Saturday, November 14, 2009

வான் துளிகள்!!


தேங்கிய குப்பைகள்

திணறிக் கொண்டிருக்கிறது!

அடைத்துக் கொண்ட சாக்கடை

அழுது வடிகிறது!


ஈரப்பதம்

தேடிய காற்று

அலைமோதி

ஆசுவாசப்

பெருமூச்சிட்டுச் செல்கிறது!


வெள்ளிக்

காசுகளாய் குலுங்கி

கொட்டுகிறது

தலைதுவட்டிய

மரங்கள்!


தேன் கசிந்திட

திரவம் கிடைத்ததாய்

பூத்துச் சிரிக்கிறது

வசந்த மலர்கள்!


களிமண்

கரைந்திடாமல் இருக்க

குடைபிடித்துச் செல்கிறான்

மனிதன்!


இந்த

இயற்கை

தனக்குக் காய்சல்

வருவதாய் சொல்லவில்லை!


யாரைத் தேடி

வந்தன

இம்மழைத் துளிகள்!


மீண்டும்

தேடலை துவங்கிய

காற்றாய் வான் நோக்கிச்

செல்கின்றனவே!

Friday, November 13, 2009

2012 திரைப்படம்- மரணத்தின் விளிம்பில்

மாயன்ஸ் நாட்காட்டி 2012 நிறைவற்று போவதின் காரணம் பல கோணங்களிலும் அலசப்பட்டும் பேசப்பட்டும் இருக்கிறது. 2012-ஆம் ஆண்டில் குறிப்பிட்ட அத்தேதியில் உலகம் அழியும் என்பது உண்மையானால் மனித குலத்தின் செயல்பாடுகள் எப்படி இருக்கும் என்பதே 2012 எனும் திரைப்படத்தின் கண்ணோட்டமாக அமைந்துள்ளது.

தென் அமேரிக்காவின் மெக்சிக்கோ பகுதியில் தோன்றி மறைந்ததாக கூறப்படும் மாயா நாகரிகத்தினரின் மகத்தான கண்டுபிடிப்புகளில் ஒன்றென கூறப்படுவது அவர்களின் நாட்காட்டியாகும். கி.முவில் தொடங்கும் இந்நாட்காட்டி முடியும் திகதி 21-12-2012. 2012 உலகின் மறுபிறப்பு தினம் (ரிஜெனரேஷன் பீரியட் என ங்கிலத்தில் சொல்லப்படுகிறது) என்பது உண்மையெனில் மக்கள் என்ன செய்யப் போகிறார்கள்? இந்த ரீஜெனரேஷன் எப்படியெல்லாம் நிகழப் போகிறது?

உலகின் அழிவை நோக்கிய பார்வையில் பல அமைப்புகள் செயல்பட்டுவருகின்றன. இவ்வமைப்புகள் மக்களை ஒன்றிணைத்து அவர்களை புனித ஆத்மாவாக்கி புதிய யுகத்திற்கு தயார் செய்யும் ஓர் உண்ணத பனியை மேற்கொள்வதாக காட்டிக் கொள்கின்றன. புதிய யுகம் தோன்றும் போது இவ்வியக்கத்தால் புனிதமாக்கப்பட்டவர்கள் மட்டும் புத்துயிர் பெற்று எழுவார்களாம். இது மரண பயத்தைக் காட்டி மனிதனை மிரட்டும் வழி. கடவுள் எனும் பிம்பத்தின் போர்வையில் 'ஏதோ பண்ணும்' யுக்தி.

சரி அப்படி என்றால் கடவுள் என்ன செய்யப் போகிறார். ஒரு நெருப்புப் பிண்டம் சிதறி விழுகையில் பெற்ற தாய் தன் பிள்ளையையும், கணவன் மனைவியையும் விட்டு ஓடலாம். நம்பிக்கைக்குறிய மிக நெருக்கமானவர்களே கைவிடும் சமயத்திலாவது கடவுள் தோன்றுவாரா?

