Friday, December 26, 2008

கொசுறு 26/12/2008

இன்றய தினம் ஆழிப் பேரலையில் (சுனாமியில்) இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் பொருட்டு சாணியடி சித்தர் 'பிசி'யாக இருப்பதால் இவ்வார சித்தர் தத்துவத்திற்கு சிறப்பு விடுமுறை கொடுக்கப்பட்டிருக்கிறது. சுனாமியில் இறந்தவர்களுக்கு எனது மனமார்ந்த அஞ்சலி.
************************

நேற்றய தினம் கிறிஸ்துமஸ் பண்டிகையை இனிதே கொண்டாடிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் எனது வாழ்த்துக்கள். சேவியர் அண்ணுக்கும் ஜோசப் அண்ணனுக்கும் சிறப்பு வாழ்த்துகள். சிறப்பு வாழ்த்து சொல்பவர்களுக்குச் சிறப்பு பரிசு கொடுப்பதாக இருவரும் சொல்லி இருக்காங்க.
*******

டைரி எழுதுவதை ஓர் அருங்கலையாகக் கருதுகிறார்கள். இப்பழக்கம் வெள்ளையர்களிடம் ஆரம்பித்ததாகக் கூறப்படுகிறது. நமது அரசர்களின் கல் வெட்டுகள் கூட அவர்களின் டைரி என்பதாகவே எனக்குக் கருத தோன்றுகிறது. ஆரம்பக் காலங்களில் மருத்துவர்கள் வழக்கறிஞர்கள் போன்றோர் டைரி குறிப்பு எழுதுவதை பழக்கமாக்கி வைத்திருந்தார்கள். பின்னாட்களில் அரசியல்வாதிகள், பேச்சாளர்கள், சிறைக் கைதிகள் போன்றோர் எழுதிய நாட்குறிப்புகள் பிரசித்தி பெற்றும் இருக்கிறது. இந்நாட்களில் நாட்குறிப்பு எழுதும் பழக்கம் மக்களிடையேக் குறைந்து காணப்படுகிறது.

பள்ளி காலத்தில் என் நண்பனொருவன் நாட்குறிப்பு எழுதி வந்தான். ஒரு நாள் அக்குறிப்பு அவன் அப்பா கையில் கிடைக்கவும், பையன் மறுநாள் பள்ளிக்கு சின்னாபின்னமாகி வந்தான். ஏன் எனக் கேட்கிறீர்களா? அவனது நாட்குறிப்பில் நாள் ஒன்றுக்கு எத்தனை சிகரெட் பிடித்தான், எங்கே யாருடன் பிடித்தான் என்பதை தெளிவாக எழுதியது தான் காரணம்.

வருட ஆரம்பத்தில் பலருக்கும் டைரி பரிசாக கிடைத்திருக்கும். எனக்கு இது வரை 5 டைரிகள் கிடைத்திருக்கின்றன. நாட்குறிப்பு எழுதும் பழக்கம் இல்லை. இந்நாள் வரை டைரிகளில் கவிதைகளை மட்டுமே நிரப்பி வருகிறேன்.
**********

தமிழ்மணத்தின் விருதுகள் 2008 ஆரம்பமாகியுள்ளது. பதிவர்கள் பலரும் தங்களின் படைப்புகளில் சிறந்த பதிவினை பரிந்துரைக்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்கள். மின்னூடகத்தை அனைவரும் சிறந்த முறையில் பயன்படுத்திட அவர்களின் இம்முயற்சி பாரட்டதக்கது. நானும் எனது பதிவுகள் சிலவற்றை பரிந்துரை செய்துள்ளேன். மறவாமல் ஓட்டு போடவும்.
*********

அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிகளால் உலகில் ஆங்கங்கு பிரச்சனைகள் துளிர்ப்பதை தினமும் பார்க்க முடிகிறது. இந்தியா பாக்கிஸ்தான் போர் இப்போதோ இல்லை அப்போதோ என வெடிக்கும் தருவாயில் இருக்கிறது.

இந்நிலையில் ஏ.எஃப்.பி தளத்தில் சமீபத்தில் படித்த தகவல் ஒன்று. அரசியல் பிரச்சனையால் பாங்காக்கில் பாலியல் தொழில் படு மோசமாக வீழ்ச்சி கண்டுள்ளதாம். 50% கழிவு கொடுத்திருப்பினும் மக்கள் ஆர்வம் காட்டாததால் பல பாலியல் வியாபார மையங்கள் பலவும் பாயை சுருட்ட ஆரம்பித்துவிட்டனவாம். தாய்லாந்துக்கு சுற்றுபயணிகளின் வருகையும் கணிசமான அளவில் குறைந்துள்ளதாக தகவல்கள் தெரிவித்துள்ளன.
*****

திரைப்படம் பார்த்து வெகு நாட்களாகிறது. சமீப காலமாக ஈப்போ பக்கம் எந்தத் தமிழ்ப் படமும் திரைக் காண்பதில்லை. பொம்மலாட்டம் படம் இரசிக்கும்படி இருப்பதாக கேள்விப்பட்டேன். திரையரங்கில் காண முடியவில்லை என்றாலும் இணையத்தில் பார்க்கலாம் என நினைத்தேன். 'ப்ஃபர்' செய்து வருவதற்குள் தாவு தீர்ந்ததால் அதை பார்க்காமல் இருப்பதே மேல் என நினைத்து அடைத்துப் போட்டேன்.
*****

அறிவால் செய்து முடிக்கும்
அற்பச் செயலையுங் கூட
அரிவாள் கொண்டு
செய்து முடிக்கும்
அற்புத ஓரினம்
அருமைத் தமிழினம்!
****

இனி இவ்வாண்டு கொசுறு எழுதுவதில்லை எனும் முடிவோடு விடைபெறுகிறேன். நன்றி.

Tuesday, December 23, 2008

காடுகளை அழிக்கும் ரப்பர்

யூனான் 'Yunnan' சீன தேசத்தில் அறியப்பட்ட ஓர் இடம். நாளுக்கு நாள் இங்கு காடுகள் அழிக்கப்பட்டு வருகின்றன. அதற்கான காரணம் யாது? முடிச்சுகளை அவிழ்த்துக் காண்கையில் இப்போது இக்கட்டுரையை படிக்கும் நீங்களும் நானும் கூட அதில் சம்பந்தப்பட்டிருப்போம்.

யூனான் பகுதியில் தாழ்ந்த நிலபரப்பில் அமைந்திருந்த காடுகள் பரவலாக அழிக்கப்பட்டுவிட்டது. இப்போது காணுமிடமெங்கும் ரப்பர் மரங்கள் நடப்பட்டுள்ளன. இடங்கள் போதாமல் மேடான பகுதிகளும் மெல்ல மெல்ல அழிக்கப்பட்டு வருகிறது. அவ்விடங்களிலும் இரப்பர் மரங்களை நடுவதற்கான ஏற்பாடுகள் நடந்த வண்ணம் இருக்கிறது.

சீன தேசத்தில் உந்துகளின் வட்டை(Tyre) உற்பத்தி அதிகரித்து வருகிறது. சீன தேசத்துப் பொருட்களுக்கு செல்வாக்கு அதிகம். அதற்கு காரணம் மலிவான முறையில் விற்பனை காணும் பொருட்கள். வெளிநாட்டிளும் உள்நாட்டிளும் வட்டைக்கான கோரிக்கை அதிகரித்துள்ளது. போதாமையின் காரணமாக யூனான் காடுகள் அழிக்கப்பட்டு அங்கு இரப்பர் மரங்கள் நடப்பட்டு வருகிறது.

சிசுவாங் பன்னா 'Xishuang-banna', யூனானில் அமைந்துள்ள ஒரு வட்டாரமாகும். இவ்வட்டாரத்தின் காட்டுப்பகுதிகளில் பலதரபட்ட விலங்குகளும் தாவரங்களும் உள்ளன. ரப்பர் வேளான்மையின் அதீத வேகத்தால் இவை பெரும் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறது.

முப்பது ஆண்டுகளுக்கு முன் 'சிசுவாங் பன்னா' பகுதியில் 70 விழுக்காடு காடுகளும், மலைகளும் நிறைந்திருந்தது. சிசுவாங் பன்னா சீனா மற்றும் மியன்மார் தேசத்தின் எல்லையில் உள்ளது. இன்றைய நிலையில் 50 விழுக்காடு காடுகள் அப்பகுதியில் அழிக்கப்பட்டுவிட்டன.

ஒர் அதிகாரப்படி செய்தியில் யூனான் பகுதியில் மட்டும் 334,000 எக்டர் பரப்பளவில் ரப்பர் மரங்கள் நடவு செய்யப்பட்டுள்ளன. இது சீனவில் இருக்கும் மொத்த ரப்பர் வேளான் பகுதிகளில் 43 விழுக்காடாகும்.

2007-ஆம் ஆண்டு மட்டுமே சீன தேசத்தில் 2.35 டன் இரப்பர் உபயோகிக்கப்பட்டிருக்கிறது. இதற்காக தாய்லாந்து, மலேசியா மற்றும் இந்தோனேசியா போன்ற நாடுகளில் இருந்து சுமார் 70 விழுக்காடு இரப்பர் சீனாவால் வாங்கப்பட்டிருக்கிறது.

உள்நாட்டு வட்டை தயாரிப்பிற்காகவும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும் கடந்த 2000-ஆம் ஆண்டு முதல் அதிகமான கோரிக்கைகள் ஏற்பட்டது. இது ஒரு புரம் அவர்களுக்கு மகிழ்ச்சியான விசயமாக அமைந்தாலும் ரப்பர் உற்பத்திக்காக மெற்கொண்டுள்ள முயற்சிகள் அவர்கள் நாட்டின் இயற்கைக்கு பாதகமாகவே அமைந்துள்ளது.

2007-ஆம் ஆண்டு 330கோடி வட்டைகள் சீனாவில் உருவாக்கப்பட்டது. அதில் 50 விழுக்காடு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. குட் இயர் (GoodYear), கண்டினென்டல் ஏ.ஜி மைக்ஹெலின் (Continental AG Michelin), பிரிட்ஜ் ஸ்டோன் (Bridgestone) போன்ற உலகப் புகழ் பெற்ற வட்டை நிருவனங்களும் கூட தங்களது உற்பத்தியை சீனாவில் தொடங்க திட்டமிட்டுள்ளன. இதற்கு காரணம் மலிவான உற்பத்தி மட்டுமல்ல. அதிகமாக லாபம் ஈட்டும் நோக்கமும் தான்.

இக்கோரிக்கைகளை நிறைவேற்றும் நோக்கில் சீனா தனது இரப்பர் உற்பத்தியை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளது. 2010-ஆம் ஆண்டை இலக்காக கொண்டு தமது உற்பத்தியை 30 விழுக்காடாக அதாவது 780 000 டன் அதிகரிக்க முயற்சிப்பதாக சீன இரப்பர் உற்பத்தி இயக்கம்(China Rubber Industry Association) தெரிவித்துள்ளது.

