Thursday, July 30, 2009

கொள்ளையிட்டு அரசாங்கம் நடத்தும் நாடு

கலையகம் ஆசிரியர் கலையரசனுடனான கேள்வி பதில் முதல் பகுதியை படிக்க இங்கே சொடுக்கவும்.

11) இன்றைய நிலையில் இணைய தளம் மாற்று ஊடகமாக அமைந்திருக்கிறதென்பதை மறுக்க இயலாது. இதன் வீச்சு மக்களின் அரசியல் சிந்தனைக்கும் மாற்றங்களுக்கும் தகுந்த ஒன்றுதானா?

பெரும்பான்மை மக்கள் தகவல் அறிவதற்காக இன்றும் வானொலி, தொலைக்காட்சி, பத்திரிகைகளையே நம்பி இருக்கின்றனர். இணையத்தளத்தை ஊடகமாக பாவிப்பது ஓரளவு படித்த மத்திய தர வர்க்கத்தை சேர்ந்தவர்கள். வேறோருவிதமாக சொன்னால், மத்தியதர வர்க்கத்தின் எண்ணவோட்டத்தை இணையம் பிரதிபலிக்கின்றது. இவர்களின் எண்ணிக்கை மொத்த சனத்தொகையில் மிகக் குறைவு. 5% இருந்தாலே அபூர்வம். இணையத்தில் பலரது வரவேற்பை பெற்று அமர்க்களமாக முன்வைக்கப்படும் எதிர்வுகூறல்கள் பின்னர் பொய்த்துப் போவதை அனுபவத்தில் கண்டு கொள்ளலாம். இவர்களது இணைய உலகம், பெரும்பான்மை மக்களின் நிஜ உலகில் இருந்து அந்நியப்பட்டிருப்பதே இதற்கு காரணம். சனத்தொகையில் முக்கால்வாசிப்பேர் இணையத்தை பயன்படுத்தும் மேலை நாடுகளில் அது ஓரளவு மாற்றத்தை கொண்டு வரலாம். இருப்பினும் அங்கேயும் ஏற்கனவே அறிமுகமான வெகுஜன ஊடக கலாச்சாரம் ஆட்டிப்படைக்கின்றது. நாம் நேரில் காணும் சமுதாயத்தின் கண்ணாடியாகத் தான் இணையமும் அமைந்துள்ளது.

12) ஒஸ்திரியோடொவிஸ்க்கிய் போன்ற நாவல்கள் புரட்சிகளைப் பற்றிய பார்வையை மக்களிடம் எடுத்துரைக்க பங்காற்றியவற்றுள் ஒன்று. தற்சமயம் அது அவ்வளவாக பேசப்படும் ஒன்றல்லாமல் போய்விட்டது. அது ஏன்?

ஒரு காலம் இருந்தது. சோவியத் ஒன்றியம் என்ற வல்லரசின் செல்வாக்கு காரணமாக பல்வேறு மூன்றாம் உலக நாடுகளிலும் சோஷலிசக் கருத்துகள் பரவியிருந்தன. பல நாடுகளில் வெகுஜன அரசியல்வாதிகள் சோஷலிசம் பேசினார்கள். உதாரணத்திற்கு, இந்தியாவில் நேரு. அந்தக்காலங்களில் சோவியத் தனது நட்புனாடுகளில் புரட்சிகர நாவல்களை பரப்ப முடிந்தது. இன்று காலம் மாறிவிட்டது. அமெரிக்காவை முன்னுதாரணமாக கொண்டு பின்பற்றும் நாடுகள் அதிகரித்து வருகின்றன. அரசு எவ்வழியோ, குடிமக்களும் மாறி விட்டார்கள்.

13) உங்களைக் கவர்ந்த அரசியல் புத்தகங்கள் அல்லது நிச்சயம் படிக்க வேண்டியவற்றுள் எதை குறிப்பிடுவீர்கள்?

மார்க்சிம் கார்கி எழுதிய "யான் பயின்ற பல்கலைக்கழகங்கள்". ஒரு மனிதன் தனது சொந்த அனுபவங்களில் இருந்து எவ்வளவு விஷயத்தை கற்றுக் கொள்ளலாம் எனக் கூறும் அவரது சுயசரிதை. லாஹிர சாங்கிருத்தையர் எழுதிய "வால்காவில் இருந்து கங்கை வரை". மனித இனம் எவ்வாறு தோன்றி பரி
ணமித்தது என்பதை சுவையாக கதை போல சொல்லியிருக்கிறார் ஆசிரியர். மேற்குறிப்பிட்ட நாவல்களை சிறுவயதில் வாசித்திருந்த போதிலும், இத்தனை வருடங்களுக்குப் பின்னரும் மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டுகின்றன.

14) கடற் கொள்ளையிட்டு அரசாங்கம் நடத்தும் நாடுகளென சிங்கபூர் போன்றவற்றை நீங்கள் குறிப்பிட்டு எழுதியது சர்ச்சயை ஏற்படுத்திய ஒன்று. இது பலராலும் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றாக இருக்கலாம். உங்கள் நிலைபாடு என்ன?

உலகில் எல்லோரும் ஏற்றுக் கொள்ளும் உண்மை என்ற ஒன்று எங்காவது இருக்கிறதா? ஒவ்வொரு பணக்கார நாட்டிற்கும் இருண்ட பக்கம் ஒன்றுண்டு. சாதாரண கிரிமினல் குறுக்கு வழயில் பணம் சம்பாதித்து சமூகத்தில் பெரும்புள்ளியாக வருவது போலத் தான் நாடுகளும். மேன் நிலைக்கு வந்த பிறகு எல்லோரும் தமது கசப்பான கடந்த காலத்தை மறைப்பது இயற்கை தானே? இதிலே சிங்கப்பூர் மட்டும் விதிவிலக்கா?

15) மலேசியாவில் வெகுண்டெழுந்த ஹிண்ட்டிராஃப் இயக்கம் தற்சமயம் ஒரு அரசியல் கட்சியென மாறிவிட்டிருக்கிறது. அதற்குள் சில பிரிவினைகள் வேறு. இவ்வியகத்தினால் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களை மறுக்க இயலாது. நெடுநாளைய அரசியல் மாற்றத்துக்கு இது போன்ற இயக்கங்களின் நடவடிக்கை சரியான ஒன்றென கருதுகிறீர்களா?

பொருளாதாரத்தில் பின் தங்கியிருக்கும் இந்திய வம்சாவழியினரின் வாழ்க்கைத் தரம் உயர்த்தப்பட வேண்டும். அரசு மலாய் மக்களுக்கு முன்னுரிமை கொடுக்கும் இனப் பாகுபாட்டை உடனடியாக நிறுத்த வேண்டும். அனைத்து பிரஜைகளும் சமமாக நடத்தப்பட வேண்டும். இந்த கோரிக்கைகள் நியாயமானவை. நாம் விரும்புகிறோமோ இல்லையோ, மலாய் பெரும்பான்மையினர் அரசு பக்கம் நிற்பதை மறுக்க முடியாது. (அரசு வழங்கும் சலுகைகள் முக்கிய காரணம்) இதிலே கவனிக்கப்பட வேண்டியது, பெரும்பான்மை மக்களிடையே எமக்கான ஆதரவு சக்திகளை திரட்டிக் கொள்வது முக்கியம். ஹிண்ட்ராப் அப்படியான செயல் திட்டம் வைத்திருந்ததா? இவர்களது ஆரம்ப கட்ட போராட்டமே பிரிட்டிஷ் தூதுவராலயத்தை நோக்கியதாக, பிரிட்டிஷ் அரசிடம் நஷ்ட ஈடு கோருவதாகத் தான் அமைந்திருந்தது. தங்கள் கோரிக்கைக்கு கனவான்களின் தேசமான பிரிட்டன் செவி கொடுக்கும் என்ற வெகுளித்தனம் தான் காரணம். அது தான் போகட்டும், பெயரிலேயே "இந்து" அடையாளத்தை புகுத்தியதன் மூலம், கிறிஸ்தவ, இஸ்லாமிய மதங்களை சேர்ந்த இந்திய வம்சாவளியினரை எட்டி நிற்க வைத்தார்கள். ஹிண்ட்ராப் அறிக்கையில் பிற மலேசிய சிறுபான்மை மக்களான சீனர்கள், மற்றும் சாராவாக் பிரதேசத்தில் வாழும் பழங்குடியினருடன் ஒன்றிணைந்த போராட்டம் பற்றிய குறிப்புகள் இல்லை. இந்தியவம்சாவளி சமூகத்தின் பொதுப் பிரச்சினை, இந்து மதத்தின் பிரச்சினையாக திசைதிருப்பி விடப்பட்டது. தனது அதிகாரத்தை நிலை நிறுத்த, இஸ்லாமிய அடிப்படைவாதத்தை ஆதரித்து வரும் அரசின் நோக்கமும் அது தான்.

16) பொருளாதார நிவர்த்திக்காக வளர்ச்சியடைந்த நாடுகள் பல திட்டங்களில் முன்னோக்கியிருக்கும் இவ்வேளையில் அவற்றிக்கு பலிக் கடாவாக மூன்றாம் உலக நாடுகள் சில பாதிப்படைவதை அந்நாடுகளின் அரசியல் தலைவர்கள் உணராமல் தான் இருக்கிறார்களோ?

