எனக்கு சில அடிமைகள் வேண்டும் பகுதி ஒன்று (படிக்க இங்கே சுட்டவும்)
முதலில் என்ன விதமான பானத்தை முயற்சிக்கலாம்? பல முறை சிந்தித்தேன். பல தேர்வுகள் என் மனக் கண்ணில் ஊஞ்சலாடின.
**************
தலைப்பு: துறைமுகம்
நயம்: சமூக நாவல்
ஆசிரியர்: தோப்பில் முகமதுமீரான் மதம் எனும் போர்வையால் மனிதனுள் ஏற்படும் பிம்பங்கள் பல. வித விதமான புரிதல்கள். இதன் பிரள்வுகளே மூட நம்பிக்கைகள் என அறியப்படுகிறது. படிப்பறிவு இல்லாத, மதம் எனும் புரிதலில் பயமும், தெளிவற்ற சிந்தனையும் கொண்ட கடலோர மக்களின் வாழ்வை சித்தரிக்கும் புதினமாய் அமைந்துள்ளது தோப்பில் முகமது மீரான் எழுதிய துறைமுகம் நாவல்.
குமரி மாவட்டத்தில், இந்திய தேசத்தின் சுதந்திரத்துக்கு முன் நடக்கும் சம்பவங்களைப் பிணைத்து கதைக் களம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இஸ்லாமிய மற்றும் கிருத்துவ மக்களின் வாழ்வை நாம் கண் முன் நிறுத்துவதில் ஆசிரியரின் சிரத்தை சிறப்பாகவே இருக்கிறது. இதில் முக்கியமாக விவரிக்கப்பட்டுள்ளது இஸ்லாமியர்களின் வாழ்க்கை முறையே. மதத்தை தன் வாழ்வியல் எல்லையாக பயன்படுத்தும் மக்கள். தமது நடவடிக்கைகளை, மதத்தில் இருக்கிறதா இல்லையா என்ற தெளிவற்ற கோட்பாடுகளோடு இணைத்து தங்களை ஒடுக்கிக் கொள்கிறார்கள்.
பத்திரிக்கை படிக்க கூடாது, ஆண்கள் தலையில் முடி வைத்திருக்கக் கூடாது, ஆங்கிலம் பயிலக் கூடாது. இவற்றைச் செய்துவிட்டால் அது ஹராம் என தீர்மானித்து தம் மதத்தின் மீதான தீவிர பற்றோடு இருக்கிறார்கள். பாமர மக்களிடையே தவறான மத போதனையை வழங்கப்படுகிறது. மதத்தின் பெயரால் மக்களிடையே தவறான போதனைகளை திணிக்கப்படும் சம்பவங்களை மத போதனையாளனின் கதாபாத்திரத்தோடு பேசப்படுகிறது. முகமது அலிகான் என்பவன் ஊருக்கு உயர்ந்தவனாக சித்தரிக்கப்படுகிறான். இவனது பிரள்வான சிந்தனைகளை அடிப்படையாக கொண்டால் இஸ்லாமியர்கள் உலக ஒருமைப்பாட்டை பேச முடியாது. மத வெறி தூண்டுதலின் அடிப்படை கருவியாகவே அவனை காண முடிகிறது.
கடலை நம்பி வாழும் மக்களின் நிலைபாடு எத்தகைய நிலையில் இருந்தது என்பது நெருடலாக இருக்கிறது. திடீர் திருப்பங்கள் இல்லாமல் யதார்தமாக கதை நகர்கிறது. பைத்தியகாரன் ஊரில் அறிவாலி முட்டாளான கதையாக, ஒரு குறுகிய வட்டத்திற்குள் தம்மை குறுக்கிக் கொண்ட மக்களின் மூட நம்பிக்கைக்கு எதிராக கேள்வியெழுப்புபவர்கள் அவ்வூர் மக்களுக்கு எதிரியாகிறார்கள்.
கதையில் வரும் மீரான் பிள்ளை சிறு வியாபாரி. மீன்களை கொழும்புக்கு அனுப்பி அவற்றில் கிடைக்கும் வரும்படியில் குடும்பத்தை நடத்துகிறார். கடலில் கிடைக்கும் மீன்களும் சரி, மீன்களின் விலை நிர்ணயமும் சரி இரண்டுமே அவருக்கு மரண பயத்தை கொடுக்கின்றன. மீன்கள் கிடைக்கும் காலத்தில் மார்கெட்டில் விலை இல்லை, மார்கெட்டில் மீன் கிராக்கி ஏறும் சமயம் மீன்கள் கிடைப்பதில்லை. இதில் பொய் புரட்டு என கஷ்ட ஜீவனம் நடத்தும் மக்கள். ஒரு கடிதம் வந்துவிட்டாலும் அதை படிப்பதற்கு ஆள் தேடும் ஊர் மக்கள்.
