Tuesday, July 08, 2008

ம‌லேசிய‌ இந்திய‌ர்க‌ளின் இக்க‌ட்டான‌ நிலை


மலேசிய இந்தியர்களின் இக்கட்டான நிலை எனும் புத்தகம் ஜானகிராமன் ஐயா அவர்களால் எழுதப்பட்டது. இதில் வரும் கவிதை ஒன்றை என்றேன்றும் என்னால் மறக்க முடியாது. இன்றும் கூட இப்புத்தகம் என் கண்ணில் படுகையில் இக்கவிதை வரிகள் என் எண்ண அலைகளை ஆக்கிரமிக்கும். லேசான சோகம் ஒன்று என்னை ஆட்கொள்ளும்.

ம‌லாயாவின் பொருளாதார‌ம் முப்ப‌துக‌ளில் ப‌டுவீழ்ச்சி க‌ண்டிருந்த‌து. இர‌ப்ப‌ரின் விலை மிக‌ மோச‌மாக‌ வீழ்ச்சி க‌ண்டிருந்த‌தால், அத‌ன் உற்ப‌த்தியை அதிக‌மாக‌வே குறைத்துவிட‌ நேர்ந்த‌து. அதனால் த‌மிழ்த் தொழிலாள‌ர்க‌ள் ப‌ல‌ர் திரும்ப‌ இந்திய‌ நாட்டிற்கே க‌ட்டாய‌மாக‌ அனுப்பி வைக்க‌ நேர்ந்த‌து.

அந்நிலையில் பால்ம‌ர‌ம் சீவும் தொழிலாளி ஒருவ‌ன் துரையையும் கிராணியையும் க‌ங்காணியையும் ம‌க்க‌ளையும் விட்டுப் பிரிய‌ ம‌ன‌மில்லாம‌ல் க‌ண்ணீர் சிந்துவ‌தாக‌ ஒரு தொழிலாளியின் நோக்கு நிலையில் ரா.சுப்பிர‌ம‌ணி ஐய‌ர் என்ப‌வ‌ர் ஒரு க‌விதையை இய‌ற்றியுள்ளார். இக்க‌விதையில் தோட்ட‌புற‌ பின்ன‌னி, வாழ்விய‌ல் கூறுக‌ள், ம‌ண்ணின் ம‌ன‌ம் ஆகிய‌ன‌ சிற‌ப்பாக‌ வெளிப‌டுத்த‌ப்ப‌ட்டுள்ள‌ன‌.


போய்வாரேன் பால்ம‌ர‌மே போய்வாரேன் பால்ம‌ர‌மே
போய்வாரேன் பால்ம‌ர‌மே போய்வாரேன் பால்ம‌ர‌மே
க‌ண்ணாடித்துரையும் போனார்
க‌ங்காணி வீர‌ன் போனார்
பின்னாடி கிராணி போனார்
தாங்காம‌ல் நானும் போரேன்
என்ன‌மோ பின்னாலே எப்போதூன்னை
காண‌ப்போரேன்
(போய்)

ப‌வுனுக்கு ப‌வுன்விலையாய்
பாலுவித்த‌க் கால‌ம் போச்சே
புளிவிலைக்கும் தோற்றுப் போச்சே
பாலுவெட்டும் நிறுத்த‌லாச்சே
யார்செய்த‌ மோச‌ம் பாராய்
எவ‌ரிட்ட‌சாப‌ம் கூறாய்
(போய்)

ரொட்டிப்பால் ஒருவிலையும்
ஒட்டுப்பால் ஒருவிலையும்
ப‌ட்டைக்கு ஒருவிலையும்
(பாலு) கொட்டைக்கு ஒருவிலையும்
த‌ங்க‌ம்போல் விலைத‌ந்தாய்
ப‌ங்க‌மாய் நிலைகுலைந்தாய்
(போய்)

தீபாவ‌ளி ப‌டியென்றும்
பொங்க‌லுக்குப் பொடியென்றும்
சீராய்கொடுத்த‌ எந்த‌ன்
சிரித்த‌முக‌த்துத் துரை
கையைத்தான் விரிகிறாரே
காசென்று கேட்டாலிப்போ
(போய்)


க‌ற்ப‌க‌மென்று சொல்வார்
க‌ண்ட‌தில்லை இவ்வுல‌கில்
க‌ற்ப‌க‌ம் என்று சொல்ல‌
க‌ண்க‌ண்ட‌ ம‌ர‌மும் நீயே
கால‌மே கோல‌மோ
காப்பாற்றுவார் இல்லையே
(போய்)

உன்னைந‌ம்பி வாழ்ந்த‌வ‌ர்க‌ள்
எத்த‌னை பேர்க‌ளுண்டு
அத்த‌னை பேர்க‌ளுமே
அழுதுகொண்டு போகுறாரே
உயிர‌ள‌வும் ம‌ற‌க்க‌மாட்டேன்
ஊருக்குப் போய்வாரேன்
(போய்)


ஆதார‌ம் ம‌லேசிய‌த் த‌மிழ் க‌விதை மாநாடு
ம‌ல‌ர் 2000 ப‌க்க‌ம் 153

ந‌ன்றி : திரு.ஜான‌கிராம‌ன் (ம‌லேசிய‌ இந்திய‌ர்க‌ளின் இக்க‌ட்டான‌ நிலை)

Monday, July 07, 2008

எங்கடா போச்சு உன்னோட கம்பளிப் பூச்சி?

