Showing posts with label வரையரை ஊதியம். Show all posts
Showing posts with label வரையரை ஊதியம். Show all posts

Friday, May 15, 2009

வரையரை ஊதியம் - யாருக்கு லாபம்?

அரை சாண் வயிற்றுக்கு தான் மனிதன் படாத பாடுபடுகிறான். சொகுசு வாழ்க்கைக்கு பணம் தேட முனைவதெல்லாம் இரண்டாம் பட்சம். பணத்தை ஈட்டுவதற்கு தொழில் புரிவது அவசியமாகிறது. மனதுக்கு பிடித்த தொழிலாக இருந்தாலும், கவர்ச்சிகரமான அல்லது தகுந்த ஊதியம் கொடுக்கிறார்களா என்பதை முன்வைத்தே ஒரு தொழிலை தேர்வு செய்கிறோம்.

அரசு வரையறை செய்த ஊதியம் என்பதை நாம் விவரித்து பேசினால் அது சற்று சர்ச்சைக்குறிய செய்தியாகவும் அமைந்துவிடுகிறது. சில காலத்திற்கு முன் நாளிதழ்களில் ‘வரையறை ஊதியம்’ பற்றிய செய்திகளை நாம் கண்டிருக்கக் கூடும். கொளுத்திய மத்தாப்பை சட்டென நீரில் விட்டெறிந்தக் கதையாக ‘புஸ்’ ஆகி அமிழ்ந்து போய்விட்டது அச்செய்தி.

’வரையறை ஊதியம்’ என்பதை நாம் முன்னிறுத்தி விவாதிக்கையில் பொருளாதாரம், அரசியல், சமூகம் என நாட்டின் முக்கிய கூறுகளை அலசி ஆராய்ந்து இடித்துரைப்பது அவசியமாகிறது. சரி இரண்டு பத்திகளைக் கடந்தும் வரையறை ஊதியம் எனும் வஸ்துவைப் பற்றி நான் விளக்கவில்லையே. அது சலிப்புதட்டிவிடாதா?


1970-ஆம் ஆண்டு நடந்த அனைத்துலக ஊழியர்க
ள் சங்க(ILO) மாநாட்டில் வரையறை ஊதியம் தொடர்பான பேச்சுகள் எழும்பின. அதன் தீர்வாக வேலை செய்யும் ஊழியனின் வாழ்வியல் மற்றும் குடும்பம் தொடர்பான அடிப்படைச் செலவுகளைக் காட்டினும் அவன் ஊதியம் குறைவாக இருக்கக் கூடாது எனும் தீர்மானத்தை கொண்டு வந்தார்கள். தனது அடிப்படைச் செலவுகளைக் காட்டினும் குறைவான ஊழியம் பெறுபவன் ஏழை ஊழியன் என வரையறுக்கப்பட்டது.

2000த்தாம் ஆண்டின் கணக்காய்வின்படி உலகம் முழுக்
க சுமார் 50 கோடி மக்கள் ஏழைத் தொழிலாளர்கள் என அடையாளம் காணப்பட்டிருக்கிறார்கள். இவர்களில் பொரும்பாலானோர் இளைஞர்களும், பெண் தொழிலாளர்களும் ஆவர். இவர்களின் வேலை நாள் மற்றும் நேரம் யாவும் நிரந்தரமற்றதாகவும் குறிப்பிடப்படுகிறது. அதிகமான ஏழைத் தொழிலாளர்கள் வேளாண்மை மற்றும் விற்பனைத் துறையைச் சார்ந்தவர்களாகவும் வகைப்படுத்தப்பட்டுள்ளது.
முதலாளி வர்க்கத்தினருக்கு இந்த சட்ட திட்ட முறைகள் வேம்பாகவே அமைந்தது. இதன் பயன்பாட்டை கவனிக்கும் முன்னதாக. முதலாளி வர்க்கத்தினரின் புலம்பல்களையும் நாம் சற்றே கவனிப்போம். வரையறுக்கப்பட்ட ஊதியம் அமல் செய்வதனால் பொருள் வெளியீட்டுச் செலவு அதிகரிக்கும்.

இதனால் முதலீட்டாளர் நட்டத்தைச் சந்திக்க நேரிடும். தொடர்ந்து வியாபாரம் பாதிப்படைந்து கடையைச் மூட நேரிடும். இது சமுதாயத்திற்கும் நாட்டின் பொருளாதாரத்துக்கும் பெருஞ்சேதத்தை விளைவிக்கக் கூடியது. இக்கூற்று குறுந்தொழில் மற்றும் நடுத்தர முதலாளிகளின் பெயரில் ஏற்புடையதாக அமையும். பெருந்தொழில் கலாநிதிகளுக்கு இது பெரும்பாதிப்பை உண்டுச் செய்யாது என்பதே உண்மை.

