பிருமாண்டமான ஆங்கில திரைப்படங்களை கடந்த நூற்றாண்டில் கண்டு கழித்து இன்புற்றிருக்கிறோம். 'வெள்ளைக்காரன் நம்மல விட 20 வருஷம் முன்னுக்கு இருக்கான் டா' என பேசிக் கொள்வார்கள் அப்போதைய சமூக வலைத்தளம் இல்லாத விமர்சகர்கள். அரை குறை ஆடைகளை கண்டால் கண்னை மூடிக் கொள்ளும் நல்ல பிள்ளையாக இருந்த காலம்.
Friday, July 12, 2013
சிங்கம் 2 - பாக்குறியா பாக்குறியா
பிருமாண்டமான ஆங்கில திரைப்படங்களை கடந்த நூற்றாண்டில் கண்டு கழித்து இன்புற்றிருக்கிறோம். 'வெள்ளைக்காரன் நம்மல விட 20 வருஷம் முன்னுக்கு இருக்கான் டா' என பேசிக் கொள்வார்கள் அப்போதைய சமூக வலைத்தளம் இல்லாத விமர்சகர்கள். அரை குறை ஆடைகளை கண்டால் கண்னை மூடிக் கொள்ளும் நல்ல பிள்ளையாக இருந்த காலம்.
Monday, February 20, 2012
கொசுறு 20-02-2012
நான் தவறு செய்கிறேன் என நினைப்பது நெகடிவ் அப்ரோச்... நான் கற்றுக் கொண்டிருக்கிறேன் என நினைப்பது பாசிடிவ் அப்ரோஜ்... என தமது தத்துவ புத்தகத்தில் இருந்து இந்த வரிகளை எடுத்து வீசுகிறார் சாணியடி சித்தர். Positive approach for negative people எனும் தலைப்பில் படித்த ஒரு கட்டுரையின் சுவாரசியத்தை பகிர்ந்து கொள்கிறேன். சுமார் 25 ஆண்டுகளுக்கு முன் டாக்டர்களும் மருத்துவ பணியாளர்களும் மருத்துவமனையில் வேலை சமயங்களில் புகைத்திருக்கிறார்கள். இதை தவிர்க்கும் படியும் புகை பிடிக்காத சமூகம் உருவாக வேண்டும் என்றும் ஒரு டாக்டர் வழியுருத்தினார். அந்த மருத்துவரும் ஒரு வெண்சுருட்டு விரும்பி என்பதால் அவரின் கருத்து சாத்தியமாகாத ஒன்றென அக்காலகட்டத்தில் நம்பினர்.
******

பாலகுமாரனின் எழுத்துகளை வாசித்தவர்கள் அவருடைய இரும்பு குதிரைகள் மற்றும் மெர்க்குரி பூக்கள் எனும் இரு நாவல்களையும் மாஸ்டர் பீஸ் என அடித்துக் கூறுவார்கள். அவர் எழுத்துகளில் நான் மிக இரசித்தது பயணிகள் கவனிக்கவும்.
குதிரைக்கு கட்டற்ற வேகம் அவசியம். இரும்பு குதிரை எனும் இச்சொல்லை எழுதும் போது ‘க்’ எனும் எழுத்தினை தவிர்த்திருக்கிறேன். இரும்புக்கு க் போட்டு எழுதும் போது அச்சொல்லின் வேகத்தை அது தகர்பதாக சொல்கிறார் பாலகுமாரன். இலக்கியவாதிகள் ஏற்க மாட்டார்கள் எனில் ஏற்காமல் போகட்டுமே என ஜாலியாக சொல்லி நாவலை முடிக்கிறார்.
இது பாலகுமாரனின் வாழ்வில் ஏற்பட்ட உண்மை நிகழ்வாக இருக்கக் கூடும் எனும் எண்ணம் நாவலின் ஒரு சில இடங்களில் நிரடுகிறது. நமது வாழ்வில் நடக்கும் சின்ன சின்ன விஷயங்களை நாம் பெரிதாக கருதுவது கிடையாது. ஆனால் இக்கதையின் முக்கிய பாத்திரமான விஸ்வநாதனின் வாழ்க்கைச் சம்பவங்கள் இயல்பானவை. அதை நேர்த்தியாக சொல்லியிருக்கிறார் பாலகுமாரன்.
******

மூன்று புள்ளி ஒரு ஆச்சரியக்குறி எனும் கோட்பாட்டில் லட்சக்கணக்கான கவிஞர்கள் இயங்கிக் கொண்டிருப்பதால் கவிதையின் டிமாண்ட் அதிவேகமாக சரிந்துவருகிறது. இனி உங்கள் காதலிக்கு கவிதை எழுத மூலையை கசக்கிக் கொள்ள வேண்டாம். ஐந்து நிமிடங்களில் உங்களுக்கு தேவையான கவிதையை தயர் செய்து கொடுக்கும் குழு ஒன்றை அமைத்துள்ளேன். எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது. கிரேடிட் கார்ட்டு அசேப்டபல்.
******

சாபு வகை போதை பொருளை பற்றி கேள்விபட்டிருக்கிறீர்களா. இதை ஐஸ் என்றும் குறிப்பிடுவார்கள். வெளிச்சம் ஊடுருவும் சின்ன சின்ன கிரிஸ்டல் பொடிகளை போல் இருக்கும். பொதுவாக சிகரட்டு பாக்கெட்டில் இருக்கும் ஒரு வகை மஞ்சல் அல்லது சில்வர் காகிதத்தை தேய்த்து சமன்படுத்தி கொள்வார்கள். அதன் மேல் இப்பொடிகளை போட்டு சூடுகாட்டி ஸ்ட்ரா வைத்து மூக்கில் உறிஞ்சிக் கொள்வார்கள். ‘செர்கமே என்றாலும்’ போல் இருக்குமென இதன் அதி விரும்பிகள் கூறுகிறார்கள்.
இந்த ஐஸ் வகை போதை பொருள் இரண்டாம் உலகப் போரின் சமயம் அறிமுகமானது. போதை பொருள் தடுப்பு பிரிவினர் இதனை ‘designer drugs' என செல்லப் பெயரிட்டு அழைக்கிறார்கள். இரண்டாம் உலகப் போரின் சமயம் போரில் ஈடுபட்ட இராணுவத்தினர் இதை அதிகமாக பயன்படுத்தியுள்ளார்கள் விமானிகள் உட்பட. இவ்வகை போதை பொருளானது அதை எடுத்துக் கொள்ளும் நபர் குறைந்தபட்சம் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு தூக்கம் இல்லாமல் இருக்க உதவுமாம்!
அமேரிக்கா, சீனா, ஜப்பான் என எல்லா இராணுவமும் கலந்துகட்டி இதனை பயன்படுத்தி இருப்பதால் இதை கண்டுபிடித்த கனவான் யார் எனும் சர்ச்சை இன்னமும் ஆய்வில் உள்ளது. இருந்தும் இது சப்பை மூக்குகாரனின் சதி வேலை தான் என அடித்துக் கூறுகிறது ஒரு தரப்பு. மலேசியாவில் இதன் ஆதிக்கம் 90களின் ஆரம்பத்தில் கண்டறியப்பட்டது. சபா மாநிலத்தில் பிலிபைன்ஸ் நாட்டின் கள்ளக் குடியேகளால் கொண்டுவரப்பட்டதாக சொல்கிறார்கள்.நாளடைவில் அதன் பயன்பாடு பரந்து விரிந்து பல பகுதிகளுக்கும் சென்றுவிட்டதாக கூறுகிறார்கள். மலேசியாவில் இது வரை இதன் வர்த்தகத்தில் பிடிபட்டவன் ஒரு ஈரானியன். அவன் ஒரு மில்லினியரும் கூட.