நான் இந்தக் கேள்வியைப் பல முறை சந்தித்திருக்கிறேன். நாம் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் காரணம் இருக்கும் என்பார்கள். அதை போல் தான் என் மீசைக் கதையும்.

சில நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்ளும் போது சங்கடப்பட்டும் போய் இருக்கிறேன்.

“என்ன வயசாகுது தம்பி உனக்கு”

“24”

“ஆமாவா? நம்ப முடியல, சின்னப் பையன் மாறி இருக்க”.

இதற்காக நான் என் பிறப்புப் பத்திரத்தையா எடுத்துக் காண்பிக்க முடியும். அடப் போங்கய்யா என சொல்லி அமைதியாக இருந்துவிடுவேன்.
பல தருணங்களில் என் நண்பர்கள் சொல்லி இருக்கிறார்கள், “டே மீசை வச்சி பாருடா. மெச்சூர்ட் லுக் வரும்”. என் நண்பர் வட்டதிலும் சிலருக்குதான் என் சோகக் கதை தெரியும். தெரியாத ஜந்துக்கள் அடிக்கடி இப்படிச் சொல்லித் தொலையும்.

அப்பொழுது 16 வயது இருக்கும். நான் இடைநிலைப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த சமயம். மீசை அரும்பாக மலர்ந்துக் கொண்டிருந்த்து. சீராக இருந்தது. ‘ஆட்டோகிராப்’ பட்த்தில் வரும் சேரனை போல் அதை பார்த்து மகிழ்ந்து இருக்கிறேன்.

அந்தச் சமயம் என் பள்ளியின் கட்டொழுங்கு ஆசிரியர் ஒரு சீனர். பெரும்பாழும் சீனர் மற்றும் மலாய்கார்களை பார்த்தோமானல் மீசை வைக்க மாட்டார்கள். மீசையும் வளராது இதில் விதிவிளக்காக இருப்பவரும் உண்டு.

பள்ளியில் இருக்கும் இந்திய மாணவர்களுக்கு தான் இந்த மீசை பிரச்சனை வரும். ஒரு வாரந்திரப் பரிசோதனையின் சமயம், அந்தக் கட்டொழுங்கு ஆசிரியர் மீசையை வழிக்கச் சொல்லிவிட்டார்.

நானும் அடி வாங்காமல் இருக்க மறுநாள் மீசையை வழித்துவிட்டு வந்தேன். (அந்த வாத்தி நல்லா இருக்கட்டும்). அப்போது ஆரம்பித்த்து பிரச்சனை. மீசை சீராக வளர மறுத்தது. அங்கொன்றும் இங்கொன்றுமாக வளரும். கட்டையும் நெட்டையுமக வளரும். இதனால் பல முறை நெந்து போய் இருக்கிறேன்.
இப்பொழுதெல்லாம் மீசையை வழிப்பதில்லை. அளவாகக் கத்தரித்துவிடுவேன்.

Sunday, July 06, 2008

ஒரு தாயின் மனம்


நினைவுகளை சுமக்கிறாள்
ஒரு தாய்!
பசிக்கு அழுதிடுவானோ
எனக் கனவு
கலைந்த
பச்சை உடல் காலம்!
விளையாடுகையில்
விழுந்திடுவானோ எனப்
பதறிய மாலைப் பொழுதுகள்!
தேர்வுக்காகத்
தேக்கி வைத்த
தூக்கத்தோடு
தேனீர் கலக்கிய இரவுகள்!
கல்லூரியில்
சேர்த்த போது
கண் கலங்கிய
இள நரைக் கிழவி,
திருமணம் செய்வித்து
கடமை முடிந்த
நெகிழ்ச்சியில் திளைந்திருந்தாள்!
இன்று அவள்
இறுதி மூச்சை
சுவாசிக்க மறந்து போனாள்
முதியோர் இல்லத்தில்.

Thursday, July 03, 2008

நூல் நயம்: சாண்டில்யனின் ராஜ யோகம்


உடையார் நாவல் வந்து சேரும் இந்தத் தறுவாயில் சாண்டில்யனின் ”ராஜ யோகம்” எனும் நாவலை வாசித்து முடித்தேன். கடல் புறாவைப் போல வளவளவென இழுவையாக இல்லாமல் கனகச்சிதமாகச் சொல்ல வேண்டியதைச் சொல்லி முடித்திருக்கிறார் சாண்டில்யன்.

