Showing posts with label கொசுறு. Show all posts
Showing posts with label கொசுறு. Show all posts

Monday, February 20, 2012

கொசுறு 20-02-2012

நான் தவறு செய்கிறேன் என நினைப்பது நெகடிவ் அப்ரோச்... நான் கற்றுக் கொண்டிருக்கிறேன் என நினைப்பது பாசிடிவ் அப்ரோஜ்... என தமது தத்துவ புத்தகத்தில் இருந்து இந்த வரிகளை எடுத்து வீசுகிறார் சாணியடி சித்தர்.

Positive approach for negative people எனும் தலைப்பில் படித்த ஒரு கட்டுரையின் சுவாரசியத்தை பகிர்ந்து கொள்கிறேன். சுமார் 25 ஆண்டுகளுக்கு முன் டாக்டர்களும் மருத்துவ பணியாளர்களும் மருத்துவமனையில் வேலை சமயங்களில் புகைத்திருக்கிறார்கள். இதை தவிர்க்கும் படியும் புகை பிடிக்காத சமூகம் உருவாக வேண்டும் என்றும் ஒரு டாக்டர் வழியுருத்தினார். அந்த மருத்துவரும் ஒரு வெண்சுருட்டு விரும்பி என்பதால் அவரின் கருத்து சாத்தியமாகாத ஒன்றென அக்காலகட்டத்தில் நம்பினர்.
******

பாலகுமாரனின் எழுத்துகளை வாசித்தவர்கள் அவருடைய இரும்பு குதிரைகள் மற்றும் மெர்க்குரி பூக்கள் எனும் இரு நாவல்களையும் மாஸ்டர் பீஸ் என அடித்துக் கூறுவார்கள். அவர் எழுத்துகளில் நான் மிக இரசித்தது பயணிகள் கவனிக்கவும்.

குதிரைக்கு கட்டற்ற வேகம் அவசியம். இரும்பு குதிரை எனும் இச்சொல்லை எழுதும் போது ‘க்’ எனும் எழுத்தினை தவிர்த்திருக்கிறேன். இரும்புக்கு க் போட்டு எழுதும் போது அச்சொல்லின் வேகத்தை அது தகர்பதாக சொல்கிறார் பாலகுமாரன். இலக்கியவாதிகள் ஏற்க மாட்டார்கள் எனில் ஏற்காமல் போகட்டுமே என ஜாலியாக சொல்லி நாவலை முடிக்கிறார்.

இது பாலகுமாரனின் வாழ்வில் ஏற்பட்ட உண்மை நிகழ்வாக இருக்கக் கூடும் எனும் எண்ணம் நாவலின் ஒரு சில இடங்களில் நிரடுகிறது. நமது வாழ்வில் நடக்கும் சின்ன சின்ன விஷயங்களை நாம் பெரிதாக கருதுவது கிடையாது. ஆனால் இக்கதையின் முக்கிய பாத்திரமான விஸ்வநாதனின் வாழ்க்கைச் சம்பவங்கள் இயல்பானவை. அதை நேர்த்தியாக சொல்லியிருக்கிறார் பாலகுமாரன்.
******

மூன்று புள்ளி ஒரு ஆச்சரியக்குறி எனும் கோட்பாட்டில் லட்சக்கணக்கான கவிஞர்கள் இயங்கிக் கொண்டிருப்பதால் கவிதையின் டிமாண்ட் அதிவேகமாக சரிந்துவருகிறது. இனி உங்கள் காதலிக்கு கவிதை எழுத மூலையை கசக்கிக் கொள்ள வேண்டாம். ஐந்து நிமிடங்களில் உங்களுக்கு தேவையான கவிதையை தயர் செய்து கொடுக்கும் குழு ஒன்றை அமைத்துள்ளேன். எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது. கிரேடிட் கார்ட்டு அசேப்டபல்.
******

சாபு வகை போதை பொருளை பற்றி கேள்விபட்டிருக்கிறீர்களா. இதை ஐஸ் என்றும் குறிப்பிடுவார்கள். வெளிச்சம் ஊடுருவும் சின்ன சின்ன கிரிஸ்டல் பொடிகளை போல் இருக்கும். பொதுவாக சிகரட்டு பாக்கெட்டில் இருக்கும் ஒரு வகை மஞ்சல் அல்லது சில்வர் காகிதத்தை தேய்த்து சமன்படுத்தி கொள்வார்கள். அதன் மேல் இப்பொடிகளை போட்டு சூடுகாட்டி ஸ்ட்ரா வைத்து மூக்கில் உறிஞ்சிக் கொள்வார்கள். ‘செர்கமே என்றாலும்’ போல் இருக்குமென இதன் அதி விரும்பிகள் கூறுகிறார்கள்.

இந்த ஐஸ் வகை போதை பொருள் இரண்டாம் உலகப் போரின் சமயம் அறிமுகமானது. போதை பொருள் தடுப்பு பிரிவினர் இதனை ‘designer drugs' என செல்லப் பெயரிட்டு அழைக்கிறார்கள். இரண்டாம் உலகப் போரின் சமயம் போரில் ஈடுபட்ட இராணுவத்தினர் இதை அதிகமாக பயன்படுத்தியுள்ளார்கள் விமானிகள் உட்பட. இவ்வகை போதை பொருளானது அதை எடுத்துக் கொள்ளும் நபர் குறைந்தபட்சம் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு தூக்கம் இல்லாமல் இருக்க உதவுமாம்!

அமேரிக்கா, சீனா, ஜப்பான் என எல்லா இராணுவமும் கலந்துகட்டி இதனை பயன்படுத்தி இருப்பதால் இதை கண்டுபிடித்த கனவான் யார் எனும் சர்ச்சை இன்னமும் ஆய்வில் உள்ளது. இருந்தும் இது சப்பை மூக்குகாரனின் சதி வேலை தான் என அடித்துக் கூறுகிறது ஒரு தரப்பு. மலேசியாவில் இதன் ஆதிக்கம் 90களின் ஆரம்பத்தில் கண்டறியப்பட்டது. சபா மாநிலத்தில் பிலிபைன்ஸ் நாட்டின் கள்ளக் குடியேகளால் கொண்டுவரப்பட்டதாக சொல்கிறார்கள்.நாளடைவில் அதன் பயன்பாடு பரந்து விரிந்து பல பகுதிகளுக்கும் சென்றுவிட்டதாக கூறுகிறார்கள். மலேசியாவில் இது வரை இதன் வர்த்தகத்தில் பிடிபட்டவன் ஒரு ஈரானியன். அவன் ஒரு மில்லினியரும் கூட.

சமகால இலக்கியவாதிகளை போல் சமகால போதை பொருள் வகையில் குதிரை மாத்திரை கொஞ்சம் பேமஸ். இதை உட்கொண்டு நான்கு நாட்கள் கலவியில் ஈடுபட்ட ஒரு பெண்னை பற்றி அடுத்த பகுதியில் ஆவலுடன் எதிர்பாருங்கள்...
******

சமீபத்தில் கோவி கண்ணன் மற்றும் வெற்றிக்கதிரவன் இருவரையும் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. வெற்றிக்கதிரவன் பல கவிதைகளை பற்றி பேசினார். ஐபோனில் கவிதை பக்கங்களை படம் பிடித்து பத்திரபடுத்தி வைத்துள்ளார். ஓய்வு சமயங்களில் அதை எடுத்து படித்துக் கொள்வாராம். சரி நமக்கும் கவிதைக்கும் தான் ஏழாம் பொருத்தமாச்சே அதனால் என் தரப்பில் விவாதிக்க ஒன்றும் இல்லாமல் போனது. அது எப்படி சார் இந்த கவிதைனு சொல்லும் விசயம் உங்களுக்கு புரிகிறது என கேட்டேன். அது ஒரு அலைவரிசைதான் தம்பி, அந்த அலைவரிசை பிடிபட்டுச்சுனா நீ கண்டிப்பா கவிதாவை ’மன்னிக்க’ கவிதையை இரசிக்கலாம் என சொன்னார் அண்ணன்.

வெற்றி அண்ணனிடமிருந்து ‘திசை கண்டேன் வான் கண்டேன்’ எனும் சுஜாதாவின் புத்தகம் எனக்கு இலவசமாக கிடைத்தது. படித்து முடிக்காமல் வைக்க முடியவில்லை. அப்படி ஒரு ஸ்பீடான கதை. இந்த பூமி அழியுமாயின் மனிதர்களின் மாற்றம் எப்படி இருக்கும் எனும் கற்பனையை நகைச்சுவை கலந்த யதார்த்த தோடு எழுதியிருக்கிறார். ’மனிதர்கள் தத்தம் துரோகங்களுக்கு திரும்பினார்கள்’ எனும் இதன் கடைசி வரி எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

இது ஒரு மாய யதார்த்த கதைதான் சைன்ஸ் ஃபிக்‌ஷனின் சேர்த்தியாக கருத முடியாது என்றே கருதுகிறேன். சைன்ஸ் விசயங்களில் சுஜாதாவின் 21-ஆம் விளிம்பு புத்தகத்தின் ஒரு கட்டுரை இப்போது நினைவிற்கு வருகிறது. டி.என்.ஏ தொடர்பான ஒரு விசயம் என்னவெனில் எதிர்காலத்தில் தேவையில்லா அணுக்களை நீக்கி உடலில் உள்ள நோயை குணப்படுத்தும் முறை ஏற்ப்படலாம் என்பதே. இது சாத்தியமாகலாம்.
******

பொறித்த கோழி விற்பனை செய்யும் ஒரு துரித உணவகம். கொஞ்சம் பிசியான ஏரியா. மக்கள் விரும்பும் இடம் என்பதால் அதிக வாடிக்கையாளர்கள் செல்கிறார்கள். எதிர்பாராத விதமாக அன்று விற்பனை மிகுதியில் கோழி தீர்ந்து விட்டதாம். கடுப்பாகி போன ஒரு கஸ்டமர் சத்தம் போட ஆரம்பித்துவிட்டான். சத்தத்தின் அழுத்தம் தாங்காத வேலையால் கஸ்டமரை கை வைத்துவிட அது தேசிய பிரச்சனையாகிவிட்டது. தற்சமயம் இன பிரச்சனையாக பேசப்படுவது தகாத ஒன்று. 2012-ஆம் ஆண்டு கோழி துண்டு கிடைக்காததால் ஒரு நாட்டில் இன கலவரம் ஏற்பட்டது என சரித்திரம் பேசினால் கேவலம் அமைச்சரே.
******

’பையோ மெட்ரிக்’ பாஸ்போர்ட் எனப்படுவது சில டிஜிடல் அடையாள கோட்பாடுகளை கொண்டது. ஸ்கேனரின் ஒரு இழுப்பில் நமது சரித்திரத்தை கொட்டிவிடும். பையோமெட்டிக்கின் அடையாளம் நெருப்பு பெட்டியை போல் ஒரு சின்ன கட்டம். கட்டத்தை இரண்டாக பிரிக்கும் நடுவில் வட்டம் கொண்ட ஒரு கோடு. இந்த வகை அடையாளம் கொண்ட கடவுச் சீட்டுகள் (அதாம்பா பாஸ்போட்டு) மின் படிப்பி (பையோமெட்ரிக் சிப்ஸ்) வசிதிக் கொண்டதென அர்த்தமாகும்.

இன்னமும் சில நாடுகளில் இந்த வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லை. சீனா தேசம் இதில் அதிவேக அடைவை எட்டி உள்ளது. ஒருவரின் மருத்துவ குறிப்பு முதல் அந்த சிப்பில் அடக்கிவிடுகிரார்கள். வெளிநாட்டில் தவறு செய்து பிடிபடும் ஒரு சீன குடிமகன் வெளிநாட்டு தண்டனையோடு தன் நாட்டிலும் தண்டனை பெறுவான். மேலும் குறிப்பிட்ட காலத்திற்கு வெளி நாடு செல்ல அனுமதியும் மறுக்கப்படும். இந்தியாவில் வெளிநாட்டில் பணி புரியும் டிப்லோமட்டிக் ஊழியர்களுக்கு பையோமெட்ரிக் பாஸ்போர்ட் கொடுக்கப்படுகிறது. சில திங்களுக்கு முன் எனது மாமாவின் கனடா பாஸ்போட்டை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. கனடா பையோமெட்ரிக் சிப்சை தனது கடவுச்சீட்டின் இரண்டாம் பக்கத்தில் புதைத்திருக்கிறது. பயோமெட்ரிக் பாஸ்போட் இல்லாத ஒரு நாட்டின் குடிமகன் ஜனவரியில் பிரம்படியும் சிறை தண்டனையும் பெற்று அனுப்பப்பட்டு மீண்டும் நவம்பரில் சந்தித்ததும் உண்டு. நவம்பரில் அவன் ஜனவரியை மறுபடியும் சந்தித்தான்.

பொதுவாகவே இந்த சிப்ஸ்கள் பாஸ்போட்டின் கடைசி பக்கத்தில் இருக்கும். மெல்லிய நெகிழி (பிளாஸ்டிக்) தாளை போல் இருப்பதால் பயனர்கள் இதை அவ்வளவாக அறிந்திருக்க மாட்டார்கள். உங்களது பயோமெட்ரிக் பாஸ்போடின் <<<< >>> போன்ற அடைப்புக் குறிக்குள் எழுத்துகளுக்கும் எண்களுக்கும் ஒரு கணக்கு விகிதம் உள்ளது. சிப்ஸ் பழுதாகினாலும் மெசின் வேலை செய்யாமல் போனாலும் இதில் கொஞ்சம் கூட்டல் பெருக்கல் வகுத்தலை போட்டு போலியா அல்லது நிஜமானதா என்பதை அறிந்துக் கொள்ள முடியும்.

