Showing posts with label நூல் நயம். Show all posts
Showing posts with label நூல் நயம். Show all posts

Wednesday, July 30, 2008

கன்னித் தமிழின் கண்ணீர்- பா.விஜய்

கவிஞர் பா.விஜய் அவர்களின் அடுத்த அக்னிப்பிரவேசம் படித்திருக்கிறீர்களா? எனக்குப் பிடித்த கவிதை தொகுப்பு நூல்களில் இதுவும் அடங்கும். நீண்ட கவிதைகளைக் கொண்ட குறுந் தொகுப்பு நூல்.

அணைத்தும் தமிழ்ச் சமூகத்தைப் பற்றிய சீர்திருத்த கவிதைகளாக இருக்கும். சில இடங்களில் தமிழக அரசியலையும் குறிப்பிட்டு எழுதி இருக்கிறார். இந்நூலில் எனக்கு பிடித்த ஒரு கவிதையினை இங்குச் சமர்ப்பிக்கிறேன்.

இந்த சமூகம் இருக்கிறதே

சமூகம்

இது

கரும்புக்குக் காத்திருந்தவனுக்கு

சக்கை தரும் சமூகம்


அவன் வீட்டு

அடுப்புக்கு நெருப்பு வைப்பதாய்

இறுதியில்

அவனுக்கே நெருப்பு வைக்கும்


இது

தமிழுக்கு மட்டுமென்ன

தங்க மகுடமா சூட்டும்?


கடையேழு வள்ளல் மட்டும்

கவனிக்காது இருந்திருந்தால்

நமது கவிராஜர்கள்

இலக்கியம் பேசியதாலேயே

இளைத்துப் போய் இருப்பார்கள்.


இவர்கள்

தினசரி இங்கே

திருவோடுகள் ஏந்தினால் தான்

மாதம் ஒருமுறை

கஜானா

கண் திறக்கும்


இப்போதோ

நமது தமிழ் மயில்

உள்ள போகன்கள் எல்லாம்

உலோபிகளாகிவிட்ட காரணத்தால்

விரைவிலேயே

விறைத்துப் போகவிருக்கிறார்கள்.


தமிழிலுள்ள எழுத்தையெல்லாம்

தங்கத்தில் பொறித்தல் வேண்டுமாம்

கேட்டுப் பாருங்கள்

அவன் தங்கத்தை

எழுத்து வடிவத்தில்

பார்த்தவனாக இருப்பான்.


சமுத்திரமாய் இருந்த

சங்கத்தமிழ் முதல்

இப்போதைய

இலக்கியம் வரைக்கும்

இடுப்பில் ஈரத்துணியோடு

இருந்த்வர்கள் எத்தனைப் பேர்?


ஒவ்வொரு கவிஞனின்

இரும்புப் பெட்டியிலும்

இருப்பதெல்லாம் என்ன?

கறையான்களிடம் காப்பாற்றப்பட்ட

ஒரு சில

ஓலைச்சுவடிகளைத் தவிர!


தமிழ்

தனக்கும் சேர்க்கவில்லை

தன்னை அண்டியவனை

சேர்க்கவும் விடவில்லை.


தமிழனின் கண்களில்

விழுந்த தூசை

துடைப்பதற்கு வந்தவன் கையில்

ஆயுதம்

நமக்கோ கைகளில்லை.


அதனால் தான்

சரித்திரம் என்கிற நதி

ஒரு கரையில் சோலையிலும்

ஒரு கரையில் பாலையிலும்

ஓடிக் கொண்டிருக்கிறது.


நமது அறிஞர்களோ

நல்லதொரு சமுத்திரத்தில்

அலைகளைப் பிடிக்க

வலைகளை வீசுகிறார்கள்.


தமிழுக்காக வாழ்ந்து

தமிழுக்காக இறந்தவன் ஒருவன்

இப்படி எழுதினான்.


தமிழில்

எவ்வளவுக்கு எவ்வளவு

இளமை இருக்கிறதோ

அவ்வளவுக்கு அவ்வளவு

வறுமையும் இருக்கிறது.


ஒன்று மட்டும் உறுதி

தமிழைக் காப்பாற்றுங்கள் என

தானாக சென்று எவனையும்

அழைக்கவும் முடியாது.

அப்படிக் காப்பாற்ற வந்தவன்

பிழைக்கவும் முடியாது.


காரணம் தமிழில்

கல்வெட்டுகள் இருக்கிறதே தவிர

பொன்வெட்டுகள் இல்லை.


தமிழ்ச்சாதி

சிந்தை பொங்கி

சித்ததானம் செய்யலாம்.

ஆயின்

அதற்கு இன்னமும்

ரத்ததானம் செய்தல்

அவசியமாக இருக்கிறது.


போகிற போக்கைப் பார்த்தால்

தமிழ்க் கருவூலமே என்று

வருத்தம் உண்டாகிறது.


தோனியைப் போலல்லாமல்

ஆணியடித்ததைப் போல்

அமர்ந்தே கிடந்தாலும்

அரசாங்க உத்தியோகம் தேவலை.


ஆம்

மாதம் ஒருமாரியாவது

அரசாங்க மேகம்

அபிஷேகம் செய்கிறது.


நமது தமிழ்

தானும் சேர்க்கவில்லை

தன்னை அண்டியவனை

சேர்க்கவும் விடவில்லை.

Sunday, July 13, 2008

நூல் வெளியீடு: கிள்ளான் & ஈப்போ

ஜூலை 14, திங்கட்கிழமை மாலை 5 மணியளவில், அரச நகர் கிள்ளானில் உள்ள லக்சமனா அரங்கில் ‘வேராக நீ; நிழலாக நான்’ எனும் நூல் வெளியீடு காண்கிறது.
சிறுகதை எழுத்தாளர் எஸ்.எம்.ஆறுமுகம் தான் எழுதிய சிறுகதைகளைத் தொகுத்து வேராக நீ-நிழலாக நான் என்னும் பெயரில் வெளியிடுகிறார். மலேசிய எழுத்தாளர் சங்கத் தலைவர் பெ.இராஜேந்திரன் சிறப்புரை ஆற்றும் இந்த நிகழ்வில் எழுத்தாளர் ப.சந்திரகாந்தம் நூலாய்வுரை வழங்குகிறார்.

இலக்கிய ஆர்வாலர்களும் தமிழன்பர்களும் இந்த நூல் வெளியீட்டு நிகழ்வில் கலந்து சிறப்பிக்குபடி ஏற்பாட்டாளர்கள் கேட்டுக் கொள்கின்றனர்.


