Thursday, March 26, 2020

டிராகனின் நடனம்: அமிலக் கல்லறை

(Photo credit: ancient-origins.net)

சீனா தொடப்பாக 2017-ல் எழுதிய தொடர். கீழ் காணும் முதல் அத்தியாயம் மட்டும் ஓர் இணைய தளத்தில் பதிவேற்றப்பட்டது.
இது வரை நான்கு அத்தியாயங்கள் எழுதி இருக்கிறேன். அடுத்தடுத்த நாட்களில் மற்ற தொடர்களை பதிவேற்றம் செய்கிறேன். நேரம் இருக்கும் நண்பர்கள் வாசித்துப் பார்க்கலாம்.

சீனா தொடர்பாக ஓர் எளிய அறிமுகம் கொடுப்பதற்காகவே இந்தத் தொடரை ஆரம்பிக்கிறேன். சீனா என்பது சமஸ்கிருதச் சொல். சீனர்கள் தங்கள் நாட்டை ’ச்சோங் குவோ’ (Zhong Guo) என்றே குறிப்பிடுகிறார்கள். ச்சோங் என்பது நடுவகம். குவோ என்பது நாடு. ஆங்கிலத்தில் சொல்வதென்றால் ‘Middle Kingdom’. இந்த தேசம் உலகின் மத்தில் அமைந்துள்ள ஆட்சி பீடம் என்பதாக அவர்கள் கருதியதால் இந்தப் பெயர் விளங்குகிறது. இனி இந்த டிராகன் தேசத்தின் நடனத்தைக் காண்போம்.
--------

சீனாவின் ஷீ-ஆன்யாங் (Xianyang) நகரம். சுமார் 2200 ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவம்…

போருக்குச் செல்லும் படை வீர்ர்களைப் போல் பெண்களின் அணி வகுப்பு. அழகிய ஆடை ஆபரணங்களை உடுத்தி நடக்க ஆரம்பித்திருந்தார்கள். அனைவரின் முகங்களிலும் இருக்கம். அரண்மனையில் இருந்து அவர்களின் பயணம் தொடங்கியது.

“எங்கே போகிறார்கள்”.

“மன்னனின் கல்லறைக்கு”

“எதற்காக?”

“கல்லறையில் மன்னனோடு வாழ”.

சீன பேரரசின் முதல் மன்னனுக்கு நூற்றுக் கணக்கான துணைவிகள் இருந்ததாக சிம்மாஜியன் (Simma Qian) குறிப்பிடுகிறார். (சிம்மா ஜியன் சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த அரசவை நிகழ்வுகள் குறிப்பாளர். இன்று பொதுவாக ’the grand historian' என அழைக்கப்படுகிறார்.)

மன்னனின் துணைவிகளில் குழந்தையற்றோரும், ஆசை நாயகிகளும் கல்லறையில் அடைக்கப்பட்டனர். கி.மு 210-ஆம் ஆண்டில் ஒன்பதாவது மாதம் மன்னர் சின் ஷூ ஹுவாங் இறந்துபோனார். அப்போது அவர் வயது 49. சாகாவரம் தேடி அலைந்த மன்னன் ஏன் இறந்தார்? அதற்குக் காரணம் பாதரசம் (Mercury) எனும் அமிலம் என வரலாற்று அறிஞர்கள் குறிப்பிடுகிறார்கள்.

சின் ஷி ஹுவாங் அல்லது சின் ஹுவாங் டீ என தனக்கு கௌரவப் பெயர்ச் சூட்டிக் கொண்ட இந்த மன்னன் தான் சீனாவின் முதல் அரசனா? அதற்கு முந்தைய சீனா எப்படி இருந்தது? சரித்திரத்தில் வியக்கப்படும், போற்றப்படும், கொடுங்கோலன் என தூற்றப்படும் சின் ஹுவாங் டீயின் விடலைப் பருவத்தில் இருந்து தொடங்கினால் சீனா எனும் பெரும் தேசம் உருவான கதை நமக்கு விளங்கும்.

ஒருங்கிணைந்த சீன தேசம் உருவாவதற்கு முன் அப்பிரதேசம் ஏழு துண்டுகளாக உடைந்து கிடநத்து. அந்த ஏழு நாடுகளின் அரசர்களிடமும் ஒரு நம்பிக்கை இருந்தது. அந்த நம்பிக்கையின் பெயர் சுவர்கத்தின் கட்டளை. ஒருங்கிணைந்த பெரும் தேசத்தை ஆட்சி செய்பவனே சுவர்கத்தின் பிள்ளையாகக் கருதப்படுவான். அதாவது கடவுளின் பிள்ளை. அதற்காக இந்த தேசங்கள் ஒன்றோடு ஒன்று போட்டியிட்டு ஆக்கிரமிப்பு செய்து கொண்டிருந்தன. அவை நிலையான ஆட்சியாக இல்லாமலும் சுவர்கத்தின் பிள்ளையாக தன்னை தேர்ந்தெடுத்துக் கொள்வதிலும் அதன் அரசர்களுக்கு சிக்கல் இருந்தது.

அந்த ஏழு தேசங்களில் சின் தேசமும் ஒன்று. மிகச் சிறிய நாடு. சின் ஷி ஹுவாங் தனது 12/13-வது வயதில் அரியணை ஏறினார். இவரின் பிறப்பின் குறிப்புகள் இல்லாததால் வயதை தீர்மானிப்பதில் இன்னமும் சிக்கல் அமைந்துள்ளது. சின் அம்மாவின் பெயர் சாவோ ஜி (Zhao Ji). ஒரு நடனக்காரி. (Lu Buwei) லூ பூவெய் எனும் வியாபாரியால் சின் ஹூவாங் டீயின் அப்பாவிடம் அழைத்துவரப்பட்டவள்.

லூ பூவெய் ஒரு இராஜ தந்திரியும் கூட. அவரது மதி திறமையை மெச்சி அரசவையில் அமைச்சர் பதவியையும் இவருக்கு கொடுக்கப்பட்டிருந்தது. சா வோஜியின் இரகசிய காதலனாகவும் இருந்திருக்கிறார். கடைசி வரை சின் ஷி ஹூவாங் தனக்கு பிறந்த பிள்ளை என்பதிலும் நம்பிக்கைக் கொண்டிருந்தார். சின் இராஜாங்கத்தின் வரி சீர்திருத்தங்கள் இவரால் கொண்டு வரப்பட்டவை.

எது எப்படியாகினும் சின் ஷி ஹுவாங் அரசனாகிவிட்டார். இளம் பிராயம். நாட்டை ஆள்வதற்கான அனுபவம் போதாது. லூ பூவெய் முன் வந்தார். அரசவையின் அனுமதியோடு தன்னை பிரதம மந்திரியாக நியமித்துக் கொண்டார்.

”இன்று முதல் இந்த நாடின் பிரதம மந்திரியாகிய நான் தந்தை ஸ்தானத்தில் இருந்து இந்த நாட்டை வழி நடத்த உங்களுக்கு உறுதுணையாக இருப்பேன் மன்னா”. உறுதி மொழி கூறிய லூ பூவெய் அரச சபையில் இருந்து வெளியேறினார். கூடவே மன்னனின் அம்மாவும்.

சின் மன்னனின் வயது அதிகரிக்கவும் பிரதம மந்திரி சாவோ ஜியின் பக்கம் இருந்து விலகினார். அதே காலகட்டத்தில் சாவோ ஜிக்கும், (Lao Ai) லாவோ ஐ எனும் அரண்மனை அதிகாரிக்கும் காதல் ஏற்பட்டது. அவர்களுக்கு இரு ஆண்குழந்தைகள் பிறந்தது. இந்த செய்தி லூ பூவெய் தவிர அரண்மனையின் வேறு யாருக்கும் தெரியாது.

லா வோஐ-க்கு ஒரு விபாரீத ஆசை இருந்தது. தனக்குப் பிறந்த இரு குழந்தைகளில் ஒருவரை அரசனாக்கிவிடலாம் என திட்டமிட்டார். தற்போதைய அரசை ஆட்சி கவிழ்ப்பு செய்ய திட்டமிட்டிருந்தார். சின் அரசன் வெளியூர் பயணம் செய்திருந்த சமயம் சா வோஜியின் முத்திரை மோதிரத்தைக் கொண்டு அரண்மனையில் இராணுவ கலகத்திற்கு ஏற்பாடு செய்தான் லா வோஐ.

(பண்டைய நாகரீகங்களில் மன்னனை கை பொம்மையாக பயன்படுத்திக்கொள்ளும் சந்தர்ப்பவாத தந்திரமுறைகள் இருந்துள்ளன. வயது முதிர்ந்த வாரிசை கொன்றுவிடுவதின் வழி இளம் வாரிசை அரியனையில் அமர்த்திவிடுவார்கள். சந்தர்பவாதிகள் திரை மறைவில் இருந்து ஆட்சி நடத்திக் கொள்வார்கள்.)

ஒற்றர்களின் வழி அந்தத் தகவல் கசிந்தது. லா வோஐ-க்கு பிறந்த அந்த இரு குழந்தைகளும் அரண்மனைக்கு வரவழைக்கப்பட்டனர்.

“குழந்தாய் இங்கே வா”. தன் பக்கத்தில் அமர்த்திக் கொண்டார் சின். “நீ இந்நாட்டின் சிறந்த அரசனாக இருக்க முடியுமென கருதுகிறாயா?” குழந்தைகள் சிரித்தன. அவ்விரு குழந்தைகளின் கவனமும் தன் கையில் இருந்த பொம்மைகளின் மீது இருந்தது.

சின் தனது படைகளைக் கொண்டு ஆட்சி கவிழ்ப்பு திட்டத்தை முறியடித்தார். லா வோஐ தரையில் படுக்க வைக்கப்பட்டான். போரில் ஏற்பட்டக் காயம் அவனை சோர்வுறச் செய்திருந்தது. கைகால்கள் அகல விரிக்கப்பட்டு கயிறுகளைக் கொண்டு கட்டப்பட்டது. அக்கயிறுகள் நாலா திசைகளிலும் நிறுத்தப்பட்ட குதிரைகளில் கட்டப்பட்டன.

இந்தச் சம்பவங்கள் நடந்தது லா வோஐ-யின் காதலியாகிய சின் அரசனின் அம்மாவின் கண் முன் தான்.

“அரசிகளுக்கு காதலன் இருப்பது புதிதல்லவே மகனே, ஏன் இப்படிச் செய்கிறாய்? தயவு செய்து என் காதலனை கொன்றுவிடாதே.”

“அம்மா உங்கள் தனிபட்ட விசயம் எனக்கு தேவையில்லைதான். ஆனால் எனது அரியனைக்கு ஆசைப்படும் யாரும் உயிரோடு இருக்கக் கூடாது. இவை எல்லாம் உங்களுக்குத் தெரிந்தே நடந்ததாக உங்கள் ஆசைக் காதலன் சொல்கிறான். இனி அவன் உயிர் வாழ்வது என் அரியணைக்கு நல்லதல்ல”.

குதிரைகள் விரட்டியடிக்கப்பட்டன. அவள் காதலனின் உடல் பிய்ந்து உதிரம் மண்ணில் கரைந்தது. பொம்மை விளையாடிக் கொண்டிருந்த அந்த இரு குழந்தைகளும் கழுத்தில் துணிகளால் இருக்கப்பட்டுக் கொல்லப்பட்டன. சின்னின் அம்மா அரண்மனையில் காவல் வைக்கப்பட்டாள். அரசனை பாதுகாக்க தவறியதற்காக லூ பூவேய்யின் பிரதம மந்திரி பதவி பறிகப்பட்டது. பின் நாட்களில் அவமானத்தின் காரணமாக விஷம் அருந்தி தற்கொலைச் செய்துக் கொண்டார்.

சின் தனது அரசவையில் மாற்றங்களைக் கொண்டு வந்தார். தெரிந்த எதிரிகளை விட கண்களுக்குத் தெரியாமல் நம் அருகிலேயே இருக்கும் எதிரிகளே ஆபத்தானவர்கள் என்பதை சின் தன் வாழ்நாளில் மிக நம்பினார். தனது இராணுவத்தையும் ஒற்றர் படையையும் வலுவாக்கினார்.

பக்கத்து நாடுகள் மீதான ஆக்கிரமிப்புகள் நடந்தன. ஹன் (Han), ஸா-ஓ (Zhao), வெய் (Wei) என மூன்று நாடுகள் சின் வசம் வந்துவிட்டிருந்தன. மீதம் இருப்பது இன்னும் மூன்று நாடுகள். அடுத்ததாக யான் (Yan) எனும் தேசத்தின் மீது படையெடுக்க உத்தேசித்திருந்தார் சின் ஷி ஹூவாங். அப்போது எதிர்பாராத ஒரு சம்பவம் நடந்தது.

யான் தேசத்தின் இரு தூதுவர்கள் சின் மன்னனுக்குப் பரிசு பொருட்களைக் கொண்டு வந்திருந்தார்கள். அரசவையில் மண்டியிட்டு வணங்கினார்கள். யான் நாட்டின் பரிசைத் தனக்குத் திறந்து காட்டச் சொன்னார் சின். அரியணைச் சூழல் அதில் ஒருவனுக்கு அதீத பயத்தை ஏற்படுத்தி இருந்தது. ஒருவன் மட்டுமே முன் சென்றான். பெட்டியைத் திறந்து பரிசை வெளியெடுத்தான்.

அதில் ஒழித்து வைத்திருந்தக் கத்தியை எடுத்து அரசனை தாக்க ஆரம்பித்தான் தூதுவன். கடும் போராட்டத்தில் அரசன் உயிர் தப்பினான். அரசர் தன் முதுகில் வாள் மாட்டி இருந்தார். அதை உடனடியாக எடுத்து எதிரியை தாக்க முடியவில்லை. காரணம் அக்காலத்தில் அவர்கள் பயன்படுத்திய போர் வாள்கள் மிக நீளமானவை. உடனடியாக எடுப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. சின் வம்சத்து வாள்களை இன்றும் சீ-ஆன் பொருட்காட்சி சாலைகளில் காணலாம். அரசரை காண வந்த இருவரும் தூதர்கள் அல்ல. கை தேர்ந்த கொலையாளிகள். இச்சம்பவத்தின் பின் சின் அரண்மனையின் பாதுகாப்பு நடவடிக்கைகள் வழுபடுத்தப்பட்டன. இருந்தும் அரசனுக்கு ஒரு பாதுகாப்பற்றத் தன்மை தன்னைச் சூழ்ந்திருப்பதாக தோன்றியது.

இதற்கிடையே பெரும் நில பரப்பை கொண்ட ச்சூ (Chu) தேசத்தை வீழ்த்தினான். தனக்கு கடுக்காய் கொடுத்த யான் தேசமும் கவிழ்ந்தது அதை அடுத்து இருந்த ச்சீ (Qi) எனும் சிறு தேசம் எந்த போரும் இன்றி சரண் அடைந்தது. இப்போது பிரிவினைகள் இல்லை. ஒரே தேசம் அது சின் தேசம். ஒரே பேரரசன் அவன் பெயர் சின் ஹூவாங் டீ.

சின் காலத்தின் சீனாவின் நிலபரப்பிற்கும் தற்போதைய நிலைக்கும் வேறுபாடுகள் உண்டு. தற்போதைய சீனா நில பரப்பில் நான்காவது பெரிய நாடு. சண்டைச் சேவலை போன்றதொரு நில அமைப்புக் கொண்டது. சின் காலத்தின் பின் வந்த ஆட்சிகளில் சீனாவின் நிலபரப்பு பெரிதாக்கப்பட்டது.

ஒருங்கிணைந்த சீனாவை உறுவாக்கிய சின் ஆட்சி அமைப்பில் சீர்திருத்தங்கள் கொண்டு வந்தார். ஆறு வகை எழுத்து முறைகள் அக்காலகட்டத்தில் பயன்படுத்தப்பட்டன. அவற்றை ஒரே எழுத்து முறைக்கு கொண்டுவந்தார். இன்றளவில் ஒரே எழுத்துரு வகைகளே சீனர்களின் எழுத்துலகில் பயன்படுத்தப்படுகிறது. பண்ட மாற்று முறையில் இருந்து பண மாற்று முறை அமல்படுத்தப் பட்டது.

