Showing posts with label சாண்டில்யன். Show all posts
Showing posts with label சாண்டில்யன். Show all posts

Monday, December 22, 2008

சாண்டில்யனின் - விலை ராணி

நூல்: விலை ராணி
ஆசிரியர்: சாண்டில்யன்

நயம்: சரித்திர நாவல்
வெளியீடு: வானதி பதிப்பகம்

சந்திரகுப்த மௌரியரின் வரலாற்றை அடிப்படையாக கொண்டு அமைந்திருக்கும் நாவல் விலை ராணி. நாவலின் பெரும்பகுதி மௌரிய பேரரசின் விரிவாக்கத்திற்காக சந்திரகுப்தன் மெற்கொண்ட போர் காலகட்டத்தில் கதை நகர்த்தப்படுகிறது. சாண்டில்யனின் மற்ற நாவல்களை காட்டினும் இந்நாவலில் அவரின் எழுத்து நடை முற்றிலும் பல வேறுபாடுகளைக் கொண்டு அமைந்துள்ளது. தேக்கம் இல்லாத விறுவிறுப்பான நடை. அடுத்தடுத்த கட்டங்களுக்கு சட்டென பாய்ந்து செல்லும் முறையும் படிப்பவரின் ஆவலை ஆட்கொள்கிறது.

மன்னன் மகள் நாவலில் கௌடில்யரின் அர்த்த சாஸ்திர முறையிலான போர் தந்திரங்கள் பரவலாக விவரிக்கப்பட்டிருக்கும். விலை ராணியில் அர்த்த சாஸ்திரியான சாணக்கியரைப் பற்றிய வரலாறும் இணைக்கப்பட்டிருப்பது கதைக்கு பெரும் பலம்.

கிரேக்க சாம்ராஜ்யாதிபதி அலேக்செண்டரால் விட்டுச்செல்லப்பட்ட பாரத நாட்டினை கண்முன் கொண்டு வரும் யுக்தியும் மிகச் சிறப்பு. வீரகுப்தன், விலைராணி பிரபாவதி தேவி, ஆண்டரி போன்ற கற்பனை கதாபாத்திரங்கள் நாவலுக்கு வலு சேர்க்கும் விதமாக அமைக்கப்பட்டிருக்கிறது.

விலை ராணி எதனால் உருவாகிறாள்? தட்சஷீலத்தில் பெண்களை விற்பனை செய்யும் சந்தை ஒன்று அக்காலகட்டத்தில் இருந்ததிற்கான சரித்திர கூறுகள் ஊண்டு. அதை மக்களிடம் தெரிவிப்பதையும் கருத்தில் கொண்டு ஆசிரியர் செயல்பட்டிருக்கிறார். அப்படி விற்பனை செய்யப்படும் பெண்களை பல நாட்டவரும் வாங்கிச் செல்கிறார்கள். வாங்கிச் செல்லப்படும் பெண்கள் அடிமைகளாகவும், மனைவியாகவும் உரிமையாளர்களால் ஏற்றுக் கொள்ளப்படுகிறார்கள்.

அரசியல் நோக்கத்திற்காக திருமணச் சந்தையில் தன்னை விற்பனை பொருளாக்கிக் கொள்கிறாள் விலை ராணி. இக்கதையில் வீரகுப்தனும், சந்திரகுப்தனும் நாயகர்களாக காட்டப்படுகிறார்கள். ஆனால் அதன் பின்னனியில் பெரும் தூண்டுகோளாக செயல்படுகிறார் சாணக்கியர்.

பாடலீபுத்ர நாட்டின் மீது கொள்ளும் படையெடுப்பே இந்நாவலின் உச்சகட்டமாக அமைகிறது. அது போக சாணக்கியரின் சபதம் சுய இலாபத்தின் பேரில் அமைந்துவிடுவதாகவும் எண்ணச் செய்கிறது. ஆபத்து சூழ்ந்த வேளையிலும் விலை ராணியோடு காம இச்சை கொள்வதை போல் சித்தரிக்கப்படும் வீரகுப்தனின் போக்கு அதிகபடியானதே.