இயற்கையின் சீற்றம் பல வழிகளில் ஏற்படலாம். இன்று வரையிலும் பல முறை உலக மக்கள் உலகின் கடைசி தினம் எனும் பெயரில் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள். மிரட்டப்பட்டிருக்கிறார்கள். The Millerites இயக்கத்தை நம்மில் பலர் அறிந்திருக்கலாம். இங்கிலாந்து தேசத்தின் விவசாயி ஒருவர் 23 ஏப்ரல் 1843-ஆம் ஆண்டு உலகம் அழியும் என கணிப்பு கூறினார். இவரின் "இவ்வற்புத' சிந்தனைக்கு தோன்றிய இயங்கமே The Millerites.

புதிய நூற்றாண்டான் 2000த்தாம் ஆண்டின் முதல் நாளின் வரவேற்பு எப்படி இருந்தது. Y2K எனும் அறிவியல் பிரச்சனையில் பீதியாகி பய உணர்வொடு வரவேற்றோம். புதிய ஆண்டின் மலர்ச்சி மந்தமாகி போனது. நிச்சயமாக உலகம் அழியும் என சொல்லிக் கொண்ட அமெரிக்க பாதரியார் ஒருவர் அப்படி நிகழாத்தை கண்ட மறு நிமிடம் தற்கொலை செய்துக் கொண்டு மாண்டு போனார்.

1806-ஆம் வருடம் தனது கோழி முட்டையில் ஏசு கிருஸ்து வருகிறார் எனும் எழுத்துகள் பொறித்ததாகவும் அதுவே உலகம் அழியும் அறிகுறியென புரளிகள் கிளம்பின. இதே போல் 1800 களிலும் 1900களிலும் பல சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. ஆனால் உலகம் இன்னமும் மூச்சுவிட்டுக் கொண்டிருக்கிறது.

2012 உலகம் அழிந்து போகும் நிலை ஏற்படலாம் எனும் ஆராய்ச்சிகள் பல கோடி செலவுகளில் நடத்துக் கொண்டிருக்கிறது. இந்த ஆராய்ச்சிகளும், ஆய்வுகளும், கணிப்புகளும் எத்தனை தூரம் உண்மை என்பதினை அறிந்துக் கொள்ள இன்னும் மூன்று ஆண்டுகள் உள்ளன. அந்தரத்தில் வீடு ட்டிக் கொண்டால் இயற்கை பேரிடர்களில் இருந்து பல வகையிலும் விடுபட்டுக் கொள்ளலாம் இல்லையா? புவி ஈர்ப்பு சக்தியை நாம் மீற முடியாமல் தான் இருக்கின்றோம்.

2012க்கு பிறகு இப்படம் எடுக்கப்பட்டிருந்தால் இதன் வரவேற்பு எப்படி இருந்திருக்கும் என்பது நாம் சொல்லி தெரிய வேண்டியதில்லை. நடக்கப் போகும்/நடக்காத ஒன்றினை இப்படி ஏற்படும் சாத்தியம் உண்டு எனும் எதிர்ப்பார்ப்புகளை செலுத்தி வணிக ரீதியாக இலாபத்தை ஈட்டிக் கொண்டிருக்கிறார்கள் என்பதில் மிகையில்லை. அதற்கான மெனக் கெடுதல் அமர்ந்த இடத்தில் இருக்கும் நம்மையும் எகிர வைக்கிறது.

