Monday, June 10, 2013

குட்டிப் புலி - ஜாதி விளம்பரம்
தனிபட்ட ஜாதிகளின் அடையாளங்களை மக்களின் பார்வைக்கு வைப்பதில் தமிழ் சினிமா கடந்த ஒரு நூற்றாண்டாக போராடி வருகிறது. உயர் ஜாதிகளின் உயர்வையும் கீழ் ஜாதிகளின் தாழ்வையும் குறைந்தபட்சம் ஆண்டுக்கு ஒரு முறையாகினும் சினிமாவில் பார்த்து சிலாகித்துக் கொள்கிறோம். அந்த வரிசையில் இரசிகர்கள் மேலும் ’ஆனந்தமடைய’ திரைக்கு வந்திருக்கும் படம் குட்டிப் புலி.

சுப்ரமணியபுரத்தில் தொடங்கிய சசிக்குமார் ஒரு தனிபட்ட சாதிக்கு விளக்கு பிடித்துக் கொண்டிருப்பதை தனது ஒவ்வொரு படத்திலும் காட்டி வந்தார். குட்டிப் புலியாகிய சமீபத்திய படத்தில் ஒரு படி மேலே போய் ஒரு சாதியினர் செய்யும் கொலைகளுக்கு வக்கலாத்து வாங்கி அவர்களை குல தெய்வமாக்கியுள்ளார். சசிக்குமார் இயக்கும் / நடிக்கும் படங்கள் யாவும் இந்த சாதியின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுகிறது போலும். இந்த படத்தின் இயக்குனர் புதியவரான முத்தையா. இவர் இயக்குனர் ஹரியை போல சில பல முயற்சிகள் மேற்கொள்வார் என இப்போதே சொல்லி வைப்பதை காண முடிகிறது.

முந்தய படங்களில் துரோகம் எனும் ஒரு கருத்தினை மட்டும் கையில் வைத்திருந்த சசிக்குமாரின் படங்கள் போதிய பாரட்டையே பெற்று வந்தது. ஆனால் அப்படங்கள் அனைத்திலும் குறிப்பிட்ட சாதியில் நடக்கும் சம்பங்களை விவரிப்பதாக அமைத்திருந்தார். ஒரு வேளை தனது வாழ்வியல் சூழ்நிலையில் இருந்து இக்கதைகளை அமைத்திருக்கக் கூடும் என நாம் நம்பலாம். அக்கதைகளின் போக்கு நட்பின் துரோகம், குடும்ப துரோகம் என சென்றுவிடுவதால் அவரின் சாதி போதனைகள் கதையோட்டத்தில் மறைத்து வைக்கப்பட்டது. 

ஒரு சாதியின் வாழ்வியல் முறைகளை பதிவு செய்வதை மறுப்பதற்காக இதை சொல்லவில்லை. வெங்கடேசனின் காவல்கோட்டம் போன்ற நல்லதொறு படைப்பு சாகித்ய அகாதமி விருது பெற்றுள்ளது. காவல் கோட்டம் முழுக்க முழுக்க கள்ளர் சாதியின் வாழ்வியல் முறைகளை சரித்திர பதிவாக கொண்டுள்ளது. அச்சரித்திர நாவலின் ஒரு சிறு பகுதியை தழுவி எடுக்கப்பட படம் அரவான். அதில் நாயகன் தன் சிரசை அருவாளில் வெட்டிக் கொள்வதாக படம் முடியும்.

தேவர் சாதியினரை மையமாக கொண்டு எடுக்கப்படும் திரைப்படங்கள் ஒவ்வொன்றிலும் அருவாளை அதன் சின்னமாக கொண்டிருக்க வேண்டும் என்பது தமிழ் சினிமாவின் நேர்த்தி கடனாக இருக்கக் கூடும் என நினைக்கின்றேன். தேவர் மகன், விருமாண்டி போன்ற படங்களில் தமிழ் சினிமாவின் முன்னணியான கமல்ஹாசனும் இதை தான் சூடம் காட்டி பொட்டு வைத்திருக்கின்றார்.

