Showing posts with label பயணம். Show all posts
Showing posts with label பயணம். Show all posts

Thursday, December 12, 2013

அங்கோர் வாட் 3- பேசும் கற்கள்

கெமர் கல்வெட்டு
கல் சொல்லும் கதை:

அரச கட்டளை: ஸ்ரீ பிங்கலேஷ்வரா படகிற்கு 3 ’கனன்’ உப்பும்*, குபோன் கம்ரதன் படகிற்கு 3 ‘கனன்’ உப்பும், சர்வஷ்ரமாவின் இரு படகுகளுக்கு 4 ‘கனன்’ உப்பும், ஸ்ரீ பட்டேஷ்வரா மற்றும் ஸ்ரீ புஷ்கேஷ்வரா படகுகளுக்கு 2 ‘கனன்’ உப்பும் வழங்க வேண்டும். அரச கட்டளைப்படி உப்புகள் தீர்த்தகிராம துறைமுகத்தில் விநியோகிக்கப்படும். இங்கு வரும் போதும் அல்லது புறப்படும் போதும் இந்நிபந்தனை விதிக்கப்படும். இவ்விதியை தடுப்போரும், மீறுவோரும் தண்டனைக்குட்படுவர். 

Source : Inscription, the basis of our knowledge of history. - George Coedes

உப்பு*- பண்டைய கால வணிகத்தின் மதிப்பு மிகுந்த பொருள். Salt எனும் வார்த்தையில் இருந்து உருவானதே Salary.

கல்லின் கதை: 

தென் இந்திய எழுத்து வகையை போல் இருக்கும் இக்கல்வெட்டு பண்டைய கெமர் மொழியில் பொறிக்கப்பட்டுள்ளது. மொத்தம் பதினோரு வரிகள் உள்ளன. 1948-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இக்கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டது. கம்போடியாவின் ‘கண்டல்’ எனும் ஊரின் வயல் வெளியில் புதைந்திருந்த இக்கல் தற்சமயம் ப்னோம் பேன் மியூசியத்தில் உள்ளது. இக்கல்வெட்டை உரிமையாக்கிக்கொள்ள சில போராட்டங்களும் விசாரனைகளும் நடந்தது தனிக்கதை. மேற்காணும் கட்டளையை சுங்கத்துறையின் வரி விதிப்பை போலவே கருதமுடிகிறது.

********

பாற்கடலை கடையும் காட்சி
பயணக் கலைப்பு எனும் சொல்லைக் கூட நினைத்துப் பார்க்கவில்லை. நூற்றாண்டுகளாக காடுகளுக்குள் தன்னை மறைத்துக் கொண்ட கலைப் பொக்கிஷத்தைப் பார்க்க வேண்டும் எனும் ஆவளே ஓங்கி இருந்தது. நாங்கள் யசோதரபுத்திற்குச் செல்கிறோம். ஆனால் இன்று அது அப்படி அழைக்கப்படவில்லை. 

தூர வாசலில் பெரிய முகம். மோனாலிசா சிரிப்பைப் போன்றதொரு பாவனையை காண முடிகிறது. டாவின்சியை சில நூற்றாண்டுகள் விச்சிய பெருமை அதைச் செதுக்கிய சிற்பியையே சேரும். இதுவும் அர்த்தம் காண முடியாத புன்னகையே. உள் நோக்கி நடக்க மேலும் மேலும் முகங்கள். உள் நுழையும் முன் வெளி புரத்தைக் காண்போம். 

வாசல் நோக்கிய பாதையின் இருபக்கமும் பாம்பின் உடலை இழுத்துக் கொண்டிருக்கும் பெருச் சிலைகளின் வரிசை. மலைக்க வைக்கும் தொடக்கம். ஒவ்வொரு சிலையும் இரண்டு சுமோ வீரனை ஒத்திருக்கிறது. பாற்கடலை கடையும் வருணனை. அமுதச் சுரபிக்காக அசுரக் கூட்டத்தை ஏமாற்றிய கடவுளின் கதை. இந்த தேவக் கூட்டமும் அசுரக் கூட்டமும் கடைந்து எடுத்த பொன் கோபுரம் உள்ளே உள்ளது. இன்று பொன் இல்லாத கோபுரமாக உள்ளது.

