Monday, February 24, 2014
2013-ல் படித்ததில் பிடித்த 10 நூல்கள்
Sunday, January 10, 2010
எப்போதும் பெண் (நாவல்) - சுஜாதா

ஆசிரியர்: சுஜாதா
பதிப்பகம்: உயிர்மை
தாய், சகோதரிகள், தோழிகள், பின்நாட்களில் மனைவி என ஆணின் வாழ்க்கை முறை அமைகிறது. இதில் பொரும்பாலான இடங்களில் பெண் என்பவளுடனான தொடர்பு நிலை தொடர்ந்து நிலைக்காமலும், பாதியாகவும் முடிவடைந்து விடுகிறது. பெண்ணின் சுதந்திரம் ஒரு வரையரைக்குட்பட்டு இருப்பதனால் இந்நிலை எற்படும் சாத்தியங்கள் அதிகம் இருக்க முடியுமென நாம் சொல்லலாம்.
பெண் பாலியல் வன்முறைகளுக்கு எதிரானா சட்ட திட்டங்கள் தேவையற்று போய்விடும் நிலை மனித நாகரீகத்தின் அதீத வளர்ச்சியின் பின்னும் தீர்ந்தபாடில்லை. அது இன்னமும் மெருகூட்டப்பட்டு, சீர்திருத்தப்பட்டு நீதி எனும் பெயரில் உபயோகிக்கப்படுகிறது. பெண்ணை போகப் பொருளாக பார்க்கவும் உபயோகிக்கவும் ஆண்களுக்கான கட்டளைகள் அவனது மரபணுவின் வழியாக செலுத்தப்பட்டுவிடுகிறது. பெண்களிடம் தோன்றும் காமத் தேடல்களை அவன் விரும்பச் செய்கிறான். ஆண் என்பவனுக்கு ஏன் அப்படி தோன்ற வேண்டும்? அவனுள் ஏற்படும் பௌதிக மாற்றமும், பெண்ணின் பருவ வளர்சிகளும் அவனை இத்தூண்டுதலுக்கு ஆளாக்கக் கூடியதாக இருக்க வேண்டும்.
சுஜாதாவின் எப்போதும் பெண் எனும் நாவல் பெண்னை பற்றிய அடிப்படை புரிதலை நமக்கு நயமாக விவரித்துள்ளது என்பது மிகையற்றது. பெண்ணின் வளர்ச்சிக்கும் மாறுதல்களுக்கும் காரணங்கள் யாவை என்பதினை எளிய நடையில் எடுத்துரைத்துள்ளார். வளர்ச்சி அல்லது மாறுதல்கள் என்பன பெண்ணின் உடல், உள்ளம் மற்றும் செயல்பாடுகள் யாவற்றிலும் அடங்கியுள்ளது. அவளின் ஒவ்வொரு செயல்பாடுகளிலும் சில கட்டமைப்புகள் சூழ்ந்துக் கொள்கின்றன. ஒரு வரையரைக்குட்பட்ட தீர்மானங்களையோ செயல்பாடுகளை மட்டுமே அவளால் செய்ய முடிகிறது.
இங்கு முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய விடயம், ஓரிரு வயது வித்தியாசங்களுடன் ஒரு தாய்க்கு பிறக்கும் ஆண் மற்றும் பெண் குழந்தைகள் வளர்கப்படும் விதம் ஒரே விதமான சூழ்நிலையைக் கொண்டது. இருப்பினும் இருவரின் வளர்ச்சியிலும், சிந்தனையிலும் அது வேறுபாட்டை கொடுக்கிறது. இந்நிலைக்கான சாத்தியங்கள் நமக்கு குழப்பத்தை கொடுக்கின்றன. பிறப்பின் நியதி என இதை நாம் பொதுப்படையாக சொல்லிவிடுகிறோம்.
மூன்று ஆண் குழந்தைகளை பெற்று இல்வாழ்க்கையில் சலித்துப் போன ஒரு ஆண் தூக்கம் வராமல் போரடித்துப் போன இரவொன்றில் தன் மனைவியை சுகிக்க, விந்து அவளின் கரு முட்டையை தேடி ஓடுகிறது. நாவலின் முதல் பக்கத்தில் இதை படித்தவுடன் முடிவு வரை எப்படி கொண்டுச் செல்வார் எனும் தீர்மானத்தை ஓரளவேனும் யூகிக்க முடிந்தது. இக்கதையின் முடிவு எனக்கு அளப்பறிய பாதிப்பை கொடுக்கவில்லை என்பதே உண்மை. இருப்பினும் இதன் வாசிப்பு புதிய அனுபவமாகவும், சுவாரசியமாகவும் இருக்கவேச் செய்தது.
Thursday, January 22, 2009
எஸ்.பாலபாரதியின் அவன்-அது=அவள்
தாய்லாந்தில் நடந்த ஒரு சம்பவம். ஒரு ஆண் பாலியல் மாற்றம் செய்துக்கொண்டான். காலம் கடந்தது. பெண்ணாக வாழ்ந்தது வெறுத்துப் போனது அவளுக்கு. 20 வருடம் கழித்து மருத்துவரை அணுகி கேட்டாளா(?!)ம். மீண்டும் தனக்கு ஆண் குறி வேண்டும் என்று.
பால் மாற்றம் தற்காலத்தில் நாம் அதிகம் கேள்விப்படும் விடயமாக இருக்கிறது. பிறப்பில் ஆணாக இருக்கும் ஒருவர் தன்னைப் பெண்ணாக மாற்றிக்கொள்ள விருப்பம் கொள்கிறார். இயற்கையாகவே பெண்மையின் குணங்கள் அவரிடம் இருக்கிறது. உள்ளத்தால் பெண்ணான அவர் உடலால் பெண்ணாக மாற்றம் கொள்ள விரும்புகிறார். இவர்களை திருநங்கையர்கள் என நாம் குறிப்பிடுகிறோம்.
உண்மையில் சுதந்திரம் என்பது யாது? குறிப்பிட்ட கட்டுப்பாட்டுக்குள் வாழ்வதா? இல்லை நமது சிந்தனைக்கு மதிப்பளித்து நமது விருப்பப்படி வாழ்வதா. நமது வாழ்க்கை நமது விருப்பப்படி இருக்க வேண்டும் என்பதே நமது எண்ணம். அதே வேளையில் இச்சமூக விதிகளை மதித்து நாம் வாழ வேண்டியது அவசியமாகிறது.
ஒரு ஆண் பருவம் எய்துகிறான். தனக்குள் ஊற்றெடுக்கும் உணர்வுகளை அறிகிறான். தன்னை ஒரு ஆணாக கருத மறுக்கிறான். இந்நாவலின் நாயகி கோமதி. கோமதியின் ஆரம்பக் கால வாழ்க்கை மாறுபட்டது.
கோபி பிறப்பால் ஒரு ஆண். ஆணாக வளர்க்கப்படுகிறான். அவனுக்குள் உண்டாகும் உணர்வு மாற்றங்களால் தன்னைப் பெண்காக கருதுகிறான். கோபியின் உணர்வு சித்தரிப்புகளை சிறப்பாக கொடுத்திருக்கிறார் ஆசிரியர் என்றேக் கூற வேண்டும்.
குடும்பத்தினர் வீட்டில் இல்லாத சமயம். தமது தமக்கையின் உடைகளை அணிந்து கொண்டு 'பூ பூக்கும் ஓசை' பாடலுக்கு ஆடும் போதும், அண்ணனிடம் அடி வாங்கும் போதும், பிள்ளைக்கு பேய் பிடித்ததாய் தாய் கருதி பூசாரியை அழைத்து பேய் ஓட்டும் போதும் கதை விவரிப்புகள் இலகுவாக மனதில் பதிகிறது.
