Showing posts with label tamil bloggers. Show all posts
Showing posts with label tamil bloggers. Show all posts

Wednesday, May 06, 2009

சுண்டக்கஞ்சி with வால்பையன்

நண்பர்களே பின்னூட்ட சுனாமி வால்பையன் நமக்காக மனம் திறந்து பேசுகிறார். படித்து ஆனந்தம் அடையுங்கள்...(தமது ஒற்றைக் கரத்தால் தொடர் வண்டியை இழுத்துப் பிடித்து நிறுத்தி வைத்திருக்கும் வால்)

கே: சமீப காலமாக வலைப்பதிவுலகில் பலமாக பார்வையிடப்பட்டு வரும் பதிவராக இருக்கிறீர்கள். இது மன நிறைவை அளிக்கும் விதத்தில் இருக்கிறதா?

வால்: அண்ணே நான் அவ்வளவு வொர்த் இல்லைணே!
பலமான பார்வையெல்லாம் பெரிய வார்த்தைண்ணே!
யாருடா இவன் குரங்கு சேட்டை பண்றான்னு நாலு பேரு பாக்குறாங்க! பண்ற சேட்டைக்கு ஏத்தா மாதிரி அடி விழுது
!

கே: பதிவெழுதுவதனால் முன், பின், பக்க விளைவுகள் ஏதும் திரைக்குப் பின்னால் உள்ளனவா?

வால்: ஆரம்ப காலங்களில் பதிவெழுதுவதற்காக நிறைய மெனக்கெட வேண்டியிருந்தது! எல்லாவற்றிலும் பதிவுக்கான கருவை தேடி அதை முழுமையாக ரசிக்க மறந்தேன்! மன உளைச்சலுக்கு ஆளானேன்! இது என்னடா வம்பா போச்சுன்னு பதிவை குறைச்சு பின்னூட்டம் மட்டும் போட்டு கொண்டிருக்கிறேன்! நிம்மதியாக இருக்கிறேன்.

கே: தமிழ்மண நட்சத்திர பதிவராக இருந்த அனுபவத்தைப் பற்றி ஓரிரண்டு வரிகள்.

வால்: அங்கிகாரம் வாழ்வின் முழுமையை காட்டும்! நடசத்திரம் அது மாதிரியான ஒரு உணர்வு தான்! புதிய புதிய நண்பர்களும் அவர்கள் தரும் உற்சாகமும், ஆயிரம் பாட்டில் காம்ப்ளானுக்கு சமம்!

கே: ஏகப்பட்ட பதிவுகளில் உங்களின் கலக்கலான பின்னூட்டங்களைக் காண முடிவதாக பதிவுலக மக்கள் திருவாய் மலர பேசிக்கொள்கிறார்கள். பின்னூட்டங்களைப் பற்றிய உங்கள் பார்வை என்ன?

வால்: பதிவு என்பது நான் தனியாக பேசி கொண்டிருப்பது! பின்னூட்டம் நீங்களும் என்னுடம் பேசுவது! நமக்கு எப்படி வசதி! நான் பின்னூட்டம் இடும் பதிவர்களிடம் உரையாடுவது போல் ஒரு உணர்வு! எனக்கு தான் உலகிலேயே நண்பர்கள் அதிகம்னு கின்னஸ்ல இடம் பிடிக்கனும்! அதுக்கு பின்னூட்டம் போடனும் எல்லாத்துக்கும்

கே: வாசகர்கள் இல்லாமல் ஒரு பதிவர் வெளிச்சத்துக்கு வந்துவிடுவதில்லை. கருத்துகளை பகிர்ந்துக் கொள்ள நினைக்கும் ஒரு சில வாசகர்களே பின்னூட்டமிடுகிறார்கள். சில பதிவர்களிடையே அதற்கான தகுந்த மறுமொழி இல்லாதது பற்றி என்ன நினைக்கிறீர்கள்.

வால்: பதிவுலகம் கண்ணாடி மாதிரி நாம என்னை கொடுக்குறோமோ அது தான் திரும்ப கிடைக்கும்!
சிலர் வாங்கிட்டு திரும்பி தரமாட்டாங்க! அவுங்க விதிவிலக்கு லூஸ்ல விடுங்க! அதுக்காக பின்னூட்டம் இடுவதையே பாவ செயல்னு ஒதுங்கிறாதிங்க! பின்னூட்டம் சுவாரஸ்யமாக இருந்தால் மற்ற நண்பர்கள் கவனிப்பார்கள்!

