Friday, January 18, 2019

Forgotten 2017 (Korean) - மறதியின் மர்மங்கள்


மனிதன் தன்னை நேர்த்தி செய்துகொள்ள மறதி ஓர் அருமருந்தாகிறது. நடந்து முடிந்த சில சம்பவங்களை தவிர்த்திருக்க நினைக்கிறோம். மூளையின் நினைவு படிமத்தில் சிலவற்றை ஒழித்தும் மறைத்தும் கலமெனும் பெருவெள்ளத்தில் கரைந்து போகின்றோம்.

சுமார் ஒரு மணி நேரத்திற்கு இத்திரைக் கதையின் நகர்வை கொஞ்சமும் அனுமானிக்க முடியவில்லை. அதுவே இத்திரைப்படத்தைப் பார்க்க என்னை அமர்ந்த இடத்தில் கட்டிப் போட்டது. மிக நேர்த்தியாக செதுக்கப்பட்டுள்ளது என ஐயமின்றி கூறலாம். சியோலில் இருந்து பெய்ஜிங் திரும்பிக் கொண்டிருந்த போது பாதி படமே பார்த்திருந்தேன். மீதத்தை பார்க்காத தவிப்பு அழைக்கழித்தது. நெட்பிலிக்‌ஷில் ஆங்கில் வசன வரிகளோடு தேடிப் பிடித்து பார்த்து முடித்தேன்.

அப்பா, அம்மா, அண்ணன், தம்பி என நால்வர் கொண்ட ஒரு குடும்பம். புதிய வாடகை வீட்டில் குடியேருகிறார்கள். வீட்டில் ஓர் அறையை மட்டும் யாரும் பயன்படுத்தக் கூடாது, திறக்கவும் கூடாது என்பது வீட்டுக்காரரின் நிபந்தனை. அந்த அறையில் இருந்து அடிக்கடி சத்தம் கேட்கிறது. அந்த சத்தம் தம்பிக்கு மட்டும் கேட்கிறது. மற்ற குடும்ப உறவுகள் அதனை உணரவில்லை. யாரும் போகக் கூடாத அந்த அறை அண்ணன் தம்பி தங்கி இருக்கும் அறைக்கு நேர் எதிராக உள்ளது. அந்த மர்ம சூழல் பயமும், பதட்டமும் நிறைந்ததாக நம்மை பீடிக்கிறது.

இத்திரைப்படத்தின் கதையை நான் சொல்லப் போவதில்லை. இதில் நான் இரசித்த மதி நுட்பமான காட்சி அமைப்புகளை மட்டும் இங்கே குறிப்பிடுகிறேன்.

முதலாவதாக இருட்டுச் சூழல் படம் நெடுக தொடர்கிறது. அது அழுத்தம் மிகுந்த காட்சியமைப்புகளுக்கு வழி செய்துள்ளது. சில காட்சிகளில் மட்டுமே பகல் வெளிச்சத்தை நாம் காண முடிகிறது. படம் நெடுக இருக்கும் இருள் மற்றும் மஞ்சள் விளக்கொளி நம்மை காட்சிகளுக்குள் உள் வாங்கிக் கொள்கின்றன.

1997-ல் கிழக்காசிய நாடுகள் பலவும் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாயின. அதில் தென் கொரியாவும் அடங்கும். இத்திரைக்கதைக்கும் இந்த பொருளாதார நிகழ்விற்கும் முக்கிய சம்பந்தம் உண்டு. எனினும் அந்நிலையை தொலைக்காட்சி செய்தியாக ஒற்றை வரியில் கடந்து விடுகிறார்கள்.

இதில் தம்பி கதாபாத்திரத்திற்கு அவன் சந்திக்கும் சம்பவங்கள் மிகவும் முரணாகக் கூறப்படுகிறது. அவன் காணும் காட்சிகள் அனைத்தும் பொய்யென கூறப்படுகிறது. தான் ஏதோ ஒரு மாயவலையில் பின்னி இருப்பதாக கருதும் தம்பி வீட்டைவிட்டு தப்பி ஓடுகிறான். கடுமையான போராட்டங்களின் பின் போலிஸ் வாகனத்தில் மோதி தப்பித்து காவல் நிலையம் போகிறான். காவல் நிலையத்தில் நடக்கும் காட்சிகள் அபாரம்.

நிஜம் எது கற்பனை எது என்பதனை உணர்வதற்குள் 'நீ மருந்து சாப்பிட மறந்துவிட்டாய். அதனால் தான் இந்நிலை' என நாமும் பல காட்சிகளில் சமாதானம் செய்யப்படுகிறோம்.

சூழ்நிலை குற்றவாளிகளை உருவாக்குவதில் இச்சமூகத்திற்கும், அரசியல், பொருளாதார நிலைபாடுகளுக்கும் முக்கிய பங்குண்டு. மேலும் சம்பவங்களை விவரித்து இக்கதையின் சுவாரசியத்தை கெடுக்க விரும்பவில்லை. மர்மம் மற்றும் த்ரில்லர் வகை கதைகளை விரும்புவோருக்கு இத்திரைப்படம் நிச்சயம் பிடிக்கும்.

Friday, December 28, 2018

NO SEX PLEASE, WE'RE JAPANESE - ஆவணப் படம்



NO SEX PLEASE, WE'RE JAPANESE எனும் ஆவணப்படம் படம் பார்த்தேன். 2013-ஆம் ஆண்டு இந்த டாக்குமெண்டிரியைப் பதிவு செய்திருக்கிறார்கள். கால தாமதமாக பார்த்திருப்பினும் தற்போதய ஜப்பானிய சூழ்நிலையில் இது இன்னமும் பேசு பொருளாகவே உள்ளது. ஜப்பானில் குழந்தைகளின் பிறப்பு விகிதம் கடும் சரிவை எதிர் நோக்கிச் செல்வதையும், அதன் காரணங்களையும் எதிர்கால விளைவுகளையும் இந்த ஆவணப்படம் பதிவு செய்கிறது. இதன் தொடர்ச்சியாக கடந்த ஆண்டில் The Mystery of Why Japanese People Are Having So Few Babies மற்றும் No Babies In Japan எனும் தலைப்பிலும் சில ஆய்வுகள் வெளியிடப்பட்டுள்ளன.

ஜப்பானின் வடக்குப் பகுதியில் இருக்கும் ஒரு சிறு நகரைக் காண்பிக்கிறார்கள். சுமார் 1 லட்சம் மக்கள் வாழ்ந்த பகுதி அது. 29 பள்ளிக்கூடங்கள் அங்கிருந்துள்ளன. தற்சமயம் ஒரே ஒரு பள்ளிக்கூடத்தை மட்டும் ஒப்புக்கு ஓட்டிக் கொண்டுள்ளார்கள். அங்கே குழந்தைகளைக் காண்பது அரிதாகிவிட்டது. குழந்தைகளுக்கான கோளிக்கை மையங்கள் கூட வெகு நாட்களாக மூடப்பட்டுவிட்டன. இன்னும் சில நாட்களில் அங்கிருக்கும் புதர்கள் அவற்றை மொத்தமாக சாப்பிட்டுவிடும் நிலையைக் காண முடிகிறது.

ஒட்டு மொத்த நகரமும் பேர் அமைதியாக உள்ளது. அந்த நகரின் மருத்துவமனையைக் காண்பிக்கிறார்கள். குழந்தைகளை பிரசவிக்கும் பகுதி வெகுநாட்களாக பயன்படுத்தப்படாமல் பழைய பொருட்களை சேகரிக்கும் கிடங்கு போல் உள்ளது.

100 வயதைக் கடந்த ஜப்பானியர்கள் மட்டும் ஏறக்குறைய 50000க்கும் அதிமானோர் அந்நாட்டில் உள்ளனர். நாளுக்கு நாள் அங்கு சீனியர் சிட்டிசன்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பணி ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வூதியம் கொடுக்க வேண்டும். தேசத்திற்காகவும், சமுதாயத்திற்காகவும் உழைத்து ஓய்ந்த அவர்களின் நலனைக் காக்கும் பொறுப்பு 
மறைமுகமாக இளய தலைமுறையிடம் விடப்படுகிறது. அதாவது ஜனத்தொகையின் எண்ணிக்கைக் குறைவதால் வரி வசூல் குறையும். குறைந்துவரும் வரியைக் கொண்டு அரிகரித்துவரும் பணி ஓய்வு பெற்ற குடிமக்களின் நலன் காக்க வேண்டும். குருவித் தலையில் வைக்கப்படும் பறை தான் இந்தச் சூழ்நிலை.

உலகில் அதிகமான முதியவர்கள் சிறையில் இருக்கும் நாடும் ஜப்பான் தான். சிறைக் கைதிகளில் 20% விழுக்காட்டினர் 60 வயதைக் கடந்தவர்கள். அதிக வயதான கைதியின் வயது 87. குடித்துவிட்டுப் பணம் செலுத்தாமல் போனது, சிறுநீர் கழித்தது, சண்டைப் போட்டது, குப்பைப் போட்டது என பல குற்றங்களின் பேரில் உள்ளே வந்தவர்கள். நெடுநேரம் உழைத்த மக்கள். தனிமைக் கொண்ட முதுமை வாழ்க்கை அவர்களைப் போர் அடிக்கச் செய்துள்ளது. விடுதலையாகும் சில வாரங்களில் மீண்டும் குற்றம் புரிந்து சிறை வந்துவிடுகிறார்கள்.

இரண்டாம் உலக யுத்தத்தின் பின் வெகு விரைவாக முன்னேரிய நாடு ஜப்பான். கட்டொழுங்கும் உழைப்பும் ஜப்பானின் அடையாளமாக அமைந்தது. பொருளாதார நிலையில் மூன்றாம் இடத்தை எட்டிப் பிடித்தப் பின் அதன் நிலை நிலுவைக் கண்டது. காரணங்களில் ஒன்று பிறப்பின் விகிதாச்சாரம். இன்னும் 40 ஆண்டுகளில் ஜப்பானியர்களின் ஜனத்தொகை மூன்றில் ஒருப் பகுதியாக குறையுமென கணக்கிடுகிறார்கள்.

தோக்கியோ நகரில் இரு இளைஞர்கள், கசிந்துருகி காதலிக்கிறார்கள். அவர்களுடைய காதலிகள் பதுமைகளைப் போல் இருப்பதாகச் சொல்கிறார்கள். பள்ளி முடிந்ததும் வேளிக்கு வெளியே நீண்ட நேரம் பேசிக் கொண்டிருப்பதாகக் கூறுகிறார்கள். ஆச்சரியம் என்னவென்றால் அந்தக் காதலிகள் நிஜப் பெண்கள் அல்ல. நிண்தெண்டோ விளையாட்டுக் கருவியில் இருக்கும் பொம்மைகள். டிஜிட்டல் காதலர்கள் டி.ராஜெந்திரைப் போல் நாயகியின் கையைப் பிடிக்காமலேயே காதலிக்கிறார்கள்.

இப்படி இவர்கள் காதலைத் தேடவும், காதலிக்கவும் 16-17 மாடியில் ஒரு கட்டிடத்தைக் கட்டிப் போட்டு வைத்திருக்கிறார்கள். இளைஞர்களை கொஞ்சிக் கண் சிமிட்டி ஆயிரக் கணக்கான அனிமே காதலிகள் தினமும் அவர்களை வரவேற்கிறார்கள். அந்தக் கட்டிடம் தினம் தினம் திருவிழாக் கோளம் காண்கிறது.

