Phimeanakas 3D வடிவமைப்பு Source: .angkor-planet.com |
’கண்ணி வெடியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உங்கள் அரசின் உதவி ஊதியம் ஏதும் ஆவண செய்யப்பட்டுள்ளதா?’
‘இல்லை. அவர்களாகவே அவர்களை கவனித்துக் கொள்ளும் நிலை தான். இந்த அங்கோர் பார்க் பகுதிகளில் கூட அவர்கள் இருக்கிறார்கள். பிறகு சந்திப்பீர்கள்.’ என்றார் ச்சேன்.
கம்போடியாவில் இருக்கும் கண்ணி வெடிகளை அகற்றும் பணிகள் முடிய இன்னும் சில ஆண்டுகள் ஆகலாம். கண்ணி வெடிகள் மிக சுலபத்தில் புதைக்கப்பட்டுவிட்டன ஆனால் அதை அகற்றும் பணியோ உயிர் போகும் செயல். ஒரு கண்ணி வெடியை அகற்ற சராசரியாக 1200 அமேரிக்க டாலர்கள் செலவாகின்றது. கம்போடியா போன்ற ஏழை நாட்டுக்கு இது பெரும் சுமை. ஆகவே உலக நாடுகளின் நன்கொடையை கொண்டே இப்பணிகள் நடைபெறுகின்றன.
கண்ணி வெடியை அகற்றும் பணியில் அக்கி ரா Source: archcomm.arch.tamu.edu |
ரியல் ஹீரோஸ் Source: archcomm.arch.tamu.edu |
கம்போடிய கண்ணி வெடிகளை பற்றி பேசும் போது அக்கி ரா எனும் கம்போடிய தனி மனிதனையும் நாம் அறிந்துக் கொள்ள வேண்டும். கம்போடியாவில் கண்ணி வெடி பொருட் காட்சி சாலையை ஆரம்பித்தவர் இவர். அக்கி ரா தனது பத்தாவது வயதில் கட்டாய இராணுவ அடிமையாக்கப்பட்டார். போல் போட்டின் அராஜக அட்சியில் நூற்றுக்கும் மேட்பட்ட கண்ணி வெடிகளை இவர் புதைத்திருக்கிறார். கெமர் ஆட்சி சீர் நிலைக்கு வந்த பின் அக்கி ரா கண்ணி வெடிகளை அகற்றும் பணிகளில் ஈடுபட்டார். ஆயிரக்கணக்கான வெடிகளை இவர் அகற்றியுள்ளார்.
கண்ணி வெடிகள் மரண எண்ணிக்கையை அதிகரிக்க புத்கைக்கப்பட்டவை அல்ல. அவை உடல் ஊன எண்ணிக்கையை அதிகரிக்கும் கருவியாக பயன்படுத்தப்பட்டன. போர்களில் மரணங்கள் புறம் தள்ளப்படுபவை. அவை மறக்கப்படும். உடல் ஊனமோ நெடுங் கால பாதிப்பை கொடுப்பவை. அதன் தாக்கம் ஏனைய படை பலத்தையும் பாதிக்கும். போர்களில் நெடுநாள் பாதிப்புகளுக்கு கையாளப்படும் மிக மலிவான கருவி கண்ணி வெடி. செற்ப வெடி மருந்தும் சில ஆணிகளும் அதற்கு போதும் என்பது அக்கி ராவின் கருத்து.
ச்சேனுடன் பேசியபடி எங்கள் பயணத்தை தொடர்ந்தோம். கோல் ச்சேன் ஏதாகினும் தகவல் பறிமாற்றம் செய்து கொண்டே இருந்தார். கூடவே கொஞ்சம் குபீர் சிரிப்புக்கான நகைச்சுவைகள். பயணிகள் கலைப்பு தெரியாமல் இருப்பதற்கான அவர் தொழில் உக்திகள் இவை.
இன்றைய நிலையில் Phimeanakas |
தொடர்ந்து நாங்கள் பார்த்த இடம் Phimeanakas. இந்த புராதன கட்டிடம் பலமாகவே சிதிலமாகியுள்ளது. பிரமிட் போன்ற மூன்று அடுக்குகளோடு உச்சியின் நடுவில் ஒரு கதவு. அங்கோர் தோம் பெருங் கோட்டை பகுதியில் இதுவும் பத்தோடு பதினொன்றாக உள்ளது. சரித்திர ஆதாரத்தின் படி இக்கட்டிடம் தங்கத்தால் ஆன அரண்மனையாகும். 10-ஆம் நூற்றாண்டின் இறுதியில் இராஜேந்திரவர்மனால் கட்டபட்டு பின் இரண்டாம் சூரியவர்மனால் மறுசீரமைக்கப்பட்டுள்ளது. இன்று இந்துக் கோவிலாக Phimeanakas அழைக்கப்படுவதன் காரணம் மர்மமானதே. இறந்த அரசனின் மீது வைக்கப்பட்ட சிவலிங்கம் கூட இதற்கு காரணமாக இருக்காலாம்.
