Tuesday, March 24, 2009

உயிர் பறிக்கும் பாம்புகள்!!

உலகில் அதிகமாக பாம்பு கடித்து இறந்து போவோர் எந்த பகுதியில் வாழ்பவர்கள் என சிந்தித்து இருக்கிறீர்களா? தென் அமெரிக்க அமசோன் காடுகளாக இருக்கக் கூடும் என சிலர் கருதலாம். அமசோன் உலகில் தொன்மையான காடுகளில் ஒன்றாகும். ஆயிரக் கணக்கான விஷ ஜந்துக்கள் அக்காடுகளில் உள்ளன. இருப்பினும் அமெசோன் என்பது சரியான பதிலாகாது.
தென் ஆசிய பகுதியை சேர்ந்த மக்களே அதிகமாக பாம்புக் கடிக்குட்படுகிறார்கள். இ்து தொடர்பாக 68 நாடுகளில் ஆய்வுகள் செய்யப்பட்டன. இதன் அடிப்படையில் ஆசியாவில் மட்டும் 421000 பேர் ஆண்டுதோறும் சராசரியாக பாம்பு கடிக்கு ஆளாவதாகக் கூறப்படுகிறது. அதில் சராசரியாக 20000 பேர் இறந்துப் போகிறார்கள் என்பது மேலும் அச்சத்தைக் கொடுக்கும் செய்தியாக இருக்கிறது.
மக்கள் தொகை மிகுந்து காணப்படும் நாடுகளில் ஒன்று இந்தியா. இந்தியாவில் சராசரியாக ஆண்டுக்கு 80000 பேர் பாம்புக் கடிக்கு ஆளாவதாக தகவல் பதிவு செய்யப்படுகிறது. அதில் 11000 பேர் இறந்துப் போகிறார்கள் என்பது குறிப்பிட தக்கது.
அடுத்த படியாக இருக்கும் நாடு இலங்கையாகும். இலங்கை மக்கள் ஆண்டுக்கு சராசரியாக 33000 பேர் பாம்புக் கடிகளுக்குட்படுகிறார்கள். அதில் வியகத்தக்க செய்தி என்னவென்றால் பாம்புக் கடித்து இறப்பவர்களில் ஆண்களே அதிகம் இருக்கிறார்கள். பெண்களைக் காட்டினும் ஆண்களே வேலைகளில் அதிகம் ஈடுபடுவது இதற்குக் காரணமாக இருக்கக் கூடும்.
சிலருக்கு என்ன பாம்பு கடித்தது என்று கூட சரியாக தெரியாமல் போய்விடுகிறது. இதனால் பாம்புக் கடி சிகிச்சைக்கு தக்க மேம்பாடுகளை சரிவர செய்ய இயலாமலும் போகிறது. அதே வேலையில் சிகிச்சை அளிப்பதிலும் சில சிக்கல்கள் ஏற்படுகின்றனவாம்.
உலகில் ஏறக் குறைய 3000 வகையான பாம்புகள் இருக்கின்றன. அவற்றில் 600 வகை பாம்புகள் நச்சுத் தன்மைக் கொண்டவையாகும். அண்டார்டிகா பகுதிகளில் பாம்புகள் வசிப்பதில்லை. அப்பகுதியின் சீதோசன நிலை பாம்புகள் வாழ உகந்ததாக இல்லாததே அதற்குக் காரணமாகும். அண்டார்டிகா பகுதிகளில் அதீத குளிர் இருக்கும். பாம்புகளும் குளிர் இரத்தம் கொண்ட உயிரனமாகும். இதனால் பாம்புகள் அப்பகுதிகளில் இருப்பதில்லை.

பாம்புகள் பல்லி இனத்தைச் சேர்ந்தவை என்றும் பின்னாட்களில் மாற்றங்களில் கால்கள் இல்லாமல் பாம்பாக மாறி இருக்கக் கூடும் என சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
பாம்புகளில் மிகப் பெரிதென கருதப்படுவது பச்சை நிற அணக்கொண்டாவாகும். இது 8.8மீட்டர் நீளமும், 30 செண்டி மீட்டர் அகலமும் கொண்டது. இவை 227 கிலோ வரையினும் எடைக் கொண்டவையாக இருக்கும். இவ்வகைப் பாம்புகள் அமசோன் மற்றும் ஓரினகோ நதிக் கரைகளில் காணப்படுகின்றன.
ஓரிரு ஆண்டுகளுக்கு முன் பர்போடோஸ் தீவினில் உலகிலேயே சிறிய வகை பாம்பினை அடையாலம் கண்டார்கள். அவை மண்புழுவை விடவும் அளவில் சிறியவையாகும். அதிகபட்சமாக 10 செண்டிமீட்டர் வரையினும் வளரும் தன்மைக் கொண்டவை. சிறு பூச்சிகளை உண்டு வாழும் இப்பாம்பினம் நச்சுத் தன்மை இல்லாதவை எனக் கூறப்படுகிறது.
பாம்புகளில் ஆண் பெண் வித்தியாசங்களைக் கண்டறிவது சிரமமாகும். சூடு அதிகரிக்கும் வேலைகளில் பாம்புகள் சுறுசுறுப்பாக இயங்கத் தொடங்கும். சில பாம்புகளின் நச்சில் மருந்துகள் செய்கிறார்கள். பலருக்கும் பாம்புகளைப் பிடிக்காது. அவற்றை மனிதனின் உயிருக்கு ஆபத்தை தரும் உயிரினமாகவே காண்கிறார்கள். இருப்பினும் அவற்றை செல்லப் பிராணியாக வளர்க்கும் மனிதர்களும் இருக்கவே செய்கிறார்கள்.

Monday, March 16, 2009

அரசியல், பொருளாதாரம் & அதிகரிக்கும் குற்றச்செயல்களும்

கபடியாட்டம் கொண்ட அரசியலும் இழுத்துப் பறித்துக் கொண்டிருக்கும் பொருளாதாரமும் என நாட்டின் நிலை தடுமாறிக் கிடக்கின்றது. ஆட்சிக்கு பங்கம் வந்துவிடுமோ எனும் நோக்கில் பொருளாதார நிலையை மறைத்து வைக்கவே முற்படுகிறார்கள் புத்திசாலி ஆட்சியாளர்கள். முழு பூசணியை பிடி சோற்றில் மறைப்பது சாத்தியமாகுமா? மக்களுக்கு தெரிய வேண்டியவை தெரிந்து தானே ஆகும்.

