
யூனான் 'Yunnan' சீன தேசத்தில் அறியப்பட்ட ஓர் இடம். நாளுக்கு நாள் இங்கு காடுகள் அழிக்கப்பட்டு வருகின்றன. அதற்கான காரணம் யாது? முடிச்சுகளை அவிழ்த்துக் காண்கையில் இப்போது இக்கட்டுரையை படிக்கும் நீங்களும் நானும் கூட அதில் சம்பந்தப்பட்டிருப்போம்.
யூனான் பகுதியில் தாழ்ந்த நிலபரப்பில் அமைந்திருந்த காடுகள் பரவலாக அழிக்கப்பட்டுவிட்டது. இப்போது காணுமிடமெங்கும் ரப்பர் மரங்கள் நடப்பட்டுள்ளன. இடங்கள் போதாமல் மேடான பகுதிகளும் மெல்ல மெல்ல அழிக்கப்பட்டு வருகிறது. அவ்விடங்களிலும் இரப்பர் மரங்களை நடுவதற்கான ஏற்பாடுகள் நடந்த வண்ணம் இருக்கிறது.
சீன தேசத்தில் உந்துகளின் வட்டை(Tyre) உற்பத்தி அதிகரித்து வருகிறது. சீன தேசத்துப் பொருட்களுக்கு செல்வாக்கு அதிகம். அதற்கு காரணம் மலிவான முறையில் விற்பனை காணும் பொருட்கள். வெளிநாட்டிளும் உள்நாட்டிளும் வட்டைக்கான கோரிக்கை அதிகரித்துள்ளது. போதாமையின் காரணமாக யூனான் காடுகள் அழிக்கப்பட்டு அங்கு இரப்பர் மரங்கள் நடப்பட்டு வருகிறது.
சிசுவாங் பன்னா 'Xishuang-banna', யூனானில் அமைந்துள்ள ஒரு வட்டாரமாகும். இவ்வட்டாரத்தின் காட்டுப்பகுதிகளில் பலதரபட்ட விலங்குகளும் தாவரங்களும் உள்ளன. ரப்பர் வேளான்மையின் அதீத வேகத்தால் இவை பெரும் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறது.முப்பது ஆண்டுகளுக்கு முன் 'சிசுவாங் பன்னா' பகுதியில் 70 விழுக்காடு காடுகளும், மலைகளும் நிறைந்திருந்தது. சிசுவாங் பன்னா சீனா மற்றும் மியன்மார் தேசத்தின் எல்லையில் உள்ளது. இன்றைய நிலையில் 50 விழுக்காடு காடுகள் அப்பகுதியில் அழிக்கப்பட்டுவிட்டன.
ஒர் அதிகாரப்படி செய்தியில் யூனான் பகுதியில் மட்டும் 334,000 எக்டர் பரப்பளவில் ரப்பர் மரங்கள் நடவு செய்யப்பட்டுள்ளன. இது சீனவில் இருக்கும் மொத்த ரப்பர் வேளான் பகுதிகளில் 43 விழுக்காடாகும்.
2007-ஆம் ஆண்டு மட்டுமே சீன தேசத்தில் 2.35 டன் இரப்பர் உபயோகிக்கப்பட்டிருக்கிறது. இதற்காக தாய்லாந்து, மலேசியா மற்றும் இந்தோனேசியா போன்ற நாடுகளில் இருந்து சுமார் 70 விழுக்காடு இரப்பர் சீனாவால் வாங்கப்பட்டிருக்கிறது.
உள்நாட்டு வட்டை தயாரிப்பிற்காகவும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும் கடந்த 2000-ஆம் ஆண்டு முதல் அதிகமான கோரிக்கைகள் ஏற்பட்டது. இது ஒரு புரம் அவர்களுக்கு மகிழ்ச்சியான விசயமாக அமைந்தாலும் ரப்பர் உற்பத்திக்காக மெற்கொண்டுள்ள முயற்சிகள் அவர்கள் நாட்டின் இயற்கைக்கு பாதகமாகவே அமைந்துள்ளது.

