Friday, June 21, 2013

மோசமான புகை மூட்டம்- மலேசியா, சிங்கப்பூர் மக்கள் பரிதவிப்பு

இந்த ஓரிரு நாட்களில் மலேசியவின் பல மாநிலங்களிலும் சிங்கை, இந்தோனேசியா, தென் தாய்லாந்து பகுதிகளில் சிலவும் கடுமையான புகை மூட்டத்தால் பாதிப்படைந்து உள்ளது. கடந்த ஆண்டுகளை விட தற்போதய நிலவரம் மிக மோசமான நிலையை எட்டி உள்ளது. 

பொதுவாக இந்த மாதிரியான புகை மூட்டம் எல்லா ஆண்டுகளிலும் இருக்கும் ஒன்றே. இந்த ஆண்டு அதன் நிலை கவலைக்கிடமான நிலையை எட்டியுள்ளது. இன்றய நிலையில் நான் வசிக்கும் ஜேகூர் பகுதிகளில் புகை மூட்டத்தின் அடர்த்தி 327-லை எட்டியுள்ளது. இதனை தொடர்ந்து இங்குள்ள சில பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டுள்ளன. 

இதே போன்ற நிலையை 1997-ல் கண்டிருக்கின்றேன். இந்த புகை மூட்ட பிரச்சனை இயற்கை பேரிடர் என்பதை காட்டினும் மனிதர்களின் செயலால் செயற்கையாக ஏற்பட்ட ஒன்றே. இந்தோனேசியாவின் சுமாத்ரா எனும் பகுதியில் ஏற்பட்ட அல்லது ஏற்படுத்தப்பட்ட காட்டு தீயினால் கட்டுக்கடங்கா இந்த புகைமூட்ட நிலை ஏற்பட்டுள்ளது. 

புகைக்கு பயந்து வீட்டின் ஜன்னல்களையும் கதவுகளையும் மூடி வைக்க வேண்டி உள்ளது. ஒவ்வொரு முறை வீட்டை விட்டு வெளி வரும் போதும் திறந்த வெளிகளில் இருக்கும் போதும் முகமுடி அணிந்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம். இன்றய நிலையில் வேலை செய்யும் போதும் முகமுடி அவசிய பொருளாகிவிட்டது. இது நமக்கு நாமே ஏற்படுத்திக் கொண்ட தண்டனைய என்பதை ஐயம் இல்லாமல் சொல்லலாம்.

என்ன தான் முகமுடி அணிந்திருந்தாலும் கண் எரிச்சலையும் தொண்டையில் ஏற்படும் அறிப்பு தன்மையையும் தவிர்க்க முடியாத நிலையில் இருப்பது வருத்தமே. 

சுமாத்ராவில் ஏற்பட்ட காட்டு தீ, தற்போதைய சீதோசன நிலையினால் உண்டானதாக கூறப்படுகிறது. இருந்தும் அதன் பின்னணியில் உள்ள முதாலாளிதுவத்தின் செயல்பாடுகளையும் மறுக்க இயலாது. வணிகம் பொருட்டு காடுகள் அழிக்கப்படுவதாலும் இப்படி புகை மூட்டம் ஏற்படுகிறது என்பதே உண்மை.

நிலைமை மேலும் மோசமாகும் பட்சத்தில் செயற்கை மழையை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளது மலேசிய அரசு. தொடர்ந்து பாதுகாப்பு மற்றும் சுகாதார மையங்களை ஆங்காங்கு திறக்கவும் ஏற்பாடு செய்து வருகிறது.

புகைமூட்டத்தின் அளவுகோள்:
0 - 50 மோசமில்லா நிலை
51 - 100 மத்திமம்
101 - 200 ஆரோக்கியமற்ற நிலை
201 - 300 மிகவும் ஆரோக்கியமற்ற நிலை
301 - 400 ஆபாத்து நிலை
401 - 500 மிகவும் ஆபத்தான நிலை
> 501 ஊரடங்கு நிலை
இதை எழுதிக் கொண்டிருக்கும் இவ்வேலையில் இங்கிருக்கும் புகைமூட்டத்தின் அடர்த்தி 310 ஆக உள்ளது.


ஏற்படக்கூடிய ஆரோக்கிய பிரச்சனைகள்:
1. தொண்டை அரிப்பு, இருமல்
2. சுவாச பிரச்சனை, மூக்கில் அடைப்பு
3. கண் எரிச்சல்
4. தோல் எரிச்சல்
5. நெஞ்சு வலி



கடைபிடிக்க வேண்டிய சில நடவடிக்கைகள்
1. வெளியே செல்லும் போது முகமூடி அணிந்துக் கொள்வது நலம்.
2. முடிந்த அளவு வெளியே செல்லாமல் இருக்க முயற்சியுங்கள்.
3. அடிக்கடி சுத்தமான நீரை அருந்த வேண்டும்.
4. வீட்டின் ஜன்னல்களையும் கதவுகளையும் மூடி வைத்திருங்கள்.
5. புகை பிடிப்பதையும் மது அருந்துவதையும் தவிர்க்க வேண்டும்.
6. ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ளுங்கள்.
7. முகத்தினையும், கைகளையும் அடிக்கடி சுத்தமான நீரினில் கழுவுவது நலம்.
8. கண்களுக்கான சொட்டு மருந்து, ஈரமான டெட்டால் முக காகிதங்களையும் தயார் நிலையில் வைத்துக் கொள்வது அவசியம்.
9. மோசமான தாக்கத்திற்குட்பட்டோர் நிச்சயமாக மருத்துவ பரிசோதனைக்கு செல்வது அவசியம்.
10. புகை மூட்ட அடர்த்தி நிலையையும் செய்திகளையும் கவனம் எடுத்து தெரிந்து கொள்ளுங்கள்.

4 comments:

pudugaithendral said...

அவசரம்னா மட்டும் ஆபிஸ் வாங்க இல்லாட்டி வீட்டுலயே இருங்கன்னு சொல்லி தம்பிக்கு ஆபிஸ்ல சொல்லியிருக்காங்களாம். எல்லாம் இந்த புகை. தொண்டை அரிப்பும், ஜுரமுமா இருக்காப்ல.

:(

VIKNESHWARAN ADAKKALAM said...

நேற்று முழுக்க எனக்கு அதிகமான கண் எரிச்சல். கண்கள் சிவந்து போய்விட்டன. சொட்டு மருந்து எடுத்துக் கொண்டு தூங்கி எழுந்ததும் சரியாய் போனது. வெப்பமும் புகையுமாய் சேர்ந்து படுத்தி எடுக்கிறது.

மறுமொழிக்கு நன்றி புதுகைத் தென்றல். நெடுநாட்களுக்குப் பின் உங்கள் மறுமொழியை காண்கிறேன்.

கோவி.கண்ணன் said...

At 1 pm today Singapore psi 401.

VIKNESHWARAN ADAKKALAM said...

நான் இப்போது ஈப்போவில் இருக்கிறேன். இங்கு நிலை நல்லபடி உள்ளது. ஆனால் வரும் வழியில் மூவார் மலாக்கா போன்ற இடங்களில் அதிகமான தாக்கத்தை காண முடிந்தது.