Friday, July 12, 2013

சிங்கம் 2 - பாக்குறியா பாக்குறியா


பிருமாண்டமான ஆங்கில திரைப்படங்களை கடந்த நூற்றாண்டில் கண்டு கழித்து இன்புற்றிருக்கிறோம். 'வெள்ளைக்காரன் நம்மல விட 20 வருஷம் முன்னுக்கு இருக்கான் டா' என பேசிக் கொள்வார்கள் அப்போதைய சமூக வலைத்தளம் இல்லாத விமர்சகர்கள். அரை குறை ஆடைகளை கண்டால் கண்னை மூடிக் கொள்ளும் நல்ல பிள்ளையாக இருந்த காலம். 

சில படங்கள் பார்ட் 1 பார்ட் 2 என வெளியிடப்பட்டு தூள் கிளப்பும். என்னளவில் அர்னால்டின் பிரடேட்டர், டெர்மினேட்டர் போன்ற படங்கள் 'வாவ்' சொல்ல வைத்த படங்களாகும். அவ்வேளைகளில் ஏன் தமிழ் படங்கள் மட்டும் இப்படி பாகம் பாகமாக வருவதில்லை என ஏங்குவதுண்டு. 

ரஜினியும் கமலும் பாட்ர்1 பார்ட்2 என மீண்டும் மீண்டும் ஒரே தலைப்பிலான படங்களில் நடித்திருந்தால் பள்ளி மாணவனான நானும் நண்பர்களோடு வீர தீரமான சில விமர்சனங்களை செய்திருப்பேன். முன் ஜென்ம பாவத்தால் அப்படியான வாய்ப்புகள் கிடைக்காமலே போய்விட்டது.

மூத்த விமர்சகர்கள் சொன்னது உண்மையோ என்னவோ 20 ஆண்டுகள் கழித்து இப்போது தமிழ் திரைப்படங்களை பாகம் வாரியாக பார்க்கும் வாய்ப்பு நமக்கு கிடைத்துள்ளது. அப்போதய நிலையில் தமிழில் நீயா மற்றும் கல்யாண ராமன் போன்ற திரைப்படங்களே இரண்டு பாகங்களில் வெளிவந்ததாக நினைக்கிறேன். 

சிங்கம் 2 வந்த தினமே வலையுலக விமர்சகர்கள் அதை கிழிந்து பிழிந்து தோரணம் கட்டிவிட்டதால் அதை விரிவாக விமர்சிக்க அவசியமில்லை என்றே கருதுகிறேன். இதற்கு ஏன் இவ்வளவு வரவேற்பு. முண்டியடித்து பார்க்கச் செல்கிறார்கள். பார்க்கிறார்கள் பார்க்கிறார்கள் பார்த்துக் கொண்டே இருக்கிறார்கள். 

அரி எனும் மாமனிதனுக்குள் ஒரு காலாச்சார கவலன் எப்போதும் உறங்கிக் கொண்டிருக்கிறான். 'பாக்குறியா பாக்குறியா' என சூரிய கார்ஜிப்பதை போல் படமெடுக்கும் போதெல்லாம் அந்த கவலனும் வசனத்தை பொழிந்து தள்ளிவிடுகிறான். நல்லவன் வல்லவன் பாசம் நேசம் என எல்லாமே குடும்ப கூட்டத்துக்கு ஏற்றதாய் அமைத்து வாயில் ஈ போவது அறியாமல் படத்தில் மூழ்கச் செய்கிறார். எது எப்படியோ சந்தானத்தின் காமெடி லீலைகள் பச்சையான அசைவ வகையே. 

நாக்கில் பாம்பை கொத்த வைத்து போதை ருசிக்கிறான் ஒரு கிங் காங் வில்லன். அவன் ஒரு ஆப்பிரிக்க கடத்தல் டானாம். முதல் பாகத்தில் உள்ளூர் ரௌடியுடனும் இரண்டில் வெளி நாட்டு டானுடனும் மூன்றில் வேற்று கிரகவாசிகளுடனும் சிங்கம் சண்டையிடும் என நம்பப்படுகிறது. 

