Tuesday, February 09, 2010

புலிகளை பாதுகாப்போம் - SAVE OUR TIGERS

மனிதனின் அட்டகாசம் நிறைந்து காணும் இவ்வுலகில் எது வேண்டுமானாலும் ஏற்படலாம். அவனாக கண்டு பிடித்துக் கொண்ட எண்ணுக்கும் எழுத்துக்கும் கடவுளர்கள் எனும் உருவங்களுக்கும் பயப்படுவதைப் போல் பாசாங்கு செய்து பசப்புகிறான். உருவ சிலைகளுக்கு முன் வேறு முகம், சிலைகளுக்கு அப்பால் வேறு முகமும் அவனுக்கு ஏற்படுகிறது. சுயநலம் அவனை சிறு நொடி பொழுதுகளினும் மாற்றிக் கொண்டிருக்கச் செய்கிறது.

தன்னையும் மீறிய சக்தி என்பது அவனுடைய தற்காலிக தேவைகளுக்கான போர்வை. தனது தோல்விகளை, அவமானங்களை, பொய்களை, திருட்டுத்தனம் எனும் குணங்களை மறைத்து வைத்துக் கொள்ள அச்சக்தி அவனுக்கு தேவைப்படுகிறது.

மனிதனே உலகின் மிகப் பெரும் சக்தி என கருத முடிகிறது. அவனெடுக்கும் முடிவும் மனிதத்தை சார்ந்ததாகவே இருக்க முற்படுகிறான். இந்த முடிவுகள் நன்மையை மட்டுமே நேக்கியவையா என கேட்பின், நிச்சயமாக இல்லை. அவன் வாழ்வதும் நீதி கொண்ட வாழ்க்கை என சொல்லிவிடலாகாது.

விலங்குகள் மற்றும் பிராணிகள் போன்ற ஏனைய வாழ்வினங்களுக்கு மனிதன் விளைவிக்கும் கொடுச் செயல்கள் வன்மையானவை. இக்கொடுமைகளின் பரிணாம வளர்ச்சி கற்காலத்தில் தொடங்கியன என்பதே தகும்.
கடந்த ஆண்டு தென் ஆப்ரிக்காவில் யானைகளின் இனப் பெருக்கம் அதிகரித்ததால் அதன் எண்ணிக்கையை குறைக்க அவை கொல்லப்பட வேண்டும் என அந்நாட்டு அரசாங்கம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இது பலருக்கும் அதிர்ச்சியான தகவலாக இருந்தது. இது நடக்குமேயானால் பிற நாடுகளும் இது போன்ற செயல்களை பின் தொடர கூடும் என தீவிரமாக மறுக்கப்பட்டது.

அதே போன்ற மற்றோரு சம்பவம் அமேரிக்காவில் நடந்தது. அங்கிருக்கும் ஓநாய்களை கொல்வதற்கு அரசு அனுமதி அளித்திருந்தது. இனவிருத்தியால் ஓநாய் இனம் அதிகரித்துவிட்டதே இதற்கு காரணமென சொல்லப்பட்டிருந்தது. இனவிருத்தியால் அதிகரித்துவிட்ட மனித இனம் தன் ஆதிக்கத்தை பாரபட்சமின்றி ஏனைய உயிரினங்களின் மீது மேற்கொள்கிறது. இதை இயற்கையின் மீதான மனிதனின் சீற்றமென்றே சொல்ல முடிகிறது.

எனது ஆரம்பப்பள்ளி நாட்களில் WWF எனப்படும் உலக வனவிலங்கு பாதுகாப்பு அமைப்பினால் ஈர்க்கப்பட்டிருந்தேன். இதன் வழியே பண்டா எனப்படும் கரடி இனத்தின் புரிதல்கள் கிட்டியது. WWF-ன் சின்னத்தில் பண்டா கரடியின் படம் பொறிக்கப்பட்டிருக்கும். இதன் காரணம் வினவிய பொழுது இவ்வினம் பாதுகாக்கக் கூடிய விலங்கினத்தின் கீழ் இருப்பதாக கூறப்பட்டது.

பாண்டா வகை கரடிகள் இரு ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே குட்டி போடும். இனவிருத்தி காலம் அதிக அவகாசம் கொண்டிருப்பதும் இதன் இன விரிவாக்கம் பெருக முட்டுக்கட்டையிட்டுள்ளது. தற்சமயம் 1000க்கும் குறைவான பாண்டா கரடிகளே உலகில் இருப்பதாக கூறப்படுகிறது. சீனா போன்ற நாடுகளில் பாண்டா கரடிகள் பேனப்படுகின்றன. இதன் ஆயுட்காலம் சுமார் 25 ஆண்டுகள் என கணக்கிடப்படுகிறது. மூங்கில்களை முக்கிய உணவாக கொள்ளும் இக்கரடி வகைகள் குறிப்பிட்ட சீதோஷன நிலை கொண்ட பிரதேசங்களில் மட்டுமே வசிக்கக் கூடியவையாகும்.
அதே நிலை புலிகளுக்கும் ஏற்பட்டிருப்பது வருந்ததக்க ஒன்றே. உலகின் சில நாடுகளில் மட்டுமே புலி இனங்கள் வசித்து வருகின்றன. மலேசியா, இந்தியா, இந்தோனோசிய சுமத்ரா கடுகளிலும் புலிகள் வசித்து வருகின்றன. இதன் அழிவுக்கு புலி வேட்டைகளுக்கு அதிக வருமானம் கிட்டுவதே காரணம் என அறிய முடிகிறது.

புலிகள் ஒவ்வொன்றிற்கும் 20ஆயிரம் முதல் 25ஆயிரம் ரிங்கிட் வரையிலும் சந்தையில் விலை நிர்ணயிக்கப்படுகிறது. கரும்புலிகள் 12ஆயிரம் ரிங்கிட் வரையிலும் கொடுக்கப்படுகிறது. வேட்டையாடப்படும் புலிகள் உடனடியாக வெளிநாடுகளுக்கு இரகசியமாக அனுப்பப்பட்டுவிடுகின்றன. புலிகளை சரியான அளவில் இறைச்சிகளாக வெட்டி, சீனா, தாய்லாந்து, தய்வான் கொஇயா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்துவிடுகிறார்கள்.

கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்துவதனன்றி இவ்வனவிலங்கினங்களை காப்பாற்றுவது சாத்தியமாகாது. புலிகளின் பாதுகாப்பு தொடர்பாக பல முகாம்கள் மும்முற படுத்தப்பட்டுள்ளன. சுயநலத்தின் பேரில் நம்மை சுற்றியிருப்பதை நாம் அழித்துக் கொண்டிருப்போமானால் நம்மை நாம் அழித்துக் கொள்ளும் காலம் வெகு அருகில் என அர்த்தப்படும்.