பார்த்திங்களா என்கிட்டயே மல்லுக்கு நிக்குது இது கொஞ்சம் திமிர் பிடித்த பேய் தான். இதன் போக்கில போய் சமாளிக்க வேண்டும் எனச் சொல்லும் போலி பூசாரியின் காட்சி விவரிப்புகள் நகைச்சுவையாகவே இருக்கிறது.
தான் விருப்பும் வாழ்க்கையை வாழ நினைக்கிறான் கோபி. எதிர்பாரா விதமாக அதற்கான சந்தர்ப்பம் அமைகிறது. குடும்பம், சுற்றம் என அனைத்தையும் தூக்கியெறிகிறான். தனது புதிய வாழ்க்கையில் அடியெடுத்து வைக்கிறான். அவன் கோமதி எனும் பெயரில் மாற்றம் காண்கிறாள்.
திருநங்கைகளின் வாழ்வு முறை. அவர்கள் பேச்சு வழக்கு. அவர்களுக்குள்ளான பிரச்சனைகள் போன்ற விவரிப்புகள் கதைக்கு வலு சேர்க்கின்றது.
திருநங்கைகளின் வாழ்க்கையில் முக்கிய அங்கமாக கருதப்படுவது தாயம்மா எனும் குறி அகற்றும் சடங்கு. சில இடங்களின் அறுவடை சடங்கு என இதை நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆசிரியர் இதை சொல்லும் விதம் மெய்கூசச் செய்கிறது என்றே சொல்ல வேண்டும்.
பொதுவாகவே நமது சமூகத்தில் ஆண் பெண் என இருபாலரும் ஏற்றுக் கொள்ளாத அல்லது வெறுக்கும் சமூகமாகவே திருநங்கைகள் இருக்கிறார்கள். அப்படியாக திசையற்று தன் வாழ்வை தேடும் திருநங்கைகளுக்கு இன்னொரு திருநங்கையே துணை என்பதை இக்கதையில் காண்கிறோம்.
இக்கதையில் வரும் அன்பு எனும் கதாபாத்திரம் நாயகனா அல்லது வில்லனா என்பது சற்று சிந்திக்க வேண்டிய விடயம். சமுதாய சூழலல அறிந்து வாழும் கதாபாத்திரமாக சித்தரிக்கப்படும் இவர் பிற்பகுதியில் ஒரு கொடுமைக்காரனாக சொல்லப்படும் விதம் நெருடுகிறது.
ஆண் சமூகத்தை அவமானப்படுத்துபவர்கள் திருநங்கையர் எனும் எண்ணம் பொரும்பாலான ஆண்களுக்கு உண்டு. அதே போல் தம்மை கேவலப்படுத்தும் ஆண் வர்க்கத்தை வெறுக்கும் திருநங்கையரும் உண்டு. இதற்கு அப்பாற்பட்டு அவர்களை மனமுவந்து ஏற்று வாழ்க்கை நடத்துபவர்களும் உண்டு.
இக்கதையில் போலிஸ், ரவுடிகள், திருநங்கையரை ஏமாற்றி திருமணம் செய்யும் ஆண்கள் என பல வகையில் ஆண்களே திருநங்கையருக்கு கொடுமைகள் நிகழ்த்துபவர்களாக சொல்லி இருப்பது திருநங்கையர்களுக்கு ஆண்கள் மட்டுமே எதிரிகள் என்பது போல் உள்ளது.
நன்கு படித்த திருநங்கைகள் தங்களுக்கு ஏற்ற வேலைகளில் இருப்பதை நாம் அறிந்திருக்கிறோம். அது இந்திய நாட்டுச் சூழலில் மாறுபடுகிறதா என்பது தெரியவில்லை. படிப்பறிவுள்ள கோமதியும் கடை(பிச்சை) கேட்டு பிழைக்கும் சித்தரிப்புகள் எதிர்ப்பார்க்காத ஒன்று. திருநங்கைகள் வாழ்க்கையில் தங்களை எப்படி உயர்த்திக் கொள்ள முடியும். தம் பிள்ளைகள் திருநங்கையராக மாறுவார்களாயின் அதை எப்படி குடும்பத்தார் ஏற்றுக் கொள்ள முடியும் போன்ற முக்கிய கூறுகளை கொஞ்சம் விளங்கக் கூறியிருந்தால் மேலும் நன்மையாய் அமைந்திருக்கும்.
நாம் விரும்பும் வாழ்க்கையை அமைத்துக் கொள்வது அவரவர் சுதந்திரத்துக்குற்பட்டது. சமூக அமைப்பில் திருநங்கையர்களும் கவனிக்கப்பட வேண்டியவர்களே. கீழான பார்வைக்கும் செயல்களுக்கும் அவர்களை முற்படுத்துவதில் நமது சமூகமும் காரணமாகிறது என்பது தான் உண்மை.
இன்றைய சமூக அமைப்பில் நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒரு முக்கிய அம்சத்தை மக்களுக்கு தெரிவிப்பதில் முனைப்பு காட்டி இருக்கும் ஆசிரியர் பாலபாரதியின் முயற்சி பாராட்டத்தக்கது. கதை வழி திருநங்கையர் உலகிற்கு நம்மை அழைத்துச் சென்று நாம் அறிய வேண்டிய தகவலை இலகுவாக சொல்லி இருப்பது மிக அருமை.
(பி.கு: இப்புத்தகத்தை எமக்கு பரிசளித்த எழுத்தாளர் பரிசல்காரன் அவர்கட்கு நன்றி.)
Friday, August 29, 2008
புதைந்த நினைவுகள் (2)
பல்கலைக்கழகப் படிப்பை முடிக்கும் வரை இடைப்பட்ட காலத்தில் அதிகமாகத் தமிழ் வாசிக்கும் வாய்ப்புக் கிடைக்கவில்லை. கல்வி முறையின் மாற்றம் எனச் சொல்வதை விட நான் தான் படிப்பதற்கான சந்தர்ப்பத்தை உருவாக்கிக் கொள்ளவில்லையென சொன்னால் மிகவும் தகும். ஆரம்பப் பாடசாலையில் படிக்கும் சமயம் என் சனி ஞாயிறுகளை அதிகமாக வாசிப்பிற்கே செலவழிப்பேன். அப்படி படித்த புத்தகங்களில் பல என்னுள் இன்னமும் நீங்காமல் இருக்கின்றன. ஆனால் இப்போது அப்புத்தகங்கள் கிடைக்குமா என்பது சந்தேகமே. விசாரித்துப் பார்த்ததில் பலருக்கும் அப்புத்தகங்களை பற்றிய தகவல்கள் தெரியாமலே இருக்கிறது.
கண்ணீர் சொல்லும் கதை
இவற்றை தவிர்த்து மஞ்சள் வீடு, ஏணிப் படிகள் என இன்னும் பல பல புத்தகங்கள் இருக்கின்றன. அவற்றையும் பட்டியலிட இப்பதிவு போதாது. இங்கு சொல்லி இருப்பவை நான் மிக இரசித்தவை. இப்புத்தகங்கள் கிடைத்தால் மிகவும் மகிழ்ச்சியடைவேன். கிடைக்குமா என்பது கேள்விக் குறியாகவே இருக்கிறது.