சின் அரசில் செல்வாக்கு மிகுந்த ஒரு நபர் இருந்தார். அரசனின் நம்பிக்கையான மந்திரியும் கூட. அவர் பெயர் லீசூ. லீசூவின் அலோசனையின் கீழ் சின் தேசத்தில் சட்ட அற நெறி (Legalism) சித்தாந்தம் கொண்டு வரப்பட்டது. இதன் அமலாக்கம் சீன தேசத்தில் மிகப் பெரும் உயிர் மற்றும் கலாச்சார சேதத்தை ஏற்படுத்தியது. நில ஆக்கிரமிப்பு போர், ஆட்சி சீர்திருத்தமென சின் காலகட்டத்தில் உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை இரண்டு கோடி இருக்கலாம் என கணிக்கிறார்கள்.

சட்ட அறநெறி சித்தாந்த அடிப்படையில் மனிதர்கள் அனைவரும் சுயநலவாதிகள். தேசத்தின் நன்மை பொருட்டு இந்த சுயநலவாதி மக்களை அடக்கி வைக்கவேண்டும். சட்ட அறநெறிக்கு எதிரான அனைத்தும் அழித்தொழிக்கபட்டது. பல நூல்கள்* எறிக்கப்பட்டன, எதிர்சிந்தனை கொண்ட அறிஞர்கள் கொல்லப்பட்டார்கள். முக்கியமாக கன்பூசியஸ் சித்தாந்தமும் மதமும் தடை செய்யப்பட்டது.

*பண்டையச் சீனர்கள் மூங்கில் பட்டைகளை நேர்வாக்காக வைத்து நூல்களை இயற்றினார்கள். இந்த மூங்கில் பட்டைகள் சிறு கொடிகளால் இணைக்கப்பட்டிருக்கும். நாம் பாயை சுருட்டுவது போல் இந்த நூல்களை சுருட்டி வைத்துக்கொள்வார்கள். அப்போதைய எழுது முறை வலமிருந்து இடமாக வாசிக்கப்பட்டது.

மக்கள் சிறு தவறு செய்தாலும் கடும் தண்டனை விதிக்கப்பட்டது. முக்கியமாக சீனப் பெருஞ்சுவரைக் கட்டவும், சாலைகள் அமைக்கவும், பெரும் கால்வாய்கள் அமைக்கவும் அடிமைகளாக்கப்பட்டனர். சீனப் பெருஞ்சுவர் கட்டத் தொடங்கியதும் சின்காலத்தில் தான். சின் ஹூவாங் டாவ் எனப்படும் கடலில் முடியும் பெருச்சுவர் சின் ஹூவாங் டீயில் பெயரின் தான் இன்றும் அழைக்கப்படுகிறது.

சின் ஹூவாங் டீ உலகிற்கான நடுவக ஆட்சியை கொண்டு வந்துவிட்டதாக நம்பினார். ஆட்சியில் சீர்திருத்தம் செய்துவிட்டதாக நம்பினார். கடவுளின் கட்டளையை நிறைவேற்றிவிட்ட மனநிறைவு அவருக்கு இருந்தது.

சின் ஹுவாங் டீயை கொலை செய்ய பலமுறை முயற்சிகள் நடந்தன. பாதுகாப்பின்மையின் அச்சம் அவரை மிகவருத்தியது. அரியனையில் வாளோடு தான் அமர்வார். அரண்மனையில் தான் தூங்கும் அறையை யாருக்கும் தெரியாதபடி பார்த்துக் கொண்டார். இருந்தும் யாரோ தன்னை பின் தொடர்வதைப் போன்ற எண்ணம் உதித்துக் கொண்டே இருந்தது.

அவர் செய்த கொலைகள் நினைவிற்கு வந்துபோயின. தன்னால் கொல்லப்பட்ட ஆன்மாக்கள் தன்னைக் கொல்ல பின் தொடர்வதாக நம்பினார். தான் இறந்த பின் இந்த ஆன்மாக்கள் அவரை பழிவாங்கக் கூடும். யோசனையில் ஆழ்ந்த அரசர் தனக்கானக் கல்லறையை வடிவமைக்க ஆரம்பித்தார். எப்படிபட்ட கல்லறை? வேற்றுலகிலும் அரசனாகவே வாழ வேண்டும். எல்லா வசதிகளோடும். சுமார் 7 லட்சம் அடிமைகளைக் கொண்டு அந்தக் கல்லறை தயாரானது.

சின் தேசத்தின் வரைபடம் போன்ற அமைப்பிலானக் கல்லறை. மிகப் பெரிய அரண்மனை. அதில் வெங்களத்தில் ஆன கல்லறை. தேசத்தில் ஓடும் ஆறு நதிகளும் அதில் இருக்க வேண்டும். நட்சத்திரம் இருக்க வேண்டும். நிலா இருக்க வேண்டும். பலம் கொண்ட இராணுவம் மிக அவசியம். ஆம் இராணுவ தளவடாங்களை மறந்துவிடாதீர்கள். இப்படியாக ஏகப்பட்ட பிருமாண்டங்களோடு தனது கல்லறையைத் தயாரிக்கச் சொன்னார். இந்தக் கல்லறைக்குள் இன்றும் பாதரச அமிலம் உள்ளது.

சிலகாலத்திற்கு பிறகு மன்னனுக்கு வேறொரு யோசனைத் தோன்றியது. ’நான் கடவுளின் குழந்தை. நான் சாகாமல் நீண்ட ஆயுளோடு இந்த உலகை ஆட்சி செய்ய வேண்டும். அதற்கான வழி நிச்சயம் இருக்கும்’.

”யாரங்கே! நான் அமரத்துவமாக வாழ வழியை கண்டறியுங்கள். நமது படைகளை கடல் தாண்டி தேடச் சொல்லுங்கள். நான் முதுமையடைமலும் இறக்காமலும் இருக்க தீர்வை கொடுக்கச் சொல்லுங்கள்”.

”கடல் தாண்டிய மலையில், மூலிகை இருப்பதாகச் சொல்கிறார்கள். ஆனால் அந்த மலையை யாரும் இன்னும் கண்டு பிடிக்கவில்லை மன்னா”.

“தேடிச் செல். கண்டுபிடிக்கும் வரை திரும்பி வராதே”

“மன்னா இளமையாக இருக்க ஒரு வழி உண்டு. எண்ணிலடங்கா பெண்களோடு சிற்றின்பத்தில் திளைத்தால் முதுமை அண்டாது”.

“ஓ. அப்படியே ஆகட்டும்”.

நாட்கள் கழிந்தன. மன்னன் தனது முழு பொழுதையும் அந்தபுரத்தில் மட்டுமே கழித்துக் கொண்டிருந்தான். மன்னனின் சாகா வர கண்டுபிடிப்புக்குச் சென்ற ஒருவன் திரும்பி வந்தான்.

“மன்னா இந்த மூலிகை சாகா வரத்திற்கு வழி வகுக்கும். ஆனால் மன்னா..,”

“ஆனால் என்ன?”

“இதை தொடர்ந்து சாப்பிட்டுக் கொண்டே இருக்க வேண்டும். அப்பொழுது தான் இளமையாகவும், இறக்காமலும் இருக்க முடியும்”.

“முட்டாளே, நான் கேட்டது அமரத்துவமாக வாழ்வதற்கான தீர்வு. போர் வாள் என் இதயத்தை துளைத்தாலும் நேராத இறப்பு. கண்டு பிடிக்கும் வரை இங்கே தலைக்காட்டிவிடாதே. அது வரை இந்த மூலிகையின் குறிப்புகளை மட்டும் வைத்துவிட்டுச் செல்”.

அன்று மன்னனின் கையில் ஒப்படைக்கப்பட்டது பாதரசம் கலந்த மூலிகை. ஏன் பாதரசம் என்பதற்கான கேள்விக்கு வரலாற்றில் இன்னமும் பதில் இல்லை. அதை அரசர் தொடர்ந்து சில ஆண்டுகள் சாப்பிட்டு வந்தார். பாதரசமே அரசனின் உடல் பாதிப்பிற்கும் இறப்பிற்கும் காரணமென கூறப்படுகிறது.

இரசாயன ஆய்வியல் நிபுணர்களின் கூற்றின்படி பாதரசம் மனிதனின் உடலில் ஒட்டாது. தாமரை இலைக்கும் நீருக்கும் ஏற்படும் தன்மையை போன்ற நிலையிலானது. சின் அரசர் மூலிகைகளோடு கலந்து வலுக்கட்டாயமாக அதைத் தன் உடலில் செலுத்தினார்.

சில ஆண்டுகளில் நறை கூடி இருந்தது. அரசரின் பாதரச சிட்டிகையின் அளவு ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துக் கொண்டிருந்தது. பாதரசம் நரம்புகளைப் பாதித்தது. அரசர் நிதானம் இழந்திருந்தார். அடுத்ததாக அது மூளையைத் தாக்கியது. பாதரச மூலிகை வைத்தியத்தின் ஆறாம் ஆண்டில் அரசன் தன் சேனைகளோடு ஒரு மலையை நோக்கிச் சென்றான்.

நடக்க முடியாத நிலை. சிறுநீரகம் பாதிப்படைந்திருந்தது. இரு வீரர்கள் அரசரை மலை உச்சிக்கு தூக்கிச் சென்றார்கள்.

மலையில் நின்றபடி வானை நோக்கி பேச ஆரம்பித்திருந்தார். “சுவர்கத்தின் கடவுளே. உன்னால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிள்ளை வந்திருக்கிறேன். உன் கட்டளைகள் அனைத்தையும் நிறைவேற்றிவிட்டேன். ஏன் எனக்கு சாகா வரம் கொடுக்க மறுக்கிறாய்”. தனது மன வருத்தத்தைத் தெரிவித்து அழ ஆரம்பித்திருந்தார்.

சின் ஹூவாங் டீக்கு தனது வாழ்வின் கடைசி தினம் நெருங்குவது தெரிந்திருந்தது. ஒரு பயணத்தின் சமயம் தேரில் தன் அருகே அமர்ந்திருந்த பிரதம மந்திரி லீசூவை அழைத்தார்.

“இதில் என்ன இருக்கிறது தெரியுமா லீசூ?”

“தெரியாது மன்னா”.

“நான் இறந்த பின் தேர்ந்தெடுக்க வேண்டிய வாரிசின் பெயர்”.

“இல்லை மன்னா. கூடிய விரைவில் உங்கள் சாகா வரத்திற்கான மருந்து கண்டு பிடிக்கப்பட்டுவிடும். நமது இராணுவம் தேடிக் கொண்டுள்ளது”.

“நமது இராணுவம் இன்னும் கடலை தாண்டவே இல்லை லீசூ. பயணத்தின் போது அவர்களை பெரிய மீன்கள் தாக்கிவிட்டதாம். ஒற்றர்கள் எனக்குச் செய்தியை தெரிவித்துவிட்டார்கள். நான் அந்த மீன்களை வேட்டையாட போகிறேன் லீசூ. உடனே கிளம்புவோம் வா”.

“கடலுக்கா மன்னா?”

“என்ன கேள்வி இது. அங்கு தானே அந்த மீன்கள் உள்ளன… ம்ம்ம்... சீக்கிரம் புறப்படுவோம் வா”.

மன்னனை கடற்கரைக்கு அழைத்துச் சென்றார்கள். கரையில் இறங்கி தன் அம்புகளை எய்து பல மீன்களை கொன்றுவிட்டதாக கூறினார் சின். உடன் வந்திருந்த இராணுவம் ஜெய கோஷம் இட்டது.

மன்னர் தனது நகர் வலத்தில் இருந்தார். தான் எழுதிய அரியனை இரகசியங்களும் அதில் இருந்தன. பயணத்தின் போது இளைப்பாறியவாக்கில் இறந்துபோனார். அரியனை இரகசியங்கள் களவாடப்பட்டன. மன்னின் மரணம் மறைக்கப்பட்டது.

டிராகனின் நடனம் தொடரும்…

Friday, September 13, 2019

வெண்சுருட்டு மங்கை (Cigarette Girl) - இந்தோனேசிய நாவல்

நாவல்: Cigarette Girl (Gadis Kretek)
நயம்: சமூக நாவல் (Indonesia)
பக்கம்: 244 Pages
ஆசிரியர்: Ratih Kumala

இந்தோனேசிய கெரெதேக் வகை சிகரட்டுகளுக்கு தனி தன்மை உண்டு. மலேசிய சந்தைகளில் மலிவாகவும் சுலபமாகவும் கிடைக்ககூடிய சிகரட்களில் கெரெதேக் வகையும் அடங்கும். கெரெதேக் இந்தோனேசியாவின் பாரம்பரிய அடையாளமாகவும் திகழ்கிறது. ஆரம்ப காலங்களில் கெரெதேக் சிகரட்டுகளை உடல் நலனுக்காக பிடித்திருக்கிறார்கள் என்றால் நம்ப முடிகிறதா? அரட்டைக் கலாச்சாரத்திற்கும், ஆஸ்துமா நோய்க்கும் கெரெதெக் முக்கிய பங்காற்றி உள்ளது. ஆனால் இன்றய நிலையில் அனைத்து வகை சிகரட்டுகளும் உடல் நலத்திற்கு தீங்கு விளைவிப்பவையே என அச்சிடப்பட்டு வெளியிடப்படுகிறது. கெரெதேக் சிகரட்டுக்கு ஏற்ற இணைப்பாக கூறப்படுவது கொட்டை வடிநீர். கொட்டை வடிநீர் அல்லது காப்பி கலாச்சாரம் டச்சு காலனியாதிக்கத்தின் போது இந்தோனேசியாவில் காலூன்றியது. கருப்புக் காப்பியும் கெரெதேக் சிகரட்டும் கொடுக்கும் ‘கிக்’ ஆளாதியென கருதுகிறார்கள். வானிலை மாற்றத்திற்கு ஏற்ப கருப்புக் காப்பியை காருப்புத் தேநீருக்கு மாற்றிக் கொள்கிறார்கள். 

கெரெதேக் சிகரட்டுகள் மற்ற சிகரட்டுகளை காட்டினும் எப்படி மாறுபடுகின்றன? கெரெதேக் சிகரட்டுகளில் புகையிலையும் மூன்றில் ஒரு பங்கிற்கு கிராம்பும் சேர்க்கிறார்கள். அது போக சுவைக்காக செயற்கை முறை புகயிலைச் சாறையும் சேர்க்கிறார்கள். இதன் தயாரிப்பு முறை ஒவ்வொரு பிராண்டுக்கும் மாறுபாடுகிறது. கெரெதேக் புகையின் வாடை மற்ற சிகரட் புகையை விட மாறுபாடு கொண்டிருக்கும். சிகரட் கேர்ல்/ காடிஸ் கெரெதேக் எனும் இந்நாவல் பேசும் கதை என்ன? இந்த நாவல் மூன்று தலைமுறைகளின் கதையை பேசுகிறது. காதல், வன்மம், பகை மற்றும் அரசியலின் ஊடாக கெரெதேக் சிகரட்டின் பரிணாம வளர்ச்சியை நமக்குக் காட்டுகிறது. இந்த நாவல் 2012-ல் வெளீயீடு கண்டு பெரும் கவனம் பெற்றது. கெரெதேக் சிகரட்டுகளின் பாரம்பரியம், வரலாற்றுப் பின்னணி, தொழில் முறை, வணிகம் என இந்தோனேசிய சிகரட் சாம்ராஜியத்தின் மொத்த வடிவமாக இந்த நாவல் அமைந்துள்ளது. 

