Monday, May 24, 2010

முரட்டு சிங்கம் மிரட்டவில்லை

குவிக் கன் முருகனின் மொக்கை காமெடிகளை இரசித்தவர்களுக்கு நிச்சயமாக இரும்புக் கோட்டை முரட்டு சிங்கத்தில் எதிர்ப்பார்ப்புகள் அதிகமாக இருந்திருக்கக் கூடும். மிக சாதாரண கதையம்சத்தை கையில் எடுத்திருக்கும் சிம்பு தேவன், இம்சை அரசன் மற்றும் அறை எண் 308-ல் கடவுள் என தனது முந்தய படங்களை காட்டினும் சற்றே சறுக்கி விழுந்திருக்கிறார். மிகச் சாதாரண கதையம்சம் எனினும் அதில் புகுத்தப்பட்டிருக்கும் செய்திகள் யதார்த்தமானவை மற்றும் சம காலத்தில் இருக்கும் அரசியல் பின்புலன்களின் மீதான வெறுப்பும் கூட.

இம்சை அரசன் 23-ஆம் புலிகேசியில் வரும் ஒரு காட்சி. ‘அக்காமாலா ஜிப்சி’ எனும் ’ஆரோக்கிய பானத்தை’ வெள்ளையர்கள் தமிழகத்தில் அறிமுகம் செய்கிறார்கள். அதற்கு அக்கால ஆட்சியாளன் இலாப நோக்கில் துணை போகிறான். கதையின் பிற்பகுதியில் புரட்சி கதாநாயகன் வெளிநாட்டு விளம்பரங்களுக்கு துணை போவது சரியா தவறா என அவ்விளம்பரங்களில் நடித்த நடிகர்களை நையப் பிழிவதாக காட்டி இருப்பார்கள்.

கோக்ககோலா மற்றும் பெப்சி (அக்காமாலா ஜிப்சி) போன்ற ஆரோக்கிய குறைவான பானங்களை அல்லது வெளிநாட்டு பொருட்களை மூன்றாம் உலக நாடுகளில் அறிமுகம் செய்து, விளம்பரங்களை அதிகரித்து கோடிக் கோடியாக இலாபம் ஈட்டும் மேற்கத்திய நாடுகளின் போக்கினை சித்தரித்திருப்பார் சிம்பு தேவன். தற்காலத்தில் அதிகமான வெளிநாட்டு விளம்பரங்கள், பரிட்சயமான நடிகர்களை கைக்குள் போட்டுக் கொண்டு இயங்குகின்றன. அப்படத்தில் இயக்குநரின் குட்டு அவர்களுக்கு புரிந்திருப்பினும் துடைத்து தூக்கியெறிந்து போய்க் கொண்டிருப்பார்கள் என்பதில் வியப்பில்லை.

இம்சை அரசனின் முக்கிய நோக்கம் தமிழக அரசின் மெத்தன போக்கான ஆட்சி முறையை சாடுவதாக இருப்பினும் முதலாம் உலக நாடுகளென அறியப்படும் மேற்கத்தியத்தின் மீதிருக்கும் தனது கடுப்பை தயங்காமல் காட்டி இருப்பார். வெளிநாட்டு பொருட்களுக்கு விளம்பரம் கொடுப்பதை தவிர்த்து உள்நாட்டு பொருட்களின் வியாபரத்தை அதிகரித்து நாட்டை வளப்படுத்த வேண்டும் எனும் பொருளாதார சிந்தனையை சரியான கோணத்தில் காட்சிபடுத்தி இருப்பது நிச்சயமாக பாராட்டக் கூடிய ஒன்றே.

