Tuesday, June 17, 2008

பொன்னியின் செல்வன்- யாருடைய காதல் உயர்ந்தது ?


தலைப்பு: பொன்னியின் செல்வன்
ஆசிரியர்: கல்கி
நயம்: சரித்திர நாவல்
பதிப்பகம்: வானதி
வந்தியத்தேவன் குந்தவை மேல் கொண்ட காதல்

விபத்து என்பார்களே… அது இதுதானோ? … அதுவும் விபத்தின் முடிவு இன்பமானதாக இருந்துவிட்டால்? … அதுதான் நம் நாயகனுக்கு நேர்ந்தது… குடந்தை ஜோதிடர் வீட்டில் அவன் கண்டது என்ன? சோதிடரையா? வானதியையா? இல்லவே இல்லை … குந்தவையின் பொன்முகம் ஒன்றைத்தான் … ஆயிரம் காவியங்கள் புகழ்ந்து பாட ஒண்ணாத அவள் அழகிய திருமுக மண்டலத்தைத்தான் … அதுவரை அவனுக்குள் இருந்த இதயம் வெளியேறி, அவன் எதிரில், வியப்பும், மகிழ்ச்சியும் ஒரு சேரப்பொலிந்த குந்தவையின்பால் சென்று கலந்தது…

அவள் இளவரசியோ அல்லது சாதாரணபெண்ணோ, அந்த நொடியில் அவனுக்கு அது எதுவுமே தோன்றவில்லை … அங்கே , அந்த வேளையில் அவன் இளவரசியை சந்திப்பதை எதிர்பார்த்திருக்கவும் வாய்ப்பில்லை …. எத்தனையோ போர்க்களங்களில், அவன் எதிரிகளின் கூரிய உலோக வாட்கள் சாதிக்க முடியாததை, இப்பெண்ணின் கண்களாகிய வாள்கள் சாதித்து விட்டனவே !!! அவனை அடியோடு சாய்த்து விட்டனவே !!! இதுதான் இயற்கையின் இணையில்லா வலிமையோ… இதுதான் இன்ப விபத்து என்றால், எத்தனை முறை வேண்டுமானாலும் இந்த விபத்தில் சிக்கிக்கொள்ளலாமே … என்று எண்ணுகிறான் நம் நாயகன்.

ஆனால், அவள் இளவரசி என்று தெரிந்ததும், குந்தவைக்கு வந்த அதே தயக்கம், இன்னும் அதிகமாகவே அவனுக்குள் எழுந்து பாடாய்ப்படுத்துகிறது … தன் நிலை என்ன? அவள் நிலை என்ன? அரசர்கள் எல்லாம் அடிபணிந்து சேவகம் செய்யக்கூடிய “அரசிளங்குமரி” எங்கே? அனாதையாய் பழங்குடியின் பெருமையை மட்டும் தாங்கியிருக்கும் தான் எங்கே? தனக்கென்று ஒரு நாடில்லை… ஏன்? சொந்தமாய் வீடு கூட இல்லை… இது பொருந்துமா? நடக்குமா? உலகம் தான் ஏற்குமா? என்று அவனும் பலவாறு சிந்திக்கிறான் … ஒரு பெண்ணின் கண்களுக்கு உள்ள சக்தியை எண்ணி எண்ணி வியக்கிறான்…. மனப்போராட்டங்களில் தன் அமைதியை இழக்கிறான் … ஆனாலும் அதில் ஒரு சுகம் இருப்பதை உணர்ந்து அதில் திளைக்கிறான் …

காதல் என்ற ஒன்றை இதுவரையில் அவன் கேள்விப்பட்டுதானிருந்தான்… ஆனால் அதை இப்போதுதான் அனுபவிக்க ஆரம்பித்திருக்கிறான் … ஒவ்வொரு முறையும் அவள் பொன்முகத்தில் தோன்றும் பலவகை பாவங்களில், அவள் தன்னை சிறிதளவேனும் விரும்புகிறாளா? இல்லையா? என்ற கேள்விக்கான விடையை தேட முயல்கிறான் .. ஆனால் அவள் கண்களை பார்த்தபின், தான் எங்கு இருக்கிறோம், என்ன செய்கிறோம், என்ன எதிர்பார்த்து அவள் முன்பு இந்த நிமிடம் நிற்கிறோம் என்பதெல்லாம் அவனுக்கு எங்கே ஞாபகம் இருக்கின்றன? அவன்தான் தன்னையே அவளிடம் தொலைத்து விட்டானே…

அவள் தன்னை விரும்புகிறாள் என்பதை அவன் அறிவான் .. அவளும் தான் அவளை நேசிப்பதை அறிவாள்… எனவே, பெரிதாக பேசிக்கொள்ள ஒன்றும் இல்லை … ராஜாங்க விஷயங்கள், பாண்டிய நாட்டாரின் சதிச்செயல்கள், பழுவூர் இளையராணியின் பழிவாங்கும் படலம் இவற்றுக்கு நடுவே, காதல் கவிதைகள் புனைந்து மகிழ இருவருக்குமே நேரம் இல்லைதான்…. அதற்கான சமய சந்தர்ப்பங்களும் அமையவில்லைதான் ….

காவலர்களிடம் இருந்து தப்பி வந்து அவசர அவசரமாக ஓலை கொடுக்க வேண்டும், திரும்ப உடனே புறப்பட்டு இலங்கை செல்லவேண்டும், பின் திருடன் போல் பதுங்கிப்பதுங்கி மாறுவேடம் பூண்டு அவளை மீண்டும் வந்து சந்திக்க வேண்டும் .. அடடா .. எத்தனை இம்சைகள் .. இதற்கு நடுவே காதல் கீதம் பாட எப்படி மனமிருக்கும்?

இத்தகைய நெருக்கடிகளிலும் அவர்கள் ஒருவர் மேல் ஒருவர் கொண்ட நம்பிக்கையும், அன்பும் வலுவடைந்ததே தவிர நலிவடையவில்லை … சேர்ந்து இருக்கும் சமயங்களில், அவர்கள் தங்கள் காதலைப்பற்றி பேசியதைவிட, சோழ நாட்டைப்பற்றி கவலைப்பபட்டதுதான் அதிகம்…. ஆனாலும் அவர்கள் இருவரும் தங்கள் காதலின் மேன்மையை அறிவார்கள்… அதை வர்ணனைகள், வார்த்தைகள் எனும் மொழியின் சிறைகளுக்குள் அடைத்து வைத்து ரசிக்க இருவருமே விரும்பவில்லை !!! …

நாம் கூடத்தான் … சரி தானே?
கருத்துக்களை பகிர்ந்துக் கொண்ட நண்பர் ராகவன் சாம்பத் குமார் அவர்களுக்கு நன்றி. உங்கள் கருத்தையும் பின்னூட்டத்தில் சொல்லிட்டு போங்க…
தொடரும்…..

