Friday, June 27, 2008

விடியலைத் தேடி

“டேய் ராஜபாகு உங்க ஆத்தா அங்க தூக்கு மாட்டிகிடுச்சுடா, ஆட்டம் போட்டுகிட்டு இருக்க, கிறுக்கு பயலே”, என்று வாயில் இருந்த வெற்றிலை எச்சில் தெரிக்க கத்தினாள் காத்தம்மாள் கிழவி. ஐயோ என்ன இது! கிழவியின் வார்த்தைகள் ஆயிரம் சம்மட்டிகளைச் சேர்த்து வைத்து என் இதயத்தில் அடித்ததைப் போல் இருந்தது. காத்தம்மாள் கிழவி எங்கள் கிராமத்தின் ‘செய்தியாளர்’. தகவல் கிடைத்திருக்காமல் இப்படிச் சொல்லியிருக்க மாட்டாள்.

எங்கள் கிராமத்தில் புதன் கிழமை மாலை வேளைகளில் ரொட்டிக்காரர் வருவது வழக்கம். அவரது மோட்டார் சைக்கிளின் ‘ஹார்ன்’ சத்தத்தை கெட்டவுன் என் நாவில் எச்சில் ஊறத் தொடங்கிவிடும். எனக்கு அப்பொழுது ஏழுவயதுதான் இருக்கும். கிராமத்து பகுதியில் உள்ள தமிழ் பள்ளியில் ஆரம்பக் கல்வியை தொடங்கிய காலகட்டம்.

அன்று ஐந்து மணி வாக்கில் ரொட்டிக்காரரின் மோட்டார் சைக்கிளின் ‘ஹார்ன்’ சத்தம் கேட்டது. என் கால்கள் ஓர் இடமாக நிற்காமல் அலைமோதிக் கொண்டிருந்தது. வாரத்திற்கு ஒரு ரொட்டியாவது வாங்கிச் சுவை பார்க்காவிட்டால் என் மனம் வாடி வதங்கிவிடும். என் தேவையை அறிந்த அம்மா ஐம்பது காசை என் கையில் கொடுத்தார். போய் ரொட்டி வாங்கி சாப்பிடுடா கண்ணா என்று என் தலையை வருடி அனுப்பி வைத்தார். எனக்குப் பிடித்த பால் ரொட்டியை வாங்கிக் கொண்டு கோவிலுக்கு அருகில் இருந்த குட்டிச் சுவரில் அமர்ந்துக் கொண்டேன். முதல் கடியை வைப்பதற்குள் காத்தம்மாள் கிழவியின் அதிரடிக் கூச்சல் சத்தம் என்னைச் சிதறடித்தது.

கடவுளே! ஏன் இந்த சோதனை? நான் வெளியே வந்து இன்னும் பதினைந்து நிமிடங்கள் கூட ஆகவில்லையே. அதற்குள் ஏன் அம்மா இப்படி செய்துவிட்டார்? எனக்கு ஆதரவாக இருந்தது அம்மா மட்டும்தானே? இனி யார் என்னைப் பார்த்துக் கொள்வார்கள்? நொடிப் பொழுதில் ஆயிரம் கேள்வி அம்புகள் என்னைத் துளைத்தெடுத்துக் கொண்டிருந்தன. சட்டெனச் சுவரில் எட்டிப் பாய்ந்தேன். என் கையில் இருந்த ரொட்டித் துண்டு முண்டியடித்துக் கொண்டு மண்னை கவ்வியது. வீட்டிற்கு விரைந்து ஓடினேன்.

