குதிரையில் கசாக் |
சீனாவின் நெடு விடுமுறை நாட்களில் பயணங்களை மேற்கொள்வது பணத்திற்கும், மனதிற்கும் கேடு விளைவிக்கும். இந்த நெடு விடுமுறை நாட்களை ‘கோல்டன் வீக்’ என அழைப்பார்கள். அவை முறையே வசந்த விழா எனப்படும் சீனப் புத்தாண்டு மற்றும் சுதந்திர தின வாரங்களாகும். இந்த விடுமுறை காலங்களில் சீனர்கள் சுமார் ஏழு முதல் பத்து நாட்களுக்கு விடுமுறை எடுத்துக் கொண்டு கிராமங்களுக்கும், சுற்றுப்பயணம் மேற்கொள்ளவும் சென்றுவிடுவார்கள். பொது போக்குவரத்து தளங்களிலும், சுற்றுளாத் தளங்களிலும் மனிதத் தலைகள் மட்டுமே நெறுக்கி அடித்துக் கொண்டு காண முடியும். இவற்றைக் கணக்கில் கொண்டு கடந்த பொது விடுமுறையின் போது சீனாவின் தன்னாட்சி பிரதேசத்துக்கு பயணம் மேற்கொள்ள முடிவெடுத்தேன். அங்கே மனித நெறிசல்கள் குறைவு.
தூதரக பணி கடப்பிதழ்களை வைத்திருப்போர் திபெத்துக்குச் செல்ல முடியாது. பொது கடப்பிதழ்களை வைத்திருப்போர் கூட சீனாவின் பொது நுழைவிசைவு (VISA) மற்றும் திபெத்துக்கான சிறப்பு நுழைவிசைவையும் பெற்றுக் கொண்ட பின்னரே திபெத் செல்ல முடியும். பெய்ஜிங்கில் இருந்து திபெத் தலைநகரான லாசா செல்லும் 48 மணி நேர இரயில் பயணம் மிகவும் பிரசித்தி பெற்றது. உலகின் அதி இரம்யமான காட்சிகளை இரசித்தபடியே செல்ல முடியும். திபெத் கடல் மட்டத்தில் இருந்து மிக உயரமான இடத்தில் அமைந்துள்ளதால் அங்கே காற்றழுத்தம் மிகக் குறைவு. புதிதாகச் செல்வோர் உரக்கப் பேசுவதாலோ, விரைவாக நடப்பதாலோ மயக்கமடையக் கூடும். கடைகளில் விற்கும் துரித ஆக்சிஜன்களை வாங்கி சுவாசம் பிடித்துக் கொள்ள முடியும். அப்படி இருந்தும் பூலோக ஏற்புகளை தாங்கிக் கொள்ள முடியாத பயணிகள் மருத்துவ மனைகளில் விடுமுறைகளை கழித்துவிட்டும் வந்திருக்கிறார்கள்.
திபெத் எனக்குத் ’தடா’ போட்டதால் அந்தப் பக்கம் தலை வைக்காமல் அதற்கு வடக்கே அமைந்துள்ள சின்ஜியாங் போக முடிவு செய்தேன். சின்ஜியாங் உய்ஹூர் மக்களின் தன்னாட்சி பிரதேசமாக விளங்குகிறது. இதுவே சீனாவின் மிகப் பெரும் மாநிலம். ஒன்பது நாடுகளின் எல்லை இதன் நிலப்பகுதியை ஒட்டி இருக்கிறது. பண்டைய சீனத்தில் பட்டுப் பாதையை கடக்கும் வழியாக இப்பகுதி அமைந்தது. இஸ்லாமியர்கள் அதிகமாக இங்கே வசிக்கிறார்கள். சில பல அரசியல் காரணங்களால் இப்பகுதி முழுவதும் போலிஸ் கட்டுப்பாட்டில் உள்ளது. போலிஸ் ஸ்டேட் என்றும் இவ்விடத்தை அழைப்பார்கள்.
