Bapuan Temple 3D வடிவமைப்பு : Source theadvisorcambodia.com |
கெமர் மக்களுக்கு தனியொரு இலக்கிய பாரம்பரியம் இருப்பதாக அறிய முடியவில்லை. ஆரம்ப கால கல்வி முறையும் சரித்திரமும் போல் போட் காலத்தில் பலமாகவே சிதைக்கப்பட்டுள்ளது. இன்றும் பசுமையோடு இருக்கும் பல சரித்திர புதினங்களை நமக்கு கொடுத்த கல்கியும், சாண்டில்யனும், விக்ரமனும், ஆங்கு தோன்றி இருப்பின் நிச்சயம் போல் போட்டின் ஆயுதம் பதம் பார்த்திருக்கக் கூடும்.
போல் போட்: Source freethoughtpedia.com |
இக்கலைச் சிற்பங்கள் உறுவாக்கப்பட்ட காலம் ஜெயவர்மனின் ஆட்சி என்பதால் அவனைக் கொண்டாடுகிறோம். ஆனால் இப்படைப்புகளுக்கு பின்னால் இருக்கும் மாபெரும் வேலைபாடுகளை செய்தவர்களை நாம் சல்லடைப் போட்டாலும் தெரிந்துக் கொள்வது சிரமமே.
இங்கும் Zhou Daguan-னின் குறிப்புகளை மேற்கோள்காட்ட வேண்டி உள்ளது. ச்சாவ் தனது குறிப்பில் யசோதரபுரத்தில் அதிகமாக இருந்தது அடிமைகளே என கூறுகிறார். உள்ளூர் மக்களைக் காட்டினும் அதிகமான அடிமைகள் அங்கு இருந்துள்ளனர். போர்களில் அடிமையாக்கப்பட்டு கொண்டு வந்தவர்களை கோவில்களையும் கோட்டைகளையும் கட்ட பயன்படுத்தினர். கூடவே யானைகளையும்.
முகக் கோபுர கோவிலில் சில சுவர் ஓவிய வேலைபாடுகளை நீங்கள் காண முடியும். அன்றய மக்களின் அன்றாட வாழ்க்கையை சித்தரிக்கும் நிகழ்வுகள் செதுக்கப்பட்டுள்ளது. மேலும் சில முக்கிய சரித்திர நிகழ்வுகளையும் போர் காட்சிகளையும் காணமுடிகிறது.
கீழ் காணும் ஓவியம் கெமர் இராணுவத்தில் சீன வீரர்களின் பங்களிப்பை காட்டுவதாக உள்ளது. அங்கோர் நாகரீக காலத்தில் சீன தேசத்தோடு இவர்களின் உறவு இணக்கமாக இருந்ததாகவே குறிப்புகள் உரைக்கின்றன.
கொண்டை இருப்பது சீன இராணுவம் |
பேயோனில் நடக்க நடக்க பெருமுகங்கள் நம்மை கவனித்தபடியே உள்ளது. நடக்க நடக்க முடிவடையாத பாதைகள். பேயோனில் ஆங்காங்கு சிறுசிறு அறைகளை காண முடிகிறது. அங்கு புத்த சிலையை நிறுவி ஊதுபத்தி கொழுத்தவும் முடிகயிறு கொடுக்கும் வேலைகளும் நடக்கின்றன.
அங்கோர் பயணத்தில் நீங்கள் அடிக்கடி கேட்கும் வார்த்தை ‘ஓன் டால’ என்பதாக தான் இருக்கும். அதாவது ஒரு டாலர். கெமர் மக்கள் பேசும் ஆங்கிலத்தில் 'R' மற்றும் ‘S' போன்ற எழுத்துகள் பெரும்பாலும் மறைந்துவிடுகிறது. ஜெயவர்மன் என்பதை ‘ஜெயவமா’ என்பதாகவே உச்சரிக்கிறார்கள்.
