மங்கோலியாவுக்கு நான் முதன்முதலில் சென்றது ஒரு அரசு அலுவலின் பொருட்டு. ஆனால் ஒரு நாட்டுக்குள் நுழைவதற்கு passport போதுமானதாக இருக்கலாம், அந்த நாட்டைப் புரிந்துகொள்வதற்கு அது போதாது.
மங்கோலியாவைப் புரிந்துகொள்ள எனக்கு ஒரு மனிதர் தேவைப்பட்டார்.
அவர் பெயர் Kelvin Chong.
Kelvin ஒரு மலேசியர். மங்கோலியப் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு Ulaanbaatar-ஐ தனது வாழ்விடமாக மாற்றிக்கொண்டவர். நான் மங்கோலியாவுக்கு சென்றுவந்த காலங்களில் அங்குள்ள நடைமுறைகள் முதல் உணவு, மக்கள், காலநிலை, வணிகம், பயணம் என்று ஏதாவது புரியாமல் நின்றால், நான் திரும்பிப் பார்க்கக்கூடிய மனிதராக அவர் இருந்தார்.
மங்கோலியாவைப் பற்றி நான் புத்தகங்களில் படித்ததற்கும், காரின் ஜன்னல் வழியாகப் பார்த்ததற்கும் அப்பால் இன்னொரு மங்கோலியா இருக்கிறது என்பதை எனக்குக் காட்டியவர் Kelvin.
Ulaanbaatar-ல் அவர் கட்டியிருந்த வீடே முதலில் எனக்கு ஆச்சரியமாக இருந்தது. நம்முடைய வழக்கமான வீட்டு அளவுகளோடு ஒப்பிட்டுப் பார்க்க முடியாத பெரிய கட்டிடம். அதன் மேல்மாடிகள் அவரது குடும்பத்திற்கானவை. கீழேயிருந்த பகுதிகள் வெளிநாட்டிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் தங்குவதற்காக அமைக்கப்பட்டிருந்தன. இன்று நாம் எளிதாக Airbnb என்று சொல்லிவிடக்கூடிய ஒரு வடிவத்தை அங்கே அவர் நடத்திக்கொண்டிருந்தார்.
Kelvin-ன் வாழ்க்கையின் பெரும்பகுதி tourism-ஐச் சுற்றியே இருந்தது. அதோடு சில Malaysian products-ஐ Mongolia-வுக்கு கொண்டு வந்து விற்பனை செய்வதும் அவரது வணிகத்தின் ஒரு பகுதியாக இருந்தது.
ஆனால் அவரது வீட்டில் எனக்கு அதிகம் நினைவில் நின்ற இடம் மேல்மாடி அல்ல.
Basement.
அங்கே இறங்கியபோது நகர வாழ்க்கையின் அடியில் இன்னொரு பழைய மங்கோலியா இருப்பது போல எனக்குத் தோன்றியது.
துப்பாக்கிகளும், வேட்டையாடிக் கொண்டுவரப்பட்ட இறைச்சிகள், நீண்ட காலம் பாதுகாக்கப்பட்ட உணவுப் பொருட்கள், குளிர்காலத்துக்காகச் சேமிக்கப்பட்ட பலவகை உணவுகள் அங்கே இருந்தன. Kelvin-ன் குடும்பமும் அவரைச் சுற்றியிருந்தவர்களும் வேட்டையாடி கொண்டுவரப்படும் சில வனவிலங்கு இறைச்சிகளை உப்பிட்டு, உலர்த்தி அல்லது பிற பாரம்பரிய முறைகளில் பாதுகாத்து வைப்பதை நான் அங்கே பார்த்தேன்.
அதை ஒரு விசித்திரமான உணவுப் பழக்கம் என்று மட்டும் பார்த்தால் மங்கோலியாவைத் தவறவிட்டுவிடுவோம்.
அதற்குப் பின்னால் காலநிலை இருக்கிறது.