பொன்னியின் செல்வனைப் படித்து முடித்த போது, சரித்திர நாவல் என்றால் சோழர் கதைகளை மட்டுமே படிக்க வேண்டும் என நினைத்திருந்தேன். தவிர்க முடியாத காரணத்தின் பேரில் மற்ற நூல்களையும் படிக்கும் சூழ்நிலை உருவாகிவிட்டது.

குலசேகர பாண்டியன் காலத்தில் ஏற்பட்ட அரியனை போட்டியை மையமாகக் கொண்டு இந்நாவல் தொகுக்கப்பட்டுள்ளது. குலசேகர பாண்டியன் மணிமுடியைத் தன் இளய மனைவியின் மகனான வீரபண்டியனிடம் கொடுக்க நினைக்கிறான். பட்டத்து ராணியின் முதல் மகனானவன் சுத்தரபாண்டியன். பதவியாசையின் பேரில் தந்தையையும் கொல்லத் துணிகிறான். பாரபட்சம் பார்க்காமல் பல கொடூரங்களை புரிகிறான்.

இக்கதையின் நாயகன், நாயகி எனும் கற்பனைப் பாத்திரங்கள் அவசியத்தின் பேரில் படைக்கப்பட்டிருந்தாலும், அப்துல்லா வாஸப் எனும் சரித்திர ஆசிரியன் தான் உண்மையான நாயகன்.

வாஸப் தனது சரித்திர ஆராய்ச்சிக்காகப் பாரசீகத்திலிருந்து பாண்டிய நாட்டிற்கு பயணம் மேற்கொள்கிறான். பாண்டிய நாட்டில் காலடி வைக்கும் வாஸப் எதிர்பாரா விதமாக அரசியல் சிக்கலில் அகப்பட்டுக் கொள்கிறான்.
பல முயற்சிகள் செய்தும் கடைசியில் பண்டிய நாட்டு மன்னனை காப்பாற்ற முடியாமல் போகிறது. அரியணை மீது இருந்த பேராசையில் மகனே தன் தந்தையை குத்திக் கொல்கிறான். நாட்டில் தாயாதிச் சண்டை எற்படுவதற்கு முன் பாண்டிய மண்ணிலிருந்து கிளம்புகிறான் வாஸப்.

கடல் புறாவில் இருந்ததைவிட இந்நாவலில் சிருங்கார ரசமும், பெண் வர்ணனையும் சற்றுத் தூக்கலாகவே இருக்கிறது. ஒரு அத்தியாயத்தில் சாண்டில்யன் ராஜ யோகத்தை எழுதுவதை மறந்து காம சூத்திரத்தை எழுதுகிறாரா என்ற எண்ணமும் உண்டானது.

இந்நாவலை படித்து முடித்த போது சில வரிகள் என்னுள் நீங்காமல் இருந்தது அவை:

ஒரு கட்டத்தில் நாயகனான இளம்பிரிதி வாஸப் தொழுகை புரியும் சமயத்தை காத்து நிற்கிறான். அப்போது எதிரியிடம்:

“தொழுகை ஆண்டவனை பற்றியது. அவனுக்குப் பெயர்கள் பல இருக்கலாம். அவன் ஒருவன் தான். நதிகள் பல உற்பத்தியானாலும் கடைசியில் கடலைச் சேருவது போல, தொழுகை யார் செய்தாலும் அது ஒருவனான ஆண்டவனைச் சேர்கிறது. இது இந்து மதம் சொல்லும் தத்துவம். தொழுகை- அதை யார் செய்தாலும் அதை காப்பது இந்துவின் கடமை”.

இளம்பிரிதி வாஸப்புடன் உரையாடுகையில்:

“வாஸப்! மரணம் நகைப்புக்கு இடமானதா”

“ஆம் இளம்பரிதி, நிரந்தரமானது அது ஒன்றுதான். நிச்சயமாய் எந்த மனிதனுக்கும் இன வித்தியாசம் இன்றி வருவது அது ஒன்றுதான். அதை நினைத்து மனிதன் நடுங்குகிறான். நடுங்குவதற்காக அது விடுவதில்லை. ஆகவே அதை அலட்சியப்படுத்துவது தான் விவேகம். நகைப்பதுதான் அறிவின் அடையாளம்.”

அடுத்ததாக:

“இனப்பற்று, மொழிப்பற்று இல்லாத சமுதாயம் சக்தியுடன் வளர முடியாது”

ஒரு கட்டத்தில் இளம்பிரிதி நாயகியான அல்லியுடன் காதல் மொழி பேசுகிறான். அது வாஸப் காதில் விழவும் வாஸப் நினைக்கிறான்:

“மண்ணாசையும் பெண்ணாசையும் யாரை விட்டது. பெண் அருகில் இருக்கும் போது எந்த ஆண்மகன் ஆபத்தை பற்றி நினைக்கிறான்”.