உங்கள் பார்வைக்கு:
NDTV CHANNEL
WWF நடத்தும் புலிகள் பாதுகாப்பு முகாம்

Monday, February 08, 2010

ஒரு கல்லறையின் கதை

நியூ யார்க் மாநிலத்தில் தேண்டுவதும் சமன் படுத்துவதுமென கட்டமைப்பு பணிகள் செவ்வனே நடந்துக் கொண்டிருந்தது. அது 1991-ஆம் ஆண்டாகும். மந்திய அரசின் புதிய அலுவலகத்தை அவ்விடத்தில் நிறுவும் பொருட்டே இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. அப்பணிகள் திடீரென தடை கண்டது. கட்டுமான இடத்தில் தோண்டுதல் வேலைகளின் போது இங்குமென கொஞ்சம் கொஞ்சமாக மனித எழும்புக்கூடுகள் வெளிபட்ட ஆரம்பித்தன.

ஆழமான தோண்டுதலின் பொழுது அவர்களின் வியப்பு மேலும் அதிகரிக்கவேச் செய்தது. கண்ணாடியில் செய்யப்பட்ட முத்துமணிகள், துருபிடித்த இருப்புச் சங்கிலிகள் என அவ்விடத்தில் சில பொருட்கள் காணப்பட்டது. சுமார் ஆறு மீட்டர் ஆழத்தில் ஏறத்தாழ 400 மனித கூடுகளை கண்டெடுத்தார்கள். அடையாளமின்றி இப்படி மர்மமாக புதைக்கப்பட்டவர்கள் யாராக இருக்கக் கூடும்.

இச்சம்பவம் தொடர்பாக வாசிங்டனின் ஹாவர்ட் பல்கலைக்கழகத்தின் ஆய்வுக் குழுவினர் மேற்பணியினை எடுத்துக் கொண்டார்கள். இவ்வாராய்ச்சி சுமார் 9 ஆண்டுகள் நடத்தப்பட்டது. ஆராய்ச்சியின் முடிவுகள் சில திடுக்கிடும் செய்திகளை வெளியிட்டன.

ஆரம்பத்தில் கூறப்பட்ட அக்கட்டுமான பகுதியானது பல காங்களுக்கு முன் மயான பகுதியாக இருந்ததாக கூறப்படுகிறது. கட்டுமான பணிக்காக எடுத்துக் கொண்டது சுமார் 5 ஹக்டர் நிலபரப்பு. அதாவது மயானம் எனக் கூறப்படும் இடத்தின் ஒரு பகுதி மட்டுமே. மொத்தமாக அங்கு எடுக்கப்பட்ட எழும்புக் கூடுகளின் எண்ணிக்கை சுமார் 10000 முதல் 20000 வரையிலும் அடங்கும்.

மருத்துவ பரிசோதனையின் போது எழும்புக்கூடுகளில் முதுகுத்தண்டு பகுதிகளில் விரிசல் கண்டும், எழும்புகள் உடைந்தும் இருந்தது. கடுமையான, பலமான அல்லது கடினமான வேலைகளில் ஈடுபட்டதால் இப்பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக காரணம் காட்டப்படுகிறது. மேலும் நோய்வாய்பட்டவரின் எண்ணிக்கையும் பட்டினியால் வாடி இறந்தோரும் கணிசமாக இருந்திருக்கிறது. 40 விழுக்காட்டிக்குற்கும் அதிகமான எழும்புக்கூடுகள் 12 வயதிற்கு குறைவானவர்களுடையது என்பது இங்கு வருந்ததக்கச் செய்தியாக அமைகிறது.

சரித்திர சுவடுகள் புரட்டப்பட்டன. ஆராய்ச்சியில் ஈடுப்பட்டிருந்த பல்கலைக்கழகத்தினர் அவை ஆப்பிரிக்காவில் இருந்து கொண்டு வரப்பட்ட அடிமைகள் புதைக்கப்பட்ட இடமென கண்டறிந்தார்கள். த்ரினிட்டி Trinity" தேவாலைய கட்டுமான பணிகளுக்கும், எதிரிகளிடம் இருந்து தாக்குதலை குறைக்கும் பொருட்டு தடுப்புச் சுவர்களை கட்டும் பணிக்கும் அவர்கள் கொண்டு வரப்பட்டதாக கூறப்படுகிறது.

ஃப்பியூடல் சிஸ்டத்தின் அரசியல் மிகவும் குழப்பகரமானது. இதில் அரசர்களுக்கும் தேவாலய பாதிரியார்களுக்கும் ஏற்படும் பிணக்குகளால் அரசியல் மாற்றங்கள் வெகு எளிதாக நடைபெற்று வந்தன. நாட்டின் மேம்பாட்டிற்கு முக்கிய அங்கமென அரசினால் தேவாலயங்கள் நிறுவப்பட்டு வந்தன. இதன் கட்டுப்பாடுகள் முழுக்க முழுக்க தேவாலய பிரபுக்களிடையே இருந்ததால் சில பல பிரச்சனைகள் நடந்தபடி இருந்தன. சில கட்டுப்பாகளின் வழி தேவலயம் நில அபகரிப்பு செய்யும் யுக்திகளையும் வைத்திருந்தன. அதை இங்கு குறிப்பிடுவது செய்தியை நீட்டித்துவிடும்.

1712-ஆம் ஆண்டு அடிமைகள் Trinity தேவாலயத்திற்கு சொந்தமான மயானப் பகுதியில் அடக்கம் செய்யக் கூடாது எனும் உத்தரவை பிறப்பித்தது. அதனால் கொல்லப்பட்ட அடிமைகளும் கொடுமையினால் இறந்தோரும் ஒரு பிரத்தியோக இடத்தில் புதைக்கப்பட்டனர். மணற் பரப்பினால் அவ்விடம் மூடி வைக்கப்பட்டிருந்தது.

1865-ஆம் ஆண்டு அமேரிக்கா அடிமைகள் வியாபாரத்தை தனது நாட்டில் தடை செய்தது. இத்தடை விதிகளால் மேற்கத்தியர்கள் தங்களது அடிமை வியாபரத்தை நிறுத்திக் கொண்டவர்களாக தெரியவில்லை.

