Monday, October 18, 2010

சமயம் எனும் சாக்கடை உலகம் (2)


"We shall not believe anything unless there is reasonable cause to believe that it is true" -- Ingemar Hedenius

பாகம் 1: படிக்க இங்கே சொடுக்கவும்

இதை இப்போது இங்கே படித்துக் கொண்டிருக்கும் உங்கள் கஷ்டங்கள் 3 நாட்களில் விலகும், நினைத்தக் காரியம் கை கூடும், சின்ன வீடு ஒன்று செட் ஆகும் உடனடியாக இப்பதிவினை எட்டு பேருக்கு மின்னஞ்சவும் என எழுதினால் என் வலைப்பதிவினை தப்பித்தவறி படிக்கும் பத்து நபர்களில் இரண்டு பேராவது செவ்வனே அக்காரியத்தை செய்வார்களென சீக்ரட் சர்வே ஒன்று தகவல் அனுப்பியுள்ளது. இவற்றை ஸ்பாம் என அடையாளப்படுத்தலாம். அதாவது எரிச்சலூட்டும் ஒரே வகை தகவல்கள். இதற்கு தமிழில் எரிதம் என செல்லமாக பெயரிட்டிருக்கிறார்கள்.

இந்த ஸ்பாம் மின்மடல்கள், எஸ்.எம்.எஸ்கள், மற்றும் துண்டு பத்திரிக்கைகள் என நீளும் பட்டியல் வளர்ந்த கதைக்கு தனி வரலாறு எழுதிவிடலாம். எனக்கு மின்மடலில் முகம் தெரியாத அன்பர் ஒருவர் வாரத்திற்கு இரண்டு மூன்று மடல்களாவது இப்படி அனுப்பிவிட்டுக் கொண்டிருக்கிறார். நானும் கடுப்பேறி கெட்ட வார்த்தைகளில் திட்டியும் பார்த்துவிட்டேன். ம்ம்... திருந்துவதாக தெரியவில்லை.

இப்படி எரிதங்களை அனுப்பும் புண்ணியவானுக்கு வாழ்க்கையில் முதலிரவே நடக்க கூடாது என்று காசு வெட்டி போட்டு இருக்கிறேன். பெரிய கடவுள் தான் காக்க வேண்டும். எனக்கு மட்டும் தான் இப்படி என்றால் இன்னும் சில வலைப்பதிவர் நண்பர்களுக்கும் இப்படி நிகழ்வதாக கூறப்படுகிறது. இப்படி தொந்தரவு கொடுப்பவர்கள் மீது சைபர் கிரைம் நடவடிக்கை எடுக்க முடியுமா என்பதனை தெரிந்தவர்கள் கூறவும்.
மீடியாக்களில் மதத்தின் பெயரால் செய்யப்படும் நாசவேலைகள் எக்கச்செக்கம். அன்பர்களேஏஏஏ... என தொடங்கி கழுத்தில் கத்தி வைக்கும் கதை நெடுநாட்களாக நடைபெற்று வருகிறது. பொதுப்படையாக நாம் கவனிக்க முடிந்த சங்கதி யாதனெனின் இவை அனைத்தும் வியாபர நோக்கம் கொண்டவை. நமது பாக்கெட்டில் உள்ள பணத்தை அழுங்காமல் வெளியே கொண்டு வரும் யுக்திகள். எங்களை கண்டு கொண்டு கொஞ்சம் முதலீடு செய்யுங்கள் பிறகு உங்கள் பிரச்சனை சூரியனைக் கண்ட பனி போல் பின்னங்கால் பிடரிபட ஓடிவிடும் என வானொலிகளில் திருவாய் மலர்வார்கள்.