அரசியல் தலைவர்களில் பல பொருளாதார நிபுணர்கள் இருக்கிறார்கள். சாமானிய மக்களுக்கு சிக்கலான விஷயமெல்லாம் அவர்களுக்கு நன்றாகவே புரியும். இதிலே கவனிக்கப்பட வேண்டியது, அரசியல் என்பது என்ன தான் பொதுநலம் சார்ந்த துறையாக இருப்பினும், அதை நடத்துபவர்கள் தமது சுயநலம் பற்றி மட்டுமே சிந்திக்கின்றனர். சனத்தொகையில் அரைவாசி வறுமையில் உழன்றாலும் தனது குடும்பம் நன்றாக வாழ்கிறது என்று திருப்திப்படும் தலைவர்களே அதிகம். அவர்களுக்கு அடுத்ததாக இந்தப் பிரச்சினைகளை புரிந்து கொள்ளக் கூடியவர்கள், உயர்கல்வி கற்கும் வாய்ப்பை பெற்ற நடுத்தர வர்க்கம். அவர்களுக்கும் அதிகம் உடலுழைப்பைக் கோராத தொழில், அதற்கேற்ற ஊதியம் போன்றன கிடைத்துக் கொண்டிருக்கும் வரை வாய் திறக்க மாட்டார்கள். கிராமத்தில் இருக்கும் சாதாரண குப்பனும், சுப்பனும், ஆண்டவரின் சாபத்திற்கு ஆளாகி விட்டோமா, என்று தான் புரிந்து கொள்வார்கள்.

17) ஒரு பக்க பார்வையைக் கொண்ட உலக அரசியலை பின் நவீனதுவம் மறுக்கிறது. பல திறப்பட்ட சிந்தனைகளையும் மாற்றுக் கருத்தையும் அது ஆதரிப்பதாக இருப்பதால் ஒரு நிலை கலாச்சார பிடியில் இருப்பவர்களால் அதை ஏற்றுக் கொள்ள முடியாமல் போகும் நிலை அல்லது கலாச்சார குழப்பம் ஏற்பட்டிருப்பதாக கருதுகிறீர்களா?

இருண்ட காலம், மீளுயிர்ப்புக் காலம், நவீன காலம் என்று மக்களின் பண்பாடு சார்ந்த வளர்ச்சியை வகைப்படுத்துகிறார்கள். அந்த வகையில் இப்போது நடப்பது பின் நவீனத்துவக் காலம். இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் சித்தாந்தம் தேடி தவித்துக் கொண்டிருந்த புத்திஜீவிகள் பின் நவீனத்துவ கருத்தியலை தோற்றுவித்தார்கள். கலாச்சாரக் குழப்பம் ஏற்பட்டதாக ஒரு மாயை நிலவியது உண்மை தான். ஆனால் பின் நவீனத்துவமே ஒரு கலாச்சாரமாகிப் போனதைக் காண்கிறேன். எப்போதும் உலக வரலாற்றில் குறிப்பிட்ட சில காலம் வெற்றிடம் ஏற்படும். முன்பு இருந்த ஆதிக்க கலாச்சாரத்திற்கும், பின்னர் வரப்போகும் புதிய கலாச்சாரத்திற்கும் இடையில் தோன்றும் சிறிது கால இடைவெளியில் பல திறப்பட்ட சிந்தனையையும் ஏற்றுக் கொள்ளும் கலாச்சாரம் நிலவும்.

18) ஏகப்பட்ட சமரசங்களுக்கிடையே தன்னை அமெரிக்க ஜனாதிபதி பதவிக்கு ஒபாமா தகுதியாக்கிக் கொண்டார். உலக மக்களுக்கு இவரிடம் இருக்கும் எதிர்ப்பார்ப்புகள் அதிகமான ஒன்றே. தனி மனிதராக ஒபாமா விரும்பினாலும் அவர் இருக்கும் அமைப்பின் செல்வாக்கை மீறி அவர் செயல்படுவது சாத்தியம் தானா?

அவர் எதை சாதிக்க விரும்பினார்? ஒபாமா வருவதற்கு முன்னரே அதிகார மட்டத்தில் சில மாற்றங்கள் தேவை என உணரப்பட்டது. அதற்கேற்ற ஆளாக ஒபாமா தெரிவு செய்யப்பட்டார். ஜனாதிபதியாக யார் வந்தாலும், அரச இயந்திரம் எப்போதும் போல இயங்கிக் கொண்டு தான் இருக்கும். கொள்கை வகுக்கும் அரசாங்க உயர் அதிகாரிகளை மக்கள் தெரிவு செய்வதில்லை. உலக மக்களின் அளவுக்கதிகமான எதிர்பார்ப்பு, ஊடகங்கள் கிளப்பி விட்ட வெப்பத்தின் வெளிப்பாடு.

19) இன்றய அரசியலில் உணவு தட்டுப்பாடு சம்பந்தமான வாதங்கள் அதிகமாகவே இருக்கிறது. மக்களின் 'லிவிங் கோஸ்ட்' அதிகமாகியிருக்கும் அதே வேலையில் அதற்கான முன்னேற்பாடுகள் மந்தகர நிலையில் இருக்கிறதே?

பல நாடுகளில் பஞ்சம் ஏற்பட்ட காலங்களில், சில நிறுவனங்கள் கொள்ளை லாபம் சம்பாதித்தன. அதே போல உணவுத் தட்டுபாடு நிலவுவது, உணவு உற்பத்தி, விநியோகத் துறையில் முதலீடு செய்திருக்கலாம் நிறுவனங்களுக்கு கிடைத்த வாய்ப்பாக கருதப்படுகின்றது. எப்போதும் லாபத்தை குறிக்கோளாக கொண்ட வர்த்தக நிறுவனங்கள், மக்கள் நலன் குறித்து சிந்திப்பதில்லை. பண வீக்கத்தால் வாழ்க்கைச் செலவு அதிகமாக உள்ளது. இருப்பினும் உணவு போன்ற அத்தியாவசிய பொருட்களை மக்கள் என்ன விலை கொடுத்தேனும் வாங்கியாக வேண்டும். அதே நேரம் பன்முகப் பட்ட நுகர்வுப் பொருளாதாரம் பாதிக்கப்படுவது உண்மை தான். ஆனால் தற்போது நடப்பது பொருளாதார மறுசீரமைப்பு. இதன் விளைவுகளை சில வருடங்கள் கழித்து உணரலாம்.

20) புத்தகம் ஒன்று எழுதி வருவதாக அறிகிறேன். அதைப் பற்றிய மோலோட்ட தகவல்களை அல்லது எதை சார்ந்தது என்பதையோ குறிப்பிட முடியுமா?

ஐரோப்பிய அகதி வாழ்வின் அவலங்களைப் பற்றிய நூல் ஒன்றை எழுதிக் கொண்டிருக்கிறேன். ஈழப்போர் காரணமாக, ஒரு அகதி எவ்வாறு புலம்பெயர நிர்ப்பந்திக்கப்படுகிறார். ஐரோப்பிய நாடொன்றில் அடைக்கலம் கோரும் வரை இடையறாத பயணத்தில் ஏற்படும் இன்னல்கள். புகலிடம் கோரிய நாட்டில் அதிகாரிகளின் திமிரான மெத்தனப் போக்கு. ஐரோப்பிய அரசுகளின் உள் நோக்கம் கொண்ட அகதி அரசியல். இவை போன்ற பல தகவல்களை விரிவாக வழங்க முயற்சித்துள்ளேன். இந்த நூலில் குறிப்பிடப்படும் பல சம்பவங்கள் சொந்த அனுபவத்தினூடாக பெறப்பட்டவை. நூல் வெளிவந்த பின்னர், அதனை பிற மொழிகளில் மொழிபெயர்க்க சில நண்பர்கள் விரும்புகின்றனர். இதை விட நான் ஏற்கனவே எழுதிய கட்டுரைகளையும் நூலாக வெளியிட இரண்டு பதிப்பகங்கள் முன்வந்துள்ளன. அனேகமாக மூன்று நூல்களையும் அடுத்த வருட தொடக்கத்தில் சந்தையில் வாங்கலா
ம்.

21) இந்தியா வல்லரசாகுமா?

அயலில் இருக்கும் குட்டி நாடுகளான இலங்கை, நேபாளம், மாலத்தீவு போன்ற நாடுகளைப் பொறுத்த வரை இந்தியா எப்போதும் வல்லரசு தான். அமெரிக்காவின் நிழலின் கீழ் பிராந்திய வல்லரசாக இருக்கின்றது. இதைத் தவிர உலக வல்லரசாவது நடக்கக் கூடிய விஷயமல்ல. அணு குண்டு வைத்திருப்பதற்காக ஒரு நாடு வல்லரசாகி விடுமானால், பாகிஸ்தான், வட-கொரியா, இஸ்ரேல் போன்ற நாடுகளும் வல்லரசுகள் தான்.

22) நீங்கள் பார்த்து வியந்த நாடு?

என்னைக் கவர்ந்த நாடு எகிப்து. ஆப்பிரிக்கக் கண்டத்தில், ஐந்தாயிரம் ஆண்டிற்கு முந்திய நாகரீகம் இன்றைக்கும் சிதைவுறாமல் பார்த்து வியக்கும் வண்ணம் நிலைத்து நிற்கின்றது. இன்றும் புதிது புதிதாக கண்டுபிடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

23) வலையில் எழுதும் கட்டுரைகளுக்கு மாட்டி விடுவதற்கென்றே சில கேள்விகள் கேட்கப்படும் போது கோபப் பட்டதுண்டா?

ஒன்றுமே தெரியாதவர்களுக்கு எதையும் சொல்லிப் புரிய வைக்கலாம். ஆனால் சில பேர் புரிந்தாலும் புரியாத மாதிரி பிடிவாதமாக இருப்பார்கள். அப்படியானவர்கள் எரிச்சலூட்டுகின்றனர். இது வலையில் வருபவர்கள் மட்டுமல்ல, சில நண்பர்கள், உறவினர்கள் கூட அப்படி நடந்து கொள்ளகின்றனர்.

