Tuesday, June 23, 2009

அர்த்தமற்ற பொழுதுகள்

காதுத் துவாரங்களில் பஞ்சுகளை அப்பியதைப் போல் நிசப்த நிலை அவனுள் எழும்பி அழுத்துவதாக உணர்ந்தான். அச்சூழ்நிலைக்கு கிஞ்சித்தும் பயன்படாத கோப உணர்ச்சி அபரிமிதமாகவே அவனை ஆட்கொண்டிருந்தது. கையாளாகாத கோபம். இயலாமை கோபத்தின் காரணம் என அரிஸ்டாட்டலின் வரிகளை அச்சமயம் அவனிம் உபதேசித்திருந்தால் சொன்னவன் நிலை அதோகதியாகிவிட்டிருக்கும். பேய் கோபம் அவனுக்கு.

சூரிய வெப்பம் சாலையெங்கும் நிரம்பியிருந்தது. இயற்கை தனது சேவைகளை வழக்கம் போல் தடைகளின்றி நடத்திக் கொண்டிருந்த அற்புத நாட்களில் அதுவும் ஒன்று தான். அவனுக்கோ கண்களை இருட்டிக் கொண்டு வந்தது. உலகில் தீமைகள் நிறைந்துக் கொண்டு வருவதாக அதைக் கருதினான். அந்த இருள் தம் வாழ்வையும் பாழ் செய்யப் போகும் அறிகுறியாக எதிர்கால சிந்தனைகள் அவனுள் அலைக்கழித்தன.

பத்து நிமிடங்களுக்கு முன் நண்பனோடு கேலியும் கிண்டலுமாகத் தான் பேசிக் கொண்டிருந்தான். நண்பனைக் கவனித்தான். பேயறைந்த முகமாக வாடியிருந்தான். தோளில் கை வைத்தபடியாக ஒரு காவலாளி அவனை காவல் வாகனத்தை நோக்கி தள்ளிக் கொண்டு போனார். அவனது நிலையும் அப்படியே. அவனை பின்னால் நின்றிருந்த வேறொறு வாகனத்தை நோக்கி தள்ளிச் சென்றார்கள்.

போலிஸில் பிடிபடுவது அவனுக்கு இது முதல் முறையல்ல. ஏற்கனவே இவ்வனுபவம் அவனுக்கு பழக்கப் பட்டிருந்தது. ஏறக்குறைய இரண்டு வருடங்களுக்கு முன் கூட இப்படித்தான் எதிர்பாரா விதமாக போலிஸிடம் பிடிப்பட்டான்.

அன்று அவன் மட்டுமல்ல அவனோடு இருந்த எட்டு பேரும் கொத்தாக மாட்டிக் கொண்டார்கள். எட்டு பேரும் ஈறும் பேனுமாக கூடிக் கூத்தடிக்கும் நண்பர் கூட்டம் தான். ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு விளையாட்டு வழக்கத்தில் இருக்கும். ஆனால் எல்லாக் காலங்களிலும் தவறாமல் இடம் பெறுவது சீட்டாட்டமாக தான் இருக்கும்.

இடைநிலைப் பள்ளியில் அவர்களுக்கு அது இறுதி ஆண்டாகும். அவனும் சரி அவனது சகாக்களும் சரி, எல்லோரும் சுமாராக படிக்கும் மாணவர்கள் தான். வீட்டுக்குப் போய் சாப்பிட்டதும் 'டியூசன்' என்று சொல்லிக் கொண்டு கிளம்பி விடுவார்கள்.படிக்காத அந்த டியூசனுக்கு மாதம் தவறாமல் வீட்டில் பணம் பறிக்கப்படுவது எழுதப்படாத விதி. அவனது பெற்றோருக்குப் பிள்ளை மேல் நம்பிக்கை என்பதை விட, இன்றைய நவநாகரிக உலகின் அடாத வேலைப் பளுவால் பாதிக்கப்பட்ட ஜீவன்களுள் நாங்களும் அடக்கம் எனச் சொல்லிக் கொள்ளும் சமூகத்தின் அங்கத்தவர்கள் என்பதே தகும். பிள்ளை தனக்கானதைப் பார்த்துக் கொள்வான், தன் கடமை பணத்தைக் கொடுத்தால் முடிந்தது என கருதுவோர்.

வார நாட்களில் இவர்களின் அழிச்சாட்டியம் அதிகமாகத் தான் இருக்கும். வார இறுதிகளில் அபரிமிதம் என்று தான் சொல்ல வேண்டும். எல்லோரும் பக்கத்துப் பக்கத்து குடியிருப்புகளில் வசிப்பவர்கள். இவர்களுக்கு வசதியாக அமைந்த சந்திப்பு இடம் ஒன்று உண்டு. பாழடைந்த பங்களாவோ ஆளில்லாத குடிசையோ இல்லை. பிரதான சாலை ஓரத்தில் அமைந்திருக்கும் பெட்ரோல் நிலையத்திற்குப் பின்னால் கேட்பாரற்ற சிறு காடு உண்டு. அக்காட்டில் இருந்த ஒரு பெருமரத்தின் காலடிதான் இந்நண்பர்கள் கூட்டணி சங்கமிக்குமிடம்.

சுவாசப் பைக்கு கனத்த காற்றாக வெண்சுருட்டுகளை ஊதிப் பழகியது அம்மரத்தடியின் பொழுதுகளில் தான். காசிருக்கும் சமயங்களில் 'சபை'யில் பீர் மற்றும் விஸ்கி போன்ற வஸ்த்துகளுக்கும் சிறப்பிடம் கொடுப்பார்கள். மாதக் கடைசியின் ஒரு சனிக்கிழமையின் பொழுது அப்படி தான், தன் வசமிருந்த கொஞ்ச நஞ்ச சில்லரைகளை வைத்துச் சீட்டாடிக் கொண்டிருந்தார்கள். மாற்று உடையிலிருந்த காவலர்கள் சட்டென சுற்றி வளைத்துப் பிடித்தார்கள்.

ஈரக்குலை நடுங்கிப் போனது அவர்களுக்கு. படுவேகமாகவும் கடுமையாகவும் சோதனையிடபட்டார்கள். மரத்தடியில் கிடைத்த பொருட்களை கைப்பற்றிய போலிஸ்காரர்கள் முகத்தில் வியப்புக் குறியுடன் எல்லோரையும் தலையில் தட்டி, ஓட்டி வந்திருந்த ஜீப்பில் ஏற்றி காவல் நிலையத்துக்கு கொண்டு வந்தார்கள்.

ஸ்டேஷனில் சற்றே கடுமையான குரலில் மேலோட்ட விசாரணை நடத்தியவர்கள் அவர்களின் குடும்பத் தகவல்களை அறிந்துக் கொண்டு தொலைபேசியில் அழைத்துச் சொன்னார்கள். தகவல் கிடைத்து வந்தவர்களில் சில கோபக்கார அப்பாக்கள் பொறி பறக்க இரண்டொரு அறைவிட்டு பிள்ளைகளை வீட்டுக்கு இட்டுச் சென்றார்கள்.

வீட்டுப் பெரியவர்களிடம் பேசிக் கொண்டிருந்த போது, ஒரு கும்பல் ஆபத்தான கருவிகளுடன் சண்டைக்கு காத்திருப்பதாகவும் சீட்டு விளையாடிக் கொண்டிருப்பதாகவும் தகவல் வந்ததை வைத்து அவ்விடம் விரைந்ததாக சொல்லி வைத்தார் ஒரு போலிஸ்காரர். நண்பர்களுக்கு 'எவன் டா சொன்னவனா இருப்பான்' என புத்தி சடுதியில் விரைந்தது. 'இவனா தான் இருக்கனும்', 'அவனாதான் இருக்கனும்' என கணக்கு தீர்மானங்கள் ஓரிரு கெட்ட வார்த்தைகளுடன் மண்டையில் மச மசத்துக் கொண்டிருந்தன. அடுத்து வந்த சில தினங்களுக்கு யார் போலிஸில் போட்டு கொடுத்த ஆசாமி எனும் பேச்சு தான் அதிகமிருந்தது.

சூதாடிய குற்றத்திற்கு புகார் பதிவு செய்யப்பட்டது. ஒரு குறிப்பிட்ட தினத்தில் நீதி மன்றம் வரச் சொல்லி இருந்தார்கள். கதையின் ஆரம்பத்தில் பிடிபட்ட இருவரும் தங்களது பெயரை காவல் நிலையத்தில் கையெப்பமிட்டது அது தான் முதல் முறையாகும். அவன் சிவ தயாளன் எனும் தமது பெயரை ஆங்கிலத்தில் 'எஸ்' வடிவம் போட்டு கிறுக்கினான். அடுத்தவன் மருதன். பின்னார் அனைவருமாக கையெழுத்துப் போட்டுக் கிளம்பினார்கள்.

வீட்டில் தாய் தந்தையினரிடம் தான் விளையாடவில்லையென்றும் நண்பர்கள் விளையாடிக் கொண்டிருந்ததை பார்த்துக் கொண்டிருந்ததாகவும், வலுக்கட்டாயமாக அவனை அங்கு அழைத்துச் சென்றுவிட்டார்கள் என்றும் பழங் காலத்து பொய்யையே சொல்லி வைத்தான். இரண்டு மூன்று நாட்களுக்கு சிவ தயாளனுக்கு அவ்வப்போது நெஞ்சில் சுருக்கென ஊசியேற்றும் விதமாக அறிவுரைக் கூறிக் கொண்டிருந்தார்கள். அந்தப் பொய்யை வீட்டில் நம்பினார்களா என இன்று வரை அவனுக்கு தெரியாது.