ஆராய்ச்சி தொடர்ந்தாற் போல் சினிகல் நாட்டிற்கு பயணிக்கிறது. கோரி சினிகல் நாட்டில் அமைந்திருக்கும் சிறிய தீவு. 1444-ஆம் ஆண்டு முதற் கொண்டு இங்கு அடிமைகள் வியாபாரம் தொடங்கியதாக கூறப்படுகிறது. அச்சமயம் கோரி தீவு போர்த்துகீசியர்களின் ஆளுமையில் இருந்திருக்கிறது.

பிடிபடும் அடிமைகள் அவர்கள் உடைமைகள், வீடு, நிலம் என அனைத்தையும் இம்முதலாளி வர்கத்தினரிடையே இழக்க நேரிடும். எதிர்ப்பவர்களை கொன்று வீட்டோடு எரித்துவிடுவார்கள். 1544-ஆம் ஆண்டு முதல் அடிமைகள் கொள்முதல் மையத்தை போர்த்துகீசியர்கள் கோரி தீவில் நிறுவினார்கள். வெளிநாடுகளில் விற்பனை செய்வதற்கு முன் அடிமைகள் இங்கு கொண்டு வந்து சேர்க்கப்படுவார்கள்.

இதன் தொடர்பாக கோங்கோ நாட்டின் அரசர் போர்த்துகீசிய ஆளுநருக்கு கடிதம் ஒன்றினை எழுதியிருக்கிறார். 18-ஆம் தேதி அக்டோபர் மாதம் 1526-ஆண்டில் எழுதபட்ட கடிதம் அது. அதில் தனது நாட்டில் இருந்து போர்த்துகீசிய ஆட்சியாளர்களை வெளியேறும்படி அவர் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

அடிமை வியாபரத்தை முற்றிலும் ஒழிக்கவும், நாட்டு மக்கள் அடிமை தொழிலினால் வெகுவாக குறைந்து போய்விட்டதாகவும் அவர் கோடிட்டுள்ளார். இப்படி செய்வதில் கிருஸ்துவ மதம் சார்ந்தவர்கள் ஈடுபட்டிருப்பது வேதனையளிப்பதாகவும். அப்படி இருப்போர் உலகெங்கினும் மதப் பிரச்சாரம் செய்வதில் நன்மை இல்லை என்பதனையும் குறிப்பிட்டிருந்தார்.

தொடர்ந்து 1588-ஆம் ஆண்டு துர்க்கியும், அதன் பின் 1677 முதல் 1815-ஆம் ஆண்டு வரையிலும் அத்தீவு பிரான்சு மற்றும் ஆங்கிலேயர்களாலும் ஆட்சி செய்யப்பட்டிருக்கிறது. வெளிநாட்டவரின் ஆதிக்கத்தில் இருந்த வரையிலும் கோரி தீவு அடிமைகளின் பட்டுவாடா இடமாகவே விளங்கியது.

இப்படி அடிமைகளாக கொண்டு வரப்பட்டவர்களின் பெரும்பாலானோர் அந்நாட்டின் பூர்வகுடி மக்களென அறியப்படுகிறார்கள். கணவன், மனைவி, பிள்ளைகளென அனைவரும் மொத்தமாக அடைத்து வைக்கப்படுவார்கள். அவர்கள் நிர்வாணமாகவும் அரை நிர்மாணமாகவும் 3 மீட்டர் அளவைக் கொண்ட அறையினுள் ஒவ்வொன்றிலும் 30 பேர்கள் வரையிலும் திணிக்கப்படுவார்கள்.

சுவாசத்திற்கு சிறியதொரு ஓட்டை வழியாக காற்று வரவும், கழிவு அகற்ற இடம் மற்றும், நாள் விகிதத்திற்கு ஒரு வேளை சாப்பாடு எனக் கொடுக்கப்பட்டும். இதனால் பலரும் ஊட்டச்சத்தின்றி நோய்வாய்ப்பட்டு மரணமடைந்தார்கள். அச்சமயங்களில் கோரி தீவில் கடுமையான நோய்கள் பரவவும் செய்தன.

சிறு பிள்ளைகள் ஒரு கூண்டில் அடைக்கப்பட்டு தாய்மார்கள் கூண்டிற்கு வெளியே விடப்படுவார்கள். அவர்கள் பிள்ளைகள் அழுவதை மட்டுமே கண்டிருக்க முடியும். அதிகமான பிள்ளைகள் உணவு பிரச்சனையால் மரணமடைந்தார்கள். நிதி கட்டுப்பாட்டை குறைக்கும் பொருட்டு ஆட்சியாளர்கள் குழந்தைகளை கொன்றுவிடுவதும் உண்டு.

அடிமைகளாக்கப்பட்டவர்களின் பிணங்கள் கடலில் சுறாவுக்கு இறையாக தூக்கி எறியப்படும். வெள்ளையர்களுக்கு சுறாவுக்கு இறையிடுவது ஒரு பொழுது போக்கான நிகழ்வு என்பதும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

எஞ்சியவர்கள் கியூபா, கொரேபியன் தீவுகள், பிரேசில், அமேரிக்கா என பல நாடுகளுக்கும் விண்ணப்பத்தின் அடிப்படையில் அனுப்பப்படுவார்கள். ஒன்றரை மீட்டர் அகளமும் 20 மீட்டர் நீளமும் கொண்ட கப்பலில் இவர்கள் அடைத்து ஏற்றிச் செல்லப்படுவார்கள். பயணம் சுமார் மூன்று முதல் நான்கு மாத காலத்தை எடுத்துக் கொள்ளும். கப்பலில் இறந்து போனவர்களை பரபட்சமின்றி கடலில் தூக்கி எறிந்துவிட்டு பயணத்தை தொடர்ந்த வண்ணம் இருப்பார்கள்.

இலக்குகளை அடைந்தவுடன் அடிமைகள் வெள்ளையர்களுக்கு விற்பனை செய்யப்படுவார்கள். தங்கள் செல்வ வசதிகளுக்கு ஏற்றபடி அடிமைகள் குழந்தைகள், பெண்கள், ஆண்கள் என வாங்கிக் கொள்ளப்படுவார்கள். எஜமானர்கள் தங்கள் செல்லப் பிராணிகளுக்கு கொடுக்கும் அப்பின் துளிப்பகுதி கூட அடிமைகளுக்கு மறுக்கப்பட ஒன்றென அவர்களை நடத்துவார்கள். இப்படி வாங்கப்படும் அடிமைகளில் வலுத்தவர்கள் மட்டுமே தொடர்ந்து உயிர் வாழ முடியும் என்பது இங்கு விதியாக அமைந்திருந்தது.