மங்கோலியாவின் குளிர் Beijing-ன் குளிரைவிட இன்னும் உக்கிரமானது. நீண்ட குளிர்காலம், குறுகிய growing season, மிகக் குறுகிய கோடை. இவை அங்குள்ள வாழ்வின் பல பழக்கங்களை வடிவமைத்திருக்கின்றன. நாட்டின் பெரும் பகுதியை மேய்ச்சல் நிலங்கள் நிரப்புகின்றன, கால்நடை வளர்ப்பு பல நூற்றாண்டுகளாக அங்குள்ள வாழ்க்கையின் மையமாக இருந்து வந்துள்ளது. இன்றும் மங்கோலியாவில் மனிதர்களைவிட கால்நடைகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகம்.
கோடையும் இலையுதிர்காலமும் அங்கே வெறும் பருவங்கள் அல்ல.
அடுத்த குளிர்காலத்துக்கு மனிதன் தயாராகிக்கொள்ள இயற்கை கொடுக்கும் சிறிய கால அவகாசங்கள்.
அதை உணர்ந்தபிறகுதான் basement-ல் தொங்கிக்கொண்டிருந்த இறைச்சித் துண்டுகளையும், அடுக்கி வைக்கப்பட்டிருந்த உணவுகளையும் வேறுவிதமாகப் பார்க்க ஆரம்பித்தேன். அவை வெறும் pantry-யில் சேமித்து வைத்த உணவுகள் அல்ல. வெளியே -30°C-ஐ நோக்கி நகரும் ஒரு நாட்டின் மனிதர்கள், குறுகிய கோடையைப் பிடித்து வைத்து நீண்ட குளிர்காலத்துக்குள் எடுத்துச் செல்லும் வழிகள்.
Kelvin வீட்டிலேயே wild berries-ஐப் பயன்படுத்தி jam செய்வார். அந்தக் குளிர்ந்த நிலப்பரப்பில் குறுகிய காலத்தில் கிடைக்கும் பழங்களை சேகரித்து, அவற்றை நீண்ட நாட்களுக்கு வைத்திருக்கக்கூடிய வகையில் மாற்றுவது அங்கே ஒரு சாமானிய வீட்டு வேலை மட்டுமல்ல, காலநிலையோடு செய்து கொண்ட சமரசம்.
தேன், bee pollen போன்றவற்றையும் அவர் எனக்குக் காட்டினார். அவை எங்கிருந்து வருகின்றன, எப்படி process செய்யப்படுகின்றன, சந்தைக்கு எப்படிச் செல்கின்றன என்று அவர் விளக்கும்போது, எனக்கு மெதுவாக ஒரு விஷயம் புரிந்தது.
Kelvin சுற்றுலாப் பயணிகளை Mongolia-வுக்கு அழைத்துச் சென்றவர் மட்டுமல்ல. Mongolia-வை அவர்களுக்கு மொழிபெயர்த்துக் கொடுத்தவர். அந்த மொழிபெயர்ப்பின் அழகான பகுதி நகரத்துக்கு வெளியே தொடங்கியது.
Kelvin-க்கு countryside-ல் சுற்றுலாப் பயணிகள் தங்கக்கூடிய Ger வசதிகளும் இருந்தன. ஆரம்பத்தில் நான் அதை ஒரு வகையான hut என்று நினைத்திருந்தேன். ஆனால் Ger என்பது குடிசையோ சாதாரண tent-ஓ அல்ல. வட்டமான மரச்சட்டகம், felt மற்றும் canvas உறைகள் கொண்ட, பிரித்து எடுத்துச் சென்று வேறு இடத்தில் மீண்டும் அமைக்கக்கூடிய மங்கோலிய பாரம்பரிய வீடு. Nomadic வாழ்க்கையின் தேவைக்கு ஏற்ப உருவான இந்த அமைப்பு UNESCO-வின் intangible cultural heritage பட்டியலிலும் இடம்பெற்றிருக்கிறது.
Ger-ஐ புகைப்படத்தில் பார்ப்பது ஒன்று.
அதற்குள் ஒரு இரவு கழிப்பது வேறு.
வெளியில் முடிவே இல்லாத புல்வெளி. தொலைவில் குதிரைகள். இரவு வந்துவிட்டால் நகரத்தின் artificial light எதுவும் இல்லாத வானம். நடுவில் அடுப்பு. வட்டமான அந்தச் சிறிய இடத்துக்குள் ஒரு குடும்பத்தின் உணவு, உறக்கம், உரையாடல், குளிரிலிருந்து தற்காப்பு எல்லாமே அடங்கிவிடும்.
