Showing posts with label கடிதம். Show all posts
Showing posts with label கடிதம். Show all posts

Saturday, July 25, 2009

அம்மாவிற்கு ஒரு கடிதம்



அன்புள்ள அம்மாவுக்கு,

அம்மா நீங்கள் நலமா? எல்லோரும் நலம் வாழ இலச்சிமல ஆத்தா அருள் புரிவாளாக. எப்போதும், எல்லோரும் மற்றவர் மனம் குளிர சொல்வதை போல் நானும் நலம் என சொல்லிக் கொள்கிறேன்.

உங்களுக்கு 3 கண் ஊனம் என்பதை நான் அறிவேன். உலக மாறுதல் நான்காவது கண் ஒன்றை உருவாக்கி அதுவும் உங்களுக்கு தெரியாமல் செய்துவிட்டது. உலத்தை சொல்லி என்ன புண்ணியம் நீங்கள் தான் கண் திறந்து பார்க்கவில்லை என சொன்னால் பொருந்தும். நான் உளறுவதாக நினைக்க வேண்டாம் கண் என சொன்னது எழுதுவம், படிப்பதும், கணக்கிடுவதும். நான்காவது கண் கணினி, இணையம் என மனிதர்கள் சொல்லிக் கொள்ளும் ஒரு ஜந்து.

நீங்கள் படித்துவிட மாட்டீர்கள் எனும் இருமாப்பில் இக்கடிதத்தை எழுதும் என்னை இலச்சிமல ஆத்தா தான் மன்னிக்க வேண்டும். அம்மா, இக்கனத்தில் நீங்கள் அதிசய பெட்டியின் முன் அமர்ந்து ஆடல்களை இரசித்துக் கொண்டிருக்கலாம். உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா? முன்பு நம் வீட்டில் அதிசய பெட்டி இல்லை. ஆடிக்கொரு முறை, அமாவாசைக்கொரு முறையென மாமா வீட்டில் படம் பார்த்தால் தான் உண்டு.

ஆனால் இப்பொழுதோ காலையும் மாலையும் அலாரம் வைத்தது போல் அதிசய பொட்டியை திறந்துவிடுகிறீர்கள். சீரியல் என்ற பெயரில் வரும் சீரழிவு கண்றாவிகளை மறவாமல் காண்கிறீர்கள். அதனோடு ஒன்றிப் போகிறீர்கள். அவர்கள் அழுதால் அழவும் சிரித்தால் சிரிக்கவும் நீங்கள் கண்ணாடியின் பிரதிபலிப்பென உருவாகிவிட்டீர்கள்.

இத்தோடு நிறுத்தியபாடில்லாமல் பக்கத்து வீடு, எதிர் வீடு என அனைவரையும் கூட்டு சேர்த்துக் கொண்டு தொடர் நாடகங்களை பற்றிய தொடர் விவாதாம் செய்கிறீர்கள். இதனால் என்ன புண்ணியம் நேர்ந்தது? உங்கள் விவாதங்களை கேட்ட ஆர்வத்தில் பக்கத்து தெருவில் இருக்கும் ஆனந்தி அக்கள் வரும் தீபாவளிக்குள் ‘ஆஸ்ட்ரோ’ இணைப்பை ஏற்படுத்த வேண்டும், தொடர் நாடகங்களை பார்க்க வேண்டும் என்றிருக்கிறார். இதை கூட என்னுடன் வேலை பார்க்கும் அவர் கணவன் தான் சொன்னார். வீட்டில் நச்சரிப்பு தாங்கவில்லை என்று.