கட்டிலில் அம்மாவின் பிரேதத்தைக் கிடத்தி வைத்திருந்தார்கள். கண்களை திறந்த வண்ணம், சற்று வெளியே தள்ளிய நாக்குடன் அசைவற்ற ஜடமாய் விரைத்து போய் கிடந்தார். என் கண்ணீர் வற்றும் வரை அழுது தீர்த்தேன். அனைத்து இறுதிச் சடங்குகளும் நடந்தாகிவிட்டது. என் அப்பாவோ வீட்டு பக்கம் திரும்பிக் கூட பார்க்கவில்லை. இனி என்னை வந்து அழைத்துச் செல்வார் என எதிர்பார்த்துக் காத்திருந்தால் அது என் முட்டாள் தனம்தான்.

நான் சாதரண நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவன். என் அப்பா வெளியூரில் தங்கி வேலை செய்து கொண்டிருந்தார். அவ்வப்பொழுது பணம் அனுப்பி வைப்பார். இரண்டு அல்லது மூன்று மாதத்திற்கு ஒருமுறை வீட்டிற்கு வந்துச் செல்வார். தந்தையின் பாசம் கிடைக்காதவனாய்த் தான் வளர்ந்தேன். இந்தச் சூழலில் என் அம்மா யாருடைய உதவியையும் எதிர் பார்க்கவில்லை. வீட்டு வேலைகள் போக, ஒழிந்த நேரத்தில் சிறு தையல் வேலைகளை செய்து குடும்பச் செலவுகளைப் பார்த்துக் கொள்வார்.

அம்மா இறப்பதற்கு ஓரிறு தினங்களுக்கு முன் அப்பா வீட்டிற்கு வந்தார். இருவருக்கிடையே ஏற்பட்ட சண்டையில் என் அம்மாவை அடித்துத் துன்புறுத்தினார் அப்பா. அவர்களின் பேச்சு எனக்கு புரியாத புதிராகவே இருந்தது. பயந்து போனவனாய், காரணம் அறிய பக்குவப்படாதவனாய், தடுக்க பலமில்லாதவனாய் ஓர் ஓரமாய் நின்று அழுது கொண்டிருந்தேன். அப்பா தன் துணிமணிகளை எடுத்துக் கொண்டு அன்று இரவே எங்கோ கிளம்பிவிட்டார்.

அதுவே நான் அவரைப் பார்த்த இறுதி நாள். வேறோரு பெண்ணுடன் புதிய உறவை ஏற்படுத்திக் கொண்டதால் தான் இவ்வளவு பிரச்சனைகள் என பின் நாட்களில் அறிந்துக் கொண்டேன். இதன் விளைவாக அனாதையென நடுத்தெருவில் விடப்பட்டேன்.

வீட்டில் காரியம் முடிந்து அனைவரும் கிளம்பிக் கொண்டிருந்தார்கள். “பையனை நாங்க அழைச்சிகிட்டு போய் பாத்துக்குறோங்க”, என்றார் என் தாய் மாமன். தன் குடும்பத்தோடு ஆலோசித்து தான் இந்த முடிவை எடுத்தாரா என்பது இன்றளவில் பதில் கிடைக்காத கேள்விதான். இல்லை இவ்வளவு சொந்தங்கள் இருந்தும் என்னைக் கவனிக்காமல் விட்டால் நாலுபேர் பேசும்படி ஆகிவிடுமோ என்பதற்காக இவ்வாறு கூறினாரோ? அவரது இனிப்பான வார்த்தைகளுக்காக ஊரார் மெச்ச, என்னை அழைத்துச் சென்றார்கள்

வாரங்கள் பல கடந்தது. அவர்களும் என்னைப் பள்ளிக்கு அனுப்புவதாக தெரியவில்லை. வீட்டிலும் என்னை ஒரு பாரமாகவே கருதினர். யாரும் முகம் கொடுத்துப் பேச மாட்டார்கள். மொத்தத்தில் உயிருள்ள ஒரு பொருளாய் நடமாடிக் கொண்டிருந்தேன். என் அம்மாவைச் சம்பந்தப்படுத்தி குத்திப் பேசும் பேச்சுகளும் ஏச்சுகளும் எனக்கு மரத்துப் போய்விட்டது.