ஜப்பானிய பணியிட கலாச்சாரத்தைப் பேசும் போது தனது வேலையிடத்திற்கு ஒரு பணியாளன் கொடுக்க வேண்டிய அற்பணிப்புகளைக் குறிப்பிடுகிறார்கள். உடல் நலம் இல்லை என மருத்துவ விடுப்பு எடுப்பவர்கள் மறுநாள் வேலைக்கு வந்து சக பணியாளர்களுக்கு சிரமம் கொடுத்ததற்காக அனைவர் முன்னிலையிலும் மன்னிப்புக் கேட்க வேண்டும். வருடாந்திர ஓய்வான 10 நாட்களில் பாதியைக் கூட அவர்கள் முடிப்பதில்லை. வேலை நேரம் முடிந்த பின்னர் பணியிட அற்பணிப்பு எனும் பெயரில் அதிக நேரம் உழைப்பது அவர்களின் கலாச்சாரத்தில் ஊன்றிவிட்டது. நமது கலாச்சாரத்தில் கூறிக் கொள்ளும் 'life' அங்கில்லை. இதில் காதல், கல்யாணம், குழந்தை என்பதெல்லாம் கூடுதல் சுமை என்பதாகவே பார்க்கப்படுகிறது.

ஜப்பானியர்களின் ஆண் பெண் உறவு அதன் இனக் கவர்ச்சியை இழந்துக் கொண்டுள்ளது. பணிச் சுமையும், பொருளாதார சுமையும் இன்றய இந்நிலைக்கு பெரும் பங்காற்றியுள்ளன. காதல், உரசல், முத்தம் எல்லாம் சுத்த பேத்தலான விசயமாகிவிட்டது. இலகுவாக கிடைக்கும் பாலியல் சேவைகளும் ஜப்பானிய குழந்தைகள் பிறப்பின் வீழ்ச்சிக்கான காரணமாக முன் வைக்கப்படுகிறது. ஜப்பானிய அரசு இன்னமும் தீர்வு காணாத சாமூதாயச் சிக்கலாக இந்நிலை அங்கே உள்ளது.

ஜப்பானுக்கு நேர் மாறான சமுதாயச் சிக்கல் உள்ள நாட்டில் இந்த ஆவணப்படம் முடிவடைகிறது.

Thursday, December 27, 2018

ஓநாய் குலச்சின்னம்/ Wolf Totem/ 狼图腾 (Láng Túténg)


இந்த நாவலை தமிழில் கொண்டு வர முயற்சி எடுத்துக் கொண்ட இயக்குநர் வெற்றி மாறனுக்கு நன்றி. இந்த நூலுக்காகவே ‘அதிர்வு’ பதிப்பகத்தை தொடங்கி இருக்கிறார். இலகுவான நடையில் மொழிபெயர்ப்பு செய்திருக்கும் ஆசிரியர் சி.மோமனின் பங்கும் மகத்தானது.

சமீபத்தில் வாசித்த நூல்களில் அதிக கால அவகாசம் எடுத்துக் கொண்ட நூல் இது. இதன் சாரம்சம் என்னை வெகுவாகவே கவர்ந்தது. இந்த நூலை வாசிக்க ஆரம்பிப்பதற்கு சில வாரங்களுக்கு முன் இன்னர் மங்கோலியா செல்லும் வாய்ப்பு கிடைத்தது. அந்த நிலம் சார்ந்த நேரடி அனுபவம் இருந்ததால் இந்த நாவலை மனதிற்கு நேருக்கமாகவே வைத்து வாசிக்க முடிந்தது.

இன்னர் மங்கோலியா சீனாவின் மாநிலங்களில் ஒன்று. மங்கோலியாவை ஒட்டி இருக்கும் பிரதேசம். சீனத்தில் இதை ‘நெய் மொங்கு’ எனக் குறிப்பிடுகிறார்கள். Grassland அல்லது மேய்ச்சல் நிலப் பகுதி என அழைக்கப்பட்ட இன்னர் மங்கோலியா தற்சயம் பல மாற்றங்களை அடைந்து ஓநாய் குலச்சின்னத்தில் காணப்படுவதை விட பல காத தூரம் எட்டி நிற்கிறது. மேய்சல் நிலப்பகுதி கொஞ்சமாகவே இருக்கிறது. ஏகப்பட்ட நிலப்பகுதிகள் பாலைவன கதியை அடைந்துக் கொண்டுள்ளன. நாவில் தேனூரும் ஆட்டிறைச்சியும் பால் சார்ந்த வைன் மற்றும் மது வகைகளும் இலகுவாக கிடைக்கின்றன.

ஜெங்கிஸ்கானின் வாழ்க்கை வரலாற்றை வாசிப்பவர்கள், பண்டைய மங்கோலியர்களின் வாழ்க்கை முறை ஓநாய்களின் கூட்டு வாழ்வியலை ஒத்த்தாக இருப்பதை அறிய முடியும். ஜெங்கிஸ்கான் ஓர் ஓநாயை போன்ற புத்தி கூர்மை மிக்கவராக இருந்ததால் உலகளவில் பிரசித்தி பெற்றார். அவரது இராணுவ கட்டமைப்புகள் ஓநாயின் வேட்டை முறையை ஒத்தது.

பெய்ஜிங்கின் குறுகிய இளவேனிற் காலம் முடியும் தருனம் அடிக்கடி மணற் புயல் எற்படும். பார்க்கும் இடம் எங்கும் புகை மூட்டத்தைப் போல் இருக்கும். அவை மணற் துகள்கள். கட்டிடங்களின் சுவர்களில் அப்பிக் கொண்டும், தரை மட்டும் சாலைகளில் உதிர்ந்தும் கிடக்கும். இந்த மணற் புயலின் காரணம் உள் மங்கோலியாவில் ஏற்பட்டிருக்கும் இயற்கை மாற்றம் தான். அதன் காரணங்களை இந்த நூலில் நீங்கள் வாசிக்க முடியும்.

சீனாவில் சுமார் 54 சிறுபான்மை இன மக்கள் வசிக்கிறார்கள். மொத்த மக்கள் தொகையில் இவர்கள் 5% மட்டும் தான். அந்த 5%-இல் மேய்ச்சல் நிலமான இன்னர் மங்கோலியாவில் வாழும் மங்கோல் மக்களும் அடங்குவர். இவர்கள் டென்ஞ்சர் எனும் கடவுளை வணங்குகிறார்கள். ஓநாயை அந்த கடவுளின் வடிவமாகவும் தமது குலச்சின்னமாகவும் பார்க்கிறார்கள். சின்ஜியாங் சென்ற போது கசாக் சிறுபான்மை இன மக்கள் வாழும் பகுதியைக் கண்டேன். அதிகமாக கழுகு சார்ந்த சிலை, ஓவியம் என அவர்களின் வசிப்ப்பிடம் இருந்தது. கசாக் இன மக்கள் கழுகை தமது குலச்சின்னமாக கருதுகிறார்கள். கசாக்ஸ்தான் கொடியில் கழுகு சின்னத்தைக் காண முடியும். அது நிற்க.

ஓநாய் குலச்சின்னம் சுயசரிதமும் கொஞ்சம் புனைவும் கலந்த நாவல். ஜியாங் ரோங் எழுதிய நாற்குறிப்புகள் இதன் கதை வடிவமாக அமைந்துள்ளது. மா வோவின் காலாச்சார புரட்சியின் போது பல்கலைகழக மாணவர்கள் கிராமப்புரங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள். சுமார் மூன்று ஆண்டுகள் அவர்கள் அங்கு தங்கி அந்த நில மக்களோடு வாழ வேண்டும். இளைய தலைமுறையினர் முதலாலித்துவ மனப்பான்மையில் இருந்து விடுபட வேண்டும் என்பதற்காகவும், கம்யூனிச சித்தாந்த்தின் அடைப்படைக் கூறுகளை கிராம மக்களிடம் சமர்பிக்கவும் அவர்கள் செயல்பட வேண்டும்.

ஜென் மற்றும் அவனது நண்பர்களும் உள் மங்கோலியா மேய்சல் நிலப் பகுதிக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள். இந்த மாணவர்கள் அனைவரும் பெய்ஜிங் பல்கலைகழகத்தைச் சேர்ந்த ஹன் இனத்தவர்கள். மங்கோல் மக்களோடு முற்றிலும் மாறுபட்ட வாழ்வியலும் கலாச்சார பிண்ணனியும் கொண்டவர்கள். அந்த மூன்று ஆண்டுகளில் மொங்கோல் மக்களின் அன்றாட வாழ்க்கையையும் இந்த மாணவர்கள் கற்றுக் கொண்டாக வேண்டும்.

உள் மங்கோலியாவின் ஓலான்புலக் மேய்சல் நிலத்தில் கதைக் களம் நகர்கிறது. பீடிகை ஏதும் இன்றி முதல் அத்தியாயத்திலேயே ஓநாய்கள் நம்மை ஆக்கிரமித்துவிடுகின்றன.
குதிரை பயணத்தின் போது தனியாக மாட்டிக் கொள்ளும் ஜென் ஓநாய்களிடம் இருந்து தப்பிப்பது முதல் கதை தொடங்குகிறது. கற்றுக் கொள்வதில் ஆர்வம் கொண்ட மாணவனாக இருப்பதால் பில்ஜி என்னும் முதியவருக்கு ஜென்னை மிகவும் பிடித்துப் போகிறது. இந்த பில்ஜி கதாபாத்திரம் மேய்சல் நிலத்தின் ஞானியாகவே காட்டப்படுகிறார். அறிவு முதிர்ச்சியும், இயற்கைக்கு எதிரான தீர்வுகளின் முன் அனுமானத்தையும் கச்சிதமாக சொல்லிவிடுகிறார்.

பனி காலத்தின் போது ஓநாய்கள் வேட்டையாடுவதைக் காட்ட ஜென்னை அழைத்துக் கொண்டு மலையுச்சிக்குப் போகிறார் பில்ஜி. சிறு வயது முதல் ஓநாய்களை தீய சக்தியாக பார்த்து வந்த ஜென் தனது உரையாடலில் பின் வருமாறு கூறுகிறான்:

“இந்த மான்கள் மிகவும் பரிதாபத்துக்குரிய ஜீவன்கள்; ஓநாய்கள் தீயவை, அப்பாவிகளை கொல்பவை.வாழ்வின் பெறுமதியை உணராதவை. அவை பிடிக்கப்படுவதும், தோல் உரிக்கப்படுவதும் தப்பே இல்லை.”

ஜென்னை முறைத்துப் பார்த்துவிட்டு முதியவர் கோபத்துடன் சொன்னார்: “அப்படியானால் புல்லுக்கென்று உயிர் கிடையாது என்று அர்த்தமா? மேய்ச்சல் நிலம் என்பது ஓர் உயிர் இல்லையா? இங்கு, புல்லும் மேய்ய்சல் நிலமும் தான் உயிர், பெரிய உயிர். மற்றவை சிறிய உயிர்கள். அவை உயிர் வாழ்வதற்குப் பெரிய உயிரையே சார்ந்திருக்கின்றன. ஓநாய்களும் மனிதர்களும்கூட சிறிய உயிர்கள்தான். புல்லைத் தின்னும் ஜீவன்கள் இறைச்சி உண்ணும் ஜீவன்களை விட மோசமானவை. ……. நீ கொலை செய்வது பற்றிப் பேச விரும்பினால், புல் வெட்டும் எந்த ஒரு கருவியையும் விட மான்களே அதிக புல்லைக் கொல்கின்றன….. மான்கள் நிகழ்த்தும் ஊறுகள், ஓநாய்கள் நிகழ்த்தும் ஊறுகளை விட மிக மிக அதிகம். மஞ்சள் மான்கள் மிக பயங்கரமானவை; இங்கு வசிக்கும் மக்களுடைய வாழ்க்கையை அவற்றால் அழித்துவிட முடியும்”.