காதல், நட்பு, சகோதர பாசம், அரச விசுவாசம், சாணக்கிய தந்திரம் என பலவற்றையும் கொண்டு இந்நாவல் அலசப்பட்டிருக்கிறது. மௌரிய பேரரசின் வெற்றிக்கு சாணக்கிய தந்திரமே வித்தாக அமைந்துள்ளது என்பதை ஆசிரியர் முன்மொழிகிறார். இந்நாவல் சந்திரகுப்த மௌரியரின் இளமை கால வாழ்க்கையை அறியாதவர்களுக்கு அதை முழுமையாக உணர வைக்கும்.

Tuesday, December 09, 2008

சாண்டில்யனின் - மன்னன் மகள்

நூல்: மன்னன் மகள்
ஆசிரியர்: சாண்டில்யன்
நயம்: சரித்திர நாவல்
வெளியீடு: வானதி பதிப்பகம்

பிறப்பின் இரகசியத்தை மர்மப் பிடியில் வைத்து கதை நகர்த்தும் யுக்தி பல சரித்திர நாவல்களிலும் கண்டிருப்போம். முக்கியமாக பொன்னியின் செல்வன் மற்றும் கடல் புறா இவற்றிக்கு விதிவிலக்கல்ல.கடல் புறாவில் மஞ்சள் அழகியின் கதாபாத்திரம் என்னைக் கவர்ந்த கதாபத்திரங்களுல் ஒன்று. ஆச்சய முனையின் இளவரசியாக வரும் இவளின் பிறப்பு இரகசியமாக்கப்பட்டு பிண்ணணியில் சொல்லப்படும். கற்பனை கதாபாத்திரமான இவளின் பெயர் கடைசி வரை சொல்லப்படாமலே இருக்கும். அதை போலவே பொன்னியின் செல்வனில் நந்தினியின் கதா பாத்திரமும். கற்பனை கதாபாத்திரமான இவளின் பிறப்பின் இரகசியம் பரவலாக விவாதிக்கப்பட்ட ஒன்றாகும்.

பல சரித்திர நாவல்களில் ஒரு மாறுபாடு கொண்டு அமைந்துள்ள நாவல் மன்னன் மகள் எனக் கூறினால் அது மிகையன்று. கௌடிள்யம் எனும் தர்க்க சாஸ்திரத்தை மையமாகக் கொண்டு கதை கொண்டுச் செல்லப்படுகிறது. தமது பிறப்பின் இரகசியம் அறியும் பொருட்டு புறப்படுகிறான் கரிகாலன். இவன் இளம் பிராயத்தில் தம் தாயினால் நாகபட்டிணத்தின் சூடாமணி விஹாரத்தில் விட்டுச் செல்லப்படுகிறான்.

எதனால் விட்டுச் செல்லப்படுகிறான் என்பதுதான் கதையின் சுவாரசியமே. பிறப்புச் சிக்கலை அவிழ்க்கும் பொருட்டு உலக வாழ்க்கையில் காலடி வைப்பவன், விஹாரத்தை விட்டு வந்த சமயம் முதலே உலகப் பிரச்சனையில் மாட்டிக் கொள்கிறான். அதாவது நாம் செய்யும் எந்த காரியமாக இருந்தாலும் அதற்கான பின் விளைவுகள் நிச்சயம் உண்டு என்பதற்கு இதுவே சான்று.