பயோமெட்ரிக் வகைகள் பல உண்டு. கால ஓட்டத்தில் இவை மாற்றம் அடைந்துக் கொண்டு வருவதிலும் வியப்பேதும் இல்லை. புலக்கத்தில் இருக்கும் பையோமெட்ரிக் வகைகள், கைரேகை பதிவு செய்யும் முறை, டி.என்.ஏ, கண்ணில் இருக்கும் பூபா, முகம் என நீல்கிறது. இதை பற்றி மட்டும் ஒரு தனி பதிவு எழுதலாம். மொத்தத்தில் இந்த பையோமெட்ரிக் அமலாக்கம் குற்றச் செயல்களின் ஃபோரென்சிக் விசாரனையின் ஆரம்ப கட்டத்திற்கு மிகவும் உதவி புரிகிறது.
******

சமீபத்தில் படித்து மனதை கவர்ந்த ENTER கவிதை:

யாருக்கோ காத்திருக்கும்
செய்து முடித்த
சவப்பெட்டியாய் நாம்
என்னில் நீயோ
உன்னில் நானோ
புதைக்கப்பட்டால்
பிரசவிப்போம்
பால் வீதியில்
சில நட்சத்திரங்களை

மழைக்கும் வெயிலுக்கும்
ஒரே குடை
வாழ்விற்கும் சாவிற்கும்
ஒரே மலர்
எனக்கும்
என் பிணத்திற்கும்
நீ
-பின்னிரவுப் பெருமழை தொகுப்பில் ரிலுவான் கான்
******

எனது முகபுத்தகத்திலிருந்து:
கண்ணதாசன் தனது வாழ்க்கையை மூன்று பாகங்களாக பிறித்து எழுத நினைத்த புத்தகங்கள் வனவாசம், மனவாசம் மற்றும் அஞ்ஞானவாசம். இதில் மனவாசம் எழுதிக் கொண்டிருக்கும் சமயம் அவர் நோய்யினால் இறந்து விடுகிறார்.

மனவாசத்தில் அவர் எழுதிய ‘தாய்கிளி’ எனும் கவிதையே அவர் கடைசியாக எழுதியது. தாய்லாந்து சென்றிருக்கும் சமயம் அவரோடு இருந்த ஒரு தாய்லாந்து பெண்னை பற்றிய கவிதை. இது அந்த தாய்லாந்துகாரிக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை :-). ஆக வனவாசம் முழுவடிவிலும் மனவாசம் பாதியாகவும் அஞ்ஞானவாசம் எழுதப்படாமலும் போனது.

மறைவின்றி கூறப்படும் கண்ணதசனின் வாழ்க்கை வரலாறு எதற்கும் அடங்காத காட்டாறகவே தெரிகிறது. முன்னுரையில் அவரே செல்கிறார் '' நான் எப்படி வாழ்ந்தேனோ அப்படி வாழாதீர்கள்; நான் கூறியபடி வாழ முயற்சியுங்கள்''.
*********

Tuesday, January 10, 2012

கொசுறு 10/01/2012

நெடுநாட்களுக்கு பின் எழுதுவது சிரம காரியமாக தான் உள்ளது। பலரும் எழுத்தில் சொல்லியதை தான் நான் மீண்டும் மீண்டும் எழுதிக் கொண்டிருக்கின்றேனோ என்ற மன விஷ்க்கி என்னை ஆட்கொள்கிறது. இதையே சாணியடி இப்படி சொகிறார்; எழுதிட்டு குடிச்சா பாசிடிவ் அப்ரோஜ், குடிச்சிட்டு எழுதினா நெகடிவ் அப்ரோஜ்.
*********

செப்டம்பர் முதல் நவர்பர் வரை தலைநகர் வாசம்। கல்வி முடித்து தலைநகரில் வேலை செய்த சில காலம் பொது வாகன சேவையை மட்டுமே கதியென்றிருந்தேன். பணி நிமித்தம் இம்முறை வாகனத்தில் வந்தேன். வந்து நான் பட்ட அவஸ்தைகள் நிச்சயமாக சரித்திரத்தில் இடம் பெற வேண்டும் என பரிந்துரைக்கிறேன்। ஜி।பி.எஸ் போன்ற வஸ்த்துகளை பயன்படுத்தியும் பல முறை பாதைகளை தவறவிட்டு விட்டேன். அடித்து பிடித்து ஜெய பக்தி புத்தக கடையை அடைந்தேன்.

பலமுறை அவ்விடம் சென்றிருப்பினும் இம்முறை ஓர் அதிர்ச்சி. சமகால இலக்கிய புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. இது மகிழ்ச்சியை கொடுக்கும் செய்திதான். நான் சமகால இலக்கியம் என குறிப்பிட்டவற்றில் அதிகமானவை உயிர்மையின் புத்தகங்கள். மேலும் சில பெரிய பதிப்பகங்களின் புத்தகங்கள் வைக்கப்படில் இன்னும் சிறப்பாக இருக்கும்
************

கடந்த திங்கள் ஆதவனின் என் பெயர் ராமசேஷன் எனும் நாவலை வாசித்தேன்। எழுத்தாளர் பாலகுமாரனால் முன்மொழியப்பட்ட புத்தகபட்டியலில் இந்நாவல் இருந்ததை குறித்து வைத்திருந்தேன்। பிறகொருநாள் நண்பர் கிருஷ்ண பிரபுவும் இந்நாவலை பற்றி என்னுடன் உரையாடி இருந்தார் இருப்பினும் இப்போதுதான் வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது। அருமையான எழுத்து நடை। தன்னை முற்போக்கு வாதியாக கருதும் ஒரு கேரக்டர் இறுதியில் சொல்லும் “என் தங்கையை காதலிப்பவனின் பல்லை உடைப்பேன்” எனும் வாக்கியம் நச்.

*********
***

தற்சமயம் நான் அதிகமாக பயன்படுத்தும் சமூக வலைத்தளம்। முகப்புத்தகம் மட்டுமே. அதிகமாக என் நேரத்தை விழுக்கி கடிப்படிக்கிறது. ‘ச்சே’ என்னிருப்பினும் என் போன்ற பிரம்மச்சாரிகளால் இதை தவிர்க்க முடியவில்லை. இலச்சிமல ஆத்தா தான் கப்பாற்ற வேண்டும். இந்த பேஸ்புக் பைத்தியத்தை New Mental Health Disorder என குறிப்பிடுகிறார்கள். இந்த டிஸார்டர் பல கோடி மானுட ஜென்மங்களுக்கு ஏற்பட்டுள்ளது போல. நிச்சயம் உலகம் அழிந்துவிடுமோ எனும் மனோபாவ நிலைக்கு தள்ளப்பட்டு வருகிறேன்.
**************

சமீபத்தில் படித்த அருமையான Non Fiction முகில் எழுதிய யூதர்கள்। யூதர்கள் தொடர்பான சரித்திரத்தை கொஞ்சமும் சலிப்பில்லாமல் படிக்க முடிகிறது. இம்மாதிரியான புனைவு சார புத்தகங்கள் தமிழ் வாசகர்களால் அதிகம் விரும்பப்படுவதில்லை எனும் நிலையை கிழக்கு பதிப்பகத்தார் உடைத்துள்ளார்கள். கிழக்கின் பல புத்தகங்கள் வாசகர்களின் விருப்பத்திற்கேற்றபடி கொடுக்கப்பட்டுள்ளது.
************

ஐபோனின் பயன்பாடு மிக ஏதுவாக அமைந்துள்ளது। நோக்கியா மற்றும் ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் பேசிகளில் ஒபேராவின் குறைந்தபட்ச சேவையில் தமிழை படிக்க மட்டுமே முடிந்தது. இது முற்றினும் மாறுபட்டு ஐபோனின் தமிழ் ஒபேராவின் துணை இல்லாமல் படிப்பதுமட்டுமின்றி முரசு போன்ற இலவச மென்பொருள் வழி ‘டைப்’பவும் முடிகிறது. நன்றி முரசு.

************


இடைபட்ட காலத்தில் நான் பார்த்த படங்கள் மற்றும் புத்தகங்களை பற்றி எதையும் எழுதவில்லை। சளிப்பும் சோம்பலும் தான் இதற்கு காரணம். படித்ததையும் பார்த்ததையும் எழுதும் போது கிடைக்கும் ஆழமான நோக்கும் பதிவும் அதைச் செய்ய தவறும் போது மறந்து போகிறது.

இந்த ஆண்டின் புத்தக கண்காட்ச்சியில் ஆர்டர் செய்யப்பட்ட புத்தக பட்டியலை பிறகு கொடுக்கிறேன். அதில் நான் மிகவும் எதிப்பார்த்திருக்கும் புத்தகம் அந்தமான் சிறை அல்லது இருட்டு உலகம் எனும் சொக்கன் எழுதிய நூல். பிரிட்டீஸ் ஆட்சியின் கொடூர தன்மை உச்சகட்டத்தில் இருந்த இடங்களில் அந்தமான் சிறையும் அடங்கும். அதில் நமக்கு கொஞ்சமாக வெளிச்சம் போட்டு காட்டியது பிரபு மற்றும் மோகன்லால் நடித்த சிறைச்சாலை எனும் திரைப்படம். அதை தாண்டி வேறு வாசிப்புகள் எனக்கு கிட்டியதில்லை. ஆகவே, படிக்கும் வரிசையில் அது முதலிடத்தில் உள்ளது.
***********
சமீபத்தில் படித்ததில் ஹைலைட்டான ஒற்றை வரி: வாசிப்பு மட்டும் அறிவல்ல। இதை வேறு கோணத்தில் கிருபானந்த வாரியார் சொல்கிறார்: வாசிப்பு என்பது அறிவை வளர்க்காது. வாசிப்பு அறியாமையை நீக்கும் என்பதே சரி.
******

பொய் சரித்திரம்
எதிர்கால முட்டாள்களுக்கு

நிகழ்காலத்தில்
சாயம்பூசப்படும்
இறந்தகாலம்

-கவிஞர் விக்கி (யாரென கேட்பவர்கள் தனிமடல் அஞ்சவும்)

********


சாவாவிலுள்ள சோலோ ஆற்றங்கரையில் மாந்தனின் மண்டையோடும் இடது தொடை எழும்பும் இரண்டு பற்களும் சென்ற 1884 ஆண்டு யூகின் துபாயீசு என்பாரால் கண்டெடுக்கப்பட்டுள்ளன। இவனையே சாவா மாந்தன் என்று கூறினர். மாந்த உடற்கூடுகளை ஆய்ந்தவர் இம்மாந்தனின் அகவை 10 இலக்கம் ஆண்டுகள் என கணித்துள்ளார். இந்த உடற்கூட்டுக்கு முந்திய கால அளவில் எவையும் கண்டெடுக்கபடவில்லை. சிலவிடங்களில் கண்டெடுக்கப்பட்ட மாந்த உடற்கூடுகள் சாவா மாந்தனுக்கும் காலத்தால் பிற்பட்டவை என கருதுகிறார்கள்.

- குமரிக்கண்டம் எனும் நூலில் முதல் மாந்தன் எனும் தலைப்பில் இப்படி தொடங்குகிறார் ம।சோ.விக்டர். முதற் பக்கத்தில் சொல்லாய்வு அரிமா எனும் பட்டத்தை சேர்த்து பெயர் அச்சிடப்பட்டுள்ளது. ஆசிரியர் இப்புத்தகத்தை எழுதியதற்கு சுமார் 61 புத்தகங்களை மேற்கோல் காட்டி இருக்கிறார். உள்ளடக்கம் யாவும் கிரந்தம் கலக்காத அக்மார்க் தமிழில் உள்ளது என் போன்ற கடைநிலை வாசகனுக்கு வாசிப்பு தடையாக மட்டுமல்லாது. கூறினார் குறிப்பிட்டுள்ளார் எனும் சொற்கள் பக்கத்துக்கு பத்து முறை எழுதப்பட்டிருப்பது இது தொகுப்பு நூலோ எனும் சந்தேகத்தையும் கொடுக்கிறது.

Thursday, October 14, 2010

கொசுறு 14-10-2010

ஃபிகரோடு கோவிலுக்கு போவது நெகட்டிவ் அப்ரோச்,
ஃபிகர் பார்க்க கோவிலுக்கு போவது பாசிடிவ் அப்ரோச்,
- என சாணியடி சித்தர் சொல்லி இருக்கிறார்.
****
நெடுநாட்களாக விடுபட்டிருக்கும் பாகம் இது. நேரம் கிடைக்கும் போது எழுதுவதற்கு சுலபமாக அமைவதும் இந்த பகுதி தான். காரணம் இப்பகுதியில் தகவல் திரட்டுகள் குறைவு, யாவும் என் சிந்தனை பகிர்வுகளாக அமைகின்றன.