அம்மா நான் மட்டும் யோக்கியன் இல்லை. நானும் இந்த தொடர் நாடக பித்தத்தில் சிக்கிய காலம் உண்டு. அதிலிருந்து மீண்டு வந்தது இலச்சிமல ஆத்தாளின் கருணையாக தான் இருக்க வேண்டும். இப்பொழுதெல்லாம் ‘சீரியல்’ என்ற வார்த்தையை கேட்டாலே எரிச்சல் தான் வருகிறது. ஜவ்வு மிட்டாயை போல் இழு இழுவென இழுத்து கடசியில் அது ஒன்றும் இல்லாத சக்கை என உணர வைக்கிறது. வாயில் இருக்கும் போது தித்திக்கும் சிறு இனிப்பு கிடைக்குமே அது போல தான் நீங்கள் கண்டு கழிக்கும் போது சிறு ஆனந்தம் ஏற்படுகிறது.

அம்மா நன்றாக யோசித்துப் பாருங்கள், இந்தத் தொடர் நாடகங்கள் பொன்னான நேரத்தை மரண படுக்கைக்கு இட்டுச் செல்லும் அரக்கன் இல்லையா? தீயனவயை போதிக்கும் சாத்தான் இல்லையா? அதன் போதனைகளை சற்று உணர்ந்திருக்கிறீர்களா? இரு மணம் புரிந்துக் கொள்ளும் கணவன், அடுத்தவன் குடும்பத்தை கெடுக்க நினைக்கும் அக்காள், அண்ணியின் மீது வேண்டா வெறுப்புக் கொண்ட தங்கை, மருமகளை அதட்டும் மாமியார், மனைவி பேச்சை வேத வாக்காக மதிக்கும் கணவன். இதுவா நம் தமிழ் கலாச்சாரம்?

முன்பு படித்தவர்கள் அதிகம் இல்லை. ஆனால் அவர்கள் ஓய்வு நேரங்களை நாவல், மாத வார சஞ்சிகைகள் என ஈடுபடுத்திக் கொண்டு தங்களது வெளியுலக அறிவை வளர்த்துக் கொண்டர்கள். இப்போது நடப்பது என்ன? சினிமா ஏடுகளை தவிர மற்ற ஏடுகள் வந்த வேகத்தில் பொட்டிப் பாம்பென அடங்கிவிடுகிறது. இது வருத்தத்திற்குறிய விடயம் இல்லையா?

அம்மா, இப்பொதெல்லாம் பட்டிணத்தில் அடிக்கடி உலகமயமாக்குதல், வினண்வெளி ஆராய்ச்சி, புவி வெப்பம், பண வீக்கம், ஏன் அதிகம் வேண்டாம் நான் இப்போது புலம்பிக் கொண்டிருக்கும் பதிவுலகில் கூட பின் நவீனதுவம் என்றெல்லாம் ஏதேதோ பேசிக் கொள்கிறார்கள். இவற்றை பற்றி உங்களுக்கு ஏதாவது தெரியுமா? இவற்றை பற்றி நீங்கள் கண்டு ரசிக்கும் தொடர் நாடகங்கள் ஏதாவது சொல்லி இருக்கிறதா?

அம்மா, நீங்கள் தொடர் நாடகங்கள் பார்க்க வேண்டாமென நான் சொல்லவில்லை. சிகரெட்டு பழக்கத்தை போல நம்மவர்களிடையே மேலோங்கி நிற்கிறது இந்தச் ‘சீரியல்’ பார்க்கும் பழக்கம். அதைக் குறைத்துக் கொண்டால் நல்லதல்லவா? உங்கள் மனம் புண்படும்படி பேசி இருந்தால் இந்தச் சிறுவனை மன்னியுங்கள். நீங்கள் படிக்காத, பதில் எழுதாத கடிதத்தை இங்கே நிறுத்திக் கொள்கிறேன். இலச்சிமல ஆத்தாளின் ஆசிர்வாதத்தோடு விடைபெருகிறேன்.

அன்பு கலந்த வருத்தத்தோடு,
விக்கி.

பி.கு: இக்கடிதத்தை படித்துவிட்டு அம்மா என்னை அடிக்காமல் இருக்க அந்த இலச்சிமல ஆத்தா தான் காப்பாற்ற வேண்டும்.

