Wednesday, May 27, 2009
பிரபாகரன் தீவிரவாதி! ஒசாமா போராட்டவாதி?
சரி கருத்து கந்தசாமித்தனத்தை விட்டுவிட்டு நேரடியாக விசயத்துக்கு வருகிறேன். முன்பு ஒசாமா, சதாம் ஹுசேன், அல் கொய்தா, இன்னும் எக்ஸட்ரா எக்ஸட்ரா என ஆதரவளித்து பேசிய மலாய் நாளேடுகள் தாம் இன்று பிரபாகரனை உலக தீவிரவாதியென கிழிகிழியென கிழித்து நார்நாராக்கி காயப்போட்டு இருக்கிறது. வழக்கம் போல கேட்பார் இல்லை. ஒசாமா துப்பாக்கி எடுத்தால் ஜிகாத். பிரபாகரன் துப்பாக்கி எடுத்தால் தீவிரவாதம்.
கடந்த ஞாயிறு நடைபெற்ற அமைதி பேரணி சம்பந்தமாக மலாய் அரசியல் தலைவர்கள் மத்தியில் பல விமர்சனங்கள் எழுந்துள்ளன. இவர்கள் தீவிரவாதத்தை ஆதரிக்கிறார்களோ இல்லையோ தெரியாது. ஆனால் இலங்கையில் ஏற்பட்ட நிலை இங்கு பின்பற்றபட்டுவிடுமோ என்ற எண்ணமே இவர்களின் வசைபாடல்களின் அப்பட்டமாக தெரிகிறது. இன போராட்டம் தவறென சொல்பவர்கள் இஸ்லாமிய நாடுகளில் ஏற்படும் மத போராட்டத்துக்கு குரல் கொடுப்பது மட்டும் நியாயமாகுமா? கையில் வய்ன் கோப்பையை வைத்துக் கொண்டு குடிக்காரனாக இருக்காதே அது தவறு என அறிவுரை சொன்னானாம் எவனோ ஒருவன்.
எதனால் மக்களிடையே இப்படிபட்ட மங்குஸ்தின்* தனமான சிந்தனைகள். நாம் இங்கு எடுத்துக் கொண்ட உதாரணத்தையே காண்போம். ஒசாமாவையோ அல்லது சதாம் ஹுசேனையோ அவர்கள் கவனிக்கும் போது இஸ்லாம் எனும் போர்வையில் நின்று கவனிக்க முற்படுகிறார்கள். அதே சமயம் பிரபாகரன் அவர்களுக்கு அன்னியம். யாரோ ஒரு தீவிரவாதி. அதே போல் ஒசாமாவும் சதாமும் பலருக்கு தீவிரவாதியாகவும் மேலும் பலருக்கு தேவ தூதுவனாகவும் தெரிகிறார்கள். இதில் யாரை நாம் குறை சொல்ல.
இவர் செய்தது தப்பு அவர் செய்தது நியாயம் என நான் இங்கு குறிப்பிட விரும்பவில்லை. அப்படி சொன்னால் என் டவுசரை கழட்டி ஓட ஓட விரட்டியடிக்க சில சொம்பு தூக்கிகள் வந்துவிடுவார்கள் என்பது நான் சொல்லி தெரிய வேண்டும் என்றில்லை. இப்படி ஒரு கட்டமைப்பிற்குள் இருந்துக்கொண்டு ஒரு விசயத்தை அணுகுகிறார்கள். அவர்களுக்கு சாதகமாக அது சரி தவறு என்றும் தீர்மானித்துக் கொள்கிறார்கள்.
பெற்றோர்களுக்கு தம் பிள்ளைகள் செய்யும் தவறுகளை விட அடுத்த வீட்டுப் பிள்ளைகள் செய்யும் தவறுகள் தாம் பெரிதாக தெரியுமாம். அப்படிபட்டது தான் இந்நிலையும். இப்படி ஒரு கட்டமைப்புக்குள் தங்களைத் திணித்துக் கொண்டு தன் எண்ணங்களை வெளிப்படுத்துவதற்கும், தான் இன்ன சாதியன் என சொல்லிக் கொள்ளும் பச்சைப் பார்ப்பானியத்தனத்துக்கும் என்ன வித்தியாசத்தைக் காண முடியும். என்னைப் பொறுத்தமட்டில் இரண்டிற்கும் கிஞ்சித்தும் வித்தியாசம் கிடையாது என்றே சொல்வேன்.
இதே சிந்தனை யுக்தியை ஒரு நாடளவில் எடுத்துக் கொண்டு பார்ப்போம். மக்களாட்சி கொண்ட நாட்டில், மக்கள் தேர்வின் அடிப்படையிலேயே ஆட்சி அமைக்கப்படுகிறது. திருடர்களின் நாட்டில் திருடு தவறில்லை என்ற சட்டத்தை அமல் செய்யப்பட்டால் திருடு தவறில்லை என்பதை எல்லோரும் ஏற்றுக் கொள்ளலாகுமா? உலக வாழ்க்கையில் நமது சிந்தனைகள் எதனை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது? நமது வாழ்க்கையை நாம் தான் நிர்ணயிக்க வேண்டும் என மார் தட்டிக் கொள்ளலாம். இன்று எத்தனை நாடுகளில் அத்தேசத்து மக்கள் தாம் விரும்பிய வாழ்க்கையை வாழ்கிறார்கள். இதன் அடிப்படையில் மக்களாட்சியே சிறந்த ஆட்சி முறையென நாம் சொல்லலாகுமா?
பிரச்சனைகளின்றி அரசியலில் காய் நகர்த்த முடியாது. இன்றையச் சூழலில் சொந்த உறவுகளுக்குள் கூட பணத்தை கடன் கொடுக்கும் போது வட்டியையும் சொல்லிவிட்டுத்தான் கொடுக்கிறார்கள். இன்றோ அதிசயகரமாக அமெரிக்கா, ஜப்பான், சீனா, நோர்வே என பல நாடுகளும் இலங்கைக்கு பண உதவி செய்து வருகிறது. இதைத் தான் 'ஆப்பு கண்ணுக்கு தெரியாதுடியோவ்வ்வ்வ்' என்பார்கள் போலும்.
இலங்கை, காஷ்மீர் இவ்விரண்டு இடங்களும் அதீத வளர்ச்சியடையக் கூடிய இடங்கள். உலக வர்த்தகத்திற்கு இலங்கை சிறந்த துறைமுகமாக அமையக் கூடும். காஷ்மீர் உலகப் பிரசித்திப் பெற்ற சுற்றுலாத் தளமாக அமையக் கூடிய ஓர் இடம். இவ்வளவு காலமாகவும் இவ்விடங்களில் தீவிரவாத அல்லது இனவாத பிரச்சனைகள் நீடித்தவண்ணமே உள்ளது. இதற்கு உலக நாடுகளும் ஒரு காரணம். வெள்ளையன் தமது ஆதிக்கத்தை விட்டுச் செல்லும் போது எல்லா இடங்களிலும் இப்படிபட்ட பிரச்சனைகளை விட்டுச் சென்றிருக்கவே செய்கிறான். இலங்கை சிறந்த துரைமுகமாக அமையுமெனில் அது சிங்கை போன்ற நாடுகளை பாதிக்கக் கூடுமென பொருளாதார நிபுணர்கள் சொல்லியிருக்கிறார்கள்.