அங்கோர் வாட்டை காட்டினும் பெரிய சுற்றளவைக் கொண்டது அங்கோர் தோம் எனப்படும் இக்கோவில். மாபெரும் முகக் கோபுரங்களைக் கொண்ட கோவில் தான் இந்த அங்கோர் தோம். அங்கோர் தோம், பேயோன் மற்றும் தாப்ரோம் எனும் மூன்று கோவில்கள் அருகருகே உள்ளன. இம்மூன்று கோவில்களும் வடிவமைப்பில் ஒற்றுமை கொண்டிருந்தாலும் தாப்ரோம் எனும் கோவில் கொஞ்சம் மாறுபடுகிறது. அங்கோர் தோமில் இருக்கும் நாம் உட்புரத்தில் சென்று காணும் கோவில் பேயோன். 
முகம் மறு சீர்ரமைக்கப்பட்டுள்ளது. பிக்பக்கம் அகழி.

அங்கோர் தோம் இன்று ஒரு கோவில் என அழைக்கப்படுகிறது. காரணம் அதன் கட்டிட வடிவமைப்பு. 13-ஆம் நூற்றாண்டில் அது ஏழாம் ஜெயவர்மனுக்கும் அவனையடுத்த மூன்றாம் இந்திரவர்மனுக்கும் யசோதரபுரத்தின் கோட்டையாக இருந்துள்ளது. உங்களது அங்கோர் பயணத்தின் போது குறைந்தபட்சம் ஒரு நாளையாவது இங்குச் செலவிடுங்கள். அங்கோர் காலத்து கடைசி தலைநகரான இவ்விடத்தில் நீஙகள் கண்டு மலைக்க வேண்டிய கலையம்சங்கள் ஏராளம். 

அங்கோர் கட்டிட பகுதிகளில் நாம் காணும் பொதுவான அம்சங்களில் ஒன்று அகழிகள். படகுகளை வைத்துச் சுற்றி வரும் அளவுக்கு பெரிய அகழிகளை காண முடிகிறது. சரித்திர குறிப்பேடுகள் எல்லா கோவில்களுக்கும் அகழிகள் இருந்ததாக கூறுகிறது. ஆனால் பலவும் வற்றி போய்விட்டன. சில கோவிகளில் ஒரு பக்கம் மட்டும் தேங்கிய குட்டையைப் போல் அகழிகள் காணப்படுகிறது. 
பாழ்பட்ட பாம்பின் உடல்
கெமர் அரசர்கள் தங்களை கடவுளின் அவதாரமாகவும், அரசன் என்பவன் கடவுளுக்கு ஒப்பானவன் என்பதாகவும் நினைத்து தனது சாம்ராஜிய செல்வச் செருக்கை காண்பிக்கவே இந்த ஒப்பற்ற கோவில்களையும், கட்டிடங்களையும் கட்டி இருக்கிறார்கள். கோவில்கள் வலுவாக இருக்கவே இந்த அகழிகள் கட்டபட்டதாக கூறப்படுகிறது. சுற்றிலும் அகழிகள் இருக்க கோட்டை/கோவிலுக்கு நுழையும் பாதை குறுகளாகிறது. நுழை பாதைகளை வீரர்கள் பாதுகாக்க அகழிகளில் முதலைகள் இராணுவ வேலையைச் செய்திருக்கின்றன. 

அங்கோரில் நாம் இன்று காணும் சிலைகள் எல்லாம் முழுமையாய் இருப்பதில்லை. சில அங்கோர் மியூசியத்தில் வைக்கப்பட்டுள்ளன. சில கிடைக்காமலே போய்விட்டன. நான் முன்பு சொன்ன சுமோ அசுரர்களுக்கும், தேவர்களுக்கும் அதே கதிதான். முக்கியமாக பார்வதி, லட்சுமி போன்ற பெண் தெய்வங்களின் சிலைகளின் முகப் பகுதி மட்டும் செதுக்கி எடுக்கப்பட்டுள்ளது. சரித்திர சுவடு மிகும் இடங்ளில் நிகழ்ந்த கலைத் திருட்டுகள் பல கோடி டாலர் மதிப்புகளை எட்டுகிறது. சரித்திரத்தில் கலைத் திருடர்கள் என ஒரு தனிக் கட்டுரையையே எழுதலாம். 
பெருமுகக் கோபுரங்கள். மூன்று முகங்கள்.