இதில் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியது முதலாளி வர்க்கத்தின் பொருளாதார அரசியல். ஒரே சமயம், ஓர் ஊர் மக்கள், கடலை நம்பி வாழ்பவர்களாக இருந்தாலும் முதலாளிமார்களின் திருட்டுத்தனத்தை வெளிப்படையாக நாவலாசிரியர் சொல்கிறார். அதாவது பொருளியல் தேடலில் மதம் எல்லாம் ஒரு சால்ஜாப்பு சமாச்சாரம் என்பதே இங்கு முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியது. ஈனா பீனா கூனா போன்ற முதலாளிகளின் துரோகத்தால் அக்கடற்கரை கிராமத்தின் பல மக்கள் கடன் சிக்கலிலும் வறுமையில் வாடுகிறார்கள்.
ஒருவனின் அறியாமையை இன்னொருவன் பயன்படுத்திக் கொள்வதைப் போன்ற மட்டகரமான செயல் இருக்க முடியாது. ஆண்கள் முடி வைத்திருந்தால் ஹராம் என்பதால் இன்று எந்த தலையை மொட்டை அடிக்கலாம் என சுற்றித் திரிகிறான் ஆனவிளுங்கி எனும் முடி வெட்டுபவன். இவனது கதாபாத்திரம் நகைச்சுவையூடாக சொல்லப்படுகிறது. முடி சரைப்பதில் தன்னை மிஞ்ச ஆளில்லை என்பது போன்ற பாவனையிலும், தன் சரைக்கும் கத்தியைப் போல் உலகத்தில் கிடையாது எனும் மிதப்பில் இருப்பவன். மதம் தனக்கு சாதகமாக ஒரு விடயத்தைக் கொடுப்பதால் அதை அவன் பவ்யமாக ஏற்றுக் கொள்கிறான்.
அரசியல், நாட்டுப்பற்று என அவர்களின் புரிதலுக்கு சிரமமானவை கூட ஹராம் என அடையாளப்படுத்தப் படுகிறது. இம்மாதிரியான அவல நிலைகளுக்கு எதிராக குரல் எழுப்பும், ஓராளவு படித்த இளைஞனானவன் விரோதியாக கருதப்படுகிறான். மீரான் பிள்ளையின் மகனான காசீமின் கதா பாத்திரம் அழுத்தமாக சொல்லப்பட்டிருக்கிறது. தமது சமூகத்தின் விழிப்புக்காக மாறுபட்ட வாழ்க்கையை வாழ்ந்துக்காட்ட முற்படும் இவன் செயல் எப்படி அமைகிறது என்பது கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. உடனடி மாற்றங்கள் எடுபடுமா என்பதையும் இங்கு நாம் காண வேண்டியுள்ளது.
நாவலின் எழுத்து நடை குறிப்பிட்ட மக்களின் மொழி வழக்கோடு அமைந்துள்ளது. தமிழ், மலையாளம், கொழும்பு, அரபு என கலவைகளை கொண்ட பேச்சு நடை வாசிப்புக்கு சிறு தடை என்றேச் சொல்லலாம். மேற்கோள் வார்த்தைகளை கொடுத்திருப்பினும் சரளமான வாசிப்புக்கு தகுந்த ஒன்றாக அமைத்திருக்கவில்லை. சில விவரிப்புகள் ஜவ்வு போல் இழுப்படுவதும் அயற்சியை கொடுக்கிறது. நாவலின் இயல்பு தன்மைக்கு இவ்வகை எழுத்து நடை அவசியமாக அமைந்துள்ளதையும் மறுக்க இயலாது.
குறிப்பிட்டக் காலத்தில் வாழ்ந்த மக்களின் வாழ்வியல் முறையை பதிவுப்படுத்தியதில் துறைமுக கப்பலின் பயணம் சிறப்பான ஒன்றே.
உனை சந்திக்கப் போகிறேன்
எப்படி இருப்பாய்
என்ன பேசுவாய்- எனும்
எண்ணற்ற ஆசைகளோடு
ச்சே... என்ன இது புது கவிதையா. இல்லை... கொலை மிரட்டல் வரும். வாக்கியத்தை மடக்கி போட்ட வரிகள் என வைத்துக் கொள்கிறேன். வேண்டாம் இதற்கு மேல் எழுத வேண்டாம்... சிந்தனை நிலையாக இல்லை. எங்கெங்கொ பறக்கிறது.
