Thursday, October 22, 2026

羊 முதல் 驴 வரை


சமீபத்தில் இந்தோனேசியாவின் ஓர் அமைச்சர், “நாங்கள் புகையை மட்டும் அனுப்புவதில்லை, புகை இல்லாதபோது ஆக்சிஜனையும் அனுப்புகிறோம்” என்று கூறியிருந்தார்.

அதை வாசித்தபோது எனக்கு சிரிப்பு வந்தது. நாடுகள் ஒருவருக்கொருவர் என்னென்ன அனுப்புகின்றன என்பதை யாரால் கணக்கு வைத்துக் கொள்ள முடியும்? இந்தோனேசியா நமக்கு ஆக்சிஜன் அனுப்புகிறதா தெரியாது. ஆனால் பெய்ஜிங்கில் இருந்த காலத்தில் சைபீரியா எனக்கு குளிரை மட்டும் நிச்சயமாக அனுப்பியது.

அதுவும் சாதாரணக் குளிரல்ல. Siberian High-ல் உருவாகும் அதீத குளிர்ந்த கண்டக் காற்று, மங்கோலியாவையும் கோபி பாலைவனப் பகுதிகளையும் கடந்து வட சீனாவை அடையும் நாட்களில் காற்றே கூர்மையாக மாறிவிடும். முகத்தில் பட்டால் குளிர் வீசுகிறது என்று மட்டும் தோன்றாது, எலும்புக்குள் சிறிய ஊசிகள் துளைப்பது போல இருக்கும்.


அந்த மாதிரியான இரவுகளில் heater அருகில் அமர்ந்து கைகளைச் சூடுபடுத்திக்கொண்டு, ஆவி பறக்கும் ஒரு கிண்ணம் சூப்பை மெதுவாகக் குடிப்பதில் தனி ஆனந்தம் இருக்கிறது. குளிர்கால இரவுகளுக்கு ஒரு தனிப் பசியும் உண்டு. குளிர் அதிகமானால் பசியும் அதிகமாகும். அப்படி ஒரு இரவில் சுடச்சுட ஒரு கிண்ணம் ஆட்டிறைச்சி சூப் கிடைத்துவிட்டால் அதைவிட நல்ல விஷயம் எதுவும் இல்லை.

அங்கு கிடைக்கும் ஆட்டிறைச்சிக்கு என் நாக்கு அடிமை. அங்குள்ள மெய்ச்சல் நிலங்களில் வளரும் ஆடுகளின் இறைச்சிக்கு தனிச் சுவை உண்டு. நாம் நாட்டில் கிடைக்கும் ஆஸ்திரேலிய ஆட்டிறைச்சியில் உணரும் அந்தத் தனி வாடை இருக்காது. மென்மையான சுவை. குளிர்காலத்துக்கு மிகவும் பொருத்தமான இறைச்சி.

சீன மொழியில் ஆட்டிறைச்சி சூப்பை 羊肉汤 (yáng ròu tāng) என்பார்கள்.
Yáng - ஆடு.
Ròu - இறைச்சி.
Tāng - சூப்.

அப்படியே ஒரு குளிர்கால இரவு Meituan-ல் (இங்கு FoodPanda போல) சூப் தேடிக்கொண்டிருந்தேன். குளிருக்கு ஏற்ற ஒரு சூப் கண்ணில் பட்டது. ஆர்டர் செய்தேன். சிறிது நேரத்தில் சூப் வந்தது.

மூடியைத் திறந்தவுடன் ஆவி எழுந்தது. வெளியே கடுங்குளிர். கையில் சூடான கிண்ணம். அந்த நேரத்தில் உலகத்தில் அதைவிட பெரிய சந்தோஷம் வேண்டுமா?

சூப்பும் நன்றாக இருந்தது. இறைச்சியும் மென்மையாக இருந்தது. “குளிருக்கு இதுதான் மருந்து” என்ற மனநிறைவோடு முழுவதையும் குடித்து முடித்துவிட்டேன். அந்த இரவு மிகவும் திருப்தியாகத் தூங்கினேன்.

மறுநாள் காலை, மேஜையில் இருந்த சூப் order receipt-ஐ எடுத்துப் பார்த்தேன். சீன மொழியில் ஆட்டிறைச்சிக்குப் பயன்படுத்தப்படும் 羊 — yáng என்ற எழுத்து அது போலத் தெரியவில்லை.

மீண்டும் பார்த்தேன்.

“இது yáng இல்லையே...” என்று தோன்றியது.

驴肉汤

அதில் “肉 - ròu” இருக்கிறது.
“汤 - tāng” இருக்கிறது.

ஆனால் “羊 - yáng” இருக்க வேண்டிய இடத்தில் வேறொரு எழுத்து.
驴 - lǘ.

தனியாக அந்த எழுத்தைத் தேடினேன்.

அப்போது தான் நேற்று இரவு மிகவும் ரசித்துக் குடித்த அந்த சூப்பின் முழுப் பெயர் எனக்கு புரிந்தது.

驴肉汤 — lǘ ròu tāng.

அதாவது

கழுதை இறைச்சி சூப்.

ஒரு நிமிடம் ரசீதையே பார்த்துக்கொண்டிருந்தேன். முந்தைய இரவு நாக்கு சொன்னது “அருமை!”.

விசித்திரம் என்னவென்றால், அது என்ன இறைச்சி என்று தெரியாதவரை அதன் சுவையில் எந்தக் குறையும் எனக்குத் தெரியவில்லை. மிகவும் ரசித்துத்தான் குடித்தேன். உணவில் சில நேரங்களில் சுவை முதலில் வருகிறது. அடையாளம் பின்னால்தான் வருகிறது. ஆட்டிறைச்சி சூப் என்று நினைத்து order செய்த நான், கழுதை சூப்பை குடித்து முடித்திருந்தேன்.

நாளை தலைவரின் Jailer 2 வருகிறது. Promoவை பார்த்து இப்போது உடனடியாக எதையும் நம்புவதில்லை. சூப்பாக இருந்தாலும் சரி, sequel-ஆக இருந்தாலும் சரி. முதல் பார்வையில் ஆடு மாதிரி இருக்கும். ரசீது வந்த பிறகுதான் உள்ளே என்ன இருந்தது என்று தெரியும்.

No comments: