூழாங்கற்களால் கொட்டி அமைக்கப்படிருந்தது. மேற்காணும் நபரின் தங்கைக்கும் நமக்கும் ஒரே வயது. வெவ்வேறு பள்ளிகளில் படித்தோம். பள்ளிமுடிந்து வீட்டுக்குச் சொன்று கொண்டிருந்த போது ஏதேற்சையாக அவரை எதிர்கொள்ள நேர்ந்தது. 'இது எங்க அப்பா போட்ட ரோடு. இதுல நீ நடந்து வராத' என சொல்லி கல்லை எடுத்து வீச விரல்களில் காயமானது. ஒரு சாமானியன் மீதான அதிகார பாய்ச்சல் அது. 

8. 1992-ன் ஆரம்பத்தில் சுங்கை தமிழினம் தளபதி போதையில் மூழ்கி இருந்தது. ஒரு நாள் கடைசி பாடம் முடிய போகும் மகிழ்ச்சியில் சுகேன் ஏதோ முனுமுனுத்துக் கொண்டிருந்தார். திடீரென 'டீச்சர் விக்னேஸ்சு ராக்கம்மா கைய தட்டு பாட்டு பாடுறான்' என சொன்னார். வகுப்பாசிரியர் பாடம் அப்போது. அவர் பெயர் விக்னேஸ்வரி என ஞாபகம். அவரும் விசாரனை இன்றி பிரம்படி கொடுத்தார். குற்றவியல் அமலாக்க சட்ட பிரிவில் மேற்கல்வியை தொடரும் போது 'hearsay evidence' எனும் சாட்சியை எந்தக் காரணம் கொண்டும் விசாரணைக்கோ அல்லது நீதிமன்ற சாட்சியமாகவோ பயன்படுத்தக் கூடாது என்பதை போதித்தனர். இந்தச் செவி வழி குற்றச்சாட்டுக்கு விசாரணையின்றி தண்டனை பெற்றதால் சுகேனையும், டீச்சரையும் அப்போதும், ராக்கம்மா கையை தட்டும் சமயங்களிலும் நினைவு கூர்ந்து இருக்கிறேன்.

9. சுரேந்திரன் வீடு சுங்கையில் இருந்து தாப்பா போகும் வழியில் சாலையோரம் இருந்தது. கடை வீடு அமைப்பிலான அந்த இடம் பேருந்தில் போகும் சமயங்களில் பார்க்கும் விதத்தில் இருந்தது. 1992க்கு பின் நான் மாற்றலாகி சென்றுவிட்டாலும் விடுமுறை சமயங்களில் சில ஆண்டுகள் சுங்கை வந்து போய் கொண்டிருந்தேன். பேருந்தில் இருந்து சுரேந்திரன் வீட்டை மட்டும் பார்த்திருக்கிறேன். சுரேந்திரன் ஒரு போதும் எதிர்பட்டதில்லை. 91/92 சமயங்களில் மழை காலத்தில் அதிகமாக வெள்ளம் ஏற்படும். பேருந்து பள்ளியை அடைய கால தாமதம் ஆகும். ஒரு முறை 'டீச்சர் ரொம்ப அடிக்கிறாங்க அதனால் தான் ஸ்கூல் வரலனு' சுரேந்திரன் சொன்னதாக வெள்ளத்தில் சிக்கி வந்த மாணவர் ஒருவர் சொல்ல. வெள்ளம் வடிந்த மறுநாள் சுரேந்திரன் வகுப்புக்கு வந்தார். வேறு என்ன நடந்திருக்கும்? 'அதே தான்'. 

10. சுரேந்திரன் வீட்டு அருகாமையில் குழந்தையம்மாள் ஆசிரியை வீடு இருந்தது. என் வகுப்புக்கு நன்னெறி கல்வி போதித்தார். தேங்காய் எண்ணெய் அப்பி அலுத்த வாரிய தலையையும், குண்டு குண்டாக இருக்கும் என் கையெழுத்தும் நல்ல உதாரணம் என வகுப்புக்கு காட்டி இருக்கிறார். சித்திரம் வரையும் போட்டியில் மோசமான வரையும் திறன் கொண்ட எனது சேவல் ஓவியத்தை தேர்வு செய்தார். அதற்காக துரைசிங்கம் எனும் அரசியல் பிரமுகரிடம் 'லூனா கலர்' பென்சில்களை பரிசில் பெற்றேன். குழந்தையம்மாள் ஆசிரியரை எனக்கு மிகவும் பிடித்து இருந்தது. தீபாவளி அட்டை ஒன்றை எழுதி அவருக்கு கொடுத்த போது வாங்கிக் கொண்டார். அடுத்த முறை கொடுக்க வேண்டம் என்பது போல் ஏதொ ஒரு செய்தியை விளக்கி சொன்னது அப்பொழுது சரியாக புரிந்திருக்கவில்லை. 

