Thursday, January 29, 2009

மனித மிருகங்கள்!!

1989-ஆம் ஆண்டு. தாய்லாந்து அரசாங்கம் மர ஆலை வேலைகளுக்கு கட்டுப்பாடு விதித்தது. காட்டை நம்பி வாழ்ந்தவர் பிழைப்பில் மண் விழுந்தது. குடும்பத்தைப் பார்க்க வேண்டும், வாழ்க்கை நடத்த வேண்டும். குடும்ப உறுபினர்கள் மட்டும் இல்லை. தொழிலுக்குப் பயன் படுத்திய யானையும் கூடவே இருக்கிறது. அதையும் கவனித்தாக வேண்டும். என்ன செய்வார்கள் இவர்கள்?

வயிற்றுப் பிழைப்புக்காக யானைப் பாகனாக உருமாறினார்கள் இவர்கள். யானையை வைத்து வித்தை செய்து பிழைத்து வருகிறார்கள், தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த அவர்கள். இன்றய நிலையில் தாய்லாந்தில் யானை வித்தை புகழ்பெற்றுவிட்டது. வெளிநாடுகளில் இருந்து பலரும் இதைக் காண வருகிறார்கள்.

நகர நடுவிலும், வணிகச் சந்தைகளிலும் இந்த யானைகள் சுதந்திரமாகத் திரிகின்றன. நகரமே அவைகளுக்கு காடு. யானையைப் படம் வரைய வைப்பது, போலோ(POLO) விளையாட வைப்பது. ஞெகிழி வலையத்தில் சுற்ற வைப்பது போன்ற நிகழ்வுகளை நிகழ்த்தி தங்களுக்குரிய வருமானத்தைத் தேடிக் கொள்கிறார்கள். தாய்லாந்தில் வாழும் ஆயிரக்கணக்கான யானை பாகர்களின் பொருளாதார தேடல் இப்படிதான் அமைகிறது.

வல்லிய யானைகள் வாடகை வாகனமாக அமையப் பெறும். புத்திசாளியானவைகள் கேளிக்கைக்கும், இன்னும் சற்று புத்தி அதிகமுடையவை ஓவியம் வரைதல், வண்ணம் தீர்டுதல் போன்ற காரியங்களுக்கு பயன்படுத்தப்படும்.

ஆசிய யானைகள், ஆப்பிரிக்க யானைகளைப் போன்றவை அல்ல. ஆப்பிரிக்க யானைகள் மூர்க்கத் தனம் மிகுந்தவை. அளவில் பெரியவை. அதிக அளவில் அடக்கப்படுவதில்லை. ஆனால் ஆசிய யானைகள் மனிதனுக்கு ஒப்பாக உழைக்கக் கூடிய அளவிற்கு பயிற்றுவிக்கப்படுகின்றன.இந்த யானைகள் சுதந்திரமற்று இருக்கின்றன என்றே சொல்ல வேண்டும். ஒரு ஆய்வறிக்கையின் சேதிபடி ஆசிய யானைகள் ஆப்பிரிக்க யானைகளைக் காட்டினும் 10 மடங்கு குறைவாகவே உள்ளன. ஆப்பிரிக்க யானைகளின் பாதுக்காப்பிற்காக எடுக்கப்படும் முயற்சியில் கால் பங்கு கூட ஆசிய யானைகளின் பாதுகாப்பிற்கு அளிக்கப்படுவதில்லை என்றே கருத வேண்டும். அது போக ஆசிய யானைகளின் கணக்கெடுப்பும் சரிவர இல்லாமலே இருக்கிறது.

ஏறத்தாழ 30ஆயிரம் முதல் 50ஆயிரம் வரையிலான ஆசிய யானைகள் இருக்கலாம் எனவும் அவற்றில் 12ஆயிரம் முதல் 15ஆயிரம் வரையிலானவை வளர்க்கப்படுபவை எனவும் குறிப்பிடப்படுகிறது.

தாய்லாந்து மக்களிடையிலான இந்த யானை வளர்ப்பு ஏறத்தாழ 4000 ஆண்டு காலமாக இருந்து வருவதாகும். சுமை தூக்க யானைகளை வளர்த்தார்கள். தாய்லாந்து மக்களிடையே யானைகள் மீது அதிகப் பிரியம் உண்டு. மலாய் மொழியில் தாய்லாந்து நாட்டை வெள்ளை யானை நாடு என்றே குறிப்பிடுகிறார்கள். வெள்ளை யானை என்பது தாய்லாந்து மக்களிடையே புனித விலங்கு எனக் கருதப்படுகிறது. வெள்ளை யானைச் சிலைகளை வழிபடவும் செய்கிறார்கள்.

வெள்ளை யானைக்கு தான் தனிபட்ட சிறப்பு. வெள்ளை யானை உண்மையில் இருக்கிறதா என்பதே வினாக் குறியானதே.வேலை வாங்கப்படும் யானைகளின் நிலை என்ன? அவை சரிவர கவனிப்பின்றியே இருக்கின்றன. யானை பாகன்கள் நேரம் காலம் பாராமல் அவற்றை வேலை வாங்குகிறார்கள். பாகனுக்கு பணம். சுற்றுப்பயணிக்கு மகிழ்ச்சி. துன்பம் மொத்தமும் யானைக்கு மட்டுமே என்றாகிவிட்டது.