24) வளர்ந்த நாடுகளின் இன்றய பொருளாதார வளர்ச்சி திட்டத்தில் மூன்றாம் உலக நாடு ஒன்றும் அதீத வளர்ச்சியடையும் என குறிப்பிட்டிருந்தீர்கள். எந்த நாடாக இருக்கக் கூடும்?

எந்த நாட்டையும் குறிப்பிட்டு எதிர்வு கூற விரும்பவில்லை. தென் அமெரிக்காவில் வெனிசுவேலா, ஆப்பிரிக்காவில் லிபியா, ஆசியாவில் சீனா ஆகிய நாடுகள் தற்போது உள்ள உலக பொருளாதார ஒழுங்கிற்கு நிகரான மாற்றுத் திட்டங்களை முன்வைத்து, செயல்படுத்தி வருகின்றன. அனேகமாக எல்லோரும் டாலர் வீழ்ச்சியடையும் நாளை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். இன்றிருக்கும் உலகம் நாளை இருக்கப் போவதில்லை.

25) மூன்றாம் உலக யுத்தம் பற்றிய உங்கள் பார்வை?

முதலில் உலக யுத்தம் என்றால் என்ன? ஐரோப்பிய நாடுகள் அதிகாரப் போட்டிக்காக அணி பிரிந்து போரிட்டார்கள். பின்னர் போரினால் ஆன பயன் எதுவுமில்லை என்று உணர்ந்து, ஒன்று சேர்ந்து ஐரோப்பிய ஒன்றியத்தை அமைத்தார்கள். ஐரோப்பியர்கள் போரின்றி சமாதானமாக வாழ்வதால், அதை உலக சமாதானமாக அர்த்தப் படுத்திக் கொள்ளக் கூடாது. அவர்கள் தங்களது போர்களை மூன்றாம் உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகின்றனர். மூன்றாம் உலக யுத்தம் எப்போதோ தொடங்கி இன்னமும் நடந்து கொண்டிருக்கிறது. நாம் தான் அவற்றை ஒன்று சேர்த்துப் பார்த்து புரிந்து கொள்வதில்லை.

Tuesday, July 28, 2009

Political Talk with கலையரசன்

கலையகம் வலைப்பதிவின் ஆசிரியர் கலையரசனுடனான சிறு கலந்துரையாடைலை இங்கு கொடுக்க விரும்புகிறேன். நண்பர் கலையரசனைப் பற்றிய சிறு குறிப்பு:

இலங்கையின் தமிழர் தாயகப் பிரதேசமாக கருதப்படும் வடபுலத்தை சேர்ந்திருந்த போதிலும், தலைநகர் கொழும்பில் நீண்ட காலம் வாழ்ந்திருக்கிறர். தமிழர் விரோத கலவரங்கள் காரணமாக யாழ்ப்பாணத்திற்கு இடம்பெயர்ந்த போதிலும், பின்னர் பாதுகாப்பற்ற யுத்த சூழல் காரணமாக ஐரோப்பாவிற்கு புலம்பெயர்ந்தார். அவ்வாறு ஆரம்பித்த புலம்பெயர் படலம், பல்வேறு நாடுகளுக்கூடாக நாடோடியாக அலைய வைத்தது. எட்டு ஆண்டுகளாக நீடித்த அகதி வாழ்வின் இறுதியில், ஒரு பிரஜைக்கான உரிமைகளை மீளப் பெற்றுக் கொண்டார். அனுபவப் பாடங்களை கற்றுத்தந்த நாடோடி வாழ்க்கை, இருபதிற்கும் மேற்பட்ட நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்யும் உத்வேகத்தை கொடுத்ததிருக்கிறது.

சென்ற நாடுகள்: இந்தியா, பல ஐரோப்பிய நாடுகள், எகிப்து, மொரோக்கோ, கியூபா

மொழி பாண்டித்தியம்: தமிழ், சிங்களம், ஆங்கிலம், டச்சு, ஜெர்மன், பிரெஞ்சு, ஸ்பெய்ன், கிரேக்க மொழி பயின்று வருகிறார்.

அவரைப் பற்றி அவர் கூறுவது:

இனவாதப் போரினால் விரட்டப்பட்டு சுவிட்சர்லாந்தில் புகுந்த நேரம், தமிழ் பத்திரிகை ஒன்றை வெளியிட்டோம். ஐரோப்பிய நாடொன்றில் அகதிகளினதும், வெளிநாட்டவர்களினதும் பிரச்சினைகளை தமிழருக்கு அறியத்தரும் நோக்கில் வெளிவந்த அந்த பத்திரிகை மூலமாக, மேற்கு ஐரோப்பாவின் குடியேற்ற சட்டங்கள், அரசின் வெளிநாட்டவர் குறித்த நிலைப்பாடு குறித்த அறிமுகம் ஏற்பட்டது. தொடக்கத்தில் சில கவிதைகள், கதைகள் என்று கிறுக்கிக் கொண்டிருந்த என்னை, பத்திரிகைத்துறை சமகால அரசியல் ஆய்வுக் கட்டுரைகளை எழுத வைத்தது. பரந்துபட்ட மக்களுடன் தொடர்பு கொள்ள வைக்கும் தொலைத் தொடர்பு சாதனங்களின் சக்தியையும் அறிந்து கொண்டேன்.

சுவிஸ் அரசின் பகிரங்கமான இனப்பாகுபாடு அரசியலால் வெறுப்புற்று, நெதர்லாந்தில் தஞ்சம் கோரிய காலத்திலும், அகதியாக இருந்த காரணத்தால், அந்நாட்டு சட்டங்களை, வெளிவிவகார அரசியலை கற்றுக்கொள்ளும் நிர்ப்பந்தம் ஏற்பட்டது. அகதி முகாம்களில் இருந்த காலத்தில் பல்வேறு ஐரோப்பிய, ஆசிய, ஆப்பிரிக்க, லத்தீன் அமெரிக்க அரசியல் அகதிகளில் பரிச்சயம் ஏற்பட்டது. பன்னாட்டு நண்பர்கள் மூலம் சர்வதேச பிரச்சினைகளைப் பற்றிய ஆழ்ந்த அறிவு பெற முடிந்தது. சர்வதேச அமைப்புகளை சேர்ந்தவர்களின் நட்பு என்பன, மூன்றாம் உலக நாடுகளின் பிரச்சினைகளுக்காக போராடும் அனுபவத்தை கொடுத்தது. எனது அனுபவங்களினூடாக பெற்றுக்கொண்ட, உலக நாடுகளைப் பற்றிய ஆழமான புரிதல் காரணமாக, ஐரோப்பிய மையவாத கண்ணோட்டத்தை திருப்பிப்போடும் உத்வேகம் ஏற்பட்டது. பன்னாட்டு பிரச்சினைகளுடன் எமக்குள்ள ஒருமைப்பாட்டையும், அவற்றில் இருந்து பாடம் கற்றுக்கொள்ளலாம் என்பதையும் அறியத்தருதல். நான் கண்ட உண்மைகளை பரந்துபட்ட வெகுஜன தளத்திற்கு கொண்டு செல்லும் ஊடகமாக எனது எழுத்துக்களை கருதுகிறேன்.

1) சமீபத்திய உலக அரசியல் மக்கள் மத்தியில் மிகப் பெரும் மன உளைச்சளை ஏற்படுத்தி இருக்கிறதென்பதை மறுக்க இயலாது. புரிந்தும் புரியாமலும் கூட மக்கள் அதில் உழன்று போய் இருப்பதைப் பற்றிய உங்கள் கருத்து என்ன?
எத்தகைய மக்கள் என்பது இங்கே பார்க்கப்பட வேண்டும். மக்கள் எல்லோரும் ஒன்றல்ல. பல வகையினர். அவர்களது அரசியல் சார்புத்தன்மையும் வேறுபடுகின்றது. உலக அரசியலில் சாதகமான பக்கத்திலும்,
பாதகமான பக்கத்தில் மக்கள் பிரிந்து வாழ்கின்றனர். பாதிக்கப்படும் தரப்பை சேர்ந்த மக்கள் மன உளைச்சலுக்கு உள்ளாவது இயற்கை. அதற்கு அவர்களது எதிர்பார்ப்புகள் கைகூடி வராமையும் ஒரு காரணம். குறிப்பாக பனிப்போரின் முடிவில் இருந்து புதிய சகாப்தம் ஆரம்பமாகியது. எதிர்க்க ஆளில்லாத ஒரேயொரு வல்லரசாக அமெரிக்கா அறிவிக்கப்பட்ட போது, பலர் அதை தேவதூதனின் நற்செய்தியாக புரிந்து கொண்டார்கள்.

ஒவ்வொரு நாட்டிலும் சாமானிய மக்களின் கருத்தியலை தீர்மானிப்பது, அந்நாட்டின் படித்த மத்தியதர வர்க்கம். அவர்களது வர்க்க அடிப்படையில் இருந்து கணித்து, அமெரிக்கா பல அற்புதங்களை நிகழ்த்த வல்லது என தீர்மானித்தார்கள். ஆனால் அமெரிக்கா தனது சுயநலன் சார்ந்து மட்டுமே சிந்திக்கின்றது என காலந்தாழ்த்தி புரிந்து கொண்டார்கள். மக்கள் அதில் உழல்வது மக்களின் தவறல்ல. அவர்களை பிரதிநிதித்துவப் படுத்தும் ஆளும் வர்க்கம் சர்வதேச மூலதனத்தின் விதிகளுக்கு கட்டுப்பட்டே செயல்பட வேண்டிய நிர்ப்பந்தம்.