இன்று அதீத வளர்ச்சியடையக் கூடிய நாடுகளில் ஒன்றாக இந்தியா இருக்கிறது. உலக நாடுகளுக்கு இவற்றை கவனிக்க ஓர் இடம் வேண்டும். தென் பகுதியில் இலங்கைக்கு உதவி செய்த நாடுகள் நாளை காஷ்மீர் பாகிஸ்தானுக்குத்தான் என சொல்லுமானால் அதில் அதிசயிக்க ஒன்றும் இல்லை. 2013-ல் இந்தியா வல்லரசாகுமா என ஜாதகம் கணிக்கும் ஜோதிட வல்லுனர்கள் அதனைச் சுற்றியுள்ள ஏனைய நாடுகளின் ஜாதகத்திலும் தங்களது ஒற்றைக் கண்ணை வைத்துக் கொள்வது நலம் பயக்கும். எதிர்காலத்தில் சீனா இந்தியா மீது படையெடுக்குமா? என்ற ஜோதிடக் கேள்வியுடன் என் புலம்பல்களை கொட்டித் தீர்த்துக் கொள்கிறேன்.
Tuesday, May 26, 2009
இத என்னனு சொல்றது??? தெரியலை!
ஆதிமனிதன்
கிழிசல் ஆடையில்
****
வண்ணப் பூச்சுகள்
மறைவில் ஓர் உறுவம்
நவீன ஓவியம்
****
உண்ணாவிரத போராட்டத்தில்
தவம் கிடக்கிறது
ஆரஞ்சு ஜூஸ்
****
போர் களத்தில்
குழந்தையின் கையில் கிளுகிளுப்பை
சிரிப்புக்கு ஏங்கும் தாய்
****
விதவைக் கோலம் கொண்ட
பொட்டிட்டுப் பூவைத்து
அழகு பார்க்கிறேன்
உன் பெயர் எழுதினால்
அதிகமாகவே ஒட்டிக் கொள்கிறது
செவ்விதழ் சிந்தும் துளிச் சிரிப்பின்
சிறு தருணத்திற்காக
தவம் கிடக்கும்
மனம்
உன் பெயர் பார்த்து சிரிக்கிறேன்
பேசி முடித்து
சில நொடிகளே கடந்திருந்தது
இரண்டடி எஸ்.எம்.எஸ்
என்ன திருக்குறளின்
மாற்றுவடிவா?
மீண்டும் மீண்டும்
படித்து மனனம் செய்கிறேன்
புரிந்தது எது
புரியாதது எது
புத்தம் புதிய சூழலின்
புரியாத புதிர் ஒன்றில் மாட்டிக் கொண்டேனோ?
தண்ணொளியை வீசும்
பனித்திடும் கருணையும்
எரித்திடும் கோபமும் - சடுதியில்
திணறடித்திடும் வேகமாய்
கவிதைகள் பொழியுதடி
****
(பி.கு: பாசரம் எழுதி வெகு நாட்களாகிறது. ஏதோ மனதில் எழுந்ததை எழுதிவிட்டிருக்கிறேன்)
Thursday, May 21, 2009
இழந்தனள்...பெற்றனன்...
கொழுந்திட்டு எரியும் காமத் தீயை பற்ற வைத்துக் கொள்ள அத்தனை அம்சங்களும் அவளிடம் பளிச்சிட்டது. அவனிடம் சில காலமாக வேலைப் பார்த்து வருகிறாள். ஆம் சில காலம் தான். இந்த சில காலத்தில் ஆப்பிஸ் வேலை ஹோட்டல் வரை வந்தாகிவிட்டது. அவனுக்கு திருமணமாகி குழந்தை குட்டிகள் இருப்பது இவளுக்குத் தெரியும். அவளது தோழிகள் சில முறை இவளிடம் கேட்டதுண்டு.
“ஏன் டீ போயும் போயும் அவனா கிடைச்சான்?”
“அது அப்படி தான்” என சுருக்கமாக தன் பதிலை முடித்துக் கொள்வாள்.
கதிரவன் சூப்பராய் உதித்து சுருக்கென அடித்து அடங்கிய அன்றைய தினம் வழக்கம் போல மேட்டர் கதைகளில் வரும் சத்தர்டே நைட் தான். அவளைக் கூட்டிக் கொண்டு ஊர் சுற்றினான். கேட்டதை வாங்கி கொடுத்தான். அவனும் தின்றான். இரவு ஹோட்டலுக்கு அழைத்து வந்தான். காமக் களியாட்டங்கள் சுபமாக நடந்தேறியது.
தனது காற்சட்டையை தேடி எடுத்து போட்டுக் கொண்டிருந்தான். கட்டிலில் பிறந்த மேனியாக அமர்ந்திருந்த அவள் அவன் பார்க்க புன்முறுவல் செய்தாள்.
“ஏன் சிரிக்கிற?” - அவன்.
”இது உங்க ஃப்போட்டோ தானே?” தன் பையில் வைத்திருந்த படத்தை எடுத்து நீட்டினாள்? அது அவனது இளமை கால புகைப்படம். அழகனாக காட்சியளித்தான்.
“அட... இது எப்படி உன்கிட்ட?”
“எங்கம்மா வச்சிருந்தாங்க”.
“என்ன?”
”எங்கம்மாவ நீ காதலிச்சு ஏமாற்றி ‘ரெட் லட்’ ஏரியாவுல வித்துட்டு போன. உன்ன நம்பினதுக்கு தெருவிலவிட்டுட்டு போயிட்ட. உன் போட்டோவ காட்டி சொல்லி இருக்காங்க. இப்ப அவுங்க உயிரோடில்லை”. அவன் பெருங்குழப்பத்தில் வியர்த்துப் போனான்.
“என் எய்ட்ஸ் வியாதி உனக்கும் ஒட்டிக்கிட்டிருக்கும்ல?” அவள் கேட்டதில் பத்து பதினைந்து இடிகள் ஒன்றாக தன் உச்சந் தலையில் இறங்கியதை அவன் உணர்ந்தான்.
(பி.கு: அவள் அவன் மகளாக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை.)
Monday, May 18, 2009
ஃபிரியா கிடைத்தால் பினாயில் குடிப்போம்
முக்கியமாக பேரங்காடிகளை இங்கு குறிப்பிட்டு சொல்ல முடியும். பேரங்காடிகள் மக்களின் மனதை வெகுவாகவே கவர்ந்துவிட்டது. சிறு பிள்ளைகளும் ‘ஷாப்பிங்’ என்ற வார்த்தையை அர்த சுத்தமாக பிசகின்றி உச்சரிக்கின்றன. ஏன் இந்நிலை? நுகர்வோரின் சிந்தனை அறிந்து செயல்படுதல், சொகுசான சேவைகள், எதிலும் கவரும் நிலை என்பது பலரையும் பாதித்துள்ளதாய் சொல்லலாம்.
