Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

Saturday, November 14, 2009

வான் துளிகள்!!


தேங்கிய குப்பைகள்

திணறிக் கொண்டிருக்கிறது!

அடைத்துக் கொண்ட சாக்கடை

அழுது வடிகிறது!


ஈரப்பதம்

தேடிய காற்று

அலைமோதி

ஆசுவாசப்

பெருமூச்சிட்டுச் செல்கிறது!


வெள்ளிக்

காசுகளாய் குலுங்கி

கொட்டுகிறது

தலைதுவட்டிய

மரங்கள்!


தேன் கசிந்திட

திரவம் கிடைத்ததாய்

பூத்துச் சிரிக்கிறது

வசந்த மலர்கள்!


களிமண்

கரைந்திடாமல் இருக்க

குடைபிடித்துச் செல்கிறான்

மனிதன்!


இந்த

இயற்கை

தனக்குக் காய்சல்

வருவதாய் சொல்லவில்லை!


யாரைத் தேடி

வந்தன

இம்மழைத் துளிகள்!


மீண்டும்

தேடலை துவங்கிய

காற்றாய் வான் நோக்கிச்

செல்கின்றனவே!

Friday, January 16, 2009

முரண்டு பிடிக்கும் மரணம்!!!


எச்சமாய் இருக்கும்
வாழ்க்கையின்
மிச்சத்தை
தள்ளாடித் தீர்க்கிறான்
தடி ஊன்றும் கிழவன்!

உடல் தேய
உழைத்தவனின்
உள்ளங்கை ரேகைகள்
ஊமையாகிவிட்டன!

இந்த முதுமை
சோகங்கள்
அழியா கரையாய்
நெஞ்சுக் கூட்டில்
நெளிந்துக் கிடக்கிறது!

வேட்டி முடிய
கனக்கும் கைகள்!
அடுத்த அடிக்கு
முகம் சுழிக்கும் கால்கள்!
“டேய் கிழவா”
கேட்டு மந்தமான செவிகள்.
பகல் கூட இருட்ட
தொடங்கிவிட்டது கண்களுக்கு!

உறவுகள் சாதகமில்லை
உணர்வுகள் புரியவில்லை!
உணவு இறங்கவில்லை
உறங்கவும் முடியவில்லை!

மரியாதையை எதிர்பார்த்து
மானமும் போய்விட்டது!
வினாடிகளை எண்ணிக்
காலத்தைக் கரைக்கிறான்!
மரணம் இவனுக்கு
மட்டும் முரண்டு பிடிக்கிறது!

Saturday, December 06, 2008

மௌனம்!!


மௌனம்!
சில
புரிதல்களின்
பூரண வடிவம்!
சில
புதிர்களின்
புரியாத விடை!

மௌனம்!
சப்தங்களுக்கும்
சலசலப்புகளுக்கும்- போட்ட
சல்லடையால்
சடுதியில்- உயிர்த்த
சாரம்!

மௌனம்!
இருதய இரும்பில்
பிணைக்கப்பட்ட
பிரசவமாகா காதலின்
மறுமொழி!

மௌனம்!
உணர்வுகளின்
உன்னத மொழி!
உதிர்ந்து விழும்- மலரின்
உயிர் வலி!

மௌனம்!
நினைவுகளின் அலைவரிசை!

மௌனம்!
கனவுகளின் முகவரி!

மௌனம்!
காற்றின் ஸ்பரிசம்!

மௌனம்!
இதழ்களின் உறக்கம்!

மௌனம்!
தனிமையின் தலைவன்!

மௌனம்!
வாழ்க்கையின் விடை!

மௌனம்!
வார்த்தைகளின் சிறைச்சாலை!

மௌனம்!
இரகசிய ராகம்!

மௌனம்!
மனிதன்
மனதில் கொண்டு
மதியைச் செறிவு செய்திட உதவும்
மந்திரகோள்!

மௌனத்தை நேசி!
மரணத்தின் பின்
மௌனமே உன் துணை!

Friday, December 05, 2008

ஊடல் காதற்கின்பம்!

கிழித்தெறிந்த
காகிதமும்
கடித்தெறிந்த
நகச் சில்லும்
வெடித்தெழுந்து சொல்கிறது
வெப்பம் கெண்ட-உன்
சிறு கோபத்தினை!

பல் கடிக்கிறாய்!
விழி முறைக்கிறாய்!
நெற்றி சுருக்கி
நெட்டி முறிக்கிறாய்!

ஊடலை
உப்பென சேர்ப்பதே
உகந்ததாய்
உரைக்கிறான் வள்ளுவன்!

உதிராத
உன் இதழை
உரிமை கொண்டால்
உணர்வு தெளிவாயா?

கட்டி அணை!
கவிதை கேள்!
காதல் கொள்!
காலம் இனிக்கட்டும்!

Friday, November 21, 2008

கனவு தேவதை!!!


மண்ணும் தான் கலங்கிடுமே
மலர் பாதம் பட்டவுடன்!
மதியும் தான் மயங்கிடுமே
மங்கை முகம் பார்த்தவுடன்!