மீண்டும் அரசியல் பேசுவதற்கும் சமூகத்தின் மீதான தமது பார்வையை முன் வைப்பதற்கும் இயக்குநருக்கு தேவைப்பட்டிருப்பது புலிக்கேசி போன்ற மற்றுமொரு தளமே. மக்கள் மத்தியில் பரவலாக உழன்று கிடக்கும் கடவுள் மற்றும் சமயத்தின் போர்வையிலான கேப்மாறிதனம் மொள்ளமாறிதனம் பொறுக்கிதனம் முடிச்சவிக்கிதனம் போன்ற செயல்களையும் கடவுள் எனும் மாய பிம்பத்தையும் உடைக்கும் கருவியாக கடவுளை பயன்படுத்தி அறை எண் 308-ல் நிகழ்காலத்திற்கு திரும்பிய சிம்பு தேவன் மீண்டும் 17-ஆம் நூற்றாண்டிற்கு தனது திரைக்கதையை தூக்கிக் கொண்டு குதிரை சவாரி செய்திருக்கிறார்.
ஓர் ஊர்ல அப்பா, அம்மா, கணவன், மனைவி, சித்தப்பா, சித்தி, பெரியப்பா, பெரியம்மா, அந்தை, மாமா, தாத்தா, பாட்டி, தம்பி, தங்கச்சி, அக்கா, அண்ணன், அண்ணி, பன்னி என ஒரு பெரீரீரீரீய கூட்டமே இருந்ததாம். அவர்களுக்கு கக்கூஸ் போவதென்றாலும் கூட அதான் நம்ம ஹீரோ இருக்காரே மலச்சிக்கல் ஒன்றும் ஏற்படாது அப்படிக்கிற ஒரு அசாத்தியமான நம்பிக்கை இருந்தது. ஒரு நாள் தீடீடீடீர் என ஹீரோ காணாமல் போய்விடுகிறார். அந்த மக்களுக்கு ஏற்கனவே பக்கத்து ஊர்காரர்களின் தொந்தரவு வேறு. அவற்றை ஹீரோதான் சொம்பு தூக்கி கொண்டு வந்து பஞ்சாயத்து செய்து தீர்த்து வைப்பார். அதை அந்த ஊர் மந்தை பவ்வியமாக ஏற்றுக் கொள்ளும். ஹீரோவை காணவில்லை என்றதும் மாரில் ஆட்டுக் கல்லை தூக்கி போட்டதை போல் சுச்சா காக்கா போகாமல் அமர்ந்துவிடுகிறார்கள். தீடீடீடீரென ஹீரோ மறுபடியும் எண்ட்ரி ஆகிறார். பகைவர்களை அழித்து மக்களை காப்பாற்றுகிறார். சுபம். அவ்வளோ தான் கதை.

ஹீரோயிசத்துக்கான அத்தனை அம்சங்களையும் இம்மி பிசகாமல் புகுத்தி இருக்கும் இயக்குநர் சிம்பு தேவனின் முயற்சிகள் யாவும் இத் திரைப்படத்தில் கையாளப்பட்டுள்ளது எனினும் திரைக்கதையின் நாயகனான இராகவேந்திர லாரன்ஸிடம் இருக்கும் கதாநாயகன் எனும் பிம்பம் அதை சிந்திச் சிதறி எடுத்துச் சென்றிருக்கிறது. இன்றய நிலையில் தமிழ் மக்களின் மனோ பாவம், தமிழ் ஈழ பின்னனி, அமேரிக்க ஏகாதிபதியம் என ஒன்றுக்கும் அதிகமான செய்திகள் கதையில் தொகுக்கப்பட்டுள்ளது.