இந்த நாவலில் இரண்டு கதைச் சொல்லிகள் உள்ளனர். ஒன்று நாவலாசிரியர் வழியாகச் சொல்லப்படுகிறது. முதல் இரு தலைமுறைகளின் கதையும் பெரும்பான்மையாக நாவலாசிரியரே சொல்கிறார். அடுத்தபடியாக லெபாஸ் எனும் காதாபார்த்திரம் நிகழ்கால கதை சொல்லியாக இருக்கிறார். லெபாஸ் இந்தோனேசியாவின் முதல் நிலையில் இருக்கும் கெரெதேக் சாம்ராஜிய சக்ரவர்த்தியின் மகன். லெபாஸுக்கு இரண்டு அண்ணன்கள். உடல் நலம் குன்றி மரணப் படுக்கையில் இருக்கும் லெபாஸின் தந்தை (சௌராஜா) அடிக்கடி ‘ஜெங் யா’ எனும் பெண் பெயரைச் செல்லி பிதற்றுகிறார். சௌராஜாவுக்கு மரணிப்பதற்குள் ஜெங் யாவை பார்த்துவிட வேண்டும் எனும் விருப்பம் இருக்கிறது. மகன்கள் ஜெங் யாவை தேடி புரப்படும் பயணமும் சௌராஜா மரணிக்கும் முன் அந்த பெண்மணியை பார்க்கும் வாய்ப்புக் கிடைத்ததா எப்பதே நாவலின் சாரம். கதையின் ஒரு வரி தகவல் மிகச் சாதாரனமாக இருபினும் நாம் யூகிக்க முடியாத ஒரு கோணத்தில் கதையை நகர்தி இருப்பது இந்நாவலின் பலம். 

ஆரம்பத்தில் லெபாஸ் மட்டுமே ஜெங் யாவை தேடிச் செல்க்கிறார். போகும் வழியில் அவரைப் போல் ’போப் மார்லே’காலாச்சார ஈடுபாடு கொண்ட நண்பரை சந்திக்கிறார். இசைக் கொண்டாட்டத்தில் கெரெதேக் சிகரட்டோடு கஞ்சாவையும் சேர்த்து அடித்து மட்டையாகிவிடுகிறார். லெபாஸ் கதாபாத்திரத்தின் வடிவமைப்பு ஓர் இளமை துள்ளல் மிகுந்த இளைஞனாக காட்டப்படுகிறது. இவருக்கு குடும்ப தொழிலில் ஈடுபடும் நோக்கம் இல்லை. அமேரிக்காவுக்கு வணிக மேலாண்மை படிக்க குடும்பத்தார் இவரை அனுப்பி வைக்கிறார்கள், இசையில் ஆர்வம் கொண்டு ஜமாய்க்கா வரை போய் இசை ஞானத்தை வளர்த்துக் கொள்கிறார். அதிலும் மனநிறைவு இல்லாமல் சினிமா பக்கம் திரும்புகிறார். சொல் பேச்சு கேட்காத பிள்ளையாக குடுப்பத்தாரிடம் எப்போதும் ஒரு கெட்ட பெயர் உண்டு. லெபாஸை பொருத்த வரை அவர் தன் விரும்பபடி தன் சுய முயற்சியில் வாழ்க்கையை நகர்த்திச் செல்கிறார். ஷங்கரை போல் பெரிய பட்ஜெட் படம் எடுக்கும் ஆசை இருந்தாலும் அவருக்கு அமைவெதெல்லாம் சோப்பு விளம்பரமும், பேய்க் கதைகளை எடுக்கும் வாய்ப்புகள் தான். 

இந்நாவல் ஜாவ மக்களின் வாழ்வியலை மிக அழகாக பதிவு செய்துள்ளது. முக்கியமாகா ஜகார்த்தா, கூடுஸ் (Kudus) மற்றும் M Town போன்ற இடங்களில் பிரதான கதை நடக்கிறது. குடுஸ் தற்சமயம் கெரெதேக் சிகரட்டுகளின் தொழில் நகரமாக விளங்குகிறது. இங்கு வசிக்கும் மக்களில் மூன்றில் ஒரு பக்கினர் கெரெதேக் சிகரட் தொழில்துறை சார்ந்தே தங்களின் வாழ்வாதாரத்தை தேடிக் கொள்கிறார்கள். வியாபார விருத்தியின் ரீதியாக தொழிற்சாலைகள் தங்கள் வேலையாட்களை கவனித்துக் கொள்ளும் முறையும், பாரம்பரை பெருமை காக்க சில கம்பெனிகள் நகரர்தப்படுவதையும் ஆசிரியர் பதிவு செய்கிறார். அது போக அந்த தொழில்துறை சுற்று வட்டாரத்தில் இயங்கும் வட்டி முதலைகள் அங்கு பணி புரியும் தொழிலாளர்களையும் முக்கியமாக இளம் பெண்களை கடன் கொடுத்து தங்கள் அடிமையாக்கிக் கொள்வதையும் அறியமுடிகிறது.

நிகழ்காலத்தில் நடக்கும் கதை திடீரென மூன்றாம் அத்தியாயத்தில் டச்சு காலனியாத்திக்க காலத்தில் தொடங்குகிறது. இந்தோனேசியர்கள் ஜப்பானியர்களின் வருகையை பெரிதும் நம்பிக்கையோடு எதிர்ப்பார்க்கிறார்கள். ஆனால் கழுதை தேய்ந்த கதையாக டச்சு ஆட்சியை விட ஜப்பானியர்களின் ஆட்சி குறுகிய காலத்தில் வெறுப்பை சம்பாத்தித்துக் கொள்கிறது. ஏகபட்ட உள்ளூர் வாசிகள் சூரபாயா (Surabaya) நகருக்கு சிறைபிடித்துக் கொண்டுச் செல்லப்படுகிறார்கள். அங்கு கட்டாய தொழில் முகாம்களில் கடுமையாக வேலை வாங்கப்படுகிறார்கள். நாவலின் இப்பகுதி இட்ரோஸ் மொரியா (IDROES MOERIA) எனும் காதாபாத்திர்த்தை மையப்படுத்தி சொல்லப்படுகிறது. இக்காலகட்டத்தில் கெரேதேக் என்பது கொலொபோட் (Klobot) எனும் வடிவில் உள்ளது. அதாவது பீடி அளவிலேயே அதன் பரிணாமம் உள்ளது. சோள மட்டைகளை சமன் செய்து வெட்டி, இஸ்திரி போட்டு காய வைத்து இப்படியான பீடிகளை செய்கிறார்கள். அதை மருத்து கடைகளில் விற்பனைக்கு வைக்கிறார்கள். ஆஸ்துமா நோயாளிகளே அச்சயம் கொலோபோட்களை அதிகம் பயன்படுத்தி இருக்கிறார்கள். இரண்டாம் உலகப் போரின் போது புகையிலை பணமாகவும் செயல்பட்டுள்ளது. ஆக பொதுமக்களிடம் புகையிலை இருக்காதபடி ஜப்பானிய இராணுவம் அனைத்தையும் பரிமுதல் செய்கிறது. தற்செயலாக சிறை போக நேரிடும் இட்ரோஸ் அங்கு சீனர்களிடம் புலங்கிய சிலிண்டர் வகை வெண்சுருட்டுகளின் பயன்பாட்டை பார்க்கிறார். கொலொபோட் (பீடி) வடிவத்தில் இருந்து கெரெதேக் சிகரட்டாக மெறுகேற்றும் ஐடியாவை வித்திடுகிறார். 

இட்ரோஸ் மொரியா மற்றும் சௌஜாகாட் எனும் இரு நண்பர்களும் தங்களது இளமை பருவத்தில் பீடி மடிக்கும் வேலையில் ஈடுபடுகிறார்கள். இருவரும் ரௌமாயிஸா எனும் பெண் மீது காதல் கொள்கிறார்கள். சௌஜாகாட்டின் காதலை நிராகரிக்கும் ரௌமாயிஸா இட்ரோஸ் மொரியாவை திருமணம் செய்து கொள்கிறார். இதுவே இந்த இரு நண்பர்களின் தொழில் மற்றும் குடும்ப பகையின் காரணமாகிறது. இட்ரோஸ் மோரியா மற்றும் சௌஜாகாட் இரு குடும்பத்தின் வழி கதை மூன்று தலைமுறைகளில் நம்மிடம் சமர்பிக்கப்படுகிறது. ஆரம்ப அத்தியாயங்களில் இட்ரோஸ் மோரியா பார்வையில் வைக்கப்படும் கதை கடைசி சில அத்தியாயங்களில் சௌஜாகாட் பார்வையில் வைக்கப்படுகிறது. ஒரே நிகழ்வு இரு வேறு தரப்பினருக்கு வேறு விதமான கோணத்தில் தங்களை எதிரிகளாக பாவித்துக்கொள்ள வைக்கிறது. இதில் யார் சொல்வது சரி? அது வாசகனின் தேர்வுக்கு விடப்படுகிறது.

இந்தோனேசிய அரசியல் மாற்றத்தை பொருத்த வரை இரண்டு காலகட்டங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஒன்று காலணியாதிக்க காலம். மற்றொன்று G30S எனும் இயக்கத்தின் நிகழ்வு. சில இராணுவ ஜெனரல்களின் கொலையை காரணம் காட்டி இந்தோனேசிய கம்யூனிஸ்ட் கட்சி முற்றிலுமாக ஒழித்துக்கட்டப்படுகிறது. இச்சம்பவமும் இட்ரோஸ் மோரியாவின் கெரெதேக் தொழிலோடு மிக நேர்த்தியாக கோர்க்கப்படுகிறது. 

இந்நாவலில் கூறப்படும் சிகரட் கேர்ல் அல்லது காடிஸ் கெரெதேக் யார்? இட்ரோஸ் திருமணம் செய்துக் கொண்ட ரௌமாயிஸா அல்ல. சிகரட் கேர்லை கண்டு பிடிக்கும் சுவாரசியத்தை வாசகனிடம் விட்டுவிடலாம். இந்த நாவல் ஆசிரியர் ராதே குமாலா கெரெதேக் சிகரட் சார்ந்த ஏகபட்ட செய்திகளை நமக்குக் கடத்திக் கொடுத்துள்ளார், புகையிலை பயிர் செய்யும் நடைமுறை, இலைகளின் தேர்வு, கிராம்பு வகைகளின் சேர்க்கை, அதன் விளம்பர உலகம், தொழிற்சாலைகள், தொழிலாளர்கள், பயனர்கள் என அனைத்து அம்சங்களையும் நாம் காண்கிறோம். இந்த நாவலை எழுத நிச்சயமாக மிகவும் சிரமம் கொண்டு தகவல்களை திரட்டி இருக்க வேண்டும். வாசிக்கும் ஒவ்வொரு வாக்கியமும் நமக்கு தகவல் கசிவை கொடுக்கின்றன. 

-முற்றும்-

Wednesday, July 17, 2019

NOTHING TO ENVY – ORDINARY LIVES IN NORTH KOREA - இரகசிய தேசம்

I AM SUN MU எனும் ஆவணப்படம் தொடர்பாக இதற்கு முன் எழுதி இருந்தேன். சுன் மூ ஓரு வடகொரிய அகதி. தொன் கொரியாவில் தஞ்சமடையும் அவர் நெடுநாட்களுக்கு பின் பெய்ஜிங்கிற்கு தனது ஓவிய கண்காட்சியை அரகேற்ற வருகிறார். அச்சமயம் அவர் பதிவு செய்யும் வார்த்தைகளில் சில பின்வருமாறு ஒலிக்கும், “இந்த இரவுகள் எனக்கு புதுமையாக இருக்கின். நான் தப்பி ஓடும் வரையினும் இரவில் இவ்வளவு விளக்குகளின் வெளிச்சத்தைக் கண்டதில்லை. வடகொரியாவை பொறுத்தவரை இது விரையம்”. ஆவணப் படத்தில் சுன் மூ பேசியது எனக்கு கொஞ்சம் வியப்பைக் கொடுத்தது. Nothing to Envy நூலினை வாசிக்கும் போது இதற்கான விடையுடனே அந்த நூல் தொடங்குகிறது.

இரு துண்டுகளாக உடைந்துக் கிடக்கும் கொரியாவின் இரவை செயற்கைக்கோளின் துணை கொண்டு காண்போம் என்றால் தெற்கே வெளிச்சம் மிகுதியோடும், வடக்கே ஒரு சில பொட்டுகளைப் போன்ற வெளிச்சமும் தெரியும். மிகுந்திருக்கும் இருள் அந்த மக்களை கவ்வியதோடு, அவர்களை அறிந்துக்கொள்ளவும் முட்டுக்கட்டையாகிறது. அதிதீவிர கம்யூனிச பத்தர் கூட வடகொரியாவுக்கு அகதி தஞ்சம் போக தன்னை ஒப்புக் கொடுக்கமாட்டார். அந்நாட்டிற்கு தஞ்சம் போவதாக கூறிக் கொள்ளும் ஒரு சில ஊதி பெருக்கப்பட்ட செய்திகளை பகிர்ந்து மகிழ்ச்சி கொள்ள முடியும். உண்மையில் அங்கிருந்து தப்பி ஓடுவோரின் பட்டியலே மிக அதிகம். இதன் காரணமாகவே சீனாவை ஒட்டி இருக்கும் டூமன் நதி நெடுகினும் மின்சார தடுப்பு வேலிகளை அமைக்க கட்டளை இட்டுள்ளார் அந்நாட்டின் தற்போதைய ’பேரரசரான’ கிம் ஜொங் உன்.

Barbara Demick எழுதி இருக்கும் Nothing to Envy ஒரு நாவலைப் போலவே பயணிக்கிறது. ஆறு வெவ்வேறு மனிதர்களின் சுயசரிதத்தை நோன்-லீனியர் முறையில் பதிவு செய்துள்ளது. அதன் ஒவ்வொரு பக்கங்களிலும் நாம் அறிந்திராத இன்னொரு உலகை நமக்காக படம் பிடித்துக் காட்டியுள்ளார் நூல் ஆசிரியர். வடகொரியாவை கம்யூனிசத்தின் கண்ணாடி எனக் கருத்துவோருக்கு இதற்கு பிறகான வரிகள் கசக்கவே செய்யும். 

1990-களின் முற்பகுதியில் சோவியத் யூனியனின் பிளவு வடகொரியாவை பாதிக்கச் செய்தது. அதற்கு பிறகு நிகழ்த அந்நாட்டு அதிபரின் மறைவும் அங்கிருக்கும் சூழலை மோசமாக்கியது. சுதந்திரம் முதல் இன்று வரை வாரிசு அரசியலை சந்தித்து வரும் நாடு அது. தலைமைத்துவ பண்பை வாரிசு ரீதியாகக் கொண்டுச் செல்ல முடியுமா என்பது கேள்வியே. ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு தனித்திறனும் விருப்பமும் இருக்கக்கூடும். தந்தை செய்த தொழிலையே மகனும் செய்தாக வேண்டும் என நிர்பந்திப்பதும் இயற்கை விதிக்கு எதிரானதே. 

வடகொரியாவின் முதல் அதிபரின் பெயர் கிம் இல் சுங். நாட்டின் தலைமை பொறுப்பை ஏற்க அவரது மகனான கிம் ஜொங் இல்--லை பலமாகவே தயார் செய்தார். கிம் ஜொங் இல்-லின் கவனம் அரசியலில் இல்லை. அவர் சினிமாவில் மிகுந்த ஈடுபாடு கொண்டவராக இருந்தார். எந்த அளவுக்கான ஈடுபாடு என்றால் சினிமாவுக்காக புத்தகம் எழுதினார், தென் கொரிய இயக்குநரையும் நடிகையையும் கடத்திக் கொண்டு வந்து எக்கச்செக்கமான படங்களை எடுத்தார் அது போக டைடானிக் திரைப்படத்தில் ஈர்ப்புக் கொண்டு வடகொரியர்களுக்கு ஏற்ற டைடானிக் திரைப்பட்த்தையும் எடுத்தார். அவர் எழுதிய புத்தகத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பு On the Art of Cinema என வெளியீடு கண்டது. தென் கொரிய சினிமாக்காரர்களை கடத்திய பின்னணி ‘The Lovers & The Despot” எனும் ஆவணப் படமாக்கப்பட்டுள்ளது.

Nothing to Envy எனும் வாசகம் வடகொரிய துதிப்பாடலில் இருக்கும் வரிகளாகும். ’எங்கள் தேச பிதா எங்களை காப்பார், இவ்வுலகில் எதன் மீதும் எங்களுக்கு பொறாமை இல்லை’ என்பதாக அப்பாடல் அமைந்துள்ளது. இந்த வரிகளை தொடர்ந்து பாடி தங்களது அதிபரை கடவுள் நிலையில் வைக்க கற்பிக்கப்படுகிறார்கள். வட கொரியா தந்தை தேசம் என்றே குறிப்பிடப்படுகிறது. இந்த நூல் ஆசிரியர் நூற்றுக்கும் அதிகமான வட கொரிய அகதிகளை பேட்டி எடுத்திருக்கிறார். அவற்றில் குறிப்பிட தக்க வெகு சிலரின் வாழ்வியலே இதில் படம் பிடித்துக் காட்டப்பட்டுள்ளது. அவர்கள் வெவ்வேறு வாழ்வியல் தளங்களைக் கொண்டவர்கள். சமூக படிநிலைகளில் மேன்மையாகவும் தாழ்மையாகவும் பார்க்கப்படுபவர்கள்.