சமகால இலக்கியவாதிகளை போல் சமகால போதை பொருள் வகையில் குதிரை மாத்திரை கொஞ்சம் பேமஸ். இதை உட்கொண்டு நான்கு நாட்கள் கலவியில் ஈடுபட்ட ஒரு பெண்னை பற்றி அடுத்த பகுதியில் ஆவலுடன் எதிர்பாருங்கள்...
******

சமீபத்தில் கோவி கண்ணன் மற்றும் வெற்றிக்கதிரவன் இருவரையும் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. வெற்றிக்கதிரவன் பல கவிதைகளை பற்றி பேசினார். ஐபோனில் கவிதை பக்கங்களை படம் பிடித்து பத்திரபடுத்தி வைத்துள்ளார். ஓய்வு சமயங்களில் அதை எடுத்து படித்துக் கொள்வாராம். சரி நமக்கும் கவிதைக்கும் தான் ஏழாம் பொருத்தமாச்சே அதனால் என் தரப்பில் விவாதிக்க ஒன்றும் இல்லாமல் போனது. அது எப்படி சார் இந்த கவிதைனு சொல்லும் விசயம் உங்களுக்கு புரிகிறது என கேட்டேன். அது ஒரு அலைவரிசைதான் தம்பி, அந்த அலைவரிசை பிடிபட்டுச்சுனா நீ கண்டிப்பா கவிதாவை ’மன்னிக்க’ கவிதையை இரசிக்கலாம் என சொன்னார் அண்ணன்.
வெற்றி அண்ணனிடமிருந்து ‘திசை கண்டேன் வான் கண்டேன்’ எனும் சுஜாதாவின் புத்தகம் எனக்கு இலவசமாக கிடைத்தது. படித்து முடிக்காமல் வைக்க முடியவில்லை. அப்படி ஒரு ஸ்பீடான கதை. இந்த பூமி அழியுமாயின் மனிதர்களின் மாற்றம் எப்படி இருக்கும் எனும் கற்பனையை நகைச்சுவை கலந்த யதார்த்த தோடு எழுதியிருக்கிறார். ’மனிதர்கள் தத்தம் துரோகங்களுக்கு திரும்பினார்கள்’ எனும் இதன் கடைசி வரி எனக்கு மிகவும் பிடித்திருந்தது.
இது ஒரு மாய யதார்த்த கதைதான் சைன்ஸ் ஃபிக்ஷனின் சேர்த்தியாக கருத முடியாது என்றே கருதுகிறேன். சைன்ஸ் விசயங்களில் சுஜாதாவின் 21-ஆம் விளிம்பு புத்தகத்தின் ஒரு கட்டுரை இப்போது நினைவிற்கு வருகிறது. டி.என்.ஏ தொடர்பான ஒரு விசயம் என்னவெனில் எதிர்காலத்தில் தேவையில்லா அணுக்களை நீக்கி உடலில் உள்ள நோயை குணப்படுத்தும் முறை ஏற்ப்படலாம் என்பதே. இது சாத்தியமாகலாம்.
******
பொறித்த கோழி விற்பனை செய்யும் ஒரு துரித உணவகம். கொஞ்சம் பிசியான ஏரியா. மக்கள் விரும்பும் இடம் என்பதால் அதிக வாடிக்கையாளர்கள் செல்கிறார்கள். எதிர்பாராத விதமாக அன்று விற்பனை மிகுதியில் கோழி தீர்ந்து விட்டதாம். கடுப்பாகி போன ஒரு கஸ்டமர் சத்தம் போட ஆரம்பித்துவிட்டான். சத்தத்தின் அழுத்தம் தாங்காத வேலையால் கஸ்டமரை கை வைத்துவிட அது தேசிய பிரச்சனையாகிவிட்டது. தற்சமயம் இன பிரச்சனையாக பேசப்படுவது தகாத ஒன்று. 2012-ஆம் ஆண்டு கோழி துண்டு கிடைக்காததால் ஒரு நாட்டில் இன கலவரம் ஏற்பட்டது என சரித்திரம் பேசினால் கேவலம் அமைச்சரே.
******
’பையோ மெட்ரிக்’ பாஸ்போர்ட் எனப்படுவது சில டிஜிடல் அடையாள கோட்பாடுகளை கொண்டது. ஸ்கேனரின் ஒரு இழுப்பில் நமது சரித்திரத்தை கொட்டிவிடும். பையோமெட்டிக்கின் அடையாளம் நெருப்பு பெட்டியை போல் ஒரு சின்ன கட்டம். கட்டத்தை இரண்டாக பிரிக்கும் நடுவில் வட்டம் கொண்ட ஒரு கோடு. இந்த வகை அடையாளம் கொண்ட கடவுச் சீட்டுகள் (அதாம்பா பாஸ்போட்டு) மின் படிப்பி (பையோமெட்ரிக் சிப்ஸ்) வசிதிக் கொண்டதென அர்த்தமாகும்.
இன்னமும் சில நாடுகளில் இந்த வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லை. சீனா தேசம் இதில் அதிவேக அடைவை எட்டி உள்ளது. ஒருவரின் மருத்துவ குறிப்பு முதல் அந்த சிப்பில் அடக்கிவிடுகிரார்கள். வெளிநாட்டில் தவறு செய்து பிடிபடும் ஒரு சீன குடிமகன் வெளிநாட்டு தண்டனையோடு தன் நாட்டிலும் தண்டனை பெறுவான். மேலும் குறிப்பிட்ட காலத்திற்கு வெளி நாடு செல்ல அனுமதியும் மறுக்கப்படும். இந்தியாவில் வெளிநாட்டில் பணி புரியும் டிப்லோமட்டிக் ஊழியர்களுக்கு பையோமெட்ரிக் பாஸ்போர்ட் கொடுக்கப்படுகிறது. சில திங்களுக்கு முன் எனது மாமாவின் கனடா பாஸ்போட்டை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. கனடா பையோமெட்ரிக் சிப்சை தனது கடவுச்சீட்டின் இரண்டாம் பக்கத்தில் புதைத்திருக்கிறது. பயோமெட்ரிக் பாஸ்போட் இல்லாத ஒரு நாட்டின் குடிமகன் ஜனவரியில் பிரம்படியும் சிறை தண்டனையும் பெற்று அனுப்பப்பட்டு மீண்டும் நவம்பரில் சந்தித்ததும் உண்டு. நவம்பரில் அவன் ஜனவரியை மறுபடியும் சந்தித்தான்.
பொதுவாகவே இந்த சிப்ஸ்கள் பாஸ்போட்டின் கடைசி பக்கத்தில் இருக்கும். மெல்லிய நெகிழி (பிளாஸ்டிக்) தாளை போல் இருப்பதால் பயனர்கள் இதை அவ்வளவாக அறிந்திருக்க மாட்டார்கள். உங்களது பயோமெட்ரிக் பாஸ்போடின் <<<< >>> போன்ற அடைப்புக் குறிக்குள் எழுத்துகளுக்கும் எண்களுக்கும் ஒரு கணக்கு விகிதம் உள்ளது. சிப்ஸ் பழுதாகினாலும் மெசின் வேலை செய்யாமல் போனாலும் இதில் கொஞ்சம் கூட்டல் பெருக்கல் வகுத்தலை போட்டு போலியா அல்லது நிஜமானதா என்பதை அறிந்துக் கொள்ள முடியும்.