Saturday, June 13, 2009

செவ்வாய் கிரகத்தில் MLM சிஸ்டத்தை அறிமுகப்படுத்துவீர்களா?

பதிவு போட மேட்டர் கிடைக்காமல் குவாட்டர் அடித்துவிட்டுக் குப்புற படுத்துக் கிடந்த சமயத்தில் MAIL BOXல் கிடக்கும் கடிதத்தை வெளியிடலாமே எனும் சமயோசிதம் என் சிற்றறிவுக்குள் சட்டென வெட்டிச் சென்றது. இதனால் மடல்களுக்கு பதில் கொடுக்காமல் தலைக்கனம் பிடித்தவனாக இருக்கிறேன் எனும் அவப் பெயரை நான் அகற்றிக் கொள்வது மட்டுமல்லாமல் என்னையும் ஒரு டெரர் என நினைத்து மெனக்கெட்டு மடல் போடுபவர்களுக்கும் பதில் சொல்ல வாய்ப்புக் கிடைத்தபடியும் இருக்குமென உணர்கிறேன்.

கடன் கொடுக்கும் கலியுக சித்தர்கள் எனும் தலைப்பில் வட்டி முதலைகள் பற்றி நான் எழுதியக் கட்டுரைக்கு அன்பர் ஒருவர் கடிதம் எழுதி இருந்தார். ஒட்டு மொத்த இந்தியச் சமுதாயத்தையும் தூக்கி நிறுத்த ஒரு திட்டம் வைத்திருப்பதாக தமது மடலில் குறிப்பிட்டுள்ளார். அவர் கடிதத்தைப் படிக்க மேலும் தொடருங்கள். அவர் எழுதியதைக் கீழே கொடுத்துள்ளேன்.

///////////////////////////////////////////////////////
தங்களின் பிளாக் ஃபாலோ செய்யும் ஃபாலோவர்ஸ்களில் அடியேனும் ஒருவன்.
நல்ல பல விசயங்களை அலசி ஆரய்ந்து வருகிறீர்கள்.
கடைசியாக 'வட்டி முதலைகளின்' மேல் கொண்ட தங்களின் அலசல் நன்று.

நான் கோவின் @ ரகு @ ராகவன், சிலாங்கூர், ரவாங்கை சேர்ந்தவன், வணக்கம்.

நான் தங்களைத் தொடர்பு கொள்வதன் நோக்கம், ஒரு விசயம் பற்றி தங்களிடம் பேசவே.

உங்கள் அனுமதியோடு (தந்துவிட்டீர்கள் என்று எடுத்துக் கொள்கிறேன்) :) பேச விரும்புகிறேன்.

என் கருத்தின்படி, நம் இந்திய சமுதாயம், பொருளாதார பிரச்சனையின் காரணமாகத் தான், இந்நாட்டிலே மிகவும் தாழ்வான நிலையில் அல்லோல பட்டுக் கொண்டிருக்கிறது என்பது என் திடமான கருத்து.

சமீப காலத்தின் முன், நான் இணைந்த ஒரு பொருளாதார திட்டம், நம் இன (மட்டுமன்றி அனைவரின்) பொருளாதார பிரச்சனையும், மிகக் குறைந்த முயற்சி மற்றும் மிகக் குறைந்த மூல தானத்துடனும், தீர்த்து வைக்க முடியும் என்று நான் பலமாக நம்புகிறேன். இந்த திட்டத்தில் நமக்கு தேவை எல்லாம் ஒன்றுபட்ட செயல் முறையே

தயை செய்து கீழ் கண்ட வெப்சைட்டை பாருங்கள், தங்களின் கருத்தைக் கூறுங்கள்.