அனேக மலேசியர்களும் நம் நாட்டின் இன்றய நிலை என்ன என்பதை அறிந்து தான் இருக்கிறார்கள். இந்நிலையில் மக்கள் தங்களை தயார் படுத்திக் கொள்ள ஆட்சியாளர்களின் முனைப்பு செலுத்துவது அவசியமாகும். அதை விடுத்து நீ கள்ள ஆட்டம் ஆடுகிறாய் நானும் கள்ள ஆட்டம் ஆடுவேன் என அரசாங்க பணத்தை வாரி இறைத்துக் கொண்டிருந்தால் கழுதைக் கெட்டு குட்டிச் சுவராகத்தான் போகும்.

பெரிய நிறுவனங்களே வியாபரத்தை வெகுவாக குறைத்துக் கொண்டு வருகின்றன. சைட் டிஸ் இல்லாமல் சரக்கடிப்பதைக் கூட ஏற்றுக் கொள்ளலாம். மிக்ஸிங் செய்துக் கொள்ள பச்சை தண்ணீரைக் கூட கொடுக்க முடியாது என சொன்னால் முறையாகுமா?தொழில்நுட்பம் சார்ந்த நிறுவனங்களில் பணி புரிவோர் நிலை இது தான். வேலை இல்லாமல் இருந்தாலும் பணியாள் கூடுதல் நேரம் வேலை செய்தால் கண்டுக் கொள்ளாமல் இருந்த நிலை இன்றில்லை. மாதத்திற்கு 12 நாட்கள் மட்டுமே வேலை கொடுக்கிறார்கள். இரண்டு பொது விடுமுறை இரண்டு நாள் கட்டாய ஓய்வு எடுக்க வேண்டுமாம். தேவைப்பட்டால் ஒரு மாதம் அடைக்கக் கூடும் என்றும் பூடகமான அறிவிப்புகள் வேலை செய்வோரின் வயிற்றில் புளியைக் கரைத்துள்ளது.

சாப்பாட்டுக்கு வழி இன்றி உயிர்விட்ட கதைகள் ஏதும் எழும்பாததால் மாலேசிய பொருளாதாரம் இன்னமும் தேக்கு மரம் போல் கின்னென்று நிற்பதாக அரசு ஊடகங்கள் தெரிவிக்க முற்படுகின்றன போலும். பொருளாதாரம் நிலைகுலையும் சமயங்களில் பலமான அடிபடுவது தெழிற்சாலைகளில் வேலை செய்பவர்கள் தான்.

1997/98 பொருளாதார நெருக்கடியின் சமயம் இதை கண்டிருக்கிறேன். ஆனால் அச்சமயம் இருந்த ஆட்சியில் மக்களுக்கு பயம் ஏதும் இல்லாமல் இருந்தது. இப்போதய நிலைபாடு அதைக்காட்டினும் முற்றினும் மாறுபட்டிருக்கிறது.20 வருடம் 30 வருடம் என ஒரே கம்பெனியில் குப்பைக் கொட்டுவது மலேசியாவில் சகஜமாகக் காணக் கூடிய ஒன்று. இக்கட்டான வேலைகளில் இப்படி அதிக நாள் வேலை செய்தவர்களைக் கழட்டி விடுவது தான் பெரிய கம்பெனிகளின் சிரமமான காரியம். எனக்கு தெரிந்த ஒருவர் 8 வருடங்களாக ஒரு நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். நான்கைந்து மாதங்களுக்கு முன் பல நெருக்கடிகளைக் கொடுத்து கம்பெனியை விட்டுத் துரத்தினார்கள்.

தோட்டங்களிலும் கிராமங்களிலும் வாழும் மக்களின் நிலை எப்படி? அதைப் பற்றிய செய்திகளை ஊடகங்கள் விவரிக்க முயல்கின்றனவா? சில காலத்திற்கு முன் இரப்பரின் விலை தென்னை மர உயரத்துக்கு இருந்தது. தோட்ட பணியாளர்களும் மரமே மடிந்து விழும் அளவிற்கு உளியைப் போட்டு செதுக்கிக் கொண்டிருந்தார்கள். அவ்வளவு உற்சாகம் இருந்தது. இப்போதய நிலை என்ன?

மலேசியா செம்பனை எண்ணெய் ஏற்றுமதி செய்யப்படும் முக்கிய நாடுகளில் அமேரிக்காவும் அடங்கும். இன்றய நிலையில் செம்பனைக்கும் பாதிப்பு என்பதை மறுக்க முடியாது.இதனால் வேளாண் தொழில் துறையை நம்பி இருந்தவர்களின் வருமானமும் நிச்சயமற்று இருக்கிறது என்றாகிறது.

பொருளாதார பிரச்சனைகள் துளிர்விடும் சமயங்களில் குற்றச் செயல்களும் கிடுகிடுவென வளர்ந்துவிடவே செய்கின்றன. புதிதாக வாங்கிய நகைகளை காட்டிக் கொள்ள விரும்பும் நங்கைகளை இரகசியப் பார்வைகள் கவனித்துக் கொண்டிருக்கவேச் செய்யும்.வேலை இழந்தவன் வயிற்று பிழைப்புக்கு என்ன செய்வான். திருட்டு, கொலை, கொள்ளை சம்பவங்கள் அதிகரிக்கின்றன. இருப்பினும் இதில் விந்தை தமிழர்களே அதிகமான திருட்டு சம்பவங்களில் ஈடுபடுகிறார்கள். அன்மையில் ஈப்போவில் நடந்த சம்பவம். 1000 ரிங்கிட்டுக்காக எண்ணைக் கடையில் வேலை செய்த தொழிலாளியை வெட்டிக் கொன்று பணத்தை எடுத்துச் சென்றுள்ளார்கள். 4 தமிழ் இளைஞர்கள் ஒரு நகைக் கடையில் 5 நிமிடத்தில் 3 இலட்சம் கொள்ளையடித்துச் சென்றார்கள்.

சமீப காலமாக காவல் துறையினரின் மீது இந்தியர்களுக்கு ஏற்பட்டிருக்கும் மனக்கசப்பு மறுக்க முடியாத ஒன்று. எதானல் இந்நிலை? மலேசிய குடிமக்களில் இந்தியர்கள் சிறுபான்மையினார். ஆனால் குற்றச் செயல்களைப் பார்த்தோமானால் அவர்கள் தான் முதலிடம் வகிக்கிறார்கள்.