பவள இதழ் ஓரம்தனில்
பழங்கள் தான் கனிந்திடுமோ!
பாவை உனை நான் காண
பால் மனதில் பைத்தியம் தான்!

காதாடும் குழையும் தான்
கச்சிதமாய் மின்னுதடி!
காற்றினிலே தேர் கொண்டு
காதல் மனு எடுத்து வந்தேன்!

ஊற்றெடுக்கும் உள்ளம் தனில்
உணர்ச்சிகள் தான் சில நூறு!
உடலெல்லாம் முத்தமிட்டு
உறக்கம் தான் மறந்தேனோ!

இரவெல்லாம் உன் நினைவு
இன்ப நாதம் மீட்டுதடி!
இறைவனிடம் வேண்டி நின்றேன்
இறக்கை பெற்று உனைக் காண!

சிறு இடையில் சேலை கட்டி
சிரித்து வந்து நின்றாயே!
சின்னவளே சீக்கிரமாய் நானறிந்தேன்
சிந்தையிலும் சொப்பனமாய் நீதானே!

Thursday, November 20, 2008

இறைவன் ஏன் கல்லானான்?


வெள்ளை மனதை வெளியே காட்டி
உள்ளம் திறந்து உண்மையாய் வழிபடு!

என்ற நெறியை எடுத்துச் சொல்ல
எங்கள் முன்னோர் தேங்காய் உடைத்தனர்!

இறைமை பணிகள் சிறப்பாய் நடக்க
அர்ச்சனை தட்டில் தட்சணை வைத்தனர்!

உண்மைப் பசியால் வாடும் மக்கள்
உண்டி கொடுக்க உண்டியல் வைத்தனர்!

உண்மை உணரா சப்பாணித் தமிழர்
உள்ளதை மறைக்க லஞ்சம் வைத்தனர்!

மக்களின் எண்ணம் இறைவனறிந்தான்
மனதை மாற்றி கல்லாய்ப் போனான்!

கல்லாய் போன கடவுள் பெயரால்
கயவர் செய்திடும் காரியம் கொஞ்சமோ?

Monday, November 17, 2008

அறிவை அழிக்கும் தீ!!!


மதிப்பிற்குரிய
(சா)தீய அன்பனுக்கு!
சனநாயக தேசத்தில்
சாதி வெறி பிடித்து
சால்ரா அடிக்கிறயா? - இல்லை
சடமென வாழ்கிறாயா?

ரத்த வெறி பிடித்த -நீ
ரத்தக் காட்டேரியா?- இல்லை
ரணங்கள் செய்யும்
ராட்சச பிசாசா?

சாதி
உனக்கு
சோறூட்டி சீராட்டி
வளர்த்த தாயா?- இல்லை
அன்பூட்டி அறிவூட்டி
வளர்த்த தந்தையா?

சாதியனே!
துப்பாக்கியைத் தூர எறி!
கத்திக்கு காணிக்கை செலுத்து.
கதறக் கதறக்
கண்டந்துண்டமாய் வெட்டு!
சனத்தொகையை பிணத்தொகையாய் மாற்று!

சாதி வெறி பிடித்த
ஞானியே!
உனக்குத் தேவை
மனித உடலின்
இரத்தமும் சதையும் தானே?
உடனே செய்!
சாதியெனும் மாயையில்
தீய்ந்து போ!

சாதியின் வேதத்தை
உபதேசிப்பாயா எனக்கு?
என்ன?
மனிதத்தை புதைக்க வேண்டுமா?
மயானத்தை விரிவு செய்ய வேண்டுமா?
மனமென ஒன்றிருந்தால்
அதை அப்புறப்படுத்த வேண்டுமா?

(சா)தீயில் குளித்து!
(சா)தீயில் நடந்து!
(சா)தீயை உண்டு!
(சா)தீயில் வாழ வேண்டுமா?

சாதியனே!
நாளை உனக்கொரு விபத்து நடக்கும்!
உன் உடல்
இரத்தம் கேட்கும்!
தாதியிடம் கேள்
என்ன சாதி இரத்தமென!
உனதில்லையெனில்
உடனே மடிந்து போ!

காலம்
உன் பெயர் சொல்லட்டும்!
அறிவு கெட்ட தமிழனென்று.

Thursday, November 13, 2008

கதை மட்டும் போதுமாடா தமிழா?


பேச்சன்றி மூச்சன்றி
போகும் திசை அறிவதன்றி!

கரை சேர்ந்த பொழுதினிலே
கதறி அழும் அலைகடலே!

யார் செய்தி கொண்டு வந்தாய்?
யாண்டு மிங்கே சொல்லிடுவாய்!

அடிபட்டும் மிதிபட்டும்
ஆத்திரம் தான் அடங்காமல்!

இடிபட்டும் குடிகெட்டும்
இதய வலி ஆறாமல்!

சீர் குலைந்த தமிழினத்தின்
சீழ் கண்ணீர் சொல்லாயோ!