(one-time-out-pocket of rm230 and bring in two friends, and ONCE one's team gathers 30 downlines, it will start create
rm45,000 monthly OR each cycle) NOT BUT AGAIN AND AGAIN there after.) www.g1g4lite.net (guest code 71184)
this is a three-year-old univesal programme based from Canada.
Not a business but a PEER-TO-PEER HELPING, GIFTING SYSTEM. migavum arumaiyaaga poikittu iruku. $$$$$ neradiyaaga nam bank account-ku vantidum.

தேவை எனின் உங்களை நேரிடையாக சந்திக்க தயாராக உள்ளேன்.

நம் மக்களின் நலம் பொருட்டு, தங்களின் கூட்டுறவு நாடும்

தங்களின் புதிய நண்பன்

Govind
//////////////////////////////////////////////////////////

என் நலன் கருதியும் இந்நியச் சமுதாயத்தின் நலன் கருதியும் நேரம் ஒதுக்கி பாடுபட்டு இம்மடல் அனுப்பியதற்கு நன்றிகள் பல.

ஒரு நாட்டின் மக்களின் நலன் மேம்பட இது தான் தீர்வு என்றால் இத்திட்டம் என்றோ பிரபலமாகி இருக்கக் கூடும். 'பிரமிட் சிஸ்டம்', 'மல்டி லெவல் மார்க்கெட்டிங்' இன்னும் பிற என எவ்வளவோ திட்டங்கள் இப்படித் தான் இயங்கிக் கொண்டிருக்கின்றன.

யாராவது 'சார் ஒரு முக்கியமான விசயமா பேசனும், வாங்க ஒரு காப்பி சாப்பிட போகலாம்', என்றோ 'சார் ஒரு 10 மினிட்ஸ் உங்க கூட ஒரு முக்கியமான விசயம் பேசனும்' என்று சொன்னால் கூட எனக்கு பீதியாகி பேதி வந்துவிடுகிறது.

10 நிமிடம் என்றுச் சொன்ன ஆசாமிகள் உரிய நேரத்தில் தமது விளக்க உரையை முடித்துக் கொண்டார்களா? இது வரை ஒருவரையும் கண்டதில்லை. 10 நிமிடம் எனக் கூறியவர் எனது சில மணி நேரத்தை நாசம் பண்ணிய அட்டூழியங்களையும் கண்டிருக்கிறேன். சரி போதும் என நாசுக்காக அடிக்கடி கடிக்காரத்தை பார்த்து தெரிவித்தாலும் நமது உடலசைவு மொழிகளை அவர்கள் புரிந்துக் கொள்வதாக தெரிவதில்லை. 'யோவ் _____________ கிளம்பு' எனச் சொல்வது பண்பன்று என்பதால் எனது அரக்க உணர்சிகளை பல முறைக் கட்டிப் போட்டிருக்கிறேன்.

மிக எளிமையான விடயத்தைக் காண்போம். ஆரம்பத்தில் சொன்ன 10 நிமிடம் எனும் வார்த்தையில் தம்மைக் கட்டிக் காத்துக் கொள்ளாமல் பொய்யுரைக்கும் ஒரு ஆசாமியை எவ்வகையில் நம்புவது என்பது பெரிய வினாக் குறியாகும். இப்பொழுதெல்லாம் MLM ஆசாமிகளைக் கண்டால் காத தூரம் கண்ணுக்கு தெரியாமல் ஓடி ஒளிந்துக் கொள்கிறேன். நம்மை தாவு தீர்க்கும் இவர்களின் கழுத்தருக்கும் 'பிளேடுகளை' எவ்வளவு நாள் தான் கதறாமல் தாங்கிக் கொண்டிருப்பது.

தீர்வு ஒன்று: நீங்கள் கருத்துரைக்க நினைப்பதை ஒரு சிறு கையேடாக அச்சிட்டு கொடுத்துவிடுங்கள். முன்னேற நினைக்கும் சமுதாயம் படித்துக் கொள்ளட்டும்.

