Thursday, January 02, 2014

J.C.Daniel (மலையாள சினிமாவின் தந்தை)- ஒரு தாமத விமர்சனம்

காலம் கடந்து வழங்கப்படும் நீதி அநீதியை விட கொடுமையானது எனும் தோழர் முத்துக்குமாரின் கடித வரிகளை இங்கு நினைவுக் கூறுகிறேன். சமூக
நிலைபாடுகளால் பல முக்கிய நிகழ்வுகளை நாம் ஒவ்வொரு கனமும் இழந்து
வருகிறோம். வாழ்வியல் அறத்தை உடைக்கும் செயல்களை எதிர்க்கின்றோம். பிறகொரு நாள் பிழை என கருதிய செயல் சரி எனும் நிலை ஏற்படுகிறது. அப்போது அதை கொண்டாடுகிறோம். மாற்றத்தால் ஆனது தானே உலகம்.

காலத்தால் ஒதுக்கப்பட்ட ஒரு கலைஞனின் வாழ்க்கையை விளக்குகிறது ஜே.சி.டேனியல் எனும் திரைப்படம். மலையாளத்தில் செலுலாய்ட் என எடுக்கப்பட்டு தமிழில் ஜே.சி.டேனியல் என 'டப்' செய்யப்பட்டுள்ளது. ஜே.சி.டேனியல் ஒரு தாமத வரலாற்று திருத்தம்.

இத்தாமத திருத்தம் ஒரு மிகப் பெரும் துயர சினிமா அனுபவமாக இன்று நமக்கு கிடைத்துள்ளது. இது துயரமான சினிமா கதை அல்ல. சினிமாவை உயிருக்கு உயிராய் நேசித்த ஒரு முன்னோடியின் வாழ்க்கை மொத்தமும் துயரமாய் போன உண்மைச் சம்பவம்.

வாகை சூடவா திரைப்படத்தில் ஒரு காட்சி. ஊர் மக்கள் எம்.ஜி.ஆர் நடித்த திரைபடத்தைப் பார்த்துக் கொண்டிருப்பார்கள். ஒரு சண்டைக் காட்சியில்
எம்.ஜி.ஆர் நம்பியாரிடம் பலமான அடிகளை வாங்கிக் கொண்டிருப்பார். இக்காட்சியை பார்த்து வெகுண்டு போன பூர்வக்குடி ஆசாமி ஒருவர் தன் துப்பாக்கியில் நம்பியாரை சுடுவார். திரை குபுகுபுவென தீ பிடித்து எரியும். கலவரமடைந்த இரசிகர் கூட்டத்தை நோக்கி 'எம்.சி.ஆரை காப்பாத்திட்டேன் சாமி' என்பார் பூர்வக்குடி.

சினிமாவை கண்டு உணர்ச்சி வசப்படும் செய்திகளை இன்றும் காண்கிறோம். மதத்தை இழிவு செய்ததாய் கமலின் விஸ்வரூபம் சினிமாவுக்கு நேர்ந்தது சமீபத்ய நிகழ்வுகளில் ஒன்று.

செல்வந்தர் குடும்பத்தில் பிறந்த ஜே.சி.டேனியல் ஒரு பல் மருத்துவர். சினிமா மேல் அதீத காதல் கொண்டு சினிமா தொழில்நுட்ப கலைகளை கற்றுக் கொள்கிறார். 1920-களில் இந்தியா முழுவதும் செல்லூலாய்ட் சினிமா பிரபலமான நேரம் அது. புராணக் கதைகளை அடிப்படையாக கொண்டு பல சினிமா படங்கள் வெளியாகின்றன. உடல் மொழியை மட்டும் மையமாக கொண்டு எடுக்கப்படுவது செல்லுலாய்ட். அதில் பேச்சு இருக்காது. சுருக்கமாக 'ஊமைப் படம்' என இன்று கூறுகிறோம்.

மலையாள கரையில் சினிமா மோகம் எட்டிப் பார்க்காத தருணம். டேனியல் தனது சினிமா கனவை அங்கு விதைக்க நினைக்கிறார். புராணக் கதைகளை தவிர்த்து சமூக கதைகளை மக்களுக்கு வழங்க வேண்டும் என்பது டேனியலின் ஆசை. குடும்ப உறவை மையப் படுத்தி ஒரு கதை தயாரிக்கிறார். படத்தின் தலைப்பு விகதகுமாரன் (the lost child).

