Friday, October 31, 2008

இந்தியர்களுக்கு இந்த உணவு பிடிக்குமா?

ஜப்பானிய உணவு வகைகள் நமக்கு மிக வித்தியாசமானவையாக தோன்றும். சரியாகச் சொல்லப் போனால் நா குமட்டச் செய்பவை என சொல்லலாம். ஜப்பானியர்களின் ஆயுற் காலம் மற்ற நாட்டினை காட்டினும் அதிகம் என்கிறது சில தகவல்கள். இதற்கு முக்கிய காரணம் அவர்களின் சுறுசுறுப்பும் உணவு முறையுமே ஆகும். உணவு பழக்க வழக்கங்கள் சரியாக இருப்பின் நமது உடலும் சரிவர இயங்கும் சுறுசுறுப்புக்கும் பஞ்சமில்லாமல் போகும்.

ஜப்பானிய உணவு வகைகளில் மிகவும் பிரசித்தி பெற்றது சுசி. சுசி சீன தேசத்தின் உணவு முறை எனவும் ஏழாம் நூற்றாண்டில் அது ஜப்பானில் அறிமுகப்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. மீன் சதையை உப்பு மற்றும் அரிசியுடன் பதப்படுத்தி வைத்துவிடுவது அக்கால முறை. இதுதான் சுசி உணவு முறை வளர்ச்சியின் ஆரம்ப முறை என சொல்லப்படுகிறது. அரிசியில் செய்யப்படுவதால் என்னவோ இது பலருக்கும் பிடித்தமான உணவாகிவிட்டது.

சுசி பல வகைப்பட்டது. அதன் உள்ளடக்கம் மற்றும் வடிவமைப்புகளை பொறுத்து வகை பிரிக்கப்படுகிறது. நோரி எனப்படும் கடல் பாசிவகைகள், இறால் முட்டை போன்றவை சுசிகளில் பிரசித்திப் பெற்றது. அரிதாகக் கிடைக்கக் கூடிய கடல் மீன் முட்டைகளில் செய்யப்படும் சுசி வகைகள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதிக அளவிலான முட்டைகளும் கொழுப்புச் சத்து நிறைந்த பொருட்களும் இல்லாதிருக்கும் பொருட்டு சுசி உடல் எடை கட்டுப்பாட்டை கடைபிடிக்க நினைப்பவர்களுக்கு சிறந்த உணவாக அமையும். பொதுவாகவே சுசியில் கொழுப்புச் சத்தின் அளவு குறைந்தே இருக்கும். முறையான உணவு என ஏற்றுக் கொள்ளும் பட்சத்திலேயே இருக்கும்.

7-9 வரையிலான சுசி துண்டுகளில் 300-450 கலோரி இருப்பதாக கூறப்படுகிறது. மீன் சதையில் இருந்து ஃப்ரோடினும் ஒமேகா எனப்படும் அமில வகையும், காய்கறி வகைகளில் வைட்டமீனும், நோரியில் 'ஐயோடினும்', அரிசியில் நார் சத்தும் கிடைக்கிறது.

நோரி பல வகையான செயல்பாட்டுக்கு பிறகு 'மொரு மொரு'வென மெல்லும் வகையிலும், கேசரியை போல் லேசான பசை கொண்ட வகையிலும் செய்யப்படுகிறது.

சுசி வகை உணவை உண்பதற்கு முன் முக்கியமாக இருக்க வேண்டியது சுவைச்சாறும் (கிச்சாப்) 'வசாபியும்' (காரமானச் சாறு). கரிப்பு சுவைக்காக 'கிச்சாப்பை' தெளித்துக் கொள்வதற்காக பயன்படுத்துவார்கள். சில வேளைகளில் கார சாறுடன் (வசாபி) 'கிச்சாப்பை' கலந்துவிடுவார்கள். வசாபியின் காரம் சொல்லில் அடங்கா. காது மடல்களில் எரியூட்டிவிடும் தன்மையை கொண்டது. இது பிடிக்காதவர்கள் சுசி சாப்பிடும் போது அதிக அளவிலான நீரை குடிப்பார்கள்.

இதையடுத்து சுசியோடு சேர்த்துக் கொள்ளப்படுவது 'க்காரி'. 'க்காரி' ஊறுகாயை போல பதப்படுத்தி வைக்கப்பட்ட இஞ்சி. இவ்வகை இஞ்சி சுசி சாப்பிடும் போது ஊறுகாயைப் போல் மென்று கொள்ள பயன்படுத்தப்படும். சுசியின் சுவைத் தன்மை கெடாமல் இருக்க இப்படி செய்வதாக கூறுகிறார்கள்.
பச்சையாக இருக்கும் மீன் வகை 'சஷ்மி' என அழைக்கப்படுகிறது. சல்மோன் மீன் வகைகள் பச்சையாகவே உண்ணப்படுகிறது. லேசான புகைகாட்டப்பட்ட விலாங்கு மீன் வகை 'உனாங்கி' என அழைக்கப்படுகிறது. சுசியில் பயன்படுத்தப்படும் விலாங்கு மீனின் சதை மிக லேசானதாக இருக்கும்.

Calrose வகை அரிசியில் சுசி செய்யப்படும். 'மரின்' அல்லது அரிசியில் செய்யப்படும் 'வைன்' சுசி உணவிற்கு புளிப்புச் சுவையை சேர்க்க உதவும். இது போக 'மயோனிஸ்' போன்ற சாறையும் சேர்த்துக் கொள்ளலாம்.

சுசிக்கு பயன்படுத்தப்படும் வெள்ளரிக்காய் வகைகள் சாதாரண வெள்ளரியைவிட மாறுபட்டிருக்கும். அதில் ஈரத்தன்மை குறைந்தும் கடிப்பதற்கு 'மொரு மொரு'வெனவும் இருக்கும். சுசியில் நண்டு, இறால், 'ஹாட் டாக்' போன்ற வற்றையும் இணைத்து உண்ணலாம்.

சுசி ஆரோக்கியமான உணவாக கருதப்பட்டாலும் நன்கு பதப்படுத்தியும் வேக வைத்தும் உணவுகளை உண்டு பழகியவர்களுக்கு அது பிடிக்காமலே போகும்.
(பி.கு: பல்கலைகழகத்தில் படித்த சமயம் ஜப்பானிய கலாச்சாரப் படைபிற்கு சேர்த்த தகவலில் ஒரு பகுதி)

Tuesday, October 28, 2008

ஆடு தமிழா ஆடு !