தமிழ் இலக்கியங்களில் சொல்லப்படும் கபாடபுரம், (*பாண்டியர்களின் முன்னால் தலைநகரம். நா.பாவின் நாவல் இப்பெயரில் வெளிவந்துள்ளது) சிற்பங்களுக்கு புகழ் பெற்ற பல்லவர்களின் மாமல்லபுரம் போன்றவை குமரிக் கண்டத்தை கடல் கொண்ட சமயம் அமிழ்ந்து போனதாக சரித்திர ஏடுகள் குறிப்பிடுகின்றன. குமரியின் ஆய்வு விசாலமானது. மேற்கத்தியர்கலால் இப்பகுதி லெமூரியா என குறிப்பிடபடுகிறது. லெமுர் மற்றும் அட்லாண்டீஸ் போன்ற ஆய்வு நூல்களில் தமிழ் தமிழர் சார்ந்த விடயங்கள் இம்மியும் கிடையாது. மனித னத்தின் பரினாம வளர்ச்சி எல்லோருக்கும் ஒன்றுதான் போலும்.

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு ஒருமுறை ஏற்படும் கடல் கொந்தளிப்பு கதையின் முக்கிய அம்சமாக பேசப்பட்டுள்ளது. உலக அரசுகள் மக்களை எவ்வகையில் பாதுகாக்கப் போகிறது. உடனடி ஏற்பாடுகள் செய்யப்படுகிறதா எனும் பார்வையும் இங்கு முன் வைக்கப்படுகிறது.

இன்றய நிலையில் மனிதர்களின் நிலை முற்றிலும் மாறுபட்டுள்ளது. பூகம்பம், வெள்ளப் பெருக்கு, சுனாமி, என இயற்கையின் மிரட்டல்கள் அதிகரித்துவிட்டிருக்கின்றன. இயற்கை மனிதனோடு நட்புறவு கொள்ள மறுத்துவிட்டிருக்கிறது.

தொடக்கத்திற்கு முடிவும் இருக்க வேண்டும் எனும் சித்தாந்த அடிப்படையில் கடைசி நாள் எதிர்ப்பார்க்கப்பட்டு வருகிறது. நாளுக்கு நாள் நாசப்படும் பூமி முற்றிலும் அழியும் என்பது அதற்கான நாள் தூரம் இல்லை என்பதும் பல மதங்களில் சொல்லப்பட்டுள்ளது.

அறிவியல் முன்னோடிகள் பூமியின் அழிவு பிக் பேங் எனும் சித்தாந்தத்தின் அடிப்படையில் நிகழலாம் எனும் கருத்துக் கணிப்பினையும் முன் வைக்கிறார்கள். இந்த பிக் பேங் சித்தாந்தம் 1929-ஆம் ஆண்டு எட்வின் ஹபில் என்பவரால் தோற்றுவிக்கப்பட்டது. பிக் பேங் சித்தாந்தத்தின் படி பார்ப்போமேயானால் இந்த பிரபஞ்சமானது ஒரு மாபெரும் இராட்ச்சச வெடிப்பினால் உருவான பிண்டங்கள். தொடக்கத்தைப் போலவே பூமியின் முடிவும் இருக்கும் என்கிறது இச்சித்தாந்தம். 13.7 பில்லியன் வயதைக் கொண்ட பூமி இன்னும் 20பில்லியன் வருடங்கள் கழித்து இறந்துபோகும் என்பதும் பிக் பேங் சித்தாந்தத்தின் முக்கிய கருத்தியலாகும்.

புவி வெப்பம் நமக்கு நாமே ஏற்படுத்திக் கொண்ட ஒன்று. அதே போல் சூரியனின் கொதிப்பும் பூமியின் வெப்ப அதிகரிப்புக்கு காரணமாக அமைகிறது. இப்வெப்பத்தின் பாதிப்பு துருவங்களின் பனிப்பாறைகளை கரையச் செய்து கடல் மட்டத்தை பெருக்கெடுக்க வைக்கிறது. கடல்மட்டம் உயருவதால் கரைப்பகுதிகள் அமிழ்ந்து போகின்றன.