பயோமெட்ரிக் வகைகள் பல உண்டு. கால ஓட்டத்தில் இவை மாற்றம் அடைந்துக் கொண்டு வருவதிலும் வியப்பேதும் இல்லை. புலக்கத்தில் இருக்கும் பையோமெட்ரிக் வகைகள், கைரேகை பதிவு செய்யும் முறை, டி.என்.ஏ, கண்ணில் இருக்கும் பூபா, முகம் என நீல்கிறது. இதை பற்றி மட்டும் ஒரு தனி பதிவு எழுதலாம். மொத்தத்தில் இந்த பையோமெட்ரிக் அமலாக்கம் குற்றச் செயல்களின் ஃபோரென்சிக் விசாரனையின் ஆரம்ப கட்டத்திற்கு மிகவும் உதவி புரிகிறது.
******
சமீபத்தில் படித்து மனதை கவர்ந்த ENTER கவிதை:
யாருக்கோ காத்திருக்கும்
செய்து முடித்த
சவப்பெட்டியாய் நாம்
என்னில் நீயோ
உன்னில் நானோ
புதைக்கப்பட்டால்
பிரசவிப்போம்
பால் வீதியில்
சில நட்சத்திரங்களை
மழைக்கும் வெயிலுக்கும்
ஒரே குடை
வாழ்விற்கும் சாவிற்கும்
ஒரே மலர்
எனக்கும்
என் பிணத்திற்கும்
நீ
-பின்னிரவுப் பெருமழை தொகுப்பில் ரிலுவான் கான்
******

எனது முகபுத்தகத்திலிருந்து:
கண்ணதாசன் தனது வாழ்க்கையை மூன்று பாகங்களாக பிறித்து எழுத நினைத்த புத்தகங்கள் வனவாசம், மனவாசம் மற்றும் அஞ்ஞானவாசம். இதில் மனவாசம் எழுதிக் கொண்டிருக்கும் சமயம் அவர் நோய்யினால் இறந்து விடுகிறார்.
மனவாசத்தில் அவர் எழுதிய ‘தாய்கிளி’ எனும் கவிதையே அவர் கடைசியாக எழுதியது. தாய்லாந்து சென்றிருக்கும் சமயம் அவரோடு இருந்த ஒரு தாய்லாந்து பெண்னை பற்றிய கவிதை. இது அந்த தாய்லாந்துகாரிக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை :-). ஆக வனவாசம் முழுவடிவிலும் மனவாசம் பாதியாகவும் அஞ்ஞானவாசம் எழுதப்படாமலும் போனது.
மறைவின்றி கூறப்படும் கண்ணதசனின் வாழ்க்கை வரலாறு எதற்கும் அடங்காத காட்டாறகவே தெரிகிறது. முன்னுரையில் அவரே செல்கிறார் '' நான் எப்படி வாழ்ந்தேனோ அப்படி வாழாதீர்கள்; நான் கூறியபடி வாழ முயற்சியுங்கள்''.
*********
Monday, October 12, 2009
கொசுறு 12/10/2009
சில காலமாக எதையும் எழுத தோன்றவில்லை. ஏதோ ஒரு குழப்ப நிலை என்று கூட சொல்லலாம். சில வேளைகளில் எழுதுவதற்கான சிந்தனைகள் பெருக்கெடுப்பதும், சில வேலைகளில் தடைபடுவதும் கால இடைவெளிகளில் இயல்பாகவே இருக்கின்றது. ஏன் எழுத வேண்டும் என்ற எண்ணமும், எழுதி முடித்தப் பின் கிடைக்கும் நிறைவும் கூட தீர்க்கமான முடிவுகளை எடுக்க தடையாக இருக்கிறது. இது எல்லோருக்கும் ஏற்படுவது தானோ?***********
சனி பெயர்ச்சியின் பலன்கள் தினசரிகளை இன்று வரையினும் நிரப்பி வருகின்றன. சென்ற வாரம் இரவு சாப்பாட்டை முடித்துவிட்டு அமர்ந்திருக்கையில் அம்மாவிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. தொலைகாட்சியில் இராசி பலன் பார்த்தேன். இதை எல்லாம் சொன்னார்கள். பார்த்து கவனமாக இருந்துக் கொள் என்றார். நான் நிம்மதியாக இருந்தாலும் இப்படி பீதியை கிளப்பிவிட பல ‘நம்புங்கள் நாராயணன்கள்’ கிளம்பிவிடுகிறார்கள். இப்படி நிம்மதி கெடச் செய்யும் ராசி பலன் அவசியம் தானா?
******
ம.இ.காவின் தேர்தல் ‘போராட்டம்’ முடிந்த பின்பும் கட்சியின் சடுகுடுகள் முடிந்தபாடில்லை. நாளிகைகளில் தலையங்கம் தினமும் வெறுபேற்றித் தொலைக்கிறது. ஒரு செய்திக்கான தகவல் படித்தவுடன் இதற்கான மறுப்பறிக்கை நாளை இப்படி தான் இருக்கும் என பட்சி சொல்கிறது. எங்கே நானும் அரசியல் ஜோதிடனாகிவிடுவேனோ என பீதி பிசிறி அடிக்கிறது.
கட்சி மக்களுக்கு நன்மை செய்யும் எனும் எண்ணம் எல்லாம் எப்பொழுதும் எட்டாக்கனி தான் என்பதை இப்படி அதி தீவிரமாக சொல்லியாக வேண்டுமோ?
*****
இயக்குனர் ஷங்கரின் படங்கள் (ஜீன்ஸ் & காதலன் தவிர்த்து) ஒரே டெம்ப்ளேட்டை பல முறை எடிட் செய்து கொடுப்பதை போல் இருப்பது பக்கத்து வீட்டு பத்து வயசு பாப்பாவுக்கும் தெரிந்த செய்தி தான். இருப்பினும் அவரின் தயாரிப்புகளில் நல்ல நம்பிக்கையை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார்.
ஈரம் திரைப்படத்தை காணும் வாய்ப்புக் கிட்டியது. வழக்கமாக பார்த்து பழக்கப்பட்ட பேய் கதை என்றாலும் கதை நகர்வு சுவாரசியம் கொடுத்திருக்கிறது. அழகான இசை அமைப்பு. படம் கொஞ்சமாக ’ஃபைனல் டெஸ்டினேஷன்’ எனும் ஆங்கில படத்தையும் நினைவுபடுத்த வைக்கிறது.
******
எனக்கு சில அடிமைகள் வேண்டும் எனும் என் சிறுகதைக்கு வந்த மின்கடிதங்களுக்கு நன்றி. அதில் சில கடிதங்களில் சொல்லப்பட்ட ஒரு விடயம், விக்கி எனக்கு கதை புரியவில்லை. சுஜாதா பாணியா? என்ன சொல்ல வருகிறீர்கள்? கொஞ்சம் விளக்கமாக சொல்லுங்கள். இப்படியாக தான் இருந்தது.
நான் எழுதிய கதைக்கு நானே விளக்கம் கொடுப்பதை விட நான் அதை எழுதாமலே இருந்திருக்கலாம் என்றிருக்கிறது. படிப்பவர் புரிந்துக் கொள்ள முடியாத அளவிற்கு மட்டரகமாக கதைகளை எழுதாமல் இருக்க முயற்சிக்கிறேன்.
இதை எழுதி முடித்த சமயத்தில் எனக்குள் எழுந்த கேள்வி ஒன்று:
அதீத கற்பனையில் சொல்லப்படும் ஒரு கதையை அறிவியல் பாணியில் சேர்ப்பது சரிதானா?
நரேஸ் அவர்களின் மடல் நயமாக இருக்கக் கண்டேன்.