ஆடும் இனமே ஆடு
ஆடாவிட்டால் உனக்கேது பீடு

தேடும் தமிழர் வாழ்வில்
தெய்வத்தின் பேரால் ஆடு

மாடுபோல் வெறிநீர்(மது) மண்டி
மானம் கெட ஆடு

கூடுவிட்டு உயிர் போனவரின்
கூட்டத்திலும் ஆடு

ஆடுபோல் அடங்கிபோகும்
அருந்தமிழ் இனமே ஆடு

பீடு பெற்ற தமிழர் இனத்தில்
பெருமை கெடவே ஆடு

வாடும் தமிழர் இனத்தில்
வண்ணத் தமிழனே ஆடு

தேடிப் படத்தைப் பார்த்து
இலையும் குலையும் ஆட்டி ஆடு.

Saturday, October 25, 2008

களவாடி பசங்க திருந்தட்டும்!!

சில முக்கிய பொக்கிஷங்கள் மனித குலத்தின் பார்வையில் இருந்து மறைத்தே வைக்கப்படுகிறது. பாதுகாப்பிற்காக இப்படி செய்கிறார்கள் என்றாலும் நாம் அறிய வேண்டிய பல விடயங்கள் மண்ணோடு புதைந்துவிடுகிறது.

இரண்டாம் சர்கான் மன்னர் கி.மு 722 முதல் 702 வரை ஆஷிரியன் நாட்டை ஆட்சி செய்தவர். இவரது சிற்பங்கள் ஈராக்கின் தேசிய பொருட்காட்சி சாலையில் வைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அது மக்களின் பார்வைக்கு இல்லாமல் இன்னமும் மூடி வைக்கப்பட்டிருப்பது வருத்தத்திற்குறியது.

சில வருடங்களுக்கு முன் நடந்த அமேரிக்கப் படையெடுப்பின் போது இப் பொருட்காட்சிசாலைகளில் இருந்த பல பொருட்கள் திருடப்பட்டிருக்கிறது. அப்படி காணாமல் போனவை பல நூற்றாண்டுகள் பாதுகாக்கப்பட்ட காண்பதற்கரிய பொருட்கள். உலக அமைதிக்காக படையெடுக்கிறோம் எனக் கூறிய அமேரிக்காவின் பாதகச் செயல்களுள் இதுவும் அடங்கும். காணாமல் போன பொருட்களை மீட்பது சுலபமன்று. அது உள்ளூர் ஆட்களால் திருடப்பட்டதா இல்லை வெளியூர்காரர்களால் செய்யப்பட்டதா என்பதும் சொல்ல முடியாத நிலைக்குட்பட்டுவிட்டது.

இன்றய தேதிக்கு ஈராக்கின் நிலை சுமூகமாகிவிட்டிருப்பினும் பொருட்காட்சி சாலையை திறக்கும் முடிவை அவர்கள் ஒத்திவைத்திருக்கிறார்கள். நாட்டின் பாதுகாப்புத் தன்மை நன்முறையில் உறுதி செய்யப்பட்ட பின்னரே பொருட்காட்சியகம் திறக்கப்படும் என்பதை பொருட்காட்சி சாலையின் நிர்வாகம் முடிவு செய்திருக்கிறது.
பக்தாத்திலும் அதன் சுற்றுவட்டார இடங்களிலும் பாதுகாப்பு முழுமையடைந்ததை நிச்சயப்படுத்தும் வரை எங்களால் பொருட்காட்சி சாலையை பொது மக்களின் பார்வைக்கு விடமுடியாது என இக்காட்சியகத்தின் தொல் பொருள் பாதுகாப்பு இயக்குனரான அமிரா எய்டன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

ஈரானிய நாடு மனித நாகரீகத்தின் வளர்ச்சியில் ஆரம்ப காலம் தொட்டே முக்கிய பங்கை வகித்து வந்துள்ளது. டைகிரீஸ் மற்றும் யூப்ரடிஸ் நதிகரைகளின் ஏற்பட்ட மனித நாகரீகத்தின் முக்கிய அங்கமும் கூட. பல சாம்ராஜியங்களின் வளர்ச்சிக்கும் வீழ்ச்சிக்கும் ஆயிரம்மாயிரம் காலமாக மையமாக விளங்கியுள்ளது.

மெசபடோமியா மக்கள் விட்டுச் சென்ற பழம் பொருட்களும் புதையல்களும் இப்பொருட்காட்சி சாலையில் வைக்கப்பட்டிருந்தது. போர் காலத்தில் இதன் பாதுகாப்பிற்கு பங்கம் உண்டானதை தொடந்து மக்களால் அது களவாடப்பட்டது. பொது மக்கள் தாங்கள் இஷ்டப்பட்டதை எடுத்துக் கொண்டு போகும் நிலையை தொலைக்காட்சிகளில் காட்டப்பட்டதை நாம் கண்டிருப்போம்.
நவீன சரித்திரத்தில் மறுக்கப்படாத கண்டிக்கத்தக்க கொடூரச் செயல் இது என எய்டன் மேலும் கூறுகிறார். ஈராக்கின் அமைதிக்காகவும் பாதுகாப்பிற்காகவும் அனுப்பப்பட்ட அமேரிக்க இராணுவத்தினர் அந்நாட்டின் எரிபொருள் விளைச்சலுக்கு கொடுத்த பாதுகாப்பின் சிறு பங்கினையும் மற்றவற்றிற்கு கொடுக்கவில்லை என்பது அவர் கருத்து.
2003-ஆம் ஆண்டு ஈராக் முழுமையாக அமேரிக்காவின் கைக்குற்பட்ட போது அங்குள்ள பல சரித்திர புகழ் வாய்ந்த இடங்கள் அழிக்கப்பட்டிருக்கின்றன. இதன் வழி வருங்காலத்திற்கு தேவையான சரித்திர தடயங்கள் இல்லாமல் போய்விட்டது என்பதை மறுப்பார் இல்லை.

கெட்டதிலும் ஒரு நல்லது அமையும் என்பதற்கொப்ப தற்சமயம் அப்பொருட்காட்சி சாலை மிகவும் பாதுகாப்பாக கண்கானிக்கப்பட்டு வருகிறது. சுற்றுலா வரும் சில முக்கிய நபர்களுக்கும் சோதனைகள் பலப்படுத்தப்படுள்ளது.

பொருட்காட்சி சாலையின் வெளியே பழமை வாய்ந்த பீரங்கியும் அதைச் சுற்றினும் அரேபிய எழுத்துக்களிலான வடிவமைப்பில் தூண்கள் உள்ளன. இதன் முகப்பு வாசல் பேபிலேனின் வேளியை போல் அமைக்கப்பட்டுள்ளது.

காட்சிசாலையினுள் இருக்கும் பொருட்கள் பிளாஸ்டிக் பைகளால் மூடி வைக்கப்பட்டுள்ளன. அங்கு 4400 வருடங்கள் பழமை பெற்ற ஒரு பொற்சிலை நிற்க வைக்கப்பட்டுள்ளது. சுவர்களில் ஒட்டியுள்ள அறைகளின் கதவு சிற்பங்கள் மூடி வைக்கப்படிருப்பினும் அவற்றில் இருக்கும் பழம் புதையல்களின் குறிப்புகள் பொறிக்கப்பட்டுள்ளன.