Wednesday, July 30, 2008
கன்னித் தமிழின் கண்ணீர்- பா.விஜய்
அணைத்தும் தமிழ்ச் சமூகத்தைப் பற்றிய சீர்திருத்த கவிதைகளாக இருக்கும். சில இடங்களில் தமிழக அரசியலையும் குறிப்பிட்டு எழுதி இருக்கிறார். இந்நூலில் எனக்கு பிடித்த ஒரு கவிதையினை இங்குச் சமர்ப்பிக்கிறேன்.
இந்த சமூகம் இருக்கிறதே
சமூகம்
இது
கரும்புக்குக் காத்திருந்தவனுக்கு
சக்கை தரும் சமூகம்
அவன் வீட்டு
அடுப்புக்கு நெருப்பு வைப்பதாய்
இறுதியில்
அவனுக்கே நெருப்பு வைக்கும்
இது
தமிழுக்கு மட்டுமென்ன
தங்க மகுடமா சூட்டும்?
கடையேழு வள்ளல் மட்டும்
கவனிக்காது இருந்திருந்தால்
நமது கவிராஜர்கள்
இலக்கியம் பேசியதாலேயே
இளைத்துப் போய் இருப்பார்கள்.
இவர்கள்
தினசரி இங்கே
திருவோடுகள் ஏந்தினால் தான்
மாதம் ஒருமுறை
கஜானா
கண் திறக்கும்
இப்போதோ
நமது தமிழ் மயில்
உள்ள போகன்கள் எல்லாம்
உலோபிகளாகிவிட்ட காரணத்தால்
விரைவிலேயே
விறைத்துப் போகவிருக்கிறார்கள்.
தமிழிலுள்ள எழுத்தையெல்லாம்
தங்கத்தில் பொறித்தல் வேண்டுமாம்
கேட்டுப் பாருங்கள்
அவன் தங்கத்தை
எழுத்து வடிவத்தில்
பார்த்தவனாக இருப்பான்.
சமுத்திரமாய் இருந்த
சங்கத்தமிழ் முதல்
இப்போதைய
இலக்கியம் வரைக்கும்
இடுப்பில் ஈரத்துணியோடு
இருந்த்வர்கள் எத்தனைப் பேர்?
ஒவ்வொரு கவிஞனின்
இரும்புப் பெட்டியிலும்
இருப்பதெல்லாம் என்ன?
கறையான்களிடம் காப்பாற்றப்பட்ட
ஒரு சில
ஓலைச்சுவடிகளைத் தவிர!
தமிழ்
தனக்கும் சேர்க்கவில்லை
தன்னை அண்டியவனை
சேர்க்கவும் விடவில்லை.
தமிழனின் கண்களில்
விழுந்த தூசை
துடைப்பதற்கு வந்தவன் கையில்
ஆயுதம்
நமக்கோ கைகளில்லை.
அதனால் தான்
சரித்திரம் என்கிற நதி
ஒரு கரையில் சோலையிலும்
ஒரு கரையில் பாலையிலும்
ஓடிக் கொண்டிருக்கிறது.
நமது அறிஞர்களோ
நல்லதொரு சமுத்திரத்தில்
அலைகளைப் பிடிக்க
வலைகளை வீசுகிறார்கள்.
தமிழுக்காக வாழ்ந்து
தமிழுக்காக இறந்தவன் ஒருவன்
இப்படி எழுதினான்.
தமிழில்
எவ்வளவுக்கு எவ்வளவு
இளமை இருக்கிறதோ
அவ்வளவுக்கு அவ்வளவு
வறுமையும் இருக்கிறது.
ஒன்று மட்டும் உறுதி
தமிழைக் காப்பாற்றுங்கள் என
தானாக சென்று எவனையும்
அழைக்கவும் முடியாது.
அப்படிக் காப்பாற்ற வந்தவன்
பிழைக்கவும் முடியாது.
காரணம் தமிழில்
கல்வெட்டுகள் இருக்கிறதே தவிர
பொன்வெட்டுகள் இல்லை.
தமிழ்ச்சாதி
சிந்தை பொங்கி
சித்ததானம் செய்யலாம்.
ஆயின்
அதற்கு இன்னமும்
ரத்ததானம் செய்தல்
அவசியமாக இருக்கிறது.
போகிற போக்கைப் பார்த்தால்
தமிழ்க் கருவூலமே என்று
வருத்தம் உண்டாகிறது.
தோனியைப் போலல்லாமல்
ஆணியடித்ததைப் போல்
அமர்ந்தே கிடந்தாலும்
அரசாங்க உத்தியோகம் தேவலை.
ஆம்
மாதம் ஒருமாரியாவது
அரசாங்க மேகம்
அபிஷேகம் செய்கிறது.
நமது தமிழ்
தானும் சேர்க்கவில்லை
தன்னை அண்டியவனை
சேர்க்கவும் விடவில்லை.
Wednesday, July 16, 2008
தமிழுக்கு நிறம் உண்டு

ஒன்று:
முத்துக்கள் பிறக்கும்
இடம் பத்து…
சங்கில் ஜனிக்கும்
சிற்பியில் இருக்கும்
தாமரையில் உயிர்க்கும்
வாழையில் கிடைக்கும்
மூங்கிலில் முளைக்கும்
தந்தத்தில் வெடிக்கும்
நாகத்தில் தெரிக்கும்
“என்னது?”
“உழைப்பவன் நெற்றி”
சொல்லுங்கள் அறிஞரே!
மூடநம்பிக்கை
எவை எவை?
விதவை எதிர்வந்தால் பாவம்
மொட்டையடித்தால் முக்தி
உள்ளங்கை அரித்தால் வருவாய்
காலையில் காணும் கனவு பலிக்கும்
“என்னது”.
“மந்திரியிடம் மனு”
இருட்டில் செய்யத்தகாதவை
எவை எவை
நகம் களைதலாகாது
பேன் பார்த்தலாகாது
அழுக்குத்துணியை
வெளுக்கப் போடலாகாது
உப்போ மோரோ
இரவல் தரலாகாது
பல் துலக்கலாகாது
கடன் கொடுக்கலாகாது
“என்னது?”
“தொலைக்காட்சி ஆகாது”
பார்க்க முடியாதவை எவை?
இறவாத உடல்
ஆகாயம் இல்லாத ஊர்
நீர் கலவாத மோர்’
திரையரங்கில் தேசிய கீதம்
பிழைக்கத் தெரிந்த கவிஞன்
கைதொடாத காதலன்
வாழைமரத்தில் ஊஞ்சல்
உலோபியின் புன்னகை
“என்னது”
“ஜனநாயகத்தின் சத்தியம்”
Sunday, July 13, 2008
நூல் வெளியீடு: கிள்ளான் & ஈப்போ

Tuesday, July 08, 2008
மலேசிய இந்தியர்களின் இக்கட்டான நிலை

Thursday, June 26, 2008
பின்னூட்டமே பதிவாக (உடையார்)
வணக்கம்
பொன்னியின் செல்வன் ஒரு கற்பனைப் புதினம். ஆழ்வார்க்கடியான், நந்தினி, சேந்தன் அமுதன் போன்றவை கற்பனைப் பாத்திரங்கள். இதில் சேந்தன் அமுதன் அரியணை ஏறும்வரையிலான சம்பவங்கள் மட்டுமே கூறப்பட்டுள்ளன, சில பல கற்பனைச் சம்வங்களோடு. இவ்வாறு கூறுவதால் கல்கியைக் குறைத்து மதிப்பிடுகிறேன் என்று தவறாக எண்ணிவிட வேண்டாம். எள்முனையளவும் எனக்கு அத்தகைய நோக்கம் கிடையாது.