கழிவு விற்பனை, மலிவு விற்பனை, எழுத்தாளர் பயிற்சி பட்டறை, எழுத்தாளரோடு கலந்துரையாடல் என புத்தக விற்பனையை அதிகரிக்க சில யுக்திகளை புத்தக வியாபாரிகள் கடை பிடிக்கிறார்கள். புத்தகங்களுக்கு உள்ள ஆதரவின் அடிப்படையில் மக்களிடையே இருக்கும் வாசிப்பு பழக்கம் மக்கி போய்விடவில்லை என்பதாக நாம் சொல்ல முடியும். பிறகு எதனால் புத்தக விறபனை அதிகரிக்கவில்லை?
ஓசியில் கிடைத்தால் ஒன்பது நாட்டுக்கு அரசனாகும் வாய்ப்பைக் கேட்பார்களாம் என எங்க ஊர் பாட்டிகள் பேச கேட்டிருக்கிறேன். சரி நேரடியாக விடயத்துக்கு வருவோம். முதலில் ஓசியில் புத்தகங்களை படிக்கும் கனவான்களைப் பற்றி சில குறிப்புகள்.
சில புத்தகக் கடைகளில் கண்டிருப்போம். சிலர் ஓரிடத்தை ஆக்ரமித்துக் கொண்டு நெடு நேரமாக அங்கேயே நின்றிருப்பார்கள். புத்தகத்தை வாங்கும் பாவனையில் புரட்டிக் கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக படித்துவிட்டு செல்வார்கள். வியாபாரிகளுக்கு இது வயிற்றெரிச்சலைக் கிளப்பும் ஒன்றென கூற முடியும். வியாபாரம் பாதிக்காமலிருக்கும் பொருட்டு சிலர் இதைக் கண்டும் காணாமல் இருந்துவிடுகிறார்கள். இது வியாபாரியை மட்டுமன்று அப்புத்தக எழுத்தாளர்களையும் பாதிக்கச் செய்யும் ஒன்றாகும்.
இன்றய தினத்தில் நாளிகைகளின் விலை சராசரியாக 1 முதல் 1.50 வரை விற்பனையாகிறது. சாதாரன வார மற்றும் மாத இதழ்கள் 2 முதல் 5 ரிங்கிட் வரை விற்பனையாகிறது. இப்படியாக இவற்றை 'ஓசியில்' படித்துவிட்டு 9 ரிங்கிட் டன்ஹில் சிகரட்டுக்கு முகம் சுழிக்காமல் செலவு செய்வது ஒரு கேடுகெட்ட கலாச்சாரமாக மக்களிடையே நிலவி வருகிறது.
இத்தகாத பழக்கம் பெரும்பான்மையாக ஆண்களிடம் மட்டுமே காணப்படும் ஒன்றெனக் கூறுவது மிகையன்று. சில பெரிய அளவிலான புத்தகக் கடைகளில் ஆரம்பத்தில் சொன்னது போல புத்தகம் பார்க்கும் பாவனையில் படிக்கும் சிலர் இருப்பதாக சொன்னேன். வேறு சில இடங்களில் தரையில் அமர்ந்தபடி படிக்கும் ஆட்களையும் நாம் அறிந்திருக்கக் கூடும்.
எதனால் இந்நிலை ஏற்படுகிறது? நாள், வார மற்றும் மாத இதழ்களை தவிர்த்து வெளியீடு காணும் சில புத்தகங்கள் விலையில் சற்றே அதிகமாக இருப்பதாக கருதலாம். அப்படி என்றால் இதழ்களுக்கும் இந்நிலை எதனால் ஏற்பட்டது?
இச்செயல் புதிய திரைப்படத்தை திருட்டு வீ.சி.டியில் பார்ப்பதற்குச் சமமானதாக தான் சொல்ல முடியும். எழுத்தாளர், பதிப்பாளர் விற்பனையாளர் என யாருடைய அனுமதியின்றியும் படிப்பது வருந்ததக்க அவச் செயல்.
சரி இந்நிலை நம் நாட்டில் மட்டும் தான் இருக்கிறதா? நிச்சயமாக சொல்லிவிட முடியாது. இருப்பினும் மேலை நாடுகளில் அசல் பொருட்களையே வாங்க விரும்புகிறார்கள். கள்ள பொருட்களின் விநியோகம் அங்கு குறைந்துக் காணப்படுவதற்கு இதுவும் ஒரு காரணமென நாம் சொல்லலாம். அடிப்படையில் ஒரு நாட்டின் வாழ்வியல் கலாச்சார முறையும் மக்களை நெறிபடுத்த பங்கு வகிக்கிறது.
இந்நிலையைக் கருத்தில் கொள்ளும் சில வியாபாரிகள் பிலாஸ்ட்டிக் பைகளால் புத்தகங்களை மடித்து வைக்க முற்படுகிறார்கள். இதன் விளைவுகள் என்ன? புத்தகம் பழுதுபடாமல் இருக்க வழி செய்கிறது. எதிர்வினையாக வாசகர்கள் முன் மற்றும் பின் பக்க தகவல்களை வைத்துமட்டும் புத்தகத்த தேர்வு செய்ய நேரிடுகிறது. புத்தகத்தை வாங்க முனைவோர் பெரும்பான்மையாக உள்ளடக்கத்தையும் படித்துப் பார்த்தே தேர்வு செய்ய நினைப்பார்கள். இதனால் பயனிட்டாளர்களின் சுதந்திரம் பாதிப்படைகிறது.
புத்தகக் கடைகளை பொது நூலகமாக்குவது எந்நிலையினும் தவிர்க்கபட வேண்டிய ஒன்றாகும். இச்செயல்களை தவிர்க்க தக்க நடவடிக்கைகளை கையாழ்வது சிறந்தது. சிகப்பு விளக்கில் சாலையைக் கடக்காதே எனக் கூறினால் கேட்டுவிடுவதில்லை. 300 ரிங்கிட் அபராதம் என கட்டளையிட்டால் தான் மனித மரமண்டைகளுக்கு உரைக்கிறது. என்ன செய்ய?
Friday, May 15, 2009
வரையரை ஊதியம் - யாருக்கு லாபம்?
அரசு வரையறை செய்த ஊதியம் என்பதை நாம் விவரித்து பேசினால் அது சற்று சர்ச்சைக்குறிய செய்தியாகவும் அமைந்துவிடுகிறது. சில காலத்திற்கு முன் நாளிதழ்களில் ‘வரையறை ஊதியம்’ பற்றிய செய்திகளை நாம் கண்டிருக்கக் கூடும். கொளுத்திய மத்தாப்பை சட்டென நீரில் விட்டெறிந்தக் கதையாக ‘புஸ்’ ஆகி அமிழ்ந்து போய்விட்டது அச்செய்தி.