கே: பின்னூட்டங்களை சுயசொறிதல் என கருதுகிறீர்களா?

வால்: ஆழ்ந்து நோக்கினால் பதிவு தான் சுய சொறிதல்னு தெரியும்! பின்னூட்டம் கருத்து களம், ஆனால் இப்போதெல்லாம்.
வழக்கம் போல கலக்கல் அசத்தீடிங்க சூப்பர்சான்சே இல்ல :) என டெம்ப்ளெட் பின்னூட்டங்கள் இடத்தை அடைக்கின்றன! கருத்துகளத்தில் ஜால்ரா சத்தம் தான் அதிகமா கேட்குது!

கே: உன்னை யாரும் வெத்தலை பாக்கு வச்சி அழைக்கல. பிடிக்கலனா என் பதிவ படிக்காதே என சொல்பவர்களைப் பற்றி.

வால்: கோபம் வந்தால் சிலர் அவர்களுடய உடமைகளையே போட்டு உடைப்பார்கள்! அது போல் தான் இதுவும் பொதுவில் நீங்கள் ஒரு கருத்தை வைக்கும் போது அதை கேள்வி கேட்க அனைவருக்கும் உரிமை உண்டு! பதில் சொல்ல தெரியாதவர்கள் தான், உன்னைய யாரு வெத்தலை பாக்கு வச்சு கூப்பிட்டான்னு சொல்லுவாங்க! தெளிந்த மனநிலையில் இருப்பவர்கள் இம்மாதிரியெல்லாம் பேச மாட்டார்கள் என்பது என் கருத்து.

கே: சாருவின் பதிவை தொடர்ந்து வாசித்து வருகிறீர்கள். இதனால் ஒவ்வொரு முறையும் சரக்கடிப்பது வேஸ்ட் ஆகிவிடுவதாக சொல்கிறீர்கள். அப்படி என்றால் சரக்கடிக்காமல் அவர் பதிவுகளை படிக்க வேண்டும் என சொல்கிறீர்களா?

வால்: சரக்கடிக்காம படிச்சா நீங்க வேஸ்ட் ஆகிருவிங்க! சாருவின் எழுத்து தலைகீழாக எழுதப்பட்ட மாதிரி, அதை நீங்கள் தலைகீழாக தான் படிக்க வேண்டும், அதற்கு பதிலாக தான் சரக்கு

கே: நான் எழுதும் வரை தான் இந்த எழுத்து எனக்கு சொந்தம் எழுதிய பிறகு யார் வேண்டுமானாலும் விமர்சிக்கலாம் என சொல்லும் சாரு, சில விமர்சனங்களை ஏற்றுக் கொள்ளமுடியாமல் கபடியாடிவிடுகிறாரே?

வால்: சாரு தன்னம்பிக்கையை தாண்டி தலைகண லெவலுக்கு சென்று விட்டார். அவரை விமர்சிப்பவர்கள் சாத்தான்களின் தூதுவர்கள் ரேஞ்சுக்கு தான் அவரது பேச்சு இருக்கிறது. ஆனால் இவர் மட்டும் சகட்டு மேனிக்கு அனைவரையும் விமர்சிப்பார்! இதில் ஆச்சர்யம் என்னவென்றால் அவரது சிஷ்ய கோடிகளும் அதே போல் இருப்பது

கே: திரைப்படம் பார்ப்பது எப்படி என பதிவுகள் வந்திருக்கும் பட்சத்தில் உலக திரைப்படம் பார்ப்பது எப்படி என்ற ஒரு பதிவை உங்களிடம் இருந்து கோடான கோடி மக்கள் எதிர்ப்பார்க்கிறார்கள். எழுதினால் என்ன?

வால்: நான் திரையரங்கம் செல்லவதில்லை! வீட்டிலேயே லேப்டாப்பில் பார்ப்பதோடு சரி! என் மகள் விளையாட வந்தால் படத்தை நிறுத்தி விளையாட சென்று விடுவேன்! திரைப்படத்தை விட எனக்கு என் மகள் தான் முக்கியம்! திரைப்படம் நிழல், என் மகள் நிஜம். உலக திரைப்படமாக இருந்தாலும் சரி உள்ளூர் படமாக இருந்தாலும் சரி! இரவு மூன்று மணிக்கு மேல் பார்ப்பது எனது வழக்கம்! உங்களுக்கு சரிப்பட்டு வருமா!