பொது வெளியில் வடகொரியா தொடர்பாக அந்நாட்டின் அரசியல் சூழல், அதன் தலைவர்கள் மற்றும் வரலாறு தொடர்பான செய்திகளை மட்டுமே வாசித்தும் கண்டும் இருப்போம். இந்நூல் அவற்றை தாண்டி அங்குள்ள மக்களை பற்றியும், அவர்களின் வாழ்வியல், காதல், பட்டினி மற்றும் தப்பி ஓடும் படலங்களையும் பேசுகிறது. வெளி உலகிற்கு வடகொரியாவின் தலைநகரான பியோங்யாங் மற்றும் அங்கு அழைத்துச் செல்லப்படும் அளங்கரிக்கப்பட்ட சுற்றுப்பயணங்களே காட்டப்பட்டுள்ளன. பியோங்யாங்கை தவிர்த்து பிற நகரங்களும் உண்டு. அப்படியாக இந்நூல் சோங்ஜின் (Chongjin) எனும் சிறு நகர வாசிகளின் கதைகளை பேசுகிறது. இந்நகரம் வடகொரியாவின் சீனா, ரசிய எல்லையில் அமைந்துள்ளது.

மீ-ரான் எனும் இளம் பெண்ணின் காதல் கதையில் இந்த நூல் தொடங்குகிறது. மீ-ரானின் அப்பா தென் பகுதிக்காக போர் புரிந்து வட பகுதியில் சிக்கிக் கொண்டவர். போருக்கு பிறகான அவர் போன்றவர்களின் வாழ்க்கை பாதிப்புக்கு உள்ளாகிறது. சமூக ரீதியில் கீழ்மையாக பார்க்கப்படுகிறார்கள், அவர்களின் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகளும் மறுக்கப்படுகிறது. இந்த சமூக தண்டனை தலைமுறை ரீதியாக கடத்தப்பட்டு, கறைபடிந்த தலைமுறையாக அவர்கள் அடையாளப்படுத்தப்படுகிறார்கள். 1990-களின் மத்தியில் வடகொரியாவில் பஞ்சம் அத்கரித்த போது மீ-ரான் பாலர் பள்ளி ஆசிரியராக நியமிக்கப்படுகிறார். ஊதியமற்ற ஊழியம். சுமார் 50 பிள்ளைகளுக்கு பாடம் போதித்த நிலை குறுகிய காலத்தில் 15-ஆக மாறுகிறது. பஞ்சம் காரணமாக அதிகமாக இறந்தது குழந்தைகளும், சிறார்களும் அடுத்தபடியாக முதியோர்களுமே. ஊட்டச் சத்துக் குறைபாட்டால் சிறுவர்கள் தலை பெருத்தும் உடல் மெலிந்தும் காணபட்டார்கள். பள்ளியில் கொடுக்கப்படும் ஒரு வேளை சூப் (உப்பும் + இலை + சுடுநீர்)உணவுக்காக மட்டுமே மாணவர்கள் வந்து கொண்டிருப்பதாக மீ-ரான் குறிப்பிடுகிறார். உணவின்றி தவிக்கும் பிள்ளைகள் சிரமம் கொண்டே ‘தேச பிதா எங்களை காப்பார்’ எனும் பாடலையும், எதிரி நாட்டினர் மீதான வெறுப்பினை போதிக்கும் பாடங்களையும் படித்துள்ளனர். பள்ளி வரும் அக்குழந்தைகளின் கண்கள் ‘நாங்கள் மரணத்தை நோக்கி பயணிப்பதை நீ இரசித்துக் கொண்டிருக்கிறாய் அல்லவா’ எனக் கேட்பதாக இருந்ததென குறிப்பிடுகிறார் மீ-ரான். உணவு போதாமை இந்த நூல் நெடுகினும் வெவ்வேறு வடிவங்களில் நமக்குக் காட்டப்படுகிறது. 

அடுத்ததாக ஜுன் - சாங்கின் வாழ்வியல் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒப்பீட்டளவில் ஜுன் - சாங்கின் குடும்பம் வசிதி மிக்க குடும்பம். இரண்டாம் உலகப் போரின் போது அதிகமான கொரியர்கள் ஜப்பானுக்கு இடம் பெயர்ந்தார்கள். இன்றளவிளும் ஜப்பானில் மூன்றாவது சிறுபான்மை இனமாக கொரியர்கள் வசிக்கிறார்கள். கொரிய பிறிவினைக்குப் பின் வடகொரியாவிற்கு இடம் பெயர்ந்து வசிக்கிறது ஜுன் - சாங்கின் குடும்பம். ஜுன் சாங்கின் முன்னோர் அக்காலகட்டத்தில் வடகொரியாவுக்கு போக காரணம் என்ன? இரண்டாம் உலகப் போர் முடிந்த நிலையில் ஜப்பான் பலம் இழந்த நாடாக இருந்தது. நாடு திருப்பும் அவர்கள் வட கொரியாவுக்கு போக நேர்கிறது. பிறிவினைக்கு பின் தென் கொரியா வட கொரியாவை விட பின் தங்கிய நாடாகவே இருந்துள்ளது என்பதையும் இங்கு பதிவு செய்துள்ளார்கள். ஜுன் - சாங் பியோங்யாங்கில் இருக்கும் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படிக்கிறார். அவர் அறிவியலாளராக நாட்டிற்கு சேவகம் செய்ய வேண்டும் என்பது குடும்பத்தின் விருப்பம். பள்ளி பருவத்தின் போதே ஜுன் - சாங்கிற்கும் மீ- ரானுக்கும் காதல் மலர்கிறது. அந்தக் காதலில் அவர்கள் தமது நாட்டின் நிலை பற்றியோ அல்லது அரசியல் பார்வையையோ பகிர்ந்துக் கொண்டதில்லை. அதன் பின் விளைவுக்கான பயமே அப்படி பேசமல் இருக்கச் செய்துள்ளது. மீ-ரான் மற்றும் ஜுன் சாங் இருவரும் வெவ்வேறு காலகட்டத்தில் தப்பி ஓடி அகதி தஞ்சம் கோறுகிறார்கள். மீ-ரான் ஜுன் சாங்கிடம் சொல்லாமலே முதலில் ஓடிவிடுகிறார். இவர்களின் காதல் எப்படியாக நிறைவடைந்தது என்பதை புத்தகம் வாசிப்போர் அறிய முடியும். 

திருமதி சோங் மற்றும் அவருடைய மகள் ஹொக்-ஹீயின் சுய ஒப்புதல் மற்றுமொரு தளத்தை பதிவு செய்கிறது. சோங் தொழிலாளர் கட்சியின் அதி தீவிர நம்பிக்கையாளராவார். வடகொரியர்களின் வீடுகளில் கிம் அதிபர்களின் படங்களை வைத்திருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு குடிமகனும் காலையில் எழுந்ததும் அச்சுவர் படங்களை துடைத்து சுத்தம் செய்ய வேண்டும். அவற்றை மக்கள் எவ்வாறு பாதுகாக்கிறார்கள் என்பதை பறிசோதிக்க ஒரு தனி இலாக்கா சோதனை நடத்தும். திருமதி சோங் ஒரு தொழிற்சாலையில் பணியாற்றுகிறார். அதே வேளை தன் குடில் வாசிகளின் தலைவியாகவும் இருக்கிறார். காலையில் எழுந்து சுவர் படங்களை சுத்தம் செய்வது முதல் இரவு படுக்கும் வரை ஓயாது பணி செய்கிறார். இவர் ஊடாக சொல்லப்படும் செய்திகள் பல. ஹொக்-ஹீ க்கு அவர் செய்து வைக்கும் திருமணம், திருமண முறை, அதற்கான செலவு, குளிர் காலத்தில் நிகழும் ’கிம்-சீ’ ஊறுகாய் திருட்டு, தினமும் தொழிலாளர்களின் முன்னிலையில் ஒவ்வொருவராக தன்னை சுய விமர்சனம் செய்து தன்னிடம் குறை இருப்பதாக முடிவுரை செய்வது, வார இறுதிகளில் தொலை தூர காடுகளில் உணவிற்காக குறுத்துகளை சேகரிப்பது, மனித மலங்களை பட்டியல் முறையில் அவர்கள் சுத்திகரிப்பு நிலையம் கொண்டுச் செல்வது என நேரடி விளக்கங்கள் நம் மனதை பிசையச் செய்கிறது. 

1990-களின் மத்தியில் வடகொரியாவில் பஞ்சம் அதிகரித்த போது தொழிற்சாலைகள் மூடபட்டன, விவசாயமும் பாதிப்படைந்தது. உணவு பற்றாக் குறையை மறைக்க அதிக உணவு சாப்பிட்டால் தொப்பை விழும் என்பதை போன்ற விளம்பரப் படங்கள் நாடு முழுக்க எழுப்பப்பட்டது. மக்களுக்கான உணவு விநியோகம் குறைக்கப்பட்டது. அதே வேளை, தென் கொரியர்கள் அபரிமித வளர்ச்சியை நோக்கிச் சென்று கொண்டிருந்தார்கள். ஒவ்வொருவரும் வகனம் வைத்திருக்கிறார்கள் எனும் செவி வழிச் செய்தியை ஆரம்பத்தில் நம்ப மறுத்தனர் வட கொரிய மக்கள். பஞ்சத்தின் போது கள்ளச் சந்தை விரிவடைந்தது. சீனாவின் வழி தனியங்களும் தொழில்நுட்ப பொருட்களும் வட கொரியாவின் எல்லை ஓர கள்ளச் சந்தையில் நுழைந்தன. அப்படியாக தென் கொரிய வானொலியையும் அவர்கள் கேட்க ஆரம்பிக்கிறார்கள். கொஞ்சம் வசதி இருந்தவர்களுக்கு தொலைக்காட்சி, சீடி மற்றும் டிவீடி பார்க்கும் வாய்ப்பும் ஏற்பட்டது. இது மக்களிடையே அதிர்வை உண்டாக்கியது. வடகொரியாவில் இது தேச துரோகத்திற்கு ஒப்பானதாகும். பிடிபட்டவர்களை சிறை மற்றும் லேபர் கேம்-களில் அடைத்தார்கள். 

பஞ்ச காலத்தில் ஏராளமான சிறார்கள் கைவிடப்பட்டார்கள். அவர்களின் சாவல்களை கிம்- ஹயுக் எனும் சிறுவனின் வழி நமக்கு சொல்லப்படுகிறது. அது போக டாக்டர் கிம் எனும் பெண்மணியின் வழி நிபுணர்களின் வாழ்வும் எந்த அளவுக்கு வடகொரியாவில் பாதிப்படைந்தது என்பதையும் விளக்குகிறது இந்நூல். 

பெரும்பான்மையான வடகொரியர்களின் தப்பிக்கும் படலம் சீனாவின் வழியே நிகழ்ந்துள்ளது. டூமன் நதியை கடந்து அகதிகளாக சீனாவில் நுழைகிறார்கள், முயற்சி எடுத்து அதில் சிலர் தென் கொரியாவை சென்றடைகிறார்கள். இந்நிகழ்வுகள் எளிமையான செயல்பாடக அமைவதில்லை. சீனாவிற்குள் நுழையும் வடகொரியர்கள் இங்குள்ள தென்கொரிய தூதரகத்தில் அகதி தஞ்சம் கேற முடியாது எனும் சட்டம் அமலில் உள்ளது. ஆக அவர்கள் இங்கிருந்து தரை வழி பயணமாக மங்கோலியா சென்று அங்கிருக்கும் தென்கொரிய தூதரகத்தை அடைகிறார்கள். இது ஆபத்தான வழியாகவும் அறியப்படுகிறது. காரணம் அவர்கள் ‘கோபி’ பாலைவனத்தை கடந்து போக வேண்டும். அப்படி பயணம் மேற்கொள்ளும் பலர் இறந்தும் போகிறார்கள். அடுத்ததாக குன்மிங்கில் இருந்து மியன்மார் சென்று தாய்லாந்தை அடைந்து அங்கிருந்து தென் கொரியா செல்கிறார்கள். இதற்கான செலவு மிக அதிகம். பணம் இல்லாத வடகொரிய அகதிகள் எப்படியாக இந்த பயணத்தை மேற்கொள்கிறார்கள்? அங்கும் ஒரு மோசடி நிகழ்கிறது.

தென்கொரியாவை சென்றடையும் வடகொரியர்களுக்கு ஒரு சில மாதங்களுக்கு மறுவாழ்வு பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சி முடிந்த பின் அவர்களின் மறுவாழ்விற்காக 20-ஆயிரம் அமேரிக்க டாலர்கள் வரையினும் பணம் கொடுக்கப்படுகிறது. இந்த அமேரிக்க டாலர்களை குறி வைத்து ஒரு சில மனித கடத்தல் குழுக்கள் இயங்கி வருகின்றன. சீனாவில் நுழைவது முதல் சீயோல் தலைநகரை அடைவது வரை இந்த கடத்தல் குழுக்கள் திறப்பட செயல்படும். அதற்கு கைமாறாக மறுவாழ்வு தொகையில் பெரும் பகுதியை அவர்கள் எடுத்துக் கொள்வார்கள். இந்தக் கடத்தல் குழுக்களை தவிர்த்து எம்.எல்.எம் செய்யும் ஆசாமிகளும் ஆசை வார்த்தைகளைக் கூறி பணம் பறித்துவிடுகிறார்கள். அரசினால் பகிர்ந்து கொடுக்கப்படும் நிலையில் இருந்து பண நிர்வாக வாழ்க்கை முறைக்கு மாறுவது மறுவாழ்வை மேற்கொள்ளும் கொரியர்களுக்கு சிக்கலாக அமைகிறது.

திசைகளில் மாறுபட்டிருந்தாலும் வடக்கில் இருந்து வருபவர்களும் கொரியர்களே. தெற்கில் இருப்பவர்களும் கொரியர்களே. இருந்தும் சமூக அமைப்பில் அவர்களின் ஏற்பு எத்தகையது? இரு நிலப் பகுதியினருக்குமான கால இடைவெளி சுமார் 60 ஆண்டுகளென கணக்கிடுகிறார்கள். மொழி, காலாச்சாரம், பண்பாடு என சமூக செயல்படுகளின் முக்கிய அம்சங்களில் இரு கொரியர்களுக்கும் அதீத மாறுபாடுகள் ஏற்பட்டுவிட்டது. தன்னை முழு தென் கொரியனாக கருதும் பலராலும் புதியவரை முழுமையாக ஏற்க முடியாத சிக்கலும் அங்கே உண்டாகிவிட்டது. அரசியல், பொருளாதரம், சமூகம் என பல நிலைகளிலும் புதிய குடியேற்றம் கண்டவர்கள் சிக்கலை சந்தித்ததை பதிவு செய்கிறார்கள்.

தற்போதைய நிலையில் டூமன் நதி படுகை நெடுகினும் காவல் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த நூல்கொரிய பிறிவினை முதல் 2009-ஆம் ஆண்டு வரையிலான நிகழ்வுகளை பதிவு செய்து 2009-ன் இறுதியில் வெளியீடு கண்டது. கிம் ஜொங் இல் மரணித்த ஆண்டு 2011. இந்நூலை எழுதும் சமயத்தில் வடகொரிய ’அரியனை’ பிரச்சனையையும் பதிவு செய்கிறார் இந்நூல் ஆசிரியர். கிம் ஜோங் உன் அடுத்த வாரிசாக தயாராகி கொண்டிருந்த நிலை ஒரு இடத்தில் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளது. 2008-ஆம் ஆண்டு கிம் ஜொங் இல் சிறுநீரக பாதிப்பால் கடுமையாக உடல் நலம் குன்றினார். 