’வரையறை ஊதியம்’ என்பதை நாம் முன்னிறுத்தி விவாதிக்கையில் பொருளாதாரம், அரசியல், சமூகம் என நாட்டின் முக்கிய கூறுகளை அலசி ஆராய்ந்து இடித்துரைப்பது அவசியமாகிறது. சரி இரண்டு பத்திகளைக் கடந்தும் வரையறை ஊதியம் எனும் வஸ்துவைப் பற்றி நான் விளக்கவில்லையே. அது சலிப்புதட்டிவிடாதா?
1970-ஆம் ஆண்டு நடந்த அனைத்துலக ஊழியர்கள் சங்க(ILO) மாநாட்டில் வரையறை ஊதியம் தொடர்பான பேச்சுகள் எழும்பின. அதன் தீர்வாக வேலை செய்யும் ஊழியனின் வாழ்வியல் மற்றும் குடும்பம் தொடர்பான அடிப்படைச் செலவுகளைக் காட்டினும் அவன் ஊதியம் குறைவாக இருக்கக் கூடாது எனும் தீர்மானத்தை கொண்டு வந்தார்கள். தனது அடிப்படைச் செலவுகளைக் காட்டினும் குறைவான ஊழியம் பெறுபவன் ஏழை ஊழியன் என வரையறுக்கப்பட்டது.
2000த்தாம் ஆண்டின் கணக்காய்வின்படி உலகம் முழுக்க சுமார் 50 கோடி மக்கள் ஏழைத் தொழிலாளர்கள் என அடையாளம் காணப்பட்டிருக்கிறார்கள். இவர்களில் பொரும்பாலானோர் இளைஞர்களும், பெண் தொழிலாளர்களும் ஆவர். இவர்களின் வேலை நாள் மற்றும் நேரம் யாவும் நிரந்தரமற்றதாகவும் குறிப்பிடப்படுகிறது. அதிகமான ஏழைத் தொழிலாளர்கள் வேளாண்மை மற்றும் விற்பனைத் துறையைச் சார்ந்தவர்களாகவும் வகைப்படுத்தப்பட்டுள்ளது.
முதலாளி வர்க்கத்தினருக்கு இந்த சட்ட திட்ட முறைகள் வேம்பாகவே அமைந்தது. இதன் பயன்பாட்டை கவனிக்கும் முன்னதாக. முதலாளி வர்க்கத்தினரின் புலம்பல்களையும் நாம் சற்றே கவனிப்போம். வரையறுக்கப்பட்ட ஊதியம் அமல் செய்வதனால் பொருள் வெளியீட்டுச் செலவு அதிகரிக்கும்.
இதனால் முதலீட்டாளர் நட்டத்தைச் சந்திக்க நேரிடும். தொடர்ந்து வியாபாரம் பாதிப்படைந்து கடையைச் மூட நேரிடும். இது சமுதாயத்திற்கும் நாட்டின் பொருளாதாரத்துக்கும் பெருஞ்சேதத்தை விளைவிக்கக் கூடியது. இக்கூற்று குறுந்தொழில் மற்றும் நடுத்தர முதலாளிகளின் பெயரில் ஏற்புடையதாக அமையும். பெருந்தொழில் கலாநிதிகளுக்கு இது பெரும்பாதிப்பை உண்டுச் செய்யாது என்பதே உண்மை.
எது எப்படியாகினும் உலக நாடுகளில் பல, நாட்டு மக்களின் நலம் கருதி அரசினால் வரையரறுக்கப்பட்ட ஊதியத்தை அமல்படுத்தி வருகிறார்கள். அந்நாடுகளில் இது எப்படி சாத்தியமாயிற்று?
நியூசிலாந்தில் 1896-ஆம் ஆண்டும், ஆஸ்திரேலியாவில் 1899-ஆம் ஆண்டும் அரசினால் வரையறை செய்யப்பட்ட ஊதியம் அமல்படுத்தப்பட்டது. இதுகாறும் பொருளாதார நிபுணர்கள் தொடர்ந்து அதன் பயன்பாட்டை நாட்டின் முன்னேற்றத்திற்கு சொல்லி வருக்கிறார்கள்.
வரையறை செய்யப்பட்ட ஊதியம் எவ்வகையில் நன்மையாக அமையும்? ஊழியர்கள் தங்கள் உழைப்புக்கு தகுந்த குறைந்தபட்ச வருமானத்தை பெற முடியும். வாழ்க்கைக்கான அடிப்படைத் தேவைகள் பூர்த்தி செய்ய உதவும். இதனால் வறுமையின் பிடியில் இருந்து ஏழைத் தொழிலாளர்கள் விடுபட முடியும்.
வரையறை ஊதியம் வேலை செய்யும் தனி நபருக்கு மட்டும் தான் நன்மையாக அமைகிறதா? நிச்சயமாக இல்லை. ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் அது வகை செய்கிறது. மக்களின் வாங்கும் சக்தி அதிகரிக்கும் போது வியாபாரம் அதிகரிக்கச் செய்யும். அரசுக்கு வரியும் அதிகரிக்கும். அது போக தகுந்த ஊழியம் பெரும் மக்கள் வெறுமனே அரசின் உதவிக் கரத்தை வேண்டி நிற்க அவசியமற்று போகும். நாட்டின் நிதியை சரியான முன்னேற்றத்துக்கு வெவ்வேறு துறைகளில் பயன்படுத்த அரசுக்கும் இது வடிகாலாக அமையும்.
நமது நாட்டில் ஒவ்வொரு முறையும் சம்பள உயர்வை பற்றிய விவாதங்கள் எழும்பும் போதும் அது அரசு ஊழியர்களுக்கு சாதகமாக அமைவதை காண முடிகிறது. இது வருத்தத்திற்குரிய ஒன்று. தனியார் துறை மீது கவனம் செலுத்தாத மெத்தன போக்கையே இது குறிக்கிறது. அரசின் இம்மாதிரியான முடிவுகளால் ஒரு சாரர் மட்டுமே பயனடைகிறார்கள்.
இதில் நாம் கவனிக்க வேண்டிய ஒன்று. தனியார் மற்றும் அரசு துறை இரண்டுமே நாட்டின் முன்னேற்றத்திற்கு பங்கு வகிக்கிறது. தனியார் துறை உயர்ச்சியடையும் போது அரசு துறைக்கும் அது நலம் செய்கிறது. அரசின் நல்லாட்சியானது தனியார் துறை முன்னேற வழி செய்கிறது. அப்படி இருக்க ஒரு கண்ணில் விளக்கெண்ணை ஊற்றிக் கொண்டு பார்க்கும் முறை தகாத ஒன்றாகும்.வரையறை ஊதியம் அமல் செய்துவிட்டால் மட்டும் பிரச்சனைகள் தீர்ந்துவிடுமா என கேட்கலாம்..? அதன் முறையான செயல்பாடும் அவசியமாகிறது. சட்டதிட்டங்களும் மக்களுக்கு வேலை வாய்ப்புகளும் சரியாக அமைந்திடல் வேண்டும். அதுவே ஏழை தொழிலாளர்கள் பிரச்சனையை தீர்க்க உதவும்.
