ஜீவாவின் படங்களில் காட்சி அமைப்புகளுக்கு குறை சொல்ல இயலாது. இரம்மியமான காட்சிகளின் வழி இரசிகர்களின் மனதை படத்தில் இட்டுச் செல்வதில் அவர் திறமை பாராட்டத்தக்கது.
ஜீவாவின், பசுமையும் இளமையும் கொஞ்சும் காட்சிகளுக்காகவும், மனதை கவரும் வகையில் இருந்த இசைக்காகவும் இத்திரையை காண எண்ணி இருந்தேன். குசேலன் மற்றும் சத்யம் திரைப்படங்களின் ஏமாற்றத்தை தாம் தூம் தீர்த்து வைக்கிறது எனச் சொன்னால் அது மிகை இல்லை என்றே நினைக்கிறேன்.
அதிகப்படியான காட்சியமைப்புகள் ரஷ்யாவில் படமாக்கப்பட்டிருக்கிறது. மருத்துவ ஆய்வு மாநாட்டிற்காக ரஷ்யா செல்லும் ஜெயம் ரவி எதிர்பாராதவிதமாக ஒரு பிரச்சினையில் சிக்கிக் கொள்கிறார். அதில் இருந்து எப்படி மீண்டு வருகிறார் என்பதே கதையாக அமைகிறது.
உள்ளம் கேட்குமே மற்றும் உன்னாலே உன்னாலே போன்ற திரைப்படங்களில் மென்மையான காதல் சித்திரத்தை உலாவவிட்ட ஜீவா, தாம் தூம் திரையில் ஆக்ஷன் காட்சிகளுக்கு முக்கியத்தும் கொடுத்திருப்பது சிறப்பாகவே இருக்கிறது. கட்டிடத்திற்கு கட்டிடம் தாவுவதையும், இளநீரை எட்டி உதைத்து கற்சுவரை உடைக்கும் வண்ணமும் இருக்கும் காட்சிகளைத் தவிர்த்து இருக்கலாம். இவற்றை செய்ய கேப்டன் விஜயகாந்த் இருக்கும் போது ஜெயம் ரவி அந்த ஏரியாவில் கை வைப்பது தவறு என்பதை உணர்ந்தால் நன்று.
தெனாலி படத்திற்கு அடுத்தபடியாக ஜெயராமிற்கு இப்படம் ஒரு நல்ல மைல்கல்லாக அமையும் என தெரிகிறது. அவரது பாத்திரத்தைச் சிறப்பாகவே செய்திருக்கிறார். எப்படிபட்ட முக பாவனையையும் தன்னால் காட்ட முடியும் என்பதை நிரூபித்திருக்கிறார்.
ஜெயம் ரவிக்கு ஜோடியாக வரும் கங்கனாவை விட லஷ்மி ராய் அழகாக இருக்கிறார். கிராமத்து காட்சி அமைப்புகள் காதலை மையமாகக் கொண்டிருக்கிறது. முகம் சுளிக்க வைக்காத நகைச்சுவை காட்சிகள் அசத்தல். "உன் அப்பன் உன்ன பொண்ணு பார்க்க அனுப்பி வச்ச மாப்பிள்ளை இப்பதான் வந்து சேர்ந்திருக்கான்" என ஜெயம் ரவியை பார்த்து இரு கிழவிகள் அடிக்கும் லூட்டி இரசிக்கும்படி உள்ளது.
கங்கனாவின் நடிப்பு ஒவ்வாமலே இருக்கிறது. கிராமத்தைச் சுற்றி ஓடி ஆடி திரியும் பெண் மைதா மாவை போல் வெளிச்சமான கலரில் இருக்கிறார். கிராமத்து பெண்கள் இப்படி சுட்டித் தனம் செய்து திரிவார்களா எனச் சிந்திக்க வைக்கிறது.
தாம் தூம் திரை பாடல்கள் குசேலனை விட பல மடங்கு சிறப்பாக இருக்கிறது. ஆடியிலே முக்குளிக்கும் அழகே எனும் பாடல் கலக்கல். இப்பாடல் இரட்சகன் திரையில் வரும் கனவா இல்லை காற்றா எனும் பாடலை நினைவு கூரும் வகையில் உள்ளது. 'உன் இடையோடு நடமாடும் உடையாக நான் மாறி முந்தானை படியேறவா' எனும் வரி 'டச்'.
இப்படத்தில் எனக்குப் புரியாத சில விடயங்கள்:
1) ஒரு மாடல் எதற்காக போதை பொருள் கடத்துகிறாள், அக்கும்பலோடு தொடர்பு வைத்திருக்கிறாள்?
2) 'சின்னது சின்னது' என கேலி செய்யப்படுவதற்கான காரணம் தெரியாமலேயே போவது எதனால்?
3) சிறையில் அடைக்க கொண்டுச் செல்லப்படும் ஜெயம் ரவி இருவரால் தாக்கப்படுகிறாரே அவர்கள் யார்? பாதுகாப்பில்லாத சிறையா? போலிஸாரின் திட்டமா?
4) ஒரு நாட்டின் தூதர் குண்டர் கும்பலோடு தொடர்பு வைத்துக் கொள்ளும் நிலை எதனால் வந்தது?
5) ஒரு ஆபத்தில் இருந்து தப்பி வரும் போது காதலின் நினைவு வந்து கைகளை தூக்கி பறப்பார்களா? (என்ன கொடுமை இது)
பிரச்சனையில் மாட்டிக் கொள்ளும் ஜெயம் ரவிக்கு முக்கியப் பிரச்சனையாய் அமைவது மொழி. ரஷ்யர்கள் மொழி பற்று மிக்கவர்கள் எனக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஒரு முறை ஒரு தமிழ் எழுத்தாளர் கையெப்பமிடும் சமயம் ரஷ்யர் ஒருவர் கேட்டாராம். உங்களுக்கு எழுத்து கிடையாதா ஏன் ஆங்கிலத்தில் கையெப்பமிடுகிறீர்கள் என? அவர்களின் மொழி பற்று பாராட்டுதலுக்குரியது. நம்மில் எத்தனை பேர் தமிழில் கையெழுத்து போடுகிறோம்?
ஜெயம் ரவியின் எம்.குமரனுக்கு பிறகு தாம் தூம் சிறப்பாகவே இருக்கிறது. தைரியமாக பார்க்கலாம்.