தீர்வு இரண்டு: நீங்கள் பேச நினைப்பதை 'சிடி'யில் பதிவு செய்து மக்களுக்கு விநியோகித்துவிடுங்கள். நேரம் இருப்பவர்கள் கேட்டுக் கொள்ளட்டும். உங்களுக்கும் வார்த்தைகளை சேமித்த புண்ணியம் கிடைக்கும்.

சரி அடுத்த விடயத்துக்கு வருவோம். நான் MLM திட்டத்தில் பணம் செலுத்தி சேர்ந்துக் கொண்டேன். எனக்கு கீழ் இரண்டு பேரை சேர்த்துவிட்டேன். பிறகு அவர்கள் ஆளுக்கு இரண்டு இப்படியே போய்க் கொண்டிருக்கிறாது என வைத்துக் கொள்ளுங்கள் கடைசியில் உலகத்தில் உள்ள மக்கள் எல்லோரும் முடிந்து போய் சேர்க்க ஆள் இல்லத நிலை வந்துவிட்டால் என்ன செய்வார்கள்.

தீர்வு 3: செவ்வாய் மண்டலத்தில் MLM சிஸ்டத்தை அமலாக்கப்படுத்தும் சீரிய முயற்சியில் இப்போதே இறங்கலாம்.

ஓகே. இப்போது அடுத்த மேட்டருக்கு போகலாம். நமது சமுதாயம் பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ளது என்கிறீர்கள். அப்படி என்றால் பொருளாதார பிரச்சனைகள் தீர்ந்தால் எல்லா பிரச்சனைகளும் தீர்ந்துவிடும் என்கிறீர்களா? மாதம் லட்சக் கணக்கில் சம்பாதிக்கும் ஒரு துணிக் கடை முதலாளி யாகம் வளர்க்கிறேன் பேர்வழி எனச் சொல்லிக் கொண்டு 10000ரிங்கிட் பெருமானமுள்ள துணிகளை நெருப்பில் போட்டு பொசுக்கிய மேன்மை குணங்களை கண்டிருக்கிறேன். அவருக்கு பணம் பிரச்சனையல்ல, பின் எதற்காக இப்படி நடந்துக் கொள்ள வேண்டும்? பணம் ஒன்று தான் வாழ்க்கை என்றாகிவிடுவதில்லை. பணத்தோடு நெறிக் கெட்டு வாழ்வதைவிட, பணம் இல்லாமல் நெறிக் கொண்டு வாழ்வது எவ்வளவோ மேல்.

ஒரு மனிதனின் தாழ்வுக்கு காரணம் ஒழுக்க நெறிகளின்மையே அன்றி பொருளாதார பிரச்சனை அல்ல... அல்ல... அல்ல... . உங்கள் திடமான கருத்தில் இடி விழ.

தீர்வு 4: பொருளாதார பிரச்சனையை தீர்க்க MLM சிஸ்டத்தில் பணம் அச்சடிக்கும் மெசின் ஒன்றை அறிமுகப் படுத்தலாம்.

தீர்வு 5: மனிதனின் தாழ்வுக்கு காரணம் பொருளாதார பிரச்சனையா அல்லது ஒழுக்க நெறி முறைகளின்மையா என ஒரு பட்டிமன்றம் நடத்திப் பார்க்கலாம்.

முகக் குறைந்த முயற்சி அல்லது முயற்சின்மையில் கிடைக்கும் பெருஞ்செல்வம் திருட்டுக்கு சமம் என்று நபிகள் நாயகம் செல்லியுள்ளதாக படித்த ஞாபகம். இது உண்மையிலேயே குறைந்த முயற்சியா அல்லது கவர்ச்சி விளம்பரத்துக்காக சொல்கிறீர்களா என்பதும் இப்போது வரையினும் என் சிந்தையை பலமாக(உங்கள் வார்த்தை தான்) இடிக்கிறது.