இதை தவிர்த்து விண் கற்கலின் மோதலாலும், பூமியின் அழிவு ஏற்படுதற்கான சாத்தியங்கள் இருக்கின்றன. நாசாவின் தகவல் அடிப்படையில் ஒவ்வொரு நாளும் நமது பூமியை விண்கற்கள் மோத வருகின்றன. அட்மோஸ்பேராவின் பாதுகாப்பால் அவை தகர்க்கப்படுகிறது. கோள்களின் மோதலாலும் பூமி அழிந்து போகக் கூடும் என ஆய்வுகளில் சொல்லப்படுகிறது. கோள்களின் சுழற்சி அதிகரிக்குமானால் கோள்களின் மோதல் ஏற்ப்பட சாத்தியம் இருப்பதாக அறிவியல் கருத்துகள் கூறப்படுகிறது.

2012 திரைப்படத்தில் கவனிக்கப்பட வேண்டிய மற்றொரு விடயம் பாதுகாப்பு கப்பல்கள். இது நோவாவின் கப்பலின் கதையின் அடிப்படையில் செய்யப்பட்டிருக்கக் கூடும். எவ்வளவு பேரை இக்கப்பலில் காப்பாற்ற முடியும் எனும் பட்சத்தில் முதலாளிதுவமும் ஆட்சியாளர்களின் கெடுபிடியும் அங்கே முந்திக் கொள்ள நினைக்கிறது. சுயநலம் பெருக்கெடுக்கிறது. ரஸ்ய நாட்டில் பேழை ஒன்று உள்ளது. இப்பேழையில் 5 புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளது. உலகம் அழிந்து போகுமாயின் இப்புத்தங்கள் அப்பேழையில் பாதுகாப்பாக இருக்குமாம். அந்த 5 புத்தகத்தில் ஒன்று திருக்குறள் என்பது குறிப்பிட தக்கது. இந்த புத்தகங்களை காப்பதை போல மனிதர்களை காக்க முடியுமா?

இப்படிப்பட்ட இடர்பாடுகளுக்கு மத்தியில் தன் குடும்பத்தை ஒரு சாமனிய வர்க்கத்தை சேர்ந்த வாகன ஓட்டி எப்படி காப்பாற்றுகிறார் என்பதை மிக அழகாக சித்தரித்திருக்கிறார்கள். இயற்கையின் சீற்றத்தின் முன் நாம் எந்த அளவுக்கு கையாளாகதவர்களாகிறோம் என்பதை போட்டில் அடித்து சொல்லப்படுகிறது.

மாயன்ஸ் நாகரீகம் பற்றிய எனது முந்தய படைப்புகள்:

பாகம் 1: மாயாக்கள் இருந்தார்களா?

பாகம் 2: உலகின் இறுதி நாள்

Thursday, November 12, 2009

சொல்லாததும் உண்மை


சரித்திரம் தனக்கு தோதாக சில வேளைகளில் வேடமிட்டுக் கொள்கிறது.

பூர்வ குடி தோழர் சொன்னார்.

கொடும் பாவிகள் சூழலிலிருந்து இருந்து தப்பித்துக் கொள்ளவே எம்மினம் தூர விளகிப் போனது என அவர் கூறினார். முன் நாட்களில் அவர்களுக்கு நடந்தவற்றை நாம் முழுமையாக அறிந்துக் கொள்ள செய்திகள் சொற்பமாகவே இருக்கிறது. எப்போதோ சொல்லி, எங்கெங்கோ பரவிய விசயங்கள் திட்டுத்திட்டாக நமக்கு கிடைக்க பெறுகிறது.

சில நூற்றாண்டுகளுக்கு முன் தோன்றிய பேரரசுகளின் சாம்ராஜிய விஸ்தரிப்பு கடல் கடந்து பல தேசங்களுக்கு நீண்டிருந்தது. கடல் வழி பயணங்கள் அதிகரித்திருந்த அவ்வேளையில் வியாபாரங்களும் அதிகரித்திருந்தது. வியாபாரம் எனும் பெயரில் சுரண்டிய செல்வங்களை வெவ்வேறு தேசங்களுக்கு இட்டுச் செல்லும் போது கடற்கொள்ளையர்களின் தொல்லை வலுத்திருந்தது. திருடனிடம் திருட்டு, திருட்டுக்கு மேல் திருட்டு என கொள்ளையர்களின் அழிச்சாட்டியம் பல்கிப் பெருகிப் போனது.