முறையான ஊதியம் பெறும் மக்களின் வாங்கும் சக்தி அதிகரிக்கும் என்பதை ஆரம்பத்தில் பார்த்தோம். இதனால் வெளியீடுகளுக்கும் அதிக வரவேற்பு ஏற்படும். அதிக வெளியீடுகள் செய்ய மக்களுக்கு புதிய வேலை வாய்ப்புகளும் உருவாக வகை செய்கிறது. முறையான ஊதியம் பெறும் மக்கள் மன நிறைவோடு வேலையில் ஈடுபடுவார்கள். தொடர்ந்தாற் போல் இது வெளியீட்டை அதிகரிக்க உதவி புரியும்.
அதிகபடியான முதலாளிகள் அல்லது முதலீட்டாளர்கள் குறைந்த வருமானமே அவர்களின் வியாபார முன்னேற்றத்துக்கு வழி செய்வதாக எண்ணம் கொண்டுள்ளார்கள். குறைந்த வருமானம் அதிக லாபத்தை கொடுப்பதாக கருத்துகிறார்கள். இது குறுகிய சிந்தனையின் அடிப்படை முடிவுகள். குறைந்த வருமானத்தால் கைதேர்ந்த தொழிலாளிகள் அதிக நாட்கள் ஓரிடத்தில் வேலை செய்ய முனைவதில்லை. புதியவர்கள் வேலைக்கு அமர்த்தப்படும் போது அவர்கள் வேலை பழகும் காலம் உட்பட வெளியீடுகளில் பாதிப்பு ஏற்படுகிறது.வரையறை ஊதியத்தை அமல் செய்ய சரியான கணக்கு முறைகள் அவசியம். தவறான கணக்கெடுப்பின் அடிப்படையில் அதிகபடியாகவோ அல்லது குறைவாகவோ ஊதியம் கொடுக்கப்பட்டால் பக்க விளைவுகளையே நாம் சந்திக்கக் கூடும். மலேசியாவில் இதற்கான முயற்சிகள் எவ்வகையில் இருக்கின்றன என சரிவர தெரிவதில்லை. ஊடகங்கள் இச்செய்திகளை மக்களிடம் சரிவர சமர்ப்பிக்க தவறி இருக்கின்றன என்றேக் கூற வேண்டும்.
நம் நாட்டில் அன்னிய தொழிலாளர்களின் வருகையும் வரையறை ஊதிய அமலாக்கத்திற்கு முட்டுக் கட்டையாக அமைந்துள்ளது. ‘நீ இந்த வேலையை செய்யாவிட்டால் பரவாயில்லை, அதற்காக ஆயிரம் பேர் காத்திருக்கிறார்கள்’ எனும் நிலை தான் இங்கு அதிகமாக இருக்கிறது. கொடுப்பதை வாங்கிக் கொண்டு அமைதியாக இருந்துவிடுவதை உசிதமாக கருதுகிறார்கள் நம் மக்கள். காரணம் என்ன? அன்னிய தொழிலாளர்கள் அதே வேலையை குறைந்த வருமானத்தில் செய்து கொடுக்க எந்நேரமும் தயாராக இருக்கிறார்கள்.
நமது அரசு, தொழிலாளர்கள் விடயத்தில் கவனம் செலுத்த தவறி இருக்கிறதா அல்லது கண்டும் காணாமல் இருக்கிறதா எனும் நிலையே நீடிக்கிறது. இதை இடித்துரைத்து கேட்பார் இல்லை. காரணம் அச்சமே.
நம் நாட்டில் வருமையின் பிடியில் சிக்கி இறந்ததாக தகவல்கள் இல்லை ஆனால் மாசக் கடைசியில் செலவுகள் கை கடிக்க சீனரின் நகை அடகுக் கடையில் வரிசையில் நிற்போர் அதிகம். இதில் அதிகமானோர் நம் இந்தியர் என்பது வருத்தமான ஒன்றே. கோவில் உடைப்புக்கு போராடும் மக்கள் தம் வாழ்வியல் முன்னேற்றத்திற்கு எவ்வகையில் போராடுகிறார்கள் என்பன வினாக் குறியே.
(பி.கு: அநங்கம் சிற்றிதழில் வெளிவந்த எனது கட்டுரை. இதழ் 4, மே 2009, பக்கம் 40)
Monday, May 11, 2009
கொசுறு 11-05-2009
*********
சிலர் என்னிடம் அடிக்கடி கேட்கும் கேள்விகளில் ஒன்று. எப்படி உனக்கு எழுத நேரம் கிடைக்குது? என்ற கேள்வி தான்.
அன்று ஒரு பிறந்த நாள் நிகழ்ச்சிக்கு போயிருந்தேன். புத்தகங்கள், வலைப்பதிவுகள் என பேசிக் கொண்டிருந்த போது புதிதாக அறிமுகமான ஒருவர் எப்படி உங்களுக்கு புத்தகம் படிக்கவும் எழுதவும் நேரம் கிடைக்கிறது என கேட்டார். அவர் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தார். உங்களுக்கு எப்படி இப்போது டி.வி பார்க்க டைம் கிடைச்சுச்சு? என கேட்டுவிட்டேன். அவர் முகம் சுருங்கிப்போனது. பேச்சைக் குறைத்துவிட்டார். ஏன் டா இப்படி கேட்டுத் தொலைத்தோம் என்றாகிவிட்டது. :(
*********
நா.பார்த்தசாரதியின் பொன்விலங்கு மற்றும் குறிஞ்சி மலர் போன்ற நாவல்களை படித்தேன். பொன்விலங்கில் ஒரு நெடுங்கவிதை இருக்கும். நவநீத கவி எழுதியதாக குறிப்பிட்டிருப்பார் ஆசிரியர். நவநீத கவி யாரென உங்களுக்கு தெரியுமா? எனக்கும் தெரியாது.
பேராசிரியர் பசுபதி ஐயாவிடம் கேட்டிருந்த போது நவநீத கவி நா.பவின் பல புனைப் பெயர்களின் ஒன்றென்றும் அவருடைய கவிதைகள் மணிவண்ணன் கவிதைகள் எனும் தொகுப்பில் வந்துள்ளதாக சொன்னார். மணிவண்ணன் நா.பாவின் இயற் பெயராகும்.
*********
சமீபத்திய படங்கள் ஏதும் பார்க்கவில்லை. ஆனந்த தாண்டவம் எனும் படம் திரைகண்டுள்ளது. சுஜாதாவின் பிரிவோம் சந்திப்போம் நாவலை ஒட்டி எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் இப்படம் திரையில் மாறுபாடுகள் கொண்டு சுவாரசியமற்று இருப்பதாக விமர்சனங்கள் கண்டேன்.
தற்சமயம் சுஜாதாவின் பிரிவோம் சந்திப்போம் படித்துக் கொண்டிருக்கிறேன். இன்னும் கொஞ்சம் பாக்கி இருப்பதை முடித்துவிட்டு படம் பார்க்கலாம் எனும் எண்ணம். :)
*********
சிலர் நீக்ரோ, வங்காளி போன்ற சொற்களை எழுதும் போது பயன்படுத்துகிறார்கள். இற்சொற்கள் ஐரோப்பிய கருப்பினத்தவரையும், சீக்கியர்களையும் தாழ்வுபடுத்தும் சொற்களென கேள்விப்பட்டிருக்கிறேன்.