ஒடிபட்ட தமிழர் தன்
ஓலங்கள் ஆயிரம் தான்!

காதறுந்த கரையோரம்
கதை பேசி போவாயோ!


Saturday, November 08, 2008

பாசமும் பற்றி மற!!!


கண்ணீர் விட்டது போதும்
தேசம் நீரில் மிதப்பதை பாரும்
வெண்ணிற மலர்கள் தேடும்
பாசம் தேனினும் உயர்வது கேளும்

தாயிடம் பெற்ற பாலினில் பாசம்
தந்தை தந்திட்ட அறிவினில் பாசம்
சேயாய் உன்னை அனைத்து
செர்க்கம் புவியினில் தந்தது பாசம்

அண்ணன் தம்பியாய் வாழ்வில்
அழியா நட்பைக் கொண்டே
பண்பாய் பாரினில் வளர
பழியா உணர்வும் பாசம்

புதியதோர் உலகம் செய்ய
பாயும் நதியாய் நேசம் பிறக்க
புவி மாந்தர்க்கு வேண்டும் பாசம்
தேயும் நிலவாய் பண்பிருப்பின் நாசம்.

Wednesday, September 24, 2008

இரவுக் காதலிகள்


விளக்கேற்றும் நேரம் தனை
விடியல் பொழுதென சாபம்
பெற்ற இனம்.

இவர்களுக்கு
விளக்கணைக்க
மட்டுமே
பட்டா போட்டுக்
கொடுக்கப்பட்டிருக்கிறது.

உணர்ச்சிகளை
மூட்டைக் கட்டி
ஊருக்கு வெளியே எறிந்தவர்கள்.
அடுப்பெறிக்க
உடல்தனை விறகாக்கியவர்கள்.
உறவுகளுக்கு
துறவு பூண்ட கண்ணீர் மலர்கள்.

இந்த மலர்கள்
இரசிக்கப்படுபவையன்று.
துளி நேர இச்சைக்கு
கசக்கப்படுபவை.
எச்சில் உமிழ்ந்து
தூரமாய் தூக்கியெறியபடுபவை.

இரவு
இவர்களின் உற்ற தோழன்.
இந்நிலவுகள்
தினம் தினம்
தேய்வதை கண்டு
அது கண்ணீர் வடிக்கும்.
இவர்களுக்கு
வளர்பிறை வேண்டி
தவம் இருக்கும்.

உடல் ரணங்களை
பூட்டி வைத்து
மனதை ரணமாக்கிக்
கொண்ட மானுட பிறவிகள்.

அவனுக்கு
பகலில் அவள் தேவதாசி
இரவில் அவள் தேவதை.

தவறாய் போன இரவொன்றில்
தப்பி பிறந்த பிள்ளையொன்று
தாகம் தீர்க்க அழுகின்றது.

அவன் காமம் தீர்க்க
உடல் நாடினான்
அவள் காசு சேர்க்க
கட்டில் தேடினாள்.
மீண்டும் மீண்டும்
சேற்றில் விழுந்து
பிள்ளையின் பசியாற்றினாள்.

Friday, September 12, 2008

இது தான் தொப்புள் கொடி உறவோ?

(மு.கு: இது எனது 50வது பதிவு. அன்னைக்கு காணிக்கை.)

ஈனும் முன்னே கருவில் சுமந்தவள்
ஈன்ற பின்னும் இதயம் தாங்கியவள்
வானின் அளவு அன்பில் கனிந்தவள்
வண்ணம் பேனி வாழ்வு தந்தவள்!

பாலை ஊட்டி பாசம் பொழிந்தவள்
படிப்பும் அறிவும் பகிர்ந்து கொடுத்தவள்
நாளை எண்ணி நடையாய் நடந்தவள்
நன்றாய்ப் பணிகள் நயமாய்ச் செய்தவள்!

இரவும் பகலும் விழித்துக் காத்தவள்
இறைவன் அடியைப் பார்த்து வணங்கி
வரவும் செலவும் பாரா வண்ணம்
வாழ்வு முழுதும் மகனுக் குழைத்தவள்!

பிள்ளை இளைஞன் ஆன உடனே
பெண்ணை பேசி திருமணம் முடித்தவள்
நல்ல மகனும் நல்ல மகளும்
நட்புடன் வாழ நாளும் உழைத்தவள்!

வயது போக கிழவி ஆனாள்
வறுமை நோயும் வந்து சேர்ந்தது
தயவு காட்ட உறவு இன்றி
தனிமை கொடுமை வாழ்வில் நலிந்தாள்!

ஊதியம் தேடா தாய்க்கு மகனும்
ஒதுப்புறம் ஒன்றே தேடிக் கண்டான்
நாதியற்ற நடை பிணம் ஆனாள்
நல்ல நாளே மரண நாளே!

ஊரார் கூடி பிரார்த்தனை செய்வர்
உறவார் கூடி கட்டி அழுவர்
தேரா உலக தெய்வ மாந்தரே
தெளிந்து நோக்க திருவருள் உணர்வீர்!