சமீபத்தில் 6 இந்தியர்கள் கூலிமில் சுட்டுக் கொள்ளப்பட்டார்கள். அவர்கள் நிஜத்தில் தவறு செய்தவர்கள் தானா? குகன் எனும் இளைஞரின் மரணம் மக்களிடையே பெரும் பரபரம்பை ஏற்படுத்தியது. அவர் தப்பு செய்தவர் தானா? சட்டம் இதற்கு பதில் சொல்லும் முன்னமே அவர்கள் பலியாகி போனார்கள்.

இது ஒரு புறம் இருக்க. இன்றைய பொருளாதாரம் வீழ்ச்சி கண்டுள்ள சமயத்தில், குற்றச் செயல்கள் அதிகரித்து வரும் அதே வேளையில், குற்றம் புரிவோர் அதிக எண்ணிக்கையில் இருப்பவர்கள் இந்தியர்களே எனும் சூழல் எதனால் ஏற்பட்டது. கீழ்மட்ட வேலைகளில் அதிகம் இருப்பது இந்தியர்கள் என்பதும், அவர்களே சுலபமாகவும் அதிகபடியாகவும் தூக்கியெறியப்படுகிறார்கள் என்றும் ஆகிறது.

தற்சமயம் அதிகமாக கேள்விப்படுபவைகளுள் சில வழிபறிக் கொள்ளையும், வீடு புகுந்து திருடுவதும் தான். அதுவும் தமிழன் தமிழனிடத்தில் தான் திருடுகிறான். அதுவும் சில்லறைத் தனமான வேலைகளை. எதையுமே பிளான் பண்ணி பண்ணனும் என வகுப்பெடுக்க ஆள் இல்லை போல!சில தினங்களுக்கு முன் பக்கத்து வீட்டுக்காரரின் வீட்டின் முன் இருந்த பொருட்களை துப்புரவாக வாரிக் கொண்டு போய்விட்டார்கள். பாவம் ஒரு காலணி கூட விட்டு வைக்கவில்லை. வீட்டில் இருக்கும் பிள்ளைகளின் மிதிவண்டிகள் மட்டும் இல்லை அவர்கள் பூனை வளர்க்கும் கூண்டையும் அடித்துக் கொண்டு போய்விட்டார்கள். பூனையையும் காணோமாம். கூட்டில் இருந்திருக்குமோ! தெரியவில்லை.

பெரிய பெரிய தோள் பைகளை மாட்டிக் கொண்டு திரியும் பெண்கள் அவற்றை ஒரு ஓரமாக கடாசிவிட்டு. பாதுகாப்பான முறையில் இருந்துக் கொள்வது நலம் இல்லையா. அரசியல், பொருளாதாரம், குற்றச் செயல் நாட்டுக்கு கேடாக இருக்கும் வேளையில் தன்னடக்கம், பாதுகாப்பு, சிக்கனம் எனும் முறையில் மக்கள் இருந்துக் கொள்வது சிறப்பு.

Saturday, March 14, 2009

பிள்ளைக்கறி - சிறுகதை

இன்று சீக்கிரமாகவே வீட்டுக்கு வந்துவிடுவதாக அம்மாவிடம் சொல்லி இருந்தேன். ஆட்டம் போட்டதில் மறந்தே போனது. பந்து விளையாட திடலில் இறங்கிவிட்டால் போதும், நேரம் போவதே தெரிவதில்லை.

ஒன்றும் இல்லாத பந்து. கண்ணுக்கு தெரியாத காற்றடைத்த பந்து. போயும் போயும் அதையா இப்படி விரட்டி விரட்டி உதைக்கின்றோம். ஒரு ‘கோல்’ போட்டுவிட்டால் போதுமா? மீண்டும் மீண்டும் நாமே வெல்ல வேண்டும் எனும் எண்ணம். வாழ்க்கையும் இப்படி தான் போல. எதையோ விரட்டிக் கொண்டிருக்கிறது.

மணி 8.20 ஆச்சு. வானத்தில் நட்சத்திரங்களே இல்லை. அமாவாசை தினம் போல. காலம் ஏன் பின்னோக்கி நகர மாட்டேன் என்கிறது. நகர்ந்தால், வேண்டிய நேரத்தை திருப்பிக் கொள்ளலாம். வாழ்க்கையில் பிரச்சனையும் இருக்காது இல்லையா.

வீடு நெறுங்கிவிட்டது. மோட்டார் சைக்கிளை அமைதியாக ஓட்டி வந்தேன். உயர்ரக படகு கார் ஒன்று வீட்டின் முன் நின்றிருந்தது. வாசலில் இருந்த காலணிகளை கவனித்தேன். நான் அறிந்திராதவர்கள் தாம் யாரோ வீட்டிற்கு வந்திருக்கிறார்கள் என்பதை அது உறுதிபடுத்தியது. காரின் நம்பரை கவனித்தேன். வெளியூர் வண்டி. ஜோகூர் பிலேட். அப்பாவைக் காண வந்திருப்பார்கள் போல.

திடலில் விழுந்து வாரியதில் உடலெங்கும் சேறு படிந்திருந்தது. கூடவே வியர்வை நாற்றமும் இருந்தது. பின் வாசல் வழியாக வீட்டில் நுழைந்தேன். குளித்துவிட்டு உடுத்திக் கொண்டு வந்தேன்.

அம்மா எதிர்ப்பட்டாள். முகம் வெளிறியிருந்தது. கண்கள் லேசான சிகப்பேறி இருந்தது. அழுதிருப்பாள் போல. அப்பா கூப்பிடுறாரு போய் பாரு என்றாள். நான் முன்னறைக்குச் சென்றேன். ஏதோ பிரச்சனையோ என்று நினைத்தேன்.

முன் அறையில் மூன்று புதிய முகங்களைக் கண்டேன். “வாங்க” என புன்னகைத்தேன். அவர்களும் சிரித்தார்கள். சிரிப்பில் பணக்கார மிடுக்கு கொப்பளித்தது. அப்பாவும் சிரித்தார். ஆனால் அந்தச் சிரிப்பில் உயிர் இல்லை. அது கட்டாயப் படுத்திக் கொண்டு சிரிக்கும் சிரிப்பு.

அப்பாவின் அருகில் அமர்ந்தேன். மெதுவாக தான் கேட்டேன்.