*****

'மலேசிய இந்தியர்கள் ஓராய்வு' எனும் நூல் எதிர்வரும் 27 ஜூலையில் வெளியீடு காண்கிறது. க.கலைமுத்து எழுதிய இந்நூல் ஈப்போ காயிங் சங்க மண்டபத்தில் மாலை 4 மணியளவில் தமிழ் மற்றும் ஆங்கிலம் மொழிகளில் வெளியிடப்படுகிறது.

இந்நூல் விலை ரி.ம 40 வெள்ளிக்கு சந்தையில் விற்பனைக் காணவுள்ளது. வெளிநாட்டுச் சந்தையில் இந்நூல் அமெரிக்க டாலர் 20க்கு விற்கப்படும். நிகழ்வின் அன்று இந்நூலை வாங்க விரும்புபவர்கள் ரி.ம 30 வெள்ளிக்குப் பெற்றுக் கொள்ளலாம்.

மலேசிய தமிழ் அன்பர்கள் இந்நூல் நிகழ்வில் கலந்துச் சிறப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Tuesday, July 08, 2008

ம‌லேசிய‌ இந்திய‌ர்க‌ளின் இக்க‌ட்டான‌ நிலை


மலேசிய இந்தியர்களின் இக்கட்டான நிலை எனும் புத்தகம் ஜானகிராமன் ஐயா அவர்களால் எழுதப்பட்டது. இதில் வரும் கவிதை ஒன்றை என்றேன்றும் என்னால் மறக்க முடியாது. இன்றும் கூட இப்புத்தகம் என் கண்ணில் படுகையில் இக்கவிதை வரிகள் என் எண்ண அலைகளை ஆக்கிரமிக்கும். லேசான சோகம் ஒன்று என்னை ஆட்கொள்ளும்.

ம‌லாயாவின் பொருளாதார‌ம் முப்ப‌துக‌ளில் ப‌டுவீழ்ச்சி க‌ண்டிருந்த‌து. இர‌ப்ப‌ரின் விலை மிக‌ மோச‌மாக‌ வீழ்ச்சி க‌ண்டிருந்த‌தால், அத‌ன் உற்ப‌த்தியை அதிக‌மாக‌வே குறைத்துவிட‌ நேர்ந்த‌து. அதனால் த‌மிழ்த் தொழிலாள‌ர்க‌ள் ப‌ல‌ர் திரும்ப‌ இந்திய‌ நாட்டிற்கே க‌ட்டாய‌மாக‌ அனுப்பி வைக்க‌ நேர்ந்த‌து.

அந்நிலையில் பால்ம‌ர‌ம் சீவும் தொழிலாளி ஒருவ‌ன் துரையையும் கிராணியையும் க‌ங்காணியையும் ம‌க்க‌ளையும் விட்டுப் பிரிய‌ ம‌ன‌மில்லாம‌ல் க‌ண்ணீர் சிந்துவ‌தாக‌ ஒரு தொழிலாளியின் நோக்கு நிலையில் ரா.சுப்பிர‌ம‌ணி ஐய‌ர் என்ப‌வ‌ர் ஒரு க‌விதையை இய‌ற்றியுள்ளார். இக்க‌விதையில் தோட்ட‌புற‌ பின்ன‌னி, வாழ்விய‌ல் கூறுக‌ள், ம‌ண்ணின் ம‌ன‌ம் ஆகிய‌ன‌ சிற‌ப்பாக‌ வெளிப‌டுத்த‌ப்ப‌ட்டுள்ள‌ன‌.


போய்வாரேன் பால்ம‌ர‌மே போய்வாரேன் பால்ம‌ர‌மே
போய்வாரேன் பால்ம‌ர‌மே போய்வாரேன் பால்ம‌ர‌மே
க‌ண்ணாடித்துரையும் போனார்
க‌ங்காணி வீர‌ன் போனார்
பின்னாடி கிராணி போனார்
தாங்காம‌ல் நானும் போரேன்
என்ன‌மோ பின்னாலே எப்போதூன்னை
காண‌ப்போரேன்
(போய்)

ப‌வுனுக்கு ப‌வுன்விலையாய்
பாலுவித்த‌க் கால‌ம் போச்சே
புளிவிலைக்கும் தோற்றுப் போச்சே
பாலுவெட்டும் நிறுத்த‌லாச்சே
யார்செய்த‌ மோச‌ம் பாராய்
எவ‌ரிட்ட‌சாப‌ம் கூறாய்
(போய்)

ரொட்டிப்பால் ஒருவிலையும்
ஒட்டுப்பால் ஒருவிலையும்
ப‌ட்டைக்கு ஒருவிலையும்
(பாலு) கொட்டைக்கு ஒருவிலையும்
த‌ங்க‌ம்போல் விலைத‌ந்தாய்
ப‌ங்க‌மாய் நிலைகுலைந்தாய்
(போய்)

தீபாவ‌ளி ப‌டியென்றும்
பொங்க‌லுக்குப் பொடியென்றும்
சீராய்கொடுத்த‌ எந்த‌ன்
சிரித்த‌முக‌த்துத் துரை
கையைத்தான் விரிகிறாரே
காசென்று கேட்டாலிப்போ
(போய்)


க‌ற்ப‌க‌மென்று சொல்வார்
க‌ண்ட‌தில்லை இவ்வுல‌கில்
க‌ற்ப‌க‌ம் என்று சொல்ல‌
க‌ண்க‌ண்ட‌ ம‌ர‌மும் நீயே
கால‌மே கோல‌மோ
காப்பாற்றுவார் இல்லையே
(போய்)

உன்னைந‌ம்பி வாழ்ந்த‌வ‌ர்க‌ள்
எத்த‌னை பேர்க‌ளுண்டு
அத்த‌னை பேர்க‌ளுமே
அழுதுகொண்டு போகுறாரே
உயிர‌ள‌வும் ம‌ற‌க்க‌மாட்டேன்
ஊருக்குப் போய்வாரேன்
(போய்)


ஆதார‌ம் ம‌லேசிய‌த் த‌மிழ் க‌விதை மாநாடு
ம‌ல‌ர் 2000 ப‌க்க‌ம் 153

ந‌ன்றி : திரு.ஜான‌கிராம‌ன் (ம‌லேசிய‌ இந்திய‌ர்க‌ளின் இக்க‌ட்டான‌ நிலை)

Thursday, July 03, 2008

நூல் நயம்: சாண்டில்யனின் ராஜ யோகம்


உடையார் நாவல் வந்து சேரும் இந்தத் தறுவாயில் சாண்டில்யனின் ”ராஜ யோகம்” எனும் நாவலை வாசித்து முடித்தேன். கடல் புறாவைப் போல வளவளவென இழுவையாக இல்லாமல் கனகச்சிதமாகச் சொல்ல வேண்டியதைச் சொல்லி முடித்திருக்கிறார் சாண்டில்யன்.