சில காலத்திற்கு முன் தாய்லாந்தில் யானைகள் அரசரை சுமக்க மட்டுமே பயன்படுத்தப்பட்டன. இன்றய நிலையில் அவை பணம் சம்பாதிக்கும் இயந்திரமாக மட்டுமே பார்க்கப்படுகின்றன. பகல் முழுக்க வேலை. இரவில் இரும்புச் சங்கிலியால் பிணைக்கப்பட்டுவிடும். இதுதான் அந்த யானைகளின் உலகம்.

சுற்றுலா துறை அதீத வளர்ச்சி அடைந்து வரும் துறையாகும். சுற்றுலா துறை மேம்பாட்டிற்காக உலக நாடுகள் பெரிதும் கவனம் செழுத்தி வருகின்றன. சில ஆசிய நாடுகளில் சுற்றுலா துறையின் பேரில் விலங்கினங்களுக்கு பலமான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக சுற்றுச் சூழல் இயக்கங்கள் குறிப்பிட்டுள்ளன. ஆசிய யானைகள் இதற்கு விதி விலக்கல்ல.

யானைகள் இறைச்சிக்காகவும், தந்தம் போன்ற அழகு பொருட்களுக்காகவும் கொல்லப்படுகின்றன. கமுக்க முறையில் ஏற்றுமதியும் செய்யப்படுகின்றன என்பன மறுக்க முடியாதவை.திருட்டுத்தனமாக நடக்கும் யானை வேட்டை இவ்வினப் பெருக்கத்திற்கு பங்கம் விளைவிக்கும் வண்ணம் அமைந்துள்ளது. காடுகள் அழிக்கப்படுவதால் அவை வெளிபட்டு வேளான் மற்றும் குடியிருப்புப் பகுதிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றன. அதனால் அவற்றில் சில கொல்லப்படுகின்றன. மனிதன் காட்டிற்குச் சென்றாலும், விலங்குகள் நாட்டிற்குள் வந்தாலும் பாதகம் விலங்குகளுக்கு தான்.

யானைகளை தகுந்த முறையில் பாதுகாக்கவும் பேணவும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. யானையைக் கொண்டு பிழைப்பு நடத்துவர்களிடம் அதற்கு கண்டனமும் வெளி வந்துள்ளது. சரியான முறையில் அமைந்துவர காலதாமதம் ஆகலாம்.

யானைகளை பாதுகாக்க புதுவகை தொழில் நுட்ப முறையில் சில முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளது. யானைகளின் உடலில் 'மைக்ரோ சிப்'பை (MICRO CHIPS) உட்செழுத்தி கண்காணித்து வருகிறார்கள். இதன் வழி யானைகளின் இருப்பிட மாற்றம், உயிர் வதை, போன்ற செய்திகளை சேகரித்தும் பாதுகாத்தும் வருகிறார்கள். மனிதனுக்குள் இருக்கும் அரக்க குணம் மாறாத வரையில் இம்மாதிரியான வன விலங்குகளை பாதுகாப்பது சிரமமான காரியமே.

(பி.கு: தாய்லாந்து யானைகள் எனும் தலைப்பில் 18.01.2009 தமிழ் ஓசை நாளிதழில் வெளிவந்த எனது கட்டுரை)

Wednesday, January 28, 2009

மலேசியத் தமிழ் வலைப்பதிவர்கள் சந்திப்பு 2

இரண்டாவது மலேசியத் தமிழ் வலைப்பதிவர்கள் சந்திப்பு இனிதே நடந்தேறியது. இந்த முறை 24 பதிவர்கள் மற்றும் பதிவு வாசகர்கள் சந்திப்பில் கலந்துக் கொண்டு சிறப்பித்தார்கள்.

மதியம் சுமார் 2.30 மணியளவில் சந்திப்பு தொடங்கியது. முதல் பதிவர் சந்திப்பு பல இடர்பாடுகளுக்கிடையே தலைநகரில் நடந்தேறியது அனைவரும் அறிந்ததே.முதற் சந்திப்பிற்கு பல விதத்திலும் உதவிகள் புரிந்த அகஸ்தியா மூர்த்தி மற்றும் மூ.வேலன் ஆகியோர் இச்சந்திப்பில் கலந்துக் கொள்ளவில்லை. இருவரும் தற்சமயம் தமிழகத்தில் இருப்பதாக அறிகிறேன்.

முதற்சந்திப்பில் கலந்துக் கொண்டவர்களில் 4 பேர் இச்சந்திப்பில் கலந்துக் கொண்டார்கள். நான் உட்பட. பேரா மாநிலத்தின் பாரிட் புந்தார் தமிழியல் நடுவத்தில் இச்சந்திப்பு ஏற்பாடாகி இருந்தது. நடுவ மண்டபத்தின் அருகே ஏ.ஆர்.ரகுமான் உணவகம் அமைந்துள்ளது.