நாம் படிக்கும் சில கவிதைகள் நமக்குள் டக்கென ஒரு ஃப்ளாஸ் அடிச்சிட்டு போகும் பாருங்க அம்மாதிரியான கவிதைகளே எவ்வளவு நாட்களுக்கு பிறகு படிச்சாலும் புதிதாக படிப்பதை போலவே அனுபவத்தை கொடுக்கும். கற்றது தமிழ் எம்.ஏ எனும் திரைப்படத்தில் வரும் ஒரு கவிதையை கீழே கொடுத்திருக்கிறேன்:

புறாக்கள் வளர்க்கும் எதிர்வீட்டுக்காரர்

என்னிடம் இருந்து பறிக்கிறார்

பூனை வளர்க்கும் சுதந்திரத்தை


வாசிப்போரின் புரிதலுக்கு ஏற்ற மாதிரி இக்கவிதை வேறுபடலாம். நியூட்டனின் விதியை இதில் காண முடிகிறது. ஒரு செயலுக்கான எதிர்வினை. மற்றது வண்ணத்து பூச்சியின் விளைவு. பட்டம்பூச்சி சிறகடிப்பிற்கும் சுனாமி வருவதற்கும் ஒற்றுமை இருப்பதாக சொல்வார்களே, அதைப் போல். ஒபாமா சிந்தித்துக் கொண்டிருக்கும் ஒவ்வொரு கணத்திலும் உங்கள் பாக்கெட் பணம் காலியாகி கொண்டிருக்கிறது. புரிஞ்சவன் தான் புத்திசாலி.
****

பிக் பேங் தியோரி பற்றி ஏற்கனே எழுதி இருக்கிறேன். பிரபஞ்ச விளைவுகள் தொடர்பான கட்டுரைகள் பலவும் டாக்டர். ஜெயபாரதன் இணையத்தில் எழுதி வருகிறார். இவரின் பல கட்டுரைகள் புரிதலுக்கு சற்றே சிரமமானதாக இருக்கிறதெனினும் இப்படியான தகவல் களஞ்சியத்தை நமக்கு தொகுத்தளித்திருப்பது சிறப்பு.

Dark Matter என்பதை அண்ட சராசரத்தின் மாபெரும் அமைப்பு என்பதாக விஞ்ஞானிகள் விளக்குகிறார்கள். இன்றய டெக்னாலஜியின் துணைக் கொண்டு இதனை அறிந்துக் கொள்வதற்கான கருவிகள் கண்டுபிடிக்கப்படவில்லை. 2012க்கு இன்னும் ரெண்டு வருஷம் தானே இருக்கு அதுக்குள்ளாவது இதை பற்றி நாம் அறிந்துக்கொள்ள முடியுமா?
****
ஓரிரு மாதங்களுக்கு முன் நான் வித்யா எனும் திருநங்கையரின் சுயசரிதை புத்தகத்தை வாசிக்க நேர்ந்தது. லிவிங் ஸ்மைல் எனும் வலைபதிவின் உரிமையாளரான இவரின் புத்தகம் கிழக்கு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளது. திருநங்கையர் தொடர்பான புத்தகங்கள் தமிழில் வெகு குறைவானவையே. அவர்களின் உணர்வுக்கு மதிப்பளித்து மக்கள் மத்தியில் விளிப்புணர்ச்சி ஏற்படுத்தப்பட வேண்டும் எனும் நோக்கில் ஊடகங்கள் முயற்சித்து வருகின்றது. நல்ல விசயம் தான்.

என்னுள் எழுந்த சில சந்தேகங்களை இங்கு முன் வைக்கிறேன். தனது பாலியல் மாற்று அறுவை சிகிச்சைக்கு முன், பிச்சை எடுத்தாவது தனது பாலியல் மாற்றத்தை செய்துகொள்ள நினைக்கும் வித்யா அது நடந்த பின் திருநங்கையர் பிச்சை எடுக்கக்கூடாது அங்கீகாரம் வேண்டும் எனும் புரட்சிகர பெண்மணியாகிவிடுகிறார். அது தவறென சொல்லவில்லை. அச்சிந்தனை அறுவை சிகிச்சைக்கு முன்னதாக அவருக்கு தோன்றாமல் போன காரணம் என்ன? தன்னை மற்றவர் அவமானபடுத்திவிடக்கூடாது என்பதற்காகவே திருநங்கையர் அருவறுப்பாக நடந்துக் கொள்கிறார்கள் என சொல்கிறார்.

தன் இனத்திற்கு இழுக்கு செய்கிறார்கள் என்பதற்காகவே ஆண்கள் திருநங்கையரை கேலி செய்கிறார்கள். நம்புங்கள் இதுவும் உண்மை தான்.
******

மனித கடத்தல் தொடர்பான எனது தகவல் சேமிப்பின் போது படிக்க நேர்ந்த ஒரு செய்தி. ஒரு ஆண், ஒரு பெண்னை திருமணம் செய்துக்கொள்வதென்றால் கடத்திச் சென்றுவிட வேண்டுமாம். பிறகு அந்த ஆணின் பெற்றோர் கடத்தப்பட்ட பெண்ணின் பெற்றோரிடையே அனுமதி கேட்டு திருமணம் செய்து வைப்பார்களாம். இது ஒரு நாட்டில் ஓர் இனக் குழுவினரிடையே நடக்கும் செயல். என்ன நாடு என்பதை கண்டுபிடித்து சொல்லுங்கள் பார்க்கலாம்.
*****

தமிழ்த்திரையுலகில் மாற்றங்களை அமைத்தவர்கள் எனும் பட்டியலில் மணிரத்தினமும், ஷங்கரும் இடம் பெற்றிருப்பவர்கள். ஒரு படைப்பாளியிடம் அதீத எதிர்ப்பார்ப்புகள் இயல்பாகவே எற்படும். அதுவே பலரையும் ஏமாற்றமடையவும் செய்கிறது. மணிரத்தினத்தின் இராவணன் படம் வரும் முன்பும் சரி வந்த பின்பும் அதன் பால் எனக்கு அதீத ஈர்ப்பு ஏற்படவில்லை. பல படங்களில் இருட்டு இயக்குநராக இருந்த மணி, இராவணனில் ஐஸை மழையில் கரையவிட்டு ஜில் ஜில் இயக்குநராக மாறி இருக்கிறார்.ஷங்கரின் சிவாஜி படம் எதிர்ப்பார்த்த அளவில் இல்லை என்றாலும் ஏமாற்றத்தை கொடுக்கவில்லை. அரைத்த மாவு ருசியாகவே இருந்தது. சமீபத்திய ரோபோ மிக சாதாரண கதையம்சம் கொண்டது. ஹாலிவுட்டில் இது சென்ற நூற்றாண்டில் சிந்தனை வடிவம். அதை தமிழ் சினிமா இப்போது தான் எட்டிப்பிடித்திருக்கிறது என்றால் வரவேற்கப்பட வேண்டிய ஒன்று. ஒவ்வொரு காட்சியையும் ஒரு வாரம் சிந்தித்து படம் பிடித்திருப்பார்கள் போல. கொள்ளை அழகாக உள்ளது. பின்நவீனதுவ வியாதிகள் என்னத்தான் கீபோர்ட் உடைய தட்டச்சு செய்தாலும் படத்தின் வெற்றியை தவிர்க்க இயலாது. ஏன் அவர்கள் கூட படத்தின் குறையை கண்டுபிடிக்க இரண்டு மூன்று முறை ஓசி டிக்கட்டில் படம் பாத்திருக்கலாம். நல்ல வேலை காசு கொடுத்து பார்த்திருந்தால் தியேட்டரை எழுதி கொடுக்க சொல்லி இருப்பார்கள் போல.
****

சென்ற ஆண்டின் இறுதில் வேலை நிமித்தம் திரெங்கானு எனும் இப்பொழுது இருக்கும் மாநிலத்துக்கு வந்தேன். இங்கு வருவது அதுவே முதல் முறையும் கூட. தெரிந்தவர் அறிந்தவர் என யாரையும் தெரியாது. தங்கியிருப்பது கவர்மெண்ட் குவாடர்ஸ். வந்த முதல் நாளே இரவானால் ஏதோ கோலி விளையாடுவதாகவும், நாட்காலியை பரபரவென இழுப்பதாகவும், துணி துவைப்பதாகவும் சந்தம் கேட்கும் இதையெல்லாம் கண்டுக்கொள்ளாமல் தூங்கு என சொன்னார்கள்.

எவ்வளவோ ஆச்சு இதையும் பார்க்கலாமென இருந்துவிட்டேன். கிட்டதட்ட ஓர் ஆண்டு காலமாக போகிறது எந்த சத்தத்தையும் கேட்டதில்லை. நேற்று மலாய் நண்பரொருவரிடம் பேசிக் கொண்டிருந்தேன். என் பதவியில் இருப்பவர். இந்தோனேசியாவின் மலேசிய தூதரகத்தில் 3 ஆண்டுகள் பணிபுரிந்துவிட்டு வந்திருக்கிறார். வந்ததும் நான் இருக்கும் இடத்தில் டிரான்ஸ்வர் போட்டிருக்கிறார்கள். இரவானால் உன் வீட்டில் ஏதும் சத்தம் கேட்கிறதா என கேட்டார். இல்லை என்றேன். ஏதோ தவறாக இருப்பதை உணர்கிறேன் என்றார். நான் ஏதும் சொல்லவில்லை. அதுதான் நல்ல பொறுமைசாளிக்கு அழகுனு குருநாதர் சொல்லியிருக்கார்.

பேய் பிசாசுகள் இருப்பதாக சொல்பவர்களே அதிகமான கடவுள் நம்பிக்கையும் கொண்டிருக்கிறார்கள்.
*****
மழைகாலம் ஆரம்பித்துவிட்டிருக்கிறது. என் பணியிட மாநிலத்தின் தீவுகளை நான்கு மாதங்களுக்கு சுற்றுலா தடா செய்யப் போகிறார்கள். இந்த நான்கு மாதங்களில் தான் இந்தத் தீவுகள் தன்னை சுத்தம் செய்து கொள்கிறதோ என சிந்தித்ததும் உண்டு. கடந்த ஒரு வாரமாக மாலை வேளைகளில் மழை பொழிகிறது. இங்கு வந்த சமயம் எப்போது நான் வெயில் காலத்தை காண்பேன் என்றிருந்தேன்.

மீண்டும் மழை வந்துவிட்டது. மழைச் சமயங்களில் இயல்பாகவே சாலையில் கார்களின் எண்ணிக்கையும் அதிகமிருக்கும். டிராபிக் லைட். பார்க்கிங் தேட வேண்டும். இதனால் வேலைக்கு மோட்டார் செலுத்துவதையே விரும்புவேன். தற்போதய சூழல் என் காலை தூக்கத்தின் பல நிமிடங்களை விழுங்கிவிட்டது.
****

விடுகதை:
புல்வெளி பகுதி ஒன்றில் சில ஆடுகளும் கோழிகளும் உள்ளன. இவற்றின் தலைகள் மொத்தம் 20. கால்கள் 50. அப்பகுதியில் எத்தனை ஆடுகள் உள்ளன?
******

நளதமயந்தியின் சுயம்வரம் காண்டத்தில் உள்ள வெண்பா ஒன்று:

‘அஞ்சல் மடவனமே! உன்றன் அணிநடையும்
வஞ்சி அனையார் மணிநடையும்-விஞ்சியது

காணப் பிடிததுகாண்,’ என்றான் களிவண்டு

மாணப் பிடித்தார் மன்

அடுத்ததாக இன்னொன்று தருமிக்கு இறையனார் எழுதி கொடுத்தது:

கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி
காமம் செப்பாது கண்டது மொழிமோ

பயிலியது கெழீஇய நட்பின் மயிலியல்

செறியெயிற் றரிவை கூந்தலின்

நறியவும் உளவோ நீயறியும் பூவே


முதல் பாடலில் நளன் ஓர் அன்னத்தைப் பிடித்து, அன்னமே உன்னைவிட அழகிய நடை கொண்ட பெண் உலகில் உண்டோ என கேட்கிறான். இரண்டாம் பாடலில் காதலியின் கூந்தல் மனத்தைக் காட்டினும் மனம் மிக்க பூ உள்ளதோ என காதலன் தும்பியிடம் கேட்கிறான். லூசு பசங்களா இருப்பாங்களே. அந்த காலத்திலயும் ஒரு மார்கமாதான் சுத்திக்கிட்டு இருந்திருக்காங்க பாருங்களேன்.

****

Monday, August 02, 2010

கொசுறு 02/08/2010

2000 ஆண்டுகளாக என் பணி படித்துக் கிடப்பதே என படித்திருந்து 500 ஆண்டுகளாக வருடத்தின் 730-நாட்களிலும் இராப்பகலாக எழுதிக் கொண்டிருக்கும் பாரு பவதிக போன்ற எழுத்தாளர்கள் தமிழை கட்டிக் காத்துக் கொண்டிருக்கும் போது. நீயெல்லாம் எழுதாவிட்டால் எவனுக்கும் குடிக்க குவாட்டர் கிடைக்காமல் போய்விடாது என சாணியடி சித்தர் என் முகத்தில் சாநி புகழ்பாடி சாணியடித்து அனுப்பிவிட்டார்.
****

கொஞ்ச காலம் பிளாக் எழுதாமல் இருந்தால், ஏன் எழுதவில்லை என கேட்பவர்கள் அனைவரும் ஆண்களாகவே இருக்கிறார்கள். இப்படி என்றால் எப்படி ஐயா தமிழ் வளரும்? சரி அதுதான் பரவாயில்லை என்றால் தமிழே அதோ கதியென கிடக்கும் என் போன்றோரை சொம்மொழி மாநாட்டுக்கு வருகிறீரா என ஒரு எஸ்.எம்.எஸ் அனுப்பியாவது கேட்டிருக்கலாம். அதுவும் கிடையாது. இது தான் நீங்கள் ஒரு தமிழ் எழுத்தாளனுக்கு, கவிஞனுக்கு, தமிழ் அறிஞனுக்கு கொடுக்கும் மரியாதையா? -இப்படிக்கு ஒரு நல்லவன்.
****இராவணன் படத்தை பார்த்ததில் இருந்து மண்டைக்குள் டண்டண்டண்டனக்கனு ஒரே சவுண்டாக இருக்கிறது. தொடர்ந்து மூன்று நாட்களுக்கு பேச்சு தடுமாறி போய் தவளையை போல் ஆ... ஊ... ஏ... என வாயை திறப்பதோடு நிறுத்திக் கொண்டேன். பலமான லெங்குவஜோபோபியா நோயின் பிடியின் சிக்கி இருப்பதாக கூறி நான்கைந்து பாகவதர் படங்களை பார்க்கச் சொல்லி டாக்டர் எழுதி கொடுத்தார். இப்போது உடல் நலம் பரவாயில்லை.