ஈராக்கின் வடக்கு பகுதியின் கண்டெடுக்கப்பட்ட நம்ரூட் மன்னனின் தங்க அணிகலன்களும் பூட்டி வைத்தபடியே உள்ளன. மேலும் 20-ஆம் நூற்றாண்டின் முக்கிய கண்டுபிடிப்பான டூட்டன்காமுன் எனும் பாரோ மன்னனின் கல்லறையும் பாதுகாக்கப்பட்டு வருகிறது. திருடப்பட்ட பொருட்களை மீட்பதில் அண்டை நாடுகள் உதவி புரிய மனமுவந்து இருப்பதாக நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளார்கள்.
இதுவரை காணாமல் சுமேரியன் மேனா லிசா எனப்படும் 5000 ஆண்டுகள் பழமை வைந்த ஒரு பெண் சிற்பத்தை கண்டு பிடித்துள்ளார்கள். அது பக்தாத்தின் சுற்றுவட்டாரத்தின் ஓரிடத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்திருக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன இச்சிற்பம் மீண்டும் கிடைத்தது பொருமகிழ்ச்சிக்குள்ளானது.

அப்பொருட்காட்சியகம் தற்சமயம் மேம்படுத்தப்பட்டு வருகிறது. அதன் 17 மண்டபங்களும் மறுசீரமைப்பு செய்யப்படுகிறது. புதுப் பொழிவுடனும் பலத்த பாதுகாப்புடனும் அதனை அமைக்க நிர்வாகம் செயல்பட்டு வருகிறது. இதற்கான நிதியுதவியில் அமேரிக்காவும் பங்கு கொண்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது.

Friday, October 24, 2008

கானலாய் ஒரு காதல்


நீ
முத்தமிட்ட தடங்களை
எனது தாடியில்
புதைத்து வைத்தேன்.
அதைக் கடித்து
காயப்படுத்தியது ஒரு
இரத்தப் பேராசை பேன்.

நீ
கொடுத்தக் கடிதங்களை
மரப் பெட்டியின்
காவலில் விட்டு வைத்திருந்தேன்.
அது
களவாட
கடந்துச் சென்ற
கறையான்களின்
ராஜியத்திற்குற்பட்டுவிட்டது.

நீ
தூது சொல்லியனுப்பிய
தோழியும் கடல்
கடந்துச் சென்றுவிட்டாள்
கல்யாணம் செய்து கொண்டு.

நாம்
அமர்ந்துப் பேசிய
குளக்கரையில்
மணல் மட்டுமே
மிச்சப்பட்டுப் போய்
இருக்கிறது.

எல்லாமும்
தேய்ந்து
ஓய்ந்த பின்னும்,
இன்னமும் வளர்கிறது
உன் வானவில்
சேலையில்
பிழியப்பட்ட
கருமை நிற
காதல் முத்துகள்.

Tuesday, October 21, 2008

குசும்பனின் கொடுமைகள்- சினிமா கேள்வி பதில்

குசும்பன் அவர்களே உங்கள் குசும்பு தனம் அனைவரும் அறிந்ததே, ஆனால் தாங்களின் குசும்பு கடந்த சில காலமாக என்னை மட்டும் இன்றி பலரையும் கஷ்டப்படுத்தும் விதமாக இருக்கிறது.

தாங்கள் செய்த தவறுகள் லிஸ்ட் இதோ!!!
1) தாங்கள் செய்யும் குசும்புத்தனத்தால் பலர் இரத்தக் கண்ணீர் வடிக்கின்றார்கள்.
2) உங்கள் குசும்பு தனத்திற்கு பல பதிவர்களை ஊறுகாயாக தொட்டுக் கொள்வது.
3) உண்மைத் தமிழன் அண்ணனை மன உளைச்சலுக்குள்ளாக்கியது. அதனால் அவர் ஒரு பதிவெழுதி அழுதது.

1. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்?

இந்த வயதில் தான் சினிமா பார்க்க ஆரம்பித்தேன் எனக் குறிப்பிட்டுச் சொல்ல முடியவில்லை. சிறுவனாக இருந்த சமயம் இது தான் சிறுவர்கள் பார்க்க தகுந்த படம் என பேபி ஷாலினி நடித்த (சாமி?) படங்களையும், குரங்கும் நாயும் கூத்து காட்டும் படங்களையும் போட்டுவிட்டு அம்மா வேலைகளை கவனிக்கச் சென்றுவிடுவார். அந்தப் படங்களையும் சலிப்பு இல்லாமல் இரண்டு மூன்று முறை போட்டுக் காட்டும்படி கேட்டிருக்கிறேன். நினைவு தெரிந்து நான் பார்த்த சினிமா அதுதான்.

அப்படங்களை பார்த்த சமயம் அர்த்தமற்ற மூட பக்தியை உணர்ந்தேன் பின்னாட்களில் மக்கு மனிதர்கள் இருக்கும் வரை இம்மாதிரியான படங்கள் வெளியாவதை தவிர்க்க முடியாது என்பதை உணர்ந்தேன்.

2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?
கடைசியாக அரங்கில் பார்த்த தமிழ் சினிமா தாம் தூம்.

3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?
தமிழில் மொழி பெயர்ப்பு செய்யப்பட்டிருந்த 'இந்தியானா ஜோன்ஸ்' எனும் ஆங்கில படத்தை டி.வீ.டியில் பார்த்தேன். நல்ல நகைச்சுவையாக இருந்தது. மாயன் சம்பந்தப்பட்ட சில விடயங்களை காண முடிந்தது.

கடைசியாக அந்த உருவத்தின் மண்டை ஓட்டை அதன் உடல் ஓட்டோடு சேர்த்தவுடன் அது உயிர் பெற்று ஏனைய 7 ஓடுகளையும் உள்வாங்கி உருவம் கொள்கிறது. இது அட்டமா சித்தியை பற்றி சொல்கிறார்கள் போல என எனது நண்பர் ஜவஹர் சொன்னார். ஆனால் எனக்கு தெரியவில்லை. உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்கள். (அடப்பாவி நீ பார்த்தது இல்லாம மத்தவங்களையும் மண்ட காய வைக்கிறியே என வையாதீர்கள்).

