Tuesday, November 19, 2013

The Tournament 18+ சில ஆண்களும் ஒரு பெண்ணும்


சமர் எனும் திரைப்படம் இந்த வருட ஆரம்பத்தில் வெளியாகி இருந்தது. சுவாரசியமான கதை அமைப்பு இருந்தும், பில்லி சூனியம் வைத்ததை போல் அத்திரைபடம் சிறப்பாக வெற்றி காணவில்லை. திரிஷாவுக்காக திரையரங்கு சென்று பார்த்த படம் அது. ஏனே திரிஷா கொஞ்சம் சுருங்கி போய் இருந்தார். வயதின் மூப்பாக இருக்கும் என கருதுகிறேன்.

பணம் கொழுத்தவனின் திமிர்தனத்தை அழகாகவே சொல்லி இருந்தார்கள். மித மிஞ்சிய பணம். புதிது புதிதாக அடுத்தவனை வதைத்து கொண்டாடும் விளையாட்டு என்பதாக அக்கதை அமைந்திருந்தது. சமர் பார்த்த சமயம் The Tournament (2009) எனும் திரைப்படமும் என் மூலைக்கு எட்டிச் சென்றது. The Tournament படத்தின் கதையை கொஞ்சமாக அதில் பிடுங்கி போட்டிருக்கிறார்கள் என்பதே உண்மை.

நெஞ்சு குறுகுறுத்து இரத்தத்தை உறைய வைக்கும் விதமாகவே The Tournament அமைந்திருந்தது. ஓட ஓட விரட்டும் படம் அது. மொத்த படமும் நம்மையும் இழுத்து பிடித்து தரிகொட்டு ஓட வைக்கின்றது. பணம் பெருக பெருக புத்தி கோனலாக சிந்தித்து குதுகளிக்குமாம். கோடிட்ட சட்ட திட்டங்களை உடைத்து பார்க்கவும் அதை பணத்தைக் கொண்டு மொத்தமாக மூடி மறைத்துவிடவும் எண்ணித் துடிக்குமாம். புத்தி சரி இல்லாத ஒரு பணக்காரனே ஒரு டஜன் கிரிமினல் சிந்தனையைக் கொண்டிருந்தால், ஊரின் ஒட்டு மொத்த கிரிமினல் பணக்கார கும்பலும் ஒன்று சேர்ந்தால் எப்படி இருக்கும்? 

ஒரு கோடீஸ்வர கும்பலின் குரூர விளையாட்டை நம் கண் முன் கொண்டு வருகிறது The Tournament. ஊருக்கு ஒதுக்கு புரமாய் புகை மண்டலமாக காட்சியளிக்கும் ஒரு மண்டபத்தில் கூடி 'செத்து செத்து விளையாடும்' விளையாட்டை தொடக்கி வைக்கிறது ஒரு செல்வந்தர் கூட்டம்.

ஏழு ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த கொலை விளையாட்டு விளையாடி பார்க்கப்படும். மொத்தம் முப்பது போட்டியாளர்கள். முப்பது பேரும் உலகின் மிகச் சிறந்த கொலையாளிகள் எனும் அடிப்படையில் விளையாட்டுக்குத் தேர்வு செய்யப்படுகிறார்கள். 24 மணி நேரத்தில் இவர்கள் ஒருவரையொருவர் அடித்து வெட்டி குத்தி வெடித்து சுட்டு இன்னும் எப்படி எப்படி எல்லாம் முடியுமோ அப்படி அப்படி எல்லாம் கொலை செய்ய வேண்டும். இறுதியில் ஒருவரே போட்டியின் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார். ஆக மொத்தம் 29 பேர் இறந்தாக வேண்டும்.

நாமது கற்பனைக்கு அல்லது நாம் எதிர்ப்பார்க்கும் காட்சிகளாக இல்லாமல் புது புது திருப்பங்களில் இப்படம் அமைந்துள்ளது. எதிர்பாராத 'டுவிஸ்டுகள்' இப்படத்தின் பலமும் வெற்றியும் கூட. இந்த போட்டியில் வெற்றியடைபவன் 10 மில்லியன் டாலர் பரிசோடு உலகின் மிகச் சிறந்த கொலைகாரன் எனும் நிழலுலக பட்டத்தையும் பெறுவான். அவன் மீண்டும் அடுத்த ஏழு ஆண்டு கழித்து வரும் போட்டியிலும் மங்களம் பாட முடியும். இந்த 30 கொலைகார பாவிகளின் மேல் மேற்குறிபிட்ட நிழலுலக பணக்கார தாதாகள் ‘பெட்’கட்டி இவன் ஜெயிப்பான் அவன் ஜெயிப்பான் என உலக கிண்ண கற்பந்தை இரசிப்பதை போல் பெருந்திரையில் இரசித்துக் கொண்டிருப்பார்கள்.

ஒரு சுபயோகதினத்தில் இந்த 30 கொலைகாரர்களின் உயிர் ஓட்டமும் தொடங்குகிறது. அவர்களைக் கண்டு கொள்ளும் விதமாக எல்லோர் உடலிலும் அவர்களுக்கேத் தெரியாமல் ஒரு மென் கருவி பொருத்தப்படுகிறது. ஆளுக்கு ஒரு கைத்திரை கருவியும் கொடுக்கப்படுகிறது. ஆட்களின் நகர்வுகளை இரசிகர்கள் பெருந்திரையிலும், போட்டியாளர்கள் கையில் இருக்கும் சிறு திரையிலும் கண்டு கொள்ள முடியும். உடலில் புகுத்தப்பட்ட மென் கருவி ஒரு வெடிகுண்ட்டும் கூட. ஒரு வேளை நீங்கள் போட்டியில் இருந்து தப்பிக்கவோ அல்லது விளகிக் கொள்ள நினைத்தாலும் போட்டியின் இரசிகர்கள் ஒரு பித்தானை அழுத்தி உங்களை சிதறியடித்துவிடுவார்கள். 