பொன்னியின் செல்வனைப் படித்து முடித்த போது, சரித்திர நாவல் என்றால் சோழர் கதைகளை மட்டுமே படிக்க வேண்டும் என நினைத்திருந்தேன். தவிர்க முடியாத காரணத்தின் பேரில் மற்ற நூல்களையும் படிக்கும் சூழ்நிலை உருவாகிவிட்டது.

குலசேகர பாண்டியன் காலத்தில் ஏற்பட்ட அரியனை போட்டியை மையமாகக் கொண்டு இந்நாவல் தொகுக்கப்பட்டுள்ளது. குலசேகர பாண்டியன் மணிமுடியைத் தன் இளய மனைவியின் மகனான வீரபண்டியனிடம் கொடுக்க நினைக்கிறான். பட்டத்து ராணியின் முதல் மகனானவன் சுத்தரபாண்டியன். பதவியாசையின் பேரில் தந்தையையும் கொல்லத் துணிகிறான். பாரபட்சம் பார்க்காமல் பல கொடூரங்களை புரிகிறான்.

இக்கதையின் நாயகன், நாயகி எனும் கற்பனைப் பாத்திரங்கள் அவசியத்தின் பேரில் படைக்கப்பட்டிருந்தாலும், அப்துல்லா வாஸப் எனும் சரித்திர ஆசிரியன் தான் உண்மையான நாயகன்.

வாஸப் தனது சரித்திர ஆராய்ச்சிக்காகப் பாரசீகத்திலிருந்து பாண்டிய நாட்டிற்கு பயணம் மேற்கொள்கிறான். பாண்டிய நாட்டில் காலடி வைக்கும் வாஸப் எதிர்பாரா விதமாக அரசியல் சிக்கலில் அகப்பட்டுக் கொள்கிறான்.
பல முயற்சிகள் செய்தும் கடைசியில் பண்டிய நாட்டு மன்னனை காப்பாற்ற முடியாமல் போகிறது. அரியணை மீது இருந்த பேராசையில் மகனே தன் தந்தையை குத்திக் கொல்கிறான். நாட்டில் தாயாதிச் சண்டை எற்படுவதற்கு முன் பாண்டிய மண்ணிலிருந்து கிளம்புகிறான் வாஸப்.

கடல் புறாவில் இருந்ததைவிட இந்நாவலில் சிருங்கார ரசமும், பெண் வர்ணனையும் சற்றுத் தூக்கலாகவே இருக்கிறது. ஒரு அத்தியாயத்தில் சாண்டில்யன் ராஜ யோகத்தை எழுதுவதை மறந்து காம சூத்திரத்தை எழுதுகிறாரா என்ற எண்ணமும் உண்டானது.

இந்நாவலை படித்து முடித்த போது சில வரிகள் என்னுள் நீங்காமல் இருந்தது அவை:

ஒரு கட்டத்தில் நாயகனான இளம்பிரிதி வாஸப் தொழுகை புரியும் சமயத்தை காத்து நிற்கிறான். அப்போது எதிரியிடம்:

“தொழுகை ஆண்டவனை பற்றியது. அவனுக்குப் பெயர்கள் பல இருக்கலாம். அவன் ஒருவன் தான். நதிகள் பல உற்பத்தியானாலும் கடைசியில் கடலைச் சேருவது போல, தொழுகை யார் செய்தாலும் அது ஒருவனான ஆண்டவனைச் சேர்கிறது. இது இந்து மதம் சொல்லும் தத்துவம். தொழுகை- அதை யார் செய்தாலும் அதை காப்பது இந்துவின் கடமை”.

இளம்பிரிதி வாஸப்புடன் உரையாடுகையில்:

“வாஸப்! மரணம் நகைப்புக்கு இடமானதா”

“ஆம் இளம்பரிதி, நிரந்தரமானது அது ஒன்றுதான். நிச்சயமாய் எந்த மனிதனுக்கும் இன வித்தியாசம் இன்றி வருவது அது ஒன்றுதான். அதை நினைத்து மனிதன் நடுங்குகிறான். நடுங்குவதற்காக அது விடுவதில்லை. ஆகவே அதை அலட்சியப்படுத்துவது தான் விவேகம். நகைப்பதுதான் அறிவின் அடையாளம்.”

அடுத்ததாக:

“இனப்பற்று, மொழிப்பற்று இல்லாத சமுதாயம் சக்தியுடன் வளர முடியாது”

ஒரு கட்டத்தில் இளம்பிரிதி நாயகியான அல்லியுடன் காதல் மொழி பேசுகிறான். அது வாஸப் காதில் விழவும் வாஸப் நினைக்கிறான்:

“மண்ணாசையும் பெண்ணாசையும் யாரை விட்டது. பெண் அருகில் இருக்கும் போது எந்த ஆண்மகன் ஆபத்தை பற்றி நினைக்கிறான்”.

இப்படி இன்னும் பல சுவாரசியமான வரிகள்.
அடுத்த்தாக அரசர்களுக்கு ஜாதகத்தில் கூறப்படும் ராஜ யோகங்களை பற்றியும் ஒரு கட்டத்தில் விவாதிக்கிறார்கள்:

அவையனது, அபவாத ராஜயோகம், அனுபவ ராஜயோகம், ஸ்வத ஸித்த ராஜ யோகம், சாமான்ய ராஜயோகம், விஷய போக ராஜயோகம், அதிகார ராஜயோகம் மற்றும் பகுமான ராஜயோகம்.

இது மட்டும் இல்லாமல் பல பரிமாணங்களில் அலசி ஆராய்ந்து பண்டிய நாட்டில் அந்நாளய சூழலை நமக்கு ராஜ யோக விருந்தாகப் படைத்திருக்கிரார் சாண்டில்யன்.