ஆம் மிக முக்கியமாக இப்படத்தில் உணர்ந்தது ஒரு கட்டத்தில் அட்டாமிக் பாம் வெடிக்கும். அப்போது கதாநாயகன் ஒரு குளிர் சாதன பெட்டிக்குள் நுழைந்துக் கொள்வார். பாம் வெடித்து அந்த இடமே நாசமாக போக அந்த குளிர் சாதன பெட்டி மட்டும் தூரத்துக்கு தூக்கியெறியப்பட்டு அவர் தப்பிவிடுவார். இதில் நான் உணர்ந்தது பாம் வெடிக்கும் சமயங்களில் குளிர்சாதன பெட்டிக்குள் புகுந்துக் கொண்டால் தப்பிவிடலாம் என்பது.

4. மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா?
தேவர் மகன் படத்தை சொல்லலாம். பல முறை பார்த்திருக்கிறேன். சிறப்பான வசனங்கள். திறமையான நடிப்பும் கூட. ஒரு கட்டத்தில் சிவாஜி இறந்தவுடன் 'என்னாச்சி' என கமல் ஓடி வருவார். மிகவும் இரசித்தேன்.

5.அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-அரசியல் சம்பவம்?
முதல்வன் திரைப்படம். ஒரு நாள் என் இடத்தில் உட்கார்ந்து பார் என ரகுவரன் சொன்னது.

5-ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-தொழில்நுட்ப சம்பவம்?
ஷங்கர் படங்களில் சில பிடிக்கும். இது போக தசாவதாரம் திரையின் தொழில்நுட்பம் சிறப்பாக இருந்தது.

6. தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா?
முன்பு சினிமா பற்றி வாசிக்கும் பழக்கம் இருந்தது. இப்போது சில விமர்சனங்களை படிப்பதோடு சரி.

7. தமிழ்ச்சினிமா இசை?
ஒரு சில நல்ல பாடல்களும் வருகின்றன. இருந்தாலும் அதிக ஆர்வம் ஏற்பட்டதில்லை.

8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?
இந்தி, ஜப்பானிய மற்றும் சில இந்தோனேசிய படங்களை பார்த்திருக்கிறேன். தமிழில் எடுக்கப்படும் சில கார்டுன் வகை மாயாஜால படங்களை விட அவை எவ்வளவோ மேல் என்றே அறிகிறேன்.

9. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா?தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?
எதுவும் இல்லை. தமிழ்ச்சினிமா மக்களின் மேம்பாட்டுக்கு உதவி இருக்கிறதா என்பதே கேள்வியாக இருக்கிறது. குசேலன் திரைபட முதல் நாள் காட்சியில் ஒருவர் ரஜினியின் காலை நக்குவதை படம் எடுத்திருந்தார்கள். இந்தக் கேவலமான செயல்களை தடுக்க வழி இருப்பின் மகிழ்வேன்.

10. தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
கலாச்சார மாற்றங்கள் பல நடந்துள்ளது. சிந்தனைகளிலும், உடைகளிலும். பேச்சு வழக்கிலும் அதன் தாக்கங்கள் காணப்படுகிறது. சினிமாவை ஒரு பொழுதுபோக்காக காணாமல் வாழ்க்கை முறைகளில் அதனை ஏற்றுக் கொள்வது நல்லதல்ல என்றே கருதுகிறேன். சினிமாவை தாண்டியும் நாம் அறிந்துக் கொள்ள வேண்டியது பல இருக்கிறது. இந்த பத்து கேள்விகளும் புத்தக சம்பந்தமான கேள்விகளாக இருந்திருப்பின் பலருக்கும் நன்மை பயத்திருக்கும்.

11. அடுத்த ஓராண்டுக்கு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?
இந்த நடிகர்களின் அட்டகாசம் அடங்கும் என நினைக்கிறேன். சினிமாவின் வழி வருமானம் பார்ப்பவர்கள் பாதிப்படைவார்கள். இருந்தாலும் நம் மக்களை நம்ப முடியாது. பழைய படங்களை போட்டு தேய்த்தெடுக்கவா தெரியாது அவர்களுக்கு. சினிமாவால் நம்மினத்திற்கு அதிக பாதிப்புகளே என்று சொல்வேன்.

இதுபோல் எழுத நான் அழைக்கப்போகும் 5 பேர்:
1) திரு.சேவியர்- அலசல்/கவிதைச் சாலை
2) திரு. வேலன் - அரங்கேற்றம்( புதிய பதிவர்)
3) விஜய்கோபால்சாமி
4) ஹேமா- குழந்தை நிலா
5) அ.நம்பி ஐயா அவர்கள்- நனவுகள்

Friday, October 17, 2008

ஏய் யெப்பா விலைய குறைங்கடா...

மலை போல கிடு கிடுவென ஏறிய எரிபொருள் விலை முக்கி முனகி இப்போது கொஞ்சம் அப்போது கொஞ்சமென சிரமப்பட்டு இறங்கி வந்திருக்கிறது. எரி பொருள் விலை ஏற்றத்தில் பெரிதளவில் அழுத்தம் கொண்டு பேசப்படுவது பெட்ரேல் மற்றும் டீசல் எண்ணெய்களின் விலை. மனிதனின் அன்றாட பயணங்களுக்கு முக்கிய பயன்பாட்டு பொருளாக அமைந்துவிட்டது பெட்ரோல் மற்றும் டீசல்.

எண்ணெய் விலையின் ஏற்றத்தால் நமது அன்றாட வாழ்வின் அத்தியாவசிய பொருட்களின் விலையும் ஏறிவிடுவது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிடுகிறது. அத்தி பூத்தாற் போல் தற்சமயம் அரசாங்கம் எண்ணெய் விலையைக் குறைத்து உள்ளது. ஆனால் வியாபாரிகள் பொருட்களின் வி
லையை குறைத்து உள்ளார்களா என்பது சந்தேகமாகவே இருக்கிறது.

நாங்கள் இன்னமும் காத்திருக்கிறோம். அரசாங்கம் இன்னமும் எண்ணெய் விலையை குறைக்க வாய்ப்பிருக்கிறது. முழுமையாக குறைத்தவுடன் நாங்களும் பொருட்களின் விலையை மொத்தமாய் இறக்கிவிடுவோம் என்பது ஒரு சில வியாபார தரப்பினரின் வாதமாக அமைகிறது. இந்தக் காத்திருப்பு எவ்வளவு நாட்களுக்கு அமையும் என யார் அறிவார்? இலவு காத்த கிளியாக ஆவதற்கான வாய்ப்புகளே அதிகமாய் நிரம்பிக் கிடப்பதை நாம் காண்கிறோம்.

தொடர்ந்து பெருநாட் காலங்கள் வந்து கொண்டிருக்கும் இச்சமயத்தில் பொருட்களின் விலை குறைக்கப்பட்டால் மக்களுக்கு அது நிம்மதியைக் கொடுக்கும் விடயமாய் அமையும். ஆனால் பல தரப்பினர்கள் எண்ணெய் விலையை காரணம்காட்டி பொருட்களின் விலையை குறைக்காமல் இருப்பதும், அதைக் காரணம்காட்டி லாபம் ஈட்டுவதில் முனைப்பு கொள்வதும் தண்டிக்கத் தக்கச் செயல். இதை அரசாங்கம் கவனதில் எடுத்துக் கொள்ளுமா? விலை கட்டுபாடு மற்றும் பயனிட்டாளர்கள் அமைச்சு ஏன் இதை காண தவறிவிடுகிறது என்பதும் கேள்விக் குறியாகவே இருக்கிறது.

பெருநாட்கள் வரும் காலங்களில், வாடிக்கையாளர்களின் செலவு செய்யும் மனப்பான்மை வியாபாரிகள் நன்கு அறிந்த விடயம் என்பதில் மாற்றுக் கருத்துக் கிடையாது என்றே சொல்ல வேண்டும். வியாபார தந்திரிகள் இதுவே வாடிக்கையாளர்களை தூண்டில் போடும் தக்க தருணமாய் கருதுகிறார்கள். அங்காடிகளிலும் வியாபார மையங்களிலும் கூட்டங்கள் நிரம்பி வழிகின்றன.

மலிவு விற்பனை, தீபாவளி சிறப்புக் கழிவு, சிறபுக் கழிவு விற்பனை, நம்ப முடியாத விலைக் குறைப்பு என பல விதமான மனதை மயக்கும் வார்த்தைகளில் ஊடகங்கள் கத்திக் கதறுகின்றன. மதி மயங்கி இவ்வாறான விளம்பரங்களால் பாதிக்கப்படுவோர் பலர் இருக்கவே செய்கிறார்கள்.

சிறந்த முறையில் சிந்தித்துச் செயல்படுங்கள் என அறிவுரைகளை அள்ளி வீசும் ஊடகங்களே நம்பிக்கை இல்லா பல விளம்பரங்களுக்கு ஒத்து ஊதுகின்றன. பிள்ளையைக் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டிக் கொள்ளும் இந்நிலையை நம்மில் எத்தனை பேர் சிந்தித்திருப்போம்?

சிந்தித்துச் செலவிடுங்கள் என எத்தனை முறை சொன்னாலும் ஆசைக்கு அடிமைப்பட்டு மனம் போன போக்கில் நாமே நமது செலவுகளை அதிகரித்துக் கொள்கிறோம்.

கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற மலேசிய மாபெரும் வியாபாரச் சந்தையில் கடந்த ஆண்டை விட இவ்வாண்டில் அதிகாமன லாபத்தையே ஈட்டியுள்ளார்கள். கடந்த வருட மொத்த வியாபாரம் 151கோடி ரிங்கிட் எனவும் இவ்வருடம் அது 188கோடி ரிங்கிட் அதிகரித்திருப்பதாகவும் கூறப்படுகிறது. பொருட்களின் விலையேற்றத்தில் இந்நிலை சற்று சிந்திக்க வேண்டிய ஒன்று. பொருளாதார நெருக்கடியை உணராமல் செலவு செய்யும் கலாச்சாரத்தில் நம் நாட்டு மக்கள் ஊறிவிட்டார்களா? அல்லது பணக்கார வர்கம் மட்டும் கண்னை மூடிக் கொண்டு செலவு செய்கிறார்களா?

பொருட்களின் விலையேற்றத்தை பற்றிய செய்தி சேகரிப்புகளில் விலை அதிகரிப்பின் தாக்கத்தினை அதிக அளவில் வெளியிட்டிருக்கும் நம் நாட்டு மக்கள் செலவுகளையும் கண்னை மூடிக் கொண்டு தான் செய்கிறார்களா?

உதாரணத்திற்கு எடுத்துக் கொண்டால் 1 ரிங்கிட்டுக்கு 3 பலகாரங்கள் என விற்பனையாகிக் கொண்டிருந்த காலம் போய் 2 ரிங்கிட்டுக்கு 5 பலகாரங்கள் என ஆகிவிட்டது. சிற்றங்காடி வியாபாரிகள் மாவு விலையை காரணம் காட்டுகிறார்கள். ஓரிரண்டு பலகாரங்கள் வாங்குபவர்களுக்கு ஒரு பலகாரம் 50சென் என விலை போடுகிறார்கள்.

இன்றைய நிலையில் விலைவாசி குறைவதற்கான சாத்தியக் கூறுகள் இம்மியளவும் இல்லையென்றே தெரிகிறது. பொருட்களின் விலை கட்டுபாடு மொத்த வியாபாரிகளின் கையில் இருப்பதாகவும் தங்களால் அதை நிவர்த்தி செய்ய இயலாது என்பதே பல வியாபாரிகளின் விளக்கமாக இருக்கிறது. அப்படியென்றால் மொத்த வியாபாரிகளின் இந்நடவடிக்கை அரசாங்கத்தின் பார்வைக்கு அப்பாற்பட்டுதான் இருக்கிறதா?

மலேசிய பயனிட்டாளர் சங்கத் தலைவரின் விளக்கவுரையில் எரி பொருள் விலை குறைக்கப்பட்டிருப்பினும் பொருட்களின் விலைகளில் மாற்றம் இல்லாது இருப்பதை சங்கம் அறிந்திருப்பதாகவே கூறினார்.

பொருட்களின் விலையை குறைக்கும் கட்டுபாடுகளோ அல்லது சட்டமோ இல்லாமல் இருக்கும் பொருட்டு இப்பிரச்சனைக்கு சரியான தீர்வுகள் எடுக்க முடியாமல் இருப்பதாக அவர் கருத்துரைத்துள்ளார். ஒரு சில அத்தியாவசிய பொருட்களின் விலையை கட்டுபடுத்த மட்டுமே அரசாங்கத்திற்கு உரிமையுள்ளதை இவர்கள் குறிப்பிடுகிறார்கள்.

சரியான முறையில் செலவுகளை கையாளப்படாமல் போகுமாயின் நிச்சயம் நிலைமை இன்னும் மோசமடையும் என்பது வெட்ட வெளிச்சம். விலை குறைப்பிற்கான நாட்களை எதிர்பார்த்துக் காத்திருக்காமல் சிந்தித்துச் செயல்படுவோமாயின் நிச்சயம் இப்பிரச்சனைகளுக்கு தீர்வுகாண முடியும்.

Thursday, October 16, 2008

பொழப்புக் கெட்டுப் போச்சு

கடந்த சில காலமாக உலகளாவிய நிலையில் தேனின் விலை மலையென உயர்ந்து கொண்டே போவது நாம் கண் கூடாகக் காணும் உண்மை. இதற்கு முக்கிய காரணம் பற்றாக்குறை. கடந்த வருடத்தில் மட்டும் அர்ஜெண்டினாவின் தேன் ஏற்றுமதி 20 விழுக்காடு குறைந்துள்ளது.