ஒருகாலத்தில் கண்டம் தாண்டிப் பயணித்த ஒரு சமூகத்தின் வீடு, தேவைப்பட்டால் சில மணி நேரத்தில் பிரிக்கப்பட்டு இன்னொரு மேய்ச்சல் நிலத்தில் மீண்டும் எழுந்துவிடக்கூடியதாக இருக்கிறது.
அது ஒரு கட்டிடம் அல்ல.
அவர்களின் வாழ்க்கைத் தத்துவமே மடித்து எடுத்துச் செல்லக்கூடிய வடிவத்தில் இருப்பது போல.
மங்கோலிய nomadic migration இன்று கூட pastures, livestock, herders ஆகியவற்றின் பரஸ்பர சார்பில் வாழும் ஒரு கலாசாரமாகத் தொடர்கிறது.
Kelvin வழியாக நான் அறிந்த Mongolia-வில் உணவுக்கு இன்னொரு பெரிய இடம் இருந்தது.
ஒரு முறை அவர் என்னை இரவு உணவுக்கு அழைத்திருந்தார்.
மேசையில் steamboat.
ஆனால் நமக்குத் தெரிந்த seafood steamboat அல்ல.
குதிரை இறைச்சி.
குதிரையின் வெவ்வேறு பகுதிகளை மிகவும் கவனமாக வெட்டி ஒவ்வொன்றாகப் பரிமாறினார்கள். நாம் இறைச்சி என்று பொதுவாகப் பார்க்கும் ஒன்றுக்குள் கூட அவர்கள் texture, fat, organ, muscle என்று தனித்தனி சுவைகளைப் பிரித்துப் பார்ப்பதை கவனித்தேன்.
அந்த விருந்தில் எனக்காக மிகவும் விசேஷமான ஒரு பகுதியை அவர்கள் வைத்திருந்தார்கள்.
குதிரையின் பிறப்புறுப்பு மற்றும் விதைப்பை.
அழகான வடிவில் வெட்டி, தட்டில் வைத்து,
“இது விருந்தினருக்கானது,” என்று என்னிடம் நீட்டினார்கள்.
அந்தக் கணத்தில் diplomacy-யில் நான் கற்ற எந்த protocol-மும் உதவவில்லை.
விருந்தினராக மரியாதையாக ஏற்றுக்கொள்வதா, அல்லது நான் இதுவரை வாழ்ந்த வாழ்க்கையை நினைத்துக் கொள்வதா என்ற இரண்டு எண்ணங்களுக்கிடையில் சில வினாடிகள் நின்றேன்.
கடைசியில் Mongolia வென்றது.
அப்படித்தான் என் வாழ்க்கையில் “குதிரை இறைச்சி சாப்பிட்டிருக்கிறீர்களா?” என்ற கேள்விக்கு ஒரு சாதாரண ‘ஆம்’ என்பதைவிட நீண்ட பதில் உருவானது.
மங்கோலியர்களின் அன்றாட வாழ்வில் சிறிய செய்கைகளுக்குக் கூட மரியாதையின் ஒரு வடிவம் இருக்கிறது. அதை நான் முதலில் கவனித்தது பணம் கொடுக்கும்போதுதான். கடையில் ஏதாவது வாங்கிவிட்டு பணத்தை நம்மிடம் வழக்கமானபடி கையில் மடித்து வைத்திருந்தபடியே நீட்டிவிட முடியாது. பணத்தாளைச் சீராக நேராக்கி, அதில் இருக்கும் தலை உருவம் பெறுபவரை நோக்கும்படி வைத்து கொடுக்க வேண்டும்.
இந்த மாதிரியான சிறிய விஷயங்கள்தான் ஒரு நாட்டின் கலாச்சாரத்தை நமக்கு நெருக்கமாகக் காட்டுகின்றன. Ger-க்குள் நுழையும்போது வாசற்படியை மிதிக்காமல் தாண்டுவது, விருந்தினர் என்றால் கொடுக்கப்படும் உணவை மறுக்காமல் குறைந்தபட்சம் சிறிதாவது சுவைப்பது, இவை அனைத்திலும் ஒரே underlying idea தெரிகிறது. நாம் பயன்படுத்தும் பொருளையும், அதை வழங்கும் மனிதரையும் மதிப்பது.