Monday, June 16, 2008

சாலையோர சித்தன்

வாழ்க்கையின் எதார்த்தங்கள் இனிமையானது. எதிர்பார்ப்புகளும் அதனால் எற்படும் ஏற்றமும் ஏமாற்றமும் வாழ்வை வளப்படுத்துகிறது. நாம் சந்திக்கும் அனைவரையும் நினைவில் வைத்துக் கொள்வதில்லை. சிலரை எப்பொழுதோ பார்த்திருப்போம், ஆனால் அவர்களின் நினைவுகள் எப்பொழுதும் இருக்கும். இதற்கு காரணம் நாம் அவரை சந்திக்கும் சூழலாக கூட இருக்கலாம்.

நான் ரவிகுமார். இப்பொழுது பினாங்கில் இருக்கிறேன். இன்னும் சற்று நேரத்தில் ஈப்போவிற்கு பயணம் செய்யப் போகிறேன். வியாபார நிமித்தமாக இங்கு வந்துள்ளேன். வெள்ளிக்கிழமை பொது விடுமுறை நாளாகிவிட்டது. கண்டிப்பாக வெளி மாநிலத்தில் வேலை செய்பவர்கள் பலரும் வீடு திரும்பி இருப்பார்கள். இரண்டு நாட்கள் கடந்துவிட்டது. நாளை திங்கள். வேலை நாள். விடுமுறையை கழித்து பலரும் புறப்பட ஆயுத்தமாயிருப்பார்கள்.

வடக்கு தெற்கு நெடுஞ்சாலையின் முதுகை லட்சக் கணக்கான வாகனங்கள் இஸ்திரி செய்துக் கொண்டிருக்கும். நெடுஞ்சாலை நுழைவாயிலும், வெளியேரும் இடத்திலும் நெரிசல் நிச்சயம். சுங்கச் சாவடியில் அதிக நேரம் நிற்க வேண்டிவரலாம். வாகனத்தை நத்தையைப் போல் நகர்த்திக் கொண்டு போவது எரிச்சலான ஒன்று. இப்படிபட்ட சூழ்நிலைகளில் வாகனத்தை நிறுத்திவிட்டு நடந்துவிடலாமா என்று கூட நான் நினைத்தது உண்டு.

சுருங்கச் சொன்னால் விடுமுறை நாட்களில் நெடுஞ்சாலையை பயன்படுத்துவது எனக்கு பிடிக்காது. பழைய சாலையில் பயணத்தை மேற்கொள்ள முடிவு செய்தேன். எனக்கு தோதாக வாகனமும் அதிகம் இல்லை.

மதியம் மூன்று மணி இருக்கும். சூரியன் தகித்துக் கொண்டிருந்தான். தூக்கம் கொஞ்சமாய் எட்டிப் பார்த்தது. எனது காரை ஒரு மரத்தடியில் சற்று நிறுத்தினேன். அரை மணி நேரம் காரினுள் உறங்கிப் போனேன்.

லேசான பசி வயிற்றை கிள்ளியது. பினாங்கில் பெயர் போனது ‘நாசி கண்டார்’ அல்லவா, சரி ஒரு கை பார்த்துவிடலாமென ஒரு கடையினுள் நுழைந்தேன். சாப்பாடு சொல்லிவிட்டு ஒரு இடமாய் பார்த்து அமர்ந்துக் கொண்டேன்.

அறிமுகம் இல்லாத சிறுவன் ஒருவன் என்னை நோக்கி வருவதைக் கண்டேன். கசங்கியச் சட்டை, சற்றே கலைந்த முடி, முட்டி அளவிளான அரை காற்சட்டை, ஒட்டி உலர்ந்து போன உடல், இவையாவும் அவன் வறுமையை எடுத்துரைத்தது.

“அண்ணே பலகாரம் வாங்கிக்கிறீங்களா?” இப்பொழுது அவன் என் எதிரில் என்னை நோக்கி புன்சிரிப்புடன் கேட்கிறான்.

அவன் கையில் இருந்த பிலாஸ்டிக் கூடையை என் முன் காட்டினான். பலகார வகைகள் சிறு சிறு பைகளில் கட்டி வைக்கப்பட்டிருந்தன.

“வேண்டாமப்பா” இது எனது பதில்.

அவன் இடத்தைவிட்டு நகர்ந்தான். எனது சாப்பாடு வந்ததும் அதை ருசிக்கத் தொடங்கினேன். கை கழுவி விட்டு வந்த பொழுது மறுபடியும் அச்சிறுவன் என் கண்ணில்பட்டான். ஆணும் பெண்ணுமாக இருவர் அமர்ந்து இருந்தார்கள். கணவன் மனைவி என நினைக்கிறேன். பலகாரக் கூடையை அவர்களிடம் நீட்டினான். வேண்டாம் என்பதற்கு அறிகுறியாக தலையை அசைக்கவும், சிறுவன் அவ்விடத்தைவிட்டு சென்றான்.

சாப்பாட்டிற்கு பணத்தை செலுத்திவிட்டு திரும்பினேன். மீண்டும் என் கண்ணெதிரில் அவன்.

“சாப்டாச்சா அண்ணே, பலகாரம் வாங்கிக்கிறீங்களா”, மறுபடியும் என்னை நோக்கிக் கேட்டான்.

“வேண்டாம்பா, வயிறு நிறைய சாப்பிட்டாச்சி”, எனக் கூறியவாறு எனது காரை நோக்கி நடந்தேன்.

அவன் அக்கடை ஐந்தடியின் ஓரத்திற்கு சென்றான். கையிலிருந்த பலகார கூடையை கீழே வைத்துவிட்டு, அந்த பக்கம் வந்து போவோரிடம் பலகாரம் வேண்டுமா என அதே பல்லவியை படித்துக் கொண்டிருந்தான்.