இருப்பினும் ரப்பரின் உற்பத்திக்கு உகந்த நிலப் பகுதி தென் சீனாவில் அமைந்திரிக்கும் யூனான் போன்ற இடத்தில் மட்டுமே இருக்கிறது. இது அவர்களுக்கு பெறுத்த ஏமாற்றமே. கிடைத்த சிறு பகுதி நிலத்தையும் முடிந்த அளவு பயன்படுத்திக் கொள்ள நினைக்கிறார்கள்.

1967-ஆம் ஆண்டு முதல் 2003-ஆம் ஆண்டு வரை 67 விழுக்காடு மழைக் காடக வனப்பகுதிகள் ரப்பர் உற்பத்திக்காக அழிக்கப்பட்டிருக்கின்றன. யூனான் பகுதிகளில் இயங்கிவரும் ரப்பர் உற்பத்தியாளர்களே காடுகளின் அழிவிற்கு பொறுப்பாளிகள் என்பதனை ஒரு ஆய்வு நிருவணம் வெளியிட்டது.

யூனான் நேச்சுரல் ரப்பர் இண்டாஸ்டிரியல் (Yunnan Natural Rubber Industrial) அப்பகுதியில் இயங்கி வரும் மிகப் பெரிய இரப்பர் உற்பத்தியாளர்கள். ஆய்வு நிருவனத்தின் அறிக்கையை மறுக்கும் இவர்கள் ரப்பர் உற்பத்தியை வேளான் நிலத்திலும் மற்றும் அரசு இசைவுப் பெற்ற நிலப்பகுதிகளில் மட்டுமே மேற்கொள்வதாக அறிவிக்கிறார்கள்.

சீனாவில் வளர்ந்து வரும் பல ரப்பர் நிருவணங்கள் வெளிநாடுகளிலும் ரப்பர் தோட்டங்களை உருவாக்கி தங்கள் உற்பத்தியை அதிகரிக்க வழி கண்டு வருகின்றன.சமீபத்தில் மியன்மாரில் 1333 எக்டர் பரப்பளவில் இரப்பர் தோட்டம் ஒன்றை சீன நிருவணம் நிருவியுள்ளது. இதன் பயன்பாட்டை இன்னும் ஆறு அல்லது ஏழு வருடங்களில் அவர்கள் அனுபவிக்க முடியும்.

தற்சமயம் அப்பகுதிகளில் பரவலான முறையில் போப்பி மரங்கள் பயிர் செய்யப்பட்டுள்ளன. இன்னும் சில காலங்களில் அவற்றுக்கு மாற்று பயிராக ரப்பரை பயிர் செய்யவும், 1333 எக்டர் பகுதியை 33,333 எக்டராக விரிவுபடுத்தவும் அந்நிருவணம் திட்டமிட்டுள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக ரப்பரின் விலை உயர்வு யாவரும் அறிந்ததே. அதைக் காரணமாகக் கொண்டு இயற்கையை பாழ்படுத்துவது வருந்ததக்க மற்றும் கண்டிக்கதக்கச் செயலாகும். இன்றைய பொருளாதார பாதிப்பில் ரப்பரின் விலை சுனக்கம் கண்டுள்ளது. இதனை சீனா மேற்கொள்ளப் போகும் யுக்தியை பொருத்திருந்து காண்போமாக.

(பி.கு: 21.12.2008 தமிழ் ஓசை நாளிதழில் வெளிவந்த எனது கட்டுரை)

Monday, December 22, 2008

சாண்டில்யனின் - விலை ராணி

நூல்: விலை ராணி
ஆசிரியர்: சாண்டில்யன்

நயம்: சரித்திர நாவல்
வெளியீடு: வானதி பதிப்பகம்

சந்திரகுப்த மௌரியரின் வரலாற்றை அடிப்படையாக கொண்டு அமைந்திருக்கும் நாவல் விலை ராணி. நாவலின் பெரும்பகுதி மௌரிய பேரரசின் விரிவாக்கத்திற்காக சந்திரகுப்தன் மெற்கொண்ட போர் காலகட்டத்தில் கதை நகர்த்தப்படுகிறது. சாண்டில்யனின் மற்ற நாவல்களை காட்டினும் இந்நாவலில் அவரின் எழுத்து நடை முற்றிலும் பல வேறுபாடுகளைக் கொண்டு அமைந்துள்ளது. தேக்கம் இல்லாத விறுவிறுப்பான நடை. அடுத்தடுத்த கட்டங்களுக்கு சட்டென பாய்ந்து செல்லும் முறையும் படிப்பவரின் ஆவலை ஆட்கொள்கிறது.

மன்னன் மகள் நாவலில் கௌடில்யரின் அர்த்த சாஸ்திர முறையிலான போர் தந்திரங்கள் பரவலாக விவரிக்கப்பட்டிருக்கும். விலை ராணியில் அர்த்த சாஸ்திரியான சாணக்கியரைப் பற்றிய வரலாறும் இணைக்கப்பட்டிருப்பது கதைக்கு பெரும் பலம்.

கிரேக்க சாம்ராஜ்யாதிபதி அலேக்செண்டரால் விட்டுச்செல்லப்பட்ட பாரத நாட்டினை கண்முன் கொண்டு வரும் யுக்தியும் மிகச் சிறப்பு. வீரகுப்தன், விலைராணி பிரபாவதி தேவி, ஆண்டரி போன்ற கற்பனை கதாபாத்திரங்கள் நாவலுக்கு வலு சேர்க்கும் விதமாக அமைக்கப்பட்டிருக்கிறது.

விலை ராணி எதனால் உருவாகிறாள்? தட்சஷீலத்தில் பெண்களை விற்பனை செய்யும் சந்தை ஒன்று அக்காலகட்டத்தில் இருந்ததிற்கான சரித்திர கூறுகள் ஊண்டு. அதை மக்களிடம் தெரிவிப்பதையும் கருத்தில் கொண்டு ஆசிரியர் செயல்பட்டிருக்கிறார். அப்படி விற்பனை செய்யப்படும் பெண்களை பல நாட்டவரும் வாங்கிச் செல்கிறார்கள். வாங்கிச் செல்லப்படும் பெண்கள் அடிமைகளாகவும், மனைவியாகவும் உரிமையாளர்களால் ஏற்றுக் கொள்ளப்படுகிறார்கள்.

அரசியல் நோக்கத்திற்காக திருமணச் சந்தையில் தன்னை விற்பனை பொருளாக்கிக் கொள்கிறாள் விலை ராணி. இக்கதையில் வீரகுப்தனும், சந்திரகுப்தனும் நாயகர்களாக காட்டப்படுகிறார்கள். ஆனால் அதன் பின்னனியில் பெரும் தூண்டுகோளாக செயல்படுகிறார் சாணக்கியர்.

பாடலீபுத்ர நாட்டின் மீது கொள்ளும் படையெடுப்பே இந்நாவலின் உச்சகட்டமாக அமைகிறது. அது போக சாணக்கியரின் சபதம் சுய இலாபத்தின் பேரில் அமைந்துவிடுவதாகவும் எண்ணச் செய்கிறது. ஆபத்து சூழ்ந்த வேளையிலும் விலை ராணியோடு காம இச்சை கொள்வதை போல் சித்தரிக்கப்படும் வீரகுப்தனின் போக்கு அதிகபடியானதே.

காதல், நட்பு, சகோதர பாசம், அரச விசுவாசம், சாணக்கிய தந்திரம் என பலவற்றையும் கொண்டு இந்நாவல் அலசப்பட்டிருக்கிறது. மௌரிய பேரரசின் வெற்றிக்கு சாணக்கிய தந்திரமே வித்தாக அமைந்துள்ளது என்பதை ஆசிரியர் முன்மொழிகிறார். இந்நாவல் சந்திரகுப்த மௌரியரின் இளமை கால வாழ்க்கையை அறியாதவர்களுக்கு அதை முழுமையாக உணர வைக்கும்.

Wednesday, December 17, 2008

கொசுறு 17/12/2008

இந்த ஆண்டு இதையெல்லாம் செய்ய முடியலை என சொல்வது 'நெகடிவ் அப்ரோச்' அடுத்த ஆண்டு இதையெல்லாம் செய்துவிடுவேன் என சொல்வது 'பாசிடிவ் அப்ரோச்' என சாணியடி சித்தர் சொல்லி இருக்கிறார்.
****

ஆட்களை காட்டுபவர் என பெயரிட்ட பதிவர் ஒருவர் தற்சமயம் சிங்கையில் இருக்கிறார். மலேசியா வாந்தால் சொல்லுங்கள் சந்திக்கலாம் என்றேன். சந்திக்கலாம் போட்டோ எடுக்காதீர்கள் என்றார். ஏன் என்றேன். 'என் பொண்டாட்டி மூழுகாம இருக்கா, உன் பொண்டாட்டி என்னவா இருக்கா' என்ற சண்டைகள் விளையாமல் இருக்க போட்டோவை தவிர்ப்பது நன்று என்றார்.
****

பல பதிவர்களையும் இணைத்து கதை எழுதிய இவர், நெருங்கிய தொடர்பிலிருக்கும் என்னை மறந்துவிட்டார். இருக்கட்டும் பார்த்துக் கொள்கிறேன்.
****

பெர்னாட்ஷா உலக அறிஞர்களுள் ஒருவர். பரவலாக புத்தகம் படிக்கும் பழக்கம் கொண்ட இவர் ஆழ்ந்து கற்று தேறியது இரண்டே நூல்கள் தான். ஒன்று பைபில் இன்னொன்று ஷெக்ஸ்பியர் இலக்கியம்.
****

அண்மையில் தமிழ்மணத்தில் நடந்தேறிய தடல்புடல் சண்டைக்கு குரு பெயர்ச்சி காரணமா? தீவிர ஆலோசனைகள் நடந்தேறுகிறது.
****

சோ சொன்னது, நான் தம்பிகளுக்கெல்லாம் அண்ணன், அண்ணன்களுக்கெல்லாம் தம்பி, எப்படி முன்னால் பிறப்பவன் அண்ணன்,பின்னால் பிறப்பவன் தம்பி -எப்படி தத்துவம்?
****

புத்தகங்கள் எக்கச் செக்கமாக சேர்ந்துவிட்டது. படித்து முடித்துவிட்டு வாங்கிக் கொள்ளலாம் என்றே நினைக்கிறேன். ஆனால் சில சமயங்களில் புத்தகக் கடை பக்கம் போகும் வேலைகளில் கையை வைத்துக் கொண்டு சும்மா இருக்க முடியாமல் எதையாவது தேடி பிடித்து வாங்கிவிடுகிறேன்.
*****

ஞாயிற்றுக் கிழமை 14/12/2008 திரு.கோவி அவர்கள் சிகை அலங்காரம் செய்துள்ளார் மற்றும் வீட்டில் முருங்கைக்காய் சாம்பார் அவரே சமைத்துள்ளார். ரம்பா வீட்டில் நாய் குட்டி வாங்கிய செய்திகளையெல்லாம் நாளிகையில் போடுகிறார்கள். கோவியாரை பற்றிய இச்செய்தி மிகையில்லை என்றே கருதுகிறேன்.
*****

இவ்வருடம் வலைப்பதிவில் விடுபடாமல் தொடர்ந்து எழுதுகிறேன். பத்திரிக்கையில் எழுதும் வாய்ப்பும் அமைந்தது மகிழ்ச்சியை அளிக்கிறது.
****

இந்த சுட்டி அருண் (தமிழ் சினிமா டாட் கோம்) திருந்துவதாக தெரியவில்லை. நேற்றுவரை அவருடைய விளம்பர பின்னூட்டம் வந்துக் கொண்டே இருந்தது. சொல்லியும் கேட்காத இவர்களை என்னதான் திட்டுவது என்றே தெரியவில்லை.
****

இவள் என்ன கண்ணகியோ?
ஒரு முறை உரசியதற்கே
பற்றி எரிகிறாள்
மானமுள்ள தீக்குச்சி. -அன்புடன் மடற்குழுமத்தில் சங்கர் எழுதியது.
******

சமீபத்தில் முடிவிலான் எழுத்துக்கள் பக்கத்தில் படித்த அனந்தனின் சிறுகதை கவரும் வண்ணம் இருந்தது. வினாக்களோடு சில கனாக்கள் எனும் அக்கதையில் வரும் ஒரு உரையாடல். நல்ல நகைச்சுவை.

