மனிதன் தன்னை நேர்த்தி செய்துகொள்ள மறதி ஓர் அருமருந்தாகிறது. நடந்து முடிந்த சில சம்பவங்களை தவிர்த்திருக்க நினைக்கிறோம். மூளையின் நினைவு படிமத்தில் சிலவற்றை ஒழித்தும் மறைத்தும் கலமெனும் பெருவெள்ளத்தில் கரைந்து போகின்றோம்.
சுமார் ஒரு மணி நேரத்திற்கு இத்திரைக் கதையின் நகர்வை கொஞ்சமும் அனுமானிக்க முடியவில்லை. அதுவே இத்திரைப்படத்தைப் பார்க்க என்னை அமர்ந்த இடத்தில் கட்டிப் போட்டது. மிக நேர்த்தியாக செதுக்கப்பட்டுள்ளது என ஐயமின்றி கூறலாம். சியோலில் இருந்து பெய்ஜிங் திரும்பிக் கொண்டிருந்த போது பாதி படமே பார்த்திருந்தேன். மீதத்தை பார்க்காத தவிப்பு அழைக்கழித்தது. நெட்பிலிக்ஷில் ஆங்கில் வசன வரிகளோடு தேடிப் பிடித்து பார்த்து முடித்தேன்.
அப்பா, அம்மா, அண்ணன், தம்பி என நால்வர் கொண்ட ஒரு குடும்பம். புதிய வாடகை வீட்டில் குடியேருகிறார்கள். வீட்டில் ஓர் அறையை மட்டும் யாரும் பயன்படுத்தக் கூடாது, திறக்கவும் கூடாது என்பது வீட்டுக்காரரின் நிபந்தனை. அந்த அறையில் இருந்து அடிக்கடி சத்தம் கேட்கிறது. அந்த சத்தம் தம்பிக்கு மட்டும் கேட்கிறது. மற்ற குடும்ப உறவுகள் அதனை உணரவில்லை. யாரும் போகக் கூடாத அந்த அறை அண்ணன் தம்பி தங்கி இருக்கும் அறைக்கு நேர் எதிராக உள்ளது. அந்த மர்ம சூழல் பயமும், பதட்டமும் நிறைந்ததாக நம்மை பீடிக்கிறது.
இத்திரைப்படத்தின் கதையை நான் சொல்லப் போவதில்லை. இதில் நான் இரசித்த மதி நுட்பமான காட்சி அமைப்புகளை மட்டும் இங்கே குறிப்பிடுகிறேன்.
முதலாவதாக இருட்டுச் சூழல் படம் நெடுக தொடர்கிறது. அது அழுத்தம் மிகுந்த காட்சியமைப்புகளுக்கு வழி செய்துள்ளது. சில காட்சிகளில் மட்டுமே பகல் வெளிச்சத்தை நாம் காண முடிகிறது. படம் நெடுக இருக்கும் இருள் மற்றும் மஞ்சள் விளக்கொளி நம்மை காட்சிகளுக்குள் உள் வாங்கிக் கொள்கின்றன.
1997-ல் கிழக்காசிய நாடுகள் பலவும் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாயின. அதில் தென் கொரியாவும் அடங்கும். இத்திரைக்கதைக்கும் இந்த பொருளாதார நிகழ்விற்கும் முக்கிய சம்பந்தம் உண்டு. எனினும் அந்நிலையை தொலைக்காட்சி செய்தியாக ஒற்றை வரியில் கடந்து விடுகிறார்கள்.
இதில் தம்பி கதாபாத்திரத்திற்கு அவன் சந்திக்கும் சம்பவங்கள் மிகவும் முரணாகக் கூறப்படுகிறது. அவன் காணும் காட்சிகள் அனைத்தும் பொய்யென கூறப்படுகிறது. தான் ஏதோ ஒரு மாயவலையில் பின்னி இருப்பதாக கருதும் தம்பி வீட்டைவிட்டு தப்பி ஓடுகிறான். கடுமையான போராட்டங்களின் பின் போலிஸ் வாகனத்தில் மோதி தப்பித்து காவல் நிலையம் போகிறான். காவல் நிலையத்தில் நடக்கும் காட்சிகள் அபாரம்.
நிஜம் எது கற்பனை எது என்பதனை உணர்வதற்குள் 'நீ மருந்து சாப்பிட மறந்துவிட்டாய். அதனால் தான் இந்நிலை' என நாமும் பல காட்சிகளில் சமாதானம் செய்யப்படுகிறோம்.
சூழ்நிலை குற்றவாளிகளை உருவாக்குவதில் இச்சமூகத்திற்கும், அரசியல், பொருளாதார நிலைபாடுகளுக்கும் முக்கிய பங்குண்டு. மேலும் சம்பவங்களை விவரித்து இக்கதையின் சுவாரசியத்தை கெடுக்க விரும்பவில்லை. மர்மம் மற்றும் த்ரில்லர் வகை கதைகளை விரும்புவோருக்கு இத்திரைப்படம் நிச்சயம் பிடிக்கும்.
No comments:
Post a Comment