தீர்வு 6: லக்கிலுக் எழுதிய சுண்டி இழுக்கும் விளம்பர உலகம் எனும் புத்தகத்தை வாங்கி படித்து உங்கள் மார்கெட்டிங் ஸ்ட்ரெட்டஜியை மாற்றி அமைக்கவும். பழய யுக்தி முறைகளை கேட்டுக் கேட்டு புளித்துப் போகிறது.

நீங்கள் சொல்லியது போல் ஒன்றுபட்ட செயல் முறை மட்டும் போதும் என்றால் சயாமில் இறந்து போன நிகழ்வுகளும், தற்சமயம் ஈழத்தில் கொத்துக் கொத்தாய் இறந்து போன அவலங்களும் சரித்திரத்தில் இடம் பெறாமல் தகர்த்திருக்கலாம். தமிழன் தான் இந்தியன் என்பதை விடவும் தமிழன் என்பதை விடவும், தான் இன்ன சாதியன் என்பதில் தான் பெருமைக் கொள்கிறான். நம்பவில்லை என்றால் தமிழனைக் கூறினால் சிரித்துக் கொண்டு ஆமோதிக்கும் ஒருவன் அவன் சாதியை பற்றிக் குறைச் சொன்னால் என்ன செய்வான் என்று பாருங்கள்.

அது போக ஒன்றுபட்டு செயல் படுவோம் வாருங்கள் எனக் கூறினால். முதலில் நம்மை கவனித்துவிட்டுதான் அடுத்த காரியத்தில் இறங்குவார்கள் போங்க.

நான் ஒருவன் மட்டும் இக்கூட்டுறவில் சேர்வதனால் நம் மக்களின் பிரச்சனை தீர்ந்துவிடுமென்றால் எச்சமயமும் நான் தயாராக இருக்கிறேன். ஆனால் நீங்கள் கூறும் இவ்வரிகளில் எவ்வளவு தூரம் உண்மை இருக்கிறது என்பதை முதலில் புரிந்துக் கொண்டு பேசுங்கள். கிஞ்சித்தும் புரிந்துணர்வு கொள்ளத நம்மிடையே இருப்பது நட்பென கூறுவது அபத்தம்.

தீர்வு 7: வியாபர நட்பு முறையை வளப்படுத்துவது எப்படியென ஒரு செயல்திட்டத்தை அறிமுகப்படுத்திவிட்டு மேல் தொடரலாம்.

இறுதியாக ஒரு சம்பவம். முன்பு இப்படி தான் அறிமுகமே இல்லாத ஒரு பண்பு கெட்ட மனிதர் 'எம்வே' எனும் MLM சிஸ்டத்தில் என்னைச் சேர்க்க கழுத்தறுத்துக் கொண்டிருந்தார். நான் வேண்டாம் என எவ்வளவுக் கூறியும் கேட்டபாடில்லை. அவர் நோக்கம் என்னிடம் பணம் கறப்பது மட்டுமே. முடியாது என்றாகிவிட்டபட்சத்தில் பலமாக மிரட்டிவிட்டு 'எந்த தமிழனாக இருந்தாலும் இதுல வந்து சேர்ந்து தான் ஆகனும்' என்று இன்னும் சில வார்த்தைகளில் கடுமையாக பேசிவிட்டு சென்றார். நம் நிலை எங்கு போய்க் கொண்டிருக்கிறது?

நான் கொஞ்சமாக சம்பாதித்தாலும் மகிழ்ச்சியாகவே இருக்கிறேன். என் குடும்பத்தை மகிழ்ச்சியாக பார்த்துக் கொள்கிறேன். பிறருக்கு சிரமம் கொடுக்க முனைந்ததில்லை. சமுதாயம் என்பது ஒரு தனி மனிதனில் தான் ஆரம்பமாகிறது. நல்ல சிந்தனைகள் நமக்கும் நம் சுற்றத்தாருக்கும் இருந்துவிடின் சமூக பிரச்சனைகள் எவ்வளவோ குறைந்துவிடும். இப்படிபட்ட திட்டத்தால் தான் நான் உயர வேண்டும் எனும் அவசியம் எனக்கில்லை. நட்பெனும் பெயரில் உங்களில் அணுகுதல் வருந்த தக்க ஒன்று
.

