
எச்சமாய் இருக்கும்
வாழ்க்கையின்
மிச்சத்தை
தள்ளாடித் தீர்க்கிறான்
தடி ஊன்றும் கிழவன்!
உடல் தேய
உழைத்தவனின்
உள்ளங்கை ரேகைகள்
ஊமையாகிவிட்டன!
இந்த முதுமை
சோகங்கள்
அழியா கரையாய்
நெஞ்சுக் கூட்டில்
நெளிந்துக் கிடக்கிறது!
வேட்டி முடிய
கனக்கும் கைகள்!
அடுத்த அடிக்கு
முகம் சுழிக்கும் கால்கள்!
“டேய் கிழவா”
கேட்டு மந்தமான செவிகள்.
பகல் கூட இருட்ட
தொடங்கிவிட்டது கண்களுக்கு!
உறவுகள் சாதகமில்லை
உணர்வுகள் புரியவில்லை!
உணவு இறங்கவில்லை
உறங்கவும் முடியவில்லை!
மரியாதையை எதிர்பார்த்து
மானமும் போய்விட்டது!
வினாடிகளை எண்ணிக்
காலத்தைக் கரைக்கிறான்!
மரணம் இவனுக்கு
மட்டும் முரண்டு பிடிக்கிறது!