மலேசியாவில் தமிழர்களை கிலிங் என இழிவாக பேசும் நிலை உண்டு. ஆரம்ப காலத்தில் கலிங்கத்தில் இருந்து தமிழ் மக்கள் இங்கு வந்ததால் கலிங்கா என்பது கிலிங் என மாறியுள்ளது.
இந்தோனேசியாவின் சுமத்ரா, ஜாவா போன்ற இடங்களில் இப்பெயரிட்டு அழைப்பினும் இழிவுபடுத்தும் நிலை அங்கில்லை என சொல்லப்படுகிறது. அதை பற்றிய விளக்கமான செய்தி டாக்டர் ஜெயபாரதியின் இணைய தளத்தில் உள்ளது.
********
சுஜாதாவின் ஹைக்கூ பற்றிய புத்தகம் ஒன்றில் படித்த ஹைக்கூ மிக கவர்ந்தது. ஹைக்கூ என்பதை தமிழில் துளிப்பா அல்லது நறுக்குகள் என குறிப்பிடுகிறார்கள்.
மண்ணெண்ணெய் விளக்கில்
மாணவன் படிக்கிறான்
கம்பியூட்டர் சயின்ஸ்
********
கடற்கன்னிகள் இது சின்ன வயதில் கார்ட்டூன்களில் பார்த்தது. இது உண்மையா இல்லையா என்பது கேள்விக் குறியே.
முன்பு பங்கோர் தீவுக்கு போயிருந்த சமயம் அங்குள்ள மீனவர் ஒருவரிடம் இதைப் பற்றி கேட்டேன். அவர்களுக்கு இதில் நம்பிக்கை உண்டு. சிலர் கண்டிருப்பதாகவும். ஆபத்து வேளைகளில் அவை உதவக் கூடும் என்பதால் மீனவர்கள் ஒன்றும் செய்ய மாட்டார்கள் என்றும் சொன்னார்.
அந்த தீவில் கடற்கன்னியின் சிலை ஒன்று இருக்கும். இதில் எனக்கு நம்பிக்கை குறைவு. இணையங்களில் பாதி மனித உடல் (அப்நார்மலாக உள்ளது) பாதி மீன் உடல் கொண்ட படங்கள் சில பார்த்திருக்கிறேன். கிராப்பிக்ஸ் வேலைபாடுகளாக இருக்கக் கூடுமா?
சுபாஷினி அவர்கள் எழுதிய கடற்கன்னிகள் பற்றிய பதிவு இங்கே உள்ளது :
*************
உலகு வாழ் அன்னையர்கள் அணைவருக்கும் எனது அன்பான அன்னையர் தின வாழ்த்துக்கள்.
Wednesday, May 06, 2009
சுண்டக்கஞ்சி with வால்பையன்
வால்: அண்ணே நான் அவ்வளவு வொர்த் இல்லைணே!
பலமான பார்வையெல்லாம் பெரிய வார்த்தைண்ணே!
யாருடா இவன் குரங்கு சேட்டை பண்றான்னு நாலு பேரு பாக்குறாங்க! பண்ற சேட்டைக்கு ஏத்தா மாதிரி அடி விழுது!
கே: பதிவெழுதுவதனால் முன், பின், பக்க விளைவுகள் ஏதும் திரைக்குப் பின்னால் உள்ளனவா?
வால்: ஆரம்ப காலங்களில் பதிவெழுதுவதற்காக நிறைய மெனக்கெட வேண்டியிருந்தது! எல்லாவற்றிலும் பதிவுக்கான கருவை தேடி அதை முழுமையாக ரசிக்க மறந்தேன்! மன உளைச்சலுக்கு ஆளானேன்! இது என்னடா வம்பா போச்சுன்னு பதிவை குறைச்சு பின்னூட்டம் மட்டும் போட்டு கொண்டிருக்கிறேன்! நிம்மதியாக இருக்கிறேன்.
கே: தமிழ்மண நட்சத்திர பதிவராக இருந்த அனுபவத்தைப் பற்றி ஓரிரண்டு வரிகள்.
கே: ஏகப்பட்ட பதிவுகளில் உங்களின் கலக்கலான பின்னூட்டங்களைக் காண முடிவதாக பதிவுலக மக்கள் திருவாய் மலர பேசிக்கொள்கிறார்கள். பின்னூட்டங்களைப் பற்றிய உங்கள் பார்வை என்ன?
கே: வாசகர்கள் இல்லாமல் ஒரு பதிவர் வெளிச்சத்துக்கு வந்துவிடுவதில்லை. கருத்துகளை பகிர்ந்துக் கொள்ள நினைக்கும் ஒரு சில வாசகர்களே பின்னூட்டமிடுகிறார்கள். சில பதிவர்களிடையே அதற்கான தகுந்த மறுமொழி இல்லாதது பற்றி என்ன நினைக்கிறீர்கள்.
வால்: பதிவுலகம் கண்ணாடி மாதிரி நாம என்னை கொடுக்குறோமோ அது தான் திரும்ப கிடைக்கும்! சிலர் வாங்கிட்டு திரும்பி தரமாட்டாங்க! அவுங்க விதிவிலக்கு லூஸ்ல விடுங்க! அதுக்காக பின்னூட்டம் இடுவதையே பாவ செயல்னு ஒதுங்கிறாதிங்க! பின்னூட்டம் சுவாரஸ்யமாக இருந்தால் மற்ற நண்பர்கள் கவனிப்பார்கள்!
கே: பின்னூட்டங்களை சுயசொறிதல் என கருதுகிறீர்களா?
வழக்கம் போல கலக்கல் அசத்தீடிங்க சூப்பர்சான்சே இல்ல :) என டெம்ப்ளெட் பின்னூட்டங்கள் இடத்தை அடைக்கின்றன! கருத்துகளத்தில் ஜால்ரா சத்தம் தான் அதிகமா கேட்குது!
கே: உன்னை யாரும் வெத்தலை பாக்கு வச்சி அழைக்கல. பிடிக்கலனா என் பதிவ படிக்காதே என சொல்பவர்களைப் பற்றி.
கே: சாருவின் பதிவை தொடர்ந்து வாசித்து வருகிறீர்கள். இதனால் ஒவ்வொரு முறையும் சரக்கடிப்பது வேஸ்ட் ஆகிவிடுவதாக சொல்கிறீர்கள். அப்படி என்றால் சரக்கடிக்காமல் அவர் பதிவுகளை படிக்க வேண்டும் என சொல்கிறீர்களா?
கே: நான் எழுதும் வரை தான் இந்த எழுத்து எனக்கு சொந்தம் எழுதிய பிறகு யார் வேண்டுமானாலும் விமர்சிக்கலாம் என சொல்லும் சாரு, சில விமர்சனங்களை ஏற்றுக் கொள்ளமுடியாமல் கபடியாடிவிடுகிறாரே?