Tuesday, December 16, 2008

இறைவனுக்கு ஒரு கடிதம்!!

இறைவனுக்கு வணக்கம்,

நீ எதையும் கண்டு கொள்ளாமல் இருமாப்புடன்தான் இருக்கிறாய். இந்த ஆறறிவு அறிவு ஜீவிகளை நினைக்கையில் தான் பெருமிதமாக இருக்கிறது. உன் பெயரைச் சொல்லிக்கொண்டு அடிதடியில் இறங்கிவிடுகிறார்கள். என்னைக் கேட்டால் உலகில் மிகப்பெரிய வன்முறைக் கும்பல் தலைவன் நீ தான் என்பேன். ஏன் என்று கேட்கிறாயா? மௌனத்தை துணை கொண்டு சாதனை செய்பவன் அல்லவா நீ! அதுதான் காரணம்.

ஒரு கிழவனைக் கண்டேன். அவனுக்கு 80 வயதுக்குமேல் இருக்க வேண்டும். நினைவு தெரிந்த நாளில் இருந்து உன்னை வழிபடுகிறானாம். ஏன் என்றேன். நீ நல்லது செய்வாய் என்ற நம்பிக்கை என்றான். பார், தன் மேல் இருக்கும்
நம்பிக்கையைவிட உன் மேல் தான் அதிக நம்பிக்கை வைத்துள்ளது மனித குலம். அந்த மனிதனின் விசுவாசத்திற்கு நீ பதில் சொல்வாயா? இங்குள்ள சிலர் அவனுக்கு பதில் சொன்னார்கள். அவன் மடையன் என்று. ஆனால் அவனுக்கோ இன்னமும் அந்த பதிலில் திருப்திதான் இல்லை.

உனது பக்தர்கள் தன் சக மனிதனுக்கு உதவுவதைவிட உன்னிடத்தில்தான் கொட்டிக் கொடுக்கிறார்கள். பிரச்சனைகளையும், சம்பாதிக்கும் செல்வங்களையும் சமபங்கில். மடிந்து போகும் மனிதனுக்கு மண்டையில் மயிர் இருக்கும் அளவிற்கு மதி நுட்பம் இருப்பதில்லை. கோடிக்கணக்கில் தானம் செய்து உனக்கு கோவில் கட்டுகிறான். தெருக்கோடியில் நிற்கும் அனாதையை மறந்துவிடுகிறான்.

"அன்பின் வழிய துயிர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு"
குறள் எண்: 80
அன்புடமை (இல்லறவியல்)

என்று வள்ளுவர் சொல்கிறார். ஆனால் இங்கோ நிலைமை அப்படி இருக்கவில்லை. நாளுக்கு நாள் குற்றச்செயல்கள் சவரம் செய்த தாடியைப் போல் சடசடவென வளர்ந்து கொண்டே இருக்கிறது. ஒன்று போனால் இன்னொன்று என்பது போல் புதிது புதிதாக குற்றச் செயல்கள்.

''பெருநெறி பிடித்தொழுக வேண்டும் மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும்''
-அருள் பிரார்த்தனை

என வள்ளலார் தமது அருள் பிரார்த்தனையில் சொல்கிறார். இங்கோ உனக்கு ஏகப்பட்ட மதங்கள். மனிதனுக்கு தொண்டு செய்ய மதம் இருப்பின் பழுதில்லை. இங்கோ உனக்கு தொண்டு செய்ய மதங்கள் இருக்கிறது. உனக்கு நகை அணிவிக்க வேண்டும் என்கிறான், சட்டை போட வேண்டும் என்கிறான், தூக்கி வைத்துக் கொண்டு ஊர்வலம் போக வேண்டும் என்கிறான். நீயே சொல் இறைவா, நீ என்ன முடமா? முடமாய் கிடப்பவனுக்கு கூட இந்த மனிதர்கள் இவ்வளவு சேவை செய்வதில்லை போ.