தலைநகரில் இருந்து சந்திப்பிற்கு வந்திருந்த திரு.குமரன் அவர்கள் என்னை ஈப்போவில் அழைத்துக் கொண்டார். பழைய சாலை வழியாக சுங்கை சிப்பூட்டிற்குச் சென்றோம். சுங்கை சீப்பூட்டில் அவரைச் சந்திக்கச் சென்றோம் என நீங்கள் நினைத்தால் அதற்கு நான் பொறுப்பல்ல. குமரன் அவர்களின் நண்பர் திரு.கிருஷ்ணமூர்த்தியை சுங்கை சிப்பூட்டில் அழைத்துக் கொண்டோம். அங்குள்ள ஒரு சீனர் உணவகத்தில் காலைச் சிற்றுண்டியை இனிதே முடித்துக் கொண்டு கிளம்பினோம்.

சுங்கை சிப்பூட்டில் குமரன் அவரது உறவினர் வீட்டிற்குச் சென்றார். குளித்து கம கமவென (துணைக்கால் போட்டு படிச்சிடாதிங்க) புது மாப்பிள்ளை போல் கிளம்பினார். எங்கள் அடுத்த இலக்கு தைப்பிங் 'கொய்தியாவ் கோரேங்'. கொய்தியாவ் கோரேங் தைப்பிங்கில் பேர் போன உணவாகும். மதியத்திற்கு சாப்பிட்டுவிட்டு போகலாம் என குமரன் கூறினார். அதே வேளையில் பவனேஸ்வரியும் தற்சமயம் தைப்பிங்கில் இருப்பதாகவும் சந்திப்பிற்கு வருவதாகவும் கூறினார். சாப்பிட்டுவிட்டு அவரையும் அழைத்துச் செல்ல நினைத்தோம்.

தைப்பிங்கை நெருங்கிய போது சாப்பிட போகலாமா வேண்டாமா என யோசனையில் இறங்கினோம். காலைச் சிற்றுண்டியை தாமதமாக தான் சாப்பிட்டோம். சரி இரவு கிளம்பும் போது பார்த்துக் கொள்ளலாம் என முடிவானது. பவனேஸ்வரி வந்ததும் அவரை அழைத்துக் கொண்டு நேராக பாரிட் புந்தார் சென்றோம். சந்திப்பு இடத்தை அடைவதற்குள் சுமார் நான்கைந்து முறை சுப.நற்குணன் ஐயா அழைத்துவிட்டார்.

பாரிர் புந்தாரை அடைந்தவுடன் சிறு தடுமாற்றம் ஏற்பட்டது. குமரன் வண்டியை நேராக சீக்கியர் கோவிலுக்கு விட்டுவிட்டார். நற்குணன் ஐயாவின் வழிகாட்டுதலுடன் சரியான இடத்தை அடைந்தோம். நாங்கள் சென்றடைந்த சமயம் ஒவ்வொருவராக வருகை புரிய ஆரம்பித்திருந்தார்கள். மதியை உணவை ஏ.ஆர்.ரகுமான் உணவகத்தில் எடுத்துக் கொண்டோம். ஈ தொல்லை சற்று அதிகமாகவே இருந்தது. அடுத்த முறை 'செல்டாக்ஸ்' மருந்துடன் செல்வதெனும் தீர்மானத்துடன் இருக்கிறேன். :P

பதிவர்கள் அனைவரும் வந்தவுடன் நிகழ்ச்சி ஆரம்பமானது. இம்முறை தைப்பிங், லூனாஸ், பிறை, பினாங்கு, பாகான் செராய், தலைநகர், கிள்ளான், யு.எஸ்.ஜே, ஈப்போ, செலாமா மற்றும் பாரிட் புந்தார் போன்ற இடங்களில் உள்ள தமிழன்பர்கள் கலந்து சிறப்பித்தனர்.

திரு சுப.நற்குணன் 2005-ஆம் ஆண்டு முதல் தமிழ் வலைப்பதிவுலகில் இருந்து வருகிறார். ஆரம்ப காலம் முதல் 2009 ஆரம்பம் வரை மலேசிய தமிழ் வலைப்பதிவுலகில் கண்டிருக்கும் மாற்றங்களை பகிர்ந்துக் கொண்டார். ஆரம்ப காலத்தில் 5/6 எனும் எண்ணிக்கையில் இருந்த பதிவுகள் இவ்வாண்டு தொடக்கத்தில் ஏறக் குறைய 40 எண்ணிக்கையை தொட்டிருக்கிறது. இது மேலும் அதிகரிக்க வேண்டும் என கூறினார்.

மலேசிய அரசியல் மற்றும் சமூக செய்திகளை வெளிப்படையாக எடுத்துரைப்பதில் முதன்மையாக விளங்கி வருவது மலேசியா இன்று தளமாகும் என்றால் மிகையில்லை. மலேசிய இன்றிலிருந்து திரு.இளந்தமிழ் வருகை தந்திருந்தார். தமிழ் எழுத்துரு பிரச்சனைகள், ஆரம்ப காலம் முதல் இணைய தமிழின் வளர்ச்சி, இணைய தமிழ் மாநாடு சம்பந்தப்பட்ட விடயங்களை மிக சுவாரசியமாக பகிர்ந்துக் கொண்டார். இலவச தமிழ் மென் பொருள்கள் இருப்பினும், சில நூறு ரிங்கிட் செலுத்தி தமிழ் மொன்பொருள்களை வாங்கி உபயோகிக்கும் தமிழர்களின் மனப்பான்மையை சொல்லி வருத்தம் கொண்டார்.