இப்படி இன்னும் பல சுவாரசியமான வரிகள்.
அடுத்த்தாக அரசர்களுக்கு ஜாதகத்தில் கூறப்படும் ராஜ யோகங்களை பற்றியும் ஒரு கட்டத்தில் விவாதிக்கிறார்கள்:

அவையனது, அபவாத ராஜயோகம், அனுபவ ராஜயோகம், ஸ்வத ஸித்த ராஜ யோகம், சாமான்ய ராஜயோகம், விஷய போக ராஜயோகம், அதிகார ராஜயோகம் மற்றும் பகுமான ராஜயோகம்.

இது மட்டும் இல்லாமல் பல பரிமாணங்களில் அலசி ஆராய்ந்து பண்டிய நாட்டில் அந்நாளய சூழலை நமக்கு ராஜ யோக விருந்தாகப் படைத்திருக்கிரார் சாண்டில்யன்.

Wednesday, July 02, 2008

மௌனத்தின் சில வார்த்தைகள்


உன் பார்வையில்
எத்தனை மௌன மொழிகள்!
விழியோரம் வழிந்திடும்
இரகசியப் பார்வை!
இதழோடு இதழ்
உரசிடும் மெல்லிய புன்னகை!
உள்மனம் உன்னை
நெருங்கச் சொல்கிறது!
நீயோ- பக்கத்தில் வந்தால்
வெட்கத்தில் ஓடுகிறாய்
எப்போதோ பார்க்கும் உன்னை
தப்பாமல் நினைக்கிறேன்
சிக்காமல் செல்லும் உன்னை
சிறையெடுக்கத் தவிக்கிறேன்
சிவனில் பாதி சக்தியாமே!
எனக்குச் சக்தி கொடுப்பாயா?
பெண்ணே!
காதலித்தால் கவிதை வருமாமே!
கவிதையோடு வரும்
கவலை என்ன இலவச இணைப்பா?
காதலெனும் (க)விதையை
விதைத்துவிட்டேன்
நல்ல மரம் வளர
நீர் ஊற்று
நாசமாய் போகட்டும்
என்றால் தீமூட்டு.

Friday, June 27, 2008

விடியலைத் தேடி

“டேய் ராஜபாகு உங்க ஆத்தா அங்க தூக்கு மாட்டிகிடுச்சுடா, ஆட்டம் போட்டுகிட்டு இருக்க, கிறுக்கு பயலே”, என்று வாயில் இருந்த வெற்றிலை எச்சில் தெரிக்க கத்தினாள் காத்தம்மாள் கிழவி. ஐயோ என்ன இது! கிழவியின் வார்த்தைகள் ஆயிரம் சம்மட்டிகளைச் சேர்த்து வைத்து என் இதயத்தில் அடித்ததைப் போல் இருந்தது. காத்தம்மாள் கிழவி எங்கள் கிராமத்தின் ‘செய்தியாளர்’. தகவல் கிடைத்திருக்காமல் இப்படிச் சொல்லியிருக்க மாட்டாள்.

எங்கள் கிராமத்தில் புதன் கிழமை மாலை வேளைகளில் ரொட்டிக்காரர் வருவது வழக்கம். அவரது மோட்டார் சைக்கிளின் ‘ஹார்ன்’ சத்தத்தை கெட்டவுன் என் நாவில் எச்சில் ஊறத் தொடங்கிவிடும். எனக்கு அப்பொழுது ஏழுவயதுதான் இருக்கும். கிராமத்து பகுதியில் உள்ள தமிழ் பள்ளியில் ஆரம்பக் கல்வியை தொடங்கிய காலகட்டம்.

அன்று ஐந்து மணி வாக்கில் ரொட்டிக்காரரின் மோட்டார் சைக்கிளின் ‘ஹார்ன்’ சத்தம் கேட்டது. என் கால்கள் ஓர் இடமாக நிற்காமல் அலைமோதிக் கொண்டிருந்தது. வாரத்திற்கு ஒரு ரொட்டியாவது வாங்கிச் சுவை பார்க்காவிட்டால் என் மனம் வாடி வதங்கிவிடும். என் தேவையை அறிந்த அம்மா ஐம்பது காசை என் கையில் கொடுத்தார். போய் ரொட்டி வாங்கி சாப்பிடுடா கண்ணா என்று என் தலையை வருடி அனுப்பி வைத்தார். எனக்குப் பிடித்த பால் ரொட்டியை வாங்கிக் கொண்டு கோவிலுக்கு அருகில் இருந்த குட்டிச் சுவரில் அமர்ந்துக் கொண்டேன். முதல் கடியை வைப்பதற்குள் காத்தம்மாள் கிழவியின் அதிரடிக் கூச்சல் சத்தம் என்னைச் சிதறடித்தது.

கடவுளே! ஏன் இந்த சோதனை? நான் வெளியே வந்து இன்னும் பதினைந்து நிமிடங்கள் கூட ஆகவில்லையே. அதற்குள் ஏன் அம்மா இப்படி செய்துவிட்டார்? எனக்கு ஆதரவாக இருந்தது அம்மா மட்டும்தானே? இனி யார் என்னைப் பார்த்துக் கொள்வார்கள்? நொடிப் பொழுதில் ஆயிரம் கேள்வி அம்புகள் என்னைத் துளைத்தெடுத்துக் கொண்டிருந்தன. சட்டெனச் சுவரில் எட்டிப் பாய்ந்தேன். என் கையில் இருந்த ரொட்டித் துண்டு முண்டியடித்துக் கொண்டு மண்னை கவ்வியது. வீட்டிற்கு விரைந்து ஓடினேன்.