“அப்பா யார் இவுங்க?”

“உன்ன பெத்தவங்கப்பா... உன்னை அழைச்சிட்டு போக வந்திருக்காங்க..” வார்த்தைகள் தொண்டைக் குழிக்குள் அடைத்துக் கொண்டதைப் போல் தட்டு தடுமாறி பேசினார். பேசுவதறியாமல் அமைதியாக இருந்தேன்.

அப்பா மேலும் தொடர்ந்தார்.

“உங்கப்பாவும் நானும் ஒன்னாதான் வேலை பார்த்தோம். நீ பிறந்த போது உங்க அம்மா இறந்துட்டாங்க. அந்த சமயம் உங்க அப்பாவ அரசாங்கத்துல இருந்து வெளிநாட்டுக்கு வேலைக்கு அனுப்பிச்சி வச்சாங்க. அப்ப எனக்கு ஆம்பளை புள்ள இல்லை. நான் கேட்ட போது என்கிட்ட கொடுத்துட்டாங்க”.

“சரி... இப்ப எதுக்கு என்ன கூப்பிடனும்?”

வெளிநாட்டில் இருந்து வந்ததும் என்னைத் தேடியதாகவும், அப்பா வீடு மாறிவிட்டதால் கண்டுபிடிக்க முடியாமல் போனதாகவும் சொன்னார். உடன் வந்திருப்பவர்கள் சித்தியும், தங்கையும் என்பதை அறிந்துக் கொண்டேன்.

வரும் ஞாயிற்றுக் கிழமை என்னை வந்து அழைத்துக் கொள்வதாக முடிவு செய்யப்பட்டது. இன்று புதன். இன்னும் நான்கு நாள் மட்டும் தான் இந்த தோட்டத்தில் இருக்க போறேன். மனசுக்கு வேதனையாக தான் இருந்தது.

போக வேண்டாம் என்றே நினைக்கிறேன். ஆனால் படிக்கிற பய நீ என்ன முடிவு பண்றது நான் சொல்வதைக் கேள் என்றே பேச்சுகள் வரும். அப்பாவுக்கும் என்னை அனுப்புவதில் இஷ்டம் இல்லை தான். ஆனால் இதுவோ நிர்பந்த சூழல் ஏற்பட நிலையானதால் அவரும் ஒன்றும் சொல்லவில்லை.

பள்ளிக்கூடத்தில் நான் சுமாராக தான் படிப்பேன். நான் வேறு இடம் மாற்றலாகி செல்வது யாரையும் அவ்வளவா பாதிக்கலைனு தான் சொல்லனும். கோபால் மட்டும் கொஞ்சம் சோகமா இருந்தான். ஆமாம் பள்ளிக்கூடம் முடிஞ்சதும் குச்சி ஐஸ் வாங்கி கொடுக்கவும், பாடம் செய்யாமல் வாத்தியிடம் அடி வாங்கவும் அவனுக்கு இனி துணை இருக்காது இல்லையா.

அந்த நாசமாய் போன ஞாயிற்றுக் கிழமையும் வந்தது. வீட்டில் எல்லோருடைய முகமும் வாடி போய்விட்டது. அம்மா நேரிடையாகவே அழுதுவிட்டாள். ஆனால் அப்பாவால் அப்படி முடியவில்லை. நான் கிளம்பும் போது அவர் தன் அறைகுச் சென்றுவிட்டார்.

சில மணி நேர பயணங்களில் நான் ஜோகூரில் இருந்தேன். மாறுபாடான வாழ்க்கை. சாப்பாட்டு மேசையில் இருக்கும் கரண்டியில் கூட செல்வச் செருக்கும் ஆங்கிலமும் படிந்திருந்தது. குடும்பத்தோடு என்னால் எளிதாகவும் ஒட்டி வாழ முடியவில்லை.

சில வேளைகளில் நான் பட படவென பேசுவது சித்திக்கும் தங்கைக்கும் பிடிக்காது. அது மரியாதை இல்லை இப்படி பேச வேண்டும் என சொல்வார்கள்.
நாகரீக வளர்ச்சி எனும் பெயரில் இப்போதெல்லாம் பேச்சில் கூட அளவு காண ஆரம்பித்துவிட்டார்கள். என்ன செய்வது மாற்றம் ஒன்று தானே மாற்றம் இல்லாதது.

அன்று காலையில் எழுந்த போது அப்பா கேட்டார்.

“ஹவ் ஆர் யூ டுடே?”

“ஃபைன்” சுருக்கமாக சொன்னேன். பதிலுக்கு கேள்வியும் கேட்கவில்லை. அங்கிருந்த உறவுகளில் மரியாதை மட்டுமே இருந்தது. மருந்துக்கும் பாசத்தைக் காண முடியவில்லை. அடிக்கடி கிராமத்தில் அப்பாவுக்கு போன் செய்து பேசுவேன்.

நெடு நாட்களாக சித்தி இதைக் கவனித்து வந்தாள். ஒரு நாள் அப்படித்தான். போன் பேசி முடித்ததும் சொன்னாள் “உன்ன பாத்துக்க சொல்லி தான் உங்க அப்பா அங்க விட்டு வந்தாரு. இந்த மாதிரி நீ பண்றது யாருக்கும் பிடிக்கல. என்ன இருந்தாலும் நாங்க தான் உன்னோட நிஜமான உறவு. அவுங்க ஆயாவா தான் இருந்தாங்க. மறுபடியும் மறுபடியும் போய் குப்பைல விழாதே. உங்கப்பாவுக்கு தெரிஞ்சா சத்தம் போடுவாரு. இனிமேல போன் பண்ற வேலைலாம் வச்சிக்காத”. என புராணம் பாடி முடித்தாள்.

“ஏன் இப்படி பேசுறிங்க. அவுங்க இல்லாம நான் எப்படி வளர்ந்திருக்க முடியும்?”

சித்தி அதைக் காதில் வாங்கிக் கொண்டதாக தெரியவில்லை. எப்போதும் போல வாழ்க்கை நகர்ந்தது. ஒரு நாள் வீட்டு வேலைக்கார தாத்தா மீன் தொட்டியைக் கழுவிக் கொண்டிருந்தார்.