11. படங்களை கத்தரித்து புத்தகத்தில் ஒட்டி வண்ணம் தீட்டுவதில் ஒரு அளாதி வெறி இருந்தது. ஒரு முறை அப்படி அதி தீவிரமாக படங்களை கத்தரித்து பேக்கில் இருந்து பசை எடுத்து திரும்பும் போது படங்கள் அனைத்தும் தவறி போய்விட்டன. கடுமையான தேடலிலும் கிடைக்கவில்லை. பக்கத்தில் இருந்த சாந்தி அதை எடுத்ததாக கூறி அவரிடம் இருந்த படங்களை அபகரிக்க முயற்சித்தேன். பஞ்சாயித்து தீர்க்க வந்த டீச்சர் முந்தய பட கத்தரிப்புகளை காட்டி சாந்தி மிக நேர்த்தியாக படங்களை கத்தரித்து இருப்பதாகவும், எனது கத்தரி போடும் திறன் மிக மோசமாக இருப்பதாகவும் பகுத்தாய்ந்து தீர்ப்பை சாந்திக்கு சாதகமாக அளித்தார். அந்த படங்கள் எனது நோட்டு புத்தகத்தின் பயன்படுத்தப்படாத ஏடுகளின் இடுக்கில் சிக்கி இருந்ததை நான் கவனிக்கவில்லை. தவறு என் பக்கம். அந்த ஆசிரியரின் அசாத்திய தீர்ப்பை நினைத்து வியக்கிறேன்.

12. தோழர் வனிதா அதீத மதி கூர்மை கொண்டவர் என்பதாலும் சிட்டி ரோபோவை போல் எல்லா பாடங்களையும் சட்டென கரைத்துக் குடித்து சிறப்பு தேர்ச்சி பெற்றவராக நினைவில் நிற்கிறார்.

13. ஜோன்சன் வகுப்பு தலைவர் என்பதால் நினைவில் உள்ளார். ஜெகதீசன்/ ஜெகதீஸ்வரன் இந்த பெயர் கொண்டவரை புகைப்படத்தில் அடையாளம் காட்ட முடியும். நலினியின் பெயரை மறந்திருந்தேன் இருந்தும் அவர் புன்னகை ஞாபகத்தில் உள்ளது. சண்முகவள்ளி பக்கத்தில் நிற்கும் மாணவிக்கு (பெயர் தெரியவில்லை) ஏனோ என்னை பிடிக்கவில்லை. அவர் கொண்டு வந்த 'picking stick' விளையாட்டுப் பொருளை என்னோடு மட்டும் பகிர மறுத்துவிட்டார். தினேஸை ஒரு முறை தானா ராத்தாவில் சந்தித்தேன். அவருக்கு என்னை ஞாபகம் இல்லை. 

14. தலைமையாசிரியர் பெயர் திரு கிருஷ்ணன் என்பதாக ஞாபகம். அவருக்கு ஒரு தங்கப் பல் இருந்தது. மாணவர்கள் வெந்நீரில் குளித்துவிட்டு பள்ளிக்கு வர வேண்டும் என்பதை நான் படித்த இரண்டு ஆண்டுகளில் மீண்டும் மீண்டும் சபை கூடத்தில் உரையாற்றி இருக்கிறார். இந்த சபைக் கூடத்தில் 'தூப்பாக்கி துப்பாக்கி' என மேல் வகுப்பு மாணவர்கள் அடிக்கடி ஒப்புவித்தது திருக்குறள் என்பது அச்சமயம் எனக்கு புலப்படாமல் இருந்தது.  எங்களோடு பேருந்தில் வரும் ஆசிரியர் ஒருவர் என்னை 'சோத்து பானை' எனக் கூறி திட்டினார். சேத்து பானை எனும் வார்த்தையை திட்ட பயன்படுத்த முடியும் என்பது ஆச்சரியமாக இருந்தது. சில ஆண்டுகளுக்கு முன் அவரை ஈப்போவில் சந்தித்த போது  பணி ஓய்வு பெற்றிருந்தார்.