"மறவ், இங்கே பாரேன். இந்த போட்டோல இருப்பது யாருன்னு சொல்லு,"என்றாள்.

வழியில் செல்லும் ஓணானை மடியில் கட்டாமல் விட மாட்டாள் போலிருக்கே. அசடாய் சிரித்துக் கொண்டு,

"உங்கப்பாவோட சிறு வயது போட்டோவா? நல்லா இருக்காரு"

"ஷீட்... கெக்கபுக்க கெக்கபுக்க"சிரித்தாள்
.
*******

சமீபத்தில் , 'வந்த நாள் முதல் இந்த நாள் வரை வானம் மாறவில்லை' எனும் கண்ணதாசன் பாடலைக் கேட்டேன். அதில் வரும் சில வரிகள்:

முதல் வரி:
மலரும் மண்ணும் கொடியும் சோலையும்
நதியும் மாறவில்லை; மனிதன் மாறிவிட்டான்!

அடுத்த வரி:
கையளவுதானே இதயம் வைத்தான்
கடல்போல அதில் ஆசை வைத்தான்
மெய்யும் பொய்யும் கலந்துவைத்தான் - அதில்
மானிடர் தர்மத்தை மறைத்து வைத்தான் - ஏனோ
மனிதன் மாறவில்லை - அவன்
மயக்கம் தீரவில்லை

மனிதன் மாறிவிட்டானா? மாறவில்லையா?
மாறியும் இருக்கிறான் மாறாமலும் இருக்கிறானா?

Tuesday, December 16, 2008

இறைவனுக்கு ஒரு கடிதம்!!

இறைவனுக்கு வணக்கம்,

நீ எதையும் கண்டு கொள்ளாமல் இருமாப்புடன்தான் இருக்கிறாய். இந்த ஆறறிவு அறிவு ஜீவிகளை நினைக்கையில் தான் பெருமிதமாக இருக்கிறது. உன் பெயரைச் சொல்லிக்கொண்டு அடிதடியில் இறங்கிவிடுகிறார்கள். என்னைக் கேட்டால் உலகில் மிகப்பெரிய வன்முறைக் கும்பல் தலைவன் நீ தான் என்பேன். ஏன் என்று கேட்கிறாயா? மௌனத்தை துணை கொண்டு சாதனை செய்பவன் அல்லவா நீ! அதுதான் காரணம்.

ஒரு கிழவனைக் கண்டேன். அவனுக்கு 80 வயதுக்குமேல் இருக்க வேண்டும். நினைவு தெரிந்த நாளில் இருந்து உன்னை வழிபடுகிறானாம். ஏன் என்றேன். நீ நல்லது செய்வாய் என்ற நம்பிக்கை என்றான். பார், தன் மேல் இருக்கும்
நம்பிக்கையைவிட உன் மேல் தான் அதிக நம்பிக்கை வைத்துள்ளது மனித குலம். அந்த மனிதனின் விசுவாசத்திற்கு நீ பதில் சொல்வாயா? இங்குள்ள சிலர் அவனுக்கு பதில் சொன்னார்கள். அவன் மடையன் என்று. ஆனால் அவனுக்கோ இன்னமும் அந்த பதிலில் திருப்திதான் இல்லை.

உனது பக்தர்கள் தன் சக மனிதனுக்கு உதவுவதைவிட உன்னிடத்தில்தான் கொட்டிக் கொடுக்கிறார்கள். பிரச்சனைகளையும், சம்பாதிக்கும் செல்வங்களையும் சமபங்கில். மடிந்து போகும் மனிதனுக்கு மண்டையில் மயிர் இருக்கும் அளவிற்கு மதி நுட்பம் இருப்பதில்லை. கோடிக்கணக்கில் தானம் செய்து உனக்கு கோவில் கட்டுகிறான். தெருக்கோடியில் நிற்கும் அனாதையை மறந்துவிடுகிறான்.

"அன்பின் வழிய துயிர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு"
குறள் எண்: 80
அன்புடமை (இல்லறவியல்)

என்று வள்ளுவர் சொல்கிறார். ஆனால் இங்கோ நிலைமை அப்படி இருக்கவில்லை. நாளுக்கு நாள் குற்றச்செயல்கள் சவரம் செய்த தாடியைப் போல் சடசடவென வளர்ந்து கொண்டே இருக்கிறது. ஒன்று போனால் இன்னொன்று என்பது போல் புதிது புதிதாக குற்றச் செயல்கள்.

''பெருநெறி பிடித்தொழுக வேண்டும் மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும்''
-அருள் பிரார்த்தனை

என வள்ளலார் தமது அருள் பிரார்த்தனையில் சொல்கிறார். இங்கோ உனக்கு ஏகப்பட்ட மதங்கள். மனிதனுக்கு தொண்டு செய்ய மதம் இருப்பின் பழுதில்லை. இங்கோ உனக்கு தொண்டு செய்ய மதங்கள் இருக்கிறது. உனக்கு நகை அணிவிக்க வேண்டும் என்கிறான், சட்டை போட வேண்டும் என்கிறான், தூக்கி வைத்துக் கொண்டு ஊர்வலம் போக வேண்டும் என்கிறான். நீயே சொல் இறைவா, நீ என்ன முடமா? முடமாய் கிடப்பவனுக்கு கூட இந்த மனிதர்கள் இவ்வளவு சேவை செய்வதில்லை போ.

என் இறைவனே,

உயரிய இடத்தில் இருக்க வேண்டிய உன் உணர்வு சந்தைக் கடை, சாக்கடை என படி இறக்கம் கொண்டே போகிறது. இதற்கு காரணம் நீயா இல்லை இந்த மனிதர்கள் தானா என்பது தெரியவில்லை. எல்லாம் இறைவன் செயல் என்றும் சொல்கிறார்கள், சில வேளைகளில் மனிதனின் அறியாமை என்றும் சொல்கிறார்கள். இறைவன் தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான் என்கிறார்கள். அப்படிப்பட்ட இறை தன்னுள்ளும் இருக்க வேண்டும் என்பதை சிந்திக்க மறுக்கிறார்கள்.

உன்னை கோவிலில் சிலையாக வைத்து வழிபடுகிறார்கள். நீ தூரத்தில் இருக்க வேண்டியவன் தானா? அப்படி உன்னை சிலையாக வழிபடுபவர்கள் கூட அந்த சிலையை அணுக பல தடைகள். இதற்கு யாரை நீ குறை சொல்ல போகிறாய்? நான் கேட்பது ஒன்று தான் என் நண்பனாக எனக்குள்ளே என்னோடு இரு என் மனசாட்சியாக, நன்நெறி போதகனாக, சூது அறியச் செய்பவனாக. நீ உச்சத்தில் இருக்கவும் வேண்டாம், தாழ்ந்திருக்கவும் வேண்டாம்.

''ஆதித் தமிழன் ஆண்டவனானான் மீதி தமிழன் அடிமைகளானான்'' என்கிறார்கள். பக்தர் எனும் பேரில் நான் உன் அடிமையாய் இருக்க விருப்பம் கொள்ளவில்லை. எதற்கு இந்த உயர்வு தாழ்வு நிலை. அதை உருவாக்கியவனும் நீதானா?

மனிதன் தவறு செய்கிறான். தவறுக்கு தண்டனை பெறுகிறான். தெய்வம் தண்டித்தது என்கிறார்கள். தண்டித்தது நீயானால் தவறு செய்ததும் நீயே. எதனால் இந்த கபட நாடகம்.

நீ இன்று கவிஞர்களின் விளையாட்டுப் பொருளாகிவிட்டாய்.

இல்லாத
இறைவன் போல்
இடைகொண்ட பெண்னே!

என்கிறான் ஒரு கவிஞன். பாடலில் தான் இப்படி என்றால் திரைபடங்களிலும் அப்படி தான். உன் பெயரால் மனிதனுக்கு மதம் பிடித்துவிட்டது. மாற்றான் மதம் பிடிக்காமல் போய்விட்டது. மதமில்லாமல் உன்னைக் காண இங்கு பலருக்கும் விருப்பமில்லை.

பிரச்சனைகள் இருந்தால் தான் கடவுளை நினைப்பார்கள் என்கிறான் ஒருவன். நினைப்பது நீதியாக இருந்தாலும் பரவாயில்லை. பிரச்சனைகளை தீர்க்கும் பேரில் உனக்கு லஞ்சம் கொடுக்கப்படுகிறது. லஞ்சம் கொடுத்தால் தான் நீ உதவுவாய் என்று கூறி பஞ்சம் பிழைக்கிறது ஒரு கூட்டம். இப்படிபட்ட பார்வையில் நீ இந்த பூமியில் அவசியம் தானா என்று சொல்?

பேச எவ்வளவோ தோன்றுகிறது. இப்போதைக்கு இது போதும். தவறுகள் நேரும் போது இன்னும் கடிதங்கள் எழுதுவேன். உன்பேரில் என்னை நான் கேள்விகள் கேட்டுக் கொள்ள.

Monday, December 15, 2008

மலேசிய தமிழ்ப் பதிவர் சந்திப்பு அனுபவமும் சில குறிப்புகளும்!!

ஞாயிற்றுக் கிழமை. பலரும் சோம்பல் முறிக்கும் நாளாதலால் சாலையில் அதிகமான வாகனங்கள் இல்லை. கோலாலம்பூருக்கான பயணம் துரிதமாக அமைந்தது. காலை 11.30க்குள் கோலாலம்பூரை அடைந்துவிட்டேன். பத்து நிமிடத்தில் முரளி வருவதாக கூறினார். அவருக்காக காத்திருந்தேன்.