Thursday, June 19, 2008

வைரமுத்துவின் - வானம் தொட்டுவிடும் தூரம்தான்

தலைப்பு: வானம் தொட்டு விடும் தூரம்தான்

ஆசிரியர்: கவிப்பேரரசு வைரமுத்து

நயம்: சமூக நாவல்

பதிப்பகம்: சூர்யா

எனது செகரிப்பில் உள்ள புத்தகங்களில் கவிதை நூல்களும் அடங்கும். அதில் அதிக இடத்தை பிடித்திருப்பது கவிப்பேரரசு வைரமுத்துவின் கவிதை நூல்கள். பா.விஜய், கவிஞர் கண்ணதாசன், அறிவுமதி மற்றும் சில உள்ளூர் கவிஞர்களின் கவிதை நூல்கள் இருப்பினும், நேரம் அனுமதிக்கும் சமயங்களில் நான் அதிகம் புரட்டிப் பார்ப்பது கவிப்பேரரசின் கவிதை வரிகள்தான்.

சென்ற வருடம் கவிதை நூல்கள் தேடிக் கொண்டிருந்த பொழுது தட்டுப்பட்டது “வானம் தொட்டுவிடும் தூரம்தான்” எனும் புத்தகம். கவிதை நூலாக இருக்கும் என நினைத்துதான் கையில் எடுத்தேன். பின்னால் திருப்பிய பொழுது ‘இது கவிஞரின் முதல் நாவல்’ என அச்சிடப்பட்டிருந்தது.

இதற்கு முன் கவிஞரின் ‘சிற்பியே உன்னை செதுக்குகிறேன்’ என்ற கட்டுரை புத்தகத்தை வாசித்துள்ளேன். அதிக அளவிளான புத்திமதிகளை ஒரு இளைஞனுக்கு ஒரே புத்தகத்தில் புகட்ட முயற்சித்திருப்பது சற்று திகட்ட வைத்தது. அவரின் கவிதை வரியிலான புத்திமதிகளை ஏற்றுக் கொண்டு மனதையும் தேற்றிக் கொண்டேன்.

கையில் எடுத்த புத்தகத்தை வைக்க மனம் இல்லாமல், சரி என்னதான் இருக்கும், ஒரு கை பார்த்துவிடலாம் என வாங்கிவிட்டேன். உரைநடையில் கதையை எதிர்பார்ப்பவர்களுக்கு இந்நாவல் ஏமாற்றமாய் அமையலாம். உரைநடையையும் கவிதை தேனில் கலந்து கொடுப்பது கவிஞரின் பாணி.

நான் படித்து முடித்த பிறகு என் நண்பர் ஒருவர் இந்நூலை இரவல் வாங்கினார். இரண்டு வாரம் கழித்து “என்னால இரண்டு அத்தியாயத்துக்கு மேல முடியல மச்சி, நீங்களே வச்சிகுங்க” என திருப்பித் தந்துவிட்டார்.

நீங்கள் படிக்கும் போது வரிக்கு வரி இருக்கும் கவிதை வாடை உங்களை முகம் சுழிக்க வைக்கலாம். அதை ரசித்துக் கொண்டே புரட்டினால் நிச்சயம் இரண்டு நாட்களில் முடித்துவிடலாம்.

கதையின் நாயகன் வாஞ்சிநாதன், நாயகி செல்வி, மற்றும் முக்கிய கதா பாத்திரம் செந்தோழன். பட்டபடிப்பை முடித்துவிட்டு கிராமத்தில் இருக்கும் ஒரு இளைஞர் கூட்டத்தை சுற்றி நடக்கும் கதைக் கரு. வேலையில்லாமல் வாழ்க்கையை தேடிக் கொண்டிருக்கும் ஏழை இளைஞர்களுள் ஒருவன் தான் கதையின் நாயகன். அவன் செல்வியின் மேல் காதல் வயப்படுகிறான். யார் இந்த செல்வி? அந்த ஊர் பெரியவர் சங்கரலிங்கத்தின் மகள். சங்கரலிங்கம் கதையின் வில்லன்.

தனது சூழ்ச்சியாலும் தந்திரத்தாலும் ஊர் மக்களை தன் பிடியில் வைத்திருக்கிறான் சங்கரலிங்கம். சங்கரலிங்கத்தின் சூழ்ச்சியை ஊர் மக்களுக்கு உணர வைத்து வாஞ்சிநாதனையும் செல்வியையும் இணைத்து வைப்பதே கதைச் சுருக்கம். இந்நூலை வாசித்து முடித்தபோது பழைய சினிமா படத்தை பார்த்த கசப்பு உண்டானது. புதிய பாணியில் என்றால் சிம்புவின் படம். வித்தியாசமான நடையில் இருக்கும் நாவலை படித்த மகிழ்ச்சியும் உண்டானது.

கதையை படித்து முடித்த போது ஒரு கேள்வி என்னுள் எழுந்தது. “பணக்கார பெண்ணை கூட்டிச் சென்று திருமணம் செய்து கொண்ட வேலை இல்லா இளைஞன் இனி எப்படி வாழ்க்கையை நடத்தப் போகிறான்?”

இது கவிஞரின் முதல் நாவல் என்பதை மனதில் வைத்து ஏற்றுக் கொண்டாலும், ஒரு மாறுதலுக்காக கதையை வேறு கோணத்தில் கொடுத்திருக்கலாம் என்பது என் எண்ணம்.

சுவாரசியமான உரைநடை நாவலை எதிர்பார்ப்பவர்களுக்கு இந்நாவல் கசப்பு.
கவிதை வரியை நேசிப்பவர்களுக்கு தித்திப்பு.

பொன்னியின் செல்வன்- யாருடைய காதல் உயர்ந்தது? (இறுதிப் பதிவு)

(பொன்னியின் செல்வன்)


இது இத்தொடரின் கடைசிப் பதிவு.
முந்தய பதிவுகளை படிக்க இங்கே சுட்டவும் பகுதி1 பகுதி2

வானதி பொன்னியின் செல்வன் மேல் கொண்ட காதல்

சிறுபிராயத்திலேயே தாயை இழந்து , பின் தந்தையையும் சீக்கிரமே பறி கொடுத்துவிட்டு அன்புக்கு ஏங்கி நின்ற இந்த சிறு பெண்ணுக்கு, வாழ்வில் ஒரே பிடிப்பு என்பது தாய் பாசத்தையொத்த இளைய பிராட்டியின் அன்பு தான் … பருவம் வந்த பின்னும் கூட, குந்தவைக்கு அவள் குழந்தையாகவே தெரிந்தாள் …