வாரங்கள் ஓரிரண்டு நகர்ந்ததும் நண்பர்கள் இயல்பு நிலைக்க்கு திரும்பினார்கள். தம்மை மாட்டி விட்டவர்களாக இருக்கக் கூடுமென சில சண்டைகள் வந்தன. சிறு வயதில் பந்து விளையாட்டின் சமயம் கள்ள ஆட்டம் ஆடினார்கள் என ஒருவரை ஒருவர் குற்றம் சொல்லிக் கொண்டு பிரிந்துபோன குழுக்களாகி இருந்தார்கள். அச்சண்டை எப்படி எப்படியோ சுழன்று சுற்றி அன்றைய நிலையில் பெரும் பகையாகிவிட்டிருந்தது. போலிஸில் மாட்டிவிட்ட பிரச்சனையால் அவ்வப்போது அடித்துக் கொண்டார்கள். கெட்ட வார்த்தைகளில் முகம் சிவக்க ஆத்திர வடுவேறியவர்களாக கத்தி தீர்த்துக் கொண்டார்கள். உன்ன விட மாட்டேண்டா என தமிழ் திரைப்படத்தின் தாக்கத்தால் ஓரிரு வசனங்கள் பேசிக் கொண்டார்கள்.

நீதி மன்றத்தில் வழக்கு விசாரிக்கப்படும் நாளும் வந்தது. சீட்டுக் கட்டையும், விளையாட்டில் பயன்படுத்தப்பட்ட தொகை 2 ரிங்கிட் 25 காசையும் நீதிபதியின் பார்வைக்கு வைத்திருந்தார்கள். புகார் படிக்கும் போது தொகையை சொன்னவுடன் நீதிமன்றம் 'கொல்; என சிரித்து வைத்தது. சூதாடிய குற்றத்தை ஒப்புக் கொண்டதினாலும் குறைந்த வயது மாணவர்களாக இருந்ததாலும் 100 வெள்ளி அபராதமும் எச்சரிக்கையும் கொடுத்து அனுப்பினார்கள்.வழக்கன்று அவன் வீட்டினர் யாரும் வந்திருக்கவில்லை. 200 வெள்ளி 'பைன்' போடுவார்கள் என சொல்லி காசு வாங்கி வந்திருந்தான். அதனால் 100 வெள்ளி லாப கணக்கில் சேர்ந்தது. இது நடந்து இரண்டு வருடங்கள் நகர்ந்து விட்டிருந்தது.

இன்று நண்பர் கூட்டம் பல இடங்களுக்கு பிரிந்து விட்டது. சிலர் வெளியூரில் வேலை செய்தபடி இருந்தார்கள், சிலர் வேற்றிடத்தில் தங்கி படித்து வந்தார்கள், ஒருவன் ஐந்தாம் படிவ பரிட்சை முடிந்ததும் காதலியைக் கூட்டிக் கொண்டு ஓடிவிட்டான். அவனால் ஏனையோர் அவர் குடும்பத்தில் மொத்தடிப்பட்ட கதைகள் வேறு. அதில் சிவாவும் மருதனும் மட்டும் ஒன்றாக இருந்தார்கள். ஒரு தனியார் கல்லூரியில் விண்ணப்பம் செய்து கடமைக்குப் படித்து வந்தார்கள். நண்பர்கள் ஊர் திரும்பும் சமயங்களில் சந்தித்துக் கொண்டார்கள். கொண்டாட்டங்கள் குறைந்துவிட்டிருந்தது. சமய்ங்களில் இளயவர்கள் கேலியும் கிண்டலுமாக பேசிக் கொள்வதை காணும் போது சிவாவுக்கு தன்னையறியாமல் ஒரு மந்தகச் சிரிப்பு எழும்பிச் செல்லும்.

அன்றய தினம் இருவரும் புதிதாக திரைக்கு வந்திருந்த ஒரு படத்திற்குச் செல்ல திட்டமிட்டிருந்தார்கள். இவன் குளித்துக் கிளம்பிக் கொண்டிருந்த சமயம் மருதன் காரில் வந்து நின்றிருந்தான். அவன் அப்பா எங்கோ சென்று வந்ததாகவும். காரை வீட்டின் வெளியில் நிறுத்திவிட்டு அலுப்பில் உறங்கிக் கொண்டிருப்பதாகவும் சொன்னான். ”நான் கமுக்கமா ஓட்டிக்கிட்டு வந்துட்டேன். பிறகு கேட்டால் சொல்லிக்கலாம்.நீ கிளம்பு நாம படம் பார்க்க போகலாம்” என்றான். அவனும் கிளம்பினான். பத்திரிக்கையில் படித்த படத்தின் கிசுகிசுகளையும் விமர்சனத்தையும் உலக அதிசயத்தில் இதுவும் ஒன்று என்பது போல் சிலாகித்துப் பேசிக் கொண்டார்கள்.

எதிரில் போலிஸ் தடுப்புக் காவல் இருப்பதைக் கண்ட போது கூட பரிசோதனைக்கு 'லைசன்ஸ்' இருக்கிறதா என கேட்பார்கள் என்று தான் நினைத்தார்கள். இப்போது பிடித்துக் கொண்டு காவல் நிலையம் வரை இழுத்துச் செல்வார்கள் என்றதும் பயத்தில் இருவருக்கும் உடல் கிடுகிடுத்துப் போனது. கொஞ்சம் குழம்பியும் போனார்கள். முன்பு கேள்விப்பட்டிருக்கிறான். ஒரு குற்றச் செயலில் இருவர் மாட்டிக் கொண்டால் இப்படித் தான் தனித் தனியாக வெவ்வேறு விதமாக கேட்டு விசாரிப்பார்கள் என்று. காரில் சென்றுக் கொண்டிருக்கும் இத்தருணம் மருதனிடம் என்ன கேட்டிருப்பார்கள் என்றும் அவன் என்ன சொல்லி இருப்பான் என்றும் பலமாகவே யோசித்துக் கொண்டிருந்தான். மருதனுக்கும் அதே சிந்தனை தான்.

காவல் நிலையத்தில் ஒரு போலிஸ்காரர் தனது வறட்டுக் குரலில் மிரட்டி விசாரித்தார். பலமாக அடித்துவிடுவதைப் போல் பாவனை செய்தார். ஆனால் அடிக்கவில்லை. வந்தவுடனே இருவரிடம் இருந்த பொருட்களையும் பரிசோதித்து எடுத்து வைத்துக் கொண்டார்கள். வீட்டில் செய்தி சொல்ல அனுமதி மறுக்கப்பட்டது. அடையாள அட்டை எண் வழியாக பரி சோதித்து பழைய சூதாட்டப்புகாரைப் பற்றி விசாரித்து வைத்தார்கள். நெடு நேரமாக வராண்டாவில் அமர வைத்திருந்தார்கள். காரில் என்ன விசாரித்தார்கள் என குசுகுசுத்துப் பேசிக் கொண்டார்கள். வந்து போகும் காவல் அதிகாரிகள் ஒரு சிலரைத் தவிர எல்லோருமாக கேட்டு வைத்தார்கள். மிரட்டினார்கள், நீ என்ன 'கேங்' தலைவனா என ஒரு அதிகாரி இருவரின் இடுப்பையும் கிள்ளினார்.

அந்தி மறைந்து இரவு எட்டிப் பார்க்க ஆரம்பித்த நேரமாக இருந்தது. வீட்டில் இருந்து வருவார்கள் எனும் எதிர்பார்ப்பு ஆரம்பத்தில் இருந்தே இருவருக்கும் எத்தனித்திருந்தது. மற்ற இடங்களை நோட்டமிட்டதை விட கண்கள் வாசல் பக்கமே அதிகமிருந்தது. இரவு ஓர் அதிகாரி வந்தார். இருவரையும் படிவம் ஒன்றில் கையெப்பமிட சொல்லி காவல் நிலைய கட்டிடத்தில் சற்றே தள்ளி வேறிடத்தில் இருந்த சிறையில் அடைத்தார்கள்.

சிறைச்சாலையின் முதல் அனுபவம் அவர்களிடம் வில்லப் புன்னகை பூத்தது. பெரிய அறை. பத்துப் பதினைந்து பேர் இருந்தார்கள். இங்கு வருகையாளர்கள் சகஜம் என்பதைப் போல் உள்ளே அனுப்பப்பட இவர்களைக் யாரும் கண்டுக் கொள்ளவில்லை. படுத்திருந்த ஓரிரு தலைகள் ஏறிட்டுச் சாய்ந்து கொண்டது. நுழைவாயிலின் பக்கத்தில் இருவருமாக அமர்ந்துக் கொண்டார்கள்.

என்ன 'கேசு' என ஒருவன் ஆரம்பித்தான். நடந்ததைச் சொன்னார்கள். அறிந்திராத சட்டத்தின் கோட்பாட்டு எண்களைக் கூறி அந்தக் 'கேசா' என்றான். மேலும் பல மாதிரியானக் கேள்விகளைக் கேட்டார்கள். கேள்விக் கேட்டவனோடு மேலும் சிலர் சேர்ந்து கொண்டார்கள். அவர்கள் பேச தாம் பெரிய குற்றம் செய்து வந்ததைப் போல் தோன்றியது. இருவருக்கும் விழி நீர் முட்டிக் கொண்டு வந்தது. அடக்கிக் கொண்டார்கள். இவர்களைப் பாடச் சொன்னார்கள். இவர்கள் அமைதியைக் கண்டு அடிக்க வருவதைப் போல் பயம் காட்டினார்கள். துக்கத்தை அடக்கிக் கொண்டு பாடினார்கள்.

அந்த அறை இருட்டிக் கிடந்தது. விளக்குகள் இருக்கிறதா என அறிய முடியவில்லை. ஒரு கழிப்பிடமும் பக்கத்தில் குழாயும் இருக்கக் கண்டனர். ஒருவன் கொஞ்சமாக குழாய் நீரை திறந்துவிட்டு கைக்குட்டையின் கால் வாசியாக இருக்கக் கண்ட துணியால் தேய்துக் தேய்த்துக் குளித்துக் கொண்டிருந்தான். ஒருவன் சுவர் ஓரமாக மேல் எக்கி எதையோ சுரண்டினான். காகிதத்தில் வைத்து சுருட்டி சுவர் இடுக்கிலிருந்த தீக்குச்சியால் உரசி பற்ற வைத்து இழுத்துக் கொண்டிருந்தான். சிலர் உறங்கிக் கொண்டும், சிலர் பேசிக் கொண்டும் விநோதமாக பொழுதுகள் நகர்ந்தன. நேரம் தெரிந்துக் கொள்ள முடியவில்லை. தூக்கமும் சிறைக்கு பயந்த ஒன்றாய் வர மறுத்தது.