என் இதயம் இது வரை துடிக்கவில்லை என முதல் பாகத்தில் ஒரு பாடல் இருக்கும் அதில் அனுஷ்காவில் நெஞ்சில் வட்ட வட்ட வானவில்லை விட்டு கடுபெற்றி தொலைத்தார்கள். அதே வேலையை இரண்டாம் பாகத்திலும் செய்து வயிற்றெரிச்சலை கொட்டி திர்த்துக் கொண்டிருக்கிறார்கள். 

அப்பட்டமாக சொல்லலாம் இது நிச்சயமாக விஜயகாந்த் நடித்திருக்க வேண்டிய திரைப்படம். இதன் கதைக் கருவினை சில யுகத்திற்கு முன் அவர் யோசித்துவிட்டார். அப்போது கொண்டாடி நெகிழாத தமிழினம் இப்போது ஆனந்த தாண்டவம் ஆடுகிறது. 

இந்த படம் வெற்றியடையளாம். அதனால் மூன்றாம் பாகமும் வெளியாகலாம். நானும் இப்படி இன்னொரு மொக்கையை போடலாம். 

பி.கு: இப்பதிவு முழுக்க ஐ-பேட் நான்கில் தட்டச்சு செய்து பதியபட்டுள்ளது :-)

Friday, July 05, 2013

NAKED FEAR - நிர்வாண மனித வேட்டை 18+




ஒருவனின் உரிமை முழுவதும் பரிக்கப்பட்ட பின் அவன் தொடர்ந்து வாழ வழி செய்வது தன்னம்பிக்கை மட்டும் தான். பிழைப்புக்காக வெளிநாட்டுக்குச் செல்லும் பலரின் ஏமாற்றுக் கதைகளை நாம் பல இடங்களில் கேள்விபட்டும் படித்தும் இருக்கலாம். தாயகத்தைவிட்டு வேற்று தேசத்திற்கு பிழக்கச் செல்லும் நபர் நம்பிக்கையின் அடிப்படையிலேயே செல்கிறான். அவர் ஏமாற்றப்படும் போது அந்த நம்பிக்கையும் உடைந்து அழுவதை தவிர வேறு நாதி இருப்பதாக தெரியவில்லை.
 
வெளிநாட்டில் வேலைக்கு வருபவர்கள் ஏஜெண்டுகளிடம் மிக கவனமாக இருப்பார்கள். தான் ஏமாற்றப்பட கூடாது என்பதில் அக்கரை எடுத்துக் கொள்வார்கள். இருந்தும் ஏமாற்றுபவர்களும் ஏமாறுபவர்களும் எண்ணிக்கையில் அதிகமாகவே காணப்படுகிறார்கள்.

எனது பணியில் நான் கண்டவரை இந்தியா, வங்காளம் போன்ற தேசங்களில் இருந்து இங்கு வேலைக்கு வரும் நபர்கள் குறைந்தபட்சம் மலேசிய ரிங்கிட்டுக்கு 15000 முதல் 20000 வரையிலும் செலவளித்து வருகிறார்கள். ஏஜெண்டுகளிடம் ஏமாற்றப்பட்ட பின் வேலைக்கான விசா காலாவதியாகி அல்லது ஏஜெண்டுகளால் கள்ள விசா கொடுக்கப்பட்டு, கொடுமை காரணமாக வேற்றிடம் ஓடி எப்படியாவது ஒரு நாள் பிடிபட்டு போவார்கள்.

அவர்களை இறக்குமதி செய்ததோடு ஏஜெண்டும் காணாமல் போய் இருப்பான். நான் பார்த்த வரையில் சாதாரன வேலைக்காக அதிகம் செலவு செய்து வருபவர் இந்த இரு நாட்டினர் மட்டுமே. பிடிபட்டவர் தண்டனைக்கு பிறகு அவர் தேசத்துக்கு அனுப்பி வைக்கப்படுவார். இருந்தும் ஊரில் கடன், அவமானம், ஏதுவும் சம்பாதிக்க முடியாத நிலை என பல குடைச்சல்கள் அவர்கள் வாழ்வை தொடர்வதற்கான ஆணி வேரையும் பிடுங்கி எறிந்திருக்கும்.
 