தனது சாதிய விளம்பரத்துக்கு குட்டிப் புலி அம்மா மகன் பாசத்தை ‘மேக் ஆப்’ செய்து கொண்டுள்ளது. ஊதாரியாக திரியும் மகனை மெச்சோ மெச்சென்று மெச்சி கொண்டு திரிகிறார் அம்மா. ஆணி போயி ஆடி போயி ஆவணி வந்தா என் மகன் ’டாப்பா’ வருவான் என கூறும் அதே அம்மா தான். எல்லா படங்களிலும் இவர் இப்படி தான் நடிப்பார் என்பதை இதிலும் நிருபித்துள்ளார். தென் மேற்கு பருவகாற்றில் தூக்கிய அருவாளோடு அழைத்து வந்து நடிக்க வைத்திருப்பார்கள் போல. 

படத்தின் ஆரம்பமே ஒரு அருவா வெட்டு சம்பவத்தில் ஆரம்பமாகிறது. எப்படி ஆரம்பிக்கிறதோ அதே மாதிரியே முடிவும் உள்ளது. சரி ஆரம்பமும் முடிவும் தானே அருவா வேட்டு என நீங்கள் ஆனந்தபட்டுக்கொள்ள வேண்டாம். இடைபட்ட 2 மணி நேரமும் யாரவது எதையாவது கர கரவென அருத்துக் கொண்டிருக்கிறார்கள். கூடவே அந்த அரிவாள் நம் கழுத்திலும் வந்து நிற்பது காசு கொடுத்து படம் பார்க்கும் நமது பாவமாக தான் இருக்க முடியும்.

ஒரு காட்சியில் ‘நீங்க ஆடுளாம் வெட்டுவிங்களா?’ என நாயகி கேட்க ‘அவன் ஆளையே வெட்டுவான்’ என சிலாகிக்கிறார் அம்மா. இந்த படத்தின் ‘டுவிஸ்டு’ என்னவென்று கேட்கிறீர்களா. எந்த ஒரு ‘டுவிஸ்டும்’ இல்லாமல் நம்மை மண்ட காய வைத்திருப்பதே மிகப் பெரிய டுவிஸ்ட்டு. 

இந்த படத்தில் நகைச்சுவையின் பெயரிலும் சில கொடுமைகள் நடந்துள்ளன. அவற்றை வெண்திரையில் கண்டு இரசிக்கவும். இன்னும் ஓரிரு தினங்களில் ஆதித்யாவில் வந்துவிடும். ‘ரொமான்ஸ்’ என சொல்லப்படும் காட்சிகள் அனைத்தும் இளையராஜாவின் பாடல்களுக்கு குத்தகை விட்டிருக்கிறார்கள். இந்த படத்திற்காக சசிகுமார் என்ன இழவிற்கு உடல் மெலிந்துள்ளார் என்பதும் புரியவில்லை. 

வேலை வெட்டி இல்லாத மகன். அவனை போற்றி புகழும் அம்மா. அவனின் வீர தீர செயல்களுக்கு மயங்கும் காதலி. மகன் நன்றாக வாழ வேண்டும் என்பதற்காக வில்லனின் தலையை துண்டாக அருத்து எடுக்கிறார் அம்மா. பிறகு அம்மா குலதெய்வமாகிவிடுகிறார். எங்களின் குலதெய்வங்கள் இப்படிதான் தியாகங்களின் வழி உறுவாகினர் என மெய்சிலிர்க்கும் சில வசனங்களை போட்டு நாம் அமர்ந்திருந்த சீட்டுக்கு ஒரு குண்டை போட்டு அனுப்பி வைக்கிறார்கள்.

ஆச்சி. பேச்சி, மூச்சி என கூறிக் கொள்ளும் தனது குல தெய்வங்கள் இப்படி ’தியாக’ கொலை செய்தவர்கள் என இயக்குனர் கூற முயற்சி செய்கிறார என புரியவில்லை. அப்படி இருப்பின் அவர் குறிப்பிடும் சாதியினர் வழிபடுவது கொலைகாரர்களை என்றள்ளவா ஆகிறது. சமூக முன்னேற்றத்திற்கு கிஞ்சித்தும் உதவிடாத சாதிய நம்பிக்கைகளை இன்றய தலைமுறையினரிடையே விதைப்பதாகவே இதை காண முடிகிறது. 