பிரான்சு நாடு நெப்போலியனின் ஆட்சியின் கீழ் இருந்த சமயம், ‘சமத்துவம், சுதந்திரம், சகோதரத்துவம்’ என்பதே அவர்களின் புரட்சி முழக்கமாக இருந்தது. இருப்பினும் நெப்போலியனின் ஆட்சியின் கீழ் அதிகமான கருப்பின அடிமைகள் இருந்திருக்கவே செய்கிறார்கள். தமது வல்லிய படைகளை நிலைகொள்ள அடிமைகள் நெப்போலியன் இராணுவத்தினருக்கு தேவைபட்டனர். ஆக மொத்தத்தில் புரட்சி முழக்கம் என்பது பெயருக்கு மட்டுமே இருந்ததே அன்றி முற்றிலுமாக அடிமைத் தனத்தை அகற்றும் செயல்பாடுகள் அங்கு நடந்தேறவில்லை என்பதே உண்மை.

1848-ஆம் ஆண்டு புதிய ஆட்சி மாற்றத்தின் போது கோரி தீவு அடிமை வியாபாரத்தில் இருந்து விடுபட்டது. அடிமைகளின் சேகரிப்பு மையங்கள் அகற்றப்பட்டன. தற்சமயம் அத்தீவினில் ஓரே ஒரு சீரானா மையம் மட்டுமே எஞ்சியுள்ளதாகவும் அது துர்க்கியர்களின் ஆட்சியின் போது 1776-ஆம் ஆண்டு கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. வரலாற்று குறிப்புகள் இது வரையிலும் கோரி தீவில் 3கோடி அடிமைகள் வியாபார பொருட்களாக்கப்பட்டுள்ளதாக காட்டுகின்றன. அத்தீவையும் அதன் ஆதார பத்திரங்களும் UNESCOவினால் பாதுகாக்க வேண்டிய சரித்திர சுவடுகளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்படியாக 1991-ஆம் அண்டு நியூயார்க்கில் நடந்த ஆய்வுகள் பல செய்திகளை வெளியிட்டுள்ளது. நாகரீகமடைந்த, தான் உயர்ந்தவன், புனிதமானவன் என்றும் கடவுளின் ஆசி பெற்றவன் என்றும் கூறி கொள்ளும் ஓர் இனத்தினர், இழிவானவர்களென்றும், தீய ஆன்மா கொண்ட கருப்பு சாத்தான்களென்றும் கருதும் அறியாமை குறைந்த மற்றோரு இனத்திடையே மேற்கொண்ட ஆதிகங்கள் இன்னும் பல இடங்களின் நம் கண்களுக்கு தெரியாமலே உறக்கிக் கொண்டிருக்கிறது.

அடிமை வியாபாரங்கள் இந்நாட்களில் இல்லாமல் போய்விடவில்லை. திரவியத் தேடலில் அகப்பட்டோர் இடம் அறியாது சிக்கிக் கொண்டு படும் அல்லல்கள் பலவிடங்களிலும் எழுந்திருக்கின்றன. வலுக்கட்டாயமான பலியல் தொழில், சிறுவர் தொழிலாளார்கள், குறைந்த வருமானத்தில் வேலை, காட்டுபாடற்ற வேலை நேரம் என சிக்கல்கள் தொடர்ந்து கொண்டிருக்கவே செய்கிறது.

Wednesday, January 13, 2010

கொசுறு 13/01/2010

சில தினங்களுக்கு முன் நண்பரோடு காலை சிற்றுண்டிக்குச் சென்றிருந்தேன். சாப்பிட்ட பிறகு நண்பர் சப்பாத்தி பொட்டலம்கட்ட ஆர்டர் கொடுத்துவிட்டு அமர்ந்திருந்தார். கடையில் வேலை செய்யும் சர்வர் இவரது ஆடரை கவனத்தில் கொண்டதாக தெரியவில்லை. மறுமுறை சொன்னபோதும் தலையை தலையை ஆட்டிக் கொண்டு சென்றார்.

பணம் செலுத்த வந்த போது, “அண்ணே ரெண்டு சப்பாத்தியா போட்டாச்சு எடுத்துக்கிறிங்களா?” என்றார்.

என் நண்பர் வேண்டாம் என மறுத்துவிட்டு ஒன்றுக்கு மட்டும் பணம் செலுத்திவிட்டு வந்தார்.

நமது வியாபார தளத்துக்கு வருகை புரியும் வாடிக்கையாளர்களே முதன்மையானவர்கள். நமக்கு வாய்ப்பு கொடுப்பவர்கள். அவர்களை நம்பிதான் நாம் வாழ வேண்டும்- இக்கூற்று மாகாத்மா காந்தியால் சொல்லப்பட்டது. பலவிடங்களிலும் இதை நீங்கள் பார்த்திருப்பீர்கள், படித்திருப்பீர்கள்.

வியாபாரத்தின் அடைவு நிலை என்பது கிடைக்கும் இலாபத்தால் மட்டும் கணக்கிட்டு முடிப்பதில்லை. அதிக இலாபம் திருட்டுக்குச் சமம் என்பார்கள். தயாரிப்புக்கும் பொருள் அல்லது கொடுக்கப்படும் சேவை எந்த அளவுக்கு அதை பெற்றுக் கொண்ட பயனீட்டாளரை திருப்திபடுத்தியது என்பதே அடைவு நிலையின் உச்சம்.

தொழில் துறை , விவசாய துறை , சுற்றுலா துறை , சேவை துறை என வியாபரங்களின் விரிவாக்கம் நாளொரு வண்ணமும் செழிப்படைந்து வருகிறது. வியாபாரத்தின் வழியே கொள்ளை பணத்தை ஈட்டுவது சாத்தியம் எனும் எண்ணம் பலரும் உண்டு. ஏற்புடைய கருத்தாயினும் பணம் கிடைத்தால் போதும் எனும் நோக்கில் எப்படி வேண்டுமானாலும் வியாபாரம் செய்யலாமா?
*****

சுஜாதாவின் சிறுகதை எழுதுவது எப்படி எனும் புத்தகத்தை சில ஆண்டுகளுக்கு முன்பாகவே பார்த்திருக்கிறேன். நீல நிற அட்டையுடனான புத்தகம். இதற்கு கூட புத்தகமா என அதை புரட்டி பார்க்க கூட எத்தனிக்கவில்லை.

அன்று புத்தக கடையில் புதிய வடிவ அட்டையில் இருக்கக் கண்டதும் எடுத்துப் பார்த்தேன். சிறுகதை எழுதுவது எப்படி என்பது சுஜாதாவின் சிறுகதை தொகுப்பு நூல். தலைப்பின் காரணத்திற்காகவே இப்புத்தகம் சிறுகதை எழுதுவதை சொல்லிக் கொடுக்கும் புத்தகம் என நம்பி பலராலும் வாங்கப்பட்டிருக்கிறது.