பல வண்ண பட்சிகள். ஹம்ம்ம் நிம்மதியாக கண்களுக்கு விருந்தளிக்க முடியாத குறை. பேருந்துச் சீட்டு வியாபாரிகளின் தொல்லை ஒரு பக்கம். விட்டால் வந்த பேருந்திலேயே மறுபடியும் ஏற்றி வீட்டுக்கு அனுப்பிவிடுவார்கள் போல. பாவம் அவர்களுக்கு என்ன தெரியும், வந்திறங்கியவனா இல்லை கிளம்பி போகிறவனா என்று. வயிற்று பிழைப்புக்காக கத்திக் கொண்டு இருக்கிறார்கள்.

ஒரு இடமாக நின்றுக் கொண்டிருந்தேன். ஒருவன் அருகில் வந்தான்.

"அண்ணே எங்க போகனும் சொல்லுங்க 'டிக்கட்' எடுத்து கொடுக்கிறேன்" என்றான்.

நான் ஒன்றும் பேசாமல் இருந்தேன்.விட்டால் நீ என்னை எமலோகத்துக்கே அனுப்பி வைத்துவிடுவாய் என்று மட்டும் நினைத்துக் கொண்டேன். போதை பித்தன் போல. அழுக்கு பிடித்து போன மேனி. (சித்தர்கள் கூட இப்படி தான் இருப்பாங்களாம் உண்மையா? :P).

"ரொம்ப கஷ்டமா இருக்குண்ணே. பத்து வெள்ளி இருந்தா கொடுங்க சாப்பிடனும் என்றான்".

கைகால் திடமாக தானே இருக்கு இவர்களுக்கு. உழைத்து உண்ண வலிக்கிறது. நிம்மதியாக மனிதன் ஒர் இடத்தில் நிற்கக் கூட முடியவில்லை. அவனைப் போலவே பலரும் அங்கே திரிகிறார்கள். மக்கள் நடமாடும் இடத்தில் இப்படிபட்டவர்கள் திரிவது எவ்வளவு ஆபத்து. 'புடு ராயா' பகுதியில் திருட்டு மற்றும் போதை பித்தர்கள் பிரச்சனை பலகாலமாக அறியப்பட்டது தான். இவற்றைக் களைய அரசாங்கம் ஏதும் திட்டங்கள் மேற்கொண்டதா என்பதும் கேள்விக்குறியே. அவனிடம் பேச்சு கொடுக்காமல் வேறு இடமாகச் சென்று நின்று கொண்டிருந்தேன்.

நண்பர் முரளி வந்தவுடன், முடிவிலான் எழுத்துக்கள் பதிவர் நண்பன் அனந்தனை தொடர்பு கொண்டேன். அவரின் தகவலின்படி இன்னும் 30 நிமிடங்களில் கோலாலம்பூரை அடைந்துவிடுவார் என அறிந்தோம். அனந்தன் பினாங்கில் வசிக்கும் பதிவர். அவர் வருகைக்குக் காத்திருந்த இடைப்பட்ட நேரத்தில் மனோன்மணியம் புத்தக நிலையம் போய் வரலாம் என்றேன். பொடிநடையாக அவ்விடம் போனோம். கடைத் திறக்கவில்லை. மீண்டும் பேருந்து நிலையம் திரும்பினோம். சற்று நேரத்தில் அனந்தன் வந்தடைந்தார்.

அருகில் இருந்த கே.எஃப்.சி(KFC) திடீர் உணவகத்தில் மதிய உணவை முடித்துக் கொண்டு சந்திப்பு இடத்திற்குக் கிளம்பினோம். அச்சமயம் கவிஞர் பிரான்சிஸ் அழைத்து தம் வருகையை உறுதிச் செய்தார். மதிய உணவின் போதே எங்களுக்குள் சிறு அறிமுகம் என சகஜமாக பேச ஆரம்பித்தோம்.

ஒரு மணிக்கு தொடர் வண்டி LRT? சேவையின் வழி பயணிக்க முடிவு செய்தோம். "ஏய் மச்சி அந்த 'கம்பார்ட்மெண்ட்ல' ஏறலாம் என்றார் முரளி. அங்கே இரு இந்திய பெண்கள் இருந்தார்கள். (ஹ்ம்ம் பய புள்ளைக்கு என்னா ஒரு ஆசை). அந்த 'கம்பார்ட்மெண்ட்' எங்களை கடந்து போகவும். எதிர் இருந்ததில் ஏறிக் கொண்டோம். அதன் பிறகு முரளி வருத்தப்பட்டாரா இல்லையா என்பதை அவரிடம் கேட்டுக் கொள்ளவும். வேண்டியோருக்கு தனிமடலில் அவரின் மின் மடல் முகவரி கொடுக்கப்படும்.
*********

தித்திவங்சாவில் இறங்கி சந்திப்பு இடத்தை நோக்கி நடந்தோம். சந்திப்பு இடத்தை சரியாக தேடி பிடிக்க தாவு தீர்ந்தது. இடத்தை தேர்ந்தெடுத்த புண்ணியவானுக்கு தொலைபேசி செய்தால் தொடர்பும் கிடைக்காமல் போனது. விசாரித்து பார்த்து சரியான இடத்தை அடைந்தோம். ஈரமான நினைவுகள் பதிவர் இனியவள் புனிதா தொடர்புக் கொண்டார். சரியான இடத்தில் காத்திருந்தார். இருந்தாலும் அது தான் சரியான இடமா என்பதில் அவருக்கு சந்தேகம்.

இடையே திருத்தமிழ் பதிவர் திரு.சுப நற்குணன் ஐயா தொடர்பு கொண்டு பேசினார். தன் வருகைத் திட்டம் தடைப்பட்டதால் வருத்தம் தெரிவித்துக் கொண்டார். வருகையாளர்களுக்கு வணக்கத்தை தெரிவிக்கும்படியும் கூறினார்.

கவிஞர் பிரான்சிஸ் எங்களுக்கு முன்னமே காத்திருந்தார். கவிஞர் ஏ.எஸ்.பிரான்சிஸ் 18க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். 30 ஆண்டு காலமாக பத்திரிக்கை மற்றும் எழுத்துத் துறையில் பிரவேசித்து வருகிறார். 2000க்கும் மேற்பட்ட புது கவிதைகள் எழுதியுள்ளார். சமீபத்தில் கயல்விழி எனும் தலைப்பில் தமது வலைப்பதிவையும் தொடங்கியுள்ளார். அடுத்ததாக இரு நூல்கள் தயாரிப்பில் இருப்பதாகவும் சந்திப்பின் போது கூறினார்.

ஒர் இடமாக பார்த்து அமர்ந்தோம். சற்று நேரத்தில் அரங்கேற்றம் பதிவர் திரு மு.வேலன் மற்றும் கணைகள் பதிவர் பவனேஸ்வரியும் சந்திப்பு இடத்திற்கு வந்தடைந்தார்கள். திரு.மூர்த்தி(தாமதமாக கலந்து கொண்டார்), திரு.சண்முகம், திரு.குமரன் மாரிமுத்து, திரு.அ.நேசதுரை, மற்றும் வேலனின் நண்பர்(பெயர் மறதி மன்னிக்கவும்) சந்திப்பில் கலந்து கொண்ட பதிவு வாசகர்கள் மற்றும் எதிர்கால பதிவர்களுமாவர். சந்திப்பில் மொத்தம் 12 பேர் கலந்து கொண்டார்கள்.
********

(மூர்த்தி, ஆனந்தன், தெய்வ குழந்தை விக்கி, திரு.சண்முகம், கவிஞர் பிரான்சிஸ், திரு.நேசதுரை, திரு.குமரன்)

சந்திப்பில் விவாதிக்கப்பட்ட விடயங்கள்:

1) மலேசியாவில் பதிவர்களால் நிறைய தாக்கங்கள் ஏற்பட்டுள்ளது. ஆனால் மலேசிய தமிழ் வலைப்பதிவுலகில் அதிக வளர்ச்சியில்லை. மக்களிடையே அதன் குறைவான தாக்கத்திற்கு காரணம் என்ன?

முதலாவதாக மலேசிய தமிழர்களிடையே தமிழ் படிக்கும் ஆர்வம் குறைவாக இருப்பது காரணமாக அமைந்துள்ளது. அது போக புதிய/முக்கிய தகவல்கள் மலாய் மற்றும் ஆங்கில மொழியில் விரைவில் வெளிகாண்கிறது என்பதாலும். தமிழ் ஊடகம் விடுபட்டு போகிறது என்பதாக வாதங்களை முன் வைத்தனர்.

2) தமிழ் எழுத்துரு பிரச்சனை.

இங்கே பரவலான முறையில் தமிழ் எழுத்துரு செயல்பாடுகள் இல்லாமல் இருக்கிறது. சில தமிழ் மென்பொருள் கருவிகள் அதிகமான விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இலவச மென்பொருள் பலரிடமும் அறிமுகமாகாமல் இருக்கிறது. (தேடல்கள் இல்லையோ?) சரியான முறையில் தமிழில் தட்டச்சு செய்ய பலருக்கும் பலவிதமான பிரச்சனைகள் இருந்த அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்காள். சிலர் ஈ-கலப்பை மென்பொருளை பெற்றுக் கொண்டார்கள்.

3) இணைய தமிழ்.

இணையத்தில் தமிழ் இருப்பதே இன்னமும் பலருக்கு தெரியாமல் இருக்கிறது. இதற்கு காரணம் என்ன? வீட்டில் கணினி இருந்தால் பிள்ளைகள் கெட்டுப் போகும் எனும் தவறான மனப்பான்மை அடிப்படையில் விதைக்கப்பட்டுவிட்ட பட்சத்தில் கணினி மற்றும் இணையத்தைவிட்டு இன்னமும் பலர் விலகியே இருக்கிறார்கள். இச்சூழ்நிலையில் இணைய தமிழ் அவர்களிடையே அன்னியமான ஒன்றுதான்.

தமிழ் பள்ளிகளில் கணினி வகுப்புகளும், தமிழ் மென்பொருள் வசதிகளும் இருப்பினும் தமிழ் ஆசிரியர்களிடையே அதன் பயன்பாடு எப்படி உள்ளது என்பது கேள்விக்குறியே. அதன் செயல்பாடுகள் நன்முறையில் பயன்படுத்தப்பட்டால் மலேசியாவில் மின்தமிழ் ஊடகத்தில் நன் அறிமுகத்தையும் மாற்றங்களையும் கொண்டுவர முடியும். 500 தமிழ்ப்பள்ளிகளில் வீதம் ஒரு ஆசிரியர் இருந்தாலே போதும். (இது என் கருத்து).

4) பதிவர் சஞ்சிகை.