நள்ளிரவில் அவர்கள் குடும்பத்தார் வந்ததாகவும் காலையில் உயர் அதிகாரியிடம் பேசி அழைத்துக் கொள்ள சொன்னதாகவும் காவலர் ஒருவர் செய்தி சொல்லிச் சென்றார். அத்தருணம் சுவாசித்த காற்றில் கொஞ்சம் ஈரம் பொதிந்திருப்பதாய் இருவரும் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர். டேய் பசங்களா வெளிய போனதும் இத இத வாங்கி பின்னால 'கேட்' வழியா உள்ள தூக்கி போட்டிடுங்க. நாங்க மத்தியானம் வெளிய சுத்தம் பண்ண போகும் போது எடுத்துக்கிறோம் என சில பட்டியலை சொல்லி வைத்தார்கள். இருவரும் சரியென தலையாட்டி வைத்தார்கள். சிறு கப்பில் 'சீராப்பு' நீரையும் ரொட்டி துண்டுகளையும் கொடுத்தார்கள். அது காலை பசியாற என புரிந்துக் கொள்ள முடிந்தது.


சுமார் ஒன்பதரை மணியளவில் அவர்களை வெளியே வரச் சொன்னார்கள். உயர் அதிகாரியின் அலுவலகம் அழைத்துச் செல்லப்பட்ட போது மருதனின் அப்பா உயர் அதிகாரியோடு பேசிக் கொண்டிருந்தார். சில காகிதங்களைக் காட்டி ஏதோ சொல்லிக் கொண்டிருந்தார். பிடிபட்ட நாளன்று காரின் பின் பக்கம் பள பளக்க தீட்டப்பட்ட கோடரி ஒன்று காகிதத்தால் சுற்றப்பட்டு வைக்கப்பட்டிருந்ததை பற்றியதாகத் தான் அப்பேச்சு இருந்தது. அக்கோடரி தாக்குதலுக்கு பயன்படுத்த வைத்திருந்ததாகப் போலீஸ் சந்தேகித்துக் கைது செய்ய நேர்ந்ததாகப் பெற்றோரிடம் சொன்னார்கள். அக்கோடரி மருதனின் அப்பா வேலையிடத்தில் உபயோகிப்பதாகவும், வேலையிடம், பட்டை தீட்டிய ரசீது என எல்லாவற்றையும் எடுத்துக் கூறி அவர்களை வெளியாக்கினார்கள்.

கையெழுத்துப் போட்டுவிட்டு வீட்டுக்கு கிளம்பினார்கள். சிவாவும் மருதனும் காரில் அமர்ந்திருந்தார்கள். முதலில் அவ்வதிகாரி கூறியது நினைவை உறுத்தியது. வாகனத்தில் தாக்குதலுக்குக்குரிய ஆயுதம் வைக்கப்பட்டிருபதாக செய்தியறிந்து பிடித்ததாக அவர் சொன்னார். யார் சொல்லி இருக்கக் கூடும் என பலத்த சிந்தனையில் இருவரும் மூழ்கிக் கிடந்தார்கள். கார் சாலையில் விரைந்துக் கொண்டிருந்தது. பூமியில் வெளிச்சம் கொட்டிக் கிடப்பதை சிவா உணர்ந்தான். வீட்டிற்கு போனதும் புத்தி சொல்ல அவனது பொற்றோர் வார்த்தைகளைத் தேடிக் கொண்டிருந்தார்கள்.

(பி.கு:இது 'உரையாடல், சமூக கலை இலக்கிய அமைப்பு' நடத்தும் சிறுகதை போட்டிக்காக எழுதப்பட்ட எனது ஆக்கம்)

Monday, June 22, 2009

நீயும் என் தோழனே! –சேகுவாரா.

உறுதியான, அழகான முகம். சுருள் சுருளாக ஒழுங்கு படுத்தாத தாடி, முதலில் பார்க்கும் போது கடுமையாக தெரியும் தோற்றம். புன்னகைக்க ஆரம்பித்தால் வெளிபடும் இளமை, பச்சை நிறத்திலான தொள தொளத்த காற்சடை, பூட்சுகளும், கருப்பு தொப்பியும் அதில் சிகப்பு நட்சத்திரமும் அவரோடு ஒட்டி பிறந்த அம்சங்கள் போல தோன்றின. யார் இவர்? இவர்தான் பல புரட்சிகளை உருவாக்கியவர். உலகெங்கும் உள்ள இளைஞர்களை வசீகரித்து, திரும்பிப் பார்க்க வைத்தவர். அவருடைய ஏதோவொன்று மனிதர்களின் இதயத்துக்குள்ளும், மூளைக்குள்ளும் கலந்துவிட்டிருக்கிறது.

அவர்தான் சே குவாரா அல்லது சே என்று அழைக்கப்படும் எர்னெஸ்டோ குவாரா. 1928 ஜூன் 14-ஆம் நாள், அர்ஜெண்டினா ரோசாரியோவில் பிறந்த சே, வசதியான நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவர். ஆஸ்த்துமா நோயால் அவதி பட்டாலும், உடற்பயிற்சி, வேட்டை, மீன் பிடித்தல், மலையேறுதல் போன்றவற்றில் அதிகம் ஈடுபாடு கொண்டார். 1952-இல், பியூனோஸ் எய்ரஸ் பல்கலைகழகத்திலிருந்து பட்டம் பெற்ற ஒரு மருத்துவ மாணவரான இவர், பிற்காலத்தில் இலட்சிய வீரர் என்று உலகளவில் பேரெடுத்தார். மாணவர் பருவத்திலேயே, பெரோண் ஆட்சியை எதிர்த்து, அரசியலில் ஈடுபட ஆரம்பித்துவிட்டார்.

பட்டம் பெற்ற பிறகு, தனது மோட்டார் சைக்கிளிலேயே குவாதமாலாவிற்கு சென்று, அங்கு கம்யூனிச ஆதரவாளராகிய ஜெக்கபோ அர்பென்ஸ் குஸ்மானின் ஆட்சியில் (1951-54), அரசாங்க மருத்துவ சேவகனாக பணிபுரிந்தார். அதோடு அர்பென்ஸ் ஆட்சியை தொடர்ந்து ஆதரித்து வந்தார். அர்பென்ஸ் ஆட்சி வீழ்ந்த பிறகு, சேகுவாரா மொக்சிகோவிற்கு சென்று, மார்க்சிஸ்ட் பாப்புலர் சோசலீஸ்ட் கட்சித் தலைவர் வின்செண்ட் லொம்பர்டொவுடன் தொடர்பு கொண்டார். அங்கு சேவிற்கு, அரசு மருத்துவமனையில் டாக்டர், மற்றும் தேசிய பல்கலைகழக மருத்துவ ஆசிரியர் என்று இரண்டு பொருப்புகள் கொடுக்கப்பட்டது.

1956-இல், சே, காஸ்ட்ரோவை எதெச்சையாக சந்தித்தார். காஸ்ட்ரோவின் கொரில்லாப் போரில் ஈர்க்கப்பட்டசேகுவாரா, மருத்துவ சேவையின் பேரில் அப்படையில் இணைந்தார். ஜூலை 1956-இல், மெக்ஸிகன் காவலாளிகளால் பிடிக்கப்பட்ட சேகுவாராவும், தோழர்களும் விடுவிக்கப்பட்டபின், டிசம்பர் 1956-இல் கிரான்மா இலட்சியப் பயணம் ஆரம்பிக்கப்பட்டது. ஒரு போராளியாகவும், பின் இராணூவ தளபதியாகவும், அதன் பின் கமாண்டராகவும், காஸ்ட்ரோவிற்கு அடுத்த மனிதராகவும் இருந்த மனிதராகவும் இருந்த சேகுவாராவின் தலைமையில் 1958-இல் சாந்தா கிளாராவை கைப்பற்றினார்கள். 1959 கியூபா புரட்சிக்குப்பின், சேவிற்கு கியூபா குடியுரிமை அளிக்கப்பட்டதோடு, ஹவானாவில் லா கபானா துறைமுகத்தில் கமாண்டராக இருந்தார். பிறகு இராணூவ உத்தரவு பிறப்பிற்கும் துறையின் தலைவராக இருந்து கம்யூனிச சித்தாந்தத்தின் அடிப்படையில் அரசியல் நடத்தி வந்தார்.

அதைத் தொடர்ந்து, தொழிற்துறை தலைவராகவும், பின் தேசிய வங்கியின் தலைவராகவும், 1961-இல் வர்த்தக அமைச்சராகவும் பதவியேற்றார். தேசியமாக்குவதில் கவனம் செலுத்தி, இறக்குமதிகளைக் குறைத்து, தொழிலாளர்களை அரவணைத்துக் கொண்டார். கியூபாவின் பொருளாதாரம் வெகுவாக மேம்பாட்டைக் கண்டது. இராணுவத்தில் எந்த பொறுப்பும் இல்லாத போதும் சேகுவாரா இராணுவ உடையில், நட்சத்திரம் கொண்ட தொப்பியில், புரட்சிகரமான எழுத்துகளை பிறருக்கும் வாசித்து காட்டும் அந்த காட்சிகள் நம்மை சிலிர்க்க வைக்கும்.

சேகுவாரா என்றால் விடுதலை. சேகுவாரா என்றால் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான குரல். சேகுவாரா என்றால் நசுக்கப்பட்ட மனிதர்களின் இதயம். அந்த இதயத்தைச் சுட்டுக் கொன்றது அமேரிக்க தலைமையிலான பொலிவிய நாட்டு இராணுவம். அவரது மரணத்தின் தடயங்களையும், அவர் உடலையும் புதைத்து மறைத்தாலும், சேகுவாரா மக்களின் மனதில் இன்னும் எழுந்துக்கொண்டே இருக்கிறார்.