1990களின் இறுதியில் வெளியான THE KEYS AKKA MAGA எனும் ஆல்பத்தில் இடம் பெற்ற பாடல் ஒன்று இப்படத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அக்கா மக எனும் அப்பாடல் THE KEYS மலேசிய இசைக் குழுவினரால் இயற்றப்பட்ட முதல் பாடலாகும். காலம் தாமதித்த ஒரு அங்கிகாரமாக அப்பாடல் மீண்டும் மக்களின் பார்வைக்கு வந்துள்ளது. 
பி/கு: இந்த படம் தான் பார்ப்பேன் என அடம்பிடித்து செல்பவர்கள் கூடவே ஒரு பழுத்த எழும்மிச்சை பழத்தையும் கொண்டு செல்லவும். படம் முடிந்த பின் உச்சாந்தலையில் தேய்து கொள்ள வசதியாக இருக்கும்.

7 comments:

Anonymous said...

காப்பாத்திட்டேப்பா.. நன்றி தம்பி

சேவியர்

A N A N T H E N said...

//எந்த ஒரு ‘டுவிஸ்டும்’ இல்லாமல் நம்மை மண்ட காய வைத்திருப்பதே மிகப் பெரிய டுவிஸ்ட்டு// - twistக்காக ரொம்ப ஏங்கி கிடந்திக போல இருக்கு...

வருண் said...

ஒருபக்கம் பார்ப்பனர்கள், "நாந்தான் கடவுளுக்கு பக்கத்து உறவு" னு பிதற்றிக்கொண்டு உயிரோட இருக்க பாக்டீரியாவை எல்லாம் தின்னுக்கிட்டு நான் எந்த உயிரையும் துன்புறுத்துவதில்லை, உயர்வானவன் னு நினைப்பில் முட்டாளாவே வாழ்ந்து சாகிறானுக.

இன்னொரு பக்கம் இவனுக! நாங்கதான் பார்ப்பானையே ஆண்டவனுக, வீரன்கள்னு பிதற்ரிகொண்டு திரிகிறானுக. வெள்ளைக்காரன், இஸ்மாமியர்கள் எல்லாம் நூற்றுக்கண்க்கான ஆண்டு நம்மை ஆளும்போது இந்த வீரர்கள் என்ன செய்தார்கள் னு எனக்குத் தெரியலை?

எப்படியோ தன்னை மற்றவனைவிட உயர்ந்தவன், வீரமானவன்னு பிதற்றும் ஒரு மாதிரியான வியாதி இவர்களுக்கு!

இந்த முட்டாள்களை திருத்தாமல் நம்ம பகவான் யாரோட டூயட் பாடிண்டு இருக்காருனு தெரியலை!

VIKNESHWARAN ADAKKALAM said...

@ சேவியர்

நன்றி அண்ணா...

@ அனந்தன்

ஹாஹாஹா... மொக்கை கத்தியை கழுத்தில் போட்டுட்டாங்க...

@ வருண்

மிக விளக்கமாக சொல்லி இருக்கிங்க.. பட்... திருத்த முடியாது பாஸ்...

Anonymous said...

இந்த மாதிரியான படங்களை நமது அகில உலக டைரக்டர் பாலா மிகவும் பாராட்டி வருகிறார் . இதன் அர்த்தம் என்ன என்பதை சொல்லி தெரிய வேண்டியதில்லை. பல ஊர்களில் நடக்கும் அராஜகங்கள் அனைத்தையும் நியாயபடுத்தி அதனை மேலும் செய்ய தூண்டுவதற்குத்தான் இது போன்ற திரைப்படங்கள் பயன்படும். இதற்கு மற்றுமொரு காரணம் சினிமா தயாரிப்பு உலகில் குறிப்பிட்ட ஜாதியினரின் ஆதிக்கம் இருப்பதே காரணம். இதன் விளைவுகள் பற்றி அவர்களுக்கு கவலை ஏதும் இல்லை.

VIKNESHWARAN ADAKKALAM said...

@ அனானி

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...

Anonymous said...

Arumayana tirai padam
vimarcagaruku en atu puriya vilai