உணரபட்டவை: சாணியடி சித்தர் சொன்னதை போல் முகப்பை பார்த்து புத்தகத்தை எடை போட கூடாது. வடிவமைப்பும் முக்கியமான ஒன்று என்பதை அறியமுடிகிறது. சமீப கால புத்தக முகப்புகள் சிறப்பாகவே வடிமைக்கப்பட்டு வெளியாகின்றன.
************எனக்கு டைரி எழுதும் பழக்கம் கிடையாது. எப்போதாவது கவிதை அல்லது செய்திகளை எழுதி வைப்பதுண்டு. கடந்த ஆண்டு செய்தி சேகரிப்பதும் கவிதை எழுதுவதும் பலமாக குறைந்து போனது. டைரிகளும் புத்தம் புதிதாகவே இருக்கின்றன. கடந்த ஆண்டுகளில் கிடைத்ததை போல 2010-ஆம் ஆண்டுக்கான டைரி ஒன்று கூட கிடைக்கவில்லை. இதைத் தான் எண்ணம் போல் வாழ்கை என்பார்களோ? ;-)

**************

சீனி விலை உயர்த்தப்பட்டுள்ளது. அத்யாவசிய பொருட்களின் விலை ஏற்றம் நமக்கு புதிதில்லை. பயனிட்டாளர் பொது இயக்கத்திடையே இதைச் சொல்வோமானால், மக்கள் மத்தியில் இனிப்பு நீர் வியாதி அதிகரிப்பதை தடுக்க இதுவே சிறந்த வழி என்பார்கள். ஏற்கனவே சொன்ன காரணம் தானே.

கிரெடிட் காட்டின் நிலை இன்று வரை புரியாமலே இருக்கிறது. இது போக தனிபட்ட சேவை வரிகள் இணைக்கப்படுமென ஊடகங்கள் வெளியிடும் தகவல்களால் தலை சுற்றுகிறது.
**********

பேஸ்புக் (முகரை புத்தகம்னு சொல்லலாமா?) வலைபக்கம் சுவாரசியமாக இருக்கிறது. வேடிக்கை, விளையாட்டுகள் என நேரம் நாசமாய் போகிறது. புத்திக்கு உறைத்தாலும் எண்ணத்தை கட்டுபடுத்த முடியவில்லை. இணையப்பக்கம் வரும் போதெல்லாம் திறந்து வைத்துக் கொண்டிருக்கச் சொல்கிறது.

மலேசிய மாணவர்களிடையே தேர்ச்சி விகிதமும், படிப்பில் ஆர்வக் குறைவு ஏற்பட்டுள்ளதற்கும் பேஸ்புக் போதை முக்கியக் காரணமாக அமைந்துள்ளதாக மலாய் நாளேடு ஒன்று அண்மையில் செய்தி வெளியிட்டிருந்தது. பயனிட்டாளர்களிடையே அதீத போதையை கொடுக்கும் இவ்வலைப்பக்கத்திற்கு எதிர்கால விளைவுகள் எப்படி இருக்கும் என்பது சிந்திக்கத் தூண்டுகிறது. புதிய பொருட்களிடையே இருக்கும் மோகம் நாளடைவில் குறைந்துப் போகும் தானே?
**************

இயக்குநர் அமிர் நடித்திருக்கும் யோகி மற்றும் ரேனிகுண்டா போன்ற படங்கள் யதார்த்தமான கதையம்சம் கொண்ட படங்களாக அமைந்திருக்கின்றன. வன்முறையின் உச்சம் என சிலர் சொல்வது வேடிக்கையாக இருக்கிறது. வேட்டைகாரன் படத்தில் விஜயின் அலம்பல்களை கைதட்டி இரசிப்போருக்கு இப்படங்கள் வன்முறையாகத் தான் தெரியும் போல.
******************

தமிழ் நாட்டில் புத்தக திருவிழா களைகட்டி இருப்பதை அறிய முடிகிறது. சென்ற வருடத்தைப் போலவே சாரு, ஜெயமோகன், எஸ்.ரா எனும் அதே பெயர் வரிசைகளே இவ்வருடமும் அதிகபடியாக பேசப்படுகிறது.


கடந்த ஆண்டின் புத்தக சந்தையின் போது ஆடர் கொடுத்த மாயவலை இரண்டு மாதங்களுக்கு
முன் தான் என் கைக்கு கிடைத்தது. படித்து முடிப்பதற்குள் தொண்டை தண்ணி வற்றிப் போய்விடும் போல.

மாயவலை ஆறு வருட ஆய்வின் பதிப்பு என குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும் சில பகுதிகளில் வேற்றுக் கருத்துக்கு இடமளிக்கும் விதமாகவே செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன. ஆரம்ப நிலை புரிதலுக்கு மாயவலை சிறந்த புத்தகம் என்றே கூற முடியும். பா.ராவின் எழுத்து நடை கவரும் வகையில் அமைந்துள்ளது என்பதை மறுக்க இயலாது.

*****************
அனைவருக்கும் இனிய பொங்கள் நல்வாழ்த்துகள்.

Sunday, January 10, 2010

எப்போதும் பெண் (நாவல்) - சுஜாதா



புத்தகம்: எப்போதும் பெண்
ஆசிரியர்: சுஜாதா
பதிப்பகம்: உயிர்மை

"இதை எப்படி வேண்டுமானாலும் அழைத்துக் கொள்ளுங்கள். படியுங்கள். இதன் விஷயம் எனக்குப் பிடித்தமானது. பொய் இல்லாமல், பாவனைகள் இல்லாமல் எழுதியிருக்கிறேன். பெண் என்கிற தீராத அதிசயத்தின் பால் எனக்குள்ள அன்பும் ஆச்சரியமும், ஏன், பக்தியும் தான் என்னை இதை எழுதச் செலுத்தும் சக்திகள்.'' - முன்னுரையில் சுஜாதா.

தாய், சகோதரிகள், தோழிகள், பின்நாட்களில் மனைவி என ஆணின் வாழ்க்கை முறை அமைகிறது. இதில் பொரும்பாலான இடங்களில் பெண் என்பவளுடனான தொடர்பு நிலை தொடர்ந்து நிலைக்காமலும், பாதியாகவும் முடிவடைந்து விடுகிறது. பெண்ணின் சுதந்திரம் ஒரு வரையரைக்குட்பட்டு இருப்பதனால் இந்நிலை எற்படும் சாத்தியங்கள் அதிகம் இருக்க முடியுமென நாம் சொல்லலாம்.