பாதுகாப்பின் பொருட்டு சாம்ராஜியபதிகள் கடல் காவலை வலுப்படுத்த முற்பட்டார்கள். பல காலமாக கொள்ளையிட்டு வாழ்ந்துவிட்டவர்கள் எங்கு போவார்கள். காவல் நெருக்கடிகளின் பாதிப்பு அதிகரிக்கவும் விட்டதை விட்டபடி அவர்கள் காடுகளுக்குள் புகுந்தார்கள். காட்டுக்குள் புகுந்தவர்கள் அங்கிருந்தவர்களின் இடங்களை ஆக்ரமிக்க எத்தனித்தார்கள். அவர்களை அழிக்கவும் செய்தார்கள். நாகரீகம் அவ்விடத்தில் இன்னமும் தன் சிறுபிள்ளை பிராயத்தில் தான் இருந்திருக்கிறது.

காட்டில் இருந்த பூர்வ குடி மக்களால் ஏன் அவர்களை எதிர்க்க முடியவில்லை? அவர்கள் இனத்தால் சிறுத்திருந்தார்களா? பலத்தால் வலுவிழந்து இருந்தார்களா? கொள்ளையர்களின் ஆயுதங்களுக்கு ஈடு கொடுக்க முடியவில்லையா? யார் இந்த கொள்ளையர் கூட்டம்? இப்போது அவர்கள் எங்கே போனார்கள்? என்ன ஆனார்கள்? எனும் கேள்விகள் உங்கள் சிந்தனைக்கு விடப்படுகிறது.

ஓர் இனம் நெடுங்காலமாக தன்னை தனிமைப் படுத்திக் கொண்டதற்கான இக்காரணங்களை அறிய மேலும் சில முயற்சிகள் தேவைப்படுகிறது. மாயா நாகரிக மக்கள், சிவப்பிந்தியர்கள் என இன்னும் பல இன அழிப்புகள் சரித்திரத்தில் தொன்றியும் மறைந்தும் இருக்கிறது.

**********

"பொதுவாவே உங்களுக்கு நிறைய உதவி கிடைக்குமே... யார் உங்களை வந்து பார்ப்பாங்க.... யாருக்கு ஆதரவா இருக்கீங்க..."

"எனக்கு காசு கிடைச்சா போதும். மத்தத பத்தி எனக்கு கவல ல்ல. அரசியல் எல்லாம் சும்மா ஏமாத்துவானுங்க... காசு கொடுத்தா வாங்கிப்பேன்... அது போதும்..."

பூர்வீக குடி தோழர் சொன்னார்.

பொருளியல் சிந்தனை. மனித நாகரீக வளர்ச்சியின் மேன்மையான சித்தாந்தம். அதில் வலுத்தவன் சமுதாயத்தின் மத்தியில் தன்னை உயர்வாக காட்டிக் கொள்கிறான். பொருளியில் அடிப்படையிலான இச்சிந்தனை எதனால் அந்த தோழரிடம் உறுவானது? எனக்கு பணம் கிடைத்தால் போதும் என்பதன் அர்த்தம் என்ன? பணம் கிடைத்தால் நான் எது வேண்டுமானாலும் செய்ய தயார் என்பதா?

***********

மலேசிய இடைநிலைப் பள்ளிகளில் பயன்படுத்தப்படும் சரித்தி புத்தகத்தை நீங்கள் தலை கீழாக கூட புரட்டிப் பார்க்கலாம். பூர்வீகக் குடியினரைப் பற்றிய செய்திகள் எத்தனை இடங்களிடல் உள்ளது. ஓரிரு ஆண்டுகளுக்கு முன் புதிதா அச்சிடப்பட்ட ரித்திர புத்தகத்தில் மலேசிய நாட்டின் பெருன்பான்மையினரின் சகோதரர்கள் இவர்கள் என எங்கோ ஒரு மூலையில் குறிப்பிடப்பட்டிருந்தது. போற்றுதலுக்குறிய விடயம் தான். சரி அதைப் பற்றி நமக்கென்ன.