ஐக்கிய நாட்டு சபை முக்கிய எல்லை பகுதிகளில் தனது செயல்பாடுகளை அமல்படுத்த விண்ணப்பம் வைத்தது. சீனா அதற்கான அனுமதியை மறுத்தது. வட கொரிய அகதிகளுக்காக தன்னார்வளர்களாக செயல்பட்ட சில கிருஸ்துவ மிஸனரிகளின் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு, வீடமைப்பு பகுதிகளில் நிறுவப்பட்ட தற்காலிக தேவாலயங்களும் மூடப்பட்டன. அதற்கு எதிர்மறையாக வடகொரிய இராணுவத்தினர் சீன எல்லை பகுதிகளில் அனுமதிக்கப்பட்டனர். ஒற்றாடவும் வடகொரியர்களை கைது செய்து கொண்டுச் செல்லவும் அனுமதிக்கப்பட்டனர். 

இந்த நூல் வாசிக்க மிக இலகுவாகவே அமைந்துள்ளது. விவாத பொருளுக்கான மிகப் பெரும் வெளியையும் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.

-முற்றும்-

Wednesday, June 12, 2019

நிலங்களின் நெடுங்கணக்கு – மங்கோலியர்களின் கணிதப் பிழையும் அதன் பின் விளைவுகளும்


இந்நாவலின் ஆறாம் அத்தியாயம் முக்கியமான வரலாற்றுப் பின்னணியை பேசுகிறது. அதுவே நெடுங்கணக்கின் தொடக்கப் புள்ளியும் கூட. மங்கோலியர்களின் சீன படையெடுப்பின் போது சீனத்தின் அதற்கு முந்தைய ஆட்சியான சொங் பேரரசு தென் பகுதியை நோக்கி குறுகியது. அதை முழுதுமாக அழிக்க முடியாமல் தினறிக் கொண்டிருந்தார் குப்ளாய் கான்.

சீனப் பெருஞ்சுவரைப் போன்ற மதில் சுவர்களை தகர்த்து சோங் பேரரசை முறியடித்து வெற்றி கண்டதும். அவ்வரசின் 5 அல்லது 6-வயதே நிறம்பிய அரசனை கொன்று காட்சி படுத்தியதும் வேறு கதைகள். குப்ளாய் கான் சீனத்து அரசரா அல்லது மங்கோலிய அரசரா எனும் கேள்வி எழும் நிலையில் தன்னை இவ்வுலகின் பேரரசனென பிரகடனப் படுத்திக் கொண்டார். அதுவே இன்றளவிலும் சீனத்தில் யூவான் பேரரசாக (Yuan Dynasty) அறியப்படுகிறது. மார்க்கோ போலோ சுமர் 17 ஆண்டுகள் குப்ளாய் கானிடம் பணியாற்றினார். மார்க்கோ போலோவின் பயணக் குறிப்புகள் 1270-களுக்கு பிறகான சீனாவை மட்டுமின்றி சாவகம் என அறியப்படும் ஜாவாவை அறித்துக் கொள்ளவும், மலாய்காரர்களின் அசாதரனமான போர்,வாழ்வியல் மற்றும் ஆட்சிகளை அறிந்துக் கொள்ளவும் வழி செய்கிறது. மார்க்கோ போலோ தொடர்பான செய்தியை பிறிதொரு பதிவில் விரிவாக பார்க்கலாம்.

மங்கோலியர்கள் நுசாந்தாராவின் மாபெரும் பேரரசை கைப்பற்றி மலாய் தீவுகளில் தமது ஆதிக்கத்தை செலுத்த திட்டமிட காரணம் என்ன? குப்ளாய் கானுக்கு ஜாவாவை சேர்ந்த கிளத்தியர்களும் அவர்கள் வழிப் பிள்ளைகளும் இருந்துள்ளார்கள். ஆக, ஜாவா படையெடுப்பிற்கு முன்பாகவே மங்கோலியர்களுக்கு ஜாவாவோடு நல்லிணக்கம் இருந்துள்ளது. ஜாவாவை நோக்கிய குப்ளாய் கானின் பார்வையும் நெடுங்கணக்கில் அடங்கிய ஒரு குறுங்கணக்கென உணர முடிகிறது.

பண்டைய காலத்தில் இரண்டு முக்கியமான வணிகப் பாதைகள் இருந்தன. இந்த வணிகப் பாதைகள் ஐரோப்பாவுக்கும் கிழக்காசியாவுக்குமான முக்கிய வழித் தடங்களாக அமைந்தன. இந்தியாவின் மசாலாப் பொருட்களும் சீனத்துப் பட்டும் அன்றைய வணிகத்தின் முக்கிய அம்சங்கள். இந்தப் பொருட்களின் அடிப்படையிலேயே அப்பாதைகள் பெயரிடப்பட்டன.

ஒன்று பட்டுப் பாதை எனக் கூறப்படும் சில்க் ரோட் (Silk Road). பட்டுப் பாதை நில வழி பாதை. துர்க்கி, ஈரான், இந்தியா, தட்ஜ்கிஸ், கிர்கிஸ் எனத் தொடங்கி சின்ஜியாங் வழியாக சீனாவை வந்தடைகிறது. மற்றொன்று நறுமணப் பாதை எனப் படும் ஸ்பைஸ் ரோட் (Spice Road). ஸ்பைஸ் ரோட் கடல் வழிப் பாதை. ஸ்பைஸ் ரோட் வெனீஸில் தொடங்கி அரேபியா, ஆப்ரிக்கா, தென் இந்தியா, நுசாந்தாரா வழியாக சீன தேசத்தை வந்தடைகிறது. பட்டுப் பாதை முழுவதுமாக குப்ளாய் கானின் ஆட்சியின் கீழ் இருந்தது. அதன் வழி அதீதமான வரி வசூல் செய்து கொடுத்துக் கொண்டிருந்தார் குப்ளாய் கானின் நிதி அமைச்சரான அஹமத்.

சீனாவை முழுமையாக கவர்ந்தப் பின் குப்ளாய் கானின் எண்ணம் ஸ்பைஸ் ரோட்டை அபகரிப்பதில் குவிந்தது. அப்படி கடல் வழி வணிகப் பாதை குப்ளாய் கான் வசம் போயிருந்தால் மேலும் பெரும் நிலப் பகுதியினை தன் ஆட்சியில் இணைத்திருப்பார். நுசாந்தாராவின் வரலாறு வேறு விதமாய் அமைந்திருக்கும். யுவான் பேரரசின் தென் பகுதியில் இருந்த மற்றுமொரு அரசு சம்ப்பா (இன்றைய வியட்நாம்). இந்திரபுரா, அமராவதி, விஜயா, பாண்டுரங்கா என சில பெருநகரங்களை கொண்ட அரசு அது. சம்ப்பா முதல் தெற்காகவும் கிழக்காகவும் பெரும் நிலப்பகுதி நூசாந்தாரா எனும் அடையாளத்தில் மலாய் அரசுகளின் கீழ் இருந்தது.

மங்கோலியர்களின் படையெடுப்பின் போது மாஜாபாகித் அவர்களுக்கு உதவுவதாகக் கூறி மங்கோலிய கூட்டணியில் இருந்தது. ஜாவாவின் முன்னால் அரசன் வீழ்ந்ததும் கூட்டணியில் இருந்த மாஜாபகித் மங்கோலியர்ளுக்கு எதிராக அவர்களை அடித்து விரட்ட ஆரம்பித்தது. காரணம் குப்ளாய் கானின் நிதி அமைச்சர் அஹமத் அதீத வரிகளை விதித்து சிற்றரசுகளை பெருமூச்சிரைக்கச் செய்தது தான். யூவான் பேரரசின் சிற்றரசாக இருக்க விரும்பாத மாஜாபாகித் சுயாட்சியை அமைத்தது. குப்ளாய் கானுக்கு வரிக் கட்ட வேண்டிய அவசியமும் இல்லாமல் போனது.

ஜாவாவை வெற்றி கொள்வதில் மங்கோலியர்கள் தோற்றுப் போகிறார்கள். மங்கோலியர்களுக்கு ஜாவாவில் நிகழ்ந்த தோல்வி முதல் அல்ல. அவர்கள் மேலும் சில போர்களில் வெற்றி வாய்ப்பை இழந்துள்ளனர். உண்மையில் சூது கவ்வும் திரைப்படத்தில் இடம்பெறும் 5-வது கடத்தல் விதிமுறை ஜெங்கிஸ் கான் அவரது பேரனான குப்ளாய் கானுக்கு உரைத்தது. ‘ஒரு வேள சொதப்பிட்டா கூச்சமே படாம பின் வாங்கிடனும்’ என்பதுதான் அந்த விதிமுறை. ஆக மங்கோல்கள் தோல்விகளை படிப்பினையாகவே எடுத்துக் கொண்டார்கள்.

மாஜாபாகித் மங்கோல்களின் வாயில் வடையை வைப்பார்கள் என்பதை அவர்களும் எதிர்பார்த்திருக்கவில்லை. அதன் பின் மாஜாபாகித் தனது பேரரசின் ஆற்றலை அபரிமிதமாக வளர்த்துக் கொண்டது. அதற்கு துணையாக இருந்தது காஜா மாடா எனும் தோப்பேங் இரகசியக் குழுக்களின் மூதாதை. பாகுபலிக்கு கட்டப்பாவை போல், சோழர்களுக்கு பழுவேட்டரையரை போல், மாஜாபாகித்துக்கு காஜா மாடா. காஜா மாடா எடுத்துக் கொண்ட சத்தியத்தை அவர்களின் வம்சாவழியினர் இன்றும் காட்டிக்காக்க போராடுவதாக கூறப்படும் ஒரு புனைவின் பின்னணியில் மறைக்கப்படும் அல்லது அதிகம் அறிந்திராத சரித்திர சுவடுகளை நோக்கி பயணிக்கிறது இந்த நாவல்.

காஜா மாடா வம்சாவழியினர் புதைந்து போன மாஜாபாகித் அரசுக்கு விசுவாசமாக இதைச் செய்கிறார்களா? நிச்சயமாக இல்லை. அவர்களின் விசுவாசம் காஜா மாடாவிற்கும் அவர் உரைத்த சூளுரைக்குமே ஆகும். அந்த விசுவாசம் காஜா மாடாவின் பிரியத்திற்கு உரிய முகமூடியின் ஊடாக காலம் காலமாக கடத்திக் கொண்டு வரப்படுகிறது. தான் ஒரு ஜாவாவின் வம்சாவழியினன் எனும் பெருமிதத்தில் அந்த முகமூடி வெளிப்படுகிறது. அது வெளி உலகிற்கு அப்பட்டமாக தெரிந்துவிடாமல் இருக்கவும் இரகசியம் காக்கப்படுகிறது. இன்றைய தேசிய மயமாக்களில் அனைவரும் மலாய்காரர்கள், இந்தோனேசியர், இஸ்லாமியர் என பொதுவில் பார்க்கப்பட்டாலும் அவர்களுக்குள் இருக்கும் ஜாவா, பூகிஸ், சூலுக், சுந்தா, மீனாங்காபாவ், பஞ்சார் எனும் இன பாகுபாடு இன்னமும் அகலவில்லை என்பதையும் ஆசிரியர் முன் வைக்கிறார்.

முகமூடியை வைத்திருக்கும் ஜாவாக்களின் எதிரிகள் யாவர்? நிச்சயமாக காஜா மாடா தனது சூளுரையில் குறிப்பிடும் இடங்களே. அந்த சூளுரையில் மொத்தம் பத்து வெவ்வேறு ஆட்சிகளை மஜாபாதித் பேராட்சியின் கீழ் கொண்டு வருவதாக காஜா மாடா சத்தியம் எடுக்கிறார் அவை முறையே குரூன், செரான், தஞ்சோங்புரா, ஹாரு, பகாங், டொம்போ, பாலி, சுந்தா, பலேம்பாங் மற்றும் துமாசேக். காஜா மாடா சூளுரை எடுத்த சமயம் இந்த மலாய் அரசுகள் ஆட்சி புரிந்தன. கால ஓட்டத்தின் முன் பின்னாக அந்த இடங்களின் பெயர்கள் மாற்றம் அடைந்தன. நாவலில் செல்லத்துரைத் தேடிச் சென்றுள்ளது ஸ்ரீவிஜயா மற்றும் கூத்தாய் பேரரசின் இடங்களாயிற்றே, காஜா மாடா தமது சூளுரையில் அவற்றைக் குறிப்பிடவில்லையே என நினைப்போமானால் அவர் குறிப்பிடும் தஞ்சோங்புராவில் கூத்தாய் பேரரசும், பலேம்பாங் என்பதில் ஸ்ரீவிஜய பேரரசும் அடங்கிவிடுகிறது. ஆக, பத்து இடங்களில் இரண்டு இடங்களின் சுவடுகளை மட்டுமே ஆசிரியர் இந்நாவலில் எழுதி இருக்கிறார் என்றால் மேலும் இருக்கும் எட்டு இடங்களுக்கும் சேர்த்து நிலங்களின் நெடுங்கணக்கை இன்னும் ஒரு இருபது பாகங்களுக்கு எழுதுவார் என எதிர்ப்பார்க்கலாம்.

காஜா மாடா முகமூடியின் சரித்திர சுவடுகளை பின் நோக்கி காண்கையில், பேரரசுகளின் காலகட்டத்தில் இவர்கள் சைவ மதத்தையும், புத்த போதனையையும் பின் பற்றி இருக்கிறார்கள். இன்று கூறப்படும் இந்து மதம் அப்பொழுது பரிட்சயத்தில் இல்லை. பிற்காலத்தில் காஜா மாடாவின் முகமூடி ஒரு வழிபாட்டு பொருளாகி போனது. பாலியில் இருக்கும் சிவன் ஆலயத்தில் அதை வைத்து வழிபட்டு இருக்கிறார்கள். 1960-களில் அந்த முகமூடி களவு போனது. அது வரலாற்று பொருட்கள் சேகரிப்போரின் திருட்டுச் செயலாக இருக்கும் என நம்பப்பட்டது. அந்த முகமூடி இன்றளவிலும் கண்டுபிடிக்க முடியாமல் போனது.

ஆசிரியர் ‘ஒரிஞினல்’ முகமூடியை மடகாரிபுற குடும்பம் வைத்திருப்பதாக கூறி நமது கவனத்தை கோத்தா கெலாங்கியின் பக்கம் கொண்டு போகிறார். கோத்தா கெலாங்கி தொடர்பாக நான் அறிந்துக் கொண்டது அமரர் டாக்டர் ஜெயபாரதியின் வழி தான். அவருடைய விஸ்வா காம்ப்லேக்ஸ் வலைதளத்தில் கேத்தா கெலாங்கி தொடர்பான தகவல்களை சில கட்டுரைகளில் பகிர்ந்து இருந்தார். அவர் கோத்தா திங்கி மருத்துவமனையில் பணியாற்றிய சமயம் சேகரித்த தகவல்கள் அவை என்பதை அறிய முடிகிறது. கோத்தா கெலாங்கி 2005-ஆம் ஆண்டு தொல்பொருளாய்வு தளமாக அரசினால் அறிவிக்கப்பட்டது. டாக்டர் ஜெயபாரதியின் குறிப்புகள் அதற்கும் முந்தியவையாகும். இக்கதையில் டாக்டர் மணிசெல்வம் வரும் காதாபாத்திரத்தின் இடங்களில் டாக்டர் ஜேபியை நினைவு கூறுவதை தவிர்க்க முடியவில்லை.

கோத்தா கெலாங்கி தொடர்பான அறிமுகத்தைக் கொடுக்கும் ஆசிரியர் மேலாதிக தகவல் தேடல்களை நம்மிடமே விட்டுவிடுகிறார். இது வரை கண்டடைந்த சரித்திர ஆய்வுகளை உரையாடலின் போக்கில் நம்மிடம் கடத்திவிடுகிறார். இது ஒரு குறைபாடாகவே தெரிகிறது. ஜாவா முகமூடிக்காரர்கள் கோத்தா கெலாங்கியில் இருக்கும் ஸ்ரீவிஜய பேரரசின் சரித்திர சுவடுகள் வெளி தெரியாமல் இருக்கச் செய்கிறார்கள் என்பதை இன்னும் பலமாக நிறுவி இருக்கலாம். சரித்திரத்தில் இந்த இனக் குழுக்களுக்குள் நடந்த போர் மற்றும் நில ஆக்கிரமிப்பு சம்பவங்களை சேர்த்திருந்தால் இதன் சுவாரசியம் பன்மடங்காகி இருக்கும்.