கே: சரக்கடித்துவிட்டு பதிவிடுவது நல்லதா இல்லை பின்னூட்டமிடுவது நல்லதா?

வால்: நல்லதல்ல! படிப்பது வேண்டுமானால் வித்தியாசமான அனுபவமாக இருக்கும்! பதிவிடுவதோ, பின்னூட்டம் இடுவதோ தவிர்ப்பது நல்லது! இது என் பாலிஸி! உங்களால் முடியுமென்றால் தாராளமாக எது வேண்டுமானாலும் செய்யலாம்!

கே: சமீப காலமாக புதிய பதிவர்கள் அதிகரித்து வருவதப் பற்றி?

வால்: வாசிப்பனுபவம் உயர்ந்து கொண்டே வருவது நல்ல ஆரோக்கிய சூழல் தானே! வரவேற்கிறேன்! அனைவரையும்

கே: தமிழ்மண திரட்டியில் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒரு சில தலைப்புகளுக்கே மவுசு இருப்பதாக தெரிகிறது. சலிப்படைந்தது உண்டா?

வால்: ஆம்! உண்டு, தற்போதைய தேர்தல் நேரத்தில் மிகவும் சலிப்படைய வைத்துள்ளது! இதில் மேலும் சலிப்படைய செய்யும் விசயம் எழுதுவதில் பெரும்பாலோனோர் ”எல்லாம் தெரிஞ்ச ஏகாம்பரம்” டைப்பில் எழுதுவது! இந்த சூழ்நிலையிலும் தேர்தல் விவகாரத்தை ஊறுகாய் அளவே தொட்டு சென்ற வெகு சிலரை ஆச்சர்யத்துடன் பார்க்கிறேன்!

கே: குறுகிய காலத்தில் தமிழிஷின் வெற்றி பற்றி?

வால்: உபயோகிக்கும் எந்த பொருளும் நமக்கு சுலபமாக இருக்க வேண்டுமென்பது தான் நுகர்வோரின் ஆசை! புதிய பதிவர்கள் அதிகம் வந்த நேரம் தமிழிஷ் அறிமுகமானதால் அது வாசகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுவிட்டது! ஆனாலும் எனக்கு தமிழ்மணம் தான் சுலபமாக இருக்கீறது.

கே: நெல்லைத் தமிழ் திரட்டியின் நிர்வாகி நீங்கள் என பேசப்படும் கிசுகிசுக்களைப் பற்றி?

வால்: கிசுகிசுவெல்லாம் தேவையில்லை! அது ஒரு கூட்டு முயற்சியாக வெளிவந்துள்ள தளம்! இயக்க சுலபமாகவும், பெரிய படங்களுடன் வாசகர்களை கவரும் வகையில் உருவாக்கப்பட்ட தளம்! அதற்கு நிர்வாகி ஒருவரே! அவரே பல வலைப்பூக்களில் அதை சொல்லியிருக்கிறார்! நானும் அதில் ஒரு நிர்வாகி என்பது அவரது அன்பினால் எனக்கு கிடைத்த பரிசு!

கே: சில பதிவர்களிடையே கருத்து மோதல் எனும் பெயரில் தனிமனித தாக்குதல் நடத்திக் கொள்கிறார்களே?

வால்: ஆழ்ந்து நோக்கினால் தனிமனித தாக்குதலுக்கு ஆரம்ப காரணம் தனிமனித துதி என்பது தெரியும்!
யாரும் யாரையும் வரும்போதே எதிரியாக பார்ப்பதில்லை! ஒருவருடைய தனிமனித துதி, கருத்து வேறுபாடுகளால் வாதம் ஏற்படுகிறது! தனிமனித துதியை ஆதரிப்போர் பெரும்பாலும் குறுகிய மனம் படைத்தவர்களாக தான் இருக்கிறார்கள் . அதனாலேயே அவர்களது வாதம் விவாதமாகி பாதியில் முடக்கு வாதமாகி அவரது ப்ளாக்கில் இவரை திட்ட, இவரது ப்ளாக்கில் அவரை திட்ட, அவருக்கு சில ஆதரவு, இவருக்கு சில ஆதரவு என பல குழுக்கள் இன்று தமிழ் வலையுலகில் இருக்கின்றன! (விதிவிலக்குகளும் உண்டு)

கே: சில பதிவர்கள் யாருக்கும் பின்னூட்டம் போடுவதில்லை ஆனால் ஏன் எனக்கு நீ பின்னூட்டம் போடவில்லை என கேட்பது பற்றி?