பள்ளி பருவத்தில் இருக்கும் பிள்ளைகள் அதிகமாக அங்காடி வியாபாரங்களில் ஈடுபடுவது தெரிகிறது. பள்ளி முடிந்ததும் வியாபாரத்துக்கு வந்துவிடுகிறார்கள். சிறு பிள்ளைகள் ‘ஓன் டால’க்கான வியாபாரம் புரிகிறார்கள். உதாரணமாக சிறு கைவினை பொருட்களும் போஸ்கார்டுகளும் ஒரு டாலருக்கு விற்கப்படுகிறது. பாதுகாப்பு பொருட்டு புராதன சரித்திர தளங்கள் அமைந்த இடத்தில் மின்வசதிகள் கொடுப்படவில்லை. சாப்பாட்டு கடைகளும் வியாபார அங்காடிகளும் ஜெனரேட்டரின் உயபத்தில் செயல்படுகின்றன.
பெருமுகக் கோபுரங்களை முடித்துக் கொண்டு Baphuon எனும் கோவிலை காணச் சென்றோம். அங்கோர் தோம் கோட்டை பகுதியில் அமைந்த மேலும் ஒரு கட்டிடம். 11-ஆம் நூற்றாண்டில் 2-ஆம் உதயாதித்யவர்மனால் சிவனுக்காக கட்டப்பட்ட கோவில். இது வெங்கல கோபுரங்களால் ஆன கோவிலாக கூறப்படுகிறது. 15-ஆம் நூற்றாண்டில் புத்த கோவிலாக மாற்றும் முயற்சியில் சிதிலங்கள் ஏற்பட்டுள்ளன. 9 மீட்டர் உயரமும் 70 மீட்டர் நீளமும் கொண்ட ஒரு உறங்கும் புத்த சிலை அமைப்பு கொஞ்சமாக தெரிகிறது. இன்றைய நிலையில் ஒன்றும் இல்லாத வெற்று கட்டிடமாக மட்டும் தெரிகிறது. உச்சி கோபுரத்திற்கான படிகள் செங்குத்தாக தெரிகிறது. நான்கு கால்களில் தான் படியேற முடியும்.
‘ஆம். நான்றாக காற்று வரும். ஆனந்தமாக இருக்கும், இந்த வெள்ளைக்கார பசங்க அங்கன போய் உக்காந்துகிட்டு புத்தகம் படிச்சிகிட்டு இருப்பானுங்க’.
‘படி ரொம்ப ஆபத்தா இருக்கு, நிறைய பேர் விழுத்திருக்க வாய்ப்பிருக்கு’.
Baphuon மேல் இருந்து |
‘நல்ல காற்று. வெயிலும் அதிகம் தான்’
‘இன்னும் கொஞ்ச நேரத்தில் மழை வந்திடும்’.
‘ஒன்பது தலை நாகம் பெண் உருவில் வந்து ராஜாவோடு கூடுவதாக சொல்வார்களே அது இந்த இடம் போலவே உள்ளதே. அந்தக் கட்டிடமா இது?”.
“உங்களுக்கு இந்தக் கதைகளும் தெரிந்துள்ளதே. அது அந்தப்பக்கம். இன்னும் கொஞ்ச தூரம் நடக்க வேண்டும். உலகை காக்கும் மாதா அந்த ஒன்பது தலை நாகி என்பது நம்பிக்கை. நாகா என்பது ஆண். நாகி என்பது பெண்”. ச்சேனின் ஆண் பால் பெண் பல் பதம் வியக்க வைத்தது.
”போல் போட்டில் ஆட்சியில் இந்த இடங்கள் எப்படி இருந்தன என ஏதும் தகவல் உண்டா ச்சேன்?”
"எல்லா இடங்களிலும் கன்னி வெடிகளை புதைத்து வைத்திருந்திருக்கிறார்கள். பின் நாட்களில் அதை எடுத்துவிட்டாலும் இன்னமும் கண்டு பிடிக்க முடியாத கன்னி வெடிகள் உள்ளன. இந்த இடங்கள் எல்லாம் பெரிய பெரிய மரங்களால் காடு மண்டி மூடப்பட்டிருந்ததாக அப்பா கூறுவார். பல கட்டிடங்கள் அப்போது பார்வையில் இருந்து மறைந்திருந்தன”.
தொடரும்...