எது எப்படியாகினும் உலக நாடுகளில் பல, நாட்டு மக்களின் நலம் கருதி அரசினால் வரையரறுக்கப்பட்ட ஊதியத்தை அமல்படுத்தி வருகிறார்கள். அந்நாடுகளில் இது எப்படி சாத்தியமாயிற்று?

நியூசிலாந்தில் 1896-ஆம் ஆண்டும், ஆஸ்திரேலியாவில் 1899-ஆம் ஆண்டும் அரசினால் வரையறை செய்யப்பட்ட ஊதியம் அமல்படுத்தப்பட்டது. இதுகாறும் பொருளாதார நிபுணர்கள் தொடர்ந்து அதன் பயன்பாட்டை நாட்டின் முன்னேற்றத்திற்கு சொல்லி வருக்கிறார்கள்.

வரையறை செய்யப்பட்ட ஊதியம் எவ்வகையில் ந
ன்மையாக அமையும்? ஊழியர்கள் தங்கள் உழைப்புக்கு தகுந்த குறைந்தபட்ச வருமானத்தை பெற முடியும். வாழ்க்கைக்கான அடிப்படைத் தேவைகள் பூர்த்தி செய்ய உதவும். இதனால் வறுமையின் பிடியில் இருந்து ஏழைத் தொழிலாளர்கள் விடுபட முடியும்.

வரையறை ஊதியம் வேலை செய்யும் தனி நபருக்கு மட்டும் தான் நன்மையாக அமைகிறதா? நிச்சயமாக இல்லை. ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் அது வகை செய்கிறது. மக்களின் வாங்கும் சக்தி அதிகரிக்கும் போது வியாபாரம் அதிகரிக்கச் செய்யும். அரசுக்கு வரியும் அதிகரிக்கும். அது போக தகுந்த ஊழியம் பெரும் மக்கள் வெறுமனே அரசின் உதவிக் கரத்தை வேண்டி நிற்க அவசியமற்று போகும். நாட்டின் நிதியை சரியான முன்னேற்றத்துக்கு வெவ்வேறு துறைகளில் பயன்படுத்த அரசுக்கும் இது வடிகாலாக அமையும்.

நமது நாட்டில் ஒவ்வொரு முறையும் சம்பள உயர்வை பற்றிய விவாதங்கள் எழும்பும் போதும் அது அரசு ஊழியர்களுக்கு சாதகமாக அமைவதை காண முடிகிறது. இது வருத்தத்திற்குரிய ஒன்று. தனியார் துறை மீது கவனம் செலுத்தாத மெத்தன போக்கையே இது குறிக்கிறது. அரசின் இம்மாதிரியான முடிவுகளால் ஒரு சாரர் மட்டுமே பயனடைகிறார்கள்.


இதில் நாம் கவனிக்க வேண்டிய ஒன்று. தனியார் மற்று
ம் அரசு துறை இரண்டுமே நாட்டின் முன்னேற்றத்திற்கு பங்கு வகிக்கிறது. தனியார் துறை உயர்ச்சியடையும் போது அரசு துறைக்கும் அது நலம் செய்கிறது. அரசின் நல்லாட்சியானது தனியார் துறை முன்னேற வழி செய்கிறது. அப்படி இருக்க ஒரு கண்ணில் விளக்கெண்ணை ஊற்றிக் கொண்டு பார்க்கும் முறை தகாத ஒன்றாகும்.வரையறை ஊதியம் அமல் செய்துவிட்டால் மட்டும் பிரச்சனைகள் தீர்ந்துவிடுமா என கேட்கலாம்..? அதன் முறையான செயல்பாடும் அவசியமாகிறது. சட்டதிட்டங்களும் மக்களுக்கு வேலை வாய்ப்புகளும் சரியாக அமைந்திடல் வேண்டும். அதுவே ஏழை தொழிலாளர்கள் பிரச்சனையை தீர்க்க உதவும்.

முறையான ஊதியம் பெறும் மக்களின் வாங்கும் சக்தி அதிகரிக்கும் என்பதை ஆரம்பத்தில் பார்த்தோம். இதனால் வெளியீடுகளுக்கும் அதிக வரவேற்பு ஏற்படும். அதிக வெளியீடுகள் செய்ய மக்களுக்கு புதிய வேலை வாய்ப்புகளும் உருவாக வகை செய்கிறது. முறையான ஊதியம் பெறும் மக்கள் மன நிறைவோடு வேலையில் ஈடுபடுவார்கள். தொடர்ந்தாற் போல் இது வெளியீட்டை அதிகரிக்க உதவி புரியும்.