“உங்க அம்மா என் கிட்ட கொடுத்து வெச்சிட்டுப் போயிருக்காளா? இல்ல உங்க அப்பன் தான் மாச மாசம் கொட்டிக் குடுக்குறானா? இப்ப படிப்பு ஒன்னுதான் உனக்குக் கேடு”, நான் பள்ளிக் கூடம் போகட்டுமா எனக் கேட்டதற்கு அர்ச்சனை செய்தாள் அத்தை. என் பள்ளிக்கூட கனவுகளுக்கு மூட்டை கட்டி வைத்துவிட்டு அவர்கள் கொடுக்கும் சிறு சிறு வேலைகளை செய்துக் கொண்டு வீட்டிலேயே இருக்க ஆரம்பித்தேன்.

சில சமயங்களில் அம்மா மீது சிறு கோபங்கள் தோன்றி மறையும். அம்மா மட்டும் இருந்திருந்தால் நான் இவ்வளவு கஷ்டப்பட தேவையில்லை. நிம்மதியாகப் பள்ளிக்கூடத்தில் படித்துக் கொண்டுருந்திருப்பேன் என நினைத்து பல நாட்கள் அழுதிருக்கிறேன். நான் அறியாமல் சிறு தவறுகள் செய்தாலும் அதை பெரிதாக்கி அடிவாங்கச் செய்வாள் அத்தை. ஒரு முறை நான் வீட்டை சுத்தமாக துடைக்கவில்லை என பிரச்சனை எழுப்பினாள். “வேளாவேளைக்கு நல்லா தின்னுற தானே, இந்த வேலைய கூட உன்னால ஒழுங்கா செய்ய முடியாதா”, என என் வலது கையில் கம்பியை காய்ச்சி சூடு வைத்தாள்.

சிறு பிள்ளைகளை சித்திரவாதை செய்தால் காவல் துறையினரிடம் புகார் செய்ய வேண்டுமென என் ஆசிரியர் சொல்லிக் கொடுத்திருக்கிறார். ஆனால் அந்த வயதில் அதையெல்லாம் எப்படி செய்வதென்று எனக்கு தெரியவில்லை. சூடுபட்ட காயத்தால் துடிதுடித்துப் போனேன். அன்றிரவே வீட்டை விட்டுத் தப்பி ஓடினேன். சாலையோரமாக நின்றுக் கொண்டிருந்த லாரியில் ஏறி அமைதியாகப் படுத்துக் கொண்டேன்.

நீண்ட பயணத்திற்கு பிறகு லாரி ஓரிடத்தில் நின்றது. சட்டெனப் பாய்ந்து அங்கிருந்து நகர்ந்தேன். என் பெற்றோரின் சுயநலம் பிள்ளையை எப்படியெல்லாம் பாதிப்படைய செய்கிறது. ஊர் பேர் தெரியாத இடம். ஓய்வில்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் மக்களின் நகர வாழ்க்கை. என்ன செய்வதென்று அறியாமல் நாதியற்று கிடக்கும் நான்.

“அண்ணே, நீங்க என்ன வேலை கொடுத்தாலும் செய்யுறேன், கொஞ்சம் சாப்பாடு மட்டும் கொடுங்க’, என்றேன் ஒரு ஒட்டுக் கடை ஓரமாக நின்றவாறு. என்னை ஏற இரங்கப் பார்த்தக் கடைகாரர் “சாப்பாடுலாம் ஒன்னும் கிடையாது கிளம்பு”, என விரட்டினார். பசி மயக்கத்தில் உடல் சோர்ந்து போனேன். வெய்யிலின் தாக்கம் என்னை வறுத்து எடுத்துக் கொண்டிருந்தது. நான் இரண்டு அடி நகர்ந்திருப்பேன் அந்தக் கடைக்காரர் என்னை அழைத்தார். உணவளித்தார்.