ஜெகூர் பாருவில் இன்று ஜப்பானிய கல்லறை எனும் பெயரளவில் மட்டுமே ஓர் இடம் உள்ளது. அதன் பின்ணணி புத்த பிக்குவாக மாறிய ஜப்பானிய இளவரசனின் நினைவாக அமைக்கப்பட்டுள்ளது என்பதை இந்நாவலில் அறிகிறோம். கோத்தா கெலாங்கியில் இளவரசர் தக்காவோ மரணித்திருக்கக் கூடும் என நம்பும் ஜப்பானிய இராணுவம் இரண்டாம் உலகப் போரின் போது அவருக்கான நினைவிடத்தை எழுப்புகிறார்கள். ஆக, ஜப்பானியர்களிடம் அந்நாளய கோத்தா கெலாங்கி தொடர்பான தகவல் குறிப்புகள் இருப்பதற்கான சாத்தியம் உண்டு. அதை நோக்கிய தேடல்கள் ஏற்பட்டிருக்கின்றனவா என்பதன் தகவல்கள் நம்மிடம் இல்லை.

சோழர்களுக்கு முன்பாக பல்லவர்களும் பாண்டியர்களும் நுசாந்தாரா பிராந்தியத்தில் தமது ஆதிக்கத்தை செலுத்தியதாக ஆசிரியர் குறிப்பிடுகிறார். அந்த ஆதிக்கம் என்பது மொழி, மதம் மற்றும் பண்பாட்டால் ஆனது. இனத்தால் அவர்கள் இம்மண்ணின் குடிகளாகவே விளங்கி உள்ளனர். இதை உணர்த்தவே பரமேஸ்வராவின் கதையை இதில் இணைத்திருக்கிறார் என்பதை உணர முடிகிறது. மலாக்கா பேரரசை நிறுவிய பரமேஸ்வரா தமிழன் எனும் மூடநம்பிக்கை தமிழ் மக்களிடையெ வேறூன்றி உள்ளது. செவிவழிச் செய்திகளாலும் தேடல்கள் அற்ற ’பிம்பலக்கி’ தனத்தாலும் இந்த மூட நம்பிக்கையை தமக்குள் வலுவாக்கிக் கொண்டவர்கள் ஏராளம். அதன் வெளிப்பாடாகவே பாடல் எழுதி இசை அமைத்து குதூகளித்துக் கொள்கிறார்கள். இப்படிப்பட்டவர்களுக்கு உரைப்பதற்காகவே “கையில் ஏதாவது திறந்தால் உன் மண்டையை திறந்திட போகிறேன். பரமேஸ்வரா தமிழனா உனக்கு” எனும் வசனத்தை இந்நாவலில் இணைத்திருக்கிறார் ஆசிரியர்.

இது ஒரு பக்கம் இருக்க, சுமார் 500 ஆண்டுகளுக்கு முன் உள்ள சரித்திரத்தை ஏற்றுக் கொள்ளும் அளவுக்கு அதற்கு முந்தைய சுவடுகள் ஏற்றுக் கொள்ளப்படவில்லை என்பதையும் குறிப்பிடுகிறார். உதாரணமாக திரங்கானுவின் சிறுகல்வெட்டிற்கு இருக்கும் பிரபலம் கோத்தா கெலாங்கி எனும் பெருநகரம் இருந்த இடத்திற்கு இல்லை. இதற்கு வலுவாக வேறுன்றிய இஸ்லாமியமும் காரணி ஆகிறது. புத்த மதம் உச்சத்தில் இருந்த போது சீனாவிலும், ஜப்பானிலும் அது பல பிரபலமான புத்த பிக்குகளை உறுவாக்கியது. இவர்களின் தத்துவங்களும், பயணக் குறிப்புகளும் இன்றும் பேசப்படுகிறது. அவர்களின் காஞ்சி மற்றும் நாளந்தா பல்கலைக்கழக பயணத்தில் நுசாந்தாரா தீவுகளை கடந்துச் சென்றுள்ளார்கள். ஸ்ரீவிஜய பேரரசும் புத்த ஆதிக்கத்தை ஏற்றுக் கொண்டுள்ளது. அப்படி இருக்க இப்பிராந்தியத்தில் புத்த மதத்தை போற்றிய பிக்குகள் யாரையும் நாம் அறிய முடியவில்லை. மத மாற்றமும் பண்பாட்டு மாற்றமும் வரலாற்று ஏற்பில் பலமான தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளன.

போர்னியோவில் இருக்கும் கூத்தாய் பேரரசு குறித்த தகவல்களும் நம்மிடம் மிகக் குறைவாகவே உள்ளது. இந்நாவலை தவிர்த்து தமிழில் அப்பேரரசு தொடர்பான செய்தியை மலாக்கா முத்துக்கிருஷ்ணன் தமது கட்டுரயில் எழுதி இருந்தார். அது போக கோத்தா கிலாங்கி தொடர்பாகவும் ஆராய்ச்சியில் ஈடுபட்ட தகவல்களை அவரது முகநூலில் பதிப்பித்திருந்தார்.

நாவலில் 2005-ஆம் ஆண்டு செல்லத்துரையின் புகைப்படத்தின் வழி கோத்தா கிலாங்கி பொது மக்களின் பார்வைக்கு சென்றதாக ஆசிரியர் குறிப்பிடுகிறார். அரசாங்கம் அதை அதிகாரபூர்வமாக தெல்பொருள் ஆய்வு தளமாக அறிவித்த ஆண்டும் அதுவே. ஆசிரியர் கதையை புனைந்திருக்கும் நூதனம் பாராட்டுதலுக்கு உரியது.

செல்லத்துரையின் தேடல்கள் வழியும், செல்லத்துரையை தேடுவதின் வழியும் இந்நாவல் நுசாந்தாரா எனும் இப்பிராந்தியத்தின் கவனம் பெறாத வரலாற்றுத் தடங்களை நமக்கு விளக்குகிறது. அதே சமயம் சமகாலத்தில் நிகழும் அரசியல் மற்றும் சமூக மாற்றத்தையும் பதிவு செய்ய தவறவில்லை. வரலாற்றுத் திரிபுகளை உறுவாக்காமல் அதன் போக்கிலேயே சரித்திர தடங்களை பதிவு செய்திருப்பினும் அதன் தேடல்கள் முடிவடையவில்லை. அதனால் செல்லத்துரையை நாம் கண்டடையவில்லை. சிக்கலான வரலாற்றுத் தகவல்களை மிகவும் இலகுவான எழுத்து நடையில் வாசகர்களிடம் கொண்டு சேர்த்திருக்கிறார் மதியழகன். இதற்காகவேனும் அமேரிக்க ஏகாதிபதியம் அவருக்கு பாராட்டு விழா நடத்தி இலக்கிய பரிசளிக்க வேண்டும். ஆசிரியரின் தொடர் படைப்புகளுக்காக வாசக தேன்’ஈ’களாக காத்திருப்போம்.

Tuesday, March 19, 2019

கசாக் எனும் கழுகுக் குலத் தோன்றல்கள்

குதிரையில் கசாக்
சீனாவின் நெடு விடுமுறை நாட்களில் பயணங்களை மேற்கொள்வது பணத்திற்கும், மனதிற்கும் கேடு விளைவிக்கும். இந்த நெடு விடுமுறை நாட்களை ‘கோல்டன் வீக்’ என அழைப்பார்கள். அவை முறையே வசந்த விழா எனப்படும் சீனப் புத்தாண்டு மற்றும் சுதந்திர தின வாரங்களாகும். இந்த விடுமுறை காலங்களில் சீனர்கள் சுமார் ஏழு முதல் பத்து நாட்களுக்கு விடுமுறை எடுத்துக் கொண்டு கிராமங்களுக்கும், சுற்றுப்பயணம் மேற்கொள்ளவும் சென்றுவிடுவார்கள். பொது போக்குவரத்து தளங்களிலும், சுற்றுளாத் தளங்களிலும் மனிதத் தலைகள் மட்டுமே நெறுக்கி அடித்துக் கொண்டு காண முடியும். இவற்றைக் கணக்கில் கொண்டு கடந்த பொது விடுமுறையின் போது சீனாவின் தன்னாட்சி பிரதேசத்துக்கு பயணம் மேற்கொள்ள முடிவெடுத்தேன். அங்கே மனித நெறிசல்கள் குறைவு.

தூதரக பணி கடப்பிதழ்களை வைத்திருப்போர் திபெத்துக்குச் செல்ல முடியாது. பொது கடப்பிதழ்களை வைத்திருப்போர் கூட சீனாவின் பொது நுழைவிசைவு (VISA) மற்றும் திபெத்துக்கான சிறப்பு நுழைவிசைவையும் பெற்றுக் கொண்ட பின்னரே திபெத் செல்ல முடியும். பெய்ஜிங்கில் இருந்து திபெத் தலைநகரான லாசா செல்லும் 48 மணி நேர இரயில் பயணம் மிகவும் பிரசித்தி பெற்றது. உலகின் அதி இரம்யமான காட்சிகளை இரசித்தபடியே செல்ல முடியும். திபெத் கடல் மட்டத்தில் இருந்து மிக உயரமான இடத்தில் அமைந்துள்ளதால் அங்கே காற்றழுத்தம் மிகக் குறைவு. புதிதாகச் செல்வோர் உரக்கப் பேசுவதாலோ, விரைவாக நடப்பதாலோ மயக்கமடையக் கூடும். கடைகளில் விற்கும் துரித ஆக்சிஜன்களை வாங்கி சுவாசம் பிடித்துக் கொள்ள முடியும். அப்படி இருந்தும் பூலோக ஏற்புகளை தாங்கிக் கொள்ள முடியாத பயணிகள் மருத்துவ மனைகளில் விடுமுறைகளை கழித்துவிட்டும் வந்திருக்கிறார்கள். 

திபெத் எனக்குத் ’தடா’ போட்டதால் அந்தப் பக்கம் தலை வைக்காமல் அதற்கு வடக்கே அமைந்துள்ள சின்ஜியாங் போக முடிவு செய்தேன். சின்ஜியாங் உய்ஹூர் மக்களின் தன்னாட்சி பிரதேசமாக விளங்குகிறது. இதுவே சீனாவின் மிகப் பெரும் மாநிலம். ஒன்பது நாடுகளின் எல்லை இதன் நிலப்பகுதியை ஒட்டி இருக்கிறது. பண்டைய சீனத்தில் பட்டுப் பாதையை கடக்கும் வழியாக இப்பகுதி அமைந்தது. இஸ்லாமியர்கள் அதிகமாக இங்கே வசிக்கிறார்கள். சில பல அரசியல் காரணங்களால் இப்பகுதி முழுவதும் போலிஸ் கட்டுப்பாட்டில் உள்ளது. போலிஸ் ஸ்டேட் என்றும் இவ்விடத்தை அழைப்பார்கள்.

இங்குச் செல்ல சிறப்பு நுழைவிசைவு தேவை இல்லை. இருந்தும் பயணங்களின் போது கடுமையான சோதனைகளுக்கு உள்ளாக நேர்கிறது. அந்த சோதனைகள் வெளிநாட்டினருக்கு மட்டும் இல்லை. உள்நாட்டு பிரஜைகளுக்கும் தான். மொழி தெரியாத வெள்ளையர்கள் அதிகமான நேரத்தை இச்சோதனைகளுக்காகப் பரி கொடுத்ததையும் காண முடிந்தது. இம்மாநிலத்தில் அமைந்திருக்கும் மிக அழகிய காட்சிகளை இரசிப்பதற்கும் சுவை மிக்க உணவுகளுக்காகவும் பல் வேறு சிறுபான்மை இன மக்களின் கலாச்சாரங்களை பார்தறியவும் இந்த காவல் சோதனைகளை பொருத்துப் போகலாம்.

யுரூமுச்சி -சின்ஜியாங் தலைநகரம்

தியன் ஷான் எனும் மலைத் தொடர் நான்கு நாடுகளை கடந்து போகிறது. சீனா, கசாக்ஸ்தான், கிர்கிஸ்தான் மற்றும் உஸ்பேக்கிஸ்தான் என இதன் புவியியல் அமைந்துள்ளது. கனாஸ் (Kanas), தியன்ச்சீ (Tianchi), போன்ற பகுதிகளில் மனதை மயக்கும் இந்த மலைப் பகுதி, துர்பான் போகும் பகுதிகளில் பொட்டல் மலைகளாக தெரிகிறது. செடி கொடிகள் ஏதும் இல்லாமல் உள்ளது. அதன் சாலையோர பகுதிகளில் வேளி போட்டு மக்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஆட்களை விழுங்கும் புதை மணல் பகுதிகளாக அவ்விடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 

சர்வ தேச அரசியல் பார்வை உய்ஹூர் மக்களின் மீது விழக் காரணம் வெளிநாடுகளில் அவர்கள் அரசியல் தஞ்சம் கோருவதால் தான். ஆனால் சின்ஜியாங்கில் கசாக் சீனர்களும், கிர்கிஸ் சீனர்களும், ஹன் சீனர்களும் வசிக்கிறார்கள். தியன் ஷான் போகும் வழிகளில் அதிகமாக கசாக் மக்களின் குடியிடங்களைக் கண்டேன். அவர்களின் வாழ்விடங்களில் மிகப் பெரிய கழுகுச் சிலைகளையும், சுவர் படங்களையும், சின்னங்களையும் வைத்திருக்கிறார்கள். மங்கோலியர்கள் தங்களை ஓநாயின் குலத் தோன்றலாக கருதுவது போல் கசாக் மக்கள் தங்களை கழுகின் குலத் தோன்றலாக கருதுகிறார்கள். 

கசக் மக்கள் 1920-களின் பிற்பகுதியில் ஏற்பட்ட பஞ்சத்தால் கடுமையாக பாதிப்படைந்தார்கள். ஜனத்தொகை அதிக வீழ்ச்சி அடைந்தது. பிழைப்பிற்கா பிற நாடுகளுக்கு போக ஆரம்பித்தார்கள். இன்றய நிலையில் உலகின் 9-வது பெரிய நாடாக இருக்கும் கசாக்ஸ்தான் வம்சாவழியினர் சீனாவிலும் இன்னும் பிற நாடுகளிலும் வசிக்கிறார்கள். சின்ஜியாங்கில் இருந்து நில வழி பாதையாக (வாகனம்/ இரயில்) கசாக் எல்லைபுர நகரங்களுக்குச் செல்ல முடியும். மலேசிய கடப்பிதழை வைத்திருப்போருக்கு கசாக் செல்ல நுழைவிசைவு தேவை இல்லை. கசாக்கின் தலைநகரம் அஸ்தானா, இருப்பினும் சீனர்கள் வியாபாரம் பொருட்டு அல்மாய்த்தி எனும் பெருநகரத்திற்கே அதிக பயணம் மேற்கொள்கிறார்கள். அல்மாய்த்தி காசாக்ஸ்தான்-கிரிகீஸ்தான்-சீனா என ஒரு முக்கோன பகுதியில் அமைந்துள்ளது. சீனாவின் ”பெல்ட் & ரோட் இனிசியேடிவ்’ திட்டத்தில் இந்நாடும் முக்கியப் பங்கு வகிப்பதால் மேம்பாடுகள் அதிகம் நடந்து வருகின்றன. உய்ஹூர் மற்றும் கிர்கீஸ் சீன பிரஜைகளை பற்றி வேறு ஒரு சமயம் பார்க்கலாம். இப்போது கசாக் மக்களின் வாழ்வியலை காண்போம்.

சின்ஜியாங் தியன் ஷான் மலைப் பகுதிகளில் இவர்களின் பல் வேறு வகையான வாழ்வியலைக் காண முடிகிறது. மலையில் அமைந்திருக்கும் நிர்நிலை பகுதிக்குச் செல்ல சீன அரசின் பிரத்தியோக வகனத்தை மட்டுமே பயன்படுத்த முடியும். அப்பகுதிகளில் அதிகமான கசாக் மக்களே பணி புரிகிறார்கள். கசாக் மக்கள் இசை பிரியர்கள். சிறப்பாக தம்பூரா வாசிக்கிறார்கள். நான் சென்ற பேருந்தின் உதவியாளர் அவருக்கு மூன்று மனைவிகள் இருப்பதாகக் கூறினார். இவர் இசைப் பாடுவதை அவர்கள் இரசித்துக் கேட்பதாகக் பெருமையடித்துக் கொண்டார். மிக அரிதாகவே வேற்று நாட்டினரை இவர்கள் அங்கு காண்கிறார்கள். இஸ்லாமிய முறையில் முகமன் கூறி, நான் பாக்கிஸ்தானில் இருந்து வருகிறேனா என்றே அவர்களில் பலரும் கேட்டார்கள். 