பனி கால வேட்டையில் ஓநாய்கள் ஏகபட்ட மான்களை வேட்டையாடுகின்றன. மிக தந்திரமான வேடை. அவற்றின் கூட்டு முயற்சியை இந்த வேட்டை மற்றுமின்றி பல இடங்களில் மிக நேர்த்தியாக விளக்கி இருப்பார்கள். மான்களை சுற்றிவளைத்து ஒரு பனி குழிக்குள் தள்ளிவிடுகின்றன ஓநாய்கள்.

தேவையான அளவுக்குச் சாப்பிட்டுவிட்டு அதிகபடியான மான்களை மீதம் வைக்கின்றன. பனிகாலம் முடியும் போது குட்டிகளை ஈன்று அழுகிப் போக தொடங்கி இருக்கும் வேட்டை இறைச்சிகளை உண்ண மீண்டும் அவ்விடம் வருவது ஓநாய்களின் வழக்கம்.

ஓநாய்கள் வேட்டையாடியதில் சிலவற்றை அப்பகுதி வாழ் மக்கள் எடுத்துக் கொள்கிறார்கள். மான் இறைச்சி, தோல் என பாகுபடுத்தி சேமிப்புக் கிடங்கில் கொடுத்து புள்ளிகளைப் பெற்றுக்கொள்கிறார்கள். ஒநாய்கள் சாப்பிடுவதற்கு போதுமான / அவற்றின் வேட்டை களவாடபட்டுள்ளது என்பதை அவை அறியாத அளவுக்கு மட்டுமே எடுக்கிறார்கள்.

சேமிப்புக் கிடங்கில் மான் தோலை காணும் கும்பல் வேட்டைக் குழியை அறிந்துக் கொண்டு ஓநாய்களின் ஒட்டு மொத்த மான் வேட்டையையும் எடுத்துக் கொள்கிறார்கள். சில காலத்திற்குப் பின் அவ்விடம் வரும் ஓநாய்கள் சேகரித்து வைத்த உணவு இல்லாமல் போனதை கண்டு பெரும் கோபம் அடைகின்றன.

உணவுக்கு மீண்டும் ஒரு வேட்டைக்கு ஆயத்தமாகின்றன. ஓர் இரவில் சீன இராணுவத்திற்காக வளர்க்கப்படும் இராணுவக் குதிரைகளை வேட்டையாடி தீர்க்கின்றன. ஓநாய்களுக்கும் குதிரைகளுக்கும் நடக்கும் இந்த போரை வாசிக்கையில் பிரமிப்பே மிஞ்சுகிறது. தனது குரூரத்தை தீர்த்துக் கொள்ள தேற்றுப் போகாமல் இருக்க வேண்டும், அதற்காக தற்கொலைக்கும் துணிகின்றன ஓநாய்கள். குதிரைகள் மூர்கமாக உதைக்கும் போது சில ஓநாய்கள் அவற்றின் வயிற்றின் அடியில் கவ்வி கிழித்து அவை விழும் போது சேர்ந்து அமிழ்ந்து மடிகின்றன. சுமார் 2000க்கும் அதிகமான குதிரைகளைக் கொன்று குவிக்கின்றன.

இராணுவக் குதிரைகள் வேட்டையாடப் பட்டதில் கோபமடையும் சீன அரசு ஓலான்புலாக்கில் இருக்கும் அத்தனை ஓநாய்களையும் அழித்தொழிக்கச் சொல்கிறது. அதற்காக சிறப்பு அதிகாரிகளை நியமிக்கிறது.

இந்தக் கதை உணவுச் சங்கிலியின் பாதிப்பை மட்டும் பேசவில்லை. தேசியமயமாக்களில் சிறுபான்மையின் வாழ்வியல், கலாச்சாரம் மற்றும் மண் எப்படியெல்லாம் பாதிப்படைந்தது என்பதையும் விளக்குகிறது.
மேய்ச்சல் நிலத்தின் புல் வெளியை ஆடுகள், குதிரைகள், மான்கள் மர்மோட்டு எனும் பெரிய எலி வகைகளும் சூரையாடுகின்றன. புல் மேயும் இவ்விலங்குகளை ஓநாய்களும், மனிதர்களும் வேட்டையாடுகிறார்கள். இன்றள்விலும் மங்கோலிய பகுதிகளில் மனிதர்களை விட விலங்குகளே அதிகம். அப்படியான சூழலில் ஓநாய்கள் அழித்தொழிக்கப்பட்டது அந்த நிலத்தை எந்த அளவிற்குப் பாதித்திருக்கும் என்பதை நாம் கற்பனை செய்து பார்க்கலாம்.

பில்ஜி எனும் முதியவரின் பேச்சின் ஈர்ப்பில் ஜென் ஓநாய்களின் மீது அதீத காதல் கொள்கிறான். ஒரு ஓநாய் குட்டியை வளர்த்துப் பார்க்க வேண்டும் எனும் ஆவல் மேலிடுகிறது. சிரமப்பட்டு ஒரு ஓநாய்க் குட்டியைப் பிடித்துக் கொண்டு வந்து வளர்க்கிறான். ஓநாயை தெய்வச் சின்னமாகப் பார்க்கும் அப்பகுதி மக்களும் முதியவரும் அதற்கு எதிராக இருக்கிறார்கள்.

ஓநாய்க் குட்டியின் வளர்ச்சியை மிக நேர்த்தியான குறிப்புகளாக நமக்கு விளக்குகிறது இந்த நூல். ஓநாய்கள் மற்றும் மேய்ச்சல் நிலம் பற்றிய ஒரு களஞ்சியமாக இந்த நூலை காண முடிகிறது. சுமார் 30 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இன்னர் மங்கோலியா போகும் ஜென் சென்னின் பார்வையில் அந்த நிலம் வேறு ஒரு கோணத்தில் பார்க்கப் படுகிறது. தனது ஒநாய்க் குட்டியை கண்டெடுத்த இடத்தின் தனது நூலின் முதல் அத்தியாயத்தை சமர்பித்துவிட்டு வருகிறார். 2004-ஆம் ஆண்டு பருவக் காற்றின் வீச்சு பெய்ஜிங்கில் கடுமையான மணற் புயலை ஏற்படுத்துகிறது.

சீனாவில் அதிகமாக விற்பனையான நூல் மா வோவின் சிகப்பு நூல் ‘ரெட் புக்’. அதற்கு அடுத்தபடியாக இருப்பது ‘லாங் தூதெங்’ எனப்படும் இந்த ஓநாய் குலச்சின்னம். முரண் என்னவென்றால் ‘ரெட் புக்’ பேசும் கம்பூனிச கோட்பாடுகளை ஓநாய் குலச்சின்னம் மறுத்தும் எதிர்த்தும் பேசுகிறது.

இந்த நாவல் நுற்பமான வரலாற்று ஆவணத்தை 617 பக்கங்களுக்கு பதிவு செய்து வைக்கிறது. நிச்சயமாக 2 மணி நேர திரைப்படத்தில் சொல்லிவிட முடியாது. இருந்தும் படமாக எடுத்து இதன் அழகியலை சிதைத்து வைத்திருக்கிறார்கள். கதையை மாற்றி இருக்கிறார்கள். நிறைய விசயங்களை பேசாமலேயே கடந்துச் சென்றுள்ளார்கள். அதிருப்தியே மிச்சம். நாவலாக வாசிக்க நினைப்பவர்கள் முதலில் இதை திரைப்படமாக பார்க்காமல் இருப்பதே நல்லது.

ஓநாய் குலச்சின்னம் 30க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நாவலை வாசித்து முடிக்கும் போது நீச்சயமாக நீங்கள் ஓநாய்களை காதலிக்க ஆரம்பித்துவிடுவீர்கள். மாறுபட்ட வாசிப்பு அனுபவமாகவும் இருக்கும்.

Friday, March 14, 2014

வெண்ணிற இரவுகள் - ஊடலின் சுவாரசியம்


மியன்மார். புத்தம் பரவிய பூமி. ஸ்ரீ லங்காவை போலவே In the name of Buddha என இதன் அரசியல் பின்னணியும் உள்ளது. மியன்மாரில் சிறுபான்மையாக இந்துகள். அந்த சிறுபான்மைக்கு அன்னாந்து பார்க்கும் அளவுக்கு கோவில். அந்தக் கோவில் கோபுரம் மட்டும் தான் உயரமாக உள்ளது. மக்களின் வாழ்க்கை தரமோ கோவில் வாசலை விட மோசமாக உள்ளது. பாகுபாடு மிகுந்த அரசியல் நிலையால் அதிகமான அகதிகளை உருவாக்குவதில் முதல் நிலை வகிக்கிறது இந்நாடு. அதில் மிகுதியாகவே முகமதிய அகதிகள். 

மியன்மார் அகதிகளின் தொல்லை தாய்லாந்து மற்றும் மலேசிய குடியுரிமை இலகாக்களுக்கு பலமான தலைவலியை கொடுக்கும் விடயங்களில் ஒன்று. தரை வழி பயணமும், கள்ளத் தோனியும் இவர்கள் இங்கு குடியேற காரணம். கூட்டமாக இவர்கள் வந்த படகு சுட்டு வீழ்த்தப்பட்ட ’சம்பவங்களை’ கேள்விபட்டதுண்டு. முறையான கடப்பிதழ் இன்றி பிடிபடும் இவர்களை திருப்பி அனுப்புவதிலும் பெரும் சிக்கல். எவ்வளவு துள்ளியமாக மியன்மார் மொழி பேசுபவராக இருப்பினும் தூதரகங்கள் ’இவன் என் நாட்டினன்’ என்பதை மறுக்கவே செய்கின்றன. ’ரொகின்யா’, ‘ஹரக்கான்’, ‘சின்’, ‘மின்’ என இவர்களுக்குள் பல பிரிவுகள். பிளவுகளும் கூட. சில அகதி முகாம்களில் பத்து பன்னிரண்டு ஆண்டுகள் என இவர்கள் காலம் கடத்தி வருவது அரசாங்க பணத்திற்கான கேடு. 

வெண்ணிற இரவுகள் காதலின் ஊடலை மையமாக கொண்ட கதையோட்டம். சலிப்பு தட்டாத கதை. படத்தை பார்த்து முடிக்கையில் தோன்றியது ஒன்று தான். இப்படிபட்ட தமிழ்ப்படங்கள் மலேசிய சூழலில் இன்னும் அதிகமாகவே வர வேண்டும். திறம் கொண்ட படைப்பாளிகள் இங்கு அதிகமாகவே இருக்கிறார்கள். மக்களின் ஆதரவு என காண்கையில் திரையரங்கம் பல் இளிக்கவே செய்கிறது. முந்தைய படைப்புகள் தான் இதற்கு காரணம். மலேசிய திரைப்படத்தை திரையரங்கில் பார்ப்பது சொந்தக் காசுக்கு சூன்யமாகும் எனும் கருத்தே பலரிடமும் ஆழமாக பதிந்துள்ளது. வெண்ணிற இரவுகள் கொஞ்சமும் ஏமாற்றமளிக்கவில்லை. அடுத்த படைப்புகளுக்கான நம்பிக்கையை கொடுத்திருக்கிறார் இயக்குனர். மலேசிய சூழலில் சில நல்ல படைப்புகள் முன்பு வந்திருந்தாலும் அவை திரையிடப்படாமல் இருந்திருக்கின்றன. வெண்ணிற இரவுகள் ஒரு புதிய தொடக்கமாக அமைந்துள்ளது. இது நிச்சயமாக வெற்றி பெற கூடிய தொடக்கமும் ஆகும்.