கட்டிலில் அம்மாவின் பிரேதத்தைக் கிடத்தி வைத்திருந்தார்கள். கண்களை திறந்த வண்ணம், சற்று வெளியே தள்ளிய நாக்குடன் அசைவற்ற ஜடமாய் விரைத்து போய் கிடந்தார். என் கண்ணீர் வற்றும் வரை அழுது தீர்த்தேன். அனைத்து இறுதிச் சடங்குகளும் நடந்தாகிவிட்டது. என் அப்பாவோ வீட்டு பக்கம் திரும்பிக் கூட பார்க்கவில்லை. இனி என்னை வந்து அழைத்துச் செல்வார் என எதிர்பார்த்துக் காத்திருந்தால் அது என் முட்டாள் தனம்தான்.

நான் சாதரண நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவன். என் அப்பா வெளியூரில் தங்கி வேலை செய்து கொண்டிருந்தார். அவ்வப்பொழுது பணம் அனுப்பி வைப்பார். இரண்டு அல்லது மூன்று மாதத்திற்கு ஒருமுறை வீட்டிற்கு வந்துச் செல்வார். தந்தையின் பாசம் கிடைக்காதவனாய்த் தான் வளர்ந்தேன். இந்தச் சூழலில் என் அம்மா யாருடைய உதவியையும் எதிர் பார்க்கவில்லை. வீட்டு வேலைகள் போக, ஒழிந்த நேரத்தில் சிறு தையல் வேலைகளை செய்து குடும்பச் செலவுகளைப் பார்த்துக் கொள்வார்.

அம்மா இறப்பதற்கு ஓரிறு தினங்களுக்கு முன் அப்பா வீட்டிற்கு வந்தார். இருவருக்கிடையே ஏற்பட்ட சண்டையில் என் அம்மாவை அடித்துத் துன்புறுத்தினார் அப்பா. அவர்களின் பேச்சு எனக்கு புரியாத புதிராகவே இருந்தது. பயந்து போனவனாய், காரணம் அறிய பக்குவப்படாதவனாய், தடுக்க பலமில்லாதவனாய் ஓர் ஓரமாய் நின்று அழுது கொண்டிருந்தேன். அப்பா தன் துணிமணிகளை எடுத்துக் கொண்டு அன்று இரவே எங்கோ கிளம்பிவிட்டார்.

அதுவே நான் அவரைப் பார்த்த இறுதி நாள். வேறோரு பெண்ணுடன் புதிய உறவை ஏற்படுத்திக் கொண்டதால் தான் இவ்வளவு பிரச்சனைகள் என பின் நாட்களில் அறிந்துக் கொண்டேன். இதன் விளைவாக அனாதையென நடுத்தெருவில் விடப்பட்டேன்.

வீட்டில் காரியம் முடிந்து அனைவரும் கிளம்பிக் கொண்டிருந்தார்கள். “பையனை நாங்க அழைச்சிகிட்டு போய் பாத்துக்குறோங்க”, என்றார் என் தாய் மாமன். தன் குடும்பத்தோடு ஆலோசித்து தான் இந்த முடிவை எடுத்தாரா என்பது இன்றளவில் பதில் கிடைக்காத கேள்விதான். இல்லை இவ்வளவு சொந்தங்கள் இருந்தும் என்னைக் கவனிக்காமல் விட்டால் நாலுபேர் பேசும்படி ஆகிவிடுமோ என்பதற்காக இவ்வாறு கூறினாரோ? அவரது இனிப்பான வார்த்தைகளுக்காக ஊரார் மெச்ச, என்னை அழைத்துச் சென்றார்கள்

வாரங்கள் பல கடந்தது. அவர்களும் என்னைப் பள்ளிக்கு அனுப்புவதாக தெரியவில்லை. வீட்டிலும் என்னை ஒரு பாரமாகவே கருதினர். யாரும் முகம் கொடுத்துப் பேச மாட்டார்கள். மொத்தத்தில் உயிருள்ள ஒரு பொருளாய் நடமாடிக் கொண்டிருந்தேன். என் அம்மாவைச் சம்பந்தப்படுத்தி குத்திப் பேசும் பேச்சுகளும் ஏச்சுகளும் எனக்கு மரத்துப் போய்விட்டது.

“உங்க அம்மா என் கிட்ட கொடுத்து வெச்சிட்டுப் போயிருக்காளா? இல்ல உங்க அப்பன் தான் மாச மாசம் கொட்டிக் குடுக்குறானா? இப்ப படிப்பு ஒன்னுதான் உனக்குக் கேடு”, நான் பள்ளிக் கூடம் போகட்டுமா எனக் கேட்டதற்கு அர்ச்சனை செய்தாள் அத்தை. என் பள்ளிக்கூட கனவுகளுக்கு மூட்டை கட்டி வைத்துவிட்டு அவர்கள் கொடுக்கும் சிறு சிறு வேலைகளை செய்துக் கொண்டு வீட்டிலேயே இருக்க ஆரம்பித்தேன்.