அப்பா, அண்ணன்கள், தம்பிகள், தாத்தா, மாமா, கணவன், அம்மா, அக்காள் என அவளை சார்ந்த முடிவுகள் தீர்மானிக்கப்படுகின்றன. ஒவ்வொரு வயது நிலையிலும் பெண் என்பவளின் செயல்பாடுகள் மாற்றியமைக்கப்படுகிறது. அதை அவள் விரும்புகிறாளா அல்லது ஏற்றுக் கொள்கிறாளா என்பதையும் அவளை சூழ்ந்தவர்கள் அறிந்துக் கொள்ள விரும்புவது கிடையாது. இது தான் சமூக நியதி எனும் கட்டாயங்கள் திணிக்கப்படுகிறது. பெண் என்பவளின் சுதந்திரம் அவளால் விரும்பப்பட்டது அல்லது ஏற்றுக் கொள்ளப்பட்டது என்பதை காட்டினும் கட்டுப்பாட்டுக்குள் வைக்கப்பட்டது என்பதே தகும்.

பெண் பாலியல் வன்முறைகளுக்கு எதிரானா சட்ட திட்டங்கள் தேவையற்று போய்விடும் நிலை மனித நாகரீகத்தின் அதீத வளர்ச்சியின் பின்னும் தீர்ந்தபாடில்லை. அது இன்னமும் மெருகூட்டப்பட்டு, சீர்திருத்தப்பட்டு
நீதி எனும் பெயரில் உபயோகிக்கப்படுகிறது. பெண்ணை போகப் பொருளாக பார்க்கவும் உபயோகிக்கவும் ஆண்களுக்கான கட்டளைகள் அவனது மரபணுவின் வழியாக செலுத்தப்பட்டுவிடுகிறது. பெண்களிடம் தோன்றும் காமத் தேடல்களை அவன் விரும்பச் செய்கிறான். ஆண் என்பவனுக்கு ஏன் அப்படி தோன்ற வேண்டும்? அவனுள் ஏற்படும் பௌதிக மாற்றமும், பெண்ணின் பருவ வளர்சிகளும் அவனை இத்தூண்டுதலுக்கு ஆளாக்கக் கூடியதாக இருக்க வேண்டும்.

சுஜாதாவின் எப்போதும் பெண் எனும் நாவல் பெண்னை பற்றிய அடிப்படை புரிதலை நமக்கு நயமாக விவரித்துள்ளது என்பது மிகையற்றது. பெண்ணின் வளர்ச்சிக்கும் மாறுதல்களுக்கும் காரணங்கள் யாவை என்பதினை எளிய நடையில் எடுத்துரைத்துள்ளார். வளர்ச்சி அல்லது மாறுதல்கள் என்பன பெண்ணின் உடல், உள்ளம் மற்றும் செயல்பாடுகள் யாவற்றிலும் அடங்கியுள்ளது. அவளின் ஒவ்வொரு செயல்பாடுகளிலும் சில கட்டமைப்புகள் சூழ்ந்துக் கொள்கின்றன. ஒரு வரையரைக்குட்பட்ட தீர்மானங்களையோ செயல்பாடுகளை மட்டுமே அவளால் செய்ய முடிகிறது.

இங்கு முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய விடயம், ஓரிரு வயது வித்தியாசங்களுடன் ஒரு தாய்க்கு பிறக்கும் ஆண் மற்றும் பெண் குழந்தைகள் வளர்கப்படும் விதம் ஒரே விதமான சூழ்நிலையைக் கொண்டது. இருப்பினும் இருவரின் வளர்ச்சியிலும், சிந்தனையிலும் அது வேறுபாட்டை கொடுக்கிறது. இந்நிலைக்கான சாத்தியங்கள் நமக்கு குழப்பத்தை கொடுக்கின்றன. பிறப்பின் நியதி என இதை நாம் பொதுப்படையாக சொல்லிவிடுகிறோம்.

மூன்று ஆண் குழந்தைகளை பெற்று இல்வாழ்க்கையில் சலித்துப் போன ஒரு ஆண் தூக்கம் வராமல் போரடித்துப் போன இரவொன்றில் தன் மனைவியை சுகிக்க, விந்து அவளின் கரு முட்டையை தேடி ஓடுகிறது. நாவலின் முதல் பக்கத்தில் இதை படித்தவுடன் முடிவு வரை எப்படி கொண்டுச் செல்வார் எனும் தீர்மானத்தை ஓரளவேனும் யூகிக்க முடிந்தது. இக்கதையின் முடிவு எனக்கு அளப்பறிய பாதிப்பை கொடுக்கவில்லை என்பதே உண்மை. இருப்பினும் இதன் வாசிப்பு புதிய அனுபவமாகவும், சுவாரசியமாகவும் இருக்கவேச் செய்தது.

இதை கதையென்றோ, நாவல் என்றோ எப்படி வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளுங்கள். ஆனால் படித்துப் பாருங்கள் என ஆரம்பிக்கும் சுஜாதாவின் முன்னுரை இக்கதைக்காக அவர் எடுத்துக் கொண்ட சிரத்தையை நமக்கு தெளிவிக்கிறது. நன்னெறிகளையும், நீதிக் கதைகளையும் விரும்பிப் படிபவர்கள் விரசமான எழுத்து என இப்புத்தகத்தை ஒதுக்கக் கூடும். நகைச்சுவை, எழுத்துநடை, சுவாரசியம் என தனக்கே உரிய பாணியில் கொடுக்கப்பட்டிருக்கும் இப்புத்தகம் எல்லோராலும் நிச்சயம் படிக்கக் கூடிய ஒன்றெனவே சொல்லமுடிகிறது.

Saturday, November 14, 2009

வான் துளிகள்!!


தேங்கிய குப்பைகள்

திணறிக் கொண்டிருக்கிறது!

அடைத்துக் கொண்ட சாக்கடை

அழுது வடிகிறது!


ஈரப்பதம்

தேடிய காற்று

அலைமோதி

ஆசுவாசப்

பெருமூச்சிட்டுச் செல்கிறது!


வெள்ளிக்

காசுகளாய் குலுங்கி

கொட்டுகிறது

தலைதுவட்டிய

மரங்கள்!


தேன் கசிந்திட

திரவம் கிடைத்ததாய்

பூத்துச் சிரிக்கிறது

வசந்த மலர்கள்!


களிமண்

கரைந்திடாமல் இருக்க

குடைபிடித்துச் செல்கிறான்

மனிதன்!


இந்த

இயற்கை

தனக்குக் காய்சல்

வருவதாய் சொல்லவில்லை!