போர்த்துகீரியர் ஆட்சி காலம், பிரிட்டிஷ் ஆட்சி காலம், ஜப்பானிய ஆட்சி காலம் என்பன மலாயா சரித்திரத்தில் குறிப்பிட தக்கவை. இக்காலகட்டங்களில் இவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லையா? பூர்விக குடியினரின் சிறப்பு சழுகைகள் அப்போதே வழங்கப்பட்டுவிட்டதா?

மக்களை சக்கையாக பிழிந்தெடுத்த இந்த ஆட்சியாளர்களின் பிடியிலிருந்து இவர்கள் தப்பி வாழ்ந்தார்கள் என்பது ஏற்றுக் கொள்ள முடியாதது. அக்காலகட்டத்தில் நடந்தவற்றிற்கான குறிப்புகள் இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம். அதை மீட்டெடுப்பது இப்போது சாத்தியம் தானா?

**********

உங்களில் கற்றறிந்து உயர் நிலைக்கு வந்தவர்களும் இருக்கிறார்களே என்றேன்.

பூர்வக் குடி தோழர் சொன்னார்.

பொருளியல் தோடல் அதிகரித்த போது மக்கள் வெளி வர ஆரம்பித்தார்கள். அக்காலகட்டங்களில் மதம் சார்ந்த அமைப்புகள் சில ஆங்காங்கு பல உதவிகள் செய்து வந்தார்கள். பெயர் மாற்றம், மதம், புதிய நம்பிக்கை என சமூகத்தில் மாற்றங்கள் பரவலாக நடந்து வந்தது. இவர்களின் வழி சமூகத்தில் கல்வி, பொருளாதாரம் வாழ்க்கை முறை என புதிய சிந்தனைகள் பரிநாமம் பெற்றது.

இவ்வமைப்புகளைக் கண்டு அச்சம் கொண்டவர்களும் உண்டு. நம்மை மாற்றி ஏதாவது செய்துவிடுவார்களோ என மூத்த குடியினர் பயந்தார்கள். இன்னமும் பலருக்கு பயம் இருக்கிறது. அவர்களிடம் இருந்து இலகுவாக உதவி கிடைக்கும்படி இருப்பினும் அவர்களின் மதம் எனும் போர்வையை போர்த்திக் கொள்ளாத வரையில் கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு மட்டுமே கருணை கிட்டும் என சொல்லி அமைதிகாத்துவிடுகிறார்கள்.

**************

சென்ற நூற்றாண்டின் பிற்பகுதியில் சுற்றுலா துரைக்கு மவுசு கூடிற்று. காலப் போக்கில் பூர்வக் குடி மக்களின் வாழ்வும் கலாச்சார முறைகளும் சுற்றுலா துரைக்கு கொண்டு வரபட்டது.

பூர்வக் குடி தோழர் சொன்னார்.

இதன் வழி பூர்வக் குடி மக்கள் பொருள் சம்பாதித்துக் கொள்ள வழிவகுத்தது. பிள்ளைக் கறி கேட்ட கதையாக பெண் சதை வியாபாரமும் ஆங்காங்கு நடந்துக் கொண்டு தான் இருக்கிறது. இதில் யாரை குறை சொல்ல முடியும். அடிதட்டு மக்களும் வாழ்ந்தாக வேண்டிய நிலை. வயிற்றைக் கழுவ அவர்களுக்கும் பணம் தேவைபடுகிறது. சரி தவறென்பது அவர்களின் சிந்தனைக்குட்பட்டது. நான் சொல்லி ஏதுமில்லை என்றார்.

************

மருத்துவ வசதிகள் குறைவாக இருக்கும் இடங்களில் இருப்பவர்கள் அதை எப்படி சமாளிக்கிறார்கள்.