அன்பின் விக்னேஷ்,
இது ஒரு நல்ல, பெரிய முயற்சி....அதற்காக எனது வாழ்த்துக்கள்
வலைப்பதிவு அலுவலகத்தில் தடா... எனக்கு வந்த மடலில் உங்கள் கதையை படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. உங்களுடைய எந்த பின்னூட்டத்திலாவது அல்லது யாராவது சுஜாதா நடை வருகிறது என்று சொல்லியிருந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை....கா
உதாரணம், இயந்திரத்தை சோதிக்க வேண்டும் என்று எண்ணி திடீரென்று உலக வளர்ச்சியாளர்களின் சதி என்று ஒரு புதிய விஷயத்தை கொண்டு வருகிறீர்கள், அது கொஞ்சம் நெருடுகிறது...முடிவில் அந்தப் பெண் சொல்லும் விளக்கங்கள் என்று சில....இன்னும் கொஞ்சம் விளக்கியிருக்கலாமோ....
என்னடா குறைகளை அதிகம் சொல்கிறேனே என்று எண்ணாதீர்கள்...இது கதையை மெருகூட்ட மட்டுமே....மற்றபடி கதையில் சிலாகிக்க ஏகப்பட்ட விஷயங்கள் உள்ளன, உங்கள் முயற்சியையும் சேர்த்து...
--
நரேஷ்
meetnnk1@gmail.com
*****
கவிதை பற்றிய எனது புரிதல்கள் பிசகி சின்னாபின்னமாகி கொண்டிருப்பதை உணர முடிகிறது. வசனத்தை மடக்கி போடுவது. சிரமப்பட்டு தமிழ்ச் சொற்களை பொறுக்கி போடுவது. ரௌத்திரமாக ஒரு செய்தியை சொல்வது. இப்படியாக இருப்பது தான் கவிதையா? சில அறிவு ஜீவிகள் புதுக் கவிதைக்கும் மரபுகளை வகுத்து வருவதாக அறிய முடிகிறது. எப்படியோ... இது கால காலமாக தீராத ஒன்று தான்.
நண்பர் அமுதனின் ஈற்றடி வெண்பா இரசிக்க வைத்தது. கல்லூரி மாணவர்களின் இன்றய அவல நிலையை ஆங்கில கலப்பில் மரபுடன் படைத்திருப்பது இரசிக்க வைக்கிறது.
பிக்கப்பும் ஆவதொடு டேட்டிங்கும் போய்வந்து
செக்கப்பும் செய்வாள் சிலை!
******
எழுதாமல் இருந்த இக்காலகட்டத்தில் நலம் விசாரித்த அன்பர்களுக்கு நன்றி. நான் எழுத்தாளன் கிடையாது. நண்பர் வால் அடிக்கடி ஒன்று சொல்வார். நான் அவ்வளோ ‘வெர்த்’ இல்லை என. அது போல் நான் ’வெர்த்’ உள்ள ஆசாமியும் இல்லை. இது என் பொழுதுபோக்கு மட்டுமே. எண்ணம் இருக்கும் வரை எழுதலாமே... :-)
**********
நீண்ட நாட்களுக்கு பின் சாண்டில்யனின் புத்தகம் ஒன்றை படிக்க முற்பட்டேன். சில பக்கங்களில் திகட்ட ஆரம்பித்துவிட்டது. சரித்திர விடயங்களை மேம்போக்காக அறிந்துக் கொள்ள சாண்டில்யனின் நாவல்கள் துணை புரிவது மறுக்க இயலாது. பெண்களை அபரிமிதமாக வர்ணிப்பது. உலக அழகிகளை அவர் கதையில் மட்டுமே காண முடியும் என்பதைப் போன்ற சிருங்காரங்களையும் அகற்றினால் புத்தகத்தில் எத்தனை பக்கங்கள் மிஞ்சும் என யோசிக்க வைக்கிறது.
*******
பார்க்க முடியாத கடவுள் மேல் அன்பு வைக்கிறது நெகடிவ் அப்ரோச், பார்க்க முடிந்த மனிதர்கள் மேல் அன்பு வைக்கிறது பாசிடிவ் அப்ரோச் என சாணியடி சித்தர் சொல்லி இருக்கிறார்.
Thursday, August 06, 2009
பீ கேர்புல் - பெரியவங்களுக்கு மட்டும்
சனிக்கிழமை மஸ்ஜிட் ஜாமெக் காரைக்குடி உணவகத்தில் இனிதே மதிய உணவை முடித்துக் கொண்டு நண்பரோடு கிளம்பினேன். வழக்கம் போல அல்லாமல் மக்கள் கூட்டம் அதிகரித்திருந்தது. இசா தடுப்புக் காவல் சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்தும் பொருட்டு தகவல்கள் பரப்பப்பட்டிருந்தது அதற்கு காரணம் என புரிந்துக் கொள்ள முடிந்தது.பிறகு கணினி கண்காட்சிக்கு சென்றோம். கே.எல்.சி.சியில் மிகப் பெரிய அளவில் நடந்த அக்கண்காட்சியில் நான் மிகச் சிறிய ஐபாட் ஒன்றை வாங்கிக் கொண்டேன். கண்காட்சி கதைக்கு அப்புறம் வருவோம். இப்போது இசா தடுப்புக் காவல் சட்டம் சம்பந்தப்பட போராட்டத்தைப் பற்றிய செய்தியைப் பார்ப்போம்.
கண்காட்சி முடிந்து வரும் போது மஸ்ஜிட் ஜாமெக் எல்.ஆர்.டி இரத்து செய்யப்பட்டுள்ளதாக ஒலி பெருக்கியின் வழி தகவல் தெரிவித்தார்கள். எல்.ஆர்.டியில் ஏறிய போது “நாங்கள் இசா சட்டத்தை ஆதரிக்கிறோம்” என மலாய் மொழியில் வார்த்தைகள் பொரிக்கப்பட்ட சட்டையினை அணிந்துக் கொண்டு சில வருங்கால தலைவலிகள்... மன்னிக்க... தலைவர்கள் கையில் சில பொட்டலங்களை வைத்துக் கொண்டு வழியை மறித்துக் கொண்டு ஆள் நிற்கும் இடத்தில் அமர்ந்திருந்தார்கள்.
காக்கா ”கக்கா” போனது போல அவர்களது தலை முடி பழுப்பேரி இருந்தது. கையில் தலைக்கவசம் வேறு. கொஞ்ச நேரம் கலந்திருந்துவிட்டு ஓடி வந்தவர்களா அல்லது காசு கொடுக்கப்பட்டதும் சிட்டாக பறந்து வந்துவிட்ட ஆசாமிகளா என தெரியவில்லை.
மிக எளிமையான சமுதாய மரியாதை கூட தெரியாத ஆட்களையெல்லாம் கூட்டம் கூட்டிக் கொண்டு இன்னும் எத்தனைக் காலம் கூத்தடிக்கும் திட்டம் இவர்களுக்கு இருக்கிறதென புரியவில்லை. இரவு வேளைகளில் அம்மணிகளை பின்னால் அமர வைத்துக் கொண்டு மோட்டார் சைக்கிலில் பறக்கும் ஆட்களுக்கு இப்படி பணம் கொடுத்து வளர்த்துவிடுபவர்களை என்ன சொல்வது. சரி அரசுக்கு சாதகமாக ஆதரவளித்த இவர்கள் ஒரு பக்கம் இருக்கட்டும்.