வால்: என்ன செய்ய அவுங்களுக்கு அவுங்க எழுதுறது தான் எழுத்து! நாம எழுதுறதெல்லாம் வாந்தி எடுக்குறது! கேட்டாலும் பரவாயில்லை, சும்மா இருக்குறப்ப போட்டு போயிரலாம், சிலர் பெண் பதிவர்களுக்கு மட்டும் தேடி போய் பின்னூட்டம் போடுறது, ஆனா அவருக்கு போடலைன்னா ஏன் போடலைன்னு கேட்கம் போது தான் அழுவாச்சியா வரும்!

கே:
//நீ யாரடா ஒரு எழுத்தாளனுக்கு ஆர்டர் போட! கேரளாவில் போய் பார் எல்லாம் எப்படி புட்டு சுடுறாங்கன்னு!
கொரிய படம் போல் வருமா!kim ki duk சின்ன வயசுல என்னை போலவே பிச்சை எடுத்து வாழ்ந்தார். ப்ரென்சு எழுத்தாளர்கள் ஆளுமை நிறைந்தவர்கள். இங்கே எவனுக்கும் எழுத தெரியாது, ஆனா ஒரு ஜட்டி 1100 ரூபா. நல்ல காலமா ஒரு குவாட்டர் 70 ருபாய்க்கு கிடைக்குது

அப்படின்னு தேவையற்ற வார்த்தைகளை இடையில் சேர்த்து பெருக்கி நாலு பக்கத்துக்கு ஒரு கட்டுரை வரும்
வராட்டி ஏண்டா நாயேன்னு கேளுங்க!//

இந்த யுக்தியை எப்படி கண்டு பிடிச்சிங்க? :)

வால்: இது சாரு பதிவின் சுருக்கம் என்பது சாருவை படிப்பவர்களுக்கு நன்றாக தெரியுமே! நான் புதிதாக செய்ய என்ன யுக்தி இருக்கிறது! ஒருவர் இதை தான் செய்வார் என நம்மால் முன்கூட்டியே தீர்மானிக்க முடிந்தால் அந்த மனிதர் இயந்திரத்துக்கு சமானம்! புரிகிறதா?

கே: விரும்பிப் படிப்பது?
வால்: தமிழ் வலைப்பூக்கள்


கே: பிடிக்காதது?
வால்: தற்புகழ்ச்சி


கே: உங்கள் பார்வையில்:

பரிசல்காரன் - ஆற்றின் கரையிலேயே(safe side-ஆம்)
அதிஷா
- எழுத்தில் திரிஷா

குசும்பன்
- எழுத்து கலைவாணர்

லக்கிலுக்
- நகைச்சுவையாக எழுதியவர்(தற்பொழுது தி.மு.க. கொள்கை பரப்பு செயலாளர்)

கோவி.கண்ணன்
- பகுத்தறிவு கருத்து கந்தசாமி!

வடகரை வேலன்
- மரியாதைகுறிய அண்ணாச்சி

கார்க்கி
- பெண் ரசிகைகளை ஏராளமாக கொண்டவர்(கனவில் மட்டும்)


கே: பதிவர் சந்திப்பு?
வால்: சரக்கடிக்க ஒரு சாக்கு(எனக்கு மட்டும்)


கே: பதிவுலக சாதனை?
வால்: ஏராளமான நண்பர்கள்


கே:பிடித்த எழுத்தாளர்?
வால்:ஒன்றை போல் ஒன்று இருப்பதில்லை! யாரை சொல்ல!