அதிகபடியான முதலாளிகள் அல்லது முதலீட்டாளர்கள் குறைந்த வருமானமே அவர்களின் வியாபார முன்னேற்றத்துக்கு வழி செய்வதாக எண்ணம் கொண்டுள்ளார்கள். குறைந்த வருமானம் அதிக லாபத்தை கொடுப்பதாக கருத்துகிறார்கள். இது குறுகிய சிந்தனையின் அடிப்படை முடிவுகள். குறைந்த வருமானத்தால் கைதேர்ந்த தொழிலாளிகள் அதிக நாட்கள் ஓரிடத்தில் வேலை செய்ய முனைவதில்லை. புதியவர்கள் வேலைக்கு அமர்த்தப்படும் போது அவர்கள் வேலை பழகும் காலம் உட்பட வெளியீடுகளில் பாதிப்பு ஏற்படுகிறது.வரையறை ஊதியத்தை அமல் செய்ய சரியான கணக்கு முறைகள் அவசியம். தவறான கணக்கெடுப்பின் அடிப்படையில் அதிகபடியாகவோ அல்லது குறைவாகவோ ஊதியம் கொடுக்கப்பட்டால் பக்க விளைவுகளையே நாம் சந்திக்கக் கூடும். மலேசியாவில் இதற்கான முயற்சிகள் எவ்வகையில் இருக்கின்றன என சரிவர தெரிவதில்லை. ஊடகங்கள் இச்செய்திகளை மக்களிடம் சரிவர சமர்ப்பிக்க தவறி இருக்கின்றன என்றேக் கூற வேண்டும்.

நம் நாட்டில் அன்னிய தொழிலாளர்களின் வருகையும் வரையறை ஊதிய அமலாக்கத்திற்கு முட்டுக் கட்டையாக அமைந்துள்ளது. ‘நீ இந்த வேலையை செய்யாவிட்டால் பரவாயில்லை, அதற்காக ஆயிரம் பேர் காத்திருக்கிறார்கள்’ எனும் நிலை தான் இங்கு அதிகமாக இருக்கிறது. கொடுப்பதை வாங்கிக் கொண்டு அமைதியாக இருந்துவிடுவதை உசிதமாக கருதுகிறார்கள் நம் மக்கள். காரணம் என்ன? அன்னிய தொழிலாளர்கள் அதே வேலையை குறைந்த வருமானத்தில் செய்து கொடுக்க எந்நேரமும் தயாராக இருக்கிறார்கள்.

நமது அரசு, தொழிலாளர்கள் விடயத்தில் கவனம் செலுத்த தவறி இருக்கிறதா அல்லது கண்டும் காணாமல் இருக்கிறதா எனும் நிலையே நீடிக்கிறது. இதை இடித்துரைத்து கேட்பார் இல்லை. காரணம் அச்சமே.

நம் நாட்டில் வருமையின் பிடியில் சிக்கி இறந்ததாக தகவல்கள் இல்லை ஆனால் மாசக் கடைசியில் செலவுகள் கை கடிக்க சீனரின் நகை அடகுக் கடையில் வரிசையில் நிற்போர் அதிகம். இதில் அதிகமானோர் நம் இந்தியர் என்பது வருத்தமான ஒன்றே. கோவில் உடைப்புக்கு போராடும் மக்கள் தம் வாழ்வியல் முன்னேற்றத்திற்கு எவ்வகையில் போராடுகிறார்கள் என்பன வினாக் குறியே.

முறையாக அமல்படுத்தப்படும் வரையறை ஊதியம் நாட்டு மக்கள் அனைவருக்கும் நலம் பயக்கும் என்பதை ஒல்குக. மலேசியாவில் இதற்கு முறையான சட்ட திட்டம் இல்லாதது வேதனைக்குரிய செய்தி. தகுந்த ஊதியமானது தொழிலாளருக்கு ஒரு அங்கீகாரத்தை கொடுக்க வல்லது. புதிய ஆட்சி முறையில் இதை கவனத்தில் முன்னிறுத்தி செயல்படுவார்களானால் நாட்டின் முன்னேற்றத்திற்கு வித்தாக அமையும்.


(பி.கு: அநங்கம் சிற்றிதழில் வெளிவந்த எனது கட்டுரை. இதழ் 4, மே 2009, பக்கம் 40)