அவன் பேச்சில்தான் எத்தனை மரியாதை. கனிவான பார்வை. எவ்வளவு நேரமாகியும், கொஞ்சமும் சலிப்பு தட்டாமல் அதே தொனியில் அடுத்தவரிடம் கேட்கிறான். “அக்கா பலகாரம் வேணுமா”, “அங்கில் பலகாரம் வேணுமா”. மிஞ்சி போனால் அச்சிறுவனுக்கு 10 வயது தான் இருக்கும். என்ன ஒரு துடிப்பு. தளர்ச்சியில்லா விடா முயற்சியோடு காரியத்தில் கருத்தாய் இருக்கிறான்.

நான் காரில் அமர்ந்து பயணத்திற்கு தயாரனேன். இப்பொழுது அவன் என் கார் கதவருகே நிற்கிறான். முகத்தில் அதே இளஞ்சிரிப்போடு. ஜன்னலை கீழிறக்கினேன்.

“வீட்டில இருகறவங்களுக்கு பலகாரம் வாங்கிட்டு போறிங்களா அண்ணே, தம்பி தங்கச்சிக்கு கொடுக்கலாம், பாருங்க எல்லாம் சைவம்தான்”, கூடையை மறுபடியும் நீட்டினான்.

அவன் முகத்தை பார்த்தேன். முன்பிருந்த அதே புன்னகையை பரிசளித்துக் கொண்டிருந்தான்.

“தம்பி, பலகாரம் எதுவும் வேண்டாம், இந்தா, இந்த காச வச்சிக்க” என்று சிகப்பு நோட்டு ஒன்றை அவன் சட்டை பையில் சொருகினேன். நன்றி கூறி நான் கொடுத்த பத்து ரிங்கிட்டோடு மீண்டும் ஐந்தடிக்கு ஓடினான்.

எனது காரை செலுத்தத் தயாரானேன். அச்சிறுவனை கண்டேன். அவனது செயலை கண்டு அதிர்ந்து போனேன். நான் கொடுத்த பணத்தை வேறோருவனிடம் நீட்டிக் கொண்டிருந்தான்.

“தம்பி, இங்க வா”, என அவனை அழைத்தேன்.

“பலகாரம் வேணுமாண்ணே”, ஒன்றூம் தெரியாதவன் போல் கேட்டுக் கொண்டு என்னருகே வந்தான்.

“நான் கொடுத்த காச எதுக்கு அந்த ஆளுகிட்ட கொடுத்த?”.

“பாவம் அண்ணே அவரு, கண் தெரியாதவரு, இந்த பக்கம் தான் சுத்திகிட்டு இருப்பாரு, சாப்டாரா இல்லையானு கூட தெரியல”,

நான் பணம் வாங்கிய அந்த மனிதனை நோக்கினேன். தூரத்தில் இருந்த அவனது நடை பாவனை அவன் குருடன் என்பதை நிச்சயப்படுத்தியது.

சிறுவன் மீண்டும் தொடர்ந்தான், “சில சமயம் விற்று போக மீதம் இருக்கும் பலகாரத்தை கொடுப்பேன், இன்னிக்கு காலையில் இருந்தே எந்த வியாபாரமும் இல்லை. நீங்க கொடுத்த காச மட்டும் கொண்டு போனால் அம்மா திட்டுவாங்க. முன்னே ஒருத்தர் இப்படிதான் காசு கொடுத்துட்டு போனாரு. வீட்டுக்கு கொண்டு போனப்ப அம்மா கேட்டாங்க. என்னடா பலகாரம் விக்காம இருக்கு காச மட்டும் கொண்டுவந்திருக்கியேனு. உள்ளத சொன்னேன். உழைக்காமல் வரும் பணம் நிலைக்காது. நாம திடகாத்திரமா இருக்கோம். உழைச்சி வாழ முடியும். அடுத்தவர் கொடுப்பதை வாங்குவதுக்குப் பேர் பிச்சை. உழைக்க முடியாதவங்கதான் பிச்சை எடுப்பாங்க அப்படினு சொன்னாங்க. நான் இன்னும் தெம்பாக இருக்கேன் அண்ணே” எனக் கூறினான்.

அவன் மன உறுதியைப் பார்த்து நெகிழ்ந்துப் போனேன்.

“எல்லாம் எவ்வளவு தம்பி?”

“எல்லா பலகாரத்தையும் நீங்களே வங்கிக்க போறீங்களா அண்ணே”,

நான் சரி என்பதற்கு அடையாளமாக தலை அசைத்தேன். பலகாரங்கள் அனைத்தையும் ஒரு பையில் போட்டான்.

“நுப்பத்தி அஞ்சி வெள்ளிதான்னே”,

பலகாரம் நிறப்பப்பட்ட பையை என் பக்கத்து இருக்கையில் வைத்துவிட்டு பணத்தை கொடுத்தேன். நன்றி கூறிய அவன் மீண்டும் ஒரு சிரிப்பை பரிசளித்துவிட்டு சட்டென அங்கிருந்து கிளம்பினான். அவன் என் பார்வையிலிருந்து மறையும் வரை அவனைப் பரர்த்துக் கொண்டிருந்தேன்.

செய்யும் தொழிலே தெய்வம் என்று பெரியவர்கள் சொல்வார்கள். அதை இச்சிறு நிகழ்வு எனக்கு உணர்த்தியது. அச்சிறுவனை மறுபடியும் என் வாழ்வில் சந்திப்பேனா என்பது சந்தேகம்தான். அவனது பெயரும் எனக்கு தெரியாது. இந்த நிகழ்வும் என்னிலிருந்து மறையாது. அவன் என்றென்றும் எனக்கு போதனை செய்த சாலையோர சித்தன் தான்.

Sunday, June 15, 2008

கள்ளம் கொண்ட உள்ளம்


விடிந்தால் இரு நாடுகளுக்கும் பெரும் யுத்தம். மன்னரும் மந்திரியும் பக்கத்து நாட்டு அரசனின் உதவி பெறுவது பற்றி பேசும்போது;


மன்னர், “என்ன லஞ்சம் கொடுத்தால் பக்கத்து நாட்டு அரசன் நமக்கு மயங்குவான்”


“மன்னரே! தப்பித் தவறி அந்த தவறை மட்டும் செய்து விடாதீர்கள். அவன் ஒரு ஒழுக்கவாதி. லஞ்சம் கொடுத்தால் நமக்கு எதிரானவனாகி விடுவான்” என மந்திரி சொன்னார்.


ஒரு வாரம் கழித்து அரசவையில், போரில் வெற்றி பெற்றதை கொண்டாடிக் கொண்டிருக்கும்போது, மந்திரி மது மயக்கத்தில் மன்னரிடம் கேட்டார்.