சில சமயங்களில் அம்மா மீது சிறு கோபங்கள் தோன்றி மறையும். அம்மா மட்டும் இருந்திருந்தால் நான் இவ்வளவு கஷ்டப்பட தேவையில்லை. நிம்மதியாகப் பள்ளிக்கூடத்தில் படித்துக் கொண்டுருந்திருப்பேன் என நினைத்து பல நாட்கள் அழுதிருக்கிறேன். நான் அறியாமல் சிறு தவறுகள் செய்தாலும் அதை பெரிதாக்கி அடிவாங்கச் செய்வாள் அத்தை. ஒரு முறை நான் வீட்டை சுத்தமாக துடைக்கவில்லை என பிரச்சனை எழுப்பினாள். “வேளாவேளைக்கு நல்லா தின்னுற தானே, இந்த வேலைய கூட உன்னால ஒழுங்கா செய்ய முடியாதா”, என என் வலது கையில் கம்பியை காய்ச்சி சூடு வைத்தாள்.

சிறு பிள்ளைகளை சித்திரவாதை செய்தால் காவல் துறையினரிடம் புகார் செய்ய வேண்டுமென என் ஆசிரியர் சொல்லிக் கொடுத்திருக்கிறார். ஆனால் அந்த வயதில் அதையெல்லாம் எப்படி செய்வதென்று எனக்கு தெரியவில்லை. சூடுபட்ட காயத்தால் துடிதுடித்துப் போனேன். அன்றிரவே வீட்டை விட்டுத் தப்பி ஓடினேன். சாலையோரமாக நின்றுக் கொண்டிருந்த லாரியில் ஏறி அமைதியாகப் படுத்துக் கொண்டேன்.

நீண்ட பயணத்திற்கு பிறகு லாரி ஓரிடத்தில் நின்றது. சட்டெனப் பாய்ந்து அங்கிருந்து நகர்ந்தேன். என் பெற்றோரின் சுயநலம் பிள்ளையை எப்படியெல்லாம் பாதிப்படைய செய்கிறது. ஊர் பேர் தெரியாத இடம். ஓய்வில்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் மக்களின் நகர வாழ்க்கை. என்ன செய்வதென்று அறியாமல் நாதியற்று கிடக்கும் நான்.

“அண்ணே, நீங்க என்ன வேலை கொடுத்தாலும் செய்யுறேன், கொஞ்சம் சாப்பாடு மட்டும் கொடுங்க’, என்றேன் ஒரு ஒட்டுக் கடை ஓரமாக நின்றவாறு. என்னை ஏற இரங்கப் பார்த்தக் கடைகாரர் “சாப்பாடுலாம் ஒன்னும் கிடையாது கிளம்பு”, என விரட்டினார். பசி மயக்கத்தில் உடல் சோர்ந்து போனேன். வெய்யிலின் தாக்கம் என்னை வறுத்து எடுத்துக் கொண்டிருந்தது. நான் இரண்டு அடி நகர்ந்திருப்பேன் அந்தக் கடைக்காரர் என்னை அழைத்தார். உணவளித்தார்.

திருப்தியாக உண்டேன். என் கதை முழுவதும் கூறி அழுது தீர்த்தேன். அந்த கடைக்காரர் பெயர் முருகேசு. நல்ல மனிதர். எனக்கு சிறந்த ஆலோசகராக விளங்கியவர். “இதோ பாரு தம்பி, சின்ன பசங்களை வேலைக்கு வைச்சிக்கிறது சட்ட படி குற்றம். பக்கத்தில இருக்கும் அன்பு இல்லத்தில் சேர்த்து விடுறேன், பள்ளிக்கூடத்திற்குப் போய் ஒழுங்கா படிக்கனும் புரியுதா”, என்றார். அவரது ஆதரவான வார்த்தைகள் என் வாழ்வில் ஓளி ஏற்றி வைத்ததைப் போல் சந்தோசமாக இருந்தது. சந்தேகத்தால் தான் ஆரம்பத்தில் விரட்டினார் என பிறகு புரிந்துக் கொண்டேன்.

அன்பு இல்லத்தில் இருந்துக் கொண்டு படிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்தேன். முருகேசு அண்ணன் நேரம் கிடைக்கும் சமயங்களில் என்னை கண்டு செல்வார். நானும் பள்ளி விடுமுறைகளில் அவரது கடைக்குச் சென்று சிறு சிறு உதவிகள் செய்து வருவேன். பல சிரமங்களுக்குப் பின் படிப்பை தொடர்ந்தது, படிப்பின் ‘சுவையை’ எனக்கு உணர்த்தியது. பாடங்களை ‘ருசித்துப்’ படிக்க ஆரம்பித்தேன்.