ஒரு காலத்தில் அர்ஜெண்டினா மக்கள் மகிழ்ச்சிக் கடலில் திளைத்திருந்தார்கள். பூக்கள் நிறைந்து காணும் அர்ஜேண்டினாவின் பெம்பஸ் திடல்வெளியை மாடுகள் கடந்துப் போகினும் கவலையற்று இருந்தார்கள். ஆனால் இன்றோ நிலை தலைகீழாக மாறிவிட்டிருக்கிறது. அவர்கள் முகங்களிலும் சோகத்தின் ரேகைகள் படர்ந்துவிட்டிருக்கிறது. இதற்கு காரணம் தான் என்ன?

எல்லாவற்றுக்கும் பதில் சோயாவை பயிர் செய்ய முனைப்புக் கொண்டிருப்பதே என்றாகிறது. பூக்கள் பூத்துக் குழுங்கிய பகுதிகளில் மாற்றம். பார்க்குமிடமெல்லாம் சோயாச் செடிகள். இதனால் தேன் உற்பத்தியில் முதன்மை பெற்று விளங்கிய அர்ஜெண்டினாவிற்கு பலத்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

விற்பனையாளர்களும் உற்பத்தியாளர்களும் தங்களது உற்பத்தியிடங்களை வேறு இடங்களுக்கு மாற்றியமைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார்கள். ஏற்றுமதியும் உற்பத்தியும் பாதிப்படைந்ததால் வருமானமும் குறைந்துள்ளது.

தேனிக்களும் சரி மாடுகளும் சரி தாவர உற்பத்தியில் இருந்தே உணவுகளை தேடிக் கொள்கின்றன. இதனால் மாடு வளர்க்கும் இடங்களில் தேனி வளர்ப்பும் இலகுவாக அமைந்து வந்தது. ஆனால் இப்போதோ இந்நிலையில் அதீத மாற்றம் ஏற்பட்டுள்ளதை யாராலும் மறுக்க முடியாத ஒன்றாகிவிட்டது.

இதற்கு முக்கிய காரணமாக அவர்கள் குறிப்பிடுவது உலக சந்தையில் ஏற்பட்டுள்ள எரி பொருளின் விலையேற்றம். இதனையடுத்து உணவு பற்றக்குறையைத் தீர்க்கும் பொருட்டு விவசாய பொருட்களை அதிகரிக்கும் முயற்சியாகவும் கடந்த சில வருடங்களாக இம்மாற்றங்கள் பலப்படுத்தப்பட்டு வருகின்றன.

இத்திடீர் மாற்றங்களினால் முன்னூறுக்கும் மேற்பட்ட தேன் உற்பத்தியாளர்கள் பாதிப்படைந்துள்ளனர். இப்போது இருக்கும் திடல் பரப்பு இடமோ தேன் உற்பத்திக்கு போதுமானதாக அமையவில்லை. பூக்கள் குறைவாகவும் வகை குறைந்தும் இருக்கிறது. எதிர் வரும் காலத்தில் காலியான திடல் பரப்பு நிலங்களில் 13 விழுக்காட்டு இடங்களை பயிர் உற்பத்திற்கு ஒதுக்கத் திட்டமிட்டுள்ளதால் இந்நிலமை மேலும் பாதிப்படையலாம் என கருத்து தெரிவிக்கிறார்கள்.

மரபணு மாற்றத்தின் வழி சோயாவின் உற்பத்தி பெருகியுள்ளது. இதனால் சீன தேசத்தின் தேவையை நிறைவு செய்யும் பொருட்டு அதன் உற்பத்தியும் அதிகரிகப்பட்டுள்ளது. ஆரம்ப காலத்தைவிட இரு மடங்கு அதிகமான சோயா உற்பத்தியும் ஏற்றுமதியும் அதிகப்படுத்தப்பட்டுள்ளன.

இதன் தாக்கம் ஏனைய விவசாயிகளையும் விட்டு வைக்கவில்லை என்றே சொல்ல வேண்டும். சோயாவின் உற்பத்திக்கு கிடைக்கும் வரவேற்பினால் அது மற்ற விவசாயத் துறைகளை வெகுவாக பாதித்துள்ளது. பலரும் தங்களது நிலங்களை சோயா உற்பத்திக்கு பயன்படுத்த முனைப்புக் கொண்டுள்ளார்கள்.

சோயா ஏற்றுமதியில் அமெரிக்கா மற்றும் பிரேசில் நாட்டையடுத்து மூன்றாம் இடத்தில் இருக்கிறது அர்ஜண்டினா. 2001 மற்றும் 2002களில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்கு நிவர்த்தியாக அமைந்துள்ளது சோயா ஏற்றுமதி. இதனால் பெம்பஸ் நகரில் செல்வச் செழிப்பும் அதிகரிக்கச் செய்கிறது என்றே சொல்லலாம். ஆனால் கால் நடை மற்றும் தேன் உற்பத்தியாளர்களுக்கோ இந்நிலை பெரும் சவாலாக அமைந்துவிட்டிருக்கிறது.

பெம்பஸ் பகுதிகளில் உள்ள நிலமானது விவசாயத்திற்கு ஏதுவாக இருப்பதினால் சோய உற்பத்திக்கு விவசாயிகள் அதிகமான முதலீட்டை வெளியாக்க அவசியமில்லாமல் இருக்கிறது. ஆனால் தேன் மற்றும் கால் நடை உற்பத்திக்கு இந்நிலை மாறுபட்டு அமைவது இப்பாதிப்புக்கு மற்றுமொரு காரணமென கூறுகிறார்கள் அர்ஜண்டினா தேன் வளர்ப்பு இயக்கத்தினர்.

ஆரம்ப காலங்களில் சராசரியாக ஒரு தேன் கூட்டில் வருடத்திற்கு 60கிலோ தேன் உற்பத்தி செய்து வந்துள்ளனர். ஆனால் இப்போது அந்நிலையை அடைய அதிகமான தேனிக்களும், தேன் கூடுகளும் தேவைப்படுகிறது. இது வேலைப் பளுவையும் செலவையும் கூட்டிவிடுகிறது.

நவீன தொழில்நுட்ப முறை விவசாயத் துறையையும் விட்டு வைக்கவில்லை. விவசாயத்தில் பயன்படுத்தப்படும் இராசாயனக் கலவைகளால் தேனிக்களின் இனப்பெருக்கம் பதிப்பிற்குள்ளாகியுள்ளதையும் யாராலும் மறுக்க முடியாத விடயமாகவே அமைகிறது. அதுமட்டுமின்றி தேனீக்களின் இனப்பெருக்கத்திற்கு போதுமான உணவும் குறைந்து உள்ளதாக இவர்கள் சாடியுள்ளார்கள்.