(பி.கு: எதுகை மோனை வைத்து எழுதிப் பார்த்த கவிதை முயற்சி. பிழை இருப்பின் சுட்டவும்)


Saturday, August 02, 2008

குளிர்கால காதல்



வெண்சுருட்டில்லாமல்
புகைகக்கும் சுவாசப்பை
இசைப்பயிற்சியின்றி தாளம் போடும்
வெள்ளை பற்கள்.
கூட்டுப் புழுவென
போர்வைக்குள் அடங்கும்
மனிதர்கள்.

சோம்பல் முறித்த காற்று
தூக்கம் கொண்டு
தரையில் படுத்துவிடும்.
மீன்கள் ஓடைக்கு
விடுமுறை கொடுத்து
எரிமலைக்கு பயணம் போகும்.
ஆதவனையும்
ஊதி அணைத்து விடும்
குளிர் பனிக்காலம்.

சூடு தேடிய உடல்கள்
சிக்கிமுக்கி கற்களாகும்.
கூடு தேடிய கிளிகள்
திக்கித் திணறி பாடும்.

குளிர்காலத்தில் குளியல்
உடலுக்கு கொடுக்கும்
மரணதண்டனை.
மதுக் கிண்ணமும்
மாமிசப் படையலும்
சுவைக்கச் சொல்லும் சிந்தனை.

பூக்களும்
மூச்சிழுக்க முடியாமல்
தலை கவிழ்ந்து கொள்ளும்
அதிகாலையில்....

என் காதலிக்காக தேடுகிறேன்
எங்காவது தப்பி பிழைத்திருக்கும்
ஒரு ஒற்றை ரோஜாவை.
நான் பூவோடு வரும்
கனவில்அவள்.
புன்னகை ரோஜாவை
பரிசளிக்க போகும்
மகிழ்ச்சியில் நான்.

Wednesday, July 30, 2008

கன்னித் தமிழின் கண்ணீர்- பா.விஜய்

கவிஞர் பா.விஜய் அவர்களின் அடுத்த அக்னிப்பிரவேசம் படித்திருக்கிறீர்களா? எனக்குப் பிடித்த கவிதை தொகுப்பு நூல்களில் இதுவும் அடங்கும். நீண்ட கவிதைகளைக் கொண்ட குறுந் தொகுப்பு நூல்.

அணைத்தும் தமிழ்ச் சமூகத்தைப் பற்றிய சீர்திருத்த கவிதைகளாக இருக்கும். சில இடங்களில் தமிழக அரசியலையும் குறிப்பிட்டு எழுதி இருக்கிறார். இந்நூலில் எனக்கு பிடித்த ஒரு கவிதையினை இங்குச் சமர்ப்பிக்கிறேன்.

இந்த சமூகம் இருக்கிறதே

சமூகம்

இது

கரும்புக்குக் காத்திருந்தவனுக்கு

சக்கை தரும் சமூகம்


அவன் வீட்டு

அடுப்புக்கு நெருப்பு வைப்பதாய்

இறுதியில்

அவனுக்கே நெருப்பு வைக்கும்


இது

தமிழுக்கு மட்டுமென்ன

தங்க மகுடமா சூட்டும்?


கடையேழு வள்ளல் மட்டும்

கவனிக்காது இருந்திருந்தால்

நமது கவிராஜர்கள்

இலக்கியம் பேசியதாலேயே

இளைத்துப் போய் இருப்பார்கள்.


இவர்கள்

தினசரி இங்கே

திருவோடுகள் ஏந்தினால் தான்

மாதம் ஒருமுறை

கஜானா

கண் திறக்கும்


இப்போதோ

நமது தமிழ் மயில்

உள்ள போகன்கள் எல்லாம்

உலோபிகளாகிவிட்ட காரணத்தால்

விரைவிலேயே

விறைத்துப் போகவிருக்கிறார்கள்.


தமிழிலுள்ள எழுத்தையெல்லாம்

தங்கத்தில் பொறித்தல் வேண்டுமாம்

கேட்டுப் பாருங்கள்

அவன் தங்கத்தை

எழுத்து வடிவத்தில்

பார்த்தவனாக இருப்பான்.


சமுத்திரமாய் இருந்த

சங்கத்தமிழ் முதல்

இப்போதைய

இலக்கியம் வரைக்கும்

இடுப்பில் ஈரத்துணியோடு

இருந்த்வர்கள் எத்தனைப் பேர்?


ஒவ்வொரு கவிஞனின்

இரும்புப் பெட்டியிலும்

இருப்பதெல்லாம் என்ன?

கறையான்களிடம் காப்பாற்றப்பட்ட

ஒரு சில

ஓலைச்சுவடிகளைத் தவிர!


தமிழ்

தனக்கும் சேர்க்கவில்லை

தன்னை அண்டியவனை

சேர்க்கவும் விடவில்லை.