இது இரண்டாவது அடம்ப்ட். முன்பு சீரோ டிகிரி படித்த போதும் இதோ போன்ற நோய் தாக்குதலில் உண்டானேன். ஒரு வேளை சீரோ டிகிரியை படித்துவிட்டு புதுமை செய்கிறேன் பார் என மணி சார் படம் எடுக்க கிளம்பி இருக்கலாம்.
படம் முழுக்க ஒரே கத்தல், கதறல். இல்லை என்றால் அடித் தொண்டையில் கொட்டை சிக்கிக் கொண்டதை போல் சவுண்டே இல்லாத பேச்சு. பழக் கொட்டையை சொன்னேன். அடிக்கடி லே...லே...லே... என பேசிக் கொல்கிறார்கள். சுஹாசினி வசனமாம். அடுத்து இந்த பெயரை எங்கேயெனும் பார்த்தால் பின்னங்கால் பிடரியில் பட ஓடிட வேண்டும்.
*****இடைபட்ட காலத்தில் பல புத்தகங்களை வாசித்தாகிவிட்டது. எழுதாமல் இருந்தது வாசிப்பிற்கு அதிகமான நேரத்தை ஒதுக்கி கொடுத்தது. சில ஆய்வு புத்தகங்கள் மேலும் தேடுதல்களை தூண்டும் வகையில் அமைந்தன. ஆனால் தற்சமயம் இருக்கும் இடத்தில் உள்ள நூல் நிலையத்தில் போதுமான அளவில் தகவல் திரட்ட முடியவில்லை. புத்தக கடைகளும் குறைவாக உள்ளதால் வெளியிடத்தில் இருந்து ஆர்டர் செய்து வாங்க வேண்டியுள்ளது.

தற்சமயம் சுஜாதாவில் கந்தளூர் வசந்தகுமாரன் எனும் நாவலை வாசித்து வருகிறேன். இது இவரது இரண்டாவது சரித்திர நாவல் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆயின் இவரின் முதல் சரித்திர நாவல் யாதென தெரிந்தவர்கள் சொல்லும்படி கேட்டுக்கொள்கிறேன்.
****

சில காலத்திற்கு முன் உசுரே போகுதே எனும் பாடல் உயிரை வாங்கிக் கொண்டிருந்தது. இன்னமும் வாங்கிக் கொண்டிருக்கலாம். ஏனோ இப்பாடல் என்னை அப்படி ஒன்றும் வசீகரிக்கவில்லை. சமீபமாக எந்திரன் பாடல்களை சிலாகித்து எழுதப்படுவதைக் கவனிக்கின்றேன். எப்படியெல்லாம் வெறுப்பேற்றப்பட போகிறோம் என தெரியவில்லை.
******

எழுத்தாளர் சேவியரின் கவிதைகள் எனக்கு விருப்பமானவை. இதற்கு முந்தய கொசுறு பகுதிகளிலும் குறிப்பிட்டிருக்கின்றேன். அவரின் கவிதைகளில் ஒன்று:

“ஏழாயிரம் சம்பளம் டா மச்சி”
என
குதூகலித்துச் சொல்லும் நண்பனிடம் சொன்னதில்லை
பல மடங்கு வாங்கும் நான்.
அவனிடம் மிகுந்திருக்கிறது நட்பு
*****

மேலும் ஒரு கவிதை:
நாம் அமர்ந்திருந்த
பூங்கா இருக்கையில் படுத்துறங்குகிறான்
பிச்சைக்காரன்
நேற்றுஅவன் காதலியோடு
வந்திருப்பான் போல
-பின்னிரவுப் பெருமழை கவிதை தொகுப்பில் ரிலுவான் கான்.
****
எதையாவது எழுது... எழுதுறத விட்டுட்டா பிறகு எழுத சிரமப்படனும்.... சிரேயா படத்தை போட்டாவது ரெண்டு வரி எழுதுனு நண்பர் அதிஷா கொடுத்த உ(ர்)சாகத்தை கண்டு மெய் சிலிர்த்துப் போனேன்.

ஊக்குவிற்பவன்
ஊக்குவித்தால்
ஊக்குவிற்பவனும்
தேக்கு விற்பான் - கவிஞர் வாலி
****

Google image-ல் Charu என தட்டச்சு செய்தால் ஏதேதோ படங்கள் வருகின்றன. ஒரே கிளுகிளுப்பா போச்சு....
***

Wednesday, January 13, 2010

கொசுறு 13/01/2010

சில தினங்களுக்கு முன் நண்பரோடு காலை சிற்றுண்டிக்குச் சென்றிருந்தேன். சாப்பிட்ட பிறகு நண்பர் சப்பாத்தி பொட்டலம்கட்ட ஆர்டர் கொடுத்துவிட்டு அமர்ந்திருந்தார். கடையில் வேலை செய்யும் சர்வர் இவரது ஆடரை கவனத்தில் கொண்டதாக தெரியவில்லை. மறுமுறை சொன்னபோதும் தலையை தலையை ஆட்டிக் கொண்டு சென்றார்.

பணம் செலுத்த வந்த போது, “அண்ணே ரெண்டு சப்பாத்தியா போட்டாச்சு எடுத்துக்கிறிங்களா?” என்றார்.

என் நண்பர் வேண்டாம் என மறுத்துவிட்டு ஒன்றுக்கு மட்டும் பணம் செலுத்திவிட்டு வந்தார்.

நமது வியாபார தளத்துக்கு வருகை புரியும் வாடிக்கையாளர்களே முதன்மையானவர்கள். நமக்கு வாய்ப்பு கொடுப்பவர்கள். அவர்களை நம்பிதான் நாம் வாழ வேண்டும்- இக்கூற்று மாகாத்மா காந்தியால் சொல்லப்பட்டது. பலவிடங்களிலும் இதை நீங்கள் பார்த்திருப்பீர்கள், படித்திருப்பீர்கள்.

வியாபாரத்தின் அடைவு நிலை என்பது கிடைக்கும் இலாபத்தால் மட்டும் கணக்கிட்டு முடிப்பதில்லை. அதிக இலாபம் திருட்டுக்குச் சமம் என்பார்கள். தயாரிப்புக்கும் பொருள் அல்லது கொடுக்கப்படும் சேவை எந்த அளவுக்கு அதை பெற்றுக் கொண்ட பயனீட்டாளரை திருப்திபடுத்தியது என்பதே அடைவு நிலையின் உச்சம்.

தொழில் துறை , விவசாய துறை , சுற்றுலா துறை , சேவை துறை என வியாபரங்களின் விரிவாக்கம் நாளொரு வண்ணமும் செழிப்படைந்து வருகிறது. வியாபாரத்தின் வழியே கொள்ளை பணத்தை ஈட்டுவது சாத்தியம் எனும் எண்ணம் பலரும் உண்டு. ஏற்புடைய கருத்தாயினும் பணம் கிடைத்தால் போதும் எனும் நோக்கில் எப்படி வேண்டுமானாலும் வியாபாரம் செய்யலாமா?
*****

சுஜாதாவின் சிறுகதை எழுதுவது எப்படி எனும் புத்தகத்தை சில ஆண்டுகளுக்கு முன்பாகவே பார்த்திருக்கிறேன். நீல நிற அட்டையுடனான புத்தகம். இதற்கு கூட புத்தகமா என அதை புரட்டி பார்க்க கூட எத்தனிக்கவில்லை.

அன்று புத்தக கடையில் புதிய வடிவ அட்டையில் இருக்கக் கண்டதும் எடுத்துப் பார்த்தேன். சிறுகதை எழுதுவது எப்படி என்பது சுஜாதாவின் சிறுகதை தொகுப்பு நூல். தலைப்பின் காரணத்திற்காகவே இப்புத்தகம் சிறுகதை எழுதுவதை சொல்லிக் கொடுக்கும் புத்தகம் என நம்பி பலராலும் வாங்கப்பட்டிருக்கிறது.

உணரபட்டவை: சாணியடி சித்தர் சொன்னதை போல் முகப்பை பார்த்து புத்தகத்தை எடை போட கூடாது. வடிவமைப்பும் முக்கியமான ஒன்று என்பதை அறியமுடிகிறது. சமீப கால புத்தக முகப்புகள் சிறப்பாகவே வடிமைக்கப்பட்டு வெளியாகின்றன.
************எனக்கு டைரி எழுதும் பழக்கம் கிடையாது. எப்போதாவது கவிதை அல்லது செய்திகளை எழுதி வைப்பதுண்டு. கடந்த ஆண்டு செய்தி சேகரிப்பதும் கவிதை எழுதுவதும் பலமாக குறைந்து போனது. டைரிகளும் புத்தம் புதிதாகவே இருக்கின்றன. கடந்த ஆண்டுகளில் கிடைத்ததை போல 2010-ஆம் ஆண்டுக்கான டைரி ஒன்று கூட கிடைக்கவில்லை. இதைத் தான் எண்ணம் போல் வாழ்கை என்பார்களோ? ;-)

**************

சீனி விலை உயர்த்தப்பட்டுள்ளது. அத்யாவசிய பொருட்களின் விலை ஏற்றம் நமக்கு புதிதில்லை. பயனிட்டாளர் பொது இயக்கத்திடையே இதைச் சொல்வோமானால், மக்கள் மத்தியில் இனிப்பு நீர் வியாதி அதிகரிப்பதை தடுக்க இதுவே சிறந்த வழி என்பார்கள். ஏற்கனவே சொன்ன காரணம் தானே.

கிரெடிட் காட்டின் நிலை இன்று வரை புரியாமலே இருக்கிறது. இது போக தனிபட்ட சேவை வரிகள் இணைக்கப்படுமென ஊடகங்கள் வெளியிடும் தகவல்களால் தலை சுற்றுகிறது.
**********

பேஸ்புக் (முகரை புத்தகம்னு சொல்லலாமா?) வலைபக்கம் சுவாரசியமாக இருக்கிறது. வேடிக்கை, விளையாட்டுகள் என நேரம் நாசமாய் போகிறது. புத்திக்கு உறைத்தாலும் எண்ணத்தை கட்டுபடுத்த முடியவில்லை. இணையப்பக்கம் வரும் போதெல்லாம் திறந்து வைத்துக் கொண்டிருக்கச் சொல்கிறது.

மலேசிய மாணவர்களிடையே தேர்ச்சி விகிதமும், படிப்பில் ஆர்வக் குறைவு ஏற்பட்டுள்ளதற்கும் பேஸ்புக் போதை முக்கியக் காரணமாக அமைந்துள்ளதாக மலாய் நாளேடு ஒன்று அண்மையில் செய்தி வெளியிட்டிருந்தது. பயனிட்டாளர்களிடையே அதீத போதையை கொடுக்கும் இவ்வலைப்பக்கத்திற்கு எதிர்கால விளைவுகள் எப்படி இருக்கும் என்பது சிந்திக்கத் தூண்டுகிறது. புதிய பொருட்களிடையே இருக்கும் மோகம் நாளடைவில் குறைந்துப் போகும் தானே?
**************

இயக்குநர் அமிர் நடித்திருக்கும் யோகி மற்றும் ரேனிகுண்டா போன்ற படங்கள் யதார்த்தமான கதையம்சம் கொண்ட படங்களாக அமைந்திருக்கின்றன. வன்முறையின் உச்சம் என சிலர் சொல்வது வேடிக்கையாக இருக்கிறது. வேட்டைகாரன் படத்தில் விஜயின் அலம்பல்களை கைதட்டி இரசிப்போருக்கு இப்படங்கள் வன்முறையாகத் தான் தெரியும் போல.
******************

தமிழ் நாட்டில் புத்தக திருவிழா களைகட்டி இருப்பதை அறிய முடிகிறது. சென்ற வருடத்தைப் போலவே சாரு, ஜெயமோகன், எஸ்.ரா எனும் அதே பெயர் வரிசைகளே இவ்வருடமும் அதிகபடியாக பேசப்படுகிறது.


கடந்த ஆண்டின் புத்தக சந்தையின் போது ஆடர் கொடுத்த மாயவலை இரண்டு மாதங்களுக்கு
முன் தான் என் கைக்கு கிடைத்தது. படித்து முடிப்பதற்குள் தொண்டை தண்ணி வற்றிப் போய்விடும் போல.

மாயவலை ஆறு வருட ஆய்வின் பதிப்பு என குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும் சில பகுதிகளில் வேற்றுக் கருத்துக்கு இடமளிக்கும் விதமாகவே செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன. ஆரம்ப நிலை புரிதலுக்கு மாயவலை சிறந்த புத்தகம் என்றே கூற முடியும். பா.ராவின் எழுத்து நடை கவரும் வகையில் அமைந்துள்ளது என்பதை மறுக்க இயலாது.