சே குவாரா புரியாதவனுக்கு புதிர். புரிந்தவனுக்கு புரட்சிக்காரன். ஏழைகளை அன்போடு அரவனைப்பான். எதிரிகளை கண்டால் அடியோடு அழித்திடுவான்.

சேகுவாரா இவன் வாழ்க்கை ஏடுகளை படித்தால், படிப்போர் இதயங்களில் போராட்ட குணங்களை விதைப்பான். மருத்துவனான இவன் மனதில் மக்கள் விடிவுக்கு, சமூக மருந்து எது? என்ற கேள்வி எழுந்தது.

பணக்காரர்களுக்கு மருந்தும் மருத்துவ வசதிகளும் பரவலாக கிடைக்கிறது. ஏழைக்கோ, அது ஏன் எட்டாக் கனியாகிறது? ஏழைகள் என்ன மரண தண்டனைக் கைதிகளா?

எதிரிகள் யார் என ஆராய ஆரம்பித்தான். ஓரே சமுதாயத்தில் ஏன் ஏற்ற தாழ்வு? ஆட்சி முறையின் கேடா? சமுதாய அமைப்பு முறையில் கேடா?

உழைக்கும் வர்கத்துக்கு இந்த உலகமே உயில்! என்று எழுதிய நம் பாட்டன், கார்ல் மார்க்ஸ் சொன்ன புத்தியை புத்தகத்தில் படித்தான். அது புதிராக இருந்தது. புரிய தொடங்கியது. புத்தி அது பொழிவடைந்தது.

உலகத்தையே உறுவாக்கும் உழைக்கும் வர்கம், உரிமை இழந்து கிடக்கிறது. உண்மையை மறந்து உழைத்துக் கொண்டிருக்கிறது. உட்கார்ந்து திண்ணும் உளுத்துப்போன முதலாளிவர்கம் ஆட்சியமைத்து ஆட்டிப்படைக்கிறது.

வர்க போருக்கு வக்காலத்து வாங்க துணிந்தான் வக்கீலாய் வந்த பிடேல் காஸ்த்ரோவோடு இணைந்தான். சொர்க பூமியை சொர்ப்ப பூமியாக்கிக் கொண்டிருக்கும் பத்திஸ்தாவின் கொடுங்கோலை எதிர்த்து, அமேரிக்க ஏகாதிபத்தியத்தை விரட்ட முடிவு செய்தனர்.

ஓர் அர்ஜெண்டீனா மருத்துவன், ஒரு கியூபாவின் வக்கீல். மக்களின் மைந்தன் சேகுவாரா. மன்னின் மைந்தன் பிடேல் காஸ்த்ரோ. மக்களின் நலன் மீட்க போராளியானார்கள்.

கியூபா மக்கள் விடியலுக்காக சிறிய படையோடு சீரிபாய்ந்து கலம் இறங்கினார். போராட்டத்தில் மக்களின் ஆதரவை வென்றனர், கியூபாவில் புரட்சி செய்தனர், அதில் வெற்றி கொண்டனர். அமேரிக்க குள்ள நரிகளையும். முதலாளித்துவ ஓநாய்களையும் விரட்டியடித்தனர்.

கியூபா புரட்சி மட்டும் போதுமா? கிளர்ச்சிக்கும் புரட்சிக்கும் எல்லை போடனுமா? காஸ்த்ரோ கியூபாவை வழிநடத்தட்டும். தன் வழி உலக வழி. ஒரு புரட்சி போதுமா உலகம் மாற? ஒவ்வொன்றாய் வெடிக்கட்டும் புரட்சிகள் ஆயிரம். மக்கள் தான் விடுதலையின் விழுதுகள். அடிமை சங்கிலியை அருத்தெடுத்து விடியலை வீதிக்கு கொண்டுவரும் விடிவெள்ளி.

எங்கெல்லாம் மக்கள் அடிமைபட்டிருக்கிறார்களோ அங்கெல்லாம் புரட்சி வீரன் உறுவாக வேண்டும்.

சேகுவாரா இறக்கும் தருவாயில் (09.10.1967) இறுதிவார்த்தையாய் சொன்னது…

"சுடு கோழையே! நீ கொல்லப்போவது ஒரு மனிதனை மட்டும்தான்!"

இன்றும் சே போராடும் ஒவ்வோரு இளைஞனின் இதயத்தில் புரட்சி விதையாய் முளைக்கிறான்.

சே காங்கோவிற்கு புறப்பட்டான். போராடும் போதனைகள் அங்கே போதவில்லை. மீண்டும் கியூபாவிற்கு வந்து புரட்சியை உலகிற்கு கொண்டு சொல்ல முற்பட்டான்.

போலி வேடத்தில் பொலிவியா காட்டிற்கு புகுந்தான். புரட்சி படை அமைத்தான். கொரில்லா போரை துவங்கினான். அமெரிக்கா இவனை அழித்துவிட கங்கனம் கட்டியிருந்தது.

கண்ணில் விளக்கெண்ணை ஊற்றியது. சேகுவாராவை விடிய விடிய தேடியது. பொலிவிய இராணுவத்தின் உதவியோடு சேகுவாராவை உயிரோடு பிடித்தது. மறுநாள் உயிரை உடலிலிருந்து பிரித்தது. இறந்தான் சே என முதலாளித்துவம் இன்புற்றது. இணையில்லா புரட்சிவீரன் இறந்துவிட்டானா என்று மக்கள் உறைந்து போனார்கள்.

அநியாயங்களையும் அக்கிரமங்களையும் கண்டு உன் மனம் கொதித்தால் நீயும் என் தோழனே! –சேகுவாரா.

Thursday, June 18, 2009

மூன்றாவது உலகப் போர் எப்போது?

சமீபத்தில் பசங்க திரைப்படம் பார்க்கும் வாய்ப்புக் கிட்டியது. அதில் ஒரு பாடலின் வரி ரசனை நயத்துடன் அமைந்திருந்தது. இவ்வுலகமே உமக்காக விரிந்துக் கிடக்கிறது, வாடகை வீட்டில் இருப்பதனால் ஏன் வருத்தம் கொள்கிறாய்... என்பது தான் அப்பாடலின் சாரமாகும். இச்சிறு விடயத்தை பூதக் கண்ணாடி வைத்துக் காண்கையில் இன்றைய இனவாத போர்களும், ஆயுத போராட்டங்களும் எதற்காக எனும் கேள்வி எழுகிறது. தமது ஆயுத வியாபாரம் சீர் கொள்ள யுத்தங்களை தூண்டிவிட்டு "புலவர்களே உங்களுக்குள் போட்டி இருக்கலாம் பொறாமை இருக்கக் கூடாது" என வீர வசனங்கள் பேசுபவரைக் கண்டு இப்போதெல்லாம் சிரிக்க மட்டும் தான் முடிகிறது.

இப்படியாக அடித்துக் கொண்டும் வியாக்கியானங்கள் பேசிக் கொண்டும் இருப்பதனால் என்ன பயன். உலக வளர்ச்சியில் நாம் சந்திக்க வேண்டிய விடயங்கள் பல பல. மூன்றாம் உலகப் போர் நீரின் காரணமாக ஏற்படக் கூடியதென நாஸ்ட்ராடமசின் தீர்க்க தரிசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக சொல்லிக் கொள்கிறார்கள். அதை நம்புவதும் நம்பாததும் நமது நம்பிக்கையின் அடிப்படையில் இருக்கும் பட்சத்தில் ஏதோ ஒரு விதத்தில் சிந்திக்கவும் வைக்கிறது. இது ஏற்படாது என்பது எந்த அளவுக்கு சாத்தியமான ஒன்று.

இந்த நீர், நிலம் எனும் இயற்கை வளங்கள் அனைத்தும் தன் பாட்டுக்கு இருந்தவையே. வளர்ச்சி எனும் பெயரில் இயற்கை மீது மனித இனம் மேற்கொண்ட வன்முறைகள் அளவிடமுடியாதவையே. துர்நாற்றம் கொண்ட ஆற்றைக் கடக்கும் சமயங்களில் மூக்கை மூடிக் கொள்ளும் நாம் தான் அதன் பாழடைவிற்கும் காரணமாகி இருக்கிறோம் என்பதினை உணர மறுக்கிறோம்.

தன்னிடம் இல்லாத ஒன்றிற்காக உரிமை கோரும் போது அது போராட்டமாகவும், போராகவும் வெடித்தெழச் செய்கிறது. என்றோ ஒரு நாள் உணவுக்காகவும், நீருக்காகவும் போராட்டங்கள் நடக்கக் கூடும். இதில் எந்த வகையிலான போராட்டம் முன்னதாக அமையும் என்பது சற்றே சிந்திக்க வேண்டிய ஒன்றாகும்.
நீரின்றி அமையாது உலகு எனும் சொல் வழக்கு தமிழில் உண்டு. சிலேடையான சொல் வழக்காக அதைக் கூறலாம். ஒரு காதலன் தன் காதலியிடம் நீ இல்லாமல் எனக்கு இவ்வுலக வாழ்க்கை அர்த்தமற்றது எனச் செல்வதாக எடுத்துக் கொள்ளக் கூடும். அதே போல் நீர் இல்லாமல் உலக உயிர்கள் வாழாது என்றும் சொல்ல முடியும். ''தண்ணீர் குடத்தில் பிறக்கிறோம் தண்ணீர் கரையில் கரைகிறோம் எனும் வரிகள் தமிழர் மரபினை அழகாக விவரிக்கிறது. அந்த நீரின் தேடலுக்காக உலக நாடுகள் போர்ரிட்டு அழிந்து போகக்கூடுமா? இருக்கலாம்.