இந்த பிரச்சனை கண்ட புண்ணியவான்களும் பவ்வியமாக கைகட்டி நிற்க, இந்த கல்லை போட்டுக் கொள்ளுங்கள் இமய மலை உச்சியில் ஆயிரமடி தோண்டி எடுத்தது. இதோ இது இருக்கிறதே சீதா பிராட்டியை இராவணன் கடத்திக் கொண்டு போனபோது தவறி விழுந்து வாணரங்கள் கண்டறிந்தது என கற்களை அடுக்கி வைத்து புராண பட்டியல் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்த வகை விளம்பரங்களுக்கு பல வகை காலகட்டங்கள், சிறப்பு பூஜை செய்யப்பட்டது, ஸ்பெஷல் ப்ரோமோஷன் என தனி சலுகைகளும் உண்டு. இடையிடையே சமய சாங்கிய புத்தகங்களையும் வெளியிட்டு பணம் தேடிக்கொள்கிறார்கள். இன்னமும் நம் மக்களின் இலக்கிய சிந்தனை சிவன் பார்வதிக்கு அருளிய கனவுகளின் பலனில் தான் உள்ளது.

மலேசியாவில் எம்.எல்.எம்(MLM) கார்ப்ரேட் சாமியார்களின் திட்டம் ஆரம்பித்த காலகட்டத்தை அறியவில்லை. ஆனால் இடைபட்ட காலத்தில் அதிகமாக கேள்விப்பட நேர்ந்தது. இந்த சாமியாருக்கென ஒரு விசிலடிச்சான் குஞ்சுகளின் கூட்டம் உண்டு. இவர்களுக்கு கீழ் ஒரு கூட்டத்தை சேர்த்து. அந்தக் கூட்டம் இன்னொரு கூட்டத்தை சேர்த்து என சேர்ந்துக் கொண்டே போகும் ஒரு நவீன மார்கெட்டிங் ஸ்டைல். இதில் வேடிக்கை என்னவென்றால் அந்த குறிப்பிட்ட சாமியாரை முதலில் பார்க்க இவ்வளவு பணம், கொஞ்சம் நெருக்கத்தில் பார்க்க இவ்வளவு, தொட்டுப்பார்க்க இவ்வளவு, படுத்துக் கொள்ள இவ்வளவு என லிஸ்ட் வைத்திருக்கிறார்கள். நித்தியானந்த தரிசனத்திற்கு எவ்வளவு எப்படி என்பதெல்லாம் விவரங்கள் தெரியாதபட்சத்தில் எனக்கு தனி மடல் அனுப்பி தொந்தரவு செய்ய வேண்டாம். சீடி விற்பனைக்கு வந்தால் விரைவில் அறிவிக்கப்படும் என்பதை உறுதியளிக்கின்றேன்.

இந்த வகை சாமியார்களுக்கு வரி விதிகள் இருப்பதாக தெரியவில்லை. காரணம் சமயத்தின் பேரில் செய்யப்படும் காரியங்கள் மக்கள் நலனுக்கென கருதப்படுகிறது. உண்மையில் மதம் என்பதை நன்னெறிகளுக்கு பதிலாக நச்சு கிருமிகளை ஆப்லோட் செய்யும் முளைச் சலவையாகவே இந்த கார்ப்ரேட் வகை சாமியார் இயக்கங்கள் இயங்குகின்றன.மக்களுக்கு நலன் செய்ய விரும்பும் சாமியாருக்கு எதற்கு நூற்றுக்கணக்கில் பணமும் பாதுகாப்பிற்கு சில நெருங்கிய பக்தர்களும்.
இந்த கால்பிரிட்களால் மூளை சலவை செய்யப்பட்ட சல்லடைகளிடம் எதற்காக இவ்வளவு பணம் செலவழிக்க வேண்டுமென வினவியதற்கு சாமியை நம்பி செலவழிக்கும் பணம் பன்மடங்கு பெருகி நம்மிடம் திரும்பி வருமென சொல்லி என் கபாலத்திற்கு உஷ்ணத்தை ஏற்றிக் கொண்டிருந்தார்கள். ஒன்று மட்டும் புரிந்து கொள்ளுங்கள், இனி யாராவது ‘எந்த சாமி காசு கேட்டுச்சு, காலை கழுவி நக்க சொன்னிச்சு’ என கேட்டால் அவர்களை நீங்கள் தைரியமாக செருப்பால் அடிக்கலாம். காசு கேட்கும் சாமிகளை நீங்கள் விரும்பிய பக்கம் விரல் நீட்டி காட்டும் காலத்தில் நாம் இருக்கின்றோம்.