வலைப்பதிவுகள் பரவலான முறையில் அறிமுகம் ஆகாமல் இருக்கும் பட்சத்தில். தமிழ் அச்சு, ஒலி மற்றும் ஒளி ஊடகங்களும் அதை மக்களிடையே அறிமுகப்படுத்தும் முயற்சிகள் ஏதும் இதுவரையிலும் எடுக்கப்பட்டதில்லை. இது அவர்களின் வியாபாரம் பாதிப்படையாமல் இருக்க வேண்டும் என்பதற்காக செய்யப்படும் இருட்டடிப்பாக கூட இருக்கலாம். அல்லது இணைய ஊடகத்தின் பேரில் நம்பிக்கையோ/அக்கறையோ இல்லாத போக்காகவும் இருக்கலாம்.

பதிவர்களால் பதிவிடப்படும் நல்ல பதிவுகளை தேர்வு செய்து வருடத்திற்கு இரு முறை சஞ்சிகை வடிவில் வெளியிடும் திட்டம் முன் நிறுத்தப்பட்டது. சஞ்சிகை வெளியிடும் அளவிற்கு நம்மிடம் போதுமான பதிவர்கள் இல்லாமல் இருக்கிறார்கள் என புனிதா கூறினார். மேலும் பதிவர்கள் கூடும் பட்சத்தில் இதை செயலாக்கம் செய்யலாம் என்றும் கூறப்பட்டது. அச்சு ஊடகத்தில் கவனம் செலுத்துவது நாம் பின்னோக்கிச் செல்கிறோம் என்பதை குறிப்பதாக முரளி கூறினார். சஞ்சிகையை மென் புத்தகமாக வெளியிடுவதே சிறந்ததாக கூறினார்.

சஞ்சிகை மின் புத்தகமாகவும் அச்சுவடிவிலும் வெளியிட தீர்வு செய்யப்பட்டது. அச்சுவடிவில் தேர்ந்தெடுக்கப்பட்ட பதிவுகளை கொண்டு வருவது பலரிடையே மின்னூடகத்தை அறிமுகப்படுத்துவது மட்டுமல்லாமல் ஆவணமாக வைத்துக் கொள்ளவும் உதவும் என தீர்மானிக்கப்பட்டது. அடுத்த மாதம் ஏற்பாடு செய்யப்படும் சந்திப்பில் சஞ்சிகைக்கான வேளைகள் சமர்பிக்கப்படும்.

கூட்டுப்பதிவு, துறை சார்ந்த பதிவு, கருத்து சுதந்திரம் என பல விடயங்கள் மேலும் பேசப்பட்டன. அவற்றைப் பற்றிய தகவல்களை சந்திப்பில் கலந்து கொண்ட பதிவர்கள் நிச்சயம் பதிவிடுவார்கள் என்பதை உறுதியோடு எதிர்ப்பார்க்கலாம்.

மேலும் பதிவு வாசகர்களுக்கு சில உதவித் தகவல்கள் வழங்கப்பட்டன. சில காலங்களில் அவர்கள் பதிவுலகில் பிரவேசிப்பார்கள் என எதிர்பார்ப்போம். 4 மணி அளவில் சந்திப்பு நிறைவு கண்டது.
*****

சந்திப்பில் கலந்துக் கொண்ட திரு.நேசதுரை அவர்கள் எங்களை அவர் வாகனத்தில் அழைத்துக் கொண்டார். மூர்த்தி அவருடைய நண்பர் மலேசிய பத்திரிக்கை ஒன்றில் பணியில் இருப்பதாகவும் அவரை சந்தித்துவிட்டுச் செல்லலாம் எனவும் கூறினார். நான், முரளி, அனந்தன், மூர்த்தி, மற்றும் திரு.நேசதுரை என ஐவரும் அந்த பத்திரிக்கை அலுவலகத்திற்குச் சென்றோம்.

வலைப்பதிவுகளை அறிமுகம் செய்வதை பற்றிய கேள்வி எழுந்த போது அதன் முக்கிய நிர்வாகி பேசிய தகவல் 'காமிடியாக' இருந்தது. ஏதோ ஒரு படத்தில் வரும் ஆனா வாராது என வடிவேலுவிடம் நகைச்சுவை செய்வதை போல் பேசிக் கொண்டிருந்தார்.

அறிமுகம் செய்யலாம் பிரச்சனை இல்லை என்றார். பிறகு, இணைய தமிழால் அவர்கள் வியாபாரம் பாதிக்கும் என்றார். மீண்டும் அனுப்பி வையுங்கள் போடலாம் என்றார். (குப்பைத் தொட்டியிலோ?).

பத்திரிக்கைக்கு அனுப்பப்படும் எனது படைப்புகளை கண்டபடி துண்டாடிவிட்டு பிரசுரிக்கிறீர்களே எதனால் என்றேன். சர்சைக்குறிய விடயங்களை நீக்கிவிட்டுதான் வெளியிடுவோம் என்றார்.

சரி எதனால் ஒரு படைப்பாளியின் படைப்பு வெளியிடப்படுவதை அவரிடம் அறிவிக்க மறுக்கிறீர்கள் என்றேன். அப்படி அறிவித்தால் நீங்கள் அந்த திகதியில் மட்டும் பத்திரிக்கை வாங்குவீர்கள் மற்ற நாட்களில் எதிர்பார்த்து வாங்க மாட்டீர்கள் என்றார். (என்ன ஒரு அல்பத்தனமான பதில். முட்டிக் கொள்ள பக்கத்தில் சுவர் தான் இல்லை. உமிழ் நீரை விழுங்கிக் கொண்டேன்.) வாழ்க பத்திரிக்கை உலகம்.

நான் சென்ற ஆண்டு அனுப்பிய கட்டுரைகளையும் கதைகளையும் இந்த வருடம் தான் வெளியிட்டார்கள். அதையும் வெட்டி குத்தி குதறி வெளியிட்டார்கள். இப்போது அந்த பத்திரிக்கைக்கு என் படைப்புகள் எதையும் அனுப்புவதில்லை.

தமிழ் நாட்டில் வெளியாகும் தமிழ் ஓசை நாளிகையில் வாரம் தோறும் தொடர்ந்து எழுதும் வாய்ப்புக் கிடைத்ததும் அங்கு மட்டுமே படைப்புகளை அனுப்புகிறேன். படைப்பாளிக்கு அவர்கள் கொடுக்கும் மரியாதை மகிழ்ச்சியையும் மேலும் எழுத உற்சாகமும் கொடுக்கிறது.

அடுத்தபடியாக ஜெயபக்தி புத்தக நிலையம் சென்றோம். அதிஷ்டவசமாக புத்தக விற்பனை சிறப்பு தள்ளுபடியில் இருந்தது. ஏறக்குறைய ஒரு மணி நேரம் அங்கே செலவானது. மலிவு விற்பனை அறிவிக்கப்படவில்லையா அல்லது அறிவிக்கப்பட்டும் இந்நிலையா என்பது தெரியவில்லை. நாங்கள் அங்கிருந்த ஒரு மணி நேரமும் அதிகமான வாடிக்கையாளர்களை காண முடியவில்லை.

நம்ம ஆட்சி என்பது போல், அங்கிருப்பவர்களை நையாண்டி செய்து கொண்டு புத்தகங்களை பார்வையிட்டோம். (ஆம், வெறுமனே நிற்கும் அவர்களுக்கும் பொழுது போகனும் இல்லையா).

நான் வைரமுத்துவின் ஒரு போர்க்களமும் இரண்டு பூக்களும், பாலகுமாரனின் செப்புப் பட்டயம் மற்றும் மலாயா பல்கலைக்கழக பேரவைக் கதைகள் என மூன்று புத்தகங்கள் வாங்கினேன். அனந்தன், முரளி மற்றும் மூர்த்தியும் அவர்களுக்கு தேவையான புத்தகங்களை வாங்கிக் கொண்டார்கள்

அதன் பின் அருகில் இருந்த தேனீர் கடையில் அரட்டைக் கச்சேரி தொடர்ந்தது. திரு.நேசதுரை பல ஆண்டுகளுக்கு முன் நான் படித்த வட மலேசிய பல்கலைக்கழகத்தில் படித்தவர் என்பதை அறிந்தேன். பல்கலைக்கழக மலரும் நினைவுகளை சிறிது பகிர்ந்துக் கொண்டோம். நேரம் ஆகவும் 6.30 மணிக்கு அங்கிருந்து கிளம்பி பேருந்து ஏறுமிடம் வந்தேன். இரவு 7 மணிக்கு புறப்பட்டு 9.30க்கு வீட்டை அடைந்தேன்.

(பி.கு: அடுத்த பதிவர் சந்திப்பை பேரா மாநிலத்தில் நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடை பெறுகின்றன. இன்னும் ஓரிரு வாரங்களில் அறிவிக்கப்படும். வட மாநிலங்களில் உள்ளவர்கள் இதில் கலந்து கொள்ள ஏதுவாக இருக்கும் என நம்பப்படுகிறது.)

(பி.பி.கு: சந்திப்பில் கலந்து கொண்ட பல பதிவர்கள் முகமூடியும் விக்கும் அணிந்திருந்ததால் வாசகர்கள் பயம் கொள்ளாமல் இருக்க வேண்டும் எனும் நோக்கில் படங்கள் வெளியிடப்படவில்லை).

(பி.பி.பி.கு: தேர்ந்தெடுக்கப்பட்ட படங்கள் பிறகு சேர்க்கப்படும்).

(பி.பி.பி.பி.கு: தேர்ந்தெடுக்கப்பட்ட படங்களைப் பார்ப்பதற்கு பெற்றோர்களின் துணை இருக்க வேண்டும்.)