ஆனால் வல்லிய விதியானது அவளையும் விட்டுவிடவில்லை … வந்தது ஒரு காட்டுப் பூனையின் ரூபத்தில்…. பூனையோடு பொருந்த (அதாவது சண்டையிட ….) யானை மேல் வந்தான் ஒருவன் … வேடிக்கையாக இல்லை ? ஆனால் கேவலம் பறவை இனமென்று பாகுபாடு பாராமல் , அந்த இளம் குஞ்சுகளின் உயிரைக் காத்த அந்த கருணைமிகு இதயம் … யாராக இருப்பன் அந்த யானைப் பாகன்? களங்கமில்லா தூய பால் போன்ற அவள் மனதை கொள்ளை கொண்டவன் யார் ? என்ற எண்ணங்கள் அவளுக்குள் மீண்டும் மீண்டும் தோன்றி அவளை இன்பமாக வதைத்தன …

வெளி உலகம் என்றால் என்ன என்பதையே அறியாது , கொடும்பாளுர் ஒன்றே உலகம் என்று வளர்ந்து வந்த ஒரு அறியாப்பெண்; காதல், களவு போன்றவற்றை கனவில் கூட எண்ணிப்பார்த்திராதவள் … அதனால் … கள்ளம் , கபடம் , கவலை ஏதும் இன்றி மனம் போல் ஆடிப்பாடி , களிப்பில் மூழ்கிக் கிடந்தவளின் உள்ளத்தில் இப்போது ஏதோ ஒரு பெரும் மாற்றம் … மானைப் போல துள்ளிக்கொண்டு திரிந்த கால்களில் இன்று ஒரு சிறிய தயக்கம், தடுமாற்றம் … தோகை விரித்தாடும் மயிலைப்போல வான வெளியெங்கும் சுதந்திரமாக சுற்றி வந்த அவளின் மனம் இன்று கூண்டில் அடைபட்ட கிளியாக ஆகிவிட்டது ஏன் ?

குளத்தில் விழும் கல் தண்ணீரில் வட்ட வட்டமாய் அழகிய அலைகளை எழச்செய்வது போல் … அவளின் உள்ளத்தடாகத்தில் ஒரு அழகிய வீர திருமுகம் இன்ப அலைகளை எழுப்பி விட்டிருக்கிறது …. அந்த அனுபவம் அவளுக்குப்புதிதாக மற்றுமின்றி புதிராகவும் இருந்தது … புரியாத சிலவற்றில் தான் போதையும் , ஈடுபாடும் அதிகம் உண்டாகும் என்பது உண்மையோ? தான் கொடும்பாளூர் இளவரசி என்று அறிந்ததும் அவன் கோபம்கொண்டு விருட்டென்று திரும்பிச் சென்றது ஏன் ? மீண்டும் சந்தித்தால் அவன் ஏன் அவ்வாறு கோபம் கொண்டான் என கேட்கவேண்டும் … அந்த யானைப்பாகனை மறுபடியும் காண முடியுமா ? என்றெல்லாம் அந்த சிறுபெண்ணின் உள்ளத்தில் பலவிதமான எண்ணங்கள் அலை மோதின …

ஆனால் … அவன்தான் இந்த நாட்டு மக்களின் ஆத்மார்த்தமான அன்புக்கு உரியவன் … அரசற்கு அரசர்களை எல்லாம் அடி பணிய வைக்கும் அஞ்சா நெஞ்சன் , வீரத்தில் , கருணையில் , அழகில் இந்த அகிலமே போற்றும் `அருள் மொழி வர்மன் ‘… என்ற உண்மை அவள் உள்ளத்தில் பேரிடியாக இறங்கியது … நாடே போற்றும் இளவரசரை , கேவலம் ஒரு யானை பாகன் என்று நினைத்தோமே ? இந்த அரசே அவனுடையது … அவனுக்கே அரசாங்க உத்யோகம் வாங்கித்தருவதாக சொன்னோமே … என்ன வேடிக்கை , இல்லை .. மூடத்தனம் ? என்றெல்லாம் அவள் நினைத்து உள்ளம் கலங்கிக்கொண்டிருந்த வேளையில், அவன் முன்னே தீபம் ஏந்தி நின்று , அவனை வாழ்த்தி , வெற்றி மலை சூட்டி வழியனுப்ப வேண்டும் என்றால் ? …

தயக்கமும் , குற்ற உணர்வும் , அவற்றோடு பெண்களுக்கே உரிய இயற்கையான அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பென்னும் நால்வகை உணர்ச்சிகளும் ஒருங்கே உந்தித்தள்ள , அவன் தன்னை ஏறெடுத்துப்பார்த்த அந்த நொடியில் , அவள் தன்வசம் இழந்து மூர்ச்சை ஆகிச் சரிந்தாள் … ஆனால் … இது அபசகுனத்திற்கான அறிகுறியல்ல … அவளை அவன் எப்போதும் நினைவில் வைத்திருக்க தூண்டும் நல்லதொரு சந்தர்ப்பம் என்பதையோ … அவனும் , இப்படி ஒரு விசித்திரப்பெண்ணை முதன் முதலில் பார்த்ததைத் தன் ஆயுள் முழுவதும் மறக்கப் போவதில்லை என்பதையோ …, பாவம் , அப்பேதை அறியாள் …
(வானதி)
அவனை ஒரு வேலைக்காரன் என்று பரிகாசம் செய்தது , அவன் போர்க்களம் போகும் சமயத்தில் , விபத்து போல் தீபத்தை தவற விட்டது என்பதையே அவள் மனம் நினைத்து கொண்டிருக்க … அந்த நினைவுகளே அவன் மீது அளப்பெரும் காதலாக உருப்பெற்று வளர்ந்து வருவதை அவள் அறிந்திறாள் …. இருந்தாலும் , அவனை மணந்து கொள்ள இந்த சோழ நாட்டின் ஒவ்வொரு கன்னிப் பெண்ணும் விரும்புவாள் … அதையே தான் செய்தால் … பட்டமகிஷி ஆகும் எண்ணத்திலேயே !!! என்ற ஏளனப்பேச்சும் வரும் … யானைப் பாகனாகவே அவன் இருந்திருக்கக்கூடாதா ?…

“நான் அவனை யானைப்பாகனாக இருக்கும்போதே விரும்பினேன் … அவன் இளவரசனா என்று அப்போது எனக்கு தெரியாது … அதைப்பற்றிய கவலை அப்போது அல்ல எப்போதும் எனக்கு இல்லை , அவன் அன்பு ஒன்றே ஏன் பிறவியின் பயன் , அவன் இதயமே எனக்கு அரியாசனம் “… என்றெல்லாம் அடிக்கடி தனக்குத்தானே பேசிக்கொண்டு , தன் காதலுக்கு உரமேற்றி வளர்த்துவந்தாள் …. பிரதிபலன் எதுவும் எதிர் பாராத காதல் தன்னுடையது என்று நிரூபிக்க ஒரு தருணம் வாராதா என்று வாடி வருந்திக்கொண்டிருந்தாள் …