சும்மா இல்லை. படகு கார்களில் வந்திறங்குகிறார்கள். சொகுசு மாளிகைகளில் குளிரூட்டியில் படுத்துறங்குகிறார்கள். சாமிகள் இப்படி கொகுசாகதான் இருக்க வேண்டுமெனும் சாத்திரங்கள் உள்ளதா? இவர்களுக்கு தான் கடை நிலை மனிதனின் வாழ்க்கை வருத்தங்கள் புரியப் போகிறதா. சிரமப்படும் மனிதர்கள் அனுபவிப்பது கர்ம வினை ஊழ்வினை என புருடாவிட்டால் இவர்களும் பொத்திக் கொண்டு சமாதியாகி போகலாம் இல்லையா. தின்று கொழுத்த நரிக்கு நாட்டுக் கோழியின் ருசி அடங்குவது சுலபமல்ல. இவர்களின் செயல்பாடுகள் இன்னும் அதிகரிக்குமே அன்றி குறைய போவதில்லை. விபச்சாரியிடம் செல்வதற்கு தான் மனிதன் காசு கொடுத்து செல்வான். அப்படியென்றால் இந்த கார்ப்ரேட் சாமியார்களும் நிச்சயமாக விபச்சாரம் தான் செய்கிறார்கள் என்பதில் மறுபதற்கில்லை.

யார் என்ன எழுதினாலும் வாய் கிழிய கத்தினாலும் மக்களின் விழிப்புணர்வின்றி இந்த சமய சாக்கடைகளை துப்புரவு செய்ய முடியாது. திண்ணமாக செல்வதென்றால் சமூகத்தின் குப்பைகளாக மக்களை குறுகிய சிந்தனைக்கு இட்டுச் செல்லும் இவர்களுக்கு கடுமையான சட்டங்கள் இயற்றப்பட வேண்டும். இல்லையென்றால் காமம் என்பது கடவுளை காண தடை போடும் உணர்வென பக்தர்களுக்கு கூறி ஆசிரம பெண்களை இவர்கள் கட்டிலுக்கு அழைத்துச் செல்லும் கதைகளை எதிர்காலத்தில் கணிசமான எண்ணிக்கையில் எதிர்ப்பார்க்கலாம்.
இன்றைய தினத்தில் லாட்டரி சீட்டில் பணம் விழுவதற்கு கூட சமயம் வழி செய்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். லாட்டரி அடிக்கனுமா பாபாவை பாருங்கள் ஷகிலாவை பாருங்கள் என முக்கிய பத்திரிக்கைகள் வாரம் தவறாமல் விளம்பரம் கொடுத்துவிடுகின்றன. கூடவே நம்பிக்கையை வளர்க்கும் வகையில் சீரியல் எண்களோடு வெற்றி கண்ட லாட்டரி சீட்டுகளின் படம். இந்த அளவுக்கு எண்களை கணித்து கொடுக்கும் ஆசாமிகள் அத்தோடு நிறுத்திவிடுவதில்லை. சக்கரம், முக்கோணம், சதுரம் என வேறு வகை வஸ்துக்களையும் சேர்த்து தலையில் கட்டி பில் அடித்து அனுப்பிவிடுகிறார்கள். இவர்கள் மீதுள்ள பக்தியில் வருட கணக்கில் நம்பிக்கை இழக்காதவர்களையும் கண்டது உண்டு.
இப்படிபட்ட நம்பிக்கைகள் மனிதனுக்குள் ஏற்படும் ’டிஸாடர்’களால் விளைவதாக மேற்கத்திய ஆராய்சிகள் கூறுகின்றன. இதை நாம் உணராமல் போவதன் காரணம் ஆரம்பத்தில் இருந்து ஊட்டப்பட்டுவிடுகிறது. அதன் நிஜதன்மையை உணர முடியாமலும் புரியாமலும் குழப்ப நிலையில் வாழ்ந்து முடித்தவர்கள் எண்ணிக்கையில் அடங்காமல் இருக்கலாம். கடவுளின் நிருபனத்திற்கான புத்தகங்கள் அறிவியல் சிந்தனைகளோடு எக்கச்செக்கமாய் வந்துள்ளன. தமிழில் இதன் அளவு குறைவு தான். கடந்த ஆண்டில் தொடங்கப்பட்ட கடவுளின் துகளைத் தேடும் பிக் பேங் ஆராய்சிகள் விழுங்கிய பணத்தின் மதிப்பு பல பில்லியன் டாலர்கள்.