என் அம்மாவின் ஞாபகம் ஒரு கணமும் என்னை விட்டு பிறிந்ததில்லை. நாளுக்கு நாள் அம்மா மீதிருந்த ஏக்கத்தைவிட கோபமே அதிகரித்தது. எத்தனையோ மாதர்கள் கணவனை பிரிந்த பின்னர் தங்கள் பிள்ளைகளை சிறப்பாக வளர்க்கிறார்கள். ஏன் என் அம்மா மட்டும் என்னை நாதியற்று நடுத்தெருவில் நிற்கும்படி செய்தார்?

****************************************
‘டாக்டர் அந்த ‘பேசன்ட்’ சுயநினைவிற்கு திரும்பிட்டாங்க”, என்றாள் என் அறைக் கதவை தட்டிக் கொண்டு உள்ளே வந்தாள் தாதி. என்னை சுதாகரித்துக் கொண்டு பழைய நினைவிலிருந்து திரும்பினேன்.
நான்கு ஐந்து நாட்களுக்கு முன் விஷத்தை குடித்து உயிருக்கு போராடிய பெண்ணை நான் பணிபுரியும் மருத்துவமனையில் சேர்த்திருந்தார்கள். நான் மருத்துவனாக வேலை செய்யத் தொடங்கியதிலிருந்து இதுபோல தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட பல நோயாளிகளைச் சந்தித்திருக்கிறேன். ஆனால் இவள் விசயத்தில், கூடவே அழுது கொண்டிருந்த அவளது பிள்ளைகளை பார்க்கையில் என் மனம் நெருடியது. இவளை காப்பாற்ற முடியவில்லையெனில் இந்தப் பிள்ளைக்ளின் கதி என்னவாகும்?

சுயநினைவிற்கு திரும்பிய அவளை காண சென்றேன். தன் பிள்ளைகளை கட்டியணைத்து அழுதவாறு படுத்திருந்தாள். என்னைக் கண்டவுடன் கண்களை துடைத்துக் கொண்டு தன்னை சரிபடுத்திக் கொண்டாள். அவள் அருகில் அமர்ந்து மருந்தோடு மருந்தாக சில புத்திமதிகளைக் கூற விழைந்தேன். அவளை விட்டுச் சென்ற கணவனின் செயலால் தான் இந்தத் தற்கொலை முயற்சியென அறிந்துக் கொண்டேன். இனி பிள்ளைகளுக்காக வாழ்வை தொடர்வாள் என விழியோரம் பொங்கிய அவளது கண்ணீர் சொல்லியது. அந்தச் சிறு பிள்ளைகளின் வாழ்வில் விடியலை ஏற்படுத்திய மனத்திருப்தி எனக்கு மகிழ்ச்சியளித்தது.

அதிர்வு விசையில் இருந்த என் கையடக்கத் தொலைபேசி அலறியது. அடுத்த முனையில் என் மனைவி பேசிவிட்டு வைத்தாள் இன்று முருகேசு அண்ணனின் நினைவு நாள். ஆறு ஆண்டுகளுக்கு முன் முதுமையின் காரணமாக அவர் காலமாகிவிட்டார். இப்பொழுது எனக்கு ஐம்பத்து நான்கு வயதாகின்றது. சுடர் விளக்காயினும் தூண்டுகோல் தேவை என்பார்கள். என் வாழ்வில் தூண்டுகோலாக இருந்தவர் முருகேசு.
என் தாய் போன்றோரின் கோழைத் தனமான செயல்களால் எவ்வளவு பிள்ளைகள் பாதிக்கப்பட்டிருப்பார்கள். அவர்களில் பலர் சமுதாயத்திற்கும் நாட்டிக்கும் கேடு விளைவிற்பவர்களாகவும் உருவாகி இருக்கலாம். நான் இன்று மருத்துவனாக உருவாகியிருப்பதற்கு காரணம் முருகேசு அண்ணனை போன்றேரின் நல்ல உள்ளங்களால் தான். அவருக்கு நினைவஞ்சலி செலுத்த வேண்டுமெனக் கூறி என் மனைவி தொலைபேசி அழைப்பு கொடுத்தாள். வீட்டை அடைந்தவுடன் முருகேசு அண்ணனின் பெயரில் அர்ச்சனை செய்துவரலாம் என என் மனைவி கூறினாள். சரியெனச் சொல்லி துவாலையை இடுப்பில் முடிந்து கொண்டு குளியலறையை நோக்கிச் சென்றேன்.

(பி.கு: இது எனது இரண்டாவது சிறுகதை. முன்பு வெட்பிரஸ் தளத்தில் பதிவிடப்பட்டு மீண்டும் இங்கு மீள்பதிவு செய்யப்படுகிறது. பிழைகள் இருப்பின் மன்னிக்கவும்.)