அத்தகையவனை …ஒரு நாள் கடல் கொண்டு விட்டது !! என்ற செய்தி வந்தால்? … அதை அவள் காதுகள் கேட்டனவா ? இல்லை , அதற்கு முன்னமே அவள் உயிர் அவளிடத்தில் இல்லை என அறிந்து கொண்டாள் … இனி யோசிக்க என்ன இருக்கிறது ? இந்த உடம்பேனும் கூட்டைப்பற்றி இனி என்ன கவலை ? அவனோடு வானவெளியில் நட்சத்திரமாக ஜொலித்திருக்கவும் , சோலைத்தென்றலோடு கூடவே சேர்ந்து வரும் பூக்களின் நறுமணம் போல , அவன் ஆவியோடு சுற்றித்திரிந்திருக்கவும் அவள் தயாராகி விட்டாள் …

ஓடையில் பாய்ந்து தன் உயிரை விட்டுவிட துணித்து விட்டாள் … ஐயோ பாவம் , … அது கைகூடவில்லையே … தன்னைக் கரை ஏற்றிக்காப்பாற்றி, தன் உள்ளம் கவர்ந்தவனோடு தன்னை சேர விடாமல் பிரித்தது யார் என்று தெரிந்து கொள்ள அவள் விரும்பாததில் என்ன ஆச்சரியம் ? ஆனால் …அவனை கடல் கொண்ட செய்தி உண்மையல்ல என்று அறிந்ததும் உண்டான இன்பத்துக்கு அளவே இல்லை … ஆஹா … ஒரு நொடியில் எவ்வளவு பெரிய தவறு செய்ய இருந்தோம் என எண்ணி மகிழ்வதற்குள் … அவன் இன்னொரு பெண்ணை நேசித்துக்கொண்டு இருக்கலாம் என்று கேட்கும் படி நேர்ந்ததே … என்ன கொடுமை !!! போகட்டும் … அவன் யாரை விரும்பினாலும் … என் காதல் மாறாது … அவன் உயிரைக்காத்த பெண்ணை அவன் விரும்புவதில் தவறு ஒன்றுமில்லை …. ஆனாலும் , தான் தன் தூய அன்பைக்காட்ட ஒரு வாய்ப்புக்கூட கிடைக்கவில்லையே என்று எண்ணி அவள் இன்னும் வேதனைப்பட்டாள் …

அன்று ஒரு நாள் , காவிரித்தாய் , கரை புரண்டு பொங்கி வந்த தன் அன்பினால் , அவளை குடந்தை ஜோதிடர் வீட்டுக்கூரையோடு சேர்த்துக்கொண்டு சென்ற போதும், தன் உயிரைப்பற்றிய கவலை சிறிதும் அவளுக்கு இல்லை … ஆனால் , தன்னை மீட்க வெள்ளத்தில் குதித்த அந்த ஓடக்காரப்பெண்ணை தான் காப்பாற்ற வேண்டும் , அவள் இளவரசருக்கு செய்த உதவிக்கு , பிரதி உதவியாக தான் அவளைக்காப்பற்றியாக வேண்டும் , இளவரசரின் மேல் உள்ள தன் மெய் அன்பை நிரூபிக்க இது போல் ஒரு பொன்னான தருணம் என்றும் அமையப்போவதில்லை … அந்த முயற்சியில் தான் இறக்க நேரிட்டாலும் , மரணத்தை மனமுவந்து ஏற்றுக்கொள்ள வேண்டும் , அதை இளவரசர் உணரும் போது அவர் கண்களில் துளிர்க்கும் ஒரு சொட்டு கண்ணீர் மட்டுமே தனக்குப்போதும் … என்று எண்ணியே பூங்குழலியை அவள் முதலை வாயினின்று காப்பாற்றினாள்…
ஆனால் அவள் விஷயத்தில் விதியின் விளையாட்டுகள் இனிதாகவே இருந்தன …. தன் மனம் கொண்ட நாயகனும் தன்னை நினைத்து அல்லும் பகலும் மருகுகிறான் என்று அறிவதை விட ஒரு இனிய செய்தி வேறு என்ன இருக்க முடியும் ? அதை அவன் வாயினாலேயே கேட்கும் போது , அந்த நொடிக்க்காகவே தான் உயிர் வாழ்ந்திருப்பதாக அவள் நினைப்பதில் வியப்பொன்றும் இல்லையே ?

தன் காதலன் இறந்த செய்தி கேட்டு தன்னுயிரை விட்டுவிடத்துணிந்தவள் , தன் காதலனைக் காப்பாற்றியவளை தான் காப்பாற்றி, அவன் நன்றிக்கடனை தீர்க்க தன் உயிரையும் கொடுக்க முன்வந்தவள், தன் காதல் அவன் மீது தானே ஒழிய அரியாசனத்தின் மீதில்லை என்ற சபதத்தில் இருந்து வாழும் வரை வழுவாமல் இருந்தவள் … அந்த உத்தமியின் காதல் சாலச்சிறந்தது என்பதில் சந்தேகம் என்ன? ….
முற்றும்..


பொன்னியின் செல்வன் ஒரு அமுத சுரபியை போன்ற நாவல்… எழுதுவதற்கு இன்னும் நிறைய உள்ளன…
எ.கா: 1) மணிமேகலை வந்தியதேவன் மேல் கொண்ட காதல்
2) ஊமை ராணி சுந்தர சோழர் மேல் கொண்ட காதல்
3) பூங்குழலியின் காதல்
4) நந்தினியின் காதல்
இன்னும் நிறைய உள்ளன. காதலை தவிர்த்து மற்ற கண்ணோட்டதிலும் எழுதலாம்.

நன்றி.