கடவுள் அல்லது இறை என்பது மனித உருவம் கொண்டதென்றால் அதன் தோன்றலை எத்தனை மனிதர்கள் நம்பப் போகிறார்கள். கோவில், குளம், மட்டையென நாடுபர்களின் எத்தனை பேர் பொதுநலம் கொண்டு இங்கு இயங்குகிறார்கள். என்னை மன்னித்துவிடு, எனக்கு இதை கொடு, எனக்கு இந்த பிரச்சனைக்கு நிவர்த்தி செய் எனும் சுயநலவாதிகளையே சமய வழிபாடு எனும் சலவைத் தொழிற்சாலைகள் உருவாக்கிக் கொண்டிருக்கின்றன.

வளரும்...

(பி.கு: திருவிழாக்காலங்களில் என்னை கோவில் குளங்களில் காண்பவர்கள். நான் ஃபிகர் பார்க்க வந்தவன் என்பதை அறிக).

Thursday, October 14, 2010

கொசுறு 14-10-2010

ஃபிகரோடு கோவிலுக்கு போவது நெகட்டிவ் அப்ரோச்,
ஃபிகர் பார்க்க கோவிலுக்கு போவது பாசிடிவ் அப்ரோச்,
- என சாணியடி சித்தர் சொல்லி இருக்கிறார்.
****
நெடுநாட்களாக விடுபட்டிருக்கும் பாகம் இது. நேரம் கிடைக்கும் போது எழுதுவதற்கு சுலபமாக அமைவதும் இந்த பகுதி தான். காரணம் இப்பகுதியில் தகவல் திரட்டுகள் குறைவு, யாவும் என் சிந்தனை பகிர்வுகளாக அமைகின்றன.

நாம் படிக்கும் சில கவிதைகள் நமக்குள் டக்கென ஒரு ஃப்ளாஸ் அடிச்சிட்டு போகும் பாருங்க அம்மாதிரியான கவிதைகளே எவ்வளவு நாட்களுக்கு பிறகு படிச்சாலும் புதிதாக படிப்பதை போலவே அனுபவத்தை கொடுக்கும். கற்றது தமிழ் எம்.ஏ எனும் திரைப்படத்தில் வரும் ஒரு கவிதையை கீழே கொடுத்திருக்கிறேன்:

புறாக்கள் வளர்க்கும் எதிர்வீட்டுக்காரர்

என்னிடம் இருந்து பறிக்கிறார்

பூனை வளர்க்கும் சுதந்திரத்தை


வாசிப்போரின் புரிதலுக்கு ஏற்ற மாதிரி இக்கவிதை வேறுபடலாம். நியூட்டனின் விதியை இதில் காண முடிகிறது. ஒரு செயலுக்கான எதிர்வினை. மற்றது வண்ணத்து பூச்சியின் விளைவு. பட்டம்பூச்சி சிறகடிப்பிற்கும் சுனாமி வருவதற்கும் ஒற்றுமை இருப்பதாக சொல்வார்களே, அதைப் போல். ஒபாமா சிந்தித்துக் கொண்டிருக்கும் ஒவ்வொரு கணத்திலும் உங்கள் பாக்கெட் பணம் காலியாகி கொண்டிருக்கிறது. புரிஞ்சவன் தான் புத்திசாலி.
****