“மன்னா! அப்படி என்ன சொக்கு பொடி போட்டீர்கள். பக்கத்து நாட்டு மன்னன் நம் காலைச் சுற்றும் பூனையாகி விட்டானே”.


“எதிரி நாட்டு அரசன் கொடுக்கச் சொன்னதாகச் சொல்லச் சொல்லி, நம் ஒற்றனிடமே லஞ்சம் கொடுத்தனுப்பினேன், அவன் நமக்கு நண்பனாகி விட்டான்”, எனக் கண்ணடித்து, மது மயக்கத்தில் உளறியதை, பக்கத்து நாட்டு அரசன் கேட்டு விட்டான்.


அப்புறம் என்ன! அடுத்த ஒரு வாரத்திற்குள் நிலைமை தலைகீழாகி விட்டது.

Friday, June 13, 2008

உடல் அசைவு மொழி (body language) என்றால் என்ன?



ஒருவருடன் பேசும் போது நமது உடல் அசைவு மூலம் நமது எண்ணங்களையும், செயல்களையும் தெரிவிக்க முடியும்.

நண்பர் ஒருவருடன் பேசிக் கொண்டிருக்கிறோம். அவரது பேச்சு சுவாரஸ்யமாக இருந்தால் தான் அவரது பேச்சை தொடர்ந்து கவனிப்போம். நண்பனின் பேச்சு போரடிக்க ஆரம்பித்தால் நமது கவனம் வேறு பக்கம் திரும்பும். உடலை நெளித்து, கை கால்களை ஆட்டி சோம்பல் முறித்து கொட்டாவி விட தொடங்கிவிடுவோம்.

நண்பரின் பேச்சு போரடிக்கிறது என வார்த்தையாக சொல்லாமல் உடல் அசைவு மூலம் சொல்லும் இத்தகைய செயல்திறன், ‘சொல்சார தகவல் பரப்பு’ என்பதாகும். உடல் அசைவு ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு பொருள் இருப்பதாக கணித்துள்ளனர். உடல் அசைவு மொழிகளின் முக்கியதுவத்தை விளக்கும் ஒரு சீன நாடோடி கதை உண்டு.

பண்டைய சீனவில் நீதிபதி ஒருவர் பணிமாற்றமாகி சீன தலைநகருக்கு வந்தார். அவர் திறன்மிக்க தையல்காரன் ஒருவனை அழைத்து தனக்கு, நீதிபதிகள் அணியும் நீண்ட அங்கி தைக்குமாறு கூறினார்.

அங்கி தைப்பதற்கு ஒப்பு கொண்ட தையல்காரர் நீதிபதியிடம், “ஐயா, நிங்கள் புதிதாக பதவி நியமனம் பெற்று தலைநகருக்கு வந்துள்ளீர்களா? அல்லது பதவி உயர்வு பெற்று தலைநகருக்கு வந்துள்ளீர்களா? இல்லை பதவி உயர்வை எதிர்பார்த்து தலை நகருக்கு வந்துள்ளீர்களா? என்று பணிவுடன் கேட்டார். தையல்காரனின் கேள்வி நீதிபதியை வியப்படைய செய்தது. அனைத்து நீதிபதிகளும் ஒரே விதமான அங்கியைதானே அணிவார்கள். நீ எதற்காக தேவையற்ற கேள்விகளை கேட்கிறாய்? என தையல்காரனை கடிந்து கொண்டார்.

“ஐயா எனது கூற்றை தயவு செய்து கோளுங்கள்” என்று பதிலளித்த தையல்காரர், தனது விளக்கத்தை பின்வருமாறு கூறினார். கனம் நீதிபதி அவர்களே! நீங்கள் புதிதாக நியமனம் பெற்றவரெனில் உங்களது உயர் அதிகாரிகளின் முன்பு அடிக்கடி விரைப்புடன் நிற்க வேண்டும். எனவே உங்களது அங்கி முன்பகுதியிலும், பின் பகுதியிலும் சமநீளம் கொண்டதாக அமைதல் வேண்டும்

நீங்கள் பதவி உயர்வு பெற்று தலைநகருக்கு வந்துள்ளீர்கள் எனில் நெஞ்சை நிமிர்த்தி கர்வமுடன் தேற்றமளிக்க வாய்ப்புள்ளது. எனவே உங்கள் அங்கியின் முன் பகுதி நீளம் மிக்கதாக அமைதல் வேண்டும்.


மாறாக பதவி உயர்வு எதிர்பார்த்து தலைநகருக்கு வந்துள்ளீர்கள் எனில் உங்கள் உயர் அதிகாரிகள் முன்பு தோள்கள் குவிந்த வண்ணம் பணிவுடன் நிற்க வேண்டும். அவ்வகை தருணங்களில் உங்களது அங்கி பின்பகுதியில் நீளம் மிக்கதாக அமைதல் வேண்டும், ஐயா இப்பொழுது கூறுங்கள் உங்கள் அங்கி எப்படி இருக்க வேண்டும்?

தையல்காரனின் விளக்கம் நீதிபதிக்கு பெரும் திருப்தியை அளித்தது. தனது ஆயுட்காலத்தில் பல தருணங்களில் நீதிபதிதையல்காரனின் விளக்கத்தை பற்றி எண்ணி எண்ணி வியந்தார்.


உடல் அசைவு மொழிகள் சமீப காலமாக நிர்வாக கல்வி இயலில் முக்கியதுவம் பெற்றுவருகிறது. இருப்பினும் பண்டைய காலத்திலேயே மக்கள் உடல் அசைவு மொழி பற்றி தெரிந்து வைத்துள்ளனர் என்பதை இந்த கதை மூலம் அறியலாம்.