வால்: சாரு தன்னம்பிக்கையை தாண்டி தலைகண லெவலுக்கு சென்று விட்டார். அவரை விமர்சிப்பவர்கள் சாத்தான்களின் தூதுவர்கள் ரேஞ்சுக்கு தான் அவரது பேச்சு இருக்கிறது. ஆனால் இவர் மட்டும் சகட்டு மேனிக்கு அனைவரையும் விமர்சிப்பார்! இதில் ஆச்சர்யம் என்னவென்றால் அவரது சிஷ்ய கோடிகளும் அதே போல் இருப்பது
கே: திரைப்படம் பார்ப்பது எப்படி என பதிவுகள் வந்திருக்கும் பட்சத்தில் உலக திரைப்படம் பார்ப்பது எப்படி என்ற ஒரு பதிவை உங்களிடம் இருந்து கோடான கோடி மக்கள் எதிர்ப்பார்க்கிறார்கள். எழுதினால் என்ன?
கே: சரக்கடித்துவிட்டு பதிவிடுவது நல்லதா இல்லை பின்னூட்டமிடுவது நல்லதா?
கே: சமீப காலமாக புதிய பதிவர்கள் அதிகரித்து வருவதப் பற்றி?
வால்: வாசிப்பனுபவம் உயர்ந்து கொண்டே வருவது நல்ல ஆரோக்கிய சூழல் தானே! வரவேற்கிறேன்! அனைவரையும்
கே: தமிழ்மண திரட்டியில் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒரு சில தலைப்புகளுக்கே மவுசு இருப்பதாக தெரிகிறது. சலிப்படைந்தது உண்டா?
கே: குறுகிய காலத்தில் தமிழிஷின் வெற்றி பற்றி?
கே: நெல்லைத் தமிழ் திரட்டியின் நிர்வாகி நீங்கள் என பேசப்படும் கிசுகிசுக்களைப் பற்றி?
வால்: ஆழ்ந்து நோக்கினால் தனிமனித தாக்குதலுக்கு ஆரம்ப காரணம் தனிமனித துதி என்பது தெரியும்! யாரும் யாரையும் வரும்போதே எதிரியாக பார்ப்பதில்லை! ஒருவருடைய தனிமனித துதி, கருத்து வேறுபாடுகளால் வாதம் ஏற்படுகிறது! தனிமனித துதியை ஆதரிப்போர் பெரும்பாலும் குறுகிய மனம் படைத்தவர்களாக தான் இருக்கிறார்கள் . அதனாலேயே அவர்களது வாதம் விவாதமாகி பாதியில் முடக்கு வாதமாகி அவரது ப்ளாக்கில் இவரை திட்ட, இவரது ப்ளாக்கில் அவரை திட்ட, அவருக்கு சில ஆதரவு, இவருக்கு சில ஆதரவு என பல குழுக்கள் இன்று தமிழ் வலையுலகில் இருக்கின்றன! (விதிவிலக்குகளும் உண்டு)
கே: சில பதிவர்கள் யாருக்கும் பின்னூட்டம் போடுவதில்லை ஆனால் ஏன் எனக்கு நீ பின்னூட்டம் போடவில்லை என கேட்பது பற்றி?
கே:
//நீ யாரடா ஒரு எழுத்தாளனுக்கு ஆர்டர் போட! கேரளாவில் போய் பார் எல்லாம் எப்படி புட்டு சுடுறாங்கன்னு!
அப்படின்னு தேவையற்ற வார்த்தைகளை இடையில் சேர்த்து பெருக்கி நாலு பக்கத்துக்கு ஒரு கட்டுரை வரும்
வராட்டி ஏண்டா நாயேன்னு கேளுங்க!//
இந்த யுக்தியை எப்படி கண்டு பிடிச்சிங்க? :)
கே: விரும்பிப் படிப்பது?
வால்: தமிழ் வலைப்பூக்கள்
கே: பிடிக்காதது?
வால்: தற்புகழ்ச்சி
கே: உங்கள் பார்வையில்:
அதிஷா- எழுத்தில் திரிஷா
குசும்பன் - எழுத்து கலைவாணர்
லக்கிலுக் - நகைச்சுவையாக எழுதியவர்(தற்பொழுது தி.மு.க. கொள்கை பரப்பு செயலாளர்)
கோவி.கண்ணன் - பகுத்தறிவு கருத்து கந்தசாமி!
வடகரை வேலன் - மரியாதைகுறிய அண்ணாச்சி
கார்க்கி - பெண் ரசிகைகளை ஏராளமாக கொண்டவர்(கனவில் மட்டும்)
கே: பதிவர் சந்திப்பு?
கே: பதிவுலக சாதனை?
வால்: ஏராளமான நண்பர்கள்
கே:பிடித்த எழுத்தாளர்?
வால்:ஒன்றை போல் ஒன்று இருப்பதில்லை! யாரை சொல்ல!
(கேள்வியும் பதிலும் நீங்களே)
அய்யனார்
குசும்பன்
ச்சின்னபையன்
மற்றும் உங்களை
(பி.கு: பேட்டி கொடுத்த வால்பையனுக்கு நன்றி. அடுத்தபடியாக ஃபிட்டுபடம் with அதிஷா எனும் பதிவை விரைவில் எதிர்பாருங்கள். அதிஷாவிடம் கேட்க நினைக்கும் கேள்விகளை எனக்கு மின்மடலில் அனுப்பி வைக்கலாம்).
Monday, May 04, 2009
சயாம் மரண இரயில்- புத்தக விமர்சனம்
ஆசிரியர்: சீ.அருண்
நயம்: வரலாற்று நூல்
பதிப்பகம்: செம்பருத்தி பப்ளிகேசன். கோலாலம்பூர்.
இப்புத்தகத்தின் தலைப்பு என்னை இன்னமும் சிந்திக்க வைக்கிறது. அவ்வளவு சுலபத்தில் மறக்கக் கூடிய ஆட்களா நம்மவர்கள். மறக்கப்பட்ட வரலாறு என்பதை ஆசிரியர் எதனை முன்னிட்டு சொல்கிறார் என்பது புரியவில்லை. அடிப்படையில் இது மறைக்கப்பட்டு வரும் வரலாறு எனக் கூறுவது தகும் என்பது என் கருத்தாகும். இதற்கு காரணம் உண்டு. முன்பு படித்த ஒரு மலாய் புத்தகத்தில் அதிகம் இறந்தவர்கள் மலாய்காரர்கள் தாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. நல்ல வேளை எனக்கு சீனம் படிக்க தெரியாது. அதில் உள்ள கூத்து எப்படியோ?