கடந்த ஆண்டு முதல் கிடுகிடுவென எகிரிக் கொண்டிருக்கும் உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பு நாம் அறிந்ததே. இன்றளவிலும் உணவு பொருட்களின் விலை கேட்பாறற்று தான் கிடக்கிறது. உற்பத்திக் குறைவினால் தான் விலை அதிகர்க்கச் செய்கிறதா? முன் சமயம் ஆண்டிற்கு இரு முறையென இருந்த பயிர் செய்யும் முறையானது இப்பொதெல்லாம் மூன்று அல்லது நான்கு முறை என்றாகிவிட்டது. எல்லாம் இரசாயனத்தில் மகிமை. உணவின் தரத்தை விடவும் அதன் அளவின் அதிகரிப்பே நமக்கு தற்காலத்தில் அத்யாவசியமாகப்படுகிறது. உணவுகளின் தேவை இப்படி இருக்க சில விவசாயிகள் ஏழ்மையின் காரணமாக உயிரை விடுவதும் விந்தையாகத் தான் இருக்கிறது.

சாப்பிட்டாக வேண்டும் எனும் கடமைக்காக மட்டுமே இன்றைய நிலையில் பலரும் உணவருந்துகிறார்கள். ஏழைகள் முதற்கொண்டு மத்திய வர்க்கத்தினர் வரையினும் சாப்பாடு என்பதை ஒரு பொருட்டாக கருதுவதில்லை. இயந்திர தனமான வாழ்க்கையில் உணவு என்பது உடலை வளர்க்கும் ஒரு வஸ்துவாக மட்டுமே கருத்தில் கொள்கிறார்கள். புனைக் கதைகளிலும், அறிவியர் சார்ந்த திரைப்படங்களிலும் வருவது போல் எதிர்கால சந்ததியினர் பசி மறக்க மாத்திரைகளை மட்டும் உண்டு வாழும் காலம் அமையலாம்.

மனிதனின் ஆயுள் காலம் 120 வருடங்களென கணக்கிடுகிறார்கள். இப்பொழுதெல்லாம் இதில் பாதியை கடப்பதற்குள் உறுப்புகள் அடங்கி, உடல் சுருங்கி, மண்டை மளுங்கி, மதி கலங்கிவிடுகிறது. இதற்குக் காரணம் வாழ்க்கை முறை எனும் ரெட்டை வார்த்தைக்குள் நாம் தூக்கி எரிந்துவிடக் கூடும். அந்த வாழ்வியல் முறையில் உடல் கேடுக்கு உணவு கேடும் வித்திடுகிறது.
நமக்கு நினைவிருக்கலாம், உணவு தட்டுபாட்டு இந்தியாவிலும் சீனாவிலும் அதிகமாக சாப்பிடுவதால் தான் ஏற்படுகிறதென முன்னால் அமெரிக்க அதிபர் சொல்லி வைத்தார். மக்கள் தொகை அதிகமாகவும் பொருளாதார வளர்ச்சி பெருக்கமும் அதிகமிருப்பதால் இதை ஏற்றுக் கொள்ளக் கூடும். ஆனால் இவ்விரு நாடுகள் மட்டும் தான் எனச் சொல்வது மிக அபத்தம்.

கடந்த 26 ஆண்டுகளில் தற்சமயம் ஏற்பட்டிருக்கும் விலையுயர்வு மிக அதிகமென பொருளாதார நிபுணர்கள் குறிப்பிடுகிறார்கள். புவி வெப்பம், நிலையற்ற வானிலை, போன்ற இயற்கையின் சீற்றமும் இப்பாதிப்புக்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது. இப்பொழுதய நமது சிந்தனையாவும் பொருளாதார வளர்ச்சியை முன்னோக்கி மட்டுமே இருக்கிறது. பிற்காலத்தில் மனிதன் வண்ணத்துப் பூற்றீசலின் வாழ்க்கையைப் போல் பிறந்து சில நொடுகள் வாழ்ந்து மடிவானோ என்னவோ. இன்றைக்கு எனும் தருணம் இப்பொழுது எனும் சொல்லுக்குள் அடங்கிவிடுவது போல் அதிவிரைவான உலகில் பயணித்துக் கொண்டிருக்கிறோம்.

மலேசியாவின் இயற்கை வளங்கள் மிகச் சிறப்பாகவே இருக்கிறது. முறையான பயன்பாடு என்பது இங்கு கேள்விக் குறியாகிறது. உணவு இறக்குமதி இக்காலத்திலும் சிறந்த ஒன்றென அமைந்துவிடாது. ஆசிய நாடுகளில் மலேசியா நீர் வளம் அதிகம் கொண்டிருக்கிறது. அதே சமயம் சகட்டு மேனிகு அதன் நாசமும் அதிகரித்து வருகிறது.

Saturday, June 13, 2009

செவ்வாய் கிரகத்தில் MLM சிஸ்டத்தை அறிமுகப்படுத்துவீர்களா?

பதிவு போட மேட்டர் கிடைக்காமல் குவாட்டர் அடித்துவிட்டுக் குப்புற படுத்துக் கிடந்த சமயத்தில் MAIL BOXல் கிடக்கும் கடிதத்தை வெளியிடலாமே எனும் சமயோசிதம் என் சிற்றறிவுக்குள் சட்டென வெட்டிச் சென்றது. இதனால் மடல்களுக்கு பதில் கொடுக்காமல் தலைக்கனம் பிடித்தவனாக இருக்கிறேன் எனும் அவப் பெயரை நான் அகற்றிக் கொள்வது மட்டுமல்லாமல் என்னையும் ஒரு டெரர் என நினைத்து மெனக்கெட்டு மடல் போடுபவர்களுக்கும் பதில் சொல்ல வாய்ப்புக் கிடைத்தபடியும் இருக்குமென உணர்கிறேன்.

கடன் கொடுக்கும் கலியுக சித்தர்கள் எனும் தலைப்பில் வட்டி முதலைகள் பற்றி நான் எழுதியக் கட்டுரைக்கு அன்பர் ஒருவர் கடிதம் எழுதி இருந்தார். ஒட்டு மொத்த இந்தியச் சமுதாயத்தையும் தூக்கி நிறுத்த ஒரு திட்டம் வைத்திருப்பதாக தமது மடலில் குறிப்பிட்டுள்ளார். அவர் கடிதத்தைப் படிக்க மேலும் தொடருங்கள். அவர் எழுதியதைக் கீழே கொடுத்துள்ளேன்.

///////////////////////////////////////////////////////
தங்களின் பிளாக் ஃபாலோ செய்யும் ஃபாலோவர்ஸ்களில் அடியேனும் ஒருவன்.
நல்ல பல விசயங்களை அலசி ஆரய்ந்து வருகிறீர்கள்.
கடைசியாக 'வட்டி முதலைகளின்' மேல் கொண்ட தங்களின் அலசல் நன்று.

நான் கோவின் @ ரகு @ ராகவன், சிலாங்கூர், ரவாங்கை சேர்ந்தவன், வணக்கம்.

நான் தங்களைத் தொடர்பு கொள்வதன் நோக்கம், ஒரு விசயம் பற்றி தங்களிடம் பேசவே.

உங்கள் அனுமதியோடு (தந்துவிட்டீர்கள் என்று எடுத்துக் கொள்கிறேன்) :) பேச விரும்புகிறேன்.

என் கருத்தின்படி, நம் இந்திய சமுதாயம், பொருளாதார பிரச்சனையின் காரணமாகத் தான், இந்நாட்டிலே மிகவும் தாழ்வான நிலையில் அல்லோல பட்டுக் கொண்டிருக்கிறது என்பது என் திடமான கருத்து.

சமீப காலத்தின் முன், நான் இணைந்த ஒரு பொருளாதார திட்டம், நம் இன (மட்டுமன்றி அனைவரின்) பொருளாதார பிரச்சனையும், மிகக் குறைந்த முயற்சி மற்றும் மிகக் குறைந்த மூல தானத்துடனும், தீர்த்து வைக்க முடியும் என்று நான் பலமாக நம்புகிறேன். இந்த திட்டத்தில் நமக்கு தேவை எல்லாம் ஒன்றுபட்ட செயல் முறையே

தயை செய்து கீழ் கண்ட வெப்சைட்டை பாருங்கள், தங்களின் கருத்தைக் கூறுங்கள்.

(one-time-out-pocket of rm230 and bring in two friends, and ONCE one's team gathers 30 downlines, it will start create
rm45,000 monthly OR each cycle) NOT BUT AGAIN AND AGAIN there after.) www.g1g4lite.net (guest code 71184)
this is a three-year-old univesal programme based from Canada.
Not a business but a PEER-TO-PEER HELPING, GIFTING SYSTEM. migavum arumaiyaaga poikittu iruku. $$$$$ neradiyaaga nam bank account-ku vantidum.

தேவை எனின் உங்களை நேரிடையாக சந்திக்க தயாராக உள்ளேன்.

நம் மக்களின் நலம் பொருட்டு, தங்களின் கூட்டுறவு நாடும்

தங்களின் புதிய நண்பன்

Govind
//////////////////////////////////////////////////////////

என் நலன் கருதியும் இந்நியச் சமுதாயத்தின் நலன் கருதியும் நேரம் ஒதுக்கி பாடுபட்டு இம்மடல் அனுப்பியதற்கு நன்றிகள் பல.

ஒரு நாட்டின் மக்களின் நலன் மேம்பட இது தான் தீர்வு என்றால் இத்திட்டம் என்றோ பிரபலமாகி இருக்கக் கூடும். 'பிரமிட் சிஸ்டம்', 'மல்டி லெவல் மார்க்கெட்டிங்' இன்னும் பிற என எவ்வளவோ திட்டங்கள் இப்படித் தான் இயங்கிக் கொண்டிருக்கின்றன.

யாராவது 'சார் ஒரு முக்கியமான விசயமா பேசனும், வாங்க ஒரு காப்பி சாப்பிட போகலாம்', என்றோ 'சார் ஒரு 10 மினிட்ஸ் உங்க கூட ஒரு முக்கியமான விசயம் பேசனும்' என்று சொன்னால் கூட எனக்கு பீதியாகி பேதி வந்துவிடுகிறது.