Thursday, June 12, 2008

மறந்து போன கவிதைகள்


உன்னை பார்த்து
கொண்டிருப்பதால் தானோ
இதயம் தினமும்
துடித்துக் கொண்டிருக்கிறது
என் இதயத்திற்கு
உயிர் மட்டும் இல்லை
விழிகளும் இருக்கிறது
உன் இதயத்தை
பார்த்துக் கொண்டே இருக்க

கவிதைகள் எழுதிடத்தான்
கைகள் துடிக்கின்றன
எழுதிட நினைத்தவுடன்
கவிதைகள் மறந்து போகின்றன
நினைத்த கவிதைகள் மறந்து போனாலும்
கனவில் தோன்றிய
உன் கவிதை கொண்ட கண்களை
மறக்கவும் முடியவில்லை
மறைக்கவும் முடியவில்லை

நூல் நயம்: கடல் புறா



தலைப்பு: கடல் புறா
ஆசிரியர்: சாண்டில்யன்
நயம்: சரித்திர நாவல்
பதிப்பகம்: வானதி

ஆசிரியர் சாண்டில்யனால் எழுதப்பெற்ற கடல் புறாவை படித்தேன். இந்நூல் விமர்சனம் எழுதும் அளவிற்கு எனக்குத் தகுதி இல்லை. படிக்கும் போது ஏற்பட்ட இன்பத்தாக்கத்தை எனது கண்ணோட்டத்தில் எழுதிவிடுகிறேன்.
அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை படித்ததால் ஏற்பட்ட தாக்கம் தொடர்ந்து சரித்திர நாவல்களை படிக்கத் தூண்டிற்று. சரித்திர நாவல்களை சேமித்துக் கொண்டும் வருகிறேன்.

தமிழர்களால் கண்டரியப்பட்ட கடாரத்தின் வரலாற்றை அறிந்து கொள்ள வேண்டுமென்ற ஆவல் எனக்குள் அதிகமாய் இருந்தது. ஆனால் தற்சமயம் ‘கெடா’ என அழைக்கப்படும் கடாரத்தின் வரலாற்றுக் குறிப்புகள் மிகவும் சொற்பமாகவே உள்ளன. மலாய்காரர்களின் ஆதிக்கத்திற்குப் பிறகு நடந்த வரலாற்றுக் குறிப்புகளே அதிகம் காணப்படுகின்றன.

இப்புத்தகத்தை வாங்குவதற்கே போதும் போதும் என்றாகிவிட்டது. ஆரம்பத்தில் தேடிய இடங்களில் 140 ரிங்கிட்டிற்கும் குறையாமல் சொன்னார்கள். அப்படி இப்படியென்று கோலாலம்பூரில் சற்று குறைந்த விலைக்குக் கிடைத்தது. தடித்த அட்டை கொண்ட மூன்று பாகங்கள். புத்தகத்தின் வாசனையே தனிதான்.

ஆடி 18-ம் நாளில் பொன்னியின் செல்வன் தொடங்குவது போல், கடல் புறா ஒரு சித்திரா பௌர்ணமியன்று தொடங்குகிறது. கதையின் நாயகன் கருணாகர தொண்டைமான். அவருக்கு காஞ்சனா தேவி மற்றும் மஞ்சளழகியென இரு காதலிகள்.

ஜெயவர்மனின் ஸ்ரீவிஜய கொடுங்கோலாட்சிக்கு எதிராக, அவரின் சகோதரர் குணவர்மர் (காஞ்சனா தேவியின் அப்பா), சோழரின் உதவியை நாடுகிறார். தன் மகளுடன் கலிங்கத்தின் பாலூர்ப் பெருந்துறையில் இறங்குகிறார் குணவர்மர். ஸ்ரீவிஜயத்திற்கும் கலிங்கத்திற்கும் ஏற்கனவே நட்புறவு இருக்கிறது. இதன் வழி ஜெயவர்மன் கலிங்கத்தின் உதவியோடு குணவர்மனை தீர்த்துக்கட்ட திட்டம் போடுகிறான்.

இச்செய்தி சோழப் பேரரசுக்குத் தெரிந்துவிடுகிறது. குணவர்மனையும் அவர் மகள் காஞ்சனா தேவியையும் காத்து அழைத்து வர வீரராஜேந்திர சோழ தேவர் கருணாகர பல்லவனை கலிங்கத்திற்கு அனுப்புகிறார். அத்துடன் சமாதான ஓலை ஒன்றையும் கொடுத்து தென் கலிங்க மன்னன் பீமனிடம் சேர்ப்பிக்க உத்தரவிடுகிறார். பாலூர்ப் பெருந்துறை சுவர்ண பூமியின் திரவுகோலாக திகழ்கிறது.

இதன் மமதையில் தன்னை சுற்றியுள்ள நாடுகளின் கடல் ஆதிக்கத்தை ஒடுக்க நினைக்கிறான் கலிங்கத்து மன்னன். முக்கியமாக கடலோடிகளாக சிறந்து விளங்கிய தமிழர்களின் ஆதிகத்தை. கலிங்கத்தில் வசிக்கும் தமிழர்களையும் தமிழ் வணிகர்களையும் சிறையில் அடைத்து சித்திரவதை செய்கிறான்.

கருணாகர பல்லவன் கொண்டு வரும் ஓலையை சற்றும் மதிக்காமல் தூக்கியெரிகிறான். பல்லவனையும் அவனை சார்ந்தவர்களையும் சிறை செய்து மரண தண்டனை வழங்குகிறான். அபாயத்தில் இருந்து தப்பி செல்கிறார்கள்.
கலிங்கம் மற்றும் ஸ்ரீவிஜயத்தின் கொட்டத்தை அடக்க தீர்மானம் எடுக்கிறான் கருணாகர பல்லவன். முதலில் கலிங்கத்தின் கடல் ஆதிக்கத்தை உடைக்கிறான். பிறகு குணவர்மனை ஸ்ரீவிஜய பேரரசின் அரியனையில் ஏற்றுகிறான். இம்முயற்ச்சிக்கு துணையாக உருவாவதே கடல் புறா எனும் போர் கப்பல்.

பொன்னியின் செல்வனைப் போல் கதை சுற்றி வலைத்துக் கொண்டுச் செல்லப்படவில்லை. கதாபத்திரங்களும் குறைவாக இருப்பதால் கதை சரலமாகப் போகிறது. இரண்டாம் பாகத்தில் அளவு கடந்த சிருங்கார ரசமும் வர்ணனைகளும் சற்று எரிச்சலூட்டுகிறது. பாதிக்கு மேல் கதை சூடுபிடித்து ஆர்வமூட்டுகிறது.

இக்கதையில் வரும் முக்கிய கதாபாத்திரங்கள்:

கருணாகர பல்லவன்: சோழர் படைத் தலைவன். இளைய பல்லவன் என அழைக்கப்படுகிறான். தந்திரசாளியும் புத்திசாளியும் கூட. ஸ்ரீவிஜய வெற்றிக்குப் பிறகு வீர ராஜேந்திர சோழ தேவர், கருணாகரனை வண்டை மாநில சிற்றரசானாக்கி காஞ்சனா தேவியையும் மஞ்சளழகியையும் மணம் முடித்து வைக்கிறார். (ஒரே கல்லில் மூன்று மாங்காய்). வண்டை மாநில அரசானான பிறகு தொண்டைமான் என அழைக்கப்படுகிறான்.