2) குறிப்பிட்ட மதத்தால் நிர்ணயிக்கப்பட்ட அரசியல், குறிப்பிட்ட இனத்தால் நிர்ணயிக்கப்பட்ட அரசியல் என இவ்விரண்டிற்கும் உள்ள பாகுபாடுகளை பற்றிய உங்கள் பார்வை?

இரண்டுமே மக்களின் குழுவாத உணர்வுகளை தட்டி எழுப்பி அரசியல் ஆதாயம் தேடுகின்றன. பாகுபாடுகள் எனப் பார்க்கும் போது, மதம் என்பது உலகளாவிய நிறுவனமயப்பட்ட சித்தாந்தம். இனம் என்பது குறிப்பிட்ட பிரதேசத்திற்குரிய பண்டைய இனக் குழும சமுதாயத்தின் தொடர்ச்சி. இந்த அடிப்படையில் இருந்தே அவர்கள் முன்னெடுக்கும் அரசியலும் வேறுபடுகின்றது. நவீன உலகில், தொடர்பு சாதனங்களின் வளர்ச்சி காரணமாக, "மத சர்வதேசியம்", "இன சர்வதேசியம்" என்று பரணாம வளர்ச்சியை கண்டுள்ளது. இருப்பினும் குறிப்பிட்ட பிரதேசத்தில் எந்த மதத்தை சேர்ந்தவர்கள், அல்லது எந்த இனத்தை சேர்ந்தவர்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றனர் என்பதைப் பொறுத்து, இத்தகைய அரசியல் இயக்கங்கள் எழுச்சியுறுகின்றன. இன அரசியல் பேசுவோருக்கு தமது இன அடையாளம் முக்கியம். மதம் இரண்டாம் பட்சம் தான். அதே போல, மத அரசியலில் மத அடையாளம் அனைத்தையும் மேவிநிற்கிறது. ஏற்கனவே வழிபாட்டுத் ஸ்தலங்கள் மக்களை நிறுவனமயப்படுத்தி வைத்துள்ளமை, மத அரசியலுக்கு சாதகமானது. இன அரசியல் அதற்கு மாறாக வழமையான அரசியல் செயல்பாடுகள், ஊடகங்கள் மூலம் மக்களை அணிதிரட்ட வேண்டியுள்ளது.

3) ஜனநாயகத்தைப் போற்றி புகழ்ந்து மார்தட்டிக் கொள்ளும் நிலைபாடுகள் பற்றி?

ஜனநாயகம் என்பதன் அர்த்தம் மக்கள் ஆட்சி என்பதாகும். அதாவது மக்கள் அரசியலில் தீர்மானிக்கும் சக்தியாக பங்கெடுப்பது. வாக்குப் போடுவது ஏன் என்று தெரியாத வாக்காளர் இருப்பதற்குப் பெயர் ஜனநாயகமல்ல. மன்னர் காலத்தில், மக்களிடம் எந்த அதிகாரமும் இருக்கவில்லை. கடவுளுக்கு கட்டுப்படுவதைப் போல, மக்கள் மன்னனின அதிகாரத்தை கேள்வி கேட்காமல் ஏற்றுக் கொண்டார்கள். பிற்காலத்தில் மன்னனை அகற்றி விட்டு, மக்களின் பெயரால் குடியரசு முறை வந்தது. இருப்பினும் ஜனநாயகம் என்பது தேர்தலில் கட்சிக்கு வாக்குப் போடும் முறை என்பதோடு மட்டுப்படுத்தப்பட்டது. இது பிரதிநிதித்துவ ஜனநாயகம். அதாவது ஒரு பிரதிநிதி (அல்லது கட்சி) மக்களின் குறையை அதிகார தளத்தில் பேசித் தீர்க்க முனைவார். அது சரி, ஆசிய நாடுகளில் ஏன் ஜனநாயகம் சரியாக செயல்படுவதில்லை? அதற்கு காரணம், ஆசிய நாடுகளின் மக்கள் இன்னமும் சாதி, இன, மத, தனிநபர் வழிபாடு போன்ற குழுவாத சிந்தனையில் இருந்து விடுபடவில்லை. அரசியல் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்கள் இந்த வேறுபாடுகளை மேலும் விரிவுபடுத்தவே பார்க்கின்றனர். இதனால் ஆதாயம் பெற்றவர்கள் ஜனநாயகத்தை போற்றிப் புகழத் தானே செய்வார்கள்? இங்கே எந்த அரசியல் அலகு யாருக்கு நன்மை பயக்கின்றது எனப் பார்ப்பது அவசியம். ஈராக்கில் சதாம் காலத்தில் ஆதாயம் பெற்றவர்கள், இப்போதும் சதாமின் சர்வாதிகாரத்தை போற்றுகின்றனர்.
4) பழுதடைந்த ஜனநாயகத்திற்கு முன்னுதாரணமாக நீங்கள் எடுத்துரைக்க விரும்புவது?

இதற்குப் பதில் முந்திய கேள்வியிலேயே வந்து விட்டது. ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளில் நிலவுவது ஜனநாயகமல்ல. நவீனமயப்பட்ட இனக்குழுவாதம். இந்த நாடுகள் சமுதாய மாற்றத்தின் ஊடாக தாமே ஜனநாயகத்தை கண்டறிந்திருக்க வேண்டும். மாறாக அவசர அவசரமாக காலானியாதிக்கவாதிகளால் திணிக்கப்பட்டது. அதற்கு காரணம் அன்று மேற்கத்திய பாணி நிர்வாகத்தை ஏற்றுமதி செய்வதையே முக்கியமாக கருதினார்கள். அவர்கள் இப்போதும் "ஜனநாயக வளர்ச்சியடையாத " நாடுகள் ஆட்சி நடத்துவது எப்படி என்று இப்போதும் ஆலோசகர்களை அனுப்பி கற்றுக் கொடுக்கிறார்கள். அல்லாவிட்டால் நாமே அவர்களது பல்கலைக்கழகங்களுக்கு சென்று கற்றுக் கொண்டு வருகிறோம். இதை நான் பழுதடைந்த ஜனநாயகம் என அழைக்க விரும்பவில்லை. ஜனநாயகம் அதன் ஆரம்பக்கட்டத்தில் சிறுபிள்ளைக் கோளாறுகளுடன் உள்ளது.

5) மார்க்ஸிசம் மற்றும் சோஷலிசம் பற்றிய இன்றய மக்களின் புரிதல்கள் பிசகிக் கிடக்கின்றன. போர் புரிவதிலும், எதிர் தீர்மானங்களின் வழியிலும் மட்டுமே தீர்வுக்கு வழி நாடுகிறார்கள். இப்படிப்பட்டவர்களே போற்றிப் புகழப் படுகிறார்கள். இம்மாற்றத்தின் காரணம் எதனால் வந்திருக்கக்கூடும்?

மக்களின் புரிதல்கள் எப்போதும் பிசகித் தான் கிடக்கின்றன. அதற்குக் காரணம் சாதி, இனம், மதம் போன்ற உணர்வுகளைக் கொண்டு அரசியல் நடத்தும் ஆதிக்கவாதிகள், அல்லது ஊடகங்களை கையில் வைத்திருக்கும் முதலாளிகள். மக்கள் சிந்திக்கத் தொடங்கி விட்டால் தங்களது இருப்பிற்கு ஆபத்து என கருதுகிறார்கள். போர் என்பது வன்முறை கொண்டு சாதிக்க நினைக்கும் அரசியல். பேசித் தீர்க்க முடியாத விஷயத்தை போராடித் தீர்க்கும் போது புகழப்படுவது இயற்கை. இருப்பினும் யாரின் நலன்களுக்காக யுத்தம் நடத்தப்படுகின்றது? போரினால் நன்மையடைபவர்கள் யார்? போர் நடப்பதால் பாதிக்கப்படுவது அப்பாவி மக்கள் தான். நிச்சயமாக பாதிக்கப்பட்ட மக்கள் போற்ற மாட்டார்கள். மறுபக்கம் போரினால் லாபமடைந்தவர்கள் நிறையைப் பேர். பணவருவாயை ஈட்டித் தருவதால் அவர்கள் போரை தொடர்ந்து நடத்த விரும்பலாம்.

6) போர் நிறுத்தம் வேண்டி குளிரூட்டியின் பக்கத்தில் கண்ணாடியை மாட்டிக் கொண்டு படுத்துக் கிடந்தவரை இன்னமும் மக்கள் நம்பிக் கொண்டிருக்க செய்கிறார்களே. இது ஒரு தனிமனிதனின் 'ஜனநாயக' வீரியத்தை குறிக்கிறதா?

இல்லை, வாக்காளருக்கு வேறு தெரிவுகள் கிட்டவில்லை என்பதைக் காட்டுகின்றது. காலங்காலமாக பெரும்பான்மைக் கட்சிகள் இரண்டில் ஒன்றை தெரிவு செய்ய வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். மேலும் நான் முன்பு குறிப்பிட்டது போல, இந்திய ஜனநாயகத்தில் தனிநபர் வழிபாடு, சாதியம், இனவாதம், மூலதனம் இவற்றின் செல்வாக்கு அதிகம்.

7) அல்கயிதா பற்றிய உங்களின் பார்வை வாசகர் மத்தியில் வியப்பை ஏற்படுத்தியது. அல்கயிதா சம்பந்தமாக எல்லோரும் அறியப்பட்ட எழுதாளர் ஒருவர் எழுதிய புத்தகத்தோடு அது முற்றிலும் முரணாக இருந்தது. புத்தகச் சந்தையில் பேசப்பட்ட அந்த புத்தகத்தை பலரும் விரும்பி இருக்கிறார்கள். மக்கள் அவர்களுக்கு தோதாகவே அரசியல் பார்வையை விரும்புகிறார்கள் என இதை சொல்ல முடியுமா?