15. ஒரு முறை தாத்தாவுக்கு உடல் நலம் கடுமையாக பாதிப்பு அடைந்திருந்தது. மறுதினம் தேர்வு நாள். தாத்தாவை தாப்பா மருத்துவ மனையில் சேர்த்தார்கள். அன்றய தினம் வீடு திரும்ப நள்ளிரவு ஆகி இருந்தது. உறக்கம் பிடிக்கமால் காய்ச்சல் ஏற்பட்டது. மறுதினம் பள்ளி நோக்கி நடந்துக் கொண்டிருந்த போது திடீரென வாந்தி வந்தது. பின்னால் இருந்து வேகமாக வந்த பெண் மாணவி என்னை பெயர் சொல்லி அழைத்தார் 'காய்ச்சலா?, இன்னும் வாந்தி வர மாதிரி இருக்கா, டீச்சர் கிட்ட கூட்டிட்டு போகவா' என கேட்டார். நான் தலையசைத்து விட்டு வகுப்புக்கு வந்துவிட்டேன். அந்த சீனியர் மாணவி மிகவும் அழகாக இருந்தார்.

முற்றும்.

பி/கு: நண்பர்கள் சந்திப்பு சிறப்பாக நடைபெற எனது வாழ்த்துகள். 

Friday, February 01, 2019

அரசர் விரும்பிய சீன பேரழகிகள்

பண்டைய சீனாவின் பொற்காலமாக கருதப்படுவது தாங் பேராட்சி காலமாகும். நாடும் வீடும் செழித்தது. வணிகம் வாணிபம் பெருகியது. பல வெளிநாட்டவரும் அப்போதைய தாங் பேராட்சியின் குடையில் வசிக்க எத்தனித்தனர்.

பண்டைய வாள் வடிவமைப்புகளிலும் தாங் பேரரசின் வாள்கள் மிக வடிவாக இருக்கும். ஒவ்வொரு பேரரசின் போதும் வேவ்வேரு மாதிரியான வாள்களை பயன்படுத்தினார்கள். எனக்கு தனிப்பட்ட முறையில் தாங் பேரரசு காலத்து வாள்கள் பிடிக்கும். இதை வேறு பதிவில் பார்க்கலாம். Tang Dynasty Swords என கூகித்தால் நிறைய செய்திகள் கிட்டும். நீங்கள் ஷீ-ஆன் நகர் சென்றால் சீன அரசின் சுடுமட்சிலை ஆலையிலும் பெருட்காட்சியகத்திலும் இந்த வாள்களை இரசித்து மகிழலாம்.

வடிவான வாள்களை மட்டும் அல்ல வடிவான பெண்களையும் விரும்பினார்கள் அக்காலத்து அரசர்கள். கணக்கில் அடங்க அந்தபுரத்து மங்கைகள். தாங் காலத்தில் பேரழகி போட்டிகளும் நடத்தப்பட்டன. நாட்டில் இருக்கும் 12 முதல் 16 வயதிலான மங்களைகள் அதில் கட்டாயம் கலந்துக் கொள்ள வேண்டும். வெற்றி பெறுபவர் அரசரின் நாயகிகளில் ஒருவராவார். தனது ஒட்டு மொத்த குடும்பத்தின் சுகபோக வாழ்வுக்காக இத்தகைய போட்டிகளில் கலந்துக் கொண்டவர்கள் ஏராளம். 

செழிப்பான பெண்களே அழகானவர்கள் என அடையாளப் படுத்தப்பட்டனர். செழிப்பென்றால் எப்படி? தொப்பை போட்ட கன்னங்கள், மடிப்பு விழுந்த கழுத்து, சற்றே முந்திய வயிறு இவை யாவும் அழகி போட்டியின் முக்கிய கூறுகள். ஒல்லியான பெல்லி கொண்ட பெண்கள் ஓரம்கட்ட பட்டனர். சதை செழித்த பெண்கள் அழகானவர்கள் மட்டும் அல்ல, ஆரோக்கியமும் கொண்ட்டவர்களாகவும், அதிக வாரிசுகளை பெற கூடியவர்களாகவும் கருதப்பட்டனர். போட்டி்யில் வென்ற சில அழகிகளின் சிலைகள் படத்தில் காணலாம்.

கீழ்காணும் படங்கள் எனது சீ-ஆன் பயணத்தின் போது அங்குள்ள பொருட்காட்சி சாலையில் எடுக்கப்பட்டது. இந்த மாதிரியான சிலைகளை இன்றும் விற்பனை நிலையங்களில் காணலாம். பொரும்பான்மையான சயமங்களில் அதன் அழகியல் ஈர்ப்பு குறைவால் கடந்து விடுவோம். அடுத்த முறை இச்சிலைகளை காணும் போது அவை பேரரசர் விரும்பிய அழகிகள் என்பதை நினைவு கூறுங்கள்.