கெடா மாநிலம், லூனாஸ் பகுதியில் இருந்து ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி விரிவுரையாளர் திரு. தமிழ்மாறன் ஐயா வருகை தந்திருந்தார். அவருடைய எழுத்துகள் பலவும் எழுதியபடி பரன்மேல் கிடந்ததாக கூறினார். வலைப்பதிவின் பயன்பாட்டினால் அவற்றை நன்முறையில் பதிவு செய்து வைக்க வசதிபடுவதாகக் கூறினார். தமிழ்த் துறையைச் சார்ந்திருக்கும் ஆசிரியர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் பலர் இன்னமும் இணைய தமிழ் ஊடகத்தின் பயன்பாட்டை அறிந்திராமல் இருப்பது வருந்ததக்க விடயம் என்பதனை மேலும் கூறினார்.

வலைப்பதிவு தொடங்குவது அறியாமல் இருக்கும் பதிவு வாசகர்களுக்கு பட்டறை நடத்தப்பட்டது.

கலந்துரையாடலில் மேலும் பல விடயங்கள் பேசப்பட்டது. பதிவர் புத்தகம் பற்றிய வினா எழுந்த போது பலரும் பல விதமான கருத்துகளை எடுத்துரைத்தார்கள். அதைப் பற்றிய மேலான விளக்கத்தை மற்ற பதிவர்கள் குறிப்பிடுவார்கள் என நம்புகிறேன்.

திரு.கிருஷ்ணமூர்த்தி மலேசிய வானொலி தொலைக்காட்சியின் (ஆர்.டி.எம்) விளம்பர பிரிவில் பணியாற்றுகிறார். பல பதிவர்கள் ஒருங்கிணைத்து நன்முறையில் ஒரு கூட்டுப் பதிவை இயக்குவது நலம் என்றார் அவர். மேலும் கூறுகையில் அப்படி ஆரம்பிக்கப்படும் கூட்டுப் பதிவில் சிறப்பான செய்திகளை பதிவிட்டு வந்தால் தினமும் தமிழ் வானொலியில் அதனை பற்றிய செய்தியை ஒலிபரப்ப ஏற்பாடு செய்து கொடுப்பதாகக் கூறினார்.

அடுத்த பதிவர் சந்திப்பு மலேசியா இன்று ஏற்பாட்டில் தலைநகரில் நடைபெற இருக்கிறது. மார்ச் மாத இறுதியில் அல்லது ஏப்ரல் மாத துவகத்தில் ஓர் ஓய்வு நாளில் ஏற்பாடாக திட்டமிடபட்டுள்ளது. மூன்றாவது சந்திப்பில் மீண்டும் வலைப்பதி பட்டறைகள் மேற்கொள்ள முடிவெடுக்கப்பட்டுள்ளது.

சந்திப்பில் கலந்துக் கொண்டவர்களுக்கு தமிழ் நாள்காட்டி மற்றும் வள்ளலார் வழிபாட்டுக் குறிப்பு புத்தகமும் நினைவு பரிசாக வழங்கப்பட்டது.சுமார் 7 மணியளவில் தேநீர் விருந்துபசரிப்புடன் சந்திப்பு இனிதே நிறைவடைந்தது. இந்நிகழ்விற்காக பெரிதும் பங்காற்றிய திரு.சுப.நற்குணன், திரு,கோவி.மதிவாரன் மற்றும் திரு.விக்கினேசு கிருஷ்ணன் ஆகியோருக்கும் சந்திப்பில் கலந்து சிறப்பித்த அனைவருக்கும் நன்றி. அடுத்தடுத்த சந்திப்புகளில் கலந்துக் கொண்டு மேலும் சிறப்பிக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

சந்திப்பில் கலந்துக் கொண்டவர்கள்:
இல.கார்த்திகேசு
செ.முத்தரசன்
மு.நாகராசன்
ப.தமிழ்மாறன்
சு.முனியாண்டி
தா.மா.ஞானசேகரன்
க.இராசகுமாரன்
சூ.கெல்வின்
ம.ஜீவன்
ம.தமிழ்ச்செல்வன்
இரா.பாலமுரளி
மு.மதிவாணன்
சுப.சந்துரு
சி.ம.இளந்தமிழ்
குமரன் மாரிமுத்து
கு.கிருஷ்ணமூர்த்தி
து.பவனேஸ்வரி
விக்னேஷ்வரன் அடைக்கலம்
அனந்தன்
மு.கோகுலன்
கோவி.மதிவரன்
சுப.நற்குணன்
க.முருகையன்

(பி.கு: சந்திப்பில் பெரிதும் எதிர்ப்பார்க்கப் பட்டவர்கள் சதிசு குமார் மற்றும் ஆய்தன். இவர்கள் அடுத்த முறை கண்டிப்பாக கலந்துக் கொள்வார்கள் என நம்புகிறேன்.)

