மியன்மார். புத்தம் பரவிய பூமி. ஸ்ரீ லங்காவை போலவே In the name of Buddha என இதன் அரசியல் பின்னணியும் உள்ளது. மியன்மாரில் சிறுபான்மையாக இந்துகள். அந்த சிறுபான்மைக்கு அன்னாந்து பார்க்கும் அளவுக்கு கோவில். அந்தக் கோவில் கோபுரம் மட்டும் தான் உயரமாக உள்ளது. மக்களின் வாழ்க்கை தரமோ கோவில் வாசலை விட மோசமாக உள்ளது. பாகுபாடு மிகுந்த அரசியல் நிலையால் அதிகமான அகதிகளை உருவாக்குவதில் முதல் நிலை வகிக்கிறது இந்நாடு. அதில் மிகுதியாகவே முகமதிய அகதிகள்.
மியன்மார் அகதிகளின் தொல்லை தாய்லாந்து மற்றும் மலேசிய குடியுரிமை இலகாக்களுக்கு பலமான தலைவலியை கொடுக்கும் விடயங்களில் ஒன்று. தரை வழி பயணமும், கள்ளத் தோனியும் இவர்கள் இங்கு குடியேற காரணம். கூட்டமாக இவர்கள் வந்த படகு சுட்டு வீழ்த்தப்பட்ட ’சம்பவங்களை’ கேள்விபட்டதுண்டு. முறையான கடப்பிதழ் இன்றி பிடிபடும் இவர்களை திருப்பி அனுப்புவதிலும் பெரும் சிக்கல். எவ்வளவு துள்ளியமாக மியன்மார் மொழி பேசுபவராக இருப்பினும் தூதரகங்கள் ’இவன் என் நாட்டினன்’ என்பதை மறுக்கவே செய்கின்றன. ’ரொகின்யா’, ‘ஹரக்கான்’, ‘சின்’, ‘மின்’ என இவர்களுக்குள் பல பிரிவுகள். பிளவுகளும் கூட. சில அகதி முகாம்களில் பத்து பன்னிரண்டு ஆண்டுகள் என இவர்கள் காலம் கடத்தி வருவது அரசாங்க பணத்திற்கான கேடு.
வெண்ணிற இரவுகள் காதலின் ஊடலை மையமாக கொண்ட கதையோட்டம். சலிப்பு தட்டாத கதை. படத்தை பார்த்து முடிக்கையில் தோன்றியது ஒன்று தான். இப்படிபட்ட தமிழ்ப்படங்கள் மலேசிய சூழலில் இன்னும் அதிகமாகவே வர வேண்டும். திறம் கொண்ட படைப்பாளிகள் இங்கு அதிகமாகவே இருக்கிறார்கள். மக்களின் ஆதரவு என காண்கையில் திரையரங்கம் பல் இளிக்கவே செய்கிறது. முந்தைய படைப்புகள் தான் இதற்கு காரணம். மலேசிய திரைப்படத்தை திரையரங்கில் பார்ப்பது சொந்தக் காசுக்கு சூன்யமாகும் எனும் கருத்தே பலரிடமும் ஆழமாக பதிந்துள்ளது. வெண்ணிற இரவுகள் கொஞ்சமும் ஏமாற்றமளிக்கவில்லை. அடுத்த படைப்புகளுக்கான நம்பிக்கையை கொடுத்திருக்கிறார் இயக்குனர். மலேசிய சூழலில் சில நல்ல படைப்புகள் முன்பு வந்திருந்தாலும் அவை திரையிடப்படாமல் இருந்திருக்கின்றன. வெண்ணிற இரவுகள் ஒரு புதிய தொடக்கமாக அமைந்துள்ளது. இது நிச்சயமாக வெற்றி பெற கூடிய தொடக்கமும் ஆகும்.
தனது கடன்கார முன்னாள் காதலனை தேடிச் செல்கிறார் காதலி. மலேசியாவின் ‘ஏர் ஆசியா’ விளம்பரத்துடன் மியன்மாருக்கான இவரின் பயணம் தொடங்குகிறது. கதைக் களம் மியன்மார், மலேசியா, சிங்கப்பூர் என விருவிருப்பை கூட்டுகிறது. மியன்மாரில் மகேனை தேடும் போது காட்டப்படும் இடம் தான் நான் ஆரம்பத்தில் கூறிய கோவில். இங்கே இயக்குனரின் நூதனம் வியக்க வைக்கிறது. தமிழர்களிடையே பாழாய் போன ஓர் எண்ணம் உண்டு அது ஹிந்து மதமும் தமிழனும் பிரிக்க முடியாத சக்தி எனும் அசைக்க முடியாத நம்பிக்கை. கோவிலை காட்டுவதன் வழி மியன்மாரின் தமிழ் குடியினரையும் காட்டிவிடுகிறார். ‘அங்கயும் தமலவங்க இருக்காங்க பாரு’ எனும் எண்ணத்தை 'பாமரனிடம்' புகுத்தும் எளிய வழி. உண்மையில் அதிகமான தமிழ் முஸ்லிம்களும் அங்கே வசிக்கிறார்கள்.