இசா சட்டத்தை எதிர்க்கிறேன் பேர்வழி என சொல்லிக் கொண்டு எதிர்கட்சி தரப்பில் வந்தவர்கள் செய்தது என்ன? மக்களுக்கு எவ்வளவு தொந்தரவுகள்? இதெல்லாம் செல்லித் தான் தெரிய வேண்டும் என்றில்லை. காலம் காலமாக போராட்டம் எனும் பெயரில் எல்லோருமாக கிளம்பி பேரணி நடத்துவதை விடுத்து வேறு விதமாக யோசிக்கலாம்.
அரசு தரப்பில் இசா சட்டம் சம்பந்தமாக நாடாளுமன்றத்தில் பரிசீலனை செய்யப்படும் என பிரதமர் வாக்குறுதி கொடுத்திருந்தார். அப்படி இருக்க இந்த பேரணி அவசியமான ஒன்று தானா? எதிர்கட்சியினரின் மலிவான விளம்பரத் தேடலையே இது குறிக்கிறது.
எதிர்கட்சியினரிடம் முன்பு மக்களிடையே நல்ல மதிப்பு இருந்தது மறுக்க இயலாது. மலிவு விளம்பரத்துக்காக தமது செயல்திட்ட பட்டியல்களை நிரப்பிக் கொண்டு நானும் எதையாவது செய்தேன் என இப்படி செயல்பட்டுக் கொண்டிருந்தால் மக்களின் நம்பிக்கை கெடுவதற்கு இவர்களே காரணமாக அமைந்துவிடுவார்கள் என்பதில் சந்தேகமில்லை.
*********
கணினி கண்காட்சியில் நுழைந்ததும் எனக்கு தலைசுற்றிப் போனது. மிகப் பெரிய அளவில் நடக்கும் இதில் கலந்து கொண்டோர் ஒவ்வொருவரும் தான் வழி தவறி சீன தேசத்துக்கு வந்துவிட்டோமோ என நினைக்காமல் இருந்திருக்க மாட்டார்கள்.
ஏன் இங்கு வேலை செய்பவர்களில் தமிழர்களும் மலாய்காரர்களும் மிக மிகக் குறைவாக இருக்கிறார்கள்? இணைய தளத்தில் கணினி கண்காட்சிக்கான செய்திகளும், விளம்பரங்களும் கூட சீன மொழியில் தான் இருக்கிறது. நோ கமெண்ட்ஸ் :-)
பதிவுலகில் ஆடி 18-ஆம் பெருக்கின் சமயங்களில் பொன்னியின் செல்வன் நாவலையும் எங்காவது ஒரு மூலையில் பேசி இருப்பதைக் காண முடிகிறது. பொன்னியின் செல்வனை படித்து சில ஆண்டுகளாகிவிட்டது. இது வரை நான்கைந்து பேரையும் படிக்க வைத்துவிட்டேன். நாவல் தொடங்குவது ஒரு ஆடி பெருக்கின் சமயம். ஒவ்வொரு ஆடி 18-ன் போதும் பொன்னியின் செல்வன் நாவலும் நம் நினைவை தட்டிச் செல்கிறது.
இப்பொழுதும் அந்நாவலை மீண்டும் படிக்கத் தூண்டுகிறது. பூங்குழலி- இந்நாவலில் என்னைக் கவர்ந்த கதாபாத்திரங்களுள் ஒன்று. என் தங்கைக்கு பெண் குழந்தை பிறந்த சமயம் இந்த பெயரை பரிந்துரை செய்தேன். “என்ன பேரு இது குழாய் உடைஞ்சி போன மாதிரி” என்றார்கள்.– நோ கமெண்ட்ஸ்
******
21-12-2012 இந்த தேதியை பார்த்தும் சிலருக்கு புரிந்திருக்கக் கூடும். இந்த தேதியில் உலகம் அழிஞ்சி போய்டும்னு சிலர் பேசிக்கிறாங்க. நானும் இதைக் கேட்டு ஷாக் ஆகி போய் கிடக்குறேன்.
2012 எனும் ஹாலிவுட் திரைப்படம் திரைகாண இருக்கிறது. இந்த வீடியோவை பார்க்கவும்:
படத்த பார்த்து திகில் ஆகிடாதிங்க.
உலகின் இறுதி நாள் 21-12-2012- மாயன்கள் உறுதி!! இதையும் ஒரு எட்டு பார்க்கவும்.
இது சம்பந்தமாக தோழர் யுவகிருஷ்ணாவின் பதிவு:
அழியப் போகிறதா உலகம்
Wednesday, July 22, 2009
நானும் டெரர் தான்... ஜீப்புல ஏறிக்கிறேன்... பார்த்துக்கோங்க...
அன்று டீ குடிக்க சென்ற போது கொஞ்சம் தள்ளி இருந்த மேசையில் ஒருவர் அமர்ந்திருந்தார். என்னைப் பார்த்து தலையசைத்து சிரித்தார். யாரென தெரியாமல் என் மூளையை கசக்கியபடி நானும் சிரித்து வைத்தேன்.
”விக்னேஷ் தானே?” ஆமாம் என்றேன்.
”நான் மனோகரன். நீங்க பிளாக் எழுதுவீங்க தானே?” என்றார். சிரித்துக் கொண்டே ஆமாம் என்றேன்.
டீ வந்ததும் அருந்திக் கொண்டிருந்தேன். அவர் சாப்பிட்டுவிட்டு கைகழுவிட்டு வந்தார். என்னிடம் கைகுழுக்கிவிட்டு பேசினார்.
“ரொம்ப நல்லா எழுதுறீங்க சார். உண்மைய சொல்லனும்னா நீங்க எழுதுறத பார்த்து தான் எனக்கும் எழுதனும்னு ஆசையே வந்துச்சு. மனோவியம் என் பிளாக்கு தான். ஒவ்வொரு பதிவும் வித்தியாசமா எழுதுறீங்க. படிக்க நல்லா இருக்கு. இன்னும் நிறைய எழுதனும் நீங்க. எனக்கு எழுத சிரமமா இருக்கு சரியா எழுத முடியல. நிறைய படிக்கனும்” என்றார். ”ஆர்வம் இருந்தால் நிச்சயம் எழுதலாம் சார். தொடர்ந்து எழுதுங்கள்” என்றேன்.
பார்த்தீங்களா நானும் டெரர் தான்....
*******************
பிரபாகரன் தீவிரவாதி ஒசாமா போராட்டவாதி என ஒரு பதிவு எழுதி இருந்தேன். இஸ்லாமிய சகோதரர் ஒருவர் வெகுண்டெழுந்து இஸ்லாத்தை நீ புரிந்துக் கொள்ளாமல் பேசிவிட்டாய் என கேள்விகளை அடிக்கி வைத்து ஒரு மின்மடல் அனுப்பி இருந்தார். அதில் நான் இஸ்லாத்தை புரிந்துக் கொள்ளும் பொருட்டு சில தொடுப்புகளையும் கொடுத்திருந்தார்.
சகோதரர் எனது பதிவை தொடர்ந்து படிக்கிறாராம். அவர் மத தீவிரவாதம் கொண்ட ஆள் இல்லையாம். என் கட்டுரையில் உண்மை இல்லாததால் மடல் எழுதி இருக்கிறாராம். ஏன் அந்த கட்டுரைக்கு மட்டும் என புரியாமல் பல நாள் தூக்கம் இழந்து தவித்து போனேன். சகோதரருக்கு பதில் கொடுக்க விரல்கள் துருதுருத்துக் கொண்டிருக்கின்றன.
நானே எனக்கு ஆப்படித்துக் கொள்ள முடியுமா? யாராவது எனக்கு வெளிநாட்டில் ஒரு வேலையும் பாதுகாப்பும் தருவதாக இருந்தால் சொல்லவும் வகை வகையாக பதில் எழுதுகிறேன்.
