சில காலமாக எதையும் எழுத தோன்றவில்லை. ஏதோ ஒரு குழப்ப நிலை என்று கூட சொல்லலாம். சில வேளைகளில் எழுதுவதற்கான சிந்தனைகள் பெருக்கெடுப்பதும், சில வேலைகளில் தடைபடுவதும் கால இடைவெளிகளில் இயல்பாகவே இருக்கின்றது. ஏன் எழுத வேண்டும் என்ற எண்ணமும், எழுதி முடித்தப் பின் கிடைக்கும் நிறைவும் கூட தீர்க்கமான முடிவுகளை எடுக்க தடையாக இருக்கிறது. இது எல்லோருக்கும் ஏற்படுவது தானோ?
***********
சனி பெயர்ச்சியின் பலன்கள் தினசரிகளை இன்று வரையினும் நிரப்பி வருகின்றன. சென்ற வாரம் இரவு சாப்பாட்டை முடித்துவிட்டு அமர்ந்திருக்கையில் அம்மாவிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. தொலைகாட்சியில் இராசி பலன் பார்த்தேன். இதை எல்லாம் சொன்னார்கள். பார்த்து கவனமாக இருந்துக் கொள் என்றார். நான் நிம்மதியாக இருந்தாலும் இப்படி பீதியை கிளப்பிவிட பல ‘நம்புங்கள் நாராயணன்கள்’ கிளம்பிவிடுகிறார்கள். இப்படி நிம்மதி கெடச் செய்யும் ராசி பலன் அவசியம் தானா?
******
ம.இ.காவின் தேர்தல் ‘போராட்டம்’ முடிந்த பின்பும் கட்சியின் சடுகுடுகள் முடிந்தபாடில்லை. நாளிகைகளில் தலையங்கம் தினமும் வெறுபேற்றித் தொலைக்கிறது. ஒரு செய்திக்கான தகவல் படித்தவுடன் இதற்கான மறுப்பறிக்கை நாளை இப்படி தான் இருக்கும் என பட்சி சொல்கிறது. எங்கே நானும் அரசியல் ஜோதிடனாகிவிடுவேனோ என பீதி பிசிறி அடிக்கிறது.
கட்சி மக்களுக்கு நன்மை செய்யும் எனும் எண்ணம் எல்லாம் எப்பொழுதும் எட்டாக்கனி தான் என்பதை இப்படி அதி தீவிரமாக சொல்லியாக வேண்டுமோ?
*****
இயக்குனர் ஷங்கரின் படங்கள் (ஜீன்ஸ் & காதலன் தவிர்த்து) ஒரே டெம்ப்ளேட்டை பல முறை எடிட் செய்து கொடுப்பதை போல் இருப்பது பக்கத்து வீட்டு பத்து வயசு பாப்பாவுக்கும் தெரிந்த செய்தி தான். இருப்பினும் அவரின் தயாரிப்புகளில் நல்ல நம்பிக்கையை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார்.
ஈரம் திரைப்படத்தை காணும் வாய்ப்புக் கிட்டியது. வழக்கமாக பார்த்து பழக்கப்பட்ட பேய் கதை என்றாலும் கதை நகர்வு சுவாரசியம் கொடுத்திருக்கிறது. அழகான இசை அமைப்பு. படம் கொஞ்சமாக ’ஃபைனல் டெஸ்டினேஷன்’ எனும் ஆங்கில படத்தையும் நினைவுபடுத்த வைக்கிறது.
******
எனக்கு சில அடிமைகள் வேண்டும் எனும் என் சிறுகதைக்கு வந்த மின்கடிதங்களுக்கு நன்றி. அதில் சில கடிதங்களில் சொல்லப்பட்ட ஒரு விடயம், விக்கி எனக்கு கதை புரியவில்லை. சுஜாதா பாணியா? என்ன சொல்ல வருகிறீர்கள்? கொஞ்சம் விளக்கமாக சொல்லுங்கள். இப்படியாக தான் இருந்தது.
நான் எழுதிய கதைக்கு நானே விளக்கம் கொடுப்பதை விட நான் அதை எழுதாமலே இருந்திருக்கலாம் என்றிருக்கிறது. படிப்பவர் புரிந்துக் கொள்ள முடியாத அளவிற்கு மட்டரகமாக கதைகளை எழுதாமல் இருக்க முயற்சிக்கிறேன்.
இதை எழுதி முடித்த சமயத்தில் எனக்குள் எழுந்த கேள்வி ஒன்று:
அதீத கற்பனையில் சொல்லப்படும் ஒரு கதையை அறிவியல் பாணியில் சேர்ப்பது சரிதானா?
நரேஸ் அவர்களின் மடல் நயமாக இருக்கக் கண்டேன்.