இங்குச் செல்ல சிறப்பு நுழைவிசைவு தேவை இல்லை. இருந்தும் பயணங்களின் போது கடுமையான சோதனைகளுக்கு உள்ளாக நேர்கிறது. அந்த சோதனைகள் வெளிநாட்டினருக்கு மட்டும் இல்லை. உள்நாட்டு பிரஜைகளுக்கும் தான். மொழி தெரியாத வெள்ளையர்கள் அதிகமான நேரத்தை இச்சோதனைகளுக்காகப் பரி கொடுத்ததையும் காண முடிந்தது. இம்மாநிலத்தில் அமைந்திருக்கும் மிக அழகிய காட்சிகளை இரசிப்பதற்கும் சுவை மிக்க உணவுகளுக்காகவும் பல் வேறு சிறுபான்மை இன மக்களின் கலாச்சாரங்களை பார்தறியவும் இந்த காவல் சோதனைகளை பொருத்துப் போகலாம்.
தியன் ஷான் எனும் மலைத் தொடர் நான்கு நாடுகளை கடந்து போகிறது. சீனா, கசாக்ஸ்தான், கிர்கிஸ்தான் மற்றும் உஸ்பேக்கிஸ்தான் என இதன் புவியியல் அமைந்துள்ளது. கனாஸ் (Kanas), தியன்ச்சீ (Tianchi), போன்ற பகுதிகளில் மனதை மயக்கும் இந்த மலைப் பகுதி, துர்பான் போகும் பகுதிகளில் பொட்டல் மலைகளாக தெரிகிறது. செடி கொடிகள் ஏதும் இல்லாமல் உள்ளது. அதன் சாலையோர பகுதிகளில் வேளி போட்டு மக்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஆட்களை விழுங்கும் புதை மணல் பகுதிகளாக அவ்விடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
சர்வ தேச அரசியல் பார்வை உய்ஹூர் மக்களின் மீது விழக் காரணம் வெளிநாடுகளில் அவர்கள் அரசியல் தஞ்சம் கோருவதால் தான். ஆனால் சின்ஜியாங்கில் கசாக் சீனர்களும், கிர்கிஸ் சீனர்களும், ஹன் சீனர்களும் வசிக்கிறார்கள். தியன் ஷான் போகும் வழிகளில் அதிகமாக கசாக் மக்களின் குடியிடங்களைக் கண்டேன். அவர்களின் வாழ்விடங்களில் மிகப் பெரிய கழுகுச் சிலைகளையும், சுவர் படங்களையும், சின்னங்களையும் வைத்திருக்கிறார்கள். மங்கோலியர்கள் தங்களை ஓநாயின் குலத் தோன்றலாக கருதுவது போல் கசாக் மக்கள் தங்களை கழுகின் குலத் தோன்றலாக கருதுகிறார்கள்.
கசக் மக்கள் 1920-களின் பிற்பகுதியில் ஏற்பட்ட பஞ்சத்தால் கடுமையாக பாதிப்படைந்தார்கள். ஜனத்தொகை அதிக வீழ்ச்சி அடைந்தது. பிழைப்பிற்கா பிற நாடுகளுக்கு போக ஆரம்பித்தார்கள். இன்றய நிலையில் உலகின் 9-வது பெரிய நாடாக இருக்கும் கசாக்ஸ்தான் வம்சாவழியினர் சீனாவிலும் இன்னும் பிற நாடுகளிலும் வசிக்கிறார்கள். சின்ஜியாங்கில் இருந்து நில வழி பாதையாக (வாகனம்/ இரயில்) கசாக் எல்லைபுர நகரங்களுக்குச் செல்ல முடியும். மலேசிய கடப்பிதழை வைத்திருப்போருக்கு கசாக் செல்ல நுழைவிசைவு தேவை இல்லை. கசாக்கின் தலைநகரம் அஸ்தானா, இருப்பினும் சீனர்கள் வியாபாரம் பொருட்டு அல்மாய்த்தி எனும் பெருநகரத்திற்கே அதிக பயணம் மேற்கொள்கிறார்கள். அல்மாய்த்தி காசாக்ஸ்தான்-கிரிகீஸ்தான்-சீனா என ஒரு முக்கோன பகுதியில் அமைந்துள்ளது. சீனாவின் ”பெல்ட் & ரோட் இனிசியேடிவ்’ திட்டத்தில் இந்நாடும் முக்கியப் பங்கு வகிப்பதால் மேம்பாடுகள் அதிகம் நடந்து வருகின்றன. உய்ஹூர் மற்றும் கிர்கீஸ் சீன பிரஜைகளை பற்றி வேறு ஒரு சமயம் பார்க்கலாம். இப்போது கசாக் மக்களின் வாழ்வியலை காண்போம்.