(பி.பி.கு: பின்னுக்கு பின் குறிப்பு போட்டால் மக்கள் அதை காமிடியாக்கிவிடுகிறார்கள். அதனால் எஸ் ஆகிக்கொள்கிறேன்)

(பி.பி.பி.கு: ஓன் நிமிட் பிலிஸ், இதையும் படிச்சிடுங்க: அனந்தன், மலேசியா இன்று)

Thursday, January 22, 2009

எஸ்.பாலபாரதியின் அவன்-அது=அவள்


நூல்: அவன்-அது=அவள்
ஆசிரியர்: யெஸ்.பாலபாரதி
நயம்: சமூக நாவல்
வெளியீடு:தோழமை பதிப்பகம்
பக்கம் : 184

தாய்லாந்தில் நடந்த ஒரு சம்பவம். ஒரு ஆண் பாலியல் மாற்றம் செய்துக்கொண்டான். காலம் கடந்தது. பெண்ணாக வாழ்ந்தது வெறுத்துப் போனது அவளுக்கு. 20 வருடம் கழித்து மருத்துவரை அணுகி கேட்டாளா(?!)ம். மீண்டும் தனக்கு ஆண் குறி வேண்டும் என்று.

பால் மாற்றம் தற்காலத்தில் நாம் அதிகம் கேள்விப்படும் விடயமாக இருக்கிறது. பிறப்பில் ஆணாக இருக்கும் ஒருவர் தன்னைப் பெண்ணாக மாற்றிக்கொள்ள விருப்பம் கொள்கிறார். இயற்கையாகவே பெண்மையின் குணங்கள் அவரிடம் இருக்கிறது. உள்ளத்தால் பெண்ணான அவர் உடலால் பெண்ணாக மாற்றம் கொள்ள விரும்புகிறார். இவர்களை திருநங்கையர்கள் என நாம் குறிப்பிடுகிறோம்.

உண்மையில் சுதந்திரம் என்பது யாது? குறிப்பிட்ட கட்டுப்பாட்டுக்குள் வாழ்வதா? இல்லை நமது சிந்தனைக்கு மதிப்பளித்து நமது விருப்பப்படி வாழ்வதா. நமது வாழ்க்கை நமது விருப்பப்படி இருக்க வேண்டும் என்பதே நமது எண்ணம். அதே வேளையில் இச்சமூக விதிகளை மதித்து நாம் வாழ வேண்டியது அவசியமாகிறது.

ஒரு ஆண் பருவம் எய்துகிறான். தனக்குள் ஊற்றெடுக்கும் உணர்வுகளை அறிகிறான். தன்னை ஒரு ஆணாக கருத மறுக்கிறான். இந்நாவலின் நாயகி கோமதி. கோமதியின் ஆரம்பக் கால வாழ்க்கை மாறுபட்டது.

கோபி பிறப்பால் ஒரு ஆண். ஆணாக வளர்க்கப்படுகிறான். அவனுக்குள் உண்டாகும் உணர்வு மாற்றங்களால் தன்னைப் பெண்காக கருதுகிறான். கோபியின் உணர்வு சித்தரிப்புகளை சிறப்பாக கொடுத்திருக்கிறார் ஆசிரியர் என்றேக் கூற வேண்டும்.

குடும்பத்தினர் வீட்டில் இல்லாத சமயம். தமது தமக்கையின் உடைகளை அணிந்து கொண்டு 'பூ பூக்கும் ஓசை' பாடலுக்கு ஆடும் போதும், அண்ணனிடம் அடி வாங்கும் போதும், பிள்ளைக்கு பேய் பிடித்ததாய் தாய் கருதி பூசாரியை அழைத்து பேய் ஓட்டும் போதும் கதை விவரிப்புகள் இலகுவாக மனதில் பதிகிறது.

பார்த்திங்களா என்கிட்டயே மல்லுக்கு நிக்குது இது கொஞ்சம் திமிர் பிடித்த பேய் தான். இதன் போக்கில போய் சமாளிக்க வேண்டும் எனச் சொல்லும் போலி பூசாரியின் காட்சி விவரிப்புகள் நகைச்சுவையாகவே இருக்கிறது.

தான் விருப்பும் வாழ்க்கையை வாழ நினைக்கிறான் கோபி. எதிர்பாரா விதமாக அதற்கான சந்தர்ப்பம் அமைகிறது. குடும்பம், சுற்றம் என அனைத்தையும் தூக்கியெறிகிறான். தனது புதிய வாழ்க்கையில் அடியெடுத்து வைக்கிறான். அவன் கோமதி எனும் பெயரில் மாற்றம் காண்கிறாள்.

திருநங்கைகளின் வாழ்வு முறை. அவர்கள் பேச்சு வழக்கு. அவர்களுக்குள்ளான பிரச்சனைகள் போன்ற விவரிப்புகள் கதைக்கு வலு சேர்க்கின்றது.

திருநங்கைகளின் வாழ்க்கையில் முக்கிய அங்கமாக கருதப்படுவது தாயம்மா எனும் குறி அகற்றும் சடங்கு. சில இடங்களின் அறுவடை சடங்கு என இதை நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆசிரியர் இதை சொல்லும் விதம் மெய்கூசச் செய்கிறது என்றே சொல்ல வேண்டும்.

பொதுவாகவே நமது சமூகத்தில் ஆண் பெண் என இருபாலரும் ஏற்றுக் கொள்ளாத அல்லது வெறுக்கும் சமூகமாகவே திருநங்கைகள் இருக்கிறார்கள். அப்படியாக திசையற்று தன் வாழ்வை தேடும் திருநங்கைகளுக்கு இன்னொரு திருநங்கையே துணை என்பதை இக்கதையில் காண்கிறோம்.

