1989-ஆம் ஆண்டு. தாய்லாந்து அரசாங்கம் மர ஆலை வேலைகளுக்கு கட்டுப்பாடு விதித்தது. காட்டை நம்பி வாழ்ந்தவர் பிழைப்பில் மண் விழுந்தது. குடும்பத்தைப் பார்க்க வேண்டும், வாழ்க்கை நடத்த வேண்டும். குடும்ப உறுபினர்கள் மட்டும் இல்லை. தொழிலுக்குப் பயன் படுத்திய யானையும் கூடவே இருக்கிறது. அதையும் கவனித்தாக வேண்டும். என்ன செய்வார்கள் இவர்கள்?வயிற்றுப் பிழைப்புக்காக யானைப் பாகனாக உருமாறினார்கள் இவர்கள். யானையை வைத்து வித்தை செய்து பிழைத்து வருகிறார்கள், தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த அவர்கள். இன்றய நிலையில் தாய்லாந்தில் யானை வித்தை புகழ்பெற்றுவிட்டது. வெளிநாடுகளில் இருந்து பலரும் இதைக் காண வருகிறார்கள்.
நகர நடுவிலும், வணிகச் சந்தைகளிலும் இந்த யானைகள் சுதந்திரமாகத் திரிகின்றன. நகரமே அவைகளுக்கு காடு. யானையைப் படம் வரைய வைப்பது, போலோ(POLO) விளையாட வைப்பது. ஞெகிழி வலையத்தில் சுற்ற வைப்பது போன்ற நிகழ்வுகளை நிகழ்த்தி தங்களுக்குரிய வருமானத்தைத் தேடிக் கொள்கிறார்கள். தாய்லாந்தில் வாழும் ஆயிரக்கணக்கான யானை பாகர்களின் பொருளாதார தேடல் இப்படிதான் அமைகிறது.
வல்லிய யானைகள் வாடகை வாகனமாக அமையப் பெறும். புத்திசாளியானவைகள் கேளிக்கைக்கும், இன்னும் சற்று புத்தி அதிகமுடையவை ஓவியம் வரைதல், வண்ணம் தீர்டுதல் போன்ற காரியங்களுக்கு பயன்படுத்தப்படும்.
ஆசிய யானைகள், ஆப்பிரிக்க யானைகளைப் போன்றவை அல்ல. ஆப்பிரிக்க யானைகள் மூர்க்கத் தனம் மிகுந்தவை. அளவில் பெரியவை. அதிக அளவில் அடக்கப்படுவதில்லை. ஆனால் ஆசிய யானைகள் மனிதனுக்கு ஒப்பாக உழைக்கக் கூடிய அளவிற்கு பயிற்றுவிக்கப்படுகின்றன.
இந்த யானைகள் சுதந்திரமற்று இருக்கின்றன என்றே சொல்ல வேண்டும். ஒரு ஆய்வறிக்கையின் சேதிபடி ஆசிய யானைகள் ஆப்பிரிக்க யானைகளைக் காட்டினும் 10 மடங்கு குறைவாகவே உள்ளன. ஆப்பிரிக்க யானைகளின் பாதுக்காப்பிற்காக எடுக்கப்படும் முயற்சியில் கால் பங்கு கூட ஆசிய யானைகளின் பாதுகாப்பிற்கு அளிக்கப்படுவதில்லை என்றே கருத வேண்டும். அது போக ஆசிய யானைகளின் கணக்கெடுப்பும் சரிவர இல்லாமலே இருக்கிறது.ஏறத்தாழ 30ஆயிரம் முதல் 50ஆயிரம் வரையிலான ஆசிய யானைகள் இருக்கலாம் எனவும் அவற்றில் 12ஆயிரம் முதல் 15ஆயிரம் வரையிலானவை வளர்க்கப்படுபவை எனவும் குறிப்பிடப்படுகிறது.
தாய்லாந்து மக்களிடையிலான இந்த யானை வளர்ப்பு ஏறத்தாழ 4000 ஆண்டு காலமாக இருந்து வருவதாகும். சுமை தூக்க யானைகளை வளர்த்தார்கள். தாய்லாந்து மக்களிடையே யானைகள் மீது அதிகப் பிரியம் உண்டு. மலாய் மொழியில் தாய்லாந்து நாட்டை வெள்ளை யானை நாடு என்றே குறிப்பிடுகிறார்கள். வெள்ளை யானை என்பது தாய்லாந்து மக்களிடையே புனித விலங்கு எனக் கருதப்படுகிறது. வெள்ளை யானைச் சிலைகளை வழிபடவும் செய்கிறார்கள்.