சின்ஜியாங் தியன் ஷான் மலைப் பகுதிகளில் இவர்களின் பல் வேறு வகையான வாழ்வியலைக் காண முடிகிறது. மலையில் அமைந்திருக்கும் நிர்நிலை பகுதிக்குச் செல்ல சீன அரசின் பிரத்தியோக வகனத்தை மட்டுமே பயன்படுத்த முடியும். அப்பகுதிகளில் அதிகமான கசாக் மக்களே பணி புரிகிறார்கள். கசாக் மக்கள் இசை பிரியர்கள். சிறப்பாக தம்பூரா வாசிக்கிறார்கள். நான் சென்ற பேருந்தின் உதவியாளர் அவருக்கு மூன்று மனைவிகள் இருப்பதாகக் கூறினார். இவர் இசைப் பாடுவதை அவர்கள் இரசித்துக் கேட்பதாகக் பெருமையடித்துக் கொண்டார். மிக அரிதாகவே வேற்று நாட்டினரை இவர்கள் அங்கு காண்கிறார்கள். இஸ்லாமிய முறையில் முகமன் கூறி, நான் பாக்கிஸ்தானில் இருந்து வருகிறேனா என்றே அவர்களில் பலரும் கேட்டார்கள்.
கசாக் மக்களில் பொரும்பான்மையானோர் இஸ்லாமிய பெயர்களைக் கொண்டிருந்தாலும் இவர்களில் இறை மறுப்பாளர்களையும் காண முடிகிறது. நான் பயணித்த போது அங்கு குளிர் காலம் தொடங்க ஆரம்பித்திருந்தது. சின்ஜியாங் தலைநகரான யுருமுச்சியில் அதிகாலை 5 மணிக்கு விடிந்துவிடுகிறது. இரவு 8.30 மணி வரை சூரியனைக் காண முடிகிறது. கோடை காலங்களில் பகல் நேரம் இன்னும் அதிகமாக இருக்கக் கூடும். உணவு விடுதிகள் பெரும்பான்மையாக மதுக் கடைகளைப் போலவே உள்ளன. ஆண் பெண் என பகலில் இருந்து இரவு வரை குடித்துக் கொண்டிருக்கிறார்கள். உணவகங்களில் சிகரட்டு கட்டுபாடுகள் இல்லாததால் குளிரூட்டியோடு கலந்த புகைச்சல் அசௌகரியத்தை ஏற்படுத்துகிறது. தியன் ஷானில் பகுதியில் இருக்கும் கசாக்குகள் குடியிருப்பில் பயணிகளுக்கு உணவு சமைத்துக் கொடுத்து சிறு வியாபரம் செய்கிறார்கள்.
கால ஓட்டத்தில் பலரும் நிரந்தர குடி இருப்புகளுக்கு நகர்ந்துவிட்டாலும் மலை அடிவாரங்களில் இன்னும் சிலர் கூடாரங்களில் வாழ்வதைக் காண முடிகிறது. கசாக் மக்களின் கூடாரங்கள் மங்கோலியர்களின் கூடாரங்களைப் போலவே உள்ளன. அதிக மாறுபாடுகள் கிடையாது. இக்கூடாரங்கள் நீர்நிலை பகுதிகளுக்கு அருகாமையில் அமைக்கப்பட்டுள்ளன. மேய்ச்சல் நில கால மாற்றங்களுக்கு ஏற்ப கூடாரங்களை இடம் மாற்றி அமைந்துக் கொள்வார்கள். இப்படியானவர்கள் இன்னும் நாடோடி வாழ்வை மேற்கொள்கிறார்கள். ஆடுகளை அதிகமாக வளர்க்கிறார்கள், அதன் இறைச்சி சுவை மிக அருமையாக உள்ளது. அது போக குதிரைகளையும், அடர் ரோமங்கள் கொண்ட ஒட்டகங்களையும் வளர்க்கிறார்கள். ஒட்டக பால், தயிர், இறைச்சியையும் விற்பனை செய்கிறார்கள். ஒட்டக தயிர் அதீத புளிப்பு கொண்டதாக உள்ளது. அதன் இறைச்சி மஞ்சள் கொழுப்பு கொண்டதாகவும் மிருது தன்மை குறைவாகவும் உள்ளது. குதிரைப் பாலையும் சிறு சீசாக்களில் அடைத்து விற்கிறார்கள். கசாக்குகள் தங்கள் கூடாரங்களுக்கு வரும் விருந்தினருக்கு வெண்ணை தேநீர் (Butter Tea) கொடுக்கிறார்கள். இதே உபசரிப்பு முறையை மங்கோலியர்களிடத்திலும் கண்டிருக்கிறேன். பட்டர் டீ குடிப்பதற்கு தேநீர், வெண்ணை மற்றும் உப்பு சுவை கலந்ததாக இருக்கும்.