(கேள்வியும் பதிலும் நீங்களே)
பதிவுலகில் சந்திக்காத, சந்திக்க விரும்பும் நபர்கள்?
அய்யனார்

குசும்பன்

ச்சின்னபையன்

மற்றும் உங்களை



(பி.கு: பேட்டி கொடுத்த வால்பையனுக்கு நன்றி. அடுத்தபடியாக ஃபிட்டுபடம் with அதிஷா எனும் பதிவை விரைவில் எதிர்பாருங்கள். அதிஷாவிடம் கேட்க நினைக்கும் கேள்விகளை எனக்கு மின்மடலில் அனுப்பி வைக்கலாம்).

Wednesday, January 28, 2009

மலேசியத் தமிழ் வலைப்பதிவர்கள் சந்திப்பு 2

இரண்டாவது மலேசியத் தமிழ் வலைப்பதிவர்கள் சந்திப்பு இனிதே நடந்தேறியது. இந்த முறை 24 பதிவர்கள் மற்றும் பதிவு வாசகர்கள் சந்திப்பில் கலந்துக் கொண்டு சிறப்பித்தார்கள்.

மதியம் சுமார் 2.30 மணியளவில் சந்திப்பு தொடங்கியது. முதல் பதிவர் சந்திப்பு பல இடர்பாடுகளுக்கிடையே தலைநகரில் நடந்தேறியது அனைவரும் அறிந்ததே.முதற் சந்திப்பிற்கு பல விதத்திலும் உதவிகள் புரிந்த அகஸ்தியா மூர்த்தி மற்றும் மூ.வேலன் ஆகியோர் இச்சந்திப்பில் கலந்துக் கொள்ளவில்லை. இருவரும் தற்சமயம் தமிழகத்தில் இருப்பதாக அறிகிறேன்.

முதற்சந்திப்பில் கலந்துக் கொண்டவர்களில் 4 பேர் இச்சந்திப்பில் கலந்துக் கொண்டார்கள். நான் உட்பட. பேரா மாநிலத்தின் பாரிட் புந்தார் தமிழியல் நடுவத்தில் இச்சந்திப்பு ஏற்பாடாகி இருந்தது. நடுவ மண்டபத்தின் அருகே ஏ.ஆர்.ரகுமான் உணவகம் அமைந்துள்ளது.

தலைநகரில் இருந்து சந்திப்பிற்கு வந்திருந்த திரு.குமரன் அவர்கள் என்னை ஈப்போவில் அழைத்துக் கொண்டார். பழைய சாலை வழியாக சுங்கை சிப்பூட்டிற்குச் சென்றோம். சுங்கை சீப்பூட்டில் அவரைச் சந்திக்கச் சென்றோம் என நீங்கள் நினைத்தால் அதற்கு நான் பொறுப்பல்ல. குமரன் அவர்களின் நண்பர் திரு.கிருஷ்ணமூர்த்தியை சுங்கை சிப்பூட்டில் அழைத்துக் கொண்டோம். அங்குள்ள ஒரு சீனர் உணவகத்தில் காலைச் சிற்றுண்டியை இனிதே முடித்துக் கொண்டு கிளம்பினோம்.

சுங்கை சிப்பூட்டில் குமரன் அவரது உறவினர் வீட்டிற்குச் சென்றார். குளித்து கம கமவென (துணைக்கால் போட்டு படிச்சிடாதிங்க) புது மாப்பிள்ளை போல் கிளம்பினார். எங்கள் அடுத்த இலக்கு தைப்பிங் 'கொய்தியாவ் கோரேங்'. கொய்தியாவ் கோரேங் தைப்பிங்கில் பேர் போன உணவாகும். மதியத்திற்கு சாப்பிட்டுவிட்டு போகலாம் என குமரன் கூறினார். அதே வேளையில் பவனேஸ்வரியும் தற்சமயம் தைப்பிங்கில் இருப்பதாகவும் சந்திப்பிற்கு வருவதாகவும் கூறினார். சாப்பிட்டுவிட்டு அவரையும் அழைத்துச் செல்ல நினைத்தோம்.

தைப்பிங்கை நெருங்கிய போது சாப்பிட போகலாமா வேண்டாமா என யோசனையில் இறங்கினோம். காலைச் சிற்றுண்டியை தாமதமாக தான் சாப்பிட்டோம். சரி இரவு கிளம்பும் போது பார்த்துக் கொள்ளலாம் என முடிவானது. பவனேஸ்வரி வந்ததும் அவரை அழைத்துக் கொண்டு நேராக பாரிட் புந்தார் சென்றோம். சந்திப்பு இடத்தை அடைவதற்குள் சுமார் நான்கைந்து முறை சுப.நற்குணன் ஐயா அழைத்துவிட்டார்.