யாரைத் தேடி

வந்தன

இம்மழைத் துளிகள்!


மீண்டும்

தேடலை துவங்கிய

காற்றாய் வான் நோக்கிச்

செல்கின்றனவே!

Friday, November 13, 2009

2012 திரைப்படம்- மரணத்தின் விளிம்பில்

மாயன்ஸ் நாட்காட்டி 2012 நிறைவற்று போவதின் காரணம் பல கோணங்களிலும் அலசப்பட்டும் பேசப்பட்டும் இருக்கிறது. 2012-ஆம் ஆண்டில் குறிப்பிட்ட அத்தேதியில் உலகம் அழியும் என்பது உண்மையானால் மனித குலத்தின் செயல்பாடுகள் எப்படி இருக்கும் என்பதே 2012 எனும் திரைப்படத்தின் கண்ணோட்டமாக அமைந்துள்ளது.

தென் அமேரிக்காவின் மெக்சிக்கோ பகுதியில் தோன்றி மறைந்ததாக கூறப்படும் மாயா நாகரிகத்தினரின் மகத்தான கண்டுபிடிப்புகளில் ஒன்றென கூறப்படுவது அவர்களின் நாட்காட்டியாகும். கி.முவில் தொடங்கும் இந்நாட்காட்டி முடியும் திகதி 21-12-2012. 2012 உலகின் மறுபிறப்பு தினம் (ரிஜெனரேஷன் பீரியட் என ங்கிலத்தில் சொல்லப்படுகிறது) என்பது உண்மையெனில் மக்கள் என்ன செய்யப் போகிறார்கள்? இந்த ரீஜெனரேஷன் எப்படியெல்லாம் நிகழப் போகிறது?

உலகின் அழிவை நோக்கிய பார்வையில் பல அமைப்புகள் செயல்பட்டுவருகின்றன. இவ்வமைப்புகள் மக்களை ஒன்றிணைத்து அவர்களை புனித ஆத்மாவாக்கி புதிய யுகத்திற்கு தயார் செய்யும் ஓர் உண்ணத பனியை மேற்கொள்வதாக காட்டிக் கொள்கின்றன. புதிய யுகம் தோன்றும் போது இவ்வியக்கத்தால் புனிதமாக்கப்பட்டவர்கள் மட்டும் புத்துயிர் பெற்று எழுவார்களாம். இது மரண பயத்தைக் காட்டி மனிதனை மிரட்டும் வழி. கடவுள் எனும் பிம்பத்தின் போர்வையில் 'ஏதோ பண்ணும்' யுக்தி.

சரி அப்படி என்றால் கடவுள் என்ன செய்யப் போகிறார். ஒரு நெருப்புப் பிண்டம் சிதறி விழுகையில் பெற்ற தாய் தன் பிள்ளையையும், கணவன் மனைவியையும் விட்டு ஓடலாம். நம்பிக்கைக்குறிய மிக நெருக்கமானவர்களே கைவிடும் சமயத்திலாவது கடவுள் தோன்றுவாரா?

இயற்கையின் சீற்றம் பல வழிகளில் ஏற்படலாம். இன்று வரையிலும் பல முறை உலக மக்கள் உலகின் கடைசி தினம் எனும் பெயரில் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள். மிரட்டப்பட்டிருக்கிறார்கள். The Millerites இயக்கத்தை நம்மில் பலர் அறிந்திருக்கலாம். இங்கிலாந்து தேசத்தின் விவசாயி ஒருவர் 23 ஏப்ரல் 1843-ஆம் ஆண்டு உலகம் அழியும் என கணிப்பு கூறினார். இவரின் "இவ்வற்புத' சிந்தனைக்கு தோன்றிய இயங்கமே The Millerites.

புதிய நூற்றாண்டான் 2000த்தாம் ஆண்டின் முதல் நாளின் வரவேற்பு எப்படி இருந்தது. Y2K எனும் அறிவியல் பிரச்சனையில் பீதியாகி பய உணர்வொடு வரவேற்றோம். புதிய ஆண்டின் மலர்ச்சி மந்தமாகி போனது. நிச்சயமாக உலகம் அழியும் என சொல்லிக் கொண்ட அமெரிக்க பாதரியார் ஒருவர் அப்படி நிகழாத்தை கண்ட மறு நிமிடம் தற்கொலை செய்துக் கொண்டு மாண்டு போனார்.

1806-ஆம் வருடம் தனது கோழி முட்டையில் ஏசு கிருஸ்து வருகிறார் எனும் எழுத்துகள் பொறித்ததாகவும் அதுவே உலகம் அழியும் அறிகுறியென புரளிகள் கிளம்பின. இதே போல் 1800 களிலும் 1900களிலும் பல சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. ஆனால் உலகம் இன்னமும் மூச்சுவிட்டுக் கொண்டிருக்கிறது.

2012 உலகம் அழிந்து போகும் நிலை ஏற்படலாம் எனும் ஆராய்ச்சிகள் பல கோடி செலவுகளில் நடத்துக் கொண்டிருக்கிறது. இந்த ஆராய்ச்சிகளும், ஆய்வுகளும், கணிப்புகளும் எத்தனை தூரம் உண்மை என்பதினை அறிந்துக் கொள்ள இன்னும் மூன்று ஆண்டுகள் உள்ளன. அந்தரத்தில் வீடு ட்டிக் கொண்டால் இயற்கை பேரிடர்களில் இருந்து பல வகையிலும் விடுபட்டுக் கொள்ளலாம் இல்லையா? புவி ஈர்ப்பு சக்தியை நாம் மீற முடியாமல் தான் இருக்கின்றோம்.

2012க்கு பிறகு இப்படம் எடுக்கப்பட்டிருந்தால் இதன் வரவேற்பு எப்படி இருந்திருக்கும் என்பது நாம் சொல்லி தெரிய வேண்டியதில்லை. நடக்கப் போகும்/நடக்காத ஒன்றினை இப்படி ஏற்படும் சாத்தியம் உண்டு எனும் எதிர்ப்பார்ப்புகளை செலுத்தி வணிக ரீதியாக இலாபத்தை ஈட்டிக் கொண்டிருக்கிறார்கள் என்பதில் மிகையில்லை. அதற்கான மெனக் கெடுதல் அமர்ந்த இடத்தில் இருக்கும் நம்மையும் எகிர வைக்கிறது.