நிழலை விட வேகமாக செயல்படும் வீரன், தன் நிழலை விட அதிகமாக பயப்படும் கோழை என இரு பரிமாணங்களில் கதாநாயகன். மக்களுக்காக போராடும் புரட்சி கதாநயகன் வில்லனை அடித்து துவைத்து கசக்கி பிழிந்து காயப்போடுவதற்கு முன் கதாநயகனின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கிறான் வில்லன். நெய் மனம் படைத்த நாயகன் வில்லனை விட்டு விலகி ஸ்லோ மோசனில் நடக்கும் போது பின்னிருக்கும் வில்லன் அவனை சுட்டு விடுகிறான். இதில் தமிழ் ஈழத்தில் நடந்த நிகழ்வுகளின் பின்ணனி அப்பட்டமாகவே தெரிகிறது.
ஒரு மனிதன் உயிர் வாழ காற்றையும் நீரையும் காட்டினும் மிக முக்கியமானது உணர்வும் சுதந்திரமும். போராட்ட குணம் மக்களின் மனதில் நிலைக்க வேண்டுமாயின் அதை வழி நடத்த மக்களுக்கு சிறந்த தலைவன் இருக்க வேண்டும், தலைவன் இல்லையேல் மக்கள் துவண்டு விடுவார்கள், ஆதலால் ஒரு தலைவனின் மரணம் மக்களுக்கு தெரியாமல் இருப்பதே சிறந்தது என மரணப் பிடியில் இருக்கும் நாயகன் ஏகவசனம் பேசுகிறார். இங்கு கவனிக்க வேண்டிய விடயம் சமத்துவம் என்பது பொதுவானது எனும் பட்சத்தில் தலைமைத்துவம் மட்டுமே ஒரு இலக்கின் அடைவு நிலைக்கு முக்கியம் எனதில்லை. அடைவு நிலைக்கான தலைமைத்துவம் தான் இங்கு முக்கியம் என்பதாக இருக்குமானால் தலைவன் ஒருவனால் மட்டுமே இருக்க முடியும் என்பது இல்லை.

அமேரிக்க நாட்டின் ஏகாதிபதியத்தை நேரடியாகவே நகைச்சுவை படுத்தி இருக்கிறார்கள். அணுவாயுத ஒப்பந்தம் எனும் பெயரில் ஏனைய நாடுகளுகளை தனது கட்டுப்பாட்டில் கொண்டுவரும் அமேரிக்க தனத்தை மறுக்க இயலாது. நான் குசு போட்டா கூட பர்மீஷன் வாங்கனுமா என அப்பாவிதனமாக கேட்கும் கிழவனிடம் வாயூ தொல்லை கொடுக்கும் உணவுகள் சாப்பிடுவதை தவிர்த்துவிடுங்கள் என்கிறது ஏகாதிபதியம். வில்லன் கதாபாத்திரத்தில் வரும் நாசருக்கு நகலெடுத்ததைப் குவிக் கன் முருகனில் வரும் வில்லனை போலவே ஒரு கதாபாத்திரம். சுருங்க கூறுவதெனில் சிம்பு தேவனின் நகைச்சுவையில் முக்கி எடுக்கப்பட்ட உலக பார்வையிலான கருத்துகள் லாரன்ஸ் எனும் கதாநயகனின் பிம்பத்தால் விரிசல் கண்டுள்ளது.

எவ்வளோதான் சொல்லுங்க, லஷ்மிராயின் லெக் பீஸ் காலுக்காகவே பாடத்தை 4 தடவ பார்க்கலாம். பார்வட் பண்ணி தான்.

Monday, May 17, 2010

தூண்டில் மீன்

கடந்து செல்கையில்
உணர்ந்து கொள்கிறேன் சுவாசத்தின்
சுத்திகரிப்பு இரகசியங்களை
உன்னைச் சூழ்ந்த
காற்றும் வாசனை தெளித்துச் செல்கிறது

சுதந்திரப் பறவையாய்
சிறகடித்துக் கொள்கிறது
உள்மனம்கேசம் பறக்க
நீ நடந்து வரும் காலைப் பொழுதுகளில்

பெண் மனது
ஆழம் நிறைந்தது தான்
இன்னமும் நீந்திக் கடக்கவில்லை
விழுந்த தூரத்தை
உன் இடையைப் போலவே
கொஞ்சமாக இருக்கிறது
என் மீதான உனது பார்வை
மூன்றாம் மனிதனாக
சாலையில் நிற்கும் வழிப்போக்கன் நான்

முதல் கவிதைபழைய காகிதமாகிவிட்ட பின்பும்
இன்னும் பிறக்கவில்லை
எனது முதல் வார்த்தை
உனைக் காண்கையில்

உனக்கான நேசம்அத்தனையும் புதிய
அணுக்களாய் பிறந்து கொண்டே இருக்கின்றது
அவற்றை நாணேற்றி அம்புகளெய்திட
திராணியற்றுப் போனேன்
இங்கே காயம் என்பது
வில்லாளிக்கு மட்டும் தானோ?
நேற்று என் தோழர்கள் சிரித்தார்கள்
அனைத்தையும் கலைத்து
அழித்துக் கொண்டிருக்கின்றேன்
ஏதோ ஒரு பாரம் இன்னமும்
ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றது.
கர்பம் தரித்த உன் வயிற்றைக் கண்ட பின்
புரிந்துக் கொண்டேன்
உன் தூண்டில் விழிகளுக்கான மீன் வேறென்று