Thursday, June 26, 2008

பின்னூட்டமே பதிவாக (உடையார்)

(நேற்றய பதிவிற்கு வந்த பின்னூட்டங்களில் இதுவும் ஒன்று. திரு.விஜய் அவருடைய கண்ணோட்டத்தில் உடையார் புத்தகத்தை பற்றி சொல்லி இருக்கிறார். இதை பின்னூட்டமாகவே விட்டுவிடால் பலரையும் போய்ச் சேராது என்ற நோக்கில் பதிவாகப் போடுகிறேன்.)

வணக்கம்

பொன்னியின் செல்வன் ஒரு கற்பனைப் புதினம். ஆழ்வார்க்கடியான், நந்தினி, சேந்தன் அமுதன் போன்றவை கற்பனைப் பாத்திரங்கள். இதில் சேந்தன் அமுதன் அரியணை ஏறும்வரையிலான சம்பவங்கள் மட்டுமே கூறப்பட்டுள்ளன, சில பல கற்பனைச் சம்வங்களோடு. இவ்வாறு கூறுவதால் கல்கியைக் குறைத்து மதிப்பிடுகிறேன் என்று தவறாக எண்ணிவிட வேண்டாம். எள்முனையளவும் எனக்கு அத்தகைய நோக்கம் கிடையாது.

உடையார், ராஜராஜ சோழனின் வாழ்வை வேறு தளத்தில் அலசுகிறது. ராஜராஜரின் வாழ்வில் நிகழ்ந்த முக்கியமான சம்பவங்களான தேவார மீட்பு, பெரிய கோயிலைக் கட்டுவித்தல், அதிமுக்கியமாக அவருடைய அந்திமக் காலம் ஆகியவை பொன்னியின் செல்வனில் கூறப்படவில்லை. அந்தக் குறையை உடையார் போக்குகிறது. மேலும் ராஜராஜர் நிகழ்த்திய முக்கியமான யுத்தங்களைப் பற்றியும், அவருடைய காலத்தில் இருந்த சமூகத்தின் அமைப்பையும் பற்றி உடையார் அலசுகிறது. பொன்னியின் செல்வன் நூல் ராஜராஜரை ஒரு காதல் இளைஞனாக (சாக்லேட் பாய்), பிள்ளைக் குறும்புகள் மாறாத ஒரு இளைஞனாக மட்டுமே காட்டுகிறது. முதிர்ந்த அறிவுடன் ஒரு மகத்தான தியாகத்தைச் செய்யும் மகோன்னதத்துடன் அந்த பாத்திரம் முடிவுக்கு வந்துவிடுகிறது.

மேலும் பொன்னியின் செல்வன் புதினத்தின் நாயகன் வல்லவரையர் வந்தியத்தேவர். ஆனால் உடையார் முழுக்க முழுக்க ராஜராஜரை மட்டுமே கதை நாயகராகக் கொண்டது.

உடையாரில் அவருடைய காதல் வாழ்வு மட்டுமல்லாது அவருடைய மணவாழ்வும் விவரிக்கப்பட்டுள்ளது. அவருடைய முதிர் பருவத்தில் பஞ்சவன் மாதேவிக்கும் அவருக்கும் இடையே நிலவிய அனுக்கமான காதல் வாழ்வு பொன்னியின் செல்வனில் விவரிக்கப்பட்ட அருண்மொழிக்கும் வானதிக்கும் இடையிலான காதல் வாழ்வைப் போன்றே சுவைபடக் கூறப் பட்டுள்ளது. தமிழகத்தில் நிகழ்த்த இயலாத மகோன்னதங்களை நிகழ்த்திக் காட்டிய ராஜராஜரின் வாழ்வை கல்வெட்டு மற்றும் தாமிரப் பட்டய ஆதாரங்களைக் கொண்டு எழுதப்பட்ட ஒரு வரலாற்றுக் காவியம் உடையார்.

ராஜராஜரைத் தவிரவும், பெரிய கோயில் என்ற கலை அதிசயத்தின் கட்டுமானக் காலத்தில் அதற்கு உறுதுணையாக இருந்த பலருடைய வாழ்வையும் விவரிக்கிற நூலாகவும் உடையார் விளங்குகிறது.
இப்போது தயாரிப்பில் இருக்கும் உளியின் ஓசை என்ற திரைப்படம் கூட பெரிய கோயிலின் கட்டுமாத்தில் பங்கெடுத்துக் கொண்ட ஒரு சிற்பின் வாழ்க்கைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டவையே.

பொன்னியின் செல்வனில் சற்றேறக் குறைய என்பத்திமூண்றாண்டுகள் வாழ்ந்த ராஜராஜரின் வாழ்வில் முதல் முப்பது ஆண்டுகள் கூட விவரிக்கப் படவில்லை என்பது எனக்குள் ஒரு குறையாகவே இருந்து வருகிறது. உடையார் அந்தக் குறையை நிவர்த்திக்கிறது.

பொன்னியின் செல்வனைப் போலவே உடையாரும் வாசிப்பிற்குகந்த ஒரு நல்ல நூல் என்பதே இதன் வாயிலாக நான் கூற விழைவது.

நன்றி.