மங்கோலிய ஆட்டிறைச்சியும் எனக்கு மறக்க முடியாத இன்னொரு சுவை.
விரிந்த மேய்ச்சல் நிலங்களில் வளர்ந்த ஆடுகளின் இறைச்சிக்கு தனி சுவை இருப்பதாக அங்கே பலமுறை உணர்ந்தேன். கொழுப்பு நிறைந்த, juicy-ஆன அந்த இறைச்சியை சூடான கற்களுடன் சமைக்கும் பாரம்பரிய முறைகளையும் பார்த்திருக்கிறேன். வெளியில் உறைய வைக்கும் குளிரில் உடல் வெப்பத்தைத் தேடும்போது, ஒரு பாத்திரம் சூடான இறைச்சியின் அர்த்தமே மாறிவிடுகிறது.
அங்கே நான் முதல் முறையாகச் சந்தித்த இன்னொரு சுவை “milk wine” என்று எனக்கு அறிமுகப்படுத்தப்பட்டது.
அதன் சரியான பெயர் Airag.
குதிரைப் பாலைக் காய்ச்சி செய்யும் wine அல்ல mare’s milk-ஐ ferment செய்து தயாரிக்கும் பாரம்பரிய பானம். மங்கோலியர்களின் அன்றாட வாழ்க்கையிலும் விருந்தோம்பலிலும் விழாக்களிலும் இதற்கு முக்கியமான இடம் உண்டு. அதன் பாரம்பரிய தயாரிப்பு முறையையும் UNESCO மனிதகுலத்தின் intangible cultural heritage பட்டியலில் சேர்த்துள்ளது.
முதல் sip-ல் அது wine போலவும் இல்லை, milk போலவும் இல்லை.
“இதை எந்தப் பிரிவில் சேர்ப்பது?” என்று நாக்கு யோசிக்கும் முன்பே அடுத்த கிண்ணம் வந்துவிடும்.
Vodka-வுக்கும் Mongolia-வில் இடம் அதிகம். Russia-வின் அருகாமை, Soviet கால வரலாறு போன்றவற்றின் தடயங்கள் உணவிலும், நகரக் கட்டமைப்பிலும், மொழியின் எழுத்திலும் கூட கண்ணில் படும்.
இன்று Mongolian மொழி பெரும்பாலும் Cyrillic எழுத்தில் எழுதப்படுகிறது. ஆனால் அது Russian மொழி அல்ல. Mongolian மொழியை எழுதுவதற்காக Cyrillic அடிப்படையில் உருவாக்கப்பட்ட எழுத்துமுறை. அதற்கு முன்னிருந்த செங்குத்தான traditional Mongolian script-க்கும் தனித்த நீண்ட வரலாறு இருக்கிறது. அதனால் Ulaanbaatar-ல் கடைகளின் பெயர்களைப் பார்க்கும்போது Russian போலத் தோன்றலாம். காதில் விழும் மொழி வேறொரு உலகத்தைச் சேர்ந்தது.
Kelvin-உடன் நடந்த உரையாடல்களில் என்னை இன்னும் விடாமல் பின்தொடர்வது உணவு பற்றியதோ குளிரைப் பற்றியதோ அல்ல.
ஒரு ரயில்.
அவர் சுற்றுலா ஏற்பாடுகளில் நீண்ட overland rail journeys-க்கும் உதவி செய்வார். அப்போதுதான் Trans-Mongolian/Trans-Siberian ரயில் பயணத்தைப் பற்றி அவரிடமிருந்து விரிவாகக் கேட்டேன்.
Beijing-இலிருந்து வடக்கே புறப்பட்டு Mongolia வழியாக Russia-வை அடைந்து, அங்கிருந்து Europe-க்குள் தொடர்ந்து ரயில்களை இணைத்துக்கொண்டு London வரை செல்லக்கூடிய ஒரு நீண்ட பயணத்தைப் பற்றி அவர் பேசினார்.