ஆவிகள் இருக்கின்றன என்று நம்புகிறவர்கள் இருப்பதால் தான் ஆவிகளின் அட்டகாசம் பற்றிய நூல்களும் சந்தையில் விற்பனையாகின்றன. அல்கைதா இல்லை. ஆனால் இருக்கென்று நம்புகிறவர்கள் அதிகம். இதனால் தான் எனது கட்டுரை ஒன்றிற்கு "அல்கைதா என்ற ஆவி" என்று தலைப்பிட்டேன். ஏற்கனவே ஊடகங்கள் செய்தியாக வழங்கிய அல்கைதா பற்றிய கதைகளை தொகுத்து எழுத்தாளர்கள் புத்தகமாக வெளியிடுகின்றனர். மக்களால் பரபரப்பாக பேசப்படும் விஷயத்தை புத்தகமாக்கி சந்தைக்கு கொண்டுவர நினைக்கும் அளவிற்கு, தகவல்களின் உண்மைத் தன்மை அலசப்படுவதில்லை. அல்லது அதைப் பற்றி யாருக்கும் கவலை இல்லைப் போல தெரிகின்றது.

8) உலக அமைதிக்காக போராடுகிறோம் என சொல்லிக் கொள்ளும் இயக்கங்கள் பற்றிய உங்கள் பார்வை என்ன?

உலகம் அணுவாயுதப் போரின் விளிம்பில் இருந்த காலத்தில் சமாதான இயக்கம் தோன்றியது. மதம் போதிக்கும் அனைத்து ஜீவராசிகளுடனும் அன்பு காட்டும் தத்துவம், உலக அமைதிக்கான அரசியல் இயக்கமாக பரிணமித்துள்ளது. போர் வேண்டாம், அனைத்துப் பிரச்சினையையும் அன்பு காட்டுவதன் மூலம் தீர்க்கலாம் என்பது ஒரு உயரிய நோக்கம் தான். ஆயினும் உழைப்புச் சுரண்டலால் உருவாக்கப்பட்ட உலகில் தோன்றும் முரண்பாடுகளை இவர்கள் பார்ப்பதில்லை. மதங்களை, இனங்களை பிரித்து வைப்பதால் ஆதாயமடையும் நபர்கள், எந்தவொரு அமைதி இயக்கத்தையும் எதிரிகளாகவே பார்ப்பார்கள்.
9) வினவு பக்கத்தில் நீங்கள் எழுதுவது குறித்து நீங்கள் இன்ன சாரரை சேர்ந்தவர் என முத்திரையிடப்பட்டு எதிர்வினைகளை சந்திக்க நேர்ந்ததா?

சில நேரம் இருக்கலாம். எதிர்வினைகளை எதிர்பார்த்து அல்லது எதிர்பார்க்காமல் கட்டுரை எழுத முடியாது. நான் வினவில் மட்டும் எழுதவில்லை. உயிர்நிழல், உன்னதம் போன்ற சிற்றிதழ்களிலும் எழுதி வருகிறேன். வேறு சில இணையத்தளங்களும், சிற்றிதழ்களும் எனது கட்டுரைகளை பிரசுரித்துள்ளன. இவையெல்லாம் அரசியல் தளத்தில் ஒன்றுக்கொன்று முரணானவை. அந்தந்த அரசியல் பின்னணியை கொண்டவர்களுக்கு, அது சம்பந்தமான கட்டுரை பிடிக்கின்றது. அதே நேரம் அவர்களின் நிலைப்பாட்டை விமர்சிக்கும் போது விரும்பமாட்டார்கள். "இன்னொரு அ.மார்க்ஸ் உருவாகிறார்." "தாலிபான் ஆதரவாளர்" என்றெல்லாம் கூட முத்திரை குத்தினார்கள்.

10) எல்லோரையும் எல்லோராலும் திருப்தி அடையச் செய்து விட முடியாது. சில விடயங்களை பேசும் போது நியாயம் அற்ற பெரும்பான்மை கருத்தைக் கொண்டிருப்போர், நியாயம் உள்ள சிறுபான்மையினரை சிறுமைபடுத்தவும், சமுதாய துரோகி எனவும் அடையாளப் படுத்திவிடுகிறார்கள். இது ஊடகங்களின் போக்கினால் எற்பட்ட ஒன்றா?

நான் அப்படி கருதவில்லை. இது மனிதனின் கூடப்பிறந்த குணம். ஒவ்வொருவரும் தங்களது கருத்தை நியாயம் என்று தான் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். குறிப்பிட்ட அரசியல் கருத்துகளை கொண்டவர்கள் ஒன்று சேரும் போது, எதிர்க்கருத்து கூறுபவர்களை துரோகி என்று ஒதுக்குகின்றனர். அவர்கள் தங்களது குழுவை மட்டுமே முழு சமுதாயமாக கற்பிதம் செய்து கொள்கின்றனர். யாருடைய கை ஓங்குகிறதோ, சமுதாயத்தில் யார் பலமாக இருக்கின்றனரோ, அவர்களின் கருத்து பொதுக் கருத்தாக மாறி விடுகின்றது. ஊடகம் என்பது யாரின் கையில் இருக்கிறதோ அவரின் ஊதுகுழலாக மாறிவிடுவதைப் பார்க்கலாம்.

மேலும் 15 கேள்விகள் அடுத்த பாகத்தில்...

Saturday, July 25, 2009

அம்மாவிற்கு ஒரு கடிதம்



அன்புள்ள அம்மாவுக்கு,

அம்மா நீங்கள் நலமா? எல்லோரும் நலம் வாழ இலச்சிமல ஆத்தா அருள் புரிவாளாக. எப்போதும், எல்லோரும் மற்றவர் மனம் குளிர சொல்வதை போல் நானும் நலம் என சொல்லிக் கொள்கிறேன்.

உங்களுக்கு 3 கண் ஊனம் என்பதை நான் அறிவேன். உலக மாறுதல் நான்காவது கண் ஒன்றை உருவாக்கி அதுவும் உங்களுக்கு தெரியாமல் செய்துவிட்டது. உலத்தை சொல்லி என்ன புண்ணியம் நீங்கள் தான் கண் திறந்து பார்க்கவில்லை என சொன்னால் பொருந்தும். நான் உளறுவதாக நினைக்க வேண்டாம் கண் என சொன்னது எழுதுவம், படிப்பதும், கணக்கிடுவதும். நான்காவது கண் கணினி, இணையம் என மனிதர்கள் சொல்லிக் கொள்ளும் ஒரு ஜந்து.

நீங்கள் படித்துவிட மாட்டீர்கள் எனும் இருமாப்பில் இக்கடிதத்தை எழுதும் என்னை இலச்சிமல ஆத்தா தான் மன்னிக்க வேண்டும். அம்மா, இக்கனத்தில் நீங்கள் அதிசய பெட்டியின் முன் அமர்ந்து ஆடல்களை இரசித்துக் கொண்டிருக்கலாம். உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா? முன்பு நம் வீட்டில் அதிசய பெட்டி இல்லை. ஆடிக்கொரு முறை, அமாவாசைக்கொரு முறையென மாமா வீட்டில் படம் பார்த்தால் தான் உண்டு.

ஆனால் இப்பொழுதோ காலையும் மாலையும் அலாரம் வைத்தது போல் அதிசய பொட்டியை திறந்துவிடுகிறீர்கள். சீரியல் என்ற பெயரில் வரும் சீரழிவு கண்றாவிகளை மறவாமல் காண்கிறீர்கள். அதனோடு ஒன்றிப் போகிறீர்கள். அவர்கள் அழுதால் அழவும் சிரித்தால் சிரிக்கவும் நீங்கள் கண்ணாடியின் பிரதிபலிப்பென உருவாகிவிட்டீர்கள்.

இத்தோடு நிறுத்தியபாடில்லாமல் பக்கத்து வீடு, எதிர் வீடு என அனைவரையும் கூட்டு சேர்த்துக் கொண்டு தொடர் நாடகங்களை பற்றிய தொடர் விவாதாம் செய்கிறீர்கள். இதனால் என்ன புண்ணியம் நேர்ந்தது? உங்கள் விவாதங்களை கேட்ட ஆர்வத்தில் பக்கத்து தெருவில் இருக்கும் ஆனந்தி அக்கள் வரும் தீபாவளிக்குள் ‘ஆஸ்ட்ரோ’ இணைப்பை ஏற்படுத்த வேண்டும், தொடர் நாடகங்களை பார்க்க வேண்டும் என்றிருக்கிறார். இதை கூட என்னுடன் வேலை பார்க்கும் அவர் கணவன் தான் சொன்னார். வீட்டில் நச்சரிப்பு தாங்கவில்லை என்று.

அம்மா நான் மட்டும் யோக்கியன் இல்லை. நானும் இந்த தொடர் நாடக பித்தத்தில் சிக்கிய காலம் உண்டு. அதிலிருந்து மீண்டு வந்தது இலச்சிமல ஆத்தாளின் கருணையாக தான் இருக்க வேண்டும். இப்பொழுதெல்லாம் ‘சீரியல்’ என்ற வார்த்தையை கேட்டாலே எரிச்சல் தான் வருகிறது. ஜவ்வு மிட்டாயை போல் இழு இழுவென இழுத்து கடசியில் அது ஒன்றும் இல்லாத சக்கை என உணர வைக்கிறது. வாயில் இருக்கும் போது தித்திக்கும் சிறு இனிப்பு கிடைக்குமே அது போல தான் நீங்கள் கண்டு கழிக்கும் போது சிறு ஆனந்தம் ஏற்படுகிறது.