Thursday, December 11, 2008

கொசுறு 11/12/2008

ஆண்டு முடிய போகிறது என சொல்வது 'நெகடிவ் அப்ரோச்' புத்தாண்டு தொடங்க போகிறது என சொல்வது 'பாசிடிவ் அப்ரோச்' என சாணியடி சித்தர் சொல்லி இருக்கிறார்.
*******

வலைபதிவை 2006-ஆம் ஆண்டு படிக்க ஆரம்பித்தேன். முறையாக எழுதத் தொடங்கியது இந்த ஆண்டின் நடுவின் இருந்து தான். இன்னமும் 100 பதிவுகளை எட்டி பிடிக்க முடியவில்லையே என்பது வருத்தமாக இருக்கிறது.
******

பாலகுமாரனின் பயணிகள் கவனிக்கவும் படித்த போது ஏற்பட்ட இன்ப தாக்கத்தை 'ஆசிட்' போட்டு கழுவியதை போல் செய்துவிட்டது அவருடைய இரும்பு குதிரைகள் நாவல். பலரும் அதை சிறந்த புத்தகம் எனக் கூறியதால் தேடி படித்தேன். அதை நாவல் என சொல்ல முடியாது. தொகுப்பு புத்தகம் தான். அவருடைய வாழ்க்கை வரலாறு கலந்துள்ளதாக அறிகிறேன். அவருடைய 'மெண்டாலிட்டி' எனக்கு ஒப்பவில்லை.
******

அதிஷாவின் இன்பினிட்டி இன்பக் கதைகளை படித்த பலரும் இரவு தூக்கமற்று உலாவித் திரிவதாக சென்னை வலைபதிவாளர்கள் தகவல் வட்டாரம் தெரிவித்துள்ளது.
*****

எழுத்தாளர் பரிசல்காரன் எழுதிய சிறுகதை அவள் விகடனில் வெளிகண்டுள்ளது. அவரது மனைவி திருமதி.உமா கௌரி எனும் பெயரில் பிற்பாதியும் கிருஷ்ணகுமார் எனும் பெயரின் முதல் பாதியும் சேர்த்து கௌரி கிருஷ்ணா எனும் பெயரில் வந்துள்ளது. அவருக்கு என்னுடைய வாழ்த்துகள்.
*****

மலேசிய வலைபதிவர் திரு.சுப.நற்குணன் எழுதிய 'சிலையாக நான்' எனும் சிறுகதை கடந்த 07-12-2008 மலேசிய நண்பன் நாளிகையில் வெளியீடு கண்டுள்ளது. ஒரு ஆசிரியை தான் படித்துக் கொடுத்த பிள்ளைகளின் பொது தேர்வின் முடிவை எதிர் நோக்கும் மனநிலையை அழகாக செதுக்கியுள்ளார்.
*****

வேலைக்குச் செல்ல பயன்படுத்தப்படும் முதன்மைச் சாலையோரங்களில் வாரா வாரம் ஏதாகினும் கால் நடை அடிபட்டு இறந்துக் கிடக்கிறது. மாநகராட்சிக்கு இவற்றை அப்புறப்படுத்த நேரம் இருப்பதில்லை. அப்படி என்ன தான் **** (வேண்டாம் விடுங்கள்). மழைகாலங்களில் நீர்பட்டும், கனரக வாகனங்களில் நசுங்கிப் போயும் அருவருப்பாக இருக்கிறது. கவனிப்பார் இல்லை.
*****

சிங்கை பதிவர்கள் மின்மடல் குழுமத்தில் அன்மைய காலமாக பயங்கர சலசலப்பு. பச்சை இலையை கண்டுபிடிக்க முழு மூச்சாக ஈடுபட்டுள்ளார் பின்னூட்ட புலி விஜய் ஆனந்த் 001. பலரது கவனமும் தமிழனின் குக்குரலிடும் பதிவர் மீது தீவிரமாக இருக்கிறது.
****

நீண்ட இடைவெளிக்கு பிறகு பார்த்த தமிழ்ப் படம் வாரணம் ஆயிரம். அமைதியான கதை. பாடல்களும் சிறப்பாகவே இருந்தன. தவமாய் தவமிருந்து படத்தினை துளியும் ஞாபகத்திற்கு கொண்டு வரவில்லை. நல்ல படம் என்றே சொல்ல தோன்றுகிறது. பதிவுகளில் பல இடங்களிலும் படம் மொக்கை என கிழிகிழியென கிழித்து தொங்கப் போட்டு வைத்திருக்கிறார்கள். அவற்றை படிக்கும் போது நான் தான் இரசனை கெட்டவனோ என எண்ண தோன்றுகிறது.
****

எல்லா பதிவுகளிலும் எங்களுக்கு உங்கள் பதிவில் இணைப்பு கொடுங்கள் என சுட்டி அருண் எனும் பதிவர் சுட்டித் தனம் செய்து கொண்டிருக்கிறார். இதை பலரது பதிவுகளிலும் காண்கிறேன். வேணா விட்டுடுங்க பின்னூட்டத்தை அழித்து அழித்து கை வலிக்கிறது.
*****

மெழுகுவத்தி


தனக்காக அல்ல...
தன் திரிக்கரு சிதைவதை எண்ணியே
அந்தத் தாய் அழுகிறாள் - வைரமுத்து.

*****

எல்லோரும் பரிசலாரின் அவியலை போல எழுதுவதால் அவர் சினம் கொள்வாரா என தெரியவில்லை. ஆதலால் அளவில்லா பயத்தோடு விக்கி.

மலேசியாவில் வலைபதிவர்கள் சந்திப்பு


எதிர்வரும் 14-ஆம் திகதி (ஞாயிற்றுக் கிழமை) திசம்பர் மாதம், முதன்முறையாக தமிழ் வலைப்பதிவர்கள் சந்திப்பு மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நடைப்பெறவுள்ளது. இச்சந்திப்பில் தமிழ் வலைப்பதிவர்கள், இணையத் தமிழ் வாசகர்கள், புதிதாய் வலைப்பதிவு தொடங்க எண்ணம் கொண்டவர்கள் அனைவரும் கலந்துக் கொள்ள அழைக்கப்படுகின்றனர்.

இச்சந்திப்பின் விபரங்கள் பின்வருமாறு :

திகதி / நாள் : 14 திசம்பர் 2008
(ஞாயிற்றுக் கிழமை)

சந்திப்பிடம் : கறி கெப்பாலா ஈக்கான் உணவகம், செந்தூல்
( செந்தூல் காவல் நிலையம் பின்புறம்)

நேரம் : பிற்பகல் மணி 2.00

தொடர்புக்கொள்ள வேண்டிய எண்கள் :
விக்னேஸ்வரன் - 012 5578 257
மூர்த்தி(இவர் அவர் இல்லை) - 017 3581 555


சந்திப்பின் நோக்கம்:

1) தமிழ் வலைபதிவர்களை ஒருங்கினைப்பது.
2) பதிவர்களிடையே நட்புறவை வளர்ப்பது
3) பதிவுகள் சம்பந்தமான விடயங்களை ஆளோசிப்பது.
4) கணினியில் தமிழ் அறிமுகம் இல்லாதவர்களுக்கு அறிமுகம் செய்வது.

விருப்பமுள்ளவர்கள்
நண்பர்களோடு கலந்து கொண்டு பயன்பெறவும்.

* சந்திப்பில் கலந்துக் கொள்பவர்கள் அரசியல் சம்பந்தமான விடயங்களை பேச வேண்டாம்.

* தனி மனிதர்களை பற்றிய விவாதங்களை தவிர்க்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.

* தமிழ் தட்டச்சு மென்பொருள் கையேட்டு உதவியோடு இலவசமாக வழங்கப்படும். தேவைபடுவோர் கேட்டு பெற்றுக் கொள்ளலாம். இலவச சேவை பதிவர் சந்திப்பிற்காக மட்டுமே. நன்கொடை கொடுப்பவர்கள் கொடுக்கலாம்.

* வியாபார நோக்கம் எதையும் சந்திப்பின் போது ஆதிக்கப்படுத்த வேண்டாம்.

* இச்சந்திப்பு எல்லோருக்கும் பொதுவானதே, சாதாரண கலந்துரையாடலாக அமையட்டும்.

* பழம்பதிவர்கள் இடர் பாராது கலந்துக் கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Tuesday, December 09, 2008

சாண்டில்யனின் - மன்னன் மகள்

நூல்: மன்னன் மகள்
ஆசிரியர்: சாண்டில்யன்
நயம்: சரித்திர நாவல்
வெளியீடு: வானதி பதிப்பகம்

பிறப்பின் இரகசியத்தை மர்மப் பிடியில் வைத்து கதை நகர்த்தும் யுக்தி பல சரித்திர நாவல்களிலும் கண்டிருப்போம். முக்கியமாக பொன்னியின் செல்வன் மற்றும் கடல் புறா இவற்றிக்கு விதிவிலக்கல்ல.கடல் புறாவில் மஞ்சள் அழகியின் கதாபாத்திரம் என்னைக் கவர்ந்த கதாபத்திரங்களுல் ஒன்று. ஆச்சய முனையின் இளவரசியாக வரும் இவளின் பிறப்பு இரகசியமாக்கப்பட்டு பிண்ணணியில் சொல்லப்படும். கற்பனை கதாபாத்திரமான இவளின் பெயர் கடைசி வரை சொல்லப்படாமலே இருக்கும். அதை போலவே பொன்னியின் செல்வனில் நந்தினியின் கதா பாத்திரமும். கற்பனை கதாபாத்திரமான இவளின் பிறப்பின் இரகசியம் பரவலாக விவாதிக்கப்பட்ட ஒன்றாகும்.

பல சரித்திர நாவல்களில் ஒரு மாறுபாடு கொண்டு அமைந்துள்ள நாவல் மன்னன் மகள் எனக் கூறினால் அது மிகையன்று. கௌடிள்யம் எனும் தர்க்க சாஸ்திரத்தை மையமாகக் கொண்டு கதை கொண்டுச் செல்லப்படுகிறது. தமது பிறப்பின் இரகசியம் அறியும் பொருட்டு புறப்படுகிறான் கரிகாலன். இவன் இளம் பிராயத்தில் தம் தாயினால் நாகபட்டிணத்தின் சூடாமணி விஹாரத்தில் விட்டுச் செல்லப்படுகிறான்.

எதனால் விட்டுச் செல்லப்படுகிறான் என்பதுதான் கதையின் சுவாரசியமே. பிறப்புச் சிக்கலை அவிழ்க்கும் பொருட்டு உலக வாழ்க்கையில் காலடி வைப்பவன், விஹாரத்தை விட்டு வந்த சமயம் முதலே உலகப் பிரச்சனையில் மாட்டிக் கொள்கிறான். அதாவது நாம் செய்யும் எந்த காரியமாக இருந்தாலும் அதற்கான பின் விளைவுகள் நிச்சயம் உண்டு என்பதற்கு இதுவே சான்று.

இப்படியாக, சிறு விடயமாக கருதி ஒரு போலி துறவிக்கு உதவ முனைகிறான். அச்சிறு செயலானது அவனை வேங்கி நாட்டின் அரசியல் சிக்கலில் மாட்டிக் கொள்ளச் செய்கிறது. வேங்கி நாட்டின் மன்னன் மகளாக பிறந்து நாட்டின் அரசியல் பிரச்சனைகளால் மண்ணாள முடியாமலும் சுதந்திரமற்றும் இருக்கிறாள் நிரஞ்சனா தேவி. இவளே கதையின் நாயகியுமாவாள். வேங்கி நாட்டின் அரசியல் சிக்கலில் அகப்பட்டுக்கொள்ளும் கரிகாலன் தமது வாழ்வில் பல திருப்பங்களை காண்கிறான். நிரஞ்சனா தேவியின் மீது அவன் கொள்ளும் காதலும் அதில் அடங்கும்.

பொதுவாகவே சாண்டில்யனின் நாவல்களில் வர்ணனைகளும், சிருங்கார ரசமும் மிகையாகவே இருக்கும். சில வேளைகளில் சலிப்பைத் தட்டும் விதமாகவும் இருக்கும். கடல் புறா, இராஜ யோகம் போன்ற நாவல்களை காட்டினும் இதில் சிருங்கார ரசம் சற்றுக் குறைவாக உள்ளது என்றே சொல்லலாம்.