கசாக் மக்கள் வேட்டை விருப்பம் கொண்டவர்கள். கழுகுகள் இவர்களின் வேட்டை ஆயுதமாக செயல்படுகின்றன. கழுகுகளை வேட்டைக்கு பழக்குவது சுலபமல்ல. அதற்கு பிரத்தியோக திறமைகள் வேண்டும். இந்த கழுகுகள் அவர்களின் குடும்ப நண்பனும் கூட. மலைகளில் இருக்கும் கழுகு கூடுகளை நோட்டம் விட்டு பிடிப்பார்கள். கழுகு அதன் மூர்க்க வாசனையை இழக்க அதன் உடலையும், முக்கியமாக வயிற்றுப் பகுதியையும் பல முறை நீரில் கழுவி சுத்தம் செய்வார்கள். இரண்டு வாரங்களுக்கு இப்படிச் செய்து அதை சாந்தப் படுத்துவார்கள்.
அடுத்ததாக உணவளித்து வசப்படுத்துவார்கள். தடித்த கை உறைக் கொண்டே கழுகிற்கு உணவளிக்க முடியும். நாளுக்கு நாள் உணவளிக்கும் போது கழுகோடு அவர்கள் நிற்கும் தூரத்தை அதிகரித்துக் கொண்டே செல்வார்கள். கழுகு எஜமானர் நிற்கும் திசையை நோக்கி பறக்கப் பழக்குவார்கள். கழுகு எஜமானரின் வாசனையை அறிய இறைச்சியோடு அவரின் எச்சிலை துப்பி பிசைந்து கொடுப்பார்கள். கச்சிதமாக பறந்து கையில் அமர்ந்து இறைச்சியை சுவைக்கும் பக்குவம் பெறும் வரை குடிலின் உள்ளேயே அவை வைத்திருக்கப் படும். அதன் பின் வெளியே கொண்டு வந்து பயிற்சி கொடுப்பார்கள். வேட்டை கழுகுகளுக்கு கொஞ்சமாகவே உணவளிப்பார்கள். அவை எப்போதும் பசி உணர்வோடு இருக்கும்படி பார்த்துக் கொள்வார்கள். இப்படியாக அதன் வேட்டைப் பயிற்சிகள் சில ஆண்டுகளுக்கு தொடரும்.
வேட்டைக்குக் கொண்டுச் செல்லும் போது அவற்றிக்கு உணவளிக்க மாட்டார்கள். அதன் வேட்டை மூர்க்கம் அதிகரித்து இருக்கப் பார்த்துக் கொள்வார்கள். அதற்கு தலைக்கவசம் இட்டு கண்களை மறைந்து, கால்களில் சங்கிலி போட்டு வேட்டை இடத்திற்கு கொண்டுச் செல்வார்கள். கசாக்குகள் குளிர் காலத்தில் அதிகம் வேட்டையில் ஈடுபடுவதாக கூறுகிறார்கள். மங்கோலியர்கள் நாடு பிடிக்கும் படலத்தின் போது போர்கலங்களில் வேட்டைக் கழுகுகளை பயன்படுத்தினார்கள். அவற்றை விலைமதிப்பற்ற பொக்கீஷமாக அடையாளப்படுத்தினார்கள். வேட்டையாடும் கசாக் குதிரையில் அமர்ந்திருக்க கழுகு வேட்டை பிராணியை தாக்க ஆரம்பித்தவுடன் வேட்டை நாய்கள் அப்பிராணியை சுற்றி வளைத்துவிடும். பிறகு வேட்டை பிராணியைக் கொன்று எடுத்து வருவார்கள்.