சிறுவியாபாரிகள் கோவிலின் முகப்புப் பகுதியில் புத்தகங்களையும், காணொளி சீடிகளையும், கைவினைப் பொருட்களையும் துரத்தி துரத்தி விற்பனை செய்கிறார்கள். அட இன்னும் சுற்றிப் பார்க்கவே ஆரம்பிக்கவில்லை அதற்குள் இப்படியா என நாமும் ஓட வேண்டி உள்ளது. நீங்கள் யானை சவாரி செய்தும் இங்குச் சுற்றி பார்க்கலாம். சிகப்பு வெல்வெட் துணியை போர்த்தி யானைகளை தயார் நிலையில் வைத்துள்ளார்கள் பாகன்கள். நாங்கள் யானை சவாரியை தேர்ந்தெடுக்கவில்லை. 

அங்கோர் பயணத்தில் நீங்கள் காண இருப்பது நீண்ட நெடுந்தூர கலை அம்சங்களை. ஆக நீங்கள் நடந்தாக வேண்டும். உங்கள் கால்களில் ஆணி ஏற்படுமாயினும், மனம் ததும்பும் கேளிக்கை பயணங்களை விரும்புவோராக இருப்பீர்கள் என்றாலோ இப்பயணம் உங்களுக்கு உவகை அளிக்காமல் போகலாம். சிற்பக் கலைகளின் பின்ணியை அறிந்துக் கொள்ள புத்தகங்களும், தகுதியான பயண வழிகாட்டியும் உங்களுக்கு உதவலாம். 
எண்னற்ற முகக் கோபுரங்கள்
அங்கோர் தோமின் பெருமுகக் கோபுரங்கள் வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு என நான்கு முகங்களை கொண்டுள்ளது. ஆனால் நீங்கள் எந்தப் பக்கம் நின்று கவனித்தாலும் மூன்றினை மட்டுமே காண முடியும். பின்னால் இருக்கும் ஒன்று மறைந்துவிடும். அவ்வளவு நேர்த்தியான கட்டமைப்பு. 

உள் பகுதியில் இடிபாடுகள் நிறைந்த ஒரு தளத்தில் கட்டுமான பணிகள் நடந்துக் கொண்டிருந்தது. யுனேஸ்கோவின் மேற்பார்வையில் இப்பணிகள் நடப்பதாக கோல் ச்சேன் கூறினார். 

அங்கோர் பகுதிகளில் அவ்வளவு சுலபத்தில் மறு சீரமைப்புப் பணிகளை செய்துவிட முடியாது. கட்டிட அமைப்பு இருந்ததன் ஆதாரம் காட்டப்பட வேண்டும். அது மூன்று அடுக்குகளான குழுவினரால் ஒப்புக் கொண்ட பிறகே சீரமைப்புப் பணிகளை தொடர முடியும். சீரமைப்புப் பணிகள் மூன்றாண்டுகளாக நடப்பதாக கூறப்படுகிறது. ஆனால் 13-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பேயோன் எனும் தங்கக் கோபுரத்திலான கோவில் மட்டும் 5 ஆண்டுகளில் கட்டி முடிக்கப்பட்டது என்றால் உங்களால் நம்ப முடிகிறாதா?

இன்றய நவீனம் அந்நாட்களில் இருந்திருந்தால் ஒட்டு மொத்த உலகையும் அடிமையாக்கி கோவில்கள் எழுப்பி இருப்பான் இந்த ஏழாம் ஜெயவர்மன் என்றே நினைக்கத் தோன்றுகிறது. 

பயணங்கள் தொடரும்...

Thursday, July 02, 2009

பேய் வீட்டுக்குப் போனேன் - கேலிஸ் அரண்மனை

கேலிஸ் அரண்மனையை பற்றிக் கோள்விப்பட்டதுண்டா? ஈப்போ நகரிலிருந்து 20 நிமிட பயணத்தில் ‘பேய் வீடு’ என அழைக்கப்படும் இந்த இடத்தை அடைந்துவிடலாம்.

‘ANNA AND THE KING’ படம் மற்றும் பார்த்தாலே பரவசம் படத்தில் வரும் ‘நீதான் என் தேசிய கீதம் பாடல்’ ஆகியவை இங்கு காட்சிப் படுத்தப்பட்டுள்ளது.

ஷாஜகான் மும்தாஜுக்குக் கட்டிய தாஜ்மஹாலைப் போன்றது தான் இந்தக் கேலிஸ் அரண்மனையும். தாஜ்மஹாலைப் போல் பிரபலம் இல்லாவிட்டாலும் இரண்டிற்கும் ஒரு ஒற்றுமை உள்ளது. வில்லியம் கேலிஸ் ஸிமித் எனும் வெள்ளைக்காரர், தன் மனைவிக்காக இந்த அரண்மனையைக் கட்டினார்.