10 நிமிடம் என்றுச் சொன்ன ஆசாமிகள் உரிய நேரத்தில் தமது விளக்க உரையை முடித்துக் கொண்டார்களா? இது வரை ஒருவரையும் கண்டதில்லை. 10 நிமிடம் எனக் கூறியவர் எனது சில மணி நேரத்தை நாசம் பண்ணிய அட்டூழியங்களையும் கண்டிருக்கிறேன். சரி போதும் என நாசுக்காக அடிக்கடி கடிக்காரத்தை பார்த்து தெரிவித்தாலும் நமது உடலசைவு மொழிகளை அவர்கள் புரிந்துக் கொள்வதாக தெரிவதில்லை. 'யோவ் _____________ கிளம்பு' எனச் சொல்வது பண்பன்று என்பதால் எனது அரக்க உணர்சிகளை பல முறைக் கட்டிப் போட்டிருக்கிறேன்.

மிக எளிமையான விடயத்தைக் காண்போம். ஆரம்பத்தில் சொன்ன 10 நிமிடம் எனும் வார்த்தையில் தம்மைக் கட்டிக் காத்துக் கொள்ளாமல் பொய்யுரைக்கும் ஒரு ஆசாமியை எவ்வகையில் நம்புவது என்பது பெரிய வினாக் குறியாகும். இப்பொழுதெல்லாம் MLM ஆசாமிகளைக் கண்டால் காத தூரம் கண்ணுக்கு தெரியாமல் ஓடி ஒளிந்துக் கொள்கிறேன். நம்மை தாவு தீர்க்கும் இவர்களின் கழுத்தருக்கும் 'பிளேடுகளை' எவ்வளவு நாள் தான் கதறாமல் தாங்கிக் கொண்டிருப்பது.

தீர்வு ஒன்று: நீங்கள் கருத்துரைக்க நினைப்பதை ஒரு சிறு கையேடாக அச்சிட்டு கொடுத்துவிடுங்கள். முன்னேற நினைக்கும் சமுதாயம் படித்துக் கொள்ளட்டும்.

தீர்வு இரண்டு: நீங்கள் பேச நினைப்பதை 'சிடி'யில் பதிவு செய்து மக்களுக்கு விநியோகித்துவிடுங்கள். நேரம் இருப்பவர்கள் கேட்டுக் கொள்ளட்டும். உங்களுக்கும் வார்த்தைகளை சேமித்த புண்ணியம் கிடைக்கும்.

சரி அடுத்த விடயத்துக்கு வருவோம். நான் MLM திட்டத்தில் பணம் செலுத்தி சேர்ந்துக் கொண்டேன். எனக்கு கீழ் இரண்டு பேரை சேர்த்துவிட்டேன். பிறகு அவர்கள் ஆளுக்கு இரண்டு இப்படியே போய்க் கொண்டிருக்கிறாது என வைத்துக் கொள்ளுங்கள் கடைசியில் உலகத்தில் உள்ள மக்கள் எல்லோரும் முடிந்து போய் சேர்க்க ஆள் இல்லத நிலை வந்துவிட்டால் என்ன செய்வார்கள்.

தீர்வு 3: செவ்வாய் மண்டலத்தில் MLM சிஸ்டத்தை அமலாக்கப்படுத்தும் சீரிய முயற்சியில் இப்போதே இறங்கலாம்.

ஓகே. இப்போது அடுத்த மேட்டருக்கு போகலாம். நமது சமுதாயம் பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ளது என்கிறீர்கள். அப்படி என்றால் பொருளாதார பிரச்சனைகள் தீர்ந்தால் எல்லா பிரச்சனைகளும் தீர்ந்துவிடும் என்கிறீர்களா? மாதம் லட்சக் கணக்கில் சம்பாதிக்கும் ஒரு துணிக் கடை முதலாளி யாகம் வளர்க்கிறேன் பேர்வழி எனச் சொல்லிக் கொண்டு 10000ரிங்கிட் பெருமானமுள்ள துணிகளை நெருப்பில் போட்டு பொசுக்கிய மேன்மை குணங்களை கண்டிருக்கிறேன். அவருக்கு பணம் பிரச்சனையல்ல, பின் எதற்காக இப்படி நடந்துக் கொள்ள வேண்டும்? பணம் ஒன்று தான் வாழ்க்கை என்றாகிவிடுவதில்லை. பணத்தோடு நெறிக் கெட்டு வாழ்வதைவிட, பணம் இல்லாமல் நெறிக் கொண்டு வாழ்வது எவ்வளவோ மேல்.

ஒரு மனிதனின் தாழ்வுக்கு காரணம் ஒழுக்க நெறிகளின்மையே அன்றி பொருளாதார பிரச்சனை அல்ல... அல்ல... அல்ல... . உங்கள் திடமான கருத்தில் இடி விழ.

தீர்வு 4: பொருளாதார பிரச்சனையை தீர்க்க MLM சிஸ்டத்தில் பணம் அச்சடிக்கும் மெசின் ஒன்றை அறிமுகப் படுத்தலாம்.

தீர்வு 5: மனிதனின் தாழ்வுக்கு காரணம் பொருளாதார பிரச்சனையா அல்லது ஒழுக்க நெறி முறைகளின்மையா என ஒரு பட்டிமன்றம் நடத்திப் பார்க்கலாம்.

முகக் குறைந்த முயற்சி அல்லது முயற்சின்மையில் கிடைக்கும் பெருஞ்செல்வம் திருட்டுக்கு சமம் என்று நபிகள் நாயகம் செல்லியுள்ளதாக படித்த ஞாபகம். இது உண்மையிலேயே குறைந்த முயற்சியா அல்லது கவர்ச்சி விளம்பரத்துக்காக சொல்கிறீர்களா என்பதும் இப்போது வரையினும் என் சிந்தையை பலமாக(உங்கள் வார்த்தை தான்) இடிக்கிறது.

தீர்வு 6: லக்கிலுக் எழுதிய சுண்டி இழுக்கும் விளம்பர உலகம் எனும் புத்தகத்தை வாங்கி படித்து உங்கள் மார்கெட்டிங் ஸ்ட்ரெட்டஜியை மாற்றி அமைக்கவும். பழய யுக்தி முறைகளை கேட்டுக் கேட்டு புளித்துப் போகிறது.

நீங்கள் சொல்லியது போல் ஒன்றுபட்ட செயல் முறை மட்டும் போதும் என்றால் சயாமில் இறந்து போன நிகழ்வுகளும், தற்சமயம் ஈழத்தில் கொத்துக் கொத்தாய் இறந்து போன அவலங்களும் சரித்திரத்தில் இடம் பெறாமல் தகர்த்திருக்கலாம். தமிழன் தான் இந்தியன் என்பதை விடவும் தமிழன் என்பதை விடவும், தான் இன்ன சாதியன் என்பதில் தான் பெருமைக் கொள்கிறான். நம்பவில்லை என்றால் தமிழனைக் கூறினால் சிரித்துக் கொண்டு ஆமோதிக்கும் ஒருவன் அவன் சாதியை பற்றிக் குறைச் சொன்னால் என்ன செய்வான் என்று பாருங்கள்.

அது போக ஒன்றுபட்டு செயல் படுவோம் வாருங்கள் எனக் கூறினால். முதலில் நம்மை கவனித்துவிட்டுதான் அடுத்த காரியத்தில் இறங்குவார்கள் போங்க.

நான் ஒருவன் மட்டும் இக்கூட்டுறவில் சேர்வதனால் நம் மக்களின் பிரச்சனை தீர்ந்துவிடுமென்றால் எச்சமயமும் நான் தயாராக இருக்கிறேன். ஆனால் நீங்கள் கூறும் இவ்வரிகளில் எவ்வளவு தூரம் உண்மை இருக்கிறது என்பதை முதலில் புரிந்துக் கொண்டு பேசுங்கள். கிஞ்சித்தும் புரிந்துணர்வு கொள்ளத நம்மிடையே இருப்பது நட்பென கூறுவது அபத்தம்.

தீர்வு 7: வியாபர நட்பு முறையை வளப்படுத்துவது எப்படியென ஒரு செயல்திட்டத்தை அறிமுகப்படுத்திவிட்டு மேல் தொடரலாம்.

இறுதியாக ஒரு சம்பவம். முன்பு இப்படி தான் அறிமுகமே இல்லாத ஒரு பண்பு கெட்ட மனிதர் 'எம்வே' எனும் MLM சிஸ்டத்தில் என்னைச் சேர்க்க கழுத்தறுத்துக் கொண்டிருந்தார். நான் வேண்டாம் என எவ்வளவுக் கூறியும் கேட்டபாடில்லை. அவர் நோக்கம் என்னிடம் பணம் கறப்பது மட்டுமே. முடியாது என்றாகிவிட்டபட்சத்தில் பலமாக மிரட்டிவிட்டு 'எந்த தமிழனாக இருந்தாலும் இதுல வந்து சேர்ந்து தான் ஆகனும்' என்று இன்னும் சில வார்த்தைகளில் கடுமையாக பேசிவிட்டு சென்றார். நம் நிலை எங்கு போய்க் கொண்டிருக்கிறது?

நான் கொஞ்சமாக சம்பாதித்தாலும் மகிழ்ச்சியாகவே இருக்கிறேன். என் குடும்பத்தை மகிழ்ச்சியாக பார்த்துக் கொள்கிறேன். பிறருக்கு சிரமம் கொடுக்க முனைந்ததில்லை. சமுதாயம் என்பது ஒரு தனி மனிதனில் தான் ஆரம்பமாகிறது. நல்ல சிந்தனைகள் நமக்கும் நம் சுற்றத்தாருக்கும் இருந்துவிடின் சமூக பிரச்சனைகள் எவ்வளவோ குறைந்துவிடும். இப்படிபட்ட திட்டத்தால் தான் நான் உயர வேண்டும் எனும் அவசியம் எனக்கில்லை. நட்பெனும் பெயரில் உங்களில் அணுகுதல் வருந்த தக்க ஒன்று
.

