வீட்டுத் தோட்டத்தில் வெண்டை வளர்வதைப் பார்ப்பது எனக்கு இப்போது ஒரு சிறிய தினசரி அனுபவமாகிவிட்டது. விதையாக மண்ணுக்குள் சென்ற ஒன்று, சில நாட்களில் இரண்டு சிறிய இலைகளுடன் வெளியே வந்து, மிகக் குறுகிய காலத்திலேயே அகன்ற இலைகளுடன் ஒரு செடியாக நிற்பது ஆச்சரியமான மாற்றம். நாம் அன்றாடம் சமையலில் மிகச் சாதாரணமாகப் பயன்படுத்தும் வெண்டைக்காய்க்குப் பின்னால் ஒரு நீண்ட பயணமே இருக்கிறது.
வெண்டையின் தோற்றம் ஆப்பிரிக்காவுடன் தொடர்புடையதாகக் கருதப்படுகிறது. அங்கிருந்து பல நூற்றாண்டுகளாக உலகின் வெப்பமண்டலப் பகுதிகளுக்குப் பரவி, இன்று இந்தியா முதல் தென்கிழக்காசியா வரை பல சமையல் மரபுகளின் ஒரு பகுதியாகிவிட்டது. இதில் எனக்கு மிகவும் சுவாரஸ்யமாகத் தோன்றியது அதன் பூ. வெண்டை செடி செம்பருத்தியின் உறவினத்தைச் சேர்ந்தது. அதனால்தான் வெண்டையின் மஞ்சள் நிறப் பூவை நன்றாகக் கவனித்தால், அதன் வடிவத்தில் செம்பருத்திப் பூவின் சாயலைக் காண முடிகிறது. இன்னும் அழகான விஷயம் என்னவென்றால், அந்தப் பூவின் வாழ்க்கை மிக நீண்டதல்ல. காலையில் மலர்ந்த ஒரு பூ, மிகக் குறுகிய நேரத்திலேயே தனது அடுத்த வேலையைத் தொடங்கிவிடுகிறது. மகரந்தச் சேர்க்கைக்குப் பிறகு அதே இடத்தில் நாம் பறித்துச் சமைக்கும் வெண்டைக்காய் உருவாகத் தொடங்குகிறது. சரியான வளர்ச்சிநிலையில் சில நாட்களிலேயே அது அறுவடைக்கும் தயாராகிவிடும்.
கடையில் ஒரு வெண்டைக்காயை எடுத்துப் பார்க்கும்போது இவையெல்லாம் தோன்றுவதில்லை. ஆனால் அதை விதையிலிருந்து நாமே வளர்க்கும்போதுதான், ஒரு வெண்டைக்காய்க்குப் பின்னால் ஒரு பூவும், ஒரு சிறிய உயிரியல் அதிசயமும், உலகம் கடந்து வந்த ஒரு நீண்ட வரலாறும் இருப்பது புரிகிறது. வீட்டுத் தோட்டம் நமக்கு காய்களையும் பழங்களையும் மட்டும் கொடுப்பதில்லை; நாம் தினமும் பார்த்தும் கவனிக்காமல் கடந்துபோகும் இயற்கையை மீண்டும் கொஞ்சம் நின்று பார்க்கவும் கற்றுத் தருகிறது.
என் வீட்டைச் சுற்றிய இந்தச் சிறிய தோட்டத்தில் வெண்டை மட்டுமல்ல; துரியான் பெலண்டா, மாதுளை, அவகாடோ, பப்பாளி, மாமரம் என இன்னும் சில பயிர்களும் வளர்ந்து வருகின்றன. ஒவ்வொன்றுக்கும் ஒரு வளர்ச்சிக் கதை இருக்கிறது; சிலவற்றுடன் காத்திருப்பும், சிலவற்றுடன் ஆச்சரியமும், சிலவற்றுடன் சிறு தோல்விகளும் வெற்றிகளும் சேர்ந்திருக்கின்றன. அவற்றையெல்லாம் ஒரே பதிவில் சொல்லிவிட விருப்பமில்லை. ஒவ்வொன்றாகப் பிரித்து, அவற்றின் பின்னாலிருக்கும் சுவாரஸ்யமான வரலாறு, நான் வளர்க்கும்போது கவனித்த விஷயங்கள், எனக்குப் புதிதாகத் தெரிந்த தகவல்கள் என்று கொஞ்சம் கொஞ்சமாக எழுதலாம் என்று நினைக்கிறேன்.

No comments:
Post a Comment