அன்பின் விக்னேஷ்,
இது ஒரு நல்ல, பெரிய முயற்சி....அதற்காக எனது வாழ்த்துக்கள்
வலைப்பதிவு அலுவலகத்தில் தடா... எனக்கு வந்த மடலில் உங்கள் கதையை படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. உங்களுடைய எந்த பின்னூட்டத்திலாவது அல்லது யாராவது சுஜாதா நடை வருகிறது என்று சொல்லியிருந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை....காரணம் அறிவியல் சார்ந்த நாவல் எழுத்துக்களில் அவரது ஆளுமை அதிகம் என்பது மட்டுமே!!! ஆனால், இந்த கதையின் பிண்ணனியில் இருக்கும் உங்களது மெனக்கெடலை, சுயசிந்தனையை எளிதில் புரிந்து கொள்ள முடிகிறது....
முதல் பாதியை விட இரண்டாம் பாகம் சற்றே தொய்வடைந்தாற் போன்று உள்ளது...சில இடங்கள் முழுமையாக இல்லாத உணர்வை, எளிதில் புரிந்து கொள்ள முடியாத படியாக இருக்கிறது...
உதாரணம், இயந்திரத்தை சோதிக்க வேண்டும் என்று எண்ணி திடீரென்று உலக வளர்ச்சியாளர்களின் சதி என்று ஒரு புதிய விஷயத்தை கொண்டு வருகிறீர்கள், அது கொஞ்சம் நெருடுகிறது...முடிவில் அந்தப் பெண் சொல்லும் விளக்கங்கள் என்று சில....இன்னும் கொஞ்சம் விளக்கியிருக்கலாமோ....
என்னடா குறைகளை அதிகம் சொல்கிறேனே என்று எண்ணாதீர்கள்...இது கதையை மெருகூட்ட மட்டுமே....மற்றபடி கதையில் சிலாகிக்க ஏகப்பட்ட விஷயங்கள் உள்ளன, உங்கள் முயற்சியையும் சேர்த்து...
--
நரேஷ்
meetnnk1@gmail.com
*****
கவிதை பற்றிய எனது புரிதல்கள் பிசகி சின்னாபின்னமாகி கொண்டிருப்பதை உணர முடிகிறது. வசனத்தை மடக்கி போடுவது. சிரமப்பட்டு தமிழ்ச் சொற்களை பொறுக்கி போடுவது. ரௌத்திரமாக ஒரு செய்தியை சொல்வது. இப்படியாக இருப்பது தான் கவிதையா? சில அறிவு ஜீவிகள் புதுக் கவிதைக்கும் மரபுகளை வகுத்து வருவதாக அறிய முடிகிறது. எப்படியோ... இது கால காலமாக தீராத ஒன்று தான்.
நண்பர் அமுதனின் ஈற்றடி வெண்பா இரசிக்க வைத்தது. கல்லூரி மாணவர்களின் இன்றய அவல நிலையை ஆங்கில கலப்பில் மரபுடன் படைத்திருப்பது இரசிக்க வைக்கிறது.
பிக்கப்பும் ஆவதொடு டேட்டிங்கும் போய்வந்து
செக்கப்பும் செய்வாள் சிலை!
******
எழுதாமல் இருந்த இக்காலகட்டத்தில் நலம் விசாரித்த அன்பர்களுக்கு நன்றி. நான் எழுத்தாளன் கிடையாது. நண்பர் வால் அடிக்கடி ஒன்று சொல்வார். நான் அவ்வளோ ‘வெர்த்’ இல்லை என. அது போல் நான் ’வெர்த்’ உள்ள ஆசாமியும் இல்லை. இது என் பொழுதுபோக்கு மட்டுமே. எண்ணம் இருக்கும் வரை எழுதலாமே... :-)
**********
நீண்ட நாட்களுக்கு பின் சாண்டில்யனின் புத்தகம் ஒன்றை படிக்க முற்பட்டேன். சில பக்கங்களில் திகட்ட ஆரம்பித்துவிட்டது. சரித்திர விடயங்களை மேம்போக்காக அறிந்துக் கொள்ள சாண்டில்யனின் நாவல்கள் துணை புரிவது மறுக்க இயலாது. பெண்களை அபரிமிதமாக வர்ணிப்பது. உலக அழகிகளை அவர் கதையில் மட்டுமே காண முடியும் என்பதைப் போன்ற சிருங்காரங்களையும் அகற்றினால் புத்தகத்தில் எத்தனை பக்கங்கள் மிஞ்சும் என யோசிக்க வைக்கிறது.
*******
பார்க்க முடியாத கடவுள் மேல் அன்பு வைக்கிறது நெகடிவ் அப்ரோச், பார்க்க முடிந்த மனிதர்கள் மேல் அன்பு வைக்கிறது பாசிடிவ் அப்ரோச் என சாணியடி சித்தர் சொல்லி இருக்கிறார்.