நிறைவு பெறாமல் பாதி நிர்மாணிப்பில் முற்றுப் பெற்றிருக்கும் இந்த அரண்மனையின் கட்டிட வேலைப்பாடுகள் பத்தொன்பதாம் நூற்றாண்டில் தொடங்கப்பட்டது. கேலிஸ் தன் மனைவியான ‘எக்னஸ்’சுக்கு இந்த அரண்மனையைக் காதல் பரிசாகக் கட்டினார். கட்டிட நிறைவு பெறாத கேலிஸ் அரண்மனை கிட்டதட்ட தொன்னூறு ஆண்டுகளுக்கு மேல் எந்தவிதப் பராமரிப்பும் இல்லாமல் ‘பேய் வீடு’ என அடையாளப் படுத்தப்பட்டு மர்மத்தில் மூழ்கிக் கிடந்தது.
1990களில் சாலை நிர்மானிப்பின் போது கேலிஸ் அரண்மனையை ஒட்டி பிரதான சாலை அமையப் பொற்றது. தொல் பொருள் ஆராய்ச்சிகளுக்கு பிறகு இவ்வரண்மனை சுற்றுலாத் தலமாக் அறிவிக்கப்பட்டது.

கேலிஸ் அரண்மனையில் இன்னமும் கண்டறியப்படாத இரகசிய அறைகளும் சுரங்கப் பாதைகளும் உள்ளன. நான் இது வரை மூன்று முறை இவ்விடத்திற்கு சென்று வந்துள்ளேன்.

கேலிஸ் ஸிமித் ஸ்காட்லாந்தில் டாலாஸ் நகரில் பிறந்தார். இவரின் வயதும் பிறந்த வருடமும் கண்டறியப்படவில்லை. ஏறக்குறைய தனது இருபதாவது வயதில் பொருளீட்டும் நோக்கத்தில் மலாயவிற்கு (மலேசியாவில் ஆரம்பப் பெயர்) வந்தார்.

இவரது நிர்வாகத் திறமையின் காரணமாக ‘அல்மா பக்கீர்’ எனும் நிர்வாகத்தினர் தென் பேரா மாநிலத்தின் சாலை நிர்மானிப்புப் பணியை இவரிடம் ஒப்படைத்தனர், நிர்வாகத்திலும் பங்குதாரராக நியமித்தார்கள். இதன் வழி கேலிஸ் நல்ல இலாபத்தை ஈட்டினார்.

இவ்வரும்படியை வைத்துக் கொண்டு ‘கிந்தா கிலாஸ்’ எனும் இடத்தில் கிட்ட தட்ட ஆயிரம் ஏக்கர் நிலத்தை வாங்கினார். அச்சமயத்தில் இந்த இடம் பெரும் காடாக இருந்தது. தமிழகத்தில் இருந்து சஞ்சிக் கூலிகளாக வேலையாட்களை வரவழைத்து, இரப்பர் தோட்டம் நிறுவி, பால் மரம் சீவும் வேலைக்கு அமர்த்தினார். இரப்பர் தோட்ட முயற்சியில் நல்ல லாபத்தை அடைந்தார்.

அதன் பிறகு 1905-ல் ‘கேலிஸ் இல்லத்தை’ நிறுவி தன் குடும்பத்தினரை அழைத்து வந்து குடியேறினார். அவரது முதல் குழந்தையான ‘அந்தோனி’ பிறந்தவுடன் தன் மனைவிக்குப் பரிசாக ‘கேலிஸ் அரண்மனையை’ கட்டத் திட்டமிட்டார். நீண்ட நாட்களாகக் குழந்தைப் பேறு இல்லாத கேலிஸ் தம்பதிகள் அவர் அரண்மனைக்கு அருகில் இருக்கும் அம்மன் கேவிலில் வேண்டிக் கொண்ட பிறகு குழந்தைப் பிறந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் கேலிஸுக்கு இந்துமத நம்பிக்கையும், காலாச்சார ஈடுபாடும் ஏற்பட்டது. அரண்மனையையும், கோவிலையும் பார்வையிட்ட போது அது உண்மையெனப் புலப்பட்டது.