இக்கதையில் வரும் அன்பு எனும் கதாபாத்திரம் நாயகனா அல்லது வில்லனா என்பது சற்று சிந்திக்க வேண்டிய விடயம். சமுதாய சூழலல அறிந்து வாழும் கதாபாத்திரமாக சித்தரிக்கப்படும் இவர் பிற்பகுதியில் ஒரு கொடுமைக்காரனாக சொல்லப்படும் விதம் நெருடுகிறது.

ஆண் சமூகத்தை அவமானப்படுத்துபவர்கள் திருநங்கையர் எனும் எண்ணம் பொரும்பாலான ஆண்களுக்கு உண்டு. அதே போல் தம்மை கேவலப்படுத்தும் ஆண் வர்க்கத்தை வெறுக்கும் திருநங்கையரும் உண்டு. இதற்கு அப்பாற்பட்டு அவர்களை மனமுவந்து ஏற்று வாழ்க்கை நடத்துபவர்களும் உண்டு.

இக்கதையில் போலிஸ், ரவுடிகள், திருநங்கையரை ஏமாற்றி திருமணம் செய்யும் ஆண்கள் என பல வகையில் ஆண்களே திருநங்கையருக்கு கொடுமைகள் நிகழ்த்துபவர்களாக சொல்லி இருப்பது திருநங்கையர்களுக்கு ஆண்கள் மட்டுமே எதிரிகள் என்பது போல் உள்ளது.

நன்கு படித்த திருநங்கைகள் தங்களுக்கு ஏற்ற வேலைகளில் இருப்பதை நாம் அறிந்திருக்கிறோம். அது இந்திய நாட்டுச் சூழலில் மாறுபடுகிறதா என்பது தெரியவில்லை. படிப்பறிவுள்ள கோமதியும் கடை(பிச்சை) கேட்டு பிழைக்கும் சித்தரிப்புகள் எதிர்ப்பார்க்காத ஒன்று. திருநங்கைகள் வாழ்க்கையில் தங்களை எப்படி உயர்த்திக் கொள்ள முடியும். தம் பிள்ளைகள் திருநங்கையராக மாறுவார்களாயின் அதை எப்படி குடும்பத்தார் ஏற்றுக் கொள்ள முடியும் போன்ற முக்கிய கூறுகளை கொஞ்சம் விளங்கக் கூறியிருந்தால் மேலும் நன்மையாய் அமைந்திருக்கும்.

நாம் விரும்பும் வாழ்க்கையை அமைத்துக் கொள்வது அவரவர் சுதந்திரத்துக்குற்பட்டது. சமூக அமைப்பில் திருநங்கையர்களும் கவனிக்கப்பட வேண்டியவர்களே. கீழான பார்வைக்கும் செயல்களுக்கும் அவர்களை முற்படுத்துவதில் நமது சமூகமும் காரணமாகிறது என்பது தான் உண்மை.

இன்றைய சமூக அமைப்பில் நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒரு முக்கிய அம்சத்தை மக்களுக்கு தெரிவிப்பதில் முனைப்பு காட்டி இருக்கும் ஆசிரியர் பாலபாரதியின் முயற்சி பாராட்டத்தக்கது. கதை வழி திருநங்கையர் உலகிற்கு நம்மை அழைத்துச் சென்று நாம் அறிய வேண்டிய தகவலை இலகுவாக சொல்லி இருப்பது மிக அருமை.

(பி.கு: இப்புத்தகத்தை எமக்கு பரிசளித்த எழுத்தாளர் பரிசல்காரன் அவர்கட்கு நன்றி.)

Wednesday, January 21, 2009

தீராத காதல் நோய்!


முத்தொளிகள் சிதறிடவே
முகமலர சிரித்தவளே!
மூச்சடைத்துப் போனேனே
முத்தமொன்று நீ கொடுக்க!

காலையிலே உன் நினைவு
கச்சிதமாய் நிக்குதடி!
காதல் ரசம் கேட்குதடி
கஞ்சதனம் காட்டாதே!

விழிகளிலே மின்னளொளி
வீழ்ந்திடுதே என் மனமும்
வேல் கொண்டு தாக்கியதாய்
வண்ண மயில் நீ காண!

சேலைகட்டி நீ வரவே
சோலையிலே கிசுகிசுப்பு
செவ்விதழ்களிரண்டு கொண்ட - உன்
செவ்வாயும் மலர் என்றே!

சீரான நடை கொண்டு
சித்திரமாய் நீ வரவே!
சின்ன மயில் நடனமென
சீண்டல்கள் செய்வேனடி!

மாற்றங்கள் பல கண்டேன்
மதி மயங்கி நான் நின்றேன்!
மங்கை நீ வருவாயோ - என்
மனதை தான் தருவாயோ!

Monday, January 19, 2009

மலேசியத் தமிழ் வலைப்பதிவர் சந்திப்பு – 2

பேரன்புடைய,
மலேசியத் தமிழ் வலைப்பதிவர் அனைவருக்கும் வணக்கம். வாழ்க! தமிழ்நலம் சூழ்க!

மலேசியத் தமிழ் வலைப்பதிவர் சந்திப்பு – 2, பின்வரும் வகையில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நாள் : 25-1-2009 (ஞாயிறு)
நேரம் : பிற்பகல் மணி 2.00 தொடக்கம்
இடம் : தமிழியல் நடுவம், பாரிட் புந்தார், பேரா.
(பள்ளிவாசல் எதிர்ப்புறம் – ஏ.ஆர்.ரகுமான் உணவகம் அருகில்)

மலேசியத் தமிழ் வலைப்பதிவர் சந்திப்பு 2இன் நோக்கம்:-
** மலேசியத் தமிழ் வலைப்பதிவர்களிடையே அறிமுகத்தை ஏற்படுத்துதல்.