*****************
அனைவருக்கும் இனிய பொங்கள் நல்வாழ்த்துகள்.

Monday, October 12, 2009

கொசுறு 12/10/2009

சில காலமாக எதையும் எழுத தோன்றவில்லை. ஏதோ ஒரு குழப்ப நிலை என்று கூட சொல்லலாம். சில வேளைகளில் எழுதுவதற்கான சிந்தனைகள் பெருக்கெடுப்பதும், சில வேலைகளில் தடைபடுவதும் கால இடைவெளிகளில் இயல்பாகவே இருக்கின்றது. ஏன் எழுத வேண்டும் என்ற எண்ணமும், எழுதி முடித்தப் பின் கிடைக்கும் நிறைவும் கூட தீர்க்கமான முடிவுகளை எடுக்க தடையாக இருக்கிறது. இது எல்லோருக்கும் ஏற்படுவது தானோ?
***********

சனி பெயர்ச்சியின் பலன்கள் தினசரிகளை இன்று வரையினும் நிரப்பி வருகின்றன. சென்ற வாரம் இரவு சாப்பாட்டை முடித்துவிட்டு அமர்ந்திருக்கையில் அம்மாவிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. தொலைகாட்சியில் இராசி பலன் பார்த்தேன். இதை எல்லாம் சொன்னார்கள். பார்த்து கவனமாக இருந்துக் கொள் என்றார். நான் நிம்மதியாக இருந்தாலும் இப்படி பீதியை கிளப்பிவிட பல ‘நம்புங்கள் நாராயணன்கள்’ கிளம்பிவிடுகிறார்கள். இப்படி நிம்மதி கெடச் செய்யும் ராசி பலன் அவசியம் தானா?
******

ம.இ.காவின் தேர்தல் ‘போராட்டம்’ முடிந்த பின்பும் கட்சியின் சடுகுடுகள் முடிந்தபாடில்லை. நாளிகைகளில் தலையங்கம் தினமும் வெறுபேற்றித் தொலைக்கிறது. ஒரு செய்திக்கான தகவல் படித்தவுடன் இதற்கான மறுப்பறிக்கை நாளை இப்படி தான் இருக்கும் என பட்சி சொல்கிறது. எங்கே நானும் அரசியல் ஜோதிடனாகிவிடுவேனோ என பீதி பிசிறி அடிக்கிறது.

கட்சி மக்களுக்கு நன்மை செய்யும் எனும் எண்ணம் எல்லாம் எப்பொழுதும் எட்டாக்கனி தான் என்பதை இப்படி அதி தீவிரமாக சொல்லியாக வேண்டுமோ?
*****

இயக்குனர் ஷங்கரின் படங்கள் (ஜீன்ஸ் & காதலன் தவிர்த்து) ஒரே டெம்ப்ளேட்டை பல முறை எடிட் செய்து கொடுப்பதை போல் இருப்பது பக்கத்து வீட்டு பத்து வயசு பாப்பாவுக்கும் தெரிந்த செய்தி தான். இருப்பினும் அவரின் தயாரிப்புகளில் நல்ல நம்பிக்கையை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார்.
ஈரம் திரைப்படத்தை காணும் வாய்ப்புக் கிட்டியது. வழக்கமாக பார்த்து பழக்கப்பட்ட பேய் கதை என்றாலும் கதை நகர்வு சுவாரசியம் கொடுத்திருக்கிறது. அழகான இசை அமைப்பு. படம் கொஞ்சமாக ’ஃபைனல் டெஸ்டினேஷன்’ எனும் ஆங்கில படத்தையும் நினைவுபடுத்த வைக்கிறது.
******

எனக்கு சில அடிமைகள் வேண்டும் எனும் என் சிறுகதைக்கு வந்த மின்கடிதங்களுக்கு நன்றி. அதில் சில கடிதங்களில் சொல்லப்பட்ட ஒரு விடயம், விக்கி எனக்கு கதை புரியவில்லை. சுஜாதா பாணியா? என்ன சொல்ல வருகிறீர்கள்? கொஞ்சம் விளக்கமாக சொல்லுங்கள். இப்படியாக தான் இருந்தது.

நான் எழுதிய கதைக்கு நானே விளக்கம் கொடுப்பதை விட நான் அதை எழுதாமலே இருந்திருக்கலாம் என்றிருக்கிறது. படிப்பவர் புரிந்துக் கொள்ள முடியாத அளவிற்கு மட்டரகமாக கதைகளை எழுதாமல் இருக்க முயற்சிக்கிறேன்.

இதை எழுதி முடித்த சமயத்தில் எனக்குள் எழுந்த கேள்வி ஒன்று:

அதீத கற்பனையில் சொல்லப்படும் ஒரு கதையை அறிவியல் பாணியில் சேர்ப்பது சரிதானா?

நரேஸ் அவர்களின் மடல் நயமாக இருக்கக் கண்டேன்.

அன்பின் விக்னேஷ்,

இது ஒரு நல்ல, பெரிய முயற்சி....அதற்காக எனது வாழ்த்துக்கள்

வலைப்பதிவு அலுவலகத்தில் தடா... எனக்கு வந்த மடலில் உங்கள் கதையை படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. உங்களுடைய எந்த பின்னூட்டத்திலாவது அல்லது யாராவது சுஜாதா நடை வருகிறது என்று சொல்லியிருந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை....காரணம் அறிவியல் சார்ந்த நாவல் எழுத்துக்களில் அவரது ஆளுமை அதிகம் என்பது மட்டுமே!!! ஆனால், இந்த கதையின் பிண்ணனியில் இருக்கும் உங்களது மெனக்கெடலை, சுயசிந்தனையை எளிதில் புரிந்து கொள்ள முடிகிறது....

முதல் பாதியை விட இரண்டாம் பாகம் சற்றே தொய்வடைந்தாற் போன்று உள்ளது...சில இடங்கள் முழுமையாக இல்லாத உணர்வை, எளிதில் புரிந்து கொள்ள முடியாத படியாக இருக்கிறது...

உதாரணம், இயந்திரத்தை சோதிக்க வேண்டும் என்று எண்ணி திடீரென்று உலக வளர்ச்சியாளர்களின் சதி என்று ஒரு புதிய விஷயத்தை கொண்டு வருகிறீர்கள், அது கொஞ்சம் நெருடுகிறது...முடிவில் அந்தப் பெண் சொல்லும் விளக்கங்கள் என்று சில....இன்னும் கொஞ்சம் விளக்கியிருக்கலாமோ....

என்னடா குறைகளை அதிகம் சொல்கிறேனே என்று எண்ணாதீர்கள்...இது கதையை மெருகூட்ட மட்டுமே....மற்றபடி கதையில் சிலாகிக்க ஏகப்பட்ட விஷயங்கள் உள்ளன, உங்கள் முயற்சியையும் சேர்த்து...
--
நரேஷ்
meetnnk1@gmail.com
*****

கவிதை பற்றிய எனது புரிதல்கள் பிசகி சின்னாபின்னமாகி கொண்டிருப்பதை உணர முடிகிறது. வசனத்தை மடக்கி போடுவது. சிரமப்பட்டு தமிழ்ச் சொற்களை பொறுக்கி போடுவது. ரௌத்திரமாக ஒரு செய்தியை சொல்வது. இப்படியாக இருப்பது தான் கவிதையா? சில அறிவு ஜீவிகள் புதுக் கவிதைக்கும் மரபுகளை வகுத்து வருவதாக அறிய முடிகிறது. எப்படியோ... இது கால காலமாக தீராத ஒன்று தான்.

நண்பர் அமுதனின் ஈற்றடி வெண்பா இரசிக்க வைத்தது. கல்லூரி மாணவர்களின் இன்றய அவல நிலையை ஆங்கில கலப்பில் மரபுடன் படைத்திருப்பது இரசிக்க வைக்கிறது.

பிக்கப்பும் ஆவதொடு டேட்டிங்கும் போய்வந்து
செக்கப்பும் செய்வாள் சிலை!
******

எழுதாமல் இருந்த இக்காலகட்டத்தில் நலம் விசாரித்த அன்பர்களுக்கு நன்றி. நான் எழுத்தாளன் கிடையாது. நண்பர் வால் அடிக்கடி ஒன்று சொல்வார். நான் அவ்வளோ ‘வெர்த்’ இல்லை என. அது போல் நான் ’வெர்த்’ உள்ள ஆசாமியும் இல்லை. இது என் பொழுதுபோக்கு மட்டுமே. எண்ணம் இருக்கும் வரை எழுதலாமே... :-)
**********

நீண்ட நாட்களுக்கு பின் சாண்டில்யனின் புத்தகம் ஒன்றை படிக்க முற்பட்டேன். சில பக்கங்களில் திகட்ட ஆரம்பித்துவிட்டது. சரித்திர விடயங்களை மேம்போக்காக அறிந்துக் கொள்ள சாண்டில்யனின் நாவல்கள் துணை புரிவது மறுக்க இயலாது. பெண்களை அபரிமிதமாக வர்ணிப்பது. உலக அழகிகளை அவர் கதையில் மட்டுமே காண முடியும் என்பதைப் போன்ற சிருங்காரங்களையும் அகற்றினால் புத்தகத்தில் எத்தனை பக்கங்கள் மிஞ்சும் என யோசிக்க வைக்கிறது.
*******

பார்க்க முடியாத கடவுள் மேல் அன்பு வைக்கிறது நெகடிவ் அப்ரோச், பார்க்க முடிந்த மனிதர்கள் மேல் அன்பு வைக்கிறது பாசிடிவ் அப்ரோச் என சாணியடி சித்தர் சொல்லி இருக்கிறார்.

Monday, May 11, 2009

கொசுறு 11-05-2009

பிரபு மற்றும் மோகன்லால் நடிப்பில் வெளிவந்த சிறைச்சாலை திரைப்படத்தை நீண்ட நாட்களுக்குப் பின் பார்த்தேன். பிரிட்டிஷ் காலத்தில் நேர்ந்த விடயங்களை அழகாக சித்தரித்திருப்பார்கள். சயாம் மரண இரயில் போன்ற கதைகளை இதைப் போல் திரையாக்கினால் சிறந்த சரித்திர ஆவணமாக அமையும். செம்பூவே, இது தாய் பிறந்த தேசம் போன்ற பாடல்கள் இன்று கேட்கும் போதும் அருமையாகவே இருக்கின்றன.
*********

சிலர் என்னிடம் அடிக்கடி கேட்கும் கேள்விகளில் ஒன்று. எப்படி உனக்கு எழுத நேரம் கிடைக்குது? என்ற கேள்வி தான்.

அன்று ஒரு பிறந்த நாள் நிகழ்ச்சிக்கு போயிருந்தேன். புத்தகங்கள், வலைப்பதிவுகள் என பேசிக் கொண்டிருந்த போது புதிதாக அறிமுகமான ஒருவர் எப்படி உங்களுக்கு புத்தகம் படிக்கவும் எழுதவும் நேரம் கிடைக்கிறது என கேட்டார். அவர் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தார். உங்களுக்கு எப்படி இப்போது டி.வி பார்க்க டைம் கிடைச்சுச்சு? என கேட்டுவிட்டேன். அவர் முகம் சுருங்கிப்போனது. பேச்சைக் குறைத்துவிட்டார். ஏன் டா இப்படி கேட்டுத் தொலைத்தோம் என்றாகிவிட்டது. :(
*********

நா.பார்த்தசாரதியின் பொன்விலங்கு மற்றும் குறிஞ்சி மலர் போன்ற நாவல்களை படித்தேன். பொன்விலங்கில் ஒரு நெடுங்கவிதை இருக்கும். நவநீத கவி எழுதியதாக குறிப்பிட்டிருப்பார் ஆசிரியர். நவநீத கவி யாரென உங்களுக்கு தெரியுமா? எனக்கும் தெரியாது.

பேராசிரியர் பசுபதி ஐயாவிடம் கேட்டிருந்த போது நவநீத கவி நா.பவின் பல புனைப் பெயர்களின் ஒன்றென்றும் அவருடைய கவிதைகள் மணிவண்ணன் கவிதைகள் எனும் தொகுப்பில் வந்துள்ளதாக சொன்னார். மணிவண்ணன் நா.பாவின் இயற் பெயராகும்.
*********

சமீபத்திய படங்கள் ஏதும் பார்க்கவில்லை. ஆனந்த தாண்டவம் எனும் படம் திரைகண்டுள்ளது. சுஜாதாவின் பிரிவோம் சந்திப்போம் நாவலை ஒட்டி எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் இப்படம் திரையில் மாறுபாடுகள் கொண்டு சுவாரசியமற்று இருப்பதாக விமர்சனங்கள் கண்டேன்.

தற்சமயம் சுஜாதாவின் பிரிவோம் சந்திப்போம் படித்துக் கொண்டிருக்கிறேன். இன்னும் கொஞ்சம் பாக்கி இருப்பதை முடித்துவிட்டு படம் பார்க்கலாம் எனும் எண்ணம். :)
*********

சிலர் நீக்ரோ, வங்காளி போன்ற சொற்களை எழுதும் போது பயன்படுத்துகிறார்கள். இற்சொற்கள் ஐரோப்பிய கருப்பினத்தவரையும், சீக்கியர்களையும் தாழ்வுபடுத்தும் சொற்களென கேள்விப்பட்டிருக்கிறேன்.

மலேசியாவில் தமிழர்களை கிலிங் என இழிவாக பேசும் நிலை உண்டு. ஆரம்ப காலத்தில் கலிங்கத்தில் இருந்து தமிழ் மக்கள் இங்கு வந்ததால் கலிங்கா என்பது கிலிங் என மாறியுள்ளது.