தனது கனவு மாளிகையான ‘கேலிஸ் அரண்மனையை’ நிர்மானிப்பதற்கு முன் அந்த அம்மன் கோவிலை சிறப்பான முறையில் கட்டினார். அரண்மனையிலிருந்து சுமார் 500 மீட்டர் தூரத்தில் இருக்கும் அம்மன் கோவிலும், கேலிஸ் அரண்மனையும் ஒரே மாதிரியான கட்டிட வேலைபாடுகளுடன் இருப்பதைக் காண முடியும். கேவிலின் கோபுரத்தில் கேலிஸின் சிலையும் வடிவமைத்து வைக்கப்பட்டுள்ளது. கோவிலினுள் கேலிஸின் மகனான அந்தோனியின் புகைப்படமும் ஓர் ஓரமாக மாட்டி வைக்கப்பட்டுள்ளது.

கேலிஸ் அரண்மனை மற்றும் கோவில் வேலைபாடுகளுக்காக தமிழ் நாட்டிலிருந்து வேலையாட்களும், சாதாரண மற்றும் பளிங்குக் கற்களும் வரவழைக்கப்பட்டன. கோவிலில் இரு முதியவர்கள் இருந்தார்கள். அவர்களிடம் திரட்டிய தகவலின் படி வேலைக்கு கொண்டுவரப்பட்ட பலர் கேலிஸீன் கொடுமைகளால் இறந்து போனதும் உண்டாம். இராப் பகலாக வேலை நடந்து கொண்டு தான் இருக்குமாம்.



சற்று லேசான மேட்டின் மேல் இருக்கும் இந்த அரண்மனை தாழ்வாரத்தில் வளைந்து நெளிந்து ஒரு ஆறு ஓடுகிறது. முன் வாசலில் இருந்து இக்காட்சியைப் பார்ப்பதற்கு மிக ரம்மியமாக இருக்கிறது. கேலிஸ் அரண்மனையின் நிலவறையில் இருந்து மொட்டை மாடி வரை மின்-தூக்கி அமைக்க முயற்சித்திருக்கிறார்.
அது மட்டுமல்லாமல் அரண்மனையின் முன் இருக்கும் ஆற்றிற்கு அடியில் இரு சுரங்கப்பாதைகளும் அமைக்கப்பட்டுள்ளது. அதாவது ஆற்றைக் கடக்காமல் ஆற்றிற்கு அடியில் சென்று அரண்மனையை அடைந்துவிடலாம். மற்றுமொரு சுரங்கப்பாதையானது அரண்மனையின் பிரதான அறையிலிருந்து ஐந்நூறு மீட்டர் தூரத்தில் இருக்கும் கோவிலை அடைவதற்கு ஏதுவாக ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.

இரண்டாவது மாடியில் ஒரு டென்னிஸ் மைதானத்தை அமைக்க முயற்சி செய்திருக்கிறார்கள். இதைப் பார்க்கும் போது தொன்னூறு ஆண்டுகளுக்கு முன்பே இன்றைய நவீன யோசனையோடு செயற்பட்டிருக்கும் நம் இந்தியக் கட்டிடக்கலை வல்லுனர்களின் திறமையை நினைத்து வியந்து போனேன்.

மேலும் மொட்டை மாடியை விருந்துபசரிப்பு நிகழ்ச்சிகளுக்குப் பயன்படுத்தும் வகையில் அமைத்து இருக்கிறார்கள். மொட்டை மாடியில் இருக்கும் போது சில்லேன்று வீசும் காற்றும் கட்டிட அமைப்பும், ரம்மியமான காட்சிகளும் ஒரு வித மகிழ்ச்சியான உணர்வைக் கொடுக்கிறது.

முதலாம் உலகப் போர் முடிந்த காலகட்டத்தில் ஸ்பானிஷ் ப்ளூ எனப்படும் மிகக் கொடுமையான விஷக் காய்ச்சல் ஐரோப்பாவில் பரவிவந்தது. அதன் பின் ஆசியக் கண்டமும் இந்நோய்க்கு இலக்காகியது. கேலிஸ் தோட்டத்தில் பணிபுரிந்த பலரும் இந்நோய்க்கு பலியாயினர். இதனால் அவர் வியாபாரம் பாதிப்படைந்தது. அதுமட்டுமள்ளாமல் கிட்டதட்ட எழுபதுக்கும் மேற்பட்ட கேலிஸ் அரண்மனைக் கட்டிட வேலையாட்களும் இறந்தார்கள். மேலும் சிலர் நோய் பாதிப்புக்குள்ளானார்கள்.