கசாக்குகள் தங்களின் சரித்திர சுவடுகளை பாடல்களின் வழி சேமித்து வைத்துள்ளார்கள். இன்றும் அவற்றை பாடி மகிழ்கிறார்கள். அவர்களின் இசையில் அதிகபடியாக தம்பூரா வாத்தியங்கள் இடம் பெற்றுள்ளன. திருமணத்திற்காக குதிரைப் பந்தய சடங்குகளை மேற்கொள்வதாக கூறுகிறார்கள். Kyz Kuu எனப்படும் அச்சடங்கை முத்தச் சடங்காகவும் குறிப்பிடுகிறார்கள். திருமணத் துணையை தேர்வு செய்ய பெண்களுக்கே முன் உரிமை கொடுக்கப்படுவதாகக் கூறுகிறார்கள்.
சீனர்களோடு அவர்கள் நாட்டு அரசியல் தொடர்பாக பேசக் கூடாது என்பது பாலபாடம். இருந்தும் நான் சந்திந்த கசாக் நண்பர் அவராகவே மனமுவந்து சில கருத்துகளைப் பரிமாறிக் கொண்டார். அரசியல் பார்வை அவரவர் விருப்பம் கொண்டது. சின்ஜியாங்கில் உள்ள கசாக் மக்கள் கசாக், உய்ஹூர் மற்றும் சீனம் என மும்மொழிகளில் பேசுகிறார்கள். அவர்களுடை சீன உச்சரிப்பு மிக அடர்த்தியாக உள்ளது. தொடர்ந்து நடந்து வந்த குண்டு வெடிப்புகளாலும், கலவரங்களாலும் சின்ஜியாங் பகுதியில் 2014ங்கு முதல் கட்டுபாடுகள் அதிகரிக்கப்பட்டது. தங்கும் விடுதி, பேரங்காடி, உணவகம் என எங்குச் சென்றாலும் போலிஸ் காவல்கள் நீக்கமற நிறைந்துள்ளன. 2014-ல் அதிகபடியான மீள்கல்வி பாடசாலைகள் (Xinjiang re-education camps) சின்ஜியாங்கில் தொடங்கப்பட்டன. அவை இருக்கும் இடமும் அவற்றில் கம்யூனிச போதனைகளை பயின்று வருவோரின் எண்ணிக்கையும் அறிவார் இல்லை. ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒருவர் விகிதம் இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. அந்த ஆண்டில் பலரும் சின்ஜியாங்கில் இருந்து வெளியேறி தஞ்சம் கோரினர். தற்சமயம் சின்ஜியாங்கில் கலவர புகைச்சல்கள் இல்லாமல் பயணிகள் சென்று வர அச்சூழலில் இறுக்கம் தளர்ந்துள்ளது. மனதைக் கவரும் இயற்கை வளம் இங்கு நிறைந்துள்ளது.
கசாக் மக்கள் சின்ஜியாங் தவிர்த்து சீனாவின் கான்சூ, சிங்ஹாய் மற்றும் திபெத் மாநிலங்களிலும் சிறுபான்மையாக வசிக்கிறார்கள். திபெத்தியர்களோடு பிணக்கு ஏற்பட்டு பிரச்சனைகள் உண்டானதாகவும் தகவல் உண்டு. கசாக் மக்களின் Golden Eagle Festival இலையுதிர் காலத்தில் கொண்டாடப்படும் பண்டிகை ஆகும். மங்கோலியாவில் மிக விமரிசையாக கொண்டாடப்படுவதோடு தற்சமயம் அது சுற்றுளா மயமாக்கப்பட்டுள்ளது. The Eagle Huntress எனும் திரைப்படம் மங்கோலியாவில் வாழும் கசாக் சிறுபான்மை மக்களின் வாழ்வியலை பதிவு செய்துள்ளது. தரவுகள் தொடர்பான சர்ச்சைகள் இருப்பினும் அப்படம் நாடோடிகள் வாழ்க்கை முறையை குறிப்பிட தவறவில்லை. கழுகு போட்டிகள் இன்னும் பிற கசாக் வசிப்பிடங்களிலும் நடத்தப்படுகின்றன. இயற்கையோடு இயந்து வாழும் இவர்கள் பறவையை கொடுமைச் செய்வதாக நாகரீக உலகம் இன்னும் சீண்டி பார்க்கவில்லை.
-முற்றும்.