பாடாவதியான வசனங்களினால் பல மலேசிய ’டெலிமூவி’கள் நம்மை வெயில் காய வைத்துள்ளன. ‘வாழ்க்கைனா என்னானு தெரியுமா’ எனும் வகையிலான வசனங்களை கேட்டாலே சேனலை மாற்றும் மனப்போக்கை தான் மலேசிய தமிழ் நன்னெறி திரைப்படைப்புகள் இங்கே ஏற்படுத்தியுள்ளன. புதிய தலைமுறையின் திரை ஆர்வமும் படைப்புகளும் இதை பலமாகவே மாற்றி அமைக்கும் என்பதாக உணர்கிறேன்.
’நுசந்தாரா’ எனும் சூழல் மியன்மார் முதல் இந்தோனேசியா வரை பல நாடுகளை உள்ளடக்கியது. இந்தப் பகுதிகளில் சேவல் சண்டை மிக பிரபலம். மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் அதீத சட்ட அழுத்தத்தால் இவ்விளையாட்டு வழக்கொழிக்கப்பட்டது. இது கல்வெட்டில் பொறிக்கப்பட்ட பாரம்பரிய விளையாட்டும் ஆகும். மியன்மார் மக்களோடு மக்களாக சேவல் சண்டை விட்டுக் கொண்டிருக்கும் காட்சியோடு மகேனின் கதாபாத்திரம் தொடங்குகிறது. வறண்ட பூமி, வயல் வெளி, குடிசை வீடு என எல்லா பாகுதிகளிலும் கேமரா கோனம் பயணித்துள்ளது. காதல் கதை என்பதால் மியன்மார் மக்களின் சமூக சூழல் அழுத்தத்தோடு முன் வைக்கப்படவில்லை. திரைக்கதைக்கு அது ஒவ்வாததாகவும் கருதி இருக்கக் கூடும்.
ரமேஷ், மேகலா என இரு கதாபாத்திரங்களை மையமாக கொண்டே திரைக்கதை நகர்கிறது. இதற்கு நிச்சயமாக அசாத்திய திறன் வேண்டும். முக்கிய கதாபாத்திரம் இந்த இரு ஜோடிகள் மட்டுமே என்றிருக்க கதையை சுவாரசியமாக சொல்லி முடிப்பது சவாலான காரியமே. நிகழ்காலத்திலும் பழய நினைவுகளுடனும் படம் நகர்வதால் கதையோட்டம் போர் அடிக்காமல் உள்ளது. இந்த இரு கதாபாத்திரங்களுக்கும் உள்ள முரண் நாயகன் ஜாலியான கேரக்டராகவும் நாயகி சீரியசான கேரக்டராகவும் காட்டப்படுவது. ஒவ்வொரு காட்சிகளும் இளமையின் துள்ளலோடு நகர்ந்துச் செல்ல இது பெரும் பலமாக அமைந்துள்ளது.
லாஜிக் தவறுகளை சுட்டிக்காட்டாவிட்டால் இவ்விலக்கிய சமூகம் என்னை மன்னிக்காது என்பதால் இதன் சில குறைபாடுகளையும் காண்போம். தந்தையின் மீது வெறுப்பு மிகுந்த ரமேஷ் தன் படிப்புக்கு தானாகவே பணம் தேடிக்கொள்கிறார். அப்படியாக மேகலாவிடம் நாமம் போடும் பணம் சில ஆயிரங்கள். இருந்தும் இவர் கையில் ஸ்டீவ் ஜாப்ஸின் ஆப்பிள் பளபளக்கிறது. ’புரட்டாசிக்கு ஒரு மாசம் சைவம்’ எனும் மேகலா, ரமேஷிடம் இங்க ‘காட்டுப் பன்டி’ கிடைக்காதா என நம் போன்ற பிஞ்சு பார்வையாளனின் மனதில் கள்ளுக்கடையை ஞாபகப்படுத்தி தொலைக்கிறார். மேகலா ஒரு வலைபதிவர். ’வெட்பிரஸ்’ தளத்தில் வெண்ணிற இரவுகள் என தனது பிளாக் எழுதி வருகிறார். எந்த வலைத்தளமாக இருந்தாலும் ‘கொம்பஸ்’ பகுதியில் மட்டுமே உள்ளீடுகளை செய்ய முடியும். ஆனால் அவரோ முகப்பு தளத்தில் தட்டச்சு செய்வது ‘நொட்டையாக’ உள்ளது.