காஞ்சனா தேவி: கட்டழகி காஞ்சனா கடாரத்தின் இளவரசி. இவளின் துணிச்சல் கருணாகரனுக்கு இவள் மீது காதல் கொள்ளச் செய்கிறது.

மஞ்சலழகி: ஸ்ரீவிஜய பேரரசின் இளவரசி. ஆக்ஷய முனையின் தலைவி.
அநாபய சோழர்: பிற்காலத்தில் குழோதுங்கன் என பெயர் பெற்று விளங்குகிறார். கருணாகரனின் நண்பன்.

அகூதா: சீனக் கடல் கொள்ளைக்காரன். கருணாகரன் மற்றும் அமீர் என பலருக்கு பயிற்சியளிக்கிறார். பிற்காலத்தில் சீன தேசத்து அரசனாக திகந்தவர்.

அமீர்: இரக்க மனம் கொண்ட அரபு நாட்டு முரடன். கருணாகரனின் உப தலைவனாக பணியாற்றுகிறான்.

கண்டியதேவன்: கருணாகரனின் உபதலைவன். கப்பல் விடுவதில் திறமைசாளி.

அமுதன்: வணிகன். செல்வத்தை பாதுகாப்பதில் சிறந்தவன்.

அகூதாவின் கதாபாத்திரம் ஆர்வமூட்டும் வகையில் இருக்கிறது. இரண்டாம் பகுதிக்கு மேல் அவரை பற்றிய தகவல்கள் எதுவும் இல்லாமல் போகிறது. அக்ஷய முனையின் தலைவனாக இருக்கும் பலவர்மனின் கதியும் அப்படியே. கல்கியை போல், இக்கதையின் ஆசிரியர் அவர்களின் சில தகவல்களை கொடுத்து கதையை முடித்திருக்கலாம்.

கதையின் கடற்போர் தந்திரங்களும், திருப்புமுனைக்களும் சுவை கூட்டியுள்ளன. கதையை படிப்பதற்குத் திகட்டாமல் இருக்கச் செய்கிறது. பெண்களை வர்ணனை செய்வதில் சாண்டில்யனை அடித்துக் கொள்ள முடியாது போலும். மஞ்சலழகியின் உண்மையான பெயரும் கடைசி வரையில் தெரியாமல் போகிறது.

ஸ்ரீவிஜய வெற்றியோடு கதை நிறைவை அடைகிறது. அதற்கடுதாற்போல் கலிங்கத்தின் படையெடுப்பு போன்றவை வேறு நாவல்களில் உள்ளனவா என தெரியவில்லை. இருந்தால் தெரிவிக்கவும். தரை போர் முறைகளைதான் அதிக அளவிலான சரித்திர நாவல்களின் கண்டிருப்போம். சரித்திர நாவல் பிரியர்களுக்கு கடல் புறா கண்டிப்பாக ஒரு வித்தியாசமான விருந்தாக அமையும்.

Monday, June 09, 2008

'பாரோ' மன்னனின் மர்மக் கல்லறை

(ஹாவட் கார்டர் மற்றும் லாட் கார்னர்வான்)


ஒரு கற்பனைக்கு எடுத்துக் கொள்வோம், ‘மம்மி’கள் உயிர் பிழைத்தால் என்ன நடக்கும்? அவை மனிதனை அழிக்கும் சக்தி கொண்டவையாக இருக்குமா? சரித்திரத்தின் சுவடுகளை துள்ளியமாக அறிந்துக் கொள்ள வழிவகுக்குமா?இல்லை அதையும் மனிதன் மிருகக்காட்சி சாலையில் அடைத்து வைத்து அழகு பார்ப்பானா? இவையனைத்தும் உலகைப் படைத்த இறைவனுக்கே வெளிச்சம்.

அக்காலத்தில் இறந்த எகிப்திய மன்னர்களை பாடம் செய்து கல்லரையில் வைத்துவிடுவார்கள். எகிப்திய மன்னர்களை ‘பாரோ’ மன்னர்கள் என்றும் அழைக்கப்படுவதுண்டு. இவ்வாரு பாடம் செய்யப் பட்ட பிரேதத்தை நாம் ‘மம்மி’ என்று அழைக்கிறோம். ஒரு சில வருடங்களுக்கு முன் 20000 வயதை கொண்ட ‘மம்மி’கள் இன்னமும் கண்டரிய படாமல் இருக்கலாம் என படித்த ஞாபகம் உண்டு.

எகிப்திய தேசத்தில் தொல் பொருள் ஆராய்ச்சியாளர்களின் ஆராய்சியில் ஆகக் கடைசியாக கிடைத்தாகக் கருதப்படுவதுதான் இந்த ‘தூத்தன்கேமன்' அரசரின் கல்லறை. இவரது கல்லறையானது முழுமை அடைந்த கல்லறையாகக் கருதப்படுவது மட்டுமின்றி கண்டரியப்படாத பல மர்மங்களைக் கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

எகிப்திய பழங்குடியினரால் அது ‘தூத்’ அரசரால் எற்பட்ட சாபமெனவும் கூறப்படுகிறது. அவர் அறையப்பட்டிருக்கும் கல்லறையையோ அல்லது உடலையோ யாராவது தொந்தரவு செய்தால், தொந்தரவு செய்தவர்களையும், அவரைச் சார்ந்தவர்களையும் சாகும் அளவிற்கு ‘தூத்’ அரசர் சாபத்தை எற்படுத்தி உள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன. எந்த அளவிற்கு உண்மை என்பது கேள்விக்குறிதான்.

‘தூத்’ அரசர் தமது 9-வது வயதில் எகிப்திய அரசராக அரியனை ஏரினார். இளம் வயதில் ஆட்சி பீடத்தை பிடித்த இவர் தனது 19-வது வயதில் காலமானார்.
இவர் இறப்பிற்கான காரணம் மர்மமானதாகவும், இன்றளவும் ஆராய்ச்சியாளர்களால் உறுதியான காரணங்களை கூற முடியாமல் இருப்பதும் ஆச்சர்யமே!