தனது கடன்கார முன்னாள் காதலனை தேடிச் செல்கிறார் காதலி. மலேசியாவின் ‘ஏர் ஆசியா’ விளம்பரத்துடன் மியன்மாருக்கான இவரின் பயணம் தொடங்குகிறது. கதைக் களம் மியன்மார், மலேசியா, சிங்கப்பூர் என விருவிருப்பை கூட்டுகிறது. மியன்மாரில் மகேனை தேடும் போது காட்டப்படும் இடம் தான் நான் ஆரம்பத்தில் கூறிய கோவில். இங்கே இயக்குனரின் நூதனம் வியக்க வைக்கிறது. தமிழர்களிடையே பாழாய் போன ஓர் எண்ணம் உண்டு அது ஹிந்து மதமும் தமிழனும் பிரிக்க முடியாத சக்தி எனும் அசைக்க முடியாத நம்பிக்கை. கோவிலை காட்டுவதன் வழி மியன்மாரின் தமிழ் குடியினரையும் காட்டிவிடுகிறார். ‘அங்கயும் தமலவங்க இருக்காங்க பாரு’ எனும் எண்ணத்தை 'பாமரனிடம்' புகுத்தும் எளிய வழி. உண்மையில் அதிகமான தமிழ் முஸ்லிம்களும் அங்கே வசிக்கிறார்கள். 

பாடாவதியான வசனங்களினால் பல மலேசிய ’டெலிமூவி’கள் நம்மை வெயில் காய வைத்துள்ளன. ‘வாழ்க்கைனா என்னானு தெரியுமா’ எனும் வகையிலான வசனங்களை கேட்டாலே சேனலை மாற்றும் மனப்போக்கை தான் மலேசிய தமிழ் நன்னெறி திரைப்படைப்புகள் இங்கே ஏற்படுத்தியுள்ளன. புதிய தலைமுறையின் திரை ஆர்வமும் படைப்புகளும் இதை பலமாகவே மாற்றி அமைக்கும் என்பதாக உணர்கிறேன்.

’நுசந்தாரா’ எனும் சூழல் மியன்மார் முதல் இந்தோனேசியா வரை பல நாடுகளை உள்ளடக்கியது. இந்தப் பகுதிகளில் சேவல் சண்டை மிக பிரபலம். மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் அதீத சட்ட அழுத்தத்தால் இவ்விளையாட்டு வழக்கொழிக்கப்பட்டது. இது கல்வெட்டில் பொறிக்கப்பட்ட பாரம்பரிய விளையாட்டும் ஆகும். மியன்மார் மக்களோடு மக்களாக சேவல் சண்டை விட்டுக் கொண்டிருக்கும் காட்சியோடு மகேனின் கதாபாத்திரம் தொடங்குகிறது. வறண்ட பூமி, வயல் வெளி, குடிசை வீடு என எல்லா பாகுதிகளிலும் கேமரா கோனம் பயணித்துள்ளது. காதல் கதை என்பதால் மியன்மார் மக்களின் சமூக சூழல் அழுத்தத்தோடு முன் வைக்கப்படவில்லை. திரைக்கதைக்கு அது ஒவ்வாததாகவும் கருதி இருக்கக் கூடும். 

ரமேஷ், மேகலா என இரு கதாபாத்திரங்களை மையமாக கொண்டே திரைக்கதை நகர்கிறது. இதற்கு நிச்சயமாக அசாத்திய திறன் வேண்டும். முக்கிய கதாபாத்திரம் இந்த இரு ஜோடிகள் மட்டுமே என்றிருக்க கதையை சுவாரசியமாக சொல்லி முடிப்பது சவாலான காரியமே. நிகழ்காலத்திலும் பழய நினைவுகளுடனும் படம் நகர்வதால் கதையோட்டம் போர் அடிக்காமல் உள்ளது. இந்த இரு கதாபாத்திரங்களுக்கும் உள்ள முரண் நாயகன் ஜாலியான கேரக்டராகவும் நாயகி சீரியசான கேரக்டராகவும் காட்டப்படுவது. ஒவ்வொரு காட்சிகளும் இளமையின் துள்ளலோடு நகர்ந்துச் செல்ல இது பெரும் பலமாக அமைந்துள்ளது. 

லாஜிக் தவறுகளை சுட்டிக்காட்டாவிட்டால் இவ்விலக்கிய சமூகம் என்னை மன்னிக்காது என்பதால் இதன் சில குறைபாடுகளையும் காண்போம். தந்தையின் மீது வெறுப்பு மிகுந்த ரமேஷ் தன் படிப்புக்கு தானாகவே பணம் தேடிக்கொள்கிறார். அப்படியாக மேகலாவிடம் நாமம் போடும் பணம் சில ஆயிரங்கள். இருந்தும் இவர் கையில் ஸ்டீவ் ஜாப்ஸின் ஆப்பிள் பளபளக்கிறது. ’புரட்டாசிக்கு ஒரு மாசம் சைவம்’ எனும் மேகலா, ரமேஷிடம் இங்க ‘காட்டுப் பன்டி’ கிடைக்காதா என நம் போன்ற பிஞ்சு பார்வையாளனின் மனதில் கள்ளுக்கடையை ஞாபகப்படுத்தி தொலைக்கிறார். மேகலா ஒரு வலைபதிவர். ’வெட்பிரஸ்’ தளத்தில் வெண்ணிற இரவுகள் என தனது பிளாக் எழுதி வருகிறார். எந்த வலைத்தளமாக இருந்தாலும் ‘கொம்பஸ்’ பகுதியில் மட்டுமே உள்ளீடுகளை செய்ய முடியும். ஆனால் அவரோ முகப்பு தளத்தில் தட்டச்சு செய்வது ‘நொட்டையாக’ உள்ளது.


மலேசிய பல்கலைக்கழக மாணவர்களின் வாழ்க்கை முறையை மிக யதார்த்தமாக காட்டியுள்ளார்கள். யூனிவர்சிட்டியில் கொடுக்கப்படும் பட்டப் பெயர், ஓரெண்டேஷன் @ ரேகிங் போன்ற காட்சிகள் மலரும் நினைவுகளாக உள்ளன. மீண்டும் மீண்டும் வரும் அதே ’ஸப்போர்டிங் ஆர்டிஸ்’ காட்சிகளை தவிர்த்து இருக்கலாம். அதாவது மேகலா மகேன் உற்ற தோழர் தோழியரை தாண்டிய மற்ற கதாபாத்திரங்களை குறிப்பிடுகிறேன். இது போக மகேன் (ரமேஷ்) மற்றும் ’சைக்கோ மந்திரா’ (ரமேஷின் நண்பன்) பாடகரையும் தவிர்த்து அதிகமான தமிழ் இளைஞர் கதாபாத்திரங்கள் இல்லை. பெண்களின் ஆதிக்கம் கதையில் மிகுந்துள்ளது. 

மலேசிய காட்சி அமைப்புகள் ஒவ்வொன்றும் கண்ணில் ஒற்றிக்கொள்ளும் பசுமையோடும் மியன்மார் காட்சி அமைப்புகள் வறட்சி நிலையும் மிகுந்து உள்ளன. இரு வேறு நிலப்பகுதிகளில் வாழும் தமிழர்களின் வாழ்க்கை நிலை காத தூர வேறுபாடுகளை உணர்த்துகிறது. வசதியற்ற அவர்களின் நிலையை தமிழ் தேசியம் மறந்தே வாழ்கிறது. புரட்சிக்கும் போருக்கும் மட்டும் தமிழ் தேசியம் முதுகு வளையும் என்பதாகவே இதை உணர்கிறேன். 

உணர்ச்சி மிகு தருணங்கள் மேகலா எனும் கதாபாத்திரத்துக்கு மிக எளிதாக அமைந்திருக்கிறது. அலட்டிக் கொள்ளாமல் நடித்திருக்கிறார். அழுகை, பயம், கோபம், நகைச்சுவை, யதார்த்தமென கலக்கி இருக்கிறார். ஆரம்பக் காட்சிகளில் சோடாபட்டி கண்ணாடியுடனும், ஒப்பனை பவுடர் அடர்த்தியுடனும் நாம் பார்க்கும் மேகலா நிகழ்கால தைரிய பெண்ணாக முற்றிலும் மாறுபடுகிறார். மனதை பறிக்கும் அழகுடன் இருக்கிறார். 

’சைக்கோ மந்திரா’ ’பத்தல பத்தல சூரு பத்தல’ எனும் பொன்னான வரிகளில் ஏதாகினும் பாடலை பாடிவிடுவாரோ எனும் அச்சத்தில் இருந்து காப்பாற்றி இருக்கிறார்கள். பாடல் வரிகளும் இசை அமைப்பும் நெஞ்சில் நிற்கின்றன. ரிங் டோன் வைத்துக்கொள்ளும் வசதி செய்துள்ளார்களா எனும் விவரம் தெரியவில்லை. 

மியன்மார் காட்சி அமைப்பு எனும் பட்சத்தில் புத்த மடாலயங்களை படக்குழுவினர் மறக்கவில்லை. பார்க்கும் இடமெங்கும் முளைத்த காளான்களாக இருப்பது அது தானே. இங்கே தமிழர்கள் இருக்கிறார்கள். இவர்களின் இலக்கிய பாரம்பரியம் என்ன? மொழியை மறக்காமல் இருக்கும் போது எழுத்தை மறந்திருக்க கூடுமா எனும் எண்ணங்களை தவிர்க்க முடியவில்லை. 

உலகச் சந்தையில் மதிப்பு குறைந்த மியன்மார் நாணயம் ஊடலில் பிரிந்த காதலரின் உறவை மீட்டுணர வைக்கிறது. ஊடல் தவிர்த்து வேறு என்ன காரணங்களுக்காக பிரிந்தார்கள் என்பது படத்தின் முக்கிய திருப்புமுனைகள். அவர்களை மியன்மார் நாணயம் இணைத்ததா அல்லது பிரித்ததா என்பது உட்ச பட்ச காட்சி. இப்படத்தின் வசன அமைப்புகளில் மகேன் தன் சித்தியுடன் பேசும் காட்சி அமைப்பே சற்று சறுக்கல் கொண்டுள்ளதாக கருதுகிறேன். அதன் அழுத்தம் ஒப்ப மறுக்கிறது. 

மலேசிய தமிழ் திரைப்படைப்புக்கு வெண்ணிற இரவுகள் ஓர் அடித்தளமாக அமைந்துள்ளது. இது மென்மேலும் வளர வேண்டும். நிச்சயமாக திரையரங்குகளில் இப்படத்தை காண தவறாதீர்கள். படக்குழுவினருக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். 

வெண்ணிற இரவுகள் (White Nights) - நவீன டொஸ்தாயெவ்ஸ்கியின் காதல்.