சிங்கங்கள் சண்டையிடும் களமென தெரியாமல் கவரி மான் ஒன்று அதில் மாட்டிக் கொண்டால் என்ன ஆகும்? சிங்கங்கள் சண்டையில் மும்முறமாக இருக்குமா இல்லை மானை முதலில் காலி செய்யுமா? அந்த 30 பேரில் ஒருவன் 'சிப்ஸ்' பொருத்தப்பட்டிருக்கும் தனது உடலின் பாகத்தை வெட்டி 'சிப்ஸை' வெளியெடுக்கிறான். இது நடப்பது ஒரு காப்பி கடையின் கழிவறையில். வெளியெடுத்த சிப்ஸை போகிற போக்கில் போட்டுவிட அது ஒரு பாதிரியாரின் காப்பி கோப்பைக்குள் விழ, அவரும் அதை குடித்து தொலைக்க அவரின் வாழ்க்கையே பெரும் பிரச்சனையாகிவிடுகிறது. கடவுளின் பிள்ளை சாத்தான் குடும்பத்தில் வாக்கப்பட்டதை போல மிக பரிதாப நிலையாய் போய்விடுகிறது.

'சிப்ஸ்' இல்லாத கொலைகாரன் தனது கையடக்க சிறுதிரையில் ஏனைய கொலைகாரர்களின் நகர்வுகளை கண்டு தேடிச் செல்ல 'சிப்பை' விழுங்கிய பாதிரியாரை கொல்லவும் ஒரு பக்கம் ஆட்கள் தேடி கொண்டு வருகிறார்கள். ஆரம்பம் முதல் கடைசி வரை அதிரடியான சண்டை காட்சிகள் அதக்கலம். தற்காப்புக் கலை சண்டைகளும் கூடுதல் சுவாரசியம். அந்த சீனப் பெண் அலட்டல் இல்லாமல் எல்லோரையும் வசீகரிக்கிறார். 

இந்தக் கிறுக்குத் தனமான விளையாட்டுக்காக ஊரின் ஒட்டு மொத்த பாதுகாப்பு அம்சமும் தகர்கப்படுகிறது. கொலைக்கு கேஸ் கிடையாது. பாதுகாப்பு கேமரா, காவல் நிலையத்துக்குவிடுக்கும் தொலைபேசி அழைப்பு என எல்லாமே 'ஹேக்' செய்யப்படுகிறது. நிழலுலக பணக்கார தாதாக்கள் 24 மணி நேரத்துக்கு அந்த ஊரையே தன் கைவசம் வைத்துக் கொள்கிறார்கள். 30 பேர் என கணிக்கப்பட்ட விளையாட்டு பாதிரியாரின் காரணமாக 31 பேராக மாறுகிறது. 

போட்டியில் யார் வெற்றி கண்டார். எத்தனை பேர் இறந்தார்கள் என்பதை உங்கள் பார்வைக்கு விட்டுவிடுகிறேன். அதிரடியான அக்‌ஷன் திரைபட விரும்பிகளுக்கு இப்படம் நிச்சயம் பிடிக்கும். சில அரை நிர்வான நடனக் காட்சிகளும் இரத்தச் சகதி மிகுந்த சண்டைக் காட்சிகளும் இருப்பதால் இது 18+ முத்திரை போட்டு வைக்கிறேன். படத்தை தேடி பிடித்துப் பார்க்க சணியடி சித்தன் அருள் புரியட்டும்.

6 comments:

Unknown said...

கண்டிப்பா பார்க்கணும் டெத் ரேஸ் படம் போல இருக்குமோ

VIKNESHWARAN ADAKKALAM said...

நிச்சயமாக பாருங்கள், ஏமாற்றம் இருக்காது. டெத் ரேஸ் நான் இன்னும் பார்க்கவில்லை.

A N A N T H E N said...

இது போன்ற கிறுக்கன்கள் நிஜமாகவே இருக்கானுங்களா? சமர் பார்க்கும் போது, இதுதான் சதி என்ற தெரிந்த பிறகு அடச்சை என்றுதான் சொல்ல தோன்றியது. சில இடங்களில் லாஜிக் மிஸ்ஸிங். நீங்க சொல்லுற படமாவது ஒழுங்கா இருக்கான்னு பார்ப்போம்

Tamilvanan said...

இரண்டு படங்களையும் இன்னும் பார்க்கவில்லை.உங்கள் விமர்சனம் படங்களை பார்க்க தூண்டுகிறது

காரிகன் said...

It's an edge-of-the-seat-movie. Exciting till the end. Great post, buddy. Thanks for the write-up.

VIKNESHWARAN ADAKKALAM said...

@ Ananthen

அடடா... பாஸ் இந்த மாதிரி ஆக்‌ஷன் படங்கள் பார்க்கும் போது லாஜிக் எதிர்ப்பார்ப்பது சரிவராதுனு நினைக்கிறேன். உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு...

@ தமிழ்வாணன்

கண்டிப்பா பாருங்க பாஸ். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...

@ காரிகன்

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பாஸ். உண்மை தான் நகத்தைக் கடித்துக் கொண்டே படம் பார்ப்போம் இல்லையா... ;-)