கேலிஸ் தனது சம்பாத்தியத்தில் முக்கால்வாசியை இவ்வரண்மனைக்காகவே செலவு செய்துவிட்டார். 1926 ஆம் வருடம் தனது போர்ச்சுகல் பயணத்தின் போது ‘pneumonia’ எனும் நோய்வாய்பட்டு இறந்தார்.

மனமுடைந்து போன கேலிஸின் மனைவி தனது தாயகமான ஸ்காட்லாந்து திரும்ப முடிவு செய்தார். கிந்தா கிலாஸ் என அழைக்கப்படும் கேலிஸின் தோட்டத்தை Harrisons and Crosfield எனும் பிரிடிஸ் நிர்வாகத்திடம் விற்றுவிட்டு சென்றார்.

இரண்டாம் உலகப் போரின் சமயம் இந்த அரண்மனை ஜப்பானியர்களில் கைவசம் இருந்தது. அவர்களின் அராஜக செயல்களாலும் பலர் இவ்வரண்மனையில் சாகடிக்கப்பட்டிருக்கிறார்கள். இதனால் இங்கு போய் மற்றும் ஆவிகளின் நடமாட்டம் உள்ளதாக இத்தோட்டத்து மக்களிடம் நம்பிக்கை இருந்து வருகிறது. சில சமயங்களில் மனிதர்களின் அழுகுரல் கேட்குமாம். மேலும் இங்கு கிடைத்த தகவலின் படி இரவு வேளையில் ஆவிகள் இவ்வரண்மனையின் நிர்மாணிப்புப் பணிகளைச் செய்து கொண்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இது அவர்களுக்கே வாய் வழி வந்த தகவல்தான். இன்னமும் அதை நம்பி வருகின்றனர்.

இந்த அரண்மனைக்கு நான்கு சுரங்கப் பாதைகள் உள்ளன. அதில் இரண்டு ஆரம்பத்தில் குறிப்பிட்டவை. மேலும் ஒன்று தென் பக்கமாய் இருக்கும் சாலையை இணைக்கும் சுரங்கம் என கூறுகிறார்கள். முக்கிய சுரங்கங்கப் பாதைகள் மூடி வைக்கப்பட்டுள்ளதால் சரியான தகவல்களை அறிந்து கொள்ள முடியவில்லை.

நான்காவதாக கூறப்படும் சுரங்கப் பாதை இன்னமும் கண்டறியப்படவில்லை. ஜப்பானியர்கள் மற்றும் 1950/60 களில் சின் பெங் (கம்யூனிஸ்ட் தலைவர்) போன்றவர்களால் இப்பாதை இரகசிய வழியாக பயன்படுத்தப்பட்டு பின்னாட்களில் சுவரெழுப்பி மூடப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது. கேலிஸின் கார் ஒன்று சுரங்கத்தினுள் இன்னமும் கேட்பாரற்றுக் கிடப்பதாக அறியப்படுகிறது. அரம்பத்தில சுரங்க வழிகளை காண்பதற்கு அனுமதித்த சமயம் பார்த்து வந்த சிலர் கூறியுள்ளனர்.

மேலும் ஒரு சுவாரசியமான விஷயம், பாதள அறை. இந்த அறையில் ஒரு துளி வெளிச்சம் கூட இருக்காது. மெழுகுவர்த்தி அல்லது கை-விளக்குடன் தான் செல்ல வேண்டும். நான் எனது லைட்டர் கருவியை பயன்படுத்திச் சென்றேன். இந்த அரையின் சுவர் முழுக்க பொற்காசுகளால் பொருத்தப்பட்டிருக்கும். இவ்வரை உருவாக்கியதன் நோக்கம் அறியப்படவில்லை. விளக்கின் வெளிச்சத்தில் பொற்காசுகளால் ஆன இவ்வறையைப் பார்ப்பது வித்தியாசமான அனுபவமாக இருக்கும்.

மக்களின் பாதுகாப்பிற்காக முடப்பட்டிருப்பதை விட, மக்களின் பார்வைக்காக இந்த அரண்மனையை பாதுகாப்பான இடமாக மாற்றி அமைத்துக் கொடுத்தால் சிறப்பாக இருப்பது மட்டுமல்லாமல் இன்னும் பல விஷயங்களை அறிந்து கொள்ளவும் வழிவகுக்கும் என்று எண்ணியவாறே கணத்த இதயத்துடன் அங்கிருந்து புறப்பட்டேன்.