உடையார், ராஜராஜ சோழனின் வாழ்வை வேறு தளத்தில் அலசுகிறது. ராஜராஜரின் வாழ்வில் நிகழ்ந்த முக்கியமான சம்பவங்களான தேவார மீட்பு, பெரிய கோயிலைக் கட்டுவித்தல், அதிமுக்கியமாக அவருடைய அந்திமக் காலம் ஆகியவை பொன்னியின் செல்வனில் கூறப்படவில்லை. அந்தக் குறையை உடையார் போக்குகிறது. மேலும் ராஜராஜர் நிகழ்த்திய முக்கியமான யுத்தங்களைப் பற்றியும், அவருடைய காலத்தில் இருந்த சமூகத்தின் அமைப்பையும் பற்றி உடையார் அலசுகிறது. பொன்னியின் செல்வன் நூல் ராஜராஜரை ஒரு காதல் இளைஞனாக (சாக்லேட் பாய்), பிள்ளைக் குறும்புகள் மாறாத ஒரு இளைஞனாக மட்டுமே காட்டுகிறது. முதிர்ந்த அறிவுடன் ஒரு மகத்தான தியாகத்தைச் செய்யும் மகோன்னதத்துடன் அந்த பாத்திரம் முடிவுக்கு வந்துவிடுகிறது.
மேலும் பொன்னியின் செல்வன் புதினத்தின் நாயகன் வல்லவரையர் வந்தியத்தேவர். ஆனால் உடையார் முழுக்க முழுக்க ராஜராஜரை மட்டுமே கதை நாயகராகக் கொண்டது.
உடையாரில் அவருடைய காதல் வாழ்வு மட்டுமல்லாது அவருடைய மணவாழ்வும் விவரிக்கப்பட்டுள்ளது. அவருடைய முதிர் பருவத்தில் பஞ்சவன் மாதேவிக்கும் அவருக்கும் இடையே நிலவிய அனுக்கமான காதல் வாழ்வு பொன்னியின் செல்வனில் விவரிக்கப்பட்ட அருண்மொழிக்கும் வானதிக்கும் இடையிலான காதல் வாழ்வைப் போன்றே சுவைபடக் கூறப் பட்டுள்ளது. தமிழகத்தில் நிகழ்த்த இயலாத மகோன்னதங்களை நிகழ்த்திக் காட்டிய ராஜராஜரின் வாழ்வை கல்வெட்டு மற்றும் தாமிரப் பட்டய ஆதாரங்களைக் கொண்டு எழுதப்பட்ட ஒரு வரலாற்றுக் காவியம் உடையார்.
ராஜராஜரைத் தவிரவும், பெரிய கோயில் என்ற கலை அதிசயத்தின் கட்டுமானக் காலத்தில் அதற்கு உறுதுணையாக இருந்த பலருடைய வாழ்வையும் விவரிக்கிற நூலாகவும் உடையார் விளங்குகிறது.
இப்போது தயாரிப்பில் இருக்கும் உளியின் ஓசை என்ற திரைப்படம் கூட பெரிய கோயிலின் கட்டுமாத்தில் பங்கெடுத்துக் கொண்ட ஒரு சிற்பின் வாழ்க்கைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டவையே.
பொன்னியின் செல்வனில் சற்றேறக் குறைய என்பத்திமூண்றாண்டுகள் வாழ்ந்த ராஜராஜரின் வாழ்வில் முதல் முப்பது ஆண்டுகள் கூட விவரிக்கப் படவில்லை என்பது எனக்குள் ஒரு குறையாகவே இருந்து வருகிறது. உடையார் அந்தக் குறையை நிவர்த்திக்கிறது.
பொன்னியின் செல்வனைப் போலவே உடையாரும் வாசிப்பிற்குகந்த ஒரு நல்ல நூல் என்பதே இதன் வாயிலாக நான் கூற விழைவது.
நன்றி.
Monday, June 23, 2008
இன்னமும் படிக்காத புத்தகங்கள் (உடையார்)
முன்பு இந்நாவலை படித்துக் கொண்டிருந்த சமயம், இதை முடித்து விட்டு பாலகுமாரனின் ‘உடையார்’ நாவலை படியுங்கள் என சீ.வீ.ஆர் அண்ணாச்சி சிபாரிசு செய்தார். பொன்னியின் செல்வனின் தொடர்ச்சி தான் உடையார் என்று கூறினார். முன்பு இதைக் கூறும் போது அவர் அமேரிக்காவில் இருந்தார். தற்சமயம் இந்தியா திரும்பியதில் இருந்து அவரை ஜி-டாக்கில் பார்ப்பது அரிதாகிவிட்டது.
இந்நாவலைப் படிப்பதற்கு முன்பாகவே பல விடயங்களை தெரிந்து கொண்டாகிவிட்டது. பொன்னியின் செல்வனைப் போல் இதில் சுவாரசியம் குறைவு எனவும் கூறக் கேள்விப்பட்டேன். இரு ஆசிரியர்களும் அவர்கள் பாணியில், அவர்களுக்கே உரிய நடையில் எழுதி இருப்பார்கள். கல்கியின் எழுத்து நடையை ஏற்றுக் கொண்ட நான் பாலகுமாரனின் பாணியையும் ஏற்றுக் கொள்வேன் என நினைகிறேன்.
ஈப்போ மற்றும் கோலாலம்பூரிலும் பல புத்தகக் கடைகளில் தேடிப் பார்த்துவிட்டேன். கிடைத்தபாடில்லை. கடைசியாகப் பார்த்த கடையில் 6 பாகம் 440 ரிங்கிட் என சொன்னார்கள். பொதுவாக மற்ற கடைகளில் 1 ரூபாய்க்கு 0.25 சென் என கணக்கிடுவார்கள். இந்தக் கடையில் மட்டும் ரூபாய்க்கு 0.37 சென் என கணக்கு போட்டார்கள்.
பிறகு நான் வாடிக்கையாக தமிழ் புத்தகம் வாங்கும் கடைக்காரர் , இந்தியாவில் இருந்து புத்தகம் தருவித்துக் கொடுப்பதாக கூறினார். மொத்த விலை 350 ரிங்கிட் வந்தது. (ஆர்டர் கொடுத்து பிறகு ரத்து செய்துவிட்டேன்).
அன்று நண்பர் வெங்கட்ராமனுடன் ஜீ-டாக்கில் அரட்டை அடிக்கும் போது உடையார் புத்தகத்தை பற்றிக் கேட்டேன். தற்சமயம் அவர் உடையார் படித்துக் கொண்டிருப்பதாகவும், வேண்டும் என்றால் வாங்கி அனுப்பி வைப்பதாகவும் கூறினார்.
இரண்டு நாட்களுக்கு முன் மூன்று பாகங்களை முதலில் அனுப்பி வைத்துவிட்டார். இன்னும் ஒரு வாரத்திற்குள் வந்துவிடும். வந்ததும் ஆரம்பிக்க வேண்டும். நண்பர் வெங்கட்ராமனுக்கு எனது நன்றி.
பொன்னியின் செல்வன் படித்த போது கிடைத்த இன்பத் தாக்கம் கல்கியின் பார்த்திபன் கனவு படிக்கும் போது கிடைக்கவில்லை என்பது வருத்தம் தான். இந்நாவலில் எனக்கு விளங்காத ஐயப்பாடுகள் இன்னமும் உண்டு.