பிக் பேங் தியோரி பற்றி ஏற்கனே எழுதி இருக்கிறேன். பிரபஞ்ச விளைவுகள் தொடர்பான கட்டுரைகள் பலவும் டாக்டர். ஜெயபாரதன் இணையத்தில் எழுதி வருகிறார். இவரின் பல கட்டுரைகள் புரிதலுக்கு சற்றே சிரமமானதாக இருக்கிறதெனினும் இப்படியான தகவல் களஞ்சியத்தை நமக்கு தொகுத்தளித்திருப்பது சிறப்பு.

Dark Matter என்பதை அண்ட சராசரத்தின் மாபெரும் அமைப்பு என்பதாக விஞ்ஞானிகள் விளக்குகிறார்கள். இன்றய டெக்னாலஜியின் துணைக் கொண்டு இதனை அறிந்துக் கொள்வதற்கான கருவிகள் கண்டுபிடிக்கப்படவில்லை. 2012க்கு இன்னும் ரெண்டு வருஷம் தானே இருக்கு அதுக்குள்ளாவது இதை பற்றி நாம் அறிந்துக்கொள்ள முடியுமா?
****
ஓரிரு மாதங்களுக்கு முன் நான் வித்யா எனும் திருநங்கையரின் சுயசரிதை புத்தகத்தை வாசிக்க நேர்ந்தது. லிவிங் ஸ்மைல் எனும் வலைபதிவின் உரிமையாளரான இவரின் புத்தகம் கிழக்கு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளது. திருநங்கையர் தொடர்பான புத்தகங்கள் தமிழில் வெகு குறைவானவையே. அவர்களின் உணர்வுக்கு மதிப்பளித்து மக்கள் மத்தியில் விளிப்புணர்ச்சி ஏற்படுத்தப்பட வேண்டும் எனும் நோக்கில் ஊடகங்கள் முயற்சித்து வருகின்றது. நல்ல விசயம் தான்.

என்னுள் எழுந்த சில சந்தேகங்களை இங்கு முன் வைக்கிறேன். தனது பாலியல் மாற்று அறுவை சிகிச்சைக்கு முன், பிச்சை எடுத்தாவது தனது பாலியல் மாற்றத்தை செய்துகொள்ள நினைக்கும் வித்யா அது நடந்த பின் திருநங்கையர் பிச்சை எடுக்கக்கூடாது அங்கீகாரம் வேண்டும் எனும் புரட்சிகர பெண்மணியாகிவிடுகிறார். அது தவறென சொல்லவில்லை. அச்சிந்தனை அறுவை சிகிச்சைக்கு முன்னதாக அவருக்கு தோன்றாமல் போன காரணம் என்ன? தன்னை மற்றவர் அவமானபடுத்திவிடக்கூடாது என்பதற்காகவே திருநங்கையர் அருவறுப்பாக நடந்துக் கொள்கிறார்கள் என சொல்கிறார்.