(பி.கு: தமிழ் ஓசை பத்திரிக்கையில் வெளிவந்த எமது படைப்பு)

Monday, April 20, 2009

ஒரு பயணமும் சில குறிப்புகளும்...

மலேசியாவில் மிகச் சிறிய மாநிலம் பெர்லிஸ் ஆகும். சுமார் 810 கிலோ மீட்டர் பரப்பளவைக் கொண்டது. மலேசிய- தாய்லாந்து எல்லைப் பகுதியில் அமைந்துள்ள மாநிலங்களில் ஒன்றாகும். ஏனைய மாநிலங்களைக் காட்டினும் வளர்ச்சிகள் சற்றே குறைந்து காணப்படும் மாநிலம் இது.

மலேசியாவின் முதல் நிலை பணக்காரார் திரு.ரோபட் கோக். அவர் ஒரு சீனி வியாபாரி. அவருடைய கரும்புத் தோட்டங்கள் பெர்லிஸ் மாநிலத்தில் நிறைந்து காணப்படும். ரோபட் மலேசியாவில் மட்டுமன்றி தென் கிழக்காசியாவிலேயே முதல் நிலை பணக்கார பட்டியலில் இருக்கிறார்.பெர்லிஸில் முக்கிய பட்டணங்களாக காணப்படுவது சிம்பாங் அம்பாட்(simpang empat), அராவ்(Arau), ஜெஜாவி(Jejawi), சூப்பிங்(Chuping) போன்ற இடங்களாகும். கரும்புத் தோட்டங்கள் நிறைந்துக் காணப்படுவதால் கரும்பு விளைந்து செழிப்பாக இருக்கும் காலங்களில் வனப்பு மிகுந்து காணப்பகும். சிறிய அளவிளான சாலைகளே இங்கு அதிகம். பயணிக்கும் சமயம் சாலையோரத்தில் இருக்கும் கரும்பு விளைச்சல்கள் பசுமையாகவும் கண்களுக்கு இதமாகவும் இருக்கும்.

கெடா மாநிலத்தின் புகிட் காயு ஹிதாம்(Bukit Kayu Hitam) எனும் பகுதியில் இருந்து சுமார் 30 நிமிட பயணத்தில் குவாலா பெர்லிஸ் (Kuala Perlis) எனும் இடத்தை அடைந்து விடலாம். குவாலா பெர்லிஸ் ஒரு துறைமுகம் ஆகும். இங்கிருந்து விசைபடகின் வழி பயணித்தால் 40-45 நிமிடங்களில் லங்காவி தீவை அடைந்துவிடலாம்.லங்காவி ஜாலியாக பொழுதைக் கழிக்கக் கூடிய இடம். பொது விடுமுறை நாட்களில் இங்கு செல்வது சொந்த செலவில் சூன்யம் வைத்தக் கதையாகிவிடக் கூடும். பொது விடுமுறை மற்றும் பள்ளி விடுமுறை காலங்களில் கூட்டம் அதிகமாக இருக்கும். விலையும் சற்று கூடுதலாகவே சொல்வார்கள். ஏனைய ஓய்வு நாட்களில் சென்றால் மனம் விரும்பும் அமைதியை பெருவது தின்னம்.

லங்காவி தீவில் சுங்க வரி விலக்கு கிடைக்கும். அதனால் விஸ்கி, பிராண்டி, பியர், சிகரட், சாக்லெட் போன்றவை மலிவான விலையில் கிடைக்கும். ஒரு பாட்டில் விஸ்கியை நீங்கள் தீவை விட்டு வெளிவரும் போது கொண்டு வர அனுமதிப்பார்கள். அதிகபட்டவைக்கு வரி விதிக்கப்படும். லங்காவி பற்றிய மேலாதிக்க தகவலுக்கு மை பிரண்ட் எழுதிய இப்பதிவை காண்க.
சரி மீண்டும் பெர்லிஸ் மாநிலத்தை பற்றிய பார்வைக்கு வருவோம். பெர்லிஸில் சில உணவு வகைகளும், துணி மற்றும் பொம்மைகளும் மலிவான விலையில் கிடைக்கும். எல்லை மாநிலம் என்பதால் காவல் கெடுபிடிகள் அதிகம். ஆண்கள் மட்டும் பயணித்தார்கள் என்றால் ’சில தவிர்க்க முடியாத கேள்விகளுக்கு’ காவலாலிகளிடம் பதில் சொல்லி தான் வர வேண்டி இருக்கும்.