படம் எடுப்பதில் பல தடுமாற்றங்கள். தனது முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்ரமாதித்தனை போல் விடாப்பிடியாக இருக்கிறார் டேனியல். எதிர்ப்பார்த்ததை விட அதிக செலவு. சினிமா எடுக்க ஏற்கனவே சொத்துகளை
விற்று இருப்பார். செலவுகள் மேலும் மேலும் கடிக்க சொத்துகளை விற்பதை தவிற வேறு நாதி இல்லாமல் போகிறது. மனைவி ஜேனட் கணவரின் சினிமா கனவுக்கு பெரிதும் உறுதுணையாக இருக்கிறார்.
முதுமையில் ஜே.சி.டேனியல் Source: Wikipedia
படத்தின் நாயகனாக டேனியல் நடிக்க. கதாநாயகியை தேடுவதில் பலத்த சிக்கல் ஏற்படுகிறது. அக்காலகட்டத்தில் சினிமாவில் ஆண்களே பெண் வேட்மிட்டு நடிக்கும் நிலை. சினிமாவுக்கு பெண்களை கொண்டுவர விலை மாதர் வீதிகளிலும் தேடி அலைந்திருக்கிறார்கள்.

தேடிபிடிக்கும் ஓர் ஆங்கிலோ இந்திய பெண் நடிகை கொடுக்கும் டாச்சரில் அப்பெண்னை வேண்டாமென ஒழித்துக்கட்டிவிட்டு வேறு ஆளை பார்க்கிறார்.
கூத்துகளில் நடிக்கும் தழ்தப்பட்ட சாதி பெண்னை தனது சினிமாவில் அறிமுகப் படுத்துகிறார் டேனியல். சரோஜினி எனும் நாயர் சாதி பெண்னின் கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கிறார் ரோஸம்மா எனும் பி.கே.ரோஸி.

கருத்த மேனியோடு ஜாக்கட்டும் வேட்டியுமாக ரோஸி பட பிடிப்புக்கு வருக்கிறார். கையில் ஒரு தூக்குச் சட்டி. தீண்டாமையின் கொடுமையையும் ஒடுக்கப்பட்டவர்களின் அன்றய வாழ்வியல் நிலையும் திகைக்க வைக்கின்றது. நாயர் பெண் வேடத்தில் நகையும், புடவையும், அலங்காரமும் கொண்ட தன்னை பார்த்து கண் கலங்குகிறார். ஜாதி, இனம், மதத்திற்கும் அப்பாற்பட்ட உயர்ந்த கலை சினிமா என டேனியல் எடுத்துக் கூறியும் ரோஸியால் தீண்டாமையின் தாழ்மை உணர்ச்சியில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்ள முடியவில்லை. ரோஸியின் கதாபாத்திரம் ஆதிக்கச் சாதியினரின் முகத்தில் அறையும் உண்மை.

கடும் முயற்சியில் சினிமா எடுத்து முடிக்கப்படுகிறது. 1930-ல் விகதகுமாரன் (the lost child) மலையாளத்தின் முதல் சினிமாவாக கேரளத்தில் வெளியிடப்படுகிறது.பெருமிதத்தோடு ஊர் அதிகாரிகளையும், பெரியவர்களையும் தனது சினிமாவை காட்ட அழைத்து வருகிறார் டேனியல். தான் கதாநாயகியாக நடித்த சினிமாவை பார்க்க ஓடி வருகிறாரார் ரோஸி. இவளோடு நாங்கள் படம் பார்ப்பதா என ரோஸியை விரட்டி அடிக்கிறது ஜாதி வெறி.
விகதகுமாரன் சினிமா காட்சி : Source: Wikipedia
தாழ்ந்த சாதி பெண்ணை சினிமாவில் உயர் சாதி பெண்ணாக காட்டியதால் பிரச்சனை உருவாகிறது. திரை நாசம் செய்யப்படுகிறது. ரேஸியின் வீடு தீயிட்டு கொலுத்தப்பட்டு ஊரைவிட்டு விரட்டியடிக்கப்படுகிறாள். இன்று வரை மலையாள சினிமாவின் முதல் கதாநாயகியின் முழுச் சரித்திரத்தையும் அறிவார் இல்லாத நிலை ஆனது. தனது சினிமா கனவை மலையாள கரையில்; மூட்டைக்கட்டி வைத்து தனது ஊரான அகஸ்தீஸ்வரம் திரும்புகிறார் டேனியல்.