இப்படியாக, சிறு விடயமாக கருதி ஒரு போலி துறவிக்கு உதவ முனைகிறான். அச்சிறு செயலானது அவனை வேங்கி நாட்டின் அரசியல் சிக்கலில் மாட்டிக் கொள்ளச் செய்கிறது. வேங்கி நாட்டின் மன்னன் மகளாக பிறந்து நாட்டின் அரசியல் பிரச்சனைகளால் மண்ணாள முடியாமலும் சுதந்திரமற்றும் இருக்கிறாள் நிரஞ்சனா தேவி. இவளே கதையின் நாயகியுமாவாள். வேங்கி நாட்டின் அரசியல் சிக்கலில் அகப்பட்டுக்கொள்ளும் கரிகாலன் தமது வாழ்வில் பல திருப்பங்களை காண்கிறான். நிரஞ்சனா தேவியின் மீது அவன் கொள்ளும் காதலும் அதில் அடங்கும்.

பொதுவாகவே சாண்டில்யனின் நாவல்களில் வர்ணனைகளும், சிருங்கார ரசமும் மிகையாகவே இருக்கும். சில வேளைகளில் சலிப்பைத் தட்டும் விதமாகவும் இருக்கும். கடல் புறா, இராஜ யோகம் போன்ற நாவல்களை காட்டினும் இதில் சிருங்கார ரசம் சற்றுக் குறைவாக உள்ளது என்றே சொல்லலாம்.

716 பக்கங்கள் கொண்ட ஒரு புத்தகமாக அமைந்திருந்தாலும் மற்ற நாவல்களைக் காட்டினும் அதிகபடியாக கதாபாத்திரங்களும், சரித்திர நிகழ்வுகளும் இணைக்கப்பட்டிருப்பது கதைக்கு வழு சேர்க்கும் விடயம் என்றே கூற வேண்டும்.

வேங்கி நாட்டின் அரசியலில் சிக்கலை உருவாக்கி அதை தமக்கு சாதகமாக பயன்படுத்தி நாட்டை ஆக்கிரமிக்க எத்தனிக்கிறான் விஷ்ணுவர்த்தன விஜயாதித்தன். இதற்கான முனைப்பையும் செய்கிறான் ஜெயசிம்ம சாளுக்கியன். ஒரே தகப்பனுக்கு பிறந்த இரு தாய் மக்கள் விஷ்ணுவர்தனும், ராராஜ நரேந்திரனுமாவர்.சாளுக்கிய அரச மகளுக்கு பிறந்தவன் விஷ்ணுவர்தன், இராஜேந்திர சோழ தேவரின் மகளான குந்தவைக்கு பிறந்தவன் ராஜ ராஜ நரேந்திரன். தந்தையின் இறப்புக்கு பின் அரியணை பிரச்சனை ஏற்படுகிறது. அரியணைக்கு சொந்தம் சோழர் வழியில் வந்தவனா இல்லை சாளுக்கிய வழியில் வந்தவனா எனும் பிரச்சனை உருவாகிறது.

அதே சமயம் சோழர்களின் வங்கப் பிரதேச படையெடுப்பும் ஆயத்தமாகிறது. கங்கை நதி பாயும் வங்கப் பிரதேசத்தை வெற்றி கொண்டு அதன் நீரில் மகுடாபிசேகம் செய்துக் கொள்ள வேண்டும் என்பது இராஜேந்திரச் சோழத் தேவரின் எண்ணம். இதன் வெற்றிக்கு பிறகே கங்கை கொண்ட சோழபுரம் என அழைக்கப்படுவதாக சரித்திரக் குறிப்புகள் கூறுகின்றன.

வங்க தேசத்தின் மீது படையெடுப்பு நடத்த வேங்கி நாட்டை கடந்து போக வேண்டும். வேங்கி நாட்டைக் கடக்க சாளுக்கியர்களை வெற்றி கொள்ள வேண்டும் அல்லது வேங்கியில் இருக்கும் அரியனை பிரச்சனை தீர்க்க வேண்டும். எதிர் கொண்டு செல்வதென்றால் இறுதி போர் வரை படை பலம் வழுவிழந்து போகும். இந்தச் சிக்கல்களை களைவதே கதையின் சாரம்.