தன் இனத்திற்கு இழுக்கு செய்கிறார்கள் என்பதற்காகவே ஆண்கள் திருநங்கையரை கேலி செய்கிறார்கள். நம்புங்கள் இதுவும் உண்மை தான்.
******

மனித கடத்தல் தொடர்பான எனது தகவல் சேமிப்பின் போது படிக்க நேர்ந்த ஒரு செய்தி. ஒரு ஆண், ஒரு பெண்னை திருமணம் செய்துக்கொள்வதென்றால் கடத்திச் சென்றுவிட வேண்டுமாம். பிறகு அந்த ஆணின் பெற்றோர் கடத்தப்பட்ட பெண்ணின் பெற்றோரிடையே அனுமதி கேட்டு திருமணம் செய்து வைப்பார்களாம். இது ஒரு நாட்டில் ஓர் இனக் குழுவினரிடையே நடக்கும் செயல். என்ன நாடு என்பதை கண்டுபிடித்து சொல்லுங்கள் பார்க்கலாம்.
*****

தமிழ்த்திரையுலகில் மாற்றங்களை அமைத்தவர்கள் எனும் பட்டியலில் மணிரத்தினமும், ஷங்கரும் இடம் பெற்றிருப்பவர்கள். ஒரு படைப்பாளியிடம் அதீத எதிர்ப்பார்ப்புகள் இயல்பாகவே எற்படும். அதுவே பலரையும் ஏமாற்றமடையவும் செய்கிறது. மணிரத்தினத்தின் இராவணன் படம் வரும் முன்பும் சரி வந்த பின்பும் அதன் பால் எனக்கு அதீத ஈர்ப்பு ஏற்படவில்லை. பல படங்களில் இருட்டு இயக்குநராக இருந்த மணி, இராவணனில் ஐஸை மழையில் கரையவிட்டு ஜில் ஜில் இயக்குநராக மாறி இருக்கிறார்.ஷங்கரின் சிவாஜி படம் எதிர்ப்பார்த்த அளவில் இல்லை என்றாலும் ஏமாற்றத்தை கொடுக்கவில்லை. அரைத்த மாவு ருசியாகவே இருந்தது. சமீபத்திய ரோபோ மிக சாதாரண கதையம்சம் கொண்டது. ஹாலிவுட்டில் இது சென்ற நூற்றாண்டில் சிந்தனை வடிவம். அதை தமிழ் சினிமா இப்போது தான் எட்டிப்பிடித்திருக்கிறது என்றால் வரவேற்கப்பட வேண்டிய ஒன்று. ஒவ்வொரு காட்சியையும் ஒரு வாரம் சிந்தித்து படம் பிடித்திருப்பார்கள் போல. கொள்ளை அழகாக உள்ளது. பின்நவீனதுவ வியாதிகள் என்னத்தான் கீபோர்ட் உடைய தட்டச்சு செய்தாலும் படத்தின் வெற்றியை தவிர்க்க இயலாது. ஏன் அவர்கள் கூட படத்தின் குறையை கண்டுபிடிக்க இரண்டு மூன்று முறை ஓசி டிக்கட்டில் படம் பாத்திருக்கலாம். நல்ல வேலை காசு கொடுத்து பார்த்திருந்தால் தியேட்டரை எழுதி கொடுக்க சொல்லி இருப்பார்கள் போல.
****

சென்ற ஆண்டின் இறுதில் வேலை நிமித்தம் திரெங்கானு எனும் இப்பொழுது இருக்கும் மாநிலத்துக்கு வந்தேன். இங்கு வருவது அதுவே முதல் முறையும் கூட. தெரிந்தவர் அறிந்தவர் என யாரையும் தெரியாது. தங்கியிருப்பது கவர்மெண்ட் குவாடர்ஸ். வந்த முதல் நாளே இரவானால் ஏதோ கோலி விளையாடுவதாகவும், நாட்காலியை பரபரவென இழுப்பதாகவும், துணி துவைப்பதாகவும் சந்தம் கேட்கும் இதையெல்லாம் கண்டுக்கொள்ளாமல் தூங்கு என சொன்னார்கள்.