Thursday, June 19, 2008
வைரமுத்துவின் - வானம் தொட்டுவிடும் தூரம்தான்
தலைப்பு: வானம் தொட்டு விடும் தூரம்தான்ஆசிரியர்: கவிப்பேரரசு வைரமுத்து
நயம்: சமூக நாவல்
பதிப்பகம்: சூர்யா
எனது செகரிப்பில் உள்ள புத்தகங்களில் கவிதை நூல்களும் அடங்கும். அதில் அதிக இடத்தை பிடித்திருப்பது கவிப்பேரரசு வைரமுத்துவின் கவிதை நூல்கள். பா.விஜய், கவிஞர் கண்ணதாசன், அறிவுமதி மற்றும் சில உள்ளூர் கவிஞர்களின் கவிதை நூல்கள் இருப்பினும், நேரம் அனுமதிக்கும் சமயங்களில் நான் அதிகம் புரட்டிப் பார்ப்பது கவிப்பேரரசின் கவிதை வரிகள்தான்.
சென்ற வருடம் கவிதை நூல்கள் தேடிக் கொண்டிருந்த பொழுது தட்டுப்பட்டது “வானம் தொட்டுவிடும் தூரம்தான்” எனும் புத்தகம். கவிதை நூலாக இருக்கும் என நினைத்துதான் கையில் எடுத்தேன். பின்னால் திருப்பிய பொழுது ‘இது கவிஞரின் முதல் நாவல்’ என அச்சிடப்பட்டிருந்தது.
இதற்கு முன் கவிஞரின் ‘சிற்பியே உன்னை செதுக்குகிறேன்’ என்ற கட்டுரை புத்தகத்தை வாசித்துள்ளேன். அதிக அளவிளான புத்திமதிகளை ஒரு இளைஞனுக்கு ஒரே புத்தகத்தில் புகட்ட முயற்சித்திருப்பது சற்று திகட்ட வைத்தது. அவரின் கவிதை வரியிலான புத்திமதிகளை ஏற்றுக் கொண்டு மனதையும் தேற்றிக் கொண்டேன்.
கையில் எடுத்த புத்தகத்தை வைக்க மனம் இல்லாமல், சரி என்னதான் இருக்கும், ஒரு கை பார்த்துவிடலாம் என வாங்கிவிட்டேன். உரைநடையில் கதையை எதிர்பார்ப்பவர்களுக்கு இந்நாவல் ஏமாற்றமாய் அமையலாம். உரைநடையையும் கவிதை தேனில் கலந்து கொடுப்பது கவிஞரின் பாணி.
நான் படித்து முடித்த பிறகு என் நண்பர் ஒருவர் இந்நூலை இரவல் வாங்கினார். இரண்டு வாரம் கழித்து “என்னால இரண்டு அத்தியாயத்துக்கு மேல முடியல மச்சி, நீங்களே வச்சிகுங்க” என திருப்பித் தந்துவிட்டார்.
நீங்கள் படிக்கும் போது வரிக்கு வரி இருக்கும் கவிதை வாடை உங்களை முகம் சுழிக்க வைக்கலாம். அதை ரசித்துக் கொண்டே புரட்டினால் நிச்சயம் இரண்டு நாட்களில் முடித்துவிடலாம்.
கதையின் நாயகன் வாஞ்சிநாதன், நாயகி செல்வி, மற்றும் முக்கிய கதா பாத்திரம் செந்தோழன். பட்டபடிப்பை முடித்துவிட்டு கிராமத்தில் இருக்கும் ஒரு இளைஞர் கூட்டத்தை சுற்றி நடக்கும் கதைக் கரு. வேலையில்லாமல் வாழ்க்கையை தேடிக் கொண்டிருக்கும் ஏழை இளைஞர்களுள் ஒருவன் தான் கதையின் நாயகன். அவன் செல்வியின் மேல் காதல் வயப்படுகிறான். யார் இந்த செல்வி? அந்த ஊர் பெரியவர் சங்கரலிங்கத்தின் மகள். சங்கரலிங்கம் கதையின் வில்லன்.
தனது சூழ்ச்சியாலும் தந்திரத்தாலும் ஊர் மக்களை தன் பிடியில் வைத்திருக்கிறான் சங்கரலிங்கம். சங்கரலிங்கத்தின் சூழ்ச்சியை ஊர் மக்களுக்கு உணர வைத்து வாஞ்சிநாதனையும் செல்வியையும் இணைத்து வைப்பதே கதைச் சுருக்கம். இந்நூலை வாசித்து முடித்தபோது பழைய சினிமா படத்தை பார்த்த கசப்பு உண்டானது. புதிய பாணியில் என்றால் சிம்புவின் படம். வித்தியாசமான நடையில் இருக்கும் நாவலை படித்த மகிழ்ச்சியும் உண்டானது.
கதையை படித்து முடித்த போது ஒரு கேள்வி என்னுள் எழுந்தது. “பணக்கார பெண்ணை கூட்டிச் சென்று திருமணம் செய்து கொண்ட வேலை இல்லா இளைஞன் இனி எப்படி வாழ்க்கையை நடத்தப் போகிறான்?”
இது கவிஞரின் முதல் நாவல் என்பதை மனதில் வைத்து ஏற்றுக் கொண்டாலும், ஒரு மாறுதலுக்காக கதையை வேறு கோணத்தில் கொடுத்திருக்கலாம் என்பது என் எண்ணம்.
சுவாரசியமான உரைநடை நாவலை எதிர்பார்ப்பவர்களுக்கு இந்நாவல் கசப்பு.
கவிதை வரியை நேசிப்பவர்களுக்கு தித்திப்பு.
பொன்னியின் செல்வன்- யாருடைய காதல் உயர்ந்தது? (இறுதிப் பதிவு)
வானதி பொன்னியின் செல்வன் மேல் கொண்ட காதல்
சிறுபிராயத்திலேயே தாயை இழந்து , பின் தந்தையையும் சீக்கிரமே பறி கொடுத்துவிட்டு அன்புக்கு ஏங்கி நின்ற இந்த சிறு பெண்ணுக்கு, வாழ்வில் ஒரே பிடிப்பு என்பது தாய் பாசத்தையொத்த இளைய பிராட்டியின் அன்பு தான் … பருவம் வந்த பின்னும் கூட, குந்தவைக்கு அவள் குழந்தையாகவே தெரிந்தாள் …
ஆனால் வல்லிய விதியானது அவளையும் விட்டுவிடவில்லை … வந்தது ஒரு காட்டுப் பூனையின் ரூபத்தில்…. பூனையோடு பொருந்த (அதாவது சண்டையிட ….) யானை மேல் வந்தான் ஒருவன் … வேடிக்கையாக இல்லை ? ஆனால் கேவலம் பறவை இனமென்று பாகுபாடு பாராமல் , அந்த இளம் குஞ்சுகளின் உயிரைக் காத்த அந்த கருணைமிகு இதயம் … யாராக இருப்பன் அந்த யானைப் பாகன்? களங்கமில்லா தூய பால் போன்ற அவள் மனதை கொள்ளை கொண்டவன் யார் ? என்ற எண்ணங்கள் அவளுக்குள் மீண்டும் மீண்டும் தோன்றி அவளை இன்பமாக வதைத்தன …
வெளி உலகம் என்றால் என்ன என்பதையே அறியாது , கொடும்பாளுர் ஒன்றே உலகம் என்று வளர்ந்து வந்த ஒரு அறியாப்பெண்; காதல், களவு போன்றவற்றை கனவில் கூட எண்ணிப்பார்த்திராதவள் … அதனால் … கள்ளம் , கபடம் , கவலை ஏதும் இன்றி மனம் போல் ஆடிப்பாடி , களிப்பில் மூழ்கிக் கிடந்தவளின் உள்ளத்தில் இப்போது ஏதோ ஒரு பெரும் மாற்றம் … மானைப் போல துள்ளிக்கொண்டு திரிந்த கால்களில் இன்று ஒரு சிறிய தயக்கம், தடுமாற்றம் … தோகை விரித்தாடும் மயிலைப்போல வான வெளியெங்கும் சுதந்திரமாக சுற்றி வந்த அவளின் மனம் இன்று கூண்டில் அடைபட்ட கிளியாக ஆகிவிட்டது ஏன் ?