அந்தத் தொட்டியில் ஒரே ஒரு மீன் மட்டும் தான் இருக்கும். அதை அதிஷ்ட மீன் என்பார்கள். விலை ஆயிரக் கணக்கில் தேறும். பொன் வண்ணத்தில் மினுக்கும். அதன் உடல் மினுமினுப்புக்காகவே சின்ன சின்ன இறால்களை உணவாக போடுவார்கள்.

”ஏன் இந்த மீன தனியா வளர்க்குறாங்க. நாலு அஞ்சி மீனுகள ஒன்னா விடக்கூடாதா” என்றேன்.

”இல்லை தம்பி. அப்படி விட்டா சண்டை போட்டு செத்து போய்டும். ஆனா இதுக்குனு தனியா ஜோடி எங்கோ இருக்கும். அது செத்துப் போனா இதுவும் செத்துடும்னு சொல்வாங்க. ரெண்டு நாள்ல வீட்ல விருந்து இருக்காம். அப்பா தொட்டிய சுத்தம் பண்ண சொல்லிட்டு போயிருக்காரு. வரதுக்குள்ள கழுவி எடுக்கனும்” என்றார்.

அந்த மீன் அப்படி தான் இறந்து போகுமா என அவரால் நிச்சயிக்க முடியவில்லை. பிரிவுகளின் வேதனை கொடுமையானது என்பது மட்டும் புரிந்தது. அதை ஏற்கும் பக்குவம் எல்லோருக்கும் இருப்பதில்லை.

விருந்து நாளும் வந்தது. சித்தியின் திருமண நாள் அது. சந்தர்ப்பத்தை பயன் படுத்திக் கொண்டு கிளம்பிவிட முடிவு செய்தேன். வேண்டிய பொருட்களை மட்டும் எடுத்துக் கொண்டேன். எல்லோரும் விருந்தின் களிப்பில் மிதந்துக் கொண்டிருக்கும் தக்க தருணத்தில் அங்கிருந்து கிளம்பிவிட்டேன்.

நல்ல வேளையாக ஈப்போவுக்கு டிக்கட் இருந்தது. கண் மையை கரைத்து வண்ணம் பூசியதை போல் கும்மிருட்டு சூழலை அப்பிக் கொண்டிருந்தது. எனது சிந்தனைகள் பறந்து வட்டமிட்டு திரிந்தது. உடல் அமைதி கொண்டு அதை கவனித்து வந்தது.

இந்நேரம் நான் வீட்டில் இல்லாததை அறிந்திருப்பார்களா? இல்லை விருந்தின் உச்சத்தில் களிப்புற்றிருப்பார்களா? ஒரு வேளை அப்பாவுக்கு போன் போட்டு பிரச்சனைகள் கொந்தளித்துக் கொண்டிருக்குமோ? எதுவானால் என்ன வந்தது வந்தாகிவிட்டது. நடப்பதை பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்றது மனம்.

ஈப்போவுக்கு சேர்ந்த போது விடியல் காலை நேரம். இப்போது வீட்டுக்கு பஸ் இருக்காது. டாக்சிக்கு பவுன் விலை சொல்லி கழுத்தறுப்பார்கள். இன்னும் ஒரு மணி நேரம் காத்திருந்தால் முதல் பஸ் வந்திடும். அதில் பயணம் செய்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்து ஒரு ஓரமாய் அமர்ந்தேன்.

படிப்பதற்கு கையில் புத்தகம் கூட இல்லை. பேனாவும் சின்ன குறிப்பு புத்தகமும் பாக்கெட்டில் இருந்தது. ஏதோ எழுத தொடங்கினேன்.

அப்பா,

நம் குடும்பத்தோடு நான் இருந்த தருணங்கள் இனிமையானவை. வாழ்க்கை விடுகதையாகவே இருக்கிறது. எல்லாமும் நம் விரும்பியது போல் அமைந்துவிடுவதில்லை. சமூகத்தை சார்ந்த இந்த வாழ்வில் முடிவுகள் நாம் விருப்பத்தின் பேரில் அமைவதில்லை. வாழ்க்கையில் முடிவினை அறிந்தவர்கள் உலகத்தில் இருக்கவே முடியாது போலும்...

மேலும் எழுத தோன்றவில்லை. பேனாவை சுழற்றியபடியே நேரத்தை ஓடவிட்டேன். பஸ் வந்ததும் காகிதத்தை மடித்து பாக்கெட்டில் வைத்துக் கொண்டேன்.

பஸ்ஸில் நான் மட்டும் தான் பயணியாக இருந்தேன். இன்னும் சில நிமிடங்களில் வீட்டை அடைந்துவிடுவேன். சாலையில் அதிகமான வாகனங்கள் இல்லை. பளிங்குக் கல்லில் விட்டெரிந்த சவர்காரத்தைப் போல் சாலையில் வழுக்கிக் கொண்டு ஓடியது பேருந்து. எதிரே சின்ன வளைவு. முன் சென்ற ஜீப்பை முந்திக் கொள்ள நினைத்தான் டிரைவர். எதிரே ஒரு நீண்ட கண்டெய்னரை பார்த்தேன். சட்டென வைத்த பிரேக்கின் வேகத்தில் முன் புறமாகத் தூக்கி எறியப்பட்டேன்.
**********

”செத்தது உங்களுக்கு என்ன உறவுங்க?” போலிஸ்காரர் கேட்கிறார்.

“அது என் மகன் தான். வளர்த்த புள்ள”

“இது அவர் வைச்சிருந்த பொருளுங்க சரியா இருக்கானு பார்த்துக்குங்க”.

அதில் அவன் எழுதிய கடிதமும் இருந்தது. இரண்டு மடிப்பாக மடிக்கப்பட்டிருந்தது. காலம் பல கடந்துவிட்டது. இன்னமும் புதிய தாபாலில் வந்த கடிதமாகவே அதை தினமும் படித்து வருகிறார் அவன் அப்பா. அவரை வளர்ப்பு தந்தை என்று தான் குறிப்பிட்டாக வேண்டுமா...