அம்மா நன்றாக யோசித்துப் பாருங்கள், இந்தத் தொடர் நாடகங்கள் பொன்னான நேரத்தை மரண படுக்கைக்கு இட்டுச் செல்லும் அரக்கன் இல்லையா? தீயனவயை போதிக்கும் சாத்தான் இல்லையா? அதன் போதனைகளை சற்று உணர்ந்திருக்கிறீர்களா? இரு மணம் புரிந்துக் கொள்ளும் கணவன், அடுத்தவன் குடும்பத்தை கெடுக்க நினைக்கும் அக்காள், அண்ணியின் மீது வேண்டா வெறுப்புக் கொண்ட தங்கை, மருமகளை அதட்டும் மாமியார், மனைவி பேச்சை வேத வாக்காக மதிக்கும் கணவன். இதுவா நம் தமிழ் கலாச்சாரம்?

முன்பு படித்தவர்கள் அதிகம் இல்லை. ஆனால் அவர்கள் ஓய்வு நேரங்களை நாவல், மாத வார சஞ்சிகைகள் என ஈடுபடுத்திக் கொண்டு தங்களது வெளியுலக அறிவை வளர்த்துக் கொண்டர்கள். இப்போது நடப்பது என்ன? சினிமா ஏடுகளை தவிர மற்ற ஏடுகள் வந்த வேகத்தில் பொட்டிப் பாம்பென அடங்கிவிடுகிறது. இது வருத்தத்திற்குறிய விடயம் இல்லையா?

அம்மா, இப்பொதெல்லாம் பட்டிணத்தில் அடிக்கடி உலகமயமாக்குதல், வினண்வெளி ஆராய்ச்சி, புவி வெப்பம், பண வீக்கம், ஏன் அதிகம் வேண்டாம் நான் இப்போது புலம்பிக் கொண்டிருக்கும் பதிவுலகில் கூட பின் நவீனதுவம் என்றெல்லாம் ஏதேதோ பேசிக் கொள்கிறார்கள். இவற்றை பற்றி உங்களுக்கு ஏதாவது தெரியுமா? இவற்றை பற்றி நீங்கள் கண்டு ரசிக்கும் தொடர் நாடகங்கள் ஏதாவது சொல்லி இருக்கிறதா?

அம்மா, நீங்கள் தொடர் நாடகங்கள் பார்க்க வேண்டாமென நான் சொல்லவில்லை. சிகரெட்டு பழக்கத்தை போல நம்மவர்களிடையே மேலோங்கி நிற்கிறது இந்தச் ‘சீரியல்’ பார்க்கும் பழக்கம். அதைக் குறைத்துக் கொண்டால் நல்லதல்லவா? உங்கள் மனம் புண்படும்படி பேசி இருந்தால் இந்தச் சிறுவனை மன்னியுங்கள். நீங்கள் படிக்காத, பதில் எழுதாத கடிதத்தை இங்கே நிறுத்திக் கொள்கிறேன். இலச்சிமல ஆத்தாளின் ஆசிர்வாதத்தோடு விடைபெருகிறேன்.

அன்பு கலந்த வருத்தத்தோடு,
விக்கி.

பி.கு: இக்கடிதத்தை படித்துவிட்டு அம்மா என்னை அடிக்காமல் இருக்க அந்த இலச்சிமல ஆத்தா தான் காப்பாற்ற வேண்டும்.

Thursday, July 23, 2009

ஒரு மலேசிய திட்டத்தில் தமிழுக்கு இடமில்லை

மலேசிய பிரதமரின் பதவியேற்புக்குப் பின் முக்கியமாக வழியுறுத்தப்பட்ட ஒரு விடயம் 1 மலேசிய திட்டம்.

ஒரு மலேசிய திட்டம்:

இனத்தாலும் மதத்தாலும் மாறுபட்டு இருக்கும் மக்கள் ஒருமித்த சிந்தனையுடன் மலேசியன் அல்லது மலேசிய ஒருமைபாட்டு திட்டத்துக்கு வழி செய்தல் இதன் முக்கி அம்சங்களுள் ஒன்று.

இதைப் பற்றிய மேலாதிக்க தகவலுக்கு கீழ்காணும் வலைத்தளங்களைக் காணவும்:

http://www.1malaysia.com.my/index.php?lang=en

http://www.themalaysianinsider.com/index.php/malaysia/32325-najib-denies-1-malaysia-concept-is-alien-to-muslims-

http://thestar.com.my/news/story.asp?file=/2009/4/15/nation/3697685&sec=nation
படத்தை கிளிக் செய்து பெரிதாக்கி பார்க்கவும்

நன்றி: http://www.1malaysia.com.my/

அப்படி இருக்க இதன் வலைதளத்தின் முகப்பில் மாலாய், ஆங்கிலம், சீன மொழிகளுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் முக்கியதுவம் தமிழுக்கு கொடுக்கப்படாதது வருத்தத்துக்குறிய ஒன்று. தமிழ் நல காப்பாளர்களும், அரசியல் தலைவர்களும் இதை கருத்தில் கொள்ளவில்லையா?

மொத்தமாக ஆங்கிலத்தில் இருந்துவிட்டால் சிறப்பு, அல்லது அனைத்து மொழிகளிலும் இருக்குமானால் இன்னும் சிறப்பு. ஒரு மலேசிய திட்டத்தின் நோக்கத்தின் ஆரம்ப நிலையிலேயே இப்படி ஓரக்கண் பார்வையோடு இருக்குமானால் மேற்கொண்டு சொல்வதற்கு ஒன்றும் இல்லை.

ஓங்குக ஒரு மலேசிய திட்டத்தின் புகழ்!

Wednesday, July 22, 2009

நானும் டெரர் தான்... ஜீப்புல ஏறிக்கிறேன்... பார்த்துக்கோங்க...

ஒரு நிகழ்ச்சி முடிந்ததும் ஐயர் கடைக்கு ‘டீ’ அடிக்கப் போனேன். ஐயர் கடை டீ மிகவும் சுவையாக இருக்கும். ஐயர் இந்தியாவில் இருந்து தேத்தூள் இறங்குமதி செய்து டீ போடுறாராம். ஒரு டீ அடிச்சா அதை முடிக்கறதுக்குள்ள அடுத்த டீக்கு ஆடர் கொடுத்துடுவவீங்க. ஐயர் கடை டீக்கு அப்படி ஒரு ‘இம்ம்ம்ப்ப்ப்’ இருக்கு.

அன்று டீ குடிக்க சென்ற போது கொஞ்சம் தள்ளி இருந்த மேசையில் ஒருவர் அமர்ந்திருந்தார். என்னைப் பார்த்து தலையசைத்து சிரித்தார். யாரென தெரியாமல் என் மூளையை கசக்கியபடி நானும் சிரித்து வைத்தேன்.

”விக்னேஷ் தானே?” ஆமாம் என்றேன்.

”நான் மனோகரன். நீங்க பிளாக் எழுதுவீங்க தானே?” என்றார். சிரித்துக் கொண்டே ஆமாம் என்றேன்.

டீ வந்ததும் அருந்திக் கொண்டிருந்தேன். அவர் சாப்பிட்டுவிட்டு கைகழுவிட்டு வந்தார். என்னிடம் கைகுழுக்கிவிட்டு பேசினார்.

“ரொம்ப நல்லா எழுதுறீங்க சார். உண்மைய சொல்லனும்னா நீங்க எழுதுறத பார்த்து தான் எனக்கும் எழுதனும்னு ஆசையே வந்துச்சு. மனோவியம் என் பிளாக்கு தான். ஒவ்வொரு பதிவும் வித்தியாசமா எழுதுறீங்க. படிக்க நல்லா இருக்கு. இன்னும் நிறைய எழுதனும் நீங்க. எனக்கு எழுத சிரமமா இருக்கு சரியா எழுத முடியல. நிறைய படிக்கனும்” என்றார். ”ஆர்வம் இருந்தால் நிச்சயம் எழுதலாம் சார். தொடர்ந்து எழுதுங்கள்” என்றேன்.

மகிழ்ச்சியோடு அவரிடம் விடைப்பெற்றுவந்தேன்.

பார்த்தீங்களா நானும் டெரர் தான்....

*******************

பிரபாகரன் தீவிரவாதி ஒசாமா போராட்டவாதி என ஒரு பதிவு எழுதி இருந்தேன். இஸ்லாமிய சகோதரர் ஒருவர் வெகுண்டெழுந்து இஸ்லாத்தை நீ புரிந்துக் கொள்ளாமல் பேசிவிட்டாய் என கேள்விகளை அடிக்கி வைத்து ஒரு மின்மடல் அனுப்பி இருந்தார். அதில் நான் இஸ்லாத்தை புரிந்துக் கொள்ளும் பொருட்டு சில தொடுப்புகளையும் கொடுத்திருந்தார்.

சகோதரர் எனது பதிவை தொடர்ந்து படிக்கிறாராம். அவர் மத தீவிரவாதம் கொண்ட ஆள் இல்லையாம். என் கட்டுரையில் உண்மை இல்லாததால் மடல் எழுதி இருக்கிறாராம். ஏன் அந்த கட்டுரைக்கு மட்டும் என புரியாமல் பல நாள் தூக்கம் இழந்து தவித்து போனேன். சகோதரருக்கு பதில் கொடுக்க விரல்கள் துருதுருத்துக் கொண்டிருக்கின்றன.