தமிழனின் கண்களில்

விழுந்த தூசை

துடைப்பதற்கு வந்தவன் கையில்

ஆயுதம்

நமக்கோ கைகளில்லை.


அதனால் தான்

சரித்திரம் என்கிற நதி

ஒரு கரையில் சோலையிலும்

ஒரு கரையில் பாலையிலும்

ஓடிக் கொண்டிருக்கிறது.


நமது அறிஞர்களோ

நல்லதொரு சமுத்திரத்தில்

அலைகளைப் பிடிக்க

வலைகளை வீசுகிறார்கள்.


தமிழுக்காக வாழ்ந்து

தமிழுக்காக இறந்தவன் ஒருவன்

இப்படி எழுதினான்.


தமிழில்

எவ்வளவுக்கு எவ்வளவு

இளமை இருக்கிறதோ

அவ்வளவுக்கு அவ்வளவு

வறுமையும் இருக்கிறது.


ஒன்று மட்டும் உறுதி

தமிழைக் காப்பாற்றுங்கள் என

தானாக சென்று எவனையும்

அழைக்கவும் முடியாது.

அப்படிக் காப்பாற்ற வந்தவன்

பிழைக்கவும் முடியாது.


காரணம் தமிழில்

கல்வெட்டுகள் இருக்கிறதே தவிர

பொன்வெட்டுகள் இல்லை.


தமிழ்ச்சாதி

சிந்தை பொங்கி

சித்ததானம் செய்யலாம்.

ஆயின்

அதற்கு இன்னமும்

ரத்ததானம் செய்தல்

அவசியமாக இருக்கிறது.


போகிற போக்கைப் பார்த்தால்

தமிழ்க் கருவூலமே என்று

வருத்தம் உண்டாகிறது.


தோனியைப் போலல்லாமல்

ஆணியடித்ததைப் போல்

அமர்ந்தே கிடந்தாலும்

அரசாங்க உத்தியோகம் தேவலை.


ஆம்

மாதம் ஒருமாரியாவது

அரசாங்க மேகம்

அபிஷேகம் செய்கிறது.


நமது தமிழ்

தானும் சேர்க்கவில்லை

தன்னை அண்டியவனை

சேர்க்கவும் விடவில்லை.

Wednesday, July 16, 2008

தமிழுக்கு நிறம் உண்டு


நேற்றய தினம் கவிப்பேரரசு வைரமுத்துவின் பிறந்த நாள். இன்றைக்கு தமிழை ஆண்டுக் கொண்டிருக்கிற கவிஞராக உலகத்திலேயே உள்ள எல்லாப் பொருள்களைப் பற்றியும் பாடக்கூடிய வல்லமை வாய்ந்தவராக வைரமுத்து திகழ்கிறார்.

அவருடைய கவிதைகள் பல எனக்கு மிக அத்துப்படி. இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் என் நினைவில் இருந்து அழியாது. முக்கியமாக அம்மா, கூடு மற்றும் உலகம் எனும் கவிதைகள் படிக்க படிக்க திகட்டாது. அவருடைய தமிழுக்கு நிறம் உண்டு எனும் கவிதைத் தொகுப்பு நூலில் இருந்து ஒரு கவிதையை இங்கே எழுதிப் போகிறேன்.

பிற்சேர்க்கை

ஒன்று:
சொல்லுங்கள் புலவரே!
முத்துக்கள் பிறக்கும்
இடம் பத்து…

மேகத்தில் பிறக்கும்
சங்கில் ஜனிக்கும்
சிற்பியில் இருக்கும்
தாமரையில் உயிர்க்கும்
வாழையில் கிடைக்கும்
மூங்கிலில் முளைக்கும்
தந்தத்தில் வெடிக்கும்
நாகத்தில் தெரிக்கும்

“ஒன்றை மறந்தீரே…”
“என்னது?”
“உழைப்பவன் நெற்றி”

இரண்டு:

சொல்லுங்கள் அறிஞரே!
மூடநம்பிக்கை
எவை எவை?
கழுதை கத்துதல் சுபம்
விதவை எதிர்வந்தால் பாவம்
மொட்டையடித்தால் முக்தி
உள்ளங்கை அரித்தால் வருவாய்
காலையில் காணும் கனவு பலிக்கும்
“ஒன்றை மறந்தீரே!”
“என்னது”.
“மந்திரியிடம் மனு”

மூன்று:

சொல்லுங்கள் ஜோசியரே!
இருட்டில் செய்யத்தகாதவை
எவை எவை

முடிவெட்டலாகாது
நகம் களைதலாகாது
பேன் பார்த்தலாகாது
அழுக்குத்துணியை
வெளுக்கப் போடலாகாது
உப்போ மோரோ
இரவல் தரலாகாது
பல் துலக்கலாகாது
கடன் கொடுக்கலாகாது

“ஒன்றை மறந்தீரே!”
“என்னது?”
“தொலைக்காட்சி ஆகாது”


நான்கு:

சொல்லுங்கள் பண்டிதரே!
பார்க்க முடியாதவை எவை?