மன்னிக்கவும் சகோதரர் சபீர் கான் உங்கள் கேள்விக்கான பதில் சொல்ல முடியாமல் மீளா துயரத்தில் வாடுகிறேன். மின்மடலில் ‘think first' என நீங்கள் போட்டிருந்த தலைப்பை மிக இரசித்தேன். இஸ்லாமிய நாகரீக கல்வியில் நான் சிறப்பு தேர்ச்சி பெற்றிருக்கிறேன். அதனால் நீங்கள் அனுப்பிய தளங்கள் எல்லாம் சுத்த ’வேஸ்ட்’. ஏன் நேரத்தை வீணாக்கிக் கொள்கிறீர்கள். போய் புள்ள குட்டிய படிக்க வைக்கிற வழிய பாருங்க.
பார்த்தீங்களா நானும் டெரர் தான்....
*****************
ஒரு இலக்கிய சந்திப்பில் கலந்துக் கொள்ளும் வாய்ப்பு கிட்டியது. எனக்கு லேகியம்... மன்னிக்கவும்... இலக்கியம் தெரியாது என்றாலும் கார வடையும் கோப்பி தண்ணியும் இலவசமாக கொடுப்பதாக கூறி இருந்ததால் நிச்சயம் கலந்துக் கொண்டே ஆக வேண்டும் எனும் ஆளாதியான எண்ணம் கொந்தளிக்க இனிதே கலம் கைகொடுக்க கலந்துக் கொண்டேன். மேற்கானும் வாக்கியம் லேகியம் பிசகாமல் வந்திருக்கிறதா என சங்க இலக்கியங்களை எடுத்து சரி பார்த்துக் கொள்ளவும்.
ந என ஆரம்பிக்கும் நான்கெழுத்து தோழர் பத்திரிக்கையின் ( அட எனக்கும் கிசுகிசு எழுத வருது) ஆசிரியர் ஒருவர் தம்மை அறிமுகப் படுத்திக் கொண்டு பேசலானார். எனது வெறு வாய்க்கு அவில் கொடுத்தமைக்கு நன்றி. இலக்கியம் அப்படி இருக்கனும். எதிர்காலத்துல வெள்ளைக்காரன் ஆராய்ச்சி பண்ணினா நம்ம மொழி நாசமா போய்டும் (எதிர்கால வெள்ளைக்காரனுக்கு இப்பவே வாய்ப்பு கொடுத்துட்டாரு). மரபு படிங்க. என பேசி ஒரு சில சங்க பாடல் வரிகளைச் சொல்லி சிலாகித்துக் கொண்டார்.
அவர் பேசி முடிந்ததும் அவர் வேலை செய்யும் பத்திரிக்கை தர்மத்தை எடுத்துரைத்தேன். நான் அனுப்பிய கட்டுரை மற்றும் சிறுகதைகளில் உள்ள எழுத்துப் பிழைகளைக் கூட உங்கள் பத்திரிக்கை சரி செய்ய முற்பட்டதாக தெரியவில்லை. ஆசிரியரிடம் விசாரித்தால் நீங்கள் கவனமாக எழுதி அனுப்ப வேண்டும் என்கிறார். இதை பற்றி வலையில் எழுதிவிட்டால் புரக்கணிப்புகள் ஏற்படுகின்றன. இதை என்ன சொல்வதென்றேன்.
நான் இப்போது பத்திரிக்கையில் வேலை செய்பவன் அல்ல என்ற முறையில் பார்த்தால் மிகவும் வருந்துகிறேன் என சொல்லி உள் நடக்கும் சில ஆமை கதைகளை சொன்னார். அது நமக்கு தேவையற்றது. முதலில் நம்மைச் சுற்றியுள்ள சூழலை கவனிக்க வேண்டும். அதைவிட்டு நீ இப்படி எழுதனும் இதை செய்யனும் என ஊருக்கு உபதேசம் செய்வது, தமிழ் நலம் காக்கும் ஆசான் தம் பிள்ளையை மலாய் பள்ளிக்கு அனுப்பிய கதையாக தான் இருக்கிறது.
மேலும் அவர் சொன்ன ஒரு விடயம் கொச்சையாக எழுதாதீர்கள் என்பது. இந்த கொச்சை வார்த்தை, கச்சை வார்த்தை எல்லாம் எப்படி தீர்மானிக்கிறீர்கள் தெரியவில்லை. பட்டிணத்தார் பாடல்களில் இல்லாததையா இப்போது எழுதப்பட்டுவிடுகிறது. புரியவில்லை...
சரி அதை விடுவோம், கூட்டம் முடிந்ததும் என்னிடம் சொன்னார். உள்ளுக்குள் வேலை அப்படி. நாம தான் கவனமா இருக்கனும் என முன்பு சொல்லியவரை போலவே சொன்னார். அச்சமயம் அவர் பத்திரிக்கை ஆசிரியராக மாறிவிட்டார். இவருக்கு அடிக்கடி அந்நியனாகும் நோய் இருக்கிறது. என் உயிருக்கு ஏதும் ஆபத்தாகிவிடுமோ என நான் அப்படியே ஷாக் ஆகிட்டேன்.
நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட பேராசிரியர் அவர்கள் எனது வலைப்பதிவை பார்வையிடுகிறார் என அறிய முடிகிறது,
பாதியில் கலந்துக் கொண்டாலும் அவர் உரை இரசிக்கும் படியாகவே இருந்தது. சில கருத்து முரண்பாடுகளும் எனக்கு இருக்கவே செய்கிறது. அவர் இறுதியாக சொன்ன ஒரு விடயம்: பத்திரிக்கையை நாம் அனுசரித்து போக வேண்டும் என்பது. இதில் கிஞ்சித்தும் உடன்பாடுகிடயாது. இதை நான் விளக்கவும் தேவை இல்லை என்று கருத்துகிறேன்.
பார்த்தீங்களா நானும் டெரர் தான்....
******************************
சமயமெனும் சாக்கடை உலகம் எனும் எனது கட்டுரைக்கு வந்த ஓர் எதிர்பதிவு:
ஆரம்பக் கால ஆசிரியரை
'இடி அமீன் வாத்தி'என
நினைவு கூர்ந்தார்
பட்டதாரி எழுத்தாளர்
இதுவா பண்பு
இதுவா நன்றிக்கடன்
வலைபகுதியில்
எப்படி வேண்டுமானாலும்
எழுதலாமா - சுகந்தினி (மேலும் படிக்க இங்கே சுட்டவும்)
ஆசிரியர்களை அவ்வரி பாதித்திருந்தால் பொறுத்தருள வேண்டும் அதை மாற்றி விட்டேன்.
நன்றி
விக்னேஸ்,
எழுத்து வேகம்,
விவேகம், வியூகம்
உம்மிடம் கண்டேன்
இனிய தமிழ்ச் சொற்களைப்
பயன்படுத்தினால்
உம் கிறுக்கல்கள்
மேலும் சிறப்படையும்
தொடரட்டும் உம் பணி.
கண்ணில் விளக்கெண்ணை விட்டுக் கொண்டு தவறுகளை பார்க்கிறீர்கள். ம்ம்ம் ஆகட்டும்....
பார்த்தீங்களா நானும் டெரர் தான்....
*****************

நண்பர் அப்பாவி முரு எனக்கு விருது வழங்கி இருக்கிறார். அவரது அன்புக்கு மிக்க நன்றி.
மற்றவர்களுக்கு விருது வழங்கும் அளவுக்கு நான் இன்னும் வளராததால் தற்சயம் என் வசமே இருக்கட்டும். இதுவும் கொஞ்சம் கொஞ்சம் 32 கேள்வி தொடர் விளையாட்டு மாதிரியே இருக்கு.