என் இறைவனே,

உயரிய இடத்தில் இருக்க வேண்டிய உன் உணர்வு சந்தைக் கடை, சாக்கடை என படி இறக்கம் கொண்டே போகிறது. இதற்கு காரணம் நீயா இல்லை இந்த மனிதர்கள் தானா என்பது தெரியவில்லை. எல்லாம் இறைவன் செயல் என்றும் சொல்கிறார்கள், சில வேளைகளில் மனிதனின் அறியாமை என்றும் சொல்கிறார்கள். இறைவன் தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான் என்கிறார்கள். அப்படிப்பட்ட இறை தன்னுள்ளும் இருக்க வேண்டும் என்பதை சிந்திக்க மறுக்கிறார்கள்.

உன்னை கோவிலில் சிலையாக வைத்து வழிபடுகிறார்கள். நீ தூரத்தில் இருக்க வேண்டியவன் தானா? அப்படி உன்னை சிலையாக வழிபடுபவர்கள் கூட அந்த சிலையை அணுக பல தடைகள். இதற்கு யாரை நீ குறை சொல்ல போகிறாய்? நான் கேட்பது ஒன்று தான் என் நண்பனாக எனக்குள்ளே என்னோடு இரு என் மனசாட்சியாக, நன்நெறி போதகனாக, சூது அறியச் செய்பவனாக. நீ உச்சத்தில் இருக்கவும் வேண்டாம், தாழ்ந்திருக்கவும் வேண்டாம்.

''ஆதித் தமிழன் ஆண்டவனானான் மீதி தமிழன் அடிமைகளானான்'' என்கிறார்கள். பக்தர் எனும் பேரில் நான் உன் அடிமையாய் இருக்க விருப்பம் கொள்ளவில்லை. எதற்கு இந்த உயர்வு தாழ்வு நிலை. அதை உருவாக்கியவனும் நீதானா?

மனிதன் தவறு செய்கிறான். தவறுக்கு தண்டனை பெறுகிறான். தெய்வம் தண்டித்தது என்கிறார்கள். தண்டித்தது நீயானால் தவறு செய்ததும் நீயே. எதனால் இந்த கபட நாடகம்.

நீ இன்று கவிஞர்களின் விளையாட்டுப் பொருளாகிவிட்டாய்.

இல்லாத
இறைவன் போல்
இடைகொண்ட பெண்னே!

என்கிறான் ஒரு கவிஞன். பாடலில் தான் இப்படி என்றால் திரைபடங்களிலும் அப்படி தான். உன் பெயரால் மனிதனுக்கு மதம் பிடித்துவிட்டது. மாற்றான் மதம் பிடிக்காமல் போய்விட்டது. மதமில்லாமல் உன்னைக் காண இங்கு பலருக்கும் விருப்பமில்லை.

பிரச்சனைகள் இருந்தால் தான் கடவுளை நினைப்பார்கள் என்கிறான் ஒருவன். நினைப்பது நீதியாக இருந்தாலும் பரவாயில்லை. பிரச்சனைகளை தீர்க்கும் பேரில் உனக்கு லஞ்சம் கொடுக்கப்படுகிறது. லஞ்சம் கொடுத்தால் தான் நீ உதவுவாய் என்று கூறி பஞ்சம் பிழைக்கிறது ஒரு கூட்டம். இப்படிபட்ட பார்வையில் நீ இந்த பூமியில் அவசியம் தானா என்று சொல்?

பேச எவ்வளவோ தோன்றுகிறது. இப்போதைக்கு இது போதும். தவறுகள் நேரும் போது இன்னும் கடிதங்கள் எழுதுவேன். உன்பேரில் என்னை நான் கேள்விகள் கேட்டுக் கொள்ள.