அது ஒரே ரயிலில் Beijing முதல் London வரை செல்லும் பயணம் அல்ல. Trans-Mongolian பாதை Beijing–Ulaanbaatar–Moscow வழியாகச் செல்லும் புகழ்பெற்ற rail corridor. அங்கிருந்து ஐரோப்பிய ரயில்களைத் தொடர்ந்து மேற்கே செல்லலாம்.
Kelvin அதை ஒரு itinerary போல சொல்லவில்லை.
ஒரு ஆசை போலச் சொன்னார்.
“வாழ்க்கையில் ஒருமுறையாவது இதைச் செய்ய வேண்டும்.”
சுமார் மூன்று வாரங்கள் எடுத்துக் கொண்டு, இடையிடையே இறங்கி நகரங்களைப் பார்த்து, மீண்டும் ரயிலில் ஏறி, ஆசியாவின் நிலப்பரப்பு மெதுவாக ஐரோப்பாவாக மாறுவதை ஜன்னல் வழியாகப் பார்த்துக்கொண்டே செல்ல வேண்டும் என்று அவர் விவரித்தார்.
விமானத்தில் Beijing-இலிருந்து Europe சென்றால் சில மணி நேரங்களில் geography மறைந்துவிடுகிறது.
ரயிலில் சென்றால் geography நம்மை விட்டுத் தப்ப முடியாது.
புல்வெளி,முகங்கள், உணவு, எழுத்து, நேரம் மாறுவதைப் பார்ப்போம்.
எல்லைகள் வந்து போகும்.
ஒரு கட்டத்தில் நாமே கொஞ்சம் மாறியிருப்போம்.
அந்தப் பயணத்தை நான் இன்னும் முடிக்கவில்லை.
எனக்கான அந்த ரயில் பயணம் Kelvin-ன் வீட்டில் நடந்த ஒரு உரையாடலிலேயே தொடங்கிவிட்டது.
மங்கோலியாவை நினைக்கும் போதெல்லாம் எனக்கு முதலில் Chinggis Khan நினைவுக்கு வருவதில்லை.
Gobi Desert கூட அல்ல.
Ulaanbaatar-ன் குளிரும் அல்ல.
ஒரு பெரிய வீட்டின் basement-ல் குளிர்காலத்துக்காகச் சேமித்து வைக்கப்பட்ட உணவுகள். வீட்டிலேயே செய்யப்பட்ட wild berry jam. தேன், bee pollen, புல்வெளியில் நின்ற Ger, steamboat-ல் கொதித்த குதிரை இறைச்சி, விருந்தினருக்கென்று என் தட்டில் வந்து சேர்ந்த நான் வாழ்நாளில் எதிர்பார்க்காத ஒன்று, முதன்முறையாக சுவைத்த Airag, இன்னும் நான் ஏறாத ஒரு நீண்ட ரயிலைப் பற்றிய உரையாடல். இவையுன் நினைவுக்கு வருகின்றன.
ஒரு நாட்டை நாம் அதன் அருங்காட்சியகங்களில் மட்டும் அறிந்துகொள்வதில்லை.
சில நேரங்களில் ஒருவருடைய basement-ல் அறிந்துகொள்கிறோம், அவருடைய சமையல் மேசையில், அவர் நமக்குக் கொடுத்த ஒரு கிண்ணம் பானத்தில்,
சில நேரங்களில் இன்னும் நாம் மேற்கொள்ளாத ஒரு பயணத்தை அவர் விவரிக்கும் விதத்தில்.
எனக்கு அந்த Mongolia-வைக் காட்டியவர் Kelvin Chong. அங்கிருந்த வாழ்க்கையைக் கொஞ்சம் புரிந்துகொண்டு திரும்புவதற்கு காரணமாக இருந்தவர்
மங்கோலியாவைப் பற்றி இன்னும் சொல்ல நிறைய இருக்கிறது.
அதன் வரலாறு, Chinggis Khan-க்கு அப்பால் இருக்கும் Mongolia, Soviet காலத்தின் தடங்கள், Gobi, Buddhism, nomadic உலகம், அங்குள்ள இலக்கியம், அவற்றை எனக்குத் திறந்த சில புத்தகங்களும் இருக்கின்றன.
அவை அடுத்த பதிவில்.






No comments:
Post a Comment