A Poem by Kavinyar Vicky

Wednesday, May 12, 2010

SHERLOCK HOLMES

40 வயதை தாண்டியவர் என கணிக்க கூடிய நபர். 1.8 மீட்டர் உயரம். தெளிவான முக பாவனை. கூரிய பார்வை. திடமான உடல். உறுதியான எண்ணம். முதிர்ச்சியான கதாநாயகனைக் காட்டக்கூடிய அத்தனை அம்சங்களும் இவரிடம் இருப்பதாக சித்தரிக்கப்படுகிறது. ஷெர்லக் ஹோம்ஸ். சிலருக்கு பரிட்சயமான கதாபாத்திரமாக இருக்கலாம்.

சில கதைச் சொல்லியின் யுக்திகள் இரசனை மிகுந்தவை . கணேஷ் வசந்த் எனும் இரு வழக்கறிஞர் கதாபாத்திரங்களை சுஜாதாவின் வாசகர்கள் சிலாகித்திருக்கக் கூடும். இக்கதாபாத்திரங்கள் நிஜ வாழ்வில் இருக்கும் மனிதர்களென கருதிய வாசகர்களின் கேள்வியும் எழுத்தாளர் சுஜாதவிடம் எழுப்பப்பட்டிருக்கிறது. அவ்விரு கதாபாத்திரங்களுக்கும் துரித உயிரோட்டம் கொடுத்து வாசகர்களின் கண் முன் நிறுத்திய பெருமை சுஜாதாவையே சேரும்.

சுஜாதாவின் படைப்புகளை விமர்சித்தவர்கள் முன் வைத்த கருத்துகளில் ஒன்று டாக்டர் ஆர்தர் கோனன் டாயில் சாயலில் இவரின் துப்பரியும் கதைகள் இயம்பப்பட்டுள்ளது என்பதேயாகும். ஆயின் அது முழுமையாக ஏற்றுக் கொள்ள முடியாததும் கூட. ஏனெனின் சுஜாதா தன் கதைகளில் கணேஷ் மற்றும் வசந்த் கதா பாத்திரங்களின் முக்கியதுவம் சம பங்கென அமைக்கப்பட்டிருக்கும். டாயில், டாக்டர் வட்சன் மற்றும் ஷெர்லக் ஹோம்ஸ் எனும் இரு கதாபத்திரங்களை தமது கதைகளில் வரும் பாத்திரங்களாக அமைத்திருப்பார்.

இதில் மாற்றம் என்னவெனில் இவரின் பெரும்பாலான கதைகளில் டாக்டர் வட்சன் கதை சொல்லியாக அறிமுகமாகிறார். டாயில் கதைகளில் ஷெர்லக் மைய கதா பாத்திரமாகவும், கதை சொல்லியான வாட்சன் கதைகளில் வரும் முக்கிய பாத்திரமாகவும் அமைக்கப்பட்டிருக்கிறார்கள்.

டாயிலின் கதைகள் பிற மொழிகளிலும் அதிகமாக மொழி பெயர்கப்பட்டிருக்கிறது. பிரசித்தி பெற்ற இவரின் கதைகள் திரைப்படங்களாகவும் வெளியிடப்பட்டிருக்கிறது. எந்த ஒரு விசயமாக இருப்பினும் அதன் சிக்கல்கள் ஆரம்பத்தில் வியப்பளிக்கலாம், ஆர்வத்தையும் அதிகமாக சிந்திக்கச் செய்யும் ஒன்றாகவும் இருக்கலாம். அதனை கட்டவிழ்த்துப் பார்க்கையில் இவ்வளவுதானா எனும் வெறுமையே எஞ்சி நிற்கும் என்பது டாயிலின் கூற்றாகும். திறமை மிகுந்த துப்பறிவாளர் ஷெர்லாக் மிகவும் அமைதியான மன நிலை கொண்ட நபராக சித்தரிக்கப்படுகிறார். இவரின் செயல்கள் ஏனையோரை வாய்பிளந்து வியக்க வைத்துவிடுகிறது.