--முற்றும்--

Thursday, March 12, 2009

கொசுறு 12/03/2009

சாணியடி சித்தர் யோக நிஷ்டையில் இருப்பதால் தத்துவத்துக்குக் காலவரையில்லா விடுப்பு கொடுக்கப்படுகிறது என்பதை கடிதம் எழுதாமல் பகிரங்கமாக தெரிவித்துக் கொள்கிறேன்.
****

நாமக்கல் சிபி அண்ணனுக்கு நேற்று திருமண நாள். அவருக்கு என்னுடைய மனம் கனிந்த வாழ்த்துகள். எதிர் வீட்டு ஜன்னல் பார்ட் 2 எழுதி தமது 16வது பிறந்த நாள் கொண்டாடிய நண்பன் அதிஷாவுக்கும், சென்ற வார தமிழ் மண நட்சத்திரம் வால் பையனுக்கும் இந்த வார நட்சத்திரம் கார்க்கிக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
****

மனைவி என்றும், மக்கள் என்றும், சுற்றம் என்றும் வளர்த்துக் கொள்வது ஒரு போகம். இதை விட்டு ஓட முடிந்துவிட்டால் யோகம். நான் சொல்லவில்லை. கண்ணதாசன் சொன்னது.
****

வெண்ணிலா கபடிக் குழு படம் பார்த்தேன். லேசா பறக்குது மனசு எனும் பாடல் மனதைக் கவர்கிறது. நகைச்சுவைகளும் இயல்பாக இருக்கின்றன. முடிவு சற்றே ஒப்பாதது போல் தோன்றுகிறது.
****


நந்திபுரத்து நாயகி எனும் விக்கிரமன் எழுதிய சரித்திர நாவலை படித்து வருகிறேன். கதையோட்டத்துக்கு முக்கிய இடங்களில் நல்ல விறுவிறுப்பாக இட்டுச் செல்லும் ஆசிரியர் தேவையற்ற சில இடங்களில் ஜவ்வை போல் இழுத்து எழுதி இருப்பது படிப்பவரை எரிச்சலடையச் செய்கிறது.
****

சூரியனுக்கு விளக்கு பிடிக்கக் கூடாதுனு சொல்வாங்க. பாரிசல்காரனின் இந்தப் பதிவு மிகவும் சுவாரசியாமாக இருந்தது. புத்தகம் இரவல் கொடுப்பதால் ஏற்படும் விளைவுகளை அழகாக சொல்லி இருக்கிறார்.

இரவல் கொடுப்பது வராமல் போய்விட்டாலும் பரவாயில்லை என வாங்கிக் கொள்ளலாம். ஆனால் கிழிசலோடு வரும் புத்தகங்களின் மௌன கண்ணீர் நம் நெஞ்சை ரனமாக்கிவிடுகிறது. நான் ஓரிரு நண்பர்களைத் தவிர மற்றவர்களுக்குப் புத்தகத்தை இரவல் கொடுப்பதில்லை. புத்தகம் சேமிக்கும் அவர்களும் அதிகம் இரவல் வாங்க மாட்டார்கள்.(படிப்பவர்களுக்கு தானே அருமை தெரியும்) நூலகத்தில் படிக்கும் புத்தகங்கள் பிடித்திருந்தாலும் அதை சேகரிக்கும் பொருட்டு கடைகளில் வாங்கிவிடுவேன். இரவல் புத்தகத்தை விட புதிய புத்தகங்களின் வாசனையே தனி தான்.
****

எழுத்தாளர் எஸ்.ராவின் ’’கதாவிலாசம்’’, ’’துணையெழுத்து’’ என இரண்டையும் வாசித்துவிட்டேன். ஒவ்வொரு கட்டுரையும் ஒவ்வொரு விதமாய் மனதை வருடுகிறது. அடுத்தபடியாக தேசாந்திரி புத்தகத்தை தேடி வருகிறேன்.
****

பதிவர்களின் நல்ல படைப்புகளை தேர்வு செய்து யூத்புல் விகடனில் அளிக்கிறார்கள். இது நல்ல ஊக்குவிப்பு என்றே கூற வேண்டும். தமிழ் பிரியன் அண்ணாச்சியின் முந்தய சிறுகதை ஒன்று யூத்புல் விகடனில் வந்திருந்தது. மனதைக் கசக்கிப் பிழியும் அக்கதையை வாசித்து இருக்கிறீர்களா? ஒரு முறைக்கு மேல் என்னால் வாசிக்க முடியவில்லை. முறிந்த சிறகுகளில் உயிர்த்த உறவு எனும் அக்கதையின் சுட்டி.
****

ஹிட்லர் அசைவம் சாப்பிட மாட்டார். அவர் நல்லவரா கெட்டவரா? விவேகானந்தர் அசைவ உணவுகளை சாப்பிடுபவர். அவர் கெட்டவரா நல்லவரா? தசவதாரம் படத்தில் உலக நாயகன் ஒரு கேள்வி கேட்பார். மடம்னா தப்பே நடக்காதாய்யா? அப்படிதானே இருக்கிறது இக்கேள்வி.
****

லத்தா கிஞ்சாங் எனும் நீர் வீழ்ச்சி இங்குள்ளது. வடக்கு தெற்கு நெடுஞ்சாலையில் பயணிக்கும் போது தாப்பாவை தாண்டி வருகையில் நீங்கள் இதைக் காண முடியும்.

எனது பூர்வக் குடியைச் சேர்ந்த நண்பன் ஒருவன் நீர் வீழ்ச்சியின் அருகே வசிக்கிறான். அன்று சந்திக்க நேர்ந்த போது அழைத்திருந்தான். முன்பு அவன் சொன்ன தகவல் ஒன்று நினைவிற்கு வருகிறது.

நகைகளை கழற்றி வைக்காமல் நீர் வீழ்சியில் குளிப்பவர்கள் சில வேளைகளில் அதை தவற விட்டுவிடுவார்களாம். பகல் வேளையில் நீரில் விட்ட நகையை தேடி எடுப்பது சிரமம். இரவு வேளையில் டார்ச் லைட்டை நீரில் அடித்தால் நகை மினுக்கும் ஒளியைக் காண முடியும். தொலைந்து போன நகையும் சுலபத்தில் கிடைத்துவிடும். (யாருக்கு கிடைக்கும்?) :))
****

என்னை
சுற்றினும்
சிறு சிறு வட்டங்கள்!

சில
இனிமை பொழுதுகள்!
எளிமைக் கவிதைகள்!
வறுமை வருத்தங்கள்!

தலைசாய்த்து
தயவுகொள்ள
தாய்மை ஸ்பரிசத்தோடு
தலைவருடும்
தனிமைத் தருணங்கள்!

கண்ணீரில்
கவலையைக் கரைத்தும்!
வெறிநீரில்
உடல்தனை எரித்தும்!
புகைத்தாரில்
புன்னகை மறைந்தும்!