கசாக் மக்களில் பொரும்பான்மையானோர் இஸ்லாமிய பெயர்களைக் கொண்டிருந்தாலும் இவர்களில் இறை மறுப்பாளர்களையும் காண முடிகிறது. நான் பயணித்த போது அங்கு குளிர் காலம் தொடங்க ஆரம்பித்திருந்தது. சின்ஜியாங் தலைநகரான யுருமுச்சியில் அதிகாலை 5 மணிக்கு விடிந்துவிடுகிறது. இரவு 8.30 மணி வரை சூரியனைக் காண முடிகிறது. கோடை காலங்களில் பகல் நேரம் இன்னும் அதிகமாக இருக்கக் கூடும். உணவு விடுதிகள் பெரும்பான்மையாக மதுக் கடைகளைப் போலவே உள்ளன. ஆண் பெண் என பகலில் இருந்து இரவு வரை குடித்துக் கொண்டிருக்கிறார்கள். உணவகங்களில் சிகரட்டு கட்டுபாடுகள் இல்லாததால் குளிரூட்டியோடு கலந்த புகைச்சல் அசௌகரியத்தை ஏற்படுத்துகிறது. தியன் ஷானில் பகுதியில் இருக்கும் கசாக்குகள் குடியிருப்பில் பயணிகளுக்கு உணவு சமைத்துக் கொடுத்து சிறு வியாபரம் செய்கிறார்கள். 
தியன் ஷான் மலை
கால ஓட்டத்தில் பலரும் நிரந்தர குடி இருப்புகளுக்கு நகர்ந்துவிட்டாலும் மலை அடிவாரங்களில் இன்னும் சிலர் கூடாரங்களில் வாழ்வதைக் காண முடிகிறது. கசாக் மக்களின் கூடாரங்கள் மங்கோலியர்களின் கூடாரங்களைப் போலவே உள்ளன. அதிக மாறுபாடுகள் கிடையாது. இக்கூடாரங்கள் நீர்நிலை பகுதிகளுக்கு அருகாமையில் அமைக்கப்பட்டுள்ளன. மேய்ச்சல் நில கால மாற்றங்களுக்கு ஏற்ப கூடாரங்களை இடம் மாற்றி அமைந்துக் கொள்வார்கள். இப்படியானவர்கள் இன்னும் நாடோடி வாழ்வை மேற்கொள்கிறார்கள். ஆடுகளை அதிகமாக வளர்க்கிறார்கள், அதன் இறைச்சி சுவை மிக அருமையாக உள்ளது. அது போக குதிரைகளையும், அடர் ரோமங்கள் கொண்ட ஒட்டகங்களையும் வளர்க்கிறார்கள். ஒட்டக பால், தயிர், இறைச்சியையும் விற்பனை செய்கிறார்கள். ஒட்டக தயிர் அதீத புளிப்பு கொண்டதாக உள்ளது. அதன் இறைச்சி மஞ்சள் கொழுப்பு கொண்டதாகவும் மிருது தன்மை குறைவாகவும் உள்ளது. குதிரைப் பாலையும் சிறு சீசாக்களில் அடைத்து விற்கிறார்கள். கசாக்குகள் தங்கள் கூடாரங்களுக்கு வரும் விருந்தினருக்கு வெண்ணை தேநீர் (Butter Tea) கொடுக்கிறார்கள். இதே உபசரிப்பு முறையை மங்கோலியர்களிடத்திலும் கண்டிருக்கிறேன். பட்டர் டீ குடிப்பதற்கு தேநீர், வெண்ணை மற்றும் உப்பு சுவை கலந்ததாக இருக்கும். 

கசாக் மக்கள் வேட்டை விருப்பம் கொண்டவர்கள். கழுகுகள் இவர்களின் வேட்டை ஆயுதமாக செயல்படுகின்றன. கழுகுகளை வேட்டைக்கு பழக்குவது சுலபமல்ல. அதற்கு பிரத்தியோக திறமைகள் வேண்டும். இந்த கழுகுகள் அவர்களின் குடும்ப நண்பனும் கூட. மலைகளில் இருக்கும் கழுகு கூடுகளை நோட்டம் விட்டு பிடிப்பார்கள். கழுகு அதன் மூர்க்க வாசனையை இழக்க அதன் உடலையும், முக்கியமாக வயிற்றுப் பகுதியையும் பல முறை நீரில் கழுவி சுத்தம் செய்வார்கள். இரண்டு வாரங்களுக்கு இப்படிச் செய்து அதை சாந்தப் படுத்துவார்கள். 

அடுத்ததாக உணவளித்து வசப்படுத்துவார்கள். தடித்த கை உறைக் கொண்டே கழுகிற்கு உணவளிக்க முடியும். நாளுக்கு நாள் உணவளிக்கும் போது கழுகோடு அவர்கள் நிற்கும் தூரத்தை அதிகரித்துக் கொண்டே செல்வார்கள். கழுகு எஜமானர் நிற்கும் திசையை நோக்கி பறக்கப் பழக்குவார்கள். கழுகு எஜமானரின் வாசனையை அறிய இறைச்சியோடு அவரின் எச்சிலை துப்பி பிசைந்து கொடுப்பார்கள். கச்சிதமாக பறந்து கையில் அமர்ந்து இறைச்சியை சுவைக்கும் பக்குவம் பெறும் வரை குடிலின் உள்ளேயே அவை வைத்திருக்கப் படும். அதன் பின் வெளியே கொண்டு வந்து பயிற்சி கொடுப்பார்கள். வேட்டை கழுகுகளுக்கு கொஞ்சமாகவே உணவளிப்பார்கள். அவை எப்போதும் பசி உணர்வோடு இருக்கும்படி பார்த்துக் கொள்வார்கள். இப்படியாக அதன் வேட்டைப் பயிற்சிகள் சில ஆண்டுகளுக்கு தொடரும். 

வேட்டைக்குக் கொண்டுச் செல்லும் போது அவற்றிக்கு உணவளிக்க மாட்டார்கள். அதன் வேட்டை மூர்க்கம் அதிகரித்து இருக்கப் பார்த்துக் கொள்வார்கள். அதற்கு தலைக்கவசம் இட்டு கண்களை மறைந்து, கால்களில் சங்கிலி போட்டு வேட்டை இடத்திற்கு கொண்டுச் செல்வார்கள். கசாக்குகள் குளிர் காலத்தில் அதிகம் வேட்டையில் ஈடுபடுவதாக கூறுகிறார்கள். மங்கோலியர்கள் நாடு பிடிக்கும் படலத்தின் போது போர்கலங்களில் வேட்டைக் கழுகுகளை பயன்படுத்தினார்கள். அவற்றை விலைமதிப்பற்ற பொக்கீஷமாக அடையாளப்படுத்தினார்கள். வேட்டையாடும் கசாக் குதிரையில் அமர்ந்திருக்க கழுகு வேட்டை பிராணியை தாக்க ஆரம்பித்தவுடன் வேட்டை நாய்கள் அப்பிராணியை சுற்றி வளைத்துவிடும். பிறகு வேட்டை பிராணியைக் கொன்று எடுத்து வருவார்கள். 

கசாக்குகள் தங்களின் சரித்திர சுவடுகளை பாடல்களின் வழி சேமித்து வைத்துள்ளார்கள். இன்றும் அவற்றை பாடி மகிழ்கிறார்கள். அவர்களின் இசையில் அதிகபடியாக தம்பூரா வாத்தியங்கள் இடம் பெற்றுள்ளன. திருமணத்திற்காக குதிரைப் பந்தய சடங்குகளை மேற்கொள்வதாக கூறுகிறார்கள். Kyz Kuu எனப்படும் அச்சடங்கை முத்தச் சடங்காகவும் குறிப்பிடுகிறார்கள். திருமணத் துணையை தேர்வு செய்ய பெண்களுக்கே முன் உரிமை கொடுக்கப்படுவதாகக் கூறுகிறார்கள். 

சீனர்களோடு அவர்கள் நாட்டு அரசியல் தொடர்பாக பேசக் கூடாது என்பது பாலபாடம். இருந்தும் நான் சந்திந்த கசாக் நண்பர் அவராகவே மனமுவந்து சில கருத்துகளைப் பரிமாறிக் கொண்டார். அரசியல் பார்வை அவரவர் விருப்பம் கொண்டது. சின்ஜியாங்கில் உள்ள கசாக் மக்கள் கசாக், உய்ஹூர் மற்றும் சீனம் என மும்மொழிகளில் பேசுகிறார்கள். அவர்களுடை சீன உச்சரிப்பு மிக அடர்த்தியாக உள்ளது. தொடர்ந்து நடந்து வந்த குண்டு வெடிப்புகளாலும், கலவரங்களாலும் சின்ஜியாங் பகுதியில் 2014ங்கு முதல் கட்டுபாடுகள் அதிகரிக்கப்பட்டது. தங்கும் விடுதி, பேரங்காடி, உணவகம் என எங்குச் சென்றாலும் போலிஸ் காவல்கள் நீக்கமற நிறைந்துள்ளன. 2014-ல் அதிகபடியான மீள்கல்வி பாடசாலைகள் (Xinjiang re-education camps) சின்ஜியாங்கில் தொடங்கப்பட்டன. அவை இருக்கும் இடமும் அவற்றில் கம்யூனிச போதனைகளை பயின்று வருவோரின் எண்ணிக்கையும் அறிவார் இல்லை. ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒருவர் விகிதம் இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. அந்த ஆண்டில் பலரும் சின்ஜியாங்கில் இருந்து வெளியேறி தஞ்சம் கோரினர். தற்சமயம் சின்ஜியாங்கில் கலவர புகைச்சல்கள் இல்லாமல் பயணிகள் சென்று வர அச்சூழலில் இறுக்கம் தளர்ந்துள்ளது. மனதைக் கவரும் இயற்கை வளம் இங்கு நிறைந்துள்ளது.

கசாக் மக்கள் சின்ஜியாங் தவிர்த்து சீனாவின் கான்சூ, சிங்ஹாய் மற்றும் திபெத் மாநிலங்களிலும் சிறுபான்மையாக வசிக்கிறார்கள். திபெத்தியர்களோடு பிணக்கு ஏற்பட்டு பிரச்சனைகள் உண்டானதாகவும் தகவல் உண்டு. கசாக் மக்களின் Golden Eagle Festival இலையுதிர் காலத்தில் கொண்டாடப்படும் பண்டிகை ஆகும். மங்கோலியாவில் மிக விமரிசையாக கொண்டாடப்படுவதோடு தற்சமயம் அது சுற்றுளா மயமாக்கப்பட்டுள்ளது. The Eagle Huntress எனும் திரைப்படம் மங்கோலியாவில் வாழும் கசாக் சிறுபான்மை மக்களின் வாழ்வியலை பதிவு செய்துள்ளது. தரவுகள் தொடர்பான சர்ச்சைகள் இருப்பினும் அப்படம் நாடோடிகள் வாழ்க்கை முறையை குறிப்பிட தவறவில்லை. கழுகு போட்டிகள் இன்னும் பிற கசாக் வசிப்பிடங்களிலும் நடத்தப்படுகின்றன. இயற்கையோடு இயந்து வாழும் இவர்கள் பறவையை கொடுமைச் செய்வதாக நாகரீக உலகம் இன்னும் சீண்டி பார்க்கவில்லை.

-முற்றும்.

Wednesday, March 06, 2019

மீகாமன் செங் ஹோவும் காணாமல் போன சுல்தானும்

Source of picture: cimsec.org
சீனாவின் நான்ஜிங் நகரில் பண்டைய சுல்தான் ஒருவரின் கல்லறை உள்ளது. தற்சமயம் அவ்விடம் சுற்றுலாத் தளமாக விளங்குகிறது. சுல்தான் கர்ணா/ அப்துல் மஜிட் ஹசான் (Abdul Majid Hassan) எனும் ’போனி’ நாட்டு சுல்தானின் கல்லறை தான் அது. இவர் வாழ்ந்த காலகட்டம் 1380-1408 வரை. அவர் அந்நாளில் ’போனி’ என அழைக்கப்பட்ட இந்நாளய புருணை பிராந்தியந்தின் சுல்தானாக இருந்துள்ளார். இதற்கான சான்று மிங் பேரரசின் குறிப்புகளில் சீனாவிலும், ஜப்பானிய தோக்கியோ பல்கலைக்கலகத்திலும் சேமித்து வைக்கப்பட்டுள்ளது. இந்த சுல்தானின் பயணத்திற்கும் மீகாமன் செங் ஹோவின் கடல் பயணத்திற்கும் தொடர்பு உண்டு.

1408-ஆம் ஆண்டு குளிர்காலத்தின் போது சீன பயணம் மேற்கொண்ட சுல்தான் கர்ணா உடல் நலம் குன்றி நான்ஜிங்கில் (Nanjing) இறந்தார். இறக்கும் போது அவருக்கு 28 வயது. இவருக்கு ஒரு மகன் இருந்துள்ளார். அந்த இளவரசருக்கு நான்கு வயது. இளவரசரின் பெயர் ஷியாவ் வாங் என சீனத்தில் குறிப்பிடப்படுகிறது. ஷியாவ் வாங் ஆட்சியை எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது மிங் பேரரசரின் விருப்பம். இருந்தும் புருணை வரலாற்றில் சுல்தான் கர்ணாவின் பெயரும் அவரது மகனின் பெயரும் இடம் பெறவில்லை. இவர் ஆட்சி செய்த காலகட்டமும் புருணை சுல்தான்களின் பட்டியலில் விடுபடுகிறது. சுல்தான் கர்ணா ஆட்சி செய்த காலம் 1402-1408 ஆகும். இந்த காலகட்டத்திற்கான ஆட்சி அதிகார தடத்தை புருணை இன்றளவிலும் வெளியிடவில்லை. சீனக் குறிப்புகளை ஏற்கும் அவசியம் இல்லை எனக் கூறுகிறார்கள். 

சுல்தான் கர்ணா மிங் பேரரசுடன் நட்பு பாராட்டி இருக்கிறார். வணிகம், திருமணம் என பல வழிகளில் இரு நாட்டின் நட்புறவு வளர்ந்துள்ளது. இவரது சகோதரி ரத்னா தேவி, ஓங் சம் பிங் (Ong Sum Ping) எனும் சீனரை திருமணம் செய்து கொண்டார். இன்றளவிலும் புருணையில் ஓங் சம் பிங் பெயரில் ஒரு வீதி உள்ளது. நான்ஜிங்கில் சுற்றுளாத் தளமாக விளங்கும் சுல்தானின் கல்லறை 17 ஹெக்டர் பரப்பளவைக் கொண்டது. இங்கு China Brunei Friendship Hall அமைந்துள்ளது. சுல்தான் கர்ணாவின் விருப்பத்திற்கு இணங்கவே அவரை சீனாவில் அடக்கம் செய்து இருக்கிறார்கள். அவரது இறுதிச் சடங்கு சீன அரச மரியாதை முறைப்படி செய்யப்பட்டுள்ளது. சீன அரசர்களின் கல்லறை போல் பிருமாண்டமாக இருப்பினும் சமாதி இஸ்லாமிய பாணியில் அமைக்கப்பட்டுள்ளது. அப்படி பின்னாட்களில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எது எப்படியாகினும் இவருக்கு புருணை சரித்திரத்தில் இடம் இல்லை. இது ஒரு அடையாளச் சிக்கலும் கூட. 19-ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டின் அடிப்படையிலேயெ புருணை சுல்தான்களின் பட்டியல் இருப்பதாக புருணையின் அதிகாரப் பூர்வ வரலாற்றுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சுல்தான் கர்ணா கல்லறை- நான்ஜிங்
செங் ஹோ தொடர்பான செய்திக்கு திரும்புவோம். பண்டைய சீனாவில் காழ்கடிதல் எனும் சடங்கு அமலில் இருந்தது. அந்தபுரம், பல்லக்குத் தூக்குவோர், அரச குல பெண்டிர்களுக்கு சேவகம் செய்யும் ஆண்கள் என அனைவருக்கும் விதை (விந்து கொள்பை) நீக்கம் செய்துவிடுவார்கள். இந்த சடங்கு முறை சீனாவின் 5000 ஆண்டு எழுத்துவடிவ வரலாறு நெடுகினும் பதியப்பட்டுள்ளது. ஆரம்ப காலங்களில் விதை நீக்கம் மட்டுமே செய்யப்பட்டு வந்தது. கடைசி பேரரசான ச்சிங் இராஜியத்தின் போது அது குறி நீக்கச் சடங்காக அமல்படுத்தப்பட்டது. 