Wednesday, June 18, 2008

பொன்னியின் செல்வன்-யாருடைய காதல் உயர்ந்தது ? (2)


(வந்தியத்தேவன்)

முதல் பாகம் இங்கே சுட்டவும்

குந்தவை வந்தியத்தேவன் மேல் கொண்ட காதல்

ஆனால் விதி யாரை விட்டது … எந்த நொடியில் அவள் வந்தியத்தேவனைச் சந்தித்தாளோ குடந்தை ஜோதிடர் வீட்டில்… அப்போது தான் அவள் “பெண்மை” பூத்ததை அவளே அறிகிறாள். வியப்பால் அகன்று விரிந்த தன் பெரிய கண்களால் அப்படியே வந்தியதேவனை விழுங்கி விடுவதுபோல் பார்க்கிறாள் … அவனது களை ததும்பும் திருமுகத்தைக்கண்டதும் தன்னையே இழக்கிறாள் … தன்னையும் அறியாமல் மெல்லிய இளம் காதல் துளிர் விடுவதை உணர்கிறாள் …

ஆனால் ஏதோ ஒன்று தடுக்கிறதே ? அது என்ன ?… பாராளும் மன்னன் மகள் தான், அவனோ ஒரு வழிப்போக்கன் அவ்வளவே … தங்கள் காதல் பொருத்தமானதா என்று மனதுக்கும் , புத்திக்கும் ஒரு பெரும் போராட்டம் அவளுக்குள் தொடங்குகிறது ….

ஆனாலும் மனமே வெல்கிறது … தன்னுடைய நிலையில் இருந்து அவள் ஒரு போதும் இறங்கி வர இயலாது … தனக்கு இருக்கும் பொறுப்புகளை அவள் தட்டிக்கழிக்க முடியாது … எல்லா சாதரண பெண்களையும் போல காதலனே உலகம்… என்று அவனை நினைப்பதையே முழு நேர தொழிலாக (வானதி, மணிமேகலை மற்றும் பூங்குழலி போல்) அவள் செய்ய முடியாது … அதனால் அவள் காதலை மறைத்து வைக்க முயல்கிறாள் … அதில் ஓரளவு வெற்றியும் பெறுகிறாள் … காதல் வயப்பட்ட தன் மனதை வந்தியத்தேவனிடம் பெரும்பாலும் அவள் வெளிக்காட்டிக்கொள்வதில்லை … ஆனால் , சரியான தருணங்களில் , அதை அவள் வெளியிட தயங்கவும் இல்லை … (சிறைச்சாலையில் , பொன்னியின் செல்வனுக்கு ஓலை கொடுத்து அனுப்பும் போது , சின்னப்பழுவேட்டரயரை தேடிச்சென்று திரும்பி வந்து வந்தியத்தேவன் அவளை பார்க்கும்போது … )




(குந்தவை)


தான் சோழ நாட்டிலேயே இருக்க வேண்டும் என்பதற்காக அவள் வந்தியத்தேவனைப்போல் ஒரு அனாதையைக்காதலிக்கவில்லை … அவன் தனக்கு அடிமை போல் இருப்பான் என்று அவனை மணம் செய்து கொள்ள விரும்பவில்லை … அவ்வளவு சுயநலம் பிடித்தவளும் இல்லை அவள் … ஆனால் சோழ நாட்டின் மீது கொண்ட அன்பால் அவள் கட்டுண்டு கிடந்தாள் … அது அவளே அவளுக்கு இட்டுக்கொண்ட விலங்கு …

பெரிதாக பிரஸ்தாபித்தால்தான் காதல் உயர்ந்ததா என்ன ? இது இரு ஜோடி கண்களின் மௌன கீதம் … ஒரே எண்ணம் உடைய இரு மனங்களினின்று எழும் இனிய ராகம் … அவர்கள் பேசிக்கொள்ளத்தேவை இல்லை … அவர்களின் மனங்கள் இணைந்து விட்டதை அவர்கள் இருவருமே நன்கு அறிவார்கள் … இது ஒரு மென்மையான, மேன்மையான காதல் ….




தொடரும்…

Thursday, June 12, 2008

நூல் நயம்: கடல் புறா



தலைப்பு: கடல் புறா
ஆசிரியர்: சாண்டில்யன்
நயம்: சரித்திர நாவல்
பதிப்பகம்: வானதி

ஆசிரியர் சாண்டில்யனால் எழுதப்பெற்ற கடல் புறாவை படித்தேன். இந்நூல் விமர்சனம் எழுதும் அளவிற்கு எனக்குத் தகுதி இல்லை. படிக்கும் போது ஏற்பட்ட இன்பத்தாக்கத்தை எனது கண்ணோட்டத்தில் எழுதிவிடுகிறேன்.
அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை படித்ததால் ஏற்பட்ட தாக்கம் தொடர்ந்து சரித்திர நாவல்களை படிக்கத் தூண்டிற்று. சரித்திர நாவல்களை சேமித்துக் கொண்டும் வருகிறேன்.

தமிழர்களால் கண்டரியப்பட்ட கடாரத்தின் வரலாற்றை அறிந்து கொள்ள வேண்டுமென்ற ஆவல் எனக்குள் அதிகமாய் இருந்தது. ஆனால் தற்சமயம் ‘கெடா’ என அழைக்கப்படும் கடாரத்தின் வரலாற்றுக் குறிப்புகள் மிகவும் சொற்பமாகவே உள்ளன. மலாய்காரர்களின் ஆதிக்கத்திற்குப் பிறகு நடந்த வரலாற்றுக் குறிப்புகளே அதிகம் காணப்படுகின்றன.

இப்புத்தகத்தை வாங்குவதற்கே போதும் போதும் என்றாகிவிட்டது. ஆரம்பத்தில் தேடிய இடங்களில் 140 ரிங்கிட்டிற்கும் குறையாமல் சொன்னார்கள். அப்படி இப்படியென்று கோலாலம்பூரில் சற்று குறைந்த விலைக்குக் கிடைத்தது. தடித்த அட்டை கொண்ட மூன்று பாகங்கள். புத்தகத்தின் வாசனையே தனிதான்.

ஆடி 18-ம் நாளில் பொன்னியின் செல்வன் தொடங்குவது போல், கடல் புறா ஒரு சித்திரா பௌர்ணமியன்று தொடங்குகிறது. கதையின் நாயகன் கருணாகர தொண்டைமான். அவருக்கு காஞ்சனா தேவி மற்றும் மஞ்சளழகியென இரு காதலிகள்.

ஜெயவர்மனின் ஸ்ரீவிஜய கொடுங்கோலாட்சிக்கு எதிராக, அவரின் சகோதரர் குணவர்மர் (காஞ்சனா தேவியின் அப்பா), சோழரின் உதவியை நாடுகிறார். தன் மகளுடன் கலிங்கத்தின் பாலூர்ப் பெருந்துறையில் இறங்குகிறார் குணவர்மர். ஸ்ரீவிஜயத்திற்கும் கலிங்கத்திற்கும் ஏற்கனவே நட்புறவு இருக்கிறது. இதன் வழி ஜெயவர்மன் கலிங்கத்தின் உதவியோடு குணவர்மனை தீர்த்துக்கட்ட திட்டம் போடுகிறான்.