என்னை வச்சு காமிடி கிமிடி பண்ணலையே?
நானும் விருது வாங்கிட்டேன்.
(பிற்சேர்க்கை: எனக்கு இவ்விருதை வழங்கி இருக்கும் மேலும் இருவர் கோமா மற்றும் தமிழ் பிரியன் ஆகியோருக்கு நன்றி.)
பார்த்தீங்களா நானும் டெரர் தான்....
Saturday, June 13, 2009
செவ்வாய் கிரகத்தில் MLM சிஸ்டத்தை அறிமுகப்படுத்துவீர்களா?
கடன் கொடுக்கும் கலியுக சித்தர்கள் எனும் தலைப்பில் வட்டி முதலைகள் பற்றி நான் எழுதியக் கட்டுரைக்கு அன்பர் ஒருவர் கடிதம் எழுதி இருந்தார். ஒட்டு மொத்த இந்தியச் சமுதாயத்தையும் தூக்கி நிறுத்த ஒரு திட்டம் வைத்திருப்பதாக தமது மடலில் குறிப்பிட்டுள்ளார். அவர் கடிதத்தைப் படிக்க மேலும் தொடருங்கள். அவர் எழுதியதைக் கீழே கொடுத்துள்ளேன்.
//////////////////////////////
தங்களின் பிளாக் ஃபாலோ செய்யும் ஃபாலோவர்ஸ்களில் அடியேனும் ஒருவன்.
நல்ல பல விசயங்களை அலசி ஆரய்ந்து வருகிறீர்கள்.
கடைசியாக 'வட்டி முதலைகளின்' மேல் கொண்ட தங்களின் அலசல் நன்று.
நான் கோவின் @ ரகு @ ராகவன், சிலாங்கூர், ரவாங்கை சேர்ந்தவன், வணக்கம்.
நான் தங்களைத் தொடர்பு கொள்வதன் நோக்கம், ஒரு விசயம் பற்றி தங்களிடம் பேசவே.
உங்கள் அனுமதியோடு (தந்துவிட்டீர்கள் என்று எடுத்துக் கொள்கிறேன்) :) பேச விரும்புகிறேன்.
என் கருத்தின்படி, நம் இந்திய சமுதாயம், பொருளாதார பிரச்சனையின் காரணமாகத் தான், இந்நாட்டிலே மிகவும் தாழ்வான நிலையில் அல்லோல பட்டுக் கொண்டிருக்கிறது என்பது என் திடமான கருத்து.
சமீப காலத்தின் முன், நான் இணைந்த ஒரு பொருளாதார திட்டம், நம் இன (மட்டுமன்றி அனைவரின்) பொருளாதார பிரச்சனையும், மிகக் குறைந்த முயற்சி மற்றும் மிகக் குறைந்த மூல தானத்துடனும், தீர்த்து வைக்க முடியும் என்று நான் பலமாக நம்புகிறேன். இந்த திட்டத்தில் நமக்கு தேவை எல்லாம் ஒன்றுபட்ட செயல் முறையே
தயை செய்து கீழ் கண்ட வெப்சைட்டை பாருங்கள், தங்களின் கருத்தைக் கூறுங்கள்.
(one-time-out-pocket of rm230 and bring in two friends, and ONCE one's team gathers 30 downlines, it will start create
rm45,000 monthly OR each cycle) NOT BUT AGAIN AND AGAIN there after.) www.g1g4lite.net (guest code 71184)
this is a three-year-old univesal programme based from Canada.
Not a business but a PEER-TO-PEER HELPING, GIFTING SYSTEM. migavum arumaiyaaga poikittu iruku. $$$$$ neradiyaaga nam bank account-ku vantidum.
தேவை எனின் உங்களை நேரிடையாக சந்திக்க தயாராக உள்ளேன்.
நம் மக்களின் நலம் பொருட்டு, தங்களின் கூட்டுறவு நாடும்
தங்களின் புதிய நண்பன்
Govind
//////////////////////////////
என் நலன் கருதியும் இந்நியச் சமுதாயத்தின் நலன் கருதியும் நேரம் ஒதுக்கி பாடுபட்டு இம்மடல் அனுப்பியதற்கு நன்றிகள் பல.
ஒரு நாட்டின் மக்களின் நலன் மேம்பட இது தான் தீர்வு என்றால் இத்திட்டம் என்றோ பிரபலமாகி இருக்கக் கூடும். 'பிரமிட் சிஸ்டம்', 'மல்டி லெவல் மார்க்கெட்டிங்' இன்னும் பிற என எவ்வளவோ திட்டங்கள் இப்படித் தான் இயங்கிக் கொண்டிருக்கின்றன.
யாராவது 'சார் ஒரு முக்கியமான விசயமா பேசனும், வாங்க ஒரு காப்பி சாப்பிட போகலாம்', என்றோ 'சார் ஒரு 10 மினிட்ஸ் உங்க கூட ஒரு முக்கியமான விசயம் பேசனும்' என்று சொன்னால் கூட எனக்கு பீதியாகி பேதி வந்துவிடுகிறது.
10 நிமிடம் என்றுச் சொன்ன ஆசாமிகள் உரிய நேரத்தில் தமது விளக்க உரையை முடித்துக் கொண்டார்களா? இது வரை ஒருவரையும் கண்டதில்லை. 10 நிமிடம் எனக் கூறியவர் எனது சில மணி நேரத்தை நாசம் பண்ணிய அட்டூழியங்களையும் கண்டிருக்கிறேன். சரி போதும் என நாசுக்காக அடிக்கடி கடிக்காரத்தை பார்த்து தெரிவித்தாலும் நமது உடலசைவு மொழிகளை அவர்கள் புரிந்துக் கொள்வதாக தெரிவதில்லை. 'யோவ் _____________ கிளம்பு' எனச் சொல்வது பண்பன்று என்பதால் எனது அரக்க உணர்சிகளை பல முறைக் கட்டிப் போட்டிருக்கிறேன்.
மிக எளிமையான விடயத்தைக் காண்போம். ஆரம்பத்தில் சொன்ன 10 நிமிடம் எனும் வார்த்தையில் தம்மைக் கட்டிக் காத்துக் கொள்ளாமல் பொய்யுரைக்கும் ஒரு ஆசாமியை எவ்வகையில் நம்புவது என்பது பெரிய வினாக் குறியாகும். இப்பொழுதெல்லாம் MLM ஆசாமிகளைக் கண்டால் காத தூரம் கண்ணுக்கு தெரியாமல் ஓடி ஒளிந்துக் கொள்கிறேன். நம்மை தாவு தீர்க்கும் இவர்களின் கழுத்தருக்கும் 'பிளேடுகளை' எவ்வளவு நாள் தான் கதறாமல் தாங்கிக் கொண்டிருப்பது.
தீர்வு ஒன்று: நீங்கள் கருத்துரைக்க நினைப்பதை ஒரு சிறு கையேடாக அச்சிட்டு கொடுத்துவிடுங்கள். முன்னேற நினைக்கும் சமுதாயம் படித்துக் கொள்ளட்டும்.
தீர்வு இரண்டு: நீங்கள் பேச நினைப்பதை 'சிடி'யில் பதிவு செய்து மக்களுக்கு விநியோகித்துவிடுங்கள். நேரம் இருப்பவர்கள் கேட்டுக் கொள்ளட்டும். உங்களுக்கும் வார்த்தைகளை சேமித்த புண்ணியம் கிடைக்கும்.