இக்கதை பலரையும் கவர்ந்திருக்க வேண்டும். காரணம் இதன் 'PLOT' அல்லது கதைக்கோப்பு என சொல்லலாம். துரிதமான கதையம்சமும், தீர்வுகளும் மிகவும் நேர்த்தியாக கையாளப்பட்டிருக்கிறது. இக்கதைக்காக ஆசிரியர் சொல்லும் அரசியல் தந்திரங்களும் போர் விவரங்களும் முதல் தரம். அதற்கான தகவல் சேமிப்புகள் வியப்பளிக்கும் படி அமைந்துள்ளது. கதை போக்கில் சொல்லப்படும் அரசியல் மற்றும் போர் தத்துவங்கள் மேலும் வலு சேர்க்கிறது.

இளமை பருவம் முதல் ஏட்டுக் கல்வியில் மூழ்கியவன் கரிகாலன். கௌடிள்யம் எனப்படும் தர்க்க சாஸ்திரத்தில் தேர்ச்சி மிக பெற்றவன். அரசியல் மற்றும் போர் முனைக்கு உந்தப்படும் கரிகாலன் ஏட்டுச் சுரக்காய் கறிக்குதவாது எனும் படியாக கேலிக்குட்படுகிறான். கரிகாலனின் பாத்திர அமைப்பு சுவாரசியம் மிகுந்தது. இடற்களை அல்லது பிணக்குகளை நுண் அறிவால் வெல்லும் குணம், பிரச்சனைகளை பெரிது கொள்ளாதது போல் எதிராளியை கருதச் செய்து தோற்கடிப்பது போன்ற யுக்திகள் செலுத்தப்பட்டு மிளிர வைக்கப்பட்டுள்ளது.

இக்கதையின் மற்றுமொரு முக்கிய கூறு போர் உத்தி. அதிகபடியான மோதல்கள் இல்லாமல் மதி நுட்பத்தால் வெல்லும் திறன் பற்றி அதிகமாக சொல்லப்பட்டுள்ளது.

வந்தியத்தேவன், அரையன் ராஜராஜன், பிரும்ம மாராயர் போன்ற உண்மைக் காதாப்பாத்திரங்கள் பெரிதளவாக பேசப்பட்டாலும் கவரும் விதம் குறைபாடுடையதாகிறது. பொன்னியின் செல்வனில் குறும்புத் தனத்தோடு சித்தரிக்கப்படும் வந்தியத்தேவனின் காதாபாத்திரம் இதில் மாறுபடுகிறது. அகிலனின் வேங்கையின் மைந்தன் கதையில் முதிய வந்தியத்தேவனை குறும்புத்தனத்தோடு காண முடியும்.

பல போர் முனைகளை சந்தித்து மிகுந்த அனுபவம் கொண்ட இராஜேந்திரச் சோழ தேவரின் படை தளபதிகளின் திட்டத்தில் குறை காணப்படுவது நாவலில் நெருடுகிறது. வாசகர் அதைக் குறையாக காணாதிருக்கும் பொருட்டு ஆசிரியரும் அதைச் சாடியே எழுதியுள்ளார். அது கரிகாலன் கதாபாத்திரத்தின் தர்க்க சாஸ்த்திர முறையின் யுக்தியை முன்னிருத்த கையாளப்பட்ட தவிர்க்க முடியாத முரண்பாடுகளாக கூட இருக்கலாம்.

அடுத்தபடியாக கேள்விக் குறியாக அமையும் விடயம் இராஜராஜ சோழத் தேவரின் வாழ்க்கை. வந்தியத்தேவன் 50 அகவையைக் கடந்தவராக அல்லது இளம் முதுமையைக் கடந்தவராக சித்தரிக்கப்படுகிறார். அச்சமயம் இராஜேந்திரச் சோழத் தேவர் சோழ தேச அரியணையில் அரசனாக இருக்கிறார். சரித்திரக் கூற்றின் படி இராஜேந்திர சோழர் அரியனை ஏறியது அவரது 40வது வயதில் என குறிப்பிடப்படுகிறது.