இந்தோனேசியாவின் சுமத்ரா, ஜாவா போன்ற இடங்களில் இப்பெயரிட்டு அழைப்பினும் இழிவுபடுத்தும் நிலை அங்கில்லை என சொல்லப்படுகிறது. அதை பற்றிய விளக்கமான செய்தி டாக்டர் ஜெயபாரதியின் இணைய தளத்தில் உள்ளது.
********

சுஜாதாவின் ஹைக்கூ பற்றிய புத்தகம் ஒன்றில் படித்த ஹைக்கூ மிக கவர்ந்தது. ஹைக்கூ என்பதை தமிழில் துளிப்பா அல்லது நறுக்குகள் என குறிப்பிடுகிறார்கள்.

மண்ணெண்ணெய் விளக்கில்
மாணவன் படிக்கிறான்
கம்பியூட்டர் சயின்ஸ்
********

கடற்கன்னிகள் இது சின்ன வயதில் கார்ட்டூன்களில் பார்த்தது. இது உண்மையா இல்லையா என்பது கேள்விக் குறியே.

முன்பு பங்கோர் தீவுக்கு போயிருந்த சமயம் அங்குள்ள மீனவர் ஒருவரிடம் இதைப் பற்றி கேட்டேன். அவர்களுக்கு இதில் நம்பிக்கை உண்டு. சிலர் கண்டிருப்பதாகவும். ஆபத்து வேளைகளில் அவை உதவக் கூடும் என்பதால் மீனவர்கள் ஒன்றும் செய்ய மாட்டார்கள் என்றும் சொன்னார்.

அந்த தீவில் கடற்கன்னியின் சிலை ஒன்று இருக்கும். இதில் எனக்கு நம்பிக்கை குறைவு. இணையங்களில் பாதி மனித உடல் (அப்நார்மலாக உள்ளது) பாதி மீன் உடல் கொண்ட படங்கள் சில பார்த்திருக்கிறேன். கிராப்பிக்ஸ் வேலைபாடுகளாக இருக்கக் கூடுமா?

சுபாஷினி அவர்கள் எழுதிய கடற்கன்னிகள் பற்றிய பதிவு இங்கே உள்ளது :
*************
உலகு வாழ் அன்னையர்கள் அணைவருக்கும் எனது அன்பான அன்னையர் தின வாழ்த்துக்கள்.

Thursday, March 12, 2009

கொசுறு 12/03/2009

சாணியடி சித்தர் யோக நிஷ்டையில் இருப்பதால் தத்துவத்துக்குக் காலவரையில்லா விடுப்பு கொடுக்கப்படுகிறது என்பதை கடிதம் எழுதாமல் பகிரங்கமாக தெரிவித்துக் கொள்கிறேன்.
****

நாமக்கல் சிபி அண்ணனுக்கு நேற்று திருமண நாள். அவருக்கு என்னுடைய மனம் கனிந்த வாழ்த்துகள். எதிர் வீட்டு ஜன்னல் பார்ட் 2 எழுதி தமது 16வது பிறந்த நாள் கொண்டாடிய நண்பன் அதிஷாவுக்கும், சென்ற வார தமிழ் மண நட்சத்திரம் வால் பையனுக்கும் இந்த வார நட்சத்திரம் கார்க்கிக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
****

மனைவி என்றும், மக்கள் என்றும், சுற்றம் என்றும் வளர்த்துக் கொள்வது ஒரு போகம். இதை விட்டு ஓட முடிந்துவிட்டால் யோகம். நான் சொல்லவில்லை. கண்ணதாசன் சொன்னது.
****

வெண்ணிலா கபடிக் குழு படம் பார்த்தேன். லேசா பறக்குது மனசு எனும் பாடல் மனதைக் கவர்கிறது. நகைச்சுவைகளும் இயல்பாக இருக்கின்றன. முடிவு சற்றே ஒப்பாதது போல் தோன்றுகிறது.
****


நந்திபுரத்து நாயகி எனும் விக்கிரமன் எழுதிய சரித்திர நாவலை படித்து வருகிறேன். கதையோட்டத்துக்கு முக்கிய இடங்களில் நல்ல விறுவிறுப்பாக இட்டுச் செல்லும் ஆசிரியர் தேவையற்ற சில இடங்களில் ஜவ்வை போல் இழுத்து எழுதி இருப்பது படிப்பவரை எரிச்சலடையச் செய்கிறது.
****

சூரியனுக்கு விளக்கு பிடிக்கக் கூடாதுனு சொல்வாங்க. பாரிசல்காரனின் இந்தப் பதிவு மிகவும் சுவாரசியாமாக இருந்தது. புத்தகம் இரவல் கொடுப்பதால் ஏற்படும் விளைவுகளை அழகாக சொல்லி இருக்கிறார்.

இரவல் கொடுப்பது வராமல் போய்விட்டாலும் பரவாயில்லை என வாங்கிக் கொள்ளலாம். ஆனால் கிழிசலோடு வரும் புத்தகங்களின் மௌன கண்ணீர் நம் நெஞ்சை ரனமாக்கிவிடுகிறது. நான் ஓரிரு நண்பர்களைத் தவிர மற்றவர்களுக்குப் புத்தகத்தை இரவல் கொடுப்பதில்லை. புத்தகம் சேமிக்கும் அவர்களும் அதிகம் இரவல் வாங்க மாட்டார்கள்.(படிப்பவர்களுக்கு தானே அருமை தெரியும்) நூலகத்தில் படிக்கும் புத்தகங்கள் பிடித்திருந்தாலும் அதை சேகரிக்கும் பொருட்டு கடைகளில் வாங்கிவிடுவேன். இரவல் புத்தகத்தை விட புதிய புத்தகங்களின் வாசனையே தனி தான்.
****

எழுத்தாளர் எஸ்.ராவின் ’’கதாவிலாசம்’’, ’’துணையெழுத்து’’ என இரண்டையும் வாசித்துவிட்டேன். ஒவ்வொரு கட்டுரையும் ஒவ்வொரு விதமாய் மனதை வருடுகிறது. அடுத்தபடியாக தேசாந்திரி புத்தகத்தை தேடி வருகிறேன்.
****

பதிவர்களின் நல்ல படைப்புகளை தேர்வு செய்து யூத்புல் விகடனில் அளிக்கிறார்கள். இது நல்ல ஊக்குவிப்பு என்றே கூற வேண்டும். தமிழ் பிரியன் அண்ணாச்சியின் முந்தய சிறுகதை ஒன்று யூத்புல் விகடனில் வந்திருந்தது. மனதைக் கசக்கிப் பிழியும் அக்கதையை வாசித்து இருக்கிறீர்களா? ஒரு முறைக்கு மேல் என்னால் வாசிக்க முடியவில்லை. முறிந்த சிறகுகளில் உயிர்த்த உறவு எனும் அக்கதையின் சுட்டி.
****

ஹிட்லர் அசைவம் சாப்பிட மாட்டார். அவர் நல்லவரா கெட்டவரா? விவேகானந்தர் அசைவ உணவுகளை சாப்பிடுபவர். அவர் கெட்டவரா நல்லவரா? தசவதாரம் படத்தில் உலக நாயகன் ஒரு கேள்வி கேட்பார். மடம்னா தப்பே நடக்காதாய்யா? அப்படிதானே இருக்கிறது இக்கேள்வி.
****

லத்தா கிஞ்சாங் எனும் நீர் வீழ்ச்சி இங்குள்ளது. வடக்கு தெற்கு நெடுஞ்சாலையில் பயணிக்கும் போது தாப்பாவை தாண்டி வருகையில் நீங்கள் இதைக் காண முடியும்.

எனது பூர்வக் குடியைச் சேர்ந்த நண்பன் ஒருவன் நீர் வீழ்ச்சியின் அருகே வசிக்கிறான். அன்று சந்திக்க நேர்ந்த போது அழைத்திருந்தான். முன்பு அவன் சொன்ன தகவல் ஒன்று நினைவிற்கு வருகிறது.

நகைகளை கழற்றி வைக்காமல் நீர் வீழ்சியில் குளிப்பவர்கள் சில வேளைகளில் அதை தவற விட்டுவிடுவார்களாம். பகல் வேளையில் நீரில் விட்ட நகையை தேடி எடுப்பது சிரமம். இரவு வேளையில் டார்ச் லைட்டை நீரில் அடித்தால் நகை மினுக்கும் ஒளியைக் காண முடியும். தொலைந்து போன நகையும் சுலபத்தில் கிடைத்துவிடும். (யாருக்கு கிடைக்கும்?) :))
****

என்னை
சுற்றினும்
சிறு சிறு வட்டங்கள்!

சில
இனிமை பொழுதுகள்!
எளிமைக் கவிதைகள்!
வறுமை வருத்தங்கள்!

தலைசாய்த்து
தயவுகொள்ள
தாய்மை ஸ்பரிசத்தோடு
தலைவருடும்
தனிமைத் தருணங்கள்!

கண்ணீரில்
கவலையைக் கரைத்தும்!
வெறிநீரில்
உடல்தனை எரித்தும்!
புகைத்தாரில்
புன்னகை மறைந்தும்!

விட்டுச் செல்லாமல்
வெட்டிச் சிரிக்கிறது
இனிய பொழுதினிலும்
இளமையின் தனிமை!

கவிதையை படிச்சிட்டு அடிக்க வராதிங்க பிலிஸ்...

****

திரு.ஜவஹர் நாளைய தினம் தமிழக பயணம் மேற்கொள்கிறார். அதிகமாக பதிவுகளை வாசிக்கும் இவர் பதிவுகள் எழுதுவதில்லை. ஓரிரு தளங்களில் பின்னூட்டம் இடுவார். அவருடைய பயணம் இனிதே அமைய வாழ்த்துகள். அதிஷாவுக்கு குச்சி மிட்டாயும் குருவி ரொட்டியும் வாங்கி வருவதாக சொல்லி இருக்கிறார்.

Friday, February 06, 2009

கொசுறு 06/02/2009

வாசகர்கள் நம் எழுத்தை தேடி வரனும் என நினைப்பது நெகட்டிவ் அப்ரோச், நம் எழுத்து வாசகரை சென்றடைய வேண்டும் என நினைப்பது பாசிட்டிவ் அப்ரோச் என சாணியடி சித்தர் சொல்லி இருக்கிறார்.
*****

அண்மையில் சேலத்தில் ஜோதிடர்கள் மாநாடு நடந்ததாம். அதில் சில தீர்மானங்கள். ஜோதிடர்களை தொழிலாளர் வாரியத்தில் சேர்க்க வேண்டும். அரசின் நலத்திட்ட உதவிகள், சலுகைகள் வழங்க வேண்டும். பஸ் பாஸ், இலவச மனைப்பட்டா வழங்க வேண்டும். கலைமாமணி விருது வழங்க வேண்டும். இவ்வளவையும் கேட்கும் ஜோதிடர்களுக்கு ஒரே ஒரு கேள்வி:

ஜோதிடர்களே, நீங்கள் ஏன் ஜோதிடத்தை நம்பாமல் அரசை நம்ப வேண்டும்?
******

எதிர் காலத்தில் டிஜிட்டல் முறைப்படி தானாகவே இயங்கும் வீடுகள், சதுர அடிக்கு... இந்த விலைக்குக் கிடைக்கும் என்ற விளம்பரங்கள் அதிகரித்த வண்ணம் இருக்கும்.

படுத்தவுடன் தூங்க வைக்கும் படுக்கை, மசாஜ் செய்யும் குளியல் அறைகள், ரிமோட் மூலம் வீட்டின் அனைத்து இயக்கங்களையும் கண்ட்ரோல் செய்யும் கருவி என அணைத்தும் ஆட்டோமெட்டிக் அரங்கமாக மாறிவிடும். சுவரில் எங்கு திரும்பினாலும் 'எ 4' சைசில் கம்ப்பியூட்டர்கள் அதிக அளவில் பொருத்தப்பட்டிருக்கும்.

இது ஜோசியம் இல்லை. யூகம் தான்.
*****

ஜெர்மன் நாட்டின் சர்வாதிகாரி ஹிட்லர், 1940-ஆம் ஆண்டு, 12 ஆயிரம் பேரை தனி அறையினுள் அடைத்து வைத்து விஷ வாயு செலுத்தி கொலை செய்தபோது உடன் இருந்த முக்கியக் குற்றவளியான ஜோஹான் என்பவரை கடந்த வருடம் கர்நாடக மாநிலம், பெல்காம் அருகில் காவல் துறை கைது செய்து ஜெர்மனி காவல் துறை வசம் ஒப்படைத்தது. இவர் கடந்த 56 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவர்.
****

"நம்ம வீட்டு அம்மா காச கொடுத்துட்டு அழுவும், அந்த அம்மா காச வாங்கிகிட்டு அழும்"

இது சினிமா மோகத்தைப் பற்றி புலவர் கீரன் சொன்ன வரிகள். சமீபத்தில் நான் படித்த ஒரு விடயம். ஒரு பெண் தனியாக இருந்தால் போதும் ஆண் ரொமான்ஸ் செய்ய ஆரம்பித்துவிடுவான் என அவர் சொல்லி இருந்தார். அவரும் பெண் பதிவர் தான். ஒரு திரைப்படத்திற்கான விமர்சனத்தில் அப்படி குறிப்பிட்டிருந்தார்.