விட்டுச் செல்லாமல்
வெட்டிச் சிரிக்கிறது
இனிய பொழுதினிலும்
இளமையின் தனிமை!

கவிதையை படிச்சிட்டு அடிக்க வராதிங்க பிலிஸ்...

****

திரு.ஜவஹர் நாளைய தினம் தமிழக பயணம் மேற்கொள்கிறார். அதிகமாக பதிவுகளை வாசிக்கும் இவர் பதிவுகள் எழுதுவதில்லை. ஓரிரு தளங்களில் பின்னூட்டம் இடுவார். அவருடைய பயணம் இனிதே அமைய வாழ்த்துகள். அதிஷாவுக்கு குச்சி மிட்டாயும் குருவி ரொட்டியும் வாங்கி வருவதாக சொல்லி இருக்கிறார்.

Thursday, March 05, 2009

மறக்க முடியாத சயாம் நிகழ்வு!


(சப்பானியர்கள் மிதிவண்டியை அதிகம் பயன்படுத்தினார்கள். காடுகளையும், மலைகளையும், ஆறுகளையும் எளிதில் கடக்க உதவும் வாகனமாகக் கருதினர்)

8-ஆம் திகதி டிசம்பர் மாதம் 1941-ஆம் ஆண்டு. மலாயாவின் கிழக்குக் கரை மாநிலமான கிளந்தானில் சப்பானியர்கள் கால் பதித்தார்கள்.(ஆரம்ப காலத்தில் மலேசியா மலாயா என அறியப்பட்டது). அது தான் இரண்டாம் உலக யுத்தம் மலாயா மண்ணில் ஆரம்பித்ததற்கான அறிகுறியாகும். கிளந்தான் மாநிலத்துக்கு அடுத்தபடியாக இருக்கும் கெடா(கடாரம் என அறியப்படுவது) மாநிலத்தில் அடுத்த சில தினங்களில் தாக்குதல் மேற்கொள்ள ஆரம்பித்தார்கள். சில நாட்களில் கெடா சப்பானியர்களின் கைவசம் வந்தது.

அதன் பிறகு தொடர்ச்சியாக ஒவ்வொரு மாநிலமாக அவர்கள் பிடியில் சிக்கியது. இறுதியாக பிரிட்டிசார் தன் கைவசம் வைத்திருந்த சிங்கையையும் பிடிங்கிக் கொண்டு விரட்டியடித்தார்கள். 150000 படை வீரர்கள். 300 வானூர்திகள், 300 இராணுவ வாகனங்கள். இதுதான் சப்பானியர்களின் மொத்த படை பலமே. 70 நாட்களில் ஒட்டு மொத்த மலாயாவை தன் பிடிக்கு கொண்டு வந்தார்கள். அவர்கள் உண்மையில் அவகாசம் எடுத்துக் கொள்ள நினைத்தது 100 நாட்கள். 30 நாட்களுக்கு முன்பதாகவே காரியத்தை முடித்துவிட்டார்கள்.

மலாயாவில் சப்பானியர்களின் ஆட்சி காலம் 3 வருடம் 8 மாதங்கள் நீடித்தது. அவர்களின் தாக்கம் இன்னமும் ஆறாத வடுவாக மக்களின் நெஞ்சில் புதைந்து கிடக்கிறது என்றே சொல்ல வேண்டும். வெள்ளையனிடம் இருந்து ஆசியாவை விடுவிப்பதே சப்பானியர்களின் நோக்கம் எனும் அவர்களின் பொய் வாக்கை பின் நாளில் மக்கள் உணர்ந்தார்கள். மலாயா மக்களிடையே அவர்கள் செய்த கொடுமையின் காரணமாக நாளடைவில் மக்கள் சப்பானியர்களை வெறுக்க ஆரம்பித்தார்கள்.

காலத்தால் அழிக்க முடியாத கரையாக மக்களின் மனதில் இன்னமும் படிந்திருக்கும் சம்பவம் தான் சயாம் மரண தொடர் வண்டிச் சாலை நிர்மாணீப்புப் பணி. அக்காலகட்டத்தில் சப்பானியர்கள் சயாம் - பர்மா தொடர் வண்டிச் சாலையை நிர்மாணிக்கத் திட்டமிட்டார்கள். அதற்காக மலாயாவில் இருக்கும் பலரும் கூட்டம் கூட்டமாக சயாமிற்கு அனுப்பப் பட்டார்கள்.

வேலையாட்கள் தாய்லாந்து நாட்டின் பாப்போங் எனும் பகுதி வரை தொடர் வண்டியின் மூலம் அழைத்துச் செல்லப்படுவார்கள். தண்டவாள நிர்மாணிப்பு இடமானது அதன் அருகில் இருந்துவிடவில்லை. அங்கு செல்வதற்கென பல நாட்கள் காடுகளையும் மலைகளையும் கடந்து செல்ல வேண்டும். சரியாக சொல்லப் போனால் இழுத்துச் செல்லப்படுவார்கள் என்பதே உண்மை.

நிர்மாணிக்கப் போகும் தண்டவாளத்தின் நீளம் 415 கிலோ மீட்டர். சப்பானியர்களின் அவகாச காலம் 16 மாதங்கள். ஒரு மாதத்திற்கு 25.9 கிலோ மீட்டர் எனும் விகிதத்தில் தண்டவாள பணிகளை செய்து முடித்தாக வேண்டும். இத்தண்டவாளம் தாய்லாந்தின் பாம்போங் எனும் பகுதியில் இருந்து பர்மாவின் தம்புசாய்ட் எனும் பகுதி வரை நிர்மாணிக்கத் திட்டமிடப்பட்டது.

ஏன் இந்த தண்டவாள பணிகள்? சப்பான் தனது ஆதிக்கத்தை விரிவாக்கம் செய்ய நினைத்தது. 1942-ஆம் ஆண்டு தண்டவாள பணிகள் தொடங்கியது. இந்தியா மற்றும் பர்மாவை கைப்பற்றும் பொறுட்டு சப்பானிய இராணுவம் இவ்வேலைகளுக்கு காய் நகர்த்தியது. தண்டவாளத்தின் துரித வேலைகளுக்காக மலாயாவில் பொறுத்தப்பட்டிருந்த சில தண்டவாளங்களை பிறித்து கொண்டுச் சென்றார்கள்.