அலையற்ற கடல்
இறவாத உடல்
ஆகாயம் இல்லாத ஊர்
நீர் கலவாத மோர்’
திரையரங்கில் தேசிய கீதம்
பிழைக்கத் தெரிந்த கவிஞன்
கைதொடாத காதலன்
வாழைமரத்தில் ஊஞ்சல்
உலோபியின் புன்னகை

“ஒன்றை மறந்தீரே”
“என்னது”
“ஜனநாயகத்தின் சத்தியம்”


நன்றி: தமிழுக்கு நிறம் உண்டு

Tuesday, July 08, 2008

ம‌லேசிய‌ இந்திய‌ர்க‌ளின் இக்க‌ட்டான‌ நிலை


மலேசிய இந்தியர்களின் இக்கட்டான நிலை எனும் புத்தகம் ஜானகிராமன் ஐயா அவர்களால் எழுதப்பட்டது. இதில் வரும் கவிதை ஒன்றை என்றேன்றும் என்னால் மறக்க முடியாது. இன்றும் கூட இப்புத்தகம் என் கண்ணில் படுகையில் இக்கவிதை வரிகள் என் எண்ண அலைகளை ஆக்கிரமிக்கும். லேசான சோகம் ஒன்று என்னை ஆட்கொள்ளும்.

ம‌லாயாவின் பொருளாதார‌ம் முப்ப‌துக‌ளில் ப‌டுவீழ்ச்சி க‌ண்டிருந்த‌து. இர‌ப்ப‌ரின் விலை மிக‌ மோச‌மாக‌ வீழ்ச்சி க‌ண்டிருந்த‌தால், அத‌ன் உற்ப‌த்தியை அதிக‌மாக‌வே குறைத்துவிட‌ நேர்ந்த‌து. அதனால் த‌மிழ்த் தொழிலாள‌ர்க‌ள் ப‌ல‌ர் திரும்ப‌ இந்திய‌ நாட்டிற்கே க‌ட்டாய‌மாக‌ அனுப்பி வைக்க‌ நேர்ந்த‌து.

அந்நிலையில் பால்ம‌ர‌ம் சீவும் தொழிலாளி ஒருவ‌ன் துரையையும் கிராணியையும் க‌ங்காணியையும் ம‌க்க‌ளையும் விட்டுப் பிரிய‌ ம‌ன‌மில்லாம‌ல் க‌ண்ணீர் சிந்துவ‌தாக‌ ஒரு தொழிலாளியின் நோக்கு நிலையில் ரா.சுப்பிர‌ம‌ணி ஐய‌ர் என்ப‌வ‌ர் ஒரு க‌விதையை இய‌ற்றியுள்ளார். இக்க‌விதையில் தோட்ட‌புற‌ பின்ன‌னி, வாழ்விய‌ல் கூறுக‌ள், ம‌ண்ணின் ம‌ன‌ம் ஆகிய‌ன‌ சிற‌ப்பாக‌ வெளிப‌டுத்த‌ப்ப‌ட்டுள்ள‌ன‌.


போய்வாரேன் பால்ம‌ர‌மே போய்வாரேன் பால்ம‌ர‌மே
போய்வாரேன் பால்ம‌ர‌மே போய்வாரேன் பால்ம‌ர‌மே
க‌ண்ணாடித்துரையும் போனார்
க‌ங்காணி வீர‌ன் போனார்
பின்னாடி கிராணி போனார்
தாங்காம‌ல் நானும் போரேன்
என்ன‌மோ பின்னாலே எப்போதூன்னை
காண‌ப்போரேன்
(போய்)

ப‌வுனுக்கு ப‌வுன்விலையாய்
பாலுவித்த‌க் கால‌ம் போச்சே
புளிவிலைக்கும் தோற்றுப் போச்சே
பாலுவெட்டும் நிறுத்த‌லாச்சே
யார்செய்த‌ மோச‌ம் பாராய்
எவ‌ரிட்ட‌சாப‌ம் கூறாய்
(போய்)

ரொட்டிப்பால் ஒருவிலையும்
ஒட்டுப்பால் ஒருவிலையும்
ப‌ட்டைக்கு ஒருவிலையும்
(பாலு) கொட்டைக்கு ஒருவிலையும்
த‌ங்க‌ம்போல் விலைத‌ந்தாய்
ப‌ங்க‌மாய் நிலைகுலைந்தாய்
(போய்)

தீபாவ‌ளி ப‌டியென்றும்
பொங்க‌லுக்குப் பொடியென்றும்
சீராய்கொடுத்த‌ எந்த‌ன்
சிரித்த‌முக‌த்துத் துரை
கையைத்தான் விரிகிறாரே
காசென்று கேட்டாலிப்போ
(போய்)


க‌ற்ப‌க‌மென்று சொல்வார்
க‌ண்ட‌தில்லை இவ்வுல‌கில்
க‌ற்ப‌க‌ம் என்று சொல்ல‌
க‌ண்க‌ண்ட‌ ம‌ர‌மும் நீயே
கால‌மே கோல‌மோ
காப்பாற்றுவார் இல்லையே
(போய்)