அச்சமயம் வந்திய தேவரின் வயது என்னவாக இருந்திருக்க வேண்டும்? இராஜராஜ சோழரின் தமக்கையான குந்தவை நாச்சியாரை திருமணம் செய்த வந்தியத் தேவரின் வயது ராஜ ராஜ சோழனை விட குறைவானதா? வந்தியத் தேவருக்கு 50 அகவை இருக்கும் போது கண்டிப்பாக இராஜ ராஜ சோழருக்கும் ஏறக் குறைய அவ்வளவே இருந்திருக்க வேண்டும்.அப்படி என்றால் அச்சமயத்தில் இராஜேந்திரனின் வயது என்னவாக இருந்திருக்க வேண்டும்? அச்சமயம் அவர் அரசபீடத்தில் இருப்பதாக குறிப்பிட்டபட்டிருப்பது சற்று சிந்திக்க வேண்டிய விடயம். இல்லை கற்பனை நாவலில் சரித்திர பிழை ஏற்பட்டுள்ளதா?

மற்றபடியான கற்பனைச் செருகல்கள் மிகவும் சிறப்பாக அமைந்துள்ள நாவல் சாண்டில்யனின் மன்னன் மகள். இது வெறும் கதையாக மட்டும் இல்லாமல் சிந்தனைக்கும் மதி நுட்பத்தைப் பற்றிய யுக்திகளின் விவரிப்புகளுக்கும் சிறந்த நாவல் என்றே சொல்ல வேண்டும்.

Thursday, July 03, 2008

நூல் நயம்: சாண்டில்யனின் ராஜ யோகம்


உடையார் நாவல் வந்து சேரும் இந்தத் தறுவாயில் சாண்டில்யனின் ”ராஜ யோகம்” எனும் நாவலை வாசித்து முடித்தேன். கடல் புறாவைப் போல வளவளவென இழுவையாக இல்லாமல் கனகச்சிதமாகச் சொல்ல வேண்டியதைச் சொல்லி முடித்திருக்கிறார் சாண்டில்யன்.

பொன்னியின் செல்வனைப் படித்து முடித்த போது, சரித்திர நாவல் என்றால் சோழர் கதைகளை மட்டுமே படிக்க வேண்டும் என நினைத்திருந்தேன். தவிர்க முடியாத காரணத்தின் பேரில் மற்ற நூல்களையும் படிக்கும் சூழ்நிலை உருவாகிவிட்டது.

குலசேகர பாண்டியன் காலத்தில் ஏற்பட்ட அரியனை போட்டியை மையமாகக் கொண்டு இந்நாவல் தொகுக்கப்பட்டுள்ளது. குலசேகர பாண்டியன் மணிமுடியைத் தன் இளய மனைவியின் மகனான வீரபண்டியனிடம் கொடுக்க நினைக்கிறான். பட்டத்து ராணியின் முதல் மகனானவன் சுத்தரபாண்டியன். பதவியாசையின் பேரில் தந்தையையும் கொல்லத் துணிகிறான். பாரபட்சம் பார்க்காமல் பல கொடூரங்களை புரிகிறான்.

இக்கதையின் நாயகன், நாயகி எனும் கற்பனைப் பாத்திரங்கள் அவசியத்தின் பேரில் படைக்கப்பட்டிருந்தாலும், அப்துல்லா வாஸப் எனும் சரித்திர ஆசிரியன் தான் உண்மையான நாயகன்.

வாஸப் தனது சரித்திர ஆராய்ச்சிக்காகப் பாரசீகத்திலிருந்து பாண்டிய நாட்டிற்கு பயணம் மேற்கொள்கிறான். பாண்டிய நாட்டில் காலடி வைக்கும் வாஸப் எதிர்பாரா விதமாக அரசியல் சிக்கலில் அகப்பட்டுக் கொள்கிறான்.
பல முயற்சிகள் செய்தும் கடைசியில் பண்டிய நாட்டு மன்னனை காப்பாற்ற முடியாமல் போகிறது. அரியணை மீது இருந்த பேராசையில் மகனே தன் தந்தையை குத்திக் கொல்கிறான். நாட்டில் தாயாதிச் சண்டை எற்படுவதற்கு முன் பாண்டிய மண்ணிலிருந்து கிளம்புகிறான் வாஸப்.