பூர்வக் குடி தோழர் சொன்னார்.

பொரும்பான்மையாக இயற்கை உணவுகளை எடுத்துக் கொள்வதால் அடிக்கடி உடல் நல பாதிப்பு ஏற்படுவது குறைவாக இருக்கிறது. சளி, காய்ச்சல் போன்றவற்றை பெரிதாக கருதுவதில்லை. அவற்றைப் போக்க சில இயற்கை உணவுகள் சாப்பிடப்படுகிறது.

.......

பூர்வீகக் குடியினரில் இயற்கையாக மரணம் ஏய்துபவர்கள் பலரும் மத்திம வயதினரைக் கொண்டவர்களாக இருக்கின்றனர். இவர்களது முகத் தோற்றம் உடல் அமைப்பு போன்றவற்றிற்கு மரபணு எவ்வளவு தூரம் காரணமாக இருக்கிறதோ அதே போல இவர்களின் மரணத்திற்கு அதுவே காரணமாக சொல்லப்படுகிறது. ஊது குழாய் வழி வேட்டையாடிய உணவுகளை சாப்பிடும் போது அதன் நச்சுத் தன்மை பாதிப்புகளை ஏற்படுத்துவதாக சில மருத்துவ குறிப்புகள் உள்ளன. இக்காலத்தில் ஊது குழாய் வேட்டை குறைந்திருப்பினும் அதன் பாதிப்பு இருக்கவே செய்கிறது.

*************

டுரியான் மற்றும் மங்குஸ்தின் பழ காலங்களில் வெளி வேலையில் ஈடுபட்டிருப்போரும் அதற்கு விடுப்பு எடுத்துக் கொண்டு, பழ வியாபார வேட்டையில் இறங்கி விடுகிறார்கள். தினமும் கிடைக்கும் கைக்காசு மட்டும் காரணமல்ல. சாதாரண வேலையை விட இதில் ஈட்டும் தொகை அதிகம்.

பழ காலத்தில் பூர்வக் குடி தோழர் அவரிடம் அழைத்துச் சென்றிருந்தார். அந்தி சாய்ந்த வேலையில் ஓரிரு நண்பர்களோடு கைவிளக்கு எடுத்துக் கொண்டு நீர்வீழ்ச்சியின் பகுதிக்கு நடை பயணப்பட்டோம். சுற்றுலா மையமாக்கப்பட்ட அவ்விடம் பயணிகளுக்கு அவ்வேளையில் மூடப்பட்டிருந்தது.

"இது தான் சரியான நேரம், கருக்கிருட்டு நேரத்தில் வரக் கூடாது. 'டத்தோ' இருக்கும்" என்றார்.

அவர்கள் கையில் இருந்த விளக்குகளை நீரோட்ட பகுதியில் இருந்த பாறைகளின் இடுக்குகளில் ஒளியிட்டு அடித்தபடி நடந்தார்கள்.

நகைகளை களையாமல் நிர்வீழ்ச்சி பகுதிகளில் குளிப்பவர்களின் ஆபரணங்கள் அடித்துச் செல்லப்பட்டு இப்படி பாறைகளின் இடுக்குகளில் மாட்டிக் கொள்ளும். இருட்டிய வேளையில் விளக்கொளி படும்போது நகைகள் மினுக்கும். இப்படியும் இவர்களின் பொருளியல் தேடல்கள் அமைகின்றன.

*********

பூர்வக் குடி தோழர் கேட்டார்.

எங்களைப் பற்றி எழுதப் போவதாக சொன்னாயே? புனைவா அல்லது நிஜமா?


******************************************************************


பார்வைக்கு சில சுட்டிகள்:

http://malaysiana.pnm.my/Alat%20Tradisonal/buru_sumpitan.htm

http://en.wikipedia.org/wiki/Orang_Asli

http://www.malaysiasite.nl/orangeng.htm