குளத்தில் விழும் கல் தண்ணீரில் வட்ட வட்டமாய் அழகிய அலைகளை எழச்செய்வது போல் … அவளின் உள்ளத்தடாகத்தில் ஒரு அழகிய வீர திருமுகம் இன்ப அலைகளை எழுப்பி விட்டிருக்கிறது …. அந்த அனுபவம் அவளுக்குப்புதிதாக மற்றுமின்றி புதிராகவும் இருந்தது … புரியாத சிலவற்றில் தான் போதையும் , ஈடுபாடும் அதிகம் உண்டாகும் என்பது உண்மையோ? தான் கொடும்பாளூர் இளவரசி என்று அறிந்ததும் அவன் கோபம்கொண்டு விருட்டென்று திரும்பிச் சென்றது ஏன் ? மீண்டும் சந்தித்தால் அவன் ஏன் அவ்வாறு கோபம் கொண்டான் என கேட்கவேண்டும் … அந்த யானைப்பாகனை மறுபடியும் காண முடியுமா ? என்றெல்லாம் அந்த சிறுபெண்ணின் உள்ளத்தில் பலவிதமான எண்ணங்கள் அலை மோதின …
ஆனால் … அவன்தான் இந்த நாட்டு மக்களின் ஆத்மார்த்தமான அன்புக்கு உரியவன் … அரசற்கு அரசர்களை எல்லாம் அடி பணிய வைக்கும் அஞ்சா நெஞ்சன் , வீரத்தில் , கருணையில் , அழகில் இந்த அகிலமே போற்றும் `அருள் மொழி வர்மன் ‘… என்ற உண்மை அவள் உள்ளத்தில் பேரிடியாக இறங்கியது … நாடே போற்றும் இளவரசரை , கேவலம் ஒரு யானை பாகன் என்று நினைத்தோமே ? இந்த அரசே அவனுடையது … அவனுக்கே அரசாங்க உத்யோகம் வாங்கித்தருவதாக சொன்னோமே … என்ன வேடிக்கை , இல்லை .. மூடத்தனம் ? என்றெல்லாம் அவள் நினைத்து உள்ளம் கலங்கிக்கொண்டிருந்த வேளையில், அவன் முன்னே தீபம் ஏந்தி நின்று , அவனை வாழ்த்தி , வெற்றி மலை சூட்டி வழியனுப்ப வேண்டும் என்றால் ? …
தயக்கமும் , குற்ற உணர்வும் , அவற்றோடு பெண்களுக்கே உரிய இயற்கையான அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பென்னும் நால்வகை உணர்ச்சிகளும் ஒருங்கே உந்தித்தள்ள , அவன் தன்னை ஏறெடுத்துப்பார்த்த அந்த நொடியில் , அவள் தன்வசம் இழந்து மூர்ச்சை ஆகிச் சரிந்தாள் … ஆனால் … இது அபசகுனத்திற்கான அறிகுறியல்ல … அவளை அவன் எப்போதும் நினைவில் வைத்திருக்க தூண்டும் நல்லதொரு சந்தர்ப்பம் என்பதையோ … அவனும் , இப்படி ஒரு விசித்திரப்பெண்ணை முதன் முதலில் பார்த்ததைத் தன் ஆயுள் முழுவதும் மறக்கப் போவதில்லை என்பதையோ …, பாவம் , அப்பேதை அறியாள் …
எ.கா: 1) மணிமேகலை வந்தியதேவன் மேல் கொண்ட காதல்
2) ஊமை ராணி சுந்தர சோழர் மேல் கொண்ட காதல்
3) பூங்குழலியின் காதல்
4) நந்தினியின் காதல்
இன்னும் நிறைய உள்ளன. காதலை தவிர்த்து மற்ற கண்ணோட்டதிலும் எழுதலாம்.
நன்றி.
Wednesday, June 18, 2008
பொன்னியின் செல்வன்-யாருடைய காதல் உயர்ந்தது ? (2)

ஆனால் ஏதோ ஒன்று தடுக்கிறதே ? அது என்ன ?… பாராளும் மன்னன் மகள் தான், அவனோ ஒரு வழிப்போக்கன் அவ்வளவே … தங்கள் காதல் பொருத்தமானதா என்று மனதுக்கும் , புத்திக்கும் ஒரு பெரும் போராட்டம் அவளுக்குள் தொடங்குகிறது ….
ஆனாலும் மனமே வெல்கிறது … தன்னுடைய நிலையில் இருந்து அவள் ஒரு போதும் இறங்கி வர இயலாது … தனக்கு இருக்கும் பொறுப்புகளை அவள் தட்டிக்கழிக்க முடியாது … எல்லா சாதரண பெண்களையும் போல காதலனே உலகம்… என்று அவனை நினைப்பதையே முழு நேர தொழிலாக (வானதி, மணிமேகலை மற்றும் பூங்குழலி போல்) அவள் செய்ய முடியாது … அதனால் அவள் காதலை மறைத்து வைக்க முயல்கிறாள் … அதில் ஓரளவு வெற்றியும் பெறுகிறாள் … காதல் வயப்பட்ட தன் மனதை வந்தியத்தேவனிடம் பெரும்பாலும் அவள் வெளிக்காட்டிக்கொள்வதில்லை … ஆனால் , சரியான தருணங்களில் , அதை அவள் வெளியிட தயங்கவும் இல்லை … (சிறைச்சாலையில் , பொன்னியின் செல்வனுக்கு ஓலை கொடுத்து அனுப்பும் போது , சின்னப்பழுவேட்டரயரை தேடிச்சென்று திரும்பி வந்து வந்தியத்தேவன் அவளை பார்க்கும்போது … )

(குந்தவை)
தான் சோழ நாட்டிலேயே இருக்க வேண்டும் என்பதற்காக அவள் வந்தியத்தேவனைப்போல் ஒரு அனாதையைக்காதலிக்கவில்லை … அவன் தனக்கு அடிமை போல் இருப்பான் என்று அவனை மணம் செய்து கொள்ள விரும்பவில்லை … அவ்வளவு சுயநலம் பிடித்தவளும் இல்லை அவள் … ஆனால் சோழ நாட்டின் மீது கொண்ட அன்பால் அவள் கட்டுண்டு கிடந்தாள் … அது அவளே அவளுக்கு இட்டுக்கொண்ட விலங்கு …
பெரிதாக பிரஸ்தாபித்தால்தான் காதல் உயர்ந்ததா என்ன ? இது இரு ஜோடி கண்களின் மௌன கீதம் … ஒரே எண்ணம் உடைய இரு மனங்களினின்று எழும் இனிய ராகம் … அவர்கள் பேசிக்கொள்ளத்தேவை இல்லை … அவர்களின் மனங்கள் இணைந்து விட்டதை அவர்கள் இருவருமே நன்கு அறிவார்கள் … இது ஒரு மென்மையான, மேன்மையான காதல் ….