Pheimeanakas தொடர்பான கர்ண பரம்பரை கதை ஒன்றும் உள்ளது. மறைவாய் சொல்ல வேண்டிய கதை என்பதால் பெண்களும், இளையோரும், முதியோரும் 18 வயதுக்கும் குறைவானோரும் அடுத்த பத்தியை ஸ்கீப் செய்துவிட்டு படிக்கலாம். கீழே கதை.
யசோதரபுர காலத்தில் Pheimeanakas தங்கத்தால் ஆன அரண்மனையாக இருந்தது. அதில் அரசனின் ஏகபட்ட மனைவிகளும் சேடிப் பெண்களும் இருந்திருக்கிறார்கள். அரண்மனைக்குள் நுழைவதற்கு பெண்களுக்கு மட்டும் தான் உரிமை என்பது வரலாற்று உண்மை. தினமும் முதல் ஜாமத்தில் ஒன்பது தலை கொண்ட நாகம் பெண் உருவம் கொண்டு பிரதான அறையில் ஆஜராகிவிடுமாம். அந்த அறையில் அரசன் மட்டுமே நுழைய முடியும். பட்டத்து ராணியாக இருந்தாலும் தூக்க வியாதியில் கூட அந்த அறையை எட்டிப் பார்க்க கூடாது என்பது எழுதப்படாத விதி. முதல் ஜாமம் முழுக்க நாகத்தை குஷிபடுத்திவிட்டு இரண்டாம் ஜாமமே தன் ஏனைய மனைவிகளோடு அவன் குஷியாக இருக்க முடியும். ஒரு வேளை நாகம் பெண் உரு கொண்டு வரமால் போய்விட்டால் அது குறுகிய காலத்தில் அரசன் இறப்பதற்கான அறிகுறி என்பதும் நாகப் பெண்ணோடு அரசன் கூட தவறுவது நாட்டின் சுபிட்சத்திற்கு கேடு விளைவிக்கும் என்பதும் கெமர் மக்களின் நம்பிக்கைகளில் ஒன்றாகும்.
North Khleang இன்றய நிலை |
Pheimeanakas போன்ற வடிவமைப்பைக் கொண்ட மேலும் இரு கட்டிடங்கள் உள்ளன. அவை North Khleang மற்றும் South Khleang என அழைக்கப்படுகிறது. இவ்விரு கட்டிடங்களும் வெவ்வேறு கால கட்டத்திலான அரசர்களால் கட்டப்பட்டது. இக்கட்டிடங்களின் பயன்பாடு இன்னமும் சில ஆச்சரிய குறிகளோடு உள்ளது. இதன் சுவர்களில் இருக்கும் கல்வெட்டுகளின் அடிப்படையில் இவை அரச விருந்தினருக்கும், தூதுவர்களுக்கும் தங்கும் விடுதியாக பயன்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.
Terrace of Elephant அழகான யானை கூட்டங்களோடு |
மேற்கூறிய இடங்களை பார்த்துக் கொண்டு வரும் போது நீங்கள் யானைகளின் மேல் நிற்பது போன்றதொரு மேல்தளத்தை அடைவீர்கள். அவ்விடம் Terrace of Elephant என அழைக்கப்படும். உலோகங்களாலும் யானை தந்தங்களாலும் அலங்கரிக்கப்பட்ட இடமாக இதைக் கூறுகிறார்கள். இன்று நாம் காண்பதோ வயோதிக கிழட்டு யானை சுவர்களை மட்டுமே. அரசன் நிகழ்வுகளை அமர்ந்து காணும் மேல் தளமே இந்த Terrace of Elephant. வெற்றி அடைந்த போர் வீரர்கள் கூடும் இடமாகவும், மக்களவையாகவும், மைதானமாகவும் இவ்விடம் இருந்துள்ளது.
300 மீட்டருக்கும் அதிகமாக யானை புடைப்புச் சித்திரங்கள். |
Terrace of Elephant தளத்தில் இருந்து நாம் கவனிக்கையில் எதிரே சில தனிக் கோபுரங்கள் தெரிகின்றன. அவை கோபுரங்கள் அல்ல. பலி பீடங்கள். அதையும் அரசன் கண் எதிரே கவனிக்கும் படியே அமைத்திருக்கிறார்கள். மொத்தம் 12 கோபுரங்கள் இருந்துள்ளன. தற்சமயம் அவை எண்ணிக்கையில் சற்றே குறைந்துள்ளன. அந்த தண்டனைகள் எப்படி நிறைவேற்றப்பட்டன என்பதற்கான சில குறிப்புகள் காணப்படுகின்றன. மனிதனை வதைக்கும் செயல்களை சிந்திப்பதில் மனிதன் சளைத்தவன் அல்ல. அவனது கிரியேட்டிவிட்டி அங்கே காட்டாறாக பெருக்கெடுக்கிறது.
பயணங்கள் தொடரும்...