சினிமாவில் பணம் வாங்கிக் கொண்டு நடிக்கும் ஒரு நடிகை நடிகன் செய்வதையெல்லாம் பொறுத்துக் கொள்கிறாள். நிஜத்தில் அப்படி ஒரு சூழ்நிலை உண்டானால் அவள் செருப்பால் அடிக்கமாட்டாளா? அப்படி அடிக்கவில்லை என்றால் அந்த பெண்ணுக்கும் அதில் விருப்பம் என்றே கொள்ள வேண்டும். அதற்காக ஒட்டு மொத்த ஆண் வர்க்கத்தையும் இழிவு படுத்திக் கூறும் செயல் தகாத ஒன்று என்பதை புரிந்துக்கொள்ள வேண்டும்.
*****

எஸ்.ராமகிருஷ்ணனின் கதாவிலாசம் எனும் கட்டுரைத் தொகுப்பை படித்து வருகிறேன். இணையத்தில் அவருடைய எழுத்துகளைப் படித்திருக்கிறேன். அவருடைய புத்தக வரிசையில் இது தான் முதல் முறை வாசிக்கிறேன். மிக அருமையாக இருக்கிறது. வாழ்வியல் விடயங்களை பொட்டில் அடித்தாற் போல் சொல்லி இருப்பது படிப்பவருக்கு ஒருவித தாக்கத்தைக் கொடுக்கிறது.
************

அமைச்சர்: மன்னா கொள்ளைக் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் அரசை நிர்வாகிக்க நீங்களாகவே தேர்ந்தெடுத்திருக்கிறீர்களே, உங்கள் மீது மக்களுக்கு மனக் கசப்பு உண்டாகாதா?

புலிகேசி: மங்குனி அமைச்சரே, இப்போது இருக்கும் லகுட பாண்டிகளை இப்படியே விட்டால் நமது கஜானாவில் கரப்பான் பூச்சிகள் காரித் துப்பி வைத்துவிடும். இந்த கேடு கெட்ட முட்டா பய மக்களின் நலன் முக்கியமா இல்லை எனது கஜானா முக்கியமா? எங்கே சொல்?

அமைச்சர்: கஜானா காலியானால் நம் கதி என்ன ஆவது. உங்கள் முடிவு சரிதான் மன்னா. ஆனால் மக்கள் தேர்வு செய்த அதிகாரிகளை நாம் நிராகரித்தோம் என்பதற்காக பிரச்சனைகள் வராதா? அதை அவர்கள் மறப்பதற்கு வசதியாக இரண்டு நாட்கள் விடுமுறை விட்டுவிடலாமா?

புலிகேசி: க.க.க.கௌ.

(புரிந்ததா இல்லையா? புரியாதவர்கள் தனிமடலில் அனுகவும்.)

இதையும் படித்துப் பாருங்கள்.
******

இன்றைய பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகளில் பலருக்கும் பல வித டென்ஷன். இப்போதுதான் சில நிறுவனங்கள் அங்கங்கு காதலர் தின ஃப்ரோமோசன்கள் செய்து கொண்டிருக்கிறார்கள். எல்லாவற்றுக்கும் ஒவ்வொரு பெருநாளை உருவாக்கிக் கொண்டு சமூக சீர்கேடுகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

லங்காவி, கெந்திங் போன்ற சுற்றுலா தளங்களில் காதலர் தினத்தின் போது அதிக அளவில் தங்கும் விடுதிகள் பதிவு செய்யப்படுகிறதாம்.

ரூம் போட்டு காதலர் தினத்தைக் கொண்டாடுகிறார்களோ?
*****

மக்களிடையே தாக்கத்தை ஏற்படுத்திய உலக மாந்தர்கள் 100 பேர் (ஆங்கில புத்தகம்) என்ற புத்தகத்தில் காந்தியடிகளின் பெயர் இடம் பெறவில்லை. காந்தியடிகள் போன்றோரின் தாக்கங்கள் அவர்கள் இறந்த பிறகு முடக்கம் கண்டுள்ளன என்பது அப்புத்தக ஆசிரியரின் கருத்தாகும்.
*****
என் காதலியை
உனக்கு நான்
அறிமுகம் செய்து வைத்தபோது
நீ விழுங்கிய
எச்சிலில் இருந்தது
நமக்கான நட்பு
- கவிஞர் அறிவுமதி.

Wednesday, January 14, 2009

பொங்கல் சிறப்பு கொசுறு 14/01/2009

பானை மட்டும் பொங்கினால் போதும் என நினைப்பது நெகடிவ் அப்ரோச். மனதில் மகிழ்ச்சியும் பொங்க வேண்டும் என நினைப்பது பாசிடிவ் அப்ரோச் என கருத்து சொல்ல நினைக்கும் அதே வேளையில் எல்லோருக்கும் தமிழர் திருநாள் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறார் சாணியடி சித்தர்.
********

பொங்கல் சரியாக பொங்கவில்லையென்றால் கொஞ்சமாக பேக்கிங் பவுடர் போட வேண்டும் என தூயா சமீபத்தில் கண்டுபிடித்துள்ளார். உயிர் பயமில்லாதவர்கள் தாரளமாக முயற்சிக்கலாம்.
*******

வீடு வீடாகச் சென்று அவன் பிச்சை எடுத்துக் கொண்டிருந்தான். அந்த வழியாக அரசன் வந்தான். தனக்கு பெரும் வெகுமதி கிடைக்கப் போவதாகப் பிச்சைக்காரன் நினைத்தான். ஆனால் அரசன் அவனுக்கு பிச்சையாக எதையும் கொடுக்கவில்லை. மாறாக, கைகளை நீட்டி அரசனே பிச்சை கேட்டான்.

பிச்சைக்காரன் திகைத்துப் போனான். அரசன் கேட்கிறான். இல்லையென சொன்னால் பிரச்சனை. தன்னிடம் இருந்த தானியத்தில் சிறிதளவு அவனுக்குப் பிச்சையாகப் போட்டான்.

இரவு தன் இடம் திரும்பியதும் தானியத்தைக் கவனிக்கிறான். அதில் சில தானியங்கள் பொன் தானியங்களாக இருக்கிறது. கொடுப்பவன் பெறுகிறான்.
******

பொங்கல் நிகழ்ச்சியாம். உள்ளூர் கலைஞர்களின் படைப்பு என்றார்கள். நிகழ்ச்சி ஒளி பரப்பானது.

"மெகு மெகு மெகு லயிமெயிமா.... x2 முதல் மழை எனை நனைத்ததே... முதல் முறை சன்னல் திறந்ததே...."

அதே ஹரிஸ் ஜெயராஜ் பாடல் தான் என்ன நடனம்... மன்னிக்கவும், உடல் அசைத்து நடந்தவர்கள் உள்ளூர்க்காரர்கள். என்ன செய்ய முயற்சிக்கிறார்கள் என
புரியவில்லை. அதே டிரிசாவும் விக்ரமும் நடித்த பீமா பட பாட்டை அப்படியே தூக்கி போட்டிருந்தால் தயாரிப்புச் செலவு மிச்சமாகிப் போயிருக்கும்.
*****

நான் கடவுள் பாடல்கள் கேட்கும் வாய்ப்புக் கிடைத்தது. இசை ஞானியின் இசையமைப்பு அருமையாக இருக்கிறது. பாடல் வரிகளில் கிரந்தத்தைக் கரந்து வைத்திருக்கிறார்கள். கோவி கண்ணன் இதை கேட்டு வெகுண்டெழுத்து ஒரு பதிவு போடுவார் என பதிவர் வட்டத்தில் சின்ன கிசு கிசுப்பு ஆங்கங்கு கேட்டுக் கொண்டிருக்கிறது.
****

பாலகுமாரனின் கனவுகள் விற்பவன் படித்தேன். கதறக் கதற 'பிளேடு' போட்டுள்ளார். முயற்சி செய்து படித்துப் பார்த்தேன். முடியலை.
****

அக்குளுக்கு பயன்படுத்தும் வாசனைத் திரவியத்தால் (deodorant) புற்று நோய்
ஏற்படுவதாகப் படித்தேன். அத்திரவியத்தில் அலுமினியம் போன்ற உலோகங்கள்
சேர்க்கப்படுகிறதாம். பீதியை கிளப்பிவிட்டுவிட்டது செய்தி.
*****

நியுமரலாஜி நிபுணர்களின் தகவலின் இந்த ஆண்டு என் இரத்தத்தைப் பார்க்காமல் முடியாதாம். இன்ன இன்ன பூஜை செய்ய வேண்டும் என அம்மாவிடம் சொல்லி இருக்கிறார்கள். நேற்று இரத்த தானம் செய்துவிட்டு வந்தேன். சின்ன காயம் நிறய இரத்தம் பார்த்தாச்சு. பூஜை கேன்சல். 4 ஆண்டுகளுக்கு முன்னமே உடல் உறுப்பு தானத்தையும் செய்தாகிவிட்டபடியால் இனி வாழ்க்கையில் எந்த பரிகாரமும் தேவை இல்லை என சிறப்புச் சலுகை கொடுத்திருக்கிறார் இளச்சி மலை ஆத்தா. ஆத்தா நீதானம்மா நியூம(சு)ராலாஜி நிபுணர்களுக்கு நல்ல புத்திய கொடுக்கனும்.
*****

தமிழர்கள் சினிமாவுக்கு அடுத்தபடியாகத் திருவிழாவுக்கே அதிகமாகச் செலவு செய்கிறார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலை சென்னை புத்தகத் திருவிழாவில் ஏற்படுமாயின் நலமான ஒன்றாக அமையும். ஏறக் குறைய பத்து புத்தகங்கள் வாங்க விண்ணப்பித்துள்ளேன்.
*****

உறங்குவதும்
உறங்கி விழிப்பதும் போலவே
இயல்பாகிவிட்டது,
உன்னை நினைத்துக் கொள்வதும்…

நீ கேட்காமலே
பேருந்து நிறுத்தம் வரை
துணைக்கு வந்தது…

பத்திரமாய்
சென்று சேர்ந்தாயா என்று
தொலைபேசியில் சோதித்தது…

நண்பர்களோடு சென்ற
சுற்றுலாவில் நான்
மயங்கி விழுந்தது கண்டு
நீ பதறித் தவித்தது…

இரவுப் பணியில் ஒருநாள்
கால் இடறி
நடக்கமுடியாமல் போனதற்காக
எனக்கிருந்த பசியறிந்து
பழங்களுடன் நீ வந்தது…

தொடர்ந்த என் நினைவுகளை
சட்டென்று அறுத்தது,
பில்ட்டரை நெருங்கிய
சிகரெட்டின் நெருப்பு,
நாம் பிரிந்த
ஜனவரி பதினொன்று
நினைவுக்கு வந்தபோது. - விஜய்கோபால்சாமி

Friday, December 26, 2008

கொசுறு 26/12/2008

இன்றய தினம் ஆழிப் பேரலையில் (சுனாமியில்) இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் பொருட்டு சாணியடி சித்தர் 'பிசி'யாக இருப்பதால் இவ்வார சித்தர் தத்துவத்திற்கு சிறப்பு விடுமுறை கொடுக்கப்பட்டிருக்கிறது. சுனாமியில் இறந்தவர்களுக்கு எனது மனமார்ந்த அஞ்சலி.
************************

நேற்றய தினம் கிறிஸ்துமஸ் பண்டிகையை இனிதே கொண்டாடிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் எனது வாழ்த்துக்கள். சேவியர் அண்ணுக்கும் ஜோசப் அண்ணனுக்கும் சிறப்பு வாழ்த்துகள். சிறப்பு வாழ்த்து சொல்பவர்களுக்குச் சிறப்பு பரிசு கொடுப்பதாக இருவரும் சொல்லி இருக்காங்க.
*******

டைரி எழுதுவதை ஓர் அருங்கலையாகக் கருதுகிறார்கள். இப்பழக்கம் வெள்ளையர்களிடம் ஆரம்பித்ததாகக் கூறப்படுகிறது. நமது அரசர்களின் கல் வெட்டுகள் கூட அவர்களின் டைரி என்பதாகவே எனக்குக் கருத தோன்றுகிறது. ஆரம்பக் காலங்களில் மருத்துவர்கள் வழக்கறிஞர்கள் போன்றோர் டைரி குறிப்பு எழுதுவதை பழக்கமாக்கி வைத்திருந்தார்கள். பின்னாட்களில் அரசியல்வாதிகள், பேச்சாளர்கள், சிறைக் கைதிகள் போன்றோர் எழுதிய நாட்குறிப்புகள் பிரசித்தி பெற்றும் இருக்கிறது. இந்நாட்களில் நாட்குறிப்பு எழுதும் பழக்கம் மக்களிடையேக் குறைந்து காணப்படுகிறது.

பள்ளி காலத்தில் என் நண்பனொருவன் நாட்குறிப்பு எழுதி வந்தான். ஒரு நாள் அக்குறிப்பு அவன் அப்பா கையில் கிடைக்கவும், பையன் மறுநாள் பள்ளிக்கு சின்னாபின்னமாகி வந்தான். ஏன் எனக் கேட்கிறீர்களா? அவனது நாட்குறிப்பில் நாள் ஒன்றுக்கு எத்தனை சிகரெட் பிடித்தான், எங்கே யாருடன் பிடித்தான் என்பதை தெளிவாக எழுதியது தான் காரணம்.

வருட ஆரம்பத்தில் பலருக்கும் டைரி பரிசாக கிடைத்திருக்கும். எனக்கு இது வரை 5 டைரிகள் கிடைத்திருக்கின்றன. நாட்குறிப்பு எழுதும் பழக்கம் இல்லை. இந்நாள் வரை டைரிகளில் கவிதைகளை மட்டுமே நிரப்பி வருகிறேன்.
**********

தமிழ்மணத்தின் விருதுகள் 2008 ஆரம்பமாகியுள்ளது. பதிவர்கள் பலரும் தங்களின் படைப்புகளில் சிறந்த பதிவினை பரிந்துரைக்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்கள். மின்னூடகத்தை அனைவரும் சிறந்த முறையில் பயன்படுத்திட அவர்களின் இம்முயற்சி பாரட்டதக்கது. நானும் எனது பதிவுகள் சிலவற்றை பரிந்துரை செய்துள்ளேன். மறவாமல் ஓட்டு போடவும்.
*********

அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிகளால் உலகில் ஆங்கங்கு பிரச்சனைகள் துளிர்ப்பதை தினமும் பார்க்க முடிகிறது. இந்தியா பாக்கிஸ்தான் போர் இப்போதோ இல்லை அப்போதோ என வெடிக்கும் தருவாயில் இருக்கிறது.