கடல் புறாவில் இருந்ததைவிட இந்நாவலில் சிருங்கார ரசமும், பெண் வர்ணனையும் சற்றுத் தூக்கலாகவே இருக்கிறது. ஒரு அத்தியாயத்தில் சாண்டில்யன் ராஜ யோகத்தை எழுதுவதை மறந்து காம சூத்திரத்தை எழுதுகிறாரா என்ற எண்ணமும் உண்டானது.

இந்நாவலை படித்து முடித்த போது சில வரிகள் என்னுள் நீங்காமல் இருந்தது அவை:

ஒரு கட்டத்தில் நாயகனான இளம்பிரிதி வாஸப் தொழுகை புரியும் சமயத்தை காத்து நிற்கிறான். அப்போது எதிரியிடம்:

“தொழுகை ஆண்டவனை பற்றியது. அவனுக்குப் பெயர்கள் பல இருக்கலாம். அவன் ஒருவன் தான். நதிகள் பல உற்பத்தியானாலும் கடைசியில் கடலைச் சேருவது போல, தொழுகை யார் செய்தாலும் அது ஒருவனான ஆண்டவனைச் சேர்கிறது. இது இந்து மதம் சொல்லும் தத்துவம். தொழுகை- அதை யார் செய்தாலும் அதை காப்பது இந்துவின் கடமை”.

இளம்பிரிதி வாஸப்புடன் உரையாடுகையில்:

“வாஸப்! மரணம் நகைப்புக்கு இடமானதா”

“ஆம் இளம்பரிதி, நிரந்தரமானது அது ஒன்றுதான். நிச்சயமாய் எந்த மனிதனுக்கும் இன வித்தியாசம் இன்றி வருவது அது ஒன்றுதான். அதை நினைத்து மனிதன் நடுங்குகிறான். நடுங்குவதற்காக அது விடுவதில்லை. ஆகவே அதை அலட்சியப்படுத்துவது தான் விவேகம். நகைப்பதுதான் அறிவின் அடையாளம்.”

அடுத்ததாக:

“இனப்பற்று, மொழிப்பற்று இல்லாத சமுதாயம் சக்தியுடன் வளர முடியாது”

ஒரு கட்டத்தில் இளம்பிரிதி நாயகியான அல்லியுடன் காதல் மொழி பேசுகிறான். அது வாஸப் காதில் விழவும் வாஸப் நினைக்கிறான்:

“மண்ணாசையும் பெண்ணாசையும் யாரை விட்டது. பெண் அருகில் இருக்கும் போது எந்த ஆண்மகன் ஆபத்தை பற்றி நினைக்கிறான்”.

இப்படி இன்னும் பல சுவாரசியமான வரிகள்.
அடுத்த்தாக அரசர்களுக்கு ஜாதகத்தில் கூறப்படும் ராஜ யோகங்களை பற்றியும் ஒரு கட்டத்தில் விவாதிக்கிறார்கள்:

அவையனது, அபவாத ராஜயோகம், அனுபவ ராஜயோகம், ஸ்வத ஸித்த ராஜ யோகம், சாமான்ய ராஜயோகம், விஷய போக ராஜயோகம், அதிகார ராஜயோகம் மற்றும் பகுமான ராஜயோகம்.

இது மட்டும் இல்லாமல் பல பரிமாணங்களில் அலசி ஆராய்ந்து பண்டிய நாட்டில் அந்நாளய சூழலை நமக்கு ராஜ யோக விருந்தாகப் படைத்திருக்கிரார் சாண்டில்யன்.