திருப்தியாக உண்டேன். என் கதை முழுவதும் கூறி அழுது தீர்த்தேன். அந்த கடைக்காரர் பெயர் முருகேசு. நல்ல மனிதர். எனக்கு சிறந்த ஆலோசகராக விளங்கியவர். “இதோ பாரு தம்பி, சின்ன பசங்களை வேலைக்கு வைச்சிக்கிறது சட்ட படி குற்றம். பக்கத்தில இருக்கும் அன்பு இல்லத்தில் சேர்த்து விடுறேன், பள்ளிக்கூடத்திற்குப் போய் ஒழுங்கா படிக்கனும் புரியுதா”, என்றார். அவரது ஆதரவான வார்த்தைகள் என் வாழ்வில் ஓளி ஏற்றி வைத்ததைப் போல் சந்தோசமாக இருந்தது. சந்தேகத்தால் தான் ஆரம்பத்தில் விரட்டினார் என பிறகு புரிந்துக் கொண்டேன்.

அன்பு இல்லத்தில் இருந்துக் கொண்டு படிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்தேன். முருகேசு அண்ணன் நேரம் கிடைக்கும் சமயங்களில் என்னை கண்டு செல்வார். நானும் பள்ளி விடுமுறைகளில் அவரது கடைக்குச் சென்று சிறு சிறு உதவிகள் செய்து வருவேன். பல சிரமங்களுக்குப் பின் படிப்பை தொடர்ந்தது, படிப்பின் ‘சுவையை’ எனக்கு உணர்த்தியது. பாடங்களை ‘ருசித்துப்’ படிக்க ஆரம்பித்தேன்.

என் அம்மாவின் ஞாபகம் ஒரு கணமும் என்னை விட்டு பிறிந்ததில்லை. நாளுக்கு நாள் அம்மா மீதிருந்த ஏக்கத்தைவிட கோபமே அதிகரித்தது. எத்தனையோ மாதர்கள் கணவனை பிரிந்த பின்னர் தங்கள் பிள்ளைகளை சிறப்பாக வளர்க்கிறார்கள். ஏன் என் அம்மா மட்டும் என்னை நாதியற்று நடுத்தெருவில் நிற்கும்படி செய்தார்?

****************************************
‘டாக்டர் அந்த ‘பேசன்ட்’ சுயநினைவிற்கு திரும்பிட்டாங்க”, என்றாள் என் அறைக் கதவை தட்டிக் கொண்டு உள்ளே வந்தாள் தாதி. என்னை சுதாகரித்துக் கொண்டு பழைய நினைவிலிருந்து திரும்பினேன்.
நான்கு ஐந்து நாட்களுக்கு முன் விஷத்தை குடித்து உயிருக்கு போராடிய பெண்ணை நான் பணிபுரியும் மருத்துவமனையில் சேர்த்திருந்தார்கள். நான் மருத்துவனாக வேலை செய்யத் தொடங்கியதிலிருந்து இதுபோல தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட பல நோயாளிகளைச் சந்தித்திருக்கிறேன். ஆனால் இவள் விசயத்தில், கூடவே அழுது கொண்டிருந்த அவளது பிள்ளைகளை பார்க்கையில் என் மனம் நெருடியது. இவளை காப்பாற்ற முடியவில்லையெனில் இந்தப் பிள்ளைக்ளின் கதி என்னவாகும்?