Monday, February 24, 2014

2013-ல் படித்ததில் பிடித்த 10 நூல்கள்

10. ONLY 13 - THE TRUE STORY OF LON (Julia Manzanares & Derek Kent)

தாய்லாந்தை சொர்க பூமியாக அடையாளம் காண்பதற்கு அதன் ‘செக்ஸ் டூரிசமும்’ ஒரு காரணம். பாலியல் வேட்கை பொருட்டு அங்குச் செல்லும் பயணிகள் அதிகமாகவே இருக்கிறார்கள். பயணிகளின் இந்த பாலியல் தேடல் அதிகமான பெண்களை உலகின் புராதன தொழிலான விபச்சாரத்திற்கு அழைத்து வந்துக் கொண்டிருக்கிறது. வாழ்க்கையின் விரட்டல் ஒரு தாய்லாந்து பெண்ணை பேங்காக் பாலியல் வீதியில் கொண்டு வந்து நிறுத்துகிறது. அப்போது அவளின் வயது 13. இந்நூல் தொடர்பாக எனது விமர்சனத்தை ஏற்கனவே எழுதி இருக்கிறேன். பாலியல் தொழில் தொடர்பாக ஆழமான பதிவை முன் வைக்கும் லோன் எனும் பெண்ணின் சுயசரிதம் மிக எளிமையான ஆங்கிலத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.


9. பிரபல கொலை வழக்குகள் (எஸ்.பி.சொக்கலிங்கம்)

கிழக்கின் தரமான வெளியீடுகளில் மேலும் ஒரு புத்தகம். எஸ்.பி.சொக்கலிங்கம் எனும் வழக்கறிஞரால் எழுதப்பட்ட நூல். தடையற்ற வாசிப்பு. 'க்ரைம்' சிறுகதைகளை கண் விரித்து வாசிப்பதை போன்ற அனுபவத்தை கொடுக்கிறது. மொத்தம் 10 கொலை வழக்குகளை விளக்குகிறது இந்நூல். வழக்குகளின் விசாரணை சுவாரசியமானது. அங்கே சான்றுகள் அற்ற சாட்சியம் பொய்த்து போகிறது. இருந்தும் நீதி பல நேரங்களில் வெல்வதையும் சில நேரங்களில் தோற்றுப் போவதையும் நாம் காண்கிறோம்.


8. A Record of Cambodia - The Land and It's People (Zhou Daguan)

இந்நூல் தொடர்பாக எனது கம்போடிய பயண கட்டுரையில் பல இடங்களில் மேற்கோள் காட்டி இருந்தேன். 1296-ல் அந்நாளைய அங்கோர் நகரத்திற்கு பயணம் மேற்கொண்ட ஒரு சீன பயணியின் குறிப்புகளை விளக்கும் நூல் இது. கம்போடியாவின் அங்கோர் கால மக்கள், ஆட்சி, வணிகம், வாழ்வியல், மதம் என பல தளங்களை விளக்குகிறது. சமீப காலத்தில் தான் இந்த நூல் நேரடியாக சீன மொழியில் இருந்து ஆங்கிலத்திற்கு மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. முந்தைய பதிப்பு பிரஞ்சு மொழியில் இருந்து அங்கிலத்தில் The Customs of Cambodia என அறியப்பட்டது. அங்கோர் சரித்திரத்தை அறிந்துக் கொள்ள விரும்புவோர் நிச்சயமாக வாசிக்க வேண்டிய நூல் இது. ச்சாவ் தாகுவான் எழுதிய சீன குறிப்பில் இருந்து இன்று நமக்கு வெகு சொற்பமானவையே கிட்டி உள்ளது. மார்க்கோ போலோவின் ஆசிய பயண குறிப்பிற்கும் ச்சாவ் தாகுவான் பயண குறிப்பிற்குமான வேறுபாட்டையும், தாகுவான் குறிப்புகளில் இருந்து இன்றைய ஆய்வுகள் கண்டடைந்த முரண்பாட்டையும் ஆசிரியர் விளக்க தவறவில்லை.


7. ராஜிவ் கொலை வழக்கு - மர்மம் விலகும் நேரம் (கே.ரகோத்தமன்)

வாசகனை மாய காட்டுக்குள் ஆழ்த்தும் நூல் இது. ராஜிவ் காந்தி கொலை வழக்கின் தலைமை புலனாய்வு அதிகாரியாக இருந்த ரகோத்தமனால் எழுதப்பட்ட நூல். கொலை வழக்குக்கு முக்கிய ஆதாரமாக அமைந்த புகைப்படங்களும் இந்நூலில் இணைக்கப்பட்டுள்ளது. இன்றளவிலும் பல விதமான சர்ச்சைகளை எதிர் கொண்டுள்ள வழக்கு இது. விசாரணை அதிகாரி எனும் பட்சத்தில் தனது சார்பிலான நியாய வாதங்களை முன் வைக்கிறார் ரகோத்தமன். ஒரு வழக்கை விசாரிக்க வேண்டிய முறைகளையும் அதில் தவிர்த்திருக்க வேண்டிய வற்றையும், விசாரணை அதிகாரிகளுக்கு நேர்ந்த பல விதமான இடர்பாடுகள், தடைகள், அதிகாரக் குறுக்கீடுகள் பற்றியும் விலாவாரியக குறிப்பிட்டுள்ளார். ராஜிவ் காந்தி எனும் பிரபலத்தின் கொலை வழக்கினை அறிந்துக்கொள்ள வாசிக்க வேண்டிய முக்கியமான நூல் இது.


6. வெளிச்சத்தின் நிறம் கருப்பு - மர்மங்களின் சரித்திரம் (முகில்)

எழுத்தாளர் முகில் எழுதிய நூல்களில் முதலில் வாசித்தது யூதர்கள். அவர் எழுத்தின் வசீகரமே மேலும் அவரின் வெறு சில படைப்புகளை நாடிச் செல்ல வைத்தது. வெளிச்சத்தின் நிறம் கருப்பு கொஞ்சம் தடித்த நூல் தான் இருந்தும் வாசிப்புக்கு தடையற்ற நூல். ஒரே மூச்சில் படித்து முடிக்கும் அளவிற்கு சுவாரசியத்தை கொட்டி எழுதி இருக்கிறார் முகில். என்ன தான் நாம் விஞ்ஞான ரீதியாக லாஜிக் தேடினாலும் ஆச்சரியமளிக்கும் சில அதிசயங்கள் ஆங்காங்கு நடந்தபடியே உள்ளன. சைன்ஸுக்கு அப்பாற்பட்ட சில நம்பிக்கைகள் நவநாகரீக வளர்ந்த நாடுகளிலும் மெத்த படித்த மக்களிடமும் கொட்டிக் கிடக்கிறது. இயற்கையாக நடக்கும் சம்பவங்கள் கூட சில வேளைகளில் அதிசயமாகும் அதிசயத்தை நாம் காண்கிறேம். இதை படித்து முடித்ததும் இன்னும் கொஞ்சம் எழுதி இருக்கலாமே என்றே தோன்றியது. இது குறித்து முகிலிடம் கேட்ட போது வாய்ப்பு கிட்டுமாயின் இத்தொடரின் அடுத்த பாகத்தை எழுதுவதாக கூறினார்.


5. Lady Boys - The Secret World of Thailand's Third Gender

Only 13 புத்தகத்தை வாங்கிய போது தான் இதையும் வாங்கினேன். தென் கிழக்காசியாவில் அதிகமான திருநங்கைகள் வாழும் நாடு தாய்லாந்து. ‘லேடி பாய்ஸ்’ எனும் இந்த நூல் தாய்லாந்தில் திருநங்கைகள் தொடர்பான பல தகவல்களை நமக்கு அளிக்கிறது. நான் வித்தியா, அவன் - அது = அவள் போன்ற தமிழ் நூல்கள் இந்திய சூழலில் திருநங்கைகளின் வாழ்க்கை முறையை நமக்கு விளக்கின. தாய்லாந்து தொடர்பான ஆங்கில நூல் வரிசையில் முதல் 10-ல் இந்நூலும் ஒன்று. ஒன்பது திருநங்கைகள் குறித்த தனி தகவல்கள் தொகுக்கப்பட்டுள்ளன. திருநங்கையர்களின் அடையாளம் அந்நாட்டில் அங்கீகரிக்கப்படவில்லை. பாலியல் தொழிலின் வியாபார நூதனங்களும் அங்கு பல திருநங்கையர்கள் உருவாக காரணமாக அமைவதை காண முடிகிறது. ‘ஃபியூடிப்புல் பாக்சர்’ எனும் திரைப்படம் தொடர்பாக எனது கண்ணோட்டத்தை முன்பு எழுதி இருந்தேன். நோங் தோம் எனும் அந்த ’முய் தாய்’ வீரரின் வாழ்க்கை குறிப்பையும் இந்நூலில் காணலாம்.

4. எரியும் பனிக்காடு (Red Tea) (இரா.முருகவேல்)

இது ஆங்கிலத்தில் வெளி வந்த நாவல். தமிழில் இரா.முருகவேல் அவர்களால் மிக அருமையாக மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. ஆங்கிலத்தில் வெளிவந்து சுமார் 38 ஆண்டுகளுக்கு பின் இன்று நமக்கு தமிழில் வாசிக்க கிடைத்திருக்கும் நாவல் இது. இந்நாவலை மையப்படுத்தியே பாலாவின் பரதேசி படம் எடுக்கப்பட்டுள்ளதை வாசித்தவர்கள் அறிய முடியும். பாலா அவரின் பெயரை போட்டுக் கொண்டது பலமான சர்ச்சையை ஏற்படுத்தியது. உலகின் ஒரு பக்கம் புரட்சிகளும் போராட்டங்களும் இரண்டாம் உலகப் போரின் ஆயத்தங்களும் நடந்துக் கொண்டிருந்த சமயம் தனது அடிப்படை உரிமைகள் என்னவென அறியாத மக்கள் முதலாளித்துவ பிடியில் வதைபடுகிறார்கள். அறியாமையே இதற்கு முழு முதற் காரணம். படித்து முடிக்கையில் ஏதோ ஒரு பாரம் நம் நெஞ்சில் ஏற்றி வைக்கப்படுகிறது. பனிக்காட்டில் தன் வாழ்க்கையை அற்பணித்த உயிர்களுக்கு ஒரு கணம் நம்மை மௌன அஞ்சலி செலுத்த வைக்கிறது.

3. அறம் - சிறுகதை தொகுப்பு (ஜெயமோகன்)

அறம் மொத்தம் 13 சிறுகதைகளை கொண்ட தொகுப்பாகும். வாசகனின் உணர்ச்சிகளை தட்டிச் செல்லும் படைப்பு மிக உன்னதமானது. அறம் நூலின் ஒவ்வொரு கதையிலும் அத்தன்மை புதைந்துள்ளது. அறம் செய்யும் மனிதர்களை இவ்வுலகம் எவ்வளவு அந்நியமாக்கிவிட்டது என்பதை இக்கதைகள் நமக்கு உணர்த்துகின்றன. இதில் யானை டாக்டர் எனும் சிறுகதை தனித்துவம் வாய்ந்தது. அக்கதை பிற மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டு விழிப்புணர்வுக்காக இலவசமாக விநியோகிக்கப்படுவதாக அறிகிறேன். தமிழ் இலக்கியத்தில் இக்கதைகள் அனைத்தும் மிக முக்கியமான நிகழ்வுகளாகும். அறம் நிகழ்த்திய மனிதர்கள் பலரை நாம் அறியாமல் போனதற்கு காரணம் சமூகத்தின் அறமற்ற நிலைகள் என்பதே உண்மை.

2. என் பெயர் ராமசேஷன் (ஆதவன்)

ஆதவன் படைப்புகள் மீதான பரிச்சையத்தை ஏற்படுத்தியது என் நண்பன் முரளி. அவரிடம் இருந்த தலையணை சைஸ் ஆதவன் சிறுகதை தொகுப்புகளை தான் முதலில் வாசித்திருந்தேன். பாதி புத்தகத்தை தாண்டி இருந்த நன்நாள் ஒன்றில் முரளிக்கு டிரான்ஸ்பர் கிடைக்க புத்தகமும் இனிதே இடம் மாறியது. தொடர்ந்து வாசித்த எஸ்.ராமகிருஸ்ணனின் கதாவிலாசம் நூலில் ஆதவனின் படைப்புகளான காகித மலர்களையும் என் பெயர் ராமசேஷன் நாவலையும் அறிமுகம் செய்து இருந்தார். ராமசேஷன் ஓர் அர்தடாக்ஸ் பிராமண குடும்பத்தில் வந்தவன். நவநாகரீகம், முற்போக்கு சிந்தனை என சில சமகால சமூக வஸ்துகள் தன்னுள் நிறம்பி இருப்பதாக நினைக்கும் கதாபாத்திரம் அவன். தனது வாழ்வில் சந்திக்கும் ஒவ்வொரு மனிதனும் போலியாக வாழ்வதை காண்கிறான். ராமசேஷனை பொருத்தவரை எல்லா மனிதர்களும் முகமூடி அணிந்தே சமூகத்தை அனுகுகிறார்கள். எதனால் இச்சூழ்நிலை என்பதை நகைச்சுவை இழையோட கதை விவரிக்கப்படுகிறது. முற்போக்கு வாதி ராமசேஷன் கடைசியில் கூறும் வாக்கியம் ’என் தங்கையை காதலிப்பவனின் பல்லை உடைப்பேன்’என்பதாக இருக்கும். ராமசேஷனும் முகமூடியோடு தான் இருந்தான் என்பதை அப்பொழுது வாசகனும் உணருகிறான் . பாலகுமாரனும் இந்நூலினை அவசியம் வாசிக்க வேண்டிய புத்தகப்பட்டியலில் முன்மொழிந்துள்ளார்.


1. ஏழாம் உலகம் (ஜெயமோகன்)

புனித தன்மைகள் நிறைந்த கோவிலின் வாசலில் இருக்கிறது நாம் கொஞ்சமும் விரும்பாத ஏழாம் உலகம். படிக்க படிக்க ஓர் ஆச்சரியமான ஆழத்தில் மூழ்கடிக்கும் கதையம்சம். இப்படியும் நடக்கிறதா இன்னமும் நாம் வாழும் சமகால உலகில் என அதிர்ச்சியளிக்கும் நாவல். ஜெயமோகனின் ஏழாம் உலகம் ஒரு மாஸ்டர் பீஸ் என முத்திரை குத்தலாம். வாசகனை இந்த உலகில் இருந்து வேறு ஓர் உலகத்திற்கு தூக்கிச் செல்லும் கதை அமைப்பைக் கொண்ட படைப்பு. இந்த மனிதன் எப்படி தான் இதை எழுதினார் என இன்னமும் வியப்பாகவே உள்ளது. பாலாவின் நான் கடவுள் திரைப்படத்தில் இந்நாவலின் கதையாம்சம் தொட்டு பேசப்பட்டுள்ளது. ஆனால் ஜெயமோகன் இந்நாவலில் நம்மை இட்டுச் செல்லும் உலகத்தோடு ஒப்பிடும் போது நான் கடவுள் வெகு தொலைவில் தான் உள்ளது.

(பி.கு: படித்ததில் நினைவில் நின்ற நூல்களையே இங்கே பட்டியலிட்டுள்ளேன். சில நினைவில் தவறி இருக்கலாம். இவை மட்டுமே கடந்த ஆண்டின் சிறந்த நூல்கள் என குறிப்பிடவில்லை. ஆதலால் தீவிர இலக்கியவாதிகள் பொருத்தருள்வார்களாக. நீங்கள் படித்ததில் பிடித்த நூல்களையும் பட்டியலிடுங்கள் பலரின் வாசிப்பு தளத்தை விரிவுபடுத்த உறுதுணையாக இருக்கும்.)

Wednesday, February 19, 2014

அங்கோர் வாட் - 1000 லிங்க ஆற்றுப்படுகை

நீரில் இருக்கும் லிங்க சிலைகள்
(இதை புதிதாக வாசிக்க ஆரம்பிப்பவர்கள் ஓர் எட்டு இந்த பக்கங்களையும் கிளிக் செய்து வாசித்துவிடுங்கள் பாகம்1 பாகம்2 பாகம்3 பாகம்4 பாகம்5 பாகம்6


நமது முன்னோர்களிடையே ஒரு நம்பிக்கை இருந்தது. பிருமாண்டமான கோவில்களை வானுலகின் பூதங்கள் வந்து கட்டிச் சென்றதாக கூறுவார்கள். 'சும்மானு நினைச்சியா, பூதங்க ஒரே நாளுல வந்து கோவில கட்டிடுங்க, சூரிய வெளிச்சம் வரத்துக்குள்ள கட்டிட்டு போயிடனும், அதனால தான் இந்தியாவுல நிறைய கோவிலுங்க முழுசா கட்டி முடிக்காம இருக்கும்' பால்ய வயதில் என் தாத்தா சொன்ன வரிகள் இன்னமும் ஞாபகம் உள்ளது. மதத்தின் மீதான அதீத நம்பிக்கை காரணமாக அவர் இப்படி கூறி இருக்கலாம்.

இன்றைய நாவீனத்தில் இருந்து காண்கையில் அந்நாளய மக்களின் கட்டிடக் கலை ஓர் ஆதிசய சாதனை. சரி இந்த கம்போடிய கோவில் நகரத்தை எப்படி அமைத்தார்கள் எனும் குறிப்புகளை சரித்திர ஆராய்ச்சியாளர்கள் அலசி ஆராய்து பிரித்து மேய்ந்து பார்த்திருக்கிறார்கள். இன்னமும் பார்த்துக் கொண்டுள்ளார்கள்.

நாம் அங்கோர் பகுதிகளில் காணும் கோவில்கள் பெரும் கற்சுவர்களாலும், கற்சிலைகளாலும் 
​​
ஆனது. அக்கற்களை நீங்கள் காணும் போது அதில் சில துளைகளை காண முடிகிறது. அவை கட்டுமான பணிகளோடு சம்பந்தப்பட்ட துளைகள் என யூகிக்க முடிகிறது. இக்கற்கள் ஏறத்தாழ 50 கிழோ மீட்டர் தூரத்தில் இருக்கும் குளன் மலைப் பகுதியில் இருந்து கொண்டு வரபட்டவை. கட்டுமான பணிக்கு இக்கற்கள் கொண்டு வரபட்ட முறையை Sculpture of Angkor and Ancient Cambodia: Millennium of Glory (1997) எனும் நூலில் பின்வருமாறு குறிப்பிடுகிறார் John Sanday:

இயற்கையோடு மறைந்துக் கொண்டிருக்கும் சிற்பம்
இக்கற்கள் கொண்டு வரபட்ட வழிமுறை தொடர்பாக ஆராய்சியாளர்களிடையே ஏகபட்ட சர்சைகள் உண்டு. ஒன்றிலிருந்து எட்டு டன் எடைகளிலான பாறை கற்கள் அவை. சில பெரிய கற்கள் 10 டன் எடையையும் எட்டிப் பிடிக்கின்றன. குளன் மலை பகுதியில் பாறைகள் பல அளவுகளில் வெட்டப்பட்டன. பின் மூங்கில் களிகளை செருக சுமார் இரு தூவாங்கள் துளைக்கப்பட்டன. இரு புரமும் நீண்டிருக்கும் களிகள் கொடிகளால் இருக்கிக் கட்டப்பட்டு நீரால் நிறப்பப்படும். நீர் நிறம்பிய மூங்கிற் களிகள் கற்பாறைகளை இருகப் பற்றிக் கொள்ளும். இக்கற்களை இழுக்க யானைகளை பயன்படுத்தினார்கள். கற்களுக்கு அடியில் உருளைகளை கொடுத்து யானைகளின் உதவியோடு சியம் ரிப் நதியருகே கொண்டு செல்வார்கள். அக்கற்கள் மூங்கிலால் ஆன மிதவைகளில் ஏற்றப்பட்டு கட்டுமான பணியிடங்களுக்கு அருகே எடுத்துவரப்படும். அங்கிருந்து மீண்டும் யானைகளை பயன்படுத்தி கற்களை நகர்த்தி வேலைகளை செய்திருக்கிறார்கள்.

மகேந்திர பார்வதம் தேடல் - கல்லில் சிற்பம் Source: alfredmeier.me
இரண்டு கற்களை ஒன்றன் மீது ஒன்றாக வைத்து கட்டுமான வடிவத்திற்கு ஏற்ப இளைக்கப்படும். அதன் பின்னரே கட்டுமானத்திற்கும் சிற்ப வேலைபாடுகளுக்கும் அவை பயன்படுத்தப்பட்டன. எல்லாமே மாபெரும் திட்டங்கள். இக்கட்டுமான திட்டங்களுக்கு அதிகமான அடிமைகள் தேவைபட்டார்கள், அடிமைகளை திரட்ட அதிகமான போர்களும் தேவைபட்டது.
மறுநாள் காலையில் விடுதியில் காலை உணவை முடித்துக் கொண்டு குளன் மலைக்கான பயணத்தை தொடர்ந்தோம். காலை சிற்றுண்டிகளில் பிரஞ்சு வாடை ஆதிகமாகவே உள்ளது. கட்டமாக வெட்டப்பட்ட ஸ்லைஸ் ரொட்டிகளை பட்டர் தடவி சாப்பிட நினைத்திருந்தீர்களானால் உங்கள் சிற்றுண்டி கனவில் மண் விழும். பூரி கட்டையை போன்ற உருளைகளை ரொட்டியென கொடுக்கிறார்கள். கடித்துத் தின்ன வரட்டுத்தனமானகவும் முரட்டுத்தனமாகவும் உள்ளது.

சியம் ரிப் பகுதிகளில் சமவெளிகளே கண்ணுக்கு எட்டிய தூரம் தென்படும் என்பதை முந்தைய பகுதியில் குறிப்பிட்டிருந்தேன். சுமார் 45 நிமிட மகிழுந்து பயணத்தில் Kbal Spean அடிவாரத்தை அடைந்தோம். இந்த Kbal Spean எனும் இடம் Kulen மலைத் தொடரில் இருக்கும் ஒரு பகுதி. இவ்விடத்தை நெருங்கும் போது ஒரு மலைத் தொடர் நம் கண் முன் விரிகிறது.

மகேந்திர பார்வதம் தேடல் - Source: alfredmeier.me
Kbal Spean-ணின் சிறப்பம்சம் 1000 லிங்கங்கள். மலையடிவாரத்தில் இருந்து உச்சியை அடைய 1.5 கிலோ மீட்டர் தூரம். மாற்றுப் பயண வசதிகள் இல்லை. நிச்சயம் நடந்தாக வேண்டும் அல்லது மலையேறியாக வேண்டும். உங்கள் அங்கோர் பயணத்தில் இவ்விடம் செல்ல திட்டம் இருப்பின் தகுந்த காலணியை தேர்ந்தெடுப்பது மன உளைச்சளை குறைக்கும். அடிவாரத்தில் இருந்து ஒற்றையடி காட்டுப் பாதை மலையை நோக்கி பயணிக்கிறது. சில இடங்களில் செங்குத்தான மண் முகடுகள். அதில் பதிந்திருக்கும் கற்களில் கால் வைத்து சமத்தாக ஏறிக் கொள்ள வேண்டும். மண் எங்கும் மரக் கிளைகளை போல் வேர்களும் பரவி இருக்கும். இது தான் அதன் இயற்கை எழில். அழகு மிளிரும் கம்போடியா.