எவ்வளவோ ஆச்சு இதையும் பார்க்கலாமென இருந்துவிட்டேன். கிட்டதட்ட ஓர் ஆண்டு காலமாக போகிறது எந்த சத்தத்தையும் கேட்டதில்லை. நேற்று மலாய் நண்பரொருவரிடம் பேசிக் கொண்டிருந்தேன். என் பதவியில் இருப்பவர். இந்தோனேசியாவின் மலேசிய தூதரகத்தில் 3 ஆண்டுகள் பணிபுரிந்துவிட்டு வந்திருக்கிறார். வந்ததும் நான் இருக்கும் இடத்தில் டிரான்ஸ்வர் போட்டிருக்கிறார்கள். இரவானால் உன் வீட்டில் ஏதும் சத்தம் கேட்கிறதா என கேட்டார். இல்லை என்றேன். ஏதோ தவறாக இருப்பதை உணர்கிறேன் என்றார். நான் ஏதும் சொல்லவில்லை. அதுதான் நல்ல பொறுமைசாளிக்கு அழகுனு குருநாதர் சொல்லியிருக்கார்.

பேய் பிசாசுகள் இருப்பதாக சொல்பவர்களே அதிகமான கடவுள் நம்பிக்கையும் கொண்டிருக்கிறார்கள்.
*****
மழைகாலம் ஆரம்பித்துவிட்டிருக்கிறது. என் பணியிட மாநிலத்தின் தீவுகளை நான்கு மாதங்களுக்கு சுற்றுலா தடா செய்யப் போகிறார்கள். இந்த நான்கு மாதங்களில் தான் இந்தத் தீவுகள் தன்னை சுத்தம் செய்து கொள்கிறதோ என சிந்தித்ததும் உண்டு. கடந்த ஒரு வாரமாக மாலை வேளைகளில் மழை பொழிகிறது. இங்கு வந்த சமயம் எப்போது நான் வெயில் காலத்தை காண்பேன் என்றிருந்தேன்.

மீண்டும் மழை வந்துவிட்டது. மழைச் சமயங்களில் இயல்பாகவே சாலையில் கார்களின் எண்ணிக்கையும் அதிகமிருக்கும். டிராபிக் லைட். பார்க்கிங் தேட வேண்டும். இதனால் வேலைக்கு மோட்டார் செலுத்துவதையே விரும்புவேன். தற்போதய சூழல் என் காலை தூக்கத்தின் பல நிமிடங்களை விழுங்கிவிட்டது.
****

விடுகதை:
புல்வெளி பகுதி ஒன்றில் சில ஆடுகளும் கோழிகளும் உள்ளன. இவற்றின் தலைகள் மொத்தம் 20. கால்கள் 50. அப்பகுதியில் எத்தனை ஆடுகள் உள்ளன?
******

நளதமயந்தியின் சுயம்வரம் காண்டத்தில் உள்ள வெண்பா ஒன்று:

‘அஞ்சல் மடவனமே! உன்றன் அணிநடையும்
வஞ்சி அனையார் மணிநடையும்-விஞ்சியது

காணப் பிடிததுகாண்,’ என்றான் களிவண்டு

மாணப் பிடித்தார் மன்

அடுத்ததாக இன்னொன்று தருமிக்கு இறையனார் எழுதி கொடுத்தது:

கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி
காமம் செப்பாது கண்டது மொழிமோ

பயிலியது கெழீஇய நட்பின் மயிலியல்

செறியெயிற் றரிவை கூந்தலின்

நறியவும் உளவோ நீயறியும் பூவே


முதல் பாடலில் நளன் ஓர் அன்னத்தைப் பிடித்து, அன்னமே உன்னைவிட அழகிய நடை கொண்ட பெண் உலகில் உண்டோ என கேட்கிறான். இரண்டாம் பாடலில் காதலியின் கூந்தல் மனத்தைக் காட்டினும் மனம் மிக்க பூ உள்ளதோ என காதலன் தும்பியிடம் கேட்கிறான். லூசு பசங்களா இருப்பாங்களே. அந்த காலத்திலயும் ஒரு மார்கமாதான் சுத்திக்கிட்டு இருந்திருக்காங்க பாருங்களேன்.

****