** மலேசியத் தமிழ் வலைப்பதிவர்களை ஒருங்கிணைத்தல்.

** மலேசியத் தமிழ் வலைப்பதிவுகளின் தரத்தை மேம்படுத்தும் வழிவகைகளை ஆராய்தல்.

** கணினி – இணையத் துறையில் தமிழ்மொழியின் பயன்பாட்டையும் பயனாளர்களையும் விரிவுபடுத்துதல்.

** புதியப் பதிவர்களை உருவாக்கி; ஊக்கப்படுத்தி; வழிகாட்டுதல்.

** மலேசியத் தமிழ் வலைபதிவுகளை மாற்று ஊடகமாக வளர்த்தெடுத்தல்.


மலேசியத் தமிழ் வலைப்பதிவர்கள், வலைப்பதிவு வாசகர்கள், தமிழ் இணைய ஆர்வலர்கள், தமிழ்க் கணினி பயனாளர்கள், வலைப்பதிவு தொடங்க விரும்புபவர்கள் என அனைவரும் தவறாமல் கலந்து பயன்பெற அன்போடு அழைக்கிறோம்.

மேல்விளக்கத்திற்கும் தொடர்புக்கும்:-

விக்னேஷ்வரன் அடைக்கலம் (012-5578257)
சுப.நற்குணன் (012-4643401),
கோவி.மதிவரன் (013-5034981),
கி.விக்கினேசு (012-4532803)

பி.கு:-
1) தெற்கிலிருந்து வருபவர்கள் PLUS நெடுஞ்சாலையிலிருந்து கமுண்டிங் அல்லது பண்டார் பாருவில் வெளியேறி பாரிட் புந்தார் வரலாம்.

2) வடக்கிலிருந்து வருவோர் நிபோங் திபாலில் வெளியேறி பாரிட் புந்தார் வரலாம்.

3) பாரிட் புந்தார் மணிக்கூண்டுக்கு அருகில்தான் பள்ளிவாசல் உள்ளது. பள்ளிவாசலுக்கு எதிர்புறத்தில் ஏ.ஆர்.ரகுமான் உணவகத்திற்கு பக்கத்தில் 'தமிழியல் நடுவம்' உள்ளது.

இவ்வண்,
ஏற்பாட்டுக் குழுவினர்

Friday, January 16, 2009

முரண்டு பிடிக்கும் மரணம்!!!


எச்சமாய் இருக்கும்
வாழ்க்கையின்
மிச்சத்தை
தள்ளாடித் தீர்க்கிறான்
தடி ஊன்றும் கிழவன்!

உடல் தேய
உழைத்தவனின்
உள்ளங்கை ரேகைகள்
ஊமையாகிவிட்டன!

இந்த முதுமை
சோகங்கள்
அழியா கரையாய்
நெஞ்சுக் கூட்டில்
நெளிந்துக் கிடக்கிறது!

வேட்டி முடிய
கனக்கும் கைகள்!
அடுத்த அடிக்கு
முகம் சுழிக்கும் கால்கள்!
“டேய் கிழவா”
கேட்டு மந்தமான செவிகள்.
பகல் கூட இருட்ட
தொடங்கிவிட்டது கண்களுக்கு!

உறவுகள் சாதகமில்லை
உணர்வுகள் புரியவில்லை!
உணவு இறங்கவில்லை
உறங்கவும் முடியவில்லை!

மரியாதையை எதிர்பார்த்து
மானமும் போய்விட்டது!
வினாடிகளை எண்ணிக்
காலத்தைக் கரைக்கிறான்!
மரணம் இவனுக்கு
மட்டும் முரண்டு பிடிக்கிறது!

Wednesday, January 14, 2009

பொங்கல் சிறப்பு கொசுறு 14/01/2009

பானை மட்டும் பொங்கினால் போதும் என நினைப்பது நெகடிவ் அப்ரோச். மனதில் மகிழ்ச்சியும் பொங்க வேண்டும் என நினைப்பது பாசிடிவ் அப்ரோச் என கருத்து சொல்ல நினைக்கும் அதே வேளையில் எல்லோருக்கும் தமிழர் திருநாள் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறார் சாணியடி சித்தர்.
********

பொங்கல் சரியாக பொங்கவில்லையென்றால் கொஞ்சமாக பேக்கிங் பவுடர் போட வேண்டும் என தூயா சமீபத்தில் கண்டுபிடித்துள்ளார். உயிர் பயமில்லாதவர்கள் தாரளமாக முயற்சிக்கலாம்.
*******

வீடு வீடாகச் சென்று அவன் பிச்சை எடுத்துக் கொண்டிருந்தான். அந்த வழியாக அரசன் வந்தான். தனக்கு பெரும் வெகுமதி கிடைக்கப் போவதாகப் பிச்சைக்காரன் நினைத்தான். ஆனால் அரசன் அவனுக்கு பிச்சையாக எதையும் கொடுக்கவில்லை. மாறாக, கைகளை நீட்டி அரசனே பிச்சை கேட்டான்.