மலேசிய பல்கலைக்கழக மாணவர்களின் வாழ்க்கை முறையை மிக யதார்த்தமாக காட்டியுள்ளார்கள். யூனிவர்சிட்டியில் கொடுக்கப்படும் பட்டப் பெயர், ஓரெண்டேஷன் @ ரேகிங் போன்ற காட்சிகள் மலரும் நினைவுகளாக உள்ளன. மீண்டும் மீண்டும் வரும் அதே ’ஸப்போர்டிங் ஆர்டிஸ்’ காட்சிகளை தவிர்த்து இருக்கலாம். அதாவது மேகலா மகேன் உற்ற தோழர் தோழியரை தாண்டிய மற்ற கதாபாத்திரங்களை குறிப்பிடுகிறேன். இது போக மகேன் (ரமேஷ்) மற்றும் ’சைக்கோ மந்திரா’ (ரமேஷின் நண்பன்) பாடகரையும் தவிர்த்து அதிகமான தமிழ் இளைஞர் கதாபாத்திரங்கள் இல்லை. பெண்களின் ஆதிக்கம் கதையில் மிகுந்துள்ளது.
மலேசிய காட்சி அமைப்புகள் ஒவ்வொன்றும் கண்ணில் ஒற்றிக்கொள்ளும் பசுமையோடும் மியன்மார் காட்சி அமைப்புகள் வறட்சி நிலையும் மிகுந்து உள்ளன. இரு வேறு நிலப்பகுதிகளில் வாழும் தமிழர்களின் வாழ்க்கை நிலை காத தூர வேறுபாடுகளை உணர்த்துகிறது. வசதியற்ற அவர்களின் நிலையை தமிழ் தேசியம் மறந்தே வாழ்கிறது. புரட்சிக்கும் போருக்கும் மட்டும் தமிழ் தேசியம் முதுகு வளையும் என்பதாகவே இதை உணர்கிறேன்.
உணர்ச்சி மிகு தருணங்கள் மேகலா எனும் கதாபாத்திரத்துக்கு மிக எளிதாக அமைந்திருக்கிறது. அலட்டிக் கொள்ளாமல் நடித்திருக்கிறார். அழுகை, பயம், கோபம், நகைச்சுவை, யதார்த்தமென கலக்கி இருக்கிறார். ஆரம்பக் காட்சிகளில் சோடாபட்டி கண்ணாடியுடனும், ஒப்பனை பவுடர் அடர்த்தியுடனும் நாம் பார்க்கும் மேகலா நிகழ்கால தைரிய பெண்ணாக முற்றிலும் மாறுபடுகிறார். மனதை பறிக்கும் அழகுடன் இருக்கிறார்.
’சைக்கோ மந்திரா’ ’பத்தல பத்தல சூரு பத்தல’ எனும் பொன்னான வரிகளில் ஏதாகினும் பாடலை பாடிவிடுவாரோ எனும் அச்சத்தில் இருந்து காப்பாற்றி இருக்கிறார்கள். பாடல் வரிகளும் இசை அமைப்பும் நெஞ்சில் நிற்கின்றன. ரிங் டோன் வைத்துக்கொள்ளும் வசதி செய்துள்ளார்களா எனும் விவரம் தெரியவில்லை.
மியன்மார் காட்சி அமைப்பு எனும் பட்சத்தில் புத்த மடாலயங்களை படக்குழுவினர் மறக்கவில்லை. பார்க்கும் இடமெங்கும் முளைத்த காளான்களாக இருப்பது அது தானே. இங்கே தமிழர்கள் இருக்கிறார்கள். இவர்களின் இலக்கிய பாரம்பரியம் என்ன? மொழியை மறக்காமல் இருக்கும் போது எழுத்தை மறந்திருக்க கூடுமா எனும் எண்ணங்களை தவிர்க்க முடியவில்லை.
உலகச் சந்தையில் மதிப்பு குறைந்த மியன்மார் நாணயம் ஊடலில் பிரிந்த காதலரின் உறவை மீட்டுணர வைக்கிறது. ஊடல் தவிர்த்து வேறு என்ன காரணங்களுக்காக பிரிந்தார்கள் என்பது படத்தின் முக்கிய திருப்புமுனைகள். அவர்களை மியன்மார் நாணயம் இணைத்ததா அல்லது பிரித்ததா என்பது உட்ச பட்ச காட்சி. இப்படத்தின் வசன அமைப்புகளில் மகேன் தன் சித்தியுடன் பேசும் காட்சி அமைப்பே சற்று சறுக்கல் கொண்டுள்ளதாக கருதுகிறேன். அதன் அழுத்தம் ஒப்ப மறுக்கிறது.
மலேசிய தமிழ் திரைப்படைப்புக்கு வெண்ணிற இரவுகள் ஓர் அடித்தளமாக அமைந்துள்ளது. இது மென்மேலும் வளர வேண்டும். நிச்சயமாக திரையரங்குகளில் இப்படத்தை காண தவறாதீர்கள். படக்குழுவினருக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.
வெண்ணிற இரவுகள் (White Nights) - நவீன டொஸ்தாயெவ்ஸ்கியின் காதல்.