தாய்லாந்து எல்லை பகுதிகளில் பாலியல் தொழில் அதிகம் இருப்பதுவே இதற்கு காரணம். அது போக சில வேளைகளில் போதை மருந்து உட்கொண்டோமா என்பதற்காக சிறுநீர் சோதனைகளையும் மேற்கொள்வார்கள். குடும்ப சகிதம் விசிட் அடித்து செல்வோருக்கு இப்படிபட்ட இக்கட்டான நிலை விதிவிலக்காக அமையும்.

ஆரம்பத்தில் சொன்ன குவாலா பெர்லிஸ்/ விசைபடகு ஏறும் இடத்தில் இடத்தில் இருந்து 15 நிமிடம் பயணம் செய்தால் பெர்லிஸ் கைவினை பொருட்கள் மற்றும் கலாச்சார மைய கட்டிடத்தை அடையலாம். கைவினை பொருட்கள் நியாயமான விலையில் விற்கப்படுகிறது. ஆள் பார்த்து விலை சொல்கிறார்கள் என்பதை உணர முடியும். பேரம் பேசி வாங்க முடிகிறது.அடுத்தபடியாக இருப்பது பாம்பு தோட்டம். கங்கார் எனும் இடத்தில் இருந்து 10 கிலோ மீட்டர் வடக்கே போனால் இதைக் காண முடியும். பாம்பு, முதலை, உடும்பு, பெரிய பல்லிகள் எனக் காண முடியும்.கோத்தா டாயாங் தொல்பொருட்காட்சி சாலை இங்கிருக்கிறது. 2500 முதல் 2600 ஆண்டுகளுக்கு முந்தய பொருட்கள் இவை என சில தகவல்களை எழுதி வைத்திருப்பார்கள். சோழர்களின் கடார ஆட்சியின் சமயம் பெர்லிஸ் போன்ற பகுதிகள் கடாரம் என்றே அறியப்பட்டிருக்கிறது. சோழர் காலத்துக்கும் முந்திய இந்திய ஆட்சியில் இருந்த பொருட்கள் என சில குறிப்பிடப்பட்டுள்ளது. இதை விவரித்தால் பெரும்பதிவாகிவிடும்.

மேலும் இருப்பது மெலாவாத்தி நீர் நிலை பகுதி. மிக ரம்யமான இடமாகும். இங்கு படகு சவாரி போக முடியும. நெடு தூர நடை பயணம் செய்யவும் வசதி படுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. மேலும் அராவ், கங்கார் போன்ற இடங்களிலும் சற்றே சுற்றிவிட்டு வர முடியும். அராவ் நகரில் அரச மாளிகையும், பிரதான மசூதியும் அமைந்திருக்கிறது. மற்ற மாநிலங்களின் மன்னர்கள் ’சுல்தான்’ என அறியப்படுகிறார்கள். பெர்லிஸ் மன்னர் ’ராஜா’ என அழைக்கப்படுகிறார்.சின்ன மாநிலம் என்பதால் ஒவ்வொரு இடத்திற்கும் தூரங்கள் அதிகம் இல்லை. இருந்தாலும் சிறிய அளவிலான சாலை அமைப்புகள் சில இடங்களில் படுத்தி எடுக்கிறது. தலைகவசம் அணியாத கணவான்கள் அங்கிட்டும் இங்கிட்டும் விருட்டென புகுந்துச் செல்கிறார்கள். நிதானித்தே வகனத்தைச் செலுத்த வேண்டும்.

நவ நாகாரிக வளர்ச்சிகள் அதிகம் புகுத்தப்படாததால் பெர்லிஸ் பசுமை பொலிவுடன் இருக்கிறது. சாலையில் அதிகமான வாகனங்கள் இருக்காது. அமைதியான பயணத்தை திருப்தியாக முடித்துக் கொண்டு திரும்ப முடியும்.
(பி.கு: நண்பர்களோடு இரு நாள் பயணம் மேற்கொண்டதால் இரவு வேளையில் கோழி வாட்டல் அதாங்க B.B.Q பார்ட்டி எல்லாம் லங்காவியில் வாங்கிய ஆரஞ்சு ஜூஸ் குடியலுடன் மங்களகரமாக நடந்தேறியது.)