பாலியல் தொழிலுக்காகன ஏஜெண்டுகள் குறி வைப்பது சீனா, வியட்நாம், பிலிபைன்ஸ், தாய்லாந்து, இந்தோனேசியா போன்ற தேச பெண்கள். இது கள்ள மார்கெட்டில் நடக்கும் தொழில் என்பதால் இதன் நடவடிக்கைகளை கண்டுபிடித்து முறியடிப்பது கொஞ்சம் சவாலான காரியம். இப்படியாக ஏமாற்றப்படுபவர்களை பாதுகாக்கவும் குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை கொடுக்கவும் Anti-trafficking in Persons and Anti-smuggling of Migrants சட்டம் இயற்றப்பட்டது.
 

NAKED FEAR திரைப்படம் வெளிநாட்டுக்குப் பிழைப்பு தேடி வரும் பெண் ஏமாற்றப்பட்டு அவள் அனுபவிக்கும் கொடுமைகளை நமக்குச் சொல்கிறது. இது சைக்கோ கில்லர்ஸ் வகையை சேர்ந்த திரைப்படம். சைக்கோ கொலைகாரர்கள் படங்களை எக்கச்செக்கமாகவே ஹாலிவுட் நமக்கு கொடுத்துவிட்டது என்றாலும் இதன் சுவாரசியம் வேறு. ரோமம் சிலிர்த்து உடலை உரைய வைக்கும் திரைபட வரிசையில் இதை நிச்சயம் சேர்த்துக் கொள்ளலாம்.

படத்தின் ஆரம்பமே ஒரு கொலையில் தொடங்குகிறது. நிர்வாணமாக ஒரு பெண் பொட்டல் காட்டில் ஓடி வருகிறாள். திடீரென ஒரு அம்பு அவள் நெஞ்சை துழைக்கிறது. அவள் அருகே வரும் ஒரு வேட்டையாடி அவள் தலையில் சுட்டு கணக்கை தீர்க்கிறான். படத்தின் கதை இந்த கொலையாளியின் தளத்தில் பயணிக்கிறது. கதைக் களம் நடக்கும் இடம் மெக்சிக்கோ நாட்டின் ஒரு காட்டுப் பகுதியாகும். கொலை செய்பவனுக்கு அந்தக் காட்டின் மூலை முடுக்கு எல்லாம் அத்துபடி. நீங்கள் எங்கு ஓடினாலும் கண்டுபிடித்துவிடுவான். செத்து போனவர்களை அங்கேயே குழி தோண்டி புதைத்தும் விடுவான்.

 
இப்படியான சைக்கோ இருக்கும் மேக்சிக்கோ தேசத்திற்கு வேலை நிமித்தம் வருகிறாள் டயானா எனும் பெண். அவள் ஒரு நடன மாது.அவளை அழைத்து வரும் ஏஜெண்ட் பாஸ்போட்டை பிடிங்கிக் கொண்டு ஒரு பாரில் வேலைக்கு சேர்த்து விடுகிறான். அன்று முதல் அவள் நம்பிக்கையில் மண் வாரி இறைக்கப்படுகிறது. கிடைத்ததும் அவள் விரும்பிய வேலை இல்லை. பாரில் அவளுக்கு ஆடை அவிழ்த்து நடனமாடும் வேலை கொடுக்கப்படுகிறது. புதுப் பெண் அழகாக இருக்கிறாளே என பணத்தை வீசுகிறார்கள் அங்குவரும் ’குடி’மக்கள். இருந்தும் மொத்தத்தில் அவளுக்கு கிடைக்கும் கமிஷன் பணமோ மிக செற்பமாகவே உள்ளது.