பாரிர் புந்தாரை அடைந்தவுடன் சிறு தடுமாற்றம் ஏற்பட்டது. குமரன் வண்டியை நேராக சீக்கியர் கோவிலுக்கு விட்டுவிட்டார். நற்குணன் ஐயாவின் வழிகாட்டுதலுடன் சரியான இடத்தை அடைந்தோம். நாங்கள் சென்றடைந்த சமயம் ஒவ்வொருவராக வருகை புரிய ஆரம்பித்திருந்தார்கள். மதியை உணவை ஏ.ஆர்.ரகுமான் உணவகத்தில் எடுத்துக் கொண்டோம். ஈ தொல்லை சற்று அதிகமாகவே இருந்தது. அடுத்த முறை 'செல்டாக்ஸ்' மருந்துடன் செல்வதெனும் தீர்மானத்துடன் இருக்கிறேன். :P

பதிவர்கள் அனைவரும் வந்தவுடன் நிகழ்ச்சி ஆரம்பமானது. இம்முறை தைப்பிங், லூனாஸ், பிறை, பினாங்கு, பாகான் செராய், தலைநகர், கிள்ளான், யு.எஸ்.ஜே, ஈப்போ, செலாமா மற்றும் பாரிட் புந்தார் போன்ற இடங்களில் உள்ள தமிழன்பர்கள் கலந்து சிறப்பித்தனர்.

திரு சுப.நற்குணன் 2005-ஆம் ஆண்டு முதல் தமிழ் வலைப்பதிவுலகில் இருந்து வருகிறார். ஆரம்ப காலம் முதல் 2009 ஆரம்பம் வரை மலேசிய தமிழ் வலைப்பதிவுலகில் கண்டிருக்கும் மாற்றங்களை பகிர்ந்துக் கொண்டார். ஆரம்ப காலத்தில் 5/6 எனும் எண்ணிக்கையில் இருந்த பதிவுகள் இவ்வாண்டு தொடக்கத்தில் ஏறக் குறைய 40 எண்ணிக்கையை தொட்டிருக்கிறது. இது மேலும் அதிகரிக்க வேண்டும் என கூறினார்.

மலேசிய அரசியல் மற்றும் சமூக செய்திகளை வெளிப்படையாக எடுத்துரைப்பதில் முதன்மையாக விளங்கி வருவது மலேசியா இன்று தளமாகும் என்றால் மிகையில்லை. மலேசிய இன்றிலிருந்து திரு.இளந்தமிழ் வருகை தந்திருந்தார். தமிழ் எழுத்துரு பிரச்சனைகள், ஆரம்ப காலம் முதல் இணைய தமிழின் வளர்ச்சி, இணைய தமிழ் மாநாடு சம்பந்தப்பட்ட விடயங்களை மிக சுவாரசியமாக பகிர்ந்துக் கொண்டார். இலவச தமிழ் மென் பொருள்கள் இருப்பினும், சில நூறு ரிங்கிட் செலுத்தி தமிழ் மொன்பொருள்களை வாங்கி உபயோகிக்கும் தமிழர்களின் மனப்பான்மையை சொல்லி வருத்தம் கொண்டார்.

கெடா மாநிலம், லூனாஸ் பகுதியில் இருந்து ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி விரிவுரையாளர் திரு. தமிழ்மாறன் ஐயா வருகை தந்திருந்தார். அவருடைய எழுத்துகள் பலவும் எழுதியபடி பரன்மேல் கிடந்ததாக கூறினார். வலைப்பதிவின் பயன்பாட்டினால் அவற்றை நன்முறையில் பதிவு செய்து வைக்க வசதிபடுவதாகக் கூறினார். தமிழ்த் துறையைச் சார்ந்திருக்கும் ஆசிரியர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் பலர் இன்னமும் இணைய தமிழ் ஊடகத்தின் பயன்பாட்டை அறிந்திராமல் இருப்பது வருந்ததக்க விடயம் என்பதனை மேலும் கூறினார்.

வலைப்பதிவு தொடங்குவது அறியாமல் இருக்கும் பதிவு வாசகர்களுக்கு பட்டறை நடத்தப்பட்டது.