716 பக்கங்கள் கொண்ட ஒரு புத்தகமாக அமைந்திருந்தாலும் மற்ற நாவல்களைக் காட்டினும் அதிகபடியாக கதாபாத்திரங்களும், சரித்திர நிகழ்வுகளும் இணைக்கப்பட்டிருப்பது கதைக்கு வழு சேர்க்கும் விடயம் என்றே கூற வேண்டும்.

வேங்கி நாட்டின் அரசியலில் சிக்கலை உருவாக்கி அதை தமக்கு சாதகமாக பயன்படுத்தி நாட்டை ஆக்கிரமிக்க எத்தனிக்கிறான் விஷ்ணுவர்த்தன விஜயாதித்தன். இதற்கான முனைப்பையும் செய்கிறான் ஜெயசிம்ம சாளுக்கியன். ஒரே தகப்பனுக்கு பிறந்த இரு தாய் மக்கள் விஷ்ணுவர்தனும், ராராஜ நரேந்திரனுமாவர்.சாளுக்கிய அரச மகளுக்கு பிறந்தவன் விஷ்ணுவர்தன், இராஜேந்திர சோழ தேவரின் மகளான குந்தவைக்கு பிறந்தவன் ராஜ ராஜ நரேந்திரன். தந்தையின் இறப்புக்கு பின் அரியணை பிரச்சனை ஏற்படுகிறது. அரியணைக்கு சொந்தம் சோழர் வழியில் வந்தவனா இல்லை சாளுக்கிய வழியில் வந்தவனா எனும் பிரச்சனை உருவாகிறது.

அதே சமயம் சோழர்களின் வங்கப் பிரதேச படையெடுப்பும் ஆயத்தமாகிறது. கங்கை நதி பாயும் வங்கப் பிரதேசத்தை வெற்றி கொண்டு அதன் நீரில் மகுடாபிசேகம் செய்துக் கொள்ள வேண்டும் என்பது இராஜேந்திரச் சோழத் தேவரின் எண்ணம். இதன் வெற்றிக்கு பிறகே கங்கை கொண்ட சோழபுரம் என அழைக்கப்படுவதாக சரித்திரக் குறிப்புகள் கூறுகின்றன.

வங்க தேசத்தின் மீது படையெடுப்பு நடத்த வேங்கி நாட்டை கடந்து போக வேண்டும். வேங்கி நாட்டைக் கடக்க சாளுக்கியர்களை வெற்றி கொள்ள வேண்டும் அல்லது வேங்கியில் இருக்கும் அரியனை பிரச்சனை தீர்க்க வேண்டும். எதிர் கொண்டு செல்வதென்றால் இறுதி போர் வரை படை பலம் வழுவிழந்து போகும். இந்தச் சிக்கல்களை களைவதே கதையின் சாரம்.

இக்கதை பலரையும் கவர்ந்திருக்க வேண்டும். காரணம் இதன் 'PLOT' அல்லது கதைக்கோப்பு என சொல்லலாம். துரிதமான கதையம்சமும், தீர்வுகளும் மிகவும் நேர்த்தியாக கையாளப்பட்டிருக்கிறது. இக்கதைக்காக ஆசிரியர் சொல்லும் அரசியல் தந்திரங்களும் போர் விவரங்களும் முதல் தரம். அதற்கான தகவல் சேமிப்புகள் வியப்பளிக்கும் படி அமைந்துள்ளது. கதை போக்கில் சொல்லப்படும் அரசியல் மற்றும் போர் தத்துவங்கள் மேலும் வலு சேர்க்கிறது.

இளமை பருவம் முதல் ஏட்டுக் கல்வியில் மூழ்கியவன் கரிகாலன். கௌடிள்யம் எனப்படும் தர்க்க சாஸ்திரத்தில் தேர்ச்சி மிக பெற்றவன். அரசியல் மற்றும் போர் முனைக்கு உந்தப்படும் கரிகாலன் ஏட்டுச் சுரக்காய் கறிக்குதவாது எனும் படியாக கேலிக்குட்படுகிறான். கரிகாலனின் பாத்திர அமைப்பு சுவாரசியம் மிகுந்தது. இடற்களை அல்லது பிணக்குகளை நுண் அறிவால் வெல்லும் குணம், பிரச்சனைகளை பெரிது கொள்ளாதது போல் எதிராளியை கருதச் செய்து தோற்கடிப்பது போன்ற யுக்திகள் செலுத்தப்பட்டு மிளிர வைக்கப்பட்டுள்ளது.

இக்கதையின் மற்றுமொரு முக்கிய கூறு போர் உத்தி. அதிகபடியான மோதல்கள் இல்லாமல் மதி நுட்பத்தால் வெல்லும் திறன் பற்றி அதிகமாக சொல்லப்பட்டுள்ளது.

வந்தியத்தேவன், அரையன் ராஜராஜன், பிரும்ம மாராயர் போன்ற உண்மைக் காதாப்பாத்திரங்கள் பெரிதளவாக பேசப்பட்டாலும் கவரும் விதம் குறைபாடுடையதாகிறது. பொன்னியின் செல்வனில் குறும்புத் தனத்தோடு சித்தரிக்கப்படும் வந்தியத்தேவனின் காதாபாத்திரம் இதில் மாறுபடுகிறது. அகிலனின் வேங்கையின் மைந்தன் கதையில் முதிய வந்தியத்தேவனை குறும்புத்தனத்தோடு காண முடியும்.

பல போர் முனைகளை சந்தித்து மிகுந்த அனுபவம் கொண்ட இராஜேந்திரச் சோழ தேவரின் படை தளபதிகளின் திட்டத்தில் குறை காணப்படுவது நாவலில் நெருடுகிறது. வாசகர் அதைக் குறையாக காணாதிருக்கும் பொருட்டு ஆசிரியரும் அதைச் சாடியே எழுதியுள்ளார். அது கரிகாலன் கதாபாத்திரத்தின் தர்க்க சாஸ்த்திர முறையின் யுக்தியை முன்னிருத்த கையாளப்பட்ட தவிர்க்க முடியாத முரண்பாடுகளாக கூட இருக்கலாம்.

அடுத்தபடியாக கேள்விக் குறியாக அமையும் விடயம் இராஜராஜ சோழத் தேவரின் வாழ்க்கை. வந்தியத்தேவன் 50 அகவையைக் கடந்தவராக அல்லது இளம் முதுமையைக் கடந்தவராக சித்தரிக்கப்படுகிறார். அச்சமயம் இராஜேந்திரச் சோழத் தேவர் சோழ தேச அரியணையில் அரசனாக இருக்கிறார். சரித்திரக் கூற்றின் படி இராஜேந்திர சோழர் அரியனை ஏறியது அவரது 40வது வயதில் என குறிப்பிடப்படுகிறது.

அச்சமயம் வந்திய தேவரின் வயது என்னவாக இருந்திருக்க வேண்டும்? இராஜராஜ சோழரின் தமக்கையான குந்தவை நாச்சியாரை திருமணம் செய்த வந்தியத் தேவரின் வயது ராஜ ராஜ சோழனை விட குறைவானதா? வந்தியத் தேவருக்கு 50 அகவை இருக்கும் போது கண்டிப்பாக இராஜ ராஜ சோழருக்கும் ஏறக் குறைய அவ்வளவே இருந்திருக்க வேண்டும்.அப்படி என்றால் அச்சமயத்தில் இராஜேந்திரனின் வயது என்னவாக இருந்திருக்க வேண்டும்? அச்சமயம் அவர் அரசபீடத்தில் இருப்பதாக குறிப்பிட்டபட்டிருப்பது சற்று சிந்திக்க வேண்டிய விடயம். இல்லை கற்பனை நாவலில் சரித்திர பிழை ஏற்பட்டுள்ளதா?

மற்றபடியான கற்பனைச் செருகல்கள் மிகவும் சிறப்பாக அமைந்துள்ள நாவல் சாண்டில்யனின் மன்னன் மகள். இது வெறும் கதையாக மட்டும் இல்லாமல் சிந்தனைக்கும் மதி நுட்பத்தைப் பற்றிய யுக்திகளின் விவரிப்புகளுக்கும் சிறந்த நாவல் என்றே சொல்ல வேண்டும்.

Saturday, December 06, 2008

மௌனம்!!


மௌனம்!
சில
புரிதல்களின்
பூரண வடிவம்!
சில
புதிர்களின்
புரியாத விடை!

மௌனம்!
சப்தங்களுக்கும்
சலசலப்புகளுக்கும்- போட்ட
சல்லடையால்
சடுதியில்- உயிர்த்த
சாரம்!

மௌனம்!
இருதய இரும்பில்
பிணைக்கப்பட்ட
பிரசவமாகா காதலின்
மறுமொழி!

மௌனம்!
உணர்வுகளின்
உன்னத மொழி!
உதிர்ந்து விழும்- மலரின்
உயிர் வலி!

மௌனம்!
நினைவுகளின் அலைவரிசை!

மௌனம்!
கனவுகளின் முகவரி!

மௌனம்!
காற்றின் ஸ்பரிசம்!

மௌனம்!
இதழ்களின் உறக்கம்!

மௌனம்!
தனிமையின் தலைவன்!

மௌனம்!
வாழ்க்கையின் விடை!

மௌனம்!
வார்த்தைகளின் சிறைச்சாலை!

மௌனம்!
இரகசிய ராகம்!

மௌனம்!
மனிதன்
மனதில் கொண்டு
மதியைச் செறிவு செய்திட உதவும்
மந்திரகோள்!

மௌனத்தை நேசி!
மரணத்தின் பின்
மௌனமே உன் துணை!

Friday, December 05, 2008

ஊடல் காதற்கின்பம்!

கிழித்தெறிந்த
காகிதமும்
கடித்தெறிந்த
நகச் சில்லும்
வெடித்தெழுந்து சொல்கிறது
வெப்பம் கெண்ட-உன்
சிறு கோபத்தினை!

பல் கடிக்கிறாய்!
விழி முறைக்கிறாய்!
நெற்றி சுருக்கி
நெட்டி முறிக்கிறாய்!

ஊடலை
உப்பென சேர்ப்பதே
உகந்ததாய்
உரைக்கிறான் வள்ளுவன்!

உதிராத
உன் இதழை
உரிமை கொண்டால்
உணர்வு தெளிவாயா?

கட்டி அணை!
கவிதை கேள்!
காதல் கொள்!
காலம் இனிக்கட்டும்!

Wednesday, December 03, 2008

யார் இந்தக் கடற்கொள்ளையர்கள்?

கடற்கொள்ளை மற்றும் கப்பல் திருட்டுகள் ஒரு நீண்ட தொடர்கதையாக இருந்து வருகிறது. கடந்த சில காலமாகக் கடற்கொள்ளை பற்றிய செய்திகள் அதிகரித்து வருகின்றன. சோமாலிய கடற்கொல்லையர்கள் மக்களிடையே அதிகமாக பேசப்பட்டு வருபவர்கள். யார் இந்த சோமாலிய கடற்கொள்ளையர்கள்?