தமிழ் இலக்கியங்களில் சொல்லப்படும் கபாடபுரம், (*பாண்டியர்களின் முன்னால் தலைநகரம். நா.பாவின் நாவல் இப்பெயரில் வெளிவந்துள்ளது) சிற்பங்களுக்கு புகழ் பெற்ற பல்லவர்களின் மாமல்லபுரம் போன்றவை குமரிக் கண்டத்தை கடல் கொண்ட சமயம் அமிழ்ந்து போனதாக சரித்திர ஏடுகள் குறிப்பிடுகின்றன. குமரியின் ஆய்வு விசாலமானது. மேற்கத்தியர்கலால் இப்பகுதி லெமூரியா என குறிப்பிடபடுகிறது. லெமுர் மற்றும் அட்லாண்டீஸ் போன்ற ஆய்வு நூல்களில் தமிழ் தமிழர் சார்ந்த விடயங்கள் இம்மியும் கிடையாது. மனித னத்தின் பரினாம வளர்ச்சி எல்லோருக்கும் ஒன்றுதான் போலும்.

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு ஒருமுறை ஏற்படும் கடல் கொந்தளிப்பு கதையின் முக்கிய அம்சமாக பேசப்பட்டுள்ளது. உலக அரசுகள் மக்களை எவ்வகையில் பாதுகாக்கப் போகிறது. உடனடி ஏற்பாடுகள் செய்யப்படுகிறதா எனும் பார்வையும் இங்கு முன் வைக்கப்படுகிறது.

இன்றய நிலையில் மனிதர்களின் நிலை முற்றிலும் மாறுபட்டுள்ளது. பூகம்பம், வெள்ளப் பெருக்கு, சுனாமி, என இயற்கையின் மிரட்டல்கள் அதிகரித்துவிட்டிருக்கின்றன. இயற்கை மனிதனோடு நட்புறவு கொள்ள மறுத்துவிட்டிருக்கிறது.

தொடக்கத்திற்கு முடிவும் இருக்க வேண்டும் எனும் சித்தாந்த அடிப்படையில் கடைசி நாள் எதிர்ப்பார்க்கப்பட்டு வருகிறது. நாளுக்கு நாள் நாசப்படும் பூமி முற்றிலும் அழியும் என்பது அதற்கான நாள் தூரம் இல்லை என்பதும் பல மதங்களில் சொல்லப்பட்டுள்ளது.

அறிவியல் முன்னோடிகள் பூமியின் அழிவு பிக் பேங் எனும் சித்தாந்தத்தின் அடிப்படையில் நிகழலாம் எனும் கருத்துக் கணிப்பினையும் முன் வைக்கிறார்கள். இந்த பிக் பேங் சித்தாந்தம் 1929-ஆம் ஆண்டு எட்வின் ஹபில் என்பவரால் தோற்றுவிக்கப்பட்டது. பிக் பேங் சித்தாந்தத்தின் படி பார்ப்போமேயானால் இந்த பிரபஞ்சமானது ஒரு மாபெரும் இராட்ச்சச வெடிப்பினால் உருவான பிண்டங்கள். தொடக்கத்தைப் போலவே பூமியின் முடிவும் இருக்கும் என்கிறது இச்சித்தாந்தம். 13.7 பில்லியன் வயதைக் கொண்ட பூமி இன்னும் 20பில்லியன் வருடங்கள் கழித்து இறந்துபோகும் என்பதும் பிக் பேங் சித்தாந்தத்தின் முக்கிய கருத்தியலாகும்.

புவி வெப்பம் நமக்கு நாமே ஏற்படுத்திக் கொண்ட ஒன்று. அதே போல் சூரியனின் கொதிப்பும் பூமியின் வெப்ப அதிகரிப்புக்கு காரணமாக அமைகிறது. இப்வெப்பத்தின் பாதிப்பு துருவங்களின் பனிப்பாறைகளை கரையச் செய்து கடல் மட்டத்தை பெருக்கெடுக்க வைக்கிறது. கடல்மட்டம் உயருவதால் கரைப்பகுதிகள் அமிழ்ந்து போகின்றன.

இதை தவிர்த்து விண் கற்கலின் மோதலாலும், பூமியின் அழிவு ஏற்படுதற்கான சாத்தியங்கள் இருக்கின்றன. நாசாவின் தகவல் அடிப்படையில் ஒவ்வொரு நாளும் நமது பூமியை விண்கற்கள் மோத வருகின்றன. அட்மோஸ்பேராவின் பாதுகாப்பால் அவை தகர்க்கப்படுகிறது. கோள்களின் மோதலாலும் பூமி அழிந்து போகக் கூடும் என ஆய்வுகளில் சொல்லப்படுகிறது. கோள்களின் சுழற்சி அதிகரிக்குமானால் கோள்களின் மோதல் ஏற்ப்பட சாத்தியம் இருப்பதாக அறிவியல் கருத்துகள் கூறப்படுகிறது.

2012 திரைப்படத்தில் கவனிக்கப்பட வேண்டிய மற்றொரு விடயம் பாதுகாப்பு கப்பல்கள். இது நோவாவின் கப்பலின் கதையின் அடிப்படையில் செய்யப்பட்டிருக்கக் கூடும். எவ்வளவு பேரை இக்கப்பலில் காப்பாற்ற முடியும் எனும் பட்சத்தில் முதலாளிதுவமும் ஆட்சியாளர்களின் கெடுபிடியும் அங்கே முந்திக் கொள்ள நினைக்கிறது. சுயநலம் பெருக்கெடுக்கிறது. ரஸ்ய நாட்டில் பேழை ஒன்று உள்ளது. இப்பேழையில் 5 புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளது. உலகம் அழிந்து போகுமாயின் இப்புத்தங்கள் அப்பேழையில் பாதுகாப்பாக இருக்குமாம். அந்த 5 புத்தகத்தில் ஒன்று திருக்குறள் என்பது குறிப்பிட தக்கது. இந்த புத்தகங்களை காப்பதை போல மனிதர்களை காக்க முடியுமா?

இப்படிப்பட்ட இடர்பாடுகளுக்கு மத்தியில் தன் குடும்பத்தை ஒரு சாமனிய வர்க்கத்தை சேர்ந்த வாகன ஓட்டி எப்படி காப்பாற்றுகிறார் என்பதை மிக அழகாக சித்தரித்திருக்கிறார்கள். இயற்கையின் சீற்றத்தின் முன் நாம் எந்த அளவுக்கு கையாளாகதவர்களாகிறோம் என்பதை போட்டில் அடித்து சொல்லப்படுகிறது.

மாயன்ஸ் நாகரீகம் பற்றிய எனது முந்தய படைப்புகள்:

பாகம் 1: மாயாக்கள் இருந்தார்களா?

பாகம் 2: உலகின் இறுதி நாள்