சரி அடுத்த விடயத்துக்கு வருவோம். நான் MLM திட்டத்தில் பணம் செலுத்தி சேர்ந்துக் கொண்டேன். எனக்கு கீழ் இரண்டு பேரை சேர்த்துவிட்டேன். பிறகு அவர்கள் ஆளுக்கு இரண்டு இப்படியே போய்க் கொண்டிருக்கிறாது என வைத்துக் கொள்ளுங்கள் கடைசியில் உலகத்தில் உள்ள மக்கள் எல்லோரும் முடிந்து போய் சேர்க்க ஆள் இல்லத நிலை வந்துவிட்டால் என்ன செய்வார்கள்.
தீர்வு 3: செவ்வாய் மண்டலத்தில் MLM சிஸ்டத்தை அமலாக்கப்படுத்தும் சீரிய முயற்சியில் இப்போதே இறங்கலாம்.
ஓகே. இப்போது அடுத்த மேட்டருக்கு போகலாம். நமது சமுதாயம் பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ளது என்கிறீர்கள். அப்படி என்றால் பொருளாதார பிரச்சனைகள் தீர்ந்தால் எல்லா பிரச்சனைகளும் தீர்ந்துவிடும் என்கிறீர்களா? மாதம் லட்சக் கணக்கில் சம்பாதிக்கும் ஒரு துணிக் கடை முதலாளி யாகம் வளர்க்கிறேன் பேர்வழி எனச் சொல்லிக் கொண்டு 10000ரிங்கிட் பெருமானமுள்ள துணிகளை நெருப்பில் போட்டு பொசுக்கிய மேன்மை குணங்களை கண்டிருக்கிறேன். அவருக்கு பணம் பிரச்சனையல்ல, பின் எதற்காக இப்படி நடந்துக் கொள்ள வேண்டும்? பணம் ஒன்று தான் வாழ்க்கை என்றாகிவிடுவதில்லை. பணத்தோடு நெறிக் கெட்டு வாழ்வதைவிட, பணம் இல்லாமல் நெறிக் கொண்டு வாழ்வது எவ்வளவோ மேல்.
ஒரு மனிதனின் தாழ்வுக்கு காரணம் ஒழுக்க நெறிகளின்மையே அன்றி பொருளாதார பிரச்சனை அல்ல... அல்ல... அல்ல... . உங்கள் திடமான கருத்தில் இடி விழ.
தீர்வு 4: பொருளாதார பிரச்சனையை தீர்க்க MLM சிஸ்டத்தில் பணம் அச்சடிக்கும் மெசின் ஒன்றை அறிமுகப் படுத்தலாம்.
தீர்வு 5: மனிதனின் தாழ்வுக்கு காரணம் பொருளாதார பிரச்சனையா அல்லது ஒழுக்க நெறி முறைகளின்மையா என ஒரு பட்டிமன்றம் நடத்திப் பார்க்கலாம்.
முகக் குறைந்த முயற்சி அல்லது முயற்சின்மையில் கிடைக்கும் பெருஞ்செல்வம் திருட்டுக்கு சமம் என்று நபிகள் நாயகம் செல்லியுள்ளதாக படித்த ஞாபகம். இது உண்மையிலேயே குறைந்த முயற்சியா அல்லது கவர்ச்சி விளம்பரத்துக்காக சொல்கிறீர்களா என்பதும் இப்போது வரையினும் என் சிந்தையை பலமாக(உங்கள் வார்த்தை தான்) இடிக்கிறது.
தீர்வு 6: லக்கிலுக் எழுதிய சுண்டி இழுக்கும் விளம்பர உலகம் எனும் புத்தகத்தை வாங்கி படித்து உங்கள் மார்கெட்டிங் ஸ்ட்ரெட்டஜியை மாற்றி அமைக்கவும். பழய யுக்தி முறைகளை கேட்டுக் கேட்டு புளித்துப் போகிறது.
நீங்கள் சொல்லியது போல் ஒன்றுபட்ட செயல் முறை மட்டும் போதும் என்றால் சயாமில் இறந்து போன நிகழ்வுகளும், தற்சமயம் ஈழத்தில் கொத்துக் கொத்தாய் இறந்து போன அவலங்களும் சரித்திரத்தில் இடம் பெறாமல் தகர்த்திருக்கலாம். தமிழன் தான் இந்தியன் என்பதை விடவும் தமிழன் என்பதை விடவும், தான் இன்ன சாதியன் என்பதில் தான் பெருமைக் கொள்கிறான். நம்பவில்லை என்றால் தமிழனைக் கூறினால் சிரித்துக் கொண்டு ஆமோதிக்கும் ஒருவன் அவன் சாதியை பற்றிக் குறைச் சொன்னால் என்ன செய்வான் என்று பாருங்கள்.
அது போக ஒன்றுபட்டு செயல் படுவோம் வாருங்கள் எனக் கூறினால். முதலில் நம்மை கவனித்துவிட்டுதான் அடுத்த காரியத்தில் இறங்குவார்கள் போங்க.
நான் ஒருவன் மட்டும் இக்கூட்டுறவில் சேர்வதனால் நம் மக்களின் பிரச்சனை தீர்ந்துவிடுமென்றால் எச்சமயமும் நான் தயாராக இருக்கிறேன். ஆனால் நீங்கள் கூறும் இவ்வரிகளில் எவ்வளவு தூரம் உண்மை இருக்கிறது என்பதை முதலில் புரிந்துக் கொண்டு பேசுங்கள். கிஞ்சித்தும் புரிந்துணர்வு கொள்ளத நம்மிடையே இருப்பது நட்பென கூறுவது அபத்தம்.
தீர்வு 7: வியாபர நட்பு முறையை வளப்படுத்துவது எப்படியென ஒரு செயல்திட்டத்தை அறிமுகப்படுத்திவிட்டு மேல் தொடரலாம்.
இறுதியாக ஒரு சம்பவம். முன்பு இப்படி தான் அறிமுகமே இல்லாத ஒரு பண்பு கெட்ட மனிதர் 'எம்வே' எனும் MLM சிஸ்டத்தில் என்னைச் சேர்க்க கழுத்தறுத்துக் கொண்டிருந்தார். நான் வேண்டாம் என எவ்வளவுக் கூறியும் கேட்டபாடில்லை. அவர் நோக்கம் என்னிடம் பணம் கறப்பது மட்டுமே. முடியாது என்றாகிவிட்டபட்சத்தில் பலமாக மிரட்டிவிட்டு 'எந்த தமிழனாக இருந்தாலும் இதுல வந்து சேர்ந்து தான் ஆகனும்' என்று இன்னும் சில வார்த்தைகளில் கடுமையாக பேசிவிட்டு சென்றார். நம் நிலை எங்கு போய்க் கொண்டிருக்கிறது?
நான் கொஞ்சமாக சம்பாதித்தாலும் மகிழ்ச்சியாகவே இருக்கிறேன். என் குடும்பத்தை மகிழ்ச்சியாக பார்த்துக் கொள்கிறேன். பிறருக்கு சிரமம் கொடுக்க முனைந்ததில்லை. சமுதாயம் என்பது ஒரு தனி மனிதனில் தான் ஆரம்பமாகிறது. நல்ல சிந்தனைகள் நமக்கும் நம் சுற்றத்தாருக்கும் இருந்துவிடின் சமூக பிரச்சனைகள் எவ்வளவோ குறைந்துவிடும். இப்படிபட்ட திட்டத்தால் தான் நான் உயர வேண்டும் எனும் அவசியம் எனக்கில்லை. நட்பெனும் பெயரில் உங்களில் அணுகுதல் வருந்த தக்க ஒன்று .