அர்ஜண்டினாவின் தேன் உற்பத்திக்குண்டான பாதிப்பு மிக குறுகிய காலத்திலும் ஆனால் அதி வேகமாகவும் ஏற்பட்டுள்ளதாக பெட்ரிஸ் எனும் அர்ஜெண்டினா தேன் ஏற்றுமதியாளர் கூறுகிறார்.
தேன் ஏற்றுமதியால் 2007ஆம் ஆண்டு அர்ஜண்டினாவிற்கு கிடைத்த வருமானம் 134கோடி அமெரிக்க டாலர்கள். ஆனால் தானிய ஏற்றுமதிக்கோ இதைவிட பல கோடி அதிகமான வருமானம் கிடைக்கிறது. அதனோடு ஒப்பிடுகையில் தேன் ஏற்றுமதி மிகவும் குறைந்த வருமானத்தை அளிக்கும் துறையாகவே கருதுகிறார்கள்.

இதற்கு நிவாரனம் காண அர்ஜெண்டினா தேன் உற்பத்தியாளர்கள் சங்கம் பெறிதும் முயன்று வருகிறது. "உலகின் விலை மதிப்பில்லா உணவு வகைகளில் தேனுக்கு எப்போதும் நன்மதிப்புள்ளது அதனால் தேன் உற்பத்தியின் வளர்ச்சிக்கு நாங்கள் எப்போதும் நல்ல திட்டங்களையும் அணுகுமுறைகளையும் வழிவகுத்துக் கொண்டிருப்போம்" என்கிறார்கள் இச்சங்கத்தினர்.

Wednesday, October 08, 2008

எண்ணிய எண்ணியாங்கு எய்துப....


JOHN WAYNE

நெப்போலியன் ஹில்ஸ் ஒரு புகழ் பெற்ற எழுத்தாளர். அவருடைய 'பிப்லியோகிரஃப்பி' நூலில் ஒரு முக்கிய நபரைக் குறிப்பிட்டுச் சொல்லி இருப்பார். அக்கதை சுவாரசியமாக இருக்கும்.

அந்தக் கதை மெரியன் மைக்கல் மொரீசன் எனும் இளைஞனை பற்றியது. மெரியன் 1907-ஆம் ஆண்டு மே மாதம் 26-ஆன் திகதி அமெரிக்காவில் பிறந்தார். மெரியனின் ஆறாம் பிராயத்தின் போது அவரது குடும்பம் கலிபோர்னியாவில் இருக்கும் 'மிட்வெஸ்ட்' எனும் இடத்திற்கு புலம்பெயர்ந்தது. சில வருடங்களுக்கு பின் அவர்கள் 'கிளன்டேல்' எனும் ஊருக்கு மீண்டும் மாற்றலாகிச் செல்கிறார்கள். பள்ளிப்படிப்பை முடித்த மெரியன் கால்பந்து விளையாட்டில் ஆர்வம் கொண்டு தனது நேரத்தை விளையாடுவதிலேயே செலவுச் செய்கிறார்.

அவர் பல வேலைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொள்கிறார். எதிலும் பிடிமானமற்றுப் போகிறது. மெரியன் வாழ்க்கையில் வேலை மாற்றம் என்பது இயல்பாகிப் போகிறது. ஒரு சமயம் சமையல் சாதன பொருட்களை விற்பனைச் செய்யும் தொழிலில் ஈடுபடுகிறார்.

மெரியன் காலையில் எழுந்தவுடன் விற்பனைப் பொருட்களை எடுத்துக் கொண்டு புறப்படுவார். வீடு வீடாகச் சென்று பொருளை விளம்பரப்படுத்தி விற்பனைச் செய்ய முனைப்புக் கொள்வார்.

வாழ்க்கையின் மீது அவருக்கு ஏதோ ஒரு வித வெறுப்பு இருந்தே வந்தது. நினைத்தது போல் வாழ்க்கை அமையவில்லை என்பது அவரது ஆதங்கம். எடுக்கும் சன்மானம் வாயிக்கும் வயிற்றுக்குமே போதுமானதாய் இருந்தது. ஒரு சாதாரண விற்பனை முகவர் எனும் பட்சத்தில் அதிகமான வாடிக்கையாளர்களை அவரால் கவர முடியவில்லை. விற்பனையும் மிக மந்தமாக இருந்தது.
NEPOLEON HILL

ஒரு சமயம் மெரியன் ஓர் இல்லத்தரசியிடம் அவரது விற்பனைப் பொருளையும் அதன் உபயோகம் மற்றும் சமைக்கும் முறையையும் விளக்கிக் கொண்டிருந்தார். அச்சமயம் அவ்வில்லத்தரசியின் கணவன் வீட்டிற்குள் நுழைகிறார்.

"மன்னிக்கனும் சார், நான் சமையல் தளவாட பொருட்களின் விற்பனை முகவர், உங்கள் மனைவியிடம் இதன் உபயோகத்தை விளக்கிக் கூறிக் கொண்டிருக்கிறேன்", என்றார்.

"நல்லது, தொடருங்கள்", என அப்பெண்ணின் கணவனும் கூறுகிறார். பக்கத்தில் இருக்கும் நாற்காலியில் அமர்ந்து மெரியனின் பேசுவதை ஆர்வமாகக் கேட்கிறார்.

மெரியனின் விற்பனை வேலை முடிந்ததும் அப்பெண்மணியின் கணவனோடு அமர்ந்து பேசிக் கொண்டிருக்கிறார். அவள் கணவனின் பேச்சு மெரியனை மிகவும் கவர்வதாய் அமைகிறது.

சற்று நேர உரையாடலுக்கு பிறகு மெரியன் தனது பொருட்களை எடுத்துக் கொண்டு அடுத்த வீட்டை நோக்கி நகர்கிறார். அவர் கிளம்பும் முன் மெரியன் தனது வியாபார யுக்தியை அதிகரித்துக் கொள்ள சில அணுகு முறைகளைச் சொல்லிக் கொடுக்கிறார் அப்பெண்ணின் கணவன். முக்கியமாக எண்ணங்களும் நமது நடவடிக்கைகளும் நல்ல விதமாய் அமைந்தால் அதுவே வாழ்க்கைக்கு நல்ல விதை என்கிறார்.

"உனது இலட்சியம் என்ன? உனது இலட்சியத்தை நீ முடிவு செய்துவிட்டால், உன் முழு கவனமும் அதில் இருக்கட்டும், அதன் இலக்கை அடைய முழு மூச்சாக அதில் ஈடுபடு. நீ என்ன செய்வதாக இருந்தாலும் சரி, ஒரு விற்பனை முகவராகவோ அல்லது வேறு எதுவாக இருப்பினும் பிரச்சனையல்ல, இலட்சியம் ஒன்றே முக்கியம். உனது இலட்சியத்தை அடையும் வரை முயற்சி செய்து கொண்டிரு. அது மட்டுமே வெற்றியின் திறவு கோல்", என அப்பெண்ணின் கணவன் சொல்கிறார்.