தமிழ்நாட்டில் பல் மருத்துவராக தனது சராசரி வாழ்க்கைக்கு திரும்பும் டேனியல் பி.யு.சின்னப்பாவை சந்திக்கிறார். பல் வலியால் சிகிச்சைக்கு வரும் சின்னப்பா பின் நாட்களில் டேனியலின் பெருந் தலைவலியாகி போகிறார். இருவருக்கும் பழக்கம் ஏற்பட டேனியலின் சினிமா கனவு வெகுண்டெழுகிறது.சம்பாதித்து சேர்த சொத்துகளை மூட்டைக்கட்டிக் கொண்டு சென்னை செல்கிறார். சின்னப்பாவின் ஆட்களால் ஏமாற்றப்பட்டு அங்கும் இங்கும் அலைந்து திரிந்து இரண்டு ஆண்டுகள் கழித்து குடும்பத்தோடு சேர்கிறார்.

தொடர் சினிமா தோல்வி அவரை தளர்வடையச் செய்கிறது. அப்பாவை புரிந்துக்கொள்ள முடியாததால் பிள்ளைகளோடு இடைவெளி ஏற்படுகிறது. அப்போதும் மனைவி ஜேனட் மட்டுமே அவரோடு உறுதுணையாக இருக்கிறார். டேனியல் தன்னை தனிமை படுத்திக் கொண்டு முதுமைக் கோடுகளோடு அமைதியாகி போகிறார். ஒரு பக்கம் வாட்டும் வறுமை. மலையாள சினிமா டேனியல் எனும் தந்தையின் அடையாளம் தெரியாமல் வளர்கிறது.
அவரை அறிந்துக் கொண்டு தேடி வருகிறார் மலையாள பத்திரிக்கையாளரான
கோபாலகிருஷ்ணன். ஜே.சி.டேனியல் இன்று மலையாள சினிமாவின் தந்தையென அறியப்படுவதற்கு இவரின் பங்கு மிகுதியானதே. டேனியலின் அங்கீகாரத்திற்காக போராடுகிறார் கோபாலகிருஷ்ணன். ‘அந்த ஆளு தமிழ்நாட்டுக்காரன் தானேயா,தமிழ்நாட்டு கவர்மெண்ட் பென்சன் கொடுக்கட்டுமே’ என இன வெறியும் ஜாதி வெறியும் கேரளத்தில் பல் இளிக்கிறது.

எந்தவித அங்கீகரமும் இல்லாமல் 1975-ல் இறந்து போகிறார் ஜே.சி.டேனியல்.
மரணப் படுக்கையில் இருக்கும் டேனியல் காற்றசைவில் சுவரில் நிழலாடும் காட்சியை தனது செல்லுலாய்டாக காண்கிறார். கோபாலகிருஷ்ணனின் தொடர் போராட்டம் டேனியலின் மரணத்தின் பின் வெற்றி காண்கிறது. ஜே.சி.டேனியல் மலையாள சினிமாவின் தந்தையாக அறிவிக்கப்படுகிறார். திரைப்பட சாதனையாளர்களுக்கு ஜே.சி.டேனியல் விருது வழங்க ஆவண செய்கிறது கேரள அரசு. காலம் கடந்த அங்கீகாரமே. பாரதிக்கு நடந்த அதே கதி.

விகதகுமாரன் அழைப்பிதழ்
ஜே.சி.டேனியல் காதாபாத்திரத்தில் கச்சிதமாய் பொருந்தியுள்ளார் பிருத்வி ராஜ். ரோஸம்மாவாக நடிக்கும் பெண் மனதை நெருடிச் செல்கிறார். மலையாள சினிமாவின் முதல் கதாநாயகியென அங்கீகரிக்கப்பட்டது அவர் சந்ததியினருக்கு தெரிந்த செய்தியும் இல்லை. ஜே.சி.டேனியலின் இரண்டாவது மகன் தன் தந்தையின் ஆங்கீகாரத்தின் போது கலங்கி பேசும் உரையும் படமாக்கப்பட்டுள்ளது.