மகேந்திர பார்வதம் தேடல் - Source: alfredmeier.me
பசுமையை இரசித்துக் கொண்டு அமைதியாக மலை ஏறலாம். இந்த குளன் மலையில் எண்ணற்ற கலைப் புதையல்கள் உள்ளன. கட்டிடங்களும், முழு சிற்பங்களும், முழுமையடையாத சிற்பங்களும் அவற்றில் அடங்கும். குளன் மலைத்தொடர் அகழ்வாராய்ச்சிக்கு திறந்துவிடப்பட்ட பகுதி. தொல்லியல் ஆய்வு செய்ய விரும்புவோர் கம்போடிய அரசுக்கு தெரிவித்துவிட்டு ஆராய்ச்சியை தொடர முடியும்.

அது சுலபமான காரியமும் அல்ல. கண்ணி வெடிகள், காட்டாறின் மிரட்டலும், விலங்குகளின் ஆபத்தும் ஆராய்ச்சியாளர்களுக்கு சவாலாக எதிர் நிற்கின்றன. அங்கோரியன் காலத்தில் இப்பகுதியில் ஒரு நகரம் இருந்ததாகவும் அந்நகரம் மகேந்திர பார்வதம் என அழைக்கப்பட்டதாகவும் ஆய்வுகள் கூறுகின்றன. நான் அங்கிருந்து திரும்பிய சில நாட்களில் அஸ்திரேலிய தொல்லியல் நிபுணர்களால் அந்நகரம் கண்டுபிடிக்கப்பட்டுவிட்டதாக செய்தியை படித்து தெரிந்துக் கொண்டேன். தாமதமாக தெரிந்ததில் சிறு வருத்தமே. இன்னமும் குளன் மலைப் பகுதியில் ஆய்வுகள் நடத்தப்படுகின்றன.

மகேந்திர பார்வதம் தேடல் - Source: alfredmeier.me

தமிழ் நாளிகை செய்தி. Source: facebook
மகேந்திர பார்வதம் இரண்டாம் ஜெவர்மன் காலத்திய நகரம். இவ்வரசனின் காலத்தில் இருந்த மேலும் இரு நகரங்கள் ஹரிஹரலாயம் மற்றும் இந்திரபுரம் ஆகும்.

Kbal Spean உச்சியை அடையும் போது சில்லென்ற நீர் காற்று முகத்தை இதமாக தடவுகிறது. மாசற்ற நீரில் ஏறலமான லிங்கங்கள். ஆற்றுப்படுகை முழுக்க சின்ன சின்ன லிங்க சிலைகள். கறையோர பாறைகளில் இந்து உருவ வழிபாட்டு சிலைகளும் செதுக்கப்பட்டுள்ளது. அதில் பெரும்பான்மையான பெண் உருவச் சிலைகளில் முகம் சிதைக்கப்பட்டிருந்தது. பாறைகளால் ஆன பாலத்தை போன்ற இடத்தில் இருந்து நாம் காண்கையில் எதிர்புரம் வரும் சலனமற்ற நீர் பாலத்தை தாண்ட்டிய பள்ளத்தில் பேரிரைச்சலோடு விழுந்தோடுகிறது. பாலத்தின் நடுவே வட்டமான ஓட்டையை காண முடிகிறது. அங்கிருந்த லிங்க சிலை எடுக்கப்பட்டுவிட்டது. Kbal Spean எனும் கெமர் மொழி பாலம் எனும் அர்த்ததைக் கொண்டுள்ளது..

அதிகமான சிற்பங்களில் கவர்ந்த ஒன்று
இந்த ஆற்றுபடுகையில் லிங்கங்களை எப்படி செதுக்கினார்கள்? நீர் பெருக்கு குறைவாக இருந்த காலத்தில் அவற்றை அமைத்திருக்கிறார்கள். இமயத்தில் உருவாகும் கங்கை சிவனின் சிரசில் உதிப்பதாக நம்பப்படுகிறது. மலை ஊற்றுகளில் வழி உருவாகும் Kbal Spean ஆற்று நீர் இந்த ஆயிரம் லிங்கங்களை கடந்து புனிதப்படுவதாக புராதன கெமர் மக்கள் நம்பினார்கள். இதை கெமர் நாட்டின் கங்கையாக அவர்கள் மதித்தார்கள். அங்கோர் நகரங்களில் இருந்த கோவில் சடங்கு சாங்கிய முறைகளை நடத்த இங்கிருந்து எடுக்கப்படும் நீரையே பயன்படுத்தி இருக்கிறார்கள். KHMER THE LOST EMPIRE OF CAMBODIA by THIERRY ZEPHIR எனும் நூலில் இவற்றுக்கான மேலதிக தகவலை அறிந்துக்கொள்ள முடியும்.
ஆற்றில் சிலைகள்
'இங்கு ஏன் ஆயிரம் லிங்கங்கள் இருக்குனு தெரியுமா?' ச்சேன் வினவினார்.

'நிஜமாவே 1000 தான் இருக்கா? நான் அறிந்து இந்துக்கள் 108, 1008, 10008 எனும் எண்களில் நம்பிக்கை கொண்டவர்கள். வேத மந்திரகளுக்களோடு அவ்வெண்களை சம்பந்தப்படுத்துவதாக அறிகிறேன். இந்த கணக்கு எனக்கு தெரியவில்லை'.

'சிவனுக்கு 1000 மனைவிகள் அதனால் தான் இந்த 1000 லிங்கங்கள்.'

'அடடே, ஆச்சரியமான தகவலாக உள்ளது'.

1000 லிங்கங்கள் ஒரு பகுதி
ஆற்றின் ஓரமாக ஓர் ஒற்றயடி பாதை அமைக்கப்பட்டுள்ளது. அதன் வழி நடந்து போகையில் கறையில் இருக்கும் பாறைகளில் செதுக்கப்பட்ட சிற்பங்களை நாம் காணலாம். சற்று தூரத்தில் இந்த கம்போடிய கங்கை ஒரு குட்டி நீர்வீழ்ச்சியாக உருவெடுக்கிறது. இங்
கு சுற்றுப்பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுகிறார்கள். நீர் பாசிகளை கவனத்தில் கொண்டு குளிப்பது அவசியம். மனதிற்கும் உடலுக்கும் ஓர் அதிசய உற்சாகத்தை கொடுக்கிறது இந்நீர்.

இங்கே ஓரு வசிதியும் உள்ளது. பெரும்பான்மையான பயணிகள் 1.5 கிலோ மீட்டர் தூரத்திற்கு மலையேறி வர விரும்புவதில்லை. ஆக இங்கு ஆட்களின் நடமாட்டம் சற்று குறைவென்றே சொல்லமுடியும். அப்படி வருபவர்களில் பலரும் 1000 லிங்கங்களை பார்த்துவிட்டு ஓடிவிடுகிறார்கள். நீர் வீழ்ச்சி பகுதியில் குளிக்க விரும்புவோருக்கு தனி அமைதி நிலையும் கிடைக்கிறது.
கபால் ஸ்பியன் நீர் வீழ்ச்சி
மலை பயணத்தை முடித்துக் கொண்டு திரும்பும் வேளையில் மழை தனது வேலையை காட்ட ஆரம்பித்திருந்தது. பசியின் காரணமாக வயிற்றில் சிறு சலனத்தை உணர முடிந்தது. பெண்களுக்காக கட்டப்பட்ட கோட்டையை காணும் முன் அரை சான் வயிற்றுக்கான ஆகார வேட்டையில் இறங்கினோம்.

பயணங்கள் தொடரும்...

Tuesday, February 04, 2014

அங்கோர் வாட் - மரக் கோட்டை

Leper King இந்தச் சிலை ப்னோம் பேன் பொருட்காட்சியகத்துக்கு அனுப்பப்பட்டு மாற்றுச் சிலை வைக்கப்பட்டுள்ளது 

கம்போடியா இரு வேறு சரித்திர பதிவுகளை நமக்கு அளிக்கிறது. அங்கோர் காலத்தின் மாட்சியும் போல் போட் காலத்தின் வீழ்ச்சியும் அழுத்தமான ஆதாரங்களோடு நம் முன் வைக்கப்படுகின்றன. இதற்கு இடைப்பட்ட காலத்தில் நடந்த சீனா, வியட்நாம் மற்றும் பிரஞ்சு சுரண்டல்களை நாம் கடந்துவிடுகிறோம். அதற்கான சரித்திர குறிப்புகள் பல குறைபாடுகள் கொண்டுள்ளன. பிரஞ்சுசுகார்களை பொருத்தவரை கம்போடியாவின் இன்றய துரித நிலைக்கு அவர்களின் காலனிய ஆட்சி உதவியுள்ளது என்பதே.

போல் போட் ஆட்சியில் மக்களை பண்டைய வாழ்க்கைக்கு திரும்பச் சொன்னார்கள். ஆண்டுக்கு நான்கு அறுவடைகள் செய்ய மக்கள் பிழிந்தெடுக்கப்பட்டனர். அதில் அவர்களுக்கு கிடைத்தது தோல்வி என்றாலும் போல் போட்டின் நான்கு அறுவடைக்கான யோசனையின் காரணம் அங்கோர் வரலாறு தான். அங்கோர் காலத்தில் நான்கு அறுவடை சாத்தியப்பட்டுள்ளது. வற்றாத 'Tonle Sap' அணையும் சியம் ரிப் நதியும் கம்போடிய விவசாத்தை பொன் விளையும் பூமியாக்கி உள்ளது. போல் போட் காலத்தில் அதன் நடைமுறை சாத்தியமற்று போனது கேள்விகுறியான ஒன்றே.

அப்சரஸ் புடைச் சிற்பம்
யசோதரபுரத்திற்கு முன்பிருந்த அங்கோர் நகரம் ஹரிஹரலாயம் என அழைக்கப்பட்டது. ஹரிஹரலாய காலத்து அரசர்களில் ஒருவன் யசோஹவர்மன். யசோஹவர்மன் நோய் வயபட்ட அரசனாக புகழ் பெருகிறான். கிருமி கண்ட குலோத்துங்க சோழனை போல் கெமர் மக்கள்ளின் அங்கோர் வரலாற்றுக்கு யசோஹவர்மன். இதன் தொடர்பான குறிப்பு பின்வருமாறு:-

"சீதோஷன சூழ்நிலைகளால் மக்கள் பெருவியாதிக்கு உட்படுவதாக இந்நாட்டு மக்கள் நம்புகிறார்கள். வீதிகளில் அதிகமான தொலுநோயாளிகளை காண முடிகிறது. தொலுநோயாளிகள் மக்களோடு ஒன்றியே வாழ்கிறார்கள். தொலுநோயை இவர்கள் பெருவியாதியாக கருதவில்லை. முன்பு ஆட்சி செய்த அரசனுக்கும் இப்படி நேர்ந்ததாக மக்களிடம் பேச்சு உண்டு. எந்த ஒரு நோயாக இருந்தாலும் ஆற்றங்கரையில் உடலை சுத்தம் செய்து கொள்கிறார்கள். தலையை அடிக்கடி நீரில் கழுவிக் கொள்கிறார்கள். இப்படிச் செய்வதை நோய் நிவாரணியாக கருதுகிறார்கள்.

தா ப்ரோம்

தா ப்ரோம்
 உடலுறவு கொண்ட உடன் நீரில் மூழ்கி குளிப்பதாலேயே பலருக்கும் வியாதி காண்கிறது என்பது என் கருத்து. வயிற்றுக் கடுப்பு உண்டாகும் 10 நபர்களில் 8 அல்லது 9 பேர் இறந்து போகிறார்கள். மக்களின் பயனுக்கு அறிவுப்பூர்வமாக சில மருந்து வகைகளும் சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது. " Zhou Daguan LEPROSY AND OTHER ILLNESSES, Page 65&66 A Record of Cambodia The Land and Its People (1296-1297) எனும் புத்தக குறிப்பின் சாரமே மேலே நான் குறிப்பிட்டுள்ளது.