தொடரும்…
Tuesday, June 17, 2008
பொன்னியின் செல்வன்- யாருடைய காதல் உயர்ந்தது ?

நயம்: சரித்திர நாவல்
பதிப்பகம்: வானதி
அவள் இளவரசியோ அல்லது சாதாரணபெண்ணோ, அந்த நொடியில் அவனுக்கு அது எதுவுமே தோன்றவில்லை … அங்கே , அந்த வேளையில் அவன் இளவரசியை சந்திப்பதை எதிர்பார்த்திருக்கவும் வாய்ப்பில்லை …. எத்தனையோ போர்க்களங்களில், அவன் எதிரிகளின் கூரிய உலோக வாட்கள் சாதிக்க முடியாததை, இப்பெண்ணின் கண்களாகிய வாள்கள் சாதித்து விட்டனவே !!! அவனை அடியோடு சாய்த்து விட்டனவே !!! இதுதான் இயற்கையின் இணையில்லா வலிமையோ… இதுதான் இன்ப விபத்து என்றால், எத்தனை முறை வேண்டுமானாலும் இந்த விபத்தில் சிக்கிக்கொள்ளலாமே … என்று எண்ணுகிறான் நம் நாயகன்.
ஆனால், அவள் இளவரசி என்று தெரிந்ததும், குந்தவைக்கு வந்த அதே தயக்கம், இன்னும் அதிகமாகவே அவனுக்குள் எழுந்து பாடாய்ப்படுத்துகிறது … தன் நிலை என்ன? அவள் நிலை என்ன? அரசர்கள் எல்லாம் அடிபணிந்து சேவகம் செய்யக்கூடிய “அரசிளங்குமரி” எங்கே? அனாதையாய் பழங்குடியின் பெருமையை மட்டும் தாங்கியிருக்கும் தான் எங்கே? தனக்கென்று ஒரு நாடில்லை… ஏன்? சொந்தமாய் வீடு கூட இல்லை… இது பொருந்துமா? நடக்குமா? உலகம் தான் ஏற்குமா? என்று அவனும் பலவாறு சிந்திக்கிறான் … ஒரு பெண்ணின் கண்களுக்கு உள்ள சக்தியை எண்ணி எண்ணி வியக்கிறான்…. மனப்போராட்டங்களில் தன் அமைதியை இழக்கிறான் … ஆனாலும் அதில் ஒரு சுகம் இருப்பதை உணர்ந்து அதில் திளைக்கிறான் …

காதல் என்ற ஒன்றை இதுவரையில் அவன் கேள்விப்பட்டுதானிருந்தான்… ஆனால் அதை இப்போதுதான் அனுபவிக்க ஆரம்பித்திருக்கிறான் … ஒவ்வொரு முறையும் அவள் பொன்முகத்தில் தோன்றும் பலவகை பாவங்களில், அவள் தன்னை சிறிதளவேனும் விரும்புகிறாளா? இல்லையா? என்ற கேள்விக்கான விடையை தேட முயல்கிறான் .. ஆனால் அவள் கண்களை பார்த்தபின், தான் எங்கு இருக்கிறோம், என்ன செய்கிறோம், என்ன எதிர்பார்த்து அவள் முன்பு இந்த நிமிடம் நிற்கிறோம் என்பதெல்லாம் அவனுக்கு எங்கே ஞாபகம் இருக்கின்றன? அவன்தான் தன்னையே அவளிடம் தொலைத்து விட்டானே…
அவள் தன்னை விரும்புகிறாள் என்பதை அவன் அறிவான் .. அவளும் தான் அவளை நேசிப்பதை அறிவாள்… எனவே, பெரிதாக பேசிக்கொள்ள ஒன்றும் இல்லை … ராஜாங்க விஷயங்கள், பாண்டிய நாட்டாரின் சதிச்செயல்கள், பழுவூர் இளையராணியின் பழிவாங்கும் படலம் இவற்றுக்கு நடுவே, காதல் கவிதைகள் புனைந்து மகிழ இருவருக்குமே நேரம் இல்லைதான்…. அதற்கான சமய சந்தர்ப்பங்களும் அமையவில்லைதான் ….
காவலர்களிடம் இருந்து தப்பி வந்து அவசர அவசரமாக ஓலை கொடுக்க வேண்டும், திரும்ப உடனே புறப்பட்டு இலங்கை செல்லவேண்டும், பின் திருடன் போல் பதுங்கிப்பதுங்கி மாறுவேடம் பூண்டு அவளை மீண்டும் வந்து சந்திக்க வேண்டும் .. அடடா .. எத்தனை இம்சைகள் .. இதற்கு நடுவே காதல் கீதம் பாட எப்படி மனமிருக்கும்?
இத்தகைய நெருக்கடிகளிலும் அவர்கள் ஒருவர் மேல் ஒருவர் கொண்ட நம்பிக்கையும், அன்பும் வலுவடைந்ததே தவிர நலிவடையவில்லை … சேர்ந்து இருக்கும் சமயங்களில், அவர்கள் தங்கள் காதலைப்பற்றி பேசியதைவிட, சோழ நாட்டைப்பற்றி கவலைப்பபட்டதுதான் அதிகம்…. ஆனாலும் அவர்கள் இருவரும் தங்கள் காதலின் மேன்மையை அறிவார்கள்… அதை வர்ணனைகள், வார்த்தைகள் எனும் மொழியின் சிறைகளுக்குள் அடைத்து வைத்து ரசிக்க இருவருமே விரும்பவில்லை !!! …
நாம் கூடத்தான் … சரி தானே?
கருத்துக்களை பகிர்ந்துக் கொண்ட நண்பர் ராகவன் சாம்பத் குமார் அவர்களுக்கு நன்றி. உங்கள் கருத்தையும் பின்னூட்டத்தில் சொல்லிட்டு போங்க…
தொடரும்…..
Thursday, June 12, 2008
நூல் நயம்: கடல் புறா

ஆசிரியர்: சாண்டில்யன்
நயம்: சரித்திர நாவல்
பதிப்பகம்: வானதி
ஆசிரியர் சாண்டில்யனால் எழுதப்பெற்ற கடல் புறாவை படித்தேன். இந்நூல் விமர்சனம் எழுதும் அளவிற்கு எனக்குத் தகுதி இல்லை. படிக்கும் போது ஏற்பட்ட இன்பத்தாக்கத்தை எனது கண்ணோட்டத்தில் எழுதிவிடுகிறேன்.
அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை படித்ததால் ஏற்பட்ட தாக்கம் தொடர்ந்து சரித்திர நாவல்களை படிக்கத் தூண்டிற்று. சரித்திர நாவல்களை சேமித்துக் கொண்டும் வருகிறேன்.
தமிழர்களால் கண்டரியப்பட்ட கடாரத்தின் வரலாற்றை அறிந்து கொள்ள வேண்டுமென்ற ஆவல் எனக்குள் அதிகமாய் இருந்தது. ஆனால் தற்சமயம் ‘கெடா’ என அழைக்கப்படும் கடாரத்தின் வரலாற்றுக் குறிப்புகள் மிகவும் சொற்பமாகவே உள்ளன. மலாய்காரர்களின் ஆதிக்கத்திற்குப் பிறகு நடந்த வரலாற்றுக் குறிப்புகளே அதிகம் காணப்படுகின்றன.
இப்புத்தகத்தை வாங்குவதற்கே போதும் போதும் என்றாகிவிட்டது. ஆரம்பத்தில் தேடிய இடங்களில் 140 ரிங்கிட்டிற்கும் குறையாமல் சொன்னார்கள். அப்படி இப்படியென்று கோலாலம்பூரில் சற்று குறைந்த விலைக்குக் கிடைத்தது. தடித்த அட்டை கொண்ட மூன்று பாகங்கள். புத்தகத்தின் வாசனையே தனிதான்.