இந்நிலையில் ஏ.எஃப்.பி தளத்தில் சமீபத்தில் படித்த தகவல் ஒன்று. அரசியல் பிரச்சனையால் பாங்காக்கில் பாலியல் தொழில் படு மோசமாக வீழ்ச்சி கண்டுள்ளதாம். 50% கழிவு கொடுத்திருப்பினும் மக்கள் ஆர்வம் காட்டாததால் பல பாலியல் வியாபார மையங்கள் பலவும் பாயை சுருட்ட ஆரம்பித்துவிட்டனவாம். தாய்லாந்துக்கு சுற்றுபயணிகளின் வருகையும் கணிசமான அளவில் குறைந்துள்ளதாக தகவல்கள் தெரிவித்துள்ளன.
*****

திரைப்படம் பார்த்து வெகு நாட்களாகிறது. சமீப காலமாக ஈப்போ பக்கம் எந்தத் தமிழ்ப் படமும் திரைக் காண்பதில்லை. பொம்மலாட்டம் படம் இரசிக்கும்படி இருப்பதாக கேள்விப்பட்டேன். திரையரங்கில் காண முடியவில்லை என்றாலும் இணையத்தில் பார்க்கலாம் என நினைத்தேன். 'ப்ஃபர்' செய்து வருவதற்குள் தாவு தீர்ந்ததால் அதை பார்க்காமல் இருப்பதே மேல் என நினைத்து அடைத்துப் போட்டேன்.
*****

அறிவால் செய்து முடிக்கும்
அற்பச் செயலையுங் கூட
அரிவாள் கொண்டு
செய்து முடிக்கும்
அற்புத ஓரினம்
அருமைத் தமிழினம்!
****

இனி இவ்வாண்டு கொசுறு எழுதுவதில்லை எனும் முடிவோடு விடைபெறுகிறேன். நன்றி.

Wednesday, December 17, 2008

கொசுறு 17/12/2008

இந்த ஆண்டு இதையெல்லாம் செய்ய முடியலை என சொல்வது 'நெகடிவ் அப்ரோச்' அடுத்த ஆண்டு இதையெல்லாம் செய்துவிடுவேன் என சொல்வது 'பாசிடிவ் அப்ரோச்' என சாணியடி சித்தர் சொல்லி இருக்கிறார்.
****

ஆட்களை காட்டுபவர் என பெயரிட்ட பதிவர் ஒருவர் தற்சமயம் சிங்கையில் இருக்கிறார். மலேசியா வாந்தால் சொல்லுங்கள் சந்திக்கலாம் என்றேன். சந்திக்கலாம் போட்டோ எடுக்காதீர்கள் என்றார். ஏன் என்றேன். 'என் பொண்டாட்டி மூழுகாம இருக்கா, உன் பொண்டாட்டி என்னவா இருக்கா' என்ற சண்டைகள் விளையாமல் இருக்க போட்டோவை தவிர்ப்பது நன்று என்றார்.
****

பல பதிவர்களையும் இணைத்து கதை எழுதிய இவர், நெருங்கிய தொடர்பிலிருக்கும் என்னை மறந்துவிட்டார். இருக்கட்டும் பார்த்துக் கொள்கிறேன்.
****

பெர்னாட்ஷா உலக அறிஞர்களுள் ஒருவர். பரவலாக புத்தகம் படிக்கும் பழக்கம் கொண்ட இவர் ஆழ்ந்து கற்று தேறியது இரண்டே நூல்கள் தான். ஒன்று பைபில் இன்னொன்று ஷெக்ஸ்பியர் இலக்கியம்.
****

அண்மையில் தமிழ்மணத்தில் நடந்தேறிய தடல்புடல் சண்டைக்கு குரு பெயர்ச்சி காரணமா? தீவிர ஆலோசனைகள் நடந்தேறுகிறது.
****

சோ சொன்னது, நான் தம்பிகளுக்கெல்லாம் அண்ணன், அண்ணன்களுக்கெல்லாம் தம்பி, எப்படி முன்னால் பிறப்பவன் அண்ணன்,பின்னால் பிறப்பவன் தம்பி -எப்படி தத்துவம்?
****

புத்தகங்கள் எக்கச் செக்கமாக சேர்ந்துவிட்டது. படித்து முடித்துவிட்டு வாங்கிக் கொள்ளலாம் என்றே நினைக்கிறேன். ஆனால் சில சமயங்களில் புத்தகக் கடை பக்கம் போகும் வேலைகளில் கையை வைத்துக் கொண்டு சும்மா இருக்க முடியாமல் எதையாவது தேடி பிடித்து வாங்கிவிடுகிறேன்.
*****

ஞாயிற்றுக் கிழமை 14/12/2008 திரு.கோவி அவர்கள் சிகை அலங்காரம் செய்துள்ளார் மற்றும் வீட்டில் முருங்கைக்காய் சாம்பார் அவரே சமைத்துள்ளார். ரம்பா வீட்டில் நாய் குட்டி வாங்கிய செய்திகளையெல்லாம் நாளிகையில் போடுகிறார்கள். கோவியாரை பற்றிய இச்செய்தி மிகையில்லை என்றே கருதுகிறேன்.
*****

இவ்வருடம் வலைப்பதிவில் விடுபடாமல் தொடர்ந்து எழுதுகிறேன். பத்திரிக்கையில் எழுதும் வாய்ப்பும் அமைந்தது மகிழ்ச்சியை அளிக்கிறது.
****

இந்த சுட்டி அருண் (தமிழ் சினிமா டாட் கோம்) திருந்துவதாக தெரியவில்லை. நேற்றுவரை அவருடைய விளம்பர பின்னூட்டம் வந்துக் கொண்டே இருந்தது. சொல்லியும் கேட்காத இவர்களை என்னதான் திட்டுவது என்றே தெரியவில்லை.
****

இவள் என்ன கண்ணகியோ?
ஒரு முறை உரசியதற்கே
பற்றி எரிகிறாள்
மானமுள்ள தீக்குச்சி. -அன்புடன் மடற்குழுமத்தில் சங்கர் எழுதியது.
******

சமீபத்தில் முடிவிலான் எழுத்துக்கள் பக்கத்தில் படித்த அனந்தனின் சிறுகதை கவரும் வண்ணம் இருந்தது. வினாக்களோடு சில கனாக்கள் எனும் அக்கதையில் வரும் ஒரு உரையாடல். நல்ல நகைச்சுவை.

"மறவ், இங்கே பாரேன். இந்த போட்டோல இருப்பது யாருன்னு சொல்லு,"என்றாள்.

வழியில் செல்லும் ஓணானை மடியில் கட்டாமல் விட மாட்டாள் போலிருக்கே. அசடாய் சிரித்துக் கொண்டு,

"உங்கப்பாவோட சிறு வயது போட்டோவா? நல்லா இருக்காரு"

"ஷீட்... கெக்கபுக்க கெக்கபுக்க"சிரித்தாள்
.
*******

சமீபத்தில் , 'வந்த நாள் முதல் இந்த நாள் வரை வானம் மாறவில்லை' எனும் கண்ணதாசன் பாடலைக் கேட்டேன். அதில் வரும் சில வரிகள்:

முதல் வரி:
மலரும் மண்ணும் கொடியும் சோலையும்
நதியும் மாறவில்லை; மனிதன் மாறிவிட்டான்!

அடுத்த வரி:
கையளவுதானே இதயம் வைத்தான்
கடல்போல அதில் ஆசை வைத்தான்
மெய்யும் பொய்யும் கலந்துவைத்தான் - அதில்
மானிடர் தர்மத்தை மறைத்து வைத்தான் - ஏனோ
மனிதன் மாறவில்லை - அவன்
மயக்கம் தீரவில்லை

மனிதன் மாறிவிட்டானா? மாறவில்லையா?
மாறியும் இருக்கிறான் மாறாமலும் இருக்கிறானா?

Thursday, December 11, 2008

கொசுறு 11/12/2008

ஆண்டு முடிய போகிறது என சொல்வது 'நெகடிவ் அப்ரோச்' புத்தாண்டு தொடங்க போகிறது என சொல்வது 'பாசிடிவ் அப்ரோச்' என சாணியடி சித்தர் சொல்லி இருக்கிறார்.
*******

வலைபதிவை 2006-ஆம் ஆண்டு படிக்க ஆரம்பித்தேன். முறையாக எழுதத் தொடங்கியது இந்த ஆண்டின் நடுவின் இருந்து தான். இன்னமும் 100 பதிவுகளை எட்டி பிடிக்க முடியவில்லையே என்பது வருத்தமாக இருக்கிறது.
******

பாலகுமாரனின் பயணிகள் கவனிக்கவும் படித்த போது ஏற்பட்ட இன்ப தாக்கத்தை 'ஆசிட்' போட்டு கழுவியதை போல் செய்துவிட்டது அவருடைய இரும்பு குதிரைகள் நாவல். பலரும் அதை சிறந்த புத்தகம் எனக் கூறியதால் தேடி படித்தேன். அதை நாவல் என சொல்ல முடியாது. தொகுப்பு புத்தகம் தான். அவருடைய வாழ்க்கை வரலாறு கலந்துள்ளதாக அறிகிறேன். அவருடைய 'மெண்டாலிட்டி' எனக்கு ஒப்பவில்லை.
******

அதிஷாவின் இன்பினிட்டி இன்பக் கதைகளை படித்த பலரும் இரவு தூக்கமற்று உலாவித் திரிவதாக சென்னை வலைபதிவாளர்கள் தகவல் வட்டாரம் தெரிவித்துள்ளது.
*****

எழுத்தாளர் பரிசல்காரன் எழுதிய சிறுகதை அவள் விகடனில் வெளிகண்டுள்ளது. அவரது மனைவி திருமதி.உமா கௌரி எனும் பெயரில் பிற்பாதியும் கிருஷ்ணகுமார் எனும் பெயரின் முதல் பாதியும் சேர்த்து கௌரி கிருஷ்ணா எனும் பெயரில் வந்துள்ளது. அவருக்கு என்னுடைய வாழ்த்துகள்.
*****

மலேசிய வலைபதிவர் திரு.சுப.நற்குணன் எழுதிய 'சிலையாக நான்' எனும் சிறுகதை கடந்த 07-12-2008 மலேசிய நண்பன் நாளிகையில் வெளியீடு கண்டுள்ளது. ஒரு ஆசிரியை தான் படித்துக் கொடுத்த பிள்ளைகளின் பொது தேர்வின் முடிவை எதிர் நோக்கும் மனநிலையை அழகாக செதுக்கியுள்ளார்.
*****

வேலைக்குச் செல்ல பயன்படுத்தப்படும் முதன்மைச் சாலையோரங்களில் வாரா வாரம் ஏதாகினும் கால் நடை அடிபட்டு இறந்துக் கிடக்கிறது. மாநகராட்சிக்கு இவற்றை அப்புறப்படுத்த நேரம் இருப்பதில்லை. அப்படி என்ன தான் **** (வேண்டாம் விடுங்கள்). மழைகாலங்களில் நீர்பட்டும், கனரக வாகனங்களில் நசுங்கிப் போயும் அருவருப்பாக இருக்கிறது. கவனிப்பார் இல்லை.
*****

சிங்கை பதிவர்கள் மின்மடல் குழுமத்தில் அன்மைய காலமாக பயங்கர சலசலப்பு. பச்சை இலையை கண்டுபிடிக்க முழு மூச்சாக ஈடுபட்டுள்ளார் பின்னூட்ட புலி விஜய் ஆனந்த் 001. பலரது கவனமும் தமிழனின் குக்குரலிடும் பதிவர் மீது தீவிரமாக இருக்கிறது.
****

நீண்ட இடைவெளிக்கு பிறகு பார்த்த தமிழ்ப் படம் வாரணம் ஆயிரம். அமைதியான கதை. பாடல்களும் சிறப்பாகவே இருந்தன. தவமாய் தவமிருந்து படத்தினை துளியும் ஞாபகத்திற்கு கொண்டு வரவில்லை. நல்ல படம் என்றே சொல்ல தோன்றுகிறது. பதிவுகளில் பல இடங்களிலும் படம் மொக்கை என கிழிகிழியென கிழித்து தொங்கப் போட்டு வைத்திருக்கிறார்கள். அவற்றை படிக்கும் போது நான் தான் இரசனை கெட்டவனோ என எண்ண தோன்றுகிறது.
****

எல்லா பதிவுகளிலும் எங்களுக்கு உங்கள் பதிவில் இணைப்பு கொடுங்கள் என சுட்டி அருண் எனும் பதிவர் சுட்டித் தனம் செய்து கொண்டிருக்கிறார். இதை பலரது பதிவுகளிலும் காண்கிறேன். வேணா விட்டுடுங்க பின்னூட்டத்தை அழித்து அழித்து கை வலிக்கிறது.
*****

மெழுகுவத்தி


தனக்காக அல்ல...
தன் திரிக்கரு சிதைவதை எண்ணியே
அந்தத் தாய் அழுகிறாள் - வைரமுத்து.

*****

எல்லோரும் பரிசலாரின் அவியலை போல எழுதுவதால் அவர் சினம் கொள்வாரா என தெரியவில்லை. ஆதலால் அளவில்லா பயத்தோடு விக்கி.