பிச்சைக்காரன் திகைத்துப் போனான். அரசன் கேட்கிறான். இல்லையென சொன்னால் பிரச்சனை. தன்னிடம் இருந்த தானியத்தில் சிறிதளவு அவனுக்குப் பிச்சையாகப் போட்டான்.

இரவு தன் இடம் திரும்பியதும் தானியத்தைக் கவனிக்கிறான். அதில் சில தானியங்கள் பொன் தானியங்களாக இருக்கிறது. கொடுப்பவன் பெறுகிறான்.
******

பொங்கல் நிகழ்ச்சியாம். உள்ளூர் கலைஞர்களின் படைப்பு என்றார்கள். நிகழ்ச்சி ஒளி பரப்பானது.

"மெகு மெகு மெகு லயிமெயிமா.... x2 முதல் மழை எனை நனைத்ததே... முதல் முறை சன்னல் திறந்ததே...."

அதே ஹரிஸ் ஜெயராஜ் பாடல் தான் என்ன நடனம்... மன்னிக்கவும், உடல் அசைத்து நடந்தவர்கள் உள்ளூர்க்காரர்கள். என்ன செய்ய முயற்சிக்கிறார்கள் என
புரியவில்லை. அதே டிரிசாவும் விக்ரமும் நடித்த பீமா பட பாட்டை அப்படியே தூக்கி போட்டிருந்தால் தயாரிப்புச் செலவு மிச்சமாகிப் போயிருக்கும்.
*****

நான் கடவுள் பாடல்கள் கேட்கும் வாய்ப்புக் கிடைத்தது. இசை ஞானியின் இசையமைப்பு அருமையாக இருக்கிறது. பாடல் வரிகளில் கிரந்தத்தைக் கரந்து வைத்திருக்கிறார்கள். கோவி கண்ணன் இதை கேட்டு வெகுண்டெழுத்து ஒரு பதிவு போடுவார் என பதிவர் வட்டத்தில் சின்ன கிசு கிசுப்பு ஆங்கங்கு கேட்டுக் கொண்டிருக்கிறது.
****

பாலகுமாரனின் கனவுகள் விற்பவன் படித்தேன். கதறக் கதற 'பிளேடு' போட்டுள்ளார். முயற்சி செய்து படித்துப் பார்த்தேன். முடியலை.
****

அக்குளுக்கு பயன்படுத்தும் வாசனைத் திரவியத்தால் (deodorant) புற்று நோய்
ஏற்படுவதாகப் படித்தேன். அத்திரவியத்தில் அலுமினியம் போன்ற உலோகங்கள்
சேர்க்கப்படுகிறதாம். பீதியை கிளப்பிவிட்டுவிட்டது செய்தி.
*****

நியுமரலாஜி நிபுணர்களின் தகவலின் இந்த ஆண்டு என் இரத்தத்தைப் பார்க்காமல் முடியாதாம். இன்ன இன்ன பூஜை செய்ய வேண்டும் என அம்மாவிடம் சொல்லி இருக்கிறார்கள். நேற்று இரத்த தானம் செய்துவிட்டு வந்தேன். சின்ன காயம் நிறய இரத்தம் பார்த்தாச்சு. பூஜை கேன்சல். 4 ஆண்டுகளுக்கு முன்னமே உடல் உறுப்பு தானத்தையும் செய்தாகிவிட்டபடியால் இனி வாழ்க்கையில் எந்த பரிகாரமும் தேவை இல்லை என சிறப்புச் சலுகை கொடுத்திருக்கிறார் இளச்சி மலை ஆத்தா. ஆத்தா நீதானம்மா நியூம(சு)ராலாஜி நிபுணர்களுக்கு நல்ல புத்திய கொடுக்கனும்.
*****

தமிழர்கள் சினிமாவுக்கு அடுத்தபடியாகத் திருவிழாவுக்கே அதிகமாகச் செலவு செய்கிறார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலை சென்னை புத்தகத் திருவிழாவில் ஏற்படுமாயின் நலமான ஒன்றாக அமையும். ஏறக் குறைய பத்து புத்தகங்கள் வாங்க விண்ணப்பித்துள்ளேன்.
*****

உறங்குவதும்
உறங்கி விழிப்பதும் போலவே
இயல்பாகிவிட்டது,
உன்னை நினைத்துக் கொள்வதும்…

நீ கேட்காமலே
பேருந்து நிறுத்தம் வரை
துணைக்கு வந்தது…

பத்திரமாய்
சென்று சேர்ந்தாயா என்று
தொலைபேசியில் சோதித்தது…

நண்பர்களோடு சென்ற
சுற்றுலாவில் நான்
மயங்கி விழுந்தது கண்டு
நீ பதறித் தவித்தது…

இரவுப் பணியில் ஒருநாள்
கால் இடறி
நடக்கமுடியாமல் போனதற்காக
எனக்கிருந்த பசியறிந்து
பழங்களுடன் நீ வந்தது…

தொடர்ந்த என் நினைவுகளை
சட்டென்று அறுத்தது,
பில்ட்டரை நெருங்கிய
சிகரெட்டின் நெருப்பு,
நாம் பிரிந்த
ஜனவரி பதினொன்று
நினைவுக்கு வந்தபோது. - விஜய்கோபால்சாமி