உன்னைந‌ம்பி வாழ்ந்த‌வ‌ர்க‌ள்
எத்த‌னை பேர்க‌ளுண்டு
அத்த‌னை பேர்க‌ளுமே
அழுதுகொண்டு போகுறாரே
உயிர‌ள‌வும் ம‌ற‌க்க‌மாட்டேன்
ஊருக்குப் போய்வாரேன்
(போய்)


ஆதார‌ம் ம‌லேசிய‌த் த‌மிழ் க‌விதை மாநாடு
ம‌ல‌ர் 2000 ப‌க்க‌ம் 153

ந‌ன்றி : திரு.ஜான‌கிராம‌ன் (ம‌லேசிய‌ இந்திய‌ர்க‌ளின் இக்க‌ட்டான‌ நிலை)

Sunday, July 06, 2008

ஒரு தாயின் மனம்


நினைவுகளை சுமக்கிறாள்
ஒரு தாய்!
பசிக்கு அழுதிடுவானோ
எனக் கனவு
கலைந்த
பச்சை உடல் காலம்!
விளையாடுகையில்
விழுந்திடுவானோ எனப்
பதறிய மாலைப் பொழுதுகள்!
தேர்வுக்காகத்
தேக்கி வைத்த
தூக்கத்தோடு
தேனீர் கலக்கிய இரவுகள்!
கல்லூரியில்
சேர்த்த போது
கண் கலங்கிய
இள நரைக் கிழவி,
திருமணம் செய்வித்து
கடமை முடிந்த
நெகிழ்ச்சியில் திளைந்திருந்தாள்!
இன்று அவள்
இறுதி மூச்சை
சுவாசிக்க மறந்து போனாள்
முதியோர் இல்லத்தில்.

Wednesday, July 02, 2008

மௌனத்தின் சில வார்த்தைகள்


உன் பார்வையில்
எத்தனை மௌன மொழிகள்!
விழியோரம் வழிந்திடும்
இரகசியப் பார்வை!
இதழோடு இதழ்
உரசிடும் மெல்லிய புன்னகை!
உள்மனம் உன்னை
நெருங்கச் சொல்கிறது!
நீயோ- பக்கத்தில் வந்தால்
வெட்கத்தில் ஓடுகிறாய்
எப்போதோ பார்க்கும் உன்னை
தப்பாமல் நினைக்கிறேன்
சிக்காமல் செல்லும் உன்னை
சிறையெடுக்கத் தவிக்கிறேன்
சிவனில் பாதி சக்தியாமே!
எனக்குச் சக்தி கொடுப்பாயா?
பெண்ணே!
காதலித்தால் கவிதை வருமாமே!
கவிதையோடு வரும்
கவலை என்ன இலவச இணைப்பா?
காதலெனும் (க)விதையை
விதைத்துவிட்டேன்
நல்ல மரம் வளர
நீர் ஊற்று
நாசமாய் போகட்டும்
என்றால் தீமூட்டு.

Thursday, June 12, 2008

மறந்து போன கவிதைகள்


உன்னை பார்த்து
கொண்டிருப்பதால் தானோ
இதயம் தினமும்
துடித்துக் கொண்டிருக்கிறது
என் இதயத்திற்கு
உயிர் மட்டும் இல்லை
விழிகளும் இருக்கிறது
உன் இதயத்தை
பார்த்துக் கொண்டே இருக்க

கவிதைகள் எழுதிடத்தான்
கைகள் துடிக்கின்றன
எழுதிட நினைத்தவுடன்
கவிதைகள் மறந்து போகின்றன
நினைத்த கவிதைகள் மறந்து போனாலும்
கனவில் தோன்றிய
உன் கவிதை கொண்ட கண்களை
மறக்கவும் முடியவில்லை
மறைக்கவும் முடியவில்லை

Saturday, April 19, 2008

அவள் என் தேவதை...



தந்தையின் கட்டாயத்திற்காக தான் கணினி கற்கும் இடத்திற்கு வந்தேன். கணினி வகுப்பு வரும் போது மனதில் எத்தனை முறை வெடித்துக் கொண்டேன் தெரியுமா..... தேவதை நீ அங்கு வந்து சேர்ந்த பிறகு தான் நான் அங்கு சேர்ந்ததற்கு அர்த்தம் பிறந்தது.


கணினி கற்க வந்த எனக்கு கன்னி மனதை கற்க ஆவல் வந்தது. கன்னி மனதை படிப்பதற்கு உலகத்திலே இதற்கு மட்டும் தான் எந்த கல்லூரிகளும் இல்லை, பல்கலைக்கழகங்களும் இல்லை. அவரவர் சொந்த முயற்சியில் கற்கிறார்கள். எந்த தேர்வில் தோல்வி அடைந்தாலும் வருந்தாத இளைஞர் படைகள் இதற்கு மட்டும் வருந்தும்.