நானே எனக்கு ஆப்படித்துக் கொள்ள முடியுமா? யாராவது எனக்கு வெளிநாட்டில் ஒரு வேலையும் பாதுகாப்பும் தருவதாக இருந்தால் சொல்லவும் வகை வகையாக பதில் எழுதுகிறேன்.

மன்னிக்கவும் சகோதரர் சபீர் கான் உங்கள் கேள்விக்கான பதில் சொல்ல முடியாமல் மீளா துயரத்தில் வாடுகிறேன். மின்மடலில் ‘think first' என நீங்கள் போட்டிருந்த தலைப்பை மிக இரசித்தேன். இஸ்லாமிய நாகரீக கல்வியில் நான் சிறப்பு தேர்ச்சி பெற்றிருக்கிறேன். அதனால் நீங்கள் அனுப்பிய தளங்கள் எல்லாம் சுத்த ’வேஸ்ட்’. ஏன் நேரத்தை வீணாக்கிக் கொள்கிறீர்கள். போய் புள்ள குட்டிய படிக்க வைக்கிற வழிய பாருங்க.

பார்த்தீங்களா நானும் டெரர் தான்....

*****************

ஒரு இலக்கிய சந்திப்பில் கலந்துக் கொள்ளும் வாய்ப்பு கிட்டியது. எனக்கு லேகியம்... மன்னிக்கவும்... இலக்கியம் தெரியாது என்றாலும் கார வடையும் கோப்பி தண்ணியும் இலவசமாக கொடுப்பதாக கூறி இருந்ததால் நிச்சயம் கலந்துக் கொண்டே ஆக வேண்டும் எனும் ஆளாதியான எண்ணம் கொந்தளிக்க இனிதே கலம் கைகொடுக்க கலந்துக் கொண்டேன். மேற்கானும் வாக்கியம் லேகியம் பிசகாமல் வந்திருக்கிறதா என சங்க இலக்கியங்களை எடுத்து சரி பார்த்துக் கொள்ளவும்.

ந என ஆரம்பிக்கும் நான்கெழுத்து தோழர் பத்திரிக்கையின் ( அட எனக்கும் கிசுகிசு எழுத வருது) ஆசிரியர் ஒருவர் தம்மை அறிமுகப் படுத்திக் கொண்டு பேசலானார். எனது வெறு வாய்க்கு அவில் கொடுத்தமைக்கு நன்றி. இலக்கியம் அப்படி இருக்கனும். எதிர்காலத்துல வெள்ளைக்காரன் ஆராய்ச்சி பண்ணினா நம்ம மொழி நாசமா போய்டும் (எதிர்கால வெள்ளைக்காரனுக்கு இப்பவே வாய்ப்பு கொடுத்துட்டாரு). மரபு படிங்க. என பேசி ஒரு சில சங்க பாடல் வரிகளைச் சொல்லி சிலாகித்துக் கொண்டார்.

அவர் பேசி முடிந்ததும் அவர் வேலை செய்யும் பத்திரிக்கை தர்மத்தை எடுத்துரைத்தேன். நான் அனுப்பிய கட்டுரை மற்றும் சிறுகதைகளில் உள்ள எழுத்துப் பிழைகளைக் கூட உங்கள் பத்திரிக்கை சரி செய்ய முற்பட்டதாக தெரியவில்லை. ஆசிரியரிடம் விசாரித்தால் நீங்கள் கவனமாக எழுதி அனுப்ப வேண்டும் என்கிறார். இதை பற்றி வலையில் எழுதிவிட்டால் புரக்கணிப்புகள் ஏற்படுகின்றன. இதை என்ன சொல்வதென்றேன்.

நான் இப்போது பத்திரிக்கையில் வேலை செய்பவன் அல்ல என்ற முறையில் பார்த்தால் மிகவும் வருந்துகிறேன் என சொல்லி உள் நடக்கும் சில ஆமை கதைகளை சொன்னார். அது நமக்கு தேவையற்றது. முதலில் நம்மைச் சுற்றியுள்ள சூழலை கவனிக்க வேண்டும். அதைவிட்டு நீ இப்படி எழுதனும் இதை செய்யனும் என ஊருக்கு உபதேசம் செய்வது, தமிழ் நலம் காக்கும் ஆசான் தம் பிள்ளையை மலாய் பள்ளிக்கு அனுப்பிய கதையாக தான் இருக்கிறது.

மேலும் அவர் சொன்ன ஒரு விடயம் கொச்சையாக எழுதாதீர்கள் என்பது. இந்த கொச்சை வார்த்தை, கச்சை வார்த்தை எல்லாம் எப்படி தீர்மானிக்கிறீர்கள் தெரியவில்லை. பட்டிணத்தார் பாடல்களில் இல்லாததையா இப்போது எழுதப்பட்டுவிடுகிறது. புரியவில்லை...

சரி அதை விடுவோம், கூட்டம் முடிந்ததும் என்னிடம் சொன்னார். உள்ளுக்குள் வேலை அப்படி. நாம தான் கவனமா இருக்கனும் என முன்பு சொல்லியவரை போலவே சொன்னார். அச்சமயம் அவர் பத்திரிக்கை ஆசிரியராக மாறிவிட்டார். இவருக்கு அடிக்கடி அந்நியனாகும் நோய் இருக்கிறது. என் உயிருக்கு ஏதும் ஆபத்தாகிவிடுமோ என நான் அப்படியே ஷாக் ஆகிட்டேன்.

நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட பேராசிரியர் அவர்கள் எனது வலைப்பதிவை பார்வையிடுகிறார் என அறிய முடிகிறது,

பாதியில் கலந்துக் கொண்டாலும் அவர் உரை இரசிக்கும் படியாகவே இருந்தது. சில கருத்து முரண்பாடுகளும் எனக்கு இருக்கவே செய்கிறது. அவர் இறுதியாக சொன்ன ஒரு விடயம்: பத்திரிக்கையை நாம் அனுசரித்து போக வேண்டும் என்பது. இதில் கிஞ்சித்தும் உடன்பாடுகிடயாது. இதை நான் விளக்கவும் தேவை இல்லை என்று கருத்துகிறேன்.

பார்த்தீங்களா நானும் டெரர் தான்....

******************************
சமயமெனும் சாக்கடை உலகம் எனும் எனது கட்டுரைக்கு வந்த ஓர் எதிர்பதிவு:

ஆரம்பக் கால ஆசிரியரை
'இடி அமீன் வாத்தி'என
நினைவு கூர்ந்தார்
பட்டதாரி எழுத்தாளர்
இதுவா பண்பு
இதுவா நன்றிக்கடன்
வலைபகுதியில்
எப்படி வேண்டுமானாலும்
எழுதலாமா - சுகந்தினி (மேலும் படிக்க இங்கே சுட்டவும்)

ஆசிரியர்களை அவ்வரி பாதித்திருந்தால் பொறுத்தருள வேண்டும் அதை மாற்றி விட்டேன்.

நன்றி
விக்னேஸ்,
எழுத்து வேகம்,
விவேகம், வியூகம்
உம்மிடம் கண்டேன்
இனிய தமிழ்ச் சொற்களைப்
பயன்படுத்தினால்
உம் கிறுக்கல்கள்
மேலும் சிறப்படையும்
தொடரட்டும் உம் பணி.

கண்ணில் விளக்கெண்ணை விட்டுக் கொண்டு தவறுகளை பார்க்கிறீர்கள். ம்ம்ம் ஆகட்டும்....

பார்த்தீங்களா நானும் டெரர் தான்....
*****************

நண்பர் அப்பாவி முரு எனக்கு விருது வழங்கி இருக்கிறார். அவரது அன்புக்கு மிக்க நன்றி.

மற்றவர்களுக்கு விருது வழங்கும் அளவுக்கு நான் இன்னும் வளராததால் தற்சயம் என் வசமே இருக்கட்டும். இதுவும் கொஞ்சம் கொஞ்சம் 32 கேள்வி தொடர் விளையாட்டு மாதிரியே இருக்கு.

என்னை வச்சு காமிடி கிமிடி பண்ணலையே?

நானும் விருது வாங்கிட்டேன்.

(பிற்சேர்க்கை: எனக்கு இவ்விருதை வழங்கி இருக்கும் மேலும் இருவர் கோமா மற்றும் தமிழ் பிரியன் ஆகியோருக்கு நன்றி.)

பார்த்தீங்களா நானும் டெரர் தான்....

Monday, July 20, 2009

ஒரு கொலை முயற்சி

பாலைவனங்கள் பல புதிர்களை அடக்கிக் கொண்ட பூமி. முக்கியமாக சஹாரா போன்ற இடங்கள் ஒரு காலத்தில் செழிப்பான பூமியாகவும் அங்கு உயிரினங்கள் வாழ்ந்த ஒரு சில குடில்களையும் கண்டறிந்திருக்கிறார்கள். பின் ஏற்பட்ட இயற்கையின் சீற்றத்தில் பல நிலப் பிரிவுகள் உண்டாகி இருப்பதாக சரித்திர மற்றும் அறிவியல் வல்லுனர்கள் குறிப்பிடுகிறார்கள்.

மணல்
பறக்கும் பாலைவனத்தில் அதிசயத்தக்க ஒன்று பிரமிடுகள். சரித்திரச் சுவடுகளை அறிய பேருதவியாக இருந்தவற்றுள் ஒன்று. பிரமிடுகளை பற்றி சொல்லும் போது அக்காலக்கட்டத்தில் வாழ்ந்த அரசர்களையும் உயர்குடியினரையும் தவிர்க இயலாது. பிரமிடுகள் முக்கியமாக அமைக்கப்பட்டதே இந்த அரச குடியினர்களின் பிணங்களை பதப்படுத்தி 'மாற்று உலகத்துக்கு' அனுப்ப தான் என்பது பொதுவாக அறிந்த ஒன்றே.