சோமாலிய கடற்கொள்ளையர்கள் தங்களுக்கென ஒர் அமைப்பை உருவாக்கிக் கொண்டவர்கள். எப்படி ஒரு வணிக நிறுவனம் செயல்படுகிறதோ, அதைப் போலத் தங்களுக்குள் தலைமைத்துவம், வேலை வகுப்பு, என முறையான செயல்பாடுகளைக் கொண்டு இயங்குபவர்களாவர். இப்போது இவ்வமைப்பானது ஆயிரக்கணக்கான உறுப்பினர்களைக் கொண்டு செயல்படுவதாகக் கூறப்படுகிறது.

ஆடென் நீர் நிலையானது 'தூனா' வகை மீன்கள் நிறைந்த பகுதியாகும். இப்பகுதிகளில் மீன் வேட்டைக்காக அதிகமான கப்பல் போக்கு வரத்து உண்டானது. இசைவுயின்றியும், திருட்டுத்தனமாகவும் இப்பகுதிகளில் நுழைந்து மீன் பிடிக்கும் மீனவர்களிடையே 'வரி' வசூலிப்பதற்காக இவ்வமைப்பு தொடங்கப்பட்டது என சொல்லப்படுகிறது.

அதிகமாகப் பணம் ஈட்டுதலைக் கண்ட இவர்களுக்கு நாளுக்கு நாள் பேராசை அதிகரித்தது.அவ்வழியே வரும் பல கப்பல்களைக் காரணமின்றி நிறுத்தி வரி வசூக்கத் தொடங்கினார்கள். சுருங்கச் சொன்னால் வழிப் பறி செய்தார்கள் என்றே கூர வேண்டும்.

அவர்களைப் பொருத்தவரையில் கடற்பகுதியானது அவர்களின் சொத்து. அண்மையில் 'நியார்க் டைம்ஸ்' இதழில் வெளியான செய்தியொன்றில் சோமாலிய கடற்கொள்ளைப் படையினர் பல விளக்கங்களை கொடுத்திருந்தார்கள். உலக மக்கள் அவர்கள் மீது கொண்டிருப்பது தவறான கண்ணோட்டம் என்பது அவர்களின் அசைக்க முடியாத கருத்தாகும்.

மேலும் கூறுகையில் ஆடென் கடற்பகுதியின் அமைதிக்காக அவர்கள் செயல்படுவதாகவும், தீவிரவாத அமைப்பு என அவர்களைக் கூறுவது தவறானது என்றும் சாடியுள்ளார்கள். பெரிய கப்பல்களை மட்டும் தடுத்து நிறுத்துவதாகவும், ஏழை மீனவர்களை ஒன்றும் செய்வதில்லை என்பதும் அவர்களின் வாதம்.

சோமாலிய கடற்கொள்ளையர்கள் தங்களைக் கடற்கொள்ளையர்களாகவும் தீவரவாதிகளாகவும் கருதுவதில்லை. மாறாக ஆடென் எனும் அவர்களுடைய நீர் நிலைப்பகுதிகளில் திருட்டுத்தனமாக மீன் பிடிப்பவர்களும், கடலை மாசு படுத்துபவர்களுமே தீவிரவாதிகளும், கொள்ளையர்களும் எனக் கூறுகிறர்கள்.

சோமாலிய கடற்பகுதியானது உலகினில் மிகவும் ஆபத்தான கடற்பகுதி என அறியப்படுகிறது. உலகத் தீவிரவாதிகளில் சோமாலிய கடற்கொல்லையர்களும் ஒரு பகுதியினர் ஆவார்கள்.பெரும்பாலான தீவிரவாதிகள் அவர்களின் நடவடிக்கையானது சட்டவிரோதமற்றது என்றும், புனிதத் தன்மைக் கொண்டது என்றும், தவறான ஒன்றல்ல என்றும் வாதிடுபவர்களலாகவே இருக்கிறார்கள்.

சிறுபான்மையில் இருக்கும் இவர்கள் பெரும்பான்மையினத்தைக் கடுமையான முறையில் எதிர்க்கிறார்கள். இதற்கான ஒரே ஆய்தம் வன்முறை என்பது அவர்களுடைய எண்ணமாக இருந்துவருகிறது.

சரித்திரத்திலும் கடற்கொள்ளையர்களின் தடங்களை நாம் கண்டிருப்போம். 1942-ஆம் ஆண்டு 'கிரணடா' (Granada) அரசு ஸ்பெயின் நாட்டின் கத்தோலிக்க கிருஸ்துவர்களின் கைக்குட்பட்டது. இந்நிகழ்வு கடற்கொள்ளையர்களின் ஆதிக்கத்தை அதிகரிக்கச் செய்தது. ஆண்டலூசியா(Andalusia) மற்றும் கிரணடா (Granada) போன்ற நாடுகளில் வசித்த மூர்(moor) இன இசுலாமியர்கள் விரட்டியடிக்கவும் கொலை செய்யவும்பட்டனர். பாதிப்படைந்த மக்களானவர்கள் பழிவாங்கத் திட்டமிட்டார்கள். அவர்களில் முக்கால் வாசி பேர் கடற்கொள்ளையார்களாக இருந்து பழிவாங்கி வந்தார்கள்.

ரோம் நகர வீழ்ச்சியின் போது கடற்கொள்ளையர்களின் ஆதிக்கம் அதிகரித்திருந்தது பலரும் அறிந்த விடயம்.

அந்நாட்களில் வன்முறையும், கொடுஞ்செயல்களும் நிரம்பி இருந்த பௌஜி(Bougie) கடற்கொள்ளையர்களின் நடுவம் எனக் கூறப்பட்டது. 16 மற்றும் 17-ஆம் நூற்றாண்டுகளில் கடற்கொள்ளையர்களின் அட்டூழியங்கள் உச்ச நிலையில் இருந்து வந்தது.

கடற்கொள்ளையர்களில் பெரும்பாலானோர் கடற்கரையோரங்களிலும், மீனவக் குடியிருப்பு பகுதிகளிலும் கலந்து வாழ்வார்கள். இதனால் பொதுமக்களின் பார்வையில் அவர்களைக் கண்டறிவது சிரமமே.

சில கொள்ளையர் இனம் மீனவர் வேடமிட்டு செயல்படுவர். கடற்பாதுகாப்புப் படையினரால் கூட இவர்களைக் கண்டறிவதில் பெரும் சிரமம்.

பார்பர்(Barbar) இன கடற்கொள்ளையர்கள் 'ஒடோமேன்' (Otoman) கடற்கொள்ளையர்கள் என்றும் அறியப்படுவார்கள். வணிக கப்பல்களைக் கொள்ளையடிப்பது இவர்களின் முக்கிய இலக்காகும்.

பார்பரின கடற்கொள்ளையர்களின் அட்டூழியங்கள் நடந்தது வட ஆப்பிரிக்காவாகும். மெடிட்டேரியன்(Mediterranean), தூமீஸ்( Tumis), டீபாலி(Tripoli), அல்கீரிஸ்(Alqiers), சேலே( Sale) கடற்கரைப் பகுதிகளிலும், மக்ரிபீ(Maghribi) போன்ற துறைமுகப்பகுதிகளிலும் இவர்களுடைய தாக்குதல் இருந்து வந்தது. 'வட ஆப்பிரிக்க' பகுதி ஓடோமேன் (Ottoman) கடற்பகுதி என்றும் அறியப்படும்.

ஐரோப்பாவில் இருந்து ஆசியா நோக்கி வரும் பல கப்பல்கள் அந்நாட்களில் சூறையாடப்படன. வட ஆப்பிரிக்க குடிவாசிகள் அனைவரும் 'பார்பார்' என்றும் அந்நாட்களில் அழைக்கப்பட்டார்கள்.

ஐரோப்பாவிலிருந்து அழைத்துவரப்படும் கிறித்துவ அடிமைகளை இவர்கள் கடத்திவிடுவார்கள். கடத்தப்பட்ட அடிமைகள் ஆல்கோரியா(Algeria) மற்றும் மெக்ரிபி(Maghribi) போன்ற இடங்களில் உள்ள அடிமைச் சந்தைகளில் வணிகப் பொருட்களாக்கப்படுவார்கள்.

16 மற்றும் 17-ஆம் நூற்றாண்டுகளில் 1 கோடி முதல் 1.25 கோடி ஐரோப்பியர்கள் இவர்களால் கடத்தப்பட்டு அடிமைகளாக்கப்பட்டிருக்கிறார்
கள். இப்படி அடிமைகளாக விற்பனைக்குட்பட்டவர்களில் பெரும்பகுதியினர் இத்தாலி, ஸ்பெயின், போர்த்துகள். பிரான்சு, இங்கிலாந்து, துர்க்கி, அயர்லாந்து, போன்ற நாடுகளின் கடற்கரைப் பகுதிகளில் இருந்த மீனவர்களென அறியப்படுகிறது.

பல்லாயிரக் கணக்கான கப்பல்கள் 'பார்பர்' கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டுள்ளது. பலேனிக்(Balenic) தீவுகளில் இவர்களின் தாக்குதல் அதிகமாக இருந்திருக்கிறது. கடற்கொள்ளையர்கள் சிக்கலால் 'பார்மேண்டோரா' (Formentera) தீவைச் சேர்ந்த பலரும் தங்கள் குடியிருப்புகளைக் காலி செய்து மாற்று இடங்களுக்கு சென்றுள்ளார்கள்.

1551-ஆம் ஆண்டு 'துர்கேட் ரைசு' (Turget Reis) எனும் கொள்ளையர்கள் 'மெல்டா' (Malta) மற்றும் 'கோசோ' (Gozo) குடியிருப்பு வாசிகளை அடிமைப்படுத்தினர். 5000 முதல் 6000 வரையிலான அக்குடியிருப்புவாசிகள் 'லிப்யாவுக்கு(Libya) அனுப்பப்பட்டனர்.

ஒட்டோமென்(Ottoman) இன கொள்ளையர்களில் அதிகமாக அறியப்பட்டவர்கள் பார்பரோஸா(Barbarosa) சகோதரர்கள் கொள்ளைக் கூட்டமாகும். அல்கீரிஸ்(Algiers) பகுதியினை 16-ஆம் நூற்றாண்டு தொடங்கி 3 நூற்றாண்டுகள் அவர்களின் வசம் வைத்திருந்தார்கள்.

இவர்களைத் தவிர்த்து, துர்கேட் ரைசு(Turgut Reis),கேமல் ரைசு (Kemal Reis), சலிக் ரைசு(Salih Reis), மற்றும் கோகா முனட் ரைசு(Koca Munat Reis) போன்ற கடற்கொள்ளையர்களும் அக்காலத்தில் பேர் பெற்றகளாவர்.

(பி.கு: 30.11.2008 தமிழ் ஓசை களஞ்சிய பகுதியில் வெளிவந்த எனது கட்டுரை.)