ஆம் முதல் முறையாக அவளை சந்திக்கப் போகிறேன். கழுத்தளவு ஆசைகள். ம்ம்ம்... பேசிவிட வேண்டும். எப்படி ஆரம்பிப்பது. கொஞ்சம் பயமாகவும் இருக்கிறது... இல்லை இது பயமில்லை... பதற்றம்...
காலையில் கிளம்பிவிட்டேன். ஒரு வார தாடியை சேமித்து வைத்து நேற்றிரவு தான் 'கிளீன் ஷேவ்' செய்தேன். ஹம்ம்ம்... இந்த முகம் அவளை கவருமா... பெருமூச்சு ஒன்று விடுதலையாகி சென்றது. இந்த சட்டை, இந்த 'பேண்ட்' எனக்கு எடுப்பாக இருக்குமா என்று நினைத்து வாங்கவில்லை. வாங்க வேண்டும் என்று நினைத்து வாங்கிவிட்டேன். இதை அணிந்து சென்றால் நன்றாக இருக்குமா? இவன் உடை கூட சரி இல்லை என்று ஆரம்பத்திலேயே கோட்டை விட்டுவிடுவேனோ என்ற எண்ணம் ஒரு பக்கம்.
இந்த வாசனை திரவியம் வேண்டாம். ஒரு வேளை அவளுக்கு பிடிக்காமல் இருக்கலாம். முகம் சுளித்துவிட்டால்.... ம்ம்ம்... இல்லை கொஞ்சமாக போட்டுக் கொள்ளலாம்... நெடுந்தூரம் போகிறோம்... மக்கள் நலனும் முக்கியம்.
சில மணி நேர பயணம். பேருந்தில் அமர்ந்திருந்த சமயம் எதுவும் கவரவில்லை. சாலையோர காட்சிகள் சூன்யமாக மறைந்து போனது. அவளை சந்திக்கும் தருணத்திற்காக உள் மனம் ஆயத்தமாகிக் கொண்டிருந்தது. எப்படி ஆரம்பிப்பது.... எனது கைப்பேசியில் இருந்து சில எஸ்.எம்.எஸ்கள் அவளுக்காக பறந்தது. அவ்விடம் சென்றடையும் வரை இந்த நேரம் கரைய வேண்டும். உள்மனம் அவசரப்படுத்தியது. காதில் எம்.பி.3யை மாட்டிக் கொண்டேன். ஒரு சில காதல் வரிகளை இரசித்தேன். தூங்கிப் போனேன்.
ஒரு வழியாக வந்துவிட்டேன். பயண தூரம் மறைந்து போனது. அவள் தொடர்பு கொண்டாள். காத்திருக்கும் இடத்தை சொன்னாள். அவள் குரலில் பயம் கலந்திருந்தது. சொன்னால் ஒப்புக் கொள்ள மாட்டாள். போகட்டும்... பாதகமில்லை....
நான் அவ்விடம் விரைந்தேன். தூரத்தில் அவளைக் கண்டேன். அவளும் என்னை பார்த்துவிட்டாள். அடையாளம் கண்டு கொண்டாள். பிடிக்குமா... பேசுவாளா...
என்னை மகிழ்ச்சியாகவே வரவேற்றாள். நிம்மதி என்னுள் மலர்ந்தது. 'பர்ஸ்ட் இன்ப்ரேஷன்' ஒவ்வொரு மனிதனுக்கும் அது முக்கியமான தருணம் இல்லையா.
"யூ ஆர் லுக்கிங் ஹண்ட்சம்" ஹம்ம்ம் இது வரை யாரும் சொல்லாத ஒன்று. இவள் ஏன் இப்படி சொல்ல வேண்டும். இது உண்மை தானா? இல்லை எனக்காக சொன்னாளா... இன்றுவரை குழம்புகிறேன். பொய்யாக இருந்தாலும் பரவாயில்லை... அவள் சொன்னது பிடித்திருந்தது...
"உங்கள் விரல்களில் நடுக்கம் தெரிகிறது", குளிர்பாக கோப்பைக்கு அருகில் இருந்த என் கரத்தை பார்த்து சொன்னாள். ஓ மை காட்... கன்ரோல் யுவர் செல்ப்...
எவ்வளவு அழகாக இருக்கிறாள். கோர்த்து வைத்திருந்த வார்த்தைகள் நெஞ்சுக்குள் சுக்குநூறாக உடைந்து போனது. அதை அடுக்க முற்படவில்லை. பேசுவோம்... போவதற்குள் சொல்லிவிட வேண்டும் எனும் தீர்மானம் மட்டும் மாறவில்லை.