ஆயிரக் கணக்கான ஆட்கள் வலுக்கட்டாயமாக இழுத்துச் செல்லப்பட்டார்கள். அவர்கள் மலாயா, சிங்கை, இந்தோனேசியா போன்ற நாடுகளில் இருந்தும், மேலும் இந்தியா, பிரிடிஸ், மற்றும் துர்க்கிய இராணுவத்தினரும் அடங்குவர்.


சப்பானியர்களால் போரில் கைது செய்யப்பட்ட 60,000 ஆட்களில் 18,000 பேர் தண்டவாள நிர்மாணிப்பின் சமயம் உயிர் துறந்திருக்கிறார்கள். வலுக்கட்டாயமாக அல்லது அடிமைப் படுத்தி இழுத்துச் செல்லப்பட்டவர்களில் 100,000க்கும் அதிகமானோர் இறந்திருக்கிறார்கள்.

சயாம் மரண தண்டவாள வேலைகளின் போது அதிகம் பாதிகப்பட்டோரில் சஞ்சிக் கூலிகளாக மலாய அழைத்துவரப்பட்ட இந்தியர்களும் அடங்குவர். மலாயாவில் இருந்து மட்டும் 73 500 கூலியாட்கள் அழைத்துச் செல்லப்பட்டார்கள். அதில் நிர்மாணிப்பு வேலையில் உயிர் துறந்தவர்களின் எண்ணிக்கை 24490 ஆகும்.

சப்பானிய நிர்வாகம் அவர்களுக்கு சரியான பாதுகாப்பு கொடுக்கவில்லை. சட்டென வேலைகளை முடிக்கும் எண்ணத்தில் மக்களை வாட்டி வதைக்கச் செய்தார்கள். உணவு, உடை, மருத்துவம் என எவ்வித வசதியும் இல்லாமல் மக்கள் சிரமப்பட்டார்கள்.

நேரக் கணக்குகள் ஏதும் இல்லை. வேண்டிய மட்டும் வேலை வாங்கப்படுவார்கள். 14 முதல் 18 மணி நேரம் வேலை செய்தாக வேண்டும். காலையில் 5 மணிக்கு வேலை ஆரம்பித்தால் இரவு 9 மணி வரை ஓய்வில்லாமல் உழைத்தாக வேண்டும். மறுத்தால் அடியும் உதையும் தான் மிஞ்சும்.

வேலையாட்கள் சிறு சிறு குழுக்கலாக பிறித்துவிடப்படுவார்கள். ஒரு குழுவுக்கு 25 பேர் விகிதம் இருப்பார்கள். அவர்களுக்கு ஒரு தலைவன் கங்காணி எனும் பெயரில் நியமிக்கப்படுவான். கங்காணி கடுமையாக நடந்துக் கொள்ள வேண்டும் என்பது சப்பானியர்களின் விதியாகும்.

முறையற்ற உணவு, கிருமிகளின் தாக்கம், வயிற்று போக்கு, மலாரியா, என பல பிரச்சனைகள் அங்குள்ளவர்களின் சாவுக்குக் காரணமானது. சொறி சிரங்கு ஏற்பட்டால் அவர்கள் மீது சுடு நீர் ஊற்றப்படுமாம். அது தான் சப்பானியர்கள் அந்நோய்க்கு கொடுக்கும் மருந்தாகும்.

சப்பானியர்களின் இவ்வேலைகளை தடுப்பதற்காக எதிரி படைகளின் தாக்குதல் அடிக்கடி நடந்தேறும். அச்சமயம் எறியப்படும் வெடிகுண்டு தாக்குதல்களாலும் பலர் இறந்து போனார்கள்.

ஹிரோசிமா மற்றும் நாகாசாக்கியின் தாக்குதலுக்கு பிறகு சப்பான் பின்வாங்கிற்று. தண்டவாள வேலைகளும் நிறுத்தம் கண்டது. எஞ்சிய சிறு பகுதியினர் மட்டும் வீடு திரும்பினார்கள். மற்றவர்கள் சயாம் மரண தொடர் வண்டிச் சாலையில் இன்னமும் உறங்கிக் கொண்டிருகிறார்கள்.

(பி.கு: திரு சி.அருண் எழுதிய சயாம்- பர்மா இரயில் பாதை எனும் நூல் எதிர்வரும் 15.03.2009 தலைநகரில் வெளியீடு காணவிருக்கிறது. விலை RM20.00. இடம்: கிள்ளான் ஸ்ரீ சுந்தரராஜ பெருமாள் கோவில் மண்டபம். இப்புத்தகம் ஈப்போவில் கிடைப்பதற்கான வழிகள் ஏதும் இருந்தால் சொல்லவும். படிப்பதற்கு ஆவலாக இருக்கிறேன்)


பிற்சேர்க்கை:
சி.அருண் அவர்களின் பின்னூட்டம்:

வணக்கம். 'சயாம்-பர்மா மரண இரயில் பாதை:மீட்கப்பட்ட வரலாற்றின் உயிர்ப்பு' என்னும் நூல் வெளியீடு பற்றிய செய்தியை வெளியிட்டமைக்கு நன்றி. இந்நூல் வரலாற்று நூல். இந்நிகழ்வினைப்பற்றி தமிழில் வெளிவரும் முதல் வரலாற்று நூல். இதற்கு முன்பு இதனைப்பற்றி நாவல் வெளிவந்துள்ளது. திரு.சண்முகம் அவர்கள் எழுதிய நாவல் சென்ற ஆண்டு தமிழகத்தில் மறுபதிப்பாக வெளியிடப்பட்டது. அந்நூலுக்கு நான் அணிந்துரை எழுதியுள்ளேன்.

'சயாம்-பர்மா மரண இரயில் பாதை:மீட்கப்பட்ட வரலாற்றின் உயிர்ப்பு' என்னும் நூலினைப் பெற்றிட கீழ்க்காணும் முகவரியில் தொடர்பு கொண்டு பெறலாம்.

நூலின் விலை = ரி.ம.20.00
தபால் செலவு = ரி.ம. 2.00
ஆக மொத்தம் ரி.ம.22.00.

பணத்தை வங்கி கணக்கில் போட்டுவிட்டு என்னுடன் தொடர்பு கொள்க. S.ARUNASALAM, NO.6, JALAN BATU NILAM 9, 41200 BANDAR BUKIT TINGGI, KLANG, SELANGOR.

MAYBANK : 105037363735
Tel: 012 300 2911

கலோலையும் அனுப்பலாம். நன்றி.