ஆடி 18-ம் நாளில் பொன்னியின் செல்வன் தொடங்குவது போல், கடல் புறா ஒரு சித்திரா பௌர்ணமியன்று தொடங்குகிறது. கதையின் நாயகன் கருணாகர தொண்டைமான். அவருக்கு காஞ்சனா தேவி மற்றும் மஞ்சளழகியென இரு காதலிகள்.
ஜெயவர்மனின் ஸ்ரீவிஜய கொடுங்கோலாட்சிக்கு எதிராக, அவரின் சகோதரர் குணவர்மர் (காஞ்சனா தேவியின் அப்பா), சோழரின் உதவியை நாடுகிறார். தன் மகளுடன் கலிங்கத்தின் பாலூர்ப் பெருந்துறையில் இறங்குகிறார் குணவர்மர். ஸ்ரீவிஜயத்திற்கும் கலிங்கத்திற்கும் ஏற்கனவே நட்புறவு இருக்கிறது. இதன் வழி ஜெயவர்மன் கலிங்கத்தின் உதவியோடு குணவர்மனை தீர்த்துக்கட்ட திட்டம் போடுகிறான்.
இச்செய்தி சோழப் பேரரசுக்குத் தெரிந்துவிடுகிறது. குணவர்மனையும் அவர் மகள் காஞ்சனா தேவியையும் காத்து அழைத்து வர வீரராஜேந்திர சோழ தேவர் கருணாகர பல்லவனை கலிங்கத்திற்கு அனுப்புகிறார். அத்துடன் சமாதான ஓலை ஒன்றையும் கொடுத்து தென் கலிங்க மன்னன் பீமனிடம் சேர்ப்பிக்க உத்தரவிடுகிறார். பாலூர்ப் பெருந்துறை சுவர்ண பூமியின் திரவுகோலாக திகழ்கிறது.
இதன் மமதையில் தன்னை சுற்றியுள்ள நாடுகளின் கடல் ஆதிக்கத்தை ஒடுக்க நினைக்கிறான் கலிங்கத்து மன்னன். முக்கியமாக கடலோடிகளாக சிறந்து விளங்கிய தமிழர்களின் ஆதிகத்தை. கலிங்கத்தில் வசிக்கும் தமிழர்களையும் தமிழ் வணிகர்களையும் சிறையில் அடைத்து சித்திரவதை செய்கிறான்.
கருணாகர பல்லவன் கொண்டு வரும் ஓலையை சற்றும் மதிக்காமல் தூக்கியெரிகிறான். பல்லவனையும் அவனை சார்ந்தவர்களையும் சிறை செய்து மரண தண்டனை வழங்குகிறான். அபாயத்தில் இருந்து தப்பி செல்கிறார்கள்.
கலிங்கம் மற்றும் ஸ்ரீவிஜயத்தின் கொட்டத்தை அடக்க தீர்மானம் எடுக்கிறான் கருணாகர பல்லவன். முதலில் கலிங்கத்தின் கடல் ஆதிக்கத்தை உடைக்கிறான். பிறகு குணவர்மனை ஸ்ரீவிஜய பேரரசின் அரியனையில் ஏற்றுகிறான். இம்முயற்ச்சிக்கு துணையாக உருவாவதே கடல் புறா எனும் போர் கப்பல்.
பொன்னியின் செல்வனைப் போல் கதை சுற்றி வலைத்துக் கொண்டுச் செல்லப்படவில்லை. கதாபத்திரங்களும் குறைவாக இருப்பதால் கதை சரலமாகப் போகிறது. இரண்டாம் பாகத்தில் அளவு கடந்த சிருங்கார ரசமும் வர்ணனைகளும் சற்று எரிச்சலூட்டுகிறது. பாதிக்கு மேல் கதை சூடுபிடித்து ஆர்வமூட்டுகிறது.
இக்கதையில் வரும் முக்கிய கதாபாத்திரங்கள்:
கருணாகர பல்லவன்: சோழர் படைத் தலைவன். இளைய பல்லவன் என அழைக்கப்படுகிறான். தந்திரசாளியும் புத்திசாளியும் கூட. ஸ்ரீவிஜய வெற்றிக்குப் பிறகு வீர ராஜேந்திர சோழ தேவர், கருணாகரனை வண்டை மாநில சிற்றரசானாக்கி காஞ்சனா தேவியையும் மஞ்சளழகியையும் மணம் முடித்து வைக்கிறார். (ஒரே கல்லில் மூன்று மாங்காய்). வண்டை மாநில அரசானான பிறகு தொண்டைமான் என அழைக்கப்படுகிறான்.
காஞ்சனா தேவி: கட்டழகி காஞ்சனா கடாரத்தின் இளவரசி. இவளின் துணிச்சல் கருணாகரனுக்கு இவள் மீது காதல் கொள்ளச் செய்கிறது.
மஞ்சலழகி: ஸ்ரீவிஜய பேரரசின் இளவரசி. ஆக்ஷய முனையின் தலைவி.
அகூதா: சீனக் கடல் கொள்ளைக்காரன். கருணாகரன் மற்றும் அமீர் என பலருக்கு பயிற்சியளிக்கிறார். பிற்காலத்தில் சீன தேசத்து அரசனாக திகந்தவர்.
அமீர்: இரக்க மனம் கொண்ட அரபு நாட்டு முரடன். கருணாகரனின் உப தலைவனாக பணியாற்றுகிறான்.
கண்டியதேவன்: கருணாகரனின் உபதலைவன். கப்பல் விடுவதில் திறமைசாளி.
அமுதன்: வணிகன். செல்வத்தை பாதுகாப்பதில் சிறந்தவன்.
அகூதாவின் கதாபாத்திரம் ஆர்வமூட்டும் வகையில் இருக்கிறது. இரண்டாம் பகுதிக்கு மேல் அவரை பற்றிய தகவல்கள் எதுவும் இல்லாமல் போகிறது. அக்ஷய முனையின் தலைவனாக இருக்கும் பலவர்மனின் கதியும் அப்படியே. கல்கியை போல், இக்கதையின் ஆசிரியர் அவர்களின் சில தகவல்களை கொடுத்து கதையை முடித்திருக்கலாம்.
கதையின் கடற்போர் தந்திரங்களும், திருப்புமுனைக்களும் சுவை கூட்டியுள்ளன. கதையை படிப்பதற்குத் திகட்டாமல் இருக்கச் செய்கிறது. பெண்களை வர்ணனை செய்வதில் சாண்டில்யனை அடித்துக் கொள்ள முடியாது போலும். மஞ்சலழகியின் உண்மையான பெயரும் கடைசி வரையில் தெரியாமல் போகிறது.
ஸ்ரீவிஜய வெற்றியோடு கதை நிறைவை அடைகிறது. அதற்கடுதாற்போல் கலிங்கத்தின் படையெடுப்பு போன்றவை வேறு நாவல்களில் உள்ளனவா என தெரியவில்லை. இருந்தால் தெரிவிக்கவும். தரை போர் முறைகளைதான் அதிக அளவிலான சரித்திர நாவல்களின் கண்டிருப்போம். சரித்திர நாவல் பிரியர்களுக்கு கடல் புறா கண்டிப்பாக ஒரு வித்தியாசமான விருந்தாக அமையும்.