கலந்துரையாடலில் மேலும் பல விடயங்கள் பேசப்பட்டது. பதிவர் புத்தகம் பற்றிய வினா எழுந்த போது பலரும் பல விதமான கருத்துகளை எடுத்துரைத்தார்கள். அதைப் பற்றிய மேலான விளக்கத்தை மற்ற பதிவர்கள் குறிப்பிடுவார்கள் என நம்புகிறேன்.

திரு.கிருஷ்ணமூர்த்தி மலேசிய வானொலி தொலைக்காட்சியின் (ஆர்.டி.எம்) விளம்பர பிரிவில் பணியாற்றுகிறார். பல பதிவர்கள் ஒருங்கிணைத்து நன்முறையில் ஒரு கூட்டுப் பதிவை இயக்குவது நலம் என்றார் அவர். மேலும் கூறுகையில் அப்படி ஆரம்பிக்கப்படும் கூட்டுப் பதிவில் சிறப்பான செய்திகளை பதிவிட்டு வந்தால் தினமும் தமிழ் வானொலியில் அதனை பற்றிய செய்தியை ஒலிபரப்ப ஏற்பாடு செய்து கொடுப்பதாகக் கூறினார்.

அடுத்த பதிவர் சந்திப்பு மலேசியா இன்று ஏற்பாட்டில் தலைநகரில் நடைபெற இருக்கிறது. மார்ச் மாத இறுதியில் அல்லது ஏப்ரல் மாத துவகத்தில் ஓர் ஓய்வு நாளில் ஏற்பாடாக திட்டமிடபட்டுள்ளது. மூன்றாவது சந்திப்பில் மீண்டும் வலைப்பதி பட்டறைகள் மேற்கொள்ள முடிவெடுக்கப்பட்டுள்ளது.

சந்திப்பில் கலந்துக் கொண்டவர்களுக்கு தமிழ் நாள்காட்டி மற்றும் வள்ளலார் வழிபாட்டுக் குறிப்பு புத்தகமும் நினைவு பரிசாக வழங்கப்பட்டது.சுமார் 7 மணியளவில் தேநீர் விருந்துபசரிப்புடன் சந்திப்பு இனிதே நிறைவடைந்தது. இந்நிகழ்விற்காக பெரிதும் பங்காற்றிய திரு.சுப.நற்குணன், திரு,கோவி.மதிவாரன் மற்றும் திரு.விக்கினேசு கிருஷ்ணன் ஆகியோருக்கும் சந்திப்பில் கலந்து சிறப்பித்த அனைவருக்கும் நன்றி. அடுத்தடுத்த சந்திப்புகளில் கலந்துக் கொண்டு மேலும் சிறப்பிக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

சந்திப்பில் கலந்துக் கொண்டவர்கள்:
இல.கார்த்திகேசு
செ.முத்தரசன்
மு.நாகராசன்
ப.தமிழ்மாறன்
சு.முனியாண்டி
தா.மா.ஞானசேகரன்
க.இராசகுமாரன்
சூ.கெல்வின்
ம.ஜீவன்
ம.தமிழ்ச்செல்வன்
இரா.பாலமுரளி
மு.மதிவாணன்
சுப.சந்துரு
சி.ம.இளந்தமிழ்
குமரன் மாரிமுத்து
கு.கிருஷ்ணமூர்த்தி
து.பவனேஸ்வரி
விக்னேஷ்வரன் அடைக்கலம்
அனந்தன்
மு.கோகுலன்
கோவி.மதிவரன்
சுப.நற்குணன்
க.முருகையன்

(பி.கு: சந்திப்பில் பெரிதும் எதிர்ப்பார்க்கப் பட்டவர்கள் சதிசு குமார் மற்றும் ஆய்தன். இவர்கள் அடுத்த முறை கண்டிப்பாக கலந்துக் கொள்வார்கள் என நம்புகிறேன்.)

(பி.பி.கு: பின்னுக்கு பின் குறிப்பு போட்டால் மக்கள் அதை காமிடியாக்கிவிடுகிறார்கள். அதனால் எஸ் ஆகிக்கொள்கிறேன்)

(பி.பி.பி.கு: ஓன் நிமிட் பிலிஸ், இதையும் படிச்சிடுங்க: அனந்தன், மலேசியா இன்று)