வெள்ளை யானைக்கு தான் தனிபட்ட சிறப்பு. வெள்ளை யானை உண்மையில் இருக்கிறதா என்பதே வினாக் குறியானதே.
வேலை வாங்கப்படும் யானைகளின் நிலை என்ன? அவை சரிவர கவனிப்பின்றியே இருக்கின்றன. யானை பாகன்கள் நேரம் காலம் பாராமல் அவற்றை வேலை வாங்குகிறார்கள். பாகனுக்கு பணம். சுற்றுப்பயணிக்கு மகிழ்ச்சி. துன்பம் மொத்தமும் யானைக்கு மட்டுமே என்றாகிவிட்டது.சில காலத்திற்கு முன் தாய்லாந்தில் யானைகள் அரசரை சுமக்க மட்டுமே பயன்படுத்தப்பட்டன. இன்றய நிலையில் அவை பணம் சம்பாதிக்கும் இயந்திரமாக மட்டுமே பார்க்கப்படுகின்றன. பகல் முழுக்க வேலை. இரவில் இரும்புச் சங்கிலியால் பிணைக்கப்பட்டுவிடும். இதுதான் அந்த யானைகளின் உலகம்.
சுற்றுலா துறை அதீத வளர்ச்சி அடைந்து வரும் துறையாகும். சுற்றுலா துறை மேம்பாட்டிற்காக உலக நாடுகள் பெரிதும் கவனம் செழுத்தி வருகின்றன. சில ஆசிய நாடுகளில் சுற்றுலா துறையின் பேரில் விலங்கினங்களுக்கு பலமான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக சுற்றுச் சூழல் இயக்கங்கள் குறிப்பிட்டுள்ளன. ஆசிய யானைகள் இதற்கு விதி விலக்கல்ல.
யானைகள் இறைச்சிக்காகவும், தந்தம் போன்ற அழகு பொருட்களுக்காகவும் கொல்லப்படுகின்றன. கமுக்க முறையில் ஏற்றுமதியும் செய்யப்படுகின்றன என்பன மறுக்க முடியாதவை.
திருட்டுத்தனமாக நடக்கும் யானை வேட்டை இவ்வினப் பெருக்கத்திற்கு பங்கம் விளைவிக்கும் வண்ணம் அமைந்துள்ளது. காடுகள் அழிக்கப்படுவதால் அவை வெளிபட்டு வேளான் மற்றும் குடியிருப்புப் பகுதிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றன. அதனால் அவற்றில் சில கொல்லப்படுகின்றன. மனிதன் காட்டிற்குச் சென்றாலும், விலங்குகள் நாட்டிற்குள் வந்தாலும் பாதகம் விலங்குகளுக்கு தான்.யானைகளை தகுந்த முறையில் பாதுகாக்கவும் பேணவும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. யானையைக் கொண்டு பிழைப்பு நடத்துவர்களிடம் அதற்கு கண்டனமும் வெளி வந்துள்ளது. சரியான முறையில் அமைந்துவர காலதாமதம் ஆகலாம்.
யானைகளை பாதுகாக்க புதுவகை தொழில் நுட்ப முறையில் சில முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளது. யானைகளின் உடலில் 'மைக்ரோ சிப்'பை (MICRO CHIPS) உட்செழுத்தி கண்காணித்து வருகிறார்கள். இதன் வழி யானைகளின் இருப்பிட மாற்றம், உயிர் வதை, போன்ற செய்திகளை சேகரித்தும் பாதுகாத்தும் வருகிறார்கள். மனிதனுக்குள் இருக்கும் அரக்க குணம் மாறாத வரையில் இம்மாதிரியான வன விலங்குகளை பாதுகாப்பது சிரமமான காரியமே.
(பி.கு: தாய்லாந்து யானைகள் எனும் தலைப்பில் 18.01.2009 தமிழ் ஓசை நாளிதழில் வெளிவந்த எனது கட்டுரை)