சினிமாக்காரரின் சினிமா தோல்வியை சினிமாவாக்கிய இயக்குனர் நிச்சயம் பாரட்டுதலுக்குரியவர். ஜே.சி.டேனியல் தமிழ் சினிமாவில் அதிகம் பேசப்படாமல் பத்தோடு பதினொன்றாய் வந்த வேகத்தில் பெட்டிக்குள் போனது வருத்தமான செய்தியே. பிரியாணி மயக்கத்தில் இருக்கும் மக்கள் இந்த மூலிகை இரசத்தையும் கொஞ்சம் பருகி இருக்கலாம்..
பி.கு: 
1. 2000-ம் ஆண்டு வரை பிராமணர் ஒருவரால் எடுக்கப்பட்ட ‘பாலன்’ (1938) எனும் பேசும் படம் தான் மலையாளத்தின் முதல் சினிமாவாக கருதப்பட்டது.

2. ஜே.சி.டேனியல் தயாரிப்பாளரின் இன்றய நிலைய வாசிக்க இங்கே சொடுக்கவும்.

6 comments:

ko.punniavan said...

கலை சார்ந்து இயங்குபவன் வாழ்க்கை பெரும்பாலும் சீரழிவையே பரிசாக அடைகிறான். இது சாபக் கேடுதான்.ஜே சி டேனியலின் படம் ஏதொ ஒரு சேனலில் ஓடிக்கொண்டிருந்தது. பிரிதிவிராஜ் முகத்தைப் பார்த்தவுடன்தான் நீங்கள் சொன்ன டேனியல் படம் என ப்புரிந்தது. பார்க்கவேண்டும். நல்ல விமர்சனம் விக்கி.
கோ.புண்ணியவான்

Unknown said...

ஜேசி டேனியல் - மலையாள செல்லுலாய்டு மொழிமாற்றக் கதையா என்பது இப்போதுதான் எனக்குத் தெரிகிறது.
செல்லுலாய்டு மலையாள திரைப்படத்தைப் பார்க்க வேண்டும் என மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். என்னைப் போலவே பலரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர்.
ஆனால், அதே பெயரை 'செல்லுலாய்டு' என வைத்தால் என்ன? ஜேசி டேனியல் என தலைப்பை மாற்றியதால்தான் என்னைப் போன்றவர்களுக்குத் தெரியவில்லை. இது மொழிமாற்றுக்காரர்களின் தவறு.

Unknown said...

இன்னும் ஒரு முக்கியமான செய்தி.
செல்லுலாய்டு படத்தில் வரும் 'காற்றே காற்றே' என்ற மலையாள பாடலைத்தான் என் காலர் டியூனாக வைத்திருக்கிறேன்.

ஒழுங்காக செல்லுலாய்டு என்ற பெயரிலேயே தமிழில் வெளியிட்டிருக்கலாம். மகாப்பெரிய தவறை செய்து விட்டார்கள்.

இப்போது ஜேசி டேனியல் சென்னையில் எந்த திரையரங்கில் ஓடுகிறது? சொல்ல முடியுமா?

VIKNESHWARAN ADAKKALAM said...

@ கோ.புண்ணியவான்

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா. படைப்பாளி கடவுளுக்கு சமமாம். நான் சொல்லவில்லை. இளையராஜா சொல்கிறார் ‘புது ராகம் படைப்பதாலே நானும் இறைவனே’...

@ எழுத்தாளர் புதின்

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி... இது தமிழில் கவனித்திருக்க வேண்டிய படம். நான் பின் குறிப்பில் கொடுத்த இரண்டாம் சுட்டியை கவனியுங்கள். தமிழ்நாட்டில் இப்படத்தை திரையிட தியேட்டர் கிடைக்கவில்லையாம். எல்லோரும் பிரியாணி சாப்பிட்டு கொண்டிருக்கிறார்கள்.

கிரி said...

தற்போது ப்ரிதிவி ரசிகன் ஆகி விட்டேன். ரொம்ப அருமையாக நடிக்கிறார். சமீபத்தில் இவருடைய மும்பை போலிஸ் பார்த்தேன்.

இந்தப் படம் தரவிறக்கம் செய்து விட்டேன் இன்னும் பார்க்கவில்லை. இன்னும் இரண்டு வாரகளில் பார்த்து விடுவேன் என்று நினைக்கிறேன்.

VIKNESHWARAN ADAKKALAM said...

@ கிரி

பார்த்த பின் உங்கள் கருத்துகளை நிச்சயமாக எழுதுங்கள். படிக்க ஆவளாக உள்ளேன்.