ஏஜெண்டிடம் இருந்து பாஸ்போட்டை மீட்டால் மட்டுமே அவளுக்கு அங்கிருந்து விடுதலை கிடைக்கும். அங்கிருந்து ஓடிவிடுவதும் சுலபமான காரியம் இல்லை. ஏஜெண்ட் நிர்ணயித்து இருக்கும் அவளின் கடனோ மிக அதிகம். எவ்வளவு சிரமப்பட்டு பணத்தை சேர்த்தாலும் கடனை அடைப்பது எட்டாக் கனியாக உள்ளது. டயான தங்கி இருக்கும் அறையில் அந்த பாரில் வேலை பார்க்கும் இன்னொரு பெண்ணும் தங்கி இருக்கிறாள். நாம் வேலை செய்து கடனை அடைப்பது சாத்தியம் இல்லை. வேலை நேரம் போக இரவில் பாலியல் தொழிலில் செய்தால் கடனை சீக்கிரம் தீர்த்துவிடலாம் என யோசனை கூறுகிறாள்.

டயானாவின் போறத நேரம் அவள் சந்திக்கும் முதல் கஷ்டமர் அந்த சைக்கோ கொலையாளி ஆவான். அவனும் வேட்டையாட ஒரு பெண்னை தேடி பிடிக்க வந்திருப்பான். அவனோடு காரில் போகும் டயானா பாதியில் மனம் மாறி இறங்கிக் கொள்ள நினைக்கையில் படத்தின் மனித வேட்டையின் துரத்தல்கள் ஆரம்பமாகிறது. அவளை வீட்டிற்கு கடத்திச் சென்று மயக்க மருந்து கொடுத்து கால் விரல் இடுக்குகளில் உள்ள சதையை கத்தரித்துவிடுகிறான். மயக்கம் தெளிந்து எழும் அவள் ஒரு காட்டின் நடுவே நிர்வாணமாக கிடக்கிறாள். எழுகையில் சதை பிய்ந்த கால்களில் வலி. அம்பு எய்ய தயாராக இருக்கிறான் மனித வேட்டை செய்பவன்.

இதற்கிடையில் அங்கு புதிதாக வந்திருக்கும் காவல் அதிகாரி ஊரில் காணாமல் போவோரின் புகார்களை ஆய்வு செய்கிறார். காணாமல் போனவர்கள் பட்டியலில் அதிகமான பெண்கள் இருக்கிறார்கள், முக்கியமாக பாலியல் தொழிலில் ஈடுபட்ட பெண்கள் அதிகம் தொலைந்து போய் இருக்கிறார்கள். அவர்களை வேட்டையாடியவன் ஊரில் மதிப்பும் மரியாதையும் மிக்க நபர். யாருக்கும் அவன் ஒரு தொடர் கொலையாளி என்பதற்கான சந்தேகம் எழாதபடி தனது நிலையை தக்க வைத்து வந்தவனாவான்.

காட்டில் பிறந்த மேனியாக தப்பி ஓடும் டயானா எப்படி தப்பித்தாள் என்பதாக மீத கதை அமைகிறது. நிர்வாணமாக காட்டில் ஓடும் பெண்ணின் மேனி அழகை இரசிப்பதை தவிர்த்து பார்வையாளனுக்கு அவள் மீதான இரக்கத்தை ஏற்படுத்தி உள்ளது இயக்குனரின் வெற்றி. ஆடை உட்பட எந்த ஒரு பாதுகாப்பு அம்சமும் அந்த பெண்ணுக்கு இல்லை. தன்னம்பிக்கையும் தைரியமும் மட்டுமே அவளை காப்பாற்றுகிறது. மனித வாழ்க்கையில் பாதுகாப்பு அவனது சுய முயற்சியில் மட்டுமே அடங்கியுள்ளது. அவ்வப்போது கிடைக்கும் உதவிகள் ஒரு கட்டத்தில் நமக்கு சாதகமற்று போய்விடும் வேளையில் முயற்சியும் நம்பிக்கையும் மட்டுமே நமது ஆயுதமாக அமைகிறது. நாம் இன்னமும் ஒரு மோசமான உலகில் தான் வாழ்ந்துக் கொண்டிருக்கின்றோம். நம்மை நாம் தான் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்பதே படத்தின் செய்தி.

இது குடும்பத்தோடு அமர்ந்து பார்க்கும் படம் இல்லை என்பதால் படத்தை தேடி பிடித்து பார்க்கும் திறமையை உங்கள் வசம் விட்டுவிடுகிறேன். ஜெயம் உண்டாகட்டும்.