1922-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ‘ஹாவட் கார்டர்’ என்ற தொள் பொருள் ஆராய்ச்சியாளரும் அவர் தம் குழுவினரும் ‘தூத்’ அரசரின் கல்லறையைக் கண்டரிந்துள்ளனர். அதிக அளவிலான செலவை கொண்ட இந்த ஆராய்ச்சிக்கு ‘லாட் கார்னர்வோன்’ என்ற செல்வந்தரால் நிதி உதவி செய்யப்பட்டுள்ளாது.

இந்தக் கல்லறைக் கண்டுபிடிக்கப்பட்டதே தனிக் கதை. ‘தூத்’ அரசரின் கல்லறை வேலி ஆப் கிங்ஸ் ‘Valley of the Kings’ எனப்படும் வெஸ்ட் பேங்கின் ‘West Bank’ தீபிஸ் ‘Tebes’ மலைத் தொடரில் உள்ளது. எப்படி அந்தக் கல்லறையைக் கண்டுபிடித்தார்கள்? அந்த மலையில் தேடிக்கொண்டேயிருந்திருக்கிறார்கள். ஆனால் கிடைக்கவில்லை. அப்பொழுது தண்ணீர் சுமந்து வந்த எகிப்தியச் சிறுவன் ஏதோ இடற விழுகிறான். அப்படிக் கண்டுபிடித்ததுதான் இந்தக் கல்லறை. அந்தச் சிறுவனுக்கும் ஒன்றும் ஆகவில்லை. இந்தக் கல்லறைக்குள் முதலில் நுழைந்தது (அனுப்பப்பட்டது) மற்றுமொரு எகிப்தியச் சிறுவன். அவனுக்கும் ஒன்றும் ஆகவில்லை.

இவரின் கல்லறையை கண்டு பிடித்த ஆராய்ச்சி குழுவினர் வெற்றியின் விழும்பை அடைந்து விட்டதாக எண்ணி மகிழ்ச்கிக் கடலில் இருந்தனர். பின் நாளில் ‘சும்மா கிடந்த சங்கை ஊதி கெடுத்த ஆண்டியின்’ கதையாகியது இவர்களின் நிலை.

“எமது கல்லறையை மாசு படுத்துபவர்கள்; முதலை, நைல் நதிக் குதிரை மற்றும் சிங்கத்திற்கு உணவாகுக” இவ்வாசகம் ‘தூத்’ அரசரின் நுழைவாயில் பழங்கால எழுத்துக்களால் பொறிக்கப்பட்டிருக்கிறது. ஆராய்ச்சிக் குழுவினர், இது மக்களின் கவனத்தை திருப்ப நினைக்கும் வாசகமாக கருதினர். இவர்கள் கணிப்பின் படி உள்ளே விலை மதிக்க தக்க புதையல் இருக்கலாம் எனவும், மற்ற பிரமிடுகளை காட்டிலும் இதில் முக்கிய தடயங்கள் இருக்கலாம் எனவும் கருதினர்.

இவர்களது கணிப்பு 100% சரியாகவே இருந்தது. உண்மையாகவே உள்ளே சென்றவர்கள் யாரும் முதலை, சிங்கம் மற்றும் குதிரைக்கு உணவாகவில்லை. ‘தூத்’ அரசரின் கல்லறை மிகச் சிறப்பாக அமைக்கப் பட்டிருந்ததாகவும், மற்ற பிரமிடுகளை காட்டிலும் முழுமையடைந்ததாகவும் குறிப்பிடபட்டுள்ளது. முக்கியமாக விலைமதிக்க தக்க புதையலும் இருந்ததாக கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து இவாரய்ச்சி குழுவினரில் பலர், ஒருவர் பின் ஒருவராக இறந்திருக்கிறார்கள். இவையாவும் சாபத்தால் ஏற்பட்ட மரணங்கள் தான என்பது புரியாத புதிர்தான். முதலில் இறந்தவர், ஆராய்ச்சி குழுவினருக்கு நிதி உதவி செய்த ‘லாட் கார்னர்வோன்’. இவர் 4 ஏப்ரல் 1923-ல் கொசு கடித்து இறந்ததாக நம்பப் படுகிறது. கன்னத்தில் கொசு கடித்த இடமும், ‘தூத்’ அரசரின் கன்னத்தில் இருந்த சிகப்பு நிறத்திலான வடுவும் ஒரே மதிரியாக இருந்ததாக குறிப்பிட்டுள்ளார்கள்.

இதையடுத்து அவர் வளர்த்த நாய் காரணமின்றி, சாகும் வரை குரைத்து உயிர் விட்டதாகக் கூறப்படுகிறது. ஆராய்ச்சி குழுவின் தலைவரான ‘ஹாவட் கார்டர்’ வளர்த்த ‘லக்கி பேர்டு’ எனப்படும் பறவை நாகத்தால் விழுங்கப்பட்டிருக்கிறது. இச்சம்பவத்தை ‘தூத்’ அரசரின் தலையில் இருக்கும் கிரீடத்தின் நாகத்தோடு இணைத்துப் பேசுகிறார்கள். கல்லறைச் சொத்துகளின் ஆய்வாளராக இருந்த ‘ஆர்தர் மேஸ்’ எனப்படும் ஆராய்ச்சியாளர் சுய நினைவற்று சிறிது காலத்தில் இறந்தார்.

இது ‘தூத்’ அரசரின் சாபம் என்பதில் நம்பிக்கை கொள்ளாமல் இருந்தவர்களில் ‘ஆடம்சன்’ என்ற கல்லறைக் காவலரும் ஒருவர். இவருக்கு நேர்ந்த ஒரு கோர விபத்தில் தன் மனைவியை இழந்தார். மகனின் முதுகொழும்பு உடைந்தது மற்றும் துரத்திற்கு தூக்கி வீசப் பட்ட இவர், காரின் சக்கரம் தன் தலையில் ஏருவதிலிருந்து உயிர் தப்பினார். இதுவும் அனைவருக்கும் நேர்ந்தது போன்ற தற்செயலாக நடந்த சம்பவமே என்ரே எண்ணினார்.

இவையணைத்தும் எப்படி சம்மந்தப் பட்ட நபர்களையே பதித்திருக்கும்?
இது தொடர்பாக ‘பிரான்ஸ்’ நாட்டைச் சேர்ந்த சைல்வியன் கேண்டோன் ‘Sylvian Gandon’ எனும் ஆராய்ச்சியாளர், தொடர்ந்து இறக்கும் ஆராய்ச்சி குழுவினரின் மர்ம மரணத்திற்கு தனது ஆய்வின் கூற்ரை ‘Proceedings of The Royal Society’ எனும் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். ‘மைக்ரோ ஸ்போரா’ மற்றும் 3300 வருடங்களாக ‘தூத்’ அரசின் கல்லறையில் அடைந்து கிடக்கும் பல செயற்கை உயிர் கொல்லி கிருமிகளே இந்த மரணங்களுக்கு காரணம் என விளக்கம் கூறியுள்ளார்.