என்னைக் களவாடும்
விழிகளின் வலிமைக்கு
என்ன பதில் சொல்வேன்
உன் இமைகள் மீது
பொறாமை வருகிறது
எவ்வளவு அழகாக
அதை பத்திரப்படுத்துகிறது
உன் விழிகளை சிறைபடுத்த
என் இமைகள் துடிப்பதை
அது அறியவில்லை
கொடுமைக்காரியே...
ஐய்யய்யோ என்ன இது... கவிதை எனும் பெயரில் ஒரு வஸ்து... வேண்டாம்... வேண்டாம்... மீண்டும் கதைக்கு வருவோம். கோவம் வேண்டாம் கண்மணியே பொதுவில் எழுதுவதால் என் வர்ணனைகளை தவிர்த்துக் கொள்வது நலம் என ஒரு அசரிரீ குரல் கேட்பது நன்றாகவே விளங்குகிறது. எனை கொலை செய்துவிடாதே.
அப்பப்பா என்ன ஒரு கண்கள். கொஞ்சமாக பழுப்பு நிறம் கலந்த சின்ன கண்கள். கொலை செய்யும் கண்கள் இதை பார்த்து தான் சொல்ல வேண்டுமா? ம்ம்ம்.... பதற்றம்... பதற்றம்... பதற்றம்... இல்லை நிச்சயமாக சொல்லிவிடுவேன். என் குரல் சிக்கிக் கொள்ளாமல் இருக்கட்டும்...
என் பரிசுகளை அவள் இரசித்தால். "இதை மட்டும் பிரிக்க வேண்டாம்", அறைக்கு சென்ற பின் பார்த்துக் கொள்ள சொன்னேன். எனது வருகையால் அவள் மகிழ்ச்சியடைந்து இருக்கிறாள். புரிந்துக் கொள்ள முடிந்தது.
அவளோடு பேசிக் கொண்டிருக்கும் இந்தத் தருணம் ஒவ்வொன்றும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இது உங்களுக்காக என அவள் கொடுத்த சாக்லேட் கூட ஒரு சின்னமாக என் முன் இப்போதும் சிரித்துக் கொண்டிருக்கிறது. சாக்லேட்டே.... உனக்கு ஆயுசு கெட்டி... அவள் கொடுத்த காரணத்தினால் நீ உயிரோடு இருக்கிறாய்.... அவள் கரம்பட்ட நீயாவது என்னுடன் இருக்கிறாயே... நீ நல்ல சாக்லெட் தான்... ச்சே ச்சே என்ன இது எனக்கு பைத்தியம் முற்றிவிட்டது... ஆம் அவள் நினைவின் பைத்தியம்....
எல்லாவற்றையும் இங்கு எழுதிவிட வேண்டுமா? இல்லை வேண்டாம்.... சில நினைவுகள் எனக்கு மட்டுமே சொந்தமாக இருக்கட்டும்...
சில மணி நேரங்கள் சடுதியில் சட்டென காலத்தில் கரைந்தோடியது. மீண்டும் இந்த தருணம் என் வாழ்வில் ஏற்பட காத்திருக்கிறேன். உன் நினைவாக எதையாவது எழுதி கொடு என்றேன். நான் படித்துக் கொண்டிருந்த புத்தகத்தின் கடைசி பக்கத்தை திருப்பி சுபம் என குறிப்பிட்டப்பட்டிருந்த பகுதிக்கு கீழிருந்த வேற்றிடத்தில் எதையோ எழுதினாய். பார்க்காதே என கண்டிப்பாக சொன்னாய். எழுதிவிட்டு இப்போது பார்க்க வேண்டாம். பேருந்தில் போகும் போது பார்த்துக் கொள்ளுங்கள் என்றாய்.
உன்னை வழியனுப்பிவிட்டு பேருந்துக்கு காத்திருக்கும் சயமம் அதை பிரித்து படித்தேன். உன்னை போலவே நீ எழுதிய தமிழ் எழுத்துகளும் அழகாகவே இருக்கின்றன. ஒன்னும் இல்லை சும்மா ரெண்டு வரி எழுதினேன் என்றாய். எனக்கு அது கவிதை தான்.
உன் அன்பை
வர்ணிக்க
நான் இன்னும்
வார்த்தைகளை
தேடுகிறேன்...
மன்னித்திடு...
என் தாய்மொழி
இன்னும்
தவித்துக் கொண்டிருக்கிறது
மீண்டும் மீண்டும் எனக்கான உனது இவ்வரிகளை பார்த்துக் கொண்டிருக்கிறேன். படித்துக் கொண்டிருக்கிறேன். என்னவளே உனக்காக காத்திருப்பேன்.