2007-ஆம் ஆண்டு 330கோடி வட்டைகள் சீனாவில் உருவாக்கப்பட்டது. அதில் 50 விழுக்காடு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. குட் இயர் (GoodYear), கண்டினென்டல் ஏ.ஜி மைக்ஹெலின் (Continental AG Michelin), பிரிட்ஜ் ஸ்டோன் (Bridgestone) போன்ற உலகப் புகழ் பெற்ற வட்டை நிருவனங்களும் கூட தங்களது உற்பத்தியை சீனாவில் தொடங்க திட்டமிட்டுள்ளன. இதற்கு காரணம் மலிவான உற்பத்தி மட்டுமல்ல. அதிகமாக லாபம் ஈட்டும் நோக்கமும் தான்.
இக்கோரிக்கைகளை நிறைவேற்றும் நோக்கில் சீனா தனது இரப்பர் உற்பத்தியை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளது. 2010-ஆம் ஆண்டை இலக்காக கொண்டு தமது உற்பத்தியை 30 விழுக்காடாக அதாவது 780 000 டன் அதிகரிக்க முயற்சிப்பதாக சீன இரப்பர் உற்பத்தி இயக்கம்(China Rubber Industry Association) தெரிவித்துள்ளது.
இருப்பினும் ரப்பரின் உற்பத்திக்கு உகந்த நிலப் பகுதி தென் சீனாவில் அமைந்திரிக்கும் யூனான் போன்ற இடத்தில் மட்டுமே இருக்கிறது. இது அவர்களுக்கு பெறுத்த ஏமாற்றமே. கிடைத்த சிறு பகுதி நிலத்தையும் முடிந்த அளவு பயன்படுத்திக் கொள்ள நினைக்கிறார்கள்.
1967-ஆம் ஆண்டு முதல் 2003-ஆம் ஆண்டு வரை 67 விழுக்காடு மழைக் காடக வனப்பகுதிகள் ரப்பர் உற்பத்திக்காக அழிக்கப்பட்டிருக்கின்றன. யூனான் பகுதிகளில் இயங்கிவரும் ரப்பர் உற்பத்தியாளர்களே காடுகளின் அழிவிற்கு பொறுப்பாளிகள் என்பதனை ஒரு ஆய்வு நிருவணம் வெளியிட்டது.
யூனான் நேச்சுரல் ரப்பர் இண்டாஸ்டிரியல் (Yunnan Natural Rubber Industrial) அப்பகுதியில் இயங்கி வரும் மிகப் பெரிய இரப்பர் உற்பத்தியாளர்கள். ஆய்வு நிருவனத்தின் அறிக்கையை மறுக்கும் இவர்கள் ரப்பர் உற்பத்தியை வேளான் நிலத்திலும் மற்றும் அரசு இசைவுப் பெற்ற நிலப்பகுதிகளில் மட்டுமே மேற்கொள்வதாக அறிவிக்கிறார்கள்.
சீனாவில் வளர்ந்து வரும் பல ரப்பர் நிருவணங்கள் வெளிநாடுகளிலும் ரப்பர் தோட்டங்களை உருவாக்கி தங்கள் உற்பத்தியை அதிகரிக்க வழி கண்டு வருகின்றன.சமீபத்தில் மியன்மாரில் 1333 எக்டர் பரப்பளவில் இரப்பர் தோட்டம் ஒன்றை சீன நிருவணம் நிருவியுள்ளது. இதன் பயன்பாட்டை இன்னும் ஆறு அல்லது ஏழு வருடங்களில் அவர்கள் அனுபவிக்க முடியும்.
தற்சமயம் அப்பகுதிகளில் பரவலான முறையில் போப்பி மரங்கள் பயிர் செய்யப்பட்டுள்ளன. இன்னும் சில காலங்களில் அவற்றுக்கு மாற்று பயிராக ரப்பரை பயிர் செய்யவும், 1333 எக்டர் பகுதியை 33,333 எக்டராக விரிவுபடுத்தவும் அந்நிருவணம் திட்டமிட்டுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக ரப்பரின் விலை உயர்வு யாவரும் அறிந்ததே. அதைக் காரணமாகக் கொண்டு இயற்கையை பாழ்படுத்துவது வருந்ததக்க மற்றும் கண்டிக்கதக்கச் செயலாகும். இன்றைய பொருளாதார பாதிப்பில் ரப்பரின் விலை சுனக்கம் கண்டுள்ளது. இதனை சீனா மேற்கொள்ளப் போகும் யுக்தியை பொருத்திருந்து காண்போமாக.
(பி.கு: 21.12.2008 தமிழ் ஓசை நாளிதழில் வெளிவந்த எனது கட்டுரை)