லாங் ஐலேண்ட் பல்கலைகழகத்தைச் சேர்ந்த ‘பாப் பாரியர்’ மம்மிகள் பற்றிய ஆராய்ச்சியில் நிபுணத்துவம் பெற்றவராவார். ‘தூத்’ அரசரின் மரணத்தை பற்றி இவர் கூறுகையில் அது ஒரு கொலையாக இருக்கலாம் என குறிப்பிட்டுள்ளார். தூத்தன்கேமனின் ஆளோசகரும் மற்றும் உதவியாளருமான ‘ஆய்’ என்பவரால் கொலை செய்யப்பட்டிருக்களாம் என கருத்து தெரிவித்திருக்கிறார். ‘தூத்’ அரசரின் மறைவிற்கு பின் அவரின் பதவியை வகிக்க வாரிசு இல்லாத காரணத்தால், ‘ஆய்’ தன்னை எகிப்திய மன்னராக முடிசூட்டிக் கொண்டார்.

‘தூத்’ அரசரின் மம்மியை ஊடுகதிர் ‘X-Ray’ செய்யப்பட்டதில் அவரது பின் மண்டையில் பெரிய அளவிலான இரத்தக் கசிவு இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். அது அவரை தாக்கியதால் எற்பட்டதாக இருக்கக்கூடும் எனவும், அத்தாக்குதளே அவரது மரணத்திற்கு காரணமாக இருக்களாம் எனவும் கூறப்படுகிறது.

தூத்தன்கேமனின் மறைவைத் தொடர்ந்து அவரது இளைய மனைவியான ‘Ankhesenamum’, புதிய அரசராகியிருக்கும் ‘ஆய்’யை மணந்துக் கொள்ளா விருப்பமில்லாததால், தனது மகனை எகிப்தின் மன்னராக்குவதற்கு அனுப்பி வைத்திருக்கிறாள். ஆனால் அவளது மகன் எகிப்தை வந்தடைவதற்கு முன்பே கொலை செய்யப்பட்டுள்ளார்.

அரியனை ஏறிய ‘ஆய்’ சில வருடத்தில் மரணமடைந்திருக்கிறார், இதைத் தொடர்ந்து மூன்று வருடங்களில் ‘Ankhesenamum’-மும் எகிப்திய சரித்திரத்திலிருந்து காணாமற் போகிறாள். அவளைப் பற்றிய தடயங்களும் எதுவும் இல்லாமற் போய்யிருக்கிறது. அவளும் இந்த தொடர் கொளைகளுக்கு ஆளாகியிருப்பாளா என்பதும் கொள்விக்குறியே.


இவரையடுத்து அரசரானவர் ‘ஹோரெம்ஹெப்’. தளபதி ‘ஹோரெம்ஹெப்’ ஆரம்ப காலத்தில் ‘அக்ஹிநேத்தனிடம்’ உதவியாளாராக பணிபுரிந்து வந்தார். ‘அக்ஹிநேத்தன்’ யார்? இவர் ‘தூத்’ அரசர் அரியனை எறுவதற்கு முன் அரசராக இருந்தவர். ‘தூத்’ அரசரின் ஆட்சியின் போது ‘ஹோரெம்ஹெப்’படைத் தளபதியாகவும், முக்கிய அமைச்சு பதவிகளையும் வகித்து வந்திருக்கிறார். ‘தூத்’ மற்றும் ‘ஆய்’ அரசரின் மறைவிற்கு பின்னர் ‘ஹோரெம்ஹெப்’ தன்னை அரசராக நியமித்துக் கொண்டார்.

சில தகவல்கள் ‘ஹோரெம்ஹெப்பிற்கும்’ தூத் அரசரின் இளய மனைவியான ‘Queen Ankhesenamun’-கும் இடையிலான தகாத உறவினால் இந்த தொடர் கொலைகள் நடந்திருகலாம் எனவும் கூறுகின்றன. ‘ஹோரெம்ஹெப்’ அரசர் பதிவியை ஏற்ற பிறகு ‘ஆய்’ சம்மந்தப்பட்ட அனைத்து தகவல்களையும் சரித்திரத்தில் இடம் பெற முடியாமற் போகும் அளவிற்கு அழித்திருக்கிறார். இதற்கு இவர்களுக்கிடைய இருந்த கருத்து வேறுபாடுகள் காரணமாக இருக்கலாம்.

புதிய ஆராய்ச்சிகள், இவரின் மூட்டுகள் பதிக்கப் பட்டதால் இவர் இறந்திருக்கக் கூடும் எனவும் கொலை அல்ல என குறிப்பிடுகிறார்கள். இவர் தொடைபகுதி எழும்புகள் மிக மோசமான நிலையில் பாதிக்கப்பட்டிருப்பதாகவும். இதுவே இவரின் இறப்பிற்கு காரணம் எனவும் கூறுகிறார்கள்.

இதையடுத்து 1968-ஆம் ஆண்டின் ஆராய்ச்சி அவர் மண்டையிளுள்ள எழும்பு துகள்கள் இவரைத்தாக்கியதால் ஏற்பட்டவை எனவும் பின் அவர் கிழே விழுந்து கால் முறிந்திருக்கக் கூடும் என கூறியுள்ளார்கள்.

மற்றோறு தகவல் இவை அனைத்தும் 1922-ஆம் ஆண்டு இவரை கல்லறையிலிருந்து எடுக்கும் போது பாதுகாப்பாக கையாழப்படாத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் எனவும் கூறுகிறார்கள்.

இன்றளவும் ஆராய்ச்சிகள் நடந்தவண்ணம் உள்ளன. இருப்பினும் இவரது மறைவிற்கும், கல்லறையின் மர்மத்திற்கும் இன்னமும் திருப்தியான பதில்கள் எதுவும் கிடைக்கவில்லை.


(இப்பதிவு நான் வெட்பிரஸ் வலைபதிவில் எழுதியது. சில திருத்தங்கள் செய்து பிளாகரில் கொடுத்துள்ளேன்)