Monday, June 08, 2009

கடன் கொடுக்கும் கலியுக சித்தர்கள்

சமீப காலமாக நான் அடிக்கடி காணும் விடயங்களில் கடன் கொடுப்பவர்களின் விளம்பரப் பலகையும் ஒன்றாகும். போகும் இடங்களில் ஏதுவாக காண முடிகிறது. 1000 ரிங்கிட் கடனுக்கு 950 ரிங்கிட் உடனடியாக கிடைக்கப் பெறும் என அவ்வறிவிப்பு சாலையோரங்களிலும் அங்காடி வரிசைகளின் இடுக்குகளிலும் காண முடிகிறது. இந்தக் கடன் கொடுப்பவர்களின் தாராள மனதை நினைக்கும் போது ஒவ்வொரு சமயங்களிலும் புல்லரித்து தான் போகிறது. என்னே ஒரு கருணை இம்மனிதர்களுக்கு.

இந்தப் பலகைகள் பாடு ஒரு பக்கம் என்றால் பேருந்து நிறுத்தங்களையும், கடைகளின் சுவர்களையும் கூட இந்தக் கணவான்கள் விட்டு வைத்தபாடில்லை. அங்குக் காணப்படும் ஒட்டிகளின் எண்ணிக்கை சுவர்களைக் கூட மறைத்துவிடுகின்றன. சரி இவ்வளவு தானா என மனதை தேற்றிக் கொள்ள முடிவதில்லை. வீட்டின் தபால் பெட்டிவரை இவர்களது 'உதவிக் கரம்' நீளவேச் செய்கிறது. கடன் உதவி சம்பந்தமாக ஒரு குட்டிக் கட்டுரையை எழுதிய வியாபார அட்டையை(பிசினஸ் கார்டு) இரண்டு மூன்று என தாராள மனதுடன் வீசிச் செல்கிறார்கள்.

கடன் கொடுக்கும் இந்தக் கலியுலக சித்தர்களின் பின்நாளைய கைங்காரியங்களைப் பற்றி மிகையாகவே அறிந்திருப்பினும் இன்னமும் மக்கள் அவ்வலையில் சிக்கித் தவிக்கும் அபத்தங்கள் புரியவில்லை. வட்டி முதலைகளின் கையில் தம் பிடரியைக் கொடுத்து பரிதவிப்பவரின் செய்திகள் நாளும் வளர்ந்து வரவேச் செய்கிறது. இதை முடக்க வேண்டும் மடக்க வேண்டும் என தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கும் அரசின் கூத்தைப் பார்க்க நல்ல நகைச்சுவை விருந்தாகவும் இருக்கிறது.

இந்நிலை இன்று நேற்றல்ல பல காலமாகவே இருந்து வரும் ஒன்றென நன்கு அறிந்த விடயம். 97/98 பொருளாதார வீழ்ச்சியின் சமயம் வட்டி முதலைகளிடம் கடன் வாங்கி அதைத் திரும்பி செலுத்த முடியாத பலரும் தற்கொலைச் செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை அதிகம். பணமில்லாமல் வட்டி பணம் செலுத்த முடியாத நிலை மட்டும் இதற்குக் காரணம் அல்ல. வட்டி முதலைகளின் சண்டியர் தனமும் கடனாளிகளை பலமான மன உழைச்சளுக்குள்ளாக்கி இருக்கிறது.கொலை மிரட்டல், பாலியல் தொல்லைகள், காயம் விளைவித்தல். மனைவி அல்லது பிள்ளைகளை கடத்திச் செல்லுதல், உடைமைகளை பாழ்படுத்துதல் என் வட்டி பணத்த வசூழிக்க இவர்கள் கையாலும் யுக்திகள் ஏராளம். கடன் வாங்கியவர் அதை திரும்பச் செலுத்த இயலாமல் சில சமயம் தலைமறைவாகிவிடுவதும் உண்டு. இதனால் கடனாளிகளின் குடும்பத்தார் வட்டி முதலைகளிடம் சிக்கித் தவித்த நிலைகளையும் பரவலாக நாம் அறிந்த ஒன்றே. சமீபத்தில் மக்களின் பார்வைக்குக் கிட்டிய செய்தி மூன்று கடனாளிகளை இரும்புச் சங்கிலிகளால் பிணைத்து கழிவறையில் அடைத்து வைத்தச் சம்பவமாகும்.

இப்படிச் செய்வதில் இந்த வட்டி முதலைகளுக்கு என்ன இலாபம். ஒரு வேளை இவர்கள் பணம் படைத்த மன நோயாளிகளாக இருக்க வேண்டும். பணம் கொடுக்க முடியாதவனை துன்புறுத்துவதால் இவர்களின் பணம் திரும்பக் கிடைக்கப் பெறுமா? இல்லை இப்படி கொடுமை செய்து கடனைக் குறைத்துக் கொள்ள முயல்கிறார்களா? பழங்கால கொடுங்கோல் மன்னராட்சி புரிந்த ராஜாக்களின் மறுபிறப்பு இவர்கள் போலும்.

சரி ஆரம்பத்தில் சொன்ன விளம்பர விடயத்துக்கு வருவோம். இப்படி அப்பட்டமாக தமது விளம்பர பலகைகளை வைக்க நகராண்மைக் கழகங்கள் எவ்வகையில் அனுமதி கொடுக்கின்றன. முதலாவதாக இவ்விளம்பரப் பலகைகள் உரிமம் பெற்றவையாக தெரியவில்லை. உரிமம் பெற்ற விளம்பரப் பலகைகள் குறிப்பிட்ட கால அவகாசத்தில் அகற்றப்படாவிட்டால் அதனை அகற்றுவது மட்டுமல்லாமல் குறிப்பிட்ட விளம்பர உரிமையாளருக்கு அபராதமும் விதிக்கிறார்கள். இப்படி பொது மக்களுக்கு பாதகம் விளைவிக்கும் விளம்பரப் பலகைகள் நெடுநாட்களாக காட்சிக்கு விடப்பட்டிருப்பது எதனால்?

அடுத்தபடியாக இந்த விளம்பரப் பலகைகளில் முகவரி, கடன் கொடுக்கும் நபரின் பெயர் போன்ற குறிப்புகள் இருப்பதில்லை. அதிகபட்சமாக கடன் கொடுப்பவரின் தொலைபேசி எண் மட்டுமே கொடுக்கப்பட்டிருக்கும். மலேசிய தொலைப்பேசி எண்கள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. அப்படி இருக்க காவல்துரையினர் இதனை ஆரம்ப நிலையில் கலைத்தெறியாத நிலை எதனால்?

பொருளாதார மந்த நிலை இவ்வட்டி முதலைகளுக்கு கரும்பாக இனிக்கச் செய்கிறது என்றேக் கூற வேண்டும். கடன் வாங்கி அவதிப் படுவோரின் நிலை அதிகரிக்கிறது என்றால் ஏன் அரசு அதை சரிவர கவனத்தில் கொள்ளவில்லை. இலட்சக் கணக்கில் செலவழிக்கும் பணத்தை மக்களின் நலனுக்கு இவர்கள் பயன் படுத்தாமால் போவது ஏன்?

கடன் வாங்கி மாட்டிக் கொண்டு விழி பிதுங்கி நிற்கும் மக்களில் பொரும்பான்மையினர் நடுத்தர வர்கத்தினரே. இவர்கள் வாங்கும் கடன் அதிகபட்சமாக சில ஆயிரங்களில் ஆனதாகவே அறிய முடிகிறது. இலட்சக் கணக்கில் கடன் வாங்கிக் கொண்டும் மக்கள் பணத்தை வாயில் போட்டுக் கொண்டும் உண்டு கொழுத்து திரிவோர் இன்னமும் சொகுசு வாகனங்களில் தொந்தி வளர்த்து நிம்மதி பெருமூச்சிட்டே சுற்றித் திரிகிறார்கள்.வட்டி முதலைகள் விடயத்தில் கடன் கொடுக்கும் வியாபர தந்திரிகள் நிச்சயமாக பணம் படைத்தவர்கள் என்பதை நாம் நன்கறிந்த ஒன்று. இவர்களின் பண பலம் எவ்வகையில் சமூகத்தையும் அரசியலையும் பாதித்துள்ளது என்பது கேள்விக்குறியே. பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழன் என்பது தான் இப்போதைய நிலை எனின் அது வருந்த தக்க ஒன்று. பூனையின் வருகைக்குக் காரணம் காவலாளி எனின் அதை என்ன சொல்வது? ஜக்கம்மாளுக்கே வெளிச்சம். :)

நாட்டின் கடனாளிகள் அதிகரிக்க காரணம் என்ன? முதலாவதாக மக்களின் தேவையில்லா செலவுகளால். இதனை தன் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வது மக்களின் கடமைகளில் ஒன்று. அது போக விலை வாசிகளின் கட்டுப்பாடு எவ்வகையில் இருக்கிறது என்பது கேட்பாறற்றுக் கிடக்கிறது. சகட்டு மேனிக்கு செலவுகள் மக்களின் சுமைகளை அதிகரிக்கும் விதமாகவே இருக்கிறது.

சேவைகளின் தர உயர்வுக்கு வழி செய்கிறோம் பேர்வழி என மார்தட்டிக் கொண்டு முடிந்த மட்டும் எல்லாவற்றையும் தனியார்மயமாக்கிவிட்டு வெற்றி புன்னகைக்கும் அரசு மக்களின் வாழ்க்கை தரத்தை எவ்வகையில் நிர்ணயம் செய்ய முற்படுகிறார்கள் என்பன புரியாத புதிராகவே இருக்கிறது. பொது சேவைகளின் வழி வாழ்வியல் சுமையை குறைக்க எவ்வகையில் முனைப்புகள் காட்டி வருகிறார்கள் என்பன புரியாத புதிர் தான்.