சுயநினைவிற்கு திரும்பிய அவளை காண சென்றேன். தன் பிள்ளைகளை கட்டியணைத்து அழுதவாறு படுத்திருந்தாள். என்னைக் கண்டவுடன் கண்களை துடைத்துக் கொண்டு தன்னை சரிபடுத்திக் கொண்டாள். அவள் அருகில் அமர்ந்து மருந்தோடு மருந்தாக சில புத்திமதிகளைக் கூற விழைந்தேன். அவளை விட்டுச் சென்ற கணவனின் செயலால் தான் இந்தத் தற்கொலை முயற்சியென அறிந்துக் கொண்டேன். இனி பிள்ளைகளுக்காக வாழ்வை தொடர்வாள் என விழியோரம் பொங்கிய அவளது கண்ணீர் சொல்லியது. அந்தச் சிறு பிள்ளைகளின் வாழ்வில் விடியலை ஏற்படுத்திய மனத்திருப்தி எனக்கு மகிழ்ச்சியளித்தது.

அதிர்வு விசையில் இருந்த என் கையடக்கத் தொலைபேசி அலறியது. அடுத்த முனையில் என் மனைவி பேசிவிட்டு வைத்தாள் இன்று முருகேசு அண்ணனின் நினைவு நாள். ஆறு ஆண்டுகளுக்கு முன் முதுமையின் காரணமாக அவர் காலமாகிவிட்டார். இப்பொழுது எனக்கு ஐம்பத்து நான்கு வயதாகின்றது. சுடர் விளக்காயினும் தூண்டுகோல் தேவை என்பார்கள். என் வாழ்வில் தூண்டுகோலாக இருந்தவர் முருகேசு.
என் தாய் போன்றோரின் கோழைத் தனமான செயல்களால் எவ்வளவு பிள்ளைகள் பாதிக்கப்பட்டிருப்பார்கள். அவர்களில் பலர் சமுதாயத்திற்கும் நாட்டிக்கும் கேடு விளைவிற்பவர்களாகவும் உருவாகி இருக்கலாம். நான் இன்று மருத்துவனாக உருவாகியிருப்பதற்கு காரணம் முருகேசு அண்ணனை போன்றேரின் நல்ல உள்ளங்களால் தான். அவருக்கு நினைவஞ்சலி செலுத்த வேண்டுமெனக் கூறி என் மனைவி தொலைபேசி அழைப்பு கொடுத்தாள். வீட்டை அடைந்தவுடன் முருகேசு அண்ணனின் பெயரில் அர்ச்சனை செய்துவரலாம் என என் மனைவி கூறினாள். சரியெனச் சொல்லி துவாலையை இடுப்பில் முடிந்து கொண்டு குளியலறையை நோக்கிச் சென்றேன்.

(பி.கு: இது எனது இரண்டாவது சிறுகதை. முன்பு வெட்பிரஸ் தளத்தில் பதிவிடப்பட்டு மீண்டும் இங்கு மீள்பதிவு செய்யப்படுகிறது. பிழைகள் இருப்பின் மன்னிக்கவும்.)

6 comments:

Sathis Kumar said...

தூள் கிளப்புறீங்க சார்.. :)

உங்கள் எழுத்துகள் முன்னோடி எழுத்தாளர்களின் சாயலை பிரதிபலிக்கின்றன.. வாழ்த்துகள்.

VIKNESHWARAN ADAKKALAM said...

நன்றி நண்பரே...

சின்னப் பையன் said...

சூப்பரா இருக்குப்பா... இது எப்பவோ எழுதினதா?.... அப்பவே இப்படியா????

இன்னும் நிறைய எழுதுங்க...

Swamy Srinivasan aka Kittu Mama said...

excellent touching story. and the way you have given the story is really gr8.
keep writing!

VIKNESHWARAN ADAKKALAM said...

//ச்சின்னப் பையன் said...
சூப்பரா இருக்குப்பா... இது எப்பவோ எழுதினதா?.... அப்பவே இப்படியா????
இன்னும் நிறைய எழுதுங்க...//

ரொம்ப நன்றி... அவ்வ்வ்வ்வ்

VIKNESHWARAN ADAKKALAM said...

//Kittu said...
excellent touching story. and the way you have given the story is really gr8.
keep writing!//

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி. உங்களின் தொடர் வருகையை எதிர்ப்பார்க்கிறேன்.