இப்படி விதை நீக்கம் செய்யப்பட்ட ஆண்களை திருநங்கைகள் என குறிப்பிட முடியாது. இவர்கள் பெண் குணாதிசங்களை கொண்டவர்கள் அல்ல. நாட்டின் முதல் மந்திரிகளாகவும், அமைச்சர்களாகவும், படைத் தளபதிகளாகவும், இராணுவ வீரர்களாகவும் வாழ்ந்திருக்கிறார்கள். காழ்கடியும் சடங்கு நிகழ்த்தப்பட முக்கியக் காரணம் சேவகர்களின் இரத்தம் அரச குலத்தில் கலந்துவிடக் கூடாது என்பதற்காக மட்டும் அல்ல. அப்படிச் செய்வதின் வழி ஆண்களின் ஆற்றலை அது வலிமையாக்கும் எனும் நம்பிக்கை இருந்ததாலும் தான். 1912-ல் சீன பேரரசு வழக்குடைந்து போனப் பின்  அதில் மிஞ்சிய காழ்கடிஞர்களின் கடைசி நபர் 1996-ஆம் ஆண்டு இறந்தார். 

அட்மிரல் செங் ஹோ தனது கடல் பயணத்தில் வழி பல நாடுகளோடு நட்புறவை ஏற்படுத்தினார். அவரது ஏழு பயணங்களும் மலாய் தீவுக் கூட்டத்தை கடந்துச் சென்ற பயணங்களாக அமைந்துள்ளன. லங்காசுக்கா, போனி, சம்பா, அயூத்யா (தாய்லாந்து), சாவகம் (ஜாவா), தெமாசிக் (சிங்கை), மலாக்கா, விஜயநகரம், இலங்கை, ஏடன், மொசாம்பிக், மெக்கா என இவரின் பயணங்கள் விரிவடைந்துள்ளன. 1405 முதல் 1433 வரை 28 ஆண்டுகள் செங் ஹோ கடற்படை தளபதியாக இருந்துள்ளார். அதில் 14 ஆண்டுகள் முழுமையாக கடல் பயணத்தில் செலவு செய்திருக்கிறார். 1433-ஆம் ஆண்டு அந்நாளில் விஜயநகரம் என அழைக்கப்பட்ட தென் இந்திய பகுதியின் பயணத்தின் போது இறந்தார். அவர் உடல் கடலில் வீசப்பட்டது.
நான்ஜிங் அருங்காட்சியகம்
செங் ஹோ என்பது அரசவை பெயராகும். செங் ஹோவின் இயற்பெயர் மா சான்போ. மா என்பது அவரது குடும்பப் பெயர் அது குதிரையை குறிக்கும் சொல். சான் என்றால் மூன்று, போ என்பது பொக்கிஷம். செங் ஹோ யூனான் மாநிலத்தின் இன்றைய குன்மிங் பகுதியில் உள்ள இஸ்லாமியக் குடும்பத்தைச் சேர்ந்தவர். செங் ஹோவின் அப்பாவும் தாத்தாவும் மெக்கா பயணம் மெற்கொண்டுள்ளார்கள். செங் ஹோ தமது ஏழாவது பயணத்தின் போது மெக்கா சென்று திரும்பும் வழியில் காலமானார்.

மிங் பேரரசு ஆட்சியைக் கைபற்றும் முன் சீனா மங்கோலியர்களின் வசம் இருந்தது. மங்கோலியர்களின் ஆட்சி யுவான் பேரரசு என குறிப்பிடப்படுகிறது. அது குப்லாய் கான் அரசனால் தேற்றுவிக்கப்பட்டது. மங்கோலியர்களின் ஆட்சியின் போது சீனர்கள் மீது அவர்கள் மொழி அல்லது இன அழிப்புக் கொள்கையை மேற்கொள்ளவில்லை. ஆனால் அரசமைப்பில் ஹன் சீனர்களை மிகவும் தழ்வான நிலையில் வைத்திருந்தார்கள். செங் ஹோவின் அப்பா யுவான்-மிங் பேரில் இறந்தார். செங் ஹோ அவரது 12-வது வயதில் காழ்கடியபட்டு அரண்மனையில் ஷு டீ இளவரசருக்கு சேவகம் செய்ய அமர்ந்தப்பட்டார்.

Gavin Menzies எனும் இங்கிலாந்துக்காரர் தமது பெய்ஜிங் பயணத்தின் போது Forbidden City அரண்மனை நெடுகினும் 1421 எனும் எண்கள் பொறிக்கப்பட்டுள்ளதை காண்டார். 1421-ஆம் ஆண்டு நிச்சயமாக முக்கியதுவம் வாய்ந்த ஆண்டாக இருக்கக் கூடுமென கருதிய அவர் அவ்வாண்டில் நடைபெற்ற உலக நிகழ்வுகளை ஆய்வு செய்து நூலாக வெளியிட முடிவு செய்தார். அவரது ஆய்வு சுமார் 1500 பக்கங்களை எட்டியது. Gavin Menzies கடற்படையில் பணியாற்றியவர். வரலாற்று ஆய்வாளர் கிடையாது, அவரது எழுத்தும் சுவாரசியமாக இல்லை எனக் கூறி எந்த பதிப்பகமும் அவருடைய நூலை வெளியிட முன்வரவில்லை. ஒரு பதிப்பாளர் மட்டும் அவர் செங் ஹோ தொடர்பாக எழுதிய குறிப்புகளை மறுசீரமைத்து வெளியிட ஒப்புக் கொண்டார். அப்படியாக 1421: The Year China Discovered the World எனும் நூல் வெளியீடு கண்டது. ஆனால் அது வரலாற்று ஆசிரியர்களின் கடும் கண்டனத்துக்கு உள்ளானது.

அதற்கு முன்பாக ஃபோர்பிடன் சிட்டி அரண்மனையில் இருக்கும் 1421 எண்ணுக்கான காரணத்தைக் காண்போம். சீன வரலாற்றில் மொத்தம் 8 இடங்கள் தலைநகரமாக விளங்கின. பெய்ஜிங்கின் (பெக்கிங்) ஃபோர்பிடன் சிட்டி அரண்மனை 1406-1420 வரை நிர்மாணிக்கப்பட்டு, 1421 முதல் 1911 வரை அரண்மனையாகவும் அரசவையாகவும் இருந்தது. பெய்ஜிங்கிற்கு முன் நான்ஜிங் தான் தலைநகரம். மிங் ஆட்சியின் போது ஷூ டீ அரசாட்சியை அபகரித்துக் கொண்ட பின் ஃபோர்பிடன் சிட்டிக்கு அரசவையை மாற்றினார்.

Gavin Menzies தனது நூலில் கொலம்பஸ், வஸ்கோ டா காமா, ஃபெர்டினட் மெகெலன் மற்றும் ஜேம்ஸ் குரூக் போன்றவர்கள் சீனத்து வரைபடங்களைக் கொண்டே அவர்களது கடல் பயணங்களை மேற்கொண்டதாக குறிப்பிடுகிறார். செங் ஹோ தமது கடல் பயண அனுபவ அடிப்படையில் தூர அளவுகளை குறிப்பிட்டு வரைபடங்களைத் தயாரித்தார். அவை Nautical Chart of Zheng He என அறியப்படுகிறது. நௌடிகல் அளவீடுகளைக் கொண்டு உலக அரங்கில் பதிவாகி இருக்கும் ஆரம்ப கால கடல் பயண வரைபடம் செங் ஹோவால் உருவாக்கப்பட்டது. செங் ஹோ தனது வரைபடத்தில் அமேரிக்க கடல்படுகையயும், கெரீபியன் தீவுகளையும் குறிப்பிட்டுள்ளார். ஆக, கொலம்பஸுக்கு முன்பாகவே சீன கடலோடிகள் அமேரிக்க நிலபரப்பினை கண்டறிந்ததாக Gavin Menzies தனது கருத்தை முன் வைத்ததும் வரலாற்று அறிஞர்கள் கொதித்துப் போனார்கள். வரலாற்றுத் திரிபு செய்வதாக குற்றம் சுமத்தி அவருடைய நூலை புறம்தள்ளினார்கள்.

செங் ஹோவின் கடல் பயண வரைபடத்தை Mao Kun Map என்றும் குறிப்பிடுவார்கள். அது இராணுவ அருங்காட்சியகத்தில் இடம்பெற்றுள்ளது. பல்கலைக்கழக ஆய்வுகளில் இந்த வரைபடம் தொடர்பாக அறிக்கைகள் எழுதப்பட்டுள்ளன. வெள்ளையர்களைப் போல் செங் ஹோ நாடு பிடிக்கும் நாட்டத்தில் தமது கடல் பயணத்தை மேற்கொள்ளவில்லை. சீனத்தின் கலாச்சாரத்தையும் வியாபாரத்தையும் விருத்தி செய்வதே அவரின் முதன்மை நோக்கமாக இருந்தது.

அட்மிரல் செங் ஹோ தமது பயணத்திற்காக ஏகபட்ட மரக்கலங்களை தயாரித்திருக்கிறார். அவர் பிரத்தியோகமாக பயன்படுத்திய கப்பல் 147 மீட்டர் நீளமும் 60 மீட்டர் அகளமும் கொண்டது. சுமார் 30 நாடுகளை இந்த கப்பல் படை வளம் வந்துள்ளது. ஜப்பான் (வூகோவ்) மற்றும் சுமாத்ரா பகுதிகளில் கடல் கொள்ளையர்களோடு போர் புரிந்துள்ளார்கள். பண்ட மாற்று முறையில் சீனத்து தங்கம், வெள்ளி, பீங்கான் மற்றும் பட்டு பொருட்களைக் கொடுத்து யானை தந்தம், மசாலா பொருட்கள், தாவரங்கள், மிருகங்கள் என சீனாவிற்கு வாங்கிச் சென்றிருக்கிறார்கள். அப்படிக் கொண்டுச் சென்றவற்றில் சிங்கம், ஒட்டகச் சிவிங்கி, நெருப்புக் கோழி, காண்டா மிருகம், வரிக் குதிரை போன்றவையும் அடங்கும்.

செங் ஹோவின் நட்புறவு பயணத்தால் பல நாடுகள் சீனாவுக்கு தங்களது தூதுவர்களை அனுப்பி வைத்தன. அரசர்களும், சுல்தான்களும் மிங் அரசரை சந்திக்க வந்தனர். அப்படி பயணம் மேற்கொண்டு இறந்து போன இரு சுல்தான்களுக்கு மட்டுமே சீனாவில் கல்லறை அமைக்கப்பட்டுள்ளது. ஒருவர் மேலே குறிப்பிடப்பட்டுள்ள சுல்தான் கர்ணா, மற்றொருவர் பிலிப்பின்ஸ் நிலபரப்பை சேர்ந்த சுல்தான் சூலு. 

செங் ஹோவின் பெயரை உலகில் பல நாடுகளிலும் இன்றும் காணலாம் . மலாக்கா மாநிலத்தில் இவர் பெயரில் அருங்காட்சியகம் உள்ளது. அது போக வியட்நாம், தாய்லாந்து மற்றும் இந்தோனேசிய நாடுகளில் சான்போ எனும் பெயரில் கோவில்களும், வீதிகளும், கோபுரங்களும், மசூதி மற்றும் கட்டிடங்களும் உள்ளன. இலங்கையில் இருக்கும் Galle Trilingual Inscription (15.02.1409) தமிழ், பாரசிகம் மற்றும் சீனம் என  மும்மொழியில் பொறிக்கப்பட்டுள்ளது. தமது மூன்றாவது பயணத்தின் போது நான்ஜிங்கில் அந்தக் கல்வெட்டைத் தயார் செய்து கையுடன் இலங்கைக்கு கொண்டுச் சென்றுள்ளார். தேனாவரை நாயனார் எனும் சிவன் கோவிலுக்கு இவர் அளித்த தானங்களின் பட்டியலும் வேண்டுதலும் இக்கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளன. பின்னாட்களில் போர்த்துகீசியர்களின் ஆக்கிரமப்பின் போது இக்கோவில் முற்றிலுமாக அழிக்கப்பட்டது. அக்கல்வெட்டும் காணாமல் போனது. 1911-ஆம் ஆண்டு அதை மீட்டெடுத்து இலங்கை அருங்காட்சியகத்தில் வைத்தார்கள்.

செங் ஹோ- கல்லறை நான்ஜிங்
செமாராங் மற்றும் ஜாவாவில் செங் ஹோவின் நினைவிடங்கள் எழுப்பப்பட்டுள்ளன. இவரின் பெரும் பயணத்திற்கு பின் Luzon (பிலிப்பைன்ஸ்) பகுதியில் 20 ஆயிரம் சீனர்களும் ஜாவா பகுதிகளில் 30 ஆயிரம் சீனர்களும் குடியேறி இருக்கிறார்கள். சீனத்து செப்பு காசுகள் அந்நாடுகளின் வணிகத்தில் அமலுக்கு வந்தன. கலாச்சார ரீதியாக போர்னியோ, சுமாத்திரா, ஜாவா பகுதிகளில் வாழை இலை சாப்பாட்டு முறை வழக்குடைந்து பீங்கான்கள் ஆக்கிரமித்துக் கொண்டன. மலாய் தீவுக் கூட்டத்தில் இருந்த இராஜியங்கள் மிங் அரசருக்கு அளித்த பரிசுகள் இன்று ஃபோர்பிடன் சிட்டியின் Wenhua Hall-லில் காட்சி படுத்தப்பட்டுள்ளன. அட்மிரல் செங் ஹோவின் ஆறாவது கடல் பயணத்தின் போது ஃபோர்பிடன் சிட்டி கட்டி முடிக்கப்பட்டிருந்தது. 1421-1422 வரை பத்து நாடுகளைச் சேர்ந்த 1200 பிரமுகர்களை அழைத்துக் கொண்டு சீனா வந்தடைந்தார். மிங் அரசருக்கு மரியாதை செய்யும் நிமித்தம் அப்பயணம் அமைந்தது. அவர்களில் சில சுல்தான்களும் அரசர்களும் வந்திருந்தனர். மாலி தேசத்து அரசர் இப்பயணத்தின் போது ஃபூஜியன் (Fujian) நகரின் காலமானார். அவருக்கு கல்லறைகள் ஏதும் அமைக்கப்படவில்லை.

செங் ஹோ தமது 62-வது வயதில் மரணமடைந்தார். உடல் கடலில் வீசப்பட்டதால் நான்ஜிங்கில் இவருக்கு உடலற்ற வெற்றுக் கல்லறை எழுப்பப்பட்டது. பண்டைய சீன முறைபடி அமைக்கப்பட்ட அக்கல்லறை இன்று அவரின் நினைவிடமாக உள்ளது. 1985-ஆம் ஆண்டு அக்கல்லறை இஸ்லாமிய முறையில் மறுசீரமைப்பு செய்யப்பட்டது. செங் ஹோவின் கால்லறை சுல்தான் கர்ணாவின் கல்லறையைவிட மிகச் சிறியது. காரணம் அவர் ஒரு படைத் தளபதி எனும் மதிப்பை மட்டுமே பெற்றிருந்தார். கால பெருவெள்ளத்தில் செங் ஹோவிற்கு கிடைத்திருக்கும் செல்வாக்கு சுல்தான் கர்ணாவிற்கு கிடைக்கவில்லை. செங் ஹோவிடம் நாம் கற்றுக் கொள்ள வேண்டியது அயராத உழைப்பும், நல்லுறவு நூதனமும் (diplomatic skills). அதை இலங்கை கல்வெட்டின் வேண்டுதல் வாசகங்கள் நமக்கு பறைசாற்றுகின்றன.