சட்ட விரோதத்தை வளரவிட்டு கவனிப்பதும், மக்கள் தம் வாழ்க்கைக்கு போராட முற்பட்டால் அடித்து முடக்குவதும் தான் இந்நாளய நிலையாக இருக்கிறது. மக்களின் பாதுகாப்பு தரத்தை இதன் வழி மிக துள்ளியமாகவே அறிய முடிகிறது. கட்சி சண்டைகளையும், அரசியல் குழப்படிகளையும் அடுத்த தேர்தல் வரை பேசி தீர்க்கவே இவர்களுக்கு நேரம் போதாத பட்சத்தில் வேறு என்ன சொல்வது?

Tuesday, June 02, 2009

உறுபசி - நாவல் விமர்சனம்

நாவல்: உறுபசி
நயம்: சமுதாய நாவல்
பதிப்பகம்: உயிர்மை
ஆசிரியர்: எஸ்.ராமகிருஷ்ணன்

மரணத்தைப் பற்றிய புரிதல்கள் ஒவ்வொருவருக்கும், ஒவ்வொரு காலகட்டத்திலும், ஒவ்வொரு வயதிலும் மாறுபட்ட எண்ணங்களாக வடிவம் கொண்டிருக்கும். சிறுவயதில் மரணம் என்றாலே மரண பயத்தில் ஆழ்ந்து போயிருக்கிறேன். மரணித்தவர்கள் பேயாக வந்து நம்மைப் பிடித்துக் கொள்வார்கள் என்ற அச்சம் என்னுள் எப்போதுமே இருக்கும். அச்சமயம் என்னுள் உறுகொண்ட பேய்களுக்கு ஒரு குறிப்பிட்ட வடிவம் இருக்காது. இரவில் கண் மூடினால் ஒரு கருக்கிருட்டுத் திரள் என்னை மூழ்கச் செய்வதைப் போல் இருக்கும். அது விவரிக்க முடியாத அளவுக்கு பெரியதாக இருக்கும். கடல் அலை போல வரும். அந்த வயதில் எனக்கு தெரிந்த பேய் அந்த கருக்கிருட்டு சுருள்திரள்கள் தான்.

கொஞ்ச காலத்திற்குப்பின், பள்ளிக்கூட நாட்களில் பேய்ப்படம் பார்க்கவும் புரிந்துக் கொள்ளவும் முடிந்தது. அது முதல் என் புரிதலில் பேய்கள் தணியாத கோபம் கொண்ட அழுக்குப் பிடித்த மனித உருவங்களாகத் தோன்றின. இறப்பு கொண்ட வீட்டின் வெளியில் அப்பேய்கள் காவல் இருக்குமென்றும் அந்தப் பக்கம் போனால் நம்மைப் பிடித்துக் கொண்டுவிடும் என்றும் எண்ணம் நெடுநாட்களாகவே இருந்தது. பிறகு சொர்க்கம், நரகம், அமைதி கொள்ளா ஆன்மா, மறுபிறப்பு, முக்தி என என்னன்னவோ நிலைகளை கேட்டு படித்தறிய முடிந்தது.

எனது பத்தாவது வயதில் என் தாத்தாவின் மரணம் தான் நான் மிக அருகில் கண்ட மரணமாகும். இறந்த அவரது உடலை தொட்டுப் பார்த்த போது குளிர் சாதனப் பெட்டியில் வைத்த பொருளைப் போல் சில்லிட்டிருந்தது. மறுநாள் அவரை எரியூட்டி இறப்பு சடங்குகளை முடித்தார்கள். அன்றிரவு தாத்தா ஆவியாகவோ பேயாகவோ வரவேண்டும் என்றும் குறைந்தபட்சம் என் கனவிலாவது அவர் வந்து போக வேண்டும் என்ற எண்ணம் என்னுள் இருந்தது. இன்றுவரை தாத்தா என் கனவில் வந்ததில்லை. பிறந்தது முதல் தாத்தாவோடு வளர்ந்தவனென்பதால் நெடு நாட்களாக அவரது நினைவுகளில் இருந்து மீளமுடியவில்லை. மரணத்தின் பயம் அச்சமயம் விடுபட்டிருந்தது.

தாத்தா இறந்தது முதல் என் நண்பன் என் வீட்டு பக்கம் வருவதை தவிர்த்து வந்தான். ஒருமுறை அவனை அழைத்த போது அவனுக்கு பயமாக இருப்பதாகவும், என் தாத்தாவின் ஆவி என் வீட்டைச் சுற்றிக் கொண்டிருக்கும் என்றும் சொன்னான். நான் இல்லை என்று சொல்லியும் அவன் கேட்டபாடில்லை. அப்படியே இருந்தாலும் என் தாத்தா நல்லவர் உன்னை ஏதும் பண்ணமாட்டார் வா என்றேன். அவன் மறுத்துவிட்டான்.

எங்களது நட்பு பள்ளிக்கூட வளாகத்தோடு மட்டுமே இருந்தது. வீட்டுக்கு வருவதையோ வெளியில் சந்திப்பதையோ அவன் தவிர்த்துவிட்டிருந்தான். தாத்தாவின் மரணம் எங்களின் நட்பில் விரிசல் கோட்டை உண்டாக்கியது. அவனது அப்பாவுக்கு வேலை மாற்றம் கிடைத்து அவர்கள் வேற்றிடத்துக்குச் சென்றார்கள். ஆவி இருக்கும் இடத்திலிருந்து விடுதலைக் கிடைத்ததைப் போல் அவன் மிக மகிழ்ச்சியாக இருந்தான். அவன் செயல் எனக்கு எரிச்சலாக இருந்தது. அவனது பிரிவு எனக்கு பெரிதாக தோன்றவில்லை.

எஸ்.ராமகிருஷ்ணனின் உறுபசி நாவலைப் படித்த சமயம் மரணத்தைப் பற்றிய சிந்தனைகள் பலவாக என்னுள் எழும்பின. அழுத்தமான கதைக்கு அழுத்தமான சொற்களின் புனைவு நெஞ்சுக்கு மிகக்கனமாகவே இருக்கிறது. முன்னுரையில் உலர்ந்த சொற்கள் என ஆசிரியர் குறிப்பிடுவது போல நாவலைப் படிக்கும் போது நாமும் ஒன்றித்து வறண்டு போகிறோம்.

உறுபசி எனும் சொல்லின் புரிதல் கலவையாக மண்டிக் கிடக்கிறது. உறுபுகளின் பசி, உறுதல்களின் பசி, தீராத உறுதல்கள் எனக் கொள்ளலாமா? நாவலின் ஆரம்ப வரியே நம்மை கட்டி இழுத்து உள்ளே போடுகிறது. இதில் மென்மை குறைவு. கோபமும், தாபமும், குரூரமும், காமமும் எழும்பி நிற்கின்றன.

சமுதாயத்தைச் சார்ந்து முகமூடி அணிந்து வாழும் வாழ்க்கையைத் தவிர்த்த ஒருவனின் கதை தான் உறுபசி. சம்பத் எனும் கதை நாயகனின் இறப்பிற்கு பின் கதைச் சொல்லிகளான அழகர், ராமதுரை, மாரியப்பன், ஜெயந்தி(சம்பத்தின் மனைவி) மற்றும் யாழினி வழி அவன் வாழ்வின் அத்தியாயங்களை அறிந்துக் கொள்கிறோம்.

ஒவ்வொரு மனிதனுக்கும் காமமும், கோபமும், பேராசையும், வெறித் தன்மையும் இருக்கவே செய்கிறது. குடும்ப, சமூக நலனுக்காக நாம் அதை நம்முள் புதைத்து வைத்து வாழ்கிறோம். சம்பத் எனும் கதாபாத்திரம் சமுதாயத்துக்கு முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் சித்தரிக்கப்படுக்கிறது. இதனால் சமூகம் அவனிடம் வினோதபார்வைக் கொள்கிறது.

கல்லூரியில் தமிழ்ப்பிரிவில் பயிலும் மாணவனாக, சம்பத்தின் இளமைக்காலம் நமக்கு சொல்லப்படுகிறது. அவனது செயல்களில் எதிலும் முழுமையிருக்காது. எந்தச் செயலாகினும் அவனை ஒருவித மன பாதிப்பை ஏற்படுத்தி அதை முழுமையாக முடிக்காமல் விட்டுவிடுவான். அவனது நடவடிக்கைகள் கொஞ்சம் கொஞ்சமாக அவனை பாதிக்கச் செய்து மன பிரழ்வை உண்டாக்குகிறது. எப்படி அவன் நடவடிக்கை அவனை பாதிக்கிறது என்பதாகவும், மரணித்தின் முன் சம்பத்தை சுற்றி நடந்த சம்பவங்களின் பின்னணியிலும் கதை நகர்கிறது. அது சம்பத் தன் நண்பர்களிடம் சொல்லிய சம்பவமாகவும், நண்பர்கள் அவர்களாகவே கண்டவையாகவும் சொல்லப்படுகிறது.

சராசரி கமர்சியல் நாவலில் சொல்லப்படாத விடயங்களை மட்டுமே நாம் ஒவ்வொரு பக்கங்களிலும் வாசிக்கிறோம். சமுதாயத்தின் மறுபக்கத்தை மிக நேர்த்தியாகவே ஆசிரியர் நமக்கு திரையிட்டுக் காட்டுகிறார். ஒவ்வொரு கதாபாத்திரங்களின் உணர்வும் பிழியப்பட்டுள்ளது. படித்து முடிக்கும் வரையிலும் மரணம் எனும் பிம்பத்தின் ஊடே நாமும் பயணித்து திரும்புகிறோம்.

ஒரு சில இடங்களில் இருக்கும் எழுத்துப்பிழைகளையும், ராமதுரை சொல்லும் கதை அழகர் சொல்வதாக முடியும்படி இருப்பதையும் தவிர்த்திருக்க வேண்டும். படிப்பவரை குழப்பிவிடும் சாத்தியங்கள் அதிகமாகவே இருக்கிறது. நான் வாங்கியது இரண்டாம் பதிப்பு. இன்னமும் பிழைகள் கண்டறியப்படவில்லையா அல்லது அச்சுப் பிழையா என தெரியவில்லை. மற்றபடி உறுபசி நல்ல அனுபவமே.