சிறிய வரலாற்று புத்தகம். மிகுதியான தகவல்கள். ஒவ்வொரு வரியிலும் காயங்கள் ஆறாமல் இரணமாக்கிக் கொண்டிருக்கின்றன. மன வலியோடுதான் படிக்க முடிகிறது. இறந்தவர்கள் எண்ணிக்கையானது ஒவ்வொரு தண்டவாள கட்டைகளுக்கடியிலும் ஒரு பிணம் எனும் கணக்காகிறது என சொல்லப்படுவது கொடுமையினும் கொடுமை.மலாயாவில் தோட்டங்களில் வேலை செய்வோரை ஏமாற்றி இட்டுச் செல்கிறார்கள். சயாம் சென்றால் நன்கு சம்பாதிக்கலாம். வேலை முடிந்ததும் தாயகம் திரும்பிவிடலாம் என ஆசை மொழி கூறி தலைக்கு ஒரு டாலருக்கு ஒவ்வொரு தமிழனும் விற்கப்படுகிறான். இதில் வருத்தம் என்னவென்றால் அவ்வாறு ஆள் சேர்ப்போரும் தமிழரே. அக்காலத்தில் மெத்த படித்த யாழ் தமிழர்களே மலாயாவின் மேல்மட்ட தொழில்களில் இருந்தார்கள்.
பிரிட்டிஷ் காலத்திலும் சரி ஜப்பானியர் காலத்திலும் சரி அரசு நிர்வாகங்களில் இவர்களே அதிகம் இருந்துள்ளார்கள். மெத்த படித்த தமிழன், தோட்டத்தில் படிக்காமல் கடைநிலை தொழிலாளர்களின் அறியாமையை தனக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொண்டர் என்றே சொல்ல வேண்டும்.
புத்தகத்தின் சில இடங்களில் ஆரம்பத்தில் சொல்லப்பட்ட கருத்து மீண்டும் மீண்டும் இரண்டு மூன்று இடங்களில் வந்துள்ளதை தவிர்த்திருக்கலாம். ஜப்பானியர் கொடுமைகள் சொல்லி மாளாது. பிற்பகுதியில் ஜப்பானியர் ஆட்சி முடிவுற்று சயாமில் இருந்து திரும்பியவர்களின் பேட்டிகள் நெஞ்சை கனக்கச் செய்கிறது.
இந்தியாவில் பிரிட்டிஸின் ஆட்சியை ஒடுக்க இப்பாலம் கட்டப்பட்டதாக சொல்லப்படுகிறது. இதில் ஜப்பானியர்கள் நேதாஜியை பயன்படுத்திக் கொண்டார்களா இல்லை நேதாஜி ஜப்பானியர்களை பயன்படுத்திக் கொண்டாரா என்பது புரியாத புதிரே. அழிவு என்னமோ செத்து மடிந்த தமிழினத்துக்கு தான். நேதாஜிக்கு இக்கொடுமைகள் தெரியாமல் இருந்திருக்குமா என்ன? சிந்திக்க வேண்டிய ஒன்று.
பி.கு: 'சயாம்-பர்மா மரண இரயில் பாதை:மீட்கப்பட்ட வரலாற்றின் உயிர்ப்பு' என்னும் நூலினைப் பெற்றிட கீழ்க்காணும் முகவரியில் தொடர்பு கொள்க.
பணத்தை வங்கி கணக்கில் போட்டுவிட்டு தொடர்பு கொள்க.
S.ARUNASALAM,
MAYBANK : 105037363735
Tel: +6012 300 2911
கலோலையும் அனுப்பலாம். நன்றி.
புத்தகம் வாங்க நினைக்கும் வெளிநாட்டு அன்பர்கள் என் மின்மடலில் தெரிவிக்கலாம். உங்கள் விண்ணப்பம் ஆசிரியரிடம் சமர்ப்பிக்கப்படும். viknesh2cool@gmail.com
==================================================
ஆசிரியர்: ஆர்.சண்முகம்
நயம்: வரலாற்று நாவல்
பக்கம்: 436
பதிப்பகம்: தமிழோசை பதிப்பகம், கோவை 641 012, தமிழ்நாடு.
வரலாற்றில் சொல்லப்பட்ட விடயங்கள் அணைத்தும் நாவலில் சுவை குன்றாமல் எழுதி இருக்கிறார். ஒவ்வொரு பக்கத்திலும் விறுவிறுப்பிற்கு குறைவே இல்லாமல் நகர்கிறது.
இப்புத்தகத்தை பற்றி நண்பர் ஜவஹர் முன்னமே கூறி இருக்கிறார். நாவலாசிரியரோடு திரு.ஜவஹர் அவர்களுக்கு நல்ல நட்பு. புத்தகத்தின் முன்னுரையில் இந்நூல் உருவாக மூல காரணம் ஜவஹர் என்பதை குறிப்பிட்டுள்ளார்.
ஜப்பானியர் காலத்தில் சாப்பாட்டுக்கும் துணிக்கும் பஞ்சப்பட்டு மரவல்லி கிழங்கை உணவாகவும் கோணி பையை உடையாகவும் தரித்து அலைந்தோர் பலர். உடுத்த உடையின்றி வீட்டில் முடங்கி கிடந்த பெண்களின் நிலை சொல்லப்படாத கருப்புச் சரித்திரம் எனக் கூறல் தகும்.
ஒரு இளைஞன் தன் பொருட்களை எடுத்துக் கொண்டு இருட்டில் நடக்கிறான். எங்கு செல்கிறான்? சயாமிற்கு. ஆம், இப்படி தாமாகவே முன் வந்து சயாமிற்கு சென்றவர்களும் இருக்கவேச் செய்கிறார்கள். காரணம் வறுமை.
மாயா கதையின் நாயகன். தந்தையை ஜப்பானியன் சயாமுக்கு பிடித்துக் கொண்டு போய்விடுகிறான். தாய் மிகச்சிரமப்படுகிறாள். வேறொரு ஆணை இணைத்துக் கொள்ள மாயாவிடம் அனுமதி கேட்கிறாள். அவனால் பதில் பேச முடியவில்லை. தன் தந்தையைத் தேடி சயாமிற்கு பேகிறான்.
இது முதல் அத்தியாய செய்தி. அதன் பின் சயாம் பயணத்திலும், இரயில் பாதை கட்டுமான இடத்திலுமே முழுக்க முழுக்க கதை நகர்த்தப்படுகிறது. காட்சி விஸ்தரிப்புகளை கதைப் போக்கில் மிக இலகுவாக மனதில் பதிய வைக்கிறார் ஆசிரியர்.
அடுத்து என்ன நடந்துவிடுமோ எனும் அச்சம் நம் மனதில் ஊன்றிப் போகிறது. சுருங்கச் சென்னால் நாமும் இந்நாவலோடு வாழ்ந்துவிடுகிறோம். மாயா, அங்சானா, வேலு போன்ற காதாபாத்திரங்கள் நம்மை சுற்றி வாழ்வதாகவே உணர முடியும். சயாம் மரண இரயில் சொல்லப்படாத மௌன மொழிகளின் கண்ணீர் எனும் நாவல் நிச்சயம் நீங்கள் படிக்க வேண்டிய பட்டியலில் சேர்க்க வேண்டிய ஒன்று.
மலேசியாவில் இந்நாவல் கிடைக்க சற்றே சிரமம் இருப்பதை உணர்கிறேன். கோலாலம்பூரில் சுலபமாக கிடைக்கிறதா என தெரியவில்லை. இதன் இரண்டாம் பதிப்பு தமிழகத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தமிழக அன்பர்கள் சுலபமாக பெற்றுக் கொள்ள முடியும் என கருதுகிறேன்.