ச்சாவ் தாகுவான் தனது குறிப்பில் கூறும் அரசன் முதலாம் யசோஹவர்மனாவான். 'Leper King' அல்லது தொலுநோய் ராஜா யார் என்பதில் சில மாற்றுக் கருத்துக்கள் உள்ளன. The Legend of the Leper King - Facing Cambodian Past எனும் நூல் ஆசிரியர் D.Chandler. இவர் எட்டாம் ஜெயவர்மனை தொலுநோய் ராஜாவாக குறிப்பிடுகிறார். சிலர் அது ஏழாம் ஜெயவர்மன் என்றும் நம்புகிறார்கள். இன்றய நிலையில் முதலாம் யசோஹவர்மன் என்பது ஏற்றுக்கொள்ளபட்டுள்ளது.

யசோஹவர்மன் தனது காலத்தில் பல மேம்பாட்டு திட்டங்களை கொண்டு வந்திருக்கிறார். 100 மடாலயங்களையும் பல கோவில்களும் கட்டிய இந்த அரசன் தொலுநோயில் பாதிக்கப்பட்டு இறந்து போகிறார். ஆட்சியை மேம்படுத்த யசோதரபுர சிந்தனையை இவர் முன் வைத்துள்ளார். ஹரிஹரலாய நகரில் இருந்து யசோதரபுரம் நகரை அமைக்க வழிவகுத்தவர் யசோஹவர்மன். தனது அரசாட்சியையும் அழியாப் புகழையும் தக்க வைக்க யசோதரபுர சிந்தனை கை கொடுக்கும் என நம்பினார். சரி இந்த ராஜாவின் கதை எதற்கு?
Terrace of the Leper King
Terrace of the Leper King புடைச் சிற்பங்கள்

கடந்த பதிவில் Terrace of Elephant எனும் பகுதியை குறிப்பிட்டிருந்தேன். அதன் அருகே இருக்கும் மற்றுமொரு பகுதி Terrace of the Leper King. அங்கிருந்த சிலை அட்டைகளின் பாதிப்பில் தொலுநோயாளி சிலை போல் காணபட்டது. தொலுநோய் ராஜாவின் பெயராகவே அப்பகுதி அழைக்கப்படுகிறது. அச்சிலை தர்ம ராஜாவின் (எமன்) சிலை. முதலாம் யசோஹவர்மன் தர்ம ராஜாவாகவும் அழைக்கப்படுகிறார். யசோஹவர்மனை போல் இன்னும் சில பெயர் அறியா ராஜாக்களும் தொலுநோயால் இறந்து போயிருக்கவும் சாத்தியம் உள்ளது.

12 சிறு கோபுரங்கள் - Prasat Suor Prat
இவ்விரு பகுதிகளுக்கும் எதிர்புரம் இருப்பது 12 சிறு கோபுரங்கள். அவை ஆண்டின் ஒவ்வொரு மாதத்தையும் குறிப்பவையாகும். புராதன அங்கோர் காலத்தில் 12 மாதங்களை கொண்ட கால அளவையே பயன்படுத்தி இருக்கிறார்கள். ஒருவன் பிறந்த மாதத்திற்கு ஏற்ப அந்தந்த கோபுரங்களில் தண்டனைகள் நிறைவேற்றப்படும். இந்தக் கோபுரங்களில் கொடுக்கப்படும் தண்டனைகள் சொர்கத்தின் தீர்ப்பாக கருதப்படுகிறது.

முதல் நாள் பயணத்தின் பாதியை கடந்திருந்தோம். அங்கோர் பார்க்கில் அமைந்த ஒரு லோக்கல் உணவகத்தில் எங்கள் மதியை உணவை முடித்துக் கொண்டோம். சீன- தாய்- கம்போடிய உணவு வகைகள் கலந்தபடி இருந்தது. மலேசியாவில் சீன உணவுகளையும், ஏதோ ஒரு வகையில் மலேசியர்களின் வாழ்வின் ஒன்றிவிட்ட தாய்லாந்து உணவுகளையும் ருசிந்திருந்தபடியால் புதிய வகை என சொல்ல ஏதும் இல்லை. கெமர் மொழிக்கு அடுத்தபடியாக சீன மொழியே கம்போடியாவின் வியாபார மையங்களில் தென்பட்டது. முக்கியமாக உணவருந்தும் இடங்களில்.

கண்ணி வெடியில் பாதிக்கப்பட்டவர்கள்
மாலையில் மழை பிடித்துக் கொண்டது. கொஞ்சம் குறைந்தது போல் இருக்கக் கண்டதும் பயணத்தை தொடர்ந்தோம். சில கிலோ மீட்டர் பயணத்தில் 'Ta Phrom' எனும் கோவிலை அடைந்தோம். இந்தக் கட்டிட பகுதிக்குள் நுழைய சில மீட்டர் நடக்க வேண்டும். நடக்கும் வழியில் சிலர் இசைக் கருவிகளை மீட்டிக் கொண்டிருந்தார்கள். கூர்ந்து கவனிக்கையில் கண்ணி வெடியில் பாதிக்கபட்டவர்கள் என அறிந்துக் கொள்ள முடிந்தது. கெமர் மக்களின் பாரம்பரிய இசையை வாசிக்கிறார்கள். இசை தட்டுகளை விற்பனை செய்து தமது வருமானத்தை தேடிக் கொள்கிறார்கள்.

நடக்கும் வழியெங்கும் வானுயர்ந்த மரங்கள். மழைத் தூரல்களை சிந்திக் கொண்டிருந்தன. இந்த மரங்கள் ஒரு ’ஐகோன்’ என்றே சொல்ல வேண்டும். ஒவ்வொரு மரங்களும் இரண்டு அல்லது மூன்று தென்னைகளின் உயரம் உள்ளன. இம்மரங்கள் 500 ஆண்டுகளை கடந்ததாக மதிப்பிடப்படுகிறது.

'தா ப்ரோம்' என்றழைக்கப்படும் இக்கோட்டை/ கோவில் பகுதி ஏழாம் ஜெயவர்மனால் கட்டப்பட்டது. இயற்கை எழில் கட்டியணைத்த இரம்ய சூழலை இங்கு நாம் இரசிக்க முடிகிறது. ஏதோ ஒரு பிரமிப்பு மனதில் புகுந்து நம்மை வாய் பிளக்கச் செய்கிறது. கட்டிடங்களை இருக்கிப் பிடித்த மரங்கள் அழகை கொடுத்தாலும் ஒருபுரம் சிதிலங்களை ஏற்படுத்தவும் தவறவில்லை. ஹாலிவூட் படத்தால் புகழ்பெற்ற பகுதியென வழிகாட்டிகள் மேற்கோள் காட்டுகிறார்கள். 'தோம் ரைடர்' எனும் திரைப்படம் இப்பகுதிகளில் தான் காட்சிபடுத்தப்பட்டுள்ளது.

இக்கோவில் இராஜவிஹாரம் என அழைக்கப்படுகிறது. தவச் சாலைகளும் நூலகங்களும் இங்கு அமைக்கப்பட்டுள்ளன. இவ்விடம் ஜெயவர்மன் தனது தாய்க்கு அமைத்துக் கொடுத்ததாக கூறப்படுகிறது. தவச் சாலையாக இருந்த ஓரிடம் இருட்டான சூழலில் சுவர் முழுக்க முஷ்டி அளவிளான ஓட்டைகளால் அமைக்கப்பட்டிருந்தது. அத்துவாரங்கள் விலை உயர்ந்த கற்களாலும் உலோகங்களாலும் பதிக்கப்பட்டிருந்ததாக சொல்லப்படுகிறது. கைகளை இறுக்கி இதயத்தில் தட்ட அறையெங்கும் இதய ஒலி கேட்கிறது.

விதவிதமான அப்சரஸ் புடைச் சிற்பங்களையும் சுவரோவியங்களையும் புகைப்பட கருவிக்குள் அடக்கிக் கொண்டு போகும் போது மரப் பலகைகளான நடைபாதை நம்மை ஒரு பிருமாண்டமான காட்சிகளுக்கு இட்டுச் செல்கிறது. இக்கட்டிடங்களை சிதிலமாக்கிக் கொண்டிருக்கும் இந்த இலவம் மரங்கள் தான் இதை தாங்கி பிடித்து பாதுகாக்கிறதா என யோசிக்க வைக்கிறது.

மரங்களின் ஆட்சி
சட்டென நினைவுக்கு வர ச்சேனிடம் கேட்டேன். 'இக்கோவிலில் டைனசோர் வகையை சேர்ந்த மிருக சிற்பம் உண்டு அல்லவா. அது எந்த பகுதி?'. நாங்கள் அவ்விடத்தின் அருகாமையில் இருந்தோம் ச்சேன் அந்த பகுதியை காண்பித்தார். அங்கோர் கால கட்டத்தில் இச்சிற்பத்தை பதிவு செய்திருப்பது ஆச்சரியமே. இதை Stegosaur என குறிப்பிடுவார்கள். The Mysteries of Angkor Wat எனும் புத்தகத்தில் இச்சிற்பம் தொடர்பாக குறிப்புகள் வரும். Richard Sobol எனும் புகைப்பட கலைஞரால் எழுதப்பட்ட புத்தகம். பல அருமையான புகைப்படங்களோடு பயண குறிப்பை எழுதி இருப்பார். குழந்தைகளுக்கு ஏற்ற நூல் இது.
Stegosaur/ காட்டு பன்றி/ காண்டா மிருகம்???

புடைச் சிற்பங்கள்

இந்தக் கோவிலின் மறு புணரமைப்புக்கு இந்திய தேசம் நேசக் கரம் நீட்டியுள்ளது. பிளைட் பிடித்து வந்த பாவத்துக்கு கட்டிடத்தை காப்பாற்றும் பேர்வழி என சிமெண்டை கறைத்து கொட்டி இருக்கிறார்கள். எதிர்ப்பு கிளம்பவும் அவ்வேலையை நிறுத்திக் கொண்டுள்ளனர்.

முதல் நாள் பயணம் இந்த கோவிலோடு முடிந்தது. வெயிலில் காய்ந்தும் மழையில் நனைந்தும் கலைத்துப் போய் இருந்தோம். விடுதியில் 7 டாலருக்கு மசாஜ் வசதிகள் இருந்தது. மனதிற்கு பயணமும் உடலுக்கு மசாஜும் இதத்தைக் கொடுத்தது. சியம் ரிப் நகர் எங்கும் அதிகமான மசாஜ் மையங்கள் உள்ளன. 5 டாலர் முதல் அதன் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பகல் முழுக்க கோவிலை சுற்றியவர்கள் மாலையில் காலை நீட்டி மசாஜ் செய்து இளைப்பாறிக் கொள்கிறார்கள்.

தா ப்ரோம்
கம்போடியாவில் பியர் விலை மிக மலிவாக உள்ளது. மலேசியாவில் விற்பனை செய்யப்படும் அதே பியர் வகைகள் தான். சுவையும் அதே போல் என அறிகிறேன். அங்கோர் பியர், கம்போடியா பியர் என உள்ளூர் வகைகளும் உண்டு. விற்பனைக்கு இருந்ததை கையில் எடுத்து பார்த்து தெரிந்துக் கொண்டேன்.

பயணங்கள் தொடரும்...