மெரியன் நன்றி கூறி அங்கிருந்து கிளம்புகிறார். விற்பனை முகவராக சில காலம் இருக்கிறார். விற்பனையாளராக தனது இலக்கை அடைய முடியாமல் அவ்வேலையை விட்டுவிடுகிறார்.

மனம் நொந்துப் போன மெரியன் வேறு வேலைத் தேடி அழைகிறார். இம்முறை நடிப்புத் துறையைத் தேர்வு செய்கிறார். நடிப்புத் துறையில் தான் வெற்றி கொள்ள முடியும் என முழு மூச்சாக இறங்குகிறார்.

ஆரம்பக் காலத்தில் சிறுச் சிறு கொசுறான வேடங்கள் அவருக்குக் கொடுக்கப்படுகிறது. நாளுக்கு நாள் அவரின் திறன் மெருகேற்றம் காண்கிறது. துணை நடிகராகவும் அதன் பின் முக்கிய கதாப்பாத்திரமாகவும் பொறுப்பேற்று நடிக்கலானார்.

பின்னாளில் அந்த இளைஞன் உலக பிரசித்திப் பெற்ற முக்கிய நடிகர்களின் வரிசையில் இருப்பதை உலகம் காண்கிறது.

நடிப்புத் துறையில் ஓய்வு பெறும் தருணத்தில் 200 படங்களை நடித்திருந்தார் மெரியன். மெரியன் எனும் விற்பனை முகவராக இருந்தவர் நடிப்புலகில் கொடி நாட்டி 'JOHN WAYNE' எனும் பெயரில் அனைவராலும் அறியப்பட்டு வந்தார். நண்பர்கள் மத்தியில் இவரது பெயர் 'THE DUKE'.

தான் கோடிஸ்வரனாக ஆக வேண்டும் என்ற அவரது எண்ணம் சாதனைப் பெற்றிருந்தது. ஆனால் அவருக்கு மேலும் ஒரு ஆசை சிறகடித்துக் கொண்டு இருந்தது. சிறந்த நடிகராக வேண்டும் என்ற ஆசை அது. 1970-ஆம் ஆண்டு 'TRUE GRIT' எனும் படத்தின் வழி அவ்வாசை நிறைவேறியது. அச்சமயம் அவருக்கு 64 வயது.

ஆஸ்கார் எனும் திரையுலகத்தாரின் இலட்சிய விருதை அவர் வாங்கிய போது ஒரு செய்தியாளர் அவரிடம் கேட்டார்,

"உங்கள் வெற்றிக்கு தூண்டு கோளாக இருந்தவர் யார்?"

40 வருடங்களுக்கு முன் விற்பனை முகவராக இருந்த சமயம் தானக்கு நடந்த, தனது இலட்சியங்களின் தூண்டு கோளாக இருந்த அம்மனிதனை சந்தித்த சம்பவத்தினைக் குறிப்பிட்டார்.

"பிறகு அவரை நீங்கள் சந்தித்தீர்களா? அவர் யார் என தெரியுமா?"

"ஆம், நிச்சயமாக தெரியும், அவர் பெயர் NEPOLEON HILL, THINK AND GROW RICH ஏனும் புத்தகத்தை எழுதியவர்" என்றார் மெரியன்.

நெப்போலியன் 1970-ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் நாள் மரணமடைந்தார். அவர் இறக்கும் தருவாயில் மெரியனை சந்திக்க நினைத்தார்.

"டாக் நாம் நினைத்ததை சாதித்துவிட்டோம்மல்லவா" என மரணப் படுக்கையில் இருந்த நெப்போலியன் மெரியனிடம் கேட்டார்.

"ஆம் நெப்போலியன், ஒருவன் வாழ்வில் சாதித்த இலட்சியங்களைவிட அவன் சுக துக்கங்களிலும் முன்னேற்றத்திலும் பங்குக் கொள்ளும் நண்பனே சிறந்தவன், நான் உன்னை என் நண்பன் எனச் சொல்லிக் கொள்வதில் மிகவும் பெருமைப் படுகிறேன்" என அவரது கைகளைப் பற்றி கண் கலங்கினார்.

நமது வாழ்க்கையில் சில நேரங்களில் பணம் மதிப்பற்றுப் போகிறது. செல்வத்தை சம்பாதிக்கிறோம், ஆனால் அதன் நிலையற்ற தன்மையை நமக்கு பல வேளைகளில் உணர்த்தத் தவறுவதில்லை. உண்மையான நட்பு என்றுமே நிலையானது. அவர்கள் பிரிந்தாலும் அவர்களது நினைவுகள் நிலைத்து நிற்கும்.

பதிவின் நோக்கம் எங்கோ சென்றுவிட்டது. மேற்கண்ட சம்பவத்தை எதற்காக எழுதினேன். THINK AND GROW RICH புத்தகத்தை குறிப்பிடவே. அப்புத்தகத்தை தொடுத்து ஏதோ ஒரு வகையில் லேசாக ஒட்டி இருக்கும் சம்பவம் தான் மேற்கண்டவை எனும் எண்ணத்தில் எழுதிவிட்டேன்.

THINK AND GROW RICH புத்தகத்தை நம்மில் பலரும் படித்துவிட்டிருப்போம். சமீபத்தில் டாக்டர் ஜேபியின் நம்பிக்கை எனும் தலைப்பிலான ஒலி வடிவ புத்தகத்தில் கூட இப்புத்தகத்தை குறிப்பிட்டிருப்பார். இது ஒரு முறை வாசித்து வைத்துவிடும் புத்தகம் இல்லை. மீண்டும் மீண்டும் படிக்க ஒரு புது அனுபவத்தையும் உற்சாகத்தையும் தூண்டும் புத்தகம்.

THINK AND GROW RICH இணையத்தில் இலவசமாகக் கிடைக்கிறது. இங்கே தறவிரக்கம் செய்து கொள்ளவும் முடியும்.

நல்ல புத்தகங்கள் சிறந்த நண்பன். இப்புத்தகம் பலரது வாழ்க்கையில் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. இருபதாம் நூற்றாண்டின் தலைச் சிறந்த புத்தகமாக கருதப்படுகிறது.

Definiteness of Purpose

Definiteness of Purpose
is the starting point of all achievement.

Don't be like a ship at sea without a rudder,
powerless and direcionless.

Decide what you want, find out how to get it,
and then take daily action toward achieving your goal.
You will get exactly and only
what you ask and work for.
Make up your mind today to go after it! Do it now!

Successful people move on their own initiative,
but they know where they are going before they start. -NEPOLEON HILL