ஐய்யோ...தோல்வியா ... இதில் மட்டும் தோல்வியை நினைத்து கூட பார்க்க முடியவில்லை. எதிலும் தோற்றாலும் அடுத்த முயற்சியில் வென்று விடலாம் என்று மனதை தேற்றிக் கொள்ளலாம்..... காதலில் அடுத்த முயற்சி என்பது வெறோரு பெண்ணாகத் தான் இருக்கும்.... அவளை மறந்து வேறொரு பெண்ணா...? அப்படி நினைத்து கூட பார்க்க முடியவில்லை....


பெண்ணை காதலித்து தோல்வி அடைந்தால் காதலிக்க வேறொரு பெண்ணை தேடலாம். தேவதை காதலித்து தோற்றவன் வேறோரு தேவதையை எங்கு போய் தேடுவது. கிளியோபட்ரா அழகில் கூட மூக்கு நீளம் என்ற குறை உண்டு. உன் அழகில் நிறைகள் மட்டுமே உள்ளன. எனக்கு தெரிந்து இந்த மண்ணில் இருப்பது ஒரு தேவதை .... அதுவும் அவள் மட்டும் தான்.... இதில் தோல்வியே இருக்க கூடாது... தோற்றாலும் என் மரணத்திலே தான் முடிய வேண்டும்.


நீ தீண்டுவதற்கு அந்த Keyboard என்ன தவம் செய்ததோ.... உன் விரல் நுணி படுவதற்கு ஒவ்வொரு ஆங்கில எழுத்துக் கூட தமிழ் கற்குமடி.... உன்னிடம் பேசுவதற்காக... தமிழை வளர்க்க சங்கங்கள் தேவையில்லை. உன்னை போல் தேவதை போதும் தமிழ் வளர்ந்து விடும். உன்னால் எல்லோரும் கவிஞர்கள் ஆகிவிடுவார்கள்..... உலகம் முழக்க தமிழ் பறப்புவதற்கு உன்னை போன்ற தேவதைகளே மண்ணில் பிறக்க வேண்டும்.


வீட்டில் எலி என்றால் அஞ்சுவாய் என்று சொன்னாவளே.... ஆனால் கணினிப்பொறி முன் எலியைத் (Mouse) தான் பிடித்துக் கொண்டு இருக்கிறாய். உன்னை பயமுட்டிய எலி, பல்லி, பூச்சிகள் எல்லாம் தற்கொலை செய்து கொள்ளும்.... உன்னை பய முட்டியதற்காக ! அவைகள் எல்லாம் உன்னை தரிசிக்க வந்தது என்று உனக்கு புரியவில்லையா... எலி, பூச்சிகளுக்கு வாயில்லை உண்மையை சொல்வதற்கு.... அதற்கு வாய் இருந்தால் அது கூட உன்னை பற்றி கவிதை பாடும்...இந்த கணினி கூட ஐந்து நிமிடத்தில் பதில் அளிக்கும். ஆனால் நீ ஒவ்வொரு வார்த்தைக்கும் இடைவேளை விடுவது தான் என்னை பாதிக்கும்.


நாவலில் கூட அடுத்தது என்ன நடக்கும் என்று கனித்து விடலாம். நீ அடுத்தது என்ன பேசுவாய் என்று கனிப்பதே மிகவும் கடினம். கணினி இயங்கும் வேகம் தெரியும். ஆனால், உன் இதயம் இயங்கும் வேகத்தை அறிய கணினிக் கூட தோற்கும்.


உன் அறிமுகம் கிடைத்தற்கே இத்தனை மகிழ்ச்சி என்றால்..... நீ எனக்கு கிடைத்தால்... உலகில் இருக்கும் அத்தனை ஆண்களின் பொறாமைக்கும் நான் தான் சொந்தக்காரனாக இருப்பேன். நீ எனக்கு கிடைத்த பிறகு மற்றவர் பொறாமை என்னை என்ன செய்யும்.


மானிடனாய் பிறத்தல் அறிது என்ற வாக்கியம் உண்மை என்று இன்று தான் புரிந்துக் கொண்டேன். இந்த பல்லி, எலிகளுக்கு இல்லாத பாக்கியம் எனக்கு கிடைத்தே.....!பெண்ணைப்பார்த்தால் காதல் கவிதை தான் வரும்.... தேவதை உன்னை பார்த்தால் காதல் காவியமே வரும். உன்னை பார்த்த இக்கணம் தோன்றிய கவிதை இது...


246 தமிழ் எழுத்துக்கள் வாடுது....'நீ' என்ற எழுத்து மட்டும் புன்னகை சிந்தியது...உன் பெயரை விட அதிகம் உன்னிடம் உச்சரிப்பவர்கள் அந்த எழுத்தை தானே ...


கவிதை எழுத கற்று தந்த உன் அழகு.... கொடுக்க தைரியத்திற்கும் தடைப் போட்டது. தடைகள் எல்லாம் தகர்க்கும் வரை உன்னை வர்ணிக்கும் என் கவிப்பணி தொடரும்.....