'மம்மி'கள் பற்றிய ஆராய்ச்சிக்களும் ஆய்வுகளும் வியகதக்கவை. மம்மிகள் மற்றும் பிரமிடுகள் சம்பந்தமான எனது தகவல் சேமிப்புகளுக்கு என்னை கட்டி இழுத்தது தூத்தன்கமன் எனும் பாரோ மன்னனின் ஆய்வுகள் தாம். இது சம்பந்தமான கட்டுரை போதுமான விளக்கங்களுடன் முன்னமே எழுதியிருக்கிறேன்.

இன்றய திரையுலகம் மம்மிகளை பேய்களாகவே காட்ட முற்படுகின்றன. மம்மிகள் என்றாலே வெறுக்கத்தக்க ஒன்றாகவும், அகோரமான மர்ம பொருள் எனவும் மக்கள் கருதுகிறார்கள். மம்மிகள் புதைக்கப்பட்ட கல்லறைகள் திறக்கப்படும் போது பல வருடங்கள் அழுத்தத்தில் இருந்த மைக்ரோஸ்போராக்கள் அதீத செயல்பாடுகளோடு இயங்கச் செய்கின்றன. இதன் காரணமாக குறைவான நோய் எதிர்ப்புச் சத்தியைக் கொண்டவர்கள் மம்மிகள் அறையப்பட்ட கல்லறையை அணுகிய சில காலத்தில் இறக்க நேரிடுகிறது. இது மம்மிகளின் பழி வாங்கள் என மேலும் மக்களிடம் பீதியை கிளப்பிவிடுகிறார்கள்.

பிரமீடு திருட்டு வெள்ளையன் ஆரம்பித்து வைத்த ஒன்றல்ல. அரசன் வேற்றுலகில் மிகுந்த சுகத்துடன் வாழ வேண்டுமென பிரமிடுகள் சொல்வம் கொழிக்க நிறப்பப்படுகிறது. துத்தன்கமன் அரசனின் கல்லறயில் கண்டெடுத்த அவனது செருப்பு கூட தங்கத்தில் செய்யப்பட்டிருக்கிறது. எகிப்தியர்களின் நம்பிக்கைபடி கடவுளர்களாகிய அரசர்கள் பூமியில் தமது ஆட்சியை முடித்து வேற்றுலகிற்கு செல்கிறார்கள். அரசரை நன்முறையில் வழி அனுப்ப தங்கத்தால் ஆன பொருட்கள் கல்லறையில் நிறப்பப்படுன்றன. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு பின் தைரியம் கொண்ட சில எகிப்திய திருடர்களாலும் பிரமீடுகளில் கொள்ளையடிக்கப்பட்டிருக்கிறது. அதன் பின் ஆராய்ச்சி எனும் பெயரில் கால் பதித்த வெள்ளையன் இவ்வேலைகளில் கொஞ்சம் தீவிரம் செலுத்தி கொள்ளையடித்திருக்கிறான். இப்படிபட்ட திருட்டுக்களை தவிர்க்கவும் பிரமிடுகள் மற்றும் மம்மிகள் சம்பந்தமான பீதியான தகவல்கள் பரப்பப்பட்டிருக்கலாம்.

எகிப்திய அரசன் ஃபாரோ என அறியப்படுவான். துத்தன்கமன் ஃபாரோவின் மம்மி கண்டெடுக்கப்பட்டது 'தி வேளி ஆப் கிங்' எனப்படும் பகுதியாகும். துத் சரித்திரத்தில் சொல்லப்படுபவர்களுள் ஹைதித் எனப்படும் அரசகுமாரனும் ஒருவன். துத் அரசனின் மரணத்தைப் போலவே இவனது மரணமும் சில மர்மங்களுக்குறியது.

முன்பு ஹித்தித்தின் உடல் என கூறப்பட்ட மம்மியும் பின்னாட்களில் அதுவல்ல என அறியப்பட்டது. கஹேராவில் இருந்து சுமார் 460 கிலோமீட்டர் தூரத்தில் Deir El Bahri எனப்படும் பள்ளத்தாக்கு இருக்கிறது. கால்கள் இருக்கக்கட்டப்பட்டு, இதயத்தை இருகைகளில் பற்றியபடியும், கடுமையான முகத்தோடு கத்திக் கதற வாய் திறந்த தோற்றத்தில் ஒரு மம்மி கண்டெடுக்கப்பட்டது. 'கதறும் மம்மி' என அடையாளப்படுத்தப்பட்ட அவ்வுடல் பலமான ஆராய்ச்சிகளுக்குட்பட்டது. ஆரம்ப நிலை ஆராய்ச்சிகள் அந்த மம்மியிடன் உடல் துத்தன்கமன் காலத்தில் வாழ்ந்த ஹித்தித் எனும் அரசகுமாரனுடையது என குறிப்பிட்டன.

1881-ஆம் ஆண்டு கதறும் மம்மி கண்டெடுக்கப்பட்டது. ற்சமயம் கஹேராவில் அமைந்துள்ள எகிப்திய தொல்பொருட்காட்சி சாலையில் வைக்கப்பட்டிருக்கும் அந்த மம்மியில் செய்யப்பட்ட மேலாதிக்க ஆராய்ச்சிகள் எகிப்திய நாகரீகத்தில் திட்டமிட்ட ஒரு கொலை முயற்சியை வெளிக்கொனர்ந்தது.

எகிப்திய நாகரீகத்தில் குறிப்பிட தக்க அரசருள் ஒருவர் 3-ஆம் ரம்சேஸ் ஃபாரோவாகும். அவரின் மகனான Pentewere எனும் அரசகுமாரன் ஆட்சியைப் பிடிக்க தந்தையை கொலை செய்ய திட்டமிட்டிருக்கிறான். ஆராய்ச்சியில் கி.மு 12-ஆம் நூற்றாண்டின் பைப்ரஸ் படிவம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. 3-ஆம் ரம்சேசின் மனைவி அவரைக் கொலை செய்யும் சதித் திட்டத்தில் சம்பந்தப்பட்ட விசாரனை குறிப்பு அப்படிவத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.சதி திட்டம் விரைவாக குட்டுடைக்கப்பட்டது இளவரசனின் போராத காலம். சதிகாரர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அரச துரோகம் செய்பவர்களை மம்மியாக்க்கி கல்லறையில் வைக்கப்படுவதில்லை. மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட பின் அவ்வுடல் அழிக்கப்பட்டுவிடும். அது ராஜ வம்சத்தவராக இருப்பினும் விதி விளக்கு கொடுக்கப்படவில்லை. 3-ஆம் ரம்ஸேசின் ஆட்சியை ஆதரித்தவர்களைப் போலவும் Pentewere அரசகுமாரனை ஆதரித்தோரும் இருந்திருக்கிறார்கள்.

Pentewere அரசகுமாரனுக்கு இரண்டு தண்டனைகள் விதிக்கப்பட்டிருக்கிறது. ஒன்று அரசனை கொல்ல திட்டமிட்டது. இரண்டு தந்தையை கொல்ல திட்டமிட்டது. முதல் குற்றத்திற்கு விஷத்தை அருந்த தண்டனை விதிக்கப்பட்டது. இரண்டாம் குற்றத்திற்கு அவனது உடல் கல்லறையில் வைக்க தடை செய்யப்பட்டிருக்கிறது. கல்லறையில் வைக்கப்படாத உடலுக்கு மறுபிறப்பு இல்லை என்பது எகிப்தியர்களின் நம்பிக்கை.

அரசகுமாரனின் ஆதரவாளர்கள் அவன் உடலை கைப்பற்றி அவசர அவசரமாக பதப்படுத்தி இருக்கிறார்கள். மம்மியாக்கப்படுவதற்கான வேலைபாடுகள் முழுமையடையவில்லை என்றே சொல்ல வேண்டும். கதறும் மம்மியின் உடல் முழுமையாக உலர்வடையவில்லை. மூலை மற்றும் உள்ளுறுப்புகள் அகற்றப்படாமல் ஒன்றும் பாதியுமாக செய்திருக்கிறார்கள்.

அது போக அவ்வுடல் ஆட்டுத் தோலில் சுற்றி வைக்கப்பட்டிருந்திருக்கிறது. பழங்கால எகிப்தியர்களின் நம்பிக்கைபடி ஆட்டுத் தோலில் சுற்றப்பட்டது புனிதமற்றது எனப் பொருள்படும். தீயவர்களின் உடலை இப்படி ஆட்டுத் தோலில் சுற்றி வைக்கும் வழக்கமும் இருந்திருக்கிறது.

Pentewere-யின் உடல் ஏன் தூக்கியெறியப்படமால் பதப்படுத்தப்பட்டது எனும் கேள்ளி எழும் சாத்தியங்கள் உண்டு. பிரபுக்களின் சபையினரில் யாரேனும் இதை விரும்பாமல் இருந்திருக்கலாம். அவர்கள் அரசகுமாரனின் பக்கம் இருந்தவர்களாக இருந்திருக்கலாம்.

சில ஆராய்ச்சியாளர்கள் அது Pentewere-யின் மம்மிதான் என்பதையும் ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்கள். 3-ஆம் ரம்சேஸ் அரசனின் மம்மிக்கும் கதறும் மம்மிக்கும் இருக்கும் ஒறுமைபாடுகளை பற்றிய மரபணு சோதனைகள் பல கட்டங்களில் நடத்தப்பட்டு வருகின்றன.