இச்செய்தி சோழப் பேரரசுக்குத் தெரிந்துவிடுகிறது. குணவர்மனையும் அவர் மகள் காஞ்சனா தேவியையும் காத்து அழைத்து வர வீரராஜேந்திர சோழ தேவர் கருணாகர பல்லவனை கலிங்கத்திற்கு அனுப்புகிறார். அத்துடன் சமாதான ஓலை ஒன்றையும் கொடுத்து தென் கலிங்க மன்னன் பீமனிடம் சேர்ப்பிக்க உத்தரவிடுகிறார். பாலூர்ப் பெருந்துறை சுவர்ண பூமியின் திரவுகோலாக திகழ்கிறது.

இதன் மமதையில் தன்னை சுற்றியுள்ள நாடுகளின் கடல் ஆதிக்கத்தை ஒடுக்க நினைக்கிறான் கலிங்கத்து மன்னன். முக்கியமாக கடலோடிகளாக சிறந்து விளங்கிய தமிழர்களின் ஆதிகத்தை. கலிங்கத்தில் வசிக்கும் தமிழர்களையும் தமிழ் வணிகர்களையும் சிறையில் அடைத்து சித்திரவதை செய்கிறான்.

கருணாகர பல்லவன் கொண்டு வரும் ஓலையை சற்றும் மதிக்காமல் தூக்கியெரிகிறான். பல்லவனையும் அவனை சார்ந்தவர்களையும் சிறை செய்து மரண தண்டனை வழங்குகிறான். அபாயத்தில் இருந்து தப்பி செல்கிறார்கள்.
கலிங்கம் மற்றும் ஸ்ரீவிஜயத்தின் கொட்டத்தை அடக்க தீர்மானம் எடுக்கிறான் கருணாகர பல்லவன். முதலில் கலிங்கத்தின் கடல் ஆதிக்கத்தை உடைக்கிறான். பிறகு குணவர்மனை ஸ்ரீவிஜய பேரரசின் அரியனையில் ஏற்றுகிறான். இம்முயற்ச்சிக்கு துணையாக உருவாவதே கடல் புறா எனும் போர் கப்பல்.

பொன்னியின் செல்வனைப் போல் கதை சுற்றி வலைத்துக் கொண்டுச் செல்லப்படவில்லை. கதாபத்திரங்களும் குறைவாக இருப்பதால் கதை சரலமாகப் போகிறது. இரண்டாம் பாகத்தில் அளவு கடந்த சிருங்கார ரசமும் வர்ணனைகளும் சற்று எரிச்சலூட்டுகிறது. பாதிக்கு மேல் கதை சூடுபிடித்து ஆர்வமூட்டுகிறது.

இக்கதையில் வரும் முக்கிய கதாபாத்திரங்கள்:

கருணாகர பல்லவன்: சோழர் படைத் தலைவன். இளைய பல்லவன் என அழைக்கப்படுகிறான். தந்திரசாளியும் புத்திசாளியும் கூட. ஸ்ரீவிஜய வெற்றிக்குப் பிறகு வீர ராஜேந்திர சோழ தேவர், கருணாகரனை வண்டை மாநில சிற்றரசானாக்கி காஞ்சனா தேவியையும் மஞ்சளழகியையும் மணம் முடித்து வைக்கிறார். (ஒரே கல்லில் மூன்று மாங்காய்). வண்டை மாநில அரசானான பிறகு தொண்டைமான் என அழைக்கப்படுகிறான்.

காஞ்சனா தேவி: கட்டழகி காஞ்சனா கடாரத்தின் இளவரசி. இவளின் துணிச்சல் கருணாகரனுக்கு இவள் மீது காதல் கொள்ளச் செய்கிறது.

மஞ்சலழகி: ஸ்ரீவிஜய பேரரசின் இளவரசி. ஆக்ஷய முனையின் தலைவி.
அநாபய சோழர்: பிற்காலத்தில் குழோதுங்கன் என பெயர் பெற்று விளங்குகிறார். கருணாகரனின் நண்பன்.

அகூதா: சீனக் கடல் கொள்ளைக்காரன். கருணாகரன் மற்றும் அமீர் என பலருக்கு பயிற்சியளிக்கிறார். பிற்காலத்தில் சீன தேசத்து அரசனாக திகந்தவர்.

அமீர்: இரக்க மனம் கொண்ட அரபு நாட்டு முரடன். கருணாகரனின் உப தலைவனாக பணியாற்றுகிறான்.

கண்டியதேவன்: கருணாகரனின் உபதலைவன். கப்பல் விடுவதில் திறமைசாளி.

அமுதன்: வணிகன். செல்வத்தை பாதுகாப்பதில் சிறந்தவன்.

அகூதாவின் கதாபாத்திரம் ஆர்வமூட்டும் வகையில் இருக்கிறது. இரண்டாம் பகுதிக்கு மேல் அவரை பற்றிய தகவல்கள் எதுவும் இல்லாமல் போகிறது. அக்ஷய முனையின் தலைவனாக இருக்கும் பலவர்மனின் கதியும் அப்படியே. கல்கியை போல், இக்கதையின் ஆசிரியர் அவர்களின் சில தகவல்களை கொடுத்து கதையை முடித்திருக்கலாம்.

கதையின் கடற்போர் தந்திரங்களும், திருப்புமுனைக்களும் சுவை கூட்டியுள்ளன. கதையை படிப்பதற்குத் திகட்டாமல் இருக்கச் செய்கிறது. பெண்களை வர்ணனை செய்வதில் சாண்டில்யனை அடித்துக் கொள்ள முடியாது போலும். மஞ்சலழகியின் உண்மையான பெயரும் கடைசி வரையில் தெரியாமல் போகிறது.

ஸ்ரீவிஜய வெற்றியோடு கதை நிறைவை அடைகிறது. அதற்கடுதாற்போல் கலிங்கத்தின் படையெடுப்பு போன்றவை வேறு நாவல்களில் உள்ளனவா என தெரியவில்லை. இருந்தால் தெரிவிக்கவும். தரை போர் முறைகளைதான் அதிக அளவிலான சரித்திர நாவல்களின் கண்டிருப்போம். சரித்திர நாவல் பிரியர்களுக்கு கடல் புறா கண்டிப்பாக ஒரு வித்தியாசமான விருந்தாக அமையும்.