SIR ARTHUR CANON DOYLE

பின் புதுமையியல் (பின்னவீனதுவத்தை) சிலாகிக்கும் சிகாமணிகளுக்கு ஷெர்லக் கதைகள் நிச்சயம் பிடிக்காது. டாயிலின் எழுத்து முழுக்க முழுக்க மசாலா சார்ந்த ஜனரஞ்சக கதைகளாகவே அமைந்துள்ளன. ஷெர்லக் கதை வரிசைகளை உன்னித்து கவனிக்கையில் அது மிக சாதாரணமானவையே. கதை சொல்லியின் பார்வையும் கதையை விவரிக்கும் கோணங்களும் வாசகர்களை வாசீகரித்து மூழ்கச் செய்கிறது. கதைச் சொல்லி ஷெர்லக்கின் நடவடிக்கைகளை வியந்து பாராட்டும் பொழுது ஷெர்லக் ஓர் உன்னத மனிதனாக வாசகர்களுக்கு தெரிகிறார். அதன் போக்கில் வாட்சனும் மனதில் பதிந்துவிடுகிறார்.

செயல்களின் விளைவுகள் தோற்றத்தில் கடினமாக காண்பினும் இயல்பில் அவை எளிமையில் இருந்து தொடங்கியவையே என்பது ஷெர்லக்கின் துப்பறியும் தத்துவம். ஷெர்லக்கின் புத்தி சாதூர்யம் இது ஒன்றும் பெரிய விசயமல்ல, இமைப்பதற்குள் முடித்துக் காட்டுகிறேன் பார் என செயல்படுகிறார். Sherlock Holmes : A Study in Scarlet எனும் நாவலில் ஷெர்லக்கை சந்திக்கும் டாக்டர் வட்சன் அவரிடம் குறைகளே நிறம்பி இருப்பதாக முடிவு செய்கிறார். இக்கதையில் ஷெர்லக்கை தற்குறியாக சித்தரிக்கும் வட்சன் கதையின் முடிவில் அவரின் தீவிர விசிறியாக தன்னை காண்பித்துக் கொள்கிறார்.

ஏனையை நாவல்களிலும், சிறுகதைகளிலும் டாக்டர் வாட்சனின் காதாபாத்திரம் ஷெர்லக்கின் கூஜா தூக்கியாகவே காண்பிக்கப்படுகிறது. ஷெர்லக் தம்மை மற்றவர் புகழ வேண்டும் எனும் எண்ணம் கொண்ட ஒரு நபர். புதிராக தெரியும் முறையீடுகளை எளிமையான முறையில் தீர்த்து வைக்க தம்மைக் காட்டினும் மிஞ்சியவர்கள் யாரும் இல்லை என்பது ஷெர்லக்கின் அசைக்க முடியாத மன உறுதி. தூரத்தில் ஒரு மனிதன் வருகிறானே அவன் நடவடிக்கைகளை கவனியுங்கள் ஷெர்லக், விந்தையாக இருக்கிறதல்லவா? எனும் வாட்சனிடம். அவன் என்னை தேடி தான் வந்துக் கொண்டிருக்கிறான் வாட்சன் என பார்த ஓரிரு நெடிகளில் சொல்கிறார் ஷெர்லக்.

WRITER SUJATHA

அது எப்படி சாத்தியப் படும் எனும் கேள்வியை ஒவ்வொரு நிமிடத்திற்கும் வாசகனுள் எழுப்பி நூல் விடாமல் படித்து முடிக்க முடிகிறது. ஃபசல் எனும் விளையாட்டில் வெட்டி கலைக்கப்பட்ட படங்களை சரிவர அடுக்கி வைப்பது போன்றது தான் இங்கு வைக்கப்படும் புகார் விவரங்கள். அதில் சில ஒட்டாத கலவை சேர்க்கப்பட்டிருப்பது குற்றவாளிகள் தம்மை புத்திசாலிகளாக கருதும் இயல்பு தன்மை. ஷெர்லக் தமக்கு கிடைக்கும் ஒவ்வொரு விவரங்களையும் கவனத்தை பிசகச் செய்யாமல் கையாளும் தன்மையால் தன்னை மறுப்பின்றி உலகின் மிகச் சிறந்த துப்பறிவாளராக காட்டிக் கொள்கிறார். கொடுரமான கொலை குற்றமோ அல்லது சாதாரண பிக் பாக்கெட் திருட்டும் ஷெர்லக்கிற்கு ஒன்று தான்.

ஆய்வுகளில் கிடைக்கும் தகவல்களை முன்னுக்கு பின் கிடைத்ததாயினும் அதை சரி வர அடுக்கி ஒரு சிக்கலான கணிதத்துக்கு தீர்வு செல்வதை போல் விவரித்துவிடுகிறார். ஷெர்லக்கை பொருத்தமட்டில் அவரால் தீர்வு காண முடியாத சிக்கலான நிகழ்வுகள் எதுவும் கிடையாது என்பதே. இருப்பினும், ஷெர்லக் தவறாக தீர்மனம் செய்ததாகவும் ஓர் கதையை விவரிக்கிறார் டாக்டர் வாட்சன்.

சுஜாதா தமது கதைகளில் கணேஷ் எனும் கதா பாத்திரத்தை முதலில் அறிமுகம் செய்தார். சில காலத்திற்கு பின் வசந்த் எனும் கதாபாத்திரம் சில துள்ளல் நகைச்சுவைகளோடு அறிமுகமானது. முக்கியதுவம் பெற்ற ஒரே காதாபாத்திரத்தின் வழி துப்பறிவாளனின் எண்ண ஓட்டங்களை விவரிப்பது தடைபடுவதால் இரு முக்கிய பாத்திரங்கள் அதை கலந்தாலோசிக்கும் வண்ணம் வர்ணனை கொடுக்க வசந்த் எனும் கதாபாத்திரம் அறிமுகப்படுத்தப்பட்டதாக தமது கேள்வி பதிலில் அவர் விவரித்திருந்தார்.
ஷெர்லக் கதை சொல்லியாக தமது துப்பறியும் வேலைகளை விவரிப்பதை காட்டினும், அவற்றை கவனிக்கும் கதாபாத்திரம் அதை இன்னும் திறம்பட செய்வதை டாயிலின் கதைகளினூட நாம் வாசித்து அனுபவிக்க முடிகிறது. சுஜாதா தமது கதைகளில் கணேஷ், வசந்த் பாத்திரங்களை எப்பொழுதும் இளமை எனும் பாணியில் காட்டி இருப்பார். டாயிலின் கதையில் ஷெர்லக் தமது வயோதிக காலத்தில் ஓய்வொடுக்கச் செல்லும் இடத்திலும் தமது துப்பறியும் மூளையை பயன்படுத்துவதாக கதை அமைத்திருக்கிறார்.

ஷெர்லக்கின் கதா பாத்திரம் தாம் கண்டிராத செய்திகளை தடயங்களோடு விவரிக்கும் தன்மையை படிக்கும் சமயங்களில் அவர் ஓர் மந்திரவாதியா எனும் எண்ணத்தை முதலில் எழும்பச் செய்து. பிறகு ஏன் அப்படி ஒரு விவரணை சொல்லப்பட்டது என்பதையும் அழகாக வடிவமைத்திருப்பது ஆசிரியரின் வெற்றியே. ஷெர்லக் மற்றும் வாட்சனைக் காட்டினும் டாயில் தாமறிந்த தகவல் களஞ்சியத்தை நாம் இன்றளவிற்கும் பேசும் வகையில் அமைத்துக்காட்டி இருப்பதும், அதை சில எழுத்தாளர்கள் முன் உதாரணமாக எடுத்துக் கொண்டதும் நமது வாசிப்பிற்கு கிடைத்த அவல் பொறி தான். எந்த ஒரு துப்பறியும் நாவலும் இரண்